இயற்கை அடர்ந்திருக்கும் அழகான மலைப்பாதையில் அந்தக் கார் சென்று கொண்டிருக்கும். அவளும், அவனும் உள்ளே உட்கார்ந்திருப்பார்கள். “தேனிலவுக்கு ஆள் ஆளுக்கு ஒவ்வொரு இடம் சொன்னார்கள். நான்தான் இந்த இடத்தைத் தேர்ந்தெடுத்தேன்” என்று சொல்வான் அவன். அவள் மரங்களையும், வனப்பகுதிகளையும் பார்த்துக் கொண்டிருப்பாள்.
அவன் கால்பந்தாட்டத்தில் தனது பராக்கிரமங்களை சொல்ல ஆரம்பிப்பான். எந்தெந்த போட்டிகளில் எல்லாம் கலந்து கொண்டிருக்கிறான், என்னென்ன பரிசுகள் வாங்கியிருக்கிறான் என்பதையெல்லாம் ரசித்து ரசித்து சொல்வான். அவள் சுவராஸ்யமற்று கொஞ்சம் வெளியில் பார்ப்பாள். “என்ன நான் சொல்வதை கவனிக்கிறியா” என்று அவளை விடமாட்டான் அவன்.
“ அப்ப... எங்களுக்கு பெனால்டி கார்னர் கிடைச்சுதா... பந்து என் கால் அருகே... எல்லோரும் என்னையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்..” என்று சஸ்பென்ஸாக நிறுத்தி, அவளைப் பெருமிதமாக வேறு பார்ப்பான். அவள் டாஷ்போர்டைத் திறந்து தேடுவாள்.
“என்ன நான் சொல்றத கவனிக்கவில்லையா?” கொஞ்சம் அதட்டலோடு கேட்பான்.
“இல்ல... எதாவது பாட்டு கேக்கலாமே” என்று ஒரு சி.டி எடுத்து பிளேயரில் சொருகுவாள். கே.பி.சுந்தரம்பாள் ஞானப்பழத்தைப் பிழிந்து ரசமெடுக்கவும் அவள் வாய்விட்டுச் சிரிப்பாள். அவன் ஐயோ ஐயோவெனக் கத்தி பிளேயரை நிறுத்துவான். “அப்புறம் கேளு...” என்று ஆரம்பிக்கவும், கார் கிர்கிர்ரென இழுத்து நிற்கும். சாவியைத் திருகித் திருகி ஸ்டார்ட் செய்து பார்ப்பான். கதவை வேகமாகத் திறந்து வெளியே போய் காரை மிதிப்பான். செல்போனை எடுத்து யாருக்கோ போன் செய்து “ஒரு மணிநேரத்துல இங்க வரணும்..” என்று கத்துவான். அவளைத் திரும்பிப் பார்ப்பான். அவள் காரிலிருந்து வெளியேறி ஒற்றையடிப் பாதையொன்றில் நடந்து போய்க் கொண்டு இருப்பாள்.
“ஏய்... ஏய்.. நீ எங்க போற..?” அவள் பின்னால் போவான். சின்னதான ஒரு உயரத்தில் ஏறுவாள். பெரும் வெட்ட புல்வெளியில் மலைப்பிரதேசம் அழகாக இருக்கும். ரசித்து நிற்பாள். ஆடு மேய்க்கும் சிறுவன் ஒருவன் தரையில் குழி போட்டு தனியாக கோலிக்குண்டு விளையாடிக் கொண்டு இருப்பான். அவளைப் பார்த்து திகைப்பான்.
அவள் அவனிடம் “உன் பெயரென்ன..” என்று கேட்பாள்.
“லட்சுமணன் “ என்று சொல்லிவிட்டு “உங்க பெயரென்ன?” என்பான்.
“சீதா” என்று அவள் சொல்லி முடிக்கவும், அவளது கணவனும் அங்கு வந்து விடுவான். அந்த சிறுவன், அவனை யார் என்பது போல் பார்க்கவும், அவள் மெல்ல “இராவணன்” என்பாள். அந்த சிறுவன் சிரிப்பான்.
அவள் கணவன் அருகில் வந்து “இங்கு என்ன செய்கிறாய்?” என்று கேட்டுவிட்டு, அந்த சிறுவனைப் பார்ப்பான். “ஓ.. கோலி விளையாட்டா.. ஒரு காலத்துல நான் இந்த விளையாட்டில் புலியாக்கும்” என்பான். அவள் முகத்தைத் திருப்பி வேறெங்கோ பார்ப்பாள். அவன் அத்தோடு விட மாட்டான். “இந்த விளையாட்டில் தோற்று என் கோலி பதம்பார்த்த கைமுட்டுக்களோடு ஊரில் எத்தனை பேர் இருந்தார்கள் தெரியுமா?” என்பான்.
அவள் சட்டென்று, “எங்கே இவனோடு விளையாடுங்கள் பார்ப்போம்.” என்று சொல்வாள்.
“இவனோடா... சீச்சீ ... நல்லாயிருக்காது...”
“இதெல்லாம் சொல்லக் கூடாது. ஒங்க விளையாட்டை நான் பார்க்கணும்” என்பாள்.
விளையாட்டு நடக்கும். அவளது கணவன் தோற்றுப் போவான். “அது வந்து... விளையாடி ரொம்ப நாளாச்சா...” என்று அசடு வழிந்து, “சரி, வா... போவோம்” என்று அவளை அழைப்பான்.
“சார். தோத்துட்டீங்க. கைமுட்டை மடக்கி காண்பிங்க..” என்று சொல்லிக் கொண்டே விரலில் கோலி வைத்து தரையில் உட்கார்ந்து குறி பார்ப்பான் சிறுவன்.
“ச்சே.. ச்சே.. இதென்ன.. நாம் சும்மாத்தான் விளையாடினோம்” என்று தப்பிக்கப் பார்ப்பான் அவன்.
“இதென்னங்க.. சின்னப்பையனை ஏமாத்தக் கூடாது. கைமுட்டை காண்பிங்க..” என்று அவளும் சொல்வாள்.
வேண்டா வெறுப்பாக தரையில் உட்கார்ந்து விரல்களை மடக்கி முட்டைக் காண்பிப்பான். சிறுவன் விரலிலிருந்து பாயும் கோலி, அவனது முட்டை சட்டென்று தாக்கும். அவன் வலியில் “உஸ்” என்பான்.
அவள் வாய்விட்டுச் சிரிப்பாள். அந்த பிரதேசமெங்கும் அந்தச் சிரிப்பு எதிரொலிக்கும்.
மலையாளத்தில் மனு என்பவர் இயக்கிய ‘கோலி’ என்னும் குறும்படம் இது. திருவனந்தபுரத்தில் நடந்த குறும்பட, ஆவணப்பட திரைப்பட விழாவில் இரண்டு வருடங்களுக்கு முன்னர் பார்த்தேன். எளிமையாகவும் நேரிடையாகவும் பேசினாலும், படம் சொல்லாமல் சொல்லும் சங்கதிகள் படம் முடிந்த பிறகும் தொடர்கின்றன.ஆண் பெண் உறவு குறித்துப் பேசும் முக்கியமான படமாக இருக்கிறது இன்னும் நினைவுகளில்.
குறைந்த செலவில். பதினைந்து இருபது நிமிடங்களுக்குள் தரப்பட்டுள்ள இதுபோன்ற அழுத்தமான திரைப்படங்களை எத்தனை பேர் பார்த்திருப்போம். இங்கு ஆவணப்படம், குறும்படங்களுக்கான மீடியா இல்லை, தியேட்டர் இல்லை, அதனால் ஆடியன்ஸூம் இல்லை. மாற்று சினிமாவுக்கான பாதைகளை மறித்துக் கொண்டு வெள்ளித்திரையும் சின்னத்திரையும் பெரும் சுவராய் நிற்கின்றன.
*
நல்ல குறும்படம் மாதவ்.
பதிலளிநீக்குதேன் நிலவுன்னு சுஜாதா எழுதுன கதை ஒன்னுதான் ஞாபகம் வருது.
அதே போல் ஜே கே கதை ஒன்னு சின்னத் திரையில் பார்த்திருக்கிறேன். ஒரு வன் தன் மனைவியைச் சற்றும் மதிக்காமல் இருப்பான். ஒரு மழைநாளில் வெளியே எங்குச் செல்ல முடியாத சூழ்னிலையில் இருவரும் செஸ் விளையாடுவார்கள். அவள் ஜெயித்துவிடுவாள். அதன் பிறகு அவனது பார்வை மாறும் என்பதாகவிருக்கும். கதை பெயர் ஞாபகமில்லை.
சக மனுஷியாகக் கூட மதிக்க பயிற்றுவிக்கப்படவில்லை நமக்கு. மாறும்; மாறவேண்டும்.
நல்ல பதிவு. அந்தக் குறும்படம் கிடைத்தால், அதையும் பதிவில் போடுங்கள்.
பதிலளிநீக்குஅனுஜன்யா
சொல்ல எண்ணியது அனைத்தையும் வேலன் சொல்லியதால் 'நல்ல பதிவு'டன் நிறுத்திக்கொண்டேன் :))
பதிலளிநீக்குஅனுஜன்யா
ஆஹா அண்ணாச்சி முந்திட்டாரு.
பதிலளிநீக்குஇதுபோன்ற படங்களைக் காணும் ஆவல் அதிகரிக்கிறது.
\\நல்ல பதிவு. அந்தக் குறும்படம் கிடைத்தால், அதையும் பதிவில் போடுங்கள்.
\\
அனுஜன்யாவை வழிமொழிகிறேன்
நல்ல குறும்படம் தான்../. நீங்கள் சொன்ன உணர்வைக் காட்டிலும் அப்படம் பார்க்கும்பொழுது ஏற்படும் உணர்வுகள் வேறுமாதிரி இருக்கலாம்.. ஆரம்பத்தில் நீங்கள் கதைதான் சொல்லுகிறீர்கள் என்று நினைத்தேன்.. எதிர்கால சொற்களால் கட்டியிருந்தது.
பதிலளிநீக்குவாய்ப்புக்கள் கிடைத்தால் குறும்படங்களைப் பார்க்கணும்..... (இதுவரை ஒண்ணுகூட பார்த்ததில்லை.)
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குநல்ல பதிவு. அழகான படம்.
பதிலளிநீக்கு//மாற்று சினிமாவுக்கான பாதைகளை மறித்துக் கொண்டு வெள்ளித்திரையும் சின்னத்திரையும் பெரும் சுவராய் நிற்கின்றன.//
சின்னத் திரையில் இப்போதே இதற்கு ஏராளமாக இடம் இருக்கிறது. அவர்கள் முன் வர வேண்டும். ஜெயா டிவி ஒரு முறை முயன்று பார்த்தது. ஆனால் இந்த அளவு நல்ல படங்கள்இடம்பெறவில்லை.
வேலன்!
அந்தக் கதையின் பெயர் முற்றுகை.
really superb...
பதிலளிநீக்குIf you can please post that short video as well...
:)
"மாற்று சினிமாவுக்கான பாதைகளை மறித்துக் கொண்டு வெள்ளித்திரையும் சின்னத்திரையும் பெரும் சுவராய் நிற்கின்றன"
பதிலளிநீக்குஉண்மைதான். மிக நீண்ட திரைக்கதையும், சுற்றி வளைக்கும் காட்சிகளும் தேவையற்ற காமெடியும் கொண்ட சினிமாக்களாலேயே ஒரு சாரர் அந்த இடத்தை விட்டு நகர்ந்து சென்றுகொண்டிருக்கிறோம் அதற்கான நல்ல மாற்றாய் இது போன்ற குறும்படங்கள் அமையும். ஆனால் பெரும்பாலும் அதைக்காண்பதற்கான வாய்ப்புக்கள் மிகவும் அரிதாகவேயுள்ளது...
வேலன்!
பதிலளிநீக்கு//மாறும்; மாறவேண்டும்.//
இந்த நம்பிக்கையில்தான் எல்லாம் சுழல்கிறது. நன்றி.
அனுஜன்யா!
அந்தப் படம் என்னிடம் இல்லை. கிடைக்குமா என்று முயர்சி செய்கிறேன்.
அன்புத்தம்பி முரளி கண்ணன்!
பதிலளிநீக்குஉங்களை நான் முந்தவா!
அப்புறம் வாழ்த்துக்கள். விகடனில் உங்கள் “நீரோடையை’ குறிப்ப்ட்டிருந்ததை இன்றுதான் பார்த்தேன்.
ஆதவா!
பதிலளிநீக்குகுறூம்படங்கள், ஆவணப்படங்களை அவசியம் முயற்சி செய்து பார்க்கவும்.
தீபா!
பதிலளிநீக்கு//சின்னத் திரையில் இப்போதே இதற்கு ஏராளமாக இடம் இருக்கிறது. அவர்கள் முன் வர வேண்டும். ஜெயா டிவி ஒரு முறை முயன்று பார்த்தது.//
மேலோட்டமாக பார்க்க இது உண்மை போலத் தோன்றும். ஆனால் உண்மையில்லை. மிகச் சிற்ந்த குறும்படங்களைத் தேடிப்பிடித்து போட வேண்டும் முதலில். அதுதான் ரசனையை உருவாக்கும். மிகச் சாதாரணப் படங்களை, அதுவும் யாரும் பார்க்காத நேரத்தில் போட்டு விட்டு அது ஒரு முயற்சி என்று சொல்ல முடியாது. பாலு மகேந்திராவின் கதை நேரத்துக்கு பெரும் ஆதரவு இருந்தது. அதை ஏன் தொடரவில்லை. தொடர்களில் மக்களை வீழ்த்திகி கொண்டிருக்கிறார்கள். அற்புதமான குறும்படங்களும், ஆவணப்படங்களும் இந்திய மொழிகளில் வந்திருக்கின்றன. தமிழில் சப்டைட்டில் போட்டு ஒளிபரப்பலாம். ஆனால் ஹாலிவுட் படங்களை எல்லோரும் இங்கு டப் செய்து ஒளிபரப்ப முடிகிறது.
Thinks Why Not - Wonders How
பதிலளிநீக்குவருகைக்கும், பகிர்வுக்கும் நன்றி.
கிருத்திகா!
பதிலளிநீக்குவாய்ப்புகள் அரிதாய் இருக்கிறது உண்மைதான். இப்போது புத்தகச் சந்தையில் சில குறும்படங்கள் கிடைக்கின்றன. சென்னை, மதுரை, திருப்பூர் புத்தகக் கண்காட்சிகளில் குறும்படங்கள், ஆவணப்படங்களை ஒளிபரப்புகிறார்கள். ’நிழல்’ பத்திரிக்கை நிறைய தகவல்களைத் தருகிறது. அதன் ஆசிரியர் திருநாவுக்கரசு பாராட்டுக்குரியவர்.
தங்கள் முதல் வருகைக்கும், பகிர்வுக்கும் மிக்க நன்றி.
"கோலி" குறும்படம் பார்த்த அனுபவம் உங்கள் பதிவைப் படித்தபோது ஏற்பட்டது.நன்றி.
பதிலளிநீக்குAnonymous!
பதிலளிநீக்குநன்றி.
"தங்கள் முதல் வருகைக்கும், பகிர்வுக்கும் மிக்க நன்றி. "
பதிலளிநீக்குஇது முதல் வருகை அல்ல முதல் மறுமொழி மட்டுமே... தங்கள் பக்கங்களை தொடர்ந்து வாசித்து வருகிறேன்.... :)
கிருத்திகா!
பதிலளிநீக்குஆஹா...! மிக்க நன்றி.
"ராமன் இல்லை, ராவணன்!"
பதிலளிநீக்குdifferent thinking"
ராவணன் தமிழனா?
பதிலளிநீக்குராவணன் எதற்காக சீதையை கடத்தினான்?
ராவணன் காதல் உண்மையானதா?
ராவணன் நல்லவனா கெட்டவனா ?
எல்லாவர்றுக்கும் விடை இங்கே….
http://sagotharan.wordpress.com/2010/05/05/%e0%ae%b0%e0%ae%be%e0%ae%b5%e0%ae%a3%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a8%e0%ae%be%e0%ae%af%e0%ae%95%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95/