அப்போது பைத்தியங்களே திருடுவார்கள்
இதற்கு முன்பு பதிவு செய்யப்பட்ட ஒழுக்கத்தின் பலிபீடங்களை வழிமொழிந்து கருத்துக்கள் வந்திருந்தன. சிலர் எனது இ-மெயில் முகவரிக்கு அது எப்படி சரியாகும் என கடிதம் எழுதியிருக்கிறார்கள். ஒரு தொழிற்சங்கத் தலைவருக்கு இருக்கக்கூடிய புரிதலை சமூகம் முழுமைக்குமாக விரிவுபடுத்தி பார்த்திட முடியாது என்று ஒருவர் சொல்லியிருக்கிறார். தனிநபர்கள் திருந்தாமல் சமூகம் எப்படி திருந்தும் எனவும் ஒருவர் கேட்டுவிட்டு, ஒழுக்க மீறலை உங்களைப் போன்றவர்களே ஆதரிக்கலாமா எனவும் ஆதங்கப்பட்டிருக்கிறார். இந்த இருவரிடமும் சமூகம் குறித்த அக்கறை நிறைய இருப்பதை உணரமுடிகிறது.
முதலில் ஒரு ஒழுக்க மீறலுக்கு வக்காலத்து வாங்கிக் கொண்டு கருத்துக்களை முன்வைத்ததாக நான் கருதவில்லை. இந்த அமைப்பு ஒழுக்கத்தை எப்படி பார்க்கிறது, அதற்கு என்ன மரியாதை கொடுக்கிறது என்னும் கேள்விகளை மட்டுமே முன்வைத்திருந்தேன். இங்கே ஒழுக்க மீறலையே வாழ்க்கையாகயும், ஒழுக்கமாகவும் வைத்திருப்பவர்களை குறிப்பிடவில்லை. எதோ ஒரு சந்தர்ப்பத்தில் தடுமாறியவர்களை ஆதரவோடு பார்க்க வேண்டியிருக்கிறது என்றுதான் சுட்டிக்காட்டியிருந்தேன். இந்த அமைப்பின் அவலட்சண முகத்தின் மீது வெளிச்சம் காட்டுவது மட்டுமே அதில் முக்கியமானதாக இருந்தது. ஒழுக்கம் குறித்தும், ஒழுக்கமீறல் குறித்தும் பேசவில்லை. இப்போது அவைகளை பற்றியும் பேசுவது நமது பார்வையையும், சிந்தனைகளையும் மேலும் தெளிவாக்கும் என நினைக்கிறேன்.

ஒவ்வொரு காலத்திலும் ஒரு சமூக அமைப்பை ஆளுகின்ற கருத்துக்கள் அந்தந்த காலத்தின் ஆளும் வர்க்கத்தின் சிந்தனைகளாகவே இருக்கின்றன. அரசியல், பொருளாதாரம், கலாச்சாரம் என்று அனைத்தின் மீதும் படரும் அதன் மூளையின் உன்மத்தம் பிடித்த செல்கள் அனைத்தும் முழுக்க முழுக்க தனது வர்க்கத்தை நிலைநிறுத்திக் கொள்வதிலேயே கவனம் கொண்டிருக்கின்றன. எல்லாவற்றையும் தங்களுடைய ஆயுதங்களாக்கும் பணியை செய்துகொண்டே இருக்கிறது. மக்களை வெல்வதற்கும், அவர்களை முழுமையாக தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்குமான தேவை அந்த ஆளும் அமைப்புக்கு இருக்கிறது. அதில் மிக நுட்பமாகவும், அரூபமாகவும், வலிமை மிக்கதாகவும் வடிவமைக்கப்பட்டிருப்பது கலாச்சாரம். இந்த கலாச்சாரம்தான் இந்த அமைப்பை ஏற்றுக்கொள்வதற்கான சம்மதத்தையும், ஒப்புதலையும் மக்களிடமிருந்தே பெற்றுவிடுகிற சாமர்த்தியம் கொண்டதாய் இருக்கிறது.

கலாச்சாரத்தின் ஒரு பகுதியான ஒழுக்கத்தை வாளாக்கி நீதிதேவதை கையில் ஒங்கியபடி காட்சியளிக்கிறாள். காவல்துறையும், நீதித்துறையும் ஒழுக்கத்தை காப்பாற்றுவதற்காக அல்லும் பகலுமாய் படாத பாடு படுகிறது. வேலைநிறுத்தம் செய்தவர்களை நடுராத்திரியில் தெருவில் இழுத்துச் செல்லும். கல்வியை வியாபாரமாக்காதே என்று ஆர்ப்பாட்டம் செய்தால் அடிவயிற்றில் மிதிக்கும். கோடிக்கணக்கில் வருமான வரி ஏய்த்தவர்களிடம் கெஞ்சிக்கொண்டு நிற்கும். மாதச்சம்பளக்காரர்களிடம் கெடுபிடி காட்டும். சங்கராச்சாரியாருக்கு சிறைக்குள் சகல பணிவிடைகளும் செய்யும். பங்குச் சந்தையை ஆட்டுவிக்கும் பணமுதலைகளிடம் நிதியமைச்சர் மும்பை சென்று பேச்சுவார்த்தை நடத்தி சலுகைகள் அறிவிப்பார். வருங்கால வைப்புநிதிக்கு வட்டியை உயர்த்த பத்து தடவை தொழிற்சங்கங்கள் நிதியமைச்சகத்தின் வாசலில் காத்து நிற்க வேண்டியிருக்கிறது. கோடிக்கணக்கில் வங்கிக்கடன் வாங்கி திரும்பச் செலுத்தாதவர்களுக்கு மரியாதை தாராளமாய் கிடைக்கிறது. பத்தாயிரம் ருபாய் பயிர்க்கடன் வாங்கி திரும்பச் செலுத்த முடியாதவர்கள் வீட்டில் ஜப்தி நடக்கிறது. அடுக்கிக்கொண்டே போகலாம். நாளொரு நியாயமும், பொழுதொரு தர்மமுமாக நீதிதேவதையின் வாள் சுழன்று கொண்டே இருக்கிறது. எந்த பிரஜையும் ஒழுக்க மீறல்களிலிருந்து தப்பித்துவிடாதபடிக்கு கோடுகள் குறுக்கும் நெடுக்குமாக கிழிக்கப்பட்டிருக்கின்றன.

இதெல்லாம் வர்க்கச்சார்புடைய ஒழுக்க நெறிகளும், ஒழுக்க மீறல்களும் என்று அர்த்தப்படுத்திக் கொள்வோமாக. ஆனால் எல்லாக் காலத்துக்கும் எல்லா வர்க்கத்துக்கும் பொதுவான சில ஒழுக்கங்கள் இருப்பதாகவும் அவைகளே சமூகத்தை இயங்க வைப்பதாகவும் புரிந்துகொள்வதைத்தான் ஒப்புக்கொள்ள முடியவில்லை. அதிலும் குறிப்பாக திருடாமல் இருப்பது குறித்து அப்படிப்பட்ட கருத்து இருக்க முடியுமா? சமூகத்தின் காரணிகளை தனிநபர்கள் மீது நாம் சுமத்திப் பார்த்திட முடியாது. சமூகத்தின் ஒழுக்கத்தை தனிநபர் ஒழுக்கத்தோடு நாம் குழப்பிக் கொள்ளக் கூடாது.

இந்த அமைப்பு மனிதர்களை மேலும் மேலும் சுரண்டுகிறது. அதேவேளை தேவைகளையும் நிர்ப்பந்தங்களையும் தந்து கொண்டே இருக்கிறது. மயானக்கரை வரைக்கும் அரிச்சந்திரர்களை விரட்டி விரட்டிப் பார்க்கிறது. நேர்வழியில் எதிர்த்து போராடுகிற மனோபலமற்றவர்கள் எப்படியாவது இந்த ஓட்டத்தில் தங்களை நிலைநிறுத்திக் கொள்ள குறுக்கு வழி தேடுகிறார்கள். சமூகத்தின் பார்வையில் ஒழுக்கமற்றவர்களாகிறார்கள். இதுவும் அமைப்பின் ஏற்பாடே. அந்த மனிதர்களின் போராட்டக் குணம் மழுங்கடிக்கப்படுகிறது. சிறு தேங்காய்த்துண்டுக்காக எலிப்பொறியில் மாட்டிக்கொண்ட அவர்கள் மீது பரிதாபப்படுவதா அல்லது கோபப்படுவதா. அந்த மனிதர்களை திருத்துவதா அல்லது தண்டிப்பதா?. பலீவனமான அந்த மனிதர்களை ஆதரவற்றவர்களாக, அனாதைகளாக நாமும் புறக்கணித்துவிட முடியாது.

சமூக அக்கறை மனிதாபிமானத்தோடு வெளிப்படும்போதுதான் புதிய பரிணாமம் பெறுகிறது. அந்த மனிதர்களுக்காக நாம் பேசுவதும், இந்த பலிகள் ஏன் நடக்கின்றன என்பதை விவாதிப்பதும் பாவிகளை இரட்சிப்பது ஆகாது. இதயமற்ற ஒழுக்கத்தின் பலிபீடங்களை உலகுக்கு காட்டும்போது மக்கள் தங்கள் நிபந்தனையற்ற ஒப்புதலை மறுபரிசீலனை செய்ய ஆரம்பிப்பார்கள். எதொவொரு நேரத்தில், எதொவொரு நெருக்கடியில் ஒழுக்கம் மீறியவர்களை எப்போதும் ஒழுக்கம் மீறிக்கொண்டிருப்பவர்களுக்கு எதிரான ஆயுதங்களாக நாம் பிரயோகிக்கிறோம். ஒழுக்கத்தை சமூகத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு மட்டும் விதிக்க முடியாது. கூடாது என்பதுதான் நமது பார்வை. அதனால் மேலும் மேலும் ஒழுக்க மீறல்கள் பரவத்தான் செய்யும்.

ஒழுக்கம் என்பது வலியுறுத்துவது மட்டும் ஆகாது. ஒருவழிச் சாலையும் ஆகாது. ஒரு பகுதியினர் விதிகளை கடைப்பிடிக்க ஒரு சிலர் கடைப்பிடிக்காமல் போனாலும் விபத்துக்கள் நேர்ந்துகொண்டுதான் இருக்கும். இங்கு எல்லா தினப்பத்திரிக்கைகளின் எழுத்துக்களிலும் ஒழுக்க மீறல் குறித்த செய்திகளே கொலைகளாகவும், கொள்ளைகளாகவும் வந்து கொண்டு இருக்கின்றன. இத்தனை சட்டங்களும், தண்டனைகளும் இருந்தும் ஏன் குற்றங்கள் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே இருக்கின்றன. இந்த அமைப்பு எவ்வளவு தூரம் கெட்டுப் போயிருக்கிறது என்பதற்கான அளவுகோல்களே அவை.

அடிமுதல் நுனி வரை அழுகிக் கொண்டு இருக்கும் ஒரு அமைப்பை எதிர்த்து நாம் போராடுகிறோம். காரணங்களை புரிந்துகொண்டுதான் விடைகளை தேட முடியும். வேர்களின் வியாதி பார்க்காமல் இலைகளுக்கு மட்டும் வைத்தியம் செய்து எந்த மரத்தையும் காப்பாற்ற முடியாது. ஒழுக்கம் என்பது அமைப்பின் தன்மைகளை பொறுத்து மனிதர்களுக்கு தன்னியல்பாக வரக் கூடியது. எதை மாற்ற வேண்டும் என்பதை முதலில் தீர்மானிப்போம். தனியுடமை முற்றிலும் ஒழிக்கப்பட்டு, திருடுவதற்கான சகல காரணங்களும் அற்ற ஒரு சமூகத்தில் பைத்தியக்காரர்களே எப்போதாவது திருடுவார்கள் என்று மாமேதை மார்க்ஸ் சொன்னதுதான் திரும்ப திரும்ப ஒலித்துக்கொண்டிருக்கிறது.

முன்பக்கம்

கருத்துகள்

13 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
 1. 'எதை மாற்ற வேண்டும் என்பதை முதலில் தீர்மானிப்போம். தனியுடமை முற்றிலும் ஒழிக்கப்பட்டு, திருடுவதற்கான சகல காரணங்களும் அற்ற ஒரு சமூகத்தில் பைத்தியக்காரர்களே எப்போதாவது திருடுவார்கள் என்று மாமேதை மார்க்ஸ் சொன்னதுதான் திரும்ப திரும்ப ஒலித்துக்கொண்டிருக்கிறது. '

  அப்ப தனியுடமை ஒழிகிற வரை
  என்ன செய்தாலும் சரிதான்னு சொல்ல
  வருகிறீர்கள்.எல்லோரும் லஞ்சம் வாங்கும் போது நான் லஞ்சம்
  வாங்கினால் என்ன தப்பு,
  சோசலிச சமுதாயம் ஏற்பட்டடும்
  லஞ்சம் வாங்குவதை நிறுத்துகிறேன்
  என்று சொன்னால் ஏற்பீர்களா.

  பதிலளிநீக்கு
 2. பலமாய் சிந்திக்கத் தூண்டியிருக்கிறது. ஏற்றுக்கொள்ளவும் முடிகின்றது. தொழிற்சங்கங்களின் காரண நியாயங்கள் அவ்வளவு எளிதில் யாருக்கும் புரிந்து விடுவதில்லை. குறிப்பாய் ராஜாளிகளிற்கு.

  பதிலளிநீக்கு
 3. நேற்று இதைப் ப‌டித்த‌திலிருந்து வேறு எதையுமே சிந்திக்க‌ முடிய‌வில்லை.
  //அடிமுதல் நுனி வரை அழுகிக் கொண்டு இருக்கும் ஒரு அமைப்பை எதிர்த்து நாம் போராடுகிறோம். காரணங்களை புரிந்துகொண்டுதான் விடைகளை தேட முடியும்.//
  புரிந்து கொள்வ‌தும் புரிய‌ வைப்ப‌தும் தான் இதில் மிக‌வும் க‌டின‌மான‌ காரிய‌ம். (அநாம‌தேய‌மாக‌ வ‌ந்திருக்கும் வித‌ண்டாவாத‌மே இத‌ற்கு சாட்சி.) அந்த‌ ம‌க‌த்தான‌ ப‌ணியை ஏற்றிருக்கும் உங்க‌ளுக்கு ம‌ன‌மார்ந்த‌ ந‌ன்றி, வாழ்த்துக்க‌ள்!

  பதிலளிநீக்கு
 4. ருத்ரன் சார்!

  தொடர்ந்து என்னை உற்சாகப்படுத்திக் கொண்டு இருக்கிறீர்கள்.
  நன்றி.

  பதிலளிநீக்கு
 5. நந்தா!

  //யாருக்கும் புரிந்து விடுவதில்லை. குறிப்பாய் ராஜாளிகளிற்கு.
  //

  ஐயோ, ராஜாளிகளுக்கு எல்லாம் புரியும்.
  நம் மக்களுக்குத்தான் புரிய மாட்டேங்குது.
  மேலே உள்ள "அனாமதேயம்' ராஜாளியாகவா இருக்கப் போகிறது?
  நம்மைப் போலத் தான் இருப்பார்.

  பதிலளிநீக்கு
 6. தீபா!

  //அந்த‌ ம‌க‌த்தான‌ ப‌ணியை ஏற்றிருக்கும் உங்க‌ளுக்கு ம‌ன‌மார்ந்த‌ ந‌ன்றி,//

  ஏன், உன்னைப் போன்றவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லையா?

  பாராட்டுக்களுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 7. மிஸ்டர் அனாமதேயம்!

  //அப்ப தனியுடமை ஒழிகிற வரை
  என்ன செய்தாலும் சரிதான்னு சொல்ல
  வருகிறீர்கள்.எல்லோரும் லஞ்சம் வாங்கும் போது நான் லஞ்சம்
  வாங்கினால் என்ன தப்பு,
  சோசலிச சமுதாயம் ஏற்பட்டடும்
  லஞ்சம் வாங்குவதை நிறுத்துகிறேன்
  என்று சொன்னால் ஏற்பீர்களா.
  //

  நான் எங்கும் அப்படிச் சொல்லவில்லை என்று நினைக்கிறேன்.

  மனோபலமுள்ளவர்கள், தனிநபர் ஒழுக்கத்தைக் காப்பாற்றிக் கொண்டு
  இந்த அமைப்பை எதிர்த்து போராட முன்வருவார்கள்.
  பலவீனமானவர்கள், தனிநபர் ஒழுக்கத்தைக் காப்பாற்றிக் கொள்ள முடியாமல்
  லஞ்சம் வாங்கிக் கொண்டு, அமைப்பிற்குள் சாக்கடைப் புழுவாய் உருமாறிப் போவார்கள்.
  தனிநபர் ஒழுக்கத்தை காப்பாற்றிக் கொள்பவர்கள் அதிகமாக, அதிகமாக
  சோஷலிச சமூகம் ஏற்படும் நாள் நெருங்குவதாகவே அர்த்தம்.
  இந்த ஆதங்கமும், ஏக்கமும்தான் என் பதிவின் நோக்கம்.
  அதேநேரம், தனிநபர் ஒழுக்கத்தைக் காப்பாற்றிக் கொள்ள முடியாமல்
  துவண்டு போகிறவர்களை, "நண்பனே, நீயும் என்னோடு வா. இது உனது தவறு அல்ல, இந்த அமைப்பின் தவறு' என்று சொல்லி, அவனையும் மாற்றி, இந்த அமைப்பையும் மாற்ற முயல வேண்டும். அவனை அப்படியே "சாகு' என்று சொல்லி நாம் மட்டும் போய் எதையும் சாதிக்க முடியாது.

  பதிலளிநீக்கு
 8. //அடிமுதல் நுனி வரை அழுகிக் கொண்டு இருக்கும் ஒரு அமைப்பை எதிர்த்து நாம் போராடுகிறோம். காரணங்களை புரிந்துகொண்டுதான் விடைகளை தேட முடியும். வேர்களின் வியாதி பார்க்காமல் இலைகளுக்கு மட்டும் வைத்தியம் செய்து எந்த மரத்தையும் காப்பாற்ற முடியாது.//

  எல்லாம் சரி. நோய் தெரிந்தாலும், வைத்தியம் என்னவென தெரிந்துகொண்டாலும், இங்கே எதற்குமே வைத்தியம் பார்க்கவியலாமல் கண்ணெதிரே அழிவையல்லவா கண்டுகொண்டிருக்கிறோம்.

  எப்போது நம்முடைய இந்த கையாகாலாத்தனம் மாறும் மாதவராஜ்.

  சரி தூங்குகிறவர்களை (தூங்குவதுபோல் நடிப்பவர்களை) தட்டியாவது எழுப்பப்பார்ப்போம் என்னும் உங்கள் முயற்சிக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 9. //கோடிக்கணக்கில் வங்கிக்கடன் வாங்கி திரும்பச் செலுத்தாதவர்களுக்கு மரியாதை தாராளமாய் கிடைக்கிறது. பத்தாயிரம் ருபாய் பயிர்க்கடன் வாங்கி திரும்பச் செலுத்த முடியாதவர்கள் வீட்டில் ஜப்தி நடக்கிறது.//

  இது குறித்து எல்லாம் கற்றறிந்த பண்டிதர்களூக்கு, கணினி வல்லுன மேதைகளுக்கு இவர்களுக்கு என்னதான் அக்கறை இருக்கப்போகிறது.

  இன்னும் என் கண்முன்னே அந்த அவலம் தெரிகிறது. 1987, 88 களில் ஜப்தி என அதிகாரிகள் வீட்டின் முன்பு நிற்க எனது தந்தை அவர்களை எதிர்கொண்டவிதம், அதே சமயம் போலீஸ் அப்பாவிடம் காட்டிய மரியாதை, மேலும் தமிழகத்தின் மொத்த ஜப்தியை நிறுத்த வீட்டின் வருமானமான டிராக்டர் கோர்ட்டில் நிறுத்தப்பட்டு, இந்த 20 வருடங்களில் இரும்புத் துண்டாக கிடக்க, நஷ்ட ஈடு எதுவும் தரப்படாமல் என்னத்தைச் சொல்ல. அம்மாவின் அப்பா ( எனது தாய்வழி தாத்தா) பணம் கொடுத்துவிடலாம் எனச் சொல்லியும் அப்பா மறுத்து சக விவசாயிகளை ஜப்தியிலிருந்து காக்க வருமானம் கொடுக்கும் தனது டிராக்டரை பணயமாக எடுத்துச் செல்ல அனுமதித்தார். இத்தனை தியாகத்திற்கும் ஏதேனும் அர்த்தம் உள்ளதா.

  எதை எதையோ நினைவு கூரச் செய்துவிட்டீர்கள் மாதவராஜ்.

  பதிலளிநீக்கு
 10. மதுமிதா!

  நினைவு கூர்வது இன்னும் நமது சிந்தனைகளை கூர்மையாக்கும்.
  அனுபவங்கள், சட்டென பெரிய உண்மையை மிக எளிதாக உணர வைத்துவிடும் வல்லமை கொண்டவை.

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!