காந்தி புன்னகைக்கிறார்- முதல் அத்தியாயம்


டெல்லியில், பிர்லா வீட்டில் அமைக்கப்பட்டிருந்த அவரது ஆசிரமத்தில் மரக்கட்டிலிலிருந்து அதிகாலையிலேயே எழும்புகிறார். மற்றவர்களை எழுப்புகிறார். 3.45 மணிக்கு குளிர் உறைந்த அந்த வராண்டாவில் பிரார்த்தனை ஆரம்பிக்கிறது. அவரது பேத்தி மனு முதலில் சொல்ல பகவத் கீதையிலிருந்து முதல் இரண்டு சுலோகங்கள் வாசிக்கப்படுகின்றன. முந்தைய இரவு படுக்கப் போகும்போது "யாரோ ஒருவன் என்னை துப்பாக்கியால் சுட்டாலும், உதடுகள் ராம நாமத்தை உச்சரிக்க, அந்த குண்டுகளை திறந்த மார்பில் தயக்கமில்லாமல் ஏற்றுக் கொள்ள வேண்டும். அப்போதுதான் நான் மகாத்மா" என்று அவர் சொன்ன வார்த்தைகள் மனுவின் மனதில் அந்த கணத்தில் நிழலாடி இருக்கலாம்.இல்லாமலும் இருக்கலாம்.


மகாத்மா மனுவைப் பார்த்து அவருக்குப் பிடித்தமான குஜராத்தி பாடலை பாடச் சொல்கிறார்.

"களைப்பாய் இருக்கிறாயோ...
களைப்பாய் இல்லையோ - மனிதனே
வேகம் குறைந்து போகாதே....
அப்படியே நின்றும் விடாதே


உனது போராட்டத்தில்
நீ தனியே விடப்பட்டாலும்
தொடர்ந்து செல்....
வேகம் குறைந்து போகாதே"


மனு பாடிக் கொண்டு இருக்கிறாள்.

மகாத்மாவுக்கு எல்லா நாட்களையும் போலவே அன்றும் ஆரம்பித்தது. ஆனால் நாதுராம் கோட்சேவுக்கு அப்படி விடியவில்லை.

பழைய தில்லியில் புகைவண்டி நிலையத்தின் ஓய்வு அறை எண்:6 ல் அவன் விழித்தான். அங்கே முதலில் விழித்தது அவன் தான். குளித்து, உடையணிந்து கொண்டான். நாராயண ஆப்தேவும், விஷ்ணு கார்காரேவும் தூங்கிக் கொண்டிருந்தார்கள். ஏற்கனவே இவர்கள் ஜனவரி 20ம் தேதி மகாத்மாவை கொலை செய்ய முயன்று முடியாமல் போயிருந்தார்கள். பெரிய அளவில் திட்டமிடுவதைவிட தனியாக சென்று கொல்வது என்று முடிவு செய்து நேற்றே குவாலியருக்குச் சென்று 35 அடி தூரத்திற்குள் சுடக்கூடிய பிஸ்டலை டாக்டர் பர்ச்சூரிடமிருந்து வாங்கி வந்திருந்தார்கள்.

மனதில் ஆயிரம் போராட்டங்களோடு ஆனால் வெளிக்காட்டிக் கொள்ளாமல் அந்த துப்பாக்கியை பார்த்துக் கொண்டிருந்தான் கோட்சே. பகவத் கீதையை முழுவதுமாக அவனும் அறிந்திருந்தான். இந்த கொலையை நியாயப்படுத்தும் பகவத் கீதை வரிகளை அவ்வப்போது நினைத்துக் கொள்வான்.

அன்பும் அமைதியும் தவழும் மகாத்மாவின் கண்களும், கொலைவெறி கொண்ட கோட்சேவின் கண்களும் இன்று மாலை நேருக்கு நேர் சந்திக்க இருக்கின்றன. வெறும் கண்களின் சந்திப்பு அல்ல அது. அகிம்சைக்கும் வன்முறைக்கும் நடந்த சந்திப்பு அது. தர்மமும் சூதும் சந்தித்துக் கொண்ட நிகழ்வு அது. ஒளியும் இருளும் சந்தித்துக் கொண்ட வேளை அது. வரலாற்றின் மிக முக்கியமான ஒரு தருணமாக அது நிலை கொண்டு விடுகிறது. பிறகு ஒளிமங்கி இருள் படர்ந்ததாக இந்திய வரலாற்றின் பக்கங்களில் நீள்கிறது.

மகாத்மாவும் கோட்சேயும் அதற்கு முன் நேருக்கு நேர் பார்த்துக் கொண்டதேயில்லை. அவர்கள் இருவரும் தனிநபர்கள் அல்ல. வெவ்வேறான இரண்டு கருத்துக்களின் உருவங்கள். இப்படி சந்திப்பு ஏற்படுவதற்கு இந்திய காலச் சூழலும், வரலாறும்தான் காரணம். அதை தெரிந்து கொள்ளாமல் இந்த நாளின் அர்த்தம் யாருக்கும் புரியாது. இவர்கள் இருவரும் எங்கிருந்து புறப்பட்டு இங்கு வந்து சேர்கிறார்கள் என்பதை பின்னோக்கிச் சென்று பார்க்காமல் நாம் எதிர்காலத்திற்குள் நுழைந்துவிட முடியாது.


(அடுத்த அத்தியாயம் நாளை)

கருத்துகள்

0 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!