கள்ளன் போலீஸ்
பாலுதான் பார்த்திருக்கிறான். ஊதிவிட்டான் உடனே. “மாட்டிக்கிட்டாங்கடா” என உள் பக்கம் நாதங்கியால் பூட்டியிருந்த கதவில் ‘தொம், தொம்’ கைகளால் தட்டி விலகி ஓடி சிரித்தார்கள் சிறுவர்கள் வெளியே. ஒருவன் கல்லை எடுத்து கதவில் எறியவும், மேலும் சிலர் கற்களைத் தேட ஆரம்பித்தார்கள்.
பனைமட்டை வேலி அடைக்கப்பட்ட வளவுக்குள் இருந்த சின்னக்குடிசை அது. பொன்னுத்தாய் ஆச்சி இறந்த பிறகு அங்கு பெரியவர்களின் வரத்து அவ்வளவாக இல்லை. பம்பாயிலும், சென்னையிலும் ஆச்சியின் மகன்கள் இருந்தார்கள். மரப்பரணில் சில நார்ப்பெட்டிகளைத் தவிர அந்த ஒற்றை அறைக்குள்ளும், சின்ன சமையலறைக்குள்ளும் எதுவும் கிடையாது. இருட்டு பூசிய அங்கு ஒளிந்து விளையாடும் சிறுவர்களின் சத்தமே எப்போதாவது கேட்கும். அப்படி கள்ளனாக வந்தவர்கள் இன்று போலீசாகி விட்டார்கள்.
பீடி குடித்துக்கொண்டு, இற்றுப் போன சைக்கிளில் அந்தப் பக்கம் வந்த மகாராசன் “என்னலே?” என்று நின்று கேட்கவும், சிறுவர்கள் பெருஞ்சத்தமாய் சிரித்தார்கள். அருகில் ஓடிப்போய்ச் சொன்னார்கள். “மொளச்சு மூணு இல விடல, அதுக்குள்ளயா. காலங்கெட்டுப் போச்சு. தள்ளுங்கலே” என்று அவரும் கதவின் அருகில் சென்று “யாரு உள்ளே?” என்று சத்தம் போட்டுவிட்டு காத்திருந்தார். “ஒழுங்கா கதவத் தெறந்து ரெண்டு பேரும் வெளியே வாங்க” என அதட்டினார். சிறுவர்கள் சத்தம் அடங்கி கதவையேப் பார்த்திருந்தார்கள். எந்த அசைவும் இல்லை. மகராசனும் கதவை பலங்கொண்ட மட்டும் தட்டினார்.
கொஞ்ச நேரத்தில் சின்னதாய் ஒரு கூட்டம் திரண்டு விட்டது. ஆள் ஆளாளுக்கு கதவோடு பேச ஆரம்பித்தார்கள். “இப்ப வெளியே வர்றிங்களா, இல்ல கதவ ஒடைக்கவா?” என்று கடற்கரை ஆங்காரமாய் மிரட்டினார். “அது எதுக்குண்ணே. மேல ஏறி ஒலய பிரிச்சாப் போச்சு” என்றார் சாமியாடி முருகேசன். ம்ஹூம். அவர்கள் நினைத்தது நடக்கவில்லை.
மங்களம்மன் கோவிலில் தண்ணீர் எடுக்க குடத்தோடு அந்தப் பக்கமாய் வந்த கட்டித்தங்கம் கூட்டத்தைப் பார்த்து வளவுக்குள் வந்தார். ஊரேயே எட்டி நிற்க வைக்கும் வாய்க்காரியான அவரைப் பார்த்ததும் கூட்டம் கமுக்கமானது. ‘இன்னிக்கு உள்ள இருக்குற ரெண்டு பேருக்கும் மஞ்சத்தண்ணிதான்’ என்று நிச்சயம் கொண்டார்கள். மேலும் சுவாரசியம் பிடித்துக்கொண்டது எல்லோருக்கும்.
“இன்னா பாருங்கக்கா...” என ஆரம்பித்து, சொல்லி, “இந்த வயசுல இப்படின்னா ஊர் வெளங்குமாக்கா” என கடற்கரை முடிக்கக்கூட இல்லை. “உங்களுக்கெல்லாம் அறிவே கெடையாதா...” என பொங்கிக் கத்தினார் கட்டித்தங்கம்.
“சின்னப் பசங்கதான் வெவரம் இல்லாமச் சொல்றாங்கன்னா நீங்களும் நியாயத்த எடுத்துட்டு வந்துட்டீங்க. போங்கண்ணே, போங்கண்ணே. உள்ள யாரும் இருக்க மாட்டாங்க, போங்க” என விரட்ட ஆரம்பித்தார். “கதவு உள் பக்கமாத்தான பூட்டியிருக்கு, அப்பம் உள்ள இருக்காங்கன்னுதான அர்த்தம்..” என்ற ஒரு பொடியனுக்கு முதுகில் ஒரு சாத்து சாத்தவும், மற்றவர்கள் வெலவெலத்துப் போனார்கள். “ச்சீய்... வெக்கமா இல்ல. வந்துட்டாங்க பாக்குறதுக்கு..” என குடத்தை கீழே வைத்து, சேலையை வரிந்து கட்டி, கொண்டையை முடியவும் வியர்த்துப்போன அனைவரும் அங்கிருந்து அகன்றார்கள்.
கொஞ்ச நேரம் அங்கேயேத் தனியாய் நின்ற கட்டித்தங்கம், “பொன்னுத்தாயக்கா, நானும் போறேன். நல்ல புத்தி குடுங்க புள்ளைகளுக்கு” என சத்தமாய்ச் சொல்லி நடக்க ஆரம்பித்தார்.
குறுக்கெழுத்து விளையாட்டு –1 விடைகள்
இந்த குறுக்கெழுத்து விளையாட்டுக்கு விடைகளை சென்ற பதிவின் பின்னூட்டங்களாக-
அம்பிகா ஏறத்தாழ முழு விடைகளையும் சொல்லி இருந்தார்.
தர்ஷன் கிட்டத்தட்ட நெருங்கியிருந்தார்.
தீபா ஓரளவுக்கு முயற்சித்து இருந்தார்.
ஆர்வத்துடன் இந்த விளையாட்டில் பங்குபெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்களும், நன்றிகளும்.
குறுக்கெழுத்து விளையாட்டு -1
வார்த்தைகளுடன் கொஞ்சம் விளையாட்டு இன்று. கட்டங்களுக்குள் பதிவர்கள் இருக்கிறார்கள். எழுத்தாளர்கள், இயக்குனர்கள், நடிக, நடிகையர் இருக்கின்றனர். கதைகள், சினிமாக்கள் இருக்கின்றன. கண்டுபிடியுங்கள் பார்ப்போம்.
மன்னிக்கவும். புதிய பதிவர்கள் அறிமுகத்திற்கான குறிப்புகள் யாரிடமிருந்து வரப் பெறாததால் தீராத பக்கங்கள்-3 இந்த வாரம் வெளியிட முடியவில்லை.
இடமிருந்து வலம்:
1.ஏற்றத் தாழ்வு இன்றி அமைய இதனைச் செய்தாக வேண்டும்.
3.விவிலியத்தில் அபினோவாமின் மகன். அக்கம் பக்கம் பார்க்கிறவனோ?
7.குஜராத்தில் இங்கு அடிக்கடி கலவரம் நடந்திருக்கிறது.
9.சிங்கிஸ் ஐத்மாத்தவின் நாவல் (வல இடமாய்)
11.மாலன் இதனோடு அடையாளம் காணப்படுவதுண்டு.
13.இவரின் பேனா பேசினால் பதிவு.
14.சபதம் என்றும் பொருள் உரைக்கலாம்.
15.கவிப் பதிவர். மலையாள சினிமா ஒன்று ஞாபகம் வருமே..
16.சர்ச்சைகளில் (ஈடுபடும்) அடிபடும் எழுத்தாளர்.
17.நின்னை மகாகவி இத்தனை ஆசையாய் அழைக்கிறார்.(வல இடமாய்)
18.சிவாஜியை இளவட்டக்கல் தூக்க வைத்தவர்.
20.பதிவுலகம் நினைவில் வைத்திருக்கும் எழுத்தாளர் ஒருவரின் பதிப்பகம்.
22.பூனை வருமுன்னே பாக்கியராஜ் வருவார் பின்னே.
27.சிற்றிதழ்.
28.இதைக் காண வேண்டும் என துடிக்கிறவர் அப்துல் கலாம்.
30.சொல்லும் அளவிற்கு அறியப்படவில்லை என தன்னடக்கத்தோடு சொல்லும் பதிவர்.(வல இடமாய்)
31.ஓரெழுத்துப் படத்தின் இயக்குனர்.
32.இந்தக் கேப்டன் அந்தக் காலத்து வில்லன். (வல இடமாய்)
33.இந்த வெடி, உடனே அடங்காது.
35.கிழிக்கக் கூடியது.
36.சினிமா, இலக்கியம் பேசும் பதிவர்.
மேலிருந்து கீழ்:
1.பாலு மகேந்திராவின் படம்.
2.பதிவர். நைஜிரியா அல்ல, பெங்களூர்க்காரர். (தலை கீழாய்)
3.புரோபைல் படத்தில் தன் பெயர் கொண்ட அன்புருகும் பதிவர்.
4.’ஆக்கும்’ பதிப்பகம்.
5.சம்பூர்ண நாயகனின் ஒரு புத்திரன்.
6.உலகம் முழுவதும் விரிக்கப்பட்ட வலை. சீனாவில் மட்டும் தடை.
8.இதை கொடுப்பவர் தோழர்.
10.மைலாஞ்சி கவிதைத் தொகுப்பை எழுதியவர் (தலைகீழாய்)
12.சேட்டின் மொழியில் சாத்தான்.
13.இராமலிங்க வள்ளலார் அருளியது.
17.எம்.ஆர்.ராதாவின் மனைவியாக பத்மினி நடித்த படம். (குழம்பி கிடக்கிறது)
19.இந்த மேற்கத்திய இசை.
21.அன்பை இப்படிச் சொல்கிறார் கமல் (தலைகீழாய்)
23.இவர் இல்லாமல் இராமாயணமா? (தலை கீழாய்)
24.ஊடகங்களால் உலகம் அறியப்பெற்ற கனடா தேசத்து கவர்ச்சிப் பெண்.
25.இலக்கியத் திறனாய்வாளர், விமர்சகர்.
26.கண்ணாடி, தொப்பி எழுத்தாளரின் மகன்.
29.இதை அகற்ற கற்க வேண்டும்.
30.உடல் என்றும் பொருள் உண்டு.
31.நடிகர் கமல்ஹாசனை, பட அதிபர்கள் சங்கத்தில் புகார் செய்த இயக்குனர்.
32.ஐஸ் அல்ல. அரசன்.(தலைகீழாய்)
33.கூட இருப்பவர்களைக் குறிக்கும்.
34.மௌனியின் சிறுகதை. மிகப் பிரபலமான எம்.ஜி.ஆர் பாடலின் ஆரம்பம்.
தெரிந்ததை சொல்லுங்கள் பார்ப்போம்.
வம்பரங்கம் -4
இன்னொரு விழா. ரஜினிகாந்த் உள்ளிட்ட பெரும் சினிமாத்தலைகள் ஆஜர். வழக்கம்போல் பிதற்றல் புகழ்ச்சிகள்/புகழ்ச்சிப் பிதற்றல்கள். அகமகிழ்ந்து திரைப்படத் தொழிலாளர்களுக்கு 96 ஏக்கர் நிலம் வழங்கியதைப் பெருமிதத்தோடு சொல்கிறார் தமிழக முதல்வர். இந்தத் தமிழ் மக்களுக்காகவே காலமெல்லாம் இதயம் துடித்துக் கிடக்கும் தன்னை(யே)ப் பார்த்து, கயவர் கூட்டம் ஒன்று, ‘சினிமாவிலும் வாரிசா’ என்று கேள்வி கேட்டு விட்டார்கள், கேலி செய்துவிட்டார்கள் என்று குமுறி இருந்தார். ‘ரஜினிகாந்தை ஏன் கேட்கவில்லை, அவரை ஏன் கேட்கவில்லை, இவரை ஏன் கேட்கவில்லை’ என்று பொங்கி இருந்தார். ‘இந்த மனித சமூகத்தில் யாருக்கேனும் துன்பம் வந்தால் கவலை கொண்டு, அத்துயர் களைய துடிப்பவன் நான்’ என்று போகிற போக்கில் சேகுவேரா வார்த்தைகளையும் உல்டா செய்திருந்தார். இந்த நகைச்சுவைகளை ஒதுக்கிவிட்டு சில கேள்விகள் கேட்க வேண்டி இருக்கிறது.
திரைப்படத் தொழிலாளர்களுக்கு இருக்க இடம் கொடுத்திருப்பது சரிதான். அதே நேரம் கடந்த தேர்தலின் போது 50 லட்சம் ஏக்கர் நிலத்தைப் பிரித்து ஏழைகளுக்குத் தருவோம் என்று சொன்னது யாராம்?
விவசாயக் கூலிகள், நெசவாளர்கள், கல்லுடைப்பவர்கள், துப்புரவு செய்பவர்கள், மீனவர்கள், இன்னபிற அன்றாடங்காய்ச்சி மனிதர்கள் எல்லாம் கஷ்டப்படும் தொழிலாளிகளாய் இவர் கண்ணில் படவில்லையா?
ஏற்கனவே இருந்த இடத்தையும் பிடுங்கிக்கொண்ட பெரிய மனிதர்களை எதிர்த்து போராடுகிறவர்களுக்கும், நிலப்பட்டா கேட்டு போராடுகிறவர்களுக்கும் இவர் வழங்கியது என்ன?
மாயக்கம்பளத்தில் கொஞ்சம் பயணம்
![]() கார்த்திகைப்பாண்டியன், மாதவராஜ், பாலு, நேசமித்ரன், பாலா, கோணங்கி |
நேற்று இரவில் இன்னேரம் பதிவர்கள் நேசமித்ரன், கார்த்திகைப் பாண்டியன், பாலா, காமராஜ், நான், எழுத்தாளர் கோணங்கி, தம்பிகள் பிரியா கார்த்தி, பாலு எல்லோரும் எங்கள் வீட்டு மொட்டை மாடியில் உட்கார்ந்திருந்தோம். இசையும், மொழியும், சிற்பங்களும், கவிதைகளும், கதைகளும், தொன்மக்குறிப்புகளும் என விரிந்த பிரதேசங்களில் சொற்கள் சிந்திக்கொண்டு இருந்தன. மெல்லிய திரை போல படர்ந்திருந்த மேகங்களுக்குள்ளிருந்து மங்கிய ஓளி திரண்டு அசைந்து போய்க்கொண்டு இருந்தது.
உரையாடல்களாலான மிதக்கும் வெளி இப்படி வாய்க்கும்போது அனுபவிக்க முடிந்தாலும், கோணங்கியின் எழுத்துக்கள் காட்சிகளின் வழியே புலப்படுவதில்லை எனக்கு. மதினிமார்கள் கதை, கொல்லனின் ஆறு பெண்மக்கள், கைத்தடி கேட்ட நூறு கேள்விகள் தாண்டி என்னால் செல்ல முடிந்ததில்லை. திருகிப் பிணைந்து, பிளந்து கட்டப்பட்ட வார்த்தைகள் சுவர்கள் போல முன்னெழும்பி மறித்திருக்கின்றன. அதை அவரிடமே சொல்லியிருக்கிறேன். நானும், காமராஜும், தனுஷ்கோடி ராமசாமியும் வைப்பாற்றங்கரையில் உட்கார்ந்து சில இரவுகள் கோணங்கியோடும், எஸ்.ராமகிருஷ்ணனோடும் இருபது வருடங்களுக்கு முன்னால் பெரும் வாக்குவாதம் செய்திருக்கிறோம். இலக்கியம் அறியாதவர்கள், வாசிப்பனுபவம் பெறாதவர்கள் என மிக எளிதாக நகைத்தபடியே அப்போது அவர்கள் இருவரும் சென்றிருக்கின்றனர். இருந்தாலும் பரஸ்பரம் நட்பும், பிரியமும் சிதைந்ததில்லை. கதை சொல்கிறவனுக்கென்று தனி எழுத்துக்களும், தனி மொழியும் இருப்பதை பின்னால் புரிந்துகொள்ள நேர்ந்தபோது, நெருடல்கள் தீர்ந்து போயின. புரிவது, புரியாதது என்று சிக்கிக் கொள்ளாமல் புரிய முயற்சிப்பது அல்லது மெனக்கெடாமல் இருப்பது என்று எளிதாக்கிக்கொள்ள பக்குவம் வாய்த்தது. பார்க்கும்போது, பேசும்போது கோணங்கி என்னும் கதைசொல்லியை நெருக்கமாய் உணரமுடிந்தவனாகவே இருக்கிறேன்.
இலக்கியத்தின் தற்சமய நிகழ்வுகள், தன்னை மட்டும் முன்னிறுத்தும் போக்கு, தனிப்பட்ட சர்ச்சைகள் போன்றவை இடையிடையே, அதன் போக்கில் வந்து நின்ற போதெல்லாம் யாராவது அரவமில்லாமல் அவைகளை கடந்து செல்ல முன்வந்து கொண்டேயிருந்தார்கள். உரையாடல்களை நீர்த்துப் போக யாரும் விரும்பவில்லை.
புதிய, இளமையான எழுத்துக்களை அறிமுகப்படுத்த வேண்டும், அது தேவை என கோணங்கி சொன்னார். இப்போது எழுத வருகிறவர்களின் பெரும்பாலானோர் எழுத்துக்களில் கழிவிரக்கம், காத்திருப்பு, விரக்தி, எள்ளல், கடந்தவைகளின் மீதான சுகம் என ஒருசில மனப்பிரதிகளே குவிந்து இருக்கின்றன என நேசமித்ரன் சொன்னார். எப்போதும் இல்லாத அளவுக்கு விளிம்பு நிலை மனிதர்கள் நெருக்கடிக்குள்ளாக்கப்படுவது, இன அழித்தொழிப்பு, மொழிகளை கழுவேற்றுவது, மலைவாழ் மக்கள் வாழ்வு கேள்விக்குறியாக்கப்படுவது என அதிகாரத்தின் கோரப்பற்கள் தீண்டப்படும் நிகழ்வுகள் குறித்து படைப்புலகம் என்ன பதிவு செய்திருக்கிறது என்னும் என் கேள்விக்கு பதில் இல்லாத மௌனம் சில வினாடிகளே இருந்தாலும் சங்கடமாக எல்லோரும் உணர்ந்த தருணமாக தெரிந்தது. கோணங்கியே அதற்கு கொஞ்சம் இடைவெளி விட்டு பதில் சொன்னார். இலக்கியத்தில் எதுவும் உடனடியாக நிக்ழந்துவிடாது. அப்படி நிதானம் தவறி, வேகம் கொண்டால் அது படைப்பு ஆகாது என்றார். நேசமித்ரனுக்கும் அதில் உடன்பாடு இருந்தது. எனக்கு இல்லை. லத்தீன் அமெரிக்க இலக்கியத்தை கொஞ்ச காலம் முந்தி வரைக்கும் உலகமே அண்ணாந்து பார்த்ததே என்றேன். இப்போது இல்லை என்றார் கோணங்கி. அவர் மார்க்கஸை விட்டு, ரோசாவைப் பற்றி பேசிக்கொண்டு இருந்ததைக் குறிப்பிட வேண்டும்.
நேசமிதரன் கோணங்கியின் புள்ளியிலிருந்து பலசமயம் பேசிக்கொண்டு இருந்தார். நானும், கார்த்திகைப் பாண்டியனும் கிட்டத்தட்ட ஒருமனநிலையிலிருந்து பேசியதாக எனக்குத் தெரிந்தது. இங்கு கார்த்திகைப் பாண்டியனைப் பற்றி சொல்ல வேண்டும். முக்கியமான இலக்கிய நிகழ்வுகளைத் தெரிந்திருக்கிறார். குறிப்படத்தக்க அளவுக்கு வாசிப்பும் கொண்டிருக்கிறார். அமைதியாகவே இருக்கிறார். ஆச்சரியமாக இருந்தது என்னவென்றால், அவரது பதிவுகளில் அவர் இன்னும் தன் உலகத்தை முழுமையாக வெளிப்படுத்தாமல் இருக்கிறார் என்பது.
‘தஸ்தாவஸ்கியின் எழுத்துக்கள் எப்போதும் நிற்கும், டால்ஸ்டாய் எழுத்துக்கள் அத்தனை வீரியமும், நிலைபெறும் தன்மையும் கொண்டவையல்ல’ என்னும் நேசமித்ரனின் உரையாடலில் நான் கொஞ்சம் வேகம் கொண்டே குறுக்கிட்டேன் எனச் சொல்ல வெண்டும். மனிதன் தன்னைத் தானே விசாரித்துக் கொள்வதும், தனது மனசாட்சியை முதன்மைப் படுத்துவதும் டால்ஸ்டாயின் எழுத்துக்களில்தான் மிகத் தெளிவாகத் தெரிவதாக எனக்குப் பட்டதை முன்வைத்தேன். அது, மனித சமூகம் உள்ளவரைக்கும் உரையாடும் திறன் கொண்டது எனச் சொன்னேன். கோணங்கி இதனோடு ஓரளவு உடன்பட்டார்.
நேசமித்ரன் நிறைய பேசுகிறார். அன்பைக் கொட்டுகிறார். தன்னை, தன் ரசனைகளை, தன் சிந்தனைகளை உடனடியாக அதன் அடர்த்தியோடு பகிர்ந்துகொள்ளமுடியாத ஒரு இடத்தில் அவர் இருக்கிறார் என்பதை அறிய முடிந்தால், அவரது உரையாடல்களின் தாகம் அடைபடும். ‘புத்தகங்களால், வாசிப்புகளால் என் தனிமையை நான் கொல்கிறேன்’ என்னும் அவரது வார்த்தைகள் இன்னும் இரைச்சல் மிக்க அலைகளாய் தரை நோக்கி வருகின்றன.
தான் எழுதிக்கொண்டு இருக்கும் நாவல் பற்றிய கோணங்கியின் குறிப்புகள் காலத்தை சுழற்றியபடி இருந்தன. பசி வாட்டிய வீதிகளின் வழியே தஸ்தாவஸ்கியும், இராமலிங்க வள்ளலாரும் ஒன்றுபோல் பயணம் செய்திருப்பதை கோணங்கியின் குரல், விரல்களின் வழியே தடம்பார்த்துக் கொண்டு இருந்தது. கடலின் பெருமூச்சு, வண்டுகளின் இசைக்குறிப்பு, ராவணனின் கீர்த்தி எல்லாமும் தோடிக்குள் இருக்கின்றன என மேலும் அவர் சொல்லிக்கொண்டு இருந்ததை நேசமித்ரன் ஆமோதித்துக் கொண்டிருந்தார். கோணங்கியின் ‘பாழி’யை வாசித்ததில் கிடைத்த ஒளி போன்ற அனுபவத்தை நேசமித்ரன் முகத்தில் காட்டியபடி பகிர்ந்துகொண்டு இருந்தார். கோனார்க், பூம்புகார், டெல்லி சுல்தான்கள் அரண்மனை, நைஜீரியக் கடற்கரையென அவர் அலைந்து திரிந்து கொண்டு இருந்தார். இருளில் தூரத்துப் புள்ளிகளாய் கிடந்த இருக்கன்குடி ஊரும், சின்னக் காற்றும், சுவீடன் தேசத்து அப்சொலுட் பியர்ஸும் வார்த்தைகளுக்குள் ஊடுருவி அந்த நேரத்தை வசியம் செய்து கொண்டு இருந்தன.
மொட்டைமாடி, ஒரு மாயக்கம்பளமாய் விரிந்து எங்களை பரவசம் தழுவ அழைத்துச் சென்று கொண்டிருந்தது. நாங்கள் நட்சத்திரவாசிகளானோம். முதலில் பாலா பிரிய மனமில்லாமல் விடைபெற்றார் . இறங்கிக்கொள்கிறேன் என்றான் காமராஜ். கார்த்திகைப் பாண்டியன், பிரியா கார்த்தியின் வாகனத்தில் சென்றார். நான், கோணங்கி, நேசமித்ரன் என ஒருக் கட்டத்தில் மிஞ்சினோம். பிறகு கோணங்கி தூங்க, நேசமிதரனும் நானும் இயக்குனர் மகேந்திரன் குறித்து பேசிக்கொண்டு இருந்தோம். பிறகு அவரும் தூக்கம் வருவதாகச் சொல்ல, நான் பிசாசு போல இருளின் வெளியில் நின்றேன். விடிகாலை மூன்றரை மணிக்கு எதோ ஒரு பறவையின் கரைதலைக் கேட்டபடி, தனித்திருந்த தெருவை பார்த்துவிட்டு வீட்டிற்குள் சென்று உடலைக் கிடத்தினேன்.
காலையில் கோணங்கியையும், நேசமித்ரனையும், அம்மு தந்த டீயோடு எழுப்பினேன். விட்ட இடத்தில் தொடர்ந்தோம். “உங்கள் இடம் இதுவல்ல” என்றார்கள். சிரித்துக்கொண்டேன். கோணங்கியோடு கோவில்பட்டி செல்வதாய் நேசமித்ரன் சொன்னார். அனுப்பி வைத்துவிட்டு, மொட்டை மாடி சென்றேன். தனியாய் ஒரு காகம் கரைந்து கொண்டிருந்தது. வெறுமை கொண்ட அந்தப் பகலின் வெளிச்சத்தில் என்னைப் பார்த்ததும் பறந்தது.
(புகைப்படங்கள் : பிரியா கார்த்தி )
ஒரு சுத்திகரிப்பு நிலையத்தின் கதை
அந்த இளைஞனுக்குத் தெலுங்கு மொழி மட்டும்தான் தெரியும். யாரோ ஒரு புரோக்கர் மூலம் அறிமுகமாகியிருந்த அவன் எதற்காக ஆந்திரப் பிரதேசத்திலிருந்து தமிழகம் வந்து சேர்ந்தான் என்பது தெரியாது. வேலை கிடைக்காத கொடுமை அவனது முகத்தில் எழுதி ஒட்டியிருந்தது. அவன் ஒப்புக் கொண்ட ஒரு வேலை இழுத்துக் கொண்டே இருந்ததால் அவனைப் பராமரிக்கும் செலவும், அவன் நழுவி ஓடிவிடாது கண்காணிக்கும் பொறுப்பும் சேர்ந்து விட்டிருந்தது. பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பாக, ஒரு சனிக்கிழமை இரவு நேரத்தில் சென்னை சேத்துப்பட்டு ரயில் நிலையம் அருகில் அவனோடு பேச நேர்ந்த அந்த சோதனையான நேரத்தை மறக்க முடியாது. அவனால் பயனடைய இருந்த ஒருவர் இந்தப் பிரச்சனை ஏதும் அறியாதவராக, எப்படியாவது தன்னைத் தனது குடும்பம் உயிர்காத்து வீடு கொண்டு சேர்த்துவிடும் என்ற ஒற்றை நம்பிக்கையோடு புரசைவாக்கம் மருத்துவமனை ஒன்றில் படுத்துக் கிடந்தார். அவரது உடலில் பழுதடைந்துபோன முக்கியமான உறுப்புக்கு மாற்று ஏற்பாடு செய்வதற்குத் தான் இந்த இளைஞன் தேவைப்பட்டான். கதையை வளர்ப்பானேன்... சிறுநீரகங்கள் இரண்டுமே பழுதடைந்து விட்டிருந்த அந்த நோயாளிக்குத் தனது சிறுநீரகங்களில் ஒன்றை எடுத்துப் பொருத்துவதற்கு அந்த இளைஞன் ஒப்புக் கொண்டிருந்தான்.
மருத்துவர் பி வி வெங்கட்ராமன், எம். டி. (ஓமியோபதி) அவர்களது மருத்துவக் குறிப்புகளிலிருந்து எஸ் வி வேணுகோபாலன் |
இயற்கை அளித்த கொடையான இரட்டைச் சிறுநீரகங்களில் ஒன்றை வைத்துக் கொண்டு கூட உயிர் வாழமுடியும். உயிருக்கு உயிரான இந்தச் சிறுநீரகத்தை அந்த அளவு நெருக்கடிக்குக் கொண்டு செல்லாதிருந்தால், இன்னமும் அருமையாக வாழ முடியும். ஒருவர் சாதுவாகத் தனது வேலையை ஓசைப்படாமல் பார்த்துக் கொண்டிருந்தால் அதை மதிக்கிற சமூகமாக நாம் பழகவில்லையே. அவரைத் தேவையில்லாமல் சீண்டிவிட்டு, அப்புறம் பிரச்சனையை வளர்த்துக் கொண்டு மல்லாட வேண்டாமே...கொஞ்சம் உட்கார்ந்து பேசுவோமா..
'கிட்னி' என்று பரவலாக அழைக்கப்படும் சிறுநீரகம் அல்லது சிறுநீரகங்கள் வயிற்றுக்குள் இருந்தாலும், முதுகுக்குப் பின்புறமாக 'அந்தரத்தில்' தொங்கிக் கொண்டிருக்கும் முக்கியமான உடல் உறுப்பாகும். (அந்தக் காலத்தில் விதைப்பையைத் தான் சிறுநீரகம் என்று சாதாரண மக்கள் தவறாகப் புரிந்து கொண்டிருந்தனர்). இரத்த சுத்திகரிப்பு நிலையம் என்று சொல்லிக் கொள்ளத் தக்க உடல் பகுதியான சிறுநீரகம், பல லட்சக்கணக்கான சிறப்பு செல்களைக் கொண்டிருக்கின்றது. நெஃப்ரான் என்று அவற்றுக்குப் பெயர். சிறுநீரகம் குறித்த துறைக்கு இதனாலேயே 'நெஃப்ராலாஜி என்று பெயர்.
இரத்த ஓட்டம் பாய்ந்து கொண்டிருக்கும் ஓய்வு ஒழிச்சலற்ற இந்த செல்கள் இரத்தத்திலிருந்து தண்ணீரையும், தேவையற்ற இதர கழிவுப் பொருள்களையும் பிரித்துக் கொடுக்க, அவை சிறுநீரகப் பாதை வழியாக ஓடி சிறுநீர்ப் பையை எட்டுகின்றன. சிறுநீராக வெளியேறுகின்றன. கழிவுகளை வெளியேற்றுவது மட்டுமல்ல, தேவையான தண்ணீரை அல்லது சத்துப் பொருள்களை மீண்டும் உறிஞ்சிக் கொள்ளவும் செய்கின்றன இந்த செல்கள்.
இப்படி வடிகட்டி வெளியேற்றுவதற்கும், வடித்துக் கட்டி உள்ளிழுத்துக் கொள்வதற்கும் வசதியாக நெப்ரான்களின் மேற்புறம் மெல்லிய சவ்வு போன்ற ஒரு திரை அமைந்திருக்கிறது. இந்த நுட்பமான மென்மையான ஏற்பாட்டைத் தனமையாகக் கையாள வேண்டும் என்பதை அன்றாட அலுவல்களின் பதட்டத்தில் மறந்துவிடக் கூடாது என்று கேட்டுக் கொள்கிறோம்.
சுத்தப் படுத்துவது, கழிவுகளை அகற்றுவது இவற்றோடு முக்கிய உறபத்தி வேலைகளையும் ஏற்றுக் கொண்டிருக்கிறார் இளவல் சிறுநீரகத்தார். இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்கத் தக்க வேலையை அவரது பிரத்தியேகத் தயாரிப்பு ஒன்று கவனித்துக் கொள்கிறது. இரத்தத்தில் இருக்கும் சிவப்பணு, ஹீமோகுளோபின் உற்பத்திக்கு அடிப்படையான 'எரித்ரோய்டின்' அன்னாரது பங்களிப்பு தான். எனவே முறுக்கிக் கொண்டுவிடாமல் அவரை 'அரவணைத்து' வாழவேண்டியது நமது கடமையாகும்.
இரத்த அழுத்தத்தை ஒரு கட்டுப்பாட்டில் வைப்பதை அவரது பொறுப்பில் விட்டிருக்கிறோம் என்கிற போது, இரத்த அழுத்தம் கட்டிற்குள் நிற்காமல் வாட்டி எடுத்தால் அவரும் பாதிப்புக்குள்ளாவார் என்பதைத் தனியே விளக்க வேண்டியதில்லை. நீரிழிவு என்று சொல்லப்படும் சர்க்கரை பிரச்சனையும் கூட சிறுநீரகச் செயல்பாட்டில் இடையூறு உருவாக்கக் கூடும். ஆரோக்கியமான உடல் நலம் இருப்போரும், ஆண்டுக்கு ஒருமுறை இரத்த அழுத்தம், சர்க்கரை பரிசோதனை செய்து பார்த்துக் கொள்வது நல்லது. தொடர்ந்து நீடிக்கும் உயர் இரத்த அழுத்தம் சிறுநீரகத்தின் இயக்கத்திற்குக் கூடுதல் சிரமத்தை ஏற்படுத்தி பாதிப்புகளை நோக்கி இட்டுச் செல்ல வாய்ப்புண்டு. அதற்கான சிகிச்சையை எடுத்துக் கொள்வதன் மூலம் சிறுநீரகத்திற்கு ஆபத்து வராமல் பார்த்துக் கொள்ளலாம். சர்க்கரை பிரச்சனையைக் கட்டுக்குள் வைத்திருந்தால், அதாவது உணவு முறையில் எந்த சமரசமும் செய்து கொண்டுவிடாமல் உரிய பாதுகாப்பைக் கடைப்பிடித்து வந்தால் சிறுநீரக பாதிப்பு பற்றிய கவலை இல்லாதிருக்கலாம்.
புரோட்டின் அதிகமாக உடலிலிருந்து வெளியேறுவது கூட சிறுநீரகம் குறித்த எச்சரிக்கை அறிவிப்பு. நுரைத்துக் கொண்டு வெளியேறும் சிறுநீர் அதன் அடையாளம். எளிய சிறுநீர் பரிசோதனை மூலம் அபாயம் இருக்கிறதா, இல்லையா என்று அறிந்து கொண்டுவிட முடியும்.
இவை முன்பு அறிமுகம் செய்த மெல்லிய சவ்வில் ஏற்படும் பாதிப்புகளால் வடிகட்டும் தன்மையில் நேரும் சிக்கல்களாகும். அதில் கவனமாயிருக்க வேண்டுமானால், உணவுப் பழக்கம், வாழ்க்கை முறை, மருந்துகள் ஆகியவற்றில் சில நியதிகளைக் கடைப்பிடிப்பது அவசியமாகிறது. துரித உணவு (Fast food ), பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்கள், உப்பும் எண்ணெய் வகைகளும் அள்ளிப் பரிமாறித் தயாரிக்கப்பட்டிருக்கும் வித விதமான உணவு வகைகள், ஊறு விளைவிக்கும் சுவையூட்டிகள் மற்றும் செயற்கை வண்ணங்கள் உள்ளிட்ட நச்சான வேதியல் பொருள்கள் மிகுந்த தயாரிப்புகள் இவற்றைத் தவிர்க்க வேண்டும். இதற்கான உறுதி, மருத்துவரது அறைக்குள் இருக்கும் போது மட்டுமல்ல, எதிரே சாப்பாடு கொண்டு வந்து வைக்கப்படும் போதும் இருக்க வேண்டும்.
பொதுவாக ஓட்டல் சாம்பாரிலும், இதர உணவுப் பொருள்களிலும் 200 சதவீதத்திற்கும் அதிகமாக உப்பு சேர்க்கப்பட்டிருக்கும். அது உணவுப் பொருள்கள் கெடாமல் இருப்பதற்காகவும், வாடிக்கையாளர்கள் அதிகம் சாப்பிட இயலாதவாறு இருப்பதற்குமான பிரத்தியேக ஏற்பாடு. (வீட்டில் எத்தனை தோசைகளை வெளுத்துக் கட்டுவீர்கள்...ஓட்டலில் அதே மாதிரி சாப்பிட ஏன் முடிவதில்லை ? அப்படி சாப்பிட விட்டால் பில் எகிறும், அப்புறம் ஓட்டலுக்கு ஆள் வருவது குறைந்துவிடுமே! நீங்கள் சுவைத்துச் சாப்பிடவும் வேண்டும், தொடர்ந்து வரவும் வேண்டும் என்றுதான் இப்படி ஏற்பாடு!).
அதே போல், பிஸ்கட்டுகள், பேக்கரி வகையறாக்கள், எந்தச் சத்தும் தராமல் வயிற்றை அடைக்க மட்டுமே பயன்படும் நொறுக்குத் தீனிகள் போன்றவற்றிலும் (அவை இனிப்பு பிஸ்கட்டாக இருந்தாலும்) தேவையைப் போல் இரண்டு மடங்கு, மூன்று மடங்கு உப்பு கொட்டிக் கிடக்கிறது.
'தின்ற உப்புக்கு நாம் துரோகம் செய்ய மாட்டோம், ஓட்டல்காரர்களுக்கு எதிராக எதுவும் செய்ய mattom ' என்று மேற்படி ஆசாமிகளுக்குத் தெரியும். ஆனால், இப்படி உபரியாகத் தின்னும் உப்பு நமது 'கிட்னிக்கு' நாமே செய்யும் துரோகம் என்பதை உணர வேண்டும். எனவே, இவற்றில் அதிகம் ஆழ்வது தவிர்க்கப் படவேண்டும். குழந்தைகளுக்குப் பக்குவமாகச் சொல்லிப் புரிய வைக்க வேண்டும்.
தரமற்ற மருந்துகள், எந்த நோய்க்காகவும் மருத்துவரது ஆலோசனைக்கு அதிகமான காலத்திற்கு அல்லது அதிகமான அளவிற்கு (Excess Dosage) எடுத்துக் கொள்ளப்படும் மருந்துகள், அடிக்கடி எடுத்துக் கொள்ளப்படும் வலி நிவாரணிகள், தோலில் ஏற்படும் பாதிப்புகள் அல்லது தோலில் ஏற்படும் வியாதிக்காக எடுத்துக் கொள்ளும் சில மருந்துகள், அதிக உலோகப் பொருள்கள் போன்றவை சிறுநீரகச் செயல்பாட்டில் தீவிரத் தலையீடு செய்து பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
அடுத்து முக்கியமான விஷயம், திருவாளர் தண்ணீரைப் பற்றியது. உடலுக்குத் தேவையான அளவு தண்ணீர் அருந்துவதைத் தவிர்த்தால், சிறுநீரகப் பாதை வறண்டு கிடக்கும். அங்கிருந்து புறப்படும் கிருமித் தொற்று சிறுநீரகத்தாரைத் தாக்கும். நமது உடல் எடைக்கு ஏற்ப (உடல் எடை உபரியில்லாதிருப்பது எல்லாவற்றுக்கும் நல்லது என்பதைத் தனியே விவாதிக்க வேண்டும் என்றாலும், நினைவூட்டலுக்கு இங்கே சொல்ல வேண்டியிருக்கிறது). தண்ணீர் குடிக்க வேண்டும். கோடை காலத்திலும், வயிற்றுப்போக்கு அல்லது வாந்தி போன்ற பிரத்தியேகக் காரணங்களால் கடுமையான தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் போதும் அதிகமாகத் தண்ணீர் குடிக்க வேண்டும். அதே நேரத்தில், தேவைக்கு அதிகமாக லிட்டர் கணக்கில் தண்ணீர் குடித்துக் கொண்டே இருப்பது சிறுநீரகத்திற்குக் கூடுதல் வேலையைத் தரும், அதுவும் பாதிக்கும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
இதெல்லாம் ஏன் சொல்லவேண்டியிருக்கிறது என்றால், இரண்டு காரணங்களுக்காக. ஒன்று, சிறுநீரகத்தின் நிலைமை கொஞ்சம் சிக்கலாகிறவரை பரிசோதனையில் தெரிவதில்லை. இரண்டாவது, நெஃப்ரான் செல்கள் தம்மைப் புதுப்பித்துக் கொள்ள முடியாது. இழந்தால் இழந்ததுதான்.
சிறுநீரகங்கள் பழுது அடைந்துவிட்டால், அந்த வேலையை அயல் பணியாக இயந்திரங்களைக் கொண்டு 'அவுட் சோர்சிங்' செய்து தான் இரத்த சுத்திகரிப்பைச் செய்ய வேண்டியிருக்கும். 'டயாலிசிஸ்' என்று அழைக்கப்படும் இந்த வேலையை, வாரத்திற்கு ஒரு முறை, இரு முறை என்று செய்து கொள்வதற்கோ, ஒரு கட்டத்தில் மாற்று சிறுநீரகம் தான் பொருத்த வேண்டும் என்று முடிவு எடுப்பதற்கோ பெருந்தொகை தேவைப்படும். வருமுன் காப்பது தான் நல்லது. முற்றிய நிலையில் அதற்குத் தேவையான சிகிச்சைக்காக மனத்தைத் திடப்படுத்திக் கொள்வதும், அதற்கான பணத்தைத் திரட்டுவதும் வேதனையான விஷயம் அல்லவா..
மாற்று சிறுநீரக விவகாரம் எத்தனை மோசடியாகவும், சட்ட விரோதமாகவும் நடக்கிறது என்பதைக் கடந்த சில ஆண்டுகளுக்குமுன் ஊடகங்கள் சொல்லிக் கொண்டிருந்தன. பாதிப்புற்ற நோயாளியைவிடவும், அவருக்கான சிறுநீரகம் வழங்கும் முன்பின் அறிமுகம் இல்லாத கொடையாளரை விடவும் இடையில் 'தரகுவேலை' செய்வோர் அடையும் லாபமே அதிகம். நெறியற்ற மருத்துவர்கள் உள்ளிட்டு இத்தகைய நீசச் செயலில் இறங்குவோரின் கொள்ளை லாப வெறியில் என்னென்ன அத்துமீறல்கள் நடக்கின்றன என்பதும் தெரியும்.
உடல் நலம் காப்பதற்கு மன வளமும் முக்கிய காரணியாகிறது. எது உயரிய வாழ்க்கை முறை, எது உண்மையான மகிழ்ச்சி மலரும் பாதை என்பது குறித்த பார்வையையும் உள்ளடக்கியதே உடல் நலம்.
மொழியைக் கடந்த ஓர் இடத்திற்கு வேலை தேடி வந்த அந்த ஆந்திர மாநில இளைஞன், உழைப்பை விற்பதற்குப் பதில் உறுப்பை விற்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டதும், அவனது சேவையை எதிர்நோக்கிய பரிதவிப்பில் உயிர் காக்கப் போராட வேண்டிய நிலைக்கு ஒரு நோயாளி தள்ளப்பட்டதும் நமது சமூகத்தின் விசித்திர முரண்பாடுகள். மாற்று வாழ்க்கை முறை மூலமாக உடலையும், மாற்று சமூக அமைப்பு மூலம் மனித குலத்தையும் மேம்படுத்தும் காலத்தில்தான் இந்த முரண்பாடுகளுக்குத் தீர்வு கிடைக்க முடியும். அதுவரை இதில் லாபம் காணும் கூட்டம் மட்டுமே செழித்துக் கொண்டிருக்கும்.
மாதவராஜ் பக்கங்கள் - 25
பதிவர் நேசமித்ரன் அவர்கள் நான்கு நாட்களுக்கு முன் போன் செய்து “அண்ணே, திண்டுக்கல் வந்துட்டேன். உங்களைப் பார்க்கணும்” என்றார். சந்தோஷத்தோடு, “வாங்க. எப்போது வேண்டுமானாலும் பார்ப்போம்” என்றேன். எழுத்தாளர் கோணங்கியையும் அவர் சந்திக்க விரும்புவதை ஒரு முறை சாட்டில் தெரியப்படுத்தியிருந்தது நினைவுக்கு வர, “கோணங்கியிடம் பேசிவிட்டுச் சொல்கிறேன். அவரையும் பாத்த மாதிரி இருக்குமே” என்றேன். “ரொம்ப சந்தோஷம் அண்ணே” என்றார். கோணங்கி, நேசமித்ரனை தனக்குத் தெரியும் எனச்சொல்லி, திங்கட்கிழமை சந்திக்கலாம் என்றார். அன்றைக்குத்தான் என் தம்பி விபத்தில் இறந்து ஐந்து வருடங்களாகின்றன என்பதை தெரியப்படுத்தவும், “ஒண்ணும் பிரச்சினையில்ல. செவ்வாய்க்கிழமை சாயங்காலம் சாத்தூர் வருகிறேன், சந்திப்போம்” என்றிருக்கிறார். நேசமித்ரனும் அன்றைக்கு சாத்தூர் வருகிறார். ஆக....
சென்ற தடவை சென்னைக்குச் சென்றிருந்தபோது இது நடந்தது. நாற்பது வயது மதிக்கத்தக்க அந்த மனிதர் யாரையும் ஒரு பொருட்டாக நினைக்காதது போல இருந்தது. கூட்டம் நிரம்பியிருந்த அந்த ஒட்டலில் மேல்சட்டையக் கழற்றி, பனியனோடு விறுவிறுவென கை கழுவும் இடத்தை நோக்கி நடந்து கொண்டு இருந்தார். அவர் பின்னாலேயே பலரது பார்வைகளும் சென்று கொண்டிருந்தன. தண்ணீர்க்குழாயைத் திறந்து, சட்டையின் குறிப்பிட்ட பகுதியைக் காண்பித்து கசக்க ஆரம்பித்தார்.
சர்வரிடம் கேட்டதற்கு, “சாம்பாரைத் தூக்கிக்கொண்டு போகும் போது உட்கார்ந்திருந்த அவர் முதுகில் கொஞ்சம் சிந்திவிட்டது” என்றார். வலது தோளில் சட்டையைத் தொங்கவிட்டபடியே கல்லா அருகில் வந்து அவர் பில்லுக்குப் பணம் கொடுத்தார். அப்படியே ஓட்டலை விட்டு வெளியேறவும் செய்தார். நான் அவர் சென்ற திசையிலேயே ஆழ்ந்திருந்தேன். சமீபத்தில் நான் இங்கு எழுதியிருந்த ‘கறை’ ஓடிக்கொண்டு இருந்தது. கறை என்றால் என்ன என்பதை தெளிவாக உணர்த்திவிட்டுச் சென்றிருந்தார்.
இன்றோடு என் தம்பி இறந்து ஐந்து வருடங்களாகின்றன. நான் என்று “தோழர், என்ன இந்தப் பக்கம்” என்று அவனிடமும், “ஸார், அந்த போட்டோ ரெடியாய்ட்டா” என்று என்னிடமும் கேட்டு, இந்த ஊர் ஏமாந்து பார்த்த இரட்டையர்கள் போல இருந்தோம். ஏர் ஃபோர்ஸில் இருந்தாலும் தண்ணியடிக்கும் பழக்கம் இருந்ததில்லை. கேண்டினுக்கு அவன் போகும் போது ஒயிட் ரம் கேட்பேன். “குடிகார நாயே, சாருக்கு அஞ்சு தோப்புக்கரணம் போடு” என்பான். “போடா மயிரு” என்பேன். “குடிகாரனுக்கு என்னலே ரோஷம்” எனச் சீண்டுவான். ஆனால் சாயங்காலம் “ஒங்க அருமைத் தம்பி, ஆசையா உங்களுக்கு வாங்கிக் கொடுத்திருக்காங்க ஒண்ணு” என பாட்டிலைக் காண்பிப்பாள் அம்மு.
எங்காவது அலைந்து திரிந்து விடியும் வேளையில் வந்து படுத்துக் கிடப்பேன். சரியாக ஒன்பது மணிக்கு தனது டிஜிட்டல் போட்டோ ஸ்டூடியோவைத் திறக்க எங்கள் தெரு வழியாகச் செல்லும் அவன் பைக்கை நிறுத்தி உள்ளே வருவான். பூட்ஸ் காலோடு என்னருகில் வந்து படுத்து, கால் போட்டு “என்னல தூக்கம். எழுந்திரு” என்பான். பாடி ஸ்பிரே மணக்கும்.
அவன்தான் எழுப்ப முடியாமலே போய்விட்டான். “அத்தான், விருதுநகருக்கு போற வழில உங்க தம்பிக்கு ஆக்ஸிடெண்டாம். யாரோ போன் செஞ்சாங்க. எனக்கு பயமா இருக்கு” என்று அவன் மனைவி தெரு வழியா ஓடிவந்து கதறியது இன்னும் அறுக்கிறது. காமராஜையும், பிரியா கார்த்தியையும் வரவழித்து போவதற்குள் தெரிந்து விட்டது. எல்லாம் முடிந்து அவனைக் கொண்டு வந்த போது, என்னைப் பார்த்து “ஓடிவந்து சொன்னேனே அத்தான், இப்படி ஏமாத்திட்டீங்களே” என அவள் கதறினாள். நெஞ்சு வெடித்து ’ஐயோ’வென அழுதேன்.
நினைவுகளாக சுற்றிச் சுற்றி வருகின்றன. அவனது ஓவியங்கள் எங்களது நெருங்கிய உறவினர்கள் வீடுகளில் எல்லாம் இருக்கின்றன. அவனைப் பற்றிச் சொல்கின்றன. அப்படி ஒரு ஓவியம்....
தீராத பக்கங்கள் - 2
தீராத பக்கங்கள் – 2 |
அன்புள்ள வாசகா, வாசகி! கூகிள் பஸ்ஸில் கென் |
குழந்தை புத்தகங்கள் |
சின்னச் சின்ன வடிவங்களில், வண்ணப்படங்களுடன் குழந்தைகளுக்கான புத்தகங்களை பாரதி புத்தகாலயம் உருவாக்கி, வெளியிட்டு இருக்கிறது.
1.கிளிக்குஞ்சு 2.ஆகாய யுத்தம் 3.ஒடியட்டும் பிரம்பு 4.பூனை கணக்குப் படிக்கிறது 5.சித்திரம் வரைதல் 6.எறும்பு அரண்மனை 7.மேகங்களின் கதை 8.சூரியனைத் தொட வேண்டி 9.மந்தாரக்கிளி 10.இனி பால் வேண்டாம் அம்மா 11. குட்டிக் குட்டி முயல் 12.வால்களின் கதை 13.இலஞ்சிப்பூக்கள் சொன்ன கதை 14.நான் குட்டி மூசா 15. படர்ந்து படர்ந்து படர்ந்து 16.யாருடையது இந்தத் தோட்டம்? 17.ஸ்கூலுக்குப் போகிறாள் சுஸ்கித் 18.ரயிலும் குதிரையும் 19.நன்மையே தரும் மரம் 20.என் கதை 21.என்னுடைய நண்பர்கள் 22.ஒரு போராட்டம் 23.சில்...சில்...சில்.. 24.பாட்டி சொன்ன கதைகள் 25.நீங்கள் என் அம்மாவா?
இந்தப் புத்தகங்களின் எந்தக் கதையிலும் நீதி என்று சொல்லப்படவில்லை. அதுவே இப்புத்தகங்களின் பலம் என்கிறார் எழுத்தாளர் தமிழ்ச்செல்வன்.
35. வேல்கண்ணன் நுட்பமான கவிதைகளை படைக்கும் இவரது வலைப்பக்கம் வேல்கண்ணன். வார்ப்பு, தடாகம், உயிர் எழுத்து இதழ்களில் இவரது கவிதைகள் வெளிவந்து கொண்டு இருக்கின்றன. புதிய வாசிப்பனுபவத்தை இவரிடம் நாம் பெற முடியும். 36. கிருஷ்ணசாமி ர.கிருஷ்ணசாமியின் படைப்புகள் என்றே வலைப்பக்கம் வைத்திருக்கும் இவரது கவிதைகளில் காதலே பெரும்பாலும் பேசுபொருளாய் இருக்கிறது. ஏக்கம், தவிப்பு, கிறக்கம் பல்வித உணர்வுகளின் வடிகாலாய் வரிகள் பெருக்கெடுக்கின்றன. 2007லிருந்து எழுதினாலும், மொத்தமே 10 பதிவுகள் போலத்தான் எழுதியிருக்கிறார். 37. லதாமகன் சில ரோஜாக்கள் இவரது வலைப்பக்கம். கீற்று, திண்ணை, உயிரோசை மின்னிதழ்களிலும், ஆனந்தவிகடன் பத்திரிகையிலும் இவரது கவிதைகள் வந்திருக்கின்றன. சொல்லாடல்களில் எழுத்து நடை ஈர்க்கிறது. இத்தனை நாளும் இவரைப் படிக்காமல் இருந்திருக்கிறோமே எனத் தோன்றியது. 38.வெற்றி சென்னையைச் சேர்ந்த இவரின் வலைப்பக்கம் நீ-நான்-அவன். மிகச் சமீபத்தில் எழுத வந்திருக்கும் இவர் மொத்தம் ஐந்து பதிவுகள் எழுதியுள்ளார். வாழ்வில் நாம் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்த கவனத்தை ஏற்படுத்துகிறார். சுருக்கமாகவே பதிவுகள் இருக்கின்றன. |
படியில் விழும் வெளிச்சம் இலையுதிர் காலம் அ கவிதை அல்லது A கவிதை சிறு வயது மழை அம்மா என்றொரு மனுஷி சூர்ப்பனகை - மலையாள மொழிபெயர்ப்பு மஜித் மஜிதியும் பீம்சிங்கும் என்ன 'வலி' அழகே ஒளிகளின் நீட்சி... ஸெர்யோஷாவும் குட்டீஸ் சிந்தனைகளும் முத்துலெட்சுமி கயல் கல்வித்துறையில் கார்ப்பரேட் நிறுவனங்கள்... தெருவில் நிற்கப் போகும் இந்திய மாணவர்கள் பைத்தியக்காரன் |
டிஜிட்டல் போட்டோக்காரனின் ஆல்பம் - 1
“சார், இந்த சட்டை நல்லாயில்ல. வேறொரு சட்டை போட்டுருங்க” போட்டோ எடுத்து முடித்தவுடன் அந்த இளைஞன் சொல்லி இருக்கிறான்.
“போட்டுரலாம்” என்றிருக்கிறான் கார்த்தி.
“சார், டை கட்டிரலாமே?”
“ம். கட்டிருவோம்.”
“அப்புறம்... ஷேவ் பண்ணாம வந்துட்டேன். கொஞ்சம் சரி பண்ணிருங்க” என்றிருக்கிறான் அந்த இளைஞன் மேவாயைத் தடவியபடி வெகு சாதாரணமாக.
“அதெல்லாம் முடியாது தம்பி”
“ஏன் சார்?”
“வைக்கலாம். எடுக்க முடியாது.”
வந்தவன் புரியாதவனாய் கொஞ்ச நேரம் நின்று பார்த்துவிட்டு, “கம்ப்யூட்டர்லதான. என்ன வேணாம்னாலும் பண்ணலாமே”
“நம்ம ஸ்டூடியோவுல இவவளவுதான் முடியும் தம்பி..”
அங்கேயே நின்றிருந்துவிட்டு, “இத நம்பி நா ஷேவ் பண்ணாம வந்துட்டேனே.” என்றிருக்கிறான் அருகே இருந்த கம்ப்யூட்டரைப் பார்த்தப்டியே. அப்புறம் சொல்லாமல் கொள்ளாமல் போய்விட்டானாம்.
இன்னொரு நாள், இன்னொருவன் வந்திருக்கிறான். கிராமத்துப் பையன். நவீன உடை தரித்துத்தான் இருந்திருக்கிறான். வெளியே நின்று ஸ்டூடியோ போர்டை உற்றுப் பார்த்துவிட்டுத்தான் நுழைந்திருக்கிறான்.
“என்ன தம்பி” அழைத்திருக்கிறான் கார்த்தி.
“போட்டோ எடுக்கணும் சார்”
முடி கலைந்திருந்திருக்கிறது அவனுக்கு. “உள்ளே போய் கண்ணாடியில் முகம் பார்த்துக் கொள்ளுங்கள்” என்று சொல்லி கம்ப்யூட்டரில் கவனம் செலுத்தி இருக்கிறான் கார்த்தி.
உள்ளே போய் சில நிமிடங்கள் கழித்து வந்தவன் “எப்ப சார் போட்டோ கிடைக்கும்” கேட்டிருக்கிறான்.
“அதுக்குள்ள எப்படி போட்டோ கிடைக்கும் தம்பி?” புரியாமல் அவனைப் பார்த்திருக்கிறான் கார்த்தி.
“நீங்கதான சார் கண்ணாடியில் முகம் பார்க்கச் சொன்னீர்கள்.....” என இழுத்திருக்கிறான்.
“இல்ல தம்பி, காமிராவைப் பார்த்தால்தான் போட்டோ வரும்” என சிரிக்காமல் சொல்லி, அவனை திரைக்கு முன்னால் உட்காரவைத்து காமிராவை கையில் எடுத்திருக்கிறான் கார்த்தி. குழம்பியவனாய் அந்தப் பையன் உட்கார்ந்திருக்கிறான். பில் போடும்போது, “கண்ணாடி முன்னால நின்னாப் போதும், போட்டோ வந்துரும்னு யார் சொன்னாங்க தம்பி?” எனக் கேட்டிருக்கிறான்.
அவனோ பதிலேதும் சொல்லாமல், வேகமாக பில்லை வாங்கிக்கொண்டு வெளியேறி இருக்கிறான்.
இப்படி ஸ்டூடியோ அனுபவங்கள் நிரம்பிக் கிடக்கும் டிஜிட்டல் போட்டோக்காரன் கார்த்தி. பார்த்தவுடன் உற்சாகம் தரும் மனிதன். ஆரம்பத்தில் ஒரு ஸ்டூடியோவில் டீ வாங்கும் பையானாக சேர்ந்து, அப்புறம் பில் பார்த்து போட்டோக்களை கொடுக்கிறவனாகி, டார்க் ரூமில் கழுவப் படித்து, அவனே காமிராவை கையாண்டு போட்டோ எடுக்க ஆரம்பித்து, சின்னதாய் ஒரு ஸ்டூடியோ வைத்துத் தொடர்ந்த அவன் வாழ்வு டிஜிட்டல் உபகரணங்களோடு வண்ணமயமாகி இருக்கிறது. ஆனாலும், “கறுப்பு வெள்ளைக்கு ஈடான கலர் இல்ல“ என்றுதான் சொல்கிறான். அப்படிச் சொல்லும்போது அவன் முகத்திலிருந்து பல வண்ணங்கள் சிந்தத் தொடங்கும்.
சுற்றிலும் கிராமங்கள், பட்டிகள் சூழ்ந்த சாத்தூர் போன்ற ஒரு சின்னஞ்சிறு நகரத்தில் டிஜிட்டல் விஷயங்கள் எவ்வளவு பிடிபட்டிருக்கிறதோ, அதே அளவுக்கு பிடிபடாமலும் இருக்கின்றன. ‘அப்படியாம்’, ‘இப்படியாம்’ என கேள்விப்படுகிற விஷயங்கள், படிக்கிற செய்திகள், பார்க்கிற சினிமாக்கள் சொல்லும் தகவல்கள் எல்லாம் சாதாரண மனிதர்களுக்குள் மேலும் கற்பனைகளை உருவாக்கி விடுகின்றன. இங்கே எல்லாம் வெளிச்சத்தில் எக்ஸ்போஸ் செய்யப்படுகின்றன.
இந்தக் காலமாற்றங்களுக்குள் பயணம் செய்துகொண்டு இருக்கும் கார்த்தி சிரிக்கிறான். அவனது இன்னொரு அனுபவத்தை இங்கு சொல்ல வேண்டும். ‘இன்னொரு’ என்பதே தவறான பதம்தான். ஏனென்றால் இதுபோல நிறைய பார்த்து விட்டான் கார்த்தி.
அப்பாவோ அல்லது அம்மாவோ தங்கள் பெண்ணை ஸ்டூடியோவுக்கு அழைத்து வந்து போட்டோ எடுக்கச் சொல்கிறார்கள் என்றவுடன் விஷயம் தெரிந்துவிடும். போட்டோ எடுத்து முடித்தவுடன், அந்த அப்பாவோ, அம்மாவோ மெல்ல குனிந்து, “சார், கொஞ்சம் பெண்ணை கலராய் காண்பிங்க” என்பார்கள். சில கணங்கள் இடைவெளி விட்டுத் தயங்கி “கழுத்துல கூட கொஞ்சம் நகை போட்டுருங்க சார்” என்பார்கள். எல்லாவற்றுக்கும் மானிட்டரைப் பார்த்துக்கொண்டே “சரி, சரி” என்கிறான் கார்த்தி.
ஒருமுறை இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த இன்னொரு பெரியவர் சொன்னாராம். “இனும பொண்ணோட போட்டோவ எல்லாம் பாத்து கல்யாணம் செய்ய முடியாது போலுக்கே.”
கார்த்தி பட்டென்று சொல்லியிருக்கிறான் “மாப்பிள்ளையோட போட்டோவைப் பார்த்தும் கல்யாணம் செய்ய முடியாது” என்று.
இதையெல்லாம் நினைவுகூர்ந்தபடி “இப்போது, இங்கு எதுவுமே நிஜமில்லை” என்றான் அந்த டிஜிட்டல் போட்டோக்காரன்.
(அவ்வப்போது ஆல்பம் தொடரும்)
ஆபத்தை விதைத்து பசி அறுவடை
லட்சக்கணக்கான டன் உணவு தானியங்கள் திறந்தவெளியில் அழுகிக் கொண்டிருக்கிறது. இது அதிர்ச்சி தரக்கூடியது. ஆனால் இது புதியதுமல்ல ஆச்சரியப்படத்தக்கதுமல்ல நினைவிருக்கக் கூடும். 2001-ம் ஆண்டு இதே நிலைமை இருந்தது. ஆயிரக்கணக்கான கிராமப்புற ஏழைகள் ஆந்திராவின் தானியக்கிடங்குகளை நோக்கி அணிவகுத்தார்கள். உச்ச நீதிமன்றம் மத்திய அரசாங்கத்தை புரட்டி எடுத்திருக்கிறது. அது சரியானதுதான். “பசியால் வாடிக்கொண்டிருக்கும் மக்கள் இருக்கும் ஒரு நாட்டில் ஒரு குண்டுமணி தானியத்தை கூட வீணடிப்பது என்பது மிகப்பெரிய பாதகச்செயல்” என்று தனது கோபத்தை நீதிமன்றம் வெளிப்படுத்தியிருக்கிறது. மேலும் தேவைப்படுவோருக்கு இந்த தானியங்களை கொடுக்கும்படி அரசுக்கு ஆலோசனை கூறியிருக்கிறது.
தி ஹிந்து பத்திரிகையில் வந்த திரு. சாய்நாத் அவர்கள் எழுதிய கட்டுரையை தமிழாக்கம் செய்திருப்பவர் க.கனகராஜ் |
கடுமையான வார்த்தைகள் ஆயினும் வரவேற்கத்தக்கது. ஆயினும் நீதிமன்றம் இந்த பிரச்சனையில் இன்னும் சற்று தூரம் சென்றிருக்க வேண்டும். பட்டினி கிடப்போர் சாப்பிடுவதை விட இப்படி அழுகி வீணாய் போவதை இந்திய அரசாங்கம் ஏன் அனுமதிக்கிறது என்று பார்த்திருந்தால் நீதிமன்றம் இந்த விஷயத்தில் இன்னும் கூடுதலாய் சென்றிருக்கும். அது வறுமைக்கோட்டிற்கு மேலுள்ளோரை வறுமைக்கோட்டிற்கு கீழுள்ளோரின் எதிரியாக பார்த்திருக்கிறது. எனவேதான் ஒருவருக்கு சேரவேண்டிய தானியத்தை இன்னொருவருக்கு தருவதாக அது குறிப்பிட்டிருக்கிறது. வறுமைக்கோட்டிற்கு மேலுள்ளோரின் மீது அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட மாயமான தோற்றங்கள், அதன் மூலம் யாருக்கு இத்தானியங்களை கொடுப்பதற்கு கடமைப்பட்டிருக்கிறதோ அந்த ஏழைகளின் எண்ணிக்கையை ‘குறைப்பதற்கு’ முயல்கிறது. எனவே, இந்த தீர்ப்பின் ஒரு பகுதியை இந்திய அரசாங்கம் மகிழ்ச்சியுடன் நிறைவேற்ற முன்வரும். வறுமைக்கோட்டிற்கு மேலுள்ளோர் என்று சொல்லப்படுவோர் அவர்கள் பெறும் சிறு உதவியையும் இழப்பதற்கு இது பயன்படும்.
பட்டினி கிடப்போரை சாப்பிடச் சொல்வது அரசாங்கத்தை பொறுத்தமட்டில் அதன் “மானியச்சுமையை” அதிகரிக்கும். |
இந்த உணவு தானியங்கள் அழுகிப் போவதற்கு முன் விநியோகிக்க வேண்டும் என்கிற இந்த தீர்ப்பின் முக்கியமான பகுதியை அரசு புறக்கணிக்கும். அரசு, இந்திய உணவுக்கழக அதிகாரிகள் உணவு தானியங்களை சரிவர பாதுகாக்காமல் இருந்ததற்காக கோபித்துக்கொள்ளும். ஆனால், சேகரித்ததில் பாதியை மட்டுமே பாதுகாப்பதற்கான வசதியை வைத்திருக்கக் காரணமானவர்கள் யார்? இந்த தானியங்களை அரசாங்கம் விநியோகித்திருக்கலாம் அல்லது பொது விநியோக முறையின் மூலம் குறைந்த விலைக்கு விற்றிருக்கலாம். இந்த இரண்டுமே இந்திய அரசாங்கத்திற்கு ஏற்புடையதாக இருக்காது. இது அதனுடைய தத்துவத்திற்கும் பொருளாதாரத்திற்கும் எதிரானது. பட்டினி கிடப்போரை சாப்பிடச் சொல்வது அரசாங்கத்தை பொறுத்தமட்டில் அதன் “மானியச்சுமையை” அதிகரிக்கும். இந்த ஆண்டு பட்ஜெட்டில் உணவுக்கான மானியத்தில் ரூ. 450 கோடியை வெட்டியதில் வெற்றிபெற்ற அரசாங்கம் இதையெல்லாம் செய்யும் என்று எதிர்பார்க்க முடியுமா?
அனைவருக்குமான திட்டங்களை, பொதுவிநியோக திட்டமானாலும் சரி, சுகாதாரமானாலும் சரி, இரண்டு வாதங்களை அவர்கள் முன்வைக்கிறார்கள். 1) பணம் கிடையாது 2) அனைவருக்குமான திட்டத்திற்கு போதுமான தானியம் கிடையாது.
இந்த நாடு 49 டாலர் பில்லியனர்களை (ரூ. 4600 கோடியும் அதற்கு அதிக மாகவும் சொத்து வைத்திருப்போர்) உருவாக்கியிருக்கிறது. இதே பத்தாண்டு காலத்தில் டாலர் மில்லியனர்கள் ஒரு லட்சம் பேரை உருவாக்கியிருக்கிறது. ஆனால், பட்டினி கிடப்போருக்கு சோறிட மட்டும் அதனிடம் பணமில்லை. இந்த பட்ஜெட்டில் மட்டும் வெறும் மூன்று தலைப்பின் கீழ் கொழுத்த பண முதலைகளுக்கு ரூ. 5 லட்சம் கோடியை வரிவிலக்காக கொட்டியழுத அரசாங்கம் பசியாற்ற பணமில்லை என்கிறது.
போதுமான தானியம் உற்பத்தியாக வில்லையா? கடந்த 20 ஆண்டுகளில் பல லட்சக்கணக்கான விவசாயிகளை உணவு தானியப்பயிர்களை வளர்ப்பதிலிருந்து விரட்டியிருக்கிறோம். அவர்களையெல்லாம் பணப்பயிர்களை வளர்க்க செய்திருக்கிறோம். உணவுப்பயிர்களை வளர்த்தால் கூடுதல் இடுபொருள் விலைகள், கூடுதல் கடன், இன்னும் ஏராளமாய் சுமைகள் என்றால், அவர்கள் மாறாமல் என்ன செய்வார்கள்? நாம் ஆபத்தை விதைத்தோம், பசியை அறுவடை செய்கிறோம்.
இதன் விளைவு 2005-2008-ம் ஆண்டு காலத்தில் ஒரு இந்தியனுக்கு ஒரு நாளைக்கு கிடைக்கும் சராசரி உணவுப்பொருள் 436 கிராம். இது அரை நூற்றாண்டுக்கு முன்னதாக 1955-1958 காலத்தில் கிடைத்ததையும் விட குறைவு. அப்போது இது 440 கிராமாக இருந்தது. பருப்பு வகைகளை தனியாக எடுத்துக் கொண்டால் இந்த ஒப்பீட்டுக்காலக்கட்டத்தில் பாதியாக குறைந்திருக்கிறது. 1955-1958-ல் 70 கிராமாக இருந்தது. 2005-2008-ல் 30 கிராமாக குறைந்திருக்கிறது.
ஆனால், இதனால் எல்லாம் ஒவ்வொரு ஆண்டும் “சாதனை உற்பத்தி” படைத்து விட்டதாகச் சொல்லும் அரசின் ஜம்பத்தை நிறுத்திவிட முடியவில் லை. 2001-2003-ம் ஆண்டு “சாதனை உபரி” நினைவில் இருக்கிறதா? அந்த வருடங்களில் நாம் பல பத்து லட்சம் டன் தானியங்களை ஏற்றுமதி செய்தோம். அதுவும் இந்தியாவில் வாழ வழியற்றோ ருக்கு நாம் கொடுக்கும் விலையை விட குறைந்த விலையில் ஏற்றுமதி செய்யப் பட்டவையோ ஐரோப்பிய கால்நடைகளுக்கு உணவானது. பூவுலகிலே உணவு பாதுகாப்புமிக்க உயிரினம் அதுதான். கோடிக்கணக்கான மக்கள் பட்டினியாய் கிடக்கும் இந்த நாட்டில் பல லட்சம் டன் தானியங்கள் அழுகிக்கிடக்கிறது. ஏதோ ஒருநாள் இவையும் கூட தனியார் வியாபாரிகளுக்கு அடிமாட்டு விலைக்கு விற்கப்படும்.
கடந்த 20 ஆண்டுகளில் விவசாயத்தில் பொது முதலீடு சீரழிக்கப்பட்டது. விவசாயத்திற்கு நிதி ஒதுக்காமல் அதை அழிவை நோக்கி தள்ளிவிட்டு போதுமான தானியம் இல்லை என்பதைவிட கோமாளித்தனம் ஏதேனுமுண்டா? அனைவருக்கும் உணவு வழங்க வேண்டுமென் பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். உணவுப்பயிர்களை பயிரிடுவதை உத்தரவாதப்படுத்துங்கள். விவசாயிகளுக்கு நல்ல விலை கொடுங்கள். அவர்களின் விளைபொருளை வாங்கிக்கொள்வதற்கு சிறந்த ஏற்பாடுகளை செய்யுங்கள். அப்போது நீங்களே ஆச்சரியப்படுவீர்கள். உணவு உற்பத்தி என்கிற இந்தச்சவாலை இவ்வளவு விரைவில் வெற்றிகொள்ள முடியுமா என்று.
கொஞ்சம்போல் கர்ப்பிணி என்று சொன்னால் அது எத்தனை நகைக்கத்தக்கதோ அதேபோன்றுதான் கொஞ்சம்போல் அனைவருக்கும் என்பதும். |
மாறாக தேசிய ஆலோசனைக்குழு கூடி 150 மாவட்டங்களில் ‘அனைவருக்குமான’ உணவை உறுதிசெய்யப்போவதாக முடிவெடுத்திருக்கிறது. ‘அனைவருக்குமான’ என்பதன் அர்த்தம் அரிசியோ, கோதுமையோ மூன்று ரூபாய் விலையில் ஒவ்வொரு குடும்பத்திற்கு 35 கிலோ வழங்கப்படும். இந்த ‘அனைவருக்குமானது’ கோதுமை அல்லது அரிசியோடு நின்று விடும். இதில் பருப்பு அடங்காது; எண்ணெய் அடங்காது; மளிகை சாமான்கள் அடங்காது. எல்லாவற்றையும் விட இந்தியாவில் நான்கில் ஒரு பகுதிக்கு மட்டும்தான் இது பொருந்தும். கொஞ்சம்போல் கர்ப்பிணி என்று சொன்னால் அது எத்தனை நகைக்கத்தக்கதோ அதேபோன்றுதான் கொஞ்சம்போல் அனைவருக்கும் என்பதும்.
அனைவருக்குமான பொதுவிநியோகம் என்பதும் குறிப்பிட்டோருக்கான விநியோகம் என்பதும் ஒரே நோக்கத்தை அடையும் இரண்டு வழிகள் அல்ல. இரண்டும் வெவ்வேறு நோக்கம் கொண்டது. ஒன்று அனைவருக்குமானது அல்லது அனைவருக்குமானது அல்ல. அரசின் இந்த முயற்சி குழப்பத்தையே உருவாக்கும்.
அரசின் இந்த முயற்சி பசியை நிலப்பரப்போடு இணைப்பதாகும். மற்ற மாவட்டங்களிலுள்ள கோடிக்கணக்கான மக்கள் என்னாவது. அவர்களுக்கெல்லாம் பசியில்லையா? இடம்பெயர்ந்த கோடிக்கணக்கான மக்கள் என்ன செய்வார்கள்?
ஒரிசாவில் கஞ்சம் மாவட்டத்தை எடுத்துக்கொள்வோம். இங்கிருந்து நான்கு லட்சம் பேர் குஜராத்திலுள்ள சூரத்திற்கு சென்றுள்ளனர். கஞ்சம் மாவட்டம் இந்த 150 மாவட்டங்களுக்குள் அடங்கும். பசியோடு சூரத்திற்கு இடம் பெயர்ந்த இவர்களுக்கு இந்த தானியம் எப்படி கிடைக்கும். சூரத்திலுள்ள கடைக்காரர் , “வா மகனே, சட்டத்தை நான் பார்த்து விட்டேன். இதோ இருக்கிறது உன்னுடைய 3 ரூபாய் அரிசி” என்று ஒன்றும் சொல்லிவிடமாட்டார்.
இதனிடையே இந்த இடம்பெயர்ந்தவர்கள் அவர்களுடைய 1 கிலோ 3 ரூபாய் அரிசியை வாங்க மாட்டார்கள். இந்த அரிசி மீதப்படும். உடனடியாக அரசாங்கம் இந்த 150 மாவட்ட பட்டியலிலிருந்து கஞ்சம் மாவட்டத்தை நீக்கிவிடும். மஹாராஷ்டிராவிலுள்ள தானே மாவட்டம் பசியால் வாடும் ஆதிவாசி மக்களைக் கொண்டது. இந்த மாவட்டமும் கிலோ 3 ரூபாய் அரிசி திட்டத்தில் வரும். இவர்கள் ஒரு அடியெடுத்து வைத்தால் அடுத்த ஊர் மும்பைதான். அங்கு ஒரு கிலோ அரிசியின் விலை 30-லிருந்து 40 ரூபாய். விளைவு, தானேயில் பெரும்பாலான மலிவு அரிசி மும்பைக்கு இடம்பெயரும்.
அல்லது விவசாயக்கூலிகளை எடுத்துக்கொள்வோம். வயதுவந்த ஒரு கூலித் தொழிலாளிக்கு ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் 750 கிராம் தேவைப்படும். குழந்தைகளையும் உள்ளடக்கிய 5 பேர் கொண்ட ஒரு குடும்பத்திற்கு ஒரு நாளைக்கு 3 கிலோ அரிசி தேவை. அவர்களால் ஒரு நாளைக்கு இரண்டே முக்கால் கிலோ வுக்கு மேல் வாங்கமுடியவில்லை என்று வைத்துக்கொள்வோம். அப்படி வைத்துக் கொண்டால் ஒரு மாதத்திற்கு 82.5 கிலோ தேவை. புதிய “அனைவருக்குமான திட்டம்” 150 ரூபாய்க்கு 35 கிலோ அரிசியை கொடுக்கும். மீதி 47.5 கிலோ அரிசியை ஒரு கிலோ 22 ரூபாய் அல்லது அதற்கு மேலும் அதிகமாக கொடுத்து வாங்க வேண்டியிருக்கும். இதற்கு ரூ.1000 தேவைப்படும். இதற்கு அவர்கள் எங்கே போவார்கள்.
கிராமப்புற வேலை உறுதியளிப்புத் திட்டம் இருக்கிற போதும் லட்சக்கணக்கானோர் வருடந்தோறும் காலகண்டி அல்லது பொலாங்கிரிலிருந்து வேலை தேடி வெளியிடத்திற்கு செல்கிறார்கள். ஆந்திராவில் செங்கல்சூளைக்கு குறைந்த கூலிக்கு பல பேர் வேலைக்குப்போகிறார்கள். இது ஏன்? ஒரு பிரதான காரணம் கிராமப்புற வேலை உறுதியளிப்புத்திட்டம் ஒரு குடும்பத்திற்கு 100 நாளைக்கு மேல் வேலை கொடுப்பதில்லை. ஆந்திராவின் செங்கல்சூளையில் 5 பேர் கொண்ட குடும்பத்தில் ஒவ்வொருவருக்கும் 180 - 200 நாட்கள் வரை வேலையிருக்கும். வேலை உறுதியளிப்புச்சட்டம் கட்டுப்படுத்தப்பட்டது. பொது விநியோகத்திட்டம் குறிப்பிட்டோருக்கு மட்டுமானது. சுரண்டல் மட்டும்தான் அனைவருக்கும் பொதுவானது.
ஆயினும் விவாதம் எப்படி நடத்தப்படுகிறது என்றால், ஒவ்வொரு குடும்பத்திற்கும் 25 கிலோ கொடுப்பதா? 30 கிலோ கொடுப்பதா? என்று நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் கொடுமை என்னவென்றால் இதுகுறித்து முடிவெடுக்கவேண்டிய இடத்தில் மாண்டேக் சிங் அலுவாலியாவும் பிரணாப் முகர்ஜியும் இருக்கிறார்கள். மனசாட்சி இல்லாதவர்களிடம் இரக்கத்தை பற்றி பேசுகின்ற நிலை இருக்கிறது. ஒவ்வொரு துறையிலும் இதுதான் நடைபெறுகின்றது.
சில நல்லவர்கள் இவற்றையெல்லாம் சட்டமாக்க முயலுகிறார்கள். அரசும் ஏற்றுக்கொள்கிறது. பிறகு அதை பலவீனப்படுத்துகிறது. பின்னர் திட்டக்கமிஷன் இந்த முயற்சிகள் அனைத்தையும் சாத்தியமற்றது என்று நிராகரிக்கிறது. மீண்டும் அது கைவிடப்படுகிறது. பிறகு நிதி அமைச்சகம் எங்கே பணம் இருக்கிறது என்று சொல்லுகிறது. அதன் பிறகு இது பொருத்தமற்றதாக மாற்றப்படுகிறது.
டிக்கன்ஸின் ‘ஆலிவர் டுவிஸ்ட்’ நாவலில் வருவது போல் சிலர் வருகிறார்கள். |
நடைமுறையில் அனைத்தும் தோற்கடிக்கப்படுகிறது. குறிப்பிட்டோருக்கானது என்பதே நடைமுறைக்கு வருகிறது. அதன் பிறகு டிக்கன்ஸின் ‘ஆலிவர் டுவிஸ்ட்’ நாவலில் வருவது போல் சிலர் வருகிறார்கள். அவர்கள் சுமார்ட்கார்டு, பிரத்யேக அடையாள எண்கள், உணவு ஸ்டாம்ப்கள், பணத்தை மாற்றுவது என்பது பற்றியெல்லாம் பேசுகிறார்கள்.
உணவு பாதுகாப்பு சட்டம் இப்போதிருக்கிற வடிவத்தில் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் வழிகாட்டு நெறிமுறையை பலவீனப்படுத்துவதாகவும், நீர்த்துப்போகச் செய்வதாகவுமே இருக்கிறது. அது அனைவருக்குமான உணவைப் பற்றி பேசுகிறது. குறிப்பிட்டோருக்கல்ல. நாம் அதை நடைமுறைப்படுத்த வேண்டியிருக்கிறது. அதன் பொருட்டு ஒவ்வொரு நிலையிலும் நாம் எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையும் வழிகாட்டு நடைமுறையை பலவீனப்படுத்துகிறோமா? அல்லது பலப்படுத்துகிறோமா? என்று பார்க்க வேண்டியுள்ளது. இப்போதைய உணவு பாதுகாப்பு சம்பந்தமான நடவடிக்கைகள் வழிகாட்டு நெறிமுறைகளை பலவீனப்படுத்துவதாகவே இருக்கிறது. இதில் மட்டும் கவனம் செலுத்துகிற போது இதர துறைகளை நாம் கவனிக்காமல் விட்டு விடுகிறோம். நாம் இப்போது சத்தான உணவு, வேலை, மருத்துவம் மற்றும் கல்வி ஆகிய அனைத்தும் அனைவருக்கும் கிடைப்பது போன்ற ஒரு திட்டத்தை உருவாக்க வேண்டும். ஒரே ஒரு முறை இந்த தேசத்திற்காக அதைச் செய்யுங்கள்.
நன்றி: தீக்கதிர்
சிரமங்கள், மலைப்புகள், ஆதரவுகள்…
சிரமம்தான். காமிராவின் நுட்பங்கள் தெரிந்த, அதன் மொழி கைவரப்பெற்ற ஒருவரை காமிராவின் முன் உட்காரவைத்து பேட்டி எடுப்பதில் இவ்வளவு இருக்கிறது என்பதை ஒளிப்பதிவாளரும், இயக்குனருமாகிய பாலுமகேந்திராவை பேட்டி எடுக்கும்போதுதான் தெரிந்தது. சென்றமுறை சென்னையில் அவரைப் பார்க்கும்போது, சினிமா குறித்த பொதுவான விஷயங்களைப் பகிர்ந்து கொண்டவர், “ஆகஸ்ட் பதினைந்தாம் தேதி பேட்டியை வைத்துக் கொள்ளலாம்” எனச் சொல்லியிருந்தார்.
முதலில் என்ன காமிரா என்று கேட்டு திருப்தியடைந்தார். காமிராவின் கோணம், லைட்டிங், ஃபிரேம் என ஒவ்வொன்றையும் வந்து சரிபார்த்த பிறகே எதிரே போய் அமர்ந்தார். ஒரு காமிராவை ஒரே இடத்தில் வைத்து விட்டு, இன்னொரு காமிராவை கையில் வைத்து அங்குமிங்கும் நகர்ந்து படம் பிடிக்கவும் திட்டமிட்டு இருந்தோம். “அது வேண்டாம்” என மறுத்துவிட்டார். தனது தோற்றம் குறித்து அவர் கொண்ட கவனம் புரிந்தது.
பேட்டி கொடுத்துக்கொண்டு இருக்கும்போது, இடையில் ஆடியோ சரியாக இருக்கிறதா என எங்கள் உதவியாளர் ஒருவர் எழுந்து நடமாடவும், கடுமையாக கோபித்து, பேட்டியை நிறுத்தி எழுந்து கொண்டார். நான் ஒன்றும் சொல்லவில்லை. பேசாமல் அவர் எதிரே உட்கார்ந்திருந்தேன். அவரே சமாதானமாகி, திரும்ப உட்கார்ந்து ஒத்துழைத்தார். பேட்டியில் வார்த்தைகள் தெளிவாகவும், நிதானமாகவும் இருந்தன. முடிந்த பிறகு, அவர் அறைக்கு என்னை அழைத்து நட்பாகவும், பிரத்யேகமாகவும் சில விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார். நன்றி சொல்லி விடைபெற்றேன்.
சென்ற ஞாயிற்றுக்கிழமையிலிருந்து நேற்று வரை சென்னையிலிருந்து இயக்குனர் மகேந்திரன் குறித்த ஆவணப்படத்திற்கான அடுத்தக் கட்ட வேலைகளை முடித்துக்கொண்டு இன்று காலையில்தான் சாத்தூருக்குத் திரும்பினோம். இயக்குனர் ‘யார்’ கண்ணன் அவர்களது பேட்டி இந்த ஆவணப்படத்தில் மிக முக்கியமானதாய் இருக்கும்.
‘உதிரிப்பூக்கள்’ படத்திலிருந்து ‘கை கொடுக்கும் கை’வரை இயக்குனர் மகேந்திரனிடம் உதவி இயக்குனராய் பணிபுரிந்திருக்கிறார் அவர். படப்பிடிப்புகளில் நடைபெற்ற சின்னச் சின்ன சம்பவங்கள், சுவாரசியான நினைவுகள் எல்லாவற்றையும் சொல்லி இருக்கிறார். பேட்டியின் போது, சில இடங்களில் அவரது கண்கள் கலங்கின. இயக்குனர் மகேந்திரன் மீதான மதிப்பும், மரியாதையும் எங்களுக்கு மேலும் கூடியது. “அவரிடம் பணிபுரிந்து இன்று நான் வெளியே வந்து இயக்குனராக இருக்கிறேன் சார். ஆனால் நான் ஒரு நல்ல உதவி இயக்குனர் மட்டுமே” என்று சொல்லிய வார்த்தைகளில், கண்ணனும் உயர்ந்து நின்றார். மூன்று மணி நேரத்துக்கும் மேலாக எடுத்தும் இன்னும் அவரிடம் பெற வேண்டியது இருப்பதாகவேப் பட்டது. அவரிடம் சொன்னோம். தனக்கு சில முக்கியமான பணிகள் இருப்பதாகவும், இன்னொருநாள் வைத்துக்கொள்ளலாம், பேசுவோம் எனவும் சொல்லி இருக்கிறார்.
இன்னும் ரஜினிகாந்த், சுஹாசினி, ராதிகா, ரேவதி, சாருஹாசன், அஸ்வினி, சரத்பாபு, மோகன், பிரதாப் போத்தன், வடிவுக்கரசி, சுந்தர் என அவர் படத்தில் நடித்தவர்கள், இளையராஜா, எடிட்டர் லெனின் என அவரோடு பணியாற்றியவர்கள், நடிகர் கமல் போன்ற அவரது நெருங்கிய நண்பர்கள், சினிமா குறித்து அக்கறை கொண்ட எழுத்தாளர்கள், பத்திரிக்கையாளர்கள் என பலரது பேட்டிகள் வேண்டியிருக்கிறது. ஒவ்வொருமுறையும் சென்னை சென்று பேட்டிகள் எடுக்க வேண்டி இருக்கிறது. இயக்குனர் மகேந்திரன் குறித்த செய்திகள், அவர் இயக்கிய படங்கள் என சேகரிக்க வேண்டி இருக்கிறது. யோசிக்க யோசிக்க மலைப்பாகத்தான் இருக்கிறது.
நண்பர்கள் தோளோடு நிற்கின்றனர். எங்கெங்கோ இருந்தும், கேள்விப்பட்டு வலையுலகில் சிலர் மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு இயக்குனர் மகேந்திரன் பற்றிய தகவல்களை தந்த வண்ணம் இருக்கின்றனர். பத்திரிகை நண்பர்கள் சிலர் அவர்களால் ஆன உதவிகளைச் செய்வதாய் தோள் தட்டியிருக்கின்றனர். சில பதிவர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தங்கள் ஒத்துழைப்பு இம்முயற்சியில் எப்போதும் உண்டு என கரம் நீட்டியிருக்கின்றனர். இதுதான், இந்த ஆதரவுதான் மேலும் அடுத்த அடி எடுத்து வைக்க உற்சாகமளிக்கிறது....
நாகரீகமானவன்
வலப்பக்கம் அமர்ந்திருக்கும் அவளின் துப்பட்டா விலகலுக்குள் அலை பாய்கிறான். அலுவல்களில் அவள் கவனமாயிருக்கும் சமயமாய்ப் பார்த்து, இன்னும் சில கணங்கள் நிலைக்கிறான். மேலும் கீழுமான பிரதேசங்களோடு ஒப்பிட்டுத் திமிறலை அறிகிறான். இப்படித்தான் இருக்கும் எனத் தெரிந்தாலும் அவள் அறியாவண்ணம் இன்னொருமுறை சரியாகப் பார்க்கத் துடிக்கிறான். எழுந்து நடக்கும்போது அவள் பின்னால் மேய்கிறான். பார்த்துப் பார்த்தும், பழகாத பிம்பங்களில் புதையுறுகிறான். வளைவுகளிலும், அசைவுகளிலும் பெருமூச்சு விட்டுக் கிடக்கிறான்.
கோப்பு ஒன்றை நீட்டி, சந்தேகம் கேட்டு அருகில் வந்து பேசிக்கொண்டு இருந்த அவள் மீது தெரியாமல் விரல்கள் படவும் சுண்டி கை இழுத்துக்கொள்கிறான். “ஸாரிங்க, ஸாரிங்க” என்று பதறுகிறான்.
ஒரு உலகம், ஒரு வீடு
உடலை நெளித்துக் கொண்டு எழுந்தான் இவன். டி.வியை பார்த்துக்கொண்டு ஞாயிற்றுக்கிழமை பொழுது போக்கியவனுக்கு அலுப்பாயிருந்தது. இருவரும் வெளியே கிளம்பத் தயாரானார்கள். அந்த சின்ன வீட்டிற்குள் அதுவரை ஒன்றாகவே அடைந்து இருந்தார்கள்.
இதுதான் போட வேண்டும் என்ற யோசனை இல்லாமல் இவன் சட்டை போடப் போனான்."என்னங்க இது....நான் போட்டிருக்கிற ஸ்கை ப்ளு சேலைக்கு மேட்ச்சா டிரஸ் பண்ணுங்களேன்"
"ம்.. ஏங்கிட்டே எங்க ஸ்கை ப்ளுல சட்டை இருக்கு?"
"ஸ்கை ப்ளுன்னா ஸ்கை ப்ளுதான் போடணுமா..இதப் போடுங்க"
போட்டுக்கொண்டான். பக்கத்தில் வந்து நின்று எதிரே கண்ணாடியில் இவள் தங்கள் இருவரையும் சேர்ந்தாற்போல் பார்த்துக் கொண்டாள். விலகி ஸ்டிக்கர் பொட்டு வைத்துக்கொண்டே "இந்த லூஸ் ஃபிட்டிங்னுல்லாம் போட்றாங்களே... அதமாரி நீங்க தைக்கக் கூடாதா?"
தனது ரசனை குறித்த விமர்சனமாகவும், உலகநடப்பு குறித்த அறிவுரையாகவும் அது பட்டது. "லூஸுங்கதான் அந்த ஃபிட்டிங் போடும்" சட்டென்று சொன்னான்.
"கோபமா?"
"இல்லய"
"பொய் சொல்றிங்க..கோபப்படுறிங்க.." பக்கத்தில் வந்து இவன் கண்களை உற்றுப்பார்த்தாள்.
இவள் கண்களை பார்க்க முடியவில்லை. "இப்பத்தான் கோபத்தை உண்டு பண்ற...பேசாம விடு. பொறப்படுவோம்." சன் டி.வியில் கதாநாயகன் ஒருத்தன் கதாநாயகி ஒருத்தியின் பின்னால் ஒடி ஆடிக்கொண்டிருப்பதில் கவனம் செலுத்தினான்.
கொஞ்ச நேரம் இவனையே உற்றுப்பார்த்து விட்டு "யப்பா.. என்னமா கோபம் வருது " என்று இவன் மூக்கை அழுத்திப் பிடித்து விட்டாள். வலித்தது. இதற்கும் கோபப்பட்டால் அசிங்கம் என்று அந்த எரிச்சலிலும் உண்ரமுடிந்தது. அதொன்றும் சுகானுபவமாக இல்லை என்பதையாவது இவளுக்கு காண்பித்துவிட வேண்டும் என்று மூக்கை தடவிக்கொண்டே முகம் சுளித்தான்.
"ஐயாவுக்கு இதெல்லாம் பிடிக்காது பாருங்க.." என்று கண்சிமிட்டி சிரித்தாள். அதில் தொனித்த அர்த்தத்தில் அவமானப்பட்டாள்.
"ஆமா..அதுக்காக எப்பப்பாத்தாலும் ஒருத்தர ஒருத்தர் கட்டிப்புடிச்சிட்டே அலையறதா...வெக்கமாயில்ல..?"
"இன்னா பாருங்க...நிதானமேயில்லாம பேசுறிங்க.."
"வாய மூடு. நீ அப்படி பேசினா..நா இப்பிடித்தான் பேசுவேன்.."
"எதுக்கு இப்ப கோபப்படுறிங்க..என்ன வேணும்னாலும் நீங்க பேசலாம். நா மட்டும் பேசாம இருக்கணுமாக்கும்.."
"ச்சே! இந்த பொம்பளைங்களே இப்பிடித்தாம்பா. அறிவே கிடையாது. கொஞ்சநேரம் சும்மாயிருக்க மாட்டாங்க. எதையாவது வளவளன்னு பேசிட்டேயிருக்கணும்." கையிலிருந்த சீப்பை தூக்கி எறிந்தான். மாலையும் கழுத்துமாய் சுவரில் மாட்டியிருந்த இவர்களது கல்யாண போட்டாவில் பட்டு தெறித்தது. டி.வியில் இப்போது இன்னொரு கதாநாயகியின் காலை இன்னொரு கதாநாயகன் முத்தமிட்டபடி காதல் செய்து கொண்டிருந்தான்.
"யப்பா...! லூஸ் ஃபிட்டிங்லாம் போட்டா இன்னும் கொஞ்சம் நல்லாயிருப்பீங்களேன்னு ஒரு வார்த்த சொல்லிட்டேம்பா. அதுக்குப் போயி இவ்வளவு ஆர்ப்பாட்டமா. நீங்கள்ளாம் வெளியே போய் நாலுபேர்ட்ட எப்படி பழகுறீங்களோ...ஆபிஸ்ல வேலை பாக்குறிங்களோ..தெரியல்ல"
"அடச் சீ...வாய மூடு. எனக்கு எல்லாம் தெரியும். இந்த ஃபேண்ட் சட்டைல நா நல்லாயில்லேங்குறதத்தான் நீ அப்படிச் சொன்ன..."
"கடவுளே...கடவுளே! எல்லாத்தயும் தப்பு தப்பா அர்த்தம் பண்ணிக்குறதே ஒங்க வழக்கமாப் போச்சு. கல்யாணமான நாள்ள இருந்து இப்பிடித்தான். மொதமொதலா ஒங்க துணியெல்லாம் துவைச்சுப் போட்டுட்டு நீங்க வந்து பாப்பீங்கன்னு காத்துட்டே இருந்தேன். சந்தோஷமா பாராட்டுவீங்கன்னு நெனைச்சேன். ஆனா அன்னிக்கு என்ன சொன்னீங்க தெரிமா..இது என்ன கறை? நல்லா தொவைக்கக்கூடாதான்னு சொன்னீங்க... எப்பிடி இருந்துச்சு தெரிமா எனக்கு. ஒங்க கண்ணுக்கு எதுவும் நல்லதாவே தெரியாதா?"
இப்படி ஒன்று இவளுக்குள் வதைத்துக் கொண்டிருக்கும் என்பது இவன் அறியாதது. கிட்டத்தட்ட அழுகிற மாதிரி ஆகியிருந்தாள். இழுத்து, இவள் தலையை மார்போடு மூச்சுமுட்ட அணைத்து வைத்து, தலையை வருடிக்கொடுக்க வேண்டும் என்கிற எண்ணம் தோன்றி மறைந்தது. அதையும் மீறி திமிறிக்கொண்டு ஒன்று எழுந்தது. எதாவது பதிலுக்குச் சொல் என்றது. இவளைவிட உயரம் போ என்றது.
"ஆமா..போலித்தனமாயிருந்தாதான் ஒங்களுக்கு எல்லாம் பிடிக்கும். மனசுக்குப் பட்டதையும் தாண்டி பொய்யாப் பாராட்டினா உச்சி குளுந்திரும்.எப்பந்தா நீங்கள்ளாம் மாறப்போறீங்களோ...இன்னா பாரு சந்தோஷமோ...கோபமோ நா உண்மையாயிருக்கேன்.ஒன்ன சந்தோஷப்படுத்தணும்னு நா போலியா இருக்க முடியாது"
"அப்ப நா உண்மையா இல்லேங்கிறீங்களா.."
"ஆமா.மேட்ச் என்கிறது டிரெஸ்ல் இல்ல. மனசுல இருக்கு.ஒண்ணு போல டிரெஸ் போட்டுக்கிட்டு நாங்க எவ்வளவு மேட்சா இருக்கோம்கிறது போலித்தனம்தான்"
இவளை முறியடித்துவிட்ட திருப்தி வந்தது.தன்னையும் உயர்த்திக் கொண்டாயிற்று. எவ்வாளவு புத்திசாலித்தனமாக நான் இருக்கிறேன் என்று அந்த குறைந்த அவகாசத்தில் தன்னை மெச்சவும் செய்தான்.
"இப்போ மனசுல மட்டும் என்ன வாழுதாம். ரொம்ப மேட்சுதான். யப்பா...சாதாரணமா சொன்ன ஒரு வார்த்தைக்கு என்னெல்லாம் பேசுறீங்க?"
"நாம ஒருத்தருக்கொருத்தர் மேட்ச் இல்லல்ல...அப்ப போறீயா ஒங்கப்பன் வீட்டுக்கு "
"ஏங்க இப்படி நிதானமே இல்லாம பேசுறீங்க...பிரிஞ்சு இருக்கவா எல்லோரும் நமக்கு கல்யாணம் செஞ்சு வச்சாங்க..."
"நீதான் எல்லாத்துக்கும் காரணம். வாய மூடுன்னு அப்பவே சொன்னேன்ல.."
குளித்து டிரெஸ் பண்ணி புதுசாய் இருந்தவள் இப்போது முகம் வெளுத்து கலவரமடைந்து நாற்காலியில் உட்கார்ந்து இவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். இப்போது ஒரு கதாநாயகன் அந்த கதாநாயகி வரும் பாதையெல்லாம் பூவிரித்து பாடிக்கொண்டு இருந்தாள்.இவன் கீழே கிடந்த சீப்பை எடுத்து என்ன செய்கிறோம் என்ற உணர்வே இல்லாமல் திரும்ப திரும்ப கண்ணாடியில் தலை சீவிக்கொண்டான். அடுத்து என்ன செய்ய என்று தெரியவில்லை.
வெறித்தனமாக பீறீட்டு வந்த கேவலுடன் இவள் அழ ஆரம்பித்தாள். "ஐயோ..ஐயோ.." என்று தலையில் அடித்துக் கொண்டாள். "என் வாயில சனியந்தான் உட்கார்திருக்கு...நா ஒரு வெக்கம் கெட்டவ...எத்தன தடவ சூடு பட்டாலும் சந்தோஷத்துல எதையாவது சொல்லி..." வார்த்தை அதற்கு மேல் வரவில்லை. சத்தம் போட்டு அழுதாள்.
"இன்னா பாரு...இப்ப எதுக்கு அழற....எதுக்கு அழற..."
இவள் அப்படியே படுக்கையில் போய் விழுந்து குலுங்கி அழுது கொண்டிருந்தாள். பக்கத்து வீட்டுக்கு எல்லாம் கேட்கும்படி சத்தம் இருந்தது.
"ஏய் அழாத. அழாதேன்னு சொல்றேன்ல. எல்லா வீட்டுக்கும் கேட்கப் போது" டி.வியை இன்னும் கொஞ்சம் சத்தமாக வைத்தான்.
"பக்கத்து வீட்டுக்கு தெரிஞ்சிருமேன்னுதான் இப்பக்கூட கவலை என்ன.." அழுகையோடு இரைந்தாள். கல்யாணமாகி மொதமொதல்ல ஃபிரண்டு வீட்டுக்கு போறோம்னு எவ்வளளோ ஆசையாயிருந்தேன். அந்த சந்தோஷம் எல்லாம் போச்சு.... எல்லாம் போச்சு" பூவை தலையிலிருந்து கழற்றி தூர எறிந்தாள். பவுடர் அழிந்து, தலை கலைந்து பரிதாபமாயிருந்தாள்.
"அப்படியேக் கிட. நா எங்கயாவது வெளியே போறேன். ஒரு லீவு நாள் கூட மனுஷன் வீட்ல நிம்மதியா.... ஒண்ணா இருக்க முடியல."
"போங்க.... எஙக வேண்ணாலும் போங்க."
போய்விடலாம். எங்கு போக. வீட்டில் அழுது கொண்டிருப்பாளே என்றிருந்தது. சங்கடப்படட்டும்... அப்போதுதான் தன் அருமை தெரியும் என்றும் இருந்தது.
த்லையைச் சீவிக் கொண்டான். எதற்கு இப்படி தலையைச் சீவுகிறோம்....தன் தவிப்பை இவள் பார்த்துவிட்டால்... என்று சீப்பை திரும்பவும் ஷெல்பில் வீசினான். கண்கள் சிவந்து நெற்றிச் சுருக்கங்களோடு தன்னை கண்ணாடியில் பார்த்தான். பவுடர் பூசி இவளுக்குத் தெரியாமல் புன்னகைத்துப் பார்த்தான். முகம் கடுமையாகவே இருந்தது. வீடு இருண்டு, சுருங்கிக் கொண்டே வருகிற மாதிரி தோற்றமளித்தது.
"ஏய்... வர்றியா...இல்லியா... அப்புறம் என்னைக்குமே... எங்கேயுமே கூட்டிட்டுப் போக மாட்டேன் பாத்துக்க..."
பதில் சொல்லாமல் அப்படியேக் கிடந்தாள். இவளிடமிருந்து முகத்தைத் திருப்பியபோது கால்கொலுசு கண்ணில் பட்டது. கல்யாணமான மூன்றாம் நாள் படுக்கையில் அது அறுந்து போன போது இவன் வருத்தப்பட்டதும், சரி பரவாயில்லை என்று இவன் அணைத்துக் கொண்டதும், அடுத்தநாள் இவன் வாங்கி வந்த இந்த புதுக்கொலுசைப் பார்த்து சந்தோஷப்பட்டதும், திமிர் கொண்டு இந்த இரண்டு அறைக்குள் நடந்து திரிந்ததும் ஞாபகத்திற்கு வந்தது. பரிவு தோன்றியது. முகத்துக்கு நேரே வலிய இறங்கிவிடக் கூடாது என்பதிலும் கவனமாயிருந்தான். டி.வி இவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. இரண்டு பேரும் வருவோம் என்று ஃபிரண்டு எதிர்பார்த்துக் கொண்டிருப்பாளே என்பது இவளை அலைக்கழித்தது. மெல்ல மெல்ல இவள் உடலின் அதிர்வுகள் அடங்கிப் போயின. துவண்டபடியே எழுந்தாள்.
"ஏங் கூட வர்றிங்களா... இல்லியா" யாரோ ஒருவனிடம் பேசுகிற மாதிரி கேட்டாள்.
"ம்... வந்து தொலைக்கிறேன்"
வீங்கிய முகத்தோடு முறைத்தாள். கோபத்தை ஜீரணிக்கிற மாதிரி பெருமூச்சு விட்டாள். முகம் கழுவி தலை சீவிக் கொண்டாள். ஹேண்ட்பேக்கை எடுத்துக் கொண்டு ஜடம்போல் வெளியே வந்து நின்றாள். டி.வியை அணைத்துவிட்டு கதவைப் பூட்டும் போது தரையில் கிடந்த பூவை கவனித்தான். உற்சாகத்தோடு நேற்றே வாங்கி பிரிஜ்ஜில் வைத்திருந்தது இவனுக்குத் தெரியும்.
ஒரு வார்த்தையும் பேசிக் கொள்ளாமல் இருவரும் நடந்தார்கள். டி.விகள் மனிதர்களை வீட்டிற்குள் தேக்கி வைத்திருந்தன. காலியான தெரு சுருங்கிப்போன இவளது கண்களுக்கு அந்த அஞ்சு மணி வெயிலும் கூசியது. பஜாரில் வேகவேகமாய் மனிதர்களும், கார், பஸ்களும் தென்பட்டன. அவரவர்களுக்கென்று உலகம் வைத்துக் கொண்டு இயங்கிக் கொண்டிருந்தனர். பூ வாங்கிக் கொடுக்கலாமா என்று நினைத்து வீறாப்பாய் இருந்து விட்டான் இவன்.
பஸ்ஸில் இவளுக்கு மகளிர் பகுதியில் இருக்கை இருந்தது. இவன் நின்று கொண்டிருந்தான். ஒருதடவை இவனைத் திரும்பிப் பார்த்தவள் பிறகு வெளியேப் பார்த்துக் கொண்டிருந்தாள். வரவர எல்லாம் மோசமாகிக் கொண்டிருப்பதாய் ஒருவர் புலம்பிக் கொண்டு இருந்தார். கண்டக்டர் சில்லறை கொடுக்காத ஒருவனிடம் எரிச்சல்பட்டுக் கொண்டிருந்தார். சிக்னலுக்கு பஸ் நின்றபோது ஒருவர் வாட்சைப் பார்த்து என்னவோ முணுமுணுத்துக் கொண்டார். அடுத்த நிறுத்தத்தில் பஸ் நின்றபோது இவனுக்கு ஜன்னலோரத்து இருக்கை கிடைத்தது. ச்சே... ஏன் கோபப்பட்டாய் என்று உறுத்த ஆரம்பித்தது. எதிரும் புதிருமாய் போய்க் கொண்டிருந்த வாகனங்களின் புகையும், புழுதியும் எங்கும் வியாபிக்க, இவனும் அதையே சுவாசிக்க வேண்டியிருந்தது. கைக்குட்டை எடுத்து மூக்கைப் பொத்திக் கொண்டான். தாண்டிப் போன பஸ்ஸின் பின்னால் விபத்துக்களைத் தடுக்க குறைந்த பட்சம் பத்து மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும் என்று எழுதியிருந்தது.
அப்பாவிடம் பார்த்து எரிச்சலடைந்த குணம் இப்போது தன்னிடமும் வந்துவிட்டதே என்று நொந்து கொண்டான். அப்பாவையும், அம்மாவையும் சமாதானப்படுத்த ஊரில் தாத்தா, பாட்டி என்று இருந்தார்கள். இங்கு யார் இருக்கிறார்கள் அந்த டிவியைத் தவிர. பஸ்ஸையொட்டி வந்து கொண்டிருந்த பைக்கில் ஒருவனைச் சுற்றிப் பிடித்தவாறு ஒருத்தி உட்கார்ந்திருந்தாள். இந்த பஸ்ஸில்லாமல், தானும் இவளும் இந்த நேரத்தில் இப்படி போயிருக்க முடியுமா என்று நினைத்துக் கொண்டான். இவளும் இப்படி பிடித்திருக்க மாட்டாள், தனக்கும் இன்னும் எரிச்சல் ஒட்டிக் கொண்டுதான் இருக்கும் என்று தோன்றியது. யோசித்துக் கொண்டே இருந்தான். கிடைத்த அந்த தனிமையில்... போகப் போக... எப்போது இந்த பஸ் பிரயாணம் முடியும், தானும் இவளும் எப்போது ஒன்றாக இறங்குவோம் என்றிருந்தது. எப்படியும் இவளிடம் ஸாரி சொல்ல வேண்டும் என நினைத்துக் கொண்டான்.
(இது ஒரு மீள் பதிவு)
இப்படியாக இந்த சுதந்திரதினம்!
அதென்னமோ தெரியவில்லை. சரியாக செங்கல்பட்டிலிருந்து தாம்பரத்துக்கும் இடையில் தூக்கம் கலைந்து விடுகிறது. அப்பர் பெர்த்தில் பிரியா கார்த்தி முதுகைக் காட்டி படுத்திருந்தான். எதிரே இன்னொரு மிடில் பெர்த்தில் சுரேஷ்பாபு “குட்மார்னிங்” என்றார். கீழேப் பார்த்தேன். காலியாய் இருந்தது. நேற்றிரவு மதுரையில் ஏறி இரண்டு பீர்களை வைத்துக்கொண்டு விழித்துக்கொண்டு இருந்தவர்களைக் காணோம். “அடிச்சிட்டே வந்திருக்கலாம்ல்” என்றான் கார்த்தி அவர்களிடம். “அடிச்சிட்டோம். இது அடிஷனல்” என்றான் ஜீன்ஸ் போட்டு இருந்த அந்த இளைஞன். பிறகு இருவரும் ஒரே டாய்லெட்டுக்குள் மறைந்தார்கள். எப்போது திரும்பி வந்தார்களோ, படுத்தார்களோ, சென்றார்களோ.
பெரியவர் ஒருவர் சைடு சீட்டில் உட்கார்ந்து காலையைப் பார்த்துக்கொண்டு இருந்தார். “தாம்பரம் வரப்போகுதா” என்றேன் அவரைப் பார்த்து உறுதிபடுத்திக்கொள்ள. ஆமாம், இன்னும் இருபது நிமிஷத்துல வந்துரும். வண்டி பத்து நிமிஷம் லேட்” என்றார். டிரெய்னில் வருகிற சிலர் இப்படி லேட்களை எல்லாம் கறாராக கணக்கு வைத்துக்கொண்டு வருகிறார்கள். “ஸ்பீடாய் வர்றான். லேட்டை மேக் அப் பண்ணிருவான்” என்றார் தொடர்ந்து. வர்றான் என்றால், யார் அந்த அவன். லேட்டை மேக் அப் செய்யாவிட்டால் என்னவாகும். நான் அவரையேப் பார்த்துக் கொண்டிருந்தேன். சுரேஷ்பாபு என்னைப் பார்த்து சிரிக்க ஆரம்பித்தார். “என்ன” என்றேன். “நமக்கு ஒண்ணும் பிரச்சினையில்ல. பாலுமகேந்திரா பதினோரு மணிக்குத்தான் வரச் சொல்லி இருக்காரு” என்று திரும்பவும் சிரித்தார். கேட்டுக் கொண்டு இருந்த அவருக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது. முகத்தை திருப்பிக்கொண்டார்.
மாம்பலம் ஸ்டேஷனை இதே காலை ஆறரை மணி வாக்கில்தான் சூட்கேஸ்களை சுமந்துகொண்டு நடப்பதாய் பார்க்க வாய்க்கிறது. எவ்வளவு தூரம் என்கிற மலைப்பும் கூடவே ஒட்டிக்கொள்கிறது. காமிராக்கள், இத்யாதிகளை சுமந்துகொண்டு பாலு, முனிஷ், கார்த்தி சோர்வாய் இருந்தார்கள். வெளியே வழக்கம்போல ஆட்டோக்காரர்கள் மொய்க்கிறார்கள். வழக்கம்போல் தேனாம்பேட்டைக்கு நூற்று ஐம்பது, நூற்று இருபது என்று சொல்கிறார்கள்.
ஒரு ஆட்டோ அருகில் சின்னப் பையனும், ஒரு இளைஞனும் நின்று கவனித்துக் கொண்டிருந்தார்கள். சின்னப் பையன் அருகில் வந்து “எங்க சார் போகணும்” என்றான். “தேனாம்பேட்டை.எவ்வளவு” என்றேன். “எழுபது ருபா தாங்க” என்றான். சரியென்றேன். “இரண்டு வண்டியா” என்றான். “ஆமாம்”.என்றேன். அவனது வண்டியில் ஏறச் சொல்லி, அருகில் நின்ற இளைஞனிடம் சென்று “தேனாம்பேட்டை. வர்றியா” என்றான். அவன் இல்லையென்பதாய் தலையாட்டி எங்கோ பார்த்துக்கொண்டிருந்தான். இன்னொரு ஆட்டோவை பிடித்து வந்தான். நானும், கார்த்தியும் அந்தச் சின்னப் பையனின் ஆட்டோவில் ஏறிக்கொண்டோம். “உனக்கு எத்தனை வயசு” என்றான் கார்த்தி அவனிடம். “பதினெட்டு” என்றான். “பொய் சொல்ற. பதினைஞ்சுதான் இருக்கும்” என்றான் கார்த்தி. அவன் ஒன்றும் பதில் சொல்லவில்லை. ஒட்டுவதில் கவனம் செலுத்தினான். “உன் கூட இருந்தவன் ஏன் வரல” என்றேன். “தெரியல சார்” என்றான்.
காமராஜ் அரங்கம் எதிரில் இறங்கி டீக்கடை நோக்கி நகர்ந்தோம். எதிரே காமராஜ் அரங்கத்தில் ‘தமிழ்நாடு மண்ணள்ளும் இயந்திர உரிமையாளர்கள் சங்கத்தின்’ விழாவுக்கான பேனர் கட்டியிருந்தது. சோனியாகாந்தி முதற்கொண்டு வாசன் வரையிலானவர்களின் தலைகள் அதில் இடம்பெற்றிருந்தன. அருகில் ஒரு தள்ளுவண்டியில் சுதந்திரதினக்கொடி கட்டியிருந்தது. டீயும் ருசிக்கவில்லை. மழைக்கான மேகமூட்டத்தையும் ரசிக்க முடியவில்லை.
புதிய பதிவர்கள் அறிமுகம், ரசித்த பதிவுகள் மற்றும்…
தீராத பக்கங்கள் - 1 |
நீங்களும் நானும் கேள்விப்பட்ட கதையல்ல இது. அமெரிக்க எழுத்தாளர் அம்புரோஸ் பியர்ஸின் குட்டிக்கதை ஒரு சிங்கம் ஒரு சுண்டெலியைப் பிடித்து கொல்லப் போனது. அப்போது சிங்கத்தைப் பார்த்து சுண்டெலி சொன்னது. “என் உயிரை நீ காப்பாற்றினால் உனக்குஒருநாள் பதிலுக்கு நானும் உதவி செய்வேன்” சிங்கம் இரக்கப்பட்டு சுண்டெலியை விட்டுவிட்டது. கொஞ்ச காலம் கழித்து வேடர்கள் விரித்த வலையில் சிங்கம் சிக்கிக் கொண்டது. அந்த வழியாக வந்த சுண்டெலி, சிங்கம் நாதியில்லாமல் கிடப்பதைப் பார்த்தது. உடனே அதன் வாலைக் கடித்துத் தின்றுவிட்டது |
வணக்கம் |
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.
வலைப்பக்கத்தில் இப்படி ஒரு முயற்சி செய்து பார்க்கலாம் போலிருந்தது.
ஒரே பதிவில் பல விஷயங்களை, பல வண்ணங்களில், விதங்களில் பகிர்ந்து கொள்ள ஒரு உத்தி. அவ்வளவுதான்.
வலைப்பக்கங்களில் ரசித்த பதிவுகள், புதிய பதிவர்கள், கூகிள் பஸ் விவாதங்கள் என சுவாரசியமாக இந்த வடிவத்தில் செய்து பார்க்கலாம் எனத் தோன்றுகிறது.
உங்கள் ஆதரவும், ஆலோசனைகளும் இருந்தால் தொடரலாம்!
நன்றி.
மாதவராஜ்
நேசமித்ரனின் கவிதை: கைக்கிளை பிரபஞ்சம் Totoவின் கவிதை: ஊரின் உயர்வு முத்துலெட்சுமி அவர்களின் இயக்குனர் ஜனநாதனுடனான பேட்டி: இயக்குனர் ஜனநாதனுடன் பேட்டி யாத்ராவின் கவிதை: எப்படியிருக்கீங்க என்.விநாயகமுருகனின் கவனிக்கப்படாத ஒரு சினிமா பற்றிய குறிப்பு: ஆடும் கூத்து – கலையின் உச்சம் முரளிகுமார் பத்ம்நாபனின் புத்தக விமர்சனம்: ஆட்டுக்குட்டிகள் அளிக்கும் தண்டனை வேல்கண்ணனின் கவிதை: நிர்வாணத்தை கவனித்தல் கருணா பகிர்ந்துகொண்ட குறும்படம்: குழந்தைகளாக இருக்க விடுங்கள் உமாஷக்தியின் கவிதை: நண்பனின் பெயர் வீணாப்போனவனின் கவிதை: சுழல் பந்து ஆடுமாடு அவர்களின் இந்தப் பதிவு: ஏதாவது சொல்லிவிட்டுப் போயேன் |
தொடரும் |
நன்றி : சொல்வனம்
29.சரவணன்: இவரது வலைப்பக்கத்தின் பெயர் மழை. ஏற்கனவே அமித்து அம்மாவின் வலைப்பக்கத்தின் பெயரும் இதுதான். சரவணன் எழுத்துக்கள் அமைதியானவை. சின்னச் சின்னதாய் தெறிப்புகளாய் இருக்கின்றன. ரசித்துக்கொண்டே இருக்கலாம். அற்புதமாக இருக்கும் அவரது எழுத்துக்களில் சுமாரானது இதுதான் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்:
இவரது வலைப்பக்கத்தில் புத்தக அலமாரி விட்ஜெட் ஒன்றிருக்கிறது. அருமை. 30. இளங்கோ: இப்படிக்கு இளங்கோ என்பதுதான் இவரது வலைப்பக்கம். முக்கியமான எழுத்துக்கள் இவருடையவை. எழுத்து நடை எனக்குப் பிடித்திருக்கிறது. சினிமா, கவிதை, அனுபவம் என எல்லாமே இவரது பகிர்வில் அழகாகின்றன. 2008லிருந்து எழுதினாலும் சில பதிவுகளே எழுதி இருக்கிறார். கடைசியாய் எழுதியிருக்கும் சுதந்திர தினம் குறித்த கவிதையை படிக்க மறக்காதீர்கள். 31.நடனசபாபதி: நாட்டுடைமையாக்கப்பட்ட வங்கியில் 35 ஆண்டுகள் பணிபுரிந்து ஒய்வு பெற்ற பின், சென்ற ஆண்டு ஜனவரி முதல் 'நினைத்துப்பார்க்கிறேன்' என்ற தலைப்பில் ஒரு வலைப்பதிவை தொடங்கியுள்ளார்.. இதுவரை 46 பதிவுகள் எழுதியிருக்கிறார். தலைப்புக்கேற்றது போலவே நினைவுகளிலிருந்தும், அனுபவங்களிலிருந்தும் வந்த எழுத்துக்களாக பதிவுகள் இருக்கின்றன. 32. சம்பத்: இவரது வலைப்பக்கம் உன்னால் முடியும். தினமணி தமிழ் நாளிதழில் சில கட்டுரைகள் தலையங்கத்தை ஒட்டிய நடுப்பக்க கட்டுரை பகுதியில் வெளியாகியிருக்கிறது. கடந்த சில மாதங்களாக சென்னையிலிருந்து வெளியாகும் சட்டக்கதிர் என்ற மாத (நீதிமன்ற தீர்ப்புக்கள் மற்றும் மனித உரிமை தொடர்பான) இதழில் தொடர்ந்து மத்திய தகவல் ஆணைய தீர்வுகளிலிருந்து சிலவற்றை தமிழாக்கம் செய்து வருகிறார். ஆறு பதிவுகளே எழுதி இருக்கிறார். கவிதைகளும் எழுதுகிறார். 33. ரவி உதயன்: ரவி உதயன் என்றே வலைப்பக்கம் வைத்திருக்கிறார். பழகிக்கிடந்த நதி என்ற கவிதை தொகுப்பு வெளி வந்துள்ளது. உயிர்மை ,ஆனந்த் விகடன் , யுகமாயினி ,கீற்று ,தடாகம் , இதழ்களில் இவரது கவிதைகள் வெளி வருகின்றன. இந்த வருடம்தான் வலைப்பக்கத்திற்குள் அடியெடுத்து வைத்திருக்கிறார். படித்துப் பாருங்கள். 34.இரா.சிந்தன்: பொருளாதாரம், அறிவியல், அரசியல் ஆகிய பிரிவுகளில் மார்க்சிய அடிப்படையிலான கட்டுரைகள் மற்றும் விவாதங்களுக்காக இவரது சிந்தன் தளம் உருவாக்கப்பட்டுள்ளது. இணைய பக்கமாகவும், பேஸ்புக் தளத்தில் விவாதப் பக்கமாகவும் இயங்கி வருகிறது. பக்கத்தை வடிவமைத்து செயல்படுத்தி வருபவர் இரா.சிந்தன். தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் இவரது தளத்தில் கொட்டிக் கிடக்கின்றன. இந்தப் புதிய பதிவர்கள் அனைவருக்கும் நமது வாழ்த்துக்களைச் சொல்வோம். ஆதரவு செய்வோம். |
நண்பர்களே!
தீராத பக்கங்கள் –2 அடுத்த சனிக்கிழமை!
கலைஞரின் இன்றைய வசனங்கள்
இதைப் படிக்கும்போது நாயகன் படத்தில் அந்த சேட் வீட்டின் பொருட்களையெல்லாம் கமலும் அவரைச் சேர்ந்தவர்களும் உடைத்து நொறுக்கும் காட்சி நினைவுக்கு வரவேண்டும்.
எத்தனை தமிழ்ச்சினிமாக்களில் இதுபோன்ற காட்சிகளை நாம் பார்த்திருக்கிறோம். ஏழைகளுடைய குடியிருப்புப் பகுதியை பெரும் பண முதலைகளோ, தொழில் அதிபர்களோ அபகரிக்க திடமிடுவார்கள். பூதாகரமான இயந்திரங்களைக் கொண்டு வந்து சகலத்தையும் தரைமட்டமாக்கத் தயாராவார்கள். உடனே நம் நாயகன் வந்து முன்னிற்பான். தியேட்டரில் விசில் பறக்கும். ஏழைகளுக்காக பக்கம் பக்கமாக வசனம் பேசுவார்கள். கைதட்டல்கள் ஆரவாரிக்கும். தொடர்ந்து சவால்கள், சண்டைக்காட்சிகள் என தூள் பறக்கும். இப்படியான காட்சிகளில் தோன்றியே எம்.ஜி.ஆரிலிருந்து, இன்றைய விஜய் வரைக்கும் தங்களை மாபெரும் மக்கள் நாயகர்களாய் உயர்த்துக் கொண்டு இருந்திருக்கிறார்கள். இந்த நாயகர்களுக்காக ‘பொறுத்தது போதும், பொங்கி எழு’ என செம்மொழியாம் தமிழ்மொழியால் எவ்வளவு வசனங்களை கலைஞர் கருணாநிதி எழுதியிருப்பார்.
ஆனாலும் வேலூர் மாவட்டம், குடியாத்தம் நகர் 36 வார்டில் பல ஆண்டுகளாக, இருப்பிடம் அமைத்து வாழ்ந்து வந்த 26 தலித் குடும்பங்களையும், 10 இஸ்லாமிய குடும்பங்களையும் ரியல் எஸ்டேட்டு செய்யும் மொசைக் செல்வம், பார்த்திபன் என இருவர் அப்புறப்படுத்தியபோது, அந்த ஏழைகளுக்காக யாரும் வரவில்லை. புல்டோசர்கள் அந்த எளிய மக்களின் வீடுகளை தரைமட்டமாக்கி விட்டன. மாவட்ட ஆட்சியரை அணுகி முறையிட்டனர். பலனில்லை.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியே அவர்களுக்கு ஆதரவாக வந்தது. ஜூலை 8ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. 12.8.2010 அன்று ‘குடியேறும் போராட்டம்’ என அறிவித்ததும், சி.பி.எம் எம்.எல்.ஏ லதா அவர்கள் தங்களிடம் இருபது லட்சம் கேட்டு மிரட்டியதாக அந்த இரண்டு ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்களும் மாவட்ட ஆட்சியரிடம் பொய் புகார் அளித்திருக்கின்றனர். பத்திரிகைகளுக்கும் தகவல் தந்திருக்கின்றனர். இந்த பித்தலாட்டங்களையெல்லாம் அம்பலப்படுத்தி சி.பி.எம் சார்பில் நேற்று மறியல் போராட்டம் நடத்தியிருக்கிறார்கள். மாநிலச் செயற்குழு உறுப்பினர் தோழர்.சம்பத், சட்டமன்ற உறுப்பினர் தோழர்.லதா, தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் பொதுச்செயலாளர் தோழர்.சாமுவேல்ராஜ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு இருக்கின்றனர்.
குடியாத்தம் வட்ட தாசில்தார், தாழ்த்தப்பட்டோர் நல தாசில்தார், வருவாய்க் கோட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடந்திருக்கிறது. காலம் காலமாய் வாழ்ந்து வந்தவர்களை அராஜகமாக அப்புறப்படுத்திய மொசைக் செல்வம் மற்றும் நகர்மன்ற உறுப்பினர் பார்த்திபன் மீது நடவடிக்கை எடுப்பது என்றும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிரந்தரமான மாற்று இடம் அளிப்பது என்றும், மாற்று இடம் அளிக்கப்படும் வரை குடியிருப்பதற்கு தற்காலிக இடம் ஏற்பாடு செய்வதென்றும் பேச்சுவார்த்தையில் முடிவாகி, ஒப்பந்தத்திலும் பேச்சுவார்த்தைக்குச் சென்ற தலைவர்கள் கையெழுத்திட்டு இருக்கின்றனர். திடுமென ஒப்பந்த நகலை வருவாய் கோட்டாட்சியர் எடுத்துச் சென்று விட்டு இருக்கிறார். அடுத்த சில நிமிடங்களில் தலைவர்களையும், பாதிக்கப்பட்ட மக்களையும், போராட்டத்தில் கலந்துகொண்டவர்களையும் காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.
இதன் பின்னால் பணபலம், அதிகார பலம், அரசியல் செல்வாக்கு என பெரும் சக்திகள் இருக்கின்றன என்பதையெல்லாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. சாதாரண மக்களுக்கான அரசு இதுவல்ல. கலைஞரின் ஆட்சியில் காவல்துறையின் அடக்குமுறைகள் எல்லை மீறுகின்றன. உத்தபுரம் என்றாலும், டாஸ்மார்க் ஊழியர்கள் என்றாலும், குடியாத்தம் என்றாலும் போராடுபவர்களைப் பார்த்து இந்த அரசு சொல்வது இதுதான்: “பொறுத்தது போதாது, பொங்கி எழாதே”
இதுதான் கலைஞரின் இன்றைய வசனம்.
கறை
“சார், ஒங்க சட்டையில முதுகுப் பக்கம் எதோ கறை போல இருக்கு” பைக்கை நிறுத்திவிட்டுத் திரும்பவும், வாட்ச்மேன் அருகில் வந்து சொன்னான். “அய்யோ, அப்படியா” வேகமாய் கழுத்து வலிக்க திரும்பிப் பார்த்தேன். தெரியவில்லை. இன்னும் கொஞ்சம் கஷ்டப்பட்டுப் பார்த்தேன். தெரியவில்லை.
என் நிலைமையைப் பார்த்து, “இந்தப் பக்கம் திரும்புங்க” என்று அவன் என் முதுகின் நடுப்பகுதிப்பக்கம் பார்த்தான். அவன் முகத்தை பார்த்திருந்தேன். ஒரு ஆராய்ச்சியாளனுக்குரிய கூர்மை அவனிடம் இருந்தது. அந்த நிதானத்தை ரசிக்க முடியவில்லை.
“என்ன கறை?” என்றேன் பொறுக்க முடியாமல்.
“சரியாத் தெரியல... எதோ ஆயில் மாரி இருக்கு. பழுப்பு நிறத்துல”
“ரொம்ப இருக்கா...”
“ஆமா... கொஞ்சம் பெருசாத்தான் இருக்கு.”
திருப்தியில்லாத பதிலாகவும் மேலும் அசிங்கம் ஏற்படுத்தக் கூடியதாகவும் இருந்தது. முதுகில் உறுத்த ஆரம்பித்தது. “எங்க பட்டுச்சுன்னு தெரியலையே..” நானே முனகிக்கொண்டேன். தெரியாது எனத் தெரிந்தும் கழுத்தெல்லாம் வளைத்துத் திரும்பிப் பார்த்துக்கொண்டு இருந்தேன். சட்டையை அங்கே வைத்துக் கழற்றிப் பார்ப்பது நாகரீகமானதாய் இருக்காது.
கறை இருப்பதாய் அவன் காட்டிய முதுகுப் பகுதியில் சாப்பாட்டுப் பையை போட்டு மறைத்து ஸ்டைல் போல் காட்டி, அவமானகரமாய் மாடியேறி என் இருக்கைக்குச் சென்றேன். எல்லோரும் வந்திருந்தனர். பக்கத்து சீட்டுக்காரன் “குட்மார்னிங்” சொல்லிவிட்டு அவன் பாட்டுக்கு வேலை பார்த்துக் கொண்டு இருந்தான். உலகில் எல்லோரும் அந்தக் கணம் எந்தப் பிரச்சினையுமில்லாமல் இருப்பதாகத் தோன்றியது. சாப்பாட்டுப் பையை கீழே வைத்து சட்டென சேரில் நன்றாக சாய்ந்து முதுகுப்பகுதியை மறைத்துக் கொண்டேன். யாருக்கும் தெரிய வாய்ப்பில்லைதான். அப்படி உட்கார்ந்து வேலைபார்ப்பது என்னவோ போலிருந்தது. மானிட்டர் எங்கேயோ இருந்தது.
பைக்கில் அசோக் நகர், பனகல்பார்க், தேனாம்பேட்டை என வந்த வழியெல்லாம் எத்தனை பேர் பார்த்தார்களோ, எத்தனை பேர் சிரித்தார்களோ. இதில் இன்னிங்ஸ் வேறு, ஷூ வேறு. எங்கே, எப்படி இந்தக் கறை பட்டிருக்கும் என முடிவுக்கு வர முடியவில்லை. நிச்சயம் வரும் வழியில் இருக்க முடியாது. எங்கேயும் இறங்கவில்லை. நிற்கவில்லை. துவைப்பதற்கு முன்போ, பின்போதான் பட்டிருக்க வேண்டும். பார்க்காமலா இருந்தாள் வீட்டில். சரி, அயர்ன் பண்ணியவனாவது பார்த்திருக்க மாட்டானா? ராஸ்கல். சொல்லியிருக்கலாம். துட்டு கிடைத்தால் போதும் அவனுக்கு. ஒருவேளை அவனும் சிரித்தாலும் சிரித்திருப்பான். எல்லோரும் சேர்ந்து வஞ்சகம் செய்திருக்கிறார்கள்.
அந்தக் கறை எப்படிப்பட்டது என்றறிய மண்டை காய்ந்தது. பார்த்துவிட்டால் தெரிந்துவிடும். பாத்ரூம் சென்று சட்டையைக் கழற்றிப் பார்க்கலாம். இந்த நீண்ட அறையின் பல இருக்கைகளைத் தாண்டிப் போக வேண்டும். குறைந்தது பத்துப் பேராவது கேட்பார்கள். எல்லோரிடமும் முதுகைக் காண்பிக்க வேண்டும். விளக்கம் சொல்லவும் பெறவும் வேண்டும். புதிதாக வேலைக்குச் சேர்ந்த அந்த இளம்பெண்ணுக்கும் தெரிந்துவிடக்கூடும்.
அருகில் வந்து யார் பேசினாலும் சங்கடம் சூழ்ந்தது. சேரில் நன்றாகச் சாய்ந்துகொண்டு, சாவகாசமாய்ப் பேசுவதாய் காட்டிக்கொண்டாலும், இயல்பாய் இருக்க முடியவில்லை. தெரிந்துகொண்டு வேண்டும் என்றே வந்து தொந்தரவு செய்தவர்களாய்த் தோன்றினார்கள். முதுகைப் பார்த்துவிட துடித்தவர்கள் போலிருந்தார்கள். “வாங்கடா, வாங்க. நல்லாப் பாத்துக்குங்க” என்று ஒரேயடியாகச் சொல்லிவிட்டால் ஒரு பிரச்சினையுமில்லை. கேட்டால், “ஆமா, எதோ கறை பட்டிருக்கு” என சாதாரணமாகச் சொல்லிக் கடந்துவிட முடிந்தால் இந்த சித்திரவதை இல்லை.
மூன்றாவது இருக்கைக்காரன் அருகில் வந்து “டீ குடிக்கப் போவமா” என்றான். மணியைப் பார்த்தேன். பனிரெண்டாக இன்னும் பத்து நிமிசம் போலிருந்தது. வழக்கமாய் அவனோடு வெளியே செல்லும் நேரம் இது. “இல்ல, இன்னிக்கு நீங்க போய்ட்டு வாங்க” என்றேன். நம்பமுடியாமல் என்னைப் பார்த்து “என்ன..” என்றான். இதுதான் இவன்களிடம் பிரச்சினையே. வேண்டாம் என்றால் விடமாட்டான்கள். ஏன், எதுக்கு என்று அடுத்தடுத்துத் துருவிக்கொண்டே இருப்பான்கள். “இல்ல, வயிறு கொஞ்சம் சரியில்ல” என்றேன். “சரி டீ வேண்டாம். சிகரெட் பிடிக்க வரலாமே” என இழுத்தான். “இல்ல... நீங்க போய்ட்டு வாங்க”என்று கொஞ்சம் கடுகடுப்புடன் சொல்லிவிட்டேன். திரும்பித் திரும்பி என்னைப் பார்த்துக்கொண்டே சென்றான். நன்றாக சாய்ந்து உட்கார்ந்து கொண்டேன். நேற்றைக்கு டீக்கும், சிகரெட்டுக்கும் அவன் காசு கொடுத்தான், இன்றைக்கு என் முறை. தட்டிக் கழிக்கிறேன் என நினைப்பானோ எனத் தோன்றி அதுவும் ஒரு சங்கடமாக உருவெடுத்தது. கீழே போய்விட்டு வந்தவுடன் அவனை அழைத்து, “தப்பா நெனைச்சுக்காத. உண்மையிலேயே வயிறு சரியில்ல” என்றேன். அவன் ஒருமாதிரிப் பார்த்து சிரித்துக்கொண்டே “பரவாயில்ல” என்றான். வேறெதோ அவன் நினைப்பதாகப் பட்டது. கூடவே, சின்னச் சினன விஷயத்துக்கெல்லாம் ஏன் கவலைப் படுகிறோம் என்று அலுப்பாகவுமிருந்தது.
மதியம் எல்லோருடனும் சேர்ந்து சாப்பிடப் போகவில்லை. டைனிங் ரூமிற்கு அழைத்தார்கள். சங்கடத்தில் நெளிந்து பதற்றமும் வந்தது. “இல்ல கொஞ்சம் வேல முடியாம இருக்கு. வந்திர்றேன். எனக்காக நீங்க ஒண்ணும் காத்திருக்க வேண்டாம்” என்றேன். ஒன்றிரண்டு பேரைத் தவிர மொத்த இடமும் காலியாய்ப் போனது. எதோ ஒரு நிம்மதி கிடைத்தது போலிருந்தது. பசியேத் தெரியவில்லை. டைனிங் ஹாலில் இருந்து அரட்டைச் சத்தங்கள் கேட்டன.
ஒவ்வொருவராக திரும்பி வந்த பிறகு, நைஸாக சாப்பாட்டுப் பையை அதே மாதிரி தோளுக்குப் பின்னால் போட்டபடி டைனிங் ஹாலுக்குச் சென்று அங்கொரு நாற்காலியில் முதுகை ஒட்டி உட்கார்ந்து சாப்பிடத் துவங்கினேன். திருட்டுத்தனமாய்க் குனிந்து சாதத்தை வேக வேகமாய் அள்ளிப் போட்டேன். கேவலமாகவும், அவஸ்தையாகவும் இருந்தது. அதே மாதிரி பையால் மறைத்துக்கொண்டு திரும்பவும் இருக்கையில் அமர்ந்து வேலை பார்க்க ஆரம்பித்தேன்.
வீட்டுக்குப் போனதும் அவளை திட்டித் தீர்க்க வேண்டும் என்கிற வேகம் மட்டும் கூடிக்கொண்டே இருந்தது. “இன்னிக்கு என்ன சார், சீட்டை விட்டே எந்திருக்க மாடேங்கிறீங்க” என பக்கத்து இருக்கைக்காரன் கேட்டான். லேசாய் சிரித்து, வேலையில் மும்முரமாய் இருப்பதாய் காட்டிக்கொண்டேன். இந்த சங்கடங்கள் எல்லாம் அவளுக்குத் தெரிந்திருந்தால்தானே. எரிச்சலோடும், கோபத்தோடும் புகைந்திருந்தேன்.
ஏழு மணிக்கு மேல், எல்லோரும் சென்ற பிறகு அதே மாதிரி பையை பின்னால் போட்டுக்கொண்டு அலுவலகத்தை விட்டு வெளியேறினேன். இருட்டியிருந்தது. இனி பையை வைத்து மெனக்கெட்டு மறைக்க வேண்டியதில்லை. வாசலில் காற்று அள்ளி வீசியது. பைக்கில் உட்கார்ந்தவுடன் ‘அப்பாடா’ என்றிருந்தது. பனகல் பார்க்கைத் தாண்டவும் டாஸ் மார்க மறித்தது. குவார்ட்டரும், தம்ளரும், தண்ணீர் பாக்கெட்டுகளும் வாங்கிக்கொண்டு பெரும் மனித இரைச்சல்களுக்கு நடுவில் ஒரு இடம் கிடைக்காதா எனத் தேடியபோது முதுகை சுத்தமாய் மறந்து விட்டிருந்தேன்.
இரண்டு வாரம் கழித்து இன்னொரு காலையில், பைக்கை நிறுத்திவிட்டு, மடிப்புக்கலையாமல் அலுவலகம் நுழையப் போனேன். “சார், சட்டையில் எதோ கறை” என் பின்னாலிருந்து அதே வாட்ச்மேன் சொன்னான். “அய்யய்யோ” என அவசரமாய் பார்த்தேன். அதே சட்டை.
வம்பரங்கம் - 3
பாராளுமன்ற கேண்டீனுக்கு செல்லும் வாய்ப்பு ஒருமுறை கிடைத்தது. பதினைந்து வருடங்களுக்கு முன்பாக இருக்கலாம். டீயும் வடையும் அருமையாகவும், உயர் தரமாகவும் இருந்தது. வடை என்றால், பாதி தோசை அளவுக்கு.
“இந்த டீக்கும், வடைக்கும் விலை தெரியுமா” என எங்கள் அகில இந்திய சங்கத்தின் தலைவராகவும், பாராளுமன்ற உறுப்பினராகவும் இருந்த தோழர் அசிஸ்சென் கேட்டார். அந்தத் தொனியேச் சொல்லியது, மிகக் குறைந்த விலையாக இருக்கும் என்று.
ஆர்வமாக அவரைப் பார்த்தேன். சொன்னார். இரண்டின் விலையுமே ஒரு ருபாயின் மதிப்பு கூட இல்லை. சில பைசாக்கள்தான். சிரித்தேன். “ரொம்ப அநியாயமில்ல” என ஹோவென்று சிரித்தார். “மக்களுக்காக, மக்களால், மக்களே” என்றேன். அவர் மேலும் பலமாய் சிரித்தார்.
இன்று ‘இந்தியா டூடே’ படித்த பிறகுதான் தெரிகிறது. அந்த விலைகள் ஒன்றும் பெரிதாய் இத்தனை வருடங்களில் கூடவில்லை என்பது. சிரிப்பு வரவில்லை.
- டீ - ரூ.1
- சூப் - ரூ 5.50
- பருப்பு - ரூ.1.50
- சப்பாத்தி - ரூ.1.00
- சாதம் - ரூ.2.00
- தோசை - ரூ.4.00
- வெஜ் புலாவ் - ரூ.8.00
- தக்காளி சாதம் - ரூ.7.00
- மீன் குழம்பு - ரூ.13.00
- கோழி - ரூ.24.50
இப்படி நீள்கிறது அந்தப் பட்டியல். கடந்த 10 ஆண்டுகளாக இந்த விலைகளில் எந்த மாற்றமுமில்லையாம். பாராளுமன்ற வளாகத்திற்குள் விலைவாசி உயர்வுக்கு தடை செய்யப்பட்டு இருக்கிறது போலும்.
அந்தக் கட்டிடத்திற்குள் இருந்துகொண்டு இவர்கள் விலைவாசி உயர்வு பற்றி என்ன சிந்திப்பார்கள்? என்ன விவாதிப்பார்கள்?