காந்தி புன்னகைக்கிறார்- கடைசி அத்தியாயம்


பல்லாயிரம் ஆண்டுகளை உட்கொண்ட இந்த மண்ணின் வாசம் சகிப்புத்தன்மையே என்பது எல்லோருக்கும் தெரியும். அதைவிட மனித சமுதாயத்தின் மீது காட்டிய மரியாதை என்பதும் தெரியும்.ஆரியர்களை, ஹூணர்களை, மங்கோலியர்களை, முகம்மதியர்களை, ஆங்கிலேயர்களை என வெளியில் இருந்து வந்தவர்களை எல்லாம் இந்த மண்ணில் வாழ வைத்திருக்கிறோம். பல மொழி, பல கலாச்சாரம், பல மதங்களின் சங்கமமாக இந்தியா தன்னை உருவமைத்துக் கொண்டதுதான் இதன் வரலாறு என்பது எல்லோருக்கும் தெரியும்.


இங்கு போர்கள் நடந்திருக்கின்றன. புதிய மதங்கள் தோன்றியிருக்கின்றன. வாளின் முனையில் மதங்கள் அழிக்கப்பட்டிருக்கின்றன. பேரரசுகள் தோன்றியிருக்கின்றன. சூழ்ச்சிகள் நடந்திருக்கின்றன. பெரும் தியாகங்கள் நிகழ்ந்திருக்கின்றன. இந்தியா உருக்குலைந்து போகவில்லை. உரம் பெற்றிருக்கிறது என்றே சொல்ல வேண்டும். உலகுக்கு வழிகாட்டும் அளவுக்கு சோதனைகளை சந்தித்த, அனுபவங்களை பெற்ற நாடாக நாம் இருக்கிறோம்.



கடந்தகாலத்தை அழிப்பதல்ல எதிர்காலம். கடந்த காலத்திற்காக பழி வாங்குவதல்ல எதிர்காலம். கடந்த காலத்தை சுவீகரிப்பதுதான் எதிர்காலம். கடந்த காலத்தின் தோளில் நின்று பயணம் செய்வதுதான் எதிர்காலம். இதை புரிந்து கொண்டவர்தான் மகாத்மா காந்தி.


ஆனால் கோட்சேக்களுக்கு, அவனது ஆவியாய் அலைபவர்களுக்கு ஒரே வெறிதான். எல்லாவற்றையும் நிர்மூலமாக்குவது. பெரும் அழிவுகளின் மீது நின்று தனது ஆதிக்கத்தை நிறுவுவது. அதற்கு எந்த விலையையும் கொடுக்கவும், எந்த அறநெறியையும் மீறவும் அவர்கள் தயாராய் இருப்பார்கள். குழப்பங்களையும், கலவரங்களையும் விதைக்காமல் தங்கள் கனவு நிறைவேறாது என்று அவர்களுக்குத் தெரியும்.


அதுதான் நடந்து கொண்டிருக்கிறது. குஜராத்திலும், மகாராஷ்டிராவிலும், கோட்சேவை பெரும் தியாகிகளாக காட்டிய அந்த மண்ணில்தான் கடந்த பத்து பனிரெண்டு வருடங்களில் பெரும் கலவரங்கள் நடந்திருக்கின்றன. எத்தனை படுகொலைகள், எத்தனை கற்பழிப்புகள், எத்தனை கருகிப் போன வீதிகள்...அந்த அழிவுகளின் மீதுதான் அவர்களால் தங்கள் அரசை நிறுவ முடிகிறது. "இது காந்தியின் தேசம் அல்ல...கோட்சேவின் பூமி" என்று குஜராத்தில் உரக்கச் சொல்ல முடிகிறது. மகாத்மாவுக்கு இது மிகவும் வேதனைக்குரிய செய்தியாகத்தான் இருக்கும்.


ஆனால் அவருக்கு நம்பிக்கை அளிக்கிற காட்சிகளும் இன்னொரு புறம் இருக்கத்தான் செய்கிறது.


பிரிவினையின் போதும், விடுதலையை ஒட்டிய நாட்களின் போதும் இந்திய தேசத்தின் இரண்டு பக்கங்களில் மிகப் பெரிய மனிதக் கலவரங்கள் நடந்தன .ஒருபுறம் பஞ்சாபிலும், அதையொட்டிய மேற்குப் பகுதிகளிலும். இன்னொரு புறம் கல்கத்தாவின் நவகாளியில் மட்டும் ஒன்றரை லட்சம் பேர் இறந்ததாக சொல்லப்படுகிறது. அங்குதான் முன்னொரு நாள் மகாத்மா அமைதிக்கான யாத்திரை செய்திருந்தார்.


ஆனால் இப்போதும் இந்தியாவின் மேற்குப்பகுதியில் அடிக்கடி வகுப்புக் கலவரங்களும் அமைதியின்மையும் நிலவிக் கொண்டே இருக்கிறது. குஜராத்திலும், மகாராஷ்டிராவிலும் மனித வரலாற்றின் இரத்த வெறி கொண்ட பக்கங்கள் தொடர்ந்து எழுதப்படுகின்றன.


கல்கத்தாவோ அமைதியாக இருக்கிறது. ஹூக்ளி நதி நடுங்காமல் ஓடிக் கொண்டு இருக்கிறது. மதத்தையும், மத நம்பிக்கையயும் மனிதர்களையும், வரலாற்றையும் மிகச் சரியாக புரிந்து கொண்ட ஒரு அரசு அங்கு அமைந்திருக்கிறது. இதுதான் காலம் இந்தியாவுக்கும் மகாத்மாவுக்கும் சொல்லும் செய்தி.


களைப்பாய் இருக்கிறதோ
களைப்பாய் இல்லையோ-
நாங்கள்வேகம் குறைந்து போக மாட்டோம்.
அப்படியே நின்றும் விட மாட்டோம்.


உனது போராட்டத்தில்
நீ தனியே விடப்படவில்லை-
நாங்கள்தொடர்ந்து செல்வோம்
வேகம் குறைந்துவிட மாட்டோம்.


காந்தி அந்த பொக்கை வாய் திறந்து நம்பிக்கையோடு புன்னகைக்கிறார்.

(முற்றும்)

வாருங்கள் முன்பக்கம்!

கருத்துகள்

6 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. Excellent manner you have finished your final. Congratulations Sir ! Not only that BUT with HOPE YOU HAVE FINISHED.The history of a nation is not written by one year.It consists of so many centuries.With patience and hope all the right thinking people have to work towards peace and coexistence of our social life-
    vimalavidya@gmail.com

    பதிலளிநீக்கு
  2. மிகச் சிறந்த தொடர். இன்று தான் படித்தேன். அருமையான எழுத்து நடை! அண்ணல் விரும்பிய பாடலோடு மிகச்சரியாக முடித்திருக்கிறீர்கள். பாராட்டுகள்! தொடரைச் சிறு நூலாக வெளியிடலாமே!

    பதிலளிநீக்கு
  3. நன்றி தோழர் ஆதி!
    புத்தகமாக வெளிவந்திருக்கிறதே.
    பாரதி புத்தகாலயம் வெளியிட்டு இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  4. பின்னூட்டம் இடும்போதே நினைத்தேன் புத்தகம் வந்திருக்கும் என்று! அண்மையில் திருநெல்வேலியில் பாரதி புத்தாகலயத்திற்குச் சென்றேன். அங்கு இப்புத்தகம் இல்லை! எனவேதான் இந்தக் குழப்பம்!

    பதிலளிநீக்கு
  5. தாங்கள் எங்கு இருக்கிறீர்கள். முகவரி தந்தால் அனுப்பிவைக்க முயல்கிறேன்.

    பதிலளிநீக்கு
  6. மிக்க நன்றி! என்னுடைய தந்தை இரா. கிருட்டினன், சிறீவைகுண்டம் பாண்டியன் கிராம வங்கியில் எழுத்தராகப்பணியாற்றுகிறார். இயன்றால் அவருக்கு அனுப்பி வைத்தாலும் உதவியாக இருக்கும். தற்போது நான் ஐதராபாத்தில் பணியாற்றுவதால் அடுத்த மாதம் ஊருக்கு வரும்போது பெற்றுக்கொள்வேன்.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!