இந்தோனேசியாவின் சிறைக்கம்பிகளுக்குள் உருவான நாவல் இது.
பிரமோத்ய அனத்த தோயர் 1925ல் பிறந்தார். டச்சுக்களின் காலனியாதிக்கத்தில் இந்தோனேசியா இருந்த நேரம் அது. அந்நியர்களுக்கு எதிரான போராட்டத்தில் 1940ல் தோயர் கைது செய்யப்பட்டார். இந்தோனேசியாவின் விடுதலையை ஒட்டித்தான் அவரும் வெளியே வந்தார். 1956ல் சீனாவுக்குச் சென்று வந்த அவருக்கு கம்யூனிசக் கொள்கைகள் மீது ஈர்ப்பு ஏற்பட்டிருந்தது. இந்தோனேசிய கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினர் இல்லையென்றாலும், 'மக்கள் கலாச்சாரம்" என்னும் இடதுசாரி அமைப்புடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார். ஸ்டாலினியப் பார்வையோடு இயங்கியதாய் அந்த அமைப்பைப் பற்றிய ஒரு கருத்து இருந்தது. தீவீர கம்யூனிச எதிர்ப்பாளனான ஜெனரல் சுகர்ட்டோ தோயரை 1965ல் கைது செய்தான். பதினான்கு ஆண்டுகள் மீண்டும் சிறையில்.
1970களில் வாய் மொழியாக சக கைதிகளிடம் 'பூமி மனுஷ்யா' என்னும் இந்தக் கதையை சொல்லியிருக்கிறார். எழுதுவதற்கு காகிதங்கள் கூட தரப்படவில்லை. கழிவுக் காகிதங்களை சேகரித்து எழுதுகிறார். 1979ல் விடுதலை செய்யப்படுகிறார். 1980ல் நாவல் அச்சிடப்பட்டு வெளிவருகிறது. உடனடியாக அந்தப் புத்தகம் இந்தோனேசியாவில் ஜெனரல் சுகர்ட்டோ அரசால் தடை செய்யப்பட்டது. தோயர் பதினெட்டு வருடங்கள் வீட்டுச் சிறையில் வைக்கப்படுகிறார்.
டச்சு அரசாங்கத்தால் தங்கள் சொந்த பூமிக்கு நேர்ந்த கதியைப் பற்றி இந்த நாவல் பேசுகிறது. அழுகிக் கொண்டிருக்கும் கலாச்சாரத்தின் வேர்களை முகர்ந்து பார்த்து முகம் சுளிக்கிறது. பெண்களுக்கு உரிய இடம் தரத் தெரியாத அமைப்பின் மீது கோபம் கொள்கிறது. தோலின் நிறத்தால் மனிதனுக்குரிய மரியாதை அளக்கப்படும் சிந்தனையை கடுமையாகச் சாடுகிறது. வரலாற்றில் தோற்கடிக்கப்பட்ட மனிதர்களின் வாழ்க்கையை எல்லோரோடும் பகிர்ந்து கொள்கிறது. தேசீயம் குறித்த கருத்தோட்டங்களுக்கும், மேற்கத்தியம் கொண்டுவந்த 'நவநாகரீகத்துக்கும்' இடையே மக்கள் சஞ்சலம் கொள்வதை சித்தரிக்கிறது. இனப்பிரச்சினைகள் புதிய வடிவம் பெறுவதை சொல்கிறது. வழிவழியாய் அந்த மண்ணில் நிலவுகிற கதை சொல்லும் மரபின் அழகு கொண்டதாகவும், கவிதை நயம் மிக்கதாகவும் அவரது எழுத்துக்கள் இருக்கின்றன.
காலனியாதிக்கத்தின் இறுதிக் காலக்கட்டத்தில், இந்தோனேசியாவின் புதிய தலைமுறையின் மனிதனான மிங்கி கதையைச் சொல்வதாக நாவல் இருக்கிறது. ஆரம்பப் பள்ளியில் டச்சு மொழியை கற்றுக்கொள்வதில் சிரமப்பட்டதால் வாத்தியாரால் 'குரங்கு' என்ற அர்த்தத்தில். மங்கி என்பதற்கு பதிலாக அந்தத் தொனியில் சொன்ன 'மிங்கி'யே அவனது பெயராகியிருந்தது.
சுரபியாவில் உள்ள மதிப்புமிக்க ஹாலந்து பர்ஜ்லக்ஸ் பள்ளியில் இப்போது அவன் படிக்கிறான். காலனியாதிக்கத்தின் போது குடியேறிய ஐரோப்பிய வம்சாவளியினர் மட்டுமே படிக்கக் கூடிய பள்ளி அது. ஒரு இளைஞனுக்கே உரிய உற்சாகத்தோடும், துடிப்போடும், சுவராஸ்யங்களோடும் மிங்கி காணப்படுகிறான். அவனுடைய எழுத்துக்கள் டச்சுப் பத்திரிக்கைகளில் வெளியாகி, பரவலாக அறியப்பட்டவனாய் இருக்கிறான். அந்த மண்ணிலேயே பிறந்தவனாய் இருப்பதால், சக ஐரோப்பிய மாணவர்களால் வெறுக்கப்படுகிறான். ஆனால் ஐரோப்பியர்களின் தொழில்நுட்பம், நாகரீக வளர்ச்சி குறித்த ஒரு மயக்கம் அவனிடம் இருக்கிறது. தந்தையால் வெறுக்கப்படுகிற அவனுக்கு தாயின் பரிபூரண அரவணைப்பு கிடைக்கிறது.
ராபர்ட் சுர்ஹாப் என்னும் நண்பன் அவனை வொனார்க்ரோவில் உள்ள தன் நண்பன் வீட்டிற்கு அழைத்துச் செல்கிறான். அங்கு நியாய் என்னும் பெண்மணியை சந்திக்கிறான். இந்தோனேசியாவைச் சேர்ந்த அவள், ஐரோப்பாவின் வணிகரான மெல்லெமோ என்பவரின் வைப்பாட்டி. ராபர்ட் என்னும் பையனும், அன்னிலைஸ் என்னும் பெண்ணும் அவளுக்கு இருக்கிறார்கள். புத்திசாலியாக, வெளிப்படையாக பேசுகிற நியாய் தன்னைப் பற்றி இழிவாகவே நினைக்கிறாள். மிங்கியின் கண்களையும், இதயத்தையும் கவர்ந்து விடுகிறாள் அன்னிலைஸ். ஐரோப்பிய முகமும், வெள்ளை நிறமும் கொண்ட அன்னி, கண்களையும், முடியையும் அந்த மண்ணுக்குரியதாய் கொண்டிருக்கிறாள்.
அன்னியும், மிங்கியும் ஒருவரையொருவர் விரும்புகிறார்கள். மெல்லேமோ அதை விரும்பவில்லை. டச்சுக்காரர்களுமில்லாத, சொந்த மண்ணின் மைந்தர்களுமில்லாத நிலையில் நியாய் குடும்பம் கேள்விக்குரியதாகிறது. நீதிமன்றத்தின் முன்பு நிறுத்தப்படுகிறார்கள். சமூகத்தில் அவர்களது நிலை குறித்து பொது விசாரணையும், விவாதங்களும் நடக்கின்றன. காதல் கிண்டலுக்கும், பரிகாசத்துக்கும் உள்ளாகிறது. அன்னிலைஸ் தனது குழந்தை என்றும், அவளுக்கும் மிங்கிக்கும் நடந்த கல்யாணம் செல்லாது என்றும் மெல்லேமோ வாதிடுகிறான். டச்சுக்கார்களின் கோர்ட்டு அவன் பக்கமே நிற்கிறது. உள்ளமும், உடலும் சிதைந்து போன அன்னிலைஸை கொண்டு போய் விடுகிறான் மெல்லேமோ.
நியாய் தனது செல்வம், குழந்தைகளை எல்லாம் இழக்கிறாள். மிகுந்த சோகத்துடன் முடியும் நாவலில் மிங்கி தங்கள் சொந்த மண்ணில் மனிதர்களின் இழிநிலை குறித்த தீர்க்கமான புரிதலுக்கு வருகிறான். நாட்களின் சந்தோஷங்களையெல்லாம் டச்சுக்காரர்கள் பிடுங்கிக் கொண்டதாக தெரிகிறது. ஐரோப்பியர்களின் உடல் வெள்ளையாக இருந்தாலும் இதயம் முழுவதும் வெறுப்பால் நிரம்பியிருப்பதாக உணர்கிறான்.
எங்கிருந்தோ வந்தவர்களால் சொந்த மண்ணின் பெண்மக்களுடைய வாழ்க்கை சிதைக்கப்படுவது நியாய் மூலமாக இந்த நாவலில் சொல்லப்படுகிறது. அந்த மண்ணின் கலாச்சாரமும், அடையாளங்களும் ஐரோப்பியரால் துடைத்தெறியப்படுகிற வேதனையை மிங்கி மூலம் சொல்லப்படுகிறது. அந்நியரும் இல்லாத, சொந்த மனிதருமில்லாத அவதிப்படும் நிலை அன்னிலைஸ் மூலம் சித்தரிக்கப்படுகிறது.
டச்சு மொழியில் எழுதிக்கொண்டிருக்கும் மிங்கியிடம் அவனது தாய் "நீ எழுதுவதை நான் எப்படி புரிந்து கொள்வது. என் மொழியில் எப்போது எழுதுவாய்" என்று கேட்பதில் இழப்பின் வேதனை கலந்திருக்கிறது. நீதிமன்றத்தில் "என்னைப் போலவே என் பெண்ணும் ஆக வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களா? அவளுக்கென்று ஒரு வாழ்க்கை அமைவதை அனுமதிக்க ஏன் மறுக்கிறீர்கள்?' என நியாய் ஆவேசப்படுவதில் எதிர்காலம் குறித்த வேட்கை சுடர் விடுகிறது.
1981ல் லேன் என்னும் ஆஸ்திரேலிய எழுத்தாளர் இந்த நாவலை "This Earth of Mankind ' என ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். ஆசிய நாடுகளில் பெரும் வரவேற்பு பெற்றது. பல பதிப்புகள் போடப்பட்டு, இலக்கிய உலகில் இன்று மிக முக்கிய இடத்தைப் பெற்றிருக்கிறது. வெளியெங்கும் தோயர் நகரமுடியாமல் கண்காணிக்கப்பட்டாலும், அவரது எழுத்துக்கள் உலகம் முழுவதும் சிறகசைத்து பறந்து கதைகளைச் சொல்லிக் கொண்டிருக்கின்றன.
தோயரின் நாவல்கள் தற்கால இந்தோனேசியாவையும், அந்த மக்களின் மன அழுத்தங்களையும் பற்றிப் பேசுகிறது. ஜெனரல் சுகர்ட்டோவின் மறைவுக்குப் பிறகு 1998ல் தோயர் விடுதலை செய்யப்படுகிறார். இந்தோனேசியாவின் வீடுகள் தோறும் தோயரின் புத்தகங்கள் பிரவேசித்தன.
2006 ஏப்ரல் மாதம் தனது 81வது வயதில் தோயர் காலமானார். அவரது நினவுநாள் விழாவில் எழுத்தாளர் லேன், "இளைஞர்களுக்கு ஒரு கலாச்சார இயக்கத்தின் அவசியத்தை தோயர் சொல்லிச் சென்றிருக்கிறார். மனிதகுல விடுதலைக்கு இலக்கியம் ஒரு அழகான ஆயுதம் என்பதைக் கற்றுத் தந்திருக்கிறார். என்று பேசியிருக்கிறார். பிரான்சின் செவாலியே விருதும், ஜப்பானின் புகுவோகா விருதும், பிலிப்பைனின் மேகசசே விருதும் தோயருக்கு வழங்கப்பட்டிருக்கின்றன. தன் ஆயுட்காலத்தில் பாதிக்கு மேல் சிறைக்குள் கழித்த ஒரு மகத்தான போராளியாய் போற்றப்படும் இந்த எழுத்தாளரிடம் மூன்றாம் உலக நாடுகளுக்கான முக்கியச் செய்தி இருக்கிறது.
'பேர் அண்ட் லவ்லி' பூசிய முகங்களைக் கழுவி விட்டு அதை கேட்க தாயாராவோம்.
*
இதற்குமுன் இந்தத் தொடரில் இங்கே எழுதியுள்ள தடைசெய்யப்பட்ட நாவல்கள்:
1.முன்னுரை
2.மேற்கு முனையில் அமைதியாக இருக்கிறது
3.ஹக்கிள்பெரிபின்னின் தீரச்செயல்கள்
*
அறிமுகத்திற்கு நன்றி
பதிலளிநீக்குBostan bala!
பதிலளிநீக்குவருகைக்கும், உற்சாகப்படுத்தியதற்கும் நன்றி.