வீடென்பது...

அலுவலகம் முடிந்து, வீடு திரும்பி கதவைத் திறந்தான். புழுக்கத்தின் வாசம் முகத்திலடித்தது. காலையில் கிளம்பும்போது எப்படி இருந்ததோ, அப்படியே இருந்தது எல்லாம். நாற்காலிகள், மேஜை, டி.வி என ஆரம்பித்து, பார்த்த அனைத்துப் பொருட்களிலும் பெரும் மௌனம் அடைந்து இருந்தது. சுவர்க்கடிகாரத்தின் முள்ளின் அசைவும் தனித்து கேட்டது.

உள்ளறைக்கு நடந்தான். தரையில் யாருமற்ற தனிமையை பாதங்கள் ஸ்பரிசித்தன. மின்விசிறியைப் போட்டான். காற்றோடு அதன் சிறு இரைச்சலையும் உணர முடிந்தது. மெல்ல திரைச்சீலை அலைக்கழியத் தொடங்கியது. அதன் சுருள்களில் பாம்பு ஒன்று நெளிந்து கொண்டு இருந்தது.

ஆதாமாகி நின்றான் அவன்.

செல்போன் ஒலித்தது. எடுத்தான். அவளின் குரல் கேட்டது. “என்னங்க,  எப்படியிருக்கீங்க? நேரத்துக்குச் சாப்பிடுங்க. நேரத்துக்கு தூங்குங்க. தினமும் காலையில் பால்காரனை வரச்சொல்லி இருக்கேன். காபி போட்டு குடிங்க.....”  பேசிக்கொண்டே இருந்தாள்.

திரைச்சீலைக்குள்ளிருந்து குழந்தைகள் தோன்றி அங்குமிங்கும் ஒட ஆரம்பித்தன. எப்போதும் போல் ஆனது வீடு.

“இன்னும் ஒரு வாரந்தானே.... வந்துர்றேன்.” அவள் சொல்லி முடித்தாள். போன் அடங்கியது.

ஃபிரிஜ்ஜைத் திறந்து ஒரு ஆப்பிள் பழம் எடுத்துக் கடித்தான் அவன்.

கருத்துகள்

10 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
 1. வாவ்.. ரொம்ப நல்லா இருக்குங்க மாதவராஜ் சார்.
  என்னைப் பொறுத்தமட்டில் மனிதவாழ்வின் அடிநாதம் எப்பொழுதும் போல மாறாமல் இருப்பதை நீங்கள் குறிக்கிறீர்கள். ஒரு சராசரி வாழ்வு எங்கிருந்து பிறந்ததோ அது தொடர்கிறது!! சிற்சில மாற்றங்களொடு.

  அன்புடன்
  ஆதவா.

  பதிலளிநீக்கு
 2. அருமையாய் வந்திருக்கு ஆதிமனிதா! :-)

  ஆதவாவின் பின்னூட்டம் right reflection! இல்லையா?

  பதிலளிநீக்கு
 3. பாம்பு - ஆதாம் - ஆப்பிள்

  நன்றாக இருக்கிறது. வீட்டின் தனிமையை அற்புதமான விவரி்ப்பில் கொண்டு வந்திருக்கிறீர்கள். நன்றி.

  பதிலளிநீக்கு
 4. சார் ரொம்ப நல்லாயிருக்கு படிக்கும்போது ஏதோ ஒரு உணர்வு ஏற்படுகிறது!

  பதிலளிநீக்கு
 5. ஆதவா!
  வருகைக்கும், புரிதலுக்கும் நன்றி.

  பா.ரா!
  மக்கா, எல்லோருமே அவ்வப்போது ஆதிமனிதர்களாகி மீளத்தானே செய்கிறோம்.

  சுரேஷ் கண்ணன்!
  உண்மைதான். தனிமை,லௌகீக பிரக்ஞைகளைலிருந்து விலகச்செய்கிறது சிலகணங்களாவது. இல்லையா?

  பதிலளிநீக்கு
 6. எஸ்.கே!
  அப்படி ஏற்பட்ட ஒரு உணர்வைத்தான் சொல்ல முயன்றிருக்கிறேன்.

  குரு!
  நன்றி.

  தமிழ்ச்செல்வன்!
  உண்மைதான் இன்னும் தெளிவு வேண்டும் எனத் தோன்றுகிறது எனக்கும். பிரக்ஞை குறித்து பேச வந்ததை இன்னும் புரியும்படிச் சொல்லி இருக்க வேண்டும். புத்தகமாக வரும்போது இதனைச் சரி செய்து விடுவேன். மிக்க நன்றி தோழர்.

  பதிலளிநீக்கு
 7. படிப்பதற்கு அருமையாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 8. இல்லத்துணை இல்லாத வீட்டையும்

  அவளின் குரல் கேட்டது. “என்னங்க, எப்படியிருக்கீங்க? நேரத்துக்குச் சாப்பிடுங்க. நேரத்துக்கு தூங்குங்க. தினமும் காலையில் பால்காரனை வரச்சொல்லி இருக்கேன். காபி போட்டு குடிங்க.....” பேசிக்கொண்டே இருந்தாள்.

  திரைச்சீலைக்குள்ளிருந்து குழந்தைகள் தோன்றி அங்குமிங்கும் ஒட ஆரம்பித்தன. எப்போதும் போல் ஆனது வீடு.

  அந்தக்குரலே குடும்பத்தை கொண்டுவரும் அப்பொழுது அந்த இருவரின் காதலின் ஆழத்தை புரிய வைக்கின்றது மாது !

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!