அம்மா அப்பா விளையாட்டு
பகல்
“முட்டாள்!”
“பைத்தியம்!”
“எருமை மாடு!”
“நாய்!”
“சனியன்!”
“இழவு!”
“கருமம்!”
“கருமாந்திரம்!”
“பேய்!”
“பிசாசு!”
இரவு
“அம்மா...”
“அப்பா...”
“அம்மா...”
“அப்பா...”
“அம்மா...”
“அப்பா...”
“........”
“........”
*
ஒரு மாவீரனின் கதை.
ஆறு வருசத்துக்கு முன்னால் ஒரு சின்ன வாய்த்தகராறில் அவனது சித்தப்பாவின் காலை விறகுக்கட்டையால் அடித்து ஒடித்து விட்டான். ஊருக்குள் சிம்ம சொப்பனமாக கர்ஜித்துக் கொண்டிருந்தவர் அவர். பண்டாரவிளை வைத்தியத்தில் குணமானாலும் இன்றும் லேசாக தெத்தி தெத்தித்தான் நடக்க முடிகிறது. அப்புறம் தேரியில் முந்திரி மரம் ஏலம் எடுக்கும் தகராறில் சண்டியன் குருசாமியை மந்தையில் வைத்து அரிவாளால் சின்னதாய் தோள்பட்டையில் வெட்டி விட்டான். இப்படித் தொடங்கிய அவனது பராக்கிரமங்கள் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் நீண்டு போலீஸ் ஸ்டேஷன், கோர்ட்டு ரெகார்டுகளில் பதிந்து பதிந்து ‘ரவுடிப்பய’ என்று பேரெடுத்தான்.
யாராவது தாக்கிவிடக் கூடும் என்று சதாநேரமும் சில வெட்டிப் பயல்களோடு திரியப் போய் அவர்கள் அன்போடு “அண்ணே” என்றனர். அந்தக் கட்சியின் சார்பாக எம்.எல்.ஏவை வரவேற்க அடித்த போஸ்டரில் அச்சடித்திருந்த அம்பத்தாறு பேரில் இவன் பேர் மாவீரன் சுடலைமுத்து என்று இருந்தது. ஊருக்குள் அதைப் பார்த்து முதலில் சிரிக்கத்தான் செய்தார்கள். கொஞ்சநாளில் நடந்த ஊர்த் திருவிழாவுக்கு ‘மாவீரன் சுடலைமுத்து மோர்ப் பந்தல்’ என்று கொட்டகை போட்டு, தனது இருபத்தொன்பது வயதிலேயே மாவீரனாய் பேரெடுக்க ஆரம்பித்தான்.
எட்டு வருடங்களுக்கும் மேலாகிவிட்டது. இன்று ஒன்றிரண்டு பெரியவர்களைத் தவிர ஊருக்குள் யாரும் சுடலை முத்து என்று அவனை கூப்பிடுவது இல்லை. கூப்பிடவும் முடியாது என்று வைத்துக் கொள்ளுங்களேன். மாவீரன் சுடலைமுத்துதான். அடர்ந்து முறுக்கிய மீசையும், செவ்வரி ஒடிய கண்களும், மடிப்புக் கலையாத வெள்ளைச் சட்டையும், வேட்டியும் என ஆளே ஒரு தினுசாகி விட்டிருந்தான். ஊரில் எந்த விசேஷம் என்றாலும் அவனுக்கு பிரத்யேக மரியாதையும், அழைப்பும்.
இதுதான் சுடலைமுத்து, மாவீரனான வரலாறு.
சரி விஷயத்துக்கு வருவோம். சம்பவத்தன்று மாவீரன் காலையில் எழுந்ததும் லுங்கியோடு தோட்டத்துப் பக்கம் சென்றிருக்கிறான். நேற்றிரவு அடித்த ஓ.சி.ஆரும், அது அடங்க நடு இரவில் களக், களக்கென குடித்த செம்புத் தண்ணீரும் முட்டிக்கொண்டு வந்திருக்கிறது. என்றுமில்லாமல் அந்த நேரம் பார்த்து அங்கு முருங்கை இலை பறிக்க சக்திக்கனியக்காவும், கோமதியும் நின்றிருந்திருக்கிறார்கள். ஒதுக்குப்புறமாய் கொஞ்சம் தள்ளிப் போவோம் என்று படலையை விலக்கி, பக்கத்தில் இருந்து முடுக்குப் பக்கம் சென்றிருக்கிறான். அங்கேதான் விதி தனது விளையாட்டை ஆரம்பித்தது. நமது பெட்டிக்கடை அருணாச்சலத்தின் கோழி தனது குஞ்சுகளோடு மேய்ந்து கொண்டிருக்கிறது. தரையை தாய்க்கோழி கால்களால் கீறிக் கீறி விட, குஞ்சுகள் அந்த இடத்தில் பாய்ந்து பாய்ந்து கொத்திக் கொண்டிருந்தன.
மாவீரன் வாகாக லுங்கியை உயர்த்தி மடித்துக் கட்டி, லேசாய் செருமிக் கொண்டு கம்பீரமாய் உட்கார்ந்திருக்கிறான். அவ்வளவுதான். அந்த தாய்க்கோழி என்ன நினைத்ததோ தெரியவில்லை. இறக்கைகள் எல்லாம் சிலிர்த்து ஆவேசமாய் அவன் மீது பாய்ந்திருக்கிறது. எதிர்பாராத மாவீரன் “ஏ..அம்மா” என்று கத்தி நிலை தடுமாறி சரிந்திருக்கிறான். விலகிப்போன கோழி திரும்பவும் ஆக்ரோஷமாய் அவன் மீது தாக்குதல் நடத்தியிருக்கிறது. மாவீரன் எழுந்து, அவிழ்ந்த லுங்கியை ஒரு கையில் பிடித்தபடி படலையத் தாண்டியிருக்கிறான். லுங்கி படலையில் சிக்கிக் கொண்டது. வேறு வழியில்லாமல் லுங்கியை அங்கேயே விட்டுவிட்டு ஒடியிருக்கிறான். கொக் கொக்கென குரலோடு கோழியும் விடாமல் துரத்தியிருக்கிறது.
இசக்கியம்மன் கோவில் அருகே தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்த பெண்கள், அவன் வந்த கோலத்தைக் கண்டு என்னமோ எதோ என்று அலறி மிரண்டு, பின்னால் துரத்தி வந்த கோழியைப் பார்த்ததும் பெருங்கூச்சலாய் சிரிக்க ஆரம்பித்தார்கள். மாவீரன் ‘ச்சீ..’ என்று அவர்களைப் பார்த்து வெறுப்பை உமிழ்ந்து தன் உயிருக்காக ஓடிக்கொண்டிருந்தான். வாய்க்காங்கரைமுத்து வீட்டுத்திண்ணையில் உட்கார்ந்திருந்த சொர்ணத்தாயம்மாள் “சின்ன வயசில் இப்படி மணியாட்டிக்கொண்டு இவன் ஒடிப் பார்த்தது” என்று பொக்கை வாய் திறந்து சிரித்தார்கள்.
தன் வீட்டுச் சந்து வந்ததும் திரும்பிப் பார்த்தான். கோழியை காணோம். அவமானம் மொத்தமாய் பிடுங்கித் தின்றது. பக்கத்தில் கொடியில் காயப்போட்டிருந்த யாருடைய சேலையையோ இழுத்துப் போர்த்திக் கொண்டு வீடு போய்ச் சேர்ந்தான். முதலில் பதறி, பிறகு சிரித்த அவளது மனைவியை ஓங்கி கன்னத்தில் அறைந்து ஒரு ஒரமாய்ப் போய் உட்கார்ந்து கொண்டான். அதற்குள் தெரு, மந்தை, வயல்வெளி எல்லாம் தாண்டி தேரிக்காட்டிற்குள் விறகு பொறுக்கிக் கொண்டிருந்த பெண்கள் வரை யாவரும் சிரித்துக் கிடந்தனர்.
மாவீரன் வெளியே தலை காட்டவில்லை. எங்கு பார்த்தாலும் சிரிப்புச் சத்தம் கேட்ட மாதிரியே இருந்தது. அவனது பரிவாரங்களும் தங்கள் அண்ணனைப் போய்ப் பார்த்து துக்கம் விசாரிக்கத் தயங்கினார்கள். தப்பித் தவறி அவனைப் பார்த்ததும் சிரிப்பு வந்து விட்டால் என்ன செய்ய என்று யோசித்தார்கள். ரொம்ப கஷ்டப்பட்டு முகத்தில் சோகத்தை வரவழைத்துக் கொண்டு கொஞ்ச நேரம் அவனருகில் உட்கார்ந்திருந்து வந்தார்கள். மாவீரன் குன்னிப் போய் தலை கவிழ்ந்து உட்கார்ந்திருந்தான். நிமிரவேயில்லை. பள்ளிக்கூடமும் கிண்டல்களும் கேலிகளுமாய்க் கிடந்தது. மாவீரனின் குழந்தைகளுக்கு வெட்கமாய் இருந்தது. தங்கள் தாயிடம் முணுமுணுத்துத் தள்ளினர்.
சில நாட்கள் கழித்து ஒருநாள் சுடலைமுத்து மந்தைக்கு போய் ஒரு டீ குடித்து விட்டு வருவதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது. அதைப் பற்றி யாரும் பேசாவிட்டாலும், எல்லோரும் அதையேதான் சிந்தித்துக் கொண்டிருப்பதாய்ப் பட்டது. சிரித்துக் கொண்டிருந்ததாகவும் தெரிந்தது. அவனது எதிரிகளும் அவனை பரிதாபம் கொண்டு பார்த்தனர். பொது நிகழ்வுகளில் முகம் காட்டாமல் வீடு, தோட்டம் என்று அடைந்து கிடந்தான். யாராவது மாவீரன் என்று அழைத்தால் இப்பொதெல்லாம் கொலைவெறி வந்து அடக்கிக் கொண்டான்.
எதுவும் அறியாத அந்தக் கோழியோ, மாவீரனை வெறும் சுடலைமுத்துவாக்கிய் கதையை எழுதுவது போல தரையில் அதுபாட்டுக்கு கிளறிக்கொண்டிருக்கிறது.
*
குழந்தைகள் விற்கப்படும் தேசம்
அதைத் தவிர ரஜிதாவுக்கு வேறு வழி இல்லாமல் போயிருக்கிறது. அப்போதுதான் பிறந்த தன் குழந்தையை, தனக்குத் தெரிந்த ஒரு ரிக்ஷாக்காரர் மூலமாக ஆறாயிரம் ருபாய்க்கு விற்பதற்கு துணிகிறார். பிரசவம் பார்த்த அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவச் செலவுக்கு இரண்டாயிரம் ருபாய் கேட்டார்களாம். தகவலறிந்த போலீஸார் இதைத் தடுத்து நிறுத்தி, அரசு ஆஸ்பத்திரியில் யார் பணம் வேண்டும் என கெடுபிடி செய்தது என தீவிர புலன் விசாரணை மேற்கொண்டு வருகிறார்களாம். இது நேற்றைய தினகரன் பத்திரிக்கையில் வந்த செய்தி.
அரசு ஆஸ்பத்திரியில் நடக்கும் முறைகேடுகள் தடுக்கப்பட வேண்டும் என்பது முக்கியமானதுதான். ஆனால் தனக்குப் பிறந்த குழந்தையை ஒரு தாயே விற்க முன் வரும் வறுமை குறித்து விசாரிக்க வேண்டியது அதையும் விட முக்கியமானது. ஒரு வாரத்துக்கு முன்பு இது போல நமது மாநிலத்தில், கடலூரில் ஒரு தாய் இருபதாயிரம் ருபாய்க்கு தனது குழந்தையை தெருவில் நின்று கூவி கூவி விற்க முயன்றதாக ஒரு நாளிதழில் வெளியாகி இருந்தது.
விற்கப்படும் குழந்தைகளை வெறும் செய்திகளாக அல்லது ஒற்றை வார்த்தையாக நம் கண்கள் கடந்துவிடக் கூடும். பெற்ற தாய்க்கு அது இரத்தமும் சதையுமான அவளது ஜீவன். பத்து மாதம் சுமந்த உயிர்க்கனவு. நெஞ்சில் முட்டும் அமுததத்தைப் பருக விடாமல், குழந்தையை விலக்கும் வலியை தாயே அறிய முடியும். அந்தக் குழந்தையின் அழுகை, வாழ்வு முழுவதும் தீனக் குரலாக கூடவே வரும். அதன் பிறகு எந்தக் குழந்தையைப் பார்த்தாலும் அவளது உடலும், உள்ளமும் தீயில் வெந்து போகும்.
இதெல்லாவற்றையும், மீறி ஒரு தாய் தன் குழந்தையை விற்கத் துணிகிறாள் என்பதுதான் அதிச்சியாய் இருக்கிறது. தன் குழந்தை சிரிப்பதை, தவளுவதை, மழலை பேசுவதையும், தத்தி தத்தி நடப்பதையும் பார்க்க முடியாமல் வறுமை இந்த தேசத்தில் ஒரு தாயை அலைக்கழித்திருக்கிறது. பாராடா.... பாரடா... என நடுத்தெருவில் நின்று தொப்புள் கொடியின் இரத்தம் சொட்ட சொட்ட ஒரு தாய் வந்து நின்று குழந்தையோடு கதறுகிற காட்சியாய் நம் நரம்புகளை அறுக்கிறது.
என்ன தேசம் இதுவென அவமானம் வருகிறது.
ஆனால் நமது முன்னாள் நிதியமைச்சரும், இன்னாள் உள்துறை அமைச்சருமான மாண்புமிகு சிதம்பரம் அவர்கள் தேசம் வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருப்பதாய் பெருமிதத்தோடு முந்தாநாள் பேசுகிறார். இதற்கு ஆதாரமாகவும், குறியீடாகவும் அவரும் ஒரு காட்சியை முன் வைக்கிறார். இளநீர் விற்கும் பெண்மணி கூட இந்தியாவில் செல்போன் வைத்திருக்கிறாராம். ஆஹா... எப்பேர்ப்பட்ட ஆழமான கருடப் பார்வை இந்த கனவானுக்கு. குழந்தைகளை விடவும் செல்போன்கள் மதிப்பு வாய்ந்தவையாகி இருக்கின்றன. இவர்தான் இந்தியாவின் பொருளாதார மேதைகளில் ஒருவர் என்றும் சொல்லிக்கொள்கிறார்கள்.
வேறு எதுவும் சொல்லத் தோன்றாமல், பெரியார் அடிக்கடிச் சொல்லும் அந்த ஒற்றை வார்த்தை மட்டும் வேகமாய் வெளிவருகிறது.
*
சின்னஞ்சிறு வயதில்...
தெருவில் விளையாடிக் கொண்டிருந்தவன் வேகமாக வீட்டிற்கு வந்து படுக்கையில் போய் கவிழ்ந்துகொண்டான். யாரும் கூப்பிடாமல லேசில் இப்படி வீட்டிற்கு வர மாட்டான். அவனது அமைதி சரியில்லாததாய் தோன்றியது.
அருகில் போய் அமர்ந்து “என்னடா” என்றேன். முகத்தைத் திருப்பினேன். முகம் உம்மென்று இருந்தது.
“என்னப்பா... ஒரு மாதிரி இருக்கே” தலையைத் தாங்கினேன். அவ்வளவுதான். ஏங்கி ஏங்கி அழுதான். யாருடனோ தெருவில் சண்டை போட்டு விட்டான் என்று தெரிந்தது. முதுகைத் தட்டிக்கொடுத்தேன்.
“அப்பா... இந்த ஷோபியா ரொம்ப மோசம்ப்பா... இனும அவ கூட பேசவே மாட்டேன்”.
“சரி. அவ என்ன செஞ்சா...” கனிவாகக் கேட்டேன்.
“அப்பா, என்னோட சைக்கிள்ள அவ ரெண்டு ரவுண்டு போனாப்பா. நா ஒரு ரவுண்டுதான் கேட்டேன். தர மாட்டேங்குறா..”
பாவமாய் இருந்தது. “இப்ப சைக்கிள் எங்க?”
“கொண்டு வந்துட்டேன்பா. அவ சைக்கிள் இல்லாமக் கெடக்கட்டும்.” அவனது முகம் பிடிவாதம் கொண்டு கடுமையானது. சமாதானப்படுத்தினேன். “வா.. கார்ட்டூன் சேனல் வைக்கிறேன்.. வா.” தூக்கிக்கொண்டு வந்து என்னருகில் வைத்துக் கொண்டேன்.
டி.வி பார்த்துக் கொண்டிருந்தவன் திடுமென எழுந்து வெளியே போனான். வினாடிகளில் திரும்பி வந்து அருகில் உட்கார்ந்து கொண்டான். சிறிது நேரத்தில் திரும்பவும் எழுந்து போனான். அப்புறம் வந்து உட்கார்ந்தான்.
“என்னப்பா..” என்றேன்.
“ஒண்ணுமில்லப்பா... சைக்கிளை பாத்துட்டு வர்றேம்பா” என்றான். தொண்டையடைத்து குரல் கம்மி ஒலித்தது. நெருக்கமாக அணைத்துக் கொண்டு தலையைக் கோதி விட்டேன்.
திரும்பவும் எழுந்து வெளியே போனான். ஆனால் இந்த தடவை வரக் காணோம். வராண்டாவைத் தாண்டி வெளியே போய்ப் பார்த்தேன்.
வாசலில் சைக்கிளைப் பிடித்துக் கொண்டு நின்றிருந்தான். அவன் பார்த்துக் கொண்டிருந்த திசையில் ஷோபியா இன்னொரு பையனுடன் பந்து விளையாடிக் கொண்டிருந்தாள்.
“நிகில்” இவனை அழைத்தேன். திரும்பியவன் முகம் வலியில் தவித்திருந்தது.
“அப்பா... ஷோபியா ஏங்கூட பேச மாட்டாளா?” சைக்கிளை அப்படியேப் போட்டுவிட்டு, ஓடிவந்து என்னைக் கட்டிப்பிடித்து அழ ஆரம்பித்தான்.
*
இலங்கைப் போரும், கலிங்கப் போரும்

படங்களையும், செய்திகளையும் படித்து விட்டு ஒவ்வொரு நாளும் ஈரக்குலை பதறிப் போகிறேன். ஐயோ, ஐயோவென உடல் முழுவதும் புலன்கள் துடிக்கின்றன. வெடித்த உடல்களும், சிதறிய உறுப்புகளும், எலும்புகள் தெரிய கருகிக் கிடக்கும் பிஞ்சுக் குழந்தைகளும் மனித இயல்புகளை கடுமையாய் தாக்குகின்றன. தீபாவளி வேட்டுக்கே அலறிக்கொண்டு வீடுகளுக்குள் ஓடிவரும் நம் குழந்தைகளை, இலங்கயின் யுத்த பூமியில் வைத்து கற்பனை செய்து பார்க்கக்கூட நம்மில் யாருக்கும் துணிவு இருக்காது. முத்துக்குமரன் ஏன் தீக்குளித்தான் என்பதை என் மூளையில் படர்ந்திருக்கும் வெப்பம் சொல்கிறது. என்ன செய்வது, எப்படி இந்தக் கொடுமைகளை நிறுத்துவது என்று எந்த உருப்படியான வழியுமற்று, கையாலாகாத்தனம் சிந்தனைகளையும், செயல்களையும் பீடிக்கிறது. பேச்சுககளும், ஆவேசமானக் கத்தல்களும், உணர்ச்சியை ஏற்றி பித்தம் தலைக்கேற மட்டுமே வைக்கின்றன. இந்தச் சண்டை, பிரச்சினைகளின் பூர்வாங்கம், வரலாறு, நிலைபாடு எனும் ஆராய்ச்சிகளில் ஆளுக்கொரு திசையில் நின்று கொண்டிருக்க, கிழக்கு திசையில் ஒவ்வொரு நாளும் சூரியன் இரத்தம் சொட்டச் சொட்டச் சொல்லும் செய்திகளை என் ரத்தம் கேட்டுக் கொதிக்கிறது.
நண்பர் விமலா வித்யா அவர்களிடம் வேகமாக கொட்டி தீர்த்த போது, “என்ன செய்ய முடியும், நீங்கள் நிதானமாக இருங்கள். போர் என்று வந்தால் இப்படித்தான் ஆகும். ஆயுதம் எடுக்கிறவர்கள் இதையெல்லாம் எதிர்பார்த்துத்தான் ஆக வேண்டும்.” என்றார். “என்ன சொல்கிறீர்கள். பாதிக்கப்படுவது நம் குழந்தைகள்... சாதாரண அப்பாவி மக்கள்” என்று அரற்றினேன். “ஆமாம்.. யுத்தம் எங்கு நடந்தாலும், அங்கு முதலில் குழந்தைகளும், பெண்களும்தான் பாதிக்கப்படுகிறார்கள். மிக அருகே, நமக்கு நெருக்கமானவர்களுக்கு இந்த கோரம் நிகழும்போது துடித்துப் போகிறோம்” என்றார். அறிவுக்குப் புரிந்தமாதிரி இருந்தாலும், உணர்வுக்கு புரியவே இல்லை என்பதைச் சொல்லியாகத்தான் வேண்டும்.
நேற்று விடுதலைப் புலிகளின் விமானம் கொழும்பில் தாக்குதல் என்று கேள்விப்பட்டவுடன் சட்டென்று ஒரு உற்சாகம் பற்றிக் கொண்டது. திருப்பி அடிப்பது நம் மனித சுபாவத்தில் அப்படியொரு ஆர்ப்பரிப்பை ஏற்படுத்துகிறது. கொஞ்ச நேரம் கழித்து, அந்த நாசக்கார நாய் ராஜபக்ஷே இந்தக் கோபத்தையெல்லாம் நம் அப்பாவி மக்கள் மீதுதானே காண்பிப்பான் என்று சிந்தனை வந்தபோது கலக்கமாய் இருந்தது. இருக்கிறது. காலம் நம்மை வேடிக்கை பார்க்கிறது.
0
பெரும் வெற்றியின் மீது உட்கார்ந்து ஒரு சக்கரவர்த்தி உடைந்து, அழுது புலம்பிய வரலாற்றைச் சிறுவயதிலேயே நாம் படித்திருக்கிறோம். யுத்த களத்தில் இறந்து போனவர்களைப் பார்த்து பார்த்துக் கதறினார் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். அசோகரின் அத்தனை ஆசைகளையும் கொன்று, அன்பை விதைத்தது கலிங்கத்து யுத்தம் என்பது உலகுக்கேத் தெரியும். புத்தபிட்சுக்களே அந்த மகாச் சக்கரவர்த்தியின் மனமாற்றத்துக்கு காரணம் என்பதும், அசோகர் தன் பிற்காலம் முழுவதும் புத்த மதத்தைத் தழுவினார் என்பதும் அதன்பின் அவர் எந்த நாட்டின் மீதும் யுத்தம் தொடுக்கவில்லை என்பதும் ஒரு அதிசயமாக, ஆச்சரியமாக நமக்குள் இறங்கியிருக்கிறது. புத்தம் சரணம் கச்சாமி என்னும் வார்த்தை ஒலிகளுக்குள் நம்மையறிமால் நாம் ஒரு சாந்தம் கொள்வதில் இவ்வளவு அர்த்தங்கள் இருக்கின்றன.
இது எல்லாவற்றையும் இலங்கை யுத்தம் நொறுக்கி விட்டது. சிங்களப்படையின் துப்பாக்கி வெடியோசைகளே இப்போது புத்தம் சரணம் கச்சாமியாக கேட்கிறது. புத்த மதத்தைச் சார்ந்த ராஜபக்ஷேக்கு இந்த வெறி எங்கிருந்து வந்தது? எந்தப் படங்களையும், செய்திகளையும் பார்த்து நாம் கதறுகிறோமோ, அவைகளே ராஜபக்ஷேவை குதூகலிக்க வைக்கின்றன. மதங்கள் போதிக்கும் அன்பிற்கு அரசியலிலும், அதிகாரத்திலும் இடமில்லை என்பதுதான் அந்த நாய் ராஜபக்ஷே எல்லோருக்கும் சொல்லும் செய்தியாக இருக்கிறது. ஏசுவை சிலுவையில் அறைந்தது போல, பக்ஷே புத்தரையும் கொன்று விட்டான்.
0
சிங்கள இராணுவத்தின் வெறியாட்டத்தையும், அட்டூழியங்களையும் உலகின் கவனத்துக் கொண்டு போக வேண்டும் என்பது முக்கிய முடிவாய்ப் படுகிறது. கோரப்பல் முளைத்த ராஜபக்ஷேவின் முகத்தை பூமியில் வாழும் மனிதர்கள் அனைவரிடமும் அம்பலப்படுத்த வேண்டும். ஒரு சர்வதேச நெருக்கடியை இலங்கை அரசுக்குக் கொடுக்க வேண்டும். அதற்காக, ஐ.நாவிடம் முறையிடுவது சரியானதே. ஆனால் இந்த ஒபாமா வந்து தலையிட வேண்டும் என்று சிலர் வேண்டுவதுதான் சுருதி பேதமாக இருக்கிறது. இலட்சக்கணக்கில் குழந்தைகளையும், அப்பாவி மக்களையும் ஈராக்கில் கொன்று குவித்த வெறியன் புஷ்ஷின் நடவடிக்கையை ஆமோதிக்கிற ஒபாமா இலங்கை வந்து என்ன செய்யப் போகிறார். ஆத்திரத்தில், அவசரத்தில் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் எதோ செய்வது போல் இல்லை?
0
சென்ற வாரம் சில எழுத்தாளர்களின் படைப்புகளில் உள்ள சில வரிகளைச் சொல்லி இவை எந்தெந்த எழுத்தாளர்கள் எழுதியவை என்று சுவராஸ்யமாய் ஒரு விளையாட்டை பதிவிட்டிருந்தேன். பின்னூட்டம் இட வந்த சண்டாளக்கவி என்பவர், இலங்கையில் இவ்வளவுக் கொடுமைகள் நடக்கும்போது, நீங்கள் என்ன கண்ணாமுச்சு ரே விளையாடிக் கொண்டு இருக்கிறீர்களா, நீங்கள் ஒரு படைப்பாளியா என்றெல்லாம் கொட்டித் தீர்த்துவிட்டுப் போயிருந்தார். பிறகு பின்னூட்டம் இடவந்த சிலர் எனக்குத் தொலைபேசியில் சொன்னதையடுத்து நான் அந்தப் பின்னூட்டத்தை எடுத்து விட்டேன். இன்னும் சிலரது பதிவுகளிலும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்ததாகவும் கேள்விப்பட்டேன். எனவே, சில விஷயங்களை மெத்த பணிவுடன் சொல்லியாக வேண்டும் எனத் தோன்றுகிறது.
இலங்கையில் நடந்து வரும் சம்பவங்கள் நம் எல்லோரையும் சித்திரவதை செய்கின்றன. நம் சிந்தனைக்குள் இருந்துகொண்டு சதா நேரமும் வலி தருகின்றன. இங்கே யாரும் இந்த வேதனையிலிருந்து தப்ப முடியாது. ஆனாலும், நம் அன்றாட வாழ்வில் பல் துலக்கி, குளித்து, சாப்பிட்டு, தூங்கி என இயங்கிக்கொண்டேதான் இருக்கிறோம். இவைகள் எல்லாம் கெட்டால்தான் நாம் அவஸ்தைப்படுகிறோம் என்று அர்த்தமல்ல. அப்படியில்லையென்றால், இங்கு ஆவேசமாகப் பேசும் அனைவரையும் பரிசோதித்தாக வேண்டும். அன்றாட வாழ்வில் கூட, சோதனைகள் நேரும்போது அதிலிருந்து சிறிது விடுபட மனம் கோருகிறது. இது மனித இயல்பு. ஒன்றும் செய்ய முடியாமல், ஆனால் எப்போதும் அதைப்பற்றி மட்டும் பேசி, சிந்தித்துக் கொண்டிருந்தால் நாம் பைத்தியமாகத்தான் முடியும். கார்த்திகேயன் பாண்டியன் ‘சில காகிதப்பூக்கள், காதறுந்த ஊசி’ வலைப்பூவிற்கு சென்று பார்த்த போது காய்ச்சல் வந்தது போல் இருந்தது. தாங்க முடியவில்லை. என்னை நான் விடுவித்துக் கொள்ளவே, எழுத்தாளர்களின் துணையைத் தேடினேன். ரோம் எரியும்போது பிடில் வாசிக்க நான் ஒன்றும் நிரோ என்னும் மன்னன் இல்லை. மாதவராஜ் என்னும் சாதாரண பிரஜை.
ஆனால், நீங்கள் இப்படித்தான் அழ வேண்டும், இப்படித்தான் சிந்திக்க வேண்டும், இப்படித்தான் எழுத வேண்டும் என்று யாரும் யாரையும் நிர்ப்பந்திக்க முடியாது. இப்படி இருந்தால்தான் நான் இலங்கைத் தமிழருக்கு ஆதரவானவன் என்று எவரும் எனக்கு சர்டிபிகேட் தரத் தேவையில்லை. இதுவும் வன்முறை, அராஜகம் என்றுதான் சொல்வேன். மன்னிக்க வேண்டும். என் வேதனையை புரியவைக்க, என் நெஞ்சைப் பிளந்தெல்லாம் காண்பிக்க முடியாது. அல்லது தீக்குளித்தெல்லாம் நிரூபிக்க முடியாது.
*
ஆயிரமாயிரம் அறைகள் கொண்ட ஆகப்பெரும் கட்டிடம் இது
பல்லாயிரம் அறைகள் கொண்ட ஆகப்பெரும் கட்டிடம் இது. எனக்கென்று ஒரு அறை எடுத்துக் கொண்டேன் நான்.
ஜன்னல் வழியே பார்க்கிற போது யார் யாரோ வந்து போய்க் கொண்டு இருந்தார்கள். ஒன்றும் முதலில் புரியவில்லை.
பிறகு என் அறைக்குள்ளும் வர ஆரம்பித்தார்கள். சிலர் சிரித்தார்கள். கைகொடுத்தார்கள். பேசவும் ஆரம்பித்தார்கள். சிலர் அமைதியாய் மேலும் கீழும் பார்த்தார்கள். இன்னும் சிலர் இவன் ஏனிங்கு என்று முறைத்தார்கள்.
நானும் மற்றவர்களின் அறைகளுக்குச் செல்ல ஆரம்பித்தேன். சிரித்தேன். கைகொடுத்தேன். பேசினேன். முறை தெரிந்து கொண்டேன். பத்திரமாக திரும்பி வந்தேன்.
திடுமென சிலர் வேகமாக வ்ந்து கதவைத் திறந்து பார்த்துவிட்டு, “ஓ.ஸாரி” என சடாரென்று கதவடைத்துவிட்டும் போனார்கள்.
ஓசைப்படாமல் கதவைத் திறந்து என் பின்னால் நின்று பார்த்துவிட்டுப் போனவர்களும் உண்டு.
உலகின் சகல மூலைகளிலிருப்பவர்களும் இங்கு இருந்தார்கள்.
ஒருவருக்கொருவர் பழகியவர்கள் சிலர் மாறி மாறி அவர்களின் ஒவ்வொருவர் அறைகளுக்கும் முறைவைத்து கும்பல் கும்பலாய் சென்று அரட்டை அடித்துக்கொண்டும் இருந்தார்கள்.
பெரும் சண்டைகளும் நடந்த வண்ணம் இருந்தன சில அறைகளில் எப்போதும்.
யார் அறைக்கும் போகாமல், தானுண்டு, தன் வேலையுண்டு என்றும் இருக்கத்தான் செய்தார்கள். அவர்கள் அறைக்கும் மற்றவர்கள் செல்வது நாளாக, நாளாக குறைந்து போனது. பிறகு சில காலம் கழித்து உள்ளே கதவை இழுத்துப் பூட்டிக் கொண்டார்கள் அவர்கள்.
அடுத்தவர் அறைக்குப் போன சிலர் தங்கள் அறைக்குத் திரும்பாமல், அங்கேயே வாசம் செய்ததும் நடந்தது.
அங்கும் இங்கும் சுற்றிப் பார்த்து விட்டு இதோ வருகிறேன் என்று வெளியே போன சிலர் திரும்பவேயில்லை. யாருமற்ற அவர்கள் அறைகள் பத்திரமாகவே இருந்தன.
நிறைய கதவுகள் வெளியே பூட்டியேக் கிடந்தன.
நாளாக நாளாக எந்நேரமும் யார் யாரோ என்னறைக்குள் வந்து போய்க்கொண்டு இருந்தார்கள்.
வெளியே சென்றிருந்தாலும், தூங்கிக் கொண்டு இருந்தாலும் என்னைப் பேச அழைத்தார்கள்.
”இது உன்னுடைய அறைதான், ஆனால் உன்னுடையது மட்டுமல்ல..” தூக்கத்தில் உளறிக்கொண்டிருந்தேன் நான்.
*
முட்டையாபிஷேகம்!
அழுகிப்போன ஒருவன் மீது வீசப்பட்டதால்
அழகிய முட்டை அழுகிய முட்டையானது!
சில நேரங்களில் காலையில் கேட்கும் பாட்டு ஒருநாள் முழுவதும் மனசில் ஒலித்துக் கொண்டிருக்கும். நாமும் முணுமுணுத்துக் கொண்டிருப்போம். இதென்ன சம்பந்தமில்லாமல் என நினைக்கத் தோன்றும். அதுபோலத்தான் இதுவும் எனக்கு நேருகிறது. எதாவது மனதிற்குள் ஒடினால் இப்படி எதாவது கிடைத்த தாள்களில் எழுதிக்கொண்டே இருப்பேன். நேற்று காலையில் எழுதியது இது.
________________________________________________________________
சாமிக்கு
இப்போது முட்டையாபிஷேகம்!
கோழிகள் ஒன்றும்
சும்மா அடைகாக்கவில்லை.
மதியம் சாப்பிடும்போது, வங்கியில், பக்கத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்தவரின் டிபன் பாக்ஸில் முட்டையைப் பார்த்ததும் இப்படித் தோன்றியது. உணவருந்திய பிறகு இப்படி எழுதி வைத்தேன்.
________________________________________________________________
அங்கே அவன் மீது செருப்பு
இங்கே இவன் மீது முட்டை
மனம் எரிந்த காட்சிகளை அடுத்து
மக்கள் எறியும் காட்சிகள் இப்போது
சுய உதவிக்குழுக்களின் பெண்கள் சிலர் வங்கிக்குள் நுழையும்போது வெளியே செருப்பைக் கழற்றிவிட்டு உள்ளே வருவார்கள். “சும்மா செருப்பை மாட்டிக் கொண்டு உள்ளே வாங்க..” என்றேன். தயக்கத்துடன், கால் கூச செருப்பணிந்து உள்ளே நுழைந்தார்கள். அப்போது பேனாவை எடுத்து எழுதியவை இவை.
________________________________________________________________
ஏழு மணிக்கு வீட்டிற்குள் நுழைந்தவனை “என்னங்க.. ஒரே ஜாலி மூடில் இருக்குற மாதிரி இருக்கீங்க... டீ.வி பாத்திங்களா” என்றாள் மனைவி.
பார்த்தேன்.
முதலில் எறிவதும்
பிறகு எரிந்ததும் வந்தன.
காட்சிகள் மாறி இருந்தன.
இப்படி எழுதியதோடு
நேற்று முடிவுக்கு வந்தது.
*
கதைகள் வாசிப்பவர்களோடு ஒரு விளையாட்டு...
நண்பர்களே!
உங்கள் வாசிப்புத் திறனை சோதித்துப் பார்க்க சின்னதாய், சுவராஸ்யமாய் ஒரு விளையாட்டு.
தமிழின் சில முக்கிய நாவல்களில் வரும் சில சித்தரிப்புகள் இங்கே தந்திருக்கிறேன்.
எழுத்தாளரையும், நாவலையும் கண்டுபிடியுங்களேன்!
_________________________________________________________________
1. கலியானத்திற்கு மாற்று ஏற்பாடு ஏதாவது காண முடிகிறதா? நோய்களால் இந்த மந்தை அழிந்துவிடப் போவதில்லை என்பது உறுதி. அச்சத்தாலும், அழிந்து விடாது என்பது நிச்சயம். மண வாழ்க்கையில் அமைதியும், ஆனந்தமும் கண்டவர் எத்தனை பேர். ஆனால் மணமான பிறகுதான் ஆணுக்கும் சரி, பெண்ணுக்கும் சரி, வாழ்க்கையே துவங்குவதாய் ஏகோபித்த நம்பிக்கை உலகம் முழுவதும் உண்டாகி விட்டதே! தெய்வ நம்பிக்கையாவது சிலசமயம் சில இடங்களில் ஆட்டம் காண்கிறது. ஆனால் இந்த கல்யாண நம்பிக்கை எல்லாக் காலங்களிலும் எல்லா இடங்களிலும் மாறுபடாமல் இருந்து வருகிறது.
*
2.அந்தத் தெருவிலே உள்ள வீடுகளிலேயே ஒன்றுக்கொன்று உள்ள முரண்பாடுகளும் ஏற்றத்தாழ்வுகளும் இன்னும் அவனுக்குச் சொல்லப்படவில்லை. எனினும் ஹென்றியின் உள்ளுணர்வுக்கு அது புரிந்தது. அந்தத் தெரு ஒருமுன்கூட்டிய திட்டத்துடன் அமைக்கப்பட்டதல்ல என்று அதன் தோற்றத்தில் தெரிந்தது. தத்தம் மனப்போக்கில் சுதந்திரமாகக் கட்டிக்கொள்ளப்பட்ட தங்களது இருப்பிடங்களுக்குச் செல்லும் வழியையே அவர்கள் தெருவென்று அழைத்து வந்திருந்தனர். எனவேதான் ஒரு வீடு மிகவும் உள்ளடங்கி, முன்புறத்தில் மாட்டுக் கொட்டகையும், வண்டிகள் நிறுத்தும் இடமுமாக இருக்கிறது. இன்னொன்று அதிகமாக முந்திக்கொண்டு வந்து அநாவசியமாக நடுத்தெருவில் நிற்கிறது. அப்புறம் இரண்டு வீடுகளுக்கு இடையே ஒரு திடலில் ஒரே காடாய் மண்டிக் கிடக்கிறது. அப்புறம் ஆடாதொடைச் செடி அடர்ந்த வேலிக்குப் பின்னால் சிறிய நீர்க்குட்டை இருக்கிறது. அதையடுத்து இன்னொரு வீடு. அந்த வீடு சின்னா பின்னமாகச் சிதைந்து கிடக்கிறது. இந்தப்பக்கம் தேவராஜனின் வீட்டுப் பக்கத்தில் நிரந்தரமாகவே அமைந்திருக்கிற இரண்டொரு குடிசைகள். அதன் பிறகு கொஞ்சம் வயல்வெளி. கடைசியில் அந்த ஐயர் வீடு. தெரு அகலமாய், மிருதுவாய், வண்டிகள் போனதால் ஏற்பட்ட சுவடுகளுடன் குளிர்ந்து கிடக்கிறது.
*
3. காலையில் எப்போதும் நேரத்தோடு எழுந்து விடுவான். ஞாயிறிலும் கூட. சில ஞாயிறுகளில் மற்றவர்கள் சண்முகத்தின் கவலையற்றுத் தூங்கி விடுவார்கள். எழுந்து பார்க்கும் போது சூரியன் சுடரும். சண்முகத்துக்கு அப்போது வெளியே போக முடியாது. கூடியவரை அடக்கிப் பார்ப்பது. அடக்க முடிகிற விஷயமா இது? சட்டை பேண்டை மாட்டுக் கொண்டு பாக்கெட்டில் சில்லறையும், சீசன் டிக்கெட்டும் போட்டுக் கொண்டு ஸ்டேஷனுக்கு வருவான். செம்பூர் ஸ்டேஷனில் அதற்கு செகரியம் கிடையாது. குர்லா ஸ்டேஷன் வந்து, வரிசையில் காத்து நின்று, முந்திப் போனவன் போட்டு விட்டுச் சென்ற பீயைத் தண்ணீர் விட்டுத் தள்ளச்சொல்லி, டப்பாவில் தண்ணீர் நிறைத்தபின் உட்காருவான். போனவுடன் அப்படியே உட்கார்ந்து விடவும் முடியாது. பேண்ட்டை முட்டி வரை மடக்கி விட்டு, பெல்ட் அவிழ்த்து, அண்டர்வேரை கீழேத் தள்ளிவிட்டு.... கழித்து முடிப்பதற்குள் கதவில் தட்டல் கேட்கும். "சலோதீன் நம்பா...சலோஜல்தி....சலோ நோன் நம்பர்" என்று. தான் மிகத் தாமதித்து விட்டோமோ என்று பதைத்து அவசரமாய் முக்கி.... அது பெரிய வேதனை சார்.
*
4. ஊருக்குள்ள நொழையுற எடத்துல சின்ன பஸ் ஸ்டாண்டு இருக்கு. அதுதான் கடேசி பஸ் ஸ்டாண்டு. அதுக்கு மேல பஸ் போகாது. எங்க உலகமே அத்தோட முடிஞ்ச மாறித்தான். பக்கத்துல ஒரு ஓட போகுது. மழ பெஞ்சா அதுல தண்ணி வரும். இல்லன்னா அது நாத்தமெடுத்த பீக்காடுதான். எடது பக்கத்துல ஓடப்பட்டின்னு ஒரு பத்து இருபது வீடுக இருக்கு. அங்க பூரா பனையேறி நாடார்க இருக்காக. வலது பக்கம் தெருக்கூட்ற கொரவனுகளும், செருப்புத் தைக்கிற சக்கிலியனுகளும் இருக்காக. கொஞ்சந்தள்ளி, சட்டிபான செய்ற கொசவங்களும் இருக்காக. இவுகளுக்கு அடுத்துத்தான் பள்ளக்குடி. அதையொட்டி நாங்க பறக்குடி. ஊருக்கு கெழக்க கல்லற இருக்கு. இதயொட்டித்தான் நாங்க இருக்கோம். மத்தபடி தேவமாரு, செட்டிமாரும், ஆசாரிக, நாடாருக வருசையா இருக்காக. இவங்களுக்கு அப்பால நாய்க்கமாரு தெரு. அங்க ஒரு ஒடையார்பட்டி இருக்கு. அதுல ஒடையார்க இருக்காகளாம். இதெப்படி மேச்சாதியா ஒருபக்கம், கீச்சாதியா ஒரு பக்கம்னு பிரிச்சாக தெரில. அவுக எங்க தெருப்பக்கம் வரவே மாட்டாக. பஞ்சாயத்து போர்டு, பால்பண்ணை, பெரிய கடைக, கோயிலு, பள்ளிக்கொடங்க, எல்லாமே அவுக தெருக்குள்ளதா இருக்கு. அவுக எதுக்கு எங்க தெருக்கு வரப்போறாக?
*
5. சவநகரம் எலும்புக் கூடுகளை அடுக்கி உருவாக்கப்பட்ட அமைப்பினை உடையது. மாமிசங்களை உருக்கி ஒட்டப்பட்டு அடுக்கமைக்கப்பட்ட சுவர்கள். திசுக்கள், நரம்பிழைகள் இவை இங்கு இயந்திரங்கள் உருவாக்கப் பயன்படுத்தப்பட்டன. இந்நகரின் ஒவ்வொரு சலனமும் இயந்திர உருவுகளின் கதிர்வீச்சால் நிகழ்த்தப்பட்டன. ஆயுத உருவுகளே இந்நகரின் அனைத்து நகர்வையும் வடிவமைத்தன. நிறம் தீட்டிய பிம்ப வடிவங்கள் மட்டுமே இந்நகரின் உயிர்ப்புடவை என்றும் அவற்றிற்கான இடப்பெயர்ச்சி கூறுகளே இந்நகரின் அனைத்து செயல்பாடுகளும் என்பது ஆதிக் குறிப்புகளின் வரையறை.
*
6. மரத்தடியில் எங்காவது ஒரு வசமான பறவையின் இறகு கிடைக்காதா என்று பார்ப்பார். அதை எடுத்து வேண்டிய அளவு போக மீதியை உரிப்பார். அப்படி அவர் உரித்துக் கொண்டிருக்கும் போதே காது நிலை கொள்ளாது; சீக்கிரம் கொண்டா கொண்டா என்று சொல்லுமாம்! எச்சிலை நன்றாகக் கூட்டி விழுங்கிவிட்டு, மேல்வேட்டி காற்றில் நகர்ந்து விடாமல் இருக்க, இழுத்து கக்கத்தில் இடுக்கிக்கொண்டு இறகின் நுனியைப் பதனமாக காதின் துவாரத்துள் நுழைப்பார். அப்போதே கண்கள் சொகத்தின் ஆரம்பத்தால் சொக்க ஆரம்பித்துவிடும். வேண்டிய அளவு நுழைத்தானதும் இறகின் அடியை இரண்டு விரல் கொண்டு கடைய ஆரம்பிப்பார். அய்யோ அந்த இன்பத்துக்கு எதை ஒப்பிட்டுச் சொல்ல. வாயைக் கோணலாக அகட்டிக் கொண்டு கண்களைச் சொருகி, மூடி, தலையை இறகின் கடைதலுக்கு ஏற்ப அசைக்கும் அவரைப் பார்ப்பவர்களுக்கும் ஒரு ஆனந்தம் வராமல் போகாது. இதிலே அடிக்கடி அவர் மிளகாயை கடித்தவர்போல் ஈஸ்....ஈஸ்... என்று வாய்வழியாக காற்றை ஓசையுடன், ரசித்து அனுபவித்து உள்ளுக்கு இழுப்பார். உச்சக்கட்ட சொகத்தில் அனைத்தையும் மறந்து அந்த லயிப்பில் கடைவாய் ஓரம் மளமளவென்று ஜொள்ளு எச்சில் வடிந்துவிடும்.
*
7. அவள் கனவுகள், காட்சிகள் எல்லாம் வேடிக்கையாக இருக்கும். வர்ணங்களும், ஒலிகளும் நிறைந்திருக்கும். ஒவ்வொன்றையும் நுட்பமாக படத்தை உட்கார்ந்து பார்த்து விளக்குவது போல் சொல்லுவாள். தண்டபாணிக்கு வியப்பாக இருக்கும். நமக்குக் கனவு வந்தால் பொத்தாம் பொதுவாக ஏதோ உருவம் வருகிறது, போகிறது. இவளுக்கு மட்டும் எப்படி இத்தனை நுணுக்கமாக வர்ணனைகள், நகைகள் எல்லாம் வருகின்றன என்று ஆச்சரியப்படுவார். அதுவும் சாதாரண மனிதர்கள் அவள் கனவில் தோன்றுவதில்லை. தேவர்கள், தோட்டங்கள், நட்சத்திரங்கள், கடல், கோபுரம், கப்பல், ஐந்தாறடித் தாமரைகள் இப்படித்தான் வரும். அவருக்கு வரும் காட்சிகளோ பஸ்ஸில் போகிறது, சாப்பிடுகிறது, யாரோ பையன் புத்தகத்தைத் தூக்கிக்கொண்டு ஒடிவருகிறது, இப்படித்தான் இருக்கும். ஒரு பெரிய ரவாத்தோசையை வைத்துக்கொண்டு வெகு நேரமாகத் தின்பது போல ஒரு கனவு. அது தின்னத் தின்ன தீராது. பாதிக்கு மேல் தின்ன முடியவில்லை. வயிற்றில் இடமில்லை. ஆனால் தின்றாக வேண்டும் என்று ஏதோ கட்டாயத்தில் உட்கார்ந்து விழித்துக் கொண்டே இருப்பார். அல்லது எண்ணூறு உப்பங்கழியில் கழுத்தளவு நீரில் நின்று கொண்டிருப்பது போல ஒரு காட்சி. இப்படித்தான் தண்டபாணியின் கனவுகள் மண்ணிலேயே கிடந்து புரண்டு கொண்டிருக்கும்.
*
8. புகழ் என்பதுதான் என்ன? நமக்குத் தெரியாதவர்களும் நம்மைத் தெரிந்து வைத்திருப்பதிலுள்ள சுகம்தானே? அனுபவித்துப் பார்த்தவர்களுக்குத்தான் அதன் அருமை தெரியும். அபார சுகம்தான் அது. சந்தேகமே இல்லை. ரோட்டில் நடந்து செல்கிறபோது பின்னாலிருந்து தன்னைச் சுட்டிக் காட்டி இன்னார் என குசுகுசுத்து அறிமுகப்படுத்தும் குரல் காதில் விழுந்தும், விழாத பாவனையில் சென்றுவிடுகிற சுகம் லேசானதா? புகைப்படத்தோடு பேச்சு தினசரிகளில் பிரசுரமாகிறபொழுது ஒரு பேரானந்த நிலை ஏற்படத்தான் செய்கிறது. மேலுக்கு எல்லாம் துறந்துவிட்டதுபோல் காட்டிக்கொள்வது யாரால்தான் முடியாது? சுகம் சுகம்தான். கழுத்தில் மாலை விழுகிற பொழுது புல்லரிக்கத்தான் செய்கிறது. கரகோஷம் காதில் விழுகிற பொழுதும் அப்படித்தான். இதுபோன்ற இன்ப அனுபவங்களுக்கு ஆளானவன் அல்லவா தாமு? நன்றாக ஆளானவன். தன்னுடைய படத்தை ஒரு கார்ட்டூனிஸ்ட் எப்படிப் போடுவான் என்பதை பார்த்துவிட வேண்டுமென்ற அவனுடைய ஆசை மட்டும் நிறைவேறவே இல்லை. இருந்தாலும் அரசியல் வானில் திடீரென்று ஒருநாள் சுடர்விட்டுப் பிரகாசிக்கிற பொழுது, கார்ட்டூனிஸ்ட்கள் திணறக் கூடாது என்பதற்காகச் சில ஆடை அலங்காரங்களையும், சில உதட்டுப் பிதுக்கலகளையும் அவன் ஆதியிலிருந்து கடைசிவரையிலும் ஒரே மாதிரி காப்பாற்றிக் கொண்டும் வந்திருந்தான். இவ்வாறு எல்லாம் அவன் அனேகம் கனவுகள் விரித்து வருகிறபொழுதுதான் சற்றும் எதிர்பாராமல் இந்தியாவுக்கு சுதந்திரம் வந்து சேர்ந்தது. ஒரு மேடையில் வீராவேசத்துடன் பேசிக் கொண்டிருக்கிற பொழுது முன்னெச்சரிக்கையின்றித் தூக்கி எறியப்பட்டது போல் உணர்ந்தான் தாமு. அவனும் அவனையொத்த பிரஜைகளும் ஒருநாள் காலையில் கண் விழித்துப் பார்க்கிறபொழுது வெறும் பிரகைகள் ஆகிவிட்டிருந்தனர். ஜனங்களும் எதையோ பறிகொடுத்தது போலவும், தங்களைப் புரிந்துகொள்ள முடியாத ஏமாற்றத்திற்கு ஆட்பட்டு அலைந்து கொண்டிருப்பது போலவும் தாமுவுக்குப் பட்டது.
*
9. மழையைச் சிதைத்து வெற்றி கொள்ளும் வேகத்தில் காற்றும், எப்படித்தான் அடித்தாலும் பணிய மாட்டேன் என்று வைராக்கியத்தில் மழையும் போட்டியிட்டன. அடுத்தடுத்து மின்னலும் இடியும். மின்னல் வெளிச்சத்தில் காட்டையே பெயர்த்துக் கொண்டு போய்விடும்படி காற்று அடிப்பது தெரிந்தது. விசவு கயிறுகளை பலமாக்காமல் விட்டிருந்தால் இந்நேரம் பட்டி முழுவதும் திக்காலுக்கொன்றாய்ச் சிதறி விட்டிருக்கும். சுற்றிலுமிருந்து வெள்ளம் குருசின் மையத்தில் புகுந்தது. காற்று இப்போதைக்குக் குறையாது என்று தோன்றிற்று. காற்றில்லாமல் எவ்வளவு நேரம் கொட்டினாலும் பிரச்சினை ஒன்றுமில்லை. இரவெல்லாம் பெய்தாலும் கூட மேட்டுக் காட்டுமண் நீர் முழுவதையும் உறிஞ்சித் தாகம் தீர்த்துக் கொள்ளும். இரண்டு மூன்று மாதங்களாக துளி நீரையும் காணாத பெருந்தாகம். காற்றுதான் பிரச்சினை. எதெதற்கோ பழி தீர்த்துக் கொள்ளும் வெறி.
*
10. அது ஹைதராபாத் செகந்திராபாத்தில் சர்வ சகஜமாக வறுமை விரித்தாடும் ஆயிரக்கணக்கான முஸ்லீம் வீடுகளில் ஒன்று. ஒரே ஒரு கோழிமுட்டை விளக்கு. மூன்று நான்கு ஆண்கள். மூன்று நான்கு பெண்கள். மூன்று நான்கு குழந்தைகள். தவிர்க்க முடியாத கிழவி ஒருத்தி. அந்த மூன்று ஆண்கள் சேர்ந்து கொண்டு சந்திரசேகரனை கொன்று கூடப் போட்டு விடலாம். ஆனால் அவர்களிருந்த கிலி நிலையில் அவர்கள் சக்கையாக இருந்தார்கள். அந்த இடம் ஒரேயடியாக நாற்றம் அடித்துக் கொண்டிருந்தது.
சந்திரசேகரன் நிலைமையை புரிந்து கொள்வதற்குள் ஒன்று நடந்தது. அந்த பெண்மணிகளில் பதினைந்து, பதினாறு வயது மதிக்கத்தக்க ஒரு பெண் சந்திரசேகரன் முன்னே வந்தாள். "நாங்கள் பிச்சை கேட்கிறோம். எங்களை ஒன்றும் செய்து விடாதீர்கள்" என்றாள். இதைச் சொல்லிக் கொண்டிருக்கும் போதே நவளுடைய கமிஸைக் கழற்றினாள். ஒரு நொடிக்குள் பைஜாமா நாடாவையும் அவிழ்த்தாள். அந்த மங்கலான வெளிச்சத்திலயும் அவளுடைய விலா எலும்புகளை தனித்தனியாக எண்ணி எடுக்கும் வகையில் சந்திரசேகரன் முன் நிர்வாணமாக நின்றாள்.
*
11. ஒரு கையைத் தரையில் ஊன்றிக் கால்களை நீட்டியவாறே எழுந்து உட்கார முயன்றான் கந்தன். முதுகை வளைக்க முடியவில்லை. அப்படி வலி. 'அம்மா' என்று பெருமூச்சு விட்டுக் கொண்டே, முதுகை ஒரு மாதிரி நெளித்து எழுந்து உட்கார்ந்தான். கால்கள் நீட்டிக் கிடந்தன. இரண்டு கைகளும் பின்புறமாகத் தரையில் ஊன்றியிருந்தன. நேத்து அந்த வெறும் பயலுக்கு ஊத்தின முன்னூறு மில்லியையாவது வச்சிருக்கலாம். முளிச்ச நேரத்துல போட்டா கொஞ்சம் தெம்பா இருக்கும். ஆமா, இது குடிக்கிறதுனால வர்ற வியாதியில்ல. குடியாததுனால வர்ற வியாதி. வெறகுக் கடைக்குப் போகலாம். ஜிஞ்சராவது கிடைக்கும். கஷ்டப்பட்டு ஒரு கையால் தலையணையை தூக்கிப் பார்த்தான். கை சொன்னபடி கேட்கவில்லை. தலையணையை லேசாக தள்ளிவிட்டு தந்தியடிக்க ஆரம்பித்தது. மீண்டும் கையை தரையில் ஊன்றிக் கொண்டான். தேவைப்படாத ஒரு ஏப்பம். அதைத் தொடர்ந்து குமட்டல். குமட்டலோடு இருமல். விலா எலும்புகள் முறிவது போல இருந்தது. வாயிலிருந்து ஐம்பது மில்லி கோழை வழிந்து பனியனை நனைத்த பிறகு சிறிது நிம்மதி. சிறிது தெம்புங்கூட. வீராப்போடு ஒரு கையால் தலையணையைப் புரட்டினான். அதன் கீழ் ஒரு அழுக்குப் படிந்த இரண்டு ருபாய்த்தாள் கிடந்தது. இன்னும் கா ருபா வேணுமே! எங்காச்சும் வச்சிருக்கும். மீண்டும் அதே வீராப்போடு எழுந்து நின்றான். வேட்டி நழுவவும் சரிப்படுத்த முயலுகையில், இடது கைக்குப் பட்ட சுவரின் மீது தாங்கிக் கொள்ள முயன்றான். பிடி நிலைக்காது கீழே சரிந்தான்.
*
12. நோய்வாய்ப்பட்ட இருட்டறையில் சருகுகள் உதிர அம்மாவின் உடல் வெளிச்சம் மனதிலிருந்து கசிய கண்களை தூக்கத்தில் தாழ்த்தி கருத்திருந்த பார்வையடியில் மங்கலான பித்தப்பூ பிதற்றிக் கொண்டிருக்கிறது. கண்ணீர்த் தடம்பட்ட சுவர்களில் உலர்ந்த அம்மாவின் ரேகைகளைத் தொட்டான். கீறல்களில் நீர் ஊர்ந்து இருளில் அலைவதைப் பார்த்த விழியோர பீழைகுழி ரத்தமேறிச் சிவந்தது. கோரம்பாயில் அறுந்த நூல் சாயம் போன கோரை வெளிறிய கோடுகளில் உலவும் எறும்புகளின் மெனம் வதைபடும். நோயின் நிறம் பூசிய எறும்புகளின் பாசக்கயிற்றில் கலந்து பிரியும் உறவுகள். அறுந்த பாயின் நூல் இருட்டில் புதைகிறது. அது எங்கே சலனமாகிறது. வெப்பத்தைக் கக்கும் கிழிந்த கம்பளித் துளைகளில் அம்மாவின் விரல்கள் எட்டிப் பார்த்தன. விரல் எதையோ அசைத்தது நோயிலிருந்து.
*
13. பைத்தியம் பலவிதம் என்பார்கள். அது எவ்வளவு உண்மை என்பது இங்கு வந்த பின்புதான் தெரிந்தது. இந்த டயரியில் நான் உங்களுக்கு இன்னும் இரண்டொரு பைத்தியங்களை அறிமுகப்படுத்த விரும்புகிறேன். இது உங்களுக்கு சற்று ஆச்சரியமாகப்படலாம். எதையுமே நாம் ஒரு அசட்டு உணர்ச்சியுடன்தான் பார்க்க கற்றுக் கொண்டிருக்கிறோம். அபிப்பிராயத்திற்கு பயப்படுகிறோம். வியாதியைக் கண்டு பயப்பட்டு அதையே நமது அறிவென்று மயங்குகிறோம். தத்துவத்திற்கு பெயர் போன இந்த நாட்டில் ஒவ்வொரு தனி மனிதனும் தனக்கென்று ஒரு தத்துவம் வகுத்துக் கொள்ள மறுத்து விட்டான். மறந்து விட்டான்.
*
14. ஒரு ஆள் ராத்திரி இரண்டு மணிக்கு 200 கோடி ருபாயை வைக்க எத்தனை பெட்டி வேண்டும், அதை எப்படி வைக்க வேண்டும், எங்கே வைக்க வேண்டும் என்று யோசித்துக் கொண்டிருந்தான் என்றால் அவனுக்கு நிச்சயம் பைத்தியந்தான் பிடிக்கப் போகிறது என்று எனக்குத் தோன்றியது. மேலும் டாக்டர் நாதமுனி சமீபகாலமாக என்னை 'அண்ணே' என்று அழைக்க ஆரம்பித்திருந்ததைக் கவனித்தேன். 'இனிமேல் வாழ்க்கையில் இம்மாதிரி ஆட்களோடுதான் பழக வேண்டும் போல இருக்கிறது'. பணம் கைக்கு வருவதற்குள்ளாகவே நான் அண்ணனாக மாறிவிட்டது கவலையையும், பீதியையும் அளித்தது. பணத்தோடு சேர்ந்து இதுபோல் என்னென்ன விபரீதங்கள் வரப்போகிறதோ என எண்ணி விசனமுற்றேன். ஒட்டுமொத்தமாக பணக்காரர்களை எண்ணி மிகுந்த பரிதாப உணர்ச்சி ஏற்பட்டது.
*
15. தாங்கள் அனுப்பிய கடிதத்தை வாசித்து துக்க சாகரத்தில் மூழ்கினேன். தாங்கள் எனக்கு எழுதிய கடிதம் போல, ஒரு தாசிக்குக்கூட ஒருவரும் எழுதத் துணியார்கள். என்னிடத்தில் என்ன துன்மார்க்கத்தைக் கண்டு, அப்படிப்பட்ட கடிதத்தை எனக்கு எழுதினீர்கள்? நாம் இருவரும் எங்கேயாவது போய், அந்தரங்கத்தில் கலியாணத்தை முடித்துக் கொள்ளலாமென்று எழுதி இருக்கிறீர்கள். விவாகம் இல்லாத ஒரு கன்னிகையும், பிரம்மச்சாரியும் சேர்ந்து கொண்டு வெளிப்படுத்தினால் உண்டாகிற அவமானமும், அபவாதமும் உலகமுள்ள வரையில் நீங்குமா?
"என்னடா அது இதுன்னு வித்தியாசம். பாப்பார வீட்டுச் சாமி சிவப்பாயிருக்குமா, பறைய வீட்டுச்சாமி கறுப்பாயிருக்குமா? துலுக்க வீட்டுச் சாமி தொப்பி போட்டிருக்குமா, வேதக்காரச்சாமி சிலுவை போட்டிருக்குமா? எல்லாம் சாமிதான். எல்லோரும் மனுசந்தாண்டா".
*
16. பெரிய பாலம் கட்டுவதற்கு வெள்ளக்கார எஞ்சீனியர் கொடுத்த நரபலி, தலைச்சூலியான பிராமணப் பெண்ணை தத்தனேரி சுடுகாட்டில் பலி கொடுப்பதற்காக அந்தர விளக்காய் தொங்கி அழைத்துச் சென்ற மலையாள மந்திரவாதியை சட்டைக்கார சார்ஜெண்ட் பின்தொடர்ந்து போய் அக்கரை இறக்கத்தில் சுட்டுக் கொன்றது, பெரிய சண்டியர் கேருசாகியை சப்-இன்ஸ்பெக்டர் பாலசிங்கம் அடித்துக் கட்டி கரகரவென்று தெருப்புழுதியில் இழுத்துச் சென்றது, இவையெல்லாம் மாணவர்கள் அச்ச வியப்புடன் பேசிக்கொண்ட மர்ம நிகழ்ச்சிகள்.
*
17. நூலகத்தை எரித்த நெருப்பு நெகிமொலாக்களின் இரண்டாயிரம் ஆண்டுகளாக அவர்கள் நம்பிய பல சிந்தனைகளையும் ஒரே நாளில் சாம்பலாக்கிவிட்டது. அவர்களது உலகப்புகழ் பெற்ற அகராதிகளும் கலைக்களஞ்சியமும் கரிந்து மண்ணோடு மண்ணாகி விட்டன. அந்த நூல்களின் அழியாத பகுதிகளை உலகெங்குமுள்ள பழம்பொருள் பாதுகாப்பகங்களில் யாரும் காண முடியும். இவ்வாறு கலைக்களஞ்சியம் தயாரிப்பதிலும், சரித்திர ஆவணங்கள் உருவாக்குவதிலும் தன் வாழ்நாளையெல்லாம் கழித்த விசித்திரமான தெகிமொலா சரித்திர நாயகர்களின் கதை எப்படி முடிந்தது என்பதை மட்டும் தகித்துப்போன துண்டுத்தாள்களின் மூலம் இன்று அறிய முடிந்தது.
*
18. காந்தாரி அழுவதை நிறுத்தி விட்டாள். தன் பிள்ளைகள் இறந்ததை விடவும், இந்தத் துயரத்தின் மூல வேராக இருந்த மனிதனைத் தன் கண்களால் பார்ப்பதற்கே காத்திருந்தாள். அவள் அந்த மனிதனை முன் கண்டதேயில்லை. அவன் குந்தியின் சகோதரன் என்று அறிந்திருந்தாள். வசுதேவன் என்ற கிருஷ்ணன்தான் தன் பிள்ளைகளின் துயர சாவிற்கான மனிதன் என அறிந்திருந்தாள். அவள் தன் கண்களால் அந்த மனிதனைக் காண விரும்பினாள். அவள் தன் துக்கம் பெருகுவதற்குள் அந்த மனிதனின் முகத்தினை ஒரே முறையாவது பார்த்துவிட நினைத்தாள். என் பிள்ளைகளில் யார் அந்த வசுதேவனை அவமதித்தது? தன் பிள்ளைகளின் மீது எதற்காக அவனுக்கு இத்தனை வெறுப்பு. அவள் காத்துக் கொண்டிருந்தாள்.
*
19. "இன்னைக்கு ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு சமூகத்திற்கும் என்ன தேவைன்னு தெளிவாத் தெரியும். எல்லோரும் இந்த பூமியில்தான் வாழ்ந்தாகணும்னு தெரியும். அதனால பேச்சுவார்த்தை தவிர வேறு வழியே இல்லை. இன்னைக்கு ஒவ்வொரு துறையிலயும் ஒவ்வொரு விஷயத்தையும் பேச்சுவார்த்தைதான் தீர்மானிக்குது. இன்னைக்கு இந்த நிமிஷத்துல உலகத்துல எத்தனை கோடி மேஜைகளில் பேச்சுவார்த்தைகள் நடக்குதுன்னு யோசிச்சுப் பாருங்க. உலகம் இப்படி இருக்குறதுக்குக் காரணம் இந்த பல்லாயிரம் கோடி பேச்சுவார்த்தைகளோட சமரசப் புள்ளிகள்தான். ஒவ்வொரு அமைப்பும் ஒவ்வொரு கணமும் ஒரே சமயம் சமரசத்திலயும் இருக்கு, போராட்டத்திலயும் இருக்கு. இரண்டுக்கும் நடுவில பேச்சுவார்த்தை மேஜை தொடந்து நகர்ந்துகிட்டே இருக்கு. அந்தச் சலனம்தான் மனிதக் கலாச்சாரத்தோட சலனம். கடைசிப் போராட்டம், கடைசிச் சமரசம்னு பேசிய காலமெல்லாம் போயாச்சு. கடைசிப் புள்ளின்னு ஒண்ணு இல்லை. இருந்தா அது மனிதகுலத்தோட அழிவுதான்."
*
20. "தூ, அவள் உனக்குப் பெண்ணாயிருக்க வயசாச்சு. அதென்ன அக்கிரமம்? அடுக்குமா?" என்கிறாயா சாவித்திரி. இது விட்ட இடத்திலிருந்து தொட்டுத் தொடர்ந்து வரும் விதியின் பழிவாங்கல். இது உனக்குப் புரியாது. எனக்கேப் புரியலியே. இது சகுந்தலையின் கோபம். சகுந்தலை செத்துப் போனபின் அவள் கோபமாக மாறி, என்னை ஆட்டுவிக்கும் ஆட்டத்தில், அபிதா என் பெண்ணோ, பெண்டோ, இது என் செயலில் இல்லை. அபிதாவில் நான் காணும் சகுந்தலை, என்னில் தன் அம்பியைக் காண மாட்டாளா? சகுந்தலையில் அபிதா, அபிதாவில் சகுந்தலை. ஒருவருக்கொருவர், ஒருவரில் ஒருவர், இவர்கள்தாம் என் சாபம், விமோசனம் இரண்டுமே.
*
21. வண்ணான் சலவை செய்யும் கல் தண்ணீரில் மூழ்கியது. கழுதையின் மேல் அழுக்கு ஏற்றி வந்த வண்ணான் திரும்பி நடந்தான். அசனார் லெப்பையின் மதராசாவில் குர்ஆன் ஓதிக்கொண்டு இருந்த சிறுவர்கள் 'ரண்டுக்குக்' கேட்டு விட்டு வெளியேறினார்கள். வெளியேறியவர்கள் ஆற்றோரத்தில் வந்தனர். தவளை பிடிப்பதை பார்த்து நின்றனர். லெப்பை சட்டைக்குள் கம்பை மறைத்துக் கொண்டு ஆற்றோரத்தில் வந்தார். சில சிறுவர்கள் அவர் உடுத்தியிருந்த வேட்டியை அவிழ்த்து எடுத்து ஆற்றில் மீனுக்கு வலை வீசிக் கொண்டிருந்தனர். லெப்பை பதுங்கி வந்தார். மீனுக்கு வலை வீசிக்கொண்டிருந்த சிறுவர்களின் தொடையில் ஓங்கி அடித்தார். "சீ! உராங்குட்டிகளே!" சிறுவர்கள் அவிழ்த்தெடுத்த துணியைக் கையில் பிடித்துக் கொண்டு மதரசாவைப் பார்த்து ஓடினார். பெண்குழந்தைகள் வெட்கப்பட்டனர். கண்ணைப் பொத்திக் கொண்டார்.
*
நம் ஞாபகங்களுக்கான ஒரு விளையாட்டு. அவ்வளவுதான்.
விடைகள் என்னுடைய பின்னூட்டத்தில்.... கடைசியில் சொல்வேன்.
ஜூட்.... ஆரம்பிக்கலாம்!
*
13 வயதில் லண்டனில் ஒரு தந்தை; கிருஷ்ணகிரியில் சில தாய்கள்

‘லண்டனில் குழந்தை முகத்துடன் இருக்கும் 13 வயது ஆல்பி என்னும் சிறுவன் ஒரு குழந்தைக்கு தந்தையாகி இருக்கிறான்’ என்று ஒருவர் தனது வலைப்பக்கத்தில் ஒரு பதிவு எழுதுகிறார். அடுத்த சில மணி நேரங்களில் அதற்கு 3044 பின்னூட்டங்கள்! அதிர்ச்சியும், வேதனையும், கோபமும் கொப்பளிக்கும் வார்த்தைகளாக அவை இருக்கின்றன.
“இதுதான் பிரிட்டனின் எதிர்காலமா?”
“இதுவே நீடித்தால், ஆல்பி தனது 26வது வயதில் தாத்தாவாகி விடுவான்”
“பத்திரிக்கைகளும், தொலைக்காட்சிகளும், இணையத்தளங்களும் காண்பிக்கும் ஆபாசக் காட்சிகளின் விளைவுதான் இது”
“இனி, பாடப்புத்தகங்களோடு கருத்தடை மாத்திரைகளும், ஆணுறைகளும் குழந்தைகளுக்கு கொடுத்தனுப்ப வேண்டியதுதான்”
“இந்த சின்ன வயது தந்தையைக் காட்டிலும், புதிதாக பூமிக்கு வந்திருக்கும் அந்தக் குழந்தையை நினைத்தால் கவலையாய் இருக்கிறது”
“அடிப்படை செக்ஸ் கல்வியை உடனே நம் சந்ததியினருக்கு ஆரம்பிக்க வேண்டும்”
“நம் சமூகம் தறிகெட்டுப் போகிறது என்பதன் அபாய எச்சரிக்கை இது”
இப்படியே தொடரும் பின்னூட்டங்களுக்கு இடையே இரண்டு வித்தியாசமானவையும் இருக்கின்றன.
“தாய், தந்தை, குழந்தை மூவருக்கும் வாழ்த்துக்கள்”
“பொறாமையாக இருக்கிறது. ஐந்து மாதங்களாக முயற்சி செய்கிறேன். ஒன்றும் நடக்கவில்லை”
வேண்டுமென்றே, வித்தியாசமான பின்னூட்டங்களாக தங்களுடையவை பார்க்கப்பட வேண்டும் என யாரோ எழுதியிருக்கலாம். ஆனாலும் வார்த்தைகள் ஒரு ஓரத்தில் இருந்து தொந்தரவு செய்கின்றன.
இதற்கிடையே பத்திரிக்கைகள் இந்தச் செய்திக்குள் ஏற்படுத்துகிற சுவராஸ்யங்கள் அருவருப்பானவை. ‘அந்த பையன், தந்தையாகும் தகுதி பெற்றிருக்கிறானா என மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டதா’ என்று கேள்வியை முன்வைக்கின்றன. ‘யார் உண்மையான தந்தை’ என்று தலைப்பிட்டு, சாண்டெல்லி என்னும் அந்த 15 வயதுப் பெண்ணுக்கு மேலும் சில பையன்களோடு தொடர்பு இருப்பதாகச் சொல்லி சந்தேகங்களை கிளப்புவதில் மும்முரம் காட்டுகின்றன. 12 வயதில் அந்தப் பையன் தந்தையாகும் வாய்ப்பு உண்டா என்பதே இந்தச் செய்திகளுக்கு அடியில் தேங்கியிருக்கிற முக்கிய கேள்வியாக இருக்கிறது.
இன்னும் குரல் உடையாத ஆல்பி இவைகளை மறுக்கிறான். தான் மட்டும்தான் சாண்டெல்லியுடன் பழகியதாகச் சொல்கிறான். அவனும் ஒரு பெண்ணை குழந்தை பெற வைக்க முடியுமா என்கிற ‘பாலின சாகசமாக’ தன்னிடம் ஆல்பி முயற்சித்ததாக சாண்டெல்லி சொல்கிறாள். இரு குடும்பத்தாரும் அறிமுகமானவர்களாய் இருந்திருக்கிறார்கள். நடுத்தரத்துக்கும் கீழே பொருளாதார வசதியுள்ள குடும்பங்கள்தான். வார இறுதி நாட்களில் சாண்டெல்லியின் வீட்டுக்கு ஆல்பி வருவதும், அங்கேயே தங்குவதும் வழக்கமாகி இருக்கிறது. அதுதான் வீபரீதமாகி இருக்கிறது. தன்னுடல் மாற்றங்களை அறிந்தவுடன் அழுதிருக்கிறாள். அவனும் செய்வதறியாமல் திகைத்திருக்கிறான். 12 வாரம் கழித்து டாக்டரிடம் சென்றிருக்கிறார்கள். டாக்டர் உறுதி செய்தபின் பெற்றோர்களுக்குத் தெரிகிறது. காலதாமதமாகிவிட்டது, அபார்ஷன் வேண்டாம் என முடிவு செய்கிறார்கள். ஊருக்கு வெளியே 75 கி.மீ தொலைவில் ஒதுக்குப் புறமாக, ஒரிடத்தில் சாண்டெல்லி பராமரிக்கப்படுகிறாள். குழந்தை பெற்றபின் ஆஸ்பத்திரியிலிருந்து விஷயம் உலகுக்கு எட்டுகிறது. உலகின் மிக வயது குறைந்த தந்தை என ஆல்பி சொல்லப்படுகிறான்.
குழந்தையை வளர்க்க என்ன செய்யப் போகிறாய் என அவனிடம் கேள்வி கேட்டதற்கு, என அப்பா செலவுக்கு 10 பவுண்டு தருவார் என்றானாம். எதிர்காலம் குறித்து எதுவும் தெரியாத குழந்தைகள் மடியில், அவர்களது குழந்தை. ஆல்பியின் தந்தை, தன் மகனிடம் பேசப் போவதாகவும், இன்னொரு குழந்தை பிறக்காமல் அது தடுக்கலாம் என்றும் சொல்கிறார். அந்தப் பையன் ஆல்பியைச் சுற்றியே மொத்த விவாதமும் நடந்து கொண்டிருக்கும் வேளையில், சாண்டெல்லி தனது குழந்தைக்கு பால் கொடுத்துக் கொண்டிருக்கிறாள். அவளைப் பற்றி சில முணுமுணுப்புகள் மட்டுமே கேட்கின்றன. பெண்களின் உலகம் வேதனை மிக்கதாகவே இருக்கிறது.
இதையொட்டி பத்திரிக்கைகளில், வயது குறைந்த தந்தையர் உலகின் பல இடங்களில் இருப்பதாகவும், நியுசிலாந்தில் அதிகம் பேர் இருப்பதாகவும் கண்டுபிடிப்புகள் நிகழந்த வண்ணம் இருக்கின்றன. குழந்தைகளின் ஒழுக்கம் குறித்தும், ஆண் பெண் உறவுகள் குறித்தும் இது போன்ற தருணங்களில் அதிகம் விவாதிக்கப்பட்டு, பிறகு கரைந்து போகும். இந்த விவகாரத்தில் யார் குற்றவாளி என பெரும் பட்டிமன்றமே நடந்து கொண்டிருக்கிறது. இந்த அவமானத்திற்கு பொறுப்பானவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்படுகின்றன. ஜோஸபின் என்னும் சமூக ஆர்வலர் சொன்ன கருத்துதான் சரியாய் இருக்கிறது. “இந்தக் குழந்தைகள் நாம் உருவாக்கிய அமைப்பின் பலிகிடாக்கள். சரிசெய்ய வேண்டியது அமைப்பைத்தான்” என்கிறார்.
தனிப்பட்ட நபர்களை குறிவைத்து விவாதம் நடத்துவதை விட்டு விட்டு அமைப்பின் கோளாறுகளை நாம் பேச வேண்டிய தருணம் இது. ஆனால் நாம் அப்படி பேசுவதில்லை. மாற்றங்களை விரும்புவோர் உரையாடல் துவக்க வேண்டிய புள்ளி இந்த அமைப்பிலிருந்துதான். பலவீனங்களின் விளிம்பில் கொண்டு போய் நம் மனிதர்களை நிறுத்தி எந்த சமயத்திலும் ஊதியே தள்ளி விடுகிற நிலையில்தான் இந்த அமைப்பு வைத்திருக்கிறது.
இதோ லண்டனைவிட, அதிர்ச்சி நிறைந்ததாய் இருக்கிறது நம் தமிழகம் தருகிற ஒரு செய்தி. எந்த விவாதங்களும் கவனிப்பும் இங்கு இல்லை. சமூகத்தின் மீது கோபம் கோபமாய் வருகிறது.
கிருஷ்ணகிரி அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 9 முதல் பிளஸ் டூ வரை படிக்கும் மாணவிகளில் 27 பேருக்கு திருமணம் ஆகிவிட்டதாகவும், பிளஸ் டூ படிக்கும் மாணவி ஒருவர் கர்ப்பத்துடன் பள்ளிக்கு வருவதாகவும் சொல்லப்படுகிறது (தீக்கதிர்:18.2.2009). தாலியை சட்டைக்குள் மறைத்து பள்ளிக்கு வருவார்களாம். ஆசிரியர்கள் கண்டித்தால் பள்ளிக்கு வருவதை நிறுத்தி விடுவார்களாம். இது குறித்து ஆராய்ந்த போது, பெற்றோரின் சம்மதத்தின் பேரில் இப்படி நிகழ்ந்து கொண்டிருப்பது தெரிய வந்திருக்கிறது.
கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்டங்களில் தொழில்வளம் அதிகம் இல்லை. விவசாயமும் இல்லை. இந்த மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் கூலி தொழிலாளர்களாக சாலை அமைப்பது, சாக்கடை வெட்டுவது, டெலிபோன் மற்றும் மின்சார வயர்கள் பதிக்க குழி வெட்டுவது, கட்டிட வேலை செய்வது என வெளியூர்களுக்கு செல்கிறார்கள். தங்கள் குழந்தைகளை படிக்க வைக்க முடிவதில்லை. படிக்க வைத்தால் குழந்தைகள் வீட்டில் தனியாக இருக்க வேண்டும். அது வீபரீதமாகி விடுகிறது. எனவே பெற்றோர்களே ’பிள்ளைப் பெற்றாலும் கற்கை நன்றே’ என்று தங்கள் குழந்தைகளுக்கு சின்ன வயதில் திருமணம் செய்து வைக்கிறார்களாம்.
இப்போது நாம் யார் மீது குற்றம் சாட்டப் போகிறோம்?
*
ஸ்லம் டாக் மில்லியனரில் கரைந்து போன ஸ்மைல் பிங்கி
எட்டு வயது சிறுமி பிங்கியின் உதடுகளில் இப்போது பூத்திருக்கும் புன்னகையை லாஸ் ஏஞ்செல்ஸில், ஆஸ்கருக்கான திரையில் உலகம் காணப் போகிறது. பிறந்தவுடன் இவள் முகத்தைக் காண சகிக்காமல், முகத்தைத் திருப்பிக்கொண்ட இவளது தாய் ஷிம்லாதேவி இப்போது மகளையே பார்த்துக் கொண்டு இருக்கிறார். உத்திரப்பிரதேசத்தில், மிர்சாபூர் மாவட்டத்தில் ரம்பூர்தபாஹி கிராமத்தில் இன்று இவள்தான் தேவதை. சிலகாலம் முன்பு வரை ‘கிழிந்த உதட்டுக்காரி’ என்று கிண்டல் செய்து கொண்டிருந்தவர்கள் இன்று நேசத்துடன் பிங்கி என்று அழைக்கிறார்கள். சகக் குழந்தை ஒன்று இவளைக் கட்டி அணைத்துக் கொள்கிறது.
யாருடனும் விளையாட முடியாமல், இயல்பாக பேச முடியாமல், பழக முடியாமல் போன பழைய நினைவுகள் எல்லாம் இப்போது ஆறியிருக்கலாம். ஆனால் அந்தக் காலம் கொடுமையானவை. பிறக்கும் போதே உதட்டில் இருந்த அந்த சிறு பிளவு இவளை மற்றவர்களிடமிருந்து தொலைதூரத்துக்கு விரட்டியிருந்தது. கண்ணாடியில் தன்னைப் பார்த்து வெதும்பும் அந்தப் பிஞ்சுக் குழந்தையின் முகம் வாடிப் போகிறது. ஒருச் சின்னத் துண்டு நிலத்தில் எதோ வயிற்றுக்கும் வாய்க்குமாக ஐந்து குழந்தைகளோடு வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கும் இவளது தந்தை ராஜேந்திர சோங்கர் “இவள் செத்துப் போயிருக்கலாம்” என்று பலநேரங்களில் நினைத்ததுண்டு. முகத்தையே கோரமாக காண்பிக்கும் அந்த உதடுகளை சரி செய்யும் ஞானமும், பணமும் அவருக்கு இல்லை.
39 நிமிடங்கள் ஓடும் “ஸ்மைல் பிங்கி” எனும் இந்த ஆவணப்படம், பிங்கியின் முகத்தில் இருந்த துயரம் களையப்பட்டு புன்னகை பிறந்த கதையைச் சொல்கிறது. பங்கஜ் என்னும் சமூக சேவையாளர் ஒருவர், மக்களிடம் இந்த நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, அது சரி செய்ய முடியும் என நம்பிக்கையளித்து, பாதிக்கப்பட்ட குழந்தைகளின் குடும்பத்தை சந்தித்து விளக்குகிறார். அப்படி அவர் காணும் குழந்தைகளில் பிங்கியும் ஒருத்தியாக இருக்கிறாள். ஸ்மைல் டிரெயின் என்னும் அமைப்பின் மூலம் இலவசமாக இந்த ஆபரேஷன் செய்ய ஏற்பாடு செய்யப்படுகிறது. 45 நிமிடங்கள் நடக்கும் ஆபரேஷனுக்குப் பிறகு பிங்கியிடம் கண்ணாடி கொடுக்கப்படுகிறது. ஆபரேஷன் நடந்த வலியையும் மீறி பிங்கி சிரிக்கிறாள்.
ஒவ்வொரு வருடமும் 35000 குழந்தைகள் இந்தியாவில் இப்படி கிழிந்த உதடுகளோடு பிறப்பதையும், அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படாமல் பரிதாபத்திற்குரியவர்களாய் வாழ்வதையும் குறிப்பிடுகிறது இந்த ஆவணப்படம். பல மேலை நாடுகளில், இப்படிப்பட்ட குறையொன்று இருப்பதே தெரியாதாம். அப்படி பிறந்த குழந்தைகளுக்கு அடுத்த நான்காவது நிமிடமே அறுவை சிகிச்சை எளிதாக நடந்து விடுமாம்! பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்தப் படம் ஜன்னலைத் திறந்து வைப்பதாய் இருந்தால் போதும் என்கிறார் இப்படத்தை இயக்கிய, பிரேசில் நாட்டுக்காரரான மேஹன் மைலன்.
லாஸ் ஏஞ்செல்ஸுக்கு பிங்கி அவளது தந்தையோடும், அவளை ஆபரேஷன் செய்த டாக்டரோடும் செல்ல இருக்கிறாள். பாஸ்போர்ட், விசா ஏற்பாடு செய்தாகி விட்டது. அந்த நிலமே அதிரும்படியாய் எப்போதாவது மேலே செல்லும் விமானத்தை அதிசயமாகப் பார்த்த அந்த சிறுமி, இன்னும் ஓரிரு நாட்களில், அதில் பயணம் செய்ய இருக்கிறாள். நிருபர் ஒருவர் பிங்கியிடம் கேட்கிறார். “ஆஸ்கர் என்றால் என்ன?”. பதில் வருகிறது, “தெரியாது”
இதற்கு முன்னர் உலகத்தரத்துக்கு இந்தியாவில் உருவாக்கப்பட்ட படங்களை, நாட்டின் ஏழ்மையை சித்தரிப்பதாகவே இருக்கின்றன என்று விமர்சனம் செய்து ஒதுக்கியது நடந்தது. சத்யஜித்ரேவும் இப்படிப்பட்ட கருத்துக்கு ஆளானார். இன்று ஆஸ்கருக்கு இந்தியாவிலிருந்து தேர்வு செய்திருக்கும் படங்கள் இரண்டு குறித்தும் அப்படிப்பட்ட விமர்சனங்கள் எழாமலிருப்பது விநோதமாக இருக்கிறது. எது எப்படியோ, ‘நாடு பொருளாதார வளர்ச்சியில் வீறுகொண்டு எழுந்து நிற்கிறது’ என கதைப்பவர்கள் இந்தப் படங்களைப் பார்த்து விட்டு முகத்தை எங்கு கொண்டு வைப்பார்கள்?
அதே நேரம் ஸ்லம் டாக் மில்லியனருக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் ஸ்மைல் பிங்கி ஆவணப்படத்திற்கு ஏன் கொடுக்கப்படவில்லை என்பதும் உறுத்துகிறது. ஸ்லம் டாக் மில்லியனருக்கான ஆர்ப்பாட்டங்களிலும், கொண்டாட்டங்களிலும் இந்த மிக முக்கியமான நிகழ்வு பலருடைய கவனத்துக்கே வராமல் கரைந்து போயிருக்கிறது. நமது தேசத்திலிருந்து ஒரு ஆவணப்படமும் ஆஸ்கர் விருதுக்கான போட்டியில் பங்குபெறுகிறது என்பது முக்கியமான செய்தியாக முன்வரவில்லை. கிழிந்து போன இந்த ஊடகங்களின் உதடுகளை எந்த ஆபரேஷன் மூலம் சரி செய்வது?
இவளது தேசம் பேசாவிட்டாலும், இவளது ஊரே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. “இவள் ஒரு தனலட்சுமி, பரிசோடுதான் வருவாள்” என்கிறார்கள் ஊர்மக்கள். இவளது தந்தையும் ஆஸ்கர் பரிசு கிடைக்கும் என உறுதியாக நம்புகிறார். தாய் ஷிம்லாதேவிக்கு அந்த நினைப்பெல்லாம் இல்லை. தன் குழந்தையின் முகத்தில் இந்த புன்னகை எப்போதும் இருக்க வேண்டும் என்று மட்டுமே வேண்டிக்கொண்டு இருக்கிறார்.
இந்திய இயக்குனர்களால் எடுக்கப்படும் படங்கள் எப்போது இதுபோன்ற பரிசுகள் பெறும் என நாம் வேண்டிக்கொண்டு இருக்கிறோம்.
பி.கு:
1.இந்த வருட ஜனவரி இறுதியில் பிங்கிக்கு காய்ச்சல் வந்திருக்கிறது. படுக்கையை விட்டு எழுந்திரிக்க முடியவில்லை. டாக்டரை அழைத்தால் பணம் கேட்பார் என்று பேசாமல் இருந்திருக்கிறது அவளது குடும்பம்.
2.இந்தப் படத்தின் டிரெய்லரை இங்கே பார்க்கலாம்.
*
ராமன் இல்லை, ராவணன்!
இயற்கை அடர்ந்திருக்கும் அழகான மலைப்பாதையில் அந்தக் கார் சென்று கொண்டிருக்கும். அவளும், அவனும் உள்ளே உட்கார்ந்திருப்பார்கள். “தேனிலவுக்கு ஆள் ஆளுக்கு ஒவ்வொரு இடம் சொன்னார்கள். நான்தான் இந்த இடத்தைத் தேர்ந்தெடுத்தேன்” என்று சொல்வான் அவன். அவள் மரங்களையும், வனப்பகுதிகளையும் பார்த்துக் கொண்டிருப்பாள்.
அவன் கால்பந்தாட்டத்தில் தனது பராக்கிரமங்களை சொல்ல ஆரம்பிப்பான். எந்தெந்த போட்டிகளில் எல்லாம் கலந்து கொண்டிருக்கிறான், என்னென்ன பரிசுகள் வாங்கியிருக்கிறான் என்பதையெல்லாம் ரசித்து ரசித்து சொல்வான். அவள் சுவராஸ்யமற்று கொஞ்சம் வெளியில் பார்ப்பாள். “என்ன நான் சொல்வதை கவனிக்கிறியா” என்று அவளை விடமாட்டான் அவன்.
“ அப்ப... எங்களுக்கு பெனால்டி கார்னர் கிடைச்சுதா... பந்து என் கால் அருகே... எல்லோரும் என்னையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்..” என்று சஸ்பென்ஸாக நிறுத்தி, அவளைப் பெருமிதமாக வேறு பார்ப்பான். அவள் டாஷ்போர்டைத் திறந்து தேடுவாள்.
“என்ன நான் சொல்றத கவனிக்கவில்லையா?” கொஞ்சம் அதட்டலோடு கேட்பான்.
“இல்ல... எதாவது பாட்டு கேக்கலாமே” என்று ஒரு சி.டி எடுத்து பிளேயரில் சொருகுவாள். கே.பி.சுந்தரம்பாள் ஞானப்பழத்தைப் பிழிந்து ரசமெடுக்கவும் அவள் வாய்விட்டுச் சிரிப்பாள். அவன் ஐயோ ஐயோவெனக் கத்தி பிளேயரை நிறுத்துவான். “அப்புறம் கேளு...” என்று ஆரம்பிக்கவும், கார் கிர்கிர்ரென இழுத்து நிற்கும். சாவியைத் திருகித் திருகி ஸ்டார்ட் செய்து பார்ப்பான். கதவை வேகமாகத் திறந்து வெளியே போய் காரை மிதிப்பான். செல்போனை எடுத்து யாருக்கோ போன் செய்து “ஒரு மணிநேரத்துல இங்க வரணும்..” என்று கத்துவான். அவளைத் திரும்பிப் பார்ப்பான். அவள் காரிலிருந்து வெளியேறி ஒற்றையடிப் பாதையொன்றில் நடந்து போய்க் கொண்டு இருப்பாள்.
“ஏய்... ஏய்.. நீ எங்க போற..?” அவள் பின்னால் போவான். சின்னதான ஒரு உயரத்தில் ஏறுவாள். பெரும் வெட்ட புல்வெளியில் மலைப்பிரதேசம் அழகாக இருக்கும். ரசித்து நிற்பாள். ஆடு மேய்க்கும் சிறுவன் ஒருவன் தரையில் குழி போட்டு தனியாக கோலிக்குண்டு விளையாடிக் கொண்டு இருப்பான். அவளைப் பார்த்து திகைப்பான்.
அவள் அவனிடம் “உன் பெயரென்ன..” என்று கேட்பாள்.
“லட்சுமணன் “ என்று சொல்லிவிட்டு “உங்க பெயரென்ன?” என்பான்.
“சீதா” என்று அவள் சொல்லி முடிக்கவும், அவளது கணவனும் அங்கு வந்து விடுவான். அந்த சிறுவன், அவனை யார் என்பது போல் பார்க்கவும், அவள் மெல்ல “இராவணன்” என்பாள். அந்த சிறுவன் சிரிப்பான்.
அவள் கணவன் அருகில் வந்து “இங்கு என்ன செய்கிறாய்?” என்று கேட்டுவிட்டு, அந்த சிறுவனைப் பார்ப்பான். “ஓ.. கோலி விளையாட்டா.. ஒரு காலத்துல நான் இந்த விளையாட்டில் புலியாக்கும்” என்பான். அவள் முகத்தைத் திருப்பி வேறெங்கோ பார்ப்பாள். அவன் அத்தோடு விட மாட்டான். “இந்த விளையாட்டில் தோற்று என் கோலி பதம்பார்த்த கைமுட்டுக்களோடு ஊரில் எத்தனை பேர் இருந்தார்கள் தெரியுமா?” என்பான்.
அவள் சட்டென்று, “எங்கே இவனோடு விளையாடுங்கள் பார்ப்போம்.” என்று சொல்வாள்.
“இவனோடா... சீச்சீ ... நல்லாயிருக்காது...”
“இதெல்லாம் சொல்லக் கூடாது. ஒங்க விளையாட்டை நான் பார்க்கணும்” என்பாள்.
விளையாட்டு நடக்கும். அவளது கணவன் தோற்றுப் போவான். “அது வந்து... விளையாடி ரொம்ப நாளாச்சா...” என்று அசடு வழிந்து, “சரி, வா... போவோம்” என்று அவளை அழைப்பான்.
“சார். தோத்துட்டீங்க. கைமுட்டை மடக்கி காண்பிங்க..” என்று சொல்லிக் கொண்டே விரலில் கோலி வைத்து தரையில் உட்கார்ந்து குறி பார்ப்பான் சிறுவன்.
“ச்சே.. ச்சே.. இதென்ன.. நாம் சும்மாத்தான் விளையாடினோம்” என்று தப்பிக்கப் பார்ப்பான் அவன்.
“இதென்னங்க.. சின்னப்பையனை ஏமாத்தக் கூடாது. கைமுட்டை காண்பிங்க..” என்று அவளும் சொல்வாள்.
வேண்டா வெறுப்பாக தரையில் உட்கார்ந்து விரல்களை மடக்கி முட்டைக் காண்பிப்பான். சிறுவன் விரலிலிருந்து பாயும் கோலி, அவனது முட்டை சட்டென்று தாக்கும். அவன் வலியில் “உஸ்” என்பான்.
அவள் வாய்விட்டுச் சிரிப்பாள். அந்த பிரதேசமெங்கும் அந்தச் சிரிப்பு எதிரொலிக்கும்.
மலையாளத்தில் மனு என்பவர் இயக்கிய ‘கோலி’ என்னும் குறும்படம் இது. திருவனந்தபுரத்தில் நடந்த குறும்பட, ஆவணப்பட திரைப்பட விழாவில் இரண்டு வருடங்களுக்கு முன்னர் பார்த்தேன். எளிமையாகவும் நேரிடையாகவும் பேசினாலும், படம் சொல்லாமல் சொல்லும் சங்கதிகள் படம் முடிந்த பிறகும் தொடர்கின்றன.ஆண் பெண் உறவு குறித்துப் பேசும் முக்கியமான படமாக இருக்கிறது இன்னும் நினைவுகளில்.
குறைந்த செலவில். பதினைந்து இருபது நிமிடங்களுக்குள் தரப்பட்டுள்ள இதுபோன்ற அழுத்தமான திரைப்படங்களை எத்தனை பேர் பார்த்திருப்போம். இங்கு ஆவணப்படம், குறும்படங்களுக்கான மீடியா இல்லை, தியேட்டர் இல்லை, அதனால் ஆடியன்ஸூம் இல்லை. மாற்று சினிமாவுக்கான பாதைகளை மறித்துக் கொண்டு வெள்ளித்திரையும் சின்னத்திரையும் பெரும் சுவராய் நிற்கின்றன.
*
மலர், காதல், ரொட்டி... அப்புறம் சுதந்திரம்!
இந்த வெட்கங்கெட்ட பண்டிகை இந்தியக் கலாச்சாரத்துக்கு கேடானது என்று கூப்பாடு ஒருபுறம் கேட்கிறது.
அதை கண்டு கொள்ளாமல் இன்னொருபுறம் காதலர் தின வாழ்த்துக்கள் உற்சாகத்துடன் காற்றின் திசைகளில் கேட்ட வண்ணம் இருக்கின்றன.
நமக்கு முன்னால், காலம் காலமாக, யார் யாரெல்லாமோ காதல் குறித்து பேசியிருக்கிறார்கள், யோசித்திருக்கிறார்கள்.
இலக்கியங்களின் பக்கங்களில் அவை மெல்லிய புன்னகையோடு எல்லோரையும் பார்த்துக் கொண்டிருக்கின்றன.
சுவராஸ்யமான இதுவரை அதிகம் கேள்விப்பட்டிராத சில பக்கங்களை நாம் இன்று பார்க்கலாம் எனத் தோன்றியது.
_______________________________________________________
ஒரு இளம்பெண் வீட்டின் பின்புறத்தில் திணையை காயவைத்து இருக்கிறாள். அதன் அருகில் ஒரு பெண்மான் கட்டி வைக்கப்பட்டு இருக்கிறது. அவ்வப்போது வீட்டிற்குள்ளிருந்து வந்து திணையைப் பார்த்துக் கொண்டு , வீட்டுவேலைகளில் ஈடுபட்டு இருக்கிறாள். ஒருதடவை வீட்டின் பின்கதவைத் திறந்து பார்க்கிறபோது திணையை கோழிகளும், காகங்களும் தின்று கொண்டிருக்கின்றன. அதே நேரம் எங்கிருந்தோ வந்த ஆண்மான் ஒன்று பெண்மான் அருகில் மயங்கி நிற்கிறது. அந்த பெண் தயங்குகிறாள். காகங்களையும், கோழிகளையும் விரட்டினால் ஆண்மானும் ஓடிவிடும். யோசித்தவள் பேசாமல் பின்கதவை சாத்திவிட்டு வீட்டிற்குள் இருந்துவிடுகிறாள். அவளுக்கு சந்தோஷம் பொங்கி நிற்கிறது.
- சங்க காலத்துப் பாடல் ஒன்றிலிருந்து...
_______________________________________________________
வாழ்க்கையில் கிடைத்திருக்கும் ஒரே வண்ணம் அது. கலைகளின், வாழ்க்கையின் அர்த்தங்களை அது தருகிறது. அந்த வண்ணத்தின் நிறமே காதல்!
- மார்க் சாகல்
வாழ்க்கை என்னும் மலரின் தேன் துளிகளே காதல்
- விக்டர் ஹியுகோ
காதல் வயப்பட்ட இதயம் எப்போதும் இளமையாகவே இருக்கிறது
- கிரேக்க பழமொழி
காதலற்ற வாழ்க்கை வசந்தங்களற்ற, கனிகளற்ற மரத்தினைப் போன்றது.
- கலீல் கிப்ரான்
இனிமையான சந்தோஷமும்
வலிமிகுந்த காயமுமே காதல்
- பேர்ல் பேர்லி
கட்டுப்படுத்த முடியாத ஆசையின் மீது கட்டுப்படுத்த முடியாத ஆசை வைப்பதே காதல்.
- மார்க் ட்வைன்
ஒரு ஆண் தான் ஒரு பெண்ணின் முதல் காதலனாக இருக்க விரும்புகிறான். பெண்ணோ ஒரு ஆணின் கடைசிக் காதலாக இருக்க விரும்புகிறாள்.
- ஆஸ்கர் ஒயில்டு
காதலே என் மதம்.
அதற்காக இறப்பேன்.
- ஜான் கீட்ஸ்
_______________________________________________________
காதலுக்காக திருமணம் செய்து கொள்வது சவாலானது.
கடவுளால் உதவிக்கு வர முடியாமல் புன்னகைக்க மட்டுமே முடிகிறது.
- ஜோஷ் பில்லிங்ஸ்
காதல் என்பது கற்பனை.
திருமணம் என்பது நிஜம்.
கற்பனைக்கும், நிஜத்திற்குமான முரண்பாட்டின்
தண்டனையிலிருந்து தப்பிக்கவே முடியாது.
- கோயத்
காதல் என்பது நெருப்பு.
உன் இதயம் குளிர் காயப் போகிறதா
அல்லது
உன் வீடு தீப்பற்றப் போகிறதா
என்பதை உன்னால் தீர்மானிக்க முடியாது.
- ஜோன் கிராபோர்ட்
காதலுக்கு பல முகங்கள்
வெட்கத்தோடு வளரும்
வசந்தகாலப் பூக்களைப் போல
ஓடையிலே கூடுகிற
சிறிய நீர்த்திவலைகள் போல
எண்ணற்றவை
கவனமாக அவற்றுள்ளே
நோக்கினால் உனது முகத்தையே
காணலாம் நீ
- ஹெகலர் ஷெப்பீல்டு
நான் உன்னை காதலிப்பேன்.
மரணமற்ற காதலாகும் அது.
சூரியன் குளிர்ந்து போகும் வரை
நட்சத்திரங்கள் முதுமையடையும் வரை
நான் உன்னை காதலிப்பேன்.
- ஷேக்ஸ்பியர்
_______________________________________________________
நாடகத்தில் காவியத்தில் காதலென்றால்
நாட்டினர்தாம் வியப்பெய்தி நன்றாம் என்பர்
ஊடகத்தே வீட்டினுள்ளே கிணற்றோரத்தே
ஊரினிலே காதலென்றால் உறுமுகின்றார்
- பாரதியார்
பழைய காலத்திலிருந்தே ஆண் பெண்ணை நேசித்து வருகிறான். பெண் ஆணை நேசித்து வருகிறாள் . எல்லா உயிரினங்களிலும் ஆணுக்கும் பெண்ணுக்கும் ஈர்ப்பு உண்டு. இனச் சேருதல், இனப்பெருக்கம் இதற்கான வழியே காதல். கொஞ்சம் மணம் வீசுகிற அற்புதமான ஏமாற்று.
- வைக்கம் முகம்மது பஷிர்
ஒரு பெண்ணை காதலிப்பதென்றால் அவளைக் கல்லினுள்ளிருந்து உயிர்ப்பிப்பது என்று பொருள் அடிமுதல் முடிவரை காதலால் நீவி
சாபமேற்றுவது, உறைந்து போன ரத்தத்தில் கனவுகளின் சூடேற்றுவது என்று பொருள்.
- சச்சிதானந்தன்
காட்டுத் தீ போல தேகத் தொடர்பு என்ற அடிப்படையில் பிறந்த காதலை புத்தித் தெளிவு என்ற அங்குசம் கொண்டு கட்டுப்படுத்தி பணிய வைத்தால்தான் அன்பு என்னும் விளக்கு வாடாமல் எரியும். இதுதான் என் ஆத்ம சோதனையின் முடிவு
- புதுமைப்பித்தன்
காதலென்பது நமது கதைகளைப் பொறுத்த வரையில் இருவர் செய்து கொள்ளும் நிச்சயதார்த்தம். உன்னை நான் காதலிக்கிறேன் என்று சொன்ன பாவத்திற்காக அவன் அவளையே கலியாணம் செய்து கொள்ள வேண்டும். அல்லது செத்துப் போக வேண்டும். விவாகரத்தைக் கூட அனுமதிப்பார்கள் போலிருக்கிறது. இந்த காதல் ரத்தை ஒருத்தி பிரயோகித்தால் நமது பண்பாடு கெட்டுப் போகுமென்று சொல்கிறார்கள்.
- ஜெயகாந்தன்.
தற்கால உலகம் காதலுக்கு லாயக்கற்றது என்பது என் கருத்து.
- கவிஞர் கண்ணதாசன்.
காதலும் ஆண் பெண் உறவுகளும் பெருமளவு மாறுதலடைந்து விட்டன. காதலின் அர்த்தத்திலிருந்து பாலுறவு பழக்கங்கள் வரை இனியும் பழைய அர்த்தத்தில் இல்லை. இங்குதான் காதலை எழுத முற்படும் கவி புதிய சவால்களை அடைகிறான்.
- மனுஷ்யபுத்திரன்
_______________________________________________________
தத்துவ மேதை பிளேட்டோ மாணவனாயிருந்த போது அவரது ஆசிரியரிடம் கேட்டாராம். "காதல் என்றால் என்ன? அதை எப்படி அறிவது?"
ஆசிரியர் எதிரே வளமாய் இருந்த கோதுமை வயலைக் காட்டி "அதில் மிக அற்புதமான, நேர்த்தியான தண்டு ஒன்றை நீ கொண்டு வா. காதலை அறிந்து கொள்ளலாம். ஆனால் பின்னால் திரும்பிப் பார்க்கக் கூடாது. ஒன்றே ஒன்றுதான் கொண்டு வரவேண்டும்" என்றாராம். பிளேட்டோ கோதுமை வயல் முழுவதும் அலைந்து நீண்ட நேரம் கழித்து வெறுங் கையோடு வந்தாராம்.
ஆசிரியர் கேட்டாராம். "ஏன் ஒன்றும் பிடுங்கி வரவில்லை?' அதற்கு பிளேட்டோ சொல்லி யிருக்கிறார்." அற்புதமான தண்டுகளை பார்த் தேன். அதை விடவும் பிரமாதமானது முன்னால் இருக்கும் எனத் தோன்றியது. முன்னால் செல்ல செல்ல அவ்வளவு நல்ல தண்டுகளை காண முடியவில்லை. பின்னாலும் திரும்பி வர முடியாது. இப்படியே கழிந்து விட்டது"
"இதுதான் காதல்" என்றாராம் ஆசிரியர்.
சிறிதுநாள் கழித்து பிளேட்டோ ஆசிரியரிடம் "திருமணம் என்றால் என்ன" என்றாராம்.
ஆசிரியர் "அதோ அடர்ந்த கானகம் இருக்கிறது. அதில் ஒரே ஒரு மரத்தை வெட்ட வேண்டும். பின்னால் திரும்பிப் பார்க்கக் கூடாது. நீ வெட்டியதுதான் மிக உயரமான மரம் என்றால் திருமணத்தை புரிந்து கொள் வாய்" என்றாராம்.
பிளேட்டோ கொஞ்ச நேரத்தில் ஒரு சாதா ரண மரத்தை வெட்டிக் கொண்டு வந்தாராம். "ஏன் இத்தனை சாதாரண மரத்தை வெட்டி னாய்" என்று ஆசிரியர் கேட்டிருக்கிறார். "என்னுடைய முந்தைய அனுபவத்தால் இந்த முடிவுக்கு வந்தேன். முதலில் இது நல்ல மரமாகவே தோன்றியது. இதை கடந்து போய் இதைவிடவும் மோசமான மரமே எதிர்ப் பட்டால், இதையும் இழக்க வேண்டி யிருக்குமே என்று வெட்டிவிட்டேன்" என்று பிளேட்டோ சொல்லியிருக்கிறார்.
"இதுதான் திருமணம் என்பது என் மகனே. காதல் என்பது மனிதனுக்கு நேர்கிற அற்புத மான அனுபவம். கையில் கிடைப்பதை விட கோதுமை வயலில் தவறி விடும்போதுதான் அதன் மகத்துவம் தெரிய வருகிறது. திருமணம் என்பது வெட்டிய மரம் போன்றது. சமரசம் செய்து கொள்கிறாய்" என்று ஆசிரியர் விளக்கினாராம்.
_______________________________________________________
நான் எப்போதும் யாரை என்னுடையவளென
நினைத்துக் கொண்டிருக்கிறேனோ
அவள் என்னை விரும்பவில்லை.
மாறாக
அவள் அதிகமாக
யாரை நேசிக்கிறாளோ
அவன் வேறொரு பெண்ணை
விரும்புகிறான்.
மேலும் என்னிடம் மகிழ்ச்சி காண்கிறாள்
வேறொரு பெண்.
இந்த பெண்ணையா
நான் விரும்பும் பெண்ணையா
அவள் விரும்பும் பெண்ணையா
என்னையா
அல்லது மன்மதனையா
இதற்கு
நொந்து நிந்திப்பது
- பத்ருஹரி
_______________________________________________________
வீடெங்கும் குப்பைக் கூளம்
முகமெங்கும் வேர்வை
கையெங்கும் சமையல்
மனமெங்கும் இல்லநெடி
சிறு புகைச்சல்
ஒட்டடை
வேளை பார்த்தா
நாதர் வந்தார்
அசடானேன்.
கேட்பதல்ல காதல்
தருவதுதான் என்று
தரையில் அமர்ந்தார்
என்னைக் காணேன்!
- -த.பிச்சமூர்த்தி
_______________________________________________________
அருமைக் காதலனே!
நட்சத்திரங்களை எழுத்துக் கூட்டிப் பார்த்தால்
உன் பெயர்தான் வருகிறது.
உனக்குப் பிடிக்கும் என்பதாலேயே
ஷெனாய் இசையும், பருப்புச் சாதமும்
என் பாசத்துக்குரியவை ஆகிவிட்டன.
உன் இதயத்து வால்வுகளில்
என் நினைவு துடிப்பது தெரியும். ஆயினும்-
எனக்கென்று சில குணங்கள்,ஆசாபாசங்கள்,
லட்சியங்கள் இருப்பதை
நீ உணர்வதேயில்லை.
காதலிக்கு மூளை இருக்கிறது என்பதே
கசப்பான உண்மையாய் இருக்கிறது உனக்கு.
அந்த மூளை வேலை செய்கிறது என்பது
அவமானமாய்த் தோன்றுகிறது உனக்கு.
உனக்கு கீழ்பட்டு உன்னையே மையமாக வைத்து
என் வாழ்க்கை இருக்க வேண்டும் என விரும்புகிறாய் நீ.
என் மனதை, உணர்ச்சிகளை எரித்து
என்னை இயந்தரமாக்கப் பார்க்கிறாய்.
அதுவே நல்ல இல்லறம் என்கிறாய்.
உடலை எரிப்பதற்கு சதி என்றால்
இதற்குப் பெயர் என்னவோ?
மன்னித்துவிடு..
என்னால் உடன்கட்டையேற முடியாது
உடலளவிலும் சரி
மனதளவிலும் சரி.
- -நாகராணி
_______________________________________________________
"நான் உயரே பறக்க விரும்புகிறேன்.
ஆனால் என்னுடைய துணை
எப்போதும் கூட்டினிலே
ஓய்வெடுத்துக் கொள்ள விரும்புகிறேன்" என்றது கழுகு.
"என்னால் பறக்க முடியாது.
அவ்வாறு முயற்சி செய்யவும் எனக்கு விருப்பமில்லை.
ஆனால் என்னுடைய துணை வானில்
உயரே உயரே பறப்பதைக் காண
நான் பரவசமடைகிறேன்." என்றது பெட்டைக்கோழி.
அவர்கள் மணம் புரிந்து கொண்டனர்.
"ஆ.. இதுதான் காதல், என் அன்பே" கூவினர்.
கோழி அமர்ந்தது.
கழுகு உயரேப் பறந்தது ஒற்றையாக."
- -சார்லெட் பெர்கின்ஸ்
_______________________________________________________
என் கவிதைகளிலிருந்து
மலரை நீ எடுத்துவிட்டால்
என் பருவங்களில் ஒன்று
மடிந்து விடும்.
என் கவிதைகளிலிருந்து
காதலை நீ எடுத்து விட்டால்
என் பருவங்களில் இரண்டு
மடிந்து விடும்.
என் கவிதைகளிலிருந்து
ரொட்டியை நீ எடுத்து விட்டால்
என் பருவங்களில் மூன்று மடிந்து விடும்.
என் கவிதைகளிலிருந்து
சுதந்திரத்தை நீ எடுத்து விட்டால்
என் பருவங்களில் நான்கும் மடிந்து விடும்.
- ஷெர்கோ
______________________________________________________
ஒருவரையொருவர் காதலியுங்கள்.
ஆனால் அது அடிமைத்தனமாகிவிட வேண்டாம்.
உங்கள் ஆன்மாவின் கடலோரங்களுக்கிடையில் அசைந்து கொண்டிருக்கும் கடலாயிருக்கட்டும் அது.
அடுத்தவர் கோப்பைகளை நிரப்புங்கள்.
அடுத்தவர் கோப்பையிலிருந்து குடிக்க வேண்டாம்.
சேர்ந்து ஆடிப்பாடி மகிழுங்கள்.
ஆனால் இருவரும் தனித்தே இருங்கள்.
உங்கள் இதயத்தை கொடுங்கள்.
ஆனால் அடுத்தவர் இதயத்தை வைத்திருக்க வேண்டாம்.
சேர்ந்தே நில்லுங்கள்.
ஆனால் மிக நெருக்கமாக வேண்டாம்.
ஓக் மரமும், சைப்ரஸ் மரமும் ஒன்றின் நிழலில் மற்றொன்று வளராது.
- கலீல் கிப்ரான்
______________________________________________________
இங்கு ஏற்கனவே காதல் குறித்து எழுதியவை....
- மாய வண்ணத்துப்பூச்சி
- உதிரும் சிறகுகள்
- ஆதிக்காதலும் காவியக்காதலும்
- ஆண் ஒரு கிரகம், பெண் ஒரு கிரகம்
- ஆதலினால் காதல் செய்வீர்!
______________________________________________________
உலகத்து காதலர்கள் அனைவருக்கும்
தீராத பக்கங்களின் காதலர் தின வாழ்த்துக்கள்.
*
ஓரினச்சேர்க்கைகளும் ஒற்றை வார்த்தை நிராகரிப்புகளும்.
சென்னையில் ஓரினச்சேர்க்கையாளர்கள் கூடியதையும், அவர்கள் சங்கம் அமைத்திருப்பதையும் அதிர்ந்து போய் எழுதியிருக்கிறார் சொல்லரசன். இந்தக் கண்றாவிகளுக்கெல்லாம் சங்கமா, அதற்கு அங்கீகாரம் தேவையா என்பதுதான் அவரது எழுத்துக்களின் தொனியாக இருக்கிறது. பின்னூட்டம் எழுதப் போய், அதுவே கொஞ்சம் அதிகமாகிவிட, பேசாமல் இதையும் ஒரு பதிவாக எழுதிவிடுவது என்று முடிவுக்கு வந்தேன்.
ஓரினச்சேர்க்கை என்றவுடன், “சே”, “த்தூ”, “ஐய்யே..” என்று முகம் சுளித்து நிராகரிப்பவர்கள் பலரை நான் பார்த்திருக்கிறேன். நானும் அருவருப்படைந்திருக்கிறேன். அதெல்லாம் முகத்தளவிலான எதிரொலிகளாகவே இருக்கின்றன. அதைத் தாண்டி உள்ளே செல்வதற்கு அனுமதிக்காமல் இந்த சமூகம் சில மனத்தடைகளை காலம் காலமாய் ஏற்படுத்தி வைத்த்திருக்கிறது. அதுதான் ஃபயர் படம் வந்தவுடன், கடுமையான கிண்டல்களும், கண்டனங்களும் இந்த மண்ணில் நடந்தன. வெறும் போர்னோ படம் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியதும் நடந்தது. அந்தப் படம் எழுப்பிய ஆழமான கேள்விகளுக்கு பதில்கள் மௌனங்களில் உறைந்து போய்க் கிடக்கின்றன.
பலரும் எதோவொரு தருணத்தில், எதொவொரு காலக்கட்டத்தில், இது போன்ற அனுபவங்களைப் பெற்று சமநிலைக்குத் திரும்பி விடுகிறார்கள். ஆனல் சிலர் அங்கேயே தங்கி விடுகிறார்கள். பல பிரபலமானவர்களும் இந்தப் பழக்கத்திற்கு ஆளாகியிருக்கின்றனர். எனக்குத் தெரிந்த வரையில், நடிகவேள் எம்.ஆர்.ரராதா மட்டும்தான் நான் அப்படித்தான் என பகிரங்கமாக பேசியிருக்கிறார்.
அதுகுறித்து வரலாற்றில் தென்படும் காட்சிகளும், மனோரீதியான காரணங்களும், உடல் சார்ந்த சிக்கல்களும் இன்று விவாதங்களாய்க் கிளம்பி வருகின்றன. சமூகத்தில் நிலவி வருகிற, காலம் காலமாய் கண்டு கொள்ளப்படாமல் இருக்கிற பிரச்சினைகள் மீது பெருத்த ஒசையுடன் கேள்விகள் எழும்பிய காலமாய் இருபதாம் நூற்றாண்டையொட்டிய வாழ்க்கை இருக்கிறது.
ஆயிரம் மனைவிமார்கள் வைத்திருப்பதாய் மார்தட்டிச் சொல்லும் அரசர்களின் அந்தப்புரங்களில் உள்ள பெண்களின் பெருமூச்சை யார் அணைத்திருப்பார்கள். மாதக்கணக்கில் வீட்டை விட்டுப் பிரிந்து எதிரிகளோடு போரிடச் சென்ற படைவீரர்களின் கூடாரங்களில் உள்ள வெறுமையை யார் கலைத்திருப்பார்கள். இன்றைக்கும் அது இராணுவ முகாம்களில், லாட்ஜ்களில், ஹாஸ்டல்களில், சர்ச்சுகளில், மடங்களில் என்று நீண்டு கொண்டே இருக்கிறது.
ஓரினச்சேர்க்கை என்றவுடன் வெறும் காமமாகப் பார்க்கத்தான் நமக்கு வருகிறது. காமத்தையும் பகிர்ந்து கொள்கிறார்கள் என்ற புரிதலோடு பார்த்தால் இன்னும் சில கதவுகள் திறக்கக்கூடும் என எண்ணுகிறேன். ஆணுக்கும் சரி, பெண்ணுக்கும் சரி இன்னும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளுதலில் நிறைய பிரச்சினைகள் இருக்கின்றன. ஆனால் தங்களில் ஒருவரையே புரிந்து கொள்வதில், பரஸ்பரம் அன்பைத் தெரிவிப்பதில் சிக்கல்கள் இல்லாமல் இருப்பதாய்ப் படுகிறது. அதுபோல உடல்ரீதியாக ஆணுக்குப் பெண்ணை திருப்திப் படுத்துவதிலும், பெண் திருப்தியடைவதிலும் குறைகள் இருக்கின்றன. அதற்கான ஆற்றாமையாகவும், வடிகாலாகவும் ஓரினச் சேர்க்கைகள் இருக்கின்றன. இன்னொன்று குழந்தை பெறுவது, உடல் பாதிக்கப்படுவது தாண்டிய பாதுகாப்பு உணர்வும் இதில் அடங்கியிருக்கிறது.
அடுத்ததும் மிக முக்கியமானது. உடற்கூறுகளிலேயே சிலருக்கு ஏற்பட்டிருக்கும் ஹார்மோன்களின் கூடுதல் குறைவுகளால், தங்கள் இனம் சார்ந்தவர்கள் மீதே ஈர்ப்பு உண்டாகிறது. டாக்டர் ருத்ரன் சார் இன்னும் இந்த விஷயத்தை எனக்கும், பலருக்கும் தெளிவுபடுத்த முடியும் என நினைக்கிறேன்.
இப்படியாக பல அர்த்தங்கள் கொண்டிருக்கிற ஒரு பிரச்சினைய ஒற்றை வரிகளால் நிராகரிப்பது சரியல்ல. சமூகம் எதைப் புறக்கணிக்கிறதோ, ஒப்புக்கொள்ள மறுக்கிறதோ, அதிலுள்ள நியாயங்களை பகிரங்கப்படுத்துவதற்கு சங்கம் அமைக்கிறார்கள்.
உயிரினப் படைப்புக்கும், இயல்புக்கும், இயற்கைக்கும் மாறான இந்த வழக்கத்தை சரி செய்ய வேண்டும். ஆனால் அதற்கு முதலில் சமூகம் அவர்கள் சொல்வதைக் கேட்டுத்தான் ஆக வேண்டும்.
*
‘பிங்க் ஜட்டி’ - ஒரு கலகக் குரல்!
இந்த காதலர் தினம் ராம் சேனா தலைவர் முதாலிக்கு மறக்க முடியாததாய் இருக்கப் போகிறது. தேச எல்லைகளைக் கடந்து அவருக்கு பரிசுகள் வந்து குவிய இருக்கின்றன. அந்தப் பரிசு என்னவென்று அவருக்கும் தெரியும். உலகத்துக்கும் தெரியும். பி.பி.சி வரை செய்திகள் வாசிக்கப்படுகின்றன. காதலர் தினம் என்பது valentine day அல்ல, violent dayவாக அனுஷ்டிக்கப் போகிறோம் என்கின்றன இந்துத்துவ அமைப்புகள். எப்படியோ, இந்த தேசத்தில் கொண்டாடப்படும் விழா நாட்களையெல்லாம் பதற்றம் நிறைந்ததாக மாற்றிய பெருமை காவிக்கேச் சேரும்.
மங்களூரில் பப் ஒன்றில் புகுந்து அங்கிருந்த பெண்களைத் தாக்கிய ராம்சேனாவின் நடவடிக்கையை கண்டித்து, எதிர்நடவடிக்கையை சில பெண்கள் அமைப்புகள் தொடங்கியிருக்கின்றன. “இந்த பிங்க் நிற ஜட்டியை நீங்கள் அனுப்புவது என்பது ஒரேமாதிரியான, ஒரு சிறிய எதிர்ப்புக்கு நீங்கள் தயாராகிறீர்கள்” என்று அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கிறது. எந்த முகவரிக்கு ஜட்டிகள் அனுப்ப வேண்டும் என்றும், எந்தெந்த இடங்களில் அவை சேகரிக்கப்படும் என்பதையெல்லாம் http://thepinkchaddicampaign.blogspot.com/ விரிவாகச் சொல்கிறது. ஆங்கில வலைப்பக்கங்களில் இந்த ‘பிங்க் ஜட்டி இயக்கம்’ குறித்து பெரும் உரையாடல்கள் நடந்து கொண்டிருக்கின்றன. “கலாச்சார சீரழிவுக்கு வக்காலத்தா..”, “அந்நியநாடுகளின் திட்டமிட்ட கலாச்சார ஊடுருவல்”, “இந்துத்துவாவின் கலாச்சார அடாவடித்தனத்திற்கு தக்க பதிலடி”, “பெண்கள் விழிப்பு பெறுகின்றனர், எதிர்க்க முனைகின்றனர்” என்றெல்லாம் வாதிப் பிரதிவாதங்கள் கேட்ட வண்ணம் இருக்கின்றன.
பப் என்பது இந்த தேசத்தில் சமீப காலங்களில், குறிப்பாக உலகமயமாக்கலுக்குப் பிறகு மிக வேகமாக பரவிய நகர்ப்புற, மேல்தட்டு கலாச்சார வியாதி. அதை பெண்ணின் சுதந்திரமாகவோ, நாகரீகத்தின் வளர்ச்சியாகவோ புரிந்துகொள்ள முடியாது. சதா நேரமும் இனக்கவர்ச்சி உறுப்புக்கள் மீது காமிராக்கள் மேய்ந்து மேய்ந்து, ஆணின் சுவைக்கும், ரசனைக்கும் உரியவள் மட்டுமே பெண் என்று நிலைநாட்டப்பட்டிருக்கிற, பிம்பங்களின் சுவீகரிப்பாகத்தான் எடுத்துக் கொள்ள முடியும். மீறலாகவும் இருக்காது. சுதந்திரமாகவும் இருக்காது. அதுதான் நமது ஊடகங்கள் இந்த பிங்க் ஜட்டி விவகாரத்திற்கு அதிக நேரம் ஒதுக்குகின்றனர். வாச்சாத்தி கொடுமைகள் நடந்த போது இந்த சிகாமணிகள் எங்கே போயிருந்தனர். கயர்லாஞ்சியை யார் வெளிக்கொண்டு வந்தது?
இந்துத்துவா சக்திகள் பெண்களின் ஒழுக்கம், கலாச்சாரம், கடந்தகால மகிமை என்று வார்த்தைகளைக் கொட்டிக் கொண்டு இந்த பப்களை எதிர்க்கின்றன. காதலர் தினக் கொண்டாட்டங்களை மூர்க்கத்தனத்தோடு தடுக்கின்றன. கலாச்சாரம் என்பது இன்று சமூக அதிகாரம் செலுத்தப்படும் தளமாகவும், அதிகாரத்தை எதிர்க்கும் தளமாகவும் இருக்கிறது. மேலாதிக்கத்தை செலுத்தும் கருவியாகவும், எதிர்க்கும் கருவியாகவும் இருக்கிறது. இந்துத்துவா அமைப்புகள் மேலாதிக்கத்தை செலுத்த விழைகின்றன. அவர்கள் கடந்தகால இருட்டை எதிர்காலத்திலும் நிரப்பத் துடிப்பவர்கள். பெண்கள் தங்களை முழுமையாக மறைத்துக் கொண்டு அடிமையாக இருக்க வேண்டும் என்பதுதான் அவர்களது குரல்.
சிலர் பி.ஜே.பிக்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்கிறார்கள். ஆனால் கர்நாடாகாவில் பி.ஜே.பி அரசு அமைந்த பிறகே இது போன்ற கலாச்சாரக் குண்டர்களின் அத்துமீறல்களும், ஆக்கிரமிப்பும் அதிகமாயிருக்கிறது என்பதை கவனிக்க வேண்டும். அக்கட்சியின் பெண்கள் அமைப்பான மகிள் மோர்ச்சா இப்படித்தான் சொல்கிறது:
“மதிப்பீடுகளில் அடிப்படை மாற்றங்கள் தேவையில்லை. வீட்டுக்குள்ளும், சமூகத்திலும் இந்தியப் பெண்களுக்கு எப்போதும் கவுரவமான இடம் இருந்து வந்திருக்கிறது. அதை மறு உறுதி செய்து, மறுபடி நிறுவினால் போதுமானது”
பெண்கள் கட்டுப்பெட்டியாய், அடங்கி, வெளியுலகம் அறியாத கிணற்றுத் தவளையாய் எப்போதும் இருக்க வேண்டும் என்பதுதான் இதன் உள்ளார்ந்த பொருள். “பெண்கள் வெளியே வேலைக்குச் செல்லத் தேவையில்லை.... குங்குமம் மடிப்பது, அப்பளம் சுடுவது போன்ற காரியங்களை செய்யலாம்” என்று நமது காஞ்சிச் சங்கராச்சாரியார் சொல்லவில்லையா? அப்போது எதிர்ப்பு தெரிவிக்காதவர்கள் குஷ்பு கற்பு குறித்து சொன்ன கருத்துக்காக பொங்கி எழுந்ததையும் தமிழகம் பார்த்தது.
பல மட்டங்களில், பல வடிவங்களில் இந்தக் கணம் வரை பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நடந்து கொண்டே இருக்கின்றன. ஆனால் அதற்கு உடன்பட்டும் அல்லது எதிர்ப்பற்றும் நம் சாமானிய, எளிய பெண்கள் தங்களுக்குள்ளே பேசிக் கொண்டிருக்கிறார்கள். அவை குக்கரின் விசில் சத்தங்களாய் சமையலறையிலிருந்து கேட்டுக் கொண்டே இருக்கிறது. அவர்களால் ஒன்று திரளவும், பேசிடவும் முடியவில்லை. ஆனால் பப் போன்ற விஷயங்களுக்கு அதிவேகமாக எதிர்வினைகள் ஆற்றப்படுவது கவனிக்கத் தக்கது.
“டெல்லியில் இருக்கும் சில பெண்கள் ராம்சேனாவுக்கு பதிலடி கொடுக்க எடுத்திருக்கும் முடிவு இது” என்றும் இதன் அறைகூவலில் தனக்கு கருத்து முரண்பாடுகள் இருப்பதைச் சொல்கிறார் சுசித்ரா கிருஷ்ணமூர்த்தி. மதப் பழமை வாதத்தையும், பாசிசத்தையும் கடுமையாகச் சாடுகிற அவர், ஜட்டிதான் பெண்களின் எதிர்ப்பின் அடையாளமா என்றும் அந்த மடையர்கள் தூக்கில் தொங்க கயிறு அனுப்பலாமே என்றும் சொல்கிறார். “பெண்களே யோசியுங்கள்.... உங்கள் அழகான, மதிப்புமிக்க ஜட்டிகளுக்கு எந்தவிதத்தில் அவர்கள் ஈடாவார்கள்?” என்றும் கேள்வி எழுப்புகிறார்.
பப் போன்ற கலாச்சாரத்தை ஆதரிக்காத போதும், அதை எதிர்த்து ராம்சேனா நடத்திய, பெண்கள் மீதான வன்செயல்களை கடுமையாக பலரும் கண்டித்து இருக்கின்றனர். இங்கே, தீபா தனது வலைப்பக்கத்தில் மிகச் சுருக்கமான, அழுத்தமான பதிவு ஒன்றை எழுதியிருக்கிறார். இந்த பிங்க் ஜட்டி, பப் கலாச்சாரத்தை நியாயப்படுத்துவதாக இருந்துவிடக் கூடாது என்ற கவலையும் ஒருபுறம் இருக்கிறது.
ஆனால், சமூகத்தில் ராம்சேனைக்கு எதிர்வினைகள் உரக்க எழும்பி இருக்கின்றன. அது கலாச்சாரம் குறித்த கேள்விகளையும் உள்ளடக்கிய உரையாடல்களாய் வெளிவருகின்றன.
அந்த அளவில் ‘பிங்க் ஜட்டி’ ஒரு கலகக்குரலே!
கலகம் பிறக்கட்டும். நியாயம் பிறக்கும்.
*
உயிரோட்டம்
அதிகம் யாரோடும் பேசிக்கொள்ள மாட்டான். டாக்டர் சற்குணம், வேலை பார்க்கும் வங்கியில் பியூன் பெருமாள்சாமி, தனது எலிமெண்ட்டரி ஸ்கூல் வாத்தியார் ராமனாதன் என்று ஒரு சிலர் விதிவிலக்கு. தன்க்குள்ளேயே நிறைய பேசிக்கொள்வான். அதற்கென சங்கதிகள் இருந்தன. தெரிந்தவர்கள் யாராவது இறந்துவிட்டால் கண் கலங்குவான. மகாநதி படம் பார்த்து பாதியிலேயே தாங்க முடியாமல் வெளியே வந்துவிட்டான். எல்லாவற்றுக்கும் காரணம் தேடிக்கொண்டே இருப்பான. கொஞ்சம் இரக்கத்தோடும் நிறைய கேலியோடும் மற்றவர்கள் புறம் பேசுவது கேட்டாலும் கவலைப்பட்ட மாதிரி தெரியாது. ஒருதடவை டெல்லிக்கு டூர் போயிருந்தபோது போட் கிளப் எதிரே அந்த பெரிய சாலையில் ஒரு குதிரை நொண்டிக்கொண்டு போன காட்சியின் துயரமான சாயல் ஒரு வருசம் கழித்து வந்த அவனது கனவில் இருந்தது. இன்னமும் குழந்தை முகம் அப்படியே இருக்கிறதென்று என்பது பலரால் அவனைப் பற்றி ஆச்சரியமாய் சொல்லப்படக்கூடிய செய்திகளில் ஒன்று. இவன்தான் நமது அழகப்பன்.
இந்த மாசம் ஆறாம் தேதியிலிருந்து இவனுக்கு கேஷியராக பணியாற்றும் சந்தர்ப்பம் வந்தது. கரன்ஸி என்பது கரண்ட் மாதிரி....அதிஜாக்கிரதையாய் கையாள வேண்டும் என்பதை ஏற்கனவே தெரிந்து வைத்திருந்தான். கொஞ்சம் அசந்தாலும் ஷாக் அடித்துவிடும். உஷாராய்த்தான் இருந்தான்.
சதா நேரமும் மனிதர்கள் கவுண்டருக்கு வெளியே காத்திருந்தார்கள். பணம் வாங்குவதற்கோ அல்லது செலுத்துவதற்கோ. ‘அமிர்தா ஐ லவ் யூ’ எழுதப்பட்ட நோட்டும் இடையில் வரும். லேசாய் சிரித்துக்கொண்டு இதை எழுதியவனுக்குப் பிறகு எத்தனை கைகள் இது மாறியிருக்கும் என்றும் அந்த அமிர்தா எப்படி இருப்பாள் என்றும் நினைப்பதுண்டு. ஏன் அந்த அமிர்தா இந்த நோட்டை பாதுகாத்துக் கொள்ளவில்லை என்ற கேள்வியும் தொடர்ந்து வந்து தொக்கி நிற்கும். ஒரு நோட்டை எண்ணுகிற எத்தனையாவது நபராகத் தான் இருப்போம் என்று எண்ணி பிரமித்துப் போவான். ஒவ்வொரு நோட்டும் இடம் மாறும்போது அங்கு ஒருவர் ஏமாற்ற, இன்னொருவர் ஏமாற ஒரு வலி பதிவாகிறது என்று ஒரு கதையில் படித்தது ஞாபகத்தில் வர, இதில் தான் யார் என்பது கடும் குழப்பத்தைத் தந்தது. பழகும் இடங்களில் அறிமுகமில்லாதவர்கள் கூட அங்கங்கு வணக்கம் சார் என்பதும், பெட்ரோல் தீர்ந்த கடைசி தினங்களில், ஸ்கூட்டரை வீட்டில் நிறுத்தி, பஸ்ஸுக்குக் காத்திருக்கும் சமயங்களில் “ஸார்... வர்றிங்களா... பேங்க்ல டிராப் பண்றேன்”: என்று ஒன்றிரண்டு தடவை முகம் பார்த்தவர்கள் கூட வந்து கேட்பதும் நிகழலாயிற்று. தனக்குக் கொஞ்சங்கூட சொந்தம் இல்லாத பணம் தருவிக்கிற மாய மரியாதை கண்டு சிரித்துக் கொண்டான்.
வெளியே நிற்கும் மனிதர்களின் முகங்களும் விரல்களுமே தெரிகிற மாதிரி சுற்றிலும் தன்னை அடைத்து வைத்திருந்தது பாதுகாப்பிற்கு பதிலாக பயத்தையே தந்தது. போதாக்குறைக்கு தன் பொருட்டு துப்பாக்கியுடன் ஒரு காவலாளி வாசலில் நின்று வருவோர் போவோரையெல்லாம் உற்றுப்பார்த்துக் கொண்டிருந்தது நடுக்கத்தை உண்டு பண்ணியது. உள்ளங்கை அடிக்கடி குளிர்ந்து போனது.
இரண்டாம் நாளே ஷக் அடித்து விட்டது. ஒரு ஐம்பது ருபாயைக் கோட்டை விட்டுவிட்டான். எண்ணி வாங்குவதிலோ, கொடுப்பதிலோ தப்பு நடந்திருக்க வேண்டும். கண்டுபிடிக்க முடியவில்லை. தனது பையிலிருந்து கொடுக்க வேண்டியதாயிற்று. அதற்குப் பிறகு அவ்வப்போது பெருமாள்சாமி உள்ளே வருவது கூட பயம் தர ஆரம்பித்தது. அந்த சந்தேகத்திற்காக தன்னையே நொந்து கொண்டாலும் ‘ஜாக்கிரதை’, ‘ஜாக்கிரதை’ என ஒரு சத்தம் கடிகார முள்ளாய் மூளைக்குள் ஓடிக்கொண்டிருந்தது. ஒருதடவைக்கு இரண்டு தடவை நோட்டுக்களை எண்ண ஆரம்பித்தான். புதுநோட்டாய் இருந்தால் விடைப்பாய் இருக்கும். சடசடவென்று எண்ண முடிகிறது. பழைய நோட்டுக்கள் தங்கள் தீராத பயணத்தில் நைந்துபோய் ஒன்றொடொன்று ஒட்டிக்கொண்டு லேசில் வராது. நிதானமாய் பிதுக்கி பிதுக்கி எண்னினான். கஸ்டமர்களை இப்படி காக்க வைக்கிறானே என மேனேஜருக்கு வருத்தம் வந்தது.
நான்காம் நாள் இவனுக்கு அது நேர்ந்தது. முதலில் வலதுகை பெருவிரலிலும், நடுவிரலிலும் நமைச்சல் ஏற்பட்டது. சும்மா உட்கார்ந்து இருக்கும்போது தடவிக்கொள்ள வைத்தது. ஜீன்ஸ் பேண்ட்டில் தேய்த்துக் கொள்வதில் ஒரு சுகம் இருந்தது. அந்த நேரங்களில் ஒருமாதிடி இடதுபக்கம் கடித்துக்கொள்வதும் பழக்கமாகி, இந்த இயக்கம் ஒரு அணிச்சை செயலாகவே மாறிப்போனது. தொடர்ந்து சில நாட்களில் காந்தலெடுக்க ஆரம்பித்த போது தடவிக் கொள்ளவும், ஜீன்ஸ் பேண்ட்டில் தேய்த்துக் கொள்ளவும் முடியவில்லை. அந்த விரல்களின் ஓரங்களில் வெடிப்புகள் வந்திருந்தன. சாப்பிடும்போது எரிச்சல் தாங்க முடியவில்லை. முதன்முதலாய் அது குறித்து கவலைப்பட ஆரம்பித்தது அப்போதுதான். தனிமைகளில் தன் விரல்களைப் பார்த்து அருவருப்படைந்தான். பயமாகவும் இருந்தது. பேண்ட் பாக்கெட்டுக்குள் கையை விட்டுக்கொண்டு நடமாடினான். பணம் எண்ணி வாங்கவும், கொடுக்கவும் சிரமமாயிருந்தது. அந்தச் சின்னப் புண்களின் ரணம் பண நோட்டுக்கள் எல்லாவற்றிலும் பட்டுக்கொண்டே இருந்தது. அன்றைக்கு சாயங்காலம் டாக்டரை பார்த்து விடுவது என்ற முடிவுக்கு வந்தான்.
டாக்டர் சற்குணத்தின் கிளினிக்கில் எப்போதும் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும். கஷ்டப்பட்டவர்களிடம் இரண்டு அல்லது மூன்று ருபாய் கூட வாங்கிக் கொள்வார். இலக்கியம் பேசுவதற்கென்று சில பேர் வருவார்கள். கவர்ன்மெண்ட் ஆஸ்பத்திரியில் நடந்த ஊழல் பற்றி ஜூனியர் விகடனுக்கு தகவல் கொடுத்ததற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டவர். அழகப்பனை பார்த்ததும் “வாங்க... வாங்க...” என முகம் மலர்ந்து வரவேற்றார். உற்சாகமாய் பார்த்தார். இவன் சந்தேகப்பட்டதையே ஊர்ஜிதம் செய்தார். பண நோட்டுக்களையே உட்கார்ந்து எண்ணிக்கொண்டிருப்பதுதான் காரணம் என்றார். இவனுடைய தோல் எந்த அசுத்தத்தையும் தாங்கிக்கொள்ள முடியாத அளவுக்கு சென்ஸ்டிவ் ஆக இருப்பதாகவும், உள்ளங்கை குழந்தையின் மென்மையாக இருப்பதாகவும் சொன்னார். அதில் இவனுக்கு ஒரு மகிழ்ச்சி இருந்தது.
ஆயின்மெண்ட்டும், சில மாத்திரைகளும் எழுதிவிட்டு கேஷ் கவுண்டரில் இனி உட்கார வேண்டாம் என புத்திமதியையும் சேர்த்துத் தந்தார். எத்தனையோ வியாதிஸ்தர்களை கவனிக்கும் இவருக்கு இதுமாதிரி வரவில்லையே என்ற நினைப்பும் அந்த நேரத்தில் அழகப்பனுக்கு ஒருபுறம் ஓடத்தான் செய்தது. அதைப் புரிந்து கொண்டவரைப் போல “வேணும்னா கிளவுஸ் போட்டுட்டு கேஷ் பாருங்க..” என்று சிரித்தார். டாக்டரின் கிண்டலில் முகம் சுருங்கித்தான் வெளியே வந்தான்.
மேனேஜரிடம் கையில் காயம் பட்டிருக்கிறதென்று சொல்லி இரண்டு நாட்கள் பெர்மிஷன் வாங்கிக் கொண்டான். கேஷ் கவுண்டரை விட்டெ வெளியே உட்கார்ந்து மற்ற வேலைகளைப் பார்க்க ஆரம்பித்தான். பேனாவையும் அந்தப் பெருவிரலாலும், நடுவிரலாலும்தான் முக்கியமாய்ப் பிடித்து எழுத வேண்டியிருந்தது. வழக்கம் போல எழுத முடியவில்லை. எழுத்துக்களும், எண்களும் வித்தியாசமாய்த் வந்தன. கடுமையாகத் தொந்தரவு செய்யப்பட்டான். நேரே மேனேஜரிடம் போய் இரண்டு நாள் கேஷூவல் லீவு எழுதிக் கொடுத்துவிட்டு வீட்டுக்குப் புறப்பட்டான். வழியில் இந்த சதாசிவம் ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாம் தன்னிடம் இதுபற்றி என்று முணுமுணுத்துக் கொண்டான்.
டாக்டர் எழுதிக் கொடுத்த ஆயின்மெண்ட்டை அவ்வப்போது போட்டுக் கொண்டான். “ஏங்க...இப்படியெல்லாம் கஷ்டப்பட்டுத்தான் கேஷ் பாக்கணுமா” என்றாள் இவன் அருமை மனைவி. வலது தாடை புடைக்க பற்களைக் கடித்து அவளை முறைத்தான். உலகத்தில் எவ்வளவோ கேஷியர்கள் இருக்கும்போது தனக்கு மட்டும் இப்படி நேர்ந்து விட்டதே என்ற கோபமும் அதில் இருந்தது அவளுக்குத் தெரியாது. பிறகு அவள் இது சம்பந்தமாய் வாயைத் திறந்து பேசியதே இல்லை. அவ்வப்போது இரக்கம் சிந்துகிற பார்வையை மட்டும் வீசுவதோடு சரி. இந்த கேஷ் ஷெக்ஷன் தொடர்ந்து பார்த்த சதாசிவம் வேறு ஊருக்கு ட்ரான்ஸ்பர் ஆன போது உள்ளூர ஒரு சந்தோஷம் வந்தது. அதற்காக வெட்கப்படவும் செய்திருக்கிறான். இப்படியெல்லாம் ஆகும் என நினைத்துப் பார்க்கவில்லை.
இரண்டு நாட்களில் விரல்களில் அந்த இடம் காய்ந்து போயிருந்தது. மீண்டும் கேஷ் கவுண்டரில் உட்கார்ந்து விட்டான். பழைய நோட்டுக்கள் உள்ளே வரும்போதெல்லாம் கொண்டு வருபவரை மகா வெறுப்புடன் பார்த்தான். அவர்களோ ரொம்ப சோகமாய் விரக்தியின் எல்லையில் நின்று கொண்டிருப்பது மாதிரி இருந்தது. நோட்டுக்களை எண்ணும்போது இவனது விரல்களையே அவர்கள் பார்த்த மாதிரி இருந்தது. அவ்வபோது நமைச்சல் இருந்த மாதிரி இருந்தது. ஜாக்கிரதையாகி பாத்ரூம் போய் கைகழுவி வந்தான். ஆனாலும் நமைச்சல் இருப்பது மாதியே இருந்தது. இல்லை... இதெல்லாம் பிரமையெனவும் தேற்றிக் கொண்டான். மேலும் சந்தேகம் வலுப்பட்ட போது டாக்டர் எழுதிக் கொடுத்த ஆயின்மெண்ட்டை பாதுகாப்பிற்காக அன்றிரவு விரல்களில் போட்டுக் கொள்வான். மனைவியையும், குழந்தைகளையும் தொடாமல் கொஞ்சம் தள்ளி படுத்துக் கொள்வான். இவனது முகத்தில் சுருக்கங்கள் விழுந்த மாதிரி மனைவிக்குத் தெரிந்தது.
ஒரு மாதிரியான நாற்றம் நோட்டுக்களிலிருந்து வீசிக்கொண்டு இருந்தது. பலசமயம் மக்கிப் போய் முகத்தில் அடிக்கிற மாதிரியும் இருக்கும். விபூதி வாசம் வீசும். அடுத்த நோட்டிலேயே மீன்வாசம் அடிக்கும். குறிப்பாக ஐந்து ருபாய், பத்து ருபாய், இருபது ருபாய் நோட்டுக்களில் இந்த நாற்றம் அதிகமாய் இருந்தது. இரண்டு ருபாய்களைப் பற்றி கேட்கவே வேண்டாம். கொஞ்சம் அழுத்திப் பிடித்தாலே பிய்ந்து விடும் போல இருந்தன. இந்த நோட்டுக்களைக் கொண்டு வருபவர்களை எதாவது ஒரு காரணம் காட்டி எரிந்து விழுந்தான். ஐம்பது, நூறு, ஐநூறு என்றால் எளிதாக இருக்கும். ரொம்ப நேரமும் எண்ண வேண்டியிராது. யாராவது சில்லறை கேட்டு வந்தால் இந்த பாவப்பட்ட நோட்டுக்களை முதலில் வெளியே தள்ளி விடுவதில் முனைப்பு காட்டினான். சாப்பிடும்போது நன்றாக சோப்பு போட்டு கைகளைக் கழுவினான். ஒவ்வொரு நாளும் கணக்கை முடிக்கும் போது பணம் எதுவும் குறைந்திருக்கக் கூடாது என்ற பதற்றம் ஓடிக்கொண்டே இருந்தது.
அந்த மாசச் சம்பளத்தில் இருநூற்று ஐம்பது ருபாய் போல கூட கிடைத்தது. கேஷ் பார்த்ததற்கான அலவன்சு. சந்தோஷமாய்த்தான் இருந்தது. மாசக் கடைசியில் கொஞ்சம் பிக்கல் பிடுங்கல் இல்லாமல் இருக்கலாம். வீட்டில் அவள் என்ன கணக்கு வைத்திருக்கிறாளோ தெரியவில்லை. இதைப் பார்த்ததும் உற்சாகமாவாள் என நினைத்துக் கொண்டான். வீட்டில் நுழைந்ததும் எப்போதும் “அப்பா” என்று ஓடிவந்து காலைக் கட்டிக்கொள்கிற குழந்தை படுத்திருந்தது. “எதுவும் சாப்பிடல...ஒரே வாந்தி....” மனைவி பரிதவித்தாள். குழந்தையை அள்ளிக் கொண்டு அவசரமாய்ப் புறப்பட்டார்கள்.
டாக்டர் சற்குணம் பதற்றப்படாமல் குழந்தையை கவனித்தார். அவரைப் பார்த்ததும் குழந்தை சத்தம் போட்டு அழ ஆரம்பித்தான். “நல்ல பையன்ல...அழக்கூடாது...என்ன...ம்..அப்புறம் மிஸ்டர்..” இவனைப் பார்த்து சிரித்தார். “ஒண்ணுமில்ல...சாதாரண அலர்ஜிதான்.... அப்புறம் இந்தப் பக்கம் வரவேயில்ல.... எப்படியிருக்கீங்க. ஒங்க விரல்லாம் எப்படி இருக்கு?” பேசிக்கொண்டே போனார். ”சரியாப் போச்சு” என்றான். குழந்தையிடம் இருந்து திரும்பி இவனைப் பார்த்தார். திரும்பவும் குழந்தையை பரிசோதித்துக் கொண்டே “இப்போ கேஷ் ஷெக்ஷன் நீங்க பாக்கலையா?” என்றார். “பார்க்கிறேன்” என்றான். டாக்டர் “அப்படியா” என்று அவனைப் பார்த்தார். முகத்தில் நிலைத்த அவரது கண்களில் வித்தியாசம் ஏற்பட்டிருந்தது. பிறகு குழந்தையின் உடல்நலம் குறித்து அவர் சொன்னது எதையும் மனது வாங்கிக் கொள்ளவில்லை. எதோ ஒரு இருட்டு அவனைக் கவ்விக் கொண்டு இருந்தது. சகலமும் அணைந்து போனவனாய் காணப்பட்டான். வீட்டுக்கு வரும்போது குழந்தை அவன் தோளில் தூங்கிக் கொண்டு இருந்தான்.
இவனுக்குத் தூக்கம் வரவில்லை.வராண்டாவில் போய் உட்கார்ந்தான். பாராக்காரனின் விசில் சத்தம் இருட்டின் குரலாக கேட்டுக் கொண்டிருந்தது. மரங்கள் அசையாமல் புழுக்கமாயிருந்தது. திரும்ப உள்ளே வந்தான். படுத்துக் கொண்டான். ஏன் இதற்காகவெல்லாம் தவிக்க வேண்டும் என்றாலும் விடுபடமுடியாமல் இருந்தான். ஒரு நேரத்தில் தூக்கமும் வந்தது. இவனது விரல்கள் மெல்ல மெல்ல அழுகிப் போயின. பார்த்துக்கொண்டு இருக்கும் போதே ஒவ்வொன்றாய் கையிலிருந்து உதிர்ந்து கொண்டன. விழுந்தவை தரையில் பல்லியின் வால்களாய் துடித்தன. என்னமோ சத்தமாய்ச் சொல்லி எழுந்து உட்கார்ந்தான். மிரண்டு போயிருந்தான். படபடவென்று அடித்துக் கொண்டு இருந்தது.
“என்னங்க...” அவள் தூக்கக் கலக்கத்தோடு லேசாய் இவனை விழித்துப் பார்த்தாள். பால் குடித்த பழக்கத்தில் பையன் காற்றில் சப்புக் கொட்டிக் கொண்டு இருந்தான். இவன் எழுந்து போய் தண்ணீர் குடித்தான். படுக்கவே பயமாயிருந்தது. படுக்கச் சொல்லி அவள் இவன் மீது கைகளைப் போட்டுக் கொண்டாள். தட்டிக் கொடுத்தாள். அவளது விரல்களை தன்னுடைய விரல்களில் கோர்த்துக் கொண்டு நெஞ்சில் வைத்துக் கொண்டாள். கண்களை மூடிக்கொள்ளும் போது கொஞ்சம் நிம்மதியாயிருந்தது. விரல்கள் இப்ப்போது வெதுவெது என்றிருந்தன.
*
பி.கு:
1. இந்தக் கதை 1996ல் வெளியானது.
2. சென்னை சாகித்ய அகாடமியில் இந்தக் கதையை வாசித்தேன். எதிரே எழுத்தாளர் ஜெயகாந்தன், இந்திரா பர்ர்த்தசாரதி, சா.கந்தசாமி, பொன்னீலன் உட்பட பல எழுத்தாளர்கள் அமர்ந்திருந்தனர். வாசித்து முடிந்ததும், இந்திரா பார்த்தசாரதி கைகளைப் பிடித்துக் கொண்டு பாராட்டினார். கூடவே செம்மலரில் இப்படிப்பட்ட கதைகளையும் போடுகிறார்களா என்றார்.
*
அத்வானியின் ஜோக்கும், புதுமைப்பித்தன் கதையும்
நேற்று பத்திரிக்கையில் அந்தச் செய்தியைப் படித்ததும் எனக்கு ஒரு கதை ஞாபகத்திற்கு வந்தது. எப்போது படித்தாலும் சிரிப்பு வரக்கூடியது. புதுமைப் பித்தன் எழுதியது. அவருடைய நடையில் அதைப் படிக்க வேண்டும். அல்லது எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் சொல்லக் கேட்க வேண்டும். எனவே கதைச்சுருக்கம் மட்டும் சொல்கிறேன்.
ராமர் வயோதிகம் அடைந்து அயோத்தியில் இருப்பார். அனுமனும் அங்கேயே ஊழியம் செய்து கொண்டிருபார். உடலெல்லாம் பேன்கள் அடர்ந்து இருக்கும். எப்போதும் சொறிந்து கொண்டே இருப்பார்.
முன்னைப் போல தன்னை யாரும் மதித்து போற்றவில்லையே, தனது பராக்கிரமங்களை மக்கள் மறந்து விட்டார்களே என்ற ஆதங்கம் ராமருக்கு வந்துவிடும். மன உளைச்சலில் வாடுவார். அனுமனும் ராமரும் இது குறித்து விவாதிப்பார்கள்.
மீண்டும் சீதையை யாராவது தூக்கிக்கொண்டு போக மாட்டார்களா, நாமும் காட்டுக்குச் சென்று, போர் தொடுத்து நமது மகிமையை நிலைநாட்ட மாட்டோமா என்று திட்டம் போடுவார்கள். சரி, சீதையை யார் இப்போது தூக்கிக் கொண்டு போவார்கள் என்று கவலை வந்து விடும்.
விழுந்து விழுந்து சிரிக்கும்படியாய் கதை இப்படியே போகும். தேடிப் பிடித்துப் படியுங்கள்.
சரி... பத்திரிக்கையில் படித்த அந்தச் செய்தி என்னவென்று இப்போது புரிந்து விட்டதா?
முன்னர் சீரியஸாக இருந்தது, இப்போது ஜோக்காகத் தோன்றுகிறது. நாயகனாயிருந்தவரை வில்லனாக்கி கடைசியில் காமெடியனாகவும் மாற்றி விடுவார்கள் போல. ராமன் எத்தனை ராமனடி?
*
பி.கு:
இது எனது 100 வது பதிவு. இந்த சிறு சந்தோஷத்தை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். நன்றி.
*
நான் கடவுள் அல்லது கங்கைக்கரை சுடலைமாடன்
ஒரே ஒரு ஊர்ல ஓரே ஒரு அப்பாவாம். அவருக்கு ஒரே ஒரு பையனாம். அவன் உங்களுடன் இருந்தால் தோஷம் என்று நான்கு ஜோதிடர்கள் ஒரே மாதிரி சொல்கிறார்களாம். அப்பா தன் மகனை கங்கைக் கரையில் மந்திரம் படிக்க விட்டு விடுகிறாராம். பதினைந்து வருடங்கள் கழித்து மகனைப் பார்க்க, ம்களோடு காசிக்கு வருகிறாராம். அங்கு பிணங்களை எரிக்கிற, தியானம் செய்கிற, மந்திரம் சொல்கிற, சுயம்புநிலைப் பித்தனாய் மகனைப் பார்க்கிறாராம். அவனை வளர்த்த குருவின் சொல் கேட்டு, உறவுகளை முழுமையாய் அறுத்தெறியும் பொருட்டு, தேடி வந்த உறவுகளோடு ஊருக்கு மகன் புறப்படுகிறானாம்.
கருப்புப் போர்வை மாதிரியான உடையில், கபாலமணி மாலையணிந்து, கஞ்சா அடித்துக் கொண்டு, தாடி முடியோடு வெறித்த பார்வையோடும் அல்லது மூடிய கண்களோடும் இருக்கிற மகனைப் பார்த்து அம்மா அதிர்ந்து போகிறார். நள்ளிரவில் உடுக்கை அடித்துக் கொண்டு புகை நடுவே காட்சியளிக்கும் அவனைப் பார்த்து அண்டை வீட்டார் மிரண்டு நிற்கிறார்கள். இந்த இடத்தில் நிற்க.
உடல் வளர்ச்சி குன்றிப்போயிருக்கிற, உறுப்புகள் சிதைந்திருக்கிற, கைவிடப்பட்ட, வயதான, ஆண் பெண் பாலற்ற, இயல்பான தோற்றமற்ற என பல ரூபங்களில் அசாதாரண மனிதர்கள் வருகிறார்கள். அவர்களை கூட்டம் கூட்டமாய் சேகரித்து, அவர்களை பிச்சையெடுத்துப் பிழைக்க வைக்கிற கருப்பு மொட்டைத் தலையன் ஒருவன் இருக்கிறான. பிச்சையெடுக்க வைக்க அவன் கையாளும் கொடூரத்தனங்கள் காண்பிக்கப்படுகின்றன.
நள்ளிரவில் துடியாக பித்தன் புறப்படுகிறானாம். மலைக் கோவிலுக்குச் செல்கிறானாம். அங்கு போய் குகை மாதிரியான இடத்தில் உட்கார்ந்து கொள்கிறானாம். இந்த இடத்திலும் நிற்க.
மலைக்கோவில் வாசலில் அவர்கள் பிச்சையெடுக்கிறார்கள். சிவன், பார்வதி, கிருஷ்ணர், அனுமன் என ரூபங்கள் புனைந்து இருக்கிறார்கள்.
ஆடிப்பாடிப் பிழைக்கும் கூட்டம் ஒன்று. அதில் கண்ணற்ற பாடகி ஒருத்தி இருக்கிறாள். போலீஸ் உதவியோடு ஒருவன் அவளை பிச்சையெடுக்க வைக்க தூக்கிச் செல்கிறான். அழுது கலங்கி நிற்கும் அவளுக்கு, வந்து சேர்ந்த இடத்தில் இருக்கும் மற்றவர்கள் அன்போடு உறவாகிறார்கள். அவர்களிடமும் சந்தோஷமும், நையாண்டியும், வாழ்வும் இருக்கிறது.
காவியுடை அணிந்த இதர சாமிகள் எல்லாம் பித்தனது விசித்திர நடவடிக்கை கண்டு கண்களை விரிக்கிறார்கள். விலகி நிற்கிறார்கள். ஒரே இடத்தில் அசையாமல் படுத்து இருக்கிறானாம். அம்மா வந்து வீட்டுக்கு அழைக்கிறார்கள். பெண்ணைப் பற்றிய சித்தர் பாடல் சொல்லி வெறிக்கிறானாம். அம்மா மயங்கிய வெளியில் அழுதுகொண்டே வீட்டுககுப் போய் அவன் ஒரு சுயம்பு என புரிந்து கொள்கிறாளாம். திரும்பவும் நிற்க.
மலையாளத்தில் இருந்து வெத்திலை வாயோடு ஒருவன் கருப்பு மொட்டையை சந்திக்கிறான். தொழில் அபிவிருத்திக்கு திட்டம் சொல்கிறான். இங்கிருப்பவர்களை அங்கும், அங்கிருப்பவர்களை இங்குமாக மாற்றிக் கொள்ள முடிவெடுக்கிறார்கள். மலைக்கோவிலில் பிச்சையெடுப்பவர்களை கதறக் கதற முரட்டுத்தனமான மனிதர்கள் தூக்கிச் செல்கிறார்கள். மீதமிருப்பவர்கள் இரவில் அழுகிறார்கள். அடுத்த நாள் கண்ணற்ற பாட்கியை துக்கிச் செல்ல வருகிறார்கள். அவள் கதறி, திகைத்து ஓடுகிறாள். பித்தன் காலைப் பிடித்துக் கொள்கிறாள்.
பித்தன் அந்த முரட்டு மனிதர்களை தாக்குகிறானாம். வெத்திலை வாயனை துவம்சம் செய்கிறானாம். பிணமாக தோளில் போட்டு அடர்ந்த மரங்களுக்குள் செல்கிறானாம். காவல் நிலையத்தில் அவன் பாட்டுக்கு உட்கார்ந்திருக்கிறானாம். கோர்ட்டில் ஜட்ஜ் முன்பு கால் மேல் கால் போட்டு உட்கார்ந்து நான் கடவுள் என்கிறானாம். இந்த இடத்திலும் நிற்க.
கண்ணற்ற பாடகிக்கு ஒரு சிஸ்டர் ஆறுதலையும், கடவுளின் வார்த்தைகளையும் சொல்லி அனுப்புகிறாள். மொட்டைத் தலையன் அவளைப் பிடித்து வந்து சித்திரவதைப் படுத்துகிறான். முகத்தில் கல்லை வைத்து அடிக்கிறான். சுவரில் தேய்க்கிறான்.
போலீஸார் ஐந்து நாட்கள் கூடவே இருந்து அவன் குளிப்பதையும், தலைகீழாக நிற்பதையும், கஞ்சா அடிப்பதையும் பார்க்கிறார்களாம். அவன் மேல் தவறு இல்லை என விடுவிக்கும்படி போலீஸ் சொல்கிறதாம். வெளியே வரும் அவனை கருப்பு மொட்டை பார்க்கிறான். மலைக்கோவில் அருகே பித்தனோடு சண்டைக்குப் போகிறான். பித்தன் அனாயசமாக அவனைத் தூக்கிப் போட்டு மிதிக்கிறனாம். பாறையில் மோதி கருப்பு மொட்டையிலிருந்து ரத்தம் வருகிறது.
குகைக்குள் பித்தன் தலைகீழாக நிற்கிறானாம். கண்ணற்ற அழகி அவன் முன் தரையில் கிடந்து சிதைந்த முகத்தோடு அழுது புரளுகிறாள். தங்களை ஏன் கடவுள் இப்படிப்பட்ட பிறவிகளாய் படைத்தான் என்று புலம்புகிறாள். எந்தக் கடவுளும் தன்னைக் காபாற்ற வரவில்லையே என்று சத்தம் போடுகிறாள். வாழ இயலாதவர்களுக்கு மரணம் ஒரு வரம் என குரு சொன்னது அவன் நினைவுக்கு வருகிறதாம். இப்போதும் நிற்க.
வெளியே நிராதரவான மற்றவர்கள் காத்து நிற்கிறார்கள். உள்ளே கழுத்தறுபட்டு கண்ணற்ற பாடகியின் துடிப்புகள் அடங்குகின்றன. பித்தன் அவன் போக்கில் போய்க் கொண்டு இருக்கிறானாம். இப்போது நீங்களும் தியேட்டரை விட்டுப் போகலாம்.
கதையையும், காட்சிகளையும் வேகமாகச் சொல்லியாகி விட்டது. இனி ‘நான் கடவுள்’ திரைப்படம். பாலா தொடர்ந்து எக்ஸண்ட்ரிக் பாத்திரங்களையே முன்வைத்து சினிமா எடுத்து வருகிறார். நந்தாவில், அப்படி ஒரு பாத்திரத்தோடு இலங்கை அகதிகள். பிதாமகனில் அப்படியொரு பாத்திரத்தோடு கஞ்சா விற்கும் கூட்டம். இந்தப்படத்தில் அப்படியொரு பாத்திரத்தோடு உடல் வளர்ச்சியற்ற, சிதைந்த பிச்சை கேட்கும் அசாதாரண மனிதர்கள்.
தமிழ்ச்சினிமாவின் பல கூறுகளை தகர்க்க முடிந்த படத்தில், வில்லன் மற்றும் கதாநாயகன் என்னும் வலைக்குள் வெளிவர முடியாமல் சிக்கித் தவிக்கிறது. பாட்சா படத்தில் ரஜினி எப்போது வில்லனை அடித்து நொறுக்குவார் என்று காத்திருக்கும் சாமானியனின் எதிர்பார்ப்பை இந்தப் படத்திலும் வைத்திருக்கிறார். டூயட், கடி ஜோக்குகள், ஆபாசம் என தமிழ்ச்சினிமாவின் அத்தியாவசியங்களும், அடையாளங்களும் இல்லைதான். ஆனால் சகிக்க முடியாத வன்முறை காட்சிகள்.
படத்தில் நடித்த அனைவரையும் கௌரவிக்கலாம். அப்படி கதையோட்டத்தில் பொருந்திப் போகிறார்கள். தம்பி படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடித்த பூஜாவா கண்ணற்ற பாடகி என்று நம்பவே முடியவில்லை. ஆர்யாவின் உடல்மொழியும், கண்களும் மிக முக்கியமானவை படத்தில். வடிவேலுவோடு சட்டை கிழித்துக் கொண்டு கிறுக்கன் போல வந்து போனவர் இந்தப் படத்தில் எல்லோரையும் அள்ளிக் கொள்கிறார். உடல் குன்றிய மனிதர்களை கடத்தி வந்து பராமரிக்கும் அவரே இரவில் பாட்டில் வாங்கி வந்து, குடித்து அவர்களோடு அடிக்கும் லூட்டிகள், போதையேறி அவர் நிதானமிழந்ததும் அவர்கள் அவரை வைத்து செய்யும் கிண்டல்கள், தமிழில் அபூர்வமான காட்சிகள். படத்தில் நகைச்சுவை வலிந்து நலிந்து இல்லை. வசனங்கள் கவனிக்கச் சொல்கின்றன.
காட்சியமைப்புகள் பல இடங்களில் அடர்த்தியாகவும், நேர்த்தியாகவும் பிரமிக்க வைக்கின்றன. பிணங்கள் எரிக்கும் காட்சிகள் கங்கையை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. படம் முழுவதும் வெப்பம் தகிக்கிற உணர்வை இளையராஜா தந்திருக்கிறார். அவரின் புலன்களுக்குள் இசை தன்னை மீட்டிக்கொண்டே இருக்கும் போலும். படத்தில் யாவும், யாவரும் அவர் இசையில்தான் அசைந்து கொண்டிருப்பதாய் படுகிறது. தீயின் வளைவுகளையும், நெளிவுகளையும், துடிப்புகளையும் படிமங்களாய் காமிரா சொல்லிச் செல்கிறது. வேகம், வேகம், அப்படியொரு வேகத்திலும், கோணத்திலும் பார்வையாளனை திரைக்குள் இழுத்துச் செல்கிறது. சினிமா என்னும் மொழியில் பாலாவுக்கு பேசத் தெரிந்திருக்கிறது. என்ன பேசுகிறார் என்பதுதான் குழப்பமானது.
படம் முழுக்கவே கடவுள் குறித்த பிம்பங்களும், பிரமைகளும் கேள்விக்குள்ளாக்கப்படுகின்றன. மலைக்கோவிலில் கடவுள் வேடத்தில் பிச்சையெடுக்கும் காட்சியில் “மருதமலைக்கு நீங்க வந்து பாருங்க” பாட்டு ஒலிப்பது அப்படி ஒன்றுதான். ஆனால் பிச்சையெடுக்கும் காட்சி பார்வையாளர்களின் ஆரவாரங்களில் அமுங்கிப் போகிறது. அந்தப் பாடலை ‘ரஹிம் சவுண்ட் சர்வீஸ்’ ஒலிபரப்புவது சட்டென்று வந்து ஒரு செய்தியைச் சொல்லிப் போகிறது. முரடர்கள் தங்களைத் தூக்கிச் செல்ல வருகிறார்கள் என்றவுடன் கடவுள்கள் வேடத்தில் இருப்பவர்கள் பயந்து ஒடுவதும், “நமக்கு ஏன் இவ்வளவு கஷ்டத்தைக் கொடுத்தான்” என்று ஒருவர் கேட்க, இன்னொருவர் “தேவடியாப்பயல்” என்று வசை பாடுவதும் என நிறைய இருக்கின்றன. ‘அவர்கள் யாரும் கடவுள் இல்லை, நானே கடவுள்’ என மனிதன் சொல்வதை படத்தின் குரலாக மிகக் கவனித்து கேட்க முடிகிறதுதான். ஆனால் அது தெளிவாக ஒலிக்கவில்லை.
கதை நிகழும் நிலப்பரப்பை இதுதான் என்று குறிப்பிட்டுச் சொல்லவில்லை. ஊரற்ற, பேரற்ற வெளியாக இருக்கட்டும் என நினைத்திருக்கலாம். சுலோகங்களும், மந்திரங்களும் என நாயகன் அடிக்கடிச் சொல்லும் போது போதுமடா கடவுள் என எரிச்சல் வருகிறது. பெரும் தத்துவங்களை, ஆன்மீகம் குறித்த சாரங்களை கதைக்கு ஊடாக நிரப்பியிருக்கும் தோற்ற மயக்கத்துக்கா இதெல்லாம். இந்த சுடலைமாடனை கங்கைக்கரையில் இருந்து நம் நிலத்துக்கு அழைத்து வந்திருக்க வேண்டியதில்லையே என்றுதான் இருக்கிறது. ஒருவேளை பிதாமகன் சாயல் வந்துவிடும் என்று பாலா நினைத்திருக்கலாம்.
கை, கால், முகம், உடல் என உருவங்கள் கலைந்த, கவனம் பெறாத அசாதரண மனிதர்கள்தான் இந்தக் கதையின் முக்கிய மாந்தர்கள். “பாரடா இவர்களைப் பாரடா” என்று நம் மனசாட்சிகள் விசாரிக்கப்பட்டிருக்கின்றன. அவர்களது துயரம், அவமானம், வதைகள் எல்லாம் நம் மூளைக்குள் நுழைந்து அரற்றுகின்றன. குடும்பங்களற்ற அந்த மனிதர்கள் அங்கே குடும்பமாய் பிணைக்கப்பட்டிருப்பதும், அவர்களது கிண்டல் பேச்சுக்களும் நம்மை ஒருவிதத்தில் ஆசுவாசப் படுத்துகின்றன. நாயகனும், அப்படி ஒரு குடும்பமற்றவன் தான். ஆனால் ஆஜானுபாகுவாய், விஸ்ரூபம் எடுக்கிறவனாய் வந்து நான் கடவுள் என சமஸ்கிருதத்திலும், தமிழிலும் சொல்வது சுருதி பிசகி ஒலிப்பதாகவேப் படுகிறது. தவறு செய்கிறவர்கள், வாழ முடியாதவர்கள் இருவருக்கும் மரணத்தையே கடவுள் அளிப்பது செரிக்க முடியாதது.
கண்ணற்ற பாடகிக்கு சகலமும் சிதைந்து போனாலும், அவளது குரல் இருந்ததே.... அந்தக் குரல்வளை அறுத்தா கொல்ல வேண்டும். படம் முடிந்து வெளியே வருகிற போது அவளது கேள்விகளும், திகைத்து நிற்கும் அசாதாரண மனிதர்களின் முகங்களும் துரத்துகின்றன நம்மையும், ‘நான் கடவுளையும்’. துரத்தும் படைத்த பாலாவையும். அப்போது இதைவிட, தன் பார்முலாவை விட்டு மீறி, அற்புதமான படப்புகளை அவரால் கொண்டு வர முடியும். அதற்கான ஆகிருதி அவருக்கு இருக்கிறது.
*