“சார், ஒங்க சட்டையில முதுகுப் பக்கம் எதோ கறை போல இருக்கு” பைக்கை நிறுத்திவிட்டுத் திரும்பவும், வாட்ச்மேன் அருகில் வந்து சொன்னான். “அய்யோ, அப்படியா” வேகமாய் கழுத்து வலிக்க திரும்பிப் பார்த்தேன். தெரியவில்லை. இன்னும் கொஞ்சம் கஷ்டப்பட்டுப் பார்த்தேன். தெரியவில்லை.
என் நிலைமையைப் பார்த்து, “இந்தப் பக்கம் திரும்புங்க” என்று அவன் என் முதுகின் நடுப்பகுதிப்பக்கம் பார்த்தான். அவன் முகத்தை பார்த்திருந்தேன். ஒரு ஆராய்ச்சியாளனுக்குரிய கூர்மை அவனிடம் இருந்தது. அந்த நிதானத்தை ரசிக்க முடியவில்லை.
“என்ன கறை?” என்றேன் பொறுக்க முடியாமல்.
“சரியாத் தெரியல... எதோ ஆயில் மாரி இருக்கு. பழுப்பு நிறத்துல”
“ரொம்ப இருக்கா...”
“ஆமா... கொஞ்சம் பெருசாத்தான் இருக்கு.”
திருப்தியில்லாத பதிலாகவும் மேலும் அசிங்கம் ஏற்படுத்தக் கூடியதாகவும் இருந்தது. முதுகில் உறுத்த ஆரம்பித்தது. “எங்க பட்டுச்சுன்னு தெரியலையே..” நானே முனகிக்கொண்டேன். தெரியாது எனத் தெரிந்தும் கழுத்தெல்லாம் வளைத்துத் திரும்பிப் பார்த்துக்கொண்டு இருந்தேன். சட்டையை அங்கே வைத்துக் கழற்றிப் பார்ப்பது நாகரீகமானதாய் இருக்காது.
கறை இருப்பதாய் அவன் காட்டிய முதுகுப் பகுதியில் சாப்பாட்டுப் பையை போட்டு மறைத்து ஸ்டைல் போல் காட்டி, அவமானகரமாய் மாடியேறி என் இருக்கைக்குச் சென்றேன். எல்லோரும் வந்திருந்தனர். பக்கத்து சீட்டுக்காரன் “குட்மார்னிங்” சொல்லிவிட்டு அவன் பாட்டுக்கு வேலை பார்த்துக் கொண்டு இருந்தான். உலகில் எல்லோரும் அந்தக் கணம் எந்தப் பிரச்சினையுமில்லாமல் இருப்பதாகத் தோன்றியது. சாப்பாட்டுப் பையை கீழே வைத்து சட்டென சேரில் நன்றாக சாய்ந்து முதுகுப்பகுதியை மறைத்துக் கொண்டேன். யாருக்கும் தெரிய வாய்ப்பில்லைதான். அப்படி உட்கார்ந்து வேலைபார்ப்பது என்னவோ போலிருந்தது. மானிட்டர் எங்கேயோ இருந்தது.
பைக்கில் அசோக் நகர், பனகல்பார்க், தேனாம்பேட்டை என வந்த வழியெல்லாம் எத்தனை பேர் பார்த்தார்களோ, எத்தனை பேர் சிரித்தார்களோ. இதில் இன்னிங்ஸ் வேறு, ஷூ வேறு. எங்கே, எப்படி இந்தக் கறை பட்டிருக்கும் என முடிவுக்கு வர முடியவில்லை. நிச்சயம் வரும் வழியில் இருக்க முடியாது. எங்கேயும் இறங்கவில்லை. நிற்கவில்லை. துவைப்பதற்கு முன்போ, பின்போதான் பட்டிருக்க வேண்டும். பார்க்காமலா இருந்தாள் வீட்டில். சரி, அயர்ன் பண்ணியவனாவது பார்த்திருக்க மாட்டானா? ராஸ்கல். சொல்லியிருக்கலாம். துட்டு கிடைத்தால் போதும் அவனுக்கு. ஒருவேளை அவனும் சிரித்தாலும் சிரித்திருப்பான். எல்லோரும் சேர்ந்து வஞ்சகம் செய்திருக்கிறார்கள்.
அந்தக் கறை எப்படிப்பட்டது என்றறிய மண்டை காய்ந்தது. பார்த்துவிட்டால் தெரிந்துவிடும். பாத்ரூம் சென்று சட்டையைக் கழற்றிப் பார்க்கலாம். இந்த நீண்ட அறையின் பல இருக்கைகளைத் தாண்டிப் போக வேண்டும். குறைந்தது பத்துப் பேராவது கேட்பார்கள். எல்லோரிடமும் முதுகைக் காண்பிக்க வேண்டும். விளக்கம் சொல்லவும் பெறவும் வேண்டும். புதிதாக வேலைக்குச் சேர்ந்த அந்த இளம்பெண்ணுக்கும் தெரிந்துவிடக்கூடும்.
அருகில் வந்து யார் பேசினாலும் சங்கடம் சூழ்ந்தது. சேரில் நன்றாகச் சாய்ந்துகொண்டு, சாவகாசமாய்ப் பேசுவதாய் காட்டிக்கொண்டாலும், இயல்பாய் இருக்க முடியவில்லை. தெரிந்துகொண்டு வேண்டும் என்றே வந்து தொந்தரவு செய்தவர்களாய்த் தோன்றினார்கள். முதுகைப் பார்த்துவிட துடித்தவர்கள் போலிருந்தார்கள். “வாங்கடா, வாங்க. நல்லாப் பாத்துக்குங்க” என்று ஒரேயடியாகச் சொல்லிவிட்டால் ஒரு பிரச்சினையுமில்லை. கேட்டால், “ஆமா, எதோ கறை பட்டிருக்கு” என சாதாரணமாகச் சொல்லிக் கடந்துவிட முடிந்தால் இந்த சித்திரவதை இல்லை.
மூன்றாவது இருக்கைக்காரன் அருகில் வந்து “டீ குடிக்கப் போவமா” என்றான். மணியைப் பார்த்தேன். பனிரெண்டாக இன்னும் பத்து நிமிசம் போலிருந்தது. வழக்கமாய் அவனோடு வெளியே செல்லும் நேரம் இது. “இல்ல, இன்னிக்கு நீங்க போய்ட்டு வாங்க” என்றேன். நம்பமுடியாமல் என்னைப் பார்த்து “என்ன..” என்றான். இதுதான் இவன்களிடம் பிரச்சினையே. வேண்டாம் என்றால் விடமாட்டான்கள். ஏன், எதுக்கு என்று அடுத்தடுத்துத் துருவிக்கொண்டே இருப்பான்கள். “இல்ல, வயிறு கொஞ்சம் சரியில்ல” என்றேன். “சரி டீ வேண்டாம். சிகரெட் பிடிக்க வரலாமே” என இழுத்தான். “இல்ல... நீங்க போய்ட்டு வாங்க”என்று கொஞ்சம் கடுகடுப்புடன் சொல்லிவிட்டேன். திரும்பித் திரும்பி என்னைப் பார்த்துக்கொண்டே சென்றான். நன்றாக சாய்ந்து உட்கார்ந்து கொண்டேன். நேற்றைக்கு டீக்கும், சிகரெட்டுக்கும் அவன் காசு கொடுத்தான், இன்றைக்கு என் முறை. தட்டிக் கழிக்கிறேன் என நினைப்பானோ எனத் தோன்றி அதுவும் ஒரு சங்கடமாக உருவெடுத்தது. கீழே போய்விட்டு வந்தவுடன் அவனை அழைத்து, “தப்பா நெனைச்சுக்காத. உண்மையிலேயே வயிறு சரியில்ல” என்றேன். அவன் ஒருமாதிரிப் பார்த்து சிரித்துக்கொண்டே “பரவாயில்ல” என்றான். வேறெதோ அவன் நினைப்பதாகப் பட்டது. கூடவே, சின்னச் சினன விஷயத்துக்கெல்லாம் ஏன் கவலைப் படுகிறோம் என்று அலுப்பாகவுமிருந்தது.
மதியம் எல்லோருடனும் சேர்ந்து சாப்பிடப் போகவில்லை. டைனிங் ரூமிற்கு அழைத்தார்கள். சங்கடத்தில் நெளிந்து பதற்றமும் வந்தது. “இல்ல கொஞ்சம் வேல முடியாம இருக்கு. வந்திர்றேன். எனக்காக நீங்க ஒண்ணும் காத்திருக்க வேண்டாம்” என்றேன். ஒன்றிரண்டு பேரைத் தவிர மொத்த இடமும் காலியாய்ப் போனது. எதோ ஒரு நிம்மதி கிடைத்தது போலிருந்தது. பசியேத் தெரியவில்லை. டைனிங் ஹாலில் இருந்து அரட்டைச் சத்தங்கள் கேட்டன.
ஒவ்வொருவராக திரும்பி வந்த பிறகு, நைஸாக சாப்பாட்டுப் பையை அதே மாதிரி தோளுக்குப் பின்னால் போட்டபடி டைனிங் ஹாலுக்குச் சென்று அங்கொரு நாற்காலியில் முதுகை ஒட்டி உட்கார்ந்து சாப்பிடத் துவங்கினேன். திருட்டுத்தனமாய்க் குனிந்து சாதத்தை வேக வேகமாய் அள்ளிப் போட்டேன். கேவலமாகவும், அவஸ்தையாகவும் இருந்தது. அதே மாதிரி பையால் மறைத்துக்கொண்டு திரும்பவும் இருக்கையில் அமர்ந்து வேலை பார்க்க ஆரம்பித்தேன்.
வீட்டுக்குப் போனதும் அவளை திட்டித் தீர்க்க வேண்டும் என்கிற வேகம் மட்டும் கூடிக்கொண்டே இருந்தது. “இன்னிக்கு என்ன சார், சீட்டை விட்டே எந்திருக்க மாடேங்கிறீங்க” என பக்கத்து இருக்கைக்காரன் கேட்டான். லேசாய் சிரித்து, வேலையில் மும்முரமாய் இருப்பதாய் காட்டிக்கொண்டேன். இந்த சங்கடங்கள் எல்லாம் அவளுக்குத் தெரிந்திருந்தால்தானே. எரிச்சலோடும், கோபத்தோடும் புகைந்திருந்தேன்.
ஏழு மணிக்கு மேல், எல்லோரும் சென்ற பிறகு அதே மாதிரி பையை பின்னால் போட்டுக்கொண்டு அலுவலகத்தை விட்டு வெளியேறினேன். இருட்டியிருந்தது. இனி பையை வைத்து மெனக்கெட்டு மறைக்க வேண்டியதில்லை. வாசலில் காற்று அள்ளி வீசியது. பைக்கில் உட்கார்ந்தவுடன் ‘அப்பாடா’ என்றிருந்தது. பனகல் பார்க்கைத் தாண்டவும் டாஸ் மார்க மறித்தது. குவார்ட்டரும், தம்ளரும், தண்ணீர் பாக்கெட்டுகளும் வாங்கிக்கொண்டு பெரும் மனித இரைச்சல்களுக்கு நடுவில் ஒரு இடம் கிடைக்காதா எனத் தேடியபோது முதுகை சுத்தமாய் மறந்து விட்டிருந்தேன்.
இரண்டு வாரம் கழித்து இன்னொரு காலையில், பைக்கை நிறுத்திவிட்டு, மடிப்புக்கலையாமல் அலுவலகம் நுழையப் போனேன். “சார், சட்டையில் எதோ கறை” என் பின்னாலிருந்து அதே வாட்ச்மேன் சொன்னான். “அய்யய்யோ” என அவசரமாய் பார்த்தேன். அதே சட்டை.
padikka padikka sirippaga vanthathu.
பதிலளிநீக்குintha avasthayai nnanum anubavithu
irukkiren.
தின வாழ்க்கையில் நடக்கும் சம்பவம்,அருமையான எழுத்து வடிவம்!!!
பதிலளிநீக்குஅருமையான பதிவு!!!
உங்களிடம் கற்க வேண்டியது நிறைய இருக்கு!!!
சிறப்பாக இருக்கிறது மாதவராஜ் சார்.
பதிலளிநீக்குகறை என்றதும் அவனிடத்து ஏற்படும் உணர்வுகள்.... நல்ல விபரணை
முடிவு எதிர்பார்த்தமாதிரியும், எதிர்பார்க்காதமாதிரியும் ஒரு குறுநகை!
அன்புடன்
ஆதவா
Very nice. Nice narration.
பதிலளிநீக்குஅன்பார்ந்த தோழர் மாதவராஜ் இந்த அராஜகத்தை உங்கள்
பதிலளிநீக்குவலைப்பக்கம் வாயிலாக மக்களிடம் எடுத்துச்சொல்லுங்கள்.
நேரடி சாட்சியாய் எனது அனுபவம் கீழே.
தோழமையுடன்
எஸ்.ராமன்
குடியாத்தம் நகரில் அரசு இடத்தில் 36 குடும்பங்கள் பல
தலைமுறையாய் வாழ்ந்து வந்தார்கள். அவர்கள் இடத்திற்கு
பக்கத்தில் உள்ள ஒரு இடத்தை ஒரு ரியல் எஸ்டேட் தாதா
வாங்குகிறார். தன்னுடைய இடத்திற்கு நல்ல மதிப்பு கிடைக்க
இந்த வீடுகள் தடையாக இருக்கும் என்பதால் அவர்களை
அப்புறப்படுத்த முயல்கிறார். ஆசை வார்த்தையில் சிலர் மயங்கி
மாற்று இடம் செல்கின்றனர். பலர் மறுத்து அங்கேயே தொடர்கின்றனர்.
எனவே அந்த வீடுகளை இடிக்க அவர் முடிவெடுக்கிறார். அதற்கு
முன்பு அவர் முக்கியமான ஒரு செயல்கிறார். பா.ம.க கட்சியிலிருந்து
அமைச்சர் துரைமுருகன் முன்னிலையில் திமுகவில் இணைகிறார்.
ஆதி திராவிட, அருந்ததிய, இஸ்லாமிய மக்கள் வாழ்ந்த அந்த
வீடுகளை அண்ணல் அம்பேத்காரின் பிறந்த நாளான ஏபரல் 14 அன்று
புல்டோசர் கொண்டு இடித்து தள்ளுகிறார்.
நடுத்தெருவில் தவிக்கும் அம்மக்களின் பிரச்சினையை தமிழ்நாடு
தீண்டாமை ஒழிப்பு முன்னணி கையிலெடுக்கிறது. ஆர்ப்பாட்டம் நடத்தி
பலமுறை மாவட்ட ஆட்சியரை சந்தித்தும் எந்த பலனும் இல்லாததால்
குடியாத்தம் தாலுகா அலுவலகத்தில் இன்று குடியேறும் போராட்டம்
நடத்துவதாக முடிவெடுக்கிறது.
தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலத்தலைவர் தோழர் சம்பத்,
பொதுச்செயலாளர் தோழர் சாமுவேல் ராஜ், குடியாத்தம் எம்.எல்.ஏ
தோழர் லதா ஆகியோர் தலைமையில் போராட்டம் நடத்துவதே
திட்டம். காலையிலிருந்தே குடியாத்தம் தாலுகா அலுவலகம் செல்லும்
அனைத்து சாலைகளும் அடைக்கப்பட்டு காவல்துறையினர்
குவிக்கப்பட்டிருந்தனர். நானூறுக்கும் மேற்பட்ட தோழர்கள்
குவிந்தனர். பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று தலைவர்களை
அழைத்து சென்றனர்.
இரண்டு மணி நேரத்திற்கு மேல் பேச்சு வார்த்தை நீடித்தது. அதே நேரம்
தோழர்கள் தாலுகா அலுவலகத்திற்கு வெளியே அமைதி
காத்தனர், ஒரு நியாயமான தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு.
திடிரென காவல்துறையின் அணுகுமுறையில்
ஒரு முரட்டுத்தனம் தென்பட்டது. வலுக்கட்டாயமாக ஒரு
தகராறை உருவாக்க முயற்சிஎடுத்தார்கள்.
பேச்சுவார்த்தையில் பங்கேற்ற தலைவர்கள் வெளியே
வந்ததும்தான் உண்மை தெரிந்தது.
பேச்சுவார்த்தையில் ஒரு தீர்வை நோக்கி முன்னேறி
ஒரு உடன்பாடும் கையெழுத்தாகும் நேரத்தில்
ஆர்.டி.ஒ விற்கு ஒரு தொலைபேசி வருகின்றது. அவர்
அங்கிருந்து வெளியேறுகிறார். போராட்டத்தில்
ஈடுபட்டவர்களை கைது செய்து
காவலில் வைப்பது என்ற முடிவு
எடுக்கப்படுகின்றது. நூறுக்கும் மேற்பட்டவர்கள்
கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பதற்கு
கொண்டு வரப்பட்டுள்ளனர்.
உடன்பாடு கையெழுத்தாகும் நேரம்
அதனை முறித்தது யார்? யாருடைய
தொலைபேசி நிலைமையை சிக்கலாக்கியது?
யாருடைய நிர்ப்பந்தத்திற்கு
அரசு அடிபணிந்து நியாயமான
கோரிக்கைக்காக போராடியவர்களை கைது
செய்துள்ளது? காவல்துறை மக்களுக்காகவா
அல்லது ரியல் எஸ்டேட்
தாதாக்களின் நலனை பாதுகாக்கவா?
மாவட்ட நிர்வாகம் இந்நடவடிக்கை
மூலம் மக்களுக்கு உணர்த்தியுள்ள செய்தி என்ன?
பாதிக்கப்பட்ட மக்களையே கைது செய்வது என்ற
அராஜகத்தை தமிழக அரசு என்றுதான் நிறுத்துமோ? தலித் மக்களின் பாதுகாவலன் என்று
பீற்றிக்கொள்வதையாவது கலைஞர் நிறுத்திக் கொள்ளட்டும்.
ஆனாலும் போராட்டம் ஓயாது. தொடரும்,
நியாயம் கிடைக்கும் வரை
உரிமைக்குரல் ஒலித்துக்கொண்டே இருக்கும்.
( குடியாத்தம் எம்.எல்.ஏ தோழர் லதா இருபது லட்சம் பணம்
கேட்டு மிரட்டினார் என்று அந்த தாதா நேற்று ஒரு பொய்ப்புகார்
அளித்ததும் அதற்கு முதலாளித்துவ ஊடகங்கள் அதீத
முக்கியத்துவம் கொடுத்து செய்தி வெளியிட்ட கூத்தும் வேறு
நடந்தது.)
க்தையின் போக்கு மிக நன்றாக இருந்தது.ஆனால் முடிவுத்தான் எப்படியோ ஒட்டாதது போல் இருக்கிறது.ஆரம்பத்து கறை சம்பவம் கண்டிப்பாக எல்லோரும் வாழ்க்கையில் ஒரு முறையாவது கடந்து வந்திருப்பார்கள்.
பதிலளிநீக்குஇது புறக்கறையை மாத்திரம் சொல்வதில்லை. அது ஒரு பாவனைதான். எத்தனை பேர் நீக்க முடியாத அகக்கறையை சுமந்து மறறவர் கண்ணில்பட்டு விடுமோ என்ற குற்றவுணர்வுடன் அலைகிறோம்? நல்ல படைப்பு.
பதிலளிநீக்குகறை படுத்திய பாடு அருமையாய்இருக்கு .சின்ன விசயமானாலும் ஒருநாள் முழுவதும் அதைச் சுற்றி தான் ஓடுது மனசும் .
பதிலளிநீக்குWonderful!
பதிலளிநீக்குஆம், முடிவு எதிர்பாராதவிதமாக இருந்தது.
//சாப்பாட்டுப் பையை போட்டு மறைத்து ஸ்டைல் போல் காட்டி//
பதிலளிநீக்கு//கூடவே, சின்னச் சினன விஷயத்துக்கெல்லாம் ஏன் கவலைப் படுகிறோம் என்று அலுப்பாகவுமிருந்தது.//
//உலகில் எல்லோரும் அந்தக் கணம் எந்தப் பிரச்சினையுமில்லாமல் இருப்பதாகத் தோன்றியது//
- வரிகள் உண்மையோ உண்மை
//பனகல் பார்க்கைத் தாண்டவும் டாஸ் மார்க மறித்தது. குவார்ட்டரும், தம்ளரும், தண்ணீர் பாக்கெட்டுகளும் வாங்கிக்கொண்டு பெரும் மனித இரைச்சல்களுக்கு நடுவில் ஒரு இடம் கிடைக்காதா எனத் தேடியபோது முதுகை சுத்தமாய் மறந்து விட்டிருந்தேன்.
பதிலளிநீக்குஇப்பொழுது கறை எங்கிருக்கிறது என்பது நமக்கு தெரிகிறது ... ...
//பனகல் பார்க்கைத் தாண்டவும் டாஸ் மார்க மறித்தது. குவார்ட்டரும், தம்ளரும், தண்ணீர் பாக்கெட்டுகளும் வாங்கிக்கொண்டு பெரும் மனித இரைச்சல்களுக்கு நடுவில் ஒரு இடம் கிடைக்காதா எனத் தேடியபோது முதுகை சுத்தமாய் மறந்து விட்டிருந்தேன்.//
பதிலளிநீக்குஇப்பொழுது கறை எங்கிருக்கிறது என்பது நமக்கு தெரிகிறது ... ...
மனிதனின் மன் உணர்வுகள் நிதர்சனமாக சொல்லப்பட்டுள்ளது மாது!
நன்றாக உள்ளது கதை...?
கறை என்றதும் அவனிடத்து ஏற்படும் உணர்வுகள் are nicely narrated. i feel like i read something in kumudam/ananda vikatan.
பதிலளிநீக்குgood flow.