மார்க்ஸின் பயணம் (என்றென்றும் மார்க்ஸ் - 1ம் அத்தியாயம்)

கி.பி இரண்டாயிரத்தை உலகம் முழுவதும் ஆரவாரத்தோடு எதிர்நோக்கியிருந்த வேளையில் இது நிகழ்ந்தது. லண்டனில் பிரபல பி.பி.சி நிறுவனம் கடந்த ஆயிரம் ஆண்டுகளின் சிந்தனையாளர் யார் என உலகம் முழுவதும் தனது வாசக ரசிகர்களிடையே கருத்துக்கணிப்பு நடத்தியது. பி.பி.சி நிறுவனத்தாரின் பிரத்யேக தேர்வாளர்களான எட்வர்ட் டி போனாவும், ரோஜர் ஸ்குருட்டனும் தங்களது அறிஞர்களாக வில்லியம்ஸ் ஜேம்ஸையும், தாமஸ் அக்கியுனாஸையும் அறிவித்திருந்தார்கள் தேர்வாளர்களின் முதல் பத்து சிந்தனையாளர்கள் கொண்ட பட்டியலில்கூட மார்க்ஸுக்கு இடம் இல்லை! ஆனால் உலகம் முழுவதும் இருந்த பி.பி.சியின் வாசகரசிக மக்கள் அவர்கள் எல்லோரையும் நிராகரித்து இருந்தார்கள். அதிக எண்ணிக்கையில் மார்க்ஸ் முதலில் இருந்தார்.
உலக முதலாளிகளுக்கும், கருத்துக் கணிப்பு நடத்திய பி.பி.சிக்குமே பெரும் அதிர்ச்சியாகத்தான் இருந்தது. மார்க்ஸின் தத்துவத்தை- வாழ்க்கைப் பயணத்தின் அர்த்தத்தை- உலகின் கண்களுக்கு வரைந்து காட்ட முயன்ற சோவியத் சிதைக்கப்பட்டு, லெனினின் அசைவற்ற சிலை கிரேனில் பெயர்க்கப்பட்ட காட்சியை நாக்கை நீட்டி வேட்டை நாயாய் பார்த்து மகிழ்ந்தவர்கள் அவர்கள். 'மார்க்ஸியம் செத்துப் போய்விட்டது' என்று பைத்தியக்காரர்களைப் போல மனிதர்கள் வசிக்காத அண்டார்டிகா பனிப்பாறைகளைக்கூட விடாமல் உலகின் மூலை முடுக்கெல்லாம் கிறுக்கி வைத்திருந்தவர்கள் அவர்கள். பெர்லின் சுவர் இடிக்கப் பட்டபோது, கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் சோஷலிச முகாம்கள் சரிந்தபோது வானத்துக்கும் பூமிக்குமாக குதித்த வர்கள் அவர் கள். பிடுங்கி எறிந்துவிட்டோம் என்று வெறி கொண்டு நர்த்தனம் ஆடியவர்கள் அவர்கள். மனிதர்களின் உணர்வுகளிலிருந்தும் சிந்தனை களிலிருந்தும் மார்க்ஸை அகற்றுவதற்கு சகல சாகசங்களையும் சதாநேரமும் செய்து கொண்டு இருப்பவர்கள். அவர்களுக்கு அதிர்ச்சி யாகத்தான் இருந்திருக்கும்.
மார்க்ஸிற்கு அடுத்தபடியாக இந்த கருத்துக் கணிப்பில் இரண்டாவதாக இருந்தவர் ஆல்பர்ட் ஐன்ஸ்ட்டின். அணுவிற்குள், அதன் மகாசக்தியை கண்டு பிடித்தவர். இருபதாம் நூற்றண்டின் தொழில் நுட்ப புரட்சிக்கு அவரது கண்டுபிடிப்புகள் ஆதாரமாகவும், ஆதர்சனமாகவும் இருந்திருக்கின்றன.
தாமஸ் அக்கியுனாஸ், மேக்ஸ்வெல், டெகரட்டஸ், ஸ்டிபன் ஹாக்கிங், இம்மானுவேல் கான்ட் என்று நீண்ட இந்த 10 பேர் வரிசையில் கடைசியாக நீட்சே இருந்தார். மனிதனுக்குள்ளே புதைந்து கிடக்கும் பேராற்றல் குறித்து நீட்சே அற்புதமான இலக்கியச் செறிவோடு எழுதினார். இவரை முதல் எக்ஸிஸ் டென்ஸியலிஸ்ட்டாக சொல்கிறார்கள். இந்த உலகம் தாண்டிய ஒரு உலகம் இருப்பதாக சொல்லப் பட்டதை அவர் மறுத்தார்.
இவர்கள் எல்லோருமே அற்புதமான மேதைகள். ஆழமான அறிவும், பெரும் ஆற்றலும் கொண்ட வர்கள். இவர்கள் அனைவரிடமிருந்தும் மார்க்ஸ் வேறுபடுகிற இடம்தான், அவருக்கான தனி இடமாக இருக்கிறது. அத்தனை தத்துவங்களும், கண்டுபிடிப்புகளும், கலைகளும் மனித சமூகத்திற்கே பலனளிக்கக் கூடியவையாக இருந்த போதிலும் அதிகார அமைப்பும், ஆளும் வர்க்கமும் அவைகளை இன்றுவரை தங்களுக்கு சாதகமானவைகளாக அனுபவித்துக்கொள்ள கொள்ள முடிந்திருக்கிறது.
மார்க்ஸின் தத்துவமும், ஆராய்ச்சியும் மட்டுமே அவர்களால் வெல்ல முடியாத சக்தியோடு விளங்குகிறது. அது அடக்கப்பட்டவர்களுக்கும், ஒடுக்கப் பட்டவர்களுக்கும் மட்டுமே கருவியாக ஒப்படைக்கப்பட்டு இருக்கிறது.
வாழ்வின் துயரங்களையும், புதிர்களையும் அனுபவம் செறிந்த தத்துவஞான தளத்தில் நின்றே அறிவு வென்று வருகிறது. சவால்களை சந்திக்கிற திடசித்தம் வேண்டியிருக்கிறது. மார்க்ஸின் பயணம் இதுதான். காலத்தை சுமந்து சென்ற பயணம். மனிதகுல விடுதலைக்கான மகத்தான காரியம்.
(அடுத்த அத்தியாயம் நாளை)
காந்தி புன்னகைக்கிறார்- கடைசி அத்தியாயம்

இங்கு போர்கள் நடந்திருக்கின்றன. புதிய மதங்கள் தோன்றியிருக்கின்றன. வாளின் முனையில் மதங்கள் அழிக்கப்பட்டிருக்கின்றன. பேரரசுகள் தோன்றியிருக்கின்றன. சூழ்ச்சிகள் நடந்திருக்கின்றன. பெரும் தியாகங்கள் நிகழ்ந்திருக்கின்றன. இந்தியா உருக்குலைந்து போகவில்லை. உரம் பெற்றிருக்கிறது என்றே சொல்ல வேண்டும். உலகுக்கு வழிகாட்டும் அளவுக்கு சோதனைகளை சந்தித்த, அனுபவங்களை பெற்ற நாடாக நாம் இருக்கிறோம்.
கடந்தகாலத்தை அழிப்பதல்ல எதிர்காலம். கடந்த காலத்திற்காக பழி வாங்குவதல்ல எதிர்காலம். கடந்த காலத்தை சுவீகரிப்பதுதான் எதிர்காலம். கடந்த காலத்தின் தோளில் நின்று பயணம் செய்வதுதான் எதிர்காலம். இதை புரிந்து கொண்டவர்தான் மகாத்மா காந்தி.
ஆனால் கோட்சேக்களுக்கு, அவனது ஆவியாய் அலைபவர்களுக்கு ஒரே வெறிதான். எல்லாவற்றையும் நிர்மூலமாக்குவது. பெரும் அழிவுகளின் மீது நின்று தனது ஆதிக்கத்தை நிறுவுவது. அதற்கு எந்த விலையையும் கொடுக்கவும், எந்த அறநெறியையும் மீறவும் அவர்கள் தயாராய் இருப்பார்கள். குழப்பங்களையும், கலவரங்களையும் விதைக்காமல் தங்கள் கனவு நிறைவேறாது என்று அவர்களுக்குத் தெரியும்.
அதுதான் நடந்து கொண்டிருக்கிறது. குஜராத்திலும், மகாராஷ்டிராவிலும், கோட்சேவை பெரும் தியாகிகளாக காட்டிய அந்த மண்ணில்தான் கடந்த பத்து பனிரெண்டு வருடங்களில் பெரும் கலவரங்கள் நடந்திருக்கின்றன. எத்தனை படுகொலைகள், எத்தனை கற்பழிப்புகள், எத்தனை கருகிப் போன வீதிகள்...அந்த அழிவுகளின் மீதுதான் அவர்களால் தங்கள் அரசை நிறுவ முடிகிறது. "இது காந்தியின் தேசம் அல்ல...கோட்சேவின் பூமி" என்று குஜராத்தில் உரக்கச் சொல்ல முடிகிறது. மகாத்மாவுக்கு இது மிகவும் வேதனைக்குரிய செய்தியாகத்தான் இருக்கும்.
ஆனால் அவருக்கு நம்பிக்கை அளிக்கிற காட்சிகளும் இன்னொரு புறம் இருக்கத்தான் செய்கிறது.
பிரிவினையின் போதும், விடுதலையை ஒட்டிய நாட்களின் போதும் இந்திய தேசத்தின் இரண்டு பக்கங்களில் மிகப் பெரிய மனிதக் கலவரங்கள் நடந்தன .ஒருபுறம் பஞ்சாபிலும், அதையொட்டிய மேற்குப் பகுதிகளிலும். இன்னொரு புறம் கல்கத்தாவின் நவகாளியில் மட்டும் ஒன்றரை லட்சம் பேர் இறந்ததாக சொல்லப்படுகிறது. அங்குதான் முன்னொரு நாள் மகாத்மா அமைதிக்கான யாத்திரை செய்திருந்தார்.
ஆனால் இப்போதும் இந்தியாவின் மேற்குப்பகுதியில் அடிக்கடி வகுப்புக் கலவரங்களும் அமைதியின்மையும் நிலவிக் கொண்டே இருக்கிறது. குஜராத்திலும், மகாராஷ்டிராவிலும் மனித வரலாற்றின் இரத்த வெறி கொண்ட பக்கங்கள் தொடர்ந்து எழுதப்படுகின்றன.
கல்கத்தாவோ அமைதியாக இருக்கிறது. ஹூக்ளி நதி நடுங்காமல் ஓடிக் கொண்டு இருக்கிறது. மதத்தையும், மத நம்பிக்கையயும் மனிதர்களையும், வரலாற்றையும் மிகச் சரியாக புரிந்து கொண்ட ஒரு அரசு அங்கு அமைந்திருக்கிறது. இதுதான் காலம் இந்தியாவுக்கும் மகாத்மாவுக்கும் சொல்லும் செய்தி.
களைப்பாய் இருக்கிறதோ
களைப்பாய் இல்லையோ-
நாங்கள்வேகம் குறைந்து போக மாட்டோம்.
அப்படியே நின்றும் விட மாட்டோம்.
உனது போராட்டத்தில்
நீ தனியே விடப்படவில்லை-
நாங்கள்தொடர்ந்து செல்வோம்
வேகம் குறைந்துவிட மாட்டோம்.
காந்தி அந்த பொக்கை வாய் திறந்து நம்பிக்கையோடு புன்னகைக்கிறார்.
(முற்றும்)
வாருங்கள் முன்பக்கம்!
காந்தி புன்னகைக்கிறார் - ஏழாம் அத்தியாயம்

எந்த நாதுராம் கோட்சே இந்திய மக்களால் வெறுக்கப்பட்டானோ- எவன் இந்தியாவின் ஆன்மாவை சுட்டுக் கொன்றானோ- எவன் அந்த அமைதிப் புறாவை இரத்தம் சிந்த சிந்த மண்ணில் வீழ்த்தினானோ அவனை, இந்தியாவின் தவப்புதல்வனாகவும், ஒப்பற்ற தியாகியாகவும் சித்தரிக்க முயற்சிகள் நடக்கின்றன. மக்கள் வரலாற்றை மறந்துவிடும்போது அவர்கள் அனாதையாகி விடுகிறார்கள்.
நாதுராம் கோட்சேவின் தம்பி எழுதிய "காந்தியின் மரணமும் நானும்" மற்றும் "55 கோடியின் தியாகம்(அப்பாவி)" போன்ற புத்தகங்கள் மகாராஷ்டிரவிலும், குஜராத்திலும் மிக அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டிருக்கின்றன. குஜராத்தில் "காந்தியும் கோட்சேவும்" நாடகம் அங்கு பி.ஜே.பி அரசு அமைந்ததும் அரங்கேற்றப்பட்டது. இவைகளில் காந்தி இந்துக்களின் துரோகியாகவும், கோட்சே தியாகியாகவும் சித்தரிக்கப்பட்டிருந்தது. காந்தி பிறந்த மண்ணிலேயே அவர் காணாமல் போகிறார்.
1995ல் மகாராஷ்டிராவில் சிவசேனைக்கு பொறுப்புக்கு வந்ததும்,. பிரதீப் தால்வியின்' நான் நாதுராம் பேசுகிறேன்" என்னும் நூல் நாடகமாக்கப்பட்டு அரங்கேற்றப்பட்டது. அதன் முதல் காட்சியிலேயே கோட்சே தோன்றி "எனது இதயத்தில் ஆழமான காயம் இருக்கிறது...அந்தக் காயத்தின் மீது மீண்டும் மீண்டும் அடிகள் விழுந்தன. பிரிவினையால் தேசமே துண்டாகிப் போனது. அகதிகள் படுகொலை செய்யப்பட்டனர். எனது தாய்மார்களும், சகோதரிகளும் கற்பழிக்கப்பட்டனர், காஷ்மீரில் நமது வீரர்கள் உயிரைத் தியாகம் புரிந்து சமர் செய்யும் போது பாகிஸ்தானுக்கு 55 கோடி ருபாய் கொடுக்கப்பட்டது. இந்தக் காயங்களுக்கெல்லாம் காரணம் காந்திதான்." என்று உனர்ச்சிகரமாக பேசி கூட்டத்தினரை உணர்வு ரீதியாக வெறியேற்றி தன் வசமாக்குவான். காலம் காலமாக இவர்களால் புறக்கணிக்கப்பட்டு, அவமானப்படுத்தப்பட்டு காயங்களும், ரணங்களுமே உருவங்களாகிப் போன தாழ்த்தப்பட்டவர்கள் இவன் மாதிரி பேச மூடியாமல் இருப்பதால்தான் இவனுக்கு வெட்கமேயில்லாமல் இப்படி பேசமுடிகிறது.
கொலை நடந்த அன்றைக்கு டெல்லியில் துக்ளக் சாலையில் அமைந்துள்ள போலீஸ் ஸ்டேஷனில் இரவு கோட்சேவை காந்தியின் மகன் தேவதாஸ் காந்தி சென்று சந்திப்பதாகவும், அவனை கைகுலுக்குவது போலவும் ஒரு காட்சி அமைக்கப்பட்டிருக்கிறது. பார்வையாளரின் மனோநிலையில் தடுமாற்றம் வர அமைக்கப்பட்டுள்ள ஒரு குரூரமான கற்பனை தந்திரம்.
ஜெயிலில் ஷேக் என்னும் காவல் அதிகாரி கோட்சேவோடு பழக்கமாகிறான். அவன் நாதுராமிடம் "கோர்ட்டில் நீ உட்கார்ந்திருந்த இடத்தில் என் மகள் சுபேதா மலர்களை தூவினாள்' என்கிறான். மேலும் தனது மகள் மசூதிக்கு ஒவ்வொரு நாளும் சென்று உனக்கு கடவுளின் ஆசீர்வாதங்களை வேண்டிக் கொண்டு இருப்பதாகவும் சொல்கிறான். அவள் கர்ப்பம் தரித்திருப்பதாகவும் உன்னை பார்க்க வர முடியாமல் இருப்பதாக சொல்கிறான். கோட்சே அவனிடம் "நீங்கள் இந்த சகோதரனை உண்மையில் நேசிப்பதாக இருந்தால், அவளது வயிற்றில் பிறக்கும் குழந்தைக்கு எனது சிந்தனைகளை, செய்திகளைச் சொல்லுங்கள். இந்த மண்ணில் இன்னொரு காந்தி வந்தால் இன்னொரு கோட்சே வேண்டும்." என்று சொல்கிறான். யாரை அவன் வெறுத்தானோ, யாருக்காக மகாத்மா வருத்தப்பட்டார் என்று அவரைக் கொன்றோனோ அவர்களிலிருந்து இன்னொரு கோட்சே பிறப்பான் என்பது எப்பேர்ப்பட்ட குதர்க்கமான கற்பனை.
காந்தியின் கொலையை குறிப்பிடும் போதெல்லாம் 'வதை' என்கிற வார்த்தை உபயோகப்படுத்தப்பட்டு இந்துக்களின் மனோநிலையில் அவர்கள் அறியாமலேயே காந்தியின் மீது வெறுப்பு தூண்டப்படுகிறது. இதைவிடக் கொடுமை, காந்தி உண்ணாவிரதம் முடித்து பழச்சாறு சாப்பிடும்போது ஒரு இந்து தந்தை "அது என் மகனின் இரத்தம்" என்று சொல்கிற அளவுக்கு விஷம் கக்கப்பட்டிருக்கிறது. இந்த நாடகம் கேரளத்திலும் மற்ற மாநிலங்களிலும் அரங்கேற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அங்கெல்லாம் தடை விதிக்கப்பட்டுள்ளன. மகாராஷ்டிராவில் 1997 ஆகஸ்ட் 15 ம் தேதி தாதரில் "காந்தியின் கொலையாளி" என்னும் புத்தகம் கே.வி.சீதாராமைய்யா என்பவரால் எழுதப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. அதை வெளியிட்டது நாதுராம் கோட்சேவின் தம்பி கோபால் கோட்சே. சிறப்பு அழைப்பாளர் காந்தி மீது முதல் கொலை முயற்சி நடத்திய மதன்லால் பாவா! இந்தப் புத்தகத்தையும் கேரளாவில் கோபால் கோட்சேவை வைத்து வெளியிட தீர்மானித்திருந்தார்கள். அரசு தடை செய்துவிடும் என்பதறிந்து வெளியீட்டாளர்கள் நிகழ்ச்சியை ஒத்தி வைத்தார்கள். ஆனால் சங்பரிவாரத்தினர் தங்களுக்கு இருக்கும் அமைப்புகள் மூலம் வேகவேகமாய் விற்றனர். முடிந்த அளவுக்கு மக்களிடம் போய்ச் சேர வேண்டும் என்று செயல்பட்டனர். ஆனால் வெளியே எங்களுக்கும் கோட்சேவுக்கும் சம்பந்தமில்லை என்று சத்தியம் செய்வார்கள்.
அதே நேரம் ஆனந்த் பட்வர்த்தனின் "போரும் சமாதானமும் என்கிற திரைப்படத்தில் வரும் காட்சிகளுக்கு 6 இடங்களில் சென்சார் போர்டு கைவைத்துள்ளது. அதை மறுபரீசீலனை செய்ய அனுப்பியபோது 21 காட்சிகள் நீக்கப்பட்டன. அதில் ஒன்று மகாத்மாவை நாதுராம் கோட்சே கொன்றதாக காட்டப்படும் காட்சி! அந்தப் படம் மகாத்மாவின் அகிம்சையை பின்னணியாக வைத்து எடுக்கப்பட்ட அணு ஆயுத போருக்கு எதிரான படம்!! எது இங்கு பேசப்பட வேண்டுமோ அது பேசப்பட அனுமதியில்லை. ஆனால் எதை இங்கு பேசக்கூடாதோ அதை இங்கு பேசலாம்.
குஜராத்தில் மாநிலக் கல்வித்துறை பாடத்திட்டத்தில் எட்டாம் வகுப்பு வரலாற்றுப் பாடத்தில் 'காந்தியின் கொலை' என்று உபதலைப்பிட்டு கீழ்க்கண்டவாறு சொல்லப்பட்டிருக்கிறது. "சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியாவின் பல இடங்களில் வகுப்புக் கலவரங்கள் நடந்தன. காந்தி அதை அடக்குவதற்கு முயற்சி செய்தார். நிறைய இந்துக்கள் இதனை விரும்பவில்லை. 1948 ஜனவரி 30ம் தேதி கோட்சேவின் கைகளால் கொல்லப்பட்டார்." இன்னொரு வரலாற்றுப் பாடத்தில் "வெறுப்புகளினால் கிழிக்கப்பட்டிருந்த வங்காளத்தில் வகுப்புவாத கொடுமைகளில் பாதிக்கப்பட்ட மக்களை சாந்தப்படுத்துவதற்காக காந்தி யாத்திரை செய்தார். புதிய தேசத்தில் சந்தோஷமும், வெறுப்பும் சூழ்ந்திருந்த போது காந்தி நாதுராம் கோட்சேவால் சுட்டுக் கொல்லப்பட்டார்." நாதுராம் கோட்சே என்பவன் யார்...ஏன் கொன்றான் என்பதை குறிப்பிடாமல் காந்தியின் மரணம் நியாயமாக நிகழவேண்டிய, ஒரு உனர்ச்சி வசப்பட்ட மக்களால் நடந்த மாதிரி, போகிற போகில் சொல்லப்படுகிறது. குழந்தைகளின் அறிவுக்குள் தங்கள் வரலாற்று மோசடியை புகுத்தி அவர்களையும் இருளில் மூழ்கடிக்கிற சூழ்ச்சி சத்தமில்லாமல் நடந்து கொண்டிருக்கிறது.
சில காலங்களுக்கு முன்பு பிரதம மந்திரி வாஜ்பாய் அவரது அதிகாரபூர்வ இருப்பிடத்தில் பி.ஜே.பி தலைவர் ஒருவர் எழுதிய 'லஷ்மண ராவ்' பற்றிய புத்தகத்தை வெளியிட்டார். அத்தோடு நில்லாமல் ஜவஹர்லால் நேருவுக்கு சமமாக பேசினார். இந்த லஷ்மண ராவ் வேறு யாருமல்ல..மகாத்மா காந்தியை கொன்றவர்களுக்கு ஆதரவாக நின்றவர். வாஜ்பாய் ஒருவேளை அன்று தனது மூகமூடியை மறந்துவிட்டு வந்திருக்கக்கூடும். இப்படி ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் இவர்களது கள்ளத் தொடர்புகள் அவ்வப்போது வெளிப்படும்.
அதுதான் கோபால் கோட்சேவை போன தேர்தலில் பாரதீய ஜனதாவுக்கு அதிக இடங்கள் கிடைத்ததும் சந்தோசமடைய வைக்கிறது. "1400 வருடங்களாக நாங்கள் நம்பிக்கையோடு காத்திருந்தது நிகழப் போகிறது... இறுதியாக எங்கள் இந்து ராஷ்டிரா அமையப் போகிறது" என்று உற்சாகமடைய வைக்கிறது.
டைம்ஸ் ஆப் இந்தியா, ஜனவரி 25, 1998 இதழில் கோபால் கோட்சே அளித்த பேட்டியில் "சித்தாந்தரீதியாக நாதுராம் கோட்சே ஆர்.எஸ்.எஸ்ஸின் உறுப்பினன் தான். அதற்காக பணிபுரிவதை பிறகு நிறுத்திக் கொண்டான். கோர்ட்டில் நான் ஆர்.எஸ்.எஸ்ஸில் உறுப்பினன் இல்லை என்றது ஆர்.எஸ்.எஸ்ஸைக் காப்பாற்றும் முயற்சியே. ஆர்.எஸ்.எஸ் ஊழியர்கள் இதனால் பாதுகாக்கப்படுவார்கள் என்கிற புரிதலில் கோட்சே அதனை சந்தோஷமாகச் செய்தான்" என்கிறார். இன்னொரு சந்தர்ப்பத்தில் கோட்சேவின் தம்பி சொல்கிறார்.."எங்கள் தலைமுறை முடிந்துவிட்டது. இந்த தலைமுறை நாதுராம் கோட்சேவை முற்றிலும் அறியாமல் போகலாம். ஆனால் அடுத்த தலைமுறை நிச்சயம் கோட்சேவை தேசபக்தி கொண்ட தியாகியாக பார்க்கும்"
அவரது பார்வை சாம்பலும் எலும்பும் அடங்கிய கோட்சேயின் அஸ்தியை பார்க்கிறது. 55 வருடங்களாக அதற்கு பூஜை நடந்து கொண்டு இருக்கிறது. நிறைவேறாத ஆசைகளோடு இளவயதில் துர்மரணமடைந்த கெட்ட ஆவியாக அந்த அஸ்தி, அவருக்கு தெரியாதுதான். மத நம்பிக்கையைத் தாண்டி ஒரு வெறி அவர் மூளைக்குள் பாய்ந்திருக்கிறது.
அது ஏற்கனவே பாபர் மசூதியை இடித்து பம்பாயிலும், ஹைதராபத்திலும், உத்திரப்பிரதேசத்திலும் பெரும் கலவரங்களை ஏற்படுத்தி விட்டது. தாகம் அடங்க அடங்க இரத்தம் குடித்தும் போதாமல் குஜராத்தில் கோரத்தாண்டவமாடியது. மேடையில் தன்னைபோல ஒரு நாதுராம் எங்கிருந்து வரவேண்டும் என பொய்யாய் ஆசைப்பட்டதோ அப்படி ஒரு மூஸ்லீம் சகோதரியின் வயிற்றை கிழித்து அங்கிருந்த சின்னஞ்சிறு சிசுவின் இரத்தம் குடித்தது. இன்னும் அடங்காமல் இருக்கிறது. இந்தியாவின் இரத்தம் முழுவதும் குடித்தாலும் அதற்கு அடங்காது. இந்து ராஜ்ஜியம் அமைந்தால் போதும்.
(கடைசி அத்தியாயம் நாளை)
முன்பக்கம்
தேசத்திடம் இன்று ஒரு குழந்தையின் கேள்வி.
வீசியெறிந்து அப்புறப்படுத்தப்பட்ட |
காந்தி புன்னகைக்கிறார் - ஆறாம் அத்தியாயம்

"முதன் முதலாக நான் சொல்லிக் கொள்ள விரும்புவது காந்தியின் கொலையில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கிடையே எந்த சதியும் இருக்கவில்லை."
"நான் 602864 எண்ணுள்ள பிஸ்டலை வைத்திருந்தேன். அது பற்றி நாராயண ஆப்தேவுக்கும், விஷ்ணு கார்காரேவுக்கும் ஒன்றும் தெரியாது"
"காந்தியை கொல்லும் பணியை வீர சவார்க்கர் எனக்கும் , நாராயன ஆப்தேக்கும் ஒப்படைத்துள்ளதாக பாட்கே கூறிய தகவல் அவனது மூளையில் உதயமானது."
"ஜனவரி 17ம் தேதி வீர சவார்க்கர் எங்களை வெற்றிகரமாக முடித்து வாருங்கள் என்று வாழ்த்தியதாக பாட்கே சொன்னது பொய்"
" நான் மட்டுமே முடிவு செய்தேன். என் கைகளில் துணிவினை ஏந்தினேன். சுட்டேன்"
தன்னை தவிர வேறு யாரும் இந்த வழக்கில் சிக்கிக் கொள்ள வேண்டாம் , மற்றவர்கள் வெளியே சென்று மகாத்மாவுக்குப் பிறகு இந்திய வரலாற்றை மாற்றி எழுத வேண்டும் என்று ஆசைப்பட்டான். அதுதான் மகாத்மாவின் கொலைக்கான உண்மையான அர்த்தமாகும் என்பது அவனுக்குத் தெரியும் .கோர்ட்டில் அவனது வாக்கு மூலத்தை படித்தால் புரியும்.
இரண்டாவது, காந்தியை கொல்வதற்கான நியாயமான காரணங்கள் இருந்ததாகச் சொல்கிறான். பிரிவினைக்கு அவர்தான் காரணம் என்றும் அதன்மூலம் ஏற்பட்ட கலவரங்களில் இந்துக்கள் பாதிக்கப்பட்டதற்கும் அவரே காரணம் என்றும் குற்றம் சாட்டுகிறான். இது முற்றிலுமான பொய். காந்தி பிரிவினைக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார் என்பது இந்திய அரசியலில் அன்றைக்கு சாதாரண பாமரனுக்கும் தெரிந்த பத்திரிக்கைச் செய்தி.
அடுத்ததாக, காந்தி எப்போதும் பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்து வந்தார் என்றும் முஸ்லீம்களை தாஜா செய்தார் என்றும் சொல்லப்படுகிறது. இதுவும் உண்மையல்ல. காந்தி அவரது மனதில் பட்டதை மிகக் கடுமையாகவே பேசியிருக்கிறார். அவர் உண்ணாவிரதம் இருந்த ஜனவரி 13ம் தேதி பற்றி பிரார்த்தனைக் கூட்டத்தில் பேசும்போது , பாகிஸ் தானின் நடவடிக்கைகள், மோசமான நிலைமைகளுக்கு இட்டுச் செல்வதாகக் கருதி "நான் பாகிஸ்தானை காகிதத்தில் பார்க்க விரும்பவில்லை. அங்குள்ள பேச்சாளர்களின் வார்த்தைகளில் பார்க்க விரும்பவில்லை. அங்குள்ள முஸ்லீம்களின் அன்றாட வாழ்க்கையில் பார்க்க விரும்புகிறேன். இந்த விரதம் அதற்கான ஒரு சிறு முயற்சி " என்று மிக அழுத்தமாக சொல்கிறார். சாகேப் குரேய்ஷி என்னும் காந்தியின் நண்பர் காந்தியின் இந்த வார்த்தைகளை எதிர்த்து கடிதங்கள் எழுதவும், காந்தி இன்னும் தெளிவாக பதில் எழுதுகிறார். "நான் உண்மையைச் சொல்வதற்கு தயங்க மாட்டேன். பாகிஸ்தானிலோ, இங்குள்ள முஸ்லீம்களோ எனது அறிவுரைகளை விரும்புகிறார்களோ இல்லையோ நான் சொல்லிக் கொண்டு இருப்பேன்." காந்தி மிகத் தெளிவாக தனது நிலையில் இருக்கிறார். எங்கு தவறுகள் இருந்தாலும் அவர் அதைச் சுட்டிக் காட்டவும், சரி செய்யவும் தயங்கவில்லை. எனவே கோட்சே காந்தி மீது கற்பித்த களங்கமானது தொடர்ந்து இந்துத்துவா சக்திகள் இன்றுவரை சொல்லிக் கொண்டு இருப்பதுதான்.
அப்புறம் மிக முக்கியமாக சொல்வது பாகிஸ்தானுக்காக ரூ.55 கோடி கொடுக்க வேண்டும் என காந்தி உண்ணாவிரதம் இருந்தார் என்பதை. உண்மையில் காந்தி உண்ணாவிரதம் இருக்க ஆரம்பிக்கும் போது 55 கோடி கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தவில்லை. உண்ணாவிரதம் ஆரம்பித்த பிறகுதான் அதை ஒரு பிரச்சினையாக பார்த்தார். ஆனால் அந்த 55 கோடி கொடுக்க வேண்டும் என்பது இந்தியாவின் தார்மீகக் கடமை என்றே கருதினார். அப்படிக் கொடுப்பது இரண்டு நாடுகளுக்கு இடையே நிலவும் பதற்றங்களை தவிர்க்க உதவும் எனவும் கருதினார். எந்த நடுநிலையாளனும் அப்படித்தான் யோசிக்க முடியும்.
கோட்சே, காந்தி மீது கோபம் கொண்டதற்கு சொன்ன பல காரணங்கள் உண்மைக்கு புறம்பானவை. ஆனால் ஒரு இடத்தில் அவன் உண்மையை வெளிப்படுத்தி இருக்கிறான். அதுதான் இந்த வழக்கில், இந்திய வரலாற்றில் கவனிக்க வேண்டியதாயிருக்கிறது. "காந்தி இல்லாத தேசம் செயல்முறைக்கு உகந்ததாகவும், ஆயுதங்களோடு வலிமை பொருந்தியதாகவும் இருக்கும்" என்கிறான். இவர்களின் கோபம் எங்கிருந்து ஆரம்பிக்கிறது என்பது தெளிவாகிறது. இன்றைக்கு அவர்கள் முழங்கும் "வல்லரசு' பிரகடனங்களோடு ஒப்பிட்டு பார்த்தால் இன்னும் தெளிவாகத் தெரியும்.
மூன்றாவது அவனது வாக்கு மூலத்தின் மூலம் கோர்ட்டிலும், மக்களிடமும் மரணம் என்னும் உணர்வு குவிந்த தளத்தில் நின்று ஒரு பிரச்சாரம் நிகழ்த்திவிட வேண்டும் எனவும், அது மகாத்மாவின் புகழை- மரியாதையை மங்கச் செய்வதாக இருக்க வேண்டும் எனவும் திட்டமிடப்பட்டிருந்தது. அதற்காகவே நாதுராம் கோட்சே தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தான். இயல்பாகவே கிளர்ச்சியுறப் பேசும் அந்த சித்பவ பிராமணன் தன் அறிவு, ஆற்றல் முழுவதையும் அதற்கு பயன்படுத்தி இருக்கிறான்.
தீர்ப்பு எழுதிய நீதிபதி மாண்புமிகு கோஸ்லா 5 மணி நேரம் நீடித்த அவனது வாக்குமூலத்தின் போது கோர்ட்டில் இருந்தவர்கள் உணர்ச்சிப் பெருக்கால் தவித்தது பற்றியும், ஒரு நெஞ்சைப் பிழியும் நாடகத்தை பார்த்தது போல இருந்ததாகவும் பின்னாளில் எழுதுகிறார்.
அவனது உயிலும் கூட அப்படித்தான். "எந்த நதியின் கரைகளில் வேதங்கள் ஒலித்ததோ, அந்த சிந்து எப்போது நமது மண்ணில் சுதந்திரமாக பாய்கிறதோ, அதுதான் நமது புனித நாள். அப்போது எனது அஸ்தி அந்நதியில் கரைக்க வேண்டும்"
த்னது அஸ்தியை- அவன் வெறி பிடித்த கூட்டத்தின் கனவாக கொடுத்துப் போயிருக்கிறான். சந்தோசமும், அழகும் என்றைக்கும் இந்த மண்ணில் வந்துவிடக் கூடாது என்று கோபம் கொண்ட வெறியனின் சாபம் அது. தேசமே அஸ்தியாகட்டும் என்று வெறுப்பு உமிழ்ந்த ஒருவனின் உருக்குலைந்த கடைசி மிச்சங்கள் அவை.
(ஏழாம் அத்தியாயம் -நாளை)
முன்பக்கம்
காந்தி புன்னகைக்கிறார் - 5ம் அத்தியாயம்

வழக்கில் 12 பேர் சேர்க்கப்பட்டிருந்தனர். அவர்களில் 3 பேர் காணாமல் போயிருந்தார்கள். திகம்பர பாட்கே அப்ரூவராக மாறினான். நாதுராம் கோட்சே, நாராயண ஆப்தே, விஷ்ணு கார்காரே, மதன்லால் பாவா, கோபால் கோட்சே, சங்கர் கிஸ்டய்யா, இவர்களோடு இந்து மகா சபையின் தலைவாராயிருந்தவரும் இந்துத்துவா அமைப்புகளின் இன்றுவரை ஆதர்ச புருஷராகவும் இருக்கக்கூடிய வீரசவார்க்கரும் கைது செய்யப்பட்டனர்.
ஜனவரி 20ம் தேதி மதன்லால் டெல்லி போலீஸிடம் கக்கிய தகவல்கள், திகம்பர பாட்கே அப்ரூவராகி கொட்டிய உண்மைகள், போலீஸ் சேகரித்த சாட்சியங்கள் சில முக்கிய விஷயங்களை தெரிவிக்கின்றன. ஒரு ஜேப்படிக்காரனைப் பிடிக்கும் தீவிரத்தைக் கூட காவல்துறை காட்டவில்லை. பல முக்கிய கட்டங்களில் உயர் அதிகாரிகளின் நடவடிக்கைகள் மர்மமாக இருந்திருக்கின்றன. எதுவோ ஒன்று அவர்களை அங்கங்கு தடுத்திருப்பதாகவே தெரிகிறது.மதன்லால் மிகத் தெளிவாக யார் யாரெல்லாம் இந்த சதியின் உடந்தை என்று சொல்லி இருக்கிறான். இந்து ராஷ்டிரா பத்திரிக்கை குறித்தும், அதன் ஆசிரியர் கோட்சே குறித்தும் தெளிவாக ஜனவரி 24ம் தேதியே எழுத்து பூர்வமாக கொடுத்துவிட்டான். ஆனால் போலீஸாரால் கோட்சேவைத் தேடிக்கண்டுபிடிக்க முடியவில்லை. சரி. கோட்சேதான் தலை மறைவாகி விட்டதாகச் சொல்லப்படலாம். அந்த இந்து ராஷ்டிரா பத்திரிக்கை?
ஜனவரி 20ம் தேதி காந்தியின் மீது கொலைமுயற்சி நடந்தபோது "காந்தியின் நடவடிக்கைகளால் ஆத்திரமுற்ற இந்து இளஞர்களின பதில் நடவடிக்கை" என்பதாக செய்தி வெளியிட்டது. காந்தி இறந்த செய்தியைக்கூட ஜனவரி 31ம் தேதி காலையில் வெளியிட்டிருக்கிறது. அதன் ஆசிரியரே கொலைகாரன்!
இந்து ராஷ்டிரா பத்திரிக்கை சீர்குலைவு செய்திகளை வெளியிடுவதாகச் சொல்லி 1947 ஜூலையில் அந்தப் பத்திரிக்கையைத் தடை செய்து உத்தரவிட்ட பூனாவின் ஐ.ஜி. திரு ரணில் பிறகு 1947 நவம்பரில் அந்த தடையுத்தரவை ஏன் ரத்து செய்தார் ?
போலீஸ் தரப்பில் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட முக்கியமான ஆவணங்களில் ஒன்று விஷ்ணு கார்காரே ஜனவரி 25ம் தேதி பூனாவில் உள்ள கோட்சேவுக்கும், நாராயண ஆப்தேவுக்கும் உடனே புறப்பட்டு வரச் சொல்லி அனுப்பிய தந்தி. கோட்சேவுக்கும், விஷ்ணு கார்காரேவுக்கும், ஆப்தேவுக்கும் மகாத்மாவின் கொலையில் உள்ள தொடர்பை உறுதிப்படுத்துவதாக இந்த ஆவணம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இதில் இன்னொரு முக்கியமான விஷயமும் ஒளிந்திருக்கிறது. ஜனவரி 20ம் தேதி காந்தியை டெல்லியில் கொலை செய்ய முயற்சித்து அது தோல்வியடைந்த பிறகு கோட்சே மீண்டும் பூனாவுக்கே திரும்பி அங்கு பத்திரமாக இருந்திருக்கிறான்.
ஆனால் அதற்கு முன்பே கோட்சே பற்றியும், இந்து ராஷ்டிரம் பத்திரிக்கை குறித்தும் மதன்லால் பாவா போலீஸிடம் தகவல் தெரிவித்துவிட்டான். போலீஸிடம் எப்படி ஒரு அக்கறை கொண்ட மந்தம் இருந்தது.?
மதன்லால் கொடுத்த தகவல்களின் பேரில் நாராயண ஆப்தே மற்றும் விஷ்ணு கார்காரேயின் படங்கள் முன்கூட்டியே போலிஸூக்கு கிடைத்தும் பிர்லா ஹவுஸில் சாதாரண உடையில் காவல் இருந்த காவலாளிகள் கையில் ஏன் அவை கொடுக்கப்படவில்லை? கொடுக்கப்பட்டிருந்தால் ஜனவரி 30ம் தேதி கொலை செய்ய கோட்சேவோடு மீண்டும் வந்த விஷ்ணு கார்காரே மற்றும் நாராயண ஆப்தேவை அடையாளம் கண்டு கைது செய்து இருக்க முடியும்.
நாட்டில் கலவரங்கள் ஏற்படுத்துவதாகவும் சமூக விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் அடையாளம் காணப்பட்டு இந்து மகாசபையும் ஆர்.எஸ்.எஸ்ஸூம் தடை செய்யப்பட்டன. ஆர்.எஸ்.எஸ் தலவர் கோல்வார்கர் கைது செய்யப்பட்டார். காந்தி இறந்ததை அங்கங்கு ஆர்.எஸ்.எஸ் இனிப்புகள் வழங்கி கொண்டாடி இருக்கிறது. இதை அப்போது துணைப் பிரதமாராயிருந்த வல்லபாய்படேல் சொல்கிறார்.
குற்றம சாட்டப்பட்டு, வழக்கு நடந்து, 1949 நவம்பர் 15ம் தேதி காலையில் நாதுராம் கோட்சேவும், நாராயணஆப்தேவும் தூக்கிலடப்பட்டுவிட்டனர்.
விஷ்ணு கார்காரேவும், கோபால் கோட்சேவும், சங்கர் கிஸ்டய்யாவும், மதன்லால் பாவாவும், தத்தரய்யா பர்ச்சூரும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார்கள்.
இந்து மகா சபையின் தலைவரும் இந்துத்துவாவின் பீடங்களில் ஒருவருமான வீர சவார்க்கர் விடுதலை செய்யப்பட்டார். அப்பீலில் கோட்சேவுக்கு குவாலியரில் துப்பாக்கி கொடுத்த டாக்டர் பர்ச்சூர் விடுதலை செய்யப்படுகிறான்!
ஜனவரி 20ம் தேதி குண்டு வெடிப்புக்குப் பிறகு கிடைத்த நம்பத்தகுந்த தகவல்களால் வீர சவார்க்கருக்கும் கொலையாளிகளுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக தெரிய வந்ததும் பம்பாயின் உயர் போலீஸ் அதிகாரி நகர்வாலா வீர சவார்க்கரை கைது செய்ய வேண்டும் என அப்போது பம்பாயின் உள்துறை அமைச்சராயிருந்த மொரார்ஜி தேசாயிடம் அனுமதி கேட்டபோது மொர்ஜி தேசாய் மறுத்து விடுகிறார். வழக்கு முடிந்து ரொம்ப காலம் கழித்து இந்த படுகொலை குறித்து ஆராய அமைக்கப்பட்ட கபூர் கமிஷன் 1964ல் அறிக்கையை வெளியிடும்போது காவல்துறையின் செயல்பாடுகளில் பல தவறுகளும், முரண்பாடுகளும் இருப்பதை ஒப்புக் கொண்டுள்ளது.
கோபால் கோட்சே அக்டோபர் 1964ல் ஆயுள் தண்டனை முடிந்து வெளியே வரும் போது அதனைக் கொண்டாட 1964 நவம்பர் 12ல் பூனாவில் உள்ள உதயம் ஹாலில் 'சத்திய விநாயக பூஜை' ஏற்பாடு செய்யப்படுகிறது. அதில் கலந்து கொண்ட 'தருண் பாரத்' ஆசிரியர் கேட்கர் காந்தி கொலை செய்யப்படுவதற்கு மூன்று மாதத்திற்கு முன்னரே நாதுராம் கோட்சே காந்தியைக் கொலை செய்யப் போவதாக கூறியதாகவும் அதன் விளைவுகள் குறித்து இருவரும் விவாதித்ததையும் கூறியிருக்கிறார். உடனே பக்கத்தில் உட்கார்ந்திருந்த கோபால் கோட்சே இதற்கு மேல் எதுவும் சொல்ல வேண்டாம் என்று முணுமுணுக்க கேட்கர் "இப்போது இதையெல்லாம் நான் சொன்னாலும் அவர்கள் என்னை கைது செய்யப் போவதில்லை" என்று கூறியிருக்கிறார். காந்தியின் உணணாவிரதத்திற்குப் பிறகே அவரைக் கொலை செய்ய முயற்சித்ததாக நடந்த வழக்கிற்கு இது முற்றிலும் வேறான தகவல்.
(அடுத்த அத்தியாயம் நாளை)
காந்தி புன்னகைக்கிறார் - நான்காம் அத்தியாயம்

அந்த அதிகாலை 4.45 மணிக்கு எலுமிச்சை சாறும், தேனும் வெந்நீரும் அருந்தினார். ஒரு மணிநேரம் கழித்து ஆரஞ்சு பழச்சாறு அருந்தியபின் களைப்பினால் கொஞ்ச நேரம் தூங்கினார். ஒரு அரைமணி நேரத்தில் திரும்பவும் எழுந்து கடிதங்கள் எழுதினார்.கடுமையான இருமல் இருந்தது. கொஞ்சம் பனங்கற்கண்டு மாவை சாப்பிட்டார். பிறகு பியாரிலாலிடம் திருத்திய நகலை கொடுத்து முழுமையாக்கச் சொன்னார். குளித்தார். சமீபத்தில் வங்காளத்தில் தங்கியிருந்தபோது வங்காள மொழி பழக்கம் ஏற்பட்டிருந்தது. சில வாக்கியங்களை எழுதிப் பார்த்தார்.
காந்தியை ஜின்னா பாகிஸ்தானுக்கு அழைத்திருந்தார். பிப்ரவரி 3ம் தேதி கலவரங்கள் நடந்த பகுதிகள் வழியாக பாகிஸ்தானுக்கு செல்வதாக இருந்தார். காந்தி சுடப்படாமல் இருந்திருந்தால் உலகமே எதிர்நோக்கிய அந்த யாத்திரை மட்டும் நடந்திருந்தால் மகத்தான மாற்றங்கள் ஏற்பட்டிருக்கலாம். காந்தியைப் பார்க்க ருஸ்தம் சரபோஜி குடும்பத்தோடு வந்திருந்தார். அவரிடம் பேசியிருந்த பின் மீண்டும் தூங்கிப் போனார்.
அங்கே கொலையாளிகள் அவர்கள் திட்டத்திற்கு இறுதிவடிவம் கொடுத்துக் கொண்டிருந்தனர். ஒரு பழைய காலத்து காமிராவோடு பிரார்த்தனை நடக்கும் இடத்திற்கு சென்று காந்தியை படம் பிடிக்கிற மாதிரி நடித்துக் கொண்டே அவரைச் சுடுவது என திட்டமிட்டனர். அதுவே சந்தேகத்துக்குரியதாக மாறிவிடக் கூடாது என்று அந்த யோசனையை கைவிட்டனர். கறுப்பு அங்கி அணிந்த ஒரு முஸ்லீம் பெண்ணாக பிரார்த்தனை மைதானத்திற்கு செல்லலாம் என நினத்தனர். காந்திக்கு வெகு அருகே செல்ல வாய்ப்பு ஏற்படும் என்பதால் பர்கா ஒன்றை வாங்கினர். கோட்சேவுக்கு அதை அணிந்து கொள்வது ரொம்ப சிரமமாயிருந்தது. இந்த நிலையில் சுடும்போது குறி தவறிவிடுமோ என்று சந்தேகம் வந்தது. அந்த யோசனையும் நிராகரிக்கப்பட்டது. இந்த தடவை குறி தவறிவிடக் கூடாது என்பதில் அப்படியொரு கவனம் இருந்தது கோட்சேவுக்கு. கடைசியாக ஆப்தேதான் அந்த யோசனையை சொன்னான். தொளதொளப்பான நீண்ட அங்கி அணிவது. துப்பாக்கியை மறைத்துக் கொள்வதற்கு அதுவே சிறந்த வழியாகவும் இருக்கும் என முடிவு செய்தார்கள்.
காந்தி இந்தியாவின் துணைப் பிரதமர் வல்லபாய் பட்டேலுடன் பேசிக்கொண்டு இருந்தார். ஜவஹர்லால் நேருவுக்கும், வல்லபாய் பட்டேலுக்கும் நிலவிய கருத்து வேறுபடுகளை சரி செய்ய மகாத்மா முயற்சி செய்தார். மனுவும், அபாவும் பிரார்த்தனைக்குச் செல்ல தயாராகி காந்தியை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
வெளியே முதலில் கோட்சேவும், பிறகு கொஞ்ச நேர இடைவௌதயில் ஆப்தேவும், கார்காரேவும் வந்து முன் வாசல் வழியே நுழைந்து பிரார்த்தனைக் கூட்டத்தில் கலந்து இருந்தார்கள். சரியாக 5 மணிக்கு ஆரம்பிக்கிற பிரார்த்தனை கால தாமதமடைவதில் கோட்சே கலக்கமுற்று இருந்தான். நேரம் நகர்ந்து கொண்டிருந்தது. ஒளி சாய்ந்து இருள் கவ்வ ஆரம்பிக்கிற மணித்துளிகள்.
மணி 5.10 ஆனது. அபா காந்தியின் கைக்கடிகாரத்தை காண்பித்து நேரத்தை நினைவூட்டினாள். மகாத்மாவும், பட்டேலும் எழுந்தார்கள். காந்தி அவரது செருப்புகளை அணிந்து கொண்டு புறப்பட, பட்டேல் விடைபெற்று நடந்தார். காலதாமதமானதால் காந்தி பிரார்த்தனை நடக்கும் இடத்திற்கு சுற்றி செல்லாமல் குறுக்காக நடந்து சென்றார். மனுவும், அபாவும் இருபுறமும் தாங்கி வர, அவரது கடைசி யாத்திரை ஆரம்பமாகியது. மனுவிடமும், அபாவிடமும் வழக்கமான நகைச்சுவையோடு பேசிக்கொண்டே நடந்து வந்தார். புல்வெளிகளைத் தாண்டி பிரார்த்தனை மைதானத்தின் அருகில் வந்தனர். மிக மிக முக்கியமான தருணம் வந்துவிட்டது.
ஒரு கணம்..ஒரு கணம்..அந்த கண்களைப் பார்த்தான். அதே நேரம் விரல்கள் சுண்டிவிட சுண்டிவிட.. சுண்டிவிட..மூன்று தோட்டாக்கள் காந்தியின் நெஞ்சிலும், வயிற்றிலும் பாய்ந்தன.
"ஹே ராம்" கூப்பிய கரங்களோடு காந்தி மண்ணில் சாய்ந்தார். மகாத்மாவின் 78 ஆண்டு கால பிரயாணம் அந்த இடத்தில் முடிவுற்றது. கோட்சே எங்கும் தப்பி ஒடாமல் அங்கேயே நின்றிருக்க காவலாளிகள் அவனைப் பிடித்தனர். நாராயண ஆப்தேவும், விஷ்ணு கார்கரேவும் கூட்டத்தில் கலந்து தப்பி வெளியேறினர்.
'இந்தியாவின் ஒளி நம்மிடமிருந்து போய்விட்டது...' என்று பண்டித ஜவஹர்லால் நேரு குரல் தழுதழுக்க கூறினார். எப்பேர்ப்பட்ட மனிதர். ஒருமுறை காந்தி உண்ணாவிரதம் இருந்தபோது மகாகவி ரவீந்திரநாத் தாகூர் வந்து அசையாமல் இருந்த காந்தியையேப் பார்த்துக் கொண்டிருந்தாராம். பிறகு மெல்ல குனிந்து காந்தியின் நெஞ்சருகே காதை வைத்து கேட்டாராம். கேட்டுக் கொண்டிருக்கும் போது தாகூரின் முகத்தில் கண்ணீர் வழிந்தோடிக் கொண்டிருந்ததாம். அந்த இதயத்தின் துடிப்பு நின்று வெகு நேரமாகி இருந்தது.
காந்தியின் முகத்தில் ஒரு அசாதாரண ஒளியும், புன்னகையும் இருந்தது.
(ஐந்தாவது அத்தியாயம் நாளை)
காந்தி புன்னகைக்கிறார்- மூன்றாம் அத்தியாயம்

திகம்பர பாட்கே அதிகம் படித்திருக்கவில்லை. வயிற்றுப் பிழைப்புக்காக பூனா சென்று அங்கு கிடைத்த வேலைகளில் ஈடுபட்டு நாட்களை கழித்தான். ஒரு தொண்டு நிறுவனத்தில் சேர்ந்து வீடு வீடாக சென்று நிதி சேகரித்தான். அந்த நிதியில் நாலில் ஒரு பங்கு அவனுக்கு கூலியாக கொடுக்கப்பட்டது. அந்தப் பணத்தில் கத்திகள், இன்னும் சில ஆயுதங்கள் வாங்கி விற்க ஆரம்பித்தான். அது நல்ல வருமானமாக மாறியது. அந்த நாட்களில், கலவரம் மிகுந்த சமயமாய் இருந்ததால் அவனது தொழிலுக்கு கிராக்கி இருந்தது. முஸ்லீம்களுக்கு எதிரான தாக்குதல் நடத்த ஆயுதங்கள் வேகமாய் விற்பனையாயின. இப்படியாக அவனுக்கு இந்து மகாசபையுடன் தொடர்பு ஏற்பட்டது. இந்து மகாசபையின் மாநாடுகளில் புத்தகங்கள் கடை விரித்து, கூடவே ஆயுதங்களையும் விற்று வந்தான். சவார்க்கரின் வீட்டில் பாட்கே கோட்சேவையும், ஆப்தேவையும் சந்தித்தான்.
விஷ்ணு கார்காரேவின் இளவயது மிக துன்பமானது. அவன் பெற்றோர் அவனை வளர்க்க முடியாமல் ஒரு அனாதை விடுதியில் சேர்த்து விட்டனர். அங்கிருந்து தப்பி சின்ன சின்ன ஓட்டல்களிலும், விடுதிகளிலும் வேலை பார்த்து வந்தான். பிறகு அவனே சொந்தமாக அகமது நகரில் ஒரு சின்ன உணவு விடுதியும் நடத்த ஆரம்பித்தான். இந்து மகாசபையில் உறுப்பினரானான். ஆப்தேவுடன் அங்கு பழக்கம் ஏற்பட்டது. நவகாளியில் கலவரம் ஏற்பட்டபோது அங்கு பாதிக்கப்பட்ட இந்துக்களுக்கு உதவ சென்றிருந்தான். அங்கு நடந்தவைகளை பார்த்து கொதித்துப் போனான்.
மதன்லால் ஒரு பஞ்சாப் இந்து குடும்பத்தில் இருந்து வந்தவன். பூனாவில் இராணுவத்தில் சேர்ந்து பயிற்சி எடுத்து சொந்த ஊரான பாக்பத்தானுக்கு திரும்புகிறபோது அது பாகிஸ்தானுக்கு சொந்தமாகி இருந்தது. அவனது குடும்பத்தினர் முஸ்லீம்களின் கொடுமைக்கு ஆளாகி இருந்தனர். விரக்தியில் பூனா திரும்பியபோது கோட்சேவுடனும், நாராயண ஆப்தேவுடனும் பழக்கம் ஏற்பட்டிருந்தது. வெடிகள் செய்வதில் நிபுணன் என்பதால் அவனை உபயோகப்படுத்தினர்.
நாராயண ஆப்தே மகராஷ்டிராவில் அகமதுநகரில் ஒரு நடுத்தர பிராமண குடும்பத்தை சேர்ந்தவன். பி.எஸ்.ஸி படித்து முடித்து ஒரு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தான். அகமது நகரில் இந்து ராஷ்டிரா தளம் என்ற அமைப்பில் சேர்ந்தான். அப்போதுதான் கோட்சேவுடனான பழக்கம் ஏற்பட்டது. பிறகு இந்து ராஷ்டிரா பத்திரிக்கையின் நிர்வாகப் பொறுப்பிலும் இருந்தான்.அமைதியான முறையில் அரசியலில் எதையும் சாதிக்க முடியாது என்பது கோட்சேவிடமிருந்து ஆப்தே கற்றுக்கொண்ட பாடம்.
கோபால் கோட்சே, நாதுராம் கோட்சேவின் இளைய தம்பி. மெட்ரிக்குலேசன் படித்து முடித்த பிறகு அவனும் அண்ணன் வேலை பார்த்த அதே தையல் நிறுவனத்தில் சேர்ந்தான். இந்து மகாசபையில் உறுப்பினராகியிருந்தான். அப்போது இராணுவத்தில் ஸ்டோ ர் கீப்பர் வேலை கிடைத்தது. சவார்க்கரின் பேச்சில் மிகுந்த ஈடுபாடு கொண்டவன்.
சங்கர் கிஸ்டய்யா ஒரு கிராமத்தில் மர வேலை பார்க்கும் தச்சனின் மகனாக பிறந்தான். கல்வி அறிவு ஒன்றும் கிடையாது. பூனா சென்று அங்கு ஒரு கடையில் வேலை பார்த்து வந்தான். அங்கு பாட்கேவுடன் பழக்கம் ஏற்பட்டது. பாட்கே அவனை வீட்டு வேலைக்கு அமர்த்திக் கொண்டான். கூடவே பாட்கேவின் நிழல் தொழிலுக்கு நம்பத் தகுந்த உதவியாளனாகவும் இருந்தான்.
ஜனவரி 20 ம் தேதி பிரார்த்தனை நடந்து கொண்டிருக்கும் போது பின்பக்கம் உள்ள செங்கற்சுவரில் குண்டு வெடிக்க ஏற்பாடு செய்வது என்றும், பிரார்த்தனை கூட்டம் அங்குமிங்குமாய் சிதறும்போது திகம்பர பாட்கே காந்திக்கு மிக அருகே சென்று சுடுவது என்றும் திட்டம் தீட்டியிருந்தனர் .
'ன்'னும் 'ர்'ரும்

மூன்று வருடங்களுக்கு முன்பு பத்திரிக்கைகளிலும், தொலைக் காட்சிகளிலும் பெரும் அதிசயமாய் அந்தச் செய்தி கொஞ்சகாலம் தொடர்ந்து பேசப்பட்டது நினைவிலிருக்கலாம். அவனுக்கு எட்டு வயதோ என்னவோதான். சிறுவன். மழலை குரலில் பேசினான். தமிழ் சினிமாக்களில் இளம் முருகக் கடவுள் வேடத்தில் நடிப்பதற்கு வாகான தோற்றம். பத்திரிக்கைகள் அவனைத்தான் 'வந்தார்', 'பேசினார்', 'காஞ்சி சங்கராச்சாரியை சந்தித்தார்', 'பெயரை மாற்றிக் கொண்டார்' என்று 'ர்' விகுதி போட்டு மரியாதையோடு அழைத்து வந்தன. அந்த சின்னப் பையனின் காலடியில் வார்த்தைகள் ஆசீர்வாதம் வாங்க விழுந்தன. சிறியவர்களையும் மரியாதையோடு அழைக்கும் கலாச்சாரப் பெருமை கொண்ட மண் இது என்று நினைக்கத் தோன்றவில்லை. 'குட்டிச்சாமி வந்தான்', 'குட்டிச்சாமி தனது பேரை மாற்றிக் கொண்டான்' என்று தெளிவாக எழுதலாம். வானம் ஒன்றும் இடிந்து விழுந்து விடாது.
அப்புறம் செத்துப் போனார் சந்தனக் கடத்தல் வீரப்பன். காடுகளில் வாழ்ந்தவர். வசதியானவர்களிடம் கொள்ளையடித்து ஏழைகளிடம் கொடுத்தவர் என்றுகூட போகிற போக்கில் ஒரு தொலைக்காட்சி செய்தி வாசித்தது. கொள்ளை, கொலை என பல குற்றங்களுக்காக காவல்துறையால் தேடப்பட்டு வந்த இருபது வருடப் புதிர். எப்போதும் இந்தப் பத்திரிக்கைகள் அந்த வயதான மனிதரை 'அவன்', 'இவன்' என ஏக வசனத்தில்தான் எழுதிக்கொண்டு வந்தன. இப்படி வீரப்பனை 'அவர்' என்று சொல்வதே எதோ ஒரு பாவ காரியம் போல தோன்றும். அந்த அளவுக்கு இங்கே இரண்டு எழுத்துக்களுக்கு வலிமை இருக்கின்றன.
விளக்கங்கள் இதற்கு சொல்லப்படலாம். வயது என்பது முக்கியமல்ல, ஒருவர் ஆற்றும் காரியங்களே சமூகத்தில் இந்த மரியாதையை உருவாக்குகின்றன என்றும் ஒரு கொள்ளைக்காரனுக்கு இந்த சமூகத்தில் இடம் கிடையாது என்றும் வாதம் செய்யலாம். ஒப்புக்கொள்வோம் ஒரு கேள்வியோடு. குட்டிச்சாமி என்ன மகத்தான காரியம் ஆற்றிவிட்டார்? அவனைவிட வயதில் குறைந்த இரண்டு பெண் குழந்தைகள் கம்பராமாயணத்தையும், திருக்குறளையும் அப்படியே சொல்லுகிறார்களாம். அந்த ஞானக் குழந்தைகளுக்கு கொடுக்கப்படாத மரியாதை, 'வேதங்களை' உச்சரிப்பதால் அவனுக்கு மட்டும் தரப்படுகின்றன. குட்டிச்சாமியை விட சின்ன வயதில் ஒருவர் வாகன நெரிசல் மிகுந்த நகர வீதிகளில் கார் அனாயாசமாக ஓட்டுகிறாராம். அதிசயக்கத்தக்க திறமை இருந்தும் வயது குறைவு என்று அவருக்கு லைசென்சு கொடுக்கப்படவில்லையாம். இந்த சின்னப் பையனுக்கோ மிக எளிதாக 'சாமியார்' லைசென்சு கொடுக்கப்பட்டது.
சதாம் உசேன் ஈராக்கின் அதிபராக இருக்கும் வரை 'அவராக' இருந்தார். அமெரிக்காவால் வீழ்த்தப்பட்டதும் ஒரே நாளில் நமது பத்திரிக்கைகளுக்கு அவனாகிப் போனார். அவர் செய்த காரியம் அமெரிக்காவை எதிர்த்ததுதான். 'பிடிபட்டான்' என்று ஆரவாரத்தோடு தலைப்புச் செய்திகளின் பெரிய எழுத்துக்களில் சின்ன மனிதனாகிப் போனார். சதாம் உசேன் வீழ்ந்ததும், அவரது ஆடம்பர பங்களாக்களை, குளியலறையை, உல்லாசத்தை எல்லாம் பக்கம் பக்கமாக படங்களோடு செய்திகள் போட்டுக் காட்டியது அந்த 'ன்'னுக்குக்கான கருத்தை உருவாக்கத்தான். அவர் செய்த கொலைகள் பற்றி மர்மத் தொடர்கள் போல எழுதியது அதற்கான அர்த்தத்தை உருவாக்கத்தான். முதாலாளித்துவ அமைப்பில், அதன் சர்வாதிகார பலத்தில் இருக்கும் யார்தான் இங்கே மக்களை கொடுமைப்படுத்தாமல் இருக்கிறார்கள். அளவு கூடலாம், குறையலாம். இங்கேயும் ஒரு அரசியல்வாதி தேர்தலில் தோற்றவுடன் அதுபோலவெல்லாம் காண்பிக்கப்பட்டது. ஆனால் அவரால் அவராகவே தொடர்ந்து இருக்க முடிந்தது. எவ்வளவோ உயிர்ச் சேதங்களுக்கும், பொருட்சேதங்களுக்கும் காரணமாகி ஈராக் என்னும் ஒரு நாட்டையே இப்போது சிதைத்து போட்டிருக்கும் புஷ், அவன் என்று அழைக்கப்படவில்லை. வீரப்பனைவிட ஆயிரமாயிரம் மடங்கு கொடிய மனிதன் அவன்.
இன்னொரு உண்மை மிகக் கொடுமையானது. தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த மனிதர்கள் எவ்வளவு வயதானவர்களாயிருந்தாலும் இன்னும் கிராமங்களில் 'வா', 'போ' என்றுதான் அழைக்கப்படுகின்றனர். அவர்களின் மகனைவிட, மகளைவிட வயது குறைந்தவர்களால் 'அவன்' , 'அவள்' என மிக இயல்பாக குறிப்பிடப்படுகிறார்கள். இந்த 'ன்' விகுதி அவர்களது பிறப்போடு ஒட்டிப் பிறந்ததாக இருக்கிறது. காலம் காலமாக கூனிப்போக வைக்கும் பாரமாக அவர்கள் மீது உட்கார்ந்து கொண்டே இருக்கிறது. முற்போக்கு எழுத்தாளர்கள் சிலர் கூட தங்கள் கதைகளில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவர்களை குறிப்பிடும் போது 'அவன்' என்று ஒருமையில் எழுதியிருப்பதாய் ஒருதடவை பேராசிரியர் மாடசாமி விமர்சனத்தை முன்வைத்திருக்கிறார். அந்த அளவுக்கு அறிவினைத் தாண்டிய ஆழமான செல்வாக்கு இந்த எழுத்துகளுக்குள் இருப்பதாகப் படுகிறது. 'வாழ்க்கை பழக்கத்தின் தடத்தில் ஊறிக் கிடக்கிறது. அதை அறிவின் தளத்திற்கு மாற்ற வேண்டும்' என்று எழுத்தாளர் சுந்தரராமசாமி பொதுவாகச் சொன்னது இந்த விஷயத்திற்கு மிகப் பொருத்தமாக இருக்கிறது.
தாழ்த்தப்பட்ட மக்கள் எந்த மோசமான காரியத்தை செய்ததற்காக இப்படி மரியாதையில்லாமல் அழைக்கப்படுகிறார்கள் என்று கேள்வி எழ மாட்டேன்கிறது. எல்லாவற்றுக்கும் எதாவது ஒரு காரணம் சொல்லும் சமூகம் இதற்கான பதிலை ஆழ்ந்த மௌனத்தோடு மட்டுமே எதிர்கொள்ளும். ஆனால் 'ர்' போட்டு மட்டும் அழைக்காது. அப்படி ஒரு இறுகிய மனம் இருக்கிறது. 'இவர்களுக்கு இந்த சமூகத்தில் நிறைய வாய்ப்புகள் உருவாக்கப்பட்டு வருகின்றன' என்று அங்கலாய்ப்பவர்களிடம் ஒரே ஒரு கேள்விதான் இப்போது. குட்டிச்சாமி இங்கே ஒரே நாளில் 'அவராக' மாறிவிடுகிறான். இந்த மனிதர்கள் ஒருநாளும் அவ'ர்'களாக ஏன் மாற முடியவில்லை?
விநோதமாக இருக்கிறது. அரவமில்லாமல் தமிழின் இந்த விகுதி எழுத்துக்கள் ஒருவரைப் பற்றிய கருத்துக்கள் புனையப்படுவதற்கும், கற்பிக்கப்படுவதற்கும் காரணமாகி விடுகின்றன. அவைகளால் பிம்பங்களை உருவாக்கவும், உடைக்கவும் முடிகிறது. தலையாட்டும் மனிதக் கூட்டம் இந்த எழுத்துக்கள் தரும் அர்த்தங்களுக்குள் செல்லாமல் ஒருவித பிரக்ஞையற்றத் தன்மையோடு மிக எளிதாக ஆட்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த எழுத்துக்களை உச்சரிப்பவர்களாக மட்டுமே மக்கள் இருக்கிறார்கள். உருவாக்குபவர்கள் வேறு யாரோவாக இருக்கிறார்கள். அதை புரிந்து கொள்ள முடியாதபடி, எப்போது உருவானது என்று அறியமுடியாதபடி, சமூகத்தில் 'தானாகவே' உருவாகிறது போன்று ஒரு தோற்றம் அவைகளுக்கு இருக்கிறது. அதன் மூலத்தை புரிந்து கொண்டால் சமூகத்தின் லட்சணங்கள் தெரிய வரும். ஒவ்வொரு சமூகத்தையும் ஒரு கருத்து ஆண்டு வருகிறது. அந்த கருத்து யாரை அங்கீகரிக்கிறதோ அவர்களுக்கு இந்த 'ர்' விகுதியைச் சேர்த்துக் கொள்ளும். வயது, காரியங்கள் என்பதெல்லாம் சும்மா.
இந்தியாவின் தந்தை என்று அழைக்கப்படுகிற மகாத்மாவை பிரிட்டிஷ் பத்திரிக்கைகள் அரையாடை பக்கிரி என்றுதான் அழைத்தன. அது எதற்கு? சுதந்திரத்திற்கு முன்பு பகத்சிங்கை ஆனந்த விகடன் பத்திரிக்கை முழுமூடச் சிகாமணி என்று ஏளனம்தான் செய்திருந்தது. இன்று மகாத்மா உலகமெங்கும் 'அவராகி' விட்டார். பகத்சிங் இந்தியாவிற்குள் 'அவராகி' விட்டார். ஆனால் ஒருபோதும் 'கருப்பசாமி'யும், 'அம்மாசி'யும் 'அவர்களாக'வில்லை. சமூகம் எங்கே மாறிக்கொண்டு இருக்கிறது, எங்கே மாறாமல் இருக்கிறது என்பதற்கான அடையாளம்தான் இந்த 'ன்'னும், 'ர்'ரும்.
இந்த எழுத்துக்கள் எங்கு வந்தாலும் அவைகளை எச்சரிக்கையாகக் கடந்து செல்ல வேண்டும். அங்கே குழிகள் தோண்டி வைக்கப்பட்டு இருக்கின்றன. அவைகளில் குட்டிச்சாத்தானின் வேதங்கள் ஒலித்துக் கொண்டிருக்கின்றன.
முன்பக்கம்
காந்தி புன்னகைக்கிறார்- இரண்டாம் அத்தியாயம்

நாதுராம் கோட்சே!
பூனா அருகில் ஒரு கிராமத்தில் 1908ம் வருடம் ஒரு இந்து சனாதன பிராமண குடும்பத்தில் போஸ்ட் மாஸ்டருக்கு இரண்டாவது மகனாக பிறந்தான். கூடப்பிறந்தவர்கள் ஆறு சகோதரர்களும், இரண்டு சகோதரிகளும். அவன் பிறந்த காலமும் இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் பிரிட்டிஷ் அரசு மத ரீதியாக மக்களை பிரிப்பதற்கு ஏற்பாடு செய்த காலமும் ஒன்றாகவே இருந்தது.
காங்கிரஸ் தலைமையில் பெருகி வரும் மக்களின் ஒற்றுமை மிக்க போராட்டங்களை நீர்த்துப் போகச் செய்வதற்கு பிரிட்டிஷ் அரசு மிண்டோ மார்லி சீர்திருத்தங்களை கொண்டு வந்திருந்தது. அதன்படி குறைந்த அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளும், நிலப்பிரபுக்களும் , பிரிட்டிஷ் வியாபாரிகளும் கொண்ட மாகாண சட்டசபைகளை அறிமுகப்படுத்தினார்கள். தங்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கிற உரிமை கிடைப்பதனால் மக்களின் ஆத்திரங்கள் உதிர்ந்துவிடும் என்று ஆங்கிலேயர்கள் கணக்குப் போட்டனர். இதில் மோசமான அம்சம் மதரீதியில் பிரதிநிதித்துவம் கொடுப்பதற்கும்
வழிசெய்யப்பட்டிருந்ததுதான். மூஸ்லீம் லீக் ஆரம்பிப்பதற்கு இதுவே காரணமாயிற்று. இந்துமகாசபையும் தொடர்ந்து ஆர்.எஸ்.எஸூம் ஆரம்பிக்கப்பட்டது இதற்குப் பிறகுதான்.
அவரது வாழ்வு என்பது ஒளி நிறைந்தது. அவர் எடுத்து வைத்த ஒவ்வொரு அடியையும் உலகமே அறிந்திருந்தது.
மகாத்மா காந்தி!
இந்தப் பெயர் இந்திய வாழ்க்கையின் ஒரு சாத்வீகமான, அதுவாகவே நிறைந்திருக்கிற உணர்வாக இருக்கிறது. படபடக்காமல் நின்றிருக்கும் அகல்விளக்கின் சுடர் அமைதியை ஏற்படுத்துகிறது. ஒரு எளிய மனிதன் எல்லா வீடுகளுக்குள்ளும் இயல்பாக பிரவேசித்து விடுவதைப் போல அவரது பயணம் இருந்தது.
தென்னாப்பிரிக்கா பயணம் முடித்து இந்திய அரசியலுக்குள் அவரது பிரவேசம் அப்படித்தான் நிகழ்ந்தது. அப்போது திலகர் தலைமையில் ஹோம் ரூல் இயக்கம் நடந்து கொண்டிருந்தது. மகாத்மா இந்தியா முழுவதும் பயணம் செய்து தேசத்தின் ஆன்மாவை தேடிக்கொண்டு இருந்தார். நீண்ட நெடிய வரலாறு கொண்ட இந்தியாவின் மனித சமூகத்தின் துயரங்கள் புகைவண்டியின் ஒசையோடு அவருள் ஓடிக் கொண்டிருந்தது. மலைகளும், ஆறுகளும், பசும்புல்வெளிகளும், வயல்களும், காடுகளும், வறண்ட நிலங்களும், அங்கு வசித்த மக்களும் அவரது உள்மனத்தோடு பேசிக்கொண்டு இருந்தார்கள்.
இந்திய விடுதலையின் கடைசி தருணங்களில் மதவெறியின் விதைகள் விதைக்கப்பட்டன. 400 ஆண்டு காலத்திற்கும் மேலாக நீடித்த வீரஞ்செறிந்த போராட்டத்தில் கடைசி 30 வருடங்களே இந்த சதிவலைகள் விரிக்கப்பட்டன. 1857ல் முதல் இந்திய சுதந்திரப் போரில் எந்த பேதமுமில்லாமல் ஒன்றுபட்டிருந்த இந்துக்களும் முஸ்லீம்களும் மெல்ல மெல்ல ஒருவர் மீது ஒருவர் வெறுப்பை உணர பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டன. 1906ல் வங்காளத்தை இரண்டு மாநிலமாக பிரிப்பதற்கே ஒத்துக் கொள்ளாமல் ஒன்றாக போராடிய இந்துக்களும், முஸ்லீம்களும் தேசத்தையே இரண்டாக பிரிப்பதற்கு எதிர்ப்பின்றி போனது இயல்பானது அல்ல.
இந்து ராஷ்டிரம் என்றும், 1400 ஆண்டுகளாக நமது மேன்மைகளை அந்நியப் படையெடுப்புகளால் இழந்துவிட்டோம் என்றும் பிரச்சாரம் செய்யப்பட்டன. உண்மையில் ஆங்கில வரலாற்றாசிரியர் ஜேம்ஸ் மில் என்பவர் இந்திய வரலாற்றை, இந்துக்களின் காலம், மூஸ்லீம்களின் காலம், பிரிட்டிஷ் காலம் என்று பிரித்ததிலிருந்து எடுத்துக் கொண்ட சங்கதியே 'இந்து' என்பது. சிந்து நதிக்கரையில் வேத காலத்திலிருந்து தொடர்ந்து வந்த வர்ணாசிரமச் சித்தாந்தமான- பிரம்மாவின் தலையிலிருந்து பிறந்தவன் பிராமணன், தோள்களிலிருந்து பிறந்தவன் ஷத்திரியன், தொடையிலிருந்து பிறந்தவன் வைசியன், காலிலிருந்து பிறந்தவன் சூத்திரன் என்ற வர்ணப் பிரிவுகளை-பாதுகாக்கிற நோக்கில்தான் நாம் நமது புனிதத் தன்மையை இழந்து விட்டோம் என்று அங்கலாய்த்துக கொண்டு இந்த அமைப்புகள் மக்களின் உணர்ச்சிகளை தூண்டிவிடும் வேலைகளைச் செய்தன. மகாத்மா தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஆதரவான சமூக போராட்டங்களை நடத்தியது மட்டுமில்லாமல் காங்கிரசும் அறைகூவல் விடுத்திருந்தது இந்த சமயத்தில்தான் என்பதை கால அறிவோடு பார்த்தால் உண்மை புரியும்.
இந்த சூழல் தந்த எதிர்ச்சிந்தனைகளால் வளர்ந்தவன் தான் நாதுராம் வினாயக் கோட்சே. மெட்ரிக்குலேசன் கூட படிக்காமல் ஒரு துணிக்கடை ஆரம்பித்து நடத்தினான். அது லாபம் ஒன்றும் தராததால் தையல் நிறுவனத்தில் சேர்ந்தான்.துடிப்புமிக்க தனது இருபத்திரண்டாவது வயதில் ஆர்.எஸ்.எஸ்ஸில் சேர்ந்து அதன் கொள்கைகளை உணர்ச்சி மேலீட பிரச்சாரம் செய்தான்.
திலகரின் மறைவுக்குப் பிறகு மகாத்மா தலைமையில் காங்கிரஸ் செயல்பட்டது. ரௌலட் சட்டம், ஜாலியன் வாலாபாக் படுகொலை, பகத்சிங்கின் வீரத்தியாகம், வட்ட மேஜை மகாநாடுகள், ஒத்துழையாமை இயக்கம், இரண்டாம் உலகப் போர், வெள்ளையனே வெளியேறு இயக்கம் என்று சரித்திரத்தின் பக்கங்கள் எழுச்சியோடு நகர்ந்த காலங்கள் இவை. தீவிரவாத இயக்கங்களும், தொழிலாளர் இயக்கங்களும் தோன்றி தேசப் போராட்டத்தில் பங்கு கொண்டது இந்த சமயத்தில்தான்.
இந்தியா என்றும், அகண்ட பாரதம் என்றும், 'பாரத மாதாகீ ஜெய்' என்றும் அடி வயிற்றிலிருந்து கத்தும் இவர்கள் தேச விடுதலைப் போராட்டத்தில் எந்த பங்கேற்பும் இல்லாமல் வேடிக்கை பார்த்தார்கள் என்பது அருவருப்பான உண்மை. ஒத்துழையாமை இயக்கத்தில் மூஸ்லீம்கள் அதிகமாக பங்கு பெற்றதால் "யவனப் பாம்புகள் ஒத்துழையாமை இயக்கத்தின் மூலம் பாலருந்தி, விஷம் கக்கும் சத்தங்கள் எழுப்பி தேசத்தில் கலகங்களை உருவாக்குகின்றன" என்று ஹெக்டேவார் சொன்னார். 1929 ஜனவரி 26ல் சுதந்திர தின உறுதி எடுத்துக் கொண்டு மகாத்மாவோடு 90000பேர் நாடு முழுவதும் கைது ஆகினர். ஆர்.எஸ்.எஸ் அப்போதும் மௌனம் சாதித்தது. 1940ல் ஹெக்டவாருக்குப் பிறகு பொதுச்செயலாளரான கோல்வார்கர் நாடு முழுவதும் ஒரு லட்சம் ஆர்.எஸ்.எஸ் இருப்பதாக பெருமையோடு சொன்னார். 1940ல் நடந்த சட்ட மறுப்பு இயக்கத்தில் 20000 பேர் கைதாகினர். அதில் குறிப்பிடும்படியான ஒரு ஆர்.எஸ்.எஸ் தலைவர் கூட இல்லாதது தற்செயல் அல்ல. 1942ல் நடந்த சட்ட மறுப்பு இயக்கத்தில் 1060 பேர் நாடு முழுவதும் பிரிட்டிஷ் போலீஸின் கொடுமைக்கும், சித்திரவதைக்கும் ஆளாகி இறந்து தியாகிகளானார்கள். அவர்களில் ஒரு ஆர்.எஸ்.எஸ் ஊழியரும் இல்லாதது அவர்களது புரையோடிய தேசபக்திக்கு காலத்தின் வாக்குமூலம். கோட்சே என்னும் இந்துத்வா அமைப்புகளின் வீர புருஷன், ஒப்பற்ற தியாகி எங்கே போயிருந்தார் அப்போது என்று தெரியவில்லை. ஆர்.எஸ்.எஸ்ஸின் குருவாகிய சவார்க்கர் வெளிப்படையாக அரசு அதிகாரத்தில் இருக்கும் இந்துக்கள் பிரிட்டிஷ் அரசோடு ஒத்துழைக்க வேண்டும் என அறைகூவல் விடுத்தார்.
இதற்கு பல காரணங்கள் இருந்த போதிலும் மிக முக்கியமான- மனோரீதியான ஒரு காரணம் இருந்தது. ஒரு போராட்டத்தில் எல்லோரும் இறங்குகிற போது ஜாதி, மதம், மொழி போன்ற அத்தனை பாகுபாடுகளையும் மறந்து ஒன்றாகி விடுவர். கடந்த காலத்தில் அதுதான் நிகழ்ந்திருந்தது. திரும்பவும் அது நிகழ ஆர்.எஸ்.எஸ்ஸும், இந்து மகா சபையும் விரும்பவில்லை.
முஸ்லீம் லீகாவது இந்த தேசீய போராட்டங்களில் ஓரளவுக்கு பங்குபெற்றுக் கொண்டு பிரிவினை கோஷத்தை முன் வைத்தது. ஆனால் இந்து மகா சபையும். ஆர்.எஸ்.எஸ்ஸூம் தேசவிடுதலை குறித்து அக்கறையேதுமின்றி- பிரிட்டிஷ் அரசுக்கு ஆதரவாகச் செயல்பட்டுக் கொண்டு பிரிவினை கோஷத்தை உரக்க எழுப்பிக் கொண்டிருந்தது.1929ல் இந்து மகாசபையை சார்ந்த பாய்பரமானந்தா "இந்துக்களும்,முஸ்லீம்களும் சேர்ந்து ஓட்டளித்தால் அவர்களது அரசியல் வேறுபாடுகள் மதம் சார்ந்ததாக இருக்கும். இது இரண்டு சமுகத்திற்கும் நல்லதல்ல; இன்னும் சொல்லப்போனால் இந்துக்களுக்கே அதிக பாதிப்பு உண்டாகும்" என்று சொன்னார்.(Hindu national movement, lahore, 1929) 1938ல் கோல்வார்கர் எழுதி வெளியிட்ட- we our nationhood, defined- என்னும் புத்தகத்தில் இரண்டு தேசங்கள் வேண்டும் என்கிற விஷயம் முன்வைக்கப்பட்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து 1940ல் லாகூரில் நடந்த முஸ்லீம் லீக் மாநாட்டில் "இரண்டு தேசங்கள் வேண்டும்" என்று முஸ்லீம் லீகும் தீர்மானம் நிறைவேற்றியது.
அடிப்படையில் ஒன்றையொன்று பரம எதிரிகளாக கருதினாலும் தேசப் பிரிவினையில் இந்த இரண்டு மதவாத அமைப்புகளும் ஒன்றுபட்டு நின்றன என்பது ஒரு விசித்திரமான இயல்பு. ஆகஸ்ட் 15, 1943ல் சவார்க்கர் "கடந்த 30 ஆண்டுகளாக பூகோள ரீதியிலான ஒற்றுமைக்கு நாம் பழக்கப்பட்டிருக்கிறோம். காங்கிரஸ் இதையே பலமாக ஆதரிக்கிறது. ஒவ்வொரு சலுகையாக தங்களுக்கு கேட்டு அனுபவித்து வரும் முஸ்லீம் சிறுபான்மையினர் திடீரென தனி நாடு வேண்டுமென்று கேட்கின்றனர். ஜின்னாவுடன் எனக்கு இதில் எந்த பேதமும் இல்லை. இந்துக்களாகிய நாங்கள் ஒரு தேசமாகவே இருக்கிறோம். இந்துக்களும் முஸ்லீம்களும் இரண்டு தேசங்கள் என்பது வரலாற்று உண்மை' என்று சொன்னார். பிரித்தாளும் சூழ்ச்சி கொண்ட பிரிட்டிஷ்காரனுக்கு ஆர்.எஸ்.எஸ் செய்த அரிய சேவைகளில் ஒன்று இது. மகாத்மா பிரிவினைக்கு ஒத்துக் கொள்ளவேயில்லை. "இந்தப் பிரச்சினை பத்து நிமிடத்தில் தீர்ந்துவிடும். காந்தி மட்டும் சம்மதிக்க வேண்டும்" என்றார் மவுண்ட்பேட்டன்.
காந்தியோ " என்னை வேண்டுமானால் இரண்டாக வெட்டிப் போடுங்கள். இந்த தேசத்தை இரண்டாக கூறு போடாதீர்கள்" என்று கோபமாக சொல்லி விட்டார். மன்னன் சாலமன் சபையில் தனது குழந்தையை வெட்டுவதற்கு ஒப்புக்கொள்ளாமல் கதறி அழுத உண்மையான தாய் உணர்வின் வெளிப்பாடாக இருந்தது.
இந்த இடைப்பட்ட காலத்தில் கோட்சே ஆர்.எஸ்.எஸ்ஸிலிருந்து விலகி இந்து மகாசபா என்னும் ஆர்.எஸ்.எஸ்ஸோடு தொடர்புடைய இன்னொரு இந்துத்துவா அமைப்பில் சேர்ந்ததாக சொல்லப்படுகிறது. இந்துமகாசபையின் தலைவராயிருந்த வீரசவார்க்கரோடு நெருங்கிய தொடர்பு கொண்டவனாகிறான். மிகச் சரியாக இந்த நேரத்தில்தான் 'இந்து ராஷ்டிரா' என்று ஒரு பத்திரிக்கை பூனாவில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு கோட்சே அதன் ஆசிரியராக பணிபுரிகிறான். இந்த பத்திரிக்கைக்கு ரூ.15000/- முன் தொகையாக நிதி அளித்தது வீரசவார்க்கர்.
மாறி மாறி பிரச்சாரம் செய்யப்பட்டது. "முஸ்லீம்களை எப்படி இந்தியர்கள் என ஏற்றுக் கொள்ள முடியும்?" "முஸ்லீம்கள் இந்த நாட்டில் இந்துக்களுக்கு அடங்கிப் போக வேண்டும். அவர்களுக்கென்று எந்த சலுகையும் அளிக்கக் கூடாது. பிரஜா உரிமை கூட அளிக்கக் கூடாது" என ஒருபுறமும் "சுதந்திர இந்தியாவில் மூஸ்லீம்களாகிய நமக்கு வேலைவாய்ப்பு, அதிகாரத்தில் இடம் இருக்காது" "அவர்கள் நம்மையும் தீண்டத்தகாதவர்களாகவே நடத்துகிறார்கள்" என இன்னொரு புறமும் ஆதிக்க வெறியும், அச்ச உணர்வும் மக்கள் மனதில் விதைக்கப்பட்டன.
நவகாளியில் மதக் கலவரங்கள் வெடித்து, பீகார்,பம்பாய், பஞ்சாப் என்று பரவ ஆரம்பித்தன. பிரிவினை இல்லாமல் நாட்டின் சுதந்திரம் சாத்தியமில்லை என்ற நிலைமைக்கு காங்கிரஸ் வந்தது. காந்தி வேறு வழியில்லாமல், தார்மீகத் தோல்வியோடு அந்த பிரிவினைக்கு ஒத்துக் கொண்டார். இடைக்கால அரசாங்கம் ஏற்படுத்தப்பட்டு சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்பை உருவாக்கும் பணி நடந்து கொண்டிருக்க வெட்டுண்ட மனித உடல்களும், எரிந்த வீடுகளின் புகையுமாக மதவெறி நாட்டை ரணகளமாக்கிக் கொண்டிருந்தது.
நடுவில் கோடு கிழித்து இரண்டு தேசமாக்கிவிட்டால் இந்த பகைமையின் வேகம் தணிந்துவிடும் என்ற நம்பிக்கையும் உடைந்து போனது. காந்தி காற்றில் படபடக்கும் சுடரை அணையாமல் பாதுகாக்கும் முயற்சியாக நவகாளியில் யாத்திரை செய்தார். அவர் சென்ற இடங்களில் அமைதி திரும்பிக் கொண்டிருந்தது.
ஆகஸ்ட் 15 என்னும் அந்த விடுதலை நாள் அதிர்ச்சியோடும், இரத்தக்கறையோடும் வந்தது. பாகிஸ்தான் ஒரு நாடாகவும், இந்தியா ஒரு நாடாகவும் பிரிந்தன. காந்தி கல்கத்தாவின் ஒரு ஏழை முஸ்லீம் வீட்டில் ராட்டையில் நூல் நூற்றுக் கொண்டிருந்தார். அவரது நம்பிக்கைகள் காயப்படுத்தப் பட்டிருந்தன. அவர் கனவு கண்ட தேசம், அவர் நேசித்த மக்கள் இன்று வேறேதுவோ ஆகியிருந்தார்கள். சகிப்புத்தன்மையையும், அன்பையும் உலகிற்கு தந்து உலகத்தின் ஒளியாக திகழ்வார்கள் என்பது இப்போதைக்கு இல்லை என்பதை புரிந்து கொண்ட தவிப்புதான் அது. ஆனால் நம்பிக்கையோடு அவரது ராட்டை சுழன்று கொண்டிருந்தது.
'புதிய அரசு அமைக்க பிரிட்டிஷ் காங்கிரஸை மட்டும் அழைக்காது. தங்களையும் சேர்த்துக் கொண்டு ஒரு தேசீய அரசு அமைக்கப்படும' என்று இந்து மகாசபையும், ஆர்.எஸ்.எஸ்ஸூம் உறுதியாக நம்பினர். ஆனால் காங்கிரஸே புதிய அரசை அமைத்தது. சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக ஜவஹர்லால் நேரு பொறுப்பேற்கிறார். இது குறித்து சவார்க்கர் முதற்கொண்டு அனைவருக்கும் ஏமாற்றமும், கோபமும் இருந்தது. இந்துக்கள் அவர்களது வீடுகளில் ஆகஸ்ட் 15ம் தேதி மூவர்ண தேசியக் கொடியை ஏற்ற வேண்டாம் எனவும், பகவா கொடியை ஏற்றி வைக்க வேண்டுமென இந்து மகாசபை அறைகூவல் விடுத்தது. கோட்சே துப்பாக்கியோடு காத்திருக்கும் இந்த நாளுக்கான இருட்டு இந்தப் புள்ளியிலிருந்துதான் உருவெடுக்கிறது.
இங்கிருந்து பாகிஸ்தானுக்கு சென்ற முஸ்லீம்கள் போகும் வழியில் கடுமையாக தாக்கப்பட்டனர். அங்கிருந்து இந்தியாவுக்கு வந்த இந்துக்கள் அதுபோலவே ஈவிரக்கமில்லாமல் தாக்கப்பட்டனர். மதவெறி இரண்டு பக்கமும் சர்வ நாசத்தை ஏற்படுத்தியிருந்தது. பாகிஸ்தானுக்கு செல்ல முடியாத முஸ்லீம்களும் இங்கு சித்திரவதை செய்யப்பட்டனர். டெல்லி ஏறத்தாழ அழிவின் விளிம்பிலிருந்தது. அகதிகள் முகாம்களில் முஸ்லீம்கள் தங்க வைக்கப்பட்டிருந்தனர். எதிர்காலம் குறித்து யோசிப்பதற்கு அவர்களுக்கு எதுவுமில்லை.
டெல்லி திரும்பியிருந்த காந்தி ஜனவரி 13ம் தேதி உன்ணாவிரதம் இருப்பதாக அறிவித்தார். சுதந்திர இந்தியாவில் அவர் மேற்கொண்ட உண்ணாவிரதம். நாடு முழுவதும் கொப்பளித்த பகைமையின் வேகத்தை தணிக்க அவரிடம் அப்போது அவர் உயிர்தான் ஆயுதமாக இருந்தது. நாடு மகாத்மாவின் பலவீனமான நாடித்துடிப்பை கவலையோடு பார்க்க ஆரம்பித்தது. கலவரங்கள் நடந்த இடங்களில் மெல்ல அமைதி திரும்பியது. பழிக்குப் பழி வாங்க வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்கள் கொண்டிருந்த வன்மம் மகாத்மாவின் மீது திரும்பியது. அவருக்கு அதுகுறித்து கொஞ்சம்தான் கவலை. அவர் வேண்டியதெல்லாம் இந்த மண்ணில் அமைதியும், மக்களிடம் அன்பும்தான்.
காஷ்மீர் இந்தியாவுடன் இணைய விருப்பம் தெரிவித்தும், பாகிஸ்தான் காஷ்மீரை இழக்க சம்மதியாமல் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தது. நாட்டை பிரிக்கும்போது அப்போது ரிசர்வ் வங்கியின் இருப்பில் இருந்த 375 கோடியில் இந்தியாவுக்கு 300 கோடி எனவும், பாகிஸ்தானுக்கு 75 கோடி எனவும் பேசி முடிவு செய்யப்பட்டிருந்தது. முன் தொகையாக விடுதலைக்கு முன்பே 20 கோடி கொடுக்கப்பட்டிருந்தது. மீதித்தொகை 55 கோடி கொடுக்கப்படவில்லை. அந்தத் தொகையை கேட்டு பாகிஸ்தான் ஜனவரி முதல் வாரத்தில் இந்தியாவுக்கு கடிதம் எழுதியது. காந்தி அந்த தொகையை கொடுக்க வேண்டியது இந்தியாவின் தார்மீகக் கடமை எனக் கருதினார். உண்ணாவிரதம் துவக்கும் போது அதை ஒரு காரணமாக வலியுறுத்தவில்லை என்றாலும், உண்ணாவிரதத்தின் போது
வலியுறுத்தினார். மந்திரி சபையும் ஒத்துக் கொள்ள வேண்டும், அனைத்து தலைவர்களும் ஒப்புக் கொள்ள வேண்டும் என மகாத்மா வலியுறுத்தினார்.
இந்து மகாசபை,ஆர்.எஸ்.எஸ் எல்லாமே அந்த 55 கோடி கொடுக்க வேண்டாம் என அங்கங்கு ஆர்ப்பாட்டங்கள் நடத்தின. முதலில் கையெழுத்திட மறுத்த ஆர்.எஸ்.எஸ் பிறகு ஒப்புக்கொண்டது இறுதியில் அரசு 55 கோடி ருபாயை கொடுக்க வேண்டியதாயிற்று. காந்தியைக் கொல்ல இப்போது அவர்களுக்கு ஒரு காரணம் கிடைத்து விட்டது. இந்தியாவில் அமைதி திரும்புவதை அவர்கள் எப்போதும் விரும்பியிருக்கவில்லை. இந்தியாவின் இரத்தம் அனைத்தையும் உறிஞ்சி இந்து ராஷ்டிரா அமைக்க வேண்டும் என துடித்துக் கொண்டிருந்தனர். ஒரு காலத்தில் புத்தர் அவர்களது சதிகளை உடைத்து மக்களை அன்பினால் வென்றார். புத்தபிட்சுகளையும், சமணர்களயும் ஆயிரக் கணக்கில் கொன்று திரும்ப தங்கள் ஆதிக்கத்தை நிறுவ வேண்டியிருந்தது.
இப்போது மகாத்மா காந்தி!
(அடுத்த அத்தியாயம் நாளை)
முன்பக்கம்
காந்தி புன்னகைக்கிறார்- முதல் அத்தியாயம்

மகாத்மா மனுவைப் பார்த்து அவருக்குப் பிடித்தமான குஜராத்தி பாடலை பாடச் சொல்கிறார்.
"களைப்பாய் இருக்கிறாயோ...
களைப்பாய் இல்லையோ - மனிதனே
வேகம் குறைந்து போகாதே....
அப்படியே நின்றும் விடாதே
உனது போராட்டத்தில்
நீ தனியே விடப்பட்டாலும்
தொடர்ந்து செல்....
வேகம் குறைந்து போகாதே"
மனு பாடிக் கொண்டு இருக்கிறாள்.
மகாத்மாவுக்கு எல்லா நாட்களையும் போலவே அன்றும் ஆரம்பித்தது. ஆனால் நாதுராம் கோட்சேவுக்கு அப்படி விடியவில்லை.
பழைய தில்லியில் புகைவண்டி நிலையத்தின் ஓய்வு அறை எண்:6 ல் அவன் விழித்தான். அங்கே முதலில் விழித்தது அவன் தான். குளித்து, உடையணிந்து கொண்டான். நாராயண ஆப்தேவும், விஷ்ணு கார்காரேவும் தூங்கிக் கொண்டிருந்தார்கள். ஏற்கனவே இவர்கள் ஜனவரி 20ம் தேதி மகாத்மாவை கொலை செய்ய முயன்று முடியாமல் போயிருந்தார்கள். பெரிய அளவில் திட்டமிடுவதைவிட தனியாக சென்று கொல்வது என்று முடிவு செய்து நேற்றே குவாலியருக்குச் சென்று 35 அடி தூரத்திற்குள் சுடக்கூடிய பிஸ்டலை டாக்டர் பர்ச்சூரிடமிருந்து வாங்கி வந்திருந்தார்கள்.
மனதில் ஆயிரம் போராட்டங்களோடு ஆனால் வெளிக்காட்டிக் கொள்ளாமல் அந்த துப்பாக்கியை பார்த்துக் கொண்டிருந்தான் கோட்சே. பகவத் கீதையை முழுவதுமாக அவனும் அறிந்திருந்தான். இந்த கொலையை நியாயப்படுத்தும் பகவத் கீதை வரிகளை அவ்வப்போது நினைத்துக் கொள்வான்.
அன்பும் அமைதியும் தவழும் மகாத்மாவின் கண்களும், கொலைவெறி கொண்ட கோட்சேவின் கண்களும் இன்று மாலை நேருக்கு நேர் சந்திக்க இருக்கின்றன. வெறும் கண்களின் சந்திப்பு அல்ல அது. அகிம்சைக்கும் வன்முறைக்கும் நடந்த சந்திப்பு அது. தர்மமும் சூதும் சந்தித்துக் கொண்ட நிகழ்வு அது. ஒளியும் இருளும் சந்தித்துக் கொண்ட வேளை அது. வரலாற்றின் மிக முக்கியமான ஒரு தருணமாக அது நிலை கொண்டு விடுகிறது. பிறகு ஒளிமங்கி இருள் படர்ந்ததாக இந்திய வரலாற்றின் பக்கங்களில் நீள்கிறது.
மகாத்மாவும் கோட்சேயும் அதற்கு முன் நேருக்கு நேர் பார்த்துக் கொண்டதேயில்லை. அவர்கள் இருவரும் தனிநபர்கள் அல்ல. வெவ்வேறான இரண்டு கருத்துக்களின் உருவங்கள். இப்படி சந்திப்பு ஏற்படுவதற்கு இந்திய காலச் சூழலும், வரலாறும்தான் காரணம். அதை தெரிந்து கொள்ளாமல் இந்த நாளின் அர்த்தம் யாருக்கும் புரியாது. இவர்கள் இருவரும் எங்கிருந்து புறப்பட்டு இங்கு வந்து சேர்கிறார்கள் என்பதை பின்னோக்கிச் சென்று பார்க்காமல் நாம் எதிர்காலத்திற்குள் நுழைந்துவிட முடியாது.
(அடுத்த அத்தியாயம் நாளை)
ஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே!

இதிலிருந்துதான் ஆணுக்கும் பெண்ணுக்குமான முரண்பாடுகள் கூர்மையடைகின்றன. இந்த முரண்பாடுகளை சரி செய்யவோ, இணக்கங்களை உருவாக்கவோ விரும்பாத சமூகம் காதலை உலகத்திலிருந்து தள்ளி வைக்கவும், கொச்சைப்படுத்தவும் முயலுகிறது. இதனை அறிவுபூர்வமாக ஆணும், பெண்ணும் புரிந்து கொண்டு, உணர்வு பூர்வமாக உறவுகளை செழுமைப்படுத்திட முயற்சிக்க வேண்டும்.
காமம், அன்பு, நம்பிக்கை, சுதந்திரம் என எல்லாம் கலந்த ஆண் பெண் உறவே காதலாகிறது. அதை விட்டு விட்டு காதலை வெறும் காமம் என்றோ அல்லது காமத்தை முழுமையாக கடந்த நூறு சதவீதம் புனிதமாகவோ பார்த்திட முடியாது. உடலைத் துறந்து நினைவுகளிலேயே வாழ்வது என்பது இயற்கைக்கு புறம்பான கற்பனையே. பறவைகளுக்கு கால்கள் தேவையில்லை, சிறகுகள் மட்டும் போதும் என்பது போலத்தான் இது. உடல்களில்லாமல் நினைவுகள் இல்லை. உள்ளங்களில் மட்டுமில்லை, உள்ளங்கைளின் வெது வெதுப்பிலும் காதல் இருக்கிறது. இளமைப்பருவத்தில் ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையில் தோன்றும் மயக்கம் முதலில் உடல் சார்ந்ததாகவே இருக்கிறது. உடல்களை அறிகிற வேகமே காதலாய் காட்சியளிக்கிறது. அதுவே முழுக்க முழுக்க உடல் சார்ந்ததாய் மாறும் போதுதான், கிறக்கம் களைந்தவுடன் காதலும் காட்சிப்பிழையாகி காணாமல் போய் விடுகிறது. "பதனீரை குடித்துவிட்டு பட்டையை தூக்கி எறிவது போல என்னையும் தூக்கி எறிந்து விடுவாய்" என்று ஒரு ஆணிடம் சங்ககாலப் பெண் சொன்ன அவநம்பிக்கை இன்னும் பெண்களிடம் இருக்கிறது.
இதனை சமூகத்தில் தக்க வைத்துக் கொண்டிருப்பது ஊடகங்களால் திணிக்கப்பட்ட உடல் குறித்த மயக்கங்களே. திரைக் கதாநாயகிகளும், கதாநாயகர்களும், விளம்பர மாடல்களும் ஆண், பெண் உருவங்களை முன்நிறுத்துகிறார்கள். அவர்களே காதல் உலகத்தின் தேவர்களாகவும், தேவதைகளாகவும் வந்து அசைந்தாடு கிறார்கள். தோற்றங்களே அழகென மயக்கம் வருகிறது. வெற்று பிம்பங்களே இளமையின் அற்புதங்களை ஆட்டுவிக்கின்றன.
பெண் என்பவள் வெறும் உடல் மட்டும் தான் என்ற சிந்தனை சமூகத்தில் இருந்து அகற்றப்படும் போதுதான் சூரியன் பெண்களுக்காகவும், காதலுக்காகவும் உதிக்கும். உடல் குறித்த பயத்தையும், பெருமிதத்தையும் பெண்ணிடமிருந்தும், பிரமைகளை ஆண்களிடமிருந்தும் பிரித்தெடுக்கும் போது எல்லோரும் அழகானவர்களாகவும், நம்பிக்கை மிக்கவர்களாகவும் இருப்பார்கள். காதலின் கதவுகள் அங்கு திறந்தே இருக்கும். அப்போது காதல் ஒரு சிற்றின்பமாக சிறுத்தும் போகாது. இளமைப் பருவத்தில் மட்டும் வந்து விட்டுப் போகிற உணர்வாகவும் இருக்காது.
ஆக்கிரமிக்கும் மனதில் அதிகாரமும், இழந்து கொண்டிருக்கும் மனதில் அடிமைத்தனமுமே வசிக்கின்றன. தனக்கு மட்டுமே அவன் என்றும் அல்லது அவள் என்றும் ஒருவரையொருவர் சிறைபிடிப்பது காதலாகாது. ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் அன்பைக்காட்டிலும், நம்பிக்கை முக்கியமானது. நம்பிக்கையற்ற அன்பு விபரீதமானது. இதை 'பொஸஸிவ்' என்று ஆங்கிலத்தில் உச்சரித்துக் கொண்டு பெருமிதம் கொள்ளும் பைத்தியங்களாய் பலர் இருக்கிறார்கள். தங்கள் துணையின் காலடிகளை சதாநேரமும் மோப்பம் பிடித்துக்கொண்டே இருப்பார்கள்.
ஒருவர் பற்றிய ஒருவரின் நினைவு எப்போதும் பரவசத்தையும், சந்தோஷத்தையும் தருவதாக இருக்க வேண்டும். காதலர்களுக்கு இடையே மனஸ்தாபங்களே வராது, வரக்கூடாது என்பதெல்லாம் அதீத கற்பனையே. அந்த நிகழ்வுகளிலிருந்து எப்படி ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு இணக்கம் கொள்கின்றனர் என்பதுதான் முக்கியமானது. ஒருவருக்கொருவர் எதிரிகளாக பார்க்காமல், தன் அன்பின் துணை என்னும் சிந்தனை தெளிந்திருந்தால் முரண்பாடுகளை எதிர்கொள்ளும் விதமே அலாதியானதாகவும், அற்புதமாகவும் மாறும். காதல் வாழ்க்கை ஆணுக்கும், பெண்ணுக்கும் பரிபூரண சுதந்திரத்தை கொடுப்பதாக இருக்க வேண்டும். இலக்கியத்திலும், வெளியிலும் பார்ப்பதை விட்டு காதலை தங்களுடைய வாழ்வாக அறிதல் வேண்டும். ஒரு ஆணும், ஒரு பெண்ணும் அவரவர்களுக்கான சுதந்திரத்தை எடுத்துக்கொள்வதிலும், பகிர்ந்து கொள்வதிலுமே காதலின் அர்த்தம் இருக்கிறது. கலீல் கிப்ரானின் இந்த கவிதை அதைச் சொல்கிறது. 'ஈருடல் ஓருயிர்', 'காற்று கூட நம்மிடையே நுழையாது' என்று காதல் பற்றி சொல்லப் பட்டு வந்த எல்லாவற்றையும் உடைத்து போட்டுவிட்டு உண்மையாய் ஒலிக்கிறது.
ஒருவரையொருவர் காதலியுங்கள். ஆனால் அது அடிமைத்தனமாகிவிட வேண்டாம்.
உங்கள் ஆன்மாவின் கடலோரங்களுக்கிடையில் அசைந்து கொண்டிருக்கும் கடலாயிருக்கட்டும் அது.
அடுத்தவர் கோப்பைகளை நிரப்புங்கள். அடுத்தவர் கோப்பையிலிருந்து குடிக்க வேண்டாம்.
சேர்ந்து ஆடிப்பாடி மகிழுங்கள். ஆனால் இருவரும் தனித்தே இருங்கள்.
உங்கள் இதயத்தை கொடுங்கள். ஆனால் அடுத்தவர் இதயத்தை வைத்திருக்க வேண்டாம்.
சேர்ந்தே நில்லுங்கள். ஆனால் மிக நெருக்கமாக வேண்டாம்.ஓக் மரமும், சைப்ரஸ் மரமும் ஒன்றின் நிழலில் மற்றொன்று வளராது.
கடைசி வரிகள் மிக முக்கியமானதாய் இருக்கின்றன. காதல், காதலர்களை மேலும் மேலும் வளர்த்தெடுக்க வேண்டும். இந்த வளர்ச்சி சுயநலமற்றதாகவும், சமூகம் சார்ந்ததாகவும் பரிணமிக்கும் போது காதல் மகோன்னதம் பெறும். ஆண், பெண் இருவருமே உலகம் சார்ந்த மனிதர்களாய், சமமாய் மாறும் போது இந்த அற்புதம் நிகழும். ஒருவரையொருவர் காதலித்த, சேர்ந்து உலவித் திரிந்த, பேசி மகிழ்ந்த, சண்டை போட்டு தவித்த, பிரிந்து சேர்ந்த காலங்களோடு இந்த பூமி சுற்றிக் கொண்டிருக்கிறது. இந்த பூமியில் எல்லோரும் பார்க்கும் படியாக காதலர்கள் தங்கள் மரணங்களையும் வெறும் பெயர்களையும் எழுத வேண்டாம். தங்கள் வாழ்க்கையை எழுதட்டும்.
காதலின் சின்னங்களாக கல்லறைகள் வேண்டாம். வாழும் வீடுகளே இருக்கட்டும்.
ஆதலினால் காதல் செய்வீர்
(முற்றும்)
அப்போது பைத்தியங்களே திருடுவார்கள்

இதற்கு முன்பு பதிவு செய்யப்பட்ட ஒழுக்கத்தின் பலிபீடங்களை வழிமொழிந்து கருத்துக்கள் வந்திருந்தன. சிலர் எனது இ-மெயில் முகவரிக்கு அது எப்படி சரியாகும் என கடிதம் எழுதியிருக்கிறார்கள். ஒரு தொழிற்சங்கத் தலைவருக்கு இருக்கக்கூடிய புரிதலை சமூகம் முழுமைக்குமாக விரிவுபடுத்தி பார்த்திட முடியாது என்று ஒருவர் சொல்லியிருக்கிறார். தனிநபர்கள் திருந்தாமல் சமூகம் எப்படி திருந்தும் எனவும் ஒருவர் கேட்டுவிட்டு, ஒழுக்க மீறலை உங்களைப் போன்றவர்களே ஆதரிக்கலாமா எனவும் ஆதங்கப்பட்டிருக்கிறார். இந்த இருவரிடமும் சமூகம் குறித்த அக்கறை நிறைய இருப்பதை உணரமுடிகிறது.
ஒவ்வொரு காலத்திலும் ஒரு சமூக அமைப்பை ஆளுகின்ற கருத்துக்கள் அந்தந்த காலத்தின் ஆளும் வர்க்கத்தின் சிந்தனைகளாகவே இருக்கின்றன. அரசியல், பொருளாதாரம், கலாச்சாரம் என்று அனைத்தின் மீதும் படரும் அதன் மூளையின் உன்மத்தம் பிடித்த செல்கள் அனைத்தும் முழுக்க முழுக்க தனது வர்க்கத்தை நிலைநிறுத்திக் கொள்வதிலேயே கவனம் கொண்டிருக்கின்றன. எல்லாவற்றையும் தங்களுடைய ஆயுதங்களாக்கும் பணியை செய்துகொண்டே இருக்கிறது. மக்களை வெல்வதற்கும், அவர்களை முழுமையாக தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்குமான தேவை அந்த ஆளும் அமைப்புக்கு இருக்கிறது. அதில் மிக நுட்பமாகவும், அரூபமாகவும், வலிமை மிக்கதாகவும் வடிவமைக்கப்பட்டிருப்பது கலாச்சாரம். இந்த கலாச்சாரம்தான் இந்த அமைப்பை ஏற்றுக்கொள்வதற்கான சம்மதத்தையும், ஒப்புதலையும் மக்களிடமிருந்தே பெற்றுவிடுகிற சாமர்த்தியம் கொண்டதாய் இருக்கிறது.
கலாச்சாரத்தின் ஒரு பகுதியான ஒழுக்கத்தை வாளாக்கி நீதிதேவதை கையில் ஒங்கியபடி காட்சியளிக்கிறாள். காவல்துறையும், நீதித்துறையும் ஒழுக்கத்தை காப்பாற்றுவதற்காக அல்லும் பகலுமாய் படாத பாடு படுகிறது. வேலைநிறுத்தம் செய்தவர்களை நடுராத்திரியில் தெருவில் இழுத்துச் செல்லும். கல்வியை வியாபாரமாக்காதே என்று ஆர்ப்பாட்டம் செய்தால் அடிவயிற்றில் மிதிக்கும். கோடிக்கணக்கில் வருமான வரி ஏய்த்தவர்களிடம் கெஞ்சிக்கொண்டு நிற்கும். மாதச்சம்பளக்காரர்களிடம் கெடுபிடி காட்டும். சங்கராச்சாரியாருக்கு சிறைக்குள் சகல பணிவிடைகளும் செய்யும். பங்குச் சந்தையை ஆட்டுவிக்கும் பணமுதலைகளிடம் நிதியமைச்சர் மும்பை சென்று பேச்சுவார்த்தை நடத்தி சலுகைகள் அறிவிப்பார். வருங்கால வைப்புநிதிக்கு வட்டியை உயர்த்த பத்து தடவை தொழிற்சங்கங்கள் நிதியமைச்சகத்தின் வாசலில் காத்து நிற்க வேண்டியிருக்கிறது. கோடிக்கணக்கில் வங்கிக்கடன் வாங்கி திரும்பச் செலுத்தாதவர்களுக்கு மரியாதை தாராளமாய் கிடைக்கிறது. பத்தாயிரம் ருபாய் பயிர்க்கடன் வாங்கி திரும்பச் செலுத்த முடியாதவர்கள் வீட்டில் ஜப்தி நடக்கிறது. அடுக்கிக்கொண்டே போகலாம். நாளொரு நியாயமும், பொழுதொரு தர்மமுமாக நீதிதேவதையின் வாள் சுழன்று கொண்டே இருக்கிறது. எந்த பிரஜையும் ஒழுக்க மீறல்களிலிருந்து தப்பித்துவிடாதபடிக்கு கோடுகள் குறுக்கும் நெடுக்குமாக கிழிக்கப்பட்டிருக்கின்றன.
இதெல்லாம் வர்க்கச்சார்புடைய ஒழுக்க நெறிகளும், ஒழுக்க மீறல்களும் என்று அர்த்தப்படுத்திக் கொள்வோமாக. ஆனால் எல்லாக் காலத்துக்கும் எல்லா வர்க்கத்துக்கும் பொதுவான சில ஒழுக்கங்கள் இருப்பதாகவும் அவைகளே சமூகத்தை இயங்க வைப்பதாகவும் புரிந்துகொள்வதைத்தான் ஒப்புக்கொள்ள முடியவில்லை. அதிலும் குறிப்பாக திருடாமல் இருப்பது குறித்து அப்படிப்பட்ட கருத்து இருக்க முடியுமா? சமூகத்தின் காரணிகளை தனிநபர்கள் மீது நாம் சுமத்திப் பார்த்திட முடியாது. சமூகத்தின் ஒழுக்கத்தை தனிநபர் ஒழுக்கத்தோடு நாம் குழப்பிக் கொள்ளக் கூடாது.
இந்த அமைப்பு மனிதர்களை மேலும் மேலும் சுரண்டுகிறது. அதேவேளை தேவைகளையும் நிர்ப்பந்தங்களையும் தந்து கொண்டே இருக்கிறது. மயானக்கரை வரைக்கும் அரிச்சந்திரர்களை விரட்டி விரட்டிப் பார்க்கிறது. நேர்வழியில் எதிர்த்து போராடுகிற மனோபலமற்றவர்கள் எப்படியாவது இந்த ஓட்டத்தில் தங்களை நிலைநிறுத்திக் கொள்ள குறுக்கு வழி தேடுகிறார்கள். சமூகத்தின் பார்வையில் ஒழுக்கமற்றவர்களாகிறார்கள். இதுவும் அமைப்பின் ஏற்பாடே. அந்த மனிதர்களின் போராட்டக் குணம் மழுங்கடிக்கப்படுகிறது. சிறு தேங்காய்த்துண்டுக்காக எலிப்பொறியில் மாட்டிக்கொண்ட அவர்கள் மீது பரிதாபப்படுவதா அல்லது கோபப்படுவதா. அந்த மனிதர்களை திருத்துவதா அல்லது தண்டிப்பதா?. பலீவனமான அந்த மனிதர்களை ஆதரவற்றவர்களாக, அனாதைகளாக நாமும் புறக்கணித்துவிட முடியாது.
சமூக அக்கறை மனிதாபிமானத்தோடு வெளிப்படும்போதுதான் புதிய பரிணாமம் பெறுகிறது. அந்த மனிதர்களுக்காக நாம் பேசுவதும், இந்த பலிகள் ஏன் நடக்கின்றன என்பதை விவாதிப்பதும் பாவிகளை இரட்சிப்பது ஆகாது. இதயமற்ற ஒழுக்கத்தின் பலிபீடங்களை உலகுக்கு காட்டும்போது மக்கள் தங்கள் நிபந்தனையற்ற ஒப்புதலை மறுபரிசீலனை செய்ய ஆரம்பிப்பார்கள். எதொவொரு நேரத்தில், எதொவொரு நெருக்கடியில் ஒழுக்கம் மீறியவர்களை எப்போதும் ஒழுக்கம் மீறிக்கொண்டிருப்பவர்களுக்கு எதிரான ஆயுதங்களாக நாம் பிரயோகிக்கிறோம். ஒழுக்கத்தை சமூகத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு மட்டும் விதிக்க முடியாது. கூடாது என்பதுதான் நமது பார்வை. அதனால் மேலும் மேலும் ஒழுக்க மீறல்கள் பரவத்தான் செய்யும்.
ஒழுக்கம் என்பது வலியுறுத்துவது மட்டும் ஆகாது. ஒருவழிச் சாலையும் ஆகாது. ஒரு பகுதியினர் விதிகளை கடைப்பிடிக்க ஒரு சிலர் கடைப்பிடிக்காமல் போனாலும் விபத்துக்கள் நேர்ந்துகொண்டுதான் இருக்கும். இங்கு எல்லா தினப்பத்திரிக்கைகளின் எழுத்துக்களிலும் ஒழுக்க மீறல் குறித்த செய்திகளே கொலைகளாகவும், கொள்ளைகளாகவும் வந்து கொண்டு இருக்கின்றன. இத்தனை சட்டங்களும், தண்டனைகளும் இருந்தும் ஏன் குற்றங்கள் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே இருக்கின்றன. இந்த அமைப்பு எவ்வளவு தூரம் கெட்டுப் போயிருக்கிறது என்பதற்கான அளவுகோல்களே அவை.
அடிமுதல் நுனி வரை அழுகிக் கொண்டு இருக்கும் ஒரு அமைப்பை எதிர்த்து நாம் போராடுகிறோம். காரணங்களை புரிந்துகொண்டுதான் விடைகளை தேட முடியும். வேர்களின் வியாதி பார்க்காமல் இலைகளுக்கு மட்டும் வைத்தியம் செய்து எந்த மரத்தையும் காப்பாற்ற முடியாது. ஒழுக்கம் என்பது அமைப்பின் தன்மைகளை பொறுத்து மனிதர்களுக்கு தன்னியல்பாக வரக் கூடியது. எதை மாற்ற வேண்டும் என்பதை முதலில் தீர்மானிப்போம். தனியுடமை முற்றிலும் ஒழிக்கப்பட்டு, திருடுவதற்கான சகல காரணங்களும் அற்ற ஒரு சமூகத்தில் பைத்தியக்காரர்களே எப்போதாவது திருடுவார்கள் என்று மாமேதை மார்க்ஸ் சொன்னதுதான் திரும்ப திரும்ப ஒலித்துக்கொண்டிருக்கிறது.
தினம் தினம் சாகிறவனுக்காக யாரும் அழுவதில்லை

தற்செயலாக நேற்று கிஷோர் சாந்தாபாய் காலே ஞாபகம் வந்தது. அவரைப் பற்றிய ஏதேனும் செய்திகள் இருக்குமா, வேறு புத்தகங்கள் எழுதியிருக்கிறாரா என்று இணயதளத்தில் தேடிப் பார்த்தபோது அதிர்ச்சியாயிருந்தது. 2007 பிப்ரவரியில் கிஷோர் சாந்தாபாய் ஒரு சாலை விபத்தில் இறந்து விட்டார் என்ற ஒரு செய்தி இருந்தது. அதுவும் 37 வயதில். பெரும் ஏமாற்றமாகவும், வெறுமையாகவும் இருந்தது. அந்த மனிதர் எங்கோ ஒரு மூலையில் இருக்கிறார் என்னும் நினைவு இப்போது தாக்கப்பட்டுவிட்டது. அவஸ்தையாய் இருக்கிறது.
அவரது குலாத்தி படித்து இரண்டு வருடங்களுக்கு மேலிருக்கும். முகப்பு அட்டையில் லேசாய் வளர்ந்திருந்த முடியுடன் வெறித்துப் பார்க்கும் அந்தச் சிறுவனும், குலாத்தி என்ற பேருக்குக் கீழே தந்தையற்றவன் என்கிற வார்த்தையும் யாரையும் பற்றிக் கொள்ளும். எழுதிய கிஷோர் சாந்தாபாய் காலே என்பவரின் சுயசரிதையே இந்த புத்தகம் என்பது பின்பக்க அட்டையில் தெரிந்தது. அந்த புத்தகம் வாங்கியிருந்த ஏராளமான விருதுகள் பெரிதாக எதையும் எதிர்பார்க்கச் செய்யவில்லை என்பதையும் குறிப்பிட வேண்டும்.
படிக்க ஆரம்பித்த இரவு நேரம் அந்த புத்தகத்திற்குள் அப்படியே இழுத்துவிடக் கூடியதாயிருந்தது. மங்கலான வெளிச்சத்தில், ஆண்கள் நிழலுருவங்களாய்த் தெரிய ஆரம்பிக்கிறார்கள். மேடையில் குலாத்தி இனத்தைச் சேர்ந்த இளம்பெண் தமாஷா நடனமாடிக்கொண்டு இருக்கிறாள். காசுகள் அவளை நோக்கி பறக்கின்றன. பொறுக்கி எடுத்துக் கொண்டே ஆடுகிறாள். மேடைக்குப் பின்னே அவளது குழந்தை பால் குடிக்கக் கதறிக் கொண்டு இருக்கிறது. ரணங்களை விழுங்கிய சதங்கைகள் அதிர அங்கே அந்தப் பெண் ஆடிக்கொண்டே இருக்கிறாள். 'சபாஷ், 'ஆஹா'வென ஆண்கள் அவளது உடலின் அசைவுகளுக்கு ஜதி சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள். குழந்தைக்கோ முகமெல்லாம் வெடிக்க, அடிவயிற்றிலிருந்து அதுவே கடைசிக் குரல் என முறுக்கித் தெறிக்கிறது. அது போல குழந்தை ஒன்றே இந்தப் புத்தகத்தின் எழுதியவனாயிருக்க, அந்த உயிரின் அழுகை எழுத்துக்களாய், வாழ்வின் வரிகளாய், வாசிக்கிறவனுக்குள் படருகின்றன. இரவின் உலகத்தில் எழுதியவனின் பயணங்கள் ஒற்றைப் பறவையின் குரலோடு நீள்கின்றன.
ஒரு காலத்தில் கழைக்கூத்தாடிகளாய் இருந்து, பிறகு இப்படி மேடைகளுக்கு ஆடவந்து விடுகின்ற குலாத்திச் சமூகத்தில் பிறந்த ஒருவன் எம்.பி.பி.எஸ் படித்து முடிக்கிறான் என்பதுதான் கதை. நிச்சயமற்ற உலகத்தில் அந்த குலாத்திப் பெண்கள் வாழ்கிற துயரங்கள் தொண்டைக் குழிக்குள் அடைகின்றன. ஆட்டத்தைப் பார்க்க வந்த வசதியான, செல்வாக்கு மிக்க ஆடவன் தனக்குப் பிடித்தவளை காசு கொடுத்து அழைத்துச் சென்று விடுகிறான். கொஞ்ச மாதங்கள் அல்லது, சில வருடங்கள் கூட வைத்திருக்கிறான். அந்த குலாத்திப் பெண் ஆடுவதை நிறுத்தி விட்டு அவனோடு ஐக்யமாகி விடுகிறாள். அவன் எப்படிப்பட்டவனாய் இருந்தாலும் ஊர் ஊராய் அலைய வேண்டியிராத அந்த வாழ்வில் அவளுக்கு ஒரு நிம்மதி இருக்கிறது. அந்த ஆண் அவளை கைவிடுகிறான். அனேகமாக கைக்குழந்தையோடுதான். சாராயம் குடித்து, மாமிச ருசி பழகிப்போன குலாத்தி குடும்பத்தலைவன் அவளை மீண்டும் தமாஷா நடனமாட இரவின் மேடையில் கொண்டு வந்து நிறுத்துகிறான். தாய் ஏமாறுகிறாள். அக்கா ஏமாறுகிறாள். இருந்தாலும் தானும் அப்படியே ஏமாந்து போக சம்மதிக்கிறாள் ஒரு குலாத்திப் பெண்.
வேறு வழி எதுவும் முன் இல்லை. அவளுக்கென்று கனவுகள் இல்லை. உலகம் இல்லை. குழந்தைகள் இருந்தாலும் குழந்தைகள் இல்லை. அதில் வித்தியாசமனவளாய் சாந்தாபாய். டீச்சராக வேண்டும் என கனவு காண்கிறாள். வாழ்க்கை அவளையும் இந்தச் சுழிக்குள் தள்ளி, பதினான்கு வயதில் குழந்தையைத் தந்து, திரும்பவும் மேடையில் கொண்டு வந்து நிறுத்துகிறது. சாகும் வரை உன்னை வைத்து காப்பாற்றுவேன் என நானா என்னும் இன்னொரு ஆண் உறுதிசொல்ல குழந்தையை விட்டு, குடும்பத்தை விட்டு மீண்டும் ஓடிவிடுகிறாள். அந்தக் குழந்தை சகல அவமானத்தோடும் அந்த குலாத்திக் குடும்பத்தின் வேலைக்காரனாய் வளர்கிறது. அவனது தாயோடு பிறந்த சித்திகளும், ஜீஜீ என்னும் வயதான பாட்டியும் அவன் மீது அவ்வப்போது பாராட்டும் அன்பில், அந்த நிழலில் படிக்க வேண்டும் என்னும் வெறி அவனுக்குள் தீயாய் வளர்கிறது.
தந்தையின் பேரை பின்னால் வைத்துக் கொள்ளும் சமூகத்தில் கிஷோர் சாந்தாபாய் காலே என்று தாயின் பேரோடு பள்ளியில் சேருகிறான். சதா நேரமும் வேலை..வேலை. படிப்பதற்காக தாகம் எடுத்து, அதற்கு நேரம் கிடைக்காமல் தவிக்கிற தவிப்பு . பள்ளியில் அவன் பேரை உச்சரிக்கும் போது எழும்புகிற கேலி. லீவு நாட்களில் தமாஷா குழுவோடு அனுப்பப்பட்டு அங்கு வரும் ஆண்களுக்கு இரவு முழுக்க பணிவிடைகள் செய்ய வேண்டிய கொடுமை. எல்லாவற்றோடும் அவன் ஒவ்வொரு வகுப்பாய் தேறி உயர்நிலைப்பள்ளி, கல்லூரி வாழ்க்கை என நகரும் நாட்கள் ஒவ்வொன்றும் நரகத்தின் வாசலிலிருந்துதான் அவனுக்கு பிறக்கிறது. ஒருதடவை கல்லூரிக்கு பணம் கட்ட இரண்டாயிரம் ருபாய் தேவைப்பட, சுசிலா சித்தியும் ஒரு ஆணும் ஒரு லாட்ஜில் ஒரு அறையில் தங்க, பக்கத்து அறையில் தங்கியிருக்க வேண்டிய இரக்கமற்ற தருணங்களில் அவன் வெந்து போக வேண்டியிருக்கிறது.
அவனுக்குள் ஒரு தேவதையாய் இறங்கியிருக்கிற அம்மாவின் நினைப்பு மனித வாழ்வின் எல்லைகளைத் தாண்டி நிற்கிறது. ஏழு வருடங்களுக்குப் பிறகு தன்னை பார்க்க ஒருமுறை வந்த அம்மாவின் பார்வைக்குள்ளேயே தான் இருக்க வேண்டும் என அந்தப் பத்து வயதுச் சிறுவனின் செய்கைகள் ஒவ்வொன்றும் வாசிக்கிறவனை அப்படியே கரைத்து ஒன்றுமில்லாமல் ஆக்கிவிடுகிறது. தன்னை விட்டு விட்டுப் போன அம்மாவைப் பற்றிய மதிப்பீடுகள் அவனது ஒவ்வொரு பருவத்திலும் வளருகிற இயல்பு ஒரு சித்திரமாக விரிகிறது. அம்மாவோடு சேர்ந்து வாழ்கிற காலமும் அவனுக்கு கிடைக்கிறது. நானா என்கிற அந்த ஆண் அவளை வைத்திருக்கிற அவலத்தில் துடித்துப் போகிறான். ஆனாலும் அம்மா அவனை விட்டு வராமல், அவனிடம் அடி, உதை பட்டுக் கொண்டு அங்கேயே வாழ்வது தாங்கமுடியாமல் இருக்கிறது.
சுசிலாச் சித்தி, ரம்பா சித்தி, பேபி சித்தி, ஷோபா சித்தி என மற்ற குலாத்திப் பெண்கள் படுகிற துயரங்களுக்கு அம்மா எடுத்த முடிவு எவ்வளவோ மேல் என்று நினைக்கிறான். குலாத்தி நாவலை அடுத்தநாள் இரவில்தான் படித்து முடிக்க முடிந்தது. தூரத்தில் எங்கோ நாய் சத்தம் கேட்டது. கிஷோர் சாந்தாபாய் வயற்காட்டில் இருக்கும் பாட்டி ஜீஜீக்கு இரவில் ரொட்டி எடுத்துப் போகும்போது நாய்கள் குரைப்பதாகப் படுகிறது. ஜீஜீயும் ஒருகாலத்தில் ஆண்களை வசீகரித்த குலாத்திக்காரிதான். இன்று அவளுக்கு மருத்துவம் பார்க்க வழியில்லாமல் கவனிப்பாரற்று ஒரு அனாதையைப் போல கிடக்கிறாள்.
அவள் மீது பிரியம் வைத்திருக்கும் கிஷோர் இப்போது டாக்டராகி விட்டான். மனது அசைபோட, தூக்கத்தை விழுங்கிவிட்டு இருளின் அடர்த்தியாய் என்னைச் சுற்றி குலாத்தி. இந்தப் புத்தகத்தின் முன்னுரையை கடைசியில்தான் படித்தேன். இப்போது கிஷோர் சாந்தாபாய் காலே டாக்டராகி, ஆதிவாசிகளுக்கும், பழங்குடி மக்களுக்கும் இலவச மருத்துவம் செய்து கொண்டிருக்கிறார் என்றிருந்தது.
இந்தப்புத்தகத்தின் மூலம் கிடைத்த வருவாய், எண்ணற்ற விருதுகளின் பணம் எல்லாவற்றையும் கொண்டு தன் பாட்டி ஜீஜீயின் நினைவாக அறக்கட்டளை நிறுவி இருக்கிறார். அதன்மூலம் அனாதைக் குழந்தைகளுக்கும், குலாத்தி சமூகக் குழந்தைகளுக்கும் கல்விக்கான உதவி செய்து வருகிறார். இருள் நிறைந்த தன் வாழ்விலிருந்து வெளிச்சத்தை திரட்டி அதை சாதாரண மக்களுக்கு கொடுத்துக் கொண்டிருக்கிறார். உண்மை ஆர்ப்பாட்டமில்லாமல் எப்போதும் எளிமையாகவே இருக்கிறது. குலாத்தி ஒரு மனிதனின் கதை மட்டுமல்ல. ஒரு சமூகத்தின், அதுவும் நாம் வாழ்கிற காலத்தின் ஒரு பகுதி.
இணையதளத்தில் அவர் பெயரைக் குறிப்பிட்டுத் தேடினால் மொத்தமே இருபது பக்கங்கள்தான் தேடிக் கொடுக்கப்படுகின்றன. அதில் அவர் இறந்த செய்தியை இரண்டே இரண்டு வலைப்பக்கங்களே வெறும் செய்தியாய் சொல்கின்றன. துயர் மிகுந்த தன் வாழ்வினைப் பற்றி எழுதுகிற போது ஒரு இடத்தில் கிஷோர் சாந்தாபாய் " தினம் தினம் சாகிறவனுக்காக யாரும் அழுவதில்லை" என்கிறார். பெரும் துயரமாய் நம்மை அழுத்துகிறது அந்த வார்த்தைகள்.
மறுக்கப்பட்ட பெண்மை
பெண்களுக்கு இழைக்கப்பட்டிருக்கிற கொடுமைகள் குறித்து நிறைய கேள்விப்பட்டிருக்கிறோம். உணர்ந்திருக்கிறோம். மனித சமூகத்தின் வரலாறு நெடுக அவர்களின் வலியும், வேதனையும் படர்ந்திருப்பதை அறிந்திருக்கிறோம். வாரிஸ் டேரியின் கதை எல்லாவற்றையும் விட கொடுமையானதாய் இருக்கிறது. நாகரீக சமூகத்தில், விஞ்ஞான யுகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை வெட்கங்கெட்டு இன்னும் சொல்லித் திரிய வேண்டுமா என்றே தோன்றுகிறது.
ஆப்பிரிக்க நாடுகளில், 13 கோடி வாரிஸ் டேரிகள் மரக்கட்டைகளாய் இருக்கிறார்கள் என்பதையறியும் போது நம் அத்தனை இயல்பு மனநிலைகளும் பாதிக்கப்படுகின்றன. பத்து வயதில் அவர்களுக்கு கந்து அகற்றல் (Cut off part of the Clitoris or female circumsicion) நடத்தப்பட்டு, வெறும் பிள்ளை பெறுகிற ஜடமாக வாழ்கிறார்கள் என்பது வெளியுலகத்திற்கு இப்போதுதான் தெரிய வந்திருக்கிறது. பெண்ணின் உடல் மீது, காலம் காலமாய் தொடுக்கப்பட்டிருக்கும் இப்படிப்பட்ட காயங்கள், பூமியின் வாழ்நாள் முழுவதும் கூடவே வந்து மனிதர்களை பிடித்து உலுக்கிக் கொண்டே இருக்கும்.
இந்த மாத உயிர்மை பத்திரிக்கையில், இரா.சோமசுந்தரம் என்பவர் Desert flower என்னும் வாரிஸ் டேரியின் சரிதைப் புத்தகத்தைப் பற்றி எழுதியிருக்கிறார். எழுத்துக்கள் வாரிஸ் டேரியை நம் முன் கொண்டு வந்து நிறுத்துகின்றன. வாரிஸ் டேரி தனக்கு நேர்ந்ததை, நேர்வதை மெல்ல மெல்லச் சொல்லத் தொடங்குகிறாள். கேட்க முடியாமல் ஐயோ என முகத்திலும், நெஞ்சிலும் அடித்துக் கொண்டு கதறி அழ வேண்டும் போல் இருக்கிறது. அழுவீர்கள்.
மறுக்கப்பட்ட பெண்மை (படிக்கலாம்)
இனி சிறுநீர் கழிக்கும் போது கூட உங்கள் இதயம் வலிக்கும்.
வரலாற்றில் தடைசெய்யப்பட்ட புத்தகங்கள் பற்றிய ஒரு தொடர்-3

1929 என்றதும் நினைவுக்கு வருவது உலகம் முழுவதும் ஏற்பட்ட அந்த பொருளாதார நெருக்கடி. சாமானிய மக்களை விரக்தியின் விளிம்பில் கொண்டு நிறுத்திய காலமாக வரலாற்றின் பக்கங்களில் குறித்து வைக்கப்பட்டிருக்கிறது. முதலாளிகளுக்கும், பெரும் நிறுவனங்களுக்கும் லாபம் கண்ணை முழுமையாக மறைக்க ஆரம்பித்திருந்தது. விவசாயம் சிதைந்து போக விளைநிலங்கள் நாசமாக ஆரம்பித்தன. எளியவர்கள் மூச்சுத் திணறிப் போனார்கள். சொந்த மண்ணை விட்டு தங்களை பிடுங்கி எடுத்துக் கொண்டு சுவாசிப்பதற்காக புலம்பெயர்ந்தார்கள். கனவுகளைக் கொன்றபடி ஒவ்வொரு நாளும் தங்களை முடித்துக் கொண்டனர்.
அந்தக் கோர பிம்பங்கள் அமெரிக்காவின் பல பகுதிகளிலும் விஸ்வரூபமெடுத்தன. சாதாரண மக்கள் வாழ்வின் ஆதாரங்களற்று சூனியத்தில் நின்றிருந்தார்கள். ஸ்டெய்ன்பெர்க் என்னும் எழுத்தாளர் அந்த அழிவின் காட்சிகளிலிருந்து மனித வாழ்வை சொல்ல ஆரம்பித்தார். அதுதான் பத்து வருடங்கள் கழித்து 1939ல் Grapes of wrath என்னும் நாவலாக வெளி வந்தது.
பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டும் மீளாமல் அடுத்த உலக யுத்தத்திற்கான முஸ்தீபுகள் வெளிப்பட ஆரம்பித்த காலக்கட்டத்தில், முந்தைய நாட்களை இரத்தமும் சதையுமாய் தோண்டியெடுத்து இந்த நாவல் உலகின் சிந்தனையில் உறைக்க வைத்தது. சோஷலிச முகாமை எதிர்த்து 'பெரிய மனிதனாக' தன்னை அறிவித்துக்கொள்ள அமெரிக்கா பதுங்கியிருந்த காலக்கட்டத்தில் கடுங்கோபத்தோடு இந்த நாவல் முதலாளித்துவத்தின் அழுகிப் போன முகத்தை எல்லோருக்கும் அறிவித்தது. பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
உடனடியாக கெர்ன் கவுண்டி நிர்வாகம் 'பொய்களின் மூட்டை' என நாவலை தடை செய்வதாக அறிவித்தது. தீயிட்டும் கொளுத்தினார்கள். அமெரிக்க காங்கிரஸில் நாவலை தடை செய்ய வேண்டுமென்று வலியுறுத்தப்பட்டது. நூலகங்களில் தடை செய்யப்பட்டன. கொச்சைத்தனமான வார்த்தைகள் கொண்ட இந்தப் புத்தகம் பள்ளிக்கூடங்களில் இருக்கக் கூடாது எனவும் அறிவிக்கப்பட்டது. முதலாளிகளும், வலதுசாரிகளும் நாவலை கம்யூனிஸத்தின் வக்கிரப் பிரச்சாரம் என்றும் ஆத்திரத்தோடு சொல்லிக் கொண்டனர்.
இவையெல்லாவற்றையும் மீறி இந்தப் புத்தகம் பெரும் வெற்றி பெற்றது. அமெரிக்கா முழுவதும் மின்சாரத்தை பாய்ச்சுகிற எழுத்துக்கள் இவை என அறிஞர் பெருமக்கள் புகழ்ந்தனர். தன் மீது கடுமையான கண்டனங்கள் எழும்பும் என்று மட்டும் எதிர்பார்த்திருந்த ஸ்டெய்ன்பெர்க்கிற்கு பெரும் ஆச்சரியமாக இருந்ததாம். ஒவ்வொரு நாளும் சராசரியாக 2500 பிரதிகள் விற்றன. ஒரு வருடத்திற்குள் ஐந்து லட்சம் பிரதிகள் மக்களிடம் சென்றுவிட, உலகின் பல மொழிகளில் வெளியாகியது. நாவலுக்கான வரவேற்பை கண்டுகொண்டு அப்போதைய ஜனாதிபதி ரூஸ்வேர்ல்டின் துணைவியாரும் நாவலை புகழ ஆரம்பித்திருக்கிறார். இதுதான் 'அமெரிக்க ஜனநயகத்தின்' சிறப்பான அம்சமே. மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு. ஆளும் வர்க்கம் தனக்கு எதிரான கருத்தாயிருந்தாலும் ஒரு அசட்டுச் சிரிப்போடு அதையும் அவர்களே பிரசிங்கிப்பர்கள். இந்தத் தந்திரங்கள், தடைகளை உடைத்துக் கொண்டு சமூகத்தை ஆரத்தழுவிக் கொள்கிற பரந்த கரங்கள் அந்த நாவலுக்குள் இருந்தன.
தனிப்பட்ட எந்தக் கதாபாத்திரத்தையும் அறிமுகப்படுத்தாமல் ஓக்லஹோமா பிரதேசத்திலிருந்து கதையை ஆரம்பிக்கிறார் ஸ்டெய்ன்பெர்க். சூரிய ஓளியை மறைத்து அடர்த்தியாக எங்கும் தூசி நிறைந்திருக்கிறது. மூக்கைத் துணியால் மூடிக்கொண்டும், கண்ணாடி அணிந்துகொண்டும்தான் மனிதர்கள் செல்கிறார்கள். காற்று வீசுவது நின்றதும் சகல இடங்களிலும் தூசி படிந்து விடுகிறது. சோள வயல்கள் அழிந்து விடுகின்றன. மனிதர்கள் செய்வதறியாமல் வெளிறிப் போயிருக்கிறார்கள்.
காற்று இப்படி அழுக்காகி அழிச்சாட்டியம் செய்வதற்கு முன்பாக வங்கியின் அதிகாரிகள் ஊருக்குள் நுழைந்திருக்கிறார்கள். டிராக்டர்கள் நிலத்தை இராட்சசத்தனமாகக் குதறிப் போட்டபோதே அழிவின் ரேகைகள் தெரிய ஆரம்பித்து விட்டன. ஒரு டிராக்டர் பனிரெண்டு குடும்பங்களின் வாழ்வைப் பறித்து விட்டது. கம்பெனிகள் குறுகியகால பலன்களுக்காக பருத்தியை விதைக்க வைத்து நிலத்தின் வளத்தை சுரண்டி விட்டிருந்தது. வங்கியின் கணக்குகளே எல்லாவற்றையும், எல்லோரையும் தீர்மானித்துக் கொண்டிருந்தன. வங்கியதிகாரிகள் டிராக்டர்களை பிடுங்கிக்கொண்டு குத்தகை விவசாயிகளை காலி செய்து விடுகிறார்கள். அவர்கள் மீது விவசாயிகளுக்கு கடுங்கோபம் வருகிறது. பெரும் சக்தியின் அலைக்கழிப்புகளில் அகப்பட்ட துரும்புகளாகிப் போகிறார்கள் மனிதர்கள்.
பொருந்தாத ஆனால் புதிய சட்டையணிந்த, முப்பது வயது மதிக்கத்தக்க டாம் ஜோட் அந்த ஊருக்கு வருகிறான். அவனை ஏற்றிச்செல்லும் டிரக்கர் டிரைவரிடம் தான் ஒரு கொலைக் குற்றத்திற்காக நான்கு வருடங்கள் சிறையில் கழித்து விட்டு, திரும்புவதாகச் சொல்கிறான். வீட்டை நோக்கி நடந்து செல்லும்போது, ஒரு மரத்தின் நிழலில் பழைய போதகன் ஜிம் கேஸி உட்கார்ந்து 'இயேசுவே எனது இரட்சகர்' என்று பாடிக்கொண்டு இருக்கிறான். அவனுடன் பழக்கம் ஏற்படுகிறது. பெண்களோடு ஏற்பட்ட சகவாசங்களால் வருத்தமடைந்தாலும், புனிதமும் தெய்வீகமும் எல்லா மனிதர்களிடமும் இருப்பதாக கருதுகிறான் கேஸி. சிறை வாழ்க்கையைப் பற்றி, ஒரு வீட்டைப் பெறுவதற்கு தங்கள் குடும்பம் பட்ட பாட்டைப் பற்றி விவரிக்கிறான் டாம்.
இருவரும் டாமின் வீட்டை நோக்கி நடக்கிறார்கள். வீடே சிதைந்து வெறிச்சென்று இருக்கிறது. ஒரு பூனை மட்டுமே இருக்கிறது. வெட்டப்பட்ட கடவுளின் கைகள் போல இருப்பதாகச் சொல்கிறான் கேஸி. முல்லே என்னும் வயதான மனிதரை காண்கிறார்கள். நடந்த எல்லாவற்றையும் அவர் விவரிக்கிறார். அவருடைய குடும்பமும் கலிபோர்னியாவுக்கு பிழைப்புத் தேடி புலம் பெயர்ந்து விட்டதாகவும், தான் எங்கும் செல்ல விரும்பாமல் நிலங்களின் மீது ஆவி போல அலைந்து திரிந்து கொண்டிருப்பதாகவும் சொல்கிறார். டாமின் குடும்பத்தார் அங்க்கிள் ஜானின் வீட்டில் இருப்பதைத் தெரிந்து கொள்கிறார்கள்.
தனது மனைவியை நோயால் பறிகொடுத்திருந்த ஜான் கிட்டத்தட்ட புத்தி பேதலித்தவரைப் போல இருக்கிறார். வலிமையான, உறுதியான டாமின் அம்மாவே குடும்பத்தின் மையம். தாத்தா, பாட்டி, பிறக்கும்போதே மனவளர்ச்சி குன்றிய சகோதரன் நோவா, திருமணமாகி கர்ப்பமுற்றிருந்த சகோதரி ரோஸஷரன், பதினாறு வயதின் திளைப்பிலிருக்கிற இளைய சகோதரன் ஆல், பத்து பனிரெண்டே வயதேயான ருத்தி, வின்பீல்டு என்னும் இரண்டு சகோதரிகள் என எல்லோரோடும் மீண்டும் இணைகிறான் டாம்.
கலிபோர்னியாவுக்குச் செல்ல திட்டமிடுகிறார்கள். அங்கு வேலைகள் இருப்பதாக விளம்பரத்தைப் பார்க்கிறார்கள். தங்கள் பொருட்களை விற்கிறார்கள். எல்லாம் அடிமாட்டு விலைக்குத்தான் போகிறது. விற்க முடியாததை எரிக்கத்தான் வேண்டும். தூக்கிச் சுமந்து செல்ல இடமிருக்காது. கையில் இருநூறு டாலர்களே வைத்திருக்கிறார்கள். கேஸியும் அவர்களோடு செல்ல விரும்புகிறான். போதிப்பதற்கு பதிலாக, நிலங்களில் மனிதர்களோடு வேலை பார்த்து, அவர்கள் பேசுவதை கேட்க வேண்டியது நிறைய இருப்பதாகச் சொல்கிறான். பன்றிகளைக் கொன்று வழியில் உணவுக்கு ஏற்பாடு செய்து கொள்கிறார்கள். அப்பாவும் அங்கிள் ஜானும் ஒரு டிரக்கரை அழைத்து வருகிறார்கள். டிராக்டர் தவிர எதுவுமற்றதாய் வீடு நிற்கிறது. டிராக்டர்கள் ஒய்வெடுக்கும்போது வாழ்க்கை அவைகளை விட்டுவிட்டு கடந்து போகிறது.
நெடுஞ்சாலை நம்பர் 66 தான் மிசிசிபியிலிருந்து, பேக்கர்ஸ்பீல்டு வழியாக கலிபோர்னியாவுக்குச் செல்லும் முக்கிய பாதை. 'குப்பைகளிலிருந்தும், நாற்றங்களிலிருந்தும்' வரும் அகதிகள் வரிசையாக சென்று கொண்டு இருக்கிறார்கள். வழியில் அங்கங்கு பழுதடைந்துபோன கார்களின் அருகில் சிறு கூட்டமாய் குடும்பங்கள் நின்றுகொண்டிருந்ததைப் பார்க்க முடிந்தது.
கலிபோர்னியா மிகப் பெரிய மாநிலமாக இருந்தாலும், வருகிற தொழிலாளிகள் அனைவருக்கும் ஆதரவு அளிக்கக்கூடிய நிலையில் இல்லை. எல்லை கண்காணிப்பு அதிகாரிகள் அவர்களை திருப்பி அனுப்பி விடவும் கூடும். செல்லமாய் வளர்த்த நாய் இறந்து விடுகிறது. டாமின் தாத்தாவும் இறந்து போகிறார்.
கன்சாஸ் பகுதியிலிருந்து புலம்பெயர்ந்து வந்து கொண்டிருக்கும் வில்சன் குடும்பம் தாத்தாவை புதைப்பதற்கு உதவுகிறது. சொந்த மண்ணிலிருந்து பிரிந்து வந்ததே அவரது மரணத்திற்கு காரணம் என ஜிம்கேஸி சொல்கிறான். பயணத்தில் அவர்களோடு வில்சன் குடும்பமும் இணைந்து கொள்கிறது. வழியில் உள்ள கடைகளில் இப்படி வருபவர்களுக்கு பொருட்கள் கொடுக்க தயக்கங்கள் இருக்கின்றன. பணத்தைக் கொடுக்காமல் திருடிவிடுவார்கள் என்று நினைக்கிறார்கள்.
ரோஸஷரனுக்கு கலிபோர்னியாவில் சென்று என்ன செய்யப் போகிறோம் என்று தெரியவில்லை. அவள் கணவனுக்கு எதாவது தொழிற்சாலையில் வேலைபார்த்துக் கொண்டு வானொலி மூலம் எதாவது படிக்க வேண்டுமென்ற எண்ணம் இருக்கிறது. வில்சனின் கார் பழுதடைகிறது. ஜோட் குடும்பத்தாரை பயணத்தைத் தொடருமாறு வில்சன் சொல்கிறார். டாமின் அம்மா மறுக்கிறார். சேர்ந்தே செல்வோம் என்கிறார். காரை பாதுகாப்பாக நிறுத்தி பயணத்தைத் தொடர முடிவு செய்கிறார்கள்.
கலிபோர்னியாவிலிருந்து திரும்பிக் கொண்டிருக்கும் ஒருவர், அங்கு வேலை இருப்பதாக விளம்பரங்கள் செய்திருப்பதெல்லாம் மோசடி வேலை என்கிறார். "800 பேர் தேவைப்படும் வேலைக்கு பல ஆயிரம் பேர் வேலை கேட்டு வருகிறார்கள். அவர்களில் குறைந்த கூலி கேட்பவர்களை மட்டுமே வேலைக்கு வைத்துக் கொள்கிறார்கள்" என்று அனுபவத்தை சொல்கிறார்.
வருவது வரட்டும் என கலிபோர்னியாவை நெருங்குகிறார்கள்.
போலீஸ் அங்கங்கு விசாரிக்கிறது. இதற்கு கைதாகி சிறையில் இருப்பதே மேல் என வில்சனுக்கு தோன்றுகிறது. புலம்பெயர்ந்து வந்திருந்த பலர் எங்கே செல்வது எனத் தெரியாமல் திரும்பிக் கொண்டிருந்தனர். டாமின் சகோதரன் நோவா அதற்கு மேல் தன்னால் வர முடியாது என ஆற்றின் கரையில் இறங்கி விடுகிறான். தான் மீன்பிடித்து வாழப்போவதாகச் சொல்கிறான். பாட்டியும் இறந்து போகிறார். கடைவீதியில் ஒரு சிறுவன் இவர்களைப் பார்த்து "காட்டுமிராண்டிகளைப் போல இருக்கிறார்கள்" என்று சொன்னது காதில் விழுகிறது. அங்கிள் ஜானும், வில்சனும் தங்கள் அனைவருக்காகவும் ஜிம் கேஸியை பிரார்த்திக்கச் சொல்கிறார்கள். அவனுக்கோ கடவுள் மீது இருந்த நம்பிக்கை கலைந்துகொண்டு இருக்கிறது.
ஒருகாலத்தில் மெக்ஸிகோவின் பகுதியாக இருந்த கலிபோர்னியாவின் நிலங்களை அமெரிக்க விழுங்கிய பிறகு, ஆசியப் பகுதியிலிருந்து அடிமைகளைக் கொண்டு வந்து உழைப்பைச் சுரண்டினார்கள். நிலப்பிரபுக்கள் மெல்ல மெல்ல தொழிலதிபதிகளாகி விட்டிருந்தார்கள். புலம் பெயர்ந்து வருபவர்களை அவர்கள் வெறுத்தார்கள். உணவுக்கு ஏங்குகிற அவர்களிடம் நாகரீகம் இருப்பதில்லையாம். சொத்துக்கள் ஒரு சிலரிடம் அதிகமாக குவியும்போது, நாதியற்றவர்கள் கலகம் செய்வார்கள் எனவும் பயந்தார்கள்.
புலம் பெயர்ந்து தங்கியிருக்கும் ஒரு முகாமைச் சென்றடைந்து வேலை எதாவது கிடைக்க வாய்ப்பு உண்டா என இவர்கள் விசாரிக்கிறார்கள். டாமின் அம்மா சமையல் செய்ய நெருப்பு பற்ற வைக்கிற போது சுற்றிலும் அங்குள்ள குழந்தைகள் காத்திருப்பதைப் பார்க்கிறாள். போலீஸ் அலைக்கழிக்கிறது. அங்கிருப்பவர்களை ஒன்று திரட்ட எதாவது வழியுண்டா என டாம் யோசிக்கிறான். ரோஸஷரனின் கணவன் தவறான முடிவெடுத்து டாம் குடும்பத்தாரோடு வந்து விட்டோமோ என நினைக்கிறான். ஒரு தகராறில் டாம் போலீஸ் ஒருவனை அடித்து விட ஜிம் கேஸி அந்தப் பழியை தான் ஏற்றுக் கொண்டு சிறை செல்கிறான்.
அங்கிள் ஜான் வேதனையில் நிறையக் குடித்து நதிக்கரையில் கிடக்கிறார். டாம் அவரை அழைத்து வருகிறான். ரோஸஷரனின் கணவன் இவர்கள் அனைவரையும் விட்டுச் சென்று விடுகிறான். அரசின் முகாம் ஒன்று வசதியாய் இருப்பதாகக் கேள்விப்பட்டு அங்கிருந்து செல்கிறார்கள்.
கடந்த காலத்தை, பிறந்த மண்ணை, வாழ்க்கையை தொலைத்து வந்திருக்கும் புலம் பெயர்ந்தவர்களுக்கு கலிபோர்னியா கொடுத்த வரவேற்பு ஆத்திரமடைய வைக்கிறது. பெரிய தொழிலதிபர்கள் இதையும் பயன்படுத்திக் கொள்கிறார்கள். சந்தையில் அதிகமான பொருட்களை உற்பத்தி செய்து குறைந்த விலையில் விற்கிறார்கள். இதனால் சிறு வியாபாரிகள் தங்கள் தொழிலை இழந்து தெருவில் நிற்க வேண்டிய நிலைமை ஏற்படுகிறது. அரசு முகாமில் தண்ணீர், கழிப்பிட வசதிகள் எல்லாம் இருக்கின்றன. தாமஸ் என்னும் காண்டிராக்டர் குறைந்த கூலியில் வேலை தருகிறான். டாமின் அம்மா தங்கள் குடும்பம் இழந்ததை எல்லாம் நினைத்துப் பார்த்து வருத்தம் கொள்கிறாள்.
கலிபோர்னியாவில் வசந்த காலம் மரங்களில் பூக்களாகவும், கனிகளாகவும் வண்ணம் கொள்கிறது. திராட்சைகளை படைத்தவர்களால் தங்களுக்கான அமைப்பை படைக்கமுடியாமல் இருக்கிறது. பணக்காரர்கள் தங்கள் தோட்டத்தில் விளைந்த கனிகளுக்கு அதிகப்படியான விலையை நிர்ணயிக்கிறார்கள். விற்காமல் அழுகிப் போனாலும் அதிலிருந்து ஒயினை தயார் செய்து சாமானியர்களுக்கு அவர்களால் கொடுத்து விட முடியும். ஆரோக்கியமற்ற நிலையில் குழந்தைகளே இறந்து போகிறார்கள்.
குடும்பத்தில் டாமுக்கு மட்டுமே வாரத்தில் ஐந்து நாட்கள் வேலை கிடைக்கிறது. வறுமை பயமுறுத்துகிறது. ரோஸஷரனுக்கு பேறுகாலம் நெருங்கிக் கொண்டு இருந்தது. மேரிஸ்வில்லேவில் பருத்தி நிலங்கள் அறுவடைக்குத் தயாராக இருப்பதாக டாம் கேள்விப்படுகிறான். வடக்கு நோக்கி புறப்படுகிறார்கள். டாமின் இளைய சகோதரிகள் ருத்திக்கும், வின்பீல்டுக்கும் அங்கிருந்து கலிபோர்னியாவிலிருக்கும் பள்ளிக்கு செல்வது சங்கடமாக இருக்கிறது. பள்ளியில் மற்றவர்கள் கேவலமாக வேறு பேசுகிறார்கள். விலைவாசி அங்கு கடுமையாக இருக்கிறது.
ஒருநாள் இரவில் ஜிம் கேஸியை சந்திக்கிறான் டாம். சிறையில் இருந்து வந்து அங்குள்ள தொழிலாளிகளோடு சேர்ந்து ஊதிய உயர்வு கேட்டு வேலைநிறுத்தம் செய்து கொண்டிருக்கிறான் ஜிம் கேஸி. இனி தன் ஆன்மாவை தன்னிடமே தேடுவதை விட்டுவிட்டு சமூகத்தில் வஞ்சிக்கப்பட்டு நிற்கும் மனிதத்திரளிடம் தேடப் போவதாக சொல்கிறான். டாமும் அவர்களோடு சேர்ந்து கொள்கிறான். போலீஸுக்கும் அவர்களுக்கும் நடந்த தகராறில் டாம் ஒருவனைக் கொன்று விடுகிறான். டாமை மறைத்துக் கொண்டு அந்தக் குடும்பம் மீண்டும் பயணம் செய்கிறது.
பருத்தித் தொழிலில் வியாபாரிகள், செய்யும் சூழ்ச்சிகளால் மேலும் மேலும் தொழிலாளர்கள் வஞ்சிக்கப்படுகின்றனர். இயந்திரங்கள் புகுத்தப்படுவது தொழிலாளர்களை எதிர்காலமற்று நிற்க வைக்கிறது. டாமின் குடும்பம் அருவிக்கரையில் குடிபெயர்கிறது. டாம் காட்டில் ஒளிந்து கொண்டிருக்கிறான். அம்மா சென்று சந்திக்கிறாள். தன் மகனைத் தொட்டுப் பார்த்துக் கொள்கிறாள். எல்லாம் சரியான பிறகு குடும்பத்தாரோடு வந்து இணைந்து கொள்வதாகக் கூறிச் சென்று விடுகிறான்.
ஓக்லஹாமாவிலிருந்து வந்ததே தவறு என அப்பா கத்துகிறார். "ஆண்கள் அவர்கள் தலையால் வாழ்கிறார்கள். பெண்கள் தங்கள் கைகளால் வாழ்கிறார்கள்" என அம்மா சொல்கிறாள். அக்கி என்னும் அருகிலிருக்கும் பெண்ணிடம் ஆல் உறவு கொண்டு திருமணம் செய்து கொள்கிறான். ஆல், அக்கி, ரோஸஷரன் ஆகியோர் பருத்தி எடுக்கும் தொழிலுக்கு செல்கின்றனர்.
உக்கிரமான மழை பெய்ய ஆரம்பிக்கிறது. வேறு பகுதிக்குச் செல்ல திட்டமிடுகின்றனர். ரோஸஷரனுக்கு பிரசவ வலி வருகிறது. அருவிப்பகுதியில் வெள்ளம் கடுமையாக இருக்கிறது. இறந்து பிறந்த குழந்தையை அங்கிள் ஜான் ஒரு ஆப்பிளபெட்டியில் வைத்து வெள்ளத்தோடு அனுப்புகிறார்.
தானியக் களஞ்சியம் ஒன்றில் பாதுகாப்புக்கு தங்கிக் கொள்கின்றனர். அதன் ஒரு மூலையில் ஒரு மனிதனும் ஒரு சிறுவனும் பசியால் கொஞ்சம் கொஞ்சமாய் செத்துக் கொண்டிருப்பதைப் பார்க்கின்றனர். அம்மா எல்லோரையும் அங்கிருந்து வெளியே போயிருக்கச் சொல்கிறாள். ரோஸஷரன் அந்த மனிதனுக்கு தாய்ப்பாலைக் கொடுத்து காப்பாற்றுகிறாள்.
மனிதத்தின் அழகை மிக உச்சியில் ஏற்றி வைத்து கதையை முடிக்கிறார் ஸ்டெய்ன்பெர்க்.
நாகரீகமற்றவர்கள் என்றும், காட்டுமிராண்டிகள் என்றும் கருதப்படுபவர்களிடம் இருக்கும் தாய்மையின் ஒளியை அந்த எழுத்துக்களில் தரிசிக்க முடிகிறது. இழப்பதற்கு எதுவும் இல்லாதவர்கள் கொடுப்பதற்கு உயிரின் துளிகளைப் போல அபூர்வமானதை வைத்திருக்கிறார்கள் என்று சொல்கிறது. உலகைக் காப்பாற்றும் சக்தி அந்த எளிய மனிதர்களிடம் இருப்பதைக் காட்டுகிறது. உயிரோடு இருப்பவர்களைக் கொல்லும் ஒரு அமைப்பையும், செத்துக் கொண்டிருப்பவனுக்கு உயிர் கொடுக்கும் ஒரு தாயையும் தராசில் நிறுத்தி சமூகத்திடம் கேள்வி கேட்கிறது நாவல்.
நாவலின் பல இடங்களில் மனிதர்கள் இந்த அமைப்பை சபிப்பதும், கடுங்கோபம் கொள்வதும் உரையாடல்களாக முன்வைக்கப்படிருக்கின்றன. மண்ணின் மீதும், மக்களின் மீதும் ஸ்டெய்ன்பெர்க்கிற்கு இருந்த காதலே அதன் அடிநாதமாக இருப்பதாக விமர்சகர்கள் எழுதுகிறார்கள்.
புழுதியும், புலம் பெயர்தலும், லாபம், லாபம் என முதலாளித்துவம் பசிகொண்டு அலைவதும் இப்போதும் கண்முன்னே நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. 1929ஐப் போல பெரும் பொருளாதார நெருக்கடியில் உலகம் திரும்பவும் சிக்கிக் கொள்ளும் என்பதற்கு இந்த நாவலின் காட்சிகளே அபாய அறிவிப்பாய் இருக்கிறது. எழுத்தாளன் கடந்த காலத்தைச் சொல்கிறவன் இல்லை. எதிர்காலம் பற்றிய கனவுகள் காண்கிறவன். ஸ்டெய்ன்பெர்க்கின் கனவில் ரோஸஷரன் கொடுத்த தாய்ப்பாலின் ஈரம் படிந்திருக்கிறது. அது யாரையும் சாக விடாது.
இதோ தென்கிழக்குக் கடற்கரையில், தாங்கள் வாழ்ந்த நிலப்பரப்பை விட்டுவிட்டு நினைவுகளை மட்டும் சுமந்து கொண்டு நம் மண்ணில் கால் வைக்கும் மனிதர்களின் வலியை எத்தனை பேர் இங்கு உணர்ந்திருக்கிறோம்? புலம் பெயர்வது என்பது வேரோடு பிடுங்கி எறியப்படுவதைப் போல என எத்தனை பேர் அறிந்து வைத்திருக்கிறோம்? வரலாற்றில் தடை செய்யப்பட்ட நாவலகள் தொடர்