உயிர்க்காற்றின் நுழைவாயிலில்...

NOSE CARTOON எனது மூக்கு தொடங்குகிற இடத்தில் முடிந்துவிடுகிறது உனது சுதந்திரம்.....என்று (யாரோ) ஆங்கிலத்தில் சொல்லப்படுவது உண்டு. அதனால் தான் அடுத்தவர் விஷயத்தில் மூக்கை நுழைக்காதே என்று சொல்கிறார்களோ தெரியவில்லை. ஏதாவது சங்கதி முன்கூட்டியே தெரிந்தால், உனக்கு மூக்கில் வேர்த்திடுமே என்று  கிண்டலாகக் கேட்பதும் நடக்கிறது.  இப்படி மூக்கும், முழியுமான ஒரு அம்சத்தைச் சற்று அருகில் சென்றுதான் பார்க்கலாமே..

கேலிச் சித்திரக்காரர்களுக்கு அல்வா சாப்பிட்ட மாதிரியான அன்பர் தான் நமது ரசனைச் செம்மல் முனைவர் மூக்கர். சுவாசத்தின் நுழைவாயில் அவர். காற்றின் தட்பவெப்பத்தைத் தேவைக்கேற்பத் தகவமைத்து - அதாவது சூடென்றால்  தணித்து, குளிர்ச்சி என்றால் சூடேற்றி ஒரு மாதிரி ஏர் கண்டிஷன் வேலையைச் செய்து உள்ளே அனுப்பி வைப்பவர். அடையாள அட்டை இல்லாத தூசு தும்புப் பேர்வழிகளை வெளியே நிறுத்தித் துரத்தி நுரையீரல் மாசுபடாது காப்பவர். அண்டை வீட்டுக்காரன் (திருவாளர் வாய் ) சாப்பிடும் உணவை வாசம் பிடித்துப் பார்த்து  'நல்லது .....நடக்கட்டும், நடக்கட்டும்' என்று பரிந்துரைக்கும் வேலை வேறு இவருக்கு.

நூற்றுக் கணக்கில், ஆயிரக் கணக்கில் விதவிதமான வாசனையை நுகர்ந்து பார்க்கும் திறனுள்ளது நமது நாசி.  நம்மைவிட நாய்கள் பத்து மடங்கு அதிகம் நுகரும் தன்மை கொண்டுள்ளதால்தான் காவல் துறையில் அதற்கு முன்னுரிமை. (வயதான பிறகு பென்ஷன் வேறு!).

அடிக்கடி சளி பிடித்தாலோ, பொடி போடுவதாலோ இந்த நுகர்வுத் திறன் பாதிப்படைகிறது. பொடி வச்சுப் பேசறதா நினைத்தாலும் பரவாயில்லை, இந்தப் பொடி விஷயத்தைக் கைக்கொள்ளாமல் இருப்பது நல்லது.  மூக்கின் உட்புறங்களை அத்தனை எரிச்சலுக்கு ஆட்படுத்துகிறது.  புகை பிடிக்கிற அன்பர்களும், நுரையீரலை எட்டும் முன்பே மூக்கின் துவாரங்களில் இந்தப் புகை எவ்வளவு சேட்டை செய்கிறது என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும்.

அமிர்தாஞ்சன், விக்ஸ் போன்ற தவிர்க்கவேண்டிய தைலங்களை ஏதோ சாப்பிட்டவுடன் வெற்றிலை பாக்கு போடுவது மாதிரி அன்றாடம் படுக்கப் போகுமுன் தடவிக் கொள்பவர்களுக்கு நுகரும் தன்மை பாதிப்பதோடு, வேறு பாதிப்புகளும் நேரும்.

நுகர்தல் எத்தனை அவசியம் என்பது சமையல் வாயு கசிவு, கெட்டுப் போன உணவு, வீட்டில் எங்கோ மூலையில் எலி ஏதாவது செத்துக் கிடப்பது போன்ற தருணங்களில் தெரியும். உடலின் சுரப்பிகள் வெளிப்படுத்தும் வாசத்தை மூக்கு நுகர்ந்து அறிகிறது.  தாய்க்கும், குழந்தைக்கும் அந்த வாசப் பிடிமானம் பரஸ்பரம் தெரியும் என்று சொல்லப்படுகிறது. (விதிவிலக்கு - அவ்வை ஷண்முகி :அப்பாவை வாசனை பிடித்துச் சொல்லிவிடும் குழந்தை!).  ஒவ்வொரு உடலுக்கும் வெவ்வேறு வாசனை தனித்துவமாக இருப்பதாலேயே மோப்ப நாயால் திருடனைக் கவ்விப் பிடித்துவிட முடிகிறது.

இப்படியான வாசனை நுகரும் திறனை, பூக்கள் நிறைந்த நந்தவனத்திலும், பிறந்த பச்சைக் குழந்தையைக் கொஞ்சியும் இயற்கைக் கொண்டாடியாகப் பரிசோதித்துக் கொள்ளலாம்.  தேவையற்ற வாசனை ஸ்பிரே அடித்து மூக்கின் நோக்கத்தையே அழிக்க வேண்டாம்.  புத்துணர்ச்சி தருகிறது என்று உடலிலும், உடையிலும், அறையிலும் அதை ஏதோ மந்திர நீர் தெளிப்பது மாதிரி அடித்துக் கொள்வது நமது உடலின் மீதுள்ள கண்ணுக்குப் புலப்படாத பல்லாயிரக்கணக்கான நுண்ணுயிர்களுக்கும் சேதம் ஏற்படுத்துகிறது.  நிறைய ஒவ்வாமையை ஏற்படுத்துகிறது.   துர்நாற்றத்திற்குக் காரணமானதை அகற்றாமல் செயற்கையாக நம்மைச் சுற்றி நறுமணம் (?) கமழ வைத்துக் கொள்வது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்கிற வேலை.  சுத்தமான தலைக் குளியல் போடாமல் தலையில் அழுக்கு  சேர விட்டுவிட்டு, அப்புறம் தலையை வாரிய சீப்பை எடுத்து அதைச் சுத்தம் செய்கிற வேலை மாதிரி இது!

உள்ளபடியே நல்ல வாசனை என்ற பொருள் படும் நாற்றம் என்ற சொல்லை மோசமான வாசனைக்கானதாகப் புழக்கத்தில் மாற்றிவிட்டார்கள்! (அது சரி, புரட்சி என்ற சொல் படும்பாடு கொஞ்சமா நஞ்சமா..).  நாற்றம் தாங்காமல் மூக்கைப் பொத்திக் கொண்டு போகிறோம்.  நீண்ட நேரம் மூக்கை மூடி வைக்கவும் முடியாது.  அதற்கான காரணத்தைத் தேடி சரி செய்யவேண்டும். மலக் குழிக்குள் நின்று (இந்த வரியை வாசிக்கும்போதே அருவருப்படைவோர் ஏராளம் இருப்பர்..) வேலை செய்வோரையும், பாதாள சாக்கடை அள்ளுவோரையும் காணும்போதே மூக்கைப் பொத்திக் கொள்வது மட்டுமல்ல, இதெல்லாம் அநியாயம், மனிதக் கழிவை ஏன் இன்னொரு மனிதர் சுமக்க வேண்டும், மனிதர் ஏன் இந்தச் சகதியில் இறங்க வேண்டும் என்று கேட்காமல் நமது வாய்களையும் அல்லவா பொத்திப் போகிறோம்?

பரவலாக அறியப்படும் போதைப் பொருள்கள் மட்டுமல்ல, இப்போதெல்லாம் குழந்தைகளது உடல் நலத்தை பாதிக்கும் செயற்கை வாசமூட்டிய அழிப்பான்கள் அல்லது சிலவகை கோந்து, பசை பொருள்கள் குறித்தும் எச்சரிக்கை கொள்ள வேண்டியிருக்கிறது.  குறிப்பிட்ட வாசனையின்பால் ஈர்க்கப்பட்டு குழந்தைகள் அவற்றை திரும்பத் திரும்ப எடுத்து மோந்து பார்ப்பது, அந்தப் பொருள்கள் கிடைக்காத போது கவனம் சிதறவோ, படிப்பில் அல்லது உணவில் அக்கறை அற்று அலைபாயவோ காரணமாகக் கூடும் என்று சொல்லப் படுகிறது.  விக்ஸ், அமிர்தாஞ்சனம் போன்ற பொருள்களின் தொடர் உபயோகம் கூட இந்த மாதிரி ஒரு போதை வடிவம் தான்.

யார் யாருக்கு எப்படி மூக்கு அமைகிறது என்பது அவரவர் உடல்வாகு.  அதைப் பெருமையாகக் கொண்டாடிக் கொள்ளலாம். தேவனின் 'துப்பறியும் சாம்பு'வை அந்த மூக்கில்லாமல் யோசித்துப் பார்க்க முடியுமா... மூக்கினுள் குருத்தெலும்பு சற்றே வளைந்திருந்தால் (SEPTAL DEVIATION), பெரிய பாதிப்பில்லை எனில் அதைக் குறித்த கவலை வேண்டாம். மூக்கின் மீதோ, அருகிலோ பருக்கள், சின்னஞ்சிறு கட்டிகள் தோன்றினால் அதைக் கிள்ளிப் போடவேண்டாம்.  தொற்றுக் கிருமி பரவ வாய்ப்புள்ள இடம் அது.  மூளை வரை பிரச்சனை போகக் கூடும். 

பொதுவாக பயன்பாடுள்ள பொருளில் அதிகம் சட்டென்று தூசி படியாது...ஆனால் மின்விசிறியின் கதை வேறு. அதிகம் சுழலாத மின்விசிறியை விட, சுழன்று கொண்டே இருக்கும் மின்விசிறியில் அதிகம் அழுக்கு படிந்திருப்பதைப் பார்க்கலாம். மின்விசிறியின் நேரே இருப்பது போல் கிழே படுக்கக் கூடாது.  தூசும், மாசும் நேரே நமது மூக்கை இலக்கு வைக்கும். எதற்கும் அடிக்கடி மின்விசிறியைத் துடைத்து விடுவதும், ஒட்டடை அடிப்பதும் நல்லது...(இப்படி எழுதினால் தானே சிண்டு முடிய வசதியாக இருக்கும்!).

தன்னைச் சுற்றியுள்ள இருவீட்டார் செவிகளைப் போலவே, மூக்கும் தன்னைத் தானே சுத்தமாக வைத்துக் கொள்ளத் தெரிந்திருப்பது. சிந்தனைக்கு அடையாளமாக மூக்கில் விரலை நுழைத்து நோகடிக்க வேண்டாம்.  அத்து மீறி நுழையும் வெளியாள் எவரையும் ஒரு துருத்தி மாதிரியாகச் செயல்பட்டு வேகக் காற்றாக வெளியேற்ற உடலுக்குத் தெரியும். வராமல் பாடுபடுத்தும் தும்மலை வரவேற்கிறேன் என்று சொல்லி துணி நுனியைத் திணித்து எதிர்த் தாக்குதல் தொடுக்க வேண்டாம். 

வழி மாறி வேறு தெருவில் நுழைவது மாதிரி சிலநேரம் உணவுப் பொருள் மூச்சுக் குழலுக்குள் நுழைந்தால் புரையேறும்...ஒன்றும் கவலைப்பட வேண்டியதில்லை... ஈவிரக்கமின்றி வெளியேற்றப்பட்டுவிடும்..

சளி, தும்மல் போக்க சாதாரண நீராவி பிடித்தால் போதும்.. மருத்துவர் ஆலோசனை இன்றியோ, அவர் சொல்லும் காலத்திற்கு அதிகமாகவோ சொட்டு மருந்தெல்லாம் தொடர்ச்சியாகப் போட்டுக் கொண்டே வந்தால், மூக்கினுள் இருக்கும் மெல்லிய சவ்வுப் படலம் பாதிப்புறும்.  குழந்தைகள் இரவில் வாயைத் திறந்து சுவாசித்துக் கொண்டிருந்தால் மூக்கில் எதோ அடைப்பு இருக்கிறது என்று பொருள்.  உரிய மருத்துவ ஆலோசனை பெறவேண்டியது அவசியம்.  வாய் வழியே தொடர்ந்து சுவாசித்தால் பல்வரிசை முன்னோக்கித் துருத்திக் கொள்ள நேரும்.

மூக்கைச் சிந்துவோர் மற்றும் உறிந்து கொள்வோர் இயக்கத் தொண்டர்களுக்கு ஒரு சிறப்பு கவன ஈர்ப்பு: மூக்கின் ஒரு பக்கத்தை அடைத்துக் கொண்டு இன்னொரு பக்கத்தின் வழியாக மட்டும் அந்தச் சேவையைச் செய்யவும்.... இல்லாவிடில் சளி போய் காது பாகத்தில் அடைத்துக் கொண்டுவிடவும், அதன் தொடர்விளைவுகள் மூலம்  உங்களை வாட்டவும் நேரிடும்..

பாருங்கள், உங்கள் மூக்கு தொடங்குகிற இடத்தில் கை வைத்து  இத்தனை சுதந்திரமாக எழுதியாயிற்று...அடுத்த முறை, அரசியல் கார்ட்டூன் ஏதாவது பார்த்தால் அதில் வரையபட்டிருக்கும் பிரமுகரின் மூக்கைப் பாருங்கள்..ஓவியரை நினைத்து நீங்கள் மூக்கில் விரலை வைப்பீர்கள் - அடுத்தவருடையது அல்ல, உங்கள் மூக்கில்!

- எஸ்.வி.வேணுகோபாலன் (மருத்துவர் பி வி வெங்கட்ராமன், எம் டி (ஓமியோபதி) அவர்களது மருத்துவக் குறிப்புகளிலிருந்து)

கருத்துகள்

2 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
 1. எனக்கு ஒமியோபதி மேல் விருப்பம் கிடையாது. இதுவும் ஒரு ஏமாற்று வேலை என்றே நினைக்கிறேன்.

  சளி, தும்மல் போன்றவற்றுக்கு அலறி புடைத்துக்கொண்டு டாக்டரிடம் ஓட வேண்டாம் எனபது ஓகே. ஆனால் நுரையீரல் பழுது பட்டதற்கும், இருதயம் பழுதடைந்ததர்க்கும், அறுவை சிகிச்சை இல்லாமல் ஓமியோபதி மருந்தின் மூலம் குணப் படுத்தலாம் என்று மக்களின் மேல் திணிக்கும் இந்த ஏமாற்று வேலையை என்ன சொல்வது. ஹார்ட்-அட்டாக் வந்த ஆளை ஓமியோபதி டாக்டரிடம் காமிச்சு, 'ஹி இஸ் dead ' நு certificate வாங்கி வர நிலமையில தான் நம்மக்கள் (என் சொந்தங்களும்) இருக்கிறார்கள்.

  இன்னும் பல வியாதிகளுக்கு முழு நிவாரணம் இல்லை. எந்த வகை வியாதிகளுக்கு யாரிடம் செல்ல வேண்டும் என்று எல்லா மக்களும் அறிந்திருப்பார்கள் என்று நம்ப முடியாது.

  இந்த டாபிக்கில் இதற்கு முன்னர் நீங்க வெளியிட்ட பதிவுகளுக்கு நான் பின்னூட்டம் விடவில்லை. ஆனால் இந்தப் பதிவுகள் ஒமியோபதிக்கு ஆதரவாக இட்டுச் செல்வதாக நான் கருதுவதால், அதன் குறைபாடுகளையும் வெளிப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

  பதிலளிநீக்கு
 2. அன்பு மாதவ்

  உடல் நலக் கட்டுரைகள் தொடர்ந்து உங்கள் வலைப்பூவில் இடம் பெறுவதைப் பெருமையாகக் கருதுகிறேன். மீண்டும் மீண்டும் நன்றி உங்களுக்கு.

  அன்பர் சேது ஏதோ ஒரு வகையில் மாற்று மருத்துவங்கள் குறித்து, ஒரு வேளை, கசப்பான சொந்த அனுபவம் ஏதேனும் ஒன்றின் காரணமாக ஓமியோபதி பற்றிய கோபம் கொண்டிருக்கிறார். அது அவரது கருத்து. அதோடு முரண்படவேண்டும் என்று நிர்ப்பந்தமும் கிடையாது.

  மூன்று எளிய கருத்துக்கள்:

  முதலாவது: நான் எழுதிவரும் கட்டுரைகள் எதிலும் ஓமியோபதியை உயர்வு நவிற்சியாகவும், ஆங்கில மருத்துவத்தைத் தாழ்த்தியும் வலிய எதுவும் சொல்லப்படுவதில்லை. சொல்லப் போனால், மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்...என்பதே நமது அறிவார்ந்த மரபு. அதை மீறி நாம் படும் அவஸ்தைகளுக்கு ஏற்ற மருத்துவங்கள் எத்தனையோ உண்டு. ஆனால், உண்மையான உடல் நல அக்கறை என்பது, உள்ளத்தின் நலத்தையும் சேர்த்துப் பேசக் கோருகிறது. வாழ்க்கை முறை இன்று பல சிதைவுகளுக்கு உள்ளாகியிருப்பதையும் சேர்த்துச் சுட்டிக் காட்டச் சொல்கிறது. Dr B M Hegde என்ற அற்புதமான இதய நோய் நிபுணர் அண்மைக் காலமாக ஹிந்து நாளேட்டில் ஞாயிற்றுக் கிழமை திறந்த பக்கம் பகுதியில் இதை மிக அருமையாக விவாதித்திருந்தார். சேது அவர்களைப் போலவே நிறைய வாசகர்கள் அவர் மீது பாய்ந்தனர். ஏதோ அவர் மருத்துவமனைக்கே போகக் கூடாது என்றும், மக்கள் மருந்தே உட்கொள்ளக் கூடாது என்றும் சொன்னதாகக் கொச்சைப் படுத்தினர். புதிய தாராளமய உலகில், மருத்துவம் எத்தனை பெரிய வர்த்தகம் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அதேபோல், நாம் வாழும் முறைகள் குறித்தும் தான்! மருத்துவர் வெங்கட்ராமன் சொல்லும் குறிப்புகள் இந்த அம்சங்கள் மீது பாய்ச்சும் வெளிச்சமே என்னை ஒரு பரந்த வாசகர் பரப்புக்கு இந்த வகைக் கட்டுரைகளை எழுதத் தூண்டிக் கொண்டிருப்பது.

  இரண்டாவது, ஓமியோபதி மருத்துவத்திற்கும் எல்லா நோய்களையும் மந்திரம் போட்டுக் குணப்படுத்திவிடும் ஆற்றல் இருப்பதாக பி வி வி என்றும் என்னிடம் சொன்னதும் இல்லை. இந்தக் கட்டுரைகளில் அப்படியான அடையாளம் ஒரு போதும் தென்படாது. அறுவை சிகிச்சை ஏதோ ஆங்கில மருத்துவத்தின் பகுதி என்று நினைத்து விடவும் வேண்டியதில்லை. தேவைப்படும் போது அதைத் தடுப்பவர் உண்மையான மருத்துவர் இல்லை.

  மூன்றாவது, யாராவது ஒமியோபதியின் மீது சத்தியம் செய்து போலி விளம்பரங்கள் செய்வது அந்த மருத்துவத்தின் தவறு ஆகாது. நெறி பிறழ்பவர்கள் எந்தத் துறையிலும் முளைக்க முடியும். இன்றைய அவசர உலகம் அப்படியான ஆட்களை உரம் போட்டு வளர்க்கிறது..

  இந்த இடுகைக்கு வருகை புரிந்தவர்கள் அனைவருக்கும் புத்தாண்டு உடல் நலமிக்க, உள நலமிக்க ஆண்டாக அமைய வாழ்த்துக்களுடன்

  எஸ் வி வேணுகோபாலன்

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!