காந்தி புன்னகைக்கிறார்- மூன்றாம் அத்தியாயம்


நாதுராம் கோட்சே கண்களில் வெறியும், இதயத்தில் அடங்காத தாபமும் உறைந்திருந்தன. தங்கள் உலகத்தை உருவாக்க விடாமல் ஒவ்வொரு தருணத்திலும் தடுத்து நிறுத்திய சக்தியை அழிக்க வேண்டும் என்பது மட்டுமே அவனுக்குள் செலுத்தப்பட்டிருந்தது. அவனை மையமாக வைத்து இப்போது காத்திருக்கிறார்கள்.
சென்ற ஜனவரி 20ம்தேதி இதே நிலையில் திகம்பர பாட்கே இருந்தான். அப்போது அவனது கைகளில் துப்பாக்கி இருந்தது. அன்றைக்கு அவர்கள் மொத்தம் எழு பேர் டெல்லியில் இருந்தனர்.

திகம்பர பாட்கே அதிகம் படித்திருக்கவில்லை. வயிற்றுப் பிழைப்புக்காக பூனா சென்று அங்கு கிடைத்த வேலைகளில் ஈடுபட்டு நாட்களை கழித்தான். ஒரு தொண்டு நிறுவனத்தில் சேர்ந்து வீடு வீடாக சென்று நிதி சேகரித்தான். அந்த நிதியில் நாலில் ஒரு பங்கு அவனுக்கு கூலியாக கொடுக்கப்பட்டது. அந்தப் பணத்தில் கத்திகள், இன்னும் சில ஆயுதங்கள் வாங்கி விற்க ஆரம்பித்தான். அது நல்ல வருமானமாக மாறியது. அந்த நாட்களில், கலவரம் மிகுந்த சமயமாய் இருந்ததால் அவனது தொழிலுக்கு கிராக்கி இருந்தது. முஸ்லீம்களுக்கு எதிரான தாக்குதல் நடத்த ஆயுதங்கள் வேகமாய் விற்பனையாயின. இப்படியாக அவனுக்கு இந்து மகாசபையுடன் தொடர்பு ஏற்பட்டது. இந்து மகாசபையின் மாநாடுகளில் புத்தகங்கள் கடை விரித்து, கூடவே ஆயுதங்களையும் விற்று வந்தான். சவார்க்கரின் வீட்டில் பாட்கே கோட்சேவையும், ஆப்தேவையும் சந்தித்தான்.

விஷ்ணு கார்காரேவின் இளவயது மிக துன்பமானது. அவன் பெற்றோர் அவனை வளர்க்க முடியாமல் ஒரு அனாதை விடுதியில் சேர்த்து விட்டனர். அங்கிருந்து தப்பி சின்ன சின்ன ஓட்டல்களிலும், விடுதிகளிலும் வேலை பார்த்து வந்தான். பிறகு அவனே சொந்தமாக அகமது நகரில் ஒரு சின்ன உணவு விடுதியும் நடத்த ஆரம்பித்தான். இந்து மகாசபையில் உறுப்பினரானான். ஆப்தேவுடன் அங்கு பழக்கம் ஏற்பட்டது. நவகாளியில் கலவரம் ஏற்பட்டபோது அங்கு பாதிக்கப்பட்ட இந்துக்களுக்கு உதவ சென்றிருந்தான். அங்கு நடந்தவைகளை பார்த்து கொதித்துப் போனான்.

மதன்லால் ஒரு பஞ்சாப் இந்து குடும்பத்தில் இருந்து வந்தவன். பூனாவில் இராணுவத்தில் சேர்ந்து பயிற்சி எடுத்து சொந்த ஊரான பாக்பத்தானுக்கு திரும்புகிறபோது அது பாகிஸ்தானுக்கு சொந்தமாகி இருந்தது. அவனது குடும்பத்தினர் முஸ்லீம்களின் கொடுமைக்கு ஆளாகி இருந்தனர். விரக்தியில் பூனா திரும்பியபோது கோட்சேவுடனும், நாராயண ஆப்தேவுடனும் பழக்கம் ஏற்பட்டிருந்தது. வெடிகள் செய்வதில் நிபுணன் என்பதால் அவனை உபயோகப்படுத்தினர்.

நாராயண ஆப்தே மகராஷ்டிராவில் அகமதுநகரில் ஒரு நடுத்தர பிராமண குடும்பத்தை சேர்ந்தவன். பி.எஸ்.ஸி படித்து முடித்து ஒரு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தான். அகமது நகரில் இந்து ராஷ்டிரா தளம் என்ற அமைப்பில் சேர்ந்தான். அப்போதுதான் கோட்சேவுடனான பழக்கம் ஏற்பட்டது. பிறகு இந்து ராஷ்டிரா பத்திரிக்கையின் நிர்வாகப் பொறுப்பிலும் இருந்தான்.அமைதியான முறையில் அரசியலில் எதையும் சாதிக்க முடியாது என்பது கோட்சேவிடமிருந்து ஆப்தே கற்றுக்கொண்ட பாடம்.

கோபால் கோட்சே, நாதுராம் கோட்சேவின் இளைய தம்பி. மெட்ரிக்குலேசன் படித்து முடித்த பிறகு அவனும் அண்ணன் வேலை பார்த்த அதே தையல் நிறுவனத்தில் சேர்ந்தான். இந்து மகாசபையில் உறுப்பினராகியிருந்தான். அப்போது இராணுவத்தில் ஸ்டோ ர் கீப்பர் வேலை கிடைத்தது. சவார்க்கரின் பேச்சில் மிகுந்த ஈடுபாடு கொண்டவன்.

சங்கர் கிஸ்டய்யா ஒரு கிராமத்தில் மர வேலை பார்க்கும் தச்சனின் மகனாக பிறந்தான். கல்வி அறிவு ஒன்றும் கிடையாது. பூனா சென்று அங்கு ஒரு கடையில் வேலை பார்த்து வந்தான். அங்கு பாட்கேவுடன் பழக்கம் ஏற்பட்டது. பாட்கே அவனை வீட்டு வேலைக்கு அமர்த்திக் கொண்டான். கூடவே பாட்கேவின் நிழல் தொழிலுக்கு நம்பத் தகுந்த உதவியாளனாகவும் இருந்தான்.

ஜனவரி 20 ம் தேதி பிரார்த்தனை நடந்து கொண்டிருக்கும் போது பின்பக்கம் உள்ள செங்கற்சுவரில் குண்டு வெடிக்க ஏற்பாடு செய்வது என்றும், பிரார்த்தனை கூட்டம் அங்குமிங்குமாய் சிதறும்போது திகம்பர பாட்கே காந்திக்கு மிக அருகே சென்று சுடுவது என்றும் திட்டம் தீட்டியிருந்தனர் .
மதன்லால் பாவா குண்டை வெடிக்கவும் செய்து விட்டான். ஆனால் நினைத்த மாதிரி கூட்டம் சிதறவில்லை. என்னவோ எதோ என்று பதற்றம் தொற்ற, மகாத்மா கூட்டத்தை அமைதிப் படுத்தினார். "இராணுவத்தினர் எதாவது பயிற்சி செய்து கொண்டிருப்பார்கள், நாம் பிரார்த்தனை தொடருவோம் என்றார். திகம்பர பாட்கே சுடாமல் கூட்டத்திலிருந்து அகன்றான்.
மதன்லால் பிடிபட்டுக் கொண்டான். அவனிடம் விசாரணை நடந்தது. சில தகவல்கள் கிடைத்தன. மொத்தம் ஏழுபேர் இந்த சதியில் ஈடுபட்டிருந்ததாகவும் அதில் இந்து ராஷ்டிரா பத்திரிக்கையின் ஆசிரியர் கோட்சேவும் உண்டு என்பது வரையிலும் அவனிடமிருந்து தகவல்கள் கிடைத்தன. அவன் உண்மைகளை சொல்லிவிடுவான் என்பது அவர்களுக்குத் தெரியும். பூனாவுக்குத் திரும்பியிருந்தார்கள்.
(நான்காம் அத்தியாயம் நாளை)

கருத்துகள்

0 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!