அதிகம் யாரோடும் பேசிக்கொள்ள மாட்டான். டாக்டர் சற்குணம், வேலை பார்க்கும் வங்கியில் பியூன் பெருமாள்சாமி, தனது எலிமெண்ட்டரி ஸ்கூல் வாத்தியார் ராமனாதன் என்று ஒரு சிலர் விதிவிலக்கு. தன்க்குள்ளேயே நிறைய பேசிக்கொள்வான். அதற்கென சங்கதிகள் இருந்தன. தெரிந்தவர்கள் யாராவது இறந்துவிட்டால் கண் கலங்குவான. மகாநதி படம் பார்த்து பாதியிலேயே தாங்க முடியாமல் வெளியே வந்துவிட்டான். எல்லாவற்றுக்கும் காரணம் தேடிக்கொண்டே இருப்பான. கொஞ்சம் இரக்கத்தோடும் நிறைய கேலியோடும் மற்றவர்கள் புறம் பேசுவது கேட்டாலும் கவலைப்பட்ட மாதிரி தெரியாது. ஒருதடவை டெல்லிக்கு டூர் போயிருந்தபோது போட் கிளப் எதிரே அந்த பெரிய சாலையில் ஒரு குதிரை நொண்டிக்கொண்டு போன காட்சியின் துயரமான சாயல் ஒரு வருசம் கழித்து வந்த அவனது கனவில் இருந்தது. இன்னமும் குழந்தை முகம் அப்படியே இருக்கிறதென்று என்பது பலரால் அவனைப் பற்றி ஆச்சரியமாய் சொல்லப்படக்கூடிய செய்திகளில் ஒன்று. இவன்தான் நமது அழகப்பன்.
இந்த மாசம் ஆறாம் தேதியிலிருந்து இவனுக்கு கேஷியராக பணியாற்றும் சந்தர்ப்பம் வந்தது. கரன்ஸி என்பது கரண்ட் மாதிரி....அதிஜாக்கிரதையாய் கையாள வேண்டும் என்பதை ஏற்கனவே தெரிந்து வைத்திருந்தான். கொஞ்சம் அசந்தாலும் ஷாக் அடித்துவிடும். உஷாராய்த்தான் இருந்தான்.
சதா நேரமும் மனிதர்கள் கவுண்டருக்கு வெளியே காத்திருந்தார்கள். பணம் வாங்குவதற்கோ அல்லது செலுத்துவதற்கோ. ‘அமிர்தா ஐ லவ் யூ’ எழுதப்பட்ட நோட்டும் இடையில் வரும். லேசாய் சிரித்துக்கொண்டு இதை எழுதியவனுக்குப் பிறகு எத்தனை கைகள் இது மாறியிருக்கும் என்றும் அந்த அமிர்தா எப்படி இருப்பாள் என்றும் நினைப்பதுண்டு. ஏன் அந்த அமிர்தா இந்த நோட்டை பாதுகாத்துக் கொள்ளவில்லை என்ற கேள்வியும் தொடர்ந்து வந்து தொக்கி நிற்கும். ஒரு நோட்டை எண்ணுகிற எத்தனையாவது நபராகத் தான் இருப்போம் என்று எண்ணி பிரமித்துப் போவான். ஒவ்வொரு நோட்டும் இடம் மாறும்போது அங்கு ஒருவர் ஏமாற்ற, இன்னொருவர் ஏமாற ஒரு வலி பதிவாகிறது என்று ஒரு கதையில் படித்தது ஞாபகத்தில் வர, இதில் தான் யார் என்பது கடும் குழப்பத்தைத் தந்தது. பழகும் இடங்களில் அறிமுகமில்லாதவர்கள் கூட அங்கங்கு வணக்கம் சார் என்பதும், பெட்ரோல் தீர்ந்த கடைசி தினங்களில், ஸ்கூட்டரை வீட்டில் நிறுத்தி, பஸ்ஸுக்குக் காத்திருக்கும் சமயங்களில் “ஸார்... வர்றிங்களா... பேங்க்ல டிராப் பண்றேன்”: என்று ஒன்றிரண்டு தடவை முகம் பார்த்தவர்கள் கூட வந்து கேட்பதும் நிகழலாயிற்று. தனக்குக் கொஞ்சங்கூட சொந்தம் இல்லாத பணம் தருவிக்கிற மாய மரியாதை கண்டு சிரித்துக் கொண்டான்.
வெளியே நிற்கும் மனிதர்களின் முகங்களும் விரல்களுமே தெரிகிற மாதிரி சுற்றிலும் தன்னை அடைத்து வைத்திருந்தது பாதுகாப்பிற்கு பதிலாக பயத்தையே தந்தது. போதாக்குறைக்கு தன் பொருட்டு துப்பாக்கியுடன் ஒரு காவலாளி வாசலில் நின்று வருவோர் போவோரையெல்லாம் உற்றுப்பார்த்துக் கொண்டிருந்தது நடுக்கத்தை உண்டு பண்ணியது. உள்ளங்கை அடிக்கடி குளிர்ந்து போனது.
இரண்டாம் நாளே ஷக் அடித்து விட்டது. ஒரு ஐம்பது ருபாயைக் கோட்டை விட்டுவிட்டான். எண்ணி வாங்குவதிலோ, கொடுப்பதிலோ தப்பு நடந்திருக்க வேண்டும். கண்டுபிடிக்க முடியவில்லை. தனது பையிலிருந்து கொடுக்க வேண்டியதாயிற்று. அதற்குப் பிறகு அவ்வப்போது பெருமாள்சாமி உள்ளே வருவது கூட பயம் தர ஆரம்பித்தது. அந்த சந்தேகத்திற்காக தன்னையே நொந்து கொண்டாலும் ‘ஜாக்கிரதை’, ‘ஜாக்கிரதை’ என ஒரு சத்தம் கடிகார முள்ளாய் மூளைக்குள் ஓடிக்கொண்டிருந்தது. ஒருதடவைக்கு இரண்டு தடவை நோட்டுக்களை எண்ண ஆரம்பித்தான். புதுநோட்டாய் இருந்தால் விடைப்பாய் இருக்கும். சடசடவென்று எண்ண முடிகிறது. பழைய நோட்டுக்கள் தங்கள் தீராத பயணத்தில் நைந்துபோய் ஒன்றொடொன்று ஒட்டிக்கொண்டு லேசில் வராது. நிதானமாய் பிதுக்கி பிதுக்கி எண்னினான். கஸ்டமர்களை இப்படி காக்க வைக்கிறானே என மேனேஜருக்கு வருத்தம் வந்தது.
நான்காம் நாள் இவனுக்கு அது நேர்ந்தது. முதலில் வலதுகை பெருவிரலிலும், நடுவிரலிலும் நமைச்சல் ஏற்பட்டது. சும்மா உட்கார்ந்து இருக்கும்போது தடவிக்கொள்ள வைத்தது. ஜீன்ஸ் பேண்ட்டில் தேய்த்துக் கொள்வதில் ஒரு சுகம் இருந்தது. அந்த நேரங்களில் ஒருமாதிடி இடதுபக்கம் கடித்துக்கொள்வதும் பழக்கமாகி, இந்த இயக்கம் ஒரு அணிச்சை செயலாகவே மாறிப்போனது. தொடர்ந்து சில நாட்களில் காந்தலெடுக்க ஆரம்பித்த போது தடவிக் கொள்ளவும், ஜீன்ஸ் பேண்ட்டில் தேய்த்துக் கொள்ளவும் முடியவில்லை. அந்த விரல்களின் ஓரங்களில் வெடிப்புகள் வந்திருந்தன. சாப்பிடும்போது எரிச்சல் தாங்க முடியவில்லை. முதன்முதலாய் அது குறித்து கவலைப்பட ஆரம்பித்தது அப்போதுதான். தனிமைகளில் தன் விரல்களைப் பார்த்து அருவருப்படைந்தான். பயமாகவும் இருந்தது. பேண்ட் பாக்கெட்டுக்குள் கையை விட்டுக்கொண்டு நடமாடினான். பணம் எண்ணி வாங்கவும், கொடுக்கவும் சிரமமாயிருந்தது. அந்தச் சின்னப் புண்களின் ரணம் பண நோட்டுக்கள் எல்லாவற்றிலும் பட்டுக்கொண்டே இருந்தது. அன்றைக்கு சாயங்காலம் டாக்டரை பார்த்து விடுவது என்ற முடிவுக்கு வந்தான்.
டாக்டர் சற்குணத்தின் கிளினிக்கில் எப்போதும் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும். கஷ்டப்பட்டவர்களிடம் இரண்டு அல்லது மூன்று ருபாய் கூட வாங்கிக் கொள்வார். இலக்கியம் பேசுவதற்கென்று சில பேர் வருவார்கள். கவர்ன்மெண்ட் ஆஸ்பத்திரியில் நடந்த ஊழல் பற்றி ஜூனியர் விகடனுக்கு தகவல் கொடுத்ததற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டவர். அழகப்பனை பார்த்ததும் “வாங்க... வாங்க...” என முகம் மலர்ந்து வரவேற்றார். உற்சாகமாய் பார்த்தார். இவன் சந்தேகப்பட்டதையே ஊர்ஜிதம் செய்தார். பண நோட்டுக்களையே உட்கார்ந்து எண்ணிக்கொண்டிருப்பதுதான் காரணம் என்றார். இவனுடைய தோல் எந்த அசுத்தத்தையும் தாங்கிக்கொள்ள முடியாத அளவுக்கு சென்ஸ்டிவ் ஆக இருப்பதாகவும், உள்ளங்கை குழந்தையின் மென்மையாக இருப்பதாகவும் சொன்னார். அதில் இவனுக்கு ஒரு மகிழ்ச்சி இருந்தது.
ஆயின்மெண்ட்டும், சில மாத்திரைகளும் எழுதிவிட்டு கேஷ் கவுண்டரில் இனி உட்கார வேண்டாம் என புத்திமதியையும் சேர்த்துத் தந்தார். எத்தனையோ வியாதிஸ்தர்களை கவனிக்கும் இவருக்கு இதுமாதிரி வரவில்லையே என்ற நினைப்பும் அந்த நேரத்தில் அழகப்பனுக்கு ஒருபுறம் ஓடத்தான் செய்தது. அதைப் புரிந்து கொண்டவரைப் போல “வேணும்னா கிளவுஸ் போட்டுட்டு கேஷ் பாருங்க..” என்று சிரித்தார். டாக்டரின் கிண்டலில் முகம் சுருங்கித்தான் வெளியே வந்தான்.
மேனேஜரிடம் கையில் காயம் பட்டிருக்கிறதென்று சொல்லி இரண்டு நாட்கள் பெர்மிஷன் வாங்கிக் கொண்டான். கேஷ் கவுண்டரை விட்டெ வெளியே உட்கார்ந்து மற்ற வேலைகளைப் பார்க்க ஆரம்பித்தான். பேனாவையும் அந்தப் பெருவிரலாலும், நடுவிரலாலும்தான் முக்கியமாய்ப் பிடித்து எழுத வேண்டியிருந்தது. வழக்கம் போல எழுத முடியவில்லை. எழுத்துக்களும், எண்களும் வித்தியாசமாய்த் வந்தன. கடுமையாகத் தொந்தரவு செய்யப்பட்டான். நேரே மேனேஜரிடம் போய் இரண்டு நாள் கேஷூவல் லீவு எழுதிக் கொடுத்துவிட்டு வீட்டுக்குப் புறப்பட்டான். வழியில் இந்த சதாசிவம் ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாம் தன்னிடம் இதுபற்றி என்று முணுமுணுத்துக் கொண்டான்.
டாக்டர் எழுதிக் கொடுத்த ஆயின்மெண்ட்டை அவ்வப்போது போட்டுக் கொண்டான். “ஏங்க...இப்படியெல்லாம் கஷ்டப்பட்டுத்தான் கேஷ் பாக்கணுமா” என்றாள் இவன் அருமை மனைவி. வலது தாடை புடைக்க பற்களைக் கடித்து அவளை முறைத்தான். உலகத்தில் எவ்வளவோ கேஷியர்கள் இருக்கும்போது தனக்கு மட்டும் இப்படி நேர்ந்து விட்டதே என்ற கோபமும் அதில் இருந்தது அவளுக்குத் தெரியாது. பிறகு அவள் இது சம்பந்தமாய் வாயைத் திறந்து பேசியதே இல்லை. அவ்வப்போது இரக்கம் சிந்துகிற பார்வையை மட்டும் வீசுவதோடு சரி. இந்த கேஷ் ஷெக்ஷன் தொடர்ந்து பார்த்த சதாசிவம் வேறு ஊருக்கு ட்ரான்ஸ்பர் ஆன போது உள்ளூர ஒரு சந்தோஷம் வந்தது. அதற்காக வெட்கப்படவும் செய்திருக்கிறான். இப்படியெல்லாம் ஆகும் என நினைத்துப் பார்க்கவில்லை.
இரண்டு நாட்களில் விரல்களில் அந்த இடம் காய்ந்து போயிருந்தது. மீண்டும் கேஷ் கவுண்டரில் உட்கார்ந்து விட்டான். பழைய நோட்டுக்கள் உள்ளே வரும்போதெல்லாம் கொண்டு வருபவரை மகா வெறுப்புடன் பார்த்தான். அவர்களோ ரொம்ப சோகமாய் விரக்தியின் எல்லையில் நின்று கொண்டிருப்பது மாதிரி இருந்தது. நோட்டுக்களை எண்ணும்போது இவனது விரல்களையே அவர்கள் பார்த்த மாதிரி இருந்தது. அவ்வபோது நமைச்சல் இருந்த மாதிரி இருந்தது. ஜாக்கிரதையாகி பாத்ரூம் போய் கைகழுவி வந்தான். ஆனாலும் நமைச்சல் இருப்பது மாதியே இருந்தது. இல்லை... இதெல்லாம் பிரமையெனவும் தேற்றிக் கொண்டான். மேலும் சந்தேகம் வலுப்பட்ட போது டாக்டர் எழுதிக் கொடுத்த ஆயின்மெண்ட்டை பாதுகாப்பிற்காக அன்றிரவு விரல்களில் போட்டுக் கொள்வான். மனைவியையும், குழந்தைகளையும் தொடாமல் கொஞ்சம் தள்ளி படுத்துக் கொள்வான். இவனது முகத்தில் சுருக்கங்கள் விழுந்த மாதிரி மனைவிக்குத் தெரிந்தது.
ஒரு மாதிரியான நாற்றம் நோட்டுக்களிலிருந்து வீசிக்கொண்டு இருந்தது. பலசமயம் மக்கிப் போய் முகத்தில் அடிக்கிற மாதிரியும் இருக்கும். விபூதி வாசம் வீசும். அடுத்த நோட்டிலேயே மீன்வாசம் அடிக்கும். குறிப்பாக ஐந்து ருபாய், பத்து ருபாய், இருபது ருபாய் நோட்டுக்களில் இந்த நாற்றம் அதிகமாய் இருந்தது. இரண்டு ருபாய்களைப் பற்றி கேட்கவே வேண்டாம். கொஞ்சம் அழுத்திப் பிடித்தாலே பிய்ந்து விடும் போல இருந்தன. இந்த நோட்டுக்களைக் கொண்டு வருபவர்களை எதாவது ஒரு காரணம் காட்டி எரிந்து விழுந்தான். ஐம்பது, நூறு, ஐநூறு என்றால் எளிதாக இருக்கும். ரொம்ப நேரமும் எண்ண வேண்டியிராது. யாராவது சில்லறை கேட்டு வந்தால் இந்த பாவப்பட்ட நோட்டுக்களை முதலில் வெளியே தள்ளி விடுவதில் முனைப்பு காட்டினான். சாப்பிடும்போது நன்றாக சோப்பு போட்டு கைகளைக் கழுவினான். ஒவ்வொரு நாளும் கணக்கை முடிக்கும் போது பணம் எதுவும் குறைந்திருக்கக் கூடாது என்ற பதற்றம் ஓடிக்கொண்டே இருந்தது.
அந்த மாசச் சம்பளத்தில் இருநூற்று ஐம்பது ருபாய் போல கூட கிடைத்தது. கேஷ் பார்த்ததற்கான அலவன்சு. சந்தோஷமாய்த்தான் இருந்தது. மாசக் கடைசியில் கொஞ்சம் பிக்கல் பிடுங்கல் இல்லாமல் இருக்கலாம். வீட்டில் அவள் என்ன கணக்கு வைத்திருக்கிறாளோ தெரியவில்லை. இதைப் பார்த்ததும் உற்சாகமாவாள் என நினைத்துக் கொண்டான். வீட்டில் நுழைந்ததும் எப்போதும் “அப்பா” என்று ஓடிவந்து காலைக் கட்டிக்கொள்கிற குழந்தை படுத்திருந்தது. “எதுவும் சாப்பிடல...ஒரே வாந்தி....” மனைவி பரிதவித்தாள். குழந்தையை அள்ளிக் கொண்டு அவசரமாய்ப் புறப்பட்டார்கள்.
டாக்டர் சற்குணம் பதற்றப்படாமல் குழந்தையை கவனித்தார். அவரைப் பார்த்ததும் குழந்தை சத்தம் போட்டு அழ ஆரம்பித்தான். “நல்ல பையன்ல...அழக்கூடாது...என்ன...ம்..அப்புறம் மிஸ்டர்..” இவனைப் பார்த்து சிரித்தார். “ஒண்ணுமில்ல...சாதாரண அலர்ஜிதான்.... அப்புறம் இந்தப் பக்கம் வரவேயில்ல.... எப்படியிருக்கீங்க. ஒங்க விரல்லாம் எப்படி இருக்கு?” பேசிக்கொண்டே போனார். ”சரியாப் போச்சு” என்றான். குழந்தையிடம் இருந்து திரும்பி இவனைப் பார்த்தார். திரும்பவும் குழந்தையை பரிசோதித்துக் கொண்டே “இப்போ கேஷ் ஷெக்ஷன் நீங்க பாக்கலையா?” என்றார். “பார்க்கிறேன்” என்றான். டாக்டர் “அப்படியா” என்று அவனைப் பார்த்தார். முகத்தில் நிலைத்த அவரது கண்களில் வித்தியாசம் ஏற்பட்டிருந்தது. பிறகு குழந்தையின் உடல்நலம் குறித்து அவர் சொன்னது எதையும் மனது வாங்கிக் கொள்ளவில்லை. எதோ ஒரு இருட்டு அவனைக் கவ்விக் கொண்டு இருந்தது. சகலமும் அணைந்து போனவனாய் காணப்பட்டான். வீட்டுக்கு வரும்போது குழந்தை அவன் தோளில் தூங்கிக் கொண்டு இருந்தான்.
இவனுக்குத் தூக்கம் வரவில்லை.வராண்டாவில் போய் உட்கார்ந்தான். பாராக்காரனின் விசில் சத்தம் இருட்டின் குரலாக கேட்டுக் கொண்டிருந்தது. மரங்கள் அசையாமல் புழுக்கமாயிருந்தது. திரும்ப உள்ளே வந்தான். படுத்துக் கொண்டான். ஏன் இதற்காகவெல்லாம் தவிக்க வேண்டும் என்றாலும் விடுபடமுடியாமல் இருந்தான். ஒரு நேரத்தில் தூக்கமும் வந்தது. இவனது விரல்கள் மெல்ல மெல்ல அழுகிப் போயின. பார்த்துக்கொண்டு இருக்கும் போதே ஒவ்வொன்றாய் கையிலிருந்து உதிர்ந்து கொண்டன. விழுந்தவை தரையில் பல்லியின் வால்களாய் துடித்தன. என்னமோ சத்தமாய்ச் சொல்லி எழுந்து உட்கார்ந்தான். மிரண்டு போயிருந்தான். படபடவென்று அடித்துக் கொண்டு இருந்தது.
“என்னங்க...” அவள் தூக்கக் கலக்கத்தோடு லேசாய் இவனை விழித்துப் பார்த்தாள். பால் குடித்த பழக்கத்தில் பையன் காற்றில் சப்புக் கொட்டிக் கொண்டு இருந்தான். இவன் எழுந்து போய் தண்ணீர் குடித்தான். படுக்கவே பயமாயிருந்தது. படுக்கச் சொல்லி அவள் இவன் மீது கைகளைப் போட்டுக் கொண்டாள். தட்டிக் கொடுத்தாள். அவளது விரல்களை தன்னுடைய விரல்களில் கோர்த்துக் கொண்டு நெஞ்சில் வைத்துக் கொண்டாள். கண்களை மூடிக்கொள்ளும் போது கொஞ்சம் நிம்மதியாயிருந்தது. விரல்கள் இப்ப்போது வெதுவெது என்றிருந்தன.
*
பி.கு:
1. இந்தக் கதை 1996ல் வெளியானது.
2. சென்னை சாகித்ய அகாடமியில் இந்தக் கதையை வாசித்தேன். எதிரே எழுத்தாளர் ஜெயகாந்தன், இந்திரா பர்ர்த்தசாரதி, சா.கந்தசாமி, பொன்னீலன் உட்பட பல எழுத்தாளர்கள் அமர்ந்திருந்தனர். வாசித்து முடிந்ததும், இந்திரா பார்த்தசாரதி கைகளைப் பிடித்துக் கொண்டு பாராட்டினார். கூடவே செம்மலரில் இப்படிப்பட்ட கதைகளையும் போடுகிறார்களா என்றார்.
*
சார் என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அற்புதமான புனைவு. அருமையான வாசிப்பனுபவம். பஞ்சு மிட்டாய் சாப்பிடும் குழந்தை அது தீர்ந்துவிடக் கூடாதே என்று வேண்டிக் கொண்டே சாப்பிடுவது போல, கதை முடிந்து விடக் கூடாதே என்று நினைத்துக் கொண்டே படித்தேன்.
பதிலளிநீக்குபணம் எண்ணுவதில் கூட இத்தனை பிரச்சினையா என்று புன்னகைக்கத் தோன்றியது. சிறு சிறு பிரச்சினைகள் மனதை எவ்வளவு பாதிக்கிறது என்று பிரமிப்பையும் கொடுத்து விட்டீர்கள். வெகு யதார்த்தம்.
பதிலளிநீக்குமுரளிக்கண்ணன்!
பதிலளிநீக்குஇந்த வேகம்தான் நீங்கள் என்று நினைக்கிறேன்.உங்கள் வாசிப்பு அனுபவம் ரசிக்கக்கூடியதாய் இருக்கிறது.
வல்லி சிம்ஹன்!
பதிலளிநீக்குவாங்க... வாங்க. ரொம்ப நாள் கழித்து வந்திருக்கிறீர்கள். வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி.
// ஒவ்வொரு நோட்டும் இடம் மாறும்போது அங்கு ஒருவர் ஏமாற்ற, இன்னொருவர் ஏமாற ஒரு வலி பதிவாகிறது என்று ஒரு கதையில் படித்தது ஞாபகத்தில் வர, இதில் தான் யார் என்பது கடும் குழப்பத்தைத் தந்தது. //
பதிலளிநீக்குகதை பிடித்திருக்கிறது.
பணம்=சந்தேகம் என்பதையும் சொல்வதுபோல இருக்கு.
Hi
பதிலளிநீக்குWe have just added your blog link to Tamil Blogs Directory - www.valaipookkal.com.
Please check your blog post link here
If you haven't registered on the Directory yet, please do so to update your new blog posts and bring before your work to the large base of Tamil readers worldwide.
Sincerely Yours
Valaipookkal Team
ஹேமா!
பதிலளிநீக்குமனித உறவுகளை ஒதுக்கி விட்டு, வேறு உறவுகளை இந்த அமைப்பு முன் நிறுத்துகிறது.
அதை முன்வைத்து எழுதப்பட்ட கதை.
இணையத்தினதும் வலைப்பூக்களினதும் பிரயோசனங்களில் இவையும் ஒன்று இப்படியான வாசிப்பனுபவங்கள்...
பதிலளிநீக்குகலக்கல்..
Hats off Uncle!
பதிலளிநீக்குஇன்னும் நிறைய கதைகள் எழுத வேண்டும் நீங்கள்.
தமிழன் கறுப்பி!
பதிலளிநீக்குஉண்மைதான். நன்றி.
தீபா!
எழுதிக் கொண்டு இருக்கிறேன்.
Very moving one. Good wishes.Amal
பதிலளிநீக்கு