'ன்'னும் 'ர்'ரும்மூன்று வருடங்களுக்கு முன்பு பத்திரிக்கைகளிலும், தொலைக் காட்சிகளிலும் பெரும் அதிசயமாய் அந்தச் செய்தி கொஞ்சகாலம் தொடர்ந்து பேசப்பட்டது நினைவிலிருக்கலாம். அவனுக்கு எட்டு வயதோ என்னவோதான். சிறுவன். மழலை குரலில் பேசினான். தமிழ் சினிமாக்களில் இளம் முருகக் கடவுள் வேடத்தில் நடிப்பதற்கு வாகான தோற்றம். பத்திரிக்கைகள் அவனைத்தான் 'வந்தார்', 'பேசினார்', 'காஞ்சி சங்கராச்சாரியை சந்தித்தார்', 'பெயரை மாற்றிக் கொண்டார்' என்று 'ர்' விகுதி போட்டு மரியாதையோடு அழைத்து வந்தன. அந்த சின்னப் பையனின் காலடியில் வார்த்தைகள் ஆசீர்வாதம் வாங்க விழுந்தன. சிறியவர்களையும் மரியாதையோடு அழைக்கும் கலாச்சாரப் பெருமை கொண்ட மண் இது என்று நினைக்கத் தோன்றவில்லை. 'குட்டிச்சாமி வந்தான்', 'குட்டிச்சாமி தனது பேரை மாற்றிக் கொண்டான்' என்று தெளிவாக எழுதலாம். வானம் ஒன்றும் இடிந்து விழுந்து விடாது.


அப்புறம் செத்துப் போனார் சந்தனக் கடத்தல் வீரப்பன். காடுகளில் வாழ்ந்தவர். வசதியானவர்களிடம் கொள்ளையடித்து ஏழைகளிடம் கொடுத்தவர் என்றுகூட போகிற போக்கில் ஒரு தொலைக்காட்சி செய்தி வாசித்தது. கொள்ளை, கொலை என பல குற்றங்களுக்காக காவல்துறையால் தேடப்பட்டு வந்த இருபது வருடப் புதிர். எப்போதும் இந்தப் பத்திரிக்கைகள் அந்த வயதான மனிதரை 'அவன்', 'இவன்' என ஏக வசனத்தில்தான் எழுதிக்கொண்டு வந்தன. இப்படி வீரப்பனை 'அவர்' என்று சொல்வதே எதோ ஒரு பாவ காரியம் போல தோன்றும். அந்த அளவுக்கு இங்கே இரண்டு எழுத்துக்களுக்கு வலிமை இருக்கின்றன.


விளக்கங்கள் இதற்கு சொல்லப்படலாம். வயது என்பது முக்கியமல்ல, ஒருவர் ஆற்றும் காரியங்களே சமூகத்தில் இந்த மரியாதையை உருவாக்குகின்றன என்றும் ஒரு கொள்ளைக்காரனுக்கு இந்த சமூகத்தில் இடம் கிடையாது என்றும் வாதம் செய்யலாம். ஒப்புக்கொள்வோம் ஒரு கேள்வியோடு. குட்டிச்சாமி என்ன மகத்தான காரியம் ஆற்றிவிட்டார்? அவனைவிட வயதில் குறைந்த இரண்டு பெண் குழந்தைகள் கம்பராமாயணத்தையும், திருக்குறளையும் அப்படியே சொல்லுகிறார்களாம். அந்த ஞானக் குழந்தைகளுக்கு கொடுக்கப்படாத மரியாதை, 'வேதங்களை' உச்சரிப்பதால் அவனுக்கு மட்டும் தரப்படுகின்றன. குட்டிச்சாமியை விட சின்ன வயதில் ஒருவர் வாகன நெரிசல் மிகுந்த நகர வீதிகளில் கார் அனாயாசமாக ஓட்டுகிறாராம். அதிசயக்கத்தக்க திறமை இருந்தும் வயது குறைவு என்று அவருக்கு லைசென்சு கொடுக்கப்படவில்லையாம். இந்த சின்னப் பையனுக்கோ மிக எளிதாக 'சாமியார்' லைசென்சு கொடுக்கப்பட்டது.


சதாம் உசேன் ஈராக்கின் அதிபராக இருக்கும் வரை 'அவராக' இருந்தார். அமெரிக்காவால் வீழ்த்தப்பட்டதும் ஒரே நாளில் நமது பத்திரிக்கைகளுக்கு அவனாகிப் போனார். அவர் செய்த காரியம் அமெரிக்காவை எதிர்த்ததுதான். 'பிடிபட்டான்' என்று ஆரவாரத்தோடு தலைப்புச் செய்திகளின் பெரிய எழுத்துக்களில் சின்ன மனிதனாகிப் போனார். சதாம் உசேன் வீழ்ந்ததும், அவரது ஆடம்பர பங்களாக்களை, குளியலறையை, உல்லாசத்தை எல்லாம் பக்கம் பக்கமாக படங்களோடு செய்திகள் போட்டுக் காட்டியது அந்த 'ன்'னுக்குக்கான கருத்தை உருவாக்கத்தான். அவர் செய்த கொலைகள் பற்றி மர்மத் தொடர்கள் போல எழுதியது அதற்கான அர்த்தத்தை உருவாக்கத்தான். முதாலாளித்துவ அமைப்பில், அதன் சர்வாதிகார பலத்தில் இருக்கும் யார்தான் இங்கே மக்களை கொடுமைப்படுத்தாமல் இருக்கிறார்கள். அளவு கூடலாம், குறையலாம். இங்கேயும் ஒரு அரசியல்வாதி தேர்தலில் தோற்றவுடன் அதுபோலவெல்லாம் காண்பிக்கப்பட்டது. ஆனால் அவரால் அவராகவே தொடர்ந்து இருக்க முடிந்தது. எவ்வளவோ உயிர்ச் சேதங்களுக்கும், பொருட்சேதங்களுக்கும் காரணமாகி ஈராக் என்னும் ஒரு நாட்டையே இப்போது சிதைத்து போட்டிருக்கும் புஷ், அவன் என்று அழைக்கப்படவில்லை. வீரப்பனைவிட ஆயிரமாயிரம் மடங்கு கொடிய மனிதன் அவன்.


இன்னொரு உண்மை மிகக் கொடுமையானது. தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த மனிதர்கள் எவ்வளவு வயதானவர்களாயிருந்தாலும் இன்னும் கிராமங்களில் 'வா', 'போ' என்றுதான் அழைக்கப்படுகின்றனர். அவர்களின் மகனைவிட, மகளைவிட வயது குறைந்தவர்களால் 'அவன்' , 'அவள்' என மிக இயல்பாக குறிப்பிடப்படுகிறார்கள். இந்த 'ன்' விகுதி அவர்களது பிறப்போடு ஒட்டிப் பிறந்ததாக இருக்கிறது. காலம் காலமாக கூனிப்போக வைக்கும் பாரமாக அவர்கள் மீது உட்கார்ந்து கொண்டே இருக்கிறது. முற்போக்கு எழுத்தாளர்கள் சிலர் கூட தங்கள் கதைகளில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவர்களை குறிப்பிடும் போது 'அவன்' என்று ஒருமையில் எழுதியிருப்பதாய் ஒருதடவை பேராசிரியர் மாடசாமி விமர்சனத்தை முன்வைத்திருக்கிறார். அந்த அளவுக்கு அறிவினைத் தாண்டிய ஆழமான செல்வாக்கு இந்த எழுத்துகளுக்குள் இருப்பதாகப் படுகிறது. 'வாழ்க்கை பழக்கத்தின் தடத்தில் ஊறிக் கிடக்கிறது. அதை அறிவின் தளத்திற்கு மாற்ற வேண்டும்' என்று எழுத்தாளர் சுந்தரராமசாமி பொதுவாகச் சொன்னது இந்த விஷயத்திற்கு மிகப் பொருத்தமாக இருக்கிறது.


தாழ்த்தப்பட்ட மக்கள் எந்த மோசமான காரியத்தை செய்ததற்காக இப்படி மரியாதையில்லாமல் அழைக்கப்படுகிறார்கள் என்று கேள்வி எழ மாட்டேன்கிறது. எல்லாவற்றுக்கும் எதாவது ஒரு காரணம் சொல்லும் சமூகம் இதற்கான பதிலை ஆழ்ந்த மௌனத்தோடு மட்டுமே எதிர்கொள்ளும். ஆனால் 'ர்' போட்டு மட்டும் அழைக்காது. அப்படி ஒரு இறுகிய மனம் இருக்கிறது. 'இவர்களுக்கு இந்த சமூகத்தில் நிறைய வாய்ப்புகள் உருவாக்கப்பட்டு வருகின்றன' என்று அங்கலாய்ப்பவர்களிடம் ஒரே ஒரு கேள்விதான் இப்போது. குட்டிச்சாமி இங்கே ஒரே நாளில் 'அவராக' மாறிவிடுகிறான். இந்த மனிதர்கள் ஒருநாளும் அவ'ர்'களாக ஏன் மாற முடியவில்லை?


விநோதமாக இருக்கிறது. அரவமில்லாமல் தமிழின் இந்த விகுதி எழுத்துக்கள் ஒருவரைப் பற்றிய கருத்துக்கள் புனையப்படுவதற்கும், கற்பிக்கப்படுவதற்கும் காரணமாகி விடுகின்றன. அவைகளால் பிம்பங்களை உருவாக்கவும், உடைக்கவும் முடிகிறது. தலையாட்டும் மனிதக் கூட்டம் இந்த எழுத்துக்கள் தரும் அர்த்தங்களுக்குள் செல்லாமல் ஒருவித பிரக்ஞையற்றத் தன்மையோடு மிக எளிதாக ஆட்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.


இந்த எழுத்துக்களை உச்சரிப்பவர்களாக மட்டுமே மக்கள் இருக்கிறார்கள். உருவாக்குபவர்கள் வேறு யாரோவாக இருக்கிறார்கள். அதை புரிந்து கொள்ள முடியாதபடி, எப்போது உருவானது என்று அறியமுடியாதபடி, சமூகத்தில் 'தானாகவே' உருவாகிறது போன்று ஒரு தோற்றம் அவைகளுக்கு இருக்கிறது. அதன் மூலத்தை புரிந்து கொண்டால் சமூகத்தின் லட்சணங்கள் தெரிய வரும். ஒவ்வொரு சமூகத்தையும் ஒரு கருத்து ஆண்டு வருகிறது. அந்த கருத்து யாரை அங்கீகரிக்கிறதோ அவர்களுக்கு இந்த 'ர்' விகுதியைச் சேர்த்துக் கொள்ளும். வயது, காரியங்கள் என்பதெல்லாம் சும்மா.


இந்தியாவின் தந்தை என்று அழைக்கப்படுகிற மகாத்மாவை பிரிட்டிஷ் பத்திரிக்கைகள் அரையாடை பக்கிரி என்றுதான் அழைத்தன. அது எதற்கு? சுதந்திரத்திற்கு முன்பு பகத்சிங்கை ஆனந்த விகடன் பத்திரிக்கை முழுமூடச் சிகாமணி என்று ஏளனம்தான் செய்திருந்தது. இன்று மகாத்மா உலகமெங்கும் 'அவராகி' விட்டார். பகத்சிங் இந்தியாவிற்குள் 'அவராகி' விட்டார். ஆனால் ஒருபோதும் 'கருப்பசாமி'யும், 'அம்மாசி'யும் 'அவர்களாக'வில்லை. சமூகம் எங்கே மாறிக்கொண்டு இருக்கிறது, எங்கே மாறாமல் இருக்கிறது என்பதற்கான அடையாளம்தான் இந்த 'ன்'னும், 'ர்'ரும்.


இந்த எழுத்துக்கள் எங்கு வந்தாலும் அவைகளை எச்சரிக்கையாகக் கடந்து செல்ல வேண்டும். அங்கே குழிகள் தோண்டி வைக்கப்பட்டு இருக்கின்றன. அவைகளில் குட்டிச்சாத்தானின் வேதங்கள் ஒலித்துக் கொண்டிருக்கின்றன.


முன்பக்கம்

கருத்துகள்

20 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
 1. பத்திரிக்கைகள் மாய பிசாசுகள்,
  அவைகள் உண்மையை பொய் என்று நம்ப வைக்கும், பொய்யை உண்மையென்று நம்ப வைக்கும்.

  பதிலளிநீக்கு
 2. நல்ல கருத்து. ஆனாலும் வீரப்பனுக்கு இர் போட வேண்டும் என்பதை மட்டும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மற்ற கருத்துக்கள் ஏற்புடையவையாக இருந்தன

  பதிலளிநீக்கு
 3. யாருங்க இந்த இங்கிலீஷ் வால்பையன்

  பதிலளிநீக்கு
 4. அண்ணா!
  சரியான செய்தியை எழுதி இருக்கிறீர்கள்.

  பதிலளிநீக்கு
 5. உதயகுமார்!

  தங்கள் வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 6. வால் பையன்!

  பத்திரிக்கைகள் மட்டுமல்ல, இன்றைய ஊடகங்கள் அனைத்துக்கும் பொருந்தும்.

  பதிலளிநீக்கு
 7. vall paiyen!

  வீரப்பனுக்கு 'ர்' போட்டால் தர்மசங்கடமாய் இருக்கிறதா?
  அந்த 'ன்', 'ர்' எழுத்துக்களின் வலிமையை உணர்த்தவே அப்படி எழுதியிருந்தேன்.

  பதிலளிநீக்கு
 8. வால்பையன்!

  அப்ப vall paiyen நீங்க இல்லையா?

  பதிலளிநீக்கு
 9. சேலத்து முத்தையா!

  நன்றி தம்பி.

  பதிலளிநீக்கு
 10. Good one.

  I want to buy "சேகுவேரா (அமெரிக்க உளவுத்துறையின் ரகசியக் குறிப்புகளின் பின்னணியில்)".

  Where can I get it.

  பதிலளிநீக்கு
 11. //வால்பையன்!

  அப்ப vall paiyen நீங்க இல்லையா? //

  நானில்லை, அது யாருன்னும் தெரியல

  பதிலளிநீக்கு
 12. excellent. let us keep writing. i hope i learn tamil typing soon to sue 'n' and 'r' appropriately.
  the tragedy is there too many 'n's and too less'r's now.

  பதிலளிநீக்கு
 13. வால் பையன்!

  வாலுக்கே, வாலா?
  கவனம்.

  பதிலளிநீக்கு
 14. Anonymous

  சேகுவேரா புத்தகம் கிடைக்கும் முகவரி:

  பாரதி புத்தகாலயம்
  7, இளங்கோ தெரு
  தேனாம்பேட்டை
  சென்னை-18

  பதிலளிநீக்கு
 15. Chuttiarun

  இதோ, இணைப்பு கொடுத்து விட்டேன்.
  வேறேன்ன செய்ய வேண்டும்.

  பதிலளிநீக்கு
 16. ரொம்ப நன்றி.
  தமிழ் உங்களை இருகரம் நீட்டி வரவேற்கும்.

  பதிலளிநீக்கு
 17. i had a sorrow for a long time abt this point.In my village the higher caste small boy used to call a elder in a singular form only.I felt very sad and angry those days and i used to said this issue everywhere in meetings when i was 17 years student.After a very long gap you have rightly touched this now and mede me to remember those days-R.Vimala vidya-9442634002

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!