டிஜிட்டல் போட்டோக்காரனின் ஆல்பம் - 1

digital artசார், இந்த சட்டை நல்லாயில்ல. வேறொரு சட்டை போட்டுருங்க” போட்டோ எடுத்து முடித்தவுடன் அந்த இளைஞன் சொல்லி இருக்கிறான்.

“போட்டுரலாம்” என்றிருக்கிறான் கார்த்தி.

“சார், டை கட்டிரலாமே?”

“ம். கட்டிருவோம்.”

“அப்புறம்... ஷேவ் பண்ணாம வந்துட்டேன். கொஞ்சம் சரி பண்ணிருங்க” என்றிருக்கிறான் அந்த இளைஞன் மேவாயைத் தடவியபடி வெகு சாதாரணமாக.

“அதெல்லாம் முடியாது தம்பி”

“ஏன் சார்?”

“வைக்கலாம். எடுக்க முடியாது.”

வந்தவன் புரியாதவனாய் கொஞ்ச நேரம் நின்று பார்த்துவிட்டு, “கம்ப்யூட்டர்லதான. என்ன வேணாம்னாலும் பண்ணலாமே”

“நம்ம ஸ்டூடியோவுல இவவளவுதான் முடியும் தம்பி..”

அங்கேயே நின்றிருந்துவிட்டு, “இத நம்பி நா ஷேவ் பண்ணாம வந்துட்டேனே.” என்றிருக்கிறான் அருகே இருந்த கம்ப்யூட்டரைப் பார்த்தப்டியே. அப்புறம் சொல்லாமல் கொள்ளாமல் போய்விட்டானாம்.

ன்னொரு நாள், இன்னொருவன் வந்திருக்கிறான். கிராமத்துப் பையன். நவீன உடை தரித்துத்தான் இருந்திருக்கிறான். வெளியே நின்று ஸ்டூடியோ போர்டை உற்றுப் பார்த்துவிட்டுத்தான் நுழைந்திருக்கிறான்.

“என்ன தம்பி” அழைத்திருக்கிறான் கார்த்தி.

“போட்டோ எடுக்கணும் சார்”

முடி கலைந்திருந்திருக்கிறது அவனுக்கு. “உள்ளே போய் கண்ணாடியில் முகம் பார்த்துக் கொள்ளுங்கள்” என்று சொல்லி கம்ப்யூட்டரில் கவனம் செலுத்தி இருக்கிறான் கார்த்தி.

உள்ளே போய் சில நிமிடங்கள் கழித்து வந்தவன் “எப்ப சார் போட்டோ கிடைக்கும்” கேட்டிருக்கிறான்.

“அதுக்குள்ள எப்படி போட்டோ கிடைக்கும் தம்பி?” புரியாமல் அவனைப் பார்த்திருக்கிறான் கார்த்தி.

“நீங்கதான சார் கண்ணாடியில் முகம் பார்க்கச் சொன்னீர்கள்.....” என இழுத்திருக்கிறான்.

“இல்ல தம்பி, காமிராவைப் பார்த்தால்தான் போட்டோ வரும்” என சிரிக்காமல் சொல்லி, அவனை திரைக்கு முன்னால் உட்காரவைத்து காமிராவை கையில் எடுத்திருக்கிறான் கார்த்தி. குழம்பியவனாய் அந்தப் பையன் உட்கார்ந்திருக்கிறான். பில் போடும்போது, “கண்ணாடி முன்னால நின்னாப் போதும், போட்டோ வந்துரும்னு யார் சொன்னாங்க தம்பி?” எனக் கேட்டிருக்கிறான்.

அவனோ பதிலேதும் சொல்லாமல், வேகமாக பில்லை வாங்கிக்கொண்டு வெளியேறி இருக்கிறான்.

ப்படி ஸ்டூடியோ அனுபவங்கள் நிரம்பிக் கிடக்கும் டிஜிட்டல் போட்டோக்காரன் கார்த்தி. பார்த்தவுடன் உற்சாகம் தரும் மனிதன். ஆரம்பத்தில் ஒரு ஸ்டூடியோவில் டீ வாங்கும் பையானாக சேர்ந்து, அப்புறம் பில் பார்த்து போட்டோக்களை கொடுக்கிறவனாகி, டார்க் ரூமில் கழுவப் படித்து, அவனே காமிராவை கையாண்டு போட்டோ எடுக்க ஆரம்பித்து, சின்னதாய் ஒரு ஸ்டூடியோ வைத்துத் தொடர்ந்த அவன் வாழ்வு டிஜிட்டல் உபகரணங்களோடு வண்ணமயமாகி இருக்கிறது. ஆனாலும், “கறுப்பு வெள்ளைக்கு ஈடான கலர் இல்ல“ என்றுதான் சொல்கிறான். அப்படிச் சொல்லும்போது அவன் முகத்திலிருந்து பல வண்ணங்கள் சிந்தத் தொடங்கும்.

சுற்றிலும் கிராமங்கள், பட்டிகள் சூழ்ந்த சாத்தூர் போன்ற ஒரு சின்னஞ்சிறு நகரத்தில் டிஜிட்டல் விஷயங்கள் எவ்வளவு பிடிபட்டிருக்கிறதோ, அதே அளவுக்கு பிடிபடாமலும் இருக்கின்றன. ‘அப்படியாம்’, ‘இப்படியாம்’ என கேள்விப்படுகிற விஷயங்கள், படிக்கிற செய்திகள், பார்க்கிற சினிமாக்கள் சொல்லும் தகவல்கள் எல்லாம் சாதாரண மனிதர்களுக்குள் மேலும் கற்பனைகளை உருவாக்கி விடுகின்றன. இங்கே எல்லாம் வெளிச்சத்தில் எக்ஸ்போஸ் செய்யப்படுகின்றன.

இந்தக் காலமாற்றங்களுக்குள் பயணம் செய்துகொண்டு இருக்கும் கார்த்தி சிரிக்கிறான். அவனது இன்னொரு அனுபவத்தை இங்கு சொல்ல வேண்டும். ‘இன்னொரு’ என்பதே தவறான பதம்தான். ஏனென்றால் இதுபோல நிறைய பார்த்து விட்டான் கார்த்தி.

அப்பாவோ அல்லது அம்மாவோ தங்கள் பெண்ணை ஸ்டூடியோவுக்கு அழைத்து வந்து போட்டோ எடுக்கச் சொல்கிறார்கள் என்றவுடன் விஷயம் தெரிந்துவிடும். போட்டோ எடுத்து முடித்தவுடன், அந்த அப்பாவோ, அம்மாவோ மெல்ல குனிந்து, “சார், கொஞ்சம் பெண்ணை கலராய் காண்பிங்க” என்பார்கள். சில கணங்கள் இடைவெளி விட்டுத் தயங்கி “கழுத்துல கூட கொஞ்சம் நகை போட்டுருங்க சார்” என்பார்கள். எல்லாவற்றுக்கும் மானிட்டரைப் பார்த்துக்கொண்டே “சரி, சரி” என்கிறான் கார்த்தி.

ஒருமுறை இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த இன்னொரு பெரியவர் சொன்னாராம். “இனும பொண்ணோட போட்டோவ எல்லாம் பாத்து கல்யாணம் செய்ய முடியாது போலுக்கே.”

கார்த்தி பட்டென்று சொல்லியிருக்கிறான் “மாப்பிள்ளையோட போட்டோவைப் பார்த்தும் கல்யாணம் செய்ய முடியாது” என்று.

தையெல்லாம் நினைவுகூர்ந்தபடி “இப்போது, இங்கு எதுவுமே நிஜமில்லை” என்றான் அந்த டிஜிட்டல் போட்டோக்காரன்.

(அவ்வப்போது ஆல்பம் தொடரும்)

கருத்துகள்

12 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. “கறுப்பு வெள்ளைக்கு ஈடான கலர் இல்ல“

    - உண்மை.

    நன்றாக இருக்கிறது. தொடருங்கள்.

    பதிலளிநீக்கு
  2. ஸ்டுடியோ காரர்களுக்கு தான் எத்தனை வசதி, வித வித அனுபவம், சூழ்நிலை சார்ந்த மக்களை சந்திக்கும் வாய்ப்பு.

    அது சரி, இன்னமுமா புகைப்படம் பார்த்து மட்டுமே கல்யாணப் பேச்சு ஆரம்பிக்கின்றன.

    பதிலளிநீக்கு
  3. //இப்போது, இங்கு எதுவுமே நிஜமில்லை// வலிக்கும் உண்மை

    பதிலளிநீக்கு
  4. அட்டகாசமான பதிவு!

    கார்த்தி அவர்களின் திறமையை முதலில் பார்த்து வியந்து ரசித்தது ப்ரீதுக்குட்டியை இயல்பாக அவள் தலை சாய்த்துப் பார்க்கும் போது எடுத்திருந்த அந்த ஃபோட்டோ தான். அதைப் பார்த்துத் தான் ஜோ எங்கள் திருமணப் படங்களை அவரே எடுக்க வேண்டும் என்று தீர்மானித்தது.

    இத்த‌னை சுவாரசியமான அனுப‌வ‌ங்க‌ளை வேறு வைத்திருக்கிறாரே!

    //“அப்புறம்... ஷேவ் பண்ணாம வந்துட்டேன். கொஞ்சம் சரி பண்ணிருங்க” என்றிருக்கிறான் அந்த இளைஞன் மேவாயைத் தடவியபடி வெகு சாதாரணமாக. //
    :))))))

    //பெண்ணை கலராய் காண்பிங்க” என்பார்கள். சில கணங்கள் இடைவெளி விட்டுத் தயங்கி “கழுத்துல கூட கொஞ்சம் நகை போட்டுருங்க சார்” என்பார்கள்//

    ?!
    :((((

    ஆல்ப‌ம் தொட‌ர‌ட்டும்!

    பதிலளிநீக்கு
  5. “கறுப்பு வெள்ளைக்கு ஈடான கலர் இல்ல“ என்றுதான் சொல்கிறான். அப்படிச் சொல்லும்போது அவன் முகத்திலிருந்து பல வண்ணங்கள் சிந்தத் தொடங்கும்



    ENNAIYUM ARIYAMAL PUNNAGATHTHU

    KONDEN.

    ARUMAIYAANA EZHUTHTHU NADAI

    UNGALUDAIYATHU.

    THODARUNGAL.VERY NICE.

    பதிலளிநீக்கு
  6. ஆல்பம் அசத்தல். தொடருங்கள் அண்ணா.

    சாத்தூர் வரும்போது கார்த்தி சாரையும் அவசியம் சந்திக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  7. கார்த்தி அவர்கள் என்னையும் படம் எடுத்துள்ளார்!!!
    அவர் ஒரு சிறந்த ஒளிப்பதிப்பாளர்!!!! அனைவரிடமும் நன்றாக பழகுவார்!! மிகவும் இனிமையானவர்!!
    அவர் சாத்தூரில் இல்லாமல், சென்னையில் இருந்து இருந்தால் கண்டிப்பாக அவர் உலகத்திற்கு
    தெரிந்து இருப்பார்.அவர்தான் உங்கள் ஆவணப் படத்திற்கு ஒளிப்பதிப்பாளர் என்பதை ஏன் கூறவில்லை?
    அவருக்கு என் வாழ்த்துக்கள்!!!

    பதிலளிநீக்கு
  8. கார்திக் அன்னன் அனுபவதிர்கு இதை போல் அதிக சம்பவஙல் இருக்கும்.
    அதையும் எலுதுஙல்.

    பதிலளிநீக்கு
  9. சுவாரசியம்.

    ரசிக்கவும் சிந்திக்கவும் வைத்தது.

    தொடருங்கள் தோழரே.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!