இப்போது சொல்லுங்கள், யார் ராஜதுரோகி?
இப்போது அவர் ஒரு ராஜதுரோகி. ஒரு மனிதாபிமானியாக, நல்ல மருத்துவராக, மனித உரிமைகள் இயக்கச் சேவகராக மட்டுமே இதுவரை அறியப்பட்டிருந்த 58 வயதான டாக்டர் பினாயக்சென்னுக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டு இருக்கிறது. சட்டீஸ்கர் மாநிலத்தின் இந்த கீழ்க்கோர்ட்டு தீர்ப்பு இப்போது நாடெங்கிலும் கிழிக்கப்பட்டுக் கொண்டு இருக்கிறது. சமூக ஆர்வலர்கள், அறிஞர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள் என பலதரப்பிலிருந்தும் கண்டனங்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. மே.வங்கத்தைச் சேர்ந்த, நோபல் பரிசு பெற்ற டாக்டர் அம்ரித்யா சென் மனமுடைந்தவராய் “நீதியின் கருச்சிதைவு” என்று கடுமையான வார்த்தைகளோடு தன் கண்டனத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.
பினாயக்சென் 2007ம் வருடம் மார்ச் 14ம்தேதி சட்டீஸ்கர் மாநிலக் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். மாவோயிஸ்டுகளுக்கு கூரியராக செயல்பட்டார் என்பதும், மாவோயிஸ்டுகள் மீது அனுதாபம் கொண்டு இருந்தார் என்பதும் அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள். அவரது வீட்டைச் சோதனையிட்டு, அதற்கான இரண்டு கடிதங்களையும், சில பிரசுரங்களையும் கைப்பற்றி, நீதிமன்றத்தில் ஆதாரங்களாக சமர்க்கப்பட்டு இருக்கின்றன. அந்த ஆதாரங்கள் போலியானவை என்றும், சாட்சியங்களால் உறுதிசெய்யப்படவில்லையென்றும் பினாயக்சென் ஆதரவாளர்கள் சொல்கின்றனர். இருந்தபோதும் இந்தியக் குற்றவியல் சட்டத்தின் செக்ஷன் 124A அவர் மீது பாய்ந்திருக்கிறது.
ஆதாரங்களும், சாட்சியங்களும் இங்கு தேவையற்றவை. நிஜத்தில் டாக்டர் பினாயக் சென யாருக்கு ஆதரவாளராக இருந்தார் என்பது உலகுக்கே தெரிந்திருக்கிறது. அரசால் புறக்கணிக்கப்பட்ட விளிம்புநிலை மனிதர்களுக்கு சேவை செய்வதையே தன் வாழ்வாக கொண்டிருக்கிறார். அவர்களுக்கான குரலாக இருந்திருக்கிறார். பெரும் முதலாளிகளால் படுகொலை செய்யப்பட்ட சங்கர் குஹா நியோகி எனும் தொழிற்சங்கத் தலைவரின் பெயரால் மருத்துவமனை கட்டி எழை எளிய மக்களுக்கு இலவச சிகிச்சை அளித்து வந்திருக்கிறார். இதற்காக பல அமைப்புகள் அவரைப் பாராட்டி, விருதுகள் வழங்கி கௌரவித்திருக்கின்றன.
சட்டீஸ்கர் மாநில அரசான பா.ஜ.கவின் அணுகுமுறையில்தான் பிரச்சினையே. மாவோயிஸ்டுகளை ஒடுக்குகிறோம் எனக் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது அரசு. ‘சல்வா ஜூடும்’ என்னும் அமைப்பை நக்சலைட்டுகளுக்கு எதிராக ஏற்படுத்தி அரசே நிதியுதவியும், ஆயுத உதவியும் செய்து வருகிறது. அந்தப் படையினரால் ஒரு லட்சத்துக்கும் மேலான பழங்குடியினர் தங்கள் இருப்பிடங்களை விட்டு துரத்தியடிக்கப்பட்டு இருக்கின்றனர். ஆட்சியினரை கொள்கை ரீதியாக விமர்சனம் செய்பவர்களையும், நக்சலட்டுகளாக முத்திரை குத்தி படுகொலை செய்யப்படுகின்றனர். மனித உரிமைகள் மீறப்படுவதாகவும், ஜனநாயகம் நசுக்கப்படுவதாகவும் சட்டீஸ்கர் மாநில அரசை டாக்டர் பினாயக் சென் குற்றஞ்சாட்டி வந்தார். பழிவாங்கும் நோக்கத்துடன் அரசு பினாயக் சென்னை ‘மாவோயிஸ்ட்களுடன் தொடர்பு உண்டு” எனக் குற்றஞ்சாட்டியது. மாவோயிஸ்ட்களின் ஆயுத நடவடிக்கையை எப்போதும் விமர்சித்தே வந்த பினாயக்சென்னுக்கு இப்போது ஆயுள் தண்டன!
இங்கு பினாயக்சென் மாவோயிஸ்டுகளுக்கு ஆதரவாக இருந்தார் என்பதெல்லாம் வெறும் பேச்சு. அரசுக்கு ஆதரவாக இல்லை என்பதுதான் பிரச்சினை. பாசிசத்தின் அடிப்படை குணாம்சங்களில் இது ஒன்று. தன்னை வ்ழிமொழியாத யாரையும் அது தன் எதிரியாகவே பாவிக்கும். அதுதான் இங்கு நடந்திருக்கிறது. ‘அறிவிக்கப்படாத அவசரநிலைப் பிரகடனம்’ என்கிறார்கள் மூத்த வழக்கறிஞர்கள் பலரும் இதனை. அம்னஸ்டி இண்டர்நேஷனல் முதற்கொண்டு ஏராளமான அமைப்புகள் முறையிட்டும், மத்திய அரசு இதுவரை வாயைத் திறக்கவில்லை. அது எதற்கு? பினாயக் சென்னுக்கு ஆதரவாக இங்கே கூட்டம் நடத்துவதற்கு தமிழக காவல்துறையும் மறுத்துள்ளது.
மே.வங்கத்தில் மட்டும் வேறு கதை. அங்கு மாவோயிஸ்டுகளுக்கு எதிராக சி.பி.எம் அரசு கூலிப்படை வைத்திருப்பதாக பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டுகிற மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் சட்டீஸ்கரில் மட்டும் ‘சல்வா ஜூடும்’ பற்றி ஏன் வாயைத் திறப்பதில்லை. மே.வங்கத்தில் மாவோயிஸ்டுகளோடு பேரணி நடத்தியும், அவர்களுக்கு ஆதரவாகப் பேசியும் வருகிற மம்தா பானர்ஜி ராஜ துரோகி இல்லையா? நாடெல்லாம் ஒரு பார்வை, மே.வங்கத்தில் மட்டும் ஏன் வேறு பார்வை. அங்கு பா.ஜ.க, காங்கிரஸ், திரிணாமுல் என அனைத்து முதலாளித்துவக் கட்சிகளுக்கும் பொது எதிரியாக ஒரு இடதுசாரி அரசு தொடர்ந்து இருப்பதுதான்!
ராஜதுரோகம், ராஜதுரோகம் என இந்த கோர்ட்டுகளும், இந்த அரசும் அவர்களுக்கான அகராதியில் சொல்லிவிட்டுப் போகட்டும். உண்மையில் யார் ராஜதுரோகி என்பதற்கான மக்கள் அகராதி ஒன்று இருக்கிறது. உழைக்கும் மக்களைச் சுரண்டுகிறவர்கள், மக்களைப் பிரித்து ஆளத் துடிப்பவர்கள், நாட்டின் வளங்களைச் சுரண்டுபவர்கள், விவசாயிகளின் வாழ்வை அபகரித்து அவர்களை தற்கொலை விளிம்புகளுக்குத் தள்ளியவர்கள், அரசுத் திட்டங்களில் முறைகேடுகள் செய்கிறவர்கள், ஊழல் செய்கிறவர்கள், குள்ள நரிகள், மொள்ளமாரிகள் எல்லாம் ராஜ துரோகிகள்.
இப்போது சொல்லுங்கள், யார் ராஜ துரோகி?
பத்தாண்டு கால நாவல்கள் குறித்த வாசகக் குறிப்புகள் – 12
“ஆண்களற்ற சுதந்திரமானவெளியில் கட்டுண்டு கிடந்த பெண் மனதின் உரையாடல் தடைகளற்று சுதந்திரமாக வெளிப்படுகிறது. அப்படித்தான் வெளிப்படும். ஆண்வாசனை தொலைவிலிருக்கும் மரணவீட்டில் கூடியிருக்கும் பெண்களின் உரையாடலுக்குள் முகிழ்த்து வரும் பாலியல் கிளர்ச்சியும், உடலின் அளவு குறித்த பதிவுகளும் இதுவரை தமிழ்ப் புனைவுலகம் சந் தித்திராதவை என்று தான் சொல்ல வேண்டும். ”
********
என்றைக்கும் தீராத பாடுபொருளாக ஆண் மனதினில் நீடித்து நிலைத்திருக்கிறது பெண் உடல். அதன் புறத்தோற்றத்தில் மையல் கொண்டு லயித்த வார்த்தைகளால் உருவான கவிதைகளும், காவியங்களும், இலக்கியங்களும் கணக்கிலடங்காதவை. தான் புரிந்து கொள்ளப்படாமலே வெளிப்படுத்தப்பட்டு வருவதைக் கண்ணுற்ற பெண் மனம் எரிச்சல் கொண்டது மட்டுமல்ல, தன்னை எழுதிக்கொள்ள தனக்கான எழுத் தாளர்களையும் கண்டடைந்தது. காலம் சிலவற்றை நிர்பந்தித்தே பெற்றுக் கொள்ளும் என்பதை அறிவோம் நாம். காலத்தின் தீராத கேள்விகளைத் தன் கவிதைகளின் அர்த்தமிகு சொற்களின் வழியாக விவாதப் பொருளாக்கினர் கவிதாயினிகள். கடந்த பத்தாண்டுகளில் நிகழ்ந்திருக்கிற மிகக் காத்திரமான செயலை நிகழ்த்திய கவிஞர்களில் முக்கியமானவர் சல்மா.
சிலம்பு, மணிமேகலையென பெண்களின் துயரத்தைக் காப்பியமாக்கிய தமிழின் தொடர்ச்சி அறுபட்டுக் கிடக்கிறது. எனவே தான் சல்மா இதுவரை தமிழ்ப்புனைவுலகின் எந்தப் பக்கங் களிலும் வெளிப்பட்டிருக்காத இஸ்லாமியப் பெண் உலகின் மொழியை இரண்டாம் ஜாமங்களின் கதையாக்கியிருக்கிறார். நாவலெங்கும் பெண் உடல் குறித்த பிரக்ஞை ஞாபகமூட்டப்பட்டுக் கொண்டேயிருக்கிறது. மழையில் நனைவது பிடிக்கும் வயதில் பெண்ணிடம் உடல் குறித்த கவனத்தை ஏற்படுத்தத் துடிக்கும் ராபியாவின் தாய் இஸ்லாமியச் சமூகத்தின் வார்ப்பு. மௌத் தான வீட்டிற்குச் செல்கிற போதும் தன் மகள் பெண்களோடுதான் இருக்க வேண்டும் என்கிறாள். கார் ஓட்டி வரும் டிரைவரைப் பார்த்து எதிர் வீட்டுப் பெண் தலையை உள்ளிழுத்துக் கொள்வதன் மூலம் ராபியாவிற்கு மட்டுமல்ல, சகல பெண்களுக்கும் உடல் மீதான அச்சம் மூளைகளில் ஏற்றப்படுவதை நாவல் முதல் அத்தியாயத்தில் துவக்குகிறது. அதற்கு பிறகு நாவல் முழுக்க சல்மாவின் சொற்களால் மிதக்கின்றன பெண் உடல்கள்.
ராபியா, வஹிது, பிர்தௌஸ், றைமா, சொஹ்ரா, மும்தாஜ், நபிஸா, மதினா என முழுக்க பெண்களின் ராச்சியமே நிகழ்கிறது. காதர், கரீம், சுலைமான், சையது என ஆண்கள் நாவலுக்குள் அவ்வப்போது தலைகாட்டுகிறார்கள். காதர் இறை நம்பிக்கை கொண்டவன். நஸியின் (தலை எழுத்து) படியே யாவும் என நம்புவதோடு, வீட்டுப் பெண்களுக்கு அவர்கள் பின்பற்ற வேண்டிய இஸ்லாமிய மார்க்கங்களை நினைவூட்டிக் கொண்டேயிருக்கிறான். பள்ளி வாசல், ஜமாத்தை விட வீடு மதக்கோட்பாடுகளை கட்டிக் காத்திடும் இடமென வாசகனை உணரச் செய்கிறவனாக காதரின் வருகை நாவலுக்குள் நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது.
சுலைமான் நாவலுக்குள் வருகிற இடங்களிலும், அவன் பெயர் ஞாபக மூட்டப்படும் இடங்களிலும் இறுகிய அரபு வழி மதக்கோட்பாடுகளை தன்னுடைய வாழ்விடத்தில் நிறுவிட முயற்சிக்கிறான். அவனுடைய சட்ட திட்டங்கள் யாவும் பெண்ணை நோக்கியே குவிகின்றன. சினிமாவிற்கு போகாதே, புத்தகம் படிக்காதே, வேண்டுமானால் மத நம்பிக்கைகளை மனதிற்குள் ஆழப்படுத்திட குரானைப் படியுங்கள். நபிவழியில் நடந்திட முயற்சியுங்கள் என்று சொல்கிறதாக வெளிப்படுகிறான். மதம் அவனுக்குள் கட்டி வைத்து இறுக்கியிருக்கும் ஆண் மனது வெளிப்படும் இடங்கள் வாசகனுக்கு முக்கியமானவை.
நாவலில் உடல்கள் குறித்த மரபான பார்வையும், அதன் புறத்தோற்றத்தின் மீது மனிதர்களுக்கு இருக்கும் ஏக்கமும், பெருமிதமும் எந்தவிதமான விமர்சனத்திற்கும் இடமின்றி அப்படி அப்படியே பதிவாகியிருக்கிறது. தனக்கு கணவனாக வந்தவனிடமிருந்து மணவிலக்கம் பெறுவதற்கு அவனுடைய காணச் சகிக்காத உடலைத் தவிர வேறு எந்தக் காரணமும் பிர்தௌஸ்க்கு இல்லை. அழகும், பொலிவும் நிறத்தின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுவதை நாவலின் பல இடங்களில் பெண்கள் உரையாடலின் மூலமாக வெளிப்படுத்திக் கொண்டேயிருக்கிறார்கள். நாவலுக்குள் இரண்டு இஸ்லாமியரல்லாத பெண்கள் வருகிறார்கள். ஒருத்தி மாரியாயி. தலித்தாக பிறந்த மாரியாயி கரீமின் பண்ணையில் வேலை பார்க்க வந்து அவனுக்கே தன்னைப் பலியெனத் தந்தவள். தங்களுடைய சாதிப் பெண்களை பிறசாதி ஆண்கள் எப்படியெல்லாம் வஞ்சித்து வன்கலவி செய்கிறார்கள். தான் கரீமின் ஆள் என்பதால் எவனும் நெருங்க மாட்டான் என்று தனக்குள் நிம்மதி தேடிக் கொள்கிறாள். அது மட்டுமல்ல கரீமின் மனைவியும் கூட தனக்கு ரம்ஜானுக்கும், தீபாவளிக்கும் புதுச்சேலை எடுத்துத் தருகிறாள். தங்களில் ஒருத்தியாகத் தான் நாம் பார்க்கப்படுகிறோம் என்றே நினைக்கிறாள். ஆனாலும் கூட வாசகனுக்கு அவளின் நிறமும், அவள் புழங்கிக் கொள்ளத் தனிப்பாத்திரங்கள் வீட்டில் இருப்பதும் ஞாபகமூட்டப்படுவதன் வழியாக தமிழ் இஸ்லாமிய வாழ்வில் இருந்தும் கூட அகலாத சாதிய மனம் வெளிப்படுகிறது.
கரீமின் அண்ணன் மகளான வஹிதாவின் திருமண ஏற்பாட்டை ஏன் தன்னிடம் சொல்லவில்லை என்று மாரியாயி கோபித்துக் கொள்கிறாள். அப்போது ஒரு விவாதம் நடக்கிறது. விவாதத்தின் முடிவில் மாரியாயி இப்படி நினைத்துக் கொள்கிறாள். அவன் சொல்வது உண்மைதான். தன்னைக் காட்டிலும் தன் இடத்தை “அவன் சரியாகவே தெரிந்து வைத்திருக்கிறான். இது ஏன் தனக்குப் புரியவே மாட்டேனென்கிறது என்று மனதில் நினைத்தபடி முகத்தை சேலை முந்தானையால் அழுத்தி துடைத்துக் கொண்டாள்".... இம் மன உணர்வில் வாசகன் அடையும் இடம் எது? தன் மீது சுமத்தப்பட்டிருக்கும் இழிவை விரும்பி ஏற்றுக் கொள்ளும் மனோபாவத்தைக் கட்டமைத்து தலித்களை யும், பெண்களையும் தன்னுடைய கோட்பாட்டு அடிப்படைக்குள் நெறிப்படுத்திடும் கலாச்சாரப் பணி செய்யும் இதுவரையிலான எழுத்துப் பிரதிகளின் நிலையிலிருந்து இரண்டாம் ஜாமங்களின் கதையும் மீளவில்லை என்பதை அவசியம் சொல்ல வேண்டியிருக்கிறது.
தனித்த இஸ்லாமிய வாழ்வியல் கலாச்சார அடையாளங்களைக் கொண்டதாக ரமலான் மாதத்து இஸ்லாமிய தெருக்களும், வீடுகளும் அடையும் பெரும் கொண்டாட்ட மன நிலை அபூர்வமாக நாவலில் பதிவு பெற்றுள்ளது. வஹிதாவின் திருமண ஏற்பாடுகளின் வழியாக இஸ்லாமியர் களின் நிக்காஹ் சடங்குகள், நபிவழித் திருமணம் குறித்த தர்க்கங்கள், விவாதங்கள், மஹர் கொடுத்திடும் பழக்கம் மட்டுமே கொண்டிருந்த இஸ்லாமியர் களின் வீடுகளுக்குள் வரதட்சணை வந்த விதமும், வரதட்சணையில் குறிப்பிட்ட சதவீதத்தை ஜமா-அத் தார்கள் பெற்றுக்கொண்டு பிரியாணி மணக்க நிக்காவை நடத்தித் தருவதும் நாவலுக்குள் பதிவாகியுள்ளது. மற்ற விஷயங்களில் மார்க்கத்தின் அடிப்படையை வலியுறுத்துபவர்கள் இவை யாவும் நபிவழித் திருமணத்தில் கிடையாது என்றோ, ஹராம் எனவோ விவாதிக்கப்படவில்லையே ஏன் என சாதாரண வாசக மனத்தில் கூட கேள்வியை எழுப்புகிறது நாவல்.
சாரா அபுபக்கர் எழுதிய "சந்திரகிரி ஆற்றங்கரையில்" எனும் நாவல், நான் வாசித்தறிந்தவரை தான் பிறக்க நேர்ந்திட்ட சமூகத்தின் அழுக்குகளை பூச்சின்றி வெளிப்படுத்திய முக்கியமான நாவலாகும். தமிழில், அதுவும் மூடுண்டு கிடக்கிற இஸ்லாமிய பெண் உலகம் குறித்து இவ்வளவு வெளிப் படையாக விவாதித்த எழுத்துப் பிரதியாக "இரண்டாம் ஜாமங்களின் கதை"யைத் தவிர வேறு ஒன்றும் இருப்பதாகத் தெரியவில்லை.
பெண்களின் வெளியை எவர் திட்டமிட்டு வடித்திருப்பார்கள்?. வீட்டிற்குள்ளும், வெளியேயும் கூட அவர்களின் இருப்பைத் தீர்மானிப்பதில் மதச் சடங்குகளுக்கு பெரும் பங்கிருக்கிறது. அது இஸ்லாமிய சமூகத்துப்பெண் என்றால் நிலைமையே வேறு. நான் முதலில் இஸ்லாமிய நண்பரின் வீட்டிற்கு விருந்தாளியாகச் சென்ற பொழுதினில் நிகழ்ந்த சம்பவம் வாசகனுடைய புரிதலுக்கு உதவும் என்பதால் பதிவு செய்கிறேன்.
சாப்பாட்டு மேசையில் எல்லாவற்றையும் எடுத்து வைத்ததில் இருந்து பரிமாறுவது வரை அந்த வீட்டின் ஆண்களே எல்லாவற்றையும் செய்தார்கள். அதைப் பார்த்து மகிழ்ந்தது என் முற்போக்கு மனம். விடை பெற்றுச் செல்வது வரை அந்த வீட்டின் பெண்கள் என் கண்களுக்குத் தட்டுப்படவேயில்லை என்பது எனக்கு காலதாமதமாகத்தான் உரைத்தது. அவர்களுக்கு மட்டுமேயான தனித்த உடல்சார் அவஸ்தைகளின் உச்சத்தை பிர்தௌஸின் மூலமாக, பாத்திமாவின் மூலமாக, மும்தாஜின் வழியாக நான் இரண்டாம் ஜாமங்களின் கதையில் வாசித்துக் கடக்க முடியாத நொடியில் நான் எப்போதோ எங்கோ பார்த்திருந்த காட்சிகள் மனத்திரையில் நகர்ந்தன. எழுதியவற்றிலிருந்து எழுதாத வேறொன்றுக்கு வாசகனை நகர்த்திடும் இலக்கிய வடிவமே நாவல் என்று இங்கும் ஒரு முறை நான் உறுதி செய்து கொள்கிறேன்.
ரமலான் மாதத்திற்கு முந்தைய வாரங்களிலேயே நோன்பிற்கான முன் வாசனையை வீட்டிற்குள் நிறைப்பவர்களாக பெண்கள் இருக்கிறார்கள். ஆம்பிளைகள் தின்று தீர்ப்பதற்கான இடியாப்பமாவு, அரிசிமாவு இடித்து தயாரிப்பது என்பது ஒரு திருவிழாவைப் போல நடந்தேறுகிறது. ஆண்களற்ற சுதந்திரமானவெளியில் கட்டுண்டு கிடந்த பெண் மனதின் உரையாடல் தடைகளற்று சுதந்திரமாக வெளிப்படுகிறது. அப்படித்தான் வெளிப்படும். ஆண்வாசனை தொலைவிலிருக்கும் மரணவீட்டில் கூடியிருக்கும் பெண்களின் உரையாடலுக்குள் முகிழ்த்து வரும் பாலியல் கிளர்ச்சியும், உடலின் அளவு குறித்த பதிவுகளும் இதுவரை தமிழ்ப் புனைவுலகம் சந் தித்திராதவை என்றுதான் சொல்ல வேண்டும். பாலியல் கிளர்ச்சியை பரவ விடுபவளாக கசாப்புக் கடைக்காரரின் மகள் இருப்பதும், என்ன இப்படி பேசுகிறாள் என மேட்டுக்குடி சொஹ்ரா பேசுவதும், இழிசினர் வழக்கு என்றே எழுத்தாளர் நினைக்கிறாரோ. .
ஜென்மபுத்தி செருப்பாலடித் தாலும் போகாது என்று, குணநலன்களை பிறப்பின் அடிப்படையிலும் கட்டமைக்கும் கதையாடல்களும் நாவலுக்குள் நிரவிக்கிடக்கின்றன. தன்னுடைய சித்தி மைமூன், கெட்டுச் சீரழிந்து கருவைக் கலைத்திருக்கிறாள். தன்னுடைய தங்கை பிர்தௌஸ் புருஷனை ஒதுக்கி தனித்து இருந்தவள். சிவா என்கிற காபிரான அய்யருடன் கூடியதால் தற்கொலைக்கு நிர்பந்திக்கப்படுகிறாள். எனவே தன் மகள் ராபியாவும் அப்படி வந்து விடக்கூடாதேயென சொஹ்ரா எப்போதும் அவளை உடலாக மட்டும் பார்த்து அச்சமூட்டிக் கொண்டேயிருக்கிறாள். நூரம்மா உடலை விற்றுப் பிழைக்கும் பெண்ணாக இருந்தவள். அதனால்தான் பாத்திமா உடல்தரும் அச்சத்தில் இருந்து மீள முடியாது, வேட்கையைத் தணிக்க முருகனுடன் போய் மதுரையில் குடும்பம் நடத்துகிறாள் என்ற பதிவின் மூலமாகவும் குணநலன்களை கட்டமைப்பதில் பிறப்பிற்கு பங்கு இருக்கிறதென்ற சனாதனதர்மத்தின் குரலே இதுவென வாசகனை யோசிக்கச் சொல்கிறது.
பிர்தௌஸ் தற்கொலைக்கு நிர்பந்திக்கப்படுவதும் பாத்திமா விபத்தில் பலியாவதும் மரபுகளைத் தாண்டும் பெண்களுக்கு ‘அல்லா வாழும் காலத்திலேயே கூலியைக் கொடுத்து விடு வான். இம்மை நாள் வரும் வரை காத்திருக்க மாட்டான்’ என்கிற வைதீகக் குரலுக்கு இடமளிக்க கூடியதாகத்தான் அமைந்திருக்கிறது. நாவலாசிரியர் மிகுந்த கவனத்துடன் செயல்பட்டிருப்பதை நாவலின் ஒவ்வொரு கட்டத்திலும் வாசக மனம் உணர்கிறது. மத நிறுவனங்களுக்கு எதிரான சல்மாவின் கட்டமைப்பை அவருடைய மற்றொரு கதாபாத்திரம் அழித்து எழுதி விடுவதை நீங்கள் உணரமுடியும்.
எழுத்தாளர்தன் உள்ளங்கைக்குள் வைத்திருந்த கதையை ஒருவரிடம் தர, அங்கிருந்து அது மற்றொருத்தியின் கதையை வாசக மனதிற்குள் கடத்துகிறது. கனவுகள் பெருகித் துன்புறுத்தும் இரண்டாம் சாமங்களின் கதைக்குள் காட்சியுறும் பெண் உலகம் இது வரையிலான தமிழ் எழுத்துப் பிரதி கண்டிராத அதிர்ச்சியூட்டும் எதார்த்த வடிவிலானவை என்பதால் நேர்க்கோட்டு வாசிப்பில் வாசக மனதினுள் பாய்ந்துசெல்லும் சாத்தியம் கொண்டதாக இருக்கிறது.
ம.மணிமாறன்
மாதவராஜ் பக்கங்கள் - 29
‘பதிவர்கள் வீட்டுத் திருமணங்களுக்கெல்லாம் உன்னால் செல்ல முடிகிறது. நம் தொழிற்சங்கத் தோழர்கள் வீட்டு விசேஷத்துக்கு வரமுடிவதில்லை’ என எங்கள் சங்கப் பொதுச்செயலாளர் தோழர்.சோலைமாணிக்கம் ஆதங்கத்தோடு சில நாட்களுக்கு முன்பு சொன்னார். இரண்டு சம்பவங்கள் அதுபோல் ஆகிவிட்டன. நான் சங்கத்தின் தலைவராகவும் இருக்கிறேன். அவர் சொல்வதில் நியாயம் இருப்பதை நான் புரிந்துகொண்டாலும், எனது நியாயத்தை புரிந்துகொள்ள அவர் தயாராக இல்லை. அவருக்கு தொழிற்சங்கம் தான் சிந்தனை, செயல் எல்லாமே. சங்க செயற்குழு உறுப்பினர்களிலும் பலருக்கு வலையுலகம் குறித்து தெரியாது. கூட்டங்களுக்குச் செல்ல நேரமானால் கூட, என்னையும் காமராஜையும் எல்லோரும் கிண்டல் செய்ய ஆரம்பித்துவிடுவார்கள். இதற்கிடையில்தான் கணினியில் எழுதுவதும் வாசிப்பதுமாய் நகருகிறது.
ஈரோடு பதிவர்கள் சங்கமத்திற்குச் செல்ல கடும் ஆசையோடும், எதிர்பார்ப்போடும் இருந்தேன். நண்பர்கள் கதிர், பாலாசி, வெயிலான, சீனு எல்லோரும் பேசியிருந்தார்கள். கலந்துரையாடலில் என்ன பேசுவது என்றெல்லாம் கூட கொஞ்சம் உரையாடல்கள் நடத்தியிருந்தோம். உடல்நலமின்மை, தொழிற்சங்க வேலைகள் வழிமறித்துவிட்டன. மிகுந்த வருத்தமாயிருந்தது. எல்லோரையும் பார்ப்பது, எல்லோருடனும் பகிர்ந்துகொள்வது எனபது எவ்வளவு சந்தோஷமானது. என்னையே சபித்துக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. அந்த அனுபவங்களைப் பதிவுகளில் படிக்கும்போதும், போட்டோக்களில் பார்க்கும்போதும் இழப்பை அதிகமாக உணர்கிறேன். வராவிட்டாலும், ஈரோடு வலைப்பதிவாளர்கள் அனைவரோடும் இந்த பதிவின் மூலம் கைகுலுக்கிக்கொள்கிறேன். பெரும் காரியம் செய்திருக்கிறீர்கள். சாதித்து இருக்கிறீர்கள்.
தொலைக்காட்சியில் இயக்குனர்கள் சங்க 40வது ஆண்டு விழா நிகழ்வுகளை அவ்வப்போது பார்த்தேன். சரண்யாவின் இயல்பான பேச்சு பரவாயில்லை. என்னைக் கவர்ந்தது இளையராஜா- பாரதிராஜாவின் உரையாடல்கள்தாம். ஒருவரையொருவர் கலாய்த்த வார்த்தைகளிலிருந்து பால்யம், கனவுகள், கிராமத்து மண்ணின் வாழ்க்கை எல்லாம் சிந்திக்கொண்டிருந்தன. உயரங்களிலிருந்து இறங்கி இருவரும் மிக அருகில் நின்றுகொண்டு இருந்தார்கள். வாழ்க்கைதான், தேடுதல்தான் மனிதர்களை வார்க்கிறது என்பதை இருவரும் சொல்லாமல் சொல்லிக்கொண்டு இருந்தார்கள். ரஜினியும் அப்போது ஒரு பஸ் கண்டக்டராக அதை ரசித்துக்கொண்டு இருந்திருக்க வேண்டும். இயல்பாய் இருப்பது எவ்வளவு அழகாய் இருக்கிறது. சரி, ரஜினி பக்கத்தில் விஜய் மட்டும் ஏன் அப்படி நிலைகொள்ளாமல் இருந்தார்?
சென்னையிலிருந்து மகள் லீவில் வந்திருக்கிறாள். கணினி முன்னால் உட்கார்ந்தால் மகளும் கிண்டல் செய்கிறாள். “வாங்கப்பா இங்க உக்காருங்கப்பா”, “பேசுவோம்பா” என்று அழைக்கிறாள். வீடு இப்போது ஒரே அரட்டையாய் இருக்கிறது. மைனா, அய்யனார், ஈசன் படங்கள் எல்லாம் பார்த்தாகிவிட்டது. அங்கங்கே மைனாவை ரசிக்க முடிந்தாலும், மூன்றும் ஒரே ரத்தக்களம். மொழி போல ஒரு படம் பார்த்து மூளையின் சூட்டைக் குறைக்க வேண்டும்.
சிதறிக்கிடந்த புத்தகங்கள், பத்திரிகைகளை எடுத்து அடுக்கி வைக்கும்போது, பழைய விசை இதழொன்றில் பார்த்த இந்தக் கவிதைகள் அசைபோட வைத்துக்கொண்டு இருந்தன.
சுற்றுமா இப்போதும்!
பனையோலைத் துண்டில்
பாதி வகுந்து
மையக் கீறலில் குறுக்கேச் செருகி
காக்கா முள் குத்தி
கம்பில் மாட்டி,
ஆட்டம்புழுக்கைக் குத்திய
ஓடினால்
விர்ரெனச் சுழலும்
பால்யக் காத்தாடி
சுற்றுமா இப்போதும்
அந்தக் காற்றுக்கும் காக்கா முள்ளுக்கும்.
-சேரன் சுப்பையா
கனவு பொம்மைகள்
தலையில்
பொம்மைகளோடும்
இடுப்பில் குழந்தையோடும்
வீதி வழியே
விற்றுக்கொண்டிருந்தாள்
வழிய வழிய
குழந்தைகளுக்கான கனவுகளை
டி.எல்.சிவக்குமார்
ரகசியம்
கைகளை இறுக மூடிக்கொண்டேன்
ஏதுமில்லை என்பதாய் ஒரு கூட்டம்
எதோ இருப்பதாய் ஒரு கூட்டம்
எப்போது திறப்பான் என்றொரு கூட்டம்
யாருக்குத் தெரியும்
யாரேனும் ஒருவர்
கைபிடித்துத் திறக்கவும் கூடும்.
சேது நாராயணன்
மரணப்பூக்கள்
கடைசியாக யாரோ சென்ற பாதையில் அவன் வந்து கொண்டு இருந்தான். தரையெல்லாம் பூக்கள் கொட்டிக் கிடந்தன. பல வண்ணங்களில் அழகழகாய்த்தான் பார்த்த கணம் தெரிந்தது. காலையில் பக்கத்துத் தெருவில் அந்த நீல நிற வீட்டில் சங்கு ஊதிக்கொண்டு இருந்தது நினைவுக்கு வந்தது. சுளிப்புடன் கவனமாய் விலகி நடக்க ஆரம்பித்தான். ‘வாசல் படியில் நின்று என்னேரமும் தெருவைப் பார்த்துக் கொண்டு இருக்குமே ஒரு அம்மா, அதுவாய் இருக்குமோ’ என அலைக்கழித்தன. பூக்களிலிருந்து இப்போது மரணத்தின் வாசனை வீசியது அவனுக்கு. இரண்டு ஆடுகள் அந்தப் பூக்களின் அருகில் சென்று முகர்ந்து பார்த்து, சாவகாசமாய் சாப்பிட ஆரம்பித்தன.
செருப்பில் சேகுவேரா!
இந்தப் படத்தைப் பார்த்ததும், சட்டென்று ஆத்திரம் வந்தது. இப்படி சிந்திக்க முடிந்தவனையும், இப்படி வியாபாரம் செய்யத் துணிந்தவனையும் இழுத்துப் போட்டு நாலு சாத்து சாத்த வேண்டும் போலிருந்தது.
உலகம் முழுமைக்கும் சுரண்டலற்ற அமைப்பைக் கனவு கண்டவரும், புரட்சிகர இயக்கங்களுக்கு உந்துசக்தியாக இருப்பவரும், மாற்றங்களை விரும்பும் பல கோடி இளைஞர்களின் ஆதர்ச போராளியுமான சேகுவேராப் படத்தை செருப்பில் போட்டு விற்றுக்கொண்டு இருந்திருக்கின்றனர். இது நடந்தது வேறு எங்குமில்லை. சென்னையில், பாரிமுனையில், கோவிந்தப்பன் தெருவில், அப்துல் அன்சன்ஸ் என்னும் கடையில்!
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தைச் சாந்த தோழர்கள் செருப்புக்களை அபகரித்து, பூக்கடை காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கின்றனர். செருப்பைத் தயாரித்த நிறுவனங்கள் மீது இப்போது வழக்கு தொடரப்பட்டு இருக்கிறது.
முதலில் வந்த ஆத்திரம் அடங்கி, யோசித்துப் பார்க்கும் போது தோன்றியவைகளை இங்கு பகிரத் தோன்றியது.
இப்படித்தான் சேகுவேரா படம் போட்ட பீர்களை தயாரித்து, பிரிட்டனிலும், அமெரிக்காவிலும் விற்பனை செய்தார்கள். கியூபா இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து, தடை செய்தது. சேகுவேரா படத்திற்கு இளைஞர்களிடம் இருக்கும் ஈர்ப்பை காசு பண்ணும் வியாபார முளை என்று இதைப் பார்க்க முடியவில்லை. இந்த சமூகத்தில் குறிப்பிட்ட ஒவ்வொரு பகுதியினருக்கும் பிடித்தமான தலைவர்களும், மனிதர்களும் இருக்கவேச் செய்கிறார்கள் அவர்களையெல்லாம் இப்படி யோசிக்கக் கூட முடியாது. ரஜினி என்னும் ஒரு நடிகரின் படத்தை இப்படி செருப்பில் போட்டு ஒரு நிறுவனம் தயாரித்திருந்தால், இன்னேரம் என்ன ஆகியிருக்கும்!
ஆனால், உண்மையிலேயே ஒரு உலக நாயகனான சேகுவேராப் படத்தை இப்படி பயன்படுத்தினால் யார் கேள்வி கேட்பார்கள் என்னும் தைரியமே இதற்கெல்லாம் காரணமாக இருக்க முடியும். சேகுவேராவின் அருமை தெரியாதவர்களே அவரை மிதித்தபடி நடந்துகொண்டு இருப்பர்கள். அருமை தெரிந்தவர்களின் கால்களுக்கு சேகுவேரா செருப்பாகவும் இருப்பார் என்பதும் அவர்களுக்குத் தெரியாது. “இருப்பவன் தலைக்கு நெருப்பாக வா!, இல்லாதவன் காலுக்குச் செருப்பாக வா!” என்னும் கவிஞர் கந்தர்வனின் கவிதை சேகுவேராக்களுக்காகத்தான் எழுதப்பட்டது.
“இழப்பதற்கு எதுவுமில்லை, பெறுவதற்கு பொன்னுலகம் இருக்கிறது” என்று தொழிலாளர் வர்க்கத்தை அழைத்தவர் மார்க்ஸ். “இழப்பதற்கு நிறைய இருக்கிறது, பெறுவதற்கு ஒன்றுமில்லை” என்று கியூபாவின் அமைச்சர் பதவியை விட்டு, துப்பாக்கியோடு லத்தின் அமெரிக்க நாடுகளின் விடுதலைக்கு புறப்பட்டவர் சேகுவேரா. பொலிவியாவில், காட்டின் ஒரு மூலையில் அவரைப் பிடித்து அமெரிக்க உளவுத்துறையினர் சுட்ட போதும், ஏகாதிபத்தியத்தின் மீது வைத்த குறி அவர் கண்களில் நிலைத்திருந்தது. அதுதான் அவர் இன்னமும் ‘எல்லோருக்குமான உலகத்தை’ச் சிந்திக்கிறவர்களின் மூளையில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார். அந்த பிம்பத்தைச் சிதைக்கப் பார்க்கிறார்கள் இப்படி.
சேகுவேராவைக் கொல்வதற்கு முன்பு, பொலிவியாவில் ஒரு பாழடைந்த பள்ளியில் சி.ஐ.ஏ கைக்கூலிகள் அடைத்து வைத்திருந்தார்களாம். அந்தப் பள்ளியில் டீச்சராக பணிபுரியும் ஒரு பெண் சேகுவேராவைப் பார்த்திருக்கிறார். எதோ ஒரு தீவீரவாதி என்று, “ஏன் இப்படி, உங்களுக்கு மனைவி, குழந்தைகள் இல்லையா?” என்று கேட்டிருக்கிறார். சேகுவேரா சிரித்துக்கொண்டே, “இப்படி மோசமான நிலையில் இருக்கும் பள்ளியில் எப்படி குழந்தைகள் படிப்பார்கள். ஒருவேளை நான் உயிரோடு இருக்க முடிந்தால், உங்களுக்கு ஒரு நல்ல பள்ளிக் கட்டித் தருவேன்” என்றாராம்.
இப்போது, சேகுவேராவின் நினைவாக அங்கு ஒரு சிறந்த பள்ளி எழுப்பப்பட்டு இருக்கிறது. சேகுவேராவின் கடைசி மூச்சு கலந்த வெளியில் குழந்தைகள் படித்துக் கொண்டு இருக்கிறார்கள். சேகுவேரா இறந்தாலும் தன் கனவுகளை நனவாக்கிக் கொண்டு இருப்பவர். அப்பேர்ப்பட்டவரை இப்படியெல்லாம் அவமதித்துவிட முடியாது. ஒன்றுமில்லாமல் செய்துவிட முடியாது. அப்போதும் வைத்த குறியில் தவறாமல் தனது காரியத்தை செய்துகொண்டுதான் இருப்பார். ஆமாம், சேகுவேராவின் படம் செருப்பிலிருந்திருந்தால் அன்றைக்கு புஷ்ஷின் முகம் தப்பியிருக்காது!
உயிர்க்காற்றின் நுழைவாயிலில்...
எனது மூக்கு தொடங்குகிற இடத்தில் முடிந்துவிடுகிறது உனது சுதந்திரம்.....என்று (யாரோ) ஆங்கிலத்தில் சொல்லப்படுவது உண்டு. அதனால் தான் அடுத்தவர் விஷயத்தில் மூக்கை நுழைக்காதே என்று சொல்கிறார்களோ தெரியவில்லை. ஏதாவது சங்கதி முன்கூட்டியே தெரிந்தால், உனக்கு மூக்கில் வேர்த்திடுமே என்று கிண்டலாகக் கேட்பதும் நடக்கிறது. இப்படி மூக்கும், முழியுமான ஒரு அம்சத்தைச் சற்று அருகில் சென்றுதான் பார்க்கலாமே..
கேலிச் சித்திரக்காரர்களுக்கு அல்வா சாப்பிட்ட மாதிரியான அன்பர் தான் நமது ரசனைச் செம்மல் முனைவர் மூக்கர். சுவாசத்தின் நுழைவாயில் அவர். காற்றின் தட்பவெப்பத்தைத் தேவைக்கேற்பத் தகவமைத்து - அதாவது சூடென்றால் தணித்து, குளிர்ச்சி என்றால் சூடேற்றி ஒரு மாதிரி ஏர் கண்டிஷன் வேலையைச் செய்து உள்ளே அனுப்பி வைப்பவர். அடையாள அட்டை இல்லாத தூசு தும்புப் பேர்வழிகளை வெளியே நிறுத்தித் துரத்தி நுரையீரல் மாசுபடாது காப்பவர். அண்டை வீட்டுக்காரன் (திருவாளர் வாய் ) சாப்பிடும் உணவை வாசம் பிடித்துப் பார்த்து 'நல்லது .....நடக்கட்டும், நடக்கட்டும்' என்று பரிந்துரைக்கும் வேலை வேறு இவருக்கு.
நூற்றுக் கணக்கில், ஆயிரக் கணக்கில் விதவிதமான வாசனையை நுகர்ந்து பார்க்கும் திறனுள்ளது நமது நாசி. நம்மைவிட நாய்கள் பத்து மடங்கு அதிகம் நுகரும் தன்மை கொண்டுள்ளதால்தான் காவல் துறையில் அதற்கு முன்னுரிமை. (வயதான பிறகு பென்ஷன் வேறு!).
அடிக்கடி சளி பிடித்தாலோ, பொடி போடுவதாலோ இந்த நுகர்வுத் திறன் பாதிப்படைகிறது. பொடி வச்சுப் பேசறதா நினைத்தாலும் பரவாயில்லை, இந்தப் பொடி விஷயத்தைக் கைக்கொள்ளாமல் இருப்பது நல்லது. மூக்கின் உட்புறங்களை அத்தனை எரிச்சலுக்கு ஆட்படுத்துகிறது. புகை பிடிக்கிற அன்பர்களும், நுரையீரலை எட்டும் முன்பே மூக்கின் துவாரங்களில் இந்தப் புகை எவ்வளவு சேட்டை செய்கிறது என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும்.
அமிர்தாஞ்சன், விக்ஸ் போன்ற தவிர்க்கவேண்டிய தைலங்களை ஏதோ சாப்பிட்டவுடன் வெற்றிலை பாக்கு போடுவது மாதிரி அன்றாடம் படுக்கப் போகுமுன் தடவிக் கொள்பவர்களுக்கு நுகரும் தன்மை பாதிப்பதோடு, வேறு பாதிப்புகளும் நேரும்.
நுகர்தல் எத்தனை அவசியம் என்பது சமையல் வாயு கசிவு, கெட்டுப் போன உணவு, வீட்டில் எங்கோ மூலையில் எலி ஏதாவது செத்துக் கிடப்பது போன்ற தருணங்களில் தெரியும். உடலின் சுரப்பிகள் வெளிப்படுத்தும் வாசத்தை மூக்கு நுகர்ந்து அறிகிறது. தாய்க்கும், குழந்தைக்கும் அந்த வாசப் பிடிமானம் பரஸ்பரம் தெரியும் என்று சொல்லப்படுகிறது. (விதிவிலக்கு - அவ்வை ஷண்முகி :அப்பாவை வாசனை பிடித்துச் சொல்லிவிடும் குழந்தை!). ஒவ்வொரு உடலுக்கும் வெவ்வேறு வாசனை தனித்துவமாக இருப்பதாலேயே மோப்ப நாயால் திருடனைக் கவ்விப் பிடித்துவிட முடிகிறது.
இப்படியான வாசனை நுகரும் திறனை, பூக்கள் நிறைந்த நந்தவனத்திலும், பிறந்த பச்சைக் குழந்தையைக் கொஞ்சியும் இயற்கைக் கொண்டாடியாகப் பரிசோதித்துக் கொள்ளலாம். தேவையற்ற வாசனை ஸ்பிரே அடித்து மூக்கின் நோக்கத்தையே அழிக்க வேண்டாம். புத்துணர்ச்சி தருகிறது என்று உடலிலும், உடையிலும், அறையிலும் அதை ஏதோ மந்திர நீர் தெளிப்பது மாதிரி அடித்துக் கொள்வது நமது உடலின் மீதுள்ள கண்ணுக்குப் புலப்படாத பல்லாயிரக்கணக்கான நுண்ணுயிர்களுக்கும் சேதம் ஏற்படுத்துகிறது. நிறைய ஒவ்வாமையை ஏற்படுத்துகிறது. துர்நாற்றத்திற்குக் காரணமானதை அகற்றாமல் செயற்கையாக நம்மைச் சுற்றி நறுமணம் (?) கமழ வைத்துக் கொள்வது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்கிற வேலை. சுத்தமான தலைக் குளியல் போடாமல் தலையில் அழுக்கு சேர விட்டுவிட்டு, அப்புறம் தலையை வாரிய சீப்பை எடுத்து அதைச் சுத்தம் செய்கிற வேலை மாதிரி இது!
உள்ளபடியே நல்ல வாசனை என்ற பொருள் படும் நாற்றம் என்ற சொல்லை மோசமான வாசனைக்கானதாகப் புழக்கத்தில் மாற்றிவிட்டார்கள்! (அது சரி, புரட்சி என்ற சொல் படும்பாடு கொஞ்சமா நஞ்சமா..). நாற்றம் தாங்காமல் மூக்கைப் பொத்திக் கொண்டு போகிறோம். நீண்ட நேரம் மூக்கை மூடி வைக்கவும் முடியாது. அதற்கான காரணத்தைத் தேடி சரி செய்யவேண்டும். மலக் குழிக்குள் நின்று (இந்த வரியை வாசிக்கும்போதே அருவருப்படைவோர் ஏராளம் இருப்பர்..) வேலை செய்வோரையும், பாதாள சாக்கடை அள்ளுவோரையும் காணும்போதே மூக்கைப் பொத்திக் கொள்வது மட்டுமல்ல, இதெல்லாம் அநியாயம், மனிதக் கழிவை ஏன் இன்னொரு மனிதர் சுமக்க வேண்டும், மனிதர் ஏன் இந்தச் சகதியில் இறங்க வேண்டும் என்று கேட்காமல் நமது வாய்களையும் அல்லவா பொத்திப் போகிறோம்?
பரவலாக அறியப்படும் போதைப் பொருள்கள் மட்டுமல்ல, இப்போதெல்லாம் குழந்தைகளது உடல் நலத்தை பாதிக்கும் செயற்கை வாசமூட்டிய அழிப்பான்கள் அல்லது சிலவகை கோந்து, பசை பொருள்கள் குறித்தும் எச்சரிக்கை கொள்ள வேண்டியிருக்கிறது. குறிப்பிட்ட வாசனையின்பால் ஈர்க்கப்பட்டு குழந்தைகள் அவற்றை திரும்பத் திரும்ப எடுத்து மோந்து பார்ப்பது, அந்தப் பொருள்கள் கிடைக்காத போது கவனம் சிதறவோ, படிப்பில் அல்லது உணவில் அக்கறை அற்று அலைபாயவோ காரணமாகக் கூடும் என்று சொல்லப் படுகிறது. விக்ஸ், அமிர்தாஞ்சனம் போன்ற பொருள்களின் தொடர் உபயோகம் கூட இந்த மாதிரி ஒரு போதை வடிவம் தான்.
யார் யாருக்கு எப்படி மூக்கு அமைகிறது என்பது அவரவர் உடல்வாகு. அதைப் பெருமையாகக் கொண்டாடிக் கொள்ளலாம். தேவனின் 'துப்பறியும் சாம்பு'வை அந்த மூக்கில்லாமல் யோசித்துப் பார்க்க முடியுமா... மூக்கினுள் குருத்தெலும்பு சற்றே வளைந்திருந்தால் (SEPTAL DEVIATION), பெரிய பாதிப்பில்லை எனில் அதைக் குறித்த கவலை வேண்டாம். மூக்கின் மீதோ, அருகிலோ பருக்கள், சின்னஞ்சிறு கட்டிகள் தோன்றினால் அதைக் கிள்ளிப் போடவேண்டாம். தொற்றுக் கிருமி பரவ வாய்ப்புள்ள இடம் அது. மூளை வரை பிரச்சனை போகக் கூடும்.
பொதுவாக பயன்பாடுள்ள பொருளில் அதிகம் சட்டென்று தூசி படியாது...ஆனால் மின்விசிறியின் கதை வேறு. அதிகம் சுழலாத மின்விசிறியை விட, சுழன்று கொண்டே இருக்கும் மின்விசிறியில் அதிகம் அழுக்கு படிந்திருப்பதைப் பார்க்கலாம். மின்விசிறியின் நேரே இருப்பது போல் கிழே படுக்கக் கூடாது. தூசும், மாசும் நேரே நமது மூக்கை இலக்கு வைக்கும். எதற்கும் அடிக்கடி மின்விசிறியைத் துடைத்து விடுவதும், ஒட்டடை அடிப்பதும் நல்லது...(இப்படி எழுதினால் தானே சிண்டு முடிய வசதியாக இருக்கும்!).
தன்னைச் சுற்றியுள்ள இருவீட்டார் செவிகளைப் போலவே, மூக்கும் தன்னைத் தானே சுத்தமாக வைத்துக் கொள்ளத் தெரிந்திருப்பது. சிந்தனைக்கு அடையாளமாக மூக்கில் விரலை நுழைத்து நோகடிக்க வேண்டாம். அத்து மீறி நுழையும் வெளியாள் எவரையும் ஒரு துருத்தி மாதிரியாகச் செயல்பட்டு வேகக் காற்றாக வெளியேற்ற உடலுக்குத் தெரியும். வராமல் பாடுபடுத்தும் தும்மலை வரவேற்கிறேன் என்று சொல்லி துணி நுனியைத் திணித்து எதிர்த் தாக்குதல் தொடுக்க வேண்டாம்.
வழி மாறி வேறு தெருவில் நுழைவது மாதிரி சிலநேரம் உணவுப் பொருள் மூச்சுக் குழலுக்குள் நுழைந்தால் புரையேறும்...ஒன்றும் கவலைப்பட வேண்டியதில்லை... ஈவிரக்கமின்றி வெளியேற்றப்பட்டுவிடும்..
சளி, தும்மல் போக்க சாதாரண நீராவி பிடித்தால் போதும்.. மருத்துவர் ஆலோசனை இன்றியோ, அவர் சொல்லும் காலத்திற்கு அதிகமாகவோ சொட்டு மருந்தெல்லாம் தொடர்ச்சியாகப் போட்டுக் கொண்டே வந்தால், மூக்கினுள் இருக்கும் மெல்லிய சவ்வுப் படலம் பாதிப்புறும். குழந்தைகள் இரவில் வாயைத் திறந்து சுவாசித்துக் கொண்டிருந்தால் மூக்கில் எதோ அடைப்பு இருக்கிறது என்று பொருள். உரிய மருத்துவ ஆலோசனை பெறவேண்டியது அவசியம். வாய் வழியே தொடர்ந்து சுவாசித்தால் பல்வரிசை முன்னோக்கித் துருத்திக் கொள்ள நேரும்.
மூக்கைச் சிந்துவோர் மற்றும் உறிந்து கொள்வோர் இயக்கத் தொண்டர்களுக்கு ஒரு சிறப்பு கவன ஈர்ப்பு: மூக்கின் ஒரு பக்கத்தை அடைத்துக் கொண்டு இன்னொரு பக்கத்தின் வழியாக மட்டும் அந்தச் சேவையைச் செய்யவும்.... இல்லாவிடில் சளி போய் காது பாகத்தில் அடைத்துக் கொண்டுவிடவும், அதன் தொடர்விளைவுகள் மூலம் உங்களை வாட்டவும் நேரிடும்..
பாருங்கள், உங்கள் மூக்கு தொடங்குகிற இடத்தில் கை வைத்து இத்தனை சுதந்திரமாக எழுதியாயிற்று...அடுத்த முறை, அரசியல் கார்ட்டூன் ஏதாவது பார்த்தால் அதில் வரையபட்டிருக்கும் பிரமுகரின் மூக்கைப் பாருங்கள்..ஓவியரை நினைத்து நீங்கள் மூக்கில் விரலை வைப்பீர்கள் - அடுத்தவருடையது அல்ல, உங்கள் மூக்கில்!
- எஸ்.வி.வேணுகோபாலன் (மருத்துவர் பி வி வெங்கட்ராமன், எம் டி (ஓமியோபதி) அவர்களது மருத்துவக் குறிப்புகளிலிருந்து)
குண்டூசியால் குத்தப்படும் வண்ணத்துப் பூச்சிகள்!
சில நாட்களுக்கு முன்பு வந்த செய்தி இது. அவர்கள் செய்த குற்றம், தேர்வு சரியாக எழுதவில்லையாம். பள்ளி முடிந்தவுடன், அவர்களைத் திரும்ப எழுத வைத்தார்களாம். மறுத்தார்களாம். அவ்வளவுதான், ஒழுக்கம் கெட்டவர்கள் என்று அந்த பத்து மாணவர்களையும் சென்னை மந்தைவெளியில் உள்ள புனித ஜோன்ஸ் பள்ளி நிர்வாகம் வெளியே அனுப்பியிருக்கிறது. சரி, அவர்கள் படிக்கும் வகுப்பை நீங்கள் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். எல்.கே.ஜி! என்ன பள்ளிகள் இவை. என்ன கல்வி இது. என்ன ஒழுக்கம் இது. என்ன உலகம் இது.
இதுபோன்ற பல பள்ளிகள் இருக்கின்றன. இதுபோன்ற ஒழுக்கத்தையே அந்த நிர்வாகங்கள் வலியுறுத்துகின்றன. ’எல்லோரும் பாஸ்’ என்னும் நற்பெயரை மாணவர்கள் அவர்களுக்கு வாங்கித் தரவேண்டும். அதுதான் பள்ளிகளுக்கான பெரும் மூலதனமே. அதன்பொருட்டு, மாணவர்களை கசக்கிப் பிழிகிறார்கள். சக்கையாகத்தான் ஒவ்வொருநாளும் குழந்தைகள் பள்ளிகளை விட்டு அனுப்பப்படுகிறார்கள்.
குழந்தை பிறந்து மூன்று, நான்கு வயது ஆனவுடன் எல்.கே.ஜி சேர்த்து விடுகிறார்கள். பெரும்பாடு பட்டு அட்மிஷன் வாங்கி, ‘மகனே/மகளே உன் சமர்த்து’ என பள்ளிக்கு அனுப்பிவிடுகிறார்கள். கரும்பலகைகளும், ‘குட்மார்னிங் டீச்சர்’களும், பென்சில்களும், நோட்டுகளும் குழந்தைகளின் வாழ்க்கையாகி விடுகின்றன. சாயங்காலம் பள்ளி முடிந்ததும், தத்தம் மழலைகள் சொல்லும் ‘ஏ,பி,சி,டி’க்களும், ’பாபா பிளாக்ஷிப்’களும் கேட்டு மெய்மறந்து போகின்றனர் பெற்றோர். வாழ்க்கை பந்தயத்திற்கு குதிரைகளை தயார் செய்ய ஆரம்பிக்கின்றனர். இதுதான் இங்கே வாழ்க்கை முறையாகி இருக்கிறது.
பேசிப்பாருங்கள். அவரவர்களுக்கு ‘நியாயம்’ வைத்திருப்பார்கள். ஆனால் குழந்தைகளின் நியாயத்தை மட்டும் கேட்க நாதியில்லை. அவர்களின் கனவுகள், விளையாட்டுக்கள், தனித்தன்மைகள் எல்லாம் காயடிக்கப்படுகின்றன. பொருள் மட்டுமே முக்கியமாகிப் போன உலகத்தில் நம் சந்ததிகள், பெரும் பாரச்சுமைகளோடு வாகன இரைச்சல்களுக்கு நடுவே காலையில் ஓடிக்கொண்டு இருக்கிறார்கள். பிரம்புகள் எல்லா திசைகளிலிருந்தும் அவர்களை விரட்டிக்கொண்டு இருக்கின்றன. ‘இவர்கள் ஒழுக்கம் கெட்டவர்களாம்’
‘குண்டூசிகளால் குத்தப்பட்ட வண்ணத்துப் பூச்சிகள்’ என்று சென்ற நூற்றாண்டிலேயே சொன்ன மாண்டீஸ்வரி, இதையெல்லாம் பார்த்தால் என்ன சொல்வார்?
பத்தாண்டு கால நாவல்கள் குறித்த வாசகக் குறிப்புகள் – 11
எழுத்தில் இறுதிசெய்யப்பட்டவை மட்டுமே வரலாறு என்றிருந்த நிலையை பின்காலனிய காலத்துச் சிந்தனைகள் கலைத்திருக்கின்றன. பாட்டிகளின் குரல்வளையில் இருந்து துடித்து வெளியேறிய காத்திரமான சொல்லுக்குள் மொழியின் அதிகாரத்தை முறிக்கும் வல்லமை மிகுந்திருப்பதை பின் நவீனத்துவக் கதையாடல்கள் உலகெங்கும் உணர்த்திக் கொண்டிருக்கின்றன. எனவே தான் புறந்தள்ளப்பட்டவர்கள், வரலாற்றுப் பக்கங்களில் இடமற்று பிரதிகளுக்கு வெளியே அவரவர் போக்கில் நடமாடித் திரிந்தவர்கள், ஒடுக்கப்பட்டுக் கிடந்தவர்கள், எங்கிருந்தோ வந்தவர்கள் என நம்ப வைக்கப்பட்டு விளிம்பின் வெளிக்கும் வெளியே தள்ளப்பட்டவர்கள் வரை அவரவர் தங்களின் கதைகளை சொல்லத் துவங் கினர். கருப்பு பிரதிகள் எனவும், விளிம்பின் கதையெனவும் சொல்லப்பட்டுக் கொண்டிருக்கும் இப்பிரதிகளெங்கும் மனித வாதைகளும், துயரங்களும், சாகசங்களும், நம்பிக்கைகளும் மிகுந்திருப்பதை எவரும் வாசித்துணரலாம்.
காகிதங்களும், கணினித்திரையும் அற்ற காலத்தின் ஞாபகங்கள் மூளை யின் அடுக்குகளில் ஆழப்பதியும் ஆற்றல் பெற்றவையென்பதை யாவரும் அறிவோம். தொலைபேசிகள் மட்டும் இருந்த நாட்களில் குறைந்தது முப்பது பேரின் எண்களாவது யாவரின் மனதிற்குள்ளும் சேகரமாகியிருந்தன. கைபேசியின் வருகை தனக்கு விருப்பமானவரின் எண்ணைக் கூட ஞாபக அடுக்குகளில் பத்திரப்படுத்த இயலாத பலவீனத்தையே எல்லோருக்குள்ளும் ஏற்படுத்தியிருக்கிறது. அப்படியானால் மொழி அறியா காலத்தின் வழிகளும், வேதனைகளும் பத்திரமாக செதில், செதிலாக சேகரமாகித்தான் கிடக்கும். சேகரமான தன் மூதாதையரின் ஞாபகங்களை எழுத்துப் பிரதியாக்கிட முனைகிறவர்களைப் போலவே அர்ஷியாவும் தன்னிலிருந்தே எழுதிப் பார்த்திருக்கிறார். தன்னுடைய மூதாதையரின் கூறுகையைப் பின்புலமாகக் கொண்டு தாவூது எனும் கஸிதே கவிஞனின் கதையை நாவலாக்கித் தந்திருக்கிறார்.
மலைப்பாம்பென நீண்டு துயிலும் மதுரையின் ஞாபகங்களின் ஒரு செதிலாயிருக்கிற இஸ்மாயில்புரத்தைச் சேர்ந்த உருது முஸ்லிம்களின் கதையிது. இஸ்மாயில் குறித்த புனைவுகளும் கூட விதவிதமாக அடுக்கப்பட்டிருக்கிறது. ஆதிப்பெரியவரான இஸ்மாயில் தாசில்தார். மீனாட்சியம்மன் கோவிலின் திருப்பணிக் குழுவில் இருந்தவர் என்பது, மதம் கடந்த அறச்செயல்பாட்டில் மனிதர்கள் கூடிப் பணி செய்திருக்கிறார்கள் என்பதன் அடையாளம். ஹைதர் அலியின் படையில் வந்த குதிரை வீரன், காயம்பட்டதால் மதுரையில் தங்கி இஸ்மாயில் தாசில்தாராக ஆகிப்போனார் என்பதை விட, வைகைப் பேராற்றின் எழிலில் தன்னையிழந்து அங்கேயே தங்கி, ஆதரவற்ற பெண்ணை மணந்து தன் குலத்தை செழிக்கச் செய்தவர் எனும் புனைவே அர்ஷியாவைப் போலவே எல்லோருக்கும் பிடித்ததாக இருக்கக்கூடும். ஆனால் இந்த நாவலின் பின்புலமான இஸ்மாயிலின் கதையில் எனக்கு முக்கியமாகப்படுவது பெண் சொத்துரிமை குறித்து அவருக்கு இருந்த நேர்மையும் தனித்த செயலுமே.
இஸ்மாயில் தாசில்தாருக்கு ஏழு ஆண்பிள்ளைகளும், ஒரு பெண்பிள்ளையும் பிறக்கிறார்கள். தன் வாழ்வின் கடைசிநொடியில் தான் சேர்த்து வைத்த ஆஸ்தி, பாஸ்தி அத்தனையையும் இரண்டு பங்காகப் பிரிக்கிறார். ஒரு பாதியை மகளுக்கும், மீதமுள்ள அரைப்பங்கை ஏழாக மகன்களுக்கும் பிரித்துத் தருகிறார். எனவே தான் இஸ்மாயில் தாசில்தாரின் குடும்பப் பெயராக ஏழரைப் பங்காளி வகையறா எனும் பெயர் நிலைபெற்று விடுகிறது.
ஏழரைப் பங்காளி வகையறாவின் தலைமுறைக் கதைக்குள் நாவல் பயணிக்கவில்லை. அவற்றில் கஸிதே கவிஞனான தாவூதின் வாழ்வின் வழியாக வாழ்ந்து கெட்டழிந்த ஒரு குடும்பத்தின் கதையாக கட்டப்பட்டிருக்கிறது ஏழரைப்பங்காளி வகையறா எனும் அர்ஷியாவின் முதல் நாவல். நாவல் நிகழும் புலமென உருது முஸ்லிம்களின் வாழ்விடம் இருந்தபோதும் நாவலுக்குள் இயங்கும் மொழியாலும், வாழ்வின் நுட்பங்களாலும் பொதுத் தன்மையையும் அடைவதை வாசகன் நிச்சயம் உணர்வான். மனித மனங்களுக்குள் விரவிக்கிடக்கும் சூழ்ச்சி, காமம், வஞ்சம், காத்திருந்து பழிதீர்த்தல், குரூர மனங்களுக்குள்ளும் கூட தேங்கிக்கிடக்கும் அன்பின் துளி, பற்றற்று இயற்கையில் இயைந்து கிடக்கும் மனிதம் என ஆழங்களில் தேங்கிக் கிடக்கும் மனித குணாம் சங்களை தரிசித்துக் கடப்பதால் தத்துவத்தின் கலைவடிவமே நாவல் என்பதை உணர்த்தும் கதையாடலாகி யிருக்கிறது ஏழரைப்பங்காளி வகையறா. தாவூத் ஒ குத்தூஸ் எனும் இரட்டை எதிர் மனநிலை மனிதர்களின் கதையென நாவல் வாசிக்கப்பட்டால் நல்ல வன் அப்பாவியாக ஏமாந்த சோணகிரி யாக இருப்பதும், கெட்டவன் தந்திரத் தாலும், சூழ்ச்சியாலும் நம்பியவனை வீழ்த்துபவனாக இருப்பான் என்று நேர்கோட்டு வாசிப்பில் வாசித்தறியவும் நாவலுக்குள் வாய்ப்பிருக்கிறது. ஒற்றைத் தன்மையிலான வாசிப்பு அப்படியான இடத்திற்கே வாசகனை அழைத்துச் செல்லும். வேறு எந்த இலக்கியவகைமையையும் விட நாவல் பன்முக வாசிப்பையே வாசகனிடம் கோருகிறது. அப்படி வாசிக்காவிட்டால் நம்முடைய கவனத்திற்கு சித்ராவாக மாறிய குல்சும் வராமலே போய்விடுவாள். கணவன் சிறைக்குப் போனப் பிறகு அரிசி ஆலை முதலாளியிடம் அடைக்கலமாகி, பின் கணவனாலேயே படுகொலை செய்யப்பட்ட இஸ்லாத்திற்கு மாறிய முரட்டுப் பெண்ணை வாசகன் அறியச் சாத்தியமில்லை.
ஏழரைப் பங்காளி வகையறா தாவூதின் கதையோ நல்லதங்காளைப் போல தன் பெண்டு, பிள்ளைகளை எல்லாம் அழைத்துக் கொண்டு ஊரை விட்டுப் போகிற ஆபில்பீயின் கதையா. பத்துப் பிள்ளைகள் அவளுக்கு. பெண்கள் இச்சையை எழுதிடக் கிடைத்த வெற்றுக் குறியீட்டு அடையாளம் ஆபில்பீ. தாவூதிற்கு வாழ்க்கைப்படுவதற்கு முன் அவளுக்குச் சொல்லப்படுகிறது மகாராணியா வாழலாம் என. அப்படித் துவங்கிய வாழ்வுதான். ஆனால் அப்படித் தொடரவில்லை. அடுத்த வேளை சாப்பாட்டிற்கு சொந்தக்காரர்களின் வீட்டில் எடுபிடி வேலைசெய்பவளாகவும், தண்ணீர் சிந்தி சேகரிப்பவளுமான வாழ்வினை வாழ வேண்டிய நிர்பந்தத்தை அவளுக்கு வழங்கியது எதுவென்று நானும் யோசித்துக் கொண்டிருக்கிறேன். நீங்களும் யோசியுங்கள்.
வாழ்ந்து கெட்ட குடும்பங்களின் வலிகளை இலக்கியங்களின் பக்கங்கள் தோறும் வாசித்தறிந்த வாசகனும் தடுமாறிப் போவான் - ஏழரைப் பங்காளி வகையறாவுக்குள் பதிவு செய்யப்பட்டிருக்கும் வாழ்க்கையின் சகிக்க முடியாத பகுதிகளை பார்த்து. தான் கட்டி ஆண்ட நிலமெல்லாம் அவற்றின் மதிப்பறியாத நிலையிலேயே தாவூதை விட்டுப் போய்விடுகிறது. ஊரின் பொதுச் சொத்தை நிர்வகிக்கும் குத்தூஸ் சூழ்ச்சி செய்து, தன் தம்பி முறைக்காரனான தாவூதை நிர்கதிக்குள்ளாக்குகிறான். வறுமையின் உச்சம் வீட்டுப் பண்டபாத்திரங்களை விற்பது தான். அதிலும் பள்ளிக்கூடம் போகிற தன் மகனின் மதியச் சாப்பாட்டையும் கூட விற்றுவிடுகிறான் தாவூத். நாவலுக்குள் வருகிற தாவூதின் மகனான உசேன், மத்தியானச் சாப்பாட்டிற்காக என்ன செய்வது என்று தவிக்கிற தவிப்பும், பள்ளிச் சூழலும், காவியத் தன்மையில் நாவலுக்குள் பதிவாகியிருக்கிறது.
ஆயிரம் தவ்ஹீதுகள் முளைத்து வைதீக இஸ்லாத்தை பரப்புரை செய்தாலும், இந்த மண்ணிற்கான வாழ்வியல் முறைகளில் இருந்து தமிழக இஸ் லாமியர்களை அகற்றிடமுடியாது என்பதை நாவலின் பலபகுதிகள் சொல்லா மல் சொல்கின்றன. எனவேதான் குழந்தை பொறந்ததும் அவுலியாக்களை ஓதிடச் சொல்வதும், புள்ளையை தர்ஹா வாசலில் போட்டு பகஷ் (அர்ப் பணிப்பு) செய்வதும் தமிழக இஸ்லாமியர் வாழ்வெங்கும் நடந்து கொண்டே யிருக்கிறது. நாவலுக்குள் காட்சிப்படுத்தப்படும் தெற்குவாசல் மாவ்சுவானி தர்கா சந்தனக் கூடுத்திருவிழா மிக முக்கியமான பதிவாகும்.
சந்தனக் கூடு திருவிழாவின் மீதான ஈர்ப்பு இஸ்லாமிய பெண்களுக்குள் ஏற்பட்டு நீடித்திருப்பதற்கான காரணத்தை எளிய மொழியில் நாவல் சொல்லிச் செல்லும் இடங்கள் முழுக்க அவர்களின் உளவியல் செயல்பாட்டின் சாட்சியாக வெளிப்படுகிறது. பெண்களின் உலகமது அங்கே எப்போதும் திட்டிக் கொண்டேயிருக்கும் தந்தையில்லை. புத்திசொல்லிக் கொண்டேயிருக்கும் அம்மாக்கள் கூட தங்களைக் கண்டுகொள்வதில்லை. அவரவர் சேத்திக்காரிகளோடு சிரித்துப் பேசி மகிழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இளம்பெண்களின் மாய உலகமாக விரிகிற இரவின் கதையே சந்தனக் கூடுதிருவிழா என்பதை நான் ஏழரைப்பங்காளி வகையறாவுக்குள்தான் உணர்ந்தேன். காதலர் தினக் கொண்டாட்டங்களை எதிர்த்துக் கலகம் செய்யும் காவிகளும், சந்தனக்கூடு திருவிழாவை நிறுத்த வேண்டும் எனச் சொல்லிக் கொண்டிருக்கும் தவ்ஹீதுகளும் ஒற்றைப் புள்ளியில் சந்தித்துக் கொள்ளும் சாத்தியங்கள் நிறைய இருக்கிறது. இந்து மத அடிப்படைவாத கலாச்சார காவலாளிகளின் மனம் ஒன்று தான்; அவர்களின் பெயர்கள் தான் வேறுவேறாக இருக்கிறது.
நாவலின் பலமே புறத்திற்குச் சமமாக அகத்திற்குள்ளும் பயணிக்கும் அதன் தன்மைதான். பாஜான் பலவீனன், தன் சொத்து முழுவதையும் சூரையாடிப் பதுக்கிக் கொண்ட தன் மச்சினனிடமே எடுபிடி ஆளாகிப் போகிறான். நாவல் முழுக்க வசவுகளையும், மிதிகளையும் வாங்கிக் கொண்டேயிருப்பவன், தனக்கான சந்தர்ப்பம் கிடைக்கும்போது கச்சிதமாக காரியமாற்றுகிறான். குத்தூஸ் காறி உமிழ்ந்த எச்சிலையும், துப்பிய பீடிகளும் சேகரிக்கப்பட்ட பாத்தி ரத்தை பாஜான் தெரிந்தே அவன் தலையில் கொட்டுகிறான். இருட்டில் சிறுநீர் கழிக்க உட்கார்ந்திருக்கும் குத்தூஸின் மீது உருட்டுக்கட்டையைக் கொண்டு நாலு சாத்து சாத்தவும் நினைத்திருப்பான் என்றுதான் எனக்குப்படுகிறது. நாவலுக்குள் ஏனோ அது நிகழவில்லை.
தாவூதின் பார்வையிலே நமக்குள் கடத்தப்படும் குல்சும் தனித்தன்மையிலான பதிவு. தன் அழகில் மயங்கிக் கிடப்பவள். தேடிவந்து காதலைச் சொன்னவுடன் சகலவற்றையும் கடந்து வெளியேறுகிறாள். இஸ்மாயில்புரமே தேடுகிறது. அவர்களைத் தேடி தாவூதும் திசைவழிகளெங்கும் அலைகிறான். அவள் திருப்பதிக்குப் போய் தாலிகட்டி சித்ராவாகி வாழும் விஷயம் ஹைதராபாதில் விரிகிறது இவன் முன். கடைசி வரை யாரிடமும் பகிர்ந்து கொள்ளவில்லை. சித்ராவின் தந்தை மஸ்தானிடமும் சொல்லவில்லை. அப்படித்தான் இருப்பான் தாவூத். மனித மனங்களுக்குள் வற்றாது நிறைந்திருக்கும் அன்பெனும் அதிரூபம் வெளிப்பட்டுக் கொண்டேதான் இருக்கிறது. அவற்றிற்கு மதங்களையும், இறுகிய பண்பாட்டுச் சிக்கல்களையும் எளிதில் எதிர்கொள்ளும் பேராற்றல் நிறைந்திருக்கிறது.
நாவல் வாசக மனதிற்குள் கதைகளைக் கடத்தும் கருவியல்ல. மனதின் ஆழங்களுக்குள் பொங்கிப் பெருகும் அறம், கருணை, அன்பு, இரக்கம், கோபம் ஏன் அவனி(ளி)ன் வக்கிரத்தையும் கூட நினைவூட்டியபடிதான் கடந்து கொண்டிருக்கிறது நாவல்கள் உலகெங்கும். அப்படித்தான் கடத்துகிறார்கள் நமக்குள் மனதின் நுட்பங்களை ஏழரைப் பங்காளி வகையறாக்கள்..
ம.மணிமாறன்
வெளிவராத உரையாடல்கள்: “ஆபத்து.... உயிருக்கு ஆபத்து!”
"ஆபத்து!.... ஆபத்து”
“யாருக்கு ஆபத்து, என்ன ஆபத்து”
“எனக்கு ஆபத்து... அவருக்கு ஆபத்து, இவருக்கு ஆபத்து. எங்கள் உயிருக்கு ஆபத்து”
“உங்களைச் சுற்றி இத்தனை காவற்படை, குண்டுதுளைக்காத கார், ஹைடெக் உளவுத்துறை எல்லாம் இருக்கும்போதும் ஆபத்தா?”
“ஆமாம், ஆமாம்”
“உங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகளால் ஆபத்தா?”
“இல்லை. விவசாயிகள் நல்லவர்கள். தற்கொலைதான் செய்துகொள்வார்கள்”
“உங்களால் சுரண்டப்பட்ட, அந்நியக்கம்பெனிகளில் அடிமைகளாக்கப்பட்ட தொழிலாளர்களால் ஆபத்தா”
“இல்லை. அவர்கள் ரொம்ப நல்லவர்கள். எவ்வளவு அடித்தாலும் திருப்பிக்கூட அடிக்கமாட்டார்கள்”
“வேலையில்லாமல் அவதிப்படும் இளைஞர்களால் ஆபத்தா?”
“அய்யய்யோ, பாவம் அவர்கள். சினிமாக்களில் கட்டிப்போட்டு வைத்திருக்கிறோம். இரண்டே இரண்டு சாய்ஸ்தான் அவர்களுக்கு. ஒன்று பிச்சைக்காரனாகலாம், அல்லது தீவீரவாதியாகலாம்.”
“அப்படியானால் தீவீரவாதிகளால், ஆபத்தா”
“ஹாஹ்ஹா... நல்ல ஜோக். குண்டுவெடிப்புகளில் எப்போதும் மக்களே செத்துப் போவார்கள்”
“காலகாலமாக உங்களால் ஏமாற்றப்படும் மக்களால் ஆபத்தா”
“ஒருபோதும் இல்லை, எங்களை வாழ வைக்கும் தெய்வங்கள் அவர்கள். தப்பித்தவறி நாங்கள் செத்துப் போனால் முதலில் துடித்துப் போவதும் அவர்கள்தான்!”
“அப்புறம் ஏன் கூக்குரலிட்டீர்கள்?”
“ஹி...ஹி... ஹி... அதோ பாருங்க ஏரோப்ளேன்....!”
பெரும் வர்த்தக நிறுவனங்களுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் உள்ள தொடர்புகள்!
ஊழல் என்றார்கள். டேப் விவகாரம் என்றார்கள். சி.பி.ஐ ரெய்டு என்றார்கள். நாளொடு செய்தி வந்துகொண்டு இருக்கிறது. இதனூடாக தேசமே விவாதிக்க வேண்டிய ஒரு விஷயத்தை, திசை திருப்பும் முயற்சிகள் நடைபெறுகின்றன. மக்களிடம் ஒரு சுவாரசியத்தையும், குழப்பத்தையும் ஒரு சேர உருவாக்கி, ‘எல்லாம் இயல்பான’ ஒன்றாக சித்தரிக்க ஆதிக்க சக்திகள் திட்டங்கள் வகுக்கின்றன. இவைகளுக்கு நடுவே உண்மையை தெளிவாகச் சொல்லும் குரலாக சி.பி.எம் அகில இந்தியப் பொதுச்செயலாளர் பிரகாஷ் காரத் அவர்களின் பார்வை இருக்கிறது.
--------------
நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடர் எவ்வித விவாதமோ நடவடிக்கைகளோ இன்றி முடிவுற்றுள்ளது. 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டு விவகாரம் குறித்தும் அதனுடன் பின்னிப்பிணைந்துள்ள மற்ற அம்சங்கள் குறித்தும் விசாரிக்க, நாடாளு மன்றக் கூட்டுக்குழு அமைக்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கையை ஐ.மு.கூட்டணி அரசாங்கம் வீண்பிடிவாதத்துடன் மறுத்ததே இதற்குக் காரணமாகும்.
மத்திய கணக்கு மற்றும் தணிக்கைத் துறைத் தலைவர் (சிஏஜி) அறிக்கையானது, ஆ.ராசாவின் கீழிருந்த டெலிகாம் அமைச்சகம், உரிமங்கள் மற்றும் அலைவரிசைகள் ஒதுக்கீடு செய்த வழி காரணமாக அரசின் கஜானாவிற்கு 1.76 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாக மதிப்பிட்டிருக்கிறது. இது, நாடு சுதந்திரம் பெற்ற பின்னர் அரசாங்கத்தில் நடைபெற்ற ஊழல்களிலேயே மாபெரும் ஊழலாக அமைந்திருக்கிறது. ஆயினும், காங்கிரஸ் தலைமையோ, ஐ.மு.கூட்டணி அரசாங்கமோ இது தொடர்பாக விசாரிக்க, சிறப்பு விசாரணைக் குழுவை அமைக்க, நாடாளுமன்றக் கூட்டுக்குழு அமைத்திட அனுமதி தர தயாராக இல்லை.
காங்கிரஸ் கட்சித் தலைமையிலான ஐ.மு.கூட்டணி அரசாங்கம் கடந்த சில மாதங்களில் எண்ணற்ற ஊழல்களைப் புரிந்துள்ளது. காமன்வெல்த் விளையாட்டுக்கள் நடத்தியது தொடர்பான ஊழலும் இதற்கிணையாக அதிர்ச்சியளிக்கக் கூடிய ஒன்றாகும். ஆயினும், அதனை நடத்திய, அமைப்புக்குழு செய்திட்ட தவறான சில நடவடிக்கைகள்தான் இதற்குக் காரணம் என்றும், பொதுப்பணத்தை மோசடி செய்வதில் இது மிகவும் அற்பத் தொகையே என்கிற முறையில் அரசாங்கம் அதனைக் குறைத்து மதிப்பிட்டிருக்கிறது. மும்பையில் நடைபெற்றுள்ள ஆதர்ஷ் வீட்டு வசதி ஊழல் மற்றும் ஆப்பிரிக்க நாடுகள் சிலவற்றிற்கு அரிசி ஏற்றுமதி செய்ததில் உள்ள ஊழல் போன்றவை உயர்மட்ட அளவில் அரசில் நடைபெற்ற ஊழல்களில் ஒரு சில உதாரணங்களாகும்.
இவ்வாறு நடைபெற்றுள்ள ஊழல் சம்ப வங்களை, ஒரு சில அரசியல்வாதிகள் அல்லது கார்ப்பரேட் நிறுவனங்கள் மேற்கொண்ட ஊழல்களின் வெளிப்பாடு என்று கருதினால் தவறிழைத்துவிடுவோம். சமூகத்தில் ஏற்பட்டுள்ள அழுகல் நிலை மிகவும் ஆழமாகச் சென்று அமைப்பு முழுமையையும் வியாபித்திருக்கிறது. உயர் இடங்களில் இத்தகைய ஊழல் என்பது புதியது ஒன்றுமல்ல. தாராளமயப் பொருளாதாரக் கொள்கை துவங்கப்பட்ட 1990களிலேயே இது வேகமாக வளரத் தொடங்கிவிட்டது. தாராளமய சகாப்தத்தில் ஊழலின் தன்மை குறித்து 2001 மார்ச் ‘பீப் பிள்ஸ் டெமாக்ரசி’இதழில் நான் எழுதி யிருந்ததாவது:
‘‘ஊழலின் தன்மையைப் பொறுத்தவரை, தாராளமயக் கொள்கைகள் அமல்படுத்து வதற்கு முன்பு இருந்த நிலைக்கும் இப்போதிருக்கும் நிலைக்கும் இடையே என்ன வேறு பாடு? தாராளமயக் கொள்கைகள் அமல்படுத் தப்படுவதற்கு முன்பு, குறிப்பாக 1985கள் வரை, உயர்மட்ட அளவில் ஊழல் என்பது பெரும் வர்த்தக நிறுவனங்கள் உரிமங்கள் பெறுவதற்காகவும் சில விதிமுறைகளைக் கண்டுகொள்ளாமல் இருப்பதற்காகவும் லஞ்சம் கொடுக்கும் நிலை மட்டுமே இருந்தது. ஒரு குறிப்பிட்ட திட்டத்திற்கு அனுமதி வழங்குவதற்காக ஒரு குறிப்பிட்ட பெரும் வர்த்தக நிறுவனத்திற்கும் அது சம்பந்தப்பட்ட அமைச்சர் அல்லது அதிகாரிகள் என்ற அளவில்தான் அது இருந்தது, இப்போது தாராளமயக் கொள்கை அமல்படுத்தப்பட்ட பின்பு, அரசின் விதிமுறைகள் எல்லாம் தளர்த்தப்பட்ட பின்பு, ஆட்சியாளர்களின் கொள்கையே விற்பனைக்குத் தயாராகி விட்டது.
அந்நியப் பெரும் வர்த்தக நிறுவனங்களும் இந்தியப் பெரும் வர்த்தக நிறுவனங்களும் தங்கள் தொழில்மயத்திற்குப் பெரும் லாபம் கிடைக்கும் வகையில் ஆட்சியாளர்களின் கொள்கைகளையே பெரும் தொகைகளை அளித்து மாற்றமுடிந்தது. அவர்கள் கொடுக்கும் விலை சரியென்று அரசு கருதுமானால் இரவோடு இரவாகவே கொள்கைகளை மாற்ற முடியும். மிகமோசமான முறையில் டெலிகாம் துறையில் இது நடந்தது. மின்சாரம், எண்ணெய் மற்றும் பல பெரிய தொழில்துறைகளிலும் இத் தகைய தாராளமயக் கொள்கைகள் தொடர்ந்தன. உண்மையில், அரசு மேற்கொண்ட ஒவ்வொரு கொள்கை முடிவுமே, பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் இந்தியப் பெரும் வர்த்தக நிறுவனங்களின் சங்கம் அளித்திட்ட தொகையின் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்பட்டன. இவ்வாறு நாட்டில் இருந்த அனைத்து நிறுவனங்களையும், அரசு ஏஜென்சிகளையும் நாட்டின் பெரு முதலாளிகள் லஞ்சம் கொடுத்துத் தங்கள் பக்கம் வசப்படுத்திக் கொள்ள முடிந்தது. பன்னாட்டு நிறுவனங்களும், சட்டவிரோத முதலாளித்துவமும் (crony capitalism) ஆட்டிப்படைத்திடும் தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா போன்ற நாடுகளைப்போல் இந்தியாவும் மிக வேகமாக மாறிக்கொண்டிருக்கிறது.
பெரும் வர்த்தக நிறுவனங்கள் - அரசியல் வாதிகள் - அதிகாரவர்க்கத்தினருக்கு இடையிலான பிணைப்பு என்பது நவீனதாராளமயக் கொள்கை ஆட்சியில் மிக வேகமாக உருவாகி இருக்கிறது. ஊழல்களின் முதல் அலை என்பது நரசிம்மராவ் அரசாங்கக் காலத்திலேயே வந்துவிட்டது. முதலாளித்துவக் கட்சிகளின் உயர்மட்ட அர சியல்வாதிகள் மாட்டிக்கொண்ட ஹவாலா ஊழல், வங்கிப் பத்திரங்கள் (securities) ஊழல், பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரை வார்ப்பதில் நடைபெற்ற மோசடிகள், பெட்ரோல் பங்க் ஊழல் என்று ஒன்றன்பின் ஒன்றாக வந்துகொண்டே இருந்தன”
டெலிகாம், சுரங்கம் மற்றும் எண்ணெய் வளத்திற்காக நிலங்களைத் தோண்டி ஆராய்தல் முதலியவற்றில் மேற்கொள்ளப்பட்ட கொள்கைகள், ஒருசில பெரும் வர்த்தக நிறுவனங்கள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்காகவே வடிவமைக்கப்பட்டன. அரசின் கொள்கைகள் மூலதனக் குவியலின் முக்கியமானதொரு கருவியாக எவ்விதக் கூச்சநாச்சமுமின்றி மாறியது.
பெரும் வர்த்தக நிறுவனங்களுடனான ஊழல் பிணைப்பில் காங்கிரஸ் கட்சி மிகவும் செங்குத்தாய் உயர்ந்தது. மத்தியக் குற்றப் புலனாய்வுக்கழகம் (சிபிஐ), ஜேஎம்எம் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் குற்ற அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதை எவரும் மறந்திருக்க முடியாது. அதில், 1997 ஆகஸ்டில் மக்கள வையில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்ட சமயத்தில் அம்பானிகள், எஸ்ஸார், வீடியோகான் மற்றும் பல பெரும் வர்த்தக நிறுவனங்கள் மத்திய பெட்ரோலிய அமைச்சராக இருந்த சதீஷ் ஷர்மாவிடம் கொடுக்கப்பட்ட லஞ்சத் தொகைகளைப் பட்டியலிட்டிருந்தது. அவ்வழக்கில் குற்றஞ் சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டார்கள் என்பது வேறு விஷயம்.
பாஜக ஆட்சியிலிருந்தபோது, அதன் செயல்பாடுகளும் அப்படி ஒன்றும் வித்தியாசமாக அமைந்துவிடவில்லை. பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரை வார்த்தல்,டெலிகாம் துறை, பெட்ரோல் பங்க்கள் மற்றும் எரிவாயு ஏஜென்சிகளை விற்றல், ராணுவத் தளவாடங்களை வாங்கியதில் நடைபெற்ற ஊழல் என அனைத்து அம்சங்களிலும் தங்களுக்கு வேண்டிய பெரும் வர்த்தக நிறுவனங்களுக்கு சலுகை காட்டியது என்று காங்கிரஸ் கட்சி சென்ற அதே பாதையில்தான் பாஜகவும் சென்றது. சமீபத்தில்கூட, பெல்லாரி சுரங்க மாஃபியா கும்பலை பாஜக, கர்நாடகாவில் உள்ள தன்னுடைய அரசாங்கத்தில் இணைத்துக் கொண்டு புதிய வரலாற்றைப் படைத்திருக்கிறது. எடியூரப்பா அரசாங்கம், தங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கும், தன் உறவினர்களுக்கும் மற்றும் இதர அமைச்சர்களின் உறவினர்களுக்கும் நிலங்களை அடிமாட்டு விலைக்கு வாரி வழங்கியிருப்பதில் புதிய சாதனையே படைத் திருக்கிறது.”
முதலாளிகளைப் பொறுத்தவரை, இவ்வாறு ஊழல்பேர்வழிகள் ஆட்சியிலிருப்பதை மிகவும் வசதியானதாகவே கருதுவர். சட்டவிரோத முதலாளித்துவமும் ஊழலும் நவீன தாராளமயக் கொள்கையின் இரு கைகள் போன்றவையாகும். இதனை மறைக்கும் விதத்தில் முதலாளித்துவ வர்க்கம் புதிய அறநெறியைச் சித்தரித்துக் கொண்டிருக்கிறது.
ராடியாவின் ஒலிநாடாக்கள் (டேப்புகள்), பெரும் வர்த்தக நிறுவனங்களுக்கும் அரசுக்கும் இடையில் பரஸ்பரம் உதவி செய்துகொள்ளும் கள்ள உறவுகளை வெளிக்கொணர்ந் திருக்கிறது, ஊடகங்களின் எடிட்டர்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கும் பெரும் வர்த் தக நிறுவனங்களின் ஏஜெண்டுகளுக்கும் இடையேயுள்ள மறைமுக உறவுகள் வெளி வந்திருப்பதைப் பார்த்து மத்தியதர வர்க்கம் அதிர்ச்சியடையலாம். ஆனால் இடதுசாரிகளைப் பொறுத்தவரை, அதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை. எனவேதான் கார்ப்பரேட் ஊடகங்கள் நம்மை எப்போதும் வசை மாரி பொழிந்துகொண்டிருக்கின்றன. ஊடகங்களில் பெரும்பாலானவை கார்ப்பரேட் கட்டமைப்பின் ஒரு பகுதியே. எனவேதான் அவை, அரசாங்கம் நவீன தாராளமயக் கொள் கைகளின் அடிப்படையில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதையே வேண்டு மென்றே கண்டுகொள்ளாமல் விட்டுவிடுகின்றன. டெலிகாம் அமைச்சராக தயாநிதி மாறன் வர வேண்டுமா அல்லது ஆ.ராசா வரவேண்டுமா என்பதைக் கூட கார்ப்பரேட்டுகள் போட்டிப்போட்டுக்கொண்டு, ஒன்றுக்கொன்று தலையிட்டு, செல்வாக்கு செலுத்தும் பிரச்சனையாக மாறியிருக்கிறது. இந்த அடிப்படையில் தங்களுக்கு வேண்டியவர் அமைச்சராக வரவில்லையென்றால், அதன் பின் அவர் எங்ஙனம் தங்கள் நலன்களுக்கு வளைந்து கொடுக்கிறார் என்பதை வைத்து அவரது செயல்பாடுகள் மதிப்பிடப்படுகிறது. ஐ.மு.கூட்டணி அரசாங்கத்தின் ஆரம்பகால கட்டத்தில் எப்படி பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சராக இருந்த மணிசங்கர் ஐயர் மாற்றப்பட்டு, அந்த இடத்தில் முரளி தியோரா அமர்த்தப்பட்டார் என்பதை நினைவுகூர்ந்தால் இதனைப் புரிந்து கொள்ள முடியும்.
சமீபத்திய வெளிப்பாடுகள் கசப்பானதோர் உண்மையை உறுதிப்படுத்தி இருக்கின்றன. பிரதமர் ஓர் அமைச்சரவைக்குத் தலைமை தாங்குகிறார். இதில் சிலர் சில வர்த்தக நிறுவனங்களின் நலன்களைப் பிரதி பலிக்கிறார்கள். சிலர் அவர்களே வர்த்தகர்களாக இருக்கிறார்கள். ஒருசிலர் வழக்கறிஞர்கள். இவர்கள் ஒருசில குறிப்பிட்ட கார்ப்பரேட் நிறுவனங்களின் வழக்கறிஞர்களும் ஆவார்கள். அவர்கள் வகிக்கும் இலாகாவில் அவர்கள் சார்ந்திருக்கும் கார்ப்பரேட்டுகளின் விஷயங்களைக் கவனித்துக் கொள்கிறார்கள். ஊழல்மிக்க பெரும் வர்த்தக நிறுவனங்கள் - அரசியல்வாதிகள் - அதிகார வர்க்கத்தினரின் பிணைப்பின் மூலமாக இயக்கப்படும் சட்டவிரோதப் பணம்தான் நாட்டின் அரசியலையும் ஜனநாயகத்தையும் தவறான வழியில் செலுத்தி, ஒரு மோசமான அரசியலமைப்பை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. இத்தகைய ஊழல் மற்றும் சட்ட விரோதப் பணத்திற்கும் இடையேயுள்ள நேரடித் தொடர்புதான் தேர்தல்களின்போது மிகப்பெரிய அளவில் பயன்படுத்தப்படுகிறது.
ஊழலை எதிர்த்துப் போராடுவதற்கு, அதன் பிறப்பிடமான இத்தகைய இழிவான பிணைப்பின் மூலாதாரத்தையே தாக்குவதிலிருந்து தொடங்க வேண்டும். 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை விவகாரத்தில், அமைச்சர் மற்றும் குற்றமிழைத்துள்ள அதிகாரிகள் மட்டுமல்ல, அவர்களைக் கள்ளப் பணத்தாலேயே அடித்துத் தங்கள் வசமாக்கியுள்ள கார்ப்பரேட்டுகளும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டுத் தண்டிக்கப்பட வேண்டும். கபில் சிபல் டெலிகாம் அமைச்சராகப் பொறுப்பேற்றபின், மேற்கொண்ட நடவடிக்கைகள் பெயரளவிலானவையே என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. “உங்கள் உரிமங்கள் ஏன் ரத்து செய்யப்படக் கூடாது” என்று 85 கம்பெனிக ளுக்கு காரணம் கோரும் அறிவிக்கை (நோட்டீஸ்) அனுப்பப்பட்டபின், உள் விசாரணைக் குழு (internal enquiry commttee) அமைக்க வேண்டியதன் அவசியம் என்ன? சட்ட விரோதமான வகைகளில் உரிமங்கள் பெற்ற அனைத்துக் கம்பெனிகளின் உரிமங்களும் ரத்து செய்யப்படும் என்று அறிவிக்க அமைச்சர் ஏன் தயங்குகிறார்? அலைவரிசையை ஏலமிடுவது சிறந்த வழியாக அமையாது போகலாம் என்று அமைச்சர் ஏன் கூறுகிறார்?
இவ்வாறு விஷயங்களை நுணுகி ஆராயும் போது சில விஷயங்களைத் தெளிவாக பார்க்க முடியும். அதாவது ஊழலின் அடிநாதமாக விளங்கும் கார்ப்பரேட் நிறுவனங்களை ஊழலுடன் பிணைக்காமல் தப்பவிடும் முயற்சியே அது. நாடாளுமன்றக் கூட்டுக் குழுவை அமைக்க அரசாங்கம் விரும்பாததன் உண் மையான காரணம் இதுவேயாகும். ஏனெனில் அவ்வாறு ஒரு விசாரணைக் குழு அமைக்கப் பட்டுவிட்டால், மேலே சொன்னவாறு பெரும் வர்த்தக நிறுவனங்கள் - அரசியல்வாதிகள் - அதிகாரவர்க்கத்தினர் இடையேயான பிணைப்பின் மூலமாக செயல்படுத்தப்பட்டு, கார்ப்பரேட் நலன்களுக்குச் சாதகமான கொள்கைகள் வடிவமைக்கப்பட்டு அமல்படுத்தப்பட்டது வெட்டவெளிச்சமாகிவிடும். பெரும் வர்த்தக நிறுவனங்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு இடையிலான பிணைப்பின் மூலம் உருவாகும் ஆபத்தான அம்சங்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழுவின் விரிவடைந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட அரசியல் தீர்மானம் மிகவும் கவலையுடன் சுட்டிக்காட்டுகிறது. “அரசியலிலும் தேர்தல்களிலும், பணபலம் பாய்ச்சப்படுவதற்கு எதிராக மிகவும் விரிவான அளவில் பிரச்சாரத்தை கட்சி மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. பணம்படைத்த பெரும் வர்த்தக நிறுவனங்கள் தங்கள் பணபலத்தின் மூலம் அரசாங்கத்தின் கொள்கைகளையே தங்கள் நலன்களுக்கு ஏற்ப உருவாக்கும் போக்கு அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இதற்குத் துணையாக நிற்கும் முதலாளித்துவக் கட்சிகளை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்த வேண்டியது அவசியமாகும்.”
நவீனதாராளமயக் கொள்கைகளே ஊழல் என்னும் முட்டைகள் பெருமளவில் உற்பத்தியாகக் காரணமாகும். எனவே, ஊழலுக்கு எதிரான போராட்டத்தையும், நவீன தாராளமயக் கொள்கைகளுக்கு எதிரான போராட்டத்தையும் சரியானமுறையில் இடதுசாரிகள் மற்றும் ஜனநாயக சக்திகள் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.
-பிரகாஷ்காரத்
தமிழில்: ச.வீரமணி
சி.பி.ஐ ரெய்டுகள்!
“குலை குலையா முந்திரிக்கா”
“நரியே நரியே சுத்தி வா”
“கொள்ளையடிச்சவன் எங்கிருக்கான்?”
“கூட்டத்துல இருக்கான் கண்டுபிடி”
“குலை குலையா முந்திரிக்கா”
“நரியே நரியே சுத்தி வா”
“கொள்ளையடிச்சவன் எங்கிருக்கான்?”
“கூட்டமா இருக்கான் கண்டுபிடி”
“குலை குலையா முந்திரிக்கா”
“நரியே நரியே சுத்தி வா”
“கொள்ளையடிச்சவன் எங்கிருக்கான்?”
“கூடவே இருக்கான் கண்டுபிடி”
“குலை குலையா முந்திரிக்கா”
“குலையா முந்திரிக்கா”
“முந்திரிக்கா”
செகாவுக்கு வயது 150!
ரஷ்ய எழுத்தாளரும் உலகம் முழுவதும் அறியப்பட்டவருமான அன்டன் செகாவின் 150வது பிறந்த ஆண்டு உலகம் கொண்டாடிக் கொண்டிருக்கிறது. 1860ம் ஆண்டில் பிறந்து 1904 வரை 44 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த செகாவ் மகத்தான இலக்கியச் சாதனைகளை நிகழ்த்தியவர். எனக்கு செகாவை அறிமுகப்படுத்தியவர்களில் ஒருவரான- தேர்ந்த வாகரும், விமர்சகருமான- எஸ்.ஏ.பெருமாள் அவர்களே, இங்கும் செகாவைப் பற்றி சொல்கிறார்…
செகாவின் பாட்டனார் ஒரு பண்ணை அடிமையாக வாழ்ந்தார். இது வம்ச பரம்பரையாக நீடித்தது. எண்பது ரூபிள் கடனுக்காக அவரும் அவரது மனைவியும் மூன்று குழந்தைகளும் அடிமைகளாயினர். கடுமையாக உழைத்து எண்பது ரூபிள் சேர்ந்ததும் கடனை அடைத்துவிட்டு விடுதலை பெற்றார். அவரது பிள்ளைதான் பாவெல் செகாவ். பாவெலுக்கு மூன்று ஆண், ஒரு பெண் குழந்தைகள் பிறந்தனர். இவர்களில் அன்டன்செகாவ் மூன்றாவது மகனாய் பிறந்தார்.
பாவெல், டாகன்ராக் கிராமத்தில் ஒரு பல சரக்குக்கடை நடத்தி வந்தார். அவருக்கு வயலின் வாசிக்கவும் ஓவியம் தீட்டவும் தெரியும். தனது பிள்ளைகளை அடித்து உதைத்து இம்சிப்பார். கொடூர குணம் கொண்டவர். அவரது சொல்லை சிறிதளவு மீறினாலும் நையப்புடைத்து விடுவார். தனது பிள்ளைகள் சர்ச்சில் சுவிசேஷப் பாடல்கள் பாடவேண்டுமென்று பாவெல் விரும்பினார். அதற்காக மகன்களை அதிகாலை மூன்று மணிக்கு எழுப்பிப் பாடப் பயிற்சியளிப்பார். தூங்கி வழிந்தால் அடியும் உதையும் கிடைக்கும். கடைக்குட்டியான அன்டனுக்கும் அடிவிழும். இந்தக் கொடூரமான பாட்டுப் பயிற்சிக்கு பாவெல் ஒரு தத்துவ விளக்கமளித்தார்.
“பாடுவது உடலுக்கு உரமூட்டும் - சர்ச்சுக்குப் போவது ஆத்மாவுக்குத் திட மூட்டும்” என்று அடிக்கடி கூறுவார்.
அவரது அடாவடி முயற்சியால் இரண்டும் நிகழவில்லை. நிர்ப்பந்தமாகத் திணிக்கப்பட்ட சர்ச்சுக்குப் போகும் பழக்கம் பிள்ளைகளிடம் கடவுள் நம்பிக்கையை வளர்க்கவில்லை. மாறாக அவர்களை மதநம்பிக்கையற்ற நாத்திகர்களாக்கி விட்டது. தந்தையின் கொடூரமான வளர்ப்பினால் மூத்த சகோதரர்கள் இருவரும் குடிகாரர்களாகவும் பெண் பித்தர்களாகவும் மாறிப் போனார்கள். இதில் அன்டன் மட்டும் தனிரகமாக இருந்தார்.
பாவெலின் நடத்தையால் பல சரக்குக் கடை நஷ்டமாகி கடன்காரராகிவிட்டார். கடனுக்காக அன்டன் செகாவை ஈடாக கிராமத்துக் கடன் காரர்களிடம் விட்டுவிட்டு குடும்பத்தை மாஸ்கோ வுக்குக் கொண்டு போய்விட்டார். மூன்றாண்டுகள் கிராமத்தில் அடிமை வேலை செய்து கொண்டே படித்தார். பின்பு மாஸ்கோ பள்ளியில் அன்டன் சேர கிராமத்தைவிட்டு வெளியேறினார். 1879ம் ஆண்டு அவருக்கு டாக்டர் படிப்புப் படிக்க நிதியுதவி கிடைத்தது. மருத்துவம் பயிலத் துவங்கினார். தந்தை பாவெல் உழைக்க லாயக்கற்றவராகி விட்டார். மூத்த சகோதரர்கள் பொறுப்பற்றவர் களாக இருந்தனர். இருபத்தைந்து ரூபிள் உபகாரச் சம்பளம் பெற்று மருத்துவக் கல்லூரியில் படித்துக் கொண்டே குடும்பத்தையும் அன்டன் கவனிக்க வேண்டியிருந்தது. தனது இருபதாவது வயதில் சிறுகதைகள் எழுதத் துவங்கினர்.
அன்டன் செகாவின் கதைகள் மாஸ்கோ, பீட்டர்ஸ்பர்க் பத்திரிகைகளில் வெளிவந்தன. ஐந்தாண்டு காலத்தில் தங்குதடையின்றி நானூறு சிறுகதைகளுக்கு மேல் எழுதிவிட்டார். 1884ம் ஆண்டு செகாவுக்கு டாக்டர் பட்டம் கிடைத்தது. அதன்பின் அவர் பீட்டர்ஸ்பர்க் நகருக்குச் சென்றார். அங்கு செகாவின் எழுத்துக்கள் பிரபலமடைந்து புகழ்பெற்றிருந்தார். பீட்டர்ஸ்பர்க்கில் எழுத்தாளர் களுக்குள் போட்டியும் பொறாமைகளும் இருந் தது. இதனால் ஒருவரை ஒருவர் கடுமையாய் தாக்கி எழுதியும் பேசியும் வந்தனர். இதைக் கண்டு செகாவ் பயந்துவிட்டார். அதுவரை தனது மனம் போன போக்கில் எழுதிவந்தவர் கொஞ்சம் திட்டமிட்டு மாற்றிக் கொண்டார். இலக்கிய உணர்வு மேலோங்க எழுத வேண்டுமென்று ஆர்வம் ஏற்பட்டது.
அவரைக் காசநோய் தொற்றிக்கொண்டது. எழுத்துப்பணி குறைந்தது. ஆனால் எழுத்தின் தரம் பிற எழுத்தாளர்கள் போற்றும் அளவுக்கு உயர்ந் திருந்தது. 44 ஆண்டு வாழ்க்கையில் செகாவ் 24 ஆண்டுகள் எழுதியிருக்கிறார்.
செகாவ் வாழ்ந்த காலத்தில் எழுத்தாளர் களுக்கும் நாடகம் எழுதும் ஆசை தீவிரமாக இருந்தது. அவரும் நாடகங்கள் எழுதினார். “இவானோவ்” என்ற அவரது நாடகம் 1887ம் ஆண்டு மாஸ்கோவில் அரங்கேற்றப்பட்டது. நாடக ரசிகர்களுக்கு அந்த நாடகம் புரியவில்லை. அற்புதமான சிறுகதை எழுத்தாளரின் நாடகத்தை நன்றாக இல்லை என்று சொல்லவும் மனமில்லை. இவர்களுக்கும் மாறுபட்ட கருத்துக் கொண்டவர் களுக்கும் வாய்ச்சண்டை ஏற்பட்டு பின்பு கைச் சண்டையாகி ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண் டனர். நாடகம் பெரும் குழப்பத்தில் முடிந்தது.
இரண்டாண்டுகள் கழித்து பீட்டர்ஸ்பர்க் நகரில் இவானோவ் நாடகம் வெற்றியடைந்தது. அதைத் தொடர்ந்து அதே ஆண்டில் அரங் கேற்றப்பட்ட செகாவின் நாடகம் படுதோல்வி யடைந்தது. அதே ஆண்டில் புகழ்மிக்க சைபீரியப் பயணத்தை தனது முப்பதாவது வயதில் மேற் கொண்டார். பத்தாண்டுகளாக காசநோயால் அவதிப்பட்டு வந்த அவர் அடிக்கடி ரத்தவாந்தி எடுத்தார். இத்தனை மோசமான உடல்நிலை யோடு பனி உறையும் சைபீரியாவுக்குப் பயண மாவதை அவரது நண்பர்கள் தடுத்துப் பார்த் தனர்.அக்காலத்தில் கொடுந்தண்டனை பெற்ற கைதிகளைக் கொண்டு போய் அடைத்து வைக்கும் இடமாக சைபீரியா இருந்தது. ஆனால் செகாவ், கைதிகளைப் பற்றி தகவல்கள் திரட்டப்போவதாய் கூறிப் புறப்பட்டார். போக்குவரத்து வசதிகளற்ற அந்தக் காலத்தில் அவர் சென்று திரும்பினார். பிற்காலத்தில் அவர் எழுதிய விசயங்களில் ஒரே ஒரு கதையைத் தவிர வேறு எதிலும் சைபீரிய அனுபவம் வெளிப்படவில்லை.
செகாவ் தனது நிறைவேறாத காதலை மறப்பதற்கே சைபீரியா சென்றார் என்ற கருத்தும் உண்டு. லிடியா என்ற பெண் மீது அவருக்குக் காதல். ஆனால் அவள் திருமணமான பெண். எனினும் அவளை அடைந்தே தீர வேண்டும் என்ற உறுதியுடன் இருந்தார். அதனால் அவர் எழுதுவது கூடக் குறைந்துவிட்டது. இதனால் அவரது வருவாய் குறைந்துவிட்டது.
ஒரு மணமான பெண்ணை எப்படித் திருமணம் செய்ய முடியும் என்று அவர் சிந்திக்கவே யில்லை. சைபீரியா சென்றுவிட்டு அவர் மாஸ் கோவுக்குத் திரும்பிய பிறகும்கூட அவரால் லிடியாவை மறக்க முடியவில்லை. அவளை மூன்று நான்குமுறைதான் சந்தித்திருக்கிறார். அந்தச் சந்திப்புகளில் கூட இருவரும் மனம் விட்டுப் பேசிக்கொண்டதில்லை. ஒரு நாள் இருவரும் ஒரு ஓட்டலில் சந்திக்க ஏற்பாடு ஆகியிருந்தது. ஆனால் அதற்கு முதல் நாள் இரவு அவர் ரத்தவாந்தி எடுத்தார். லிடியாவை மறுநாள் ஓட்டலில் சந்தித்தபோது அவர்கள் இருவரும் கொஞ்சிக் குலாவவில்லை. லிடியாவை ஏதோ ஒன்றைப் படிக்கச் சொல்லிக் கேட்கும் அளவுக்கே செகாவ் இருந்தார்.அவர் பேசக்கூடாது என்று டாக்டர்கள் தடைபோட்டிருந்தனர். அவர் “உனக்கு மிகவும் நன்றி” என்று ஒரு சீட்டில் எழுதி லிடியாவிடம் கொடுத்துவிட்டு நாளைக்கும் நீ வா என்று மட்டும் கூறினார். ஆனால் லிடியாவின் கணவன் தந்திமேல் தந்தி கொடுத்து அவள் உடனே வந்து சேர வேண்டுமென்று கட்டளையிட்டான். வேறு வழியின்றி லிடியா ஓட்டலைவிட்டு வெளியே வந்தார்.
லிடியா வெளியே வந்தபோது அங்கு டால்ஸ்டாய் நின்று கொண்டிருந்தார். அவர் செகாவைப் பார்க்க வந்திருந்தார். அவர் எழுதிய அன்னாகரினா நாவல்வந்து அனைவரது இதயங் களிலும் இடம்பிடித்திருந்ததால் லிடியா அவருக்கு வணக்கம் தெரிவித்துவிட்டுப் போய் விட்டாள். செகாவின் அடுத்த நாடகமான “கடல் நாரை”யில் லிடியாவைத்தான் கதாநாயகியாக வரித்து எழுதியதாய் கூறப்பட்டது.
பீட்டர்ஸ்பர்க்கில் அரங்கேற்றியபோது “கடல்நாரை” நாடகம் படுதோல்வியடைந்தது. பின்பு புகழ்பெற்ற இயக்குனர் ஸ்டானிஸ்லாவ்ஸ்கி தனது மாஸ்கோ ஆர்ட் தியேட்டர் மூலம் கடல் நாரை நாடகத்தை மாஸ்கோவில் மீண்டும் மேடையேற்றினார். நாடகம் பெரும் வெற்றி பெற்றது. ஸ்டானிஸ்லாவ்ஸ்கியுடன் நட்பு ஏற்பட்ட பின்பு செகாவ் மேலும் மூன்று நாடகங் கள் எழுதினார்.மூன்றும் பெரும் வெற்றி பெற்றன. செகாவை ஒரு நாடக மேதையாக உலகுக்கு மாஸ்கோ ஆர்ட் தியேட்டர் அறிமுகம் செய்தது. மேலும், அவருக்கு எஞ்சியிருந்த சில ஆண்டுகளில் மணவாழ்க்கையை அனுபவிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. மாஸ்கோ ஆர்ட் தியேட்டர் நடிகை யான ஆல்கா நிப்பரை செகாவ் 1901ல் திருமணம் செய்து கொண்டார்.
புகழும் பணமும் மரியாதையும் செகாவுக்கு குவிந்த நேரத்தில் அவரது உடல்நலம் வேகமாகக் கெட ஆரம்பித்தது. காசநோயும் ரத்த வாந்தியும் அதிகரித்தது. அவரது கடைசி நாடகமான “செர்ரிப் பழத்தோட்டம்” 1904ல் அரங்கேறியபோது பல தடவை ரத்தமாக வாந்தி எடுத்தார். ஒரே நாளில் பல கதைகளை எழுத முடிந்த அவருக்கு ஒரு நாளில் நான்கு வரிகள் கூட எழுத முடியாமல் போய் விட்டது. ஆனால் அவரது நோயும் துன்ப துயரமும் அவரது இலக்கியப் படைப்புகளில் வெளிப் பட்டதேயில்லை. வாழ்க்கையை அதன் இயல் போடு ஒட்டியதாக நுட்பமான தகவல்களை மிக எளிமையாக எழுதினார். சுருக்கமாகவும், நகைச் சுவையோடும் மிகுந்த பரிவோடும் எழுதியிருப் பதை இன்றும் நாம் வாசித்து உணரலாம்.
செர்ரிப் பழத்தோட்டம் நாடகம் ஆல்கா நிப்பரைக் கதாநாயகியாகக் கொண்டு தொடர்ந்து மேடையேற்றப்பட்டது. செகாவ் அளவற்ற மகிழ்ச்சியோடு இருந்தார். பேடன்வீலர் என்ற இடத்தில் செகாவ் தனது மனைவியுடன் தங்கினார். 1904ம் ஆண்டு ஜூலை முதல் தேதியன்று இருவரும் உல்லாசமாய் பேசிக் கொண்டிருந்தனர். ஆல்கா சிரிப்பை அடக்கமுடியாமல் விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருந்தாள். அன்று இரவே செகாவ் டாக்டரை அழைத்து வரும்படி கூறினார். டாக்டர் வந்து சோதித்தபோது அவரிடம் “நான் போய்க் கொண்டிருக்கிறேன்” என்று சொன்னார். டாக்டர் செகாவுக்கு ஐஸ்கட்டியை வைத்தார். “எதற்கு என் காலியான இதயத்தின் மீது ஐசை” வைக்கிறீர்கள்?” என்று செகாவ் கேட்டார். அதன்பிறகு அவருக்கு நினைவு தவறிவிட்டது. சம்பந்தமேயில்லாமல் ஏதேதோ புலம்பிக் கொண்டிருந்தார். ஜூலை 2ம்தேதியன்று தனது நாற்பத்தி நான்காவது வயதில் தனது ஆயுளை முடித்துக் கொண்டார்.
ஊழல் குடும்பம், ஊழல் அரசு,ஊழல் சமூகம் இவற்றைச் சகித்துக் கொள்ள முடியாத வராக செகாவ் திகழ்ந்தார். மனிதகுலம் இவற்றைச் சகித்துக் கொள்வதை அவர் ஒரு போதும் ஏற்க வில்லை. அதே சமயம் அவர் தன்னை ஒரு சீர்திருத்த வாதியாகவோ, தர்மோபதேசியாகவோ எண்ணிக் கொண்டதில்லை. வாழ்க்கை யில் திறமையோடு வாழ வேண்டும். எதிலும் ஒரு அளவும், அழகும் வேண்டும். அனைவரும் நல்ல மனிதராக இருக்க வேண்டும் என்பதே அவரது லட்சியமாக இருந்தது. வாழ்க்கை எவ்வளவு மோசமானதாக, சாரமற்ற தாக இருக்கிறது என்பதை உறைக்கச் செய்வதே தனது நாடகங்களின் குறிக்கோள் என்றும் கூறினார். அதற்காக நான் நீதிகளைப் புகுத்தவில்லை என்று கூறினார்.
டால்ஸ்டாய், செகாவைப் பற்றி “எனக்கு ஷேக்ஸ்பியரின் நாடகங்களை உனது நாடகங்கள் தூக்கியடித்து விடுகின்றன. ஷேக்ஸ்பியர் வாசகனை எங்கேயோ அழைத்துச் செல்வது போல் உணர முடிகிறது. ஆனால் உனது படைப்புகளோடு எங்கே போவது? இங்கேதான் இருக்க வேண்டும்” என்று செகாவிடம் கூறினார். அதே டால்ஸ்டாய் “இலக்கிய உத்தியிலும் உருவ அமைப்பிலும் செகாவை மிஞ்சக்கூடியவர்கள் எவருமில்லை அவர் ஈடு இணையற்றவர்” என்றும் கூறினார். டால்ஸ்டாய் மணிக்கணக்காகப் பேசுவதை செகாவ் மௌனமாகக் கேட்டுக் கொண்டிருப்பார். இந்தச் செகாவ் ஒரு நாத்திகன் என்று கூறிவிட்டுப் போவார்.
டால்ஸ்டாயை செகாவ் கிண்டல் செய் வதுண்டு. “ஆறு அடி என்பது பிணத்துக்குத்தான். மனிதனுக்கு இந்த உலகம் முழுவதும் போதாது. ஏன்-இந்தப் பிரபஞ்சமே போதாது. இந்த இயற்கை முழுவதுமே உயிர்த்துடிப்புள்ள மனிதனுக்குப் போதாது” என்று ஆறடி நிலம் என்ற கதையை எழுதிய டால்ஸ்டாயை செகாவ் கிண்டல் செய்தார். எனினும் டால்ஸ்டாயைப் போன்று வேறு எவரையும் என்னால் நேசிக்க முடியாது என்றும் அவர் கூறியிருக்கிறார்.
வாழ்க்கையில் போலித்தனத்தையும், போலித்தனமான மனிதர்களையும் செகாவ் வெறுத்தார். நாடக மேடையில் நடிகர்கள் நடிப் பதைப் பார்த்து “இந்த நடிகர்கள் இன்னும் கொஞ்சம் குறைவாக நடித்தால் நன்றாக இருக்கும்.” என்பார். மாக்சிம் கார்க்கியைக் கூட செகாவ் கண்டித்துள்ளார். “உங்கள் எழுத்தில் அடக்கம் குறைவு. இயற்கையை வர்ணிக்கும் போது உரையாடலில் குறுக்கிடுகிறீர்கள். உங்கள் வர்ணனைகளைப் படிக்கும் போது அவை இரண்டு மூன்று வரிகளில் சுருக்கமாக நறுக்குத் தெறித்தாற் போல இருக்கலாம் என்று தோன்றுகிறது” என்று கார்க்கியிடம் கூறியுள்ளார். ஆனால் கார்க்கியை அவர் ஒரு போதும் புறக்கணித்ததில்லை. கார்க் கிக்கு எழுதிய கடிதமொன்றில் “நீங்கள் ஒரு அற்புதக் கலைஞர், அறிஞர், வாழ்வின் விசயங்களை அற்புதமாக உணர்ந்து எழுதுகிறீர்கள்” என்று செகாவ் குறிப்பிட்டுள்ளார்.
செகாவின் கதைகள், நாடகங்களில் சொற்கள் சிக்கனமாய் கையாளப்பட்டுள்ளதைக் காணலாம். அவரது நாடகங்களில் “மௌனம்” என்ற குறிப்பு இருக்கும். செர்ரிப் பழத்தோட்டத்தில் மட்டும் 35 மௌனங்கள் உள்ளன. முதலாளித்துவ, நிலப்பிரபுத் துவ சமூகத்தின் ஊழல்களையும், அராஜகங் களையும் அம்பலப்படுத்தியதால் லெனினும், ஸ்டாலினும் செகாவைப் பிற்காலத்தில் கொண் டாடினர். செகாவின் ‘ஆறாவது வார்டு’ தோழர் லெனினுக்கு மிகவும் பிடித்தமான கதையாகும்.
செகாவின் பார்வை வித்தியாசமானது. அவர் ஒருமுறை ஹாங்காங் சென்று வந்தார். அதுபற்றி அவரது நண்பர் சுவோரினுக்கு எழுதிய கடிதத்தில் “பிரிட்டிஷ்காரன் காலனி நாடுகளில் மக்களைச் சுரண்டுகிறான் என்று கூக்குரலிடு கிறோம். பிரிட்டிஷ்காரன் சுரண்டுகிறான். அத்துடன் நல்ல சாலைகளை அமைக்கிறான். சுகாதாரமான சாக்கடை வசதிகள் கட்டுகிறான். ரஷ்யாவில் உங்கள் சங்கதி என்ன? நீங்களும்தான் சுரண்டுகிறீர்கள். பதிலுக்கு என்ன தருகிறீர்கள்? “என்று கேட்டார். அதே போல் விஞ்ஞான வளர்ச்சியில் செகாவுக்கு மிகுந்த அக்கறை இருந்தது. “விஞ்ஞானம் கற்பதால், வருவதால் மனிதன் கெட்டுப் போவதில்லை. வளர்ச்சிதான் அடைகிறான். இலக்கியமும் விஞ்ஞானமும் கரங்கோர்த்து இணைந்து செல்ல வேண்டியவை யாகும்” என்றார். எமிலிஜோலாவும், டால் ஸ்டாயும் தங்கள் படைப்புகளில் மருத்துவம் பற்றிய பகுதிகளில் தவறாக எழுதியிருப் பதாகவும், அது தனக்கு எரிச்சலூட்டுவதாகவும் குறிப்பிட் டுள்ளார். ஒரு இலக்கியவாதி ஒரு ஆராய்ச்சி யாளனைப் போல சரியான விபரங்களை எழுத வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
அற்ப ஆயுளில் காலமாகிவிட்ட செகாவ் தனது வாழ்நாளில் பாதிக்குமேல் எழுதியுள்ளார். அவர் ஒரு டாக்டர் என்றாலும் மருத்துவம் பார்க் காமல் எழுதுவதற்கே தனது வாழ்வை அர்ப் பணித்தார். ஒவ்வொரு முறையும் தன்னைத் திருத்திக் கொள்ளவும், அழகுபடுத்திக் கொள்ளவும் அவர் தயங்கியதில்லை. எழுதிவிட்டு தானே சுயமாக மதிப்பீடு செய்வார். நண்பர்கள், வாசகர்கள் கூறும் கருத்துக்களையும் ஆலோசனை களையும் கவனமாகப் பணிந்து ஏற்றுக் கொள்வார். ஆனால் விமர்சகர்களின் மீது அவருக்கு நம்பிக்கை யில்லை. “நானும் எனது கதைகளின் விமர்சனங் களை இருபத்தைந்தாண்டுகளாகப் படித்து வருகிறேன். ஒருமுறை கூட ஒரு பயனுள்ள கருத்தை யோ வார்த்தையோ காணமுடியவில்லை. உழுது கொண்டிருக்கும் குதிரையை உபத்திரப் படுத்தும் ஈயைப் போன்றுதான் விமர்சகர்கள் இருக் கிறார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
பெண்களை அவர் மிகவும் நேசித்தார். ஆனால் அவரது காதல் வாழ்வும், மணவாழ்வும் மிகவும் கசப்பான முடிவாகவே இருந்தது. முதலில் செகாவ், ஓல்கா என்ற பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். ஓல்காவுக்கக் கருச்சிதைவு ஏற் பட்டது. அதனால் ஓல்கா பிரிந்து சென்றுவிட்டார். அதன்பிறகு லிடியா என்ற பணக்காரச் சீமாட்டி செகாவைக் காதலித்தார். செகாவும் அவளை மிகவும் நேசித்தார். இடையில் செகாவ் லிடியா வை ஒரு நண்பனுக்கு அறிமுகம் செய்து வைத்தார். அவர்கள் இருவரும் காதல்வயமாகி லிடியா அந்த நண்பனுடன் ஓடிப்போனாள். நண்பனின் இந்தத் துரோகமும், லிடியாவின் ஓடுகாலித்தனமும் செகாவை நிரந்தரமாகப் பாதித்துவிட்டது. லிடியாவால் ஏற்பட்ட மன பாதிப்பிலிருந்துதான் அவர் “நாய்க்காரச் சீமாட்டி” கதையை எழுதியதாய் கூறப்படுகிறது.
செகாவ் ஒரு டாக்டர் என்பது அவருக்கே மறந்துவிடும். அவர் ஏழைகளுக்காக இலவச மருத்துவமனை ஒன்றைத் திறந்தார். அது ஏழைகளுக்கு ஓரளவே பயன்பட்டது. எழுதுவதில் மூழ்கியதால் ஏழைகளுக்குப் பயன்தரும் விதத்தில் அவரால் இயங்க முடியவில்லை.
செகாவ் மொத்தம் 568 சிறுகதைகளும் நாடகங்களும் எழுதியுள்ளார். இவை 13 தொகுதி களாக வெளி வந்துள்ளன. அவரது நாட்குறிப்பு களும், கடிதங்களும் தனித்தொகுதிகளாக வெளி யாகியுள்ளன. எழுத்துலகில் நீடித்து நிலைக்க விரும்புவோர் அவைகளைத் தேடிப் பிடித்துப் படித்தாக வேண்டும். அவரது நாடகங்களில் இவானோவ், கடல்நாரை, காட்டுப்பேய் ஆகி யவை புகழ்பெற்றவையாகும். தமிழில் வான்கா, பந்தயம், ஆறாவது வார்டு, நாய்க்காரச் சீமாட்டி போன்ற சில கதைகள் மட்டுமே வந்துள்ளன.
செகாவ், பேடன் வீலர் என்ற ஊரில் மரண மடைந்த செய்தி மாஸ்கோவில் ஆழ்ந்த துக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. அவரது உடல் மாஸ்கோ ரயில் நிலையத்தில் எதிர்பார்க்கப்பட்டது. எளிய நடை யில் பரிவுடன் எழுதப்பட்ட சிறுகதைகளும் நாடகங்களும் எழுதித் தங்களை மகிழ்வித்த அன்டன் செகாவுக்கு இறுதி அஞ்சலி செலுத்திட மக்கள் ஆயிரக்கணக்கில் ரயில் நிலையத்தில் குவிந்திருந்தனர். அப்போது ஜப்பானுடன் ரஷ்யா போரிட்டுக் கொண்டிருந்த காலம். அப்போரில் ஜெனரல் கெல்லர் என்பவர் கொல்லப்பட்டு அவரது சடலம் ரயிலில் வந்தது. ராணுவத்தினர் அந்த உடலிருந்த பெட்டியைச் சுமந்துகொண்டு ராணுவ கீதங்களை இசைத்தபடி சென்றனர். செகாவின் சடலத்தைத்தான் கொண்டு செல் கிறார்கள் என்று நினைத்து மக்கள் கூட்டம் ராணுவ வாத்திய கோஷ்டியின் பின்னால் சென்று கொண்டி ருந்தனர். செகாவ் என்ற தங்கள் மாபெரும் எழுத்தாளருக்கு ரஷ்ய அரசு ராணுவ மரியாதை அளிப்பதாக அவர்கள் தவறாகக் கருதிவிட்டனர்.
ரயில்வே நிர்வாகத்தின் கவனக்குறைவால் செகாவின் உடல் “மீன்” என்று குறிக்கப்பட்ட குளிர்பதனப் பெட்டியில் மாஸ்கோ வந்து சேர்ந்தது. விபரம் தெரிந்த எழுபது எண்பது பேர் மட்டுமே அவரது உடல் பின்னால் சென்றனர். இந்தக் கூட்டத்தில் ஒரு பெரிய போலீஸ் அதிகாரியும் தனது வெள்ளைக்குதிரை மீது சவாரி செய்து வந்து கொண்டிருந்தார். அவர் ஜெனரல் கெல்லரின் இறுதி ஊர்வலத்திற்காகத் தாமதமாக வந்தவர். தனது மரணத்தில் கூட செகாவ் சிறிது கேலியையும் நகைப்பையும் கலந்துவிட்டார்!
இதை அறிந்த மாக்சிம் கார்க்கி மிகுந்த கோபமடைந்தார். “ஐயோ! பெறற்கரிய இந்த அற்புத மனிதரையா மீன் பெட்டியில் கொண்டு வந்தார்கள்? என் நெஞ்சம் துடிக்கிறது. கதறிக் கதறி அழுது என்னைச் சவுக்கால் அடித்துக் கொள்ள வேண்டும் போலிருக்கிறது. ஒரு அழுக்குக் கூடையில் எடுத்து வந்தது பற்றி செகாவுக்கு ஒன்றும் குறைந்துவிடப்போவதில்லை. ஆனால் நமக்கு? நமது ரஷ்ய சமுதாயத்திற்கு? என்னால் இந்த அவமானத்தைத் தாங்கிக் கொள்ள முடிய வில்லையே” என்று கதறினார்.
செகாவ் இறந்து பதிமூன்று ஆண்டுகளுக்குப் பிறகு 1917ல் ரஷ்யப்புரட்சி வெற்றி பெற்று மகத்தான சோவியத் யூனியன் உருவானது. சோவியத் அரசு அமைந்த பின்பு அவருடலை மீண்டும் ஒருமுறை விசேட ராணுவ மரியாதைகளுடன் நல்லடக்கம் செய்தது. மாஸ்கோ ஆர்ட் தியேட்டர் உறுப்பினர்களுக்காகத் தனியே ஒதுக்கப்பட்ட இடத்தில் அடக்கம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கு அவரது மனைவி ஆல்கா நிப்பரும் வந்திருந்தார். செர்ரிப் பழத்தோட்டம் நாடகம் நடைபெற்றது. கதாநாயகியாக ஆல்காவே நடித்தார். ரஷ்யாவில் கார்க்கியின் “அடி ஆழங்கள்” நாடகத்திற்கு அடுத்தபடியாக மக்களால் விருப்பப்பட்ட நாடகம் செர்ரிப்பழத் தோட்டம்தான் என்று கூறப்படுகிறது.
செகாவின் இறுதி ஊர்வலத்தில் ஏற்பட்ட ஆள்மாறாட்டம் கூட மனித சமூகத்தில் மண்டிக் கிடக்கும் ஊழல் தன்மையை இடித்துரைக்கும் அவரது கதை போலத்தான் தோன்றுகிறது. ஒரு போர்வீரனின் சடலத்தோடு மாறாட்டம் நிகழ்ந்ததிலும் ஒரு நியாயம் உள்ளது போலும். ஏனெனில் செகாவின் கடைசி நிமிடங்களில் சுயநினைவின்றி உளறும் போது அவரது வார்த்தைகள் வாயிலிருந்து வந்து கொண்டிருந்தன. கூர்ந்து கவனித்ததில் “மஞ்சூரியா- ஐயோ அங்கே என் நாட்டு மக்களை ஜப்பானியர் கொன்று குவிக்கிறார்களே” என்று அவர் புலம்பியது கேட்டது. அவரது இறுதி ஊர்வலத்தில் ராணுவ மரியாதை இதற்குத்தான் போலும்.
செகாவின் 150வது பிறந்த ஆண்டில் புதிய தலைமுறைகள் அவரது படைப்புகளைப் பயிலட்டும்.
பத்தாண்டு கால நாவல்கள் குறித்த வாசகக் குறிப்புகள் – 10
| “தண்ணீர்க்குடம் எடுத்து தனிவழியாகப் போன தங்கை எதற்கு இஸ்லாமிய இளைஞனைப் பார்த்துச் சிரிக்கிறாள் எனப் பதறி நெல்கொட்டி வைக்கும் மச்சுக்குள் இறக்கி அவளறியாத நொடியில் மச்சுக்கதவை பூசி மொழுகிவிட்டது குடும்பமே. அதிகாலையில் வன்கொலையாக பலியிடப்பட்டவளின் மூச்சு சுற்றிக் கொண்டே அலைவதாக நம்பிக் கடவுளாக்கினர் அவளை. அஞ்சுவண்ணம் தெருவின் ஆதிக்கிஸாவான அடக்கம் செய்யப்பட்ட தாயின் கதையும் வஞ்சித்துப் பலியிடப்பட்ட பெண்ணின் கதைதான். ” |
மனித மனங்களுக்குள் விளைந்து கொண்டிருக்கும் அச்சமும், வாழ்க்கை ஏன் இப்படி சிக்கலாகிக் கிடக்கிறது என்பதைத் தேடியலையும் அவனுடைய பயணமுமே அவனை மதங்களுடன் மன நெருக்கமுடையவனாக்கியது. நம்பத் துவங்கினான். நம்பிக்கைதான் மதங்களின் அடிப்படைத்தத்துவம். எல்லாவற்றையும் சந்தேகிப்பதும், அவற்றின் மீது கேள்விகளை எழுப்பிக் கொண்டேயிருப்பதும் அறிவியலின் வேலை. கேள்விகளற்று தன்னை நம்பிக்கையுடன் பின் தொடரவே மதங்கள் மனிதக் கூட்டத்தைக் கோருகிறது. உருவாக்கப்பட்டிருக்கும் நம்பிக்கைகளின் மீது அமானுஷ்யமான தன்மையை உருவாக்கிட கதைகளே மதங்களுக்குப் பெரும் கருவியாகிறது.
புராணங்களும், இதிகாசங்களும் வரலாற்றைப் போல திரித்துச் சொல்லப்பட்டதையும், அதை ஏற்கும் மன நிலைக்கு பாரபட்சமற்ற நீதி வழங்கும் என வெகு ஜனத்திரள் நம்பிக்கொண்டிருந்த நீதிமன்றங்கள் வந்ததும் சமீபத்திய உதாரணம். எல்லா மதங்களுக்குள்ளும், நம்பிக்கையை நிலை நிறுத்திடத் துடித்தலையும் கதைகள் விரவிக்கிடக்கின்றன. அவற்றின் வழியாகவே மக்கள் மதங்களைப் பின்பற்றித் தொடர்கின்றனர். அப்படியான கிஸாக்களின் தொகுப்பே அஞ்சுவண்ணம் தெரு. ஒரு கடலோரக் கிராமத்தின் கதைக்குள்ளும், சாய்வு நாற்காலிக்குள்ளும் வெளிப்பட்ட நாஞ்சில் நிலத்து இஸ்லாமியர்களின் வாழ் வையே தோப்பில் முகம்மது மீரான் அஞ்சு வண்ணம் தெருவிற்குள்ளும் வரைந்து பார்த்திருக்கிறார்.
தமிழ் நிலங்களின் திசையெங்கும் வன்கொலையாகப் பலியிடப்பட்டு தெய்வங்களாக்கப்பட்ட பெண்களின் உயிர் மூச்சு துடித்தலைகிறது. அதிகார பீடத்தில் அமர்ந்திருந்ததாலும், ஆண் எனும் மமதையிலும் தன்னுடைய பாலியல் இச்சையை எழுதிப்பார்த்திடும் பிரதியென பெண் உடலை உருமாற்றத்துடித்த அரசர்களின் கொடூரங்களை தொகுத்துப் பார்க்க வேண்டிய அவசியம் இருப்பதை அஞ்சுவண்ணம் தெரு தமிழ்ச் சமூகத்திற்கு மீண்டும் ஒருமுறை நினைவூட்டுகிறது.
வெற்றிலைக் கொடிக்காலில் தண்ணீர் பதமாக பாய்கிறதா எனப் பார்த்துக் கொண்டிருந்த பெண்ணை சாய்பு மன்னன் பெண் கேட்டுவிட்டானே என அதிர்ந்து, அவளை நிலத்தோடு நிலமாக சமாதியாக்கித் திரும்பினார்கள் அண்ணனும், தந்தையும். அரண்மனை அந்தப்புரத்திற்கு மற்றொருத்தியாக அழைத்துவிட்டானே தன் தங்கையை எனக் கொதித்து நிலத்தில் வெட்டிவைக்கப்பட்ட கம்மங்குழிக்குள் இறக்கி தன் குடும்பகௌரவம் காக்கப் பட்டதாக பெருமிதம் கொண்டிருந்தனர் அப்பாவும், சகோதரனும், ஒன்றல்ல, இரண்டல்ல ஒராயிரம் பெண்கள் தமிழ் நிலமெங்கும் குடும்பமானம் காக்க அவர்கள் அறிந்திடாத பொழுதினில் புதைக்கப்பட்டிருக்கிறார்கள். புதைந்த பெண்களின் ஏக்கப் பெருமூச்சாலே தான் ஆண்ட மன்னர்களின் கோட்டைகளும், கொத்தளங்களும் தரைமட்டமாகியிருக்கும் என்று படுகிறது.
தண்ணீர்க்குடம் எடுத்து தனிவழியாகப் போன தங்கை எதற்கு இஸ்லாமிய இளைஞனைப் பார்த்துச் சிரிக்கிறாள் எனப் பதறி நெல்கொட்டி வைக்கும் மச்சுக்குள் இறக்கி அவளறியாத நொடியில் மச்சுக்கதவை பூசி மொழுகிவிட்டது குடும்பமே. அதிகாலையில் வன்கொலையாக பலியிடப்பட்டவளின் மூச்சு சுற்றிக் கொண்டே அலைவதாக நம்பிக் கடவுளாக்கினர் அவளை. அஞ்சுவண்ணம் தெருவின் ஆதிக்கிஸாவான அடக்கம் செய்யப்பட்ட தாயின் கதையும் வஞ்சித்துப் பலியிடப்பட்ட பெண்ணின் கதைதான். ஆனால் இதுவரை சொல்லப்பட்டு வந்த கதைகளுக்கு நேர்எதிரான தன்மையில் முன் வைக்கப்பட்டு இருக்கிறது.
நாஞ்சில் நாட்டிற்கு மலையாளத்து மகாராஜாவால் சோழநாட்டிலிருந்தும், பாண்டிய நாட்டிலிருந்தும் கொண்டு வரப்பட்ட அஞ்சு நெசவாளர் குடும்பமே நாஞ்சில் நிலத்தின் ஆதி இஸ்லாமியக் குடும்பம். தஞ்சாவூர் தாயும்மா அக்குடும்பங்களின் குலவிளக்கு. பேரழகி. நகர்வலத்தின் போது மன்னனின் பார்வையில்பட சகோதரர்களும், தந்தையும் துடிக்கிறார்கள். அழைத்தது மன்னன் என்றாலும் காபி ரல்லவா? (மாற்று மதத்தவன்). ஒரு காபி ருக்கு ஒதி மடித்து சாலிஹான (பக்தியுள்ள) முஸ்லிம் பெண்ணை மணம் முடித்துக் கொடுப்பதா? எனத் துடிக்கின்றனர். மற்ற கதைகளைப் போல் இல்லாமல் பெண்ணிடமே கேட்கின்றார் வாப்பா. எம்மா ஹாஜரா நீ ஒரு காபிருக்கு மனைவியாக இருக்க விரும்பிறியா...? ஒரு காபிருக்கு நான் எப்படி மனைவியாக இருப்பேன். ஏழையானாலும் ஒரு முஸ்லிமைத்தான் கட்டிக்கொள்வேன் வாப்பா!
இங்கேயும் குழிதான் வெட்டப்படுகிறது. தாயும்மாவாகப் போகிற ஹாஜாவை இறக்கிட. குழி அருகில் கொண்டு போய் நிறுத்தி தந்தை மகளிடம் கேட்கிறார். ஈமானுள்ள (இறைநம்பிக்கை) முஸ்லிமாக இறக்க விரும்புகிறாயா? அல்லது காபிராகவா? ஈமானுள்ள முஸ்லிமாக. அப்படியானால் இந்த குழியில் இறங்கம்மா! வாப்பா..? இதுக்குள்ள எந்த மன்னனுடைய ஆட்சியும் இல்லம்மா. உன்னைப் படைச்ச அல்லாஹ்வுடைய ஆட்சிதான்.
வேறுநிலைகளில் வெளிப்பட்டாலும் ஆச்சர்யமான ஒற்றுமை இக்கதைகளின் வழியே வெளிப்படுகிறது. இஸ்லாமிய மன்னன் பெண் கேட்டதற்காக இந்துப் பெண் பலியிடப்படுகிறாள், இஸ்லாமியப் பெண் இந்து மன்னனிடமிருந்து தப்புவிக்க பலியிடப்படுகிறாள். மதங்கள் தங்களை நிறுவிடக் கிடைத்த பொருளாகவே பெண்களின் உடல்களை தீர்மானிக்கிறதே, ஏன் என்பது குறித்து ஆய்வினை நிகழ்த்திப் பார்த்தால் உடலரசியல் எவ்வளவு வன்மையானது என்பதும் கூட புரிபடத் துவங்கும்.
ஆதிக்கிஸாவின் பகுதியில் எழுத்தாளர் சிலாகித்து எழுதுகிறார். ஒரு மகத்தான கோட்பாட்டிற்கு எந்தவித ஊனமும் தட்டாமலிருக்கவும், ஒரு பாரம்பரியத்தின் பெருமைக்கு களங்கம் ஏற்படாமலிருக்கவும் புன்னகையோடு வாப்பா கையைப் பிடித்து இறக்கிய குழியில் அவள் இறங்கினாள் எனும் தோப்பிலின் குரலோடு என் மனம் ஒன்றவில்லை. அது அவரின் நம்பிக்கை சார்ந்தது என்று மட்டும் சொல்லத் தோன்றுகிறது. பெண்களின் உடலின் மீது மதங்களும், மதவெறியும் நிகழ்த்தி பார்த்திருக்கிற வன்முறையின் வரலாறு இவற்றை வாசித்துக் கடக்கும் போது எனக்குள் ஓடிக்கொண்டேயிருந்தது. கோவையும், மன்டைக்காடும், ஒரிஸாவும், குஜராத்தும் வெற்றுப்பெயர்கள் அல்ல என்பதை மட்டும் என் மனம் எனக்கு ஞாபகமூட்டிக்கொண்டேயிருக்கிறது. ஒரு பிரதியை வாசித்துக் கொண்டிருக்கும் போது மனம் பேதலித்து வேறு வேறான வரலாறுக்குள்ளும், புனைவுகளுக்குள்ளும் போய்த் திரும்புவதை வாசகனால் இனி தவிர்க்கமுடியாது என்றே எனக்குப் படுகிறது.
அடக்கப்பட்ட தாயும், தீன் பிரச்சாரம் செய்து கலிமா சொல்லி முதலிமார்களையும், பட்டாச்சாரிகளையும் முஸ்லிமாக்கிய மெஹமூதப்பாவும் அஞ்சுவண்ணம் தெருவின் காவல் தெய்வங்கள். வணக்கத்திற்குரியவன் அல்லா ஒருவன் மட்டுமே என நம்புவதால் அதிகாலையில் எதிர்ப்படும் போதெல்லாம் என்னைப்பார்த்து காலை வரவேற்பு சார் எனச் சொல்லிக் கொண்டிருக்கும் தமிழாசிரியர் ஒருவரை எனக்குத்தெரியும். வணக்கம் என்ற சொல்லிற்கு கூட உரியவன் இறைவன் அல்லாவே என நம்புகிற இஸ்லாமியர்களுக்கு மத்தியில் தான் தர்ஹாக்குள் குறித்த நம்பிக்கை, அவுலியாக்களின் மதப்பிரச்சாரம், சூபிகள் குறித்தும் அவர்களின் ஹாரமத்துகள் (அதிசயங்கள்) பற்றிய பெருமிதமும் நிலைபெற்றிருக்கிறது.
மஹமூதப்பா தைக்காப்பள்ளி வாசலை விட உயரமான வீடான நபீஸா மன்ஸின் சொந்தக்காரர். வர்த்தகம் இழந்து, வாழ்க்கையிழந்து மன்ஸிலை பேயடையப் போட்டு எங்கோ போய்விடுகிறார். நபீஸா மன்ஸிலை தாருல்ஸாஹினா எனப் பெயர் மாற்றித் தங்கிய குடும்பத்திற்கும் வாழ்க்கையில் சுபிட்சம் லபிக்கவில்லை. அதற்கு காரணம் என்று அஞ்சுவண்ணம் தெருவே நினைப்பது, பள்ளிவாசலை விட உயர்ந்ததாக வீடு இருப்பதே என்பது தான். வீட்டை விட உயரமாக இரண்டு மினார்களைப் பள்ளிவாசலுக்கு கட்டிவிட்டால் போதும் என்று நிர்பந்திக்கின்றனர். மற்றவர்களால் வகாபி எனச் சொல்லப்படும் கதை சொல்லியின் தந்தை அதற்குச் சம்மதிப்பதில்லை. இது மாதிரியான நம்பிக்கைகளை நாவலுக்குள் கடைசிவரை எதிர் கொள்பவராக எதிர்ப்படுகிறார். கடைசி வரையிலும் மினாராக்கள் கட்டித் தரப்படவும் இல்லை. தவ்ஹீதுகளின் தலையீட் டால் தைக்காப்பள்ளியும் இடிந்து போகிறது. இவற்றின் ஊடே ஆதி இஸ்லாமியத் தெரு தன்னை எழுதி வேறு ஒன்றாக்கிய கதையே அஞ்சுவண்ணம் தெரு.
மீரானே நாவலில் சொல்வது போல இந்த நாவல் வரலாற்றை ஞாபகப்படுத் திடும் செயல்தான். வரலாறு ஆபத்துக் கட்டங்களில் கையெட்டிப் பிடிக்கக் கூடிய நினைவுகள்தான் என்பது மக்களுக்குத் தெரியவில்லை. பன்னாட்டு ஏகாதிபத்திய ஆதிக்கம் நடக்கும் இன்றைய ஆபத் தான சூழலில் ஏகாதிபத்தியத்திற்கு எதிராகப் போராடுவதற்கு நமக்கு சில நினைவுகள் தேவைப்படுகின்றன. அதனால்தான் மாப்ளா கலவரத்தின்போது களப்பலியான அயம்மாதாஜியின் வரலாற்றை புனைவாகக் கட்டமைத்திருக்கிறார். கிலாபத் போரில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டவர்களின் விடுதலை நாளில் நடந்த கலவரத்தில் வெள்ளைச் சிப்பாய்களை களத்திலே வெட்டி வீழ்த்தி தானும் பலியான விடுதலை வீரன் அயம்மாதாஜி.
வரலாற்றுத் தகவல்களை புனைவுறுத்தி நாவலுக்குள் விதவிதமான கதைகளை எழுதிப் பார்த்திருக்கிறார் மீரான். இஸ்லாமிய வாய்மொழி வரலாற்றுக் கதைகள் வழிநெடுக நாவலில் தென்படுகிறது. குறிப்பாக தக்கலை பீரப்பாவின் கதை நமக்கு உணர்த்துவது உழைப்பே கடவுள் என்கிற தத்துவத்தைத்தான். பள்ளிவாசலுக்கு வந்து தொழ மறுக்கும் பீரப்பாவை யாவரும் தொழுகைக்கு அழைத்திடும் போது பாருங்கள் நான் தொழுது கொண்டு தானிருக்கிறேன் எனச் சொல்லி நெசவு செய்யும் இடத்தை காட்டுகிறார். அதற்குள் மெக்கா, மெதீனா காட்சிதந்ததாக கூறும் பீரப்பாவின் கதை தமிழ் இஸ்லாத்திற்கும் சூபிமார்க்கத்திற்கும் இடையேயான நெருக்கத்தின் அடையாளம் தான். இப்படித்தான் போர்ச்சுக்கீசிய மாலுமிகளிடம் இருந்து கடற்கரை கிராமத்தைக் காப்பாற்றிட போரிட்ட அப்துல் மரைக்காயரின் கதையென நாவலுக்குள் இஸ்லாமிய தொன்மக்கதைகள் கட்டி வைக்கப்பட்டுள்ளன.
மம்முதம்மா ஒரு அசாத்தியமான பெண் பாத்திரம். வீடின்றி திண்ணையில் ஒடுங்கியவள் அஞ்சுவண்ணம் தெருவின் திறந்த கண்ணாடியாகிறாள். அவளறியாது இந்த தெருவிற்குள் அணுவும் அசைவதில்லை. இரவு பொத்திக் காப்பாற்றி வைத்திருக்கும் ரகசியங்களை தண்ணீர் பிடிக்கும் குழாயிலிருந்து வெளியேறும் நீரைப்போல வெளியேற்றுபவள். நபிகள் நாயகம் காட்சிதந்த வேம்படி பள்ளி வாசலுக்குச் சொந்தக்காரக் குடும்பமான ஆலிப்புலவரின் வாரிசுகளின் அழிவிற்காக மனம் வருந்துபவளும் அவள்தான். தவ்ஹீதுகளின் வருகைக்குப் பிறகு சிக்கலாகும் தெருவிற்காக வருந்திக் கிடப்பவளும் அவள்தான். இந்த மம்முதம்மா சுதந்திரப் போராளி அயம் மாதாஜியின் வழித்தோன்றல் என்கிற ரகசியம் வெளிப்படும் இடத்தில் வாசகன் நிலை தடுமாறிப் போகிறான். தேச விடுதலைக்கு உயிர் தந்த குடும்பத்துப் பெண்ணிற்கு தெருவின் திண்ணையே வீடான சாபத்தையே வாழ்க்கை அவளுக்குப் பரிசாக அளித்தது துரதிர்ஷ்டம் தான்.
வளைகுடாவிற்கு பணி நிமித்தம் சென்று தமிழ்நிலம் திரும்பிய இஸ்லாமிய இளைஞர்களின் மனங்களுக்குள் தவ்ஹீதுகளின் கருத்துக்கள் சேகரமாகின்றன. அதன் பின் அவர்கள் அஞ்சுவண்ணம் தெரு, வேம்படித்தெரு என நிறைந்திருக்கும் எல்லா மதச்சடங்குகளையும் கேள்வி கேட்கிறார்கள். இது எல்லா ஊரின் இஸ்லாமியத் தெருக்களுக்குள்ளும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது.
தொப்பிபோட்டுத் தொழணுமா? கூடாதா? விரல் ஆட்டித் தொழணுமா? கூடாதா? எனும் விவாதங்கள் நடந்து கொண்டிருக்கும் இஸ்லாமியத் தெருவில் ஒன்றாகிப் போகிறது அஞ்சு வண்ணம் தெரு. இறந்தவர்களின் கபர்ஸ்தானை வழிபடாதீர்கள். அவுலியாக்களுக்கு தனியே ஆற்றல் எதுவும் இருந்தது இல்லை. தர்ஹா வழிபாடும், சந்தனக்கூடு வழிபாடும் மார்க்கவிரோதச் செயல்கள் என தவ்ஹீது இளைஞர்கள் பிரச்சாரம் செய்கிறார்கள். வைதீக இஸ்லாமியத் தத்துவத் தளமாக தமிழ் இஸ்லாமியத் தெருக்களை ஆக்குவதே அவர்களின் நோக்கம். சூபி மார்க்கத்தின் சாயல்களோடு அரபு வணிகத் தொடர்பால், முகம்மது நபியின் காலத்திற்கு முன்பாகவே தமிழ் நிலத்தில் இஸ்லாம் கால்பதித்திருக்கிறது என்கிற வரலாற்று உணர்வை நாவல் ஏற்படுத்துகிறது.
தனித்த தமிழ்நிலத்திற்கு மட்டுமேயான இஸ்லாமியச் சடங்குகளும், வாழ்வியல் கூறுகளும், நம்பிக்கையை வலுப்படுத்திடும் அசாத்தியமான கதைகளோடும்தான் வாழ்கிறார்கள். ஆனால் அவற்றை அழித்து ஒற்றைத் தன்மையிலான இஸ்லாத்தை கட்டமைக்க தவ்ஹீதுகள் முயற்சிக்கிறார்கள். இதனைக் கட்டுடைக்க வேண்டிய மீரான், மாறாக சுன்னத்துல் ஜமாத் பிரதிநிதியை போல நாவலின் பல இடங்களில் பேசுகிறார்.
பெட்ரோல் துட்டுல கலவரம் பண்ணிக்கிட்டு திரியுறாங்க என்பதும், பளிங்குப் பள்ளிவாசல் தேவையா? என்றும் கதையாடும் இடங்களில் மீரானின் குரலுக்குள் பதிந்திருக்கும் கோபமே வெளிப்படுகிறது. இது இஸ்லாமியர்கள் குறித்த காவிப்படையின் குரலைப்போலவும் வெளிப்படுகிறது. காலம், காலமாக பின்பற்றப்படுகிற இஸ்லாமியத் தொன்மங்கள், அதிசயம் நிகழ்த்திய அவுலியாக்களின் கதைகள், அவற்றின் மீதான மக்களின் அசைக்கமுடியாத நம்பிக்கைகள் இவற்றிற்கு வைதீக இஸ்லாத்தை எதிர்த்து நிற்கும் ஆற்றல் இருக்கிறது என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
-ம.மணிமாறன்
சச்சினின் கொள்கை, தியாகம் மற்றும் வெங்காயம்!
மது அருந்துவது போன்ற விளம்பரங்களில் நடிக்க மாட்டேன் என சச்சின் உறுதியாய் மறுத்துவிட்டார், அதனால் அவருக்கு 20 கோடி ருபாய் நஷ்டம் என்பதாக செய்திகள் வருகின்றன. வெகுஜன ஊடகங்கள் இதனை பெரும் தியாகம் போல சித்தரித்துக் கொண்டு இருக்கின்றன. (ஏற்கனவே பிரபல நடிகர்கள் பலரும் சினிமாவில் சிகரெட், மது அருந்துவது போன்ற காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்று அறிவித்து நாளாகி விட்டது! )
சச்சின் கிரிக்கெட் விளையாட்டில், மகத்தான் வீரர். எத்தனையோ போட்டிகளில் அவர் தன்னந்தனியாய் நின்று போராடி அணியை வெற்றிப்பாதையை அழைத்துச் சென்றிருக்கிறார். தனது தனிப்பட்ட சாதனையை விட, அணியின் வெற்றி முக்கியம் என அவர் காட்டிய கணங்கள் உண்டு. இவையெல்லாம், கிரிக்கெட் என்னும் விளையாட்டுக்கும், அவரது தனிப்பட்ட திறமைக்கும் கிடைத்த பேரும் புகழும். ஒரு கிரிக்கெட் ஆட்டக்காரருக்கு இதைவிட தேவையானவையும், விருப்பமானவையும் நிறைய இருக்கிறது.
கிரிக்கெட் கிரவுண்டைத் தாண்டி வெளியே ஒரு பெரிய உலகம் இருக்கிறது. தனது திறமைகளினால் ஒரு ஆட்டக்காரருக்கு பெரும் பன்னாட்டுக் கம்பெனிகளின் விளம்பரங்கள் அங்கே கிடைக்கின்றன. விளையாட்டில் சம்பாதிப்பதை விடவும், பல மடங்கு பணம் சில கணங்களில் கிடைக்கிறது. இன்று கிரிக்கெட் ஆட்டக்காரர்களின் நோக்கமாகவும், ஆசையாகவும், கனவுகளாகவும் இந்த விளம்பரங்களே ஆகிவிட்டிருக்கின்றன. அதற்காகவே தங்கள் திறமைகளை அவர்கள் காட்ட வேண்டியிருக்கிறது. ‘உலகமயமாக்கல்’ சிதைத்துப் போட்டிருக்கும் எத்தனையோ விஷயங்களில் இந்த கிரிக்கெட்டும் ஒன்றாகி விட்டது. அங்கே சச்சின் என்னவாக இருந்திருக்கிறார், இருக்கிறார் என்று பார்ப்பது முக்கியம்.
கிரிக்கெட் மட்டையை மட்டுமா அவர் உயர்த்திப் பிடித்தார்? வென்ற கோப்பைகளை மட்டுமா எல்லோருக்கும் தூக்கிக் காண்பித்தார்? விளையாடாத போதும் பெப்ஸியை விடாமல் பிடித்துக்கொண்டு இருந்தாரே? கோக், பெப்ஸி குறித்து பெரும் சர்ச்சைகளும், விவாதங்களும் வந்த பிறகும், அவர் அந்த விளம்பரங்களில் ‘நாட் அவுட்’ பேட்ஸ்மேனாக தன்னை நிலைநிறுத்திக்கொண்டாரே! அப்போது இந்த தியாகங்களும், கொள்கைகளும் என்னவாயிற்று?
சமீபத்தில் சச்சினின் இரத்தமும், எச்சிலும் கலந்த தாள்களால் உருவாக்கப்பட்ட, அவரது ’சுயசரிதை’ புத்தகம் ஒன்றின் விலை ரூ.35/- லட்சம் என ஐரோப்பிய புத்தக நிறுவனம் வெளியிட்டது. அவ்வளவு அதிக விலையைப் பற்றி சர்ச்சைகள் வந்தபோது, “சச்சின் கிரிக்கெட்டின் கடவுள். எளிதில் அவரை நெருங்க முடியுமா” என்று அந்த நிறுவனம் பதிலளித்தது. சச்சின் மௌனமாக தன்னுடைய புத்தகத்துக்கு தன்னுடைய இரத்தத்தை தானம் செய்துகொண்டு இருந்தார். அப்போது இந்த தியாகங்களும், கொள்கைகளும் என்னவாயிற்று?
சச்சினை ஒரு விளையாட்டுக்காரராக எனக்கும் பிடித்தது. ஆனால், இந்த உலகின் எத்தனையோ கோடி மக்களின் இரத்தத்தையும், வேர்வையையும் உறிஞ்சியும், சுரண்டியும் பெருத்துக் கொண்டிருக்கிற பன்னாட்டுக் கம்பெனிகளின் உயர்தர சேவகன் அவர் என்பதை உணரும்போது பிடிக்காமல் போகிறது.
சச்சினை மேலும் உயரத்தில் தூக்கி வைக்கிற ஏற்பாடுதான் இந்தப் பிரச்சாரங்கள் எல்லாம். கடவுள்கள் மது அருந்துவதைப் பார்க்க பக்தர்கள் விரும்பமாட்டார்கள். மற்றபடி, இது தியாகம் அல்ல. கொள்கை அல்ல. வெங்காயம். அவ்வளவுதான்.
போங்கய்யா...நீங்களும் உங்க பத்திரிகை தர்மமும்!
விக்கிலீக்ஸ் வெளியிட்ட அந்த வீடியோக்களை கோடிக்கணக்கில் மக்கள் பார்த்து அதிர்ந்து போயிருக்கிறார்கள். அமெரிக்காவுக்கு எதிரான ஆத்திரமும், அபிப்பிராயங்களும் பரவிக்கொண்டு இருக்கின்றன.
உலகமே துடிதுடித்துப் பார்த்துக்கொண்டும், பேசிக்கொண்டும் இருக்கிற அமெரிக்காவின் அந்த அராஜகங்கள் எதுவும் நமது அருமையான பத்திரிகைகளுக்கு முக்கியமாகத் தெரியவில்லை போலும். எதுவுமே நடக்காதது போல மலை விழுங்கி மகாதேவன்களாக, வேறு செய்திகளை வாசித்துக்கொண்டு இருக்கின்றன.
“ஆத்தூரில் மான் வேட்டை : 2 பேர் கைது”, “வனத்துறை கூண்டில் சிக்கிய சிறுத்தை தப்பியோடியது” போன்றவை கூட தினமலரின் முக்கியச் செய்திகள். இளவரசர் சார்லஸின் கார் விபத்து உலகச் செய்தியாகிறது. விஜயகுமார், அவரது மகள் விவாகரங்கள் உள்ளூர் செய்திகளாகின்றன. அதே வேலையில், “ஐரோப்பிய யூனியனுடன் பொருளாதார ஒத்துழைப்பு: மன்மோகன் சிங்” மற்றும் “நோபல் அமைதிப் பரிசு வழங்கும் விழா: இந்தியா உள்பட 46 நாடுகள் பங்கேற்பு” போன்ற செய்திகளைப் போட்டு தங்கள் பிறவிப்பயனை அடைந்து இருக்கின்றனர்.
தேடிப்பார்த்தால் விக்கிலீக்ஸ் பற்றிய செய்தியொன்றை தினகரன் கடைசிப்பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறது. "பேச்சு சுதந்திரம் பற்றி அந்த மனிதர் பேசிய பேச்சில் மயங்கினார் அந்த 27 வயதுப் பெண்” என்று ஆரம்பித்து விக்கிலீக்ஸ் நிறுவனர் அசாஞ்ச்சை ஒரு பெண் பித்தராக சித்தரித்து இருக்கிறது. இதுதான் அவர்களின் தரமும், தர்மமும் போலும்.
அமெரிக்காவின் மீது இந்த பத்திரிகை முதலாளிகளுக்குத்தான் எத்தனை விசுவாசமும், அடிமை மோகமும். ஓபாமாவின் வருகையை முன்பக்கத்தில் பிரசுரிக்க முடிந்த இந்த பூதகணங்களுக்கு, விக்கிலீக்ஸ் வெளியிட்ட வீடியோக்களையும், செய்திகளையும் பற்றி, எதாவது ஒரு மூலையிலாவது எழுதிவைக்க தெம்பு இருக்கிறதா? ஊடக அரசியலின் சூட்சுமங்களும், சூழ்ச்சிகளும் பிடிபடுகிற இடம் இது.
ஆறுதலும், ஆதரவும் இணையவெளிதான். கருத்துரிமைக்காகவும், மனித உரிமைக்காகவும் அவர்களே குரல் கொடுக்கிறவர்களாக இருக்கிறார்கள். மாற்று ஊடகமாகவும், மக்களின் ஊடகமாகவும் இந்த வலைப்பக்கங்கள் பரிணமிக்கட்டும்.
இன்று மகாகவி பாரதியின் பிறந்த நாள். அவரது எழுத்தில் இந்த வெகுஜனப் பத்திரிகைகளுக்கு ஒரு செய்தி.
மாறுபட்ட வாதமே ஐந்நூறு
வாயில் நீள ஓதுவாய் போ போ போ!
சேறுபட்ட நாற்றமும் - தூறுஞ் சேர்
சிறியவீடு கட்டுவாய் போ போ போ!
உண்மைகளைத் தயங்காமல், உலகுக்கு எடுத்து வைக்கும் இணையவெளிக்கும் ஒரு செய்தி மகாகவியிடம் இருக்கிறது.
தெளிவுபெற்ற மதியினாய்
சிறுமை கண்டு பொங்குவாய் வா வா வா!
எளிமைகண்டு இரங்குவாய்
ஏறுபோல் நடையினாய் வா வா வா!
பத்திரிகையாளர்கள் படுகொலை, அமெரிக்க இராணுவத்தின் காட்டுமிராண்டித்தனம், வீடியோ காட்சிகள்!
இந்தக் காட்சிகளிலிருந்து எப்படி மீள முடியும் எனத் தெரியவில்லை.
அந்தப் பத்திரிகையாளர்கள் பேசிக்கொண்டு தெருவில் நடந்து போய்க்கொண்டு இருக்கிறார்கள் சின்னஞ்சிறு உருவங்களாய். அவர்களைக் குறிபார்த்து ஹெலிகாப்டர்கள் மேலே பறக்கின்றன. உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. இயந்திர இரைச்சல்களோடு குண்டுகள் சீறுகின்றன. உயிருக்காக அங்குமிங்கும் ஓடி செத்து விழுகின்றனர் பத்திரிகையாளர்கள். நம் கண்முன்னால் நடப்பதாய் வீடியோ காட்சிகள் பதிவு செய்யப்பட்டு இருக்கின்றன. கண்ணிமைக்கும் நேரத்தில் மனித உயிர்களை இரத்தச்சகதியில் வீழ்த்திவிட்டு, நகர்கிறார்கள். காட்சிகள் ஒன்றொன்றாய் தொடர்கின்றன. அதிர்ச்சியும், பதற்றமும் நம் நாடி நரம்புகளிலெல்லாம் துடிக்கிறது.
ஈராக் போரில் அப்பாவி பொதுமக்களும், பத்திரிகையாளர்களும் அமெரிக்க இராணுவத்தால் எந்த வறைமுரையுமற்று கொன்று குவிக்கப்பட்டனர் என்று செய்திகள் வந்த் போதெல்லாம் அமெரிக்கா அதனை மறுத்து வந்தது. தந்து நிறுவனத்தின் பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, ரியுட்டர்ஸ் நிறுவனம் அதற்கான ஆதாரங்களைத் திரட்ட எவ்வளவோ முயற்சித்தது. இப்போது விக்கிலீக்ஸ் அந்தக் கொடூரங்களை வீடியோக் காட்சிகளாக்கி உலகத்தின் பார்வைக்கு வைத்திருக்கிறது.
இந்த அமெரிக்காதான் உலகத்துக்கே ஜனநாயகம் பற்றி பாடம் எடுக்கும். சுதந்திரம் குறித்து பெரிமிதம் கொள்ளும். மனித உரிமைகளுக்குத் தன்னை காவலனாய் முன்னிறுத்தும். ஏகாதிபத்தியத்தின் இரக்கமற்ற யுத்தவெறியும், மனித உயிர்களை ஒரு பொருட்டாக மதிக்காத அதன் குரூர மனநிலையும் இதுதான்.
இன்று உலக மனித உரிமை தினம். வெட்கக்கேடு!
மாதவராஜ் பக்கங்கள் - 28
மழையக் கொண்டாடுகிற மனநிலையையும் மனிதர்கள் இழந்து போனார்கள். தேசத்தின் ஊழல்கள் போல எங்கு பார்த்தாலும் சேறும் சகதியும். வீட்டை விட்டுத் தெருவில் கால் வைக்கவே எரிச்சல்பட்டார்கள். பத்துப்பதினைந்து நாட்களுக்குப் பிறகு இன்றுதான் சுள்ளென்று ஒரு வெயில் சாத்தூரில் அடித்திருக்கிறது. காய்ந்த சகதி இப்போது சாலையெல்லாம் கண்ணை மறைத்து, மூக்கைப் பொத்திக் கொள்ள புழுதியாக கிளம்புகிறது. இதில்தான் நாம் பயணம் செய்ய வேண்டி இருக்கிறது.
வெகுநாட்களுக்குப் பிறகு சமீபத்தில் அந்த நண்பரைப் பார்த்துப் பேச நேர்ந்தது. அவர் தி.முகக்காரர். அழகிரி, ஸ்டாலினோடு நிற்கிற மாதிரி போட்டோக்களெல்லாம் அவரது கடையில் இருக்கும். உண்மைகள் என்னவாய் இருந்தபோதும் கலைஞரை விட்டுக்கொடுக்கவே மாட்டார். “தோழர், ஒங்களுக்கு அரசியலே புரியல்லே” என்று சிரித்து மழுப்புவார். இந்த தடவை “என்ன தோழர் அடுத்து எந்தக் கட்சி வரும்னு நெனைக்கிறீங்க” என்றார். “நாம நெனைக்கிற கட்சியா வருது” என்றேன். தொடர்ந்து, “இது அல்லது அது... இப்படித்தானே இங்க இருக்கு. எது வந்தாலும் மக்களையா கவனிக்கப் போறாங்க” என்றேன். “இல்ல தோழர், இந்த தடவ தி.மு.க வரக் கூடாது. அத்தோட தமிழ்நாட்ட முடிச்சிருவாங்க.” என்றார் மெல்ல. ஆச்சரியமாய்ப் போனது. “இன்னொரு தடவ வந்தாங்கன்னா உணடு இல்லைன்னு பண்ணிருவாங்க. அவனவன் அடிக்கான் காச. வெறி பிடிச்சு நிக்காங்க. ஆட்சி மாறுனா, அந்தம்மாவும் கொஞ்ச நாள் ஒழுங்கா இருக்கும். இவங்க ஆட்டமும் ஒழியும். அதுக்கு அடுத்த தடவ அந்தம்மா வரக்கூடாது. அவ்ளோதான். மாறி மாறி வந்தாதான் நாமப் பொழைப்போம்” என்றார். நாசமாய்ப் போக. இந்த அரசியலைப் புரிந்து என்ன செய்ய?
அருமைத் தோழன் காமராஜ், தனது வலைப்பக்கத்தில் எழுதிய கதைகளையும், இன்னும் சில கதைகளையும் சேர்த்து தனது இரண்டாவது தொகுப்பாக வம்சி மூலம் கொண்டு வர இருக்கிறான். முன்னுரை எழுதித் தர கேட்டான். சந்தோஷமென்றாலும் தயக்கமாய் இருந்தது. அவனது முதல் சிறுகதை தொகுப்புக்கும் நான்தான் எழுதினேன். வேறு யாரிடமாவது வாங்கலாமே எனச் சொல்லிப் பார்த்தேன். ஏனோ பிடிவாதமாக இருந்தான். எனக்குப் பட்டதை இப்படி எழுதிக் கொடுத்திருக்கிறேன்.
கால காலமாக வலிகளையும், கதைகளையும் தங்களுக்குள் அடைகாத்து கொண்டிருக்கும் மனிதர்களை நினைவுகளிலிருந்தும், பார்வைகளிலிருந்தும் சேகரித்து, அவர்களை காண்பிக்கிற எழுத்து காமராஜுடையதாக இருக்கிறது. பலரும் அறியாத, அறிந்தாலும் தள்ளிவைக்கிற, இந்த மண் பார்த்த வாழ்க்கையை, எழுத்தில் சொல்ல முனைகிற கவனம் கொண்டதாகவும் இருக்கிறது. எல்லோருக்கும் அப்படியேத் தெரியட்டும் என்கிற தாகத்தோடு அவைகளைச் சொல்ல ஆரம்பிக்கிற கதை சொல்லியைப் பார்க்க முடிகிறது. பச்சை தானியங்களில், சேற்றில், அடுப்பின் வெக்கையில், புழுதியில், கம்மாய்த் தண்ணீரில் இருந்து கிளம்பும் வாசத்தையெல்லாம் குழைத்தெடுத்து வார்த்தைகளாக்கிப் பார்க்கிறான். அவைகள் சிந்திச் சிதறுகின்றன. வாசகன் அவைகளைச் சேகரித்துப் பார்க்கும்போது வலிகளும், கதைகளும் புலப்பட ஆரம்பிக்கின்றன.
மருளாடியின் மேலிறங்கியவர்கள் மனிதர்களும், கடவுள்களுமாய் இருக்கின்றனர். மனிதர்களால் பாவமானவள், கடவுளால் புனிதமாகிற விந்தையும், விசித்திரமும் அறிய முடிகிறது. “நா ஒங்கம்மா போல” என முன்பின் தெரியாத ஒருவர் சொன்னதும் கண்ணில் நீர் கோர்க்கும் சாலமுத்துவின் கதை வெள்ளாவியின் மணமும் சூடும் கொண்டது. ரயில் பயண ஆசையில் புறப்பட்டவன், டிக்கெட்டுக்கு காசு குறைந்து பிடிபட, கசக்கிற பால்யத்தின் முதல் ரயில் தடதடக்கிறது. களத்து வேலை செய்பவர்கள் அரண்மனைக்காரர்களாய் உருமாறிப்போகும் நாடக ஆசையில் எளிய மனிதர்களின் கலை வேட்கையும், நுட்பமான விரக்திகளும் சேர்ந்திசைக்கின்றன. பள்ளிக்கூடத்திலிருந்து எல்லோருடனும் கொடைக்கானலுக்கு டூர் போவதற்கு சினிமா தியேட்டரில் முறுக்கு விற்று காசு சேர்க்கிற பேச்சிமுத்து நம் அருகில் வந்து நிற்கிறான்.
சாதிய கட்டுமானத்தின் அடியாழத்தில் இருப்பவர்களின் பக்கமே காமராஜின் சிந்தனைகள் இருக்கின்றன. மனிதர்களை வேறுபடுத்திப் பார்ப்பதற்கு எதிரான விமர்சனங்களையும், வேதனையையும் கதைகளுக்கு ஊடே வைத்திருந்தாலும் காமராஜின் கதை மாந்தர்களும், அவர்களது மொழியும் மனசெல்லாம் அப்பிக்கொள்பவர்கள். சில கணமே வந்து போகிறவர்களாயிருந்தாலும் பால் பாத்திரத்துக்குள் வித்தை காட்டுகிற டீ மாஸ்டர்களும், பாரத்தோடு செல்லும் நிறை மாத கர்ப்பிணியும், பேரைப் பச்சைக் குத்தி வைத்திருக்கிற சின்ராசுவும் நம்மை அலைக்கழிக்கிறார்கள். தொலைந்துபோன நம்முடைய நிலப்பரப்புகளில் வாழ்வின் ருசியும் பசியும் விளைந்து கிடைக்கின்றன. சம்பாரி மேளமும், பாடல்களும் நிலாவிலிருந்து இறங்கி ஊருக்குள் நிறைகின்றன.
இந்தத் தொகுப்பிலெங்கும் பிள்ளைப்பிராயத்தின் விம்மல்கள் கேட்டுக்கொண்டே இருக்கின்றன. அவர்களின் சந்தோஷங்களில் கூட இனம்புரியாத சோகம் ஒன்று மீட்டியபடி இருக்கிறது. ஏக்கம் சுமந்த அவர்களின் கண்கள் வதைக்கின்றன. வருத்தப்பட்டு பாரம் சுமக்கிற அவர்களின் காலத்தை எல்லோருக்குமான அப்பமும், திராட்சை ரசமுமாகத் தருகிறான் எழுத்தாளன்.
தொகுப்பு சிறப்பாய் வரட்டும். தோழன் காமராஜுக்கு நமது வாழ்த்துக்களைத் தெரிவிப்போம்.
பதிவர் லதாமகன், “புதிய பதிவர்கள் அறிமுகங்களை தொகுத்து வைக்கலாமே” என பின்னூட்டத்தில் கேட்டு இருந்தார். இப்போது இங்கே தொகுக்கப்பட்டு இருக்கிறது. புதிய பதிவர்கள் அறிமுக விட்ஜெட்டிலும் பார்ப்பதற்கு feeds இணைக்கப்பட்டு இருக்கிறது.
வலைப்பக்கங்களில் காணப்பெறும் நல்ல பதிவுகளை அடையாளம் காணவும், விவாதிக்கவும், தொகுத்து வைக்கவும் ‘வாடாத பக்கங்கள்’ என்று வலைப்பக்கம் ஆரம்பிக்கப்பட்டது. பதிவுலக நண்பர்களின் கூட்டு முயற்சியால் அதன் நோக்கம் நிறைவேறும் என்ற எண்ணமும், ஆசையும் இருந்தது. ஆனால், மிகச் சிலரே தங்களுக்குப் பிடித்த பதிவுகளை சுட்டிக்காட்டினார்கள். நாளாக, நாளாக அதுவும் குறைந்து போக இப்போது அந்த பக்கங்கள் வாடிப்போயிருக்கின்றன என்பது சோகமே. இப்போது, நான் படித்ததில் முக்கியமானதாகவும், ரசிக்கத்தக்கவையாகவும் இருக்கும் பதிவுகளை பகிர்ந்து கொள்ளலாம் எனத் தோன்றியது. அதற்கான ஏற்பாடு இது. ‘வலைப்பக்கங்களில்’ என்னும் விட்ஜெட்டாகவும் sidebarல் இணைத்திருக்கிறேன். முடிந்தவரையில் தினமும் அப்டேட் செய்வதாக உத்தேசம். பார்ப்போம்.





