கோவைச் சம்பவம் சொல்லும் செய்திகளும், எழுப்பும் சிந்தனைகளும் -1

 "மனிதனுக்கு சித்த சுதந்திரம் உண்டா, இல்லையா? மண்டை ஓட்டை அளந்து குற்ற இயல் மனப்பாங்குக்கான அறிகுறிகளைக் கண்டறிந்து கொள்ள முடியுமா, முடியாதா? குற்றச்செயல்களில் மரபியலுக்கு உள்ள பங்கு என்ன? தீய ஒழுக்கம் மரபு வழியில் பெறப்படுவது சாத்தியமா? ஒழுக்க நெறி என்பது என்ன? பைத்தியக்காரத்தனம் என்பது என்ன? தட்பவெப்ப நிலை, உணவு, அறியாமை, பிறர் சொல்வதைத் தாமும் நினைத்தல், மனோவசியம், உணர்ச்சி வேகம் - இவற்றால் குற்றச் செயல்கள் மீது ஏற்படும் பாதிப்பு என்ன? சமுதாயம் என்பது என்ன? அதன் கடமைகள் யாவை?” - உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர் டால்ஸ்டாயின் புத்துயிர்ப்பு நாவலில்.

 

அந்த பிஞ்சுக் குழந்தைகளின் முகங்களைப் பார்க்கும்போதெல்லாம் ‘அய்யோ’ என தவிக்கச் செய்தது. கள்ளம் கபடமற்ற அவர்களின் மரணத்தின் கணங்களை சிந்திக்கவே நடுக்கமாயிருந்தது. அந்தக் கொடூரத்தைச் செய்த மனிதனை நேரில் பார்த்தால் கொன்றுவிடத்தான் எனக்கும் தோன்றியது. எடுத்த எடுப்பில் ஆவேசமும், பிறகு குதூகலமும் கொள்ளும் ஜனத்திரளின் மனோபாவம் எல்லோருக்குள்ளும் இருக்கிறது. நானும் இரண்டு குழந்தைகளுக்குத் தகப்பன் என்னும் பிரக்ஞையில் கிளம்புகிற வேகம் இது. ‘மோகன்ராஜும் ஒருகாலத்தில், ஒரு தாய்க்கு இதுபோன்ற கள்ளம் கபடமற்ற ஒரு குழந்தையாகத்தானே இருந்திருப்பான், அவன் ஏன் இப்படி வெறிகொண்ட மிருகமானான்’ என்று யோசிக்கவேத் தோன்றாத வன்மம் எல்லோருக்குள்ளும் நிறைந்திருக்கிறது.

மோகன்ராஜ் இரண்டு குழந்தைகளைக் கொன்றிருக்கிறான் (மோகன்ராஜ்தான் இந்தக் கொலையைச் செய்தான் என்னும் போலீஸ் மற்றும் ஊடகங்களின் செய்திகளைத்தாண்டி மேலும் உண்மைகள் இருக்கலாம்.). போலீஸ் மோகன்ராஜைக் கொன்றிருக்கிறது. இரண்டுமே கொலைகள்தாம். ஒன்று குற்றம். இன்னொன்று தண்டனை. ஒன்று அதிர்ச்சியையும், ஆவேசத்தையும் ஏற்படுத்துகிறது. இன்னொன்று கொண்டாட்டங்களையும், ஆரவாரங்களையும் தருகிறது. ‘நடந்தது, நன்றாகவே நடந்தது’என்று சமூகம் தன் கவனத்தையும், கடமையையும் இத்தோடு நிறுத்தி, அடுத்தக் காட்சிகளில் கவனம் செலுத்த ஆரம்பித்து விடுகிறது. இரண்டு விதமான கொலைகளின் பின்னணியையும், காரணங்களையும் ஆராயாமல், இந்தப் புள்ளியோடு முடித்துக்கொள்வது தீர்வுகளை நோக்கிச் செல்ல உதவாது.

குற்றவாளிகளை சமூகத்திலிருந்து தனிமைப்படுத்தி வைப்பதற்க்காகவே சிறைக்கூடங்களும், காவல்நிலையங்களும் இன்னபிற அரசின் இயந்திரங்களும் செயல்படுகின்றன. மேலும் குற்றங்கள் பெருகிவிடக்கூடாது என்பதற்காகவும் குற்றங்கள் செய்யாதவர்கள் குற்றவாளிகளால் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகவும் இந்த ஏற்பாடு காலகாலமாய் நீடிக்கிறது. ஆனால் குற்றங்கள் நாளுக்குநாள் அளவில் அதிகரித்துக் கொண்டும், தன்மையில் கோரமாகிக்கொண்டும்தான் இருக்கின்றன. அமைப்பில் ஏற்கனவே இருக்கும் ஏற்பாட்டில் உள்ள பெரும் குறையைச் சொல்வதற்கு நேரடியான இந்த உண்மை போதுமானது. ஆனாலும் அரசு இதற்கான காரணங்களை ஆராயவும், குறைகளை சரிசெய்யவும் முயல்வதில்லை. அப்படி சொல்லக்கூடாது. விரும்புவதில்லை என்பதுதான் சரியாக இருக்கும். அதற்குத் தெரியும், குற்றவாளிகள் தனிமைப்படுத்தப்பட்டாலும் குற்றங்கள் சமூகத்திற்குள்ளேயே தொடர்ந்து இருக்கவேச் செய்கின்றன. இன்னும் அணுகிச் சொல்வதென்றால், அரசும், அமைப்பும்தான் அந்தக் குற்றங்களுக்கு ஊற்றுக்கண்களே!

ஏற்றத் தாழ்வுகள் மலிந்த சமூகத்தில் குற்றங்களும் பெருகிக்கொண்டே இருக்கும். இது விதி. இங்கு குற்றங்கள் என அறியப்படுவது, தாழ்வுகளில் இருப்பவர்கள் மனிதர்களிடம் காணப்படும் ஒழுக்கமின்மையும், விதிமீறல்களும் மட்டுமே. ஏற்றத்தில் இருப்பவர்களின் அத்துமீறல்களும், அதிகார துஷ்பிரயோகங்களும், பெருங்கொடுமைகளும் ஒருவிதத்தில் அனுமதிக்கப்பட்டவையாகவும், அங்கீகரிக்கப்பட்டவையாகவும் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. பொதுபுத்தியில் காலகாலமாய் அப்படி தகவமைக்கவும் பட்டிருக்கின்றன. வசதி படைத்தவர்களில், செல்வாக்கு உள்ளவர்களில் ஒருவன் கூட இதுவரையிலான என்கவுண்டர்களில் கொல்லப்பட்டதாய் ஒரு தகவல் கூட இல்லை என்பதை இந்த இடத்தில் நினைவுபடுத்தி பார்ப்பது பொருத்தமாயிருக்கும். இதன் அர்த்தம், சமூகத்தின் மேல்மட்டத்தில் இருப்பவர்கள் இதுபோன்ற குரூரங்களை ஒருபோதும் செய்வதே கிடையாது என்பதா? எட்டிலிருந்து பதிமூன்று வயதுப் பெண் குழந்தைகளை மட்டுமே  சிதைத்துச் சுவைக்கும் ‘மகாநதி டைப்’ வக்கிரக் கோமான்கள் கிடையவே கிடையாது என்பதா?  வெளியே தெரியாமல் இருந்தால் இங்கு குற்றங்கள் அல்ல. அதற்கு வசதி செய்து கொடுக்கவேச் செய்கிறது இந்த அமைப்பு.

இந்த அமைப்புதான் குற்றங்கள் செய்வதற்கான சூழலையும், உந்துதலையும் ஏற்படுத்துகிறது.  பணம், காசு இல்லாவிட்டால் அவனை மனிதனாகவே மதிப்பதில்லை. எப்படியாவது பணம் சம்பாதிக்க வேண்டும் என்னும் வெறியை விதைக்கிறது. பெண்ணுடல் குறித்த தவறான, இழிவான பிம்பங்களை வெளியெங்கும் நிரப்பி வைத்திருக்கிறது. மனிதர்களை பலவீனங்களின் விளிம்பில் கொண்டு நிறுத்தி வேடிக்கை பார்க்கிறது. சக மனிதர்களிடம் அன்பும்,  சமூகத்தில் தன் இடம் குறித்த பிரக்ஞையும் கொண்டிருப்பதால் பெரும்பாலானவர்கள் இந்தக் குற்றங்கள் புரியாமல் தப்பித்து விடுகிறார்கள். சிலர் கழுதைப்பித்தம் தின்ற நாய்களாகிப் போகிறார்கள். மோகன்ராஜ் என்னும் குழந்தை, பிறகு வெறிகொண்ட மிருகமான கதை இந்த இடத்தில் எழுதப்பட்டிருக்கக் கூடும். மோகன்ராஜ் மேல் வரும் கோபம் மிக நியாயமானது. அதே அளவுக்கு இந்தக் குற்றங்களைச் செய்யத் தூண்டிய அமைப்பின் மீது கோபம் வருகிறதா? அப்படி வந்தால், அதுவே இந்த குற்றங்களை சரிசெய்வதற்கான துவக்கப்புள்ளியாக இருக்கும்.

(இன்னும் சொல்ல இருக்கிறது...)

Comments

18 Comments

வருகைக்கு நன்றி.

கமெண்ட் செய்கிறவர்கள் Anonymous, Name/Url, Google Account, Name/Url, Google Account மூலம் கமெண்ட் செய்யலாம்.

1) முடிந்தவரை Google Account மூலம் கமெண்ட் செய்யுங்கள்.

2) இல்லையென்றால் Name/Url மூலம், பேரை மட்டுமாவது குறிப்பிட்டு கமெண்ட் செய்யுங்கள்.

3) Anonymous மூலம்தான் கமெண்ட் செய்ய முடியுமென்றால், கமெண்ட்டில் கீழே உங்கள் பேரை தயவு செய்து குறிப்பிடுங்கள்.

நன்றி.

- தீராத பக்கங்கள்
  1. அவன் பெயர் (அவன் என்று சொல்லலாமா என்று தெரிய வில்லை...) மோகன கிருஷணன்..ட்”தீர” விசாரித்து எழுதும் வினவு உட்பட எல்லோரும் மோகன்ராஜ் என்றே குறிப்பிடுகிறார்கள்

    ReplyDelete
  2. அருமையா சொல்லியிருக்கீங்க...
    இன்னும் சொல்ல போறதாவும் சொல்லியிருக்கீங்க...
    தொடருங்கள்.

    ReplyDelete
  3. மொகன்ராஜ் சிறுமியை வன்புணர்ச்சிசெய்துள்ளான். பின்னர் கொலை செய்துள்ளான் என்பது காவல் துறையின் வாதம்.அந்த" ராதோர் என்ற நாய்" ஒவ்வொரு நீதிமன்றமாய் ஏறி இறங்குகிறதே.அதற்கு என்ன செய்யப்போகிறார் ஸ்ரீமான் சைலெந்திர பாபு?---காஸ்யபன்

    ReplyDelete
  4. //இந்த அமைப்புதான் குற்றங்கள் செய்வதற்கான சூழலையும், உந்துதலையும் ஏற்படுத்துகிறது. பணம், காசு இல்லாவிட்டால் அவனை மனிதனாகவே மதிப்பதில்லை. எப்படியாவது பணம் சம்பாதிக்க வேண்டும் என்னும் வெறியை விதைக்கிறது.//

    பரவலான புதுப்புதுப் பொருட்களின் அவதாரங்களும், அதித நுகர்வுக் கலாச்சாரமும், அதற்கான அடிப்படைத் தேவையான பணத்தை, அதை எந்த வகையிலாவது கைப்பற்றிவிடுவது என்ற எண்ணமும், தான் இதற்கு அடிப்படை.

    வேறு என்னங்க சொல்லறது, இன்னொருமுறை, திறந்தவிடப்பட்ட வெளிச் சந்தையின் விளைவுகளையும், பன்னாட்டு முதலாளிகளையும் வேண்டுமாயின் நம் ஆசை தீர திட்டிக் கொள்ளலாம்.

    ReplyDelete
  5. அருமையான,மாறுபட்ட சிந்தனை

    சமூகத்தில் ஒரு சிலரின் பணவரவு கோடிகளில் இருக்கும் போது, அது இல்லாத இன்னொருவர் பொறாமை மற்றும் பேராசையின் உச்சத்திற்குச் சென்று விடுவதால் எவ்வித குற்றம் புரிவதற்கும் தயாராகி விடுகின்றனர். இந்தப் பொருளாதார ஏற்றத் தாழ்வுக்கு விடிவு ஏற்படாத வரை இந்த மாதிரி கொடுமையான குற்ற செயல்கள் நடப்பதை அரசு மற்றும் அதிகார வர்க்கம் வேடிக்கைதான் பார்க்கமுடியும்.
    அரவரசன்.

    ReplyDelete
  6. மணீஜீ!

    வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றி.

    mohan alias mohanraj alias mohanakrishnan என்றுதான் இந்து நாளேட்டில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இதில் எந்தப் பெயராக இருந்தால் என்ன? பெயரா இங்கு முக்கியம்?

    ReplyDelete
  7. மோகன்ராஜ் மேல் வரும் கோபம் மிக நியாயமானது. அதே அளவுக்கு இந்தக் குற்றங்களைச் செய்யத் தூண்டிய அமைப்பின் மீது கோபம் வருகிறதா? அப்படி வந்தால், அதுவே இந்த குற்றங்களை சரிசெய்வதற்கான துவக்கப்புள்ளியாக இருக்கும். //

    மிக சரி..

    குழந்தையின் கொலையை பற்றி எழுதிவிட்டு அடுத்த வரியிலேயே பெண் காமத்தை பற்றி விலாவாரியாக எழுதவும் பெண் படம் போட்டு இச்சையை தூண்டுபவர்களும் இருக்கும்வரை..?

    ReplyDelete
  8. நண்பர் நேசன் பதிவில் வெளிப்படித்தியதையே இங்கு தருகிறேன்.

    இது சட்டத்தையே புறந்தள்ளி நேர்மையென நிரூபிக்க முயலும் அதிகாரிகளின் கொலை செயல். நீதி மன்றம், அரசியல் சட்டத்தின் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை, இத்தகைய செயலால் அற்றுப் போக உதவும்.

    அநியாயமாக இறந்த அந்த 2 இளம் சிறார்களின் மரண ஓலம் பதை பதைக்கிறது.

    அமைதியை விட அன்பு தாரீர் இவ்வுலகில்.

    இது பொருளாதார ஏற்ற தாழ்வினை சமன் செய்வதன் மூலம் சீர்திருத்தக்கூடிய பிரச்சனை அல்ல என்று நினைக்கிறன். மனிதனின் வக்கிர புத்தி அப்போதும் மாறாது. ஒரு சமூக சீர்திருத்தம் செய்யக் கூடிய பணி இது.

    ReplyDelete
  9. Sir,

    Entha Encounter visayatha ethoda vitutu vera ethavathu mattera pathi pesi unga polapa ottunga..

    entha manitha thanmay elatha visayathay pesi ungal manithathai elakatheer...

    nanri..

    ReplyDelete
  10. இவை மிகவும் மன அழுத்தத்தை எற்படுத்தும் விடயங்களாக இருக்கிறது...

    ReplyDelete
  11. மிஸ்டர் ARK.SARAVAN!

    என்னுடைய பிழைப்பு இதுதான். இப்படித்தான் ஒட்டுவதாக உத்தேசம்.

    ReplyDelete
  12. குற்றவாளிகளை உருவாக்குவதில் இந்த சமுகத்திற்கும் பெரும் பங்கு இருக்கிறது.எதையும் தின்று ஜீரணிக்கக் கூடிய வெளியாய் நமது சமூகம் வடிவமைக்கப் பட்டுக் கொண்டே வருகிறது.

    ReplyDelete
  13. //பெண்ணுடல் குறித்த தவறான, இழிவான பிம்பங்களை வெளியெங்கும் நிரப்பி வைத்திருக்கிறது//

    இதில் 'தவறான' என்பதில் உடன்படுகிறேன். 'இழிவான' என்பதில் உடன்பாட்டுக்கு வரமுடியாமற் குழம்புகிறேன்.

    நுகர்வுக் கலாச்சாரத்தில் ஆசையைத் தூண்டுமுகமாக 'பண்டம்' இழித்துக் காட்டப் படுவதில்லை; உள்ளபடியுள்ள மதிப்பிலும் உயர்த்திக் காட்டப் படுகிறது என்றே எண்ணுகிறேன்.

    இந்திய சமுதாயத்தில், பெண்களைப் பெண்களாகக் காட்டுவதே இல்லை. 1) தெய்வீகச் சரிகைத்தாள் சுற்றிய புனித இனிப்பு அல்லது 2) கால்வழிய மோளுகிற இழிசினி.

    இந்த 'இழிசினி'ப் பார்வை முதலாளித்துவ காலத்துக்கும் முந்தியது, ஆனால் இன்னும் ஒட்டிக்கொண்டு இருப்பதுதான். (குறுக்கே பாய்ந்த ஆட்டோக் காரனை, சைக்கிளில் வந்து மோதித் திகைத்த சிறுபெண், "பார்த்து வரமாட்டீங்களா?" என்றதற்கு "ஏன், நீ பார்த்து வர மாட்டீயா?" என்பதுதானே எதிர்வினையாக இருக்க வேண்டும். ஆனால் அவன் சொன்னது, "போடீ, தேவடியா!" அதாவது வினா எழுப்புகிற உரிமை பெண்களுக்கு இல்லை).

    சேற்றில் உழல்கிற பெண்ணா, சேட்டு பெண்ணா என்றால் சேட்டுப்பெண் மேல் பாய் என்று கற்றுத் தருவதே முதலாளித்துவ கால நுகர்வுக் கலாச்சாரம்தான். சிறுமி/ குமரி பிரித்துப் பார்க்கத் தெரியாத குருட்டுத்தனம் 'கன்னி' வழிபாட்டுக் காலத்தில் இருந்து 'Reliance Fresh' வரை தொடரும் ஓர் உயர்வு நவிற்சியால் வருகிற சந்தைக் கோளாறு. (வழிபாட்டுத்தனமும் பிரதிபலன் காரணம் சந்தைக் கோளாறாகவே படுகிறது).

    அல்லது கோளாறு என்னிடத்தில்தானோ?

    ReplyDelete
  14. ஒரு நாடு மற்றொரு நாட்டின்மீது போர் தொடுக்கும் சமயத்தில் போருக்கு எதிராக பேசுவோர் தேசவிரோதிகள், அதே போல் அரசின் என்கெளண்டர் கொலைகளை எதிர்த்து பேசுவோர் ஏதோ குற்றவாளிகளுக்காக வக்காலத்து வாங்குகிறார்கள் என்பதும் பொதுப்புத்தியில் நிறைந்துள்ளது.

    குஜராத்தில் கோத்ரா சம்பவத்திற்கு பின்பு அப்பாவி முஸ்லீம் மக்களை தீவிரவாதிகள் என்று என்கெளண்டரில் போலீசார் சுட்டவுடன் அவர்களுக்கு பதவியுயர்வு அளிக்கப்பட்டது. இதுவே என்கெளண்டர் ‘கொலை’யை ஊக்குவிப்பதாக உள்ளது. பொதுப்புத்தியை உருவாக்குகிற மக்களுக்கும் இது ‘கொலை’தான் என்று தெரியும் ஆனாலும் அவர்களுக்கு உடனே (போலீசே) குற்றவாளிக்கு தண்டனை வழங்குவதில் ஒரு ஆரவாரம்.

    தேவையான பதிவு... சமுதாயத்தில் அந்தஸ்து வாய்ந்த புள்ளிகளை ஏன் என்கெளண்டர் செய்யவில்லை? நல்ல கேள்வி.

    தோழர்.காஷ்யபன் சரியான உதாரண்ம் வழங்கியிருக்கிறார்கள்.

    ReplyDelete
  15. அன்புள்ள மாதவ்,
    கோவைச் சம்பவத்தின் ஊடே எழுந்த உங்கள் சிந்தனைகள் எனக்கொன்றும் வியப்பைத் தரவில்லை. நம்மைப்போன்றவர்கள் இப்படிச் சிந்திக்காவிட்டால்தான் வியப்பு. அற்புதமான அலசலாக இருந்தது உங்கள் கட்டுரை. பணக்காரக்குற்றவாளிகள் பற்றிக் குறிப்பிட்டுள்ளீர்கள். இன்னும் ஒருவகைக்குற்றவாளிகள் புனிதக்குற்றவாளிகள். இவர்களைச் சட்டம் நெருங்காதது மட்டுமல்ல, பாதுகாப்புத் தருவதைப்பார்த்து வருகிறோம் அல்லவா- காஞ்சிமடக் கதை பற்றி எத்தனைப் பத்திரிகைகள் எப்படியெல்லாம் செய்திகள் வெளியிட்டன. இப்போது சட்டம் பாவம் விழிபிதுங்கிக்கிடக்கிறது. போலீஸ் லத்திகள் யாருக்கு ஊன்றுகோல்கள் ஆயின? ஞாபகம் ஊட்டுவதற்குக்கூட நாதியற்றுப்போன இந்தச் சமுதாயத்தில் வாழநேர்ந்ததற்காக ஒவ்வொரு மனிதனும் வெட்கப்படவேண்டும்.
    எதைதையோ ஞாபகப்படுத்தியமைக்கு நன்றி, மாதவ்.
    நட்புடனும் தோழமையுடனும்
    நா.வே.அருள்

    ReplyDelete
  16. sir,

    Kulanthaykal kadathi kolai seyapata sampavathay tv il partheerkala? antha sirumiyin erantha udalay partherkala? athan pinbu kuda epadi antha padu pathakanai suttathai vimarsanam seya ungalal mudikirathu...

    ungal meal mikuntha kopamum varuthamum enaku erpadukirathu...

    en kudumpathay searntha kulanthayaka than parka mudikarathu...

    commenda i edam pera seythatharku nanri...

    ReplyDelete
  17. மாதவ் தோழர்,சிந்திக்கத் தூண்டிய உங்கள்
    கட்டுரை மிகச் சரியான கேள்விகளை எழுப்பிருக்கிறது.குற்றவாளியின்மீது
    படிக்கின்ற மக்களுக்கு கோபந்தான் அதற்காக
    சட்டம் அதன்பின்னணி என்ன என்று கண்டறிந்து
    அம்பலபடுத்தியபின்பாவது உரிய தண்டனை
    கொடுப்பதைவிட்டுவிட்டு சட்டத்தை காவல்துறையே
    கையில் எடுப்பது எப்படி சரியாகும்? 'பட்டப்பகல்
    திருடர்களை பட்டாடைகள் மறைக்குது'என்று சொன்ன பட்டுக்கோட்டை
    தீர்க்கதரிசி.அதற்காக மோகன்ராஜ் ஒரு
    பஞ்சையல்ல.சட்டம் தீர்க்கமாக ஆராயவேண்டும்

    ReplyDelete
  18. அன்பு மாதவ், தங்களின் இடுகையின் கேள்விகள்
    மிகவும் நியாயமானவை.அந்த நிகழவின் பின்னணியை கண்டறிந்து பினபு உரிய உச்சபட்ச
    தண்டனையை சட்டம் வழங்கியிருக்கலாம்.
    அப்போதுதான் குற்றங்ககள் குறைய வாய்ப்பு
    அதிகம்.இன்னும் வள்ளுவம் சொன்ன
    நோய்நாடி நோய்முதல்நாடி....என்பது நோய்களுக்கு
    மட்டுமல்ல, குற்றங்களுக்கும்தான்.

    ReplyDelete

You can comment here