காந்தி புன்னகைக்கிறார் - நான்காம் அத்தியாயம்


பிரார்த்தனை முடிந்ததும் காந்தி உள்அறைக்குச் சென்று தனது அலுவல்களை கவனிக்க ஆரம்பித்தார். நேற்றிரவு தனது உதவியாளர் பியாரிலாலிடம் சொல்லி எழுத வைத்திருந்த காங்கிரஸை மறுசீரமைக்கும் அவரது திட்டத்தின் நகலில் உள்ள தவறுகளை சரிபார்த்தார். ஆட்சி பொறுப்பில் இருந்து கீழிறங்கி காங்கிரஸ் கட்சி லோக் சேவா சங்கமாக உருவெடுத்து 7 லட்சம் கிராமங்களின், பொருளாதார, சமூக விடுதலைக்கு பாடுபட வேண்டும் என்று அவர் கனவினை வடிவமைத்திருந்தார். அது அவரது உயிலாக கருதப்படுகிறது.


அந்த அதிகாலை 4.45 மணிக்கு எலுமிச்சை சாறும், தேனும் வெந்நீரும் அருந்தினார். ஒரு மணிநேரம் கழித்து ஆரஞ்சு பழச்சாறு அருந்தியபின் களைப்பினால் கொஞ்ச நேரம் தூங்கினார். ஒரு அரைமணி நேரத்தில் திரும்பவும் எழுந்து கடிதங்கள் எழுதினார்.கடுமையான இருமல் இருந்தது. கொஞ்சம் பனங்கற்கண்டு மாவை சாப்பிட்டார். பிறகு பியாரிலாலிடம் திருத்திய நகலை கொடுத்து முழுமையாக்கச் சொன்னார். குளித்தார். சமீபத்தில் வங்காளத்தில் தங்கியிருந்தபோது வங்காள மொழி பழக்கம் ஏற்பட்டிருந்தது. சில வாக்கியங்களை எழுதிப் பார்த்தார்.

9.30 மணிக்கு உணவு அருந்தினார். வேகவைத்த காய்கறி, 12 அவுன்சுகள் ஆட்டுப்பால், நான்கு தக்காளிகள், நான்கு ஆரஞ்சுகள், காரட் சாறு இவைகள்தான். பியாரிலால் அவர் அருகில் உட்கார்ந்து அதற்கு முந்தையநாள் இந்து மகா சபாவின் தலைவரான டாக்டர் ஷியாம் பிரசாத் முகர்ஜியிடம் பேசியதை விளக்கினார். காங்கிரஸ் தலைவர்களை தரம் தாழ்ந்து டாக்டர்.முகர்ஜி பேசியிருந்தார். காந்தி பியாரிலாலை அனுப்பி டாக்டர் முகர்ஜியிடம் இப்படிப்பட்ட பேச்சுகளை நிறுத்த முயன்றிருந்தார். ஆனால் முகர்ஜி பியாரிலாலிடம் இணக்கமாக பேசியிருக்கவில்லை. கேட்டுக் கொண்டு வந்த காந்திக்கு வருத்தமாக இருந்தது. பிறகு பாகிஸ்தானுக்கு செல்லவேண்டியிருப்பது குறித்து பேசினார்.


காந்தியை ஜின்னா பாகிஸ்தானுக்கு அழைத்திருந்தார். பிப்ரவரி 3ம் தேதி கலவரங்கள் நடந்த பகுதிகள் வழியாக பாகிஸ்தானுக்கு செல்வதாக இருந்தார். காந்தி சுடப்படாமல் இருந்திருந்தால் உலகமே எதிர்நோக்கிய அந்த யாத்திரை மட்டும் நடந்திருந்தால் மகத்தான மாற்றங்கள் ஏற்பட்டிருக்கலாம். காந்தியைப் பார்க்க ருஸ்தம் சரபோஜி குடும்பத்தோடு வந்திருந்தார். அவரிடம் பேசியிருந்த பின் மீண்டும் தூங்கிப் போனார்.


அங்கே கொலையாளிகள் அவர்கள் திட்டத்திற்கு இறுதிவடிவம் கொடுத்துக் கொண்டிருந்தனர். ஒரு பழைய காலத்து காமிராவோடு பிரார்த்தனை நடக்கும் இடத்திற்கு சென்று காந்தியை படம் பிடிக்கிற மாதிரி நடித்துக் கொண்டே அவரைச் சுடுவது என திட்டமிட்டனர். அதுவே சந்தேகத்துக்குரியதாக மாறிவிடக் கூடாது என்று அந்த யோசனையை கைவிட்டனர். கறுப்பு அங்கி அணிந்த ஒரு முஸ்லீம் பெண்ணாக பிரார்த்தனை மைதானத்திற்கு செல்லலாம் என நினத்தனர். காந்திக்கு வெகு அருகே செல்ல வாய்ப்பு ஏற்படும் என்பதால் பர்கா ஒன்றை வாங்கினர். கோட்சேவுக்கு அதை அணிந்து கொள்வது ரொம்ப சிரமமாயிருந்தது. இந்த நிலையில் சுடும்போது குறி தவறிவிடுமோ என்று சந்தேகம் வந்தது. அந்த யோசனையும் நிராகரிக்கப்பட்டது. இந்த தடவை குறி தவறிவிடக் கூடாது என்பதில் அப்படியொரு கவனம் இருந்தது கோட்சேவுக்கு. கடைசியாக ஆப்தேதான் அந்த யோசனையை சொன்னான். தொளதொளப்பான நீண்ட அங்கி அணிவது. துப்பாக்கியை மறைத்துக் கொள்வதற்கு அதுவே சிறந்த வழியாகவும் இருக்கும் என முடிவு செய்தார்கள்.


நான்கு மணிக்கு பிர்லா மந்திருக்குச் சென்றார்கள். கோட்சே, கதர் அங்கிக்கு மேலே கைகளில்லா காக்கி ஸ்வெட்டர் அணிந்து இருந்தான். ஆப்தேவும், கார்கரேவும் கோவிலுக்குள் சென்று வழிபடப் போனார்கள். கோட்சே உள்ளே செல்லாமல் வெளியே நின்று கொண்டான். காத்திருந்தான்.


காந்தி இந்தியாவின் துணைப் பிரதமர் வல்லபாய் பட்டேலுடன் பேசிக்கொண்டு இருந்தார். ஜவஹர்லால் நேருவுக்கும், வல்லபாய் பட்டேலுக்கும் நிலவிய கருத்து வேறுபடுகளை சரி செய்ய மகாத்மா முயற்சி செய்தார். மனுவும், அபாவும் பிரார்த்தனைக்குச் செல்ல தயாராகி காந்தியை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.


வெளியே முதலில் கோட்சேவும், பிறகு கொஞ்ச நேர இடைவௌதயில் ஆப்தேவும், கார்காரேவும் வந்து முன் வாசல் வழியே நுழைந்து பிரார்த்தனைக் கூட்டத்தில் கலந்து இருந்தார்கள். சரியாக 5 மணிக்கு ஆரம்பிக்கிற பிரார்த்தனை கால தாமதமடைவதில் கோட்சே கலக்கமுற்று இருந்தான். நேரம் நகர்ந்து கொண்டிருந்தது. ஒளி சாய்ந்து இருள் கவ்வ ஆரம்பிக்கிற மணித்துளிகள்.


மணி 5.10 ஆனது. அபா காந்தியின் கைக்கடிகாரத்தை காண்பித்து நேரத்தை நினைவூட்டினாள். மகாத்மாவும், பட்டேலும் எழுந்தார்கள். காந்தி அவரது செருப்புகளை அணிந்து கொண்டு புறப்பட, பட்டேல் விடைபெற்று நடந்தார். காலதாமதமானதால் காந்தி பிரார்த்தனை நடக்கும் இடத்திற்கு சுற்றி செல்லாமல் குறுக்காக நடந்து சென்றார். மனுவும், அபாவும் இருபுறமும் தாங்கி வர, அவரது கடைசி யாத்திரை ஆரம்பமாகியது. மனுவிடமும், அபாவிடமும் வழக்கமான நகைச்சுவையோடு பேசிக்கொண்டே நடந்து வந்தார். புல்வெளிகளைத் தாண்டி பிரார்த்தனை மைதானத்தின் அருகில் வந்தனர். மிக மிக முக்கியமான தருணம் வந்துவிட்டது.


காத்திருந்த கோட்சேவுக்கு மிக அருகில் அப்போது காந்தி இருந்தார். கோட்சே சட்டென்று கூட்டம் தாண்டி அவர் எதிரே வந்து நின்றான். கூப்பிய கைகளுக்குள் துப்பாக்கியை ஒளித்தபடி குனிந்து நமஸ்கரித்தான். அவன் குனிந்து காந்தியின் கால்களை முத்தமிடப் போகிறான் என்று மனு எண்ணிக்கொண்டு "சகோதரனே பாபுஜிக்கு ஏற்கனவே நேரமாகி விட்டது " என்று சொல்லிக்கொண்டே லேசாய் அவனை தள்ளிவிட எத்தனித்தாள். மகாத்மா கைகளை கூப்பி பதிலுக்கு நமஸ்கரிக்கும் நேரத்தில் கோட்சே சட்டென்று மனுவை வேகமாகத் தள்ளிவிட்டு துப்பாக்கியோடு காந்தியின் எதிரே நின்றான்.


ஒரு கணம்..ஒரு கணம்..அந்த கண்களைப் பார்த்தான். அதே நேரம் விரல்கள் சுண்டிவிட சுண்டிவிட.. சுண்டிவிட..மூன்று தோட்டாக்கள் காந்தியின் நெஞ்சிலும், வயிற்றிலும் பாய்ந்தன.


"ஹே ராம்" கூப்பிய கரங்களோடு காந்தி மண்ணில் சாய்ந்தார். மகாத்மாவின் 78 ஆண்டு கால பிரயாணம் அந்த இடத்தில் முடிவுற்றது. கோட்சே எங்கும் தப்பி ஒடாமல் அங்கேயே நின்றிருக்க காவலாளிகள் அவனைப் பிடித்தனர். நாராயண ஆப்தேவும், விஷ்ணு கார்கரேவும் கூட்டத்தில் கலந்து தப்பி வெளியேறினர்.


'இந்தியாவின் ஒளி நம்மிடமிருந்து போய்விட்டது...' என்று பண்டித ஜவஹர்லால் நேரு குரல் தழுதழுக்க கூறினார். எப்பேர்ப்பட்ட மனிதர். ஒருமுறை காந்தி உண்ணாவிரதம் இருந்தபோது மகாகவி ரவீந்திரநாத் தாகூர் வந்து அசையாமல் இருந்த காந்தியையேப் பார்த்துக் கொண்டிருந்தாராம். பிறகு மெல்ல குனிந்து காந்தியின் நெஞ்சருகே காதை வைத்து கேட்டாராம். கேட்டுக் கொண்டிருக்கும் போது தாகூரின் முகத்தில் கண்ணீர் வழிந்தோடிக் கொண்டிருந்ததாம். அந்த இதயத்தின் துடிப்பு நின்று வெகு நேரமாகி இருந்தது.


காந்தியின் முகத்தில் ஒரு அசாதாரண ஒளியும், புன்னகையும் இருந்தது.


(ஐந்தாவது அத்தியாயம் நாளை)

கருத்துகள்

11 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
 1. இந்தக் கட்டுரையை யாருமே வாசிக்க முன் வரவில்லையா? காந்தியின் வரலாறு ஒரு திறந்த புத்தகம். இரகசியங்கள் இல்லை. யாரையும் காயப்படுத்தக்கூடாது என்ற இலக்கு இறுதிவரை இருந்தது. தொடர்ந்து எழுதுங்கள். கிடைப்பதற்கரிய மனிதப் பண்பு.

  ஒரு ஈழ‌த் த‌மிழ‌ன்

  பதிலளிநீக்கு
 2. Anonymous!

  தங்கள் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 3. பயனுள்ள தகவல் நண்பரே. நன்றி

  பதிலளிநீக்கு
 4. IT IS A GREAT HISTORICAL EVENT. NORMAL PERSONS, CAN NOT GIVE ANY COMMENTS....ONLY MATURED PEOPLE WHO DOES HAVE WISDOM,CAN UNDERSTAND...SORY I AM UNABLE TO PROCEED FURTHER...

  பதிலளிநீக்கு
 5. தோழரே அருமையான பதிவு!

  உங்களுடைய படைப்புகளில் நான் என்னுடன் எப்பொழுதும் எடுத்து செல்வது சேகுவேரா (அமெரிக்க உளவுத்துறையின் ரகசியக் குறிப்புகளின் பின்னணியில்) இன்னும் பிற எழுத்தாளர்களின் படைப்புக்களும் இருக்கும்.உங்கள் எழுத்துக்களின் ரசிகன் என்ற முறையில் சில கேள்விகள்:

  மகாத்மா பற்றி நானும் நிறைய படித்தும் கேட்டும் அவருடைய சுய சரிதையையும்.. மகாத்மா அவர்களின் ஆளுமை போன்றவற்றில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.ஆனால் ஹரிஜன் என்ற ஒரு வார்த்தையை அவர் பயன்படுத்தியது மிகவும் வேதனைக்கு உரியது..மேலும் அம்பேத்கருடன் இட ஒதுக்கீட்டிலும் அவர் செய்தது என்னை கேள்வி கேட்க வைக்கிறது...

  அதையும் மீறி இல்லாத இறைவன் (ஹே ராம்) உள்ள அவரின் செயல் ஏற்புடையதல்ல..மேலும் அவர் சாகும் போது அந்த வார்த்தையை மனதில் வேண்டுமானால் நினைத்திருப்பார் வெளியில் அவர் உதிர்க்கவில்லை அது முழுக்க முழுக்க கற்பனை. சில நாட்களுக்கு முன்னால் கோட்சேயின் சகோதரன் சொன்ன வார்த்தைகள்..

  அவர் மகாத்மா என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை சில செயல்களில் ஏற்றுக்கொள்ள முடியவில்லை ஏனனில் நாங்கள் சமகாலத்தில் வாழ்ந்தவர் இல்லை என்பதே....

  தங்களிடம் இருந்து பதிலுக்கு காத்திருக்கும் தம்பி

  முகமது பாருக்

  (பெயரை கொண்டு ஏதும் நினைக்க வேண்டாம் அது வெறும் கூப்பிட மட்டுமே உதவும் என்று நினைபவன்)

  பதிலளிநீக்கு
 6. பாலா!

  தங்கள் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 7. rammalar!

  தங்கள் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 8. RAMASUBRAMANIA SHARMA !

  உண்மைதான்.

  வந்ததற்கும், உணர்வுகளை பகிர்ந்து கொண்டதற்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 9. முகமது பாருக்!

  தங்கள் வருகைக்கு முதலில் நன்றி.

  //ஆனால் ஹரிஜன் என்ற ஒரு வார்த்தையை அவர் பயன்படுத்தியது மிகவும் வேதனைக்கு உரியது..மேலும் அம்பேத்கருடன் இட ஒதுக்கீட்டிலும் அவர் செய்தது என்னை கேள்வி கேட்க வைக்கிறது...//

  ஒப்புக் கொள்கிறேன். காந்தியின் மரணமும், அது நிகழ்ந்த விதமும், அதற்கான பின்னணியையும் மட்டுமே நான் இங்கு சொல்ல முற்படுகிறேன். தங்களைப் போன்று, அவர் மீது எனக்கும், நீங்கல் குறிப்பிட்ட விஷயங்களில் விமர்சனங்கள் இருக்கின்றன. இந்துத்துவா சக்திகள் ஏன் அவரை வெறுத்தார்கள் என்பதில், அவரை ஏன் கொலை செய்தார்கள் என்பதில், இந்த நிலப்பரப்பின் சதிகள் நிறைந்த வரலாறு புதைந்திருக்கிறது. அதை உரக்கச் சொல்வது காலத்தின் அவசியம் என கருதுகிறேன்.

  //அதையும் மீறி இல்லாத இறைவன் (ஹே ராம்) உள்ள அவரின் செயல் ஏற்புடையதல்ல..//

  ராமராஜ்ஜியம் என்று சொன்ன போதும், காந்தியின் வாழ்வும், நடவடிக்கைகளும் சமண மதம் சார்ந்ததாக இருப்பதை உணரலாம். அதை அவரது வாழ்வின் பல தருணங்களில் நாம் அறிய முடியும். இந்து மதம் அஹிம்சையை போதிக்கவில்லையே.

  //அவர் சாகும் போது அந்த வார்த்தையை மனதில் வேண்டுமானால் நினைத்திருப்பார் வெளியில் அவர் உதிர்க்கவில்லை அது முழுக்க முழுக்க கற்பனை.//

  இருக்கலாம். ஆனால் இந்தக் கட்டுரையை நான் பல இணையதளங்களிலும், புத்தகங்களிலும் படித்துத்தான் எழுதுகிறேன். பலர் சொன்னதன் அடிப்படையில்தான் அதை சேர்க்க வேண்டியிருக்கிறது. அதை அவர் சொன்னாரா, சொல்லவில்லையா என்பதை விட, அவர் சொல்லக்கூடியவரா, சொல்ல விரும்பியவரா என்பது இது போன்ற இடங்களில் முக்கியமானது என நினைக்கிறேன். இந்த இடத்தில்தான் ராமர் பிறந்தார், இந்த இடத்தில்தான் ராமர் பாலம் கட்டினார் என்றெல்லாம் சொல்ல முடிகிற தேசத்தில், இந்த இடத்தில் அவர் ராமர் பெயரை உச்சரித்தார் என்பது அவ்வளவு பாதகமான வரலாற்றுத் திரிபா?

  அப்புறம்....
  உங்கள் பெயர் எனக்குப் பிடித்திருக்கிறது தம்பி.

  பதிலளிநீக்கு
 10. நன்றி தோழரே,

  // இந்தக் கட்டுரையை நான் பல இணையதளங்களிலும், புத்தகங்களிலும் படித்துத்தான் எழுதுகிறேன். பலர் சொன்னதன் அடிப்படையில்தான் அதை சேர்க்க வேண்டியிருக்கிறது. அதை அவர் சொன்னாரா, சொல்லவில்லையா என்பதை விட, அவர் சொல்லக்கூடியவரா, சொல்ல விரும்பியவரா என்பது இது போன்ற இடங்களில் முக்கியமானது என நினைக்கிறேன். இந்த இடத்தில்தான் ராமர் பிறந்தார், இந்த இடத்தில்தான் ராமர் பாலம் கட்டினார் என்றெல்லாம் சொல்ல முடிகிற தேசத்தில், இந்த இடத்தில் அவர் ராமர் பெயரை உச்சரித்தார் என்பது அவ்வளவு பாதகமான வரலாற்றுத் திரிபா?.. //

  உங்கள் எழுத்துகளின் ஆளுமையும் எளிமையும் நன்றாக உள்ளது..மேலே உள்ள வரிகளை நானும் ஆமோதிக்கிறேன்...

  இருக்கலாம்...அவர் எப்போது பிராமணர்களுக்கு எதிராகவோ (அல்லது அவர்கள் நினைத்தாலே) அவரை அழித்துவிடுவார்கள் என சொன்னார் என்று தந்தை பெரியார் மகாத்மவோட உரையாடலில் படித்திருக்கிறேன். அதுவே நடந்தது..இன்றைக்கும் நடக்கும் சம்பவங்கள் மனித மனங்களில் நிம்மதியை கெடுக்கிறது..

  மதங்களும் சாதியங்களும் ஒழிந்து இனப்பாகுபாடுயின்றி மனிதம் மட்டுமே வாழவேண்டும்.

  உங்கள் கட்டுரைகளை எனது நண்பர்களுக்கு அனுப்பி வருகிறேன் உங்கள் படைப்புகள் தொடர வாழ்த்துக்கள்...

  தோழமையுடன் தம்பி

  முகமது பாருக்

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!