காந்தி புன்னகைக்கிறார் - ஆறாம் அத்தியாயம்


முதலாவதாக கோட்சே தன்னைச் சார்ந்த முக்கியமான நபர்களை காப்பாறறும் முயற்சியில் இறங்குகிறான்.


"முதன் முதலாக நான் சொல்லிக் கொள்ள விரும்புவது காந்தியின் கொலையில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கிடையே எந்த சதியும் இருக்கவில்லை."


"நான் 602864 எண்ணுள்ள பிஸ்டலை வைத்திருந்தேன். அது பற்றி நாராயண ஆப்தேவுக்கும், விஷ்ணு கார்காரேவுக்கும் ஒன்றும் தெரியாது"
"காந்தியை கொல்லும் பணியை வீர சவார்க்கர் எனக்கும் , நாராயன ஆப்தேக்கும் ஒப்படைத்துள்ளதாக பாட்கே கூறிய தகவல் அவனது மூளையில் உதயமானது.""ஜனவரி 17ம் தேதி வீர சவார்க்கர் எங்களை வெற்றிகரமாக முடித்து வாருங்கள் என்று வாழ்த்தியதாக பாட்கே சொன்னது பொய்"


" நான் மட்டுமே முடிவு செய்தேன். என் கைகளில் துணிவினை ஏந்தினேன். சுட்டேன்"தன்னை தவிர வேறு யாரும் இந்த வழக்கில் சிக்கிக் கொள்ள வேண்டாம் , மற்றவர்கள் வெளியே சென்று மகாத்மாவுக்குப் பிறகு இந்திய வரலாற்றை மாற்றி எழுத வேண்டும் என்று ஆசைப்பட்டான். அதுதான் மகாத்மாவின் கொலைக்கான உண்மையான அர்த்தமாகும் என்பது அவனுக்குத் தெரியும் .கோர்ட்டில் அவனது வாக்கு மூலத்தை படித்தால் புரியும்.இரண்டாவது, காந்தியை கொல்வதற்கான நியாயமான காரணங்கள் இருந்ததாகச் சொல்கிறான். பிரிவினைக்கு அவர்தான் காரணம் என்றும் அதன்மூலம் ஏற்பட்ட கலவரங்களில் இந்துக்கள் பாதிக்கப்பட்டதற்கும் அவரே காரணம் என்றும் குற்றம் சாட்டுகிறான். இது முற்றிலுமான பொய். காந்தி பிரிவினைக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார் என்பது இந்திய அரசியலில் அன்றைக்கு சாதாரண பாமரனுக்கும் தெரிந்த பத்திரிக்கைச் செய்தி.அடுத்ததாக, காந்தி எப்போதும் பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்து வந்தார் என்றும் முஸ்லீம்களை தாஜா செய்தார் என்றும் சொல்லப்படுகிறது. இதுவும் உண்மையல்ல. காந்தி அவரது மனதில் பட்டதை மிகக் கடுமையாகவே பேசியிருக்கிறார். அவர் உண்ணாவிரதம் இருந்த ஜனவரி 13ம் தேதி பற்றி பிரார்த்தனைக் கூட்டத்தில் பேசும்போது , பாகிஸ் தானின் நடவடிக்கைகள், மோசமான நிலைமைகளுக்கு இட்டுச் செல்வதாகக் கருதி "நான் பாகிஸ்தானை காகிதத்தில் பார்க்க விரும்பவில்லை. அங்குள்ள பேச்சாளர்களின் வார்த்தைகளில் பார்க்க விரும்பவில்லை. அங்குள்ள முஸ்லீம்களின் அன்றாட வாழ்க்கையில் பார்க்க விரும்புகிறேன். இந்த விரதம் அதற்கான ஒரு சிறு முயற்சி " என்று மிக அழுத்தமாக சொல்கிறார். சாகேப் குரேய்ஷி என்னும் காந்தியின் நண்பர் காந்தியின் இந்த வார்த்தைகளை எதிர்த்து கடிதங்கள் எழுதவும், காந்தி இன்னும் தெளிவாக பதில் எழுதுகிறார். "நான் உண்மையைச் சொல்வதற்கு தயங்க மாட்டேன். பாகிஸ்தானிலோ, இங்குள்ள முஸ்லீம்களோ எனது அறிவுரைகளை விரும்புகிறார்களோ இல்லையோ நான் சொல்லிக் கொண்டு இருப்பேன்." காந்தி மிகத் தெளிவாக தனது நிலையில் இருக்கிறார். எங்கு தவறுகள் இருந்தாலும் அவர் அதைச் சுட்டிக் காட்டவும், சரி செய்யவும் தயங்கவில்லை. எனவே கோட்சே காந்தி மீது கற்பித்த களங்கமானது தொடர்ந்து இந்துத்துவா சக்திகள் இன்றுவரை சொல்லிக் கொண்டு இருப்பதுதான்.அப்புறம் மிக முக்கியமாக சொல்வது பாகிஸ்தானுக்காக ரூ.55 கோடி கொடுக்க வேண்டும் என காந்தி உண்ணாவிரதம் இருந்தார் என்பதை. உண்மையில் காந்தி உண்ணாவிரதம் இருக்க ஆரம்பிக்கும் போது 55 கோடி கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தவில்லை. உண்ணாவிரதம் ஆரம்பித்த பிறகுதான் அதை ஒரு பிரச்சினையாக பார்த்தார். ஆனால் அந்த 55 கோடி கொடுக்க வேண்டும் என்பது இந்தியாவின் தார்மீகக் கடமை என்றே கருதினார். அப்படிக் கொடுப்பது இரண்டு நாடுகளுக்கு இடையே நிலவும் பதற்றங்களை தவிர்க்க உதவும் எனவும் கருதினார். எந்த நடுநிலையாளனும் அப்படித்தான் யோசிக்க முடியும்.கோட்சே, காந்தி மீது கோபம் கொண்டதற்கு சொன்ன பல காரணங்கள் உண்மைக்கு புறம்பானவை. ஆனால் ஒரு இடத்தில் அவன் உண்மையை வெளிப்படுத்தி இருக்கிறான். அதுதான் இந்த வழக்கில், இந்திய வரலாற்றில் கவனிக்க வேண்டியதாயிருக்கிறது. "காந்தி இல்லாத தேசம் செயல்முறைக்கு உகந்ததாகவும், ஆயுதங்களோடு வலிமை பொருந்தியதாகவும் இருக்கும்" என்கிறான். இவர்களின் கோபம் எங்கிருந்து ஆரம்பிக்கிறது என்பது தெளிவாகிறது. இன்றைக்கு அவர்கள் முழங்கும் "வல்லரசு' பிரகடனங்களோடு ஒப்பிட்டு பார்த்தால் இன்னும் தெளிவாகத் தெரியும்.
மூன்றாவது அவனது வாக்கு மூலத்தின் மூலம் கோர்ட்டிலும், மக்களிடமும் மரணம் என்னும் உணர்வு குவிந்த தளத்தில் நின்று ஒரு பிரச்சாரம் நிகழ்த்திவிட வேண்டும் எனவும், அது மகாத்மாவின் புகழை- மரியாதையை மங்கச் செய்வதாக இருக்க வேண்டும் எனவும் திட்டமிடப்பட்டிருந்தது. அதற்காகவே நாதுராம் கோட்சே தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தான். இயல்பாகவே கிளர்ச்சியுறப் பேசும் அந்த சித்பவ பிராமணன் தன் அறிவு, ஆற்றல் முழுவதையும் அதற்கு பயன்படுத்தி இருக்கிறான்.


தீர்ப்பு எழுதிய நீதிபதி மாண்புமிகு கோஸ்லா 5 மணி நேரம் நீடித்த அவனது வாக்குமூலத்தின் போது கோர்ட்டில் இருந்தவர்கள் உணர்ச்சிப் பெருக்கால் தவித்தது பற்றியும், ஒரு நெஞ்சைப் பிழியும் நாடகத்தை பார்த்தது போல இருந்ததாகவும் பின்னாளில் எழுதுகிறார்.அவனது உயிலும் கூட அப்படித்தான். "எந்த நதியின் கரைகளில் வேதங்கள் ஒலித்ததோ, அந்த சிந்து எப்போது நமது மண்ணில் சுதந்திரமாக பாய்கிறதோ, அதுதான் நமது புனித நாள். அப்போது எனது அஸ்தி அந்நதியில் கரைக்க வேண்டும்"த்னது அஸ்தியை- அவன் வெறி பிடித்த கூட்டத்தின் கனவாக கொடுத்துப் போயிருக்கிறான். சந்தோசமும், அழகும் என்றைக்கும் இந்த மண்ணில் வந்துவிடக் கூடாது என்று கோபம் கொண்ட வெறியனின் சாபம் அது. தேசமே அஸ்தியாகட்டும் என்று வெறுப்பு உமிழ்ந்த ஒருவனின் உருக்குலைந்த கடைசி மிச்சங்கள் அவை.


(ஏழாம் அத்தியாயம் -நாளை)

முன்பக்கம்

கருத்துகள்

5 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
 1. ஆவலுடன் தொடர்ந்து வாசிக்கின்றேன். தொடருங்கள்.

  ஒரு ஈழத் தமிழன்

  பதிலளிநீக்கு
 2. இன்றுதான், தங்களது பதிவோடு எனக்கு அறிமுகம்....நல்ல பதிவுக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
 3. பிரபு ராஜதுரை!

  தங்கள் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.
  தொடர்ந்து வாருங்கள்.

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!