காந்தி புன்னகைக்கிறார் - ஏழாம் அத்தியாயம்


வழக்கின் உண்மைகள் ஒருபுறம் புதைக்கப்பட்டிருக்கிற வேளையில் இப்போது அடுத்த கட்டமாக வரலாற்றையே வதை செய்திட இந்துத்துவா அமைப்புகள் முனைப்புடன் இருக்கின்றன.எந்த நாதுராம் கோட்சே இந்திய மக்களால் வெறுக்கப்பட்டானோ- எவன் இந்தியாவின் ஆன்மாவை சுட்டுக் கொன்றானோ- எவன் அந்த அமைதிப் புறாவை இரத்தம் சிந்த சிந்த மண்ணில் வீழ்த்தினானோ அவனை, இந்தியாவின் தவப்புதல்வனாகவும், ஒப்பற்ற தியாகியாகவும் சித்தரிக்க முயற்சிகள் நடக்கின்றன. மக்கள் வரலாற்றை மறந்துவிடும்போது அவர்கள் அனாதையாகி விடுகிறார்கள்.நாதுராம் கோட்சேவின் தம்பி எழுதிய "காந்தியின் மரணமும் நானும்" மற்றும் "55 கோடியின் தியாகம்(அப்பாவி)" போன்ற புத்தகங்கள் மகாராஷ்டிரவிலும், குஜராத்திலும் மிக அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டிருக்கின்றன. குஜராத்தில் "காந்தியும் கோட்சேவும்" நாடகம் அங்கு பி.ஜே.பி அரசு அமைந்ததும் அரங்கேற்றப்பட்டது. இவைகளில் காந்தி இந்துக்களின் துரோகியாகவும், கோட்சே தியாகியாகவும் சித்தரிக்கப்பட்டிருந்தது. காந்தி பிறந்த மண்ணிலேயே அவர் காணாமல் போகிறார்.1995ல் மகாராஷ்டிராவில் சிவசேனைக்கு பொறுப்புக்கு வந்ததும்,. பிரதீப் தால்வியின்' நான் நாதுராம் பேசுகிறேன்" என்னும் நூல் நாடகமாக்கப்பட்டு அரங்கேற்றப்பட்டது. அதன் முதல் காட்சியிலேயே கோட்சே தோன்றி "எனது இதயத்தில் ஆழமான காயம் இருக்கிறது...அந்தக் காயத்தின் மீது மீண்டும் மீண்டும் அடிகள் விழுந்தன. பிரிவினையால் தேசமே துண்டாகிப் போனது. அகதிகள் படுகொலை செய்யப்பட்டனர். எனது தாய்மார்களும், சகோதரிகளும் கற்பழிக்கப்பட்டனர், காஷ்மீரில் நமது வீரர்கள் உயிரைத் தியாகம் புரிந்து சமர் செய்யும் போது பாகிஸ்தானுக்கு 55 கோடி ருபாய் கொடுக்கப்பட்டது. இந்தக் காயங்களுக்கெல்லாம் காரணம் காந்திதான்." என்று உனர்ச்சிகரமாக பேசி கூட்டத்தினரை உணர்வு ரீதியாக வெறியேற்றி தன் வசமாக்குவான். காலம் காலமாக இவர்களால் புறக்கணிக்கப்பட்டு, அவமானப்படுத்தப்பட்டு காயங்களும், ரணங்களுமே உருவங்களாகிப் போன தாழ்த்தப்பட்டவர்கள் இவன் மாதிரி பேச மூடியாமல் இருப்பதால்தான் இவனுக்கு வெட்கமேயில்லாமல் இப்படி பேசமுடிகிறது.கொலை நடந்த அன்றைக்கு டெல்லியில் துக்ளக் சாலையில் அமைந்துள்ள போலீஸ் ஸ்டேஷனில் இரவு கோட்சேவை காந்தியின் மகன் தேவதாஸ் காந்தி சென்று சந்திப்பதாகவும், அவனை கைகுலுக்குவது போலவும் ஒரு காட்சி அமைக்கப்பட்டிருக்கிறது. பார்வையாளரின் மனோநிலையில் தடுமாற்றம் வர அமைக்கப்பட்டுள்ள ஒரு குரூரமான கற்பனை தந்திரம்.ஜெயிலில் ஷேக் என்னும் காவல் அதிகாரி கோட்சேவோடு பழக்கமாகிறான். அவன் நாதுராமிடம் "கோர்ட்டில் நீ உட்கார்ந்திருந்த இடத்தில் என் மகள் சுபேதா மலர்களை தூவினாள்' என்கிறான். மேலும் தனது மகள் மசூதிக்கு ஒவ்வொரு நாளும் சென்று உனக்கு கடவுளின் ஆசீர்வாதங்களை வேண்டிக் கொண்டு இருப்பதாகவும் சொல்கிறான். அவள் கர்ப்பம் தரித்திருப்பதாகவும் உன்னை பார்க்க வர முடியாமல் இருப்பதாக சொல்கிறான். கோட்சே அவனிடம் "நீங்கள் இந்த சகோதரனை உண்மையில் நேசிப்பதாக இருந்தால், அவளது வயிற்றில் பிறக்கும் குழந்தைக்கு எனது சிந்தனைகளை, செய்திகளைச் சொல்லுங்கள். இந்த மண்ணில் இன்னொரு காந்தி வந்தால் இன்னொரு கோட்சே வேண்டும்." என்று சொல்கிறான். யாரை அவன் வெறுத்தானோ, யாருக்காக மகாத்மா வருத்தப்பட்டார் என்று அவரைக் கொன்றோனோ அவர்களிலிருந்து இன்னொரு கோட்சே பிறப்பான் என்பது எப்பேர்ப்பட்ட குதர்க்கமான கற்பனை.காந்தியின் கொலையை குறிப்பிடும் போதெல்லாம் 'வதை' என்கிற வார்த்தை உபயோகப்படுத்தப்பட்டு இந்துக்களின் மனோநிலையில் அவர்கள் அறியாமலேயே காந்தியின் மீது வெறுப்பு தூண்டப்படுகிறது. இதைவிடக் கொடுமை, காந்தி உண்ணாவிரதம் முடித்து பழச்சாறு சாப்பிடும்போது ஒரு இந்து தந்தை "அது என் மகனின் இரத்தம்" என்று சொல்கிற அளவுக்கு விஷம் கக்கப்பட்டிருக்கிறது. இந்த நாடகம் கேரளத்திலும் மற்ற மாநிலங்களிலும் அரங்கேற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அங்கெல்லாம் தடை விதிக்கப்பட்டுள்ளன. மகாராஷ்டிராவில் 1997 ஆகஸ்ட் 15 ம் தேதி தாதரில் "காந்தியின் கொலையாளி" என்னும் புத்தகம் கே.வி.சீதாராமைய்யா என்பவரால் எழுதப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. அதை வெளியிட்டது நாதுராம் கோட்சேவின் தம்பி கோபால் கோட்சே. சிறப்பு அழைப்பாளர் காந்தி மீது முதல் கொலை முயற்சி நடத்திய மதன்லால் பாவா! இந்தப் புத்தகத்தையும் கேரளாவில் கோபால் கோட்சேவை வைத்து வெளியிட தீர்மானித்திருந்தார்கள். அரசு தடை செய்துவிடும் என்பதறிந்து வெளியீட்டாளர்கள் நிகழ்ச்சியை ஒத்தி வைத்தார்கள். ஆனால் சங்பரிவாரத்தினர் தங்களுக்கு இருக்கும் அமைப்புகள் மூலம் வேகவேகமாய் விற்றனர். முடிந்த அளவுக்கு மக்களிடம் போய்ச் சேர வேண்டும் என்று செயல்பட்டனர். ஆனால் வெளியே எங்களுக்கும் கோட்சேவுக்கும் சம்பந்தமில்லை என்று சத்தியம் செய்வார்கள்.அதே நேரம் ஆனந்த் பட்வர்த்தனின் "போரும் சமாதானமும் என்கிற திரைப்படத்தில் வரும் காட்சிகளுக்கு 6 இடங்களில் சென்சார் போர்டு கைவைத்துள்ளது. அதை மறுபரீசீலனை செய்ய அனுப்பியபோது 21 காட்சிகள் நீக்கப்பட்டன. அதில் ஒன்று மகாத்மாவை நாதுராம் கோட்சே கொன்றதாக காட்டப்படும் காட்சி! அந்தப் படம் மகாத்மாவின் அகிம்சையை பின்னணியாக வைத்து எடுக்கப்பட்ட அணு ஆயுத போருக்கு எதிரான படம்!! எது இங்கு பேசப்பட வேண்டுமோ அது பேசப்பட அனுமதியில்லை. ஆனால் எதை இங்கு பேசக்கூடாதோ அதை இங்கு பேசலாம்.குஜராத்தில் மாநிலக் கல்வித்துறை பாடத்திட்டத்தில் எட்டாம் வகுப்பு வரலாற்றுப் பாடத்தில் 'காந்தியின் கொலை' என்று உபதலைப்பிட்டு கீழ்க்கண்டவாறு சொல்லப்பட்டிருக்கிறது. "சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியாவின் பல இடங்களில் வகுப்புக் கலவரங்கள் நடந்தன. காந்தி அதை அடக்குவதற்கு முயற்சி செய்தார். நிறைய இந்துக்கள் இதனை விரும்பவில்லை. 1948 ஜனவரி 30ம் தேதி கோட்சேவின் கைகளால் கொல்லப்பட்டார்." இன்னொரு வரலாற்றுப் பாடத்தில் "வெறுப்புகளினால் கிழிக்கப்பட்டிருந்த வங்காளத்தில் வகுப்புவாத கொடுமைகளில் பாதிக்கப்பட்ட மக்களை சாந்தப்படுத்துவதற்காக காந்தி யாத்திரை செய்தார். புதிய தேசத்தில் சந்தோஷமும், வெறுப்பும் சூழ்ந்திருந்த போது காந்தி நாதுராம் கோட்சேவால் சுட்டுக் கொல்லப்பட்டார்." நாதுராம் கோட்சே என்பவன் யார்...ஏன் கொன்றான் என்பதை குறிப்பிடாமல் காந்தியின் மரணம் நியாயமாக நிகழவேண்டிய, ஒரு உனர்ச்சி வசப்பட்ட மக்களால் நடந்த மாதிரி, போகிற போகில் சொல்லப்படுகிறது. குழந்தைகளின் அறிவுக்குள் தங்கள் வரலாற்று மோசடியை புகுத்தி அவர்களையும் இருளில் மூழ்கடிக்கிற சூழ்ச்சி சத்தமில்லாமல் நடந்து கொண்டிருக்கிறது.சில காலங்களுக்கு முன்பு பிரதம மந்திரி வாஜ்பாய் அவரது அதிகாரபூர்வ இருப்பிடத்தில் பி.ஜே.பி தலைவர் ஒருவர் எழுதிய 'லஷ்மண ராவ்' பற்றிய புத்தகத்தை வெளியிட்டார். அத்தோடு நில்லாமல் ஜவஹர்லால் நேருவுக்கு சமமாக பேசினார். இந்த லஷ்மண ராவ் வேறு யாருமல்ல..மகாத்மா காந்தியை கொன்றவர்களுக்கு ஆதரவாக நின்றவர். வாஜ்பாய் ஒருவேளை அன்று தனது மூகமூடியை மறந்துவிட்டு வந்திருக்கக்கூடும். இப்படி ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் இவர்களது கள்ளத் தொடர்புகள் அவ்வப்போது வெளிப்படும்.


அதுதான் கோபால் கோட்சேவை போன தேர்தலில் பாரதீய ஜனதாவுக்கு அதிக இடங்கள் கிடைத்ததும் சந்தோசமடைய வைக்கிறது. "1400 வருடங்களாக நாங்கள் நம்பிக்கையோடு காத்திருந்தது நிகழப் போகிறது... இறுதியாக எங்கள் இந்து ராஷ்டிரா அமையப் போகிறது" என்று உற்சாகமடைய வைக்கிறது.டைம்ஸ் ஆப் இந்தியா, ஜனவரி 25, 1998 இதழில் கோபால் கோட்சே அளித்த பேட்டியில் "சித்தாந்தரீதியாக நாதுராம் கோட்சே ஆர்.எஸ்.எஸ்ஸின் உறுப்பினன் தான். அதற்காக பணிபுரிவதை பிறகு நிறுத்திக் கொண்டான். கோர்ட்டில் நான் ஆர்.எஸ்.எஸ்ஸில் உறுப்பினன் இல்லை என்றது ஆர்.எஸ்.எஸ்ஸைக் காப்பாற்றும் முயற்சியே. ஆர்.எஸ்.எஸ் ஊழியர்கள் இதனால் பாதுகாக்கப்படுவார்கள் என்கிற புரிதலில் கோட்சே அதனை சந்தோஷமாகச் செய்தான்" என்கிறார். இன்னொரு சந்தர்ப்பத்தில் கோட்சேவின் தம்பி சொல்கிறார்.."எங்கள் தலைமுறை முடிந்துவிட்டது. இந்த தலைமுறை நாதுராம் கோட்சேவை முற்றிலும் அறியாமல் போகலாம். ஆனால் அடுத்த தலைமுறை நிச்சயம் கோட்சேவை தேசபக்தி கொண்ட தியாகியாக பார்க்கும்"


அவரது பார்வை சாம்பலும் எலும்பும் அடங்கிய கோட்சேயின் அஸ்தியை பார்க்கிறது. 55 வருடங்களாக அதற்கு பூஜை நடந்து கொண்டு இருக்கிறது. நிறைவேறாத ஆசைகளோடு இளவயதில் துர்மரணமடைந்த கெட்ட ஆவியாக அந்த அஸ்தி, அவருக்கு தெரியாதுதான். மத நம்பிக்கையைத் தாண்டி ஒரு வெறி அவர் மூளைக்குள் பாய்ந்திருக்கிறது.


அது ஏற்கனவே பாபர் மசூதியை இடித்து பம்பாயிலும், ஹைதராபத்திலும், உத்திரப்பிரதேசத்திலும் பெரும் கலவரங்களை ஏற்படுத்தி விட்டது. தாகம் அடங்க அடங்க இரத்தம் குடித்தும் போதாமல் குஜராத்தில் கோரத்தாண்டவமாடியது. மேடையில் தன்னைபோல ஒரு நாதுராம் எங்கிருந்து வரவேண்டும் என பொய்யாய் ஆசைப்பட்டதோ அப்படி ஒரு மூஸ்லீம் சகோதரியின் வயிற்றை கிழித்து அங்கிருந்த சின்னஞ்சிறு சிசுவின் இரத்தம் குடித்தது. இன்னும் அடங்காமல் இருக்கிறது. இந்தியாவின் இரத்தம் முழுவதும் குடித்தாலும் அதற்கு அடங்காது. இந்து ராஜ்ஜியம் அமைந்தால் போதும்.

(கடைசி அத்தியாயம் நாளை)

முன்பக்கம்

கருத்துகள்

2 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. Gopal godse Interview had already publised im FRONT LINE...The godse people should be exposed effectively. In this regard we have to do more and more work..Systematic exposer is important.
    R.Vimala vidya

    பதிலளிநீக்கு
  2. விமலாவித்யா அவர்களுக்கு!

    அந்த இண்டர்வியூவை இணையதளத்தில் படித்துத்தான் சுட்டிக்காட்டியிருக்கிறேன்.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!