மாயக்கம்பளத்தில் கொஞ்சம் பயணம்

01

கார்த்திகைப்பாண்டியன், மாதவராஜ், பாலு, நேசமித்ரன், பாலா,

கோணங்கி

நேற்று இரவில் இன்னேரம் பதிவர்கள் நேசமித்ரன், கார்த்திகைப் பாண்டியன், பாலா, காமராஜ், நான், எழுத்தாளர் கோணங்கி, தம்பிகள் பிரியா கார்த்தி, பாலு எல்லோரும் எங்கள் வீட்டு மொட்டை மாடியில் உட்கார்ந்திருந்தோம்.  இசையும், மொழியும், சிற்பங்களும், கவிதைகளும், கதைகளும், தொன்மக்குறிப்புகளும் என விரிந்த பிரதேசங்களில் சொற்கள் சிந்திக்கொண்டு இருந்தன. மெல்லிய திரை போல படர்ந்திருந்த மேகங்களுக்குள்ளிருந்து மங்கிய ஓளி திரண்டு அசைந்து போய்க்கொண்டு இருந்தது.

02

உரையாடல்களாலான மிதக்கும் வெளி இப்படி வாய்க்கும்போது அனுபவிக்க முடிந்தாலும், கோணங்கியின் எழுத்துக்கள் காட்சிகளின் வழியே புலப்படுவதில்லை எனக்கு. மதினிமார்கள் கதை, கொல்லனின் ஆறு பெண்மக்கள், கைத்தடி கேட்ட நூறு கேள்விகள் தாண்டி என்னால் செல்ல முடிந்ததில்லை. திருகிப் பிணைந்து, பிளந்து கட்டப்பட்ட வார்த்தைகள் சுவர்கள் போல முன்னெழும்பி மறித்திருக்கின்றன. அதை அவரிடமே சொல்லியிருக்கிறேன். நானும், காமராஜும், தனுஷ்கோடி ராமசாமியும் வைப்பாற்றங்கரையில் உட்கார்ந்து சில இரவுகள் கோணங்கியோடும், எஸ்.ராமகிருஷ்ணனோடும் இருபது வருடங்களுக்கு முன்னால் பெரும் வாக்குவாதம் செய்திருக்கிறோம். இலக்கியம் அறியாதவர்கள், வாசிப்பனுபவம் பெறாதவர்கள் என மிக எளிதாக நகைத்தபடியே அப்போது அவர்கள் இருவரும் சென்றிருக்கின்றனர். இருந்தாலும் பரஸ்பரம் நட்பும், பிரியமும் சிதைந்ததில்லை. கதை சொல்கிறவனுக்கென்று தனி எழுத்துக்களும், தனி மொழியும் இருப்பதை பின்னால் புரிந்துகொள்ள நேர்ந்தபோது, நெருடல்கள் தீர்ந்து போயின. புரிவது, புரியாதது என்று சிக்கிக் கொள்ளாமல் புரிய முயற்சிப்பது அல்லது மெனக்கெடாமல் இருப்பது என்று எளிதாக்கிக்கொள்ள பக்குவம் வாய்த்தது. பார்க்கும்போது, பேசும்போது கோணங்கி என்னும் கதைசொல்லியை  நெருக்கமாய் உணரமுடிந்தவனாகவே இருக்கிறேன்.

இலக்கியத்தின் தற்சமய நிகழ்வுகள், தன்னை மட்டும் முன்னிறுத்தும் போக்கு, தனிப்பட்ட சர்ச்சைகள் போன்றவை இடையிடையே, அதன் போக்கில் வந்து நின்ற போதெல்லாம் யாராவது அரவமில்லாமல் அவைகளை கடந்து செல்ல முன்வந்து கொண்டேயிருந்தார்கள். உரையாடல்களை நீர்த்துப் போக யாரும் விரும்பவில்லை.

புதிய, இளமையான எழுத்துக்களை அறிமுகப்படுத்த வேண்டும், அது தேவை என கோணங்கி சொன்னார். இப்போது எழுத வருகிறவர்களின் பெரும்பாலானோர் எழுத்துக்களில் கழிவிரக்கம், காத்திருப்பு, விரக்தி, எள்ளல், கடந்தவைகளின் மீதான சுகம் என ஒருசில மனப்பிரதிகளே குவிந்து இருக்கின்றன என நேசமித்ரன் சொன்னார். எப்போதும் இல்லாத அளவுக்கு விளிம்பு நிலை மனிதர்கள் நெருக்கடிக்குள்ளாக்கப்படுவது, இன அழித்தொழிப்பு, மொழிகளை கழுவேற்றுவது, மலைவாழ் மக்கள் வாழ்வு கேள்விக்குறியாக்கப்படுவது என அதிகாரத்தின் கோரப்பற்கள் தீண்டப்படும் நிகழ்வுகள் குறித்து படைப்புலகம் என்ன பதிவு செய்திருக்கிறது என்னும் என் கேள்விக்கு பதில் இல்லாத மௌனம் சில வினாடிகளே இருந்தாலும் சங்கடமாக எல்லோரும் உணர்ந்த தருணமாக தெரிந்தது. கோணங்கியே அதற்கு கொஞ்சம் இடைவெளி விட்டு பதில் சொன்னார். இலக்கியத்தில் எதுவும் உடனடியாக நிக்ழந்துவிடாது. அப்படி நிதானம் தவறி, வேகம் கொண்டால் அது படைப்பு ஆகாது என்றார். நேசமித்ரனுக்கும் அதில் உடன்பாடு இருந்தது. எனக்கு இல்லை. லத்தீன் அமெரிக்க இலக்கியத்தை கொஞ்ச காலம் முந்தி வரைக்கும் உலகமே அண்ணாந்து பார்த்ததே என்றேன். இப்போது இல்லை என்றார் கோணங்கி. அவர் மார்க்கஸை விட்டு, ரோசாவைப் பற்றி பேசிக்கொண்டு இருந்ததைக் குறிப்பிட வேண்டும்.

11 நேசமிதரன் கோணங்கியின் புள்ளியிலிருந்து பலசமயம் பேசிக்கொண்டு இருந்தார். நானும், கார்த்திகைப் பாண்டியனும் கிட்டத்தட்ட ஒருமனநிலையிலிருந்து பேசியதாக எனக்குத் தெரிந்தது. இங்கு கார்த்திகைப் பாண்டியனைப் பற்றி சொல்ல வேண்டும். முக்கியமான இலக்கிய நிகழ்வுகளைத் தெரிந்திருக்கிறார். குறிப்படத்தக்க அளவுக்கு வாசிப்பும் கொண்டிருக்கிறார். அமைதியாகவே இருக்கிறார். ஆச்சரியமாக இருந்தது என்னவென்றால், அவரது பதிவுகளில் அவர் இன்னும் தன் உலகத்தை முழுமையாக வெளிப்படுத்தாமல் இருக்கிறார் என்பது.

 

nesamithran‘தஸ்தாவஸ்கியின் எழுத்துக்கள் எப்போதும் நிற்கும், டால்ஸ்டாய் எழுத்துக்கள் அத்தனை வீரியமும், நிலைபெறும் தன்மையும் கொண்டவையல்ல’ என்னும் நேசமித்ரனின் உரையாடலில் நான் கொஞ்சம் வேகம் கொண்டே குறுக்கிட்டேன் எனச் சொல்ல வெண்டும். மனிதன் தன்னைத் தானே விசாரித்துக் கொள்வதும், தனது மனசாட்சியை முதன்மைப் படுத்துவதும் டால்ஸ்டாயின் எழுத்துக்களில்தான் மிகத் தெளிவாகத் தெரிவதாக எனக்குப் பட்டதை முன்வைத்தேன். அது, மனித சமூகம் உள்ளவரைக்கும் உரையாடும் திறன் கொண்டது எனச் சொன்னேன். கோணங்கி இதனோடு ஓரளவு உடன்பட்டார்.

நேசமித்ரன் நிறைய பேசுகிறார். அன்பைக் கொட்டுகிறார். தன்னை, தன் ரசனைகளை, தன் சிந்தனைகளை உடனடியாக அதன் அடர்த்தியோடு பகிர்ந்துகொள்ளமுடியாத ஒரு இடத்தில் அவர் இருக்கிறார் என்பதை அறிய முடிந்தால், அவரது உரையாடல்களின் தாகம் அடைபடும். ‘புத்தகங்களால், வாசிப்புகளால் என் தனிமையை நான் கொல்கிறேன்’ என்னும் அவரது வார்த்தைகள் இன்னும் இரைச்சல் மிக்க அலைகளாய் தரை நோக்கி வருகின்றன.

10 04 தான் எழுதிக்கொண்டு இருக்கும் நாவல் பற்றிய கோணங்கியின் குறிப்புகள் காலத்தை சுழற்றியபடி இருந்தன. பசி வாட்டிய வீதிகளின் வழியே தஸ்தாவஸ்கியும், இராமலிங்க வள்ளலாரும் ஒன்றுபோல் பயணம் செய்திருப்பதை கோணங்கியின் குரல், விரல்களின் வழியே தடம்பார்த்துக் கொண்டு இருந்தது. கடலின் பெருமூச்சு, வண்டுகளின் இசைக்குறிப்பு, ராவணனின் கீர்த்தி எல்லாமும் தோடிக்குள் இருக்கின்றன என மேலும் அவர் சொல்லிக்கொண்டு இருந்ததை நேசமித்ரன் ஆமோதித்துக் கொண்டிருந்தார். கோணங்கியின் ‘பாழி’யை வாசித்ததில் கிடைத்த ஒளி போன்ற அனுபவத்தை நேசமித்ரன் முகத்தில் காட்டியபடி பகிர்ந்துகொண்டு இருந்தார். கோனார்க், பூம்புகார், டெல்லி சுல்தான்கள் அரண்மனை, நைஜீரியக் கடற்கரையென அவர் அலைந்து திரிந்து கொண்டு இருந்தார். இருளில் தூரத்துப் புள்ளிகளாய் கிடந்த இருக்கன்குடி ஊரும், சின்னக் காற்றும், சுவீடன் தேசத்து அப்சொலுட் பியர்ஸும் வார்த்தைகளுக்குள் ஊடுருவி அந்த நேரத்தை வசியம் செய்து கொண்டு இருந்தன.

மொட்டைமாடி, ஒரு மாயக்கம்பளமாய் விரிந்து எங்களை பரவசம் தழுவ அழைத்துச் சென்று கொண்டிருந்தது. நாங்கள் நட்சத்திரவாசிகளானோம். முதலில் பாலா பிரிய மனமில்லாமல் விடைபெற்றார் . இறங்கிக்கொள்கிறேன் என்றான் காமராஜ். கார்த்திகைப் பாண்டியன், பிரியா கார்த்தியின் வாகனத்தில் சென்றார். நான், கோணங்கி, நேசமித்ரன் என ஒருக் கட்டத்தில்  மிஞ்சினோம். பிறகு கோணங்கி தூங்க, நேசமிதரனும் நானும் இயக்குனர் மகேந்திரன் குறித்து பேசிக்கொண்டு இருந்தோம். பிறகு அவரும் தூக்கம் வருவதாகச் சொல்ல, நான் பிசாசு போல இருளின் வெளியில் நின்றேன். விடிகாலை மூன்றரை மணிக்கு எதோ ஒரு பறவையின் கரைதலைக் கேட்டபடி, தனித்திருந்த தெருவை பார்த்துவிட்டு வீட்டிற்குள் சென்று உடலைக் கிடத்தினேன்.

 

காலையில் கோணங்கியையும், நேசமித்ரனையும், அம்மு தந்த டீயோடு எழுப்பினேன். விட்ட இடத்தில் தொடர்ந்தோம். “உங்கள் இடம் இதுவல்ல” என்றார்கள். சிரித்துக்கொண்டேன். கோணங்கியோடு கோவில்பட்டி செல்வதாய் நேசமித்ரன் சொன்னார். அனுப்பி வைத்துவிட்டு, மொட்டை மாடி சென்றேன். தனியாய் ஒரு காகம் கரைந்து கொண்டிருந்தது. வெறுமை கொண்ட அந்தப் பகலின் வெளிச்சத்தில்  என்னைப் பார்த்ததும் பறந்தது.

(புகைப்படங்கள் : பிரியா கார்த்தி )

கருத்துகள்

19 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. உங்களின் அற்புதமான பொழுதுகளை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. புகைப்படங்கள் அருமை :)

    பதிலளிநீக்கு
  2. ரம்மியமான இரவில் அருமையான மொட்டை மாடி சந்திப்பு.

    சந்திப்பை பகிர்ந்து கொண்டது பாராட்டுக்குறியது.

    பதிலளிநீக்கு
  3. மாயக்கம்பளத்தில் நானும் பயணித்திருக்கலாம் என்று கொஞ்சம் பொறாமை வந்தது.
    பதிவர்/எழுத்தாளர்கள் சந்திப்பை ரசனையோடு எழுதியிருக்கிறீர்கள்.

    அப்சொலுட் என்ற வார்த்தை எங்கேயோ தென்பட்டது? ஹ்ம்ம்ம், நல்லா இருங்க! ;-)

    பதிலளிநீக்கு
  4. அருமை, பகிர்ந்தமைக்கு நன்றிகள். அணைத்து பதிவர்களுக்கும் நன்றி.

    எனக்கும் செப்டம்பர்/ அக்டோபரில் உங்களை, காமராஜ் ஐ, கோணங்கியை சந்திக்கும் ஆசை உள்ளது.

    பதிலளிநீக்கு
  5. புகைப்படங்கள் எடுத்தது பிரியா கார்த்தி அண்ணனா சார் :)

    பதிலளிநீக்கு
  6. ஒரு புகைப்படத்தில்,ஒரு மனிதனுடைய உள்ளும் புறமும் வெளிப்படுமா? ஆம்! என்கிறது கோணங்கி யின் படம்.1979ம் ஆண்டு வாக்கில் மதுரையில் த.மு.எ.ச நாடகப் பட்டறை நடத்தியது.கோவில்பட்டி நண்பர்கள் மகாபாரதத்திலிருந்து ஒரு சிறு துண்டை எடுத்து நடித்தார்கள்.கோணங்கி அர்ஜுனனாகவோ,கர்ணனாகவோ நடித்தார்.அந்தப் பால்வடியும் ராஜகளை அப்படியே புகைப் படத்தில் பதிவாகியுள்ளது.
    படத்தில் தான் என்ன ஆழம்! என்ன செரிவு!ஒளியும் என்னமாக விளையாடி இருக்கிறது.பிரியா கார்த்திக்கை பாராட்ட என்னிடம் வார்த்தைகளில்லை.....காஸ்யபன்

    பதிலளிநீக்கு
  7. சந்திப்பின் தாக்கம் உங்கள் எழுத்தில் தெரிகிறது.......

    பதிலளிநீக்கு
  8. //நேசமிதரன் கோணங்கியின் புள்ளியிலிருந்து பலசமயம் பேசிக்கொண்டு இருந்தார்.//
    இருவர் எழுத்துக்களும் அதேபோல்தான் என்று நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  9. பதிவை வாசிக்கையில் பிரமிப்பாக இருந்தது மாதவ் அண்ணா. இனிமையான இலக்கிய இரவைப் பகிர்ந்தமைக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  10. உங்களை சந்தித்த மறுநாளும், அழை பேசி, கதை கதையாய் சொல்லி, கடுப்பேற்றினான் நேசன். :-)

    என்ன அருமையான சந்திப்பு! என்ன அருமையான தலைப்பு மாது! கட்டுரையும் சொக்க வைக்கிறது.

    கோணங்கி சாரை, முகம் பார்க்க வேணும் என்பது வெகுநாள் கனவு மாது.

    பகிர்விற்கு நன்றி மக்கா.

    பதிலளிநீக்கு
  11. இருளின் பின்ன‌னியில், ந‌ட்ச‌த்திர‌ங்க‌ளின் ஒளி,
    புகைப்ப‌ட‌ங்க‌ள்...... அருமை.

    பதிலளிநீக்கு
  12. அற்புதமான அந்தக் கணங்களில் ஒரு ஓரமாக நானும் இருந்தேன் என்பதில் கொள்ளை மகிழ்ச்சி அண்ணே.. இதை சாத்தியமாக்கிய உங்களுக்கும் நேசனுக்கும் ஆயிரமாயிரம் நன்றிகள்..:-)))

    பதிலளிநீக்கு
  13. உங்கள் தயவில் நானும் மாயக்கம்பளத்தில் பறந்தேன்.

    பதிலளிநீக்கு
  14. கோணங்கியோடும் இதர நண்பர்களோடும் பரிமாறிக்கொண்ட சுவாரஸ்யமான விஷயங்கள் அதே அலைவரிசையில் வாசகர்களுக்கு சொல்லப்பட்டிருப்பது சிறப்பு!லண்டன் சென்று வரும் ஒவ்வொருவருடனும் ஹைகேட் சென்று மார்க்ஸின் கல்லறையைப் பார்த்திருக்கிறீர்களா என்று கேட்பது என் வழக்கம் (நான் சென்றதில்லை).பெரும்பாலும் கல்லறை கேட் வரை சென்று முழுமையாகப் பார்க்காமல் திரும்பி வந்தவர் பலர்.ஆனாலும் கோணங்கி சென்று வந்து முழுமையாக கண்டு தரிசித்த அனுபவப்பகிர்வு- சென்னை மெஸ்- என்னால் மறக்க முடியாதது! அவுட்லுக் இதழ் மூலம் ஐரோப்பா செல்ல கிடைத்த தருணத்தை சரியாக பயன்படுத்தி அனுபவித்த ஊர் சுற்றி கோணங்கி!சில உரையாடல்கள் நம் மனதிற்குள் என்றென்றும் நிரந்தரமாக ஒலித்துக்கொண்டிருக்கும்...
    - குமரகுருபரன், சென்னை.

    பதிலளிநீக்கு
  15. என்ன ஒரு அழகிய பகிர்வு ..நன்றி சார் ...பிரமிப்புடன் ...

    பதிலளிநீக்கு
  16. வாசிப்போருக்கும் ரசனையான பயணம்

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!