வாழ்வது என்பது வேறு

deads அவனது பெயர் ஞாபகம் இல்லை. தேவையும் இல்லை. உங்கள் பெயராக இருக்கலாம். என் பெயராக இருக்கலாம். ஒரு வங்கி ஊழியன். வயது முப்பதுக்கும்  மேலே. அம்மா பெங்களூரில் இருக்கிறார்கள். இவனுக்கு மும்பையில் நகர்ப்புறம் தாண்டிய ஒதுக்குப் புறத்தில் தனியே வாசம். இதெல்லாம் இந்தக் கதாபாத்திரம்  செய்யப் போகிற காரியத்திற்கு பின்புலம் என்று சொல்லிவிட முடியாது. முக்கியமாக நடுத்தர வர்க்கத்தின் ஒரு நபர்.

 

பத்திரிக்கைகளில் வரும் விமர்சனங்களை அலட்சியம் செய்து சினிமா நிறைய பார்ப்பான். பெரிய திரைகளில் வரும் உருவங்களில் ஐக்கியமாகி கரைந்து  போவான். பத்திரிக்கைகளில் குறுக்கெழுத்து போட்டிகளில் சுவராஸ்யம் உண்டு. எந்த கூடுதலான பொறுப்புகளையும் ஏற்றுக்கொள்ள மாட்டான். ஒரு பதவி  உயர்வு கூட மறுத்திருக்கிறான். கல்யாணம் என்பதும் அப்படி ஒரு சிட்டையில்தான் அவனிடம் இருக்கிறது. தவணைகளில் டி.வி வாங்கி அறையில்  வைத்திருக்கிறான். அதன் வெளிச்சம் வெட்டும் திரைக்கு முன்னாலேயே ஞாயிற்றுக் கிழமை பொழுதெல்லாம் உட்கார்ந்திருப்பான். அவ்வப்பொழுது எலக்ட்ரானிக்  வசியத்தின் முக்கிய இரையான சாண்ட்விச் சாப்பிட்டுக்கொள்வான். மற்ற விவரங்கள் எல்லாம் தெளிவாக நினைவில் இல்லை.
அந்த சனிக்கிழமை மதியத்திற்குப் பிறகான வாரக் கடைசி நேரம்தான் ஆழமாய் பதிந்து பதற்றம் கொள்ள வைக்கிறது.

 

அரை நாள் வேலை பார்த்துவிட்டு சினிமா பார்க்கப் போனான். சாத்தியமற்ற ஹீரோத்தனங்கள் அலைமோத வெளியே வந்தான்.  பக்கத்தில் ஒரு நூலகம்  சென்று சில வெளிநாட்டு பத்திரிக்கைகளை மேய்ந்தான். அப்புறம் ஒரு கழைக்கூத்தாடியின் உடல் ஜாலங்களை சிறு கூட்டத்தோடு பார்த்தான். சில்லறையை  போட்டுவிட்டு அடுத்த தியேட்டருக்குப் போனான். டிக்கெட் வாங்கி பல வண்ணங்களில் நிறைந்திருந்த சுவரொட்டிகளையும், பிம்பங்களையும் பார்த்துவிட்டு  இருட்டுக்குள் நுழைந்தான். மினுங்கிய எத்தனையோ ஜோடி கண்களில் இவனுடையதும் ஒன்றாக ருந்தது.

 

வெளியே வந்த போது  நள்ளிரவாக இருந்தது. வி.டி ஸ்டேஷனுக்கு நடந்தான். நியான் விளக்கு வெளிச்சத்தில் நிழல்கள் நெளிந்தன. எலக்டிரிக் டிரெயினுக்கு அந்த  நேரத்திலும் பலர் காத்திருந்தார்கள். கடைசி வண்டியில் ஒரு மூலையில் உட்கார்ந்து கொண்டான். இரண்டு மூன்று ஸ்டேஷன்கள் கடப்பதற்குள் பலர்  இறங்கிக்கொண்டார்கள்.

 

கையிலிருந்த ஒரு பத்திரிக்கையில் இருந்து பார்வையை சுழற்றியபோது ஒரு வயதான குருட்டு பிச்சைக்காரன் மட்டுமே தள்ளி இருந்தான்.குறுக்கெழுத்துப்  போட்டியில் ஒரு துப்பு கிடைத்தது. வாட்சை பார்த்தான். மணி ஒன்று. இன்னும் பதினைந்து நிமிட பிரயாணம் பாக்கி.

 

வெளிச்சம் மங்கலாகவும், மஞ்சளாகவும் வெப்பமான காற்றோடும் அங்கிருந்தது. பிச்சைக்காரன் தன்னையே பார்ப்பது போல இருந்தது. பார்வையை மாற்றிக்  கொண்டான்.

 

"..சார்...யாரும் இங்கிருக்கிறார்களா..இந்த ஜன்னலை திறந்து விடுங்களேன்.." அந்த பிச்சைக்காரன் பார்வையால் துழாவிக்கொண்டு கேட்கிறான்.

இவனுக்கு புரியாத நடுக்கமிருந்தது. வண்டியோட்டத்தில் மின்சாரக்கம்பங்கள் நீண்ட வரிசையான சிலுவைகளாக கடந்தன.

"...சார்..இங்கு ஒருத்தர் இருக்கிறார் என்றுதான் நினைக்கிறேன்.." திரும்பவும் அவன்.

 

இவன் எழுந்து நடந்து  ஜன்னலை உயர்த்தினான். பிச்சைக்காரன் நன்றி சொன்ன மாதிரி இருந்தது. திரும்பவும் வந்து பத்திரிக்கையில் புதைந்து கொண்டான்.  வண்டி சீக்கிரம் போய்ச் சேராதா என்றிருந்தது. பிச்சைக்காரன் எழுந்து வண்டியின் நடுக்கத்தில் சமாளித்து நின்றான். கதவுப்பக்கம் போனான். அதையொட்டிய  சுவரில் சாய்ந்து கொண்டான். காற்றில் அவனுடைய கலைந்து கிடந்த முடி அசைவதை இவன் பார்த்தான். வண்டியின் பெரிய அசைவுகளில் அவன் அந்த  விளிம்பில் நிற்பது அபாயகரமானதாகப் பட்டது. காற்றுக்காக நிற்கிறான் என்பதும் புரிந்தது.

 

குறுக்கெழுத்துப் போட்டியில் அடுத்த துப்பு கிடைத்தது. மீதமிருக்கும் ஐந்து நிமிடத்தில் குறுக்கெழுத்துப் போட்டியை முடித்துவிட முடியும் என  நினைத்துக்கொண்டான். திரும்பவும் பிச்சைக்காரனை பார்த்தான். எதோ ஒரு நிழல் அவனை உற்றுப் பார்ப்பது போல உறுத்தியது. அவன் தூங்கிவிட்டால்  என்னவாகும்?  

 

குறுக்கெழுத்து போட்டியில் மூழ்கினான். திடுமென பத்திரிக்கை காற்றில் முகத்தில் படபடத்து அடித்தது. எதிரே வந்து கொண்டிருந்த இன்னொரு வண்டியின்  பெரும் சத்தம். அந்த வண்டி சதுர வெளிச்ச நிழல்களை இவன் மேல் எறிந்தபடி கடந்தது. சட்டென ஒரு ஆழமான அமைதி அங்கு நீடிக்க வளைவில் எதிர்  வண்டி மறைந்தது. குறுக்கெழுத்துப் போட்டி தெரிகிற மாதிரி திரும்பவும் பேப்பரை மடித்துக் கொண்டான்.

 

கடைசி கட்டத்தையும் நிரப்பி நிமிர்ந்த போது பிச்சைக்காரன் கதவருகே இல்லை. உறைந்து போனான். மெல்ல எழுந்து தேடினான். வாசல் காலியாக இருந்தது.  பச்சை நிற இருக்கைகள் இவனை அசையாமல் பார்க்க ஒரு காற்றாடி அதன் கழுத்தை சுற்றி வளையங்கள் தெறிக்க ஒடிகொண்டிருந்தது. கைப்பிடிகள் அவை  பாட்டுக்கு ஒரு அமானுஷ்ய நிலையில் அசைந்து கொண்டிருந்தன. கதவுக்கு வெளியே தலை எட்டி பார்த்தான். தண்டவளங்கள் வழுக்கி ஓட ஒரு  பைத்தியக்காரப் பந்தயத்தில் தோற்றுப் போன மாதிரி வண்டி மெதுவாகிக் கொண்டிருந்தது.

 

இவன் நடுக்கத்தோடு இருக்கையில் வந்து அமர்ந்தான். பலவீனமாக உணர்ந்தான். வண்டி ஸ்டேஷனுக்குள் நுழைந்து கொண்டிருந்தது. இறங்கினான். சில  பிரயாணிகள்  வாசலை நோக்கிப் போய்க் கொண்டிருந்தார்கள். இவன் இருட்டில் எண்ணெய் மண்டிய அந்த சக்கரங்களை பார்த்துக் கொண்டிருந்தான்.  சாவகாசமான சத்தத்தோடு வண்டி புறப்பட்டது. ஜோடி சிவப்பு வெளிச்சப் புள்ளிகள் முற்றிலும் மறைந்தன. கடைசி மனிதனாக ஸ்டேஷனை விட்டு வெளியே  வந்தான்.

 

நீல நிறத்தில் தெரு வெறிச்சோடிக் கிடந்தது. அரவமில்லாத சத்தங்களில் நடந்தான். பழியிலிருந்து தப்பிக்கிறவனாய் தனது தோள்களை அடிக்கடி பார்த்துக்  கொண்டான். இதயம் கிடந்து அடிக்க சிறு ஒட்டமெடுத்தான்.

 

இதுதான் கதை. ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன் வீக் பத்திரிக்கையில் படித்தது. எழுதியவர் புகழ் பெற்ற மராட்டிய எழுத்தாளர் மனோஹர் ஷெட்டி. எப்போது  நினைத்தாலும் அவஸ்தையாய் இருக்கிறது.

 

கண் இழந்த அந்த குருட்டுப் பிச்சைகாரனுக்கும்... குறுக்கெழுத்துப் போட்டிக்காரனுக்கும் பெரிய வித்தியாசமில்லை. இரண்டு பேரும் அன்று தண்டவாளத்தில்   இறந்து போனவர்கள்தான். வாழ்வது என்பது வேறு.

*

கருத்துகள்

19 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. வாழ்வது என்பது வேறேதான்! அது பலருக்கு வசப்படுவதில்லை...

    பதிலளிநீக்கு
  2. தோழர் மதவரஜ்க்கு ,

    நன்றி , எங்கே என் தோழமையை தொலைதுவிட்டனோ என்று கலங்கி போனேன் .

    ஒரு கதை மனதை உறைய வைக்க முடியுமா ?? உங்களின் பதிவுகள் இன்னும் இன்னும் கணம் கூடி கொண்டே போகிறது . வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  3. நான் உங்க கதைன்னு நினைச்சேன்.. இருந்தாலும் நீங்க தமிழ் படுத்தியிருக்கப்ப்போ அருமையா பண்ணியிருக்கீங்க... (சில பேர் காப்பியடிச்சாலும் உண்மையை சொல்ல மாட்டாங்க. அந்த வரிசையில நீங்க தனிப்பட்டு நிக்கிறீங்க சார்.... ஹாட்ஸ் ஆஃப்)

    பதிலளிநீக்கு
  4. வணக்கம் தோழர் மாதவராஜ்.இன்றுதான் புதிதாய் உங்கள் பக்கம் வந்திருக்கிறேன்.வேறு எங்கும் உங்களைச் சந்தித்ததாகவும் ஞாபகம் இல்லை.என்றாலும் இப்போ சந்தித்ததில் சந்தோஷம்.

    "வாழ்வு என்பது வேறு"தலைப்பே அருமை.வாழ்வை வாழவாகச் சிலர் வாழ்ந்துகொள்வதில்லை.சிலருக்கு வாழ்வு அமைவதும் இல்லை.
    இதுதானே நியதியாய் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  5. நல்லதொரு சிறுகதை உங்கள் மொழிநடையில் இன்னும் அழகாகியிருக்கிறது !

    பதிலளிநீக்கு
  6. மிகவும் கனமான மறந்து போகாத கதை. நன்றி

    பதிலளிநீக்கு
  7. தமிழன் கறுப்பி!

    நீங்கள் சொல்வது உண்மைதான்.

    பதிலளிநீக்கு
  8. ஜீவா!

    எதற்கு கலங்கினீர்கள்? கவனித்துக் கொண்டுதான் வருகிறேன் உங்கள் படைப்புக்களின் அடர்த்தியும் கூடிக்கொண்டுதான் போகிறது.

    பதிலளிநீக்கு
  9. ஆதவா!

    நன்றி. தங்கள் வாழ்த்துக்களுக்கும். இப்ப என்ன எழுதியிருக்கிறீர்கள். வர்றேன்.

    பதிலளிநீக்கு
  10. ஹேமா!

    தங்கள் முதல் வருகைக்கு நன்றி.

    //"வாழ்வு என்பது வேறு"தலைப்பே அருமை.//

    இது நான் வைத்த பதிவின் தலைப்பு. கதையின் உண்மையான தலைப்பு the weekend!

    பதிலளிநீக்கு
  11. ரிஷான் ஷெரிப்!

    முரளிக் கண்ணன்!

    இருவருக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  12. கதை ரொம்ப பாதித்தது . பிச்சைகரர்களையும் , வயதானவர்களையும் பார்க்கும்பொழுது மனது பாரமாய் மாறிவிடுகிறது .

    பதிலளிநீக்கு
  13. ப்ளாக் டிசைன் மாற்றி விட்டீர்கள் .நன்றாக உள்ளது . ஆனால் தங்களின் எழுத்துகளை போல கம்பிரமாக இல்லாமல் இருப்பதை பட்டது . இந்த வெப்சைட் http://btemplates.com/ போய் பாருங்களேன்


    தோழமையுடன் ஜீவா

    பதிலளிநீக்கு
  14. ********** தயவு செய்து பிரசுரிக்க வேண்டாம் **********

    எதற்க்கு கலங்கினீர்கள்? ///

    யாரவது முதுகில் தட்டி சின்னதாய் பாராட்டி விட்டால் , எதிரே இருப்பவர்க்கு அறிவுரை சொல்லிடும் பேதைமை வந்துவிடுகிறது . நானும் அப்படிதான் காயப்படுத்தி விட்டேனோ என்று தோன்றியது . மன்னித்து விடுங்கள் .

    தோழமையுடன் ஜீவா
    email & chat id : geevaa1@gmail.com

    பதிலளிநீக்கு
  15. அழகான உயிரோட்டமுள்ள கதை....படிக்கத் தந்தமைக்கு நன்றி...
    அன்புடன் அருணா

    பதிலளிநீக்கு
  16. அன்புடன் அருணா!

    தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி. நேரம் கிடைக்கும் போது வாருங்கள்.

    பதிலளிநீக்கு
  17. உங்களுடைய blog link ஐ Tamil Blogs Directory - www.valaipookkal.com. ல் சேர்த்துள்ளோம்.

    உங்களுடைய Blog Post Link ஐ இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

    இதுவரை இந்த வலைப்பூக்கள் தொகுப்பில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.

    நட்புடன் வலைபூக்கள் குழுவிநர்

    பதிலளிநீக்கு
  18. கதையின் தலைப்பு வேறு புரிதல்களை தருகிறது. குருட்டு பிச்சைக்காரரின் முடிவு அவனுக்கு வாழ்க்கையை சொல்லி தந்து இருக்கலாம் இல்லையா? நல்ல மொழிப்பெயர்ப்புக்கும்,எங்களுடன் பகிர்ந்துக் கொண்டதற்கு நன்றி மாதவராஜ்

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!