கேவலம் ஒரு ஆண் மட்டுமே!


தெரிந்த இளைஞர் ஒருவருக்கு இரண்டாவது குழந்தை பிறந்திருந்தது. உடனடியாகப் போய் பார்க்க முடியவில்லை. சில வாரங்கள் கழித்துத்தான் அவரது வீட்டிற்குப் போயிருந்தேன். அவரும், அவரது மனைவியும் “வாங்க... வாங்க” என உற்சாகமாக வரவேற்றாலும், எதோ அவர்களுக்குள் ஒரு இறுக்கம் இருந்ததை, பேசிக்கொண்டிருந்த கொஞ்ச நேரத்தில் உணர முடிந்தது. அழுத சோபை கலையாமல் இருந்த மூத்த பையனைத் தூக்கி வைத்து முதுகில் தட்டிக்கொடுத்துக் கொண்டிருந்தார் நண்பர். என்னிடம் பேசும்போது இருந்த அவர்களின் முகங்களுக்கும் அவர்கள் ஒருவருக்கொருவரான முகங்களுக்கும் வித்தியாசம் புரிந்தது. நான் வருவதற்கு முன்பு எதோ அவர்களுக்குள் வாக்குவாதம் நிகழ்ந்திருக்க வேண்டும் என்பதை ஒரு மௌனம் காட்டிக் கொடுத்தது.

இரண்டாவதும் ஆண் குழந்தைதான். படுக்கையில் கைகாலை ஆட்டிக்கொண்டிருந்தது. “துருதுருன்னு இருக்கு” என்று சொல்லி முடிப்பதற்குள், “ஆமா, ரொம்பத் துருதுருன்னுதான் இருக்கு” என அவரது மனைவி சிறு அங்கலாய்ப்புடன் காபி கொண்டு வந்து தந்தார். “குழந்தை இப்படி இருக்குறது நல்லதுதான்” என சிரித்துக்கொண்டே, சூழலை இயல்பாக்க முயன்றேன். சட்டென்று அந்தப் பெண் ஒரு கேவலுடன் சமையலறைக்குள் விரைந்தார். ஒருமாதிரியாகி விட்டது. நண்பரோ என்னிட்ம் முகம் கொடுக்காமல், அவர் மனைவி போன திசையை கடுப்புடன் பார்த்துக் கொண்டு நின்றிருந்தார்.

“என்ன” என்றேன் மெதுவாய். “ஒண்ணும் இல்ல சார், இவங் கொஞ்ச நேரமா துருதுருன்னு அங்குமிங்கும் ஓடிக்கொண்டு இருந்திருக்கான். இவனோடு மல்லுக்கட்டிக் கொண்டு இருந்திருக்கா அவ. உள்ளே குழந்தை வேற அழ ஆரம்பிச்சிருக்கு. இவனை விட்டுட்டு, குழந்தைக்கு பால் கொடுக்கப் போயிருக்கா. ஹாலில் விளையாடிக்கொண்டிருந்த இவன்
அதுக்குள்ள அந்த நாற்காலில ஏறிக் கீழே விழுந்து கூப்பாடு போட்டிருக்கான். கைக்குழந்தைய போட்டுட்டு இவனத் தூக்கி சமாதானம் பண்ணியிருக்கா. கரெக்டா அப்பதான் நா ஆபிஸ்ல இருந்து வந்தேன். மொத்த எரிச்சலையும் எம்மேல காட்டுறா.” என்று அமைதியானான்.

“பாவம் அவங்க என்ன செய்வாங்க. அப்படித்தான் இருப்பாங்க. நாமதான் அவங்களுக்கு ஒத்தாசையாகவும், நம்பிக்கையாகவும் இருக்கணும்” என்றேன் உரிமையுடன்.

“எம்மேல கோபப்படட்டும். பெறந்த குழந்த என்ன செய்யும். சனியன் அது இதுன்னு வார்த்தைகளைக் கொட்டுறா” என்றார் நண்பர் அடக்க முடியாமல்.

என்ன நடந்திருக்கும் என்று புரிந்தது. “அந்தச் சனியனுக்கு என்ன அர்த்தம்? கொழந்த மேல வெறுப்புன்னா நெனைக்கிறீங்க. அவங்க கஷ்டம், இயலாமையக் காட்டுறாங்க. அதுக்குப் போய் அப்படியேவா அர்த்தம் பார்க்குறீங்க” என்றேன்.

இந்த சமயத்தில் சமையலறைக்குள்ளிருந்து வந்த அவரது மனைவி, “இதுக்குத்தான் நா முன்னமே சொன்னேன் சார். இன்னொரு குழந்த வேண்டாம்னு. கேட்டாரா இவர். நாந்தானக் கஷ்டப்படுறேன்.” என சரமாரியாகப் பொரிந்தார். “இந்த ரெண்டு பேரையும் வளத்து ஆளாக்குறதுக்குள்ள இன்னும் என்ன பாடுல்லாம் படப்போறேனோ?” என அழ ஆரம்பித்தார்.

நண்பரும் அடக்க முடியாமல், “இவ மட்டுந்தான் உலகத்துலயே கொழந்தையப் பெத்து வளக்குறாளாக்கும். ஊர்ல நாட்டுல யாருமே கொழந்தையே பெத்துக்கலயா. எங்க அம்மாவுக்கு நாங்க நாலு பேரு. இப்படித்தான் அழுதாங்களா?” என இரைந்தார்.

“என்ன இது..” என்று நண்பர் மீது கோபப்பட்டேன். “அவங்கக் கிட்ட போய்க் கோபப்படுறீங்க. ஒரு கொழந்தன்னா சும்மா இல்ல. அதக் கவனிக்குறது ஒண்ணும் சாதாரணமில்ல. அத புரிஞ்சிக்கிடுங்க” என்று கொஞ்சம் வேகமாகவேச் சொன்னேன். எதோ சொல்ல வந்தவரை நிறுத்தி “அப்புறமா பேசலாம். மொதல்ல அவங்கள சமாதானப்படுத்துங்க. தைரியம் கொடுங்க” என அடக்கினேன். அமைதியாக இருந்தார். சொல்லிக்கொண்டு விடைபெற்றேன்.

எப்போதும் சிரித்துக்கொண்டு, கலகலப்பாய் பேசும் அவரது மனைவி இன்று முற்றிலும் வேறோரு கோலத்தில் தெரிந்தார். அடிபட்ட வேதனையும், இழப்பும் முகம் உடலெல்லாம் தேங்கிக் கிடந்தது. நான் வீட்டில் இருந்த, இல்லாத சமயங்களில் உணராத என் மனைவியின் முகம் ஒன்று அப்போதுதான் துலங்கியது. கேவலம் ஒரு ஆண் மட்டுமே நான்!

அம்மாவின் ஞாபகம் வந்தது. அப்போது கேஸ் ஸ்டவ் கிடையாது. அடுப்பங்கரையில் நனைந்த பச்சை விறகை வைத்து ஊதிக்கொண்டு இருப்பர்கள். மிக்ஸி கிடையாது. ஒரு சட்டினி அரைக்க வேண்டுமென்றாலும் அம்மிதான். இதுபோல எத்தனை கிடையாது? எப்படி எங்கள் ஐந்து பேரை ஆளாக்கினார்கள்?

பேரதிசயம் போலிருக்கிறது!  

Comments

22 Comments

வருகைக்கு நன்றி.

கமெண்ட் செய்கிறவர்கள் Anonymous, Name/Url, Google Account, Name/Url, Google Account மூலம் கமெண்ட் செய்யலாம்.

1) முடிந்தவரை Google Account மூலம் கமெண்ட் செய்யுங்கள்.

2) இல்லையென்றால் Name/Url மூலம், பேரை மட்டுமாவது குறிப்பிட்டு கமெண்ட் செய்யுங்கள்.

3) Anonymous மூலம்தான் கமெண்ட் செய்ய முடியுமென்றால், கமெண்ட்டில் கீழே உங்கள் பேரை தயவு செய்து குறிப்பிடுங்கள்.

நன்றி.

- தீராத பக்கங்கள்
  1. இதே கேள்வியை நானும் பலமுறை என்னை நானே கேட்டு வியந்திருக்கிறேன்.

    ReplyDelete
  2. உண்மையில் அதிசயம்தான்- முன்பெல்லாம் கூட்டு குடும்பத்தில் இது சாத்தியமாயிற்று. இப்போது தனி குடித்தனத்தில் கஷ்டம்தான்

    ReplyDelete
  3. "கேவலம் நானும் ஓர் ஆண் மட்டுமே!"

    ReplyDelete
  4. இந்த எண்ணங்கள் எனக்கும் அடிக்கடி வருவதுண்டு
    என் பெற்றோருக்கு மொத்தம் 8 பிள்ளைகள். இத்தனைக்கும் எங்கள் குடும்பம் கூட்டுக்குடும்பம் அல்ல
    நினைத்து பாருங்கள்.

    வாழ்க தாய்மை!

    ReplyDelete
  5. பேரதிசயம் தான்.....அந்தக் கால பத்தும் இந்தக்கால் ஒன்றும் சமம என்பார்கள். குழந்தை வளர்ப்பு லேசானதல்ல .நிறைந்த பொறுமை சகிப்புத்தன்மை வேண்டும். பதிவுக்கு நன்றி

    ReplyDelete
  6. 'கேவலம் ஒரு ஆண் மட்டுமே' என்பத நமது வீட்டில் தாயும் மனைவியும் செய்யும் வேலைகளைப் பார்த்தால் 'ஆண் ஒரு கேவலம்' என்று ஆகிவிடும்.

    இவர்கள் இல்லையென்றால் குடும்பம் இல்லை, உறவும் இல்லை; ஓட்டும் இல்லை. ஆனால் ஒரு ஆண் மனதில் இவர்கள் இளக்காரமாத் தான் படுகிறார்கள். ஆனால் வீட்டில் ஒரு பெண் இல்லைஎன்றால் ஒரு குடும்பத்தின் முழுமை முன்னேற்றம் எதுவும் இல்லை. நாம எல்லாரும் திருந்தனும்.

    ஒரு ஆண் தன்னை என்னத்தான் வீர தீர சூரனா காமிச்சாலும், அவன் குடும்பத்தில் போய் கேட்டால் எல்லாம் அடிபட்டுப் போய் விடும்.

    ReplyDelete
  7. அந்தம்மாவுக்கு Post partum depression வந்திருக்கக்கூடும்..

    பிரசவத்துக்கு பிறகு அனேகர் பாதிக்கபடுவர். அதிலும் இரு குழந்தைகள் இருந்தால் அதிகம்.

    மருத்துவ உதவி நன்று.

    ஆணுக்குமே ஏற்படும்..

    ReplyDelete
  8. அந்தப்பெண்ணுக்கு மனநல மருத்துவரின் ஆலோசனை மிகவும் அவசியம்... இதுவே முற்றி மனநோயாக மாறவாய்ப்புள்ளது...

    ReplyDelete
  9. சகோ,,இந்த பிரச்சனை,அந்த கணவரால் விரைந்து கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.இல்லையென்றால்,இது காலப்போக்கில் குழந்தைகள் மீது தேவையற்ற வெறுப்பை வளர்த்து,அவர்களது எதிர்காலத்தை பாழாக்கிவிடும்.மனைவிக்கு,ஒத்தாசையாக கணவன் இருக்கவேண்டும்.அல்லது பணியாள் அமர்த்தி அவரது சுமையை குறைக்க வேண்டும்.

    குழந்தைகள் பாவம்.

    ReplyDelete
  10. அருமையான பதிவு.

    அந்த பெண்னுக்கு மனமாற்றம் தேவை!! (குழந்தைக்காக)

    ReplyDelete
  11. ஹும்ம்...பேரதிசியம்தான்!

    பெருமூச்சுதான் விட வேண்டியதாகிறது மாது...

    நலமா மாது?

    செல்வேந்திரன் திருமணம், அடுத்த பட்டறை.. இல்லையா மாது?

    சந்திப்போம். :-)

    ReplyDelete
  12. நிச்சயம் பேரதிசயம் தான் ... அந்த காலத்தில் ஆறு குழந்தைகள் பெற்றுக் கொண்டார்கள் ... என்று ஒரு கட்டுரையே எழுதலாம் தான் ... நமக்கு ஒரு குழந்தைக்கே நடுங்கிப் போகிறது ...

    ReplyDelete
  13. உண்மையில் அதிசயம்தான் - சகிப்புத்தன்மை வேண்டும்.
    பதிவுக்கு நன்றி .

    ReplyDelete
  14. பதிவின் இறுதி வரிகள் மனதில் அப்படியே ஒட்டிக்கொண்டுவிட்டன. அந்தப் பேரதிசயத்தையே நினைத்துக் கொண்டிருக்கிறேன் மாது அண்ணா.

    ReplyDelete
  15. சமயங்களில் நினைத்து பிரமித்துப்போவேன்.. அந்த காலத்து மனுஷிகளுக்குத்தான் எவ்வளவு தெம்பு இருந்திருக்கிறது...நம்ம குடும்பங்களிலும் எத்தனைப்பேர்...பிரமிப்பும் பெருமூச்சும் தவிர வேறென்ன செய்யமுடியும் ஆண்களால்...தலைப்பு பொருத்தம்..

    ReplyDelete
  16. இது ஏதோ தங்கள் நண்பரது வீட்டு நிகழ்வு மட்டுமல்ல... நம் பலரது வீட்டு நிகழ்வும்தான்...
    கீழுள்ள வரிகளில் அதனை நீங்களே பதிந்துள்ளீர்கள்..

    //நான் வீட்டில் இருந்த, இல்லாத சமயங்களில் உணராத என் மனைவியின் முகம் ஒன்று அப்போதுதான் துலங்கியது. கேவலம் ஒரு ஆண் மட்டுமே நான்!//

    என்னுடைய இந்த கவிதையிலும், இதே போன்றதொரு நிகழ்வினை பதிந்துள்ளேன்...

    வேலையோ வேலை...

    http://www.chinthan.com/2010/07/blog-post_29.html

    ReplyDelete
  17. நண்பர் மாதவ்,
    உண்மைதான், கிராமங்களில் இரண்டு விஷயங்கள் நடக்கும். ஒன்று (அதாவது ஒருசிலர்) கண்டுகொள்ளாமல் “இதெல்லாம் அவங்க வேலைதானே”ன்னு இருக்கிறது. இன்னொன்று, (ஒரு சிலர்) சரிசமானமா வேலையை இழுத்துப்போட்டுக்கிட்டுச் செய்யறது. எல்லாவற்றையும் மீறி பொம்பளைங்க வேலைப்பா, என்று மரபுரீதியான கண்ணோட்டம் ஊடுருவி இருப்பதும் உண்மை. யாரு சும்மா இருக்காங்களோ (ஆணோ, பெண்ணோ). அவங்கபாட்டுக்குச் செய்யறதும் நடக்குது. இந்த விசித்திரமுரண் வெகுஇயல்பா நடக்குது.
    படித்த மத்தியதரவர்க்கத்தில் கொஞ்சம் பேராச்சும் (ஆம்பிளை சிங்கங்களைத்தான் சொல்றேன்)இப்பதான் குற்றஉணர்ச்சிக்கு ஆளாக ஆரம்பித்து இருக்கிறார்கள். ஒருவகையில் இது நல்ல அம்சமாத்தான் படுது.
    நட்புடன்
    நா.வே.அருள்

    ReplyDelete
  18. அத்தனையும் கிடையாது என்றாலும் இருந்தது பொறுமை.

    ReplyDelete
  19. பொருளாதார சூழ்நிலைகள், தேவைகள் மனிதனை மாற்றி கொண்டிருக்கின்றன. ஆம் ஆளுயர ஆட்டுக்கல் table top wet grinder ஆக மாறி விட்ட போது இவர்களும் மாறிதான் ஆக வேண்டும்

    ReplyDelete
  20. arumaiyaana pathivu. pennai mathikkum ungalain unarvukku nandri.

    ReplyDelete

You can comment here