அதென்னமோ தெரியவில்லை. சரியாக செங்கல்பட்டிலிருந்து தாம்பரத்துக்கும் இடையில் தூக்கம் கலைந்து விடுகிறது. அப்பர் பெர்த்தில் பிரியா கார்த்தி முதுகைக் காட்டி படுத்திருந்தான். எதிரே இன்னொரு மிடில் பெர்த்தில் சுரேஷ்பாபு “குட்மார்னிங்” என்றார். கீழேப் பார்த்தேன். காலியாய் இருந்தது. நேற்றிரவு மதுரையில் ஏறி இரண்டு பீர்களை வைத்துக்கொண்டு விழித்துக்கொண்டு இருந்தவர்களைக் காணோம். “அடிச்சிட்டே வந்திருக்கலாம்ல்” என்றான் கார்த்தி அவர்களிடம். “அடிச்சிட்டோம். இது அடிஷனல்” என்றான் ஜீன்ஸ் போட்டு இருந்த அந்த இளைஞன். பிறகு இருவரும் ஒரே டாய்லெட்டுக்குள் மறைந்தார்கள். எப்போது திரும்பி வந்தார்களோ, படுத்தார்களோ, சென்றார்களோ.
பெரியவர் ஒருவர் சைடு சீட்டில் உட்கார்ந்து காலையைப் பார்த்துக்கொண்டு இருந்தார். “தாம்பரம் வரப்போகுதா” என்றேன் அவரைப் பார்த்து உறுதிபடுத்திக்கொள்ள. ஆமாம், இன்னும் இருபது நிமிஷத்துல வந்துரும். வண்டி பத்து நிமிஷம் லேட்” என்றார். டிரெய்னில் வருகிற சிலர் இப்படி லேட்களை எல்லாம் கறாராக கணக்கு வைத்துக்கொண்டு வருகிறார்கள். “ஸ்பீடாய் வர்றான். லேட்டை மேக் அப் பண்ணிருவான்” என்றார் தொடர்ந்து. வர்றான் என்றால், யார் அந்த அவன். லேட்டை மேக் அப் செய்யாவிட்டால் என்னவாகும். நான் அவரையேப் பார்த்துக் கொண்டிருந்தேன். சுரேஷ்பாபு என்னைப் பார்த்து சிரிக்க ஆரம்பித்தார். “என்ன” என்றேன். “நமக்கு ஒண்ணும் பிரச்சினையில்ல. பாலுமகேந்திரா பதினோரு மணிக்குத்தான் வரச் சொல்லி இருக்காரு” என்று திரும்பவும் சிரித்தார். கேட்டுக் கொண்டு இருந்த அவருக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது. முகத்தை திருப்பிக்கொண்டார்.
மாம்பலம் ஸ்டேஷனை இதே காலை ஆறரை மணி வாக்கில்தான் சூட்கேஸ்களை சுமந்துகொண்டு நடப்பதாய் பார்க்க வாய்க்கிறது. எவ்வளவு தூரம் என்கிற மலைப்பும் கூடவே ஒட்டிக்கொள்கிறது. காமிராக்கள், இத்யாதிகளை சுமந்துகொண்டு பாலு, முனிஷ், கார்த்தி சோர்வாய் இருந்தார்கள். வெளியே வழக்கம்போல ஆட்டோக்காரர்கள் மொய்க்கிறார்கள். வழக்கம்போல் தேனாம்பேட்டைக்கு நூற்று ஐம்பது, நூற்று இருபது என்று சொல்கிறார்கள்.
ஒரு ஆட்டோ அருகில் சின்னப் பையனும், ஒரு இளைஞனும் நின்று கவனித்துக் கொண்டிருந்தார்கள். சின்னப் பையன் அருகில் வந்து “எங்க சார் போகணும்” என்றான். “தேனாம்பேட்டை.எவ்வளவு” என்றேன். “எழுபது ருபா தாங்க” என்றான். சரியென்றேன். “இரண்டு வண்டியா” என்றான். “ஆமாம்”.என்றேன். அவனது வண்டியில் ஏறச் சொல்லி, அருகில் நின்ற இளைஞனிடம் சென்று “தேனாம்பேட்டை. வர்றியா” என்றான். அவன் இல்லையென்பதாய் தலையாட்டி எங்கோ பார்த்துக்கொண்டிருந்தான். இன்னொரு ஆட்டோவை பிடித்து வந்தான். நானும், கார்த்தியும் அந்தச் சின்னப் பையனின் ஆட்டோவில் ஏறிக்கொண்டோம். “உனக்கு எத்தனை வயசு” என்றான் கார்த்தி அவனிடம். “பதினெட்டு” என்றான். “பொய் சொல்ற. பதினைஞ்சுதான் இருக்கும்” என்றான் கார்த்தி. அவன் ஒன்றும் பதில் சொல்லவில்லை. ஒட்டுவதில் கவனம் செலுத்தினான். “உன் கூட இருந்தவன் ஏன் வரல” என்றேன். “தெரியல சார்” என்றான்.
காமராஜ் அரங்கம் எதிரில் இறங்கி டீக்கடை நோக்கி நகர்ந்தோம். எதிரே காமராஜ் அரங்கத்தில் ‘தமிழ்நாடு மண்ணள்ளும் இயந்திர உரிமையாளர்கள் சங்கத்தின்’ விழாவுக்கான பேனர் கட்டியிருந்தது. சோனியாகாந்தி முதற்கொண்டு வாசன் வரையிலானவர்களின் தலைகள் அதில் இடம்பெற்றிருந்தன. அருகில் ஒரு தள்ளுவண்டியில் சுதந்திரதினக்கொடி கட்டியிருந்தது. டீயும் ருசிக்கவில்லை. மழைக்கான மேகமூட்டத்தையும் ரசிக்க முடியவில்லை.
//அருகில் ஒரு தள்ளுவண்டியில் சுதந்திரதினக்கொடி கட்டியிருந்தது. டீயும் ருசிக்கவில்லை. மழைக்கான மேகமூட்டத்தையும் ரசிக்க முடியவில்லை.//
ReplyDeleteஎன்ன சார் , கொடியப் பாத்து அவ்வளவு கோவமா சார். அதப் பாத்தவுடனே நாட்ல நடக்குற அட்டூழியங்கள் ஞாபகம் வந்து கோவம் வந்திருக்கு... அப்படிதானே சார்...
முதல் பத்தி, எஸ் ராவின் கட்டுரையை ஞாபகப் படுத்தியது. மதுரை ரயில் நிலையத்தில் ஆங்கிலம் கலக்காத மதுரை தமிழில் பேச்சு தொடங்கும்.
ReplyDeleteசெங்கல்பட்டு வரவும் தமிழ் சிறிது கலந்த ஆங்கில பேச்சுக்கு அது மாறி விடும். மணி என்ன என்று சொல்வதில் இருந்து, என்ன வேகத்தில் புகை வண்டி வந்தது , தட்ப வெப்ப நிலை எப்படி இருக்கிறது என எல்லாவற்றையும் ஆங்கிலம் அதிகம் கலந்த தமிழ் வார்த்தைகளில் கேக்கலாம்.
முந்தைய ஆண்டுகளை காட்டிலும் மாணவர்கள், இளைஞர்கள், முதியவர்கள் என எல்லோரிடமும் சுதந்திர உணர்வு, மகிழ்ச்சி அதிகம் வீதிகள் எங்கும் இப்பொழுது காணப் படுகிறது என்பதே உண்மை.
'அருகில் ஒரு தள்ளு வண்டியில் சுதந்திர தினக் கொடி கட்டியிருந்தது'. இப்படியா சுதந்திர தினம்? 15 வயதில் ஆட்டோ ஓட்டுவதா, ஒரு நாளைக்கு எத்தனை சாலை விபத்துக்கள்! வேதனை. பிழைப்பதற்கு எத்தனையோ வழிகள். ஏன் இது பலருக்குப் புரிவதில்லை?
ReplyDelete//சோனியாகாந்தி முதற்கொண்டு வாசன் வரையிலானவர்களின் தலைகள் அதில் இடம்பெற்றிருந்தன. அருகில் ஒரு தள்ளுவண்டியில் சுதந்திரதினக்கொடி கட்டியிருந்தது. டீயும் ருசிக்கவில்லை. மழைக்கான மேகமூட்டத்தையும் ரசிக்க முடியவில்லை.
ReplyDelete//
ha... haa... haa.. suthanthira nadu.
pakirvum... pugaippadamum arumai.
இதைவிட கொடுமைகள்
ReplyDeleteஎல்லாம் நான் பார்க்கிறேங்க ஐயா !
தேசியகொடிய ஏத்தி
சோனியா வாழ்க
கலைஞர் வாழ்க
இன்னும் சில... ...
பன்னாடைகள் வாழ்க
பரதேசிகள் வாழ்க என்றும் கோசம்
போடுகிறார்கள்
ஆனால் நாகையில்
தோழர்கள் கொடி ஏற்றி
புரட்சி வெல்லட்டும்
புரட்சி வாழ்க என்றார்களே இந்த மனநிலை எல்லோரும்
அடைய இயற்கையை
வேண்டுகிறேன்
புரியவில்லை!!! :(
ReplyDelete