பத்தாண்டு கால நாவல்கள் குறித்த வாசகக் குறிப்புகள் - 7

Koola Maathari

 

நிலத்தின் வாழ்வியல் ஒழுங்குகளைக் கண்டுணர விரும்பும் ஆய்வாளர்கள் தகவலாளியைத் தேடிப் போகிறார்கள். அவனின் விவரங்களுக்குள் உணர்ச்சியற்ற எண்களே அடைந்து கிடக்கின்றன. ஒரு இனக்குழுவின் பண்பாட்டையும், அழகியலையும் உரைத்திடும் சாத்தியம் கொண்டவையாக வெற்றுத் தகவல்கள் இருந்திடாதபோது அவற்றுக்குள் புனைவெனும் ரசவாதத்தை நிகழ்த்திப் பார்க்கிறான் படைப்பாளி. புனைகதைகளுக்குள் நிலத்தின் தொல்சடங்குகள், நம்பிக்கைகள், தங்களுக்குள் உருவாக்கி நிகழ்த்திப் பார்க்கப்படும் மனித ஒழுங்குகள் என யாவும் சேகரமாகியிருக்கின்றன. மாதாரிகளின் வாழ்வியல் நடப்புகளை அறிந்திட விரும்பும் மானுடவியல் ஆய்வாளர்கள் வாசித்தறிந்திட வேண்டிய புத்தகமாக கூளமாதாரி எனும் நாவலை உருவாக்கியிருக்கிறார் பெருமாள்முருகன்.

தமிழர்களின் வாழ்வு நிலத்தோடும், பொழுதோடும் தான் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. மாதாரிகளின் வாழ்வியலும் பொழுதுகளின் பின்புலத்தில் நிலத்தோடு கட்டிவைக்கப்பட்டுள்ளது. கூளமாதாரி எனும் நாவல் நிகழும் புலம் திருச்செங்கோட்டு மலையின் ஒளி எல்லைக்குள் அமைந்திருக்கும் வறள்காடு. அங்கே ஆடோட்டிப் போகிற மாதாரி வீட்டுப் பிள்ளைகளான கூளையன், மொண்டி, வவுறி, செவுடி, நெடும்பன் இவர்களோடு வீரன், பூச்சி எனும் விலங்கினங்களுக்குள் நிகழ்கிற மாற்றங்களும், தெளிவுகளுமே நாவலாகி யிருக்கிறது.

வவுறி எனும் பத்துவயதுப் பெண்ணின் பெயர் ராமு என்பதாக நாவல் ஒரிடத்தில் பதிவு செய்கிறது. மற்றபடி இவர்களின் தோற்றமே இவர்களுக்குப் பெயராகிறது. சக்கிலிய மாதாரிகளான இவர்களுடன் செல்வன், மணி எனும் கவுண்டர் வீட்டுப்பிள்ளைகளும் காடெங்கும் சுற்றித் திரிகிறார்கள். தமிழ்ப் புனைவிலக்கியத்தில் பதிவுறுத்தப்பட்டுள்ள காடுகளைப் போல குளிர்ச்சியும், பசுமை வெளிகளும், சுனைகளும் நிரம்பிய காடல்ல கூளமாதாரியின் காடு. வறண்ட கொழிமண் கொட்டிக் கிடக்கும் புழுதிக்காடு. இங்கே மழைக்காலத்தில் மீன் பிடித்துச் சுட்டுத்தின்றும், பனைமர நிழலில் கஞ்சி குடித்தபடியும் தான் நாட்களை நகர்த்தமுடியும். அப்படித்தான் நாட்களை நகர்த்துகிறார்கள் பண்ணையடி மைகளாக தங்களை ஒப்புக்கொடுத்துக் கொண்ட சக்கிலிய மாதாரிகள்.

கவுண்டர் வீடுகளில் வருச சம்பளத்திற்கு பண்ணையத்திற்காக விடப்படுகிற மாதாரிகளின் சொர்க்கம் திறப்பது அவர்கள் புழுதி பறக்க ஆடோட்டி போகிறபோதுதான். அங்கு தான் குழந்தைப்பருவ விளையாட்டுகளும், கொண்டாட்டங்களும் புதிய, புதிய வடிவம் பெறுகின்றன. கூளையனுக்கும், வவுறிக்கும் இடையே நடக்கும் உரையாடல்களில் எல்லாம் தாங்கள் பண்ணையத்திற்கு இருக்கும் கவுண்டர் வீட்டுப் பெருமைகளும், அவர்களின் அற்பத்தனங்களும் வந்து போகின்றன. காட்டில்தான் அவர்கள் வாழ்வின் ஒவ்வொரு துளியையும் உணர்கிறார்கள்.

சாணியள்ள, சகதியள்ள பயன்படுத்தப்படும் ஆளுக்காரர்களுக்கு மூணுவேளை பசியமர்த்திட வேண்டும். கேப்பைக்கூழு உருண்டைகளை புளிச்ச தண்ணியிலே போட்டுத் தந்தால் போதும் ஆடுமேய்க்கிற இடத்தில் சாப்பிட்டுக் கொள்வார்கள். தங்கள் வீட்டுக் கவுண்டச்சி திட்டும் போது வவுறி ஆட்டோடுதான் பேசிக் கொள்கிறாள். என்ன இன்றைக்கு கவுண்டன் போட்டுத் தாக்கிட்டானா. மற்றவர்கள் வந்து சேர தாமதமாகும் போது கூளையன், வீரன் என்கிற ஆட்டோடு தான் பேசிக்கொள்கிறான். அப்போதெல்லாம் கூளையனின் குரல் அவனுடைய கவுண்டனின் குரலைப் போலவே வெளிப்படுகிறது. அதிகாரத்தின் முறைமை குறித்த நுட்பமான பதிவு இது. வலிமை பெற்றவன் வலு விழந்தவர்களின் மீது செலுத்திய அதிகாரம் இடம் மாறிச் செல்கிறது. அதிகாரத்தால் வீழ்த்தப்பட்டவன் தன்னை விட பலம் குறைந்தவனின் மீது அதிகாரத்தைச் செலுத்துகிறான். கவுண்டன் தன் ஆளுக்காரனான கூளையன் மீது அதிகாரத்தைச் செலுத்திட, கூளையன் தன் ஆளுகைக்கு உட்பட்ட ஆடுகளின் மீது அதிகாரத்தைச் செலுத்துகிறான். அப்பொழுதெல்லாம் கூளையனின் குரல் தன்னுடைய கவுண்டனின் குரலைப் போலவே வெளிப்படுகிறது. அப்படித்தான் வெளிப்பட முடியும். அதிகாரத்தின் குரல்மொழி ஒற்றைத் தன்மையிலானதுதான். இப்படி நாவலெங்கும் மனவெளிகளில் நிகழ்கிற மாற்றங்களின் நுட்பங்களை மிக நேர்த்தியாக பதிவு செய்திருக்கிறார் பெருமாள் முருகன்.

செல்வன், மணியெனும் கவுண்டர் வீட்டுப்பசங்களுக்கு, பள்ளிக்கூடம் செல்வதைவிட இந்த சக்கிலிய மாதாரிகளுடன் காடெங்கும் ஆடிக்கொண்ட லைவது தான் மிகவும் பிடித்திருக்கிறது. அதற்குக் காரணம் தாங்கள் கவுண்டன் பிள்ளைகள், நமக்கு சக்கிலியர்கள் மேல் அதிகாரம் செலுத்த சகல உரிமையும் இருக்கிறது என்கிற திமிர்தான். அப்படியான அதிகாரத்தை வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் செலுத்தத்தான் செய்கிறார்கள். இப்படித்தான் ஒருநாள் காட்டிற்கு வந்த செல்வன் மொண்டி கூட்டத்தில் இல்லாததைப் பார்த்து அவனைக் குரல் கொடுத்துக் கூப்பிடுகிறான். அப்போது மொண்டியின் உள்மனதின் குரலும் செல்வனின் உரையாடல்களும் வாசகன் கவனித்தறிய வேண்டியவை.

மொண்டியாம் மொண்டி.... எங்கா லொசரங்கூட இருக்க மாட்டான். கூப்பிடறதப் பாரு ..... என முணுமுணுத்தான். ஆளையும் அவன் டவுசரையும் பார்த்தால் சுண்டைக்காய் மாதிரி தெரிகிறான். இதுவே கூளையனோ, நெடும்பனோ கூப்பிட முடியுமா குடல் வெளியவர்ற மாதிரி மிதிச்சிற மாட்டேன்.... என்று நினைத்துக் கொள்கிறான். டேய்.... மொண்டித்தாயோலி .... இவ்வளா நேரம் மொண்டி மொண்டின்னு கால்கால்னு கத்தறன். வேணும்னே பேசாம இருந்தியாடா... இருந்தாலும் திமிரு எச்சுடா உனக்கு. கவுண்டன்மூடு போடற சோத்த கொறச்சா கொழுப்பும் கொறஞ்சிரும்டா... செல்வன் அப்படியே அவனுடைய அப்பனின் குரலில் பேசுகிறான். பள்ளிக்கூடக் குழந்தைகள் தன் ஆசிரியைப்போல பேசுவதில் ஏன் பெரும் விருப்பம் கொள்கின்றன என நாம் யோசிக்க வேண்டியுள்ளது.

காட்டில் மாதாரிக் குழந்தைகளின் விளையாட்டுக்கள் தனித்தன்மையிலானவை. அதிலும் குறிப்பாக கல்லெடுப்பான் விளையாட்டின் வழியே வாழ்வியல் தத்துவங்களை வரைந்து பார்த்திருக்கிறார் எழுத்தாளர். ஆட்டத்தின் மையத்தில் கூளையன் வரும் போது அவனைத் தாய்க்கோழியாகவும் மற்றவர்களை அவனிடமிருந்து குஞ்சுகளை (கல்லை) கொத்த வரும் பருந்தாகவும் பாவிக்கிறான். ஆனால் கவுண்டர் மகன் செல்வன் பூண்டியாக ஆட்டத்தின் மையத்தில் வரும் போது அவனை மொண்டி வேறு மாதிரியாக கற்பனை செய்து பார்க்கிறான். அவனுக்குள் கொதித்துக் கிடந்த கோபம் செல்வனை பன்றியாக்கிப் பார்க்கிறது. காலந்தோறும் தம்மை பன்றிக்கூட்டத்தோடு மட்டுமே பொருத்திப் பார்க்கிற கவுண்டனின் பிள்ளையை பன்றியாக்கிப் பார்த்திட்ட மொண்டியின் மனநிலை மிகவும் முக்கியமானது. மனதிற்குள் மட்டும் தான் புழுங்கியிருக்க வேண்டுமா மொண்டி என்கிற கேள்வியும் வாசக மனதில் எழுகிறது.

நாவலில் செல்வனுக்கும், கூளையனுக்குமான உறவுகள் வேறு மாதிரியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களின் மனநிலைகளே நாவலின் மையமும் கூட. அதிலும் குறிப்பாக இரவுகளில் பட்டிக் காவலுக்கு இருவரும் இருந்திட வேண்டிய அவசியங்களில் நிகழும் மாற்றங்கள் மிக முக்கியமானவை. இவர்கள் காவலிருக்கும் காடு திருச்செங்கோடு மலையின் வாலெனப் படர்ந்திருக்கிறது. செங்கோட்டையன் பரிபாலனம் செய்யும் மலைநோக்கி இவர்கள் கால் நீட்டிப் படுப்பதில்லை. இஸ்லாமியர்கள் கூட மேற்கு திசை நோக்கி படுப்பதோ ஏன் சிறுநீர் கழிப்பதோ கூட இல்லை. இது தமிழ் இஸ்லாமியக் கூறா அல்லது உலகெங்கும் இப்படித்தானா என்று கூட ஆய்வு நிகழ்த்தத்தான் வேண்டும்.

பெரும்காட்டின் இரவிற்கு சகலவற்றையும் அழித்தெழுதிடும் ஆற்றல் உண்டு என்று படுகிறது. ராட்சச ராக்காச்சியாக விரிந்து படர்ந்திருக்கும் காட்டிற்கும் அவளின் மீது ஆயிரம் கைகளாக உயர்ந்து நிற்கும் பனை மரங்களுக்கும் கவுண்டனையும், சக்கிலியனையும் ஒன்றாக்கிடும் வல்லமை ஒளிந்திருக்கிறதோ. கந்த மூப்பனின் கைபட்டு உருவான ஆமரத்துக்கள்ளிற்கு வெறும் போதை மட்டும் இல்லை. நாய்குடிக்கும் தூக்குப் போசியாக இருந்தாலும், சக்கிலியன் தொட்டுத் தூக்கி எச்சில் வடித்து உறிஞ்சிய எல்லாவற்றையும் அடித்துத் துரத்துகிறது, செல்வனுக்குள் இருந்து. லயித்து செல்வன்கள் உறிஞ்சுவதைப் பார்த்துச் சிரிக்கும் சிரிப்பு காடெங்கும் எதிரொலிக்கிறது. தன்னுடைய எச்சிலைக் குடிக்கும் கவுண்டனின் நிலை பார்த்து கொக்கரித்துச் சிரிக்கிறான் கூளையன். இதுவும் தலித்தின் உள்மன உரையாடல்தான்.

பகலே இரவிற்கான தயாரிப்புதான். இரவுகளை அவரவர் மனநிலையில் லயித்து கடந்திடும் பழக்கம் இல்லாதவர் யாருமில்லை. ஆடுகளோடு பெருங்காட்டில் செல்வன் லயித்துக் கிடக்கிறான். கூளையனுக்கு அப்படியில்லை. அது அவனின் வாழிடம். கொட்டிய பெரும் மழைக்கும் அடித்து வீசிய சூறைக்காற்றிற்கும் படல்களும் ஆடுகள் தங்கியிருந்த குடிசையும் பறந்து போகின்றன.அவை திருசெங்கோட்டு மலையின் ஒளிப்புள்ளியாக கரைந்து போகின்றன. கண்ணீர் மல்கி நிற்கிறான் செல்வன். இயற்கை நிகழ்த்திய பெரும் விளையாட்டினை எதிர் கொள்ள முடியாமல் செல்வன் கூளையனோடு ஒன்றுகிறான். கூளையனும் அவனை ஆதரவாய் தழுவிக் கொள்கிறான். சக்கிலியன், கவுண்டன், சாதி, தீண்டாமை என யாவற்றையும் பெரும் மழை அடித்துத் துரத்துகிறது. துன்பத்தின் உச்சத்தில் கூளமாதாரியோடு ஒன்றிய செல்வன் நிச்சயம் பகலின் வெளிச்சத்தில் விஷத்தைத்தான் கக்குவான் என நமக்கும் தெரியும், கூளையனுக்கும் தெரியும். பெருமாள் முருகனும் அறிந்திருப்பார் என்றே நம்புவோம்.

கூளையன் தேங்காய் தின்னும் ஆசையில் தன் கவுண்டனின் பகைக் கவுண்டன் தோப்பென்று தெரியாமல் தேங்காய் திருடித் தின்று விடுகிறான். பழிதீர்த்திட காத்திருக்கும் மனிதக் கூட்டத்தின் பிரதிநிதியான தோப்புக் கவுண்டன் இதைச் சாக்காக வைத்து கூளையனின் கவுண்டனை வஞ்சம் தீர்ப்பதோடு இல்லாமல் திருட்டுப் பட்டமும் கட்டுகிறான். கூளையனின் கவுண்டனுக்குள் ஊறிய வன்மம் கொடூரமாக வெளிப்படுகிறது. கயிறுகளால் உடலை இறுகக்கட்டி தலைகீழாக கிணற்றுக்குள் தொங்க விடுகிறான். மிகக் கொடூரமான தண்டனை முறையிது. கேட்பார் இல்லாததால் நீடித்துத் தொடர்கிறது. தேங்காய் திருடிட்டான், மாங்காய களவாண்டான்னு கவுண்டர்கள் தன் ஆளுக்கார பயல்களை அடித்துக் கொன்று தூக்குவதை நாவல் அழுத்தமாகப் பதிவு செய்யத் தவறியிருக்கிறது.

மனித மனம் வழமை போல் இயங்கும் சக்கர வாட்டச் சுழற்சியில் இருந்து விலகிப் பயணிக்கவே விரும்புகிறது. இத்துப்போய்க் கிடந்து உழலும் கூளையனை மாட்டுக்கறி தின்பதற்காக பெரும் பாடுபட்டு அழைத்து வருகிறார் அவன் அப்பா. கறிதின்ற மறுநாள் அவர் பண்ணையத்திற்குச் செல்லாமல் பாட்டி வீட்டில் சில நாள் கழித்து, பாறைப்புடவுகளில் படுத்துறங்கியும் கிடக்கிறான்.

பட்டிப் பொங்கலுக்கு ஆடுகளைக் குளிப்பாட்டிடும் போது நிகழ்கிற கொண்டாட்டமான மனநிலையில் தன்னுடைய ஆள்காரனான கூளையனை கிணற்று நீருக்குள் முக்கித் தள்ளுகிறான் செல்வன். தன் கிணறு என்கிற கர்வமும் மற்றவர்கள் பண்ணையத்து அடிமைகள் என்பதாலும் கவுண்டர் சாதித்திமிரும் ஒன்றுசேர அனைவரையும் கிணற்றுத் தண்ணீருக்குள் முக்குகிறான் செல்வன். ஏய்யா இப்பிடிச் செய்யிற எனக் கேட்டபோது எங்க கெணறு... என்ன வேண்ணாலும் செய்வன்டா... என்கிறான். சண்டையின் உச்சத்தில் செல்வன் கூளையனைப் பார்த்து போ .... போய் வவுறியப் போட்டு தொங்கு போ.... என்கிறான். அடக்கி வைத்திருந்த கோபம் அத்துமீற செல்வனைக் கிணற்றின் அடியாழம் வரை முக்குகிறான் கூளையன். அதன் பிறகு செல்வன் மேலேற வில்லை. எல்லாம் கடந்த முடிவற்ற ஆழத்திற்குள் சென்றுவிட்டான். நாவல் முடிந்திடவில்லை. இனியான நாவலின் பகுதிகளை வாசகன் தான் அவரவர் மனநிலையில் எழுத வேண்டும்.

நாவல் என்றாலே ஒரு முனையிலிருந்து கிளம்பி விரிந்து, விரிந்து பெரும்பரப்பாக உருமாறுவதுதான். இங்கேயும் மிகப்பிரம்மாண்டமான காட்டை உருவாக்கித் தருகிறார் எழுத்தாளர். காட்டின் உரிமையை வெற்றுக் காகிதங்களிலும், அங்கு விளையும் தவசங்களிலும் மட்டும் கண்டவர்கள் கவுண்டர்கள். இதுமட்டுமல்ல, காடு என்பதனை காட்டின் உயிர் சிநேகிதர்களான மாதாரிகளின் வாழ்வின் வழியே பெருமாள் முருகன் வரைந்திருக்கிற கூளமாதாரி தமிழின் நேர்த்தியான நாவல் என்பதை வாசித்துத் தான் உணரமுடியும்

- ம.மணிமாறன்

கருத்துகள்

2 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. மண் மணத்துடன் வெளிவரும், புதினங்களை வாசிப்பதில் அலாதி சுகமே! கிடைக்குமிடம் தெரிந்தால் நலமே!

    பதிலளிநீக்கு
  2. சமகாலத்தில் கொங்க நாட்டில் இருந்தும் ( கவுண்டன் ) குடகு நாட்டில் ( மாதாரி சக்கிலியன் ) ஒன்றாய் வாழ்ந்த இரு சமூகங்கள் ஆரிய தாக்கத்தால் எதிரியா போனார்கள்.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!