கள்ளன் போலீஸ்

பாலுதான் பார்த்திருக்கிறான். ஊதிவிட்டான் உடனே.  “மாட்டிக்கிட்டாங்கடா” என உள் பக்கம் நாதங்கியால் பூட்டியிருந்த கதவில் ‘தொம், தொம்’ கைகளால் தட்டி விலகி ஓடி சிரித்தார்கள் சிறுவர்கள் வெளியே. ஒருவன் கல்லை எடுத்து கதவில் எறியவும், மேலும் சிலர் கற்களைத் தேட ஆரம்பித்தார்கள்.

பனைமட்டை வேலி அடைக்கப்பட்ட வளவுக்குள் இருந்த சின்னக்குடிசை அது. பொன்னுத்தாய் ஆச்சி இறந்த பிறகு அங்கு பெரியவர்களின் வரத்து அவ்வளவாக இல்லை. பம்பாயிலும், சென்னையிலும் ஆச்சியின் மகன்கள் இருந்தார்கள். மரப்பரணில் சில நார்ப்பெட்டிகளைத் தவிர அந்த ஒற்றை அறைக்குள்ளும், சின்ன சமையலறைக்குள்ளும் எதுவும் கிடையாது.  இருட்டு பூசிய அங்கு  ஒளிந்து விளையாடும் சிறுவர்களின் சத்தமே எப்போதாவது கேட்கும். அப்படி கள்ளனாக வந்தவர்கள் இன்று போலீசாகி விட்டார்கள்.

பீடி குடித்துக்கொண்டு, இற்றுப் போன சைக்கிளில் அந்தப் பக்கம் வந்த மகாராசன் “என்னலே?” என்று நின்று கேட்கவும், சிறுவர்கள் பெருஞ்சத்தமாய் சிரித்தார்கள். அருகில் ஓடிப்போய்ச் சொன்னார்கள். “மொளச்சு மூணு இல விடல, அதுக்குள்ளயா. காலங்கெட்டுப் போச்சு. தள்ளுங்கலே” என்று அவரும் கதவின் அருகில் சென்று “யாரு உள்ளே?” என்று சத்தம் போட்டுவிட்டு காத்திருந்தார். “ஒழுங்கா கதவத் தெறந்து ரெண்டு பேரும் வெளியே வாங்க” என அதட்டினார். சிறுவர்கள் சத்தம் அடங்கி கதவையேப் பார்த்திருந்தார்கள். எந்த அசைவும் இல்லை. மகராசனும் கதவை பலங்கொண்ட மட்டும் தட்டினார்.

கொஞ்ச நேரத்தில் சின்னதாய் ஒரு கூட்டம் திரண்டு விட்டது. ஆள் ஆளாளுக்கு கதவோடு பேச ஆரம்பித்தார்கள்.  “இப்ப வெளியே வர்றிங்களா, இல்ல கதவ ஒடைக்கவா?” என்று கடற்கரை ஆங்காரமாய் மிரட்டினார். “அது எதுக்குண்ணே. மேல ஏறி ஒலய பிரிச்சாப் போச்சு” என்றார் சாமியாடி முருகேசன். ம்ஹூம். அவர்கள் நினைத்தது நடக்கவில்லை.

மங்களம்மன் கோவிலில் தண்ணீர் எடுக்க குடத்தோடு அந்தப் பக்கமாய் வந்த  கட்டித்தங்கம் கூட்டத்தைப் பார்த்து வளவுக்குள் வந்தார். ஊரேயே எட்டி நிற்க வைக்கும் வாய்க்காரியான அவரைப் பார்த்ததும் கூட்டம் கமுக்கமானது. ‘இன்னிக்கு உள்ள இருக்குற ரெண்டு பேருக்கும் மஞ்சத்தண்ணிதான்’ என்று நிச்சயம் கொண்டார்கள். மேலும் சுவாரசியம் பிடித்துக்கொண்டது எல்லோருக்கும்.

“இன்னா பாருங்கக்கா...” என ஆரம்பித்து, சொல்லி, “இந்த வயசுல இப்படின்னா ஊர் வெளங்குமாக்கா” என கடற்கரை முடிக்கக்கூட இல்லை. “உங்களுக்கெல்லாம் அறிவே கெடையாதா...” என பொங்கிக் கத்தினார் கட்டித்தங்கம்.

“சின்னப் பசங்கதான் வெவரம் இல்லாமச் சொல்றாங்கன்னா நீங்களும் நியாயத்த எடுத்துட்டு வந்துட்டீங்க. போங்கண்ணே, போங்கண்ணே. உள்ள யாரும் இருக்க மாட்டாங்க, போங்க”  என விரட்ட ஆரம்பித்தார். “கதவு உள் பக்கமாத்தான பூட்டியிருக்கு, அப்பம் உள்ள இருக்காங்கன்னுதான அர்த்தம்..” என்ற ஒரு பொடியனுக்கு முதுகில் ஒரு சாத்து சாத்தவும்,  மற்றவர்கள் வெலவெலத்துப் போனார்கள். “ச்சீய்... வெக்கமா இல்ல. வந்துட்டாங்க பாக்குறதுக்கு..” என குடத்தை கீழே வைத்து, சேலையை வரிந்து கட்டி, கொண்டையை முடியவும் வியர்த்துப்போன அனைவரும் அங்கிருந்து அகன்றார்கள்.

கொஞ்ச நேரம் அங்கேயேத் தனியாய் நின்ற கட்டித்தங்கம், “பொன்னுத்தாயக்கா, நானும் போறேன். நல்ல புத்தி குடுங்க புள்ளைகளுக்கு” என சத்தமாய்ச் சொல்லி நடக்க ஆரம்பித்தார்.

கருத்துகள்

5 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
 1. //ஒரு பொடியனுக்கு முதுகில் ஒரு சாத்து சாத்தவும், மற்றவர்கள் வெலவெலத்துப் போனார்கள். “ச்சீய்... வெக்கமா இல்ல. வந்துட்டாங்க பாக்குறதுக்கு..” என குடத்தை கீழே வைத்து, சேலையை வரிந்து கட்டி, கொண்டையை முடியவும் வியர்த்துப்போன அனைவரும் அங்கிருந்து அகன்றார்கள். கொஞ்ச நேரம் அங்கேயேத் தனியாய் நின்ற கட்டித்தங்கம், “பொன்னுத்தாயக்கா, நானும் போறேன். நல்ல புத்தி குடுங்க புள்ளைகளுக்கு” என சத்தமாய்ச் சொல்லி நடக்க ஆரம்பித்தார்//

  இப்ப‌டித்தான்,மாத்தியேசிச்சு, இதுமாதிரி பிர‌ச்ச‌னைக‌ளை தீர்க்க‌ முடியும்.
  ஏடாகூட‌மா சிறுபுள்ளைக‌ இந்த‌ மாதிரி கூட்ட‌த்தில‌ மாட்டுனா,நினைக்க‌வே ந‌டுக்க‌மா..

  பதிலளிநீக்கு
 2. நல்ல வேளை, கட்டித்தங்கம் போன்ற மனிதர்கள் இருப்பதால்தான் ஏதோ கொஞ்சம் நம்பிக்கை வருகிறது. அடுத்தவன் திருடிக் கொண்டு அகபட்டால், எப்பொழுது மொத்தலாம் எனக் காத்திருக்கிறார்கள். வாய்ப்பும், சூழலும் கிடைத்தால் நாம் எல்லாரும் கள்ளன் ஆகி விடுவோம் அல்லவா?. நல்ல கதை.

  பதிலளிநீக்கு
 3. சொல்லாத பகுதியில் எவ்வளவு சித்திரங்கள்!

  பதிலளிநீக்கு
 4. //சொல்லாத பகுதியில் எவ்வளவு சித்திரங்கள்!//
  இதற்கு மேல் என்ன சொல்ல?!
  கவிஞர் கவிஞர் தான்! :))

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!