பத்தாண்டு கால நாவல்கள் குறித்த வாசகக் குறிப்புகள் - 8

sooranai thetum oor புனைவின் சகல சாத்தியங்களையும் எதிர்கொள்ளும் இலக்கியவடிவமாக நாவலே இன்று வரை நீடித்திருக்கிறது. மிகச்சரியான துவக்கம். சம்ப வங்களை அடுக்கி, அடுக்கி காட்சிப்படுத்துதல். நீண்ட ரசமான விவரணைகள். வாசகனை அதிர்வுறச் செய்யும் திருப்பங்கள். வாசக மனதினுள் கேள்விகளை உருவாக்கி அவற்றிற்கான விடைதேடிய பயணத்தை நாவ லுக்குள் பரவச்செய்து கொண்டே போய் கச்சிதமாக முடித்து விடுதல். இவையே நாவல்கள் தனக்கான ஒழுங்கென உருவாக்கிக் கொண்டன. இவற்றிலிருந்து விலகிச் சென்று விதவிதமான எழுதுதல் முறைகளையும் எழுத்தாளர்கள் உருவாக்கத்தான் செய்தார்கள். அவற்றின் மீதான விரிவான வாசக கவனம் ஏற்பட்டதும் உண்டு. அப்படியான பொருத்தமான விலகலே ஜனகப்பிரியாவின் சூரனைத்தேடும் ஊர்.

கதைகளுக்குள் இயங்கும் மொழியைத் தீர்மானிப்பவனாக படைப்பாளி மட்டும் இருப்பதில்லை. சூழலுக்கும் குறித்த பங்கிருக்கிறது. தொண்ணூறுகளின் துவக்கத்தில் விதவிதமான எழுதுதல் முறை உருவானதற்கு சோவியத் சிதைவினால் ஏற்பட்ட மனநெருக்கடி. லத்தீன் அமெரிக்க நாவல்களின் மீது தமிழ்வாசகனுக்கு ஏற்பட்ட ஈர்ப்பு, ஐரோப்பிய, பிரெஞ்சு அறிவியக்கத்திற்குள் ஏற்பட்ட தத்துவ உரையாடல்களின் வழியே உருவாகி வந்த அமைப்பியல் வாதம், பின் அமைப்பியல் வாதம், பின் நவீனத்துவம், பின் காலனியம் போன்றவை உருவாக்கிய விவாதங்களுக்கும் பங்குண்டு. அப்படியான விவாதங்களை உள்வாங்கிக் கொண்டு உருவாக்கி கட்டப்பட்டுள்ள பிரதியென ஜனகப்பிரியாவின் நாவலைக் கூறலாம்.

இப்படியான முடிவிற்கு வருவதற்கு மிக முக்கியமான காரணம் நாவலை நீங்கள் எங்கிருந்தும் துவங்கி வாசித்துச் செல்லமுடியும். சூரனைத் தேடும் ஊருக்குள் நீங்கள் திருவேங்கிடச் சாமியாரின் மூலமாக நுழைந்து பார்த்தால். தத்துவம், அறம், துறவு, இடதுசாரிச் செயல்பாட்டுக்களம் எனப்பயணிக்கும் சாத்தியம் கொண்டதாக இருக்கிறது பிரதி. முத்துச்சாமியின் வழியாக ஊருக்குள் நுழைந்தால் சாதியவன்மம், தீராதபகை, குடும்பம் தரும் நெருக்கடிக்குள் சிக்கித்தவிக்கும் மனிதமனங்களின் உளச்சிக்கல் என வாசகன் கண்டடைந்து தனக்குள் விவாதம் நடத்திப்பார்ப்பான். ஊருக்குள்  நிகழும் துர்சம்பவங்களுக்கான காரணம் எதுவென தேடியலைகிறார்கள் என்றும் வாசித்தறியலாம். ஒரு பிரதிக்குள் மற்றொரு பிரதியென வைத்து அடுக்கப்பட்டிருக்கும் சூரனைத் தேடும் ஊர் ஜனகப்பிரியாவின் முதல் நாவல்.

நவீன இலக்கிய வெளியில் நீண்ட காலமாக இயங்கிக் கொண்டிருக்கும் ஜனகப்பிரியா இலக்கிய வெளிவட்டம் எனும் தீவிரத்தன்மையிலான இலக்கிய இதழை மிகக் காத்திரமாக நடத்தி வந்தவர் என்பதும், அந்நாளைய சிற்றிதழ் சார் அரசியலை வடிவமைத்ததில் இலக்கிய வெளிவட்டத்திற்கும் சிறு பங்குண்டு என்கிற தகவலும் வாசகன் நாவலுக்குள் ஊடுருவிச் சென்றிடவும், பிரதியின் அரசியலையும், அதன் இலக்கியச் செழுமையையும் உள்வாங் கிடவும் உதவும் என்றே நான் நம்புகிறேன்.

பிழையூரின் கதையிது. அவ்வூரின் காட்சிப் படிமமாகத்தான் தமிழக கிராமங்கள் யாவும் இருக்கின்றன. விரைந்து செல்லும் பேருந்தில் அமர்ந்திருக்கும் நம் நாசியை மலவாடை எட்டி விட்டால் நாம் அறிந்து கொள்ளலாம் அருகில் கிராமம் ஒன்று இருக்கிறதென. காலாதிகாலமாக குளக்கரையினுள் வேர்விட்டு உயர்ந்து நிற்கிறது ஆலமரம். அந்த ஆலமரப் பொந்தினுள் இருந்து ஒலிக்கும் கேட்க நாரசமான ஆந்தையின் அலறல் குறித்த தர்க்கத்தையும், ஒழுங்கின்மையையும் குறித்த ஊரின் உரையாடலே நாவலாகியிருக்கிறது.

ஆலமரப்பொந்தினுள் அலறும் ஆந்தையின் குரலுக்கு உலகத்திற்கே கேடு வரும் என்கிற தகவலை அறிவிக்கும் தன்மையிருப்பதாக சமூகம் எப்போது இருந்து நம்பத்துவங்கியது. ஏன் இது குறித்து ஊர்ப்பெரியவர்கள் எப்போதும் வியாக்கியானமோ, கேள்விகளோ எழுப்பவில்லை.? இளைஞர்கள் சாதிச்சங்கம், ரசிகர்மன்றம் என அலைந்து, அங்கொன்றும், இங்கொன்றுமாக எப்போதாவது ஊர்ப்பொது விஷயத்தில் அக்கறை காட்டுகிறவர்கள் ஆந்தை அலறியதால் வரக்கூடிய துயரத்திலிருந்து ஊரைக் காப்பாற்ற துடிக்கவில்லையே ஏன்? பெண்கள் மவுனமாக யாவற்றையும் சகிப்பது போலத்தானே இதையும் சகித்துக் கொண்டு இருக்கிறார்கள். இது பிழையூரில் மட்டுமல்ல, தமிழ்நிலத்தின் ஊர்களில் நிலையாகத்தான் இருக்கிறது.

நாவலில் ஜனகப்பிரியா பெண்களின் மனநிலை குறித்து பல இடங்களில் பதிவு செய்திருக்கிறார். விளையாப் பூமியின் வெக்கையில் கந்தக சல்பேட் தின்று செத்துப்போன தீப்பெட்டி ஆபிஸ் குமரிகளுக்கு கல்யாணம் ஆகியிருந்ததா என்பதுதான் போலீஸ் கேட்கிற முதல் கேள்வியாக இருந்தது. ஊருக்குள் சாதிக் கலவரம் நிகழும் போதெல்லாம் புழுபூச்சிகளை மிதித்து அழித்திடும் பூட்ஸ்கால்கள் அதிர்ந்திட நுழையும் போலீஸ்காரன் கேட்ட கேள்வி இது. நிலவும் கேள்விகளுக்கு விடைகள் காணமுடியாத போது அதன் மீது புதிய கேள்விகள் எழுப்புவதைச் சமூகத்தின் மீதான அவமதிப்பென்று கருதி பெண்கள் மவுனம் காக்கின்றனர் எல்லாவற்றிற்கும் என எழுதிப்பார்க்கிறார் ஜனகப்பிரியா.

இப்போதெல்லாம் வாசகனின் பங்கேற்பிற்கு இடமளிக்காத கனகச்சிதமான பிரதிகளை எழுத்தாளன் உருவாக்குவதில்லை. சூரனைத் தேடும் ஊர் எனும் பனுவலில் வாசகன் பங்கேற்றிடத் தோதான மவுனங்களும், இடைவெளிகளும் நிறைந்திருக்கிறது. நாவலுக்குள் இருந்து முகிழ்த்து வரும் ஒற்றை வரி வாசகன் மனதில் விதவிதமான எண்ணங்களை, அவன் அறிந்திருந்த கதைகளை, கருத்துக்களை உருவாக்கிடும் வல்லமை கொண்டவையாக இருக்கிறது. இது ஒரு புத்தகத்தில் எங்காவதுதான் தென்படும். இந்நாவலில் பக்கங்கள் தோறும் இப்படியான வாசகனுக்கான மவுனங்களை உருவாக்கித் தந்திருக்கிறார் எழுத்தாளர்.

எல்லோரும் ஏதோ ஒரு கணத்திலேனும் மகான் என்ற நிலையைத் தொடத்தான் செய்கிறோம். ஆனால் நீடிப்பதில்லையே அந்த கணங்கள். லேசா விழுந்திட்டாப் போதும் எல்லோரும் ஏறி மிதிக்கிறாங்க. நவீனத்தின் சொற்களும் பக்தி சார்ந்தே இயங்குகின்றன சிலவேளை. ஒழுக்கம் பொதுவானதா.... சாமியாருக்கும் அப்பாவுக்கும் ஒன்றா? கேப்டனின் ஒழுங்கும் டாக்டரின் ஒழுங்கும் வேறு தானே... புரோகிதரின் ஒழுங்கும் வேதாந்தியின் ஒழுங்கும் ஒன்றாக முடியுமா? ஆசிரியருக்கும் மாணவருக்கும் பிரித்து வைக்கப்பட்டிருக்கிறது தான் ஒழுங்கின் வடிவங்கள்... இவ்வுரையாடல்களுக்குள் எல்லாம் உள்நுழையும் வாசகன் தனக்கான கதைகளையும் விவாதங்களையும் உருவாக்கிப் பார்ப்பான்.

முத்துச்சாமியின் ஞாபகங்கள் வழியாக ஊரின் கதையைச் சொல்லிப் பார்க்கிறது பிரதி. நாவலுக்குள் இயங்கும் கதையை அவ்வப்போது வந்து திருவேங்கிடச் சாமியும் வளர்க்கிறார். பகையில் திளைக்கும் ஊர் இது. பகையைப் பத்திரப்படுத்தி மனம் வெதும்பி சகமனிதனை மல்லாத்தி சாய்த்திட விதவிதமான காரணங்கள் இருக்கிறது ஊருக்கு. இது பிழை யூரின் நடப்பல்ல. சகல ஊர்களின் செயல்பாடுகளும் இப்படித்தான் அமைகின்றன.

பங்காளிப்பகை, தெருப்பகை, ஊர்ப்பகை, உதவாக்கரைப் பிள்ளைகளால் வீடுதுண்டான பகை, செய்முறை செய்யத்தவறிய பகை, வரப்பால் உயர்ந்த பகை, கோவில் வரி தராத பகை, இப்படியான பகைகளுக்குள் திசை தவறிய மாதிரி தெரியவில்லை. இன்றைக்கு ஊர் இருந்தது வேறாக. நாகரீகம், வளர்ச்சி, மாற்றம், பணச்செருக்கு, சாதித் திமிர், தரித்திரம், சதி, அரசியல் என யாவும் ஊரை அழித்திடத் துடித்திடும் சக்திகளாகத் தென்படுகின்றன. இவற்றையெல்லாம் ஒன்றாகத் திரட்டி பேரிருள் ஒன்று ஊரை மூடியிருக்கிறது. அதற்குக் காரணம் ஆலமரப்பொந்திற்குள் நுழைந்து ஊரை அழிக்கத்துடிக்கும் அசுரன் தான். அவனின் ஒற்றைக் கண்ணுக்கு ஊரைக் குழப்பியடித்திடும் திறன் இருப்பதாக நம்பிய ஊர். அவனை அழித்திடும் தன்மையைக் கண்டுணர அல்லது அவன்தான் ஊரின் நிலைமாற்றத்திற்கு காரணம் என்று துடித்தலைகிறது. சூரனைத் தேடிச்செல்லும் ஊர் மெதுவாக வளர்ந்து சூரனைத் தேடிக் கொண்டிருக்கும் தமிழ்நிலமாக மாற்றம் அடைகிறது.

நாவலுக்குள் சாதிய துவேஷத்தை தன்னுள் அடைகாத்துக் கொண்டிருக்கும் ஊர் இது என்பதை வெளிப்படுத்தும் இடங்களும் முதல்பகுதியில் முத்துச்சாமியின் மனங்களுக்குள் பயணப்படும் நிகழ்வுகளும் நாவலை தலித் அரசியல் நாவலாக்கிப் பார்க்கிறது. பின் பகுதியில் ஊரின் சிதைவிற்கான காரணாதியான சூரனைத் தேடி அழித்திட துடித்தலைவதாக நிகழ்த்தப்படும் கதையாடல்களின் வழி நாவல் சூழலியம், அணுஅரசியல், இவையாவற்றின் நுட்பத்தையும் அறிந்திட இயலாது தங்களுக்குள் வியாக்கியானங்களும், வெட்டிப் பேச்சுகளும் நிகழ்த்தியபடி நிலத்தைப் பழிதந்து கொண்டிருக்கும் மக்களின் துயரத்தை பேசுவதின் வழி பின் நவீனத்துவ அரசியல் நாவலாகவும் மாற்றம் பெறுகிறது.

நாவலின் பல இடங்களில் முத்துச்சாமி முன் வைக்கும் கேள்வி அல்லது ஜனகப்பிரியாவின் ஆதங்கம் இலக்கியப் பிரதிகளில் இடமற்று வெளியே நிற்கும் அருந்ததியர்களின் குரலாக பதிவாகியுள்ளது. திருவேங்கிடச்சாமியாருக்கும் முத்துச்சாமிக்கும் இடையில் தர்க்கித்து நடைபெறும் கவித்துவமான உரையாடல் நாவலில் இருந்து முற்றிலும் விலகி நின்று வாசிக்கக் கோருகிறது. உரையாடலுக்குள் இந்திய தத்துவ மரபுகள், வாழ்வின் முடிச்சுகள் ஏன் இப்படி அவிழ இயலாது இறுகிக் கிடக்கின்றன என்பது குறித்த அக்கறைகள், அறிவைத் தாண்டி நிற்கும் மனதின் நுட்பம் என யாவும் வந்து போகின்றன.

இதே உரையாடலின் மற்றொரு இடத்தில் பாம்பாக இருந்தால் பல்லக்கு வரும், மோட்சம் போகலாம். நந்தன் போகலையா. பறை ஒதுக்கிய சக்கிலிக்கு பல்லக்கு வருமா சாமி என்று வருவது குறித்து மிகுந்த கவனத்துடன் விவாதிக்க வேண்டும் என்று படுகிறது. அடையாள அரசியலின் வழியாகக் குறுகி தலித் ஒற்றுமையை சிதைத்திடக் கூடாதென மட்டும் சொல்லத் தோன்றுகிறது. மதுரை வீரன், முத்துப்பட்டன் என மரபான மாதிகாக்களின் கதைகளை ஆலமரத்தின் ஒவ்வொரு விழுதிற்கும் ஒவ்வொன்றாகச் சொல்லி அதை நீட்டித்துச் சென்று அடர்த்தியான நாவலாக்கிடும் சாத்தியமும் பிரதிக்குள் இருக்கிறது. அதையும் எழுத்தாளன் செய்து பார்த்திருக்கவேண்டும் என்று தோன்றுகிறது.

நாவலுக்குள் இயங்கும் மொழியும், சொற்சிக்கனமும், கவித்துவமும், அரசியல் செறிவும் தமிழின் இலக்கிய வெளிக்கு புதுவிதமான எழுதுதல் முறையைக் கொண்டு வந்து சேர்த்திருக்கிறது. நூற்றைம்பது பக்க நாவலெங்கும் எழுத்தாளருடன் வாசகன் பயணிக்கவும், விலகி நிற்கவுமான சாத்தியங்களைக் கொண்டுள்ள சூரனைத் தேடும் ஊர் யாவரும் வாசித்துணர வேண்டிய தமிழின் மிக முக்கியமான படைப்பு.

-ம.மணிமாறன்

கருத்துகள்

6 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
 1. எனக்குத் தன் சுடு சோறு சாப்பிட்டுப்புட்டு வரட்டுமா...

  பதிலளிநீக்கு
 2. அருமையாக இருக்கிறது வாழ்த்துக்கள்...

  அன்புச் சகோதரன்...
  ம.தி.சுதா
  http://mathisutha.blogspot.com/

  பதிலளிநீக்கு
 3. 'சூரனைத் தேடும் ஊர்' - ஒரு அருமையான பார்வை.

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!