குண்டூசியால் குத்தப்படும் வண்ணத்துப் பூச்சிகள்!

school children சில நாட்களுக்கு முன்பு வந்த செய்தி இது.  அவர்கள் செய்த குற்றம், தேர்வு சரியாக எழுதவில்லையாம். பள்ளி முடிந்தவுடன், அவர்களைத் திரும்ப எழுத வைத்தார்களாம்.  மறுத்தார்களாம்.  அவ்வளவுதான்,  ஒழுக்கம் கெட்டவர்கள் என்று அந்த பத்து மாணவர்களையும் சென்னை மந்தைவெளியில் உள்ள புனித ஜோன்ஸ் பள்ளி நிர்வாகம் வெளியே அனுப்பியிருக்கிறது. சரி, அவர்கள் படிக்கும் வகுப்பை நீங்கள் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். எல்.கே.ஜி! என்ன பள்ளிகள் இவை. என்ன கல்வி இது. என்ன ஒழுக்கம் இது. என்ன உலகம் இது.

இதுபோன்ற பல பள்ளிகள் இருக்கின்றன. இதுபோன்ற ஒழுக்கத்தையே அந்த நிர்வாகங்கள் வலியுறுத்துகின்றன. ’எல்லோரும் பாஸ்’ என்னும் நற்பெயரை மாணவர்கள் அவர்களுக்கு வாங்கித் தரவேண்டும். அதுதான் பள்ளிகளுக்கான பெரும் மூலதனமே. அதன்பொருட்டு, மாணவர்களை கசக்கிப் பிழிகிறார்கள். சக்கையாகத்தான் ஒவ்வொருநாளும்  குழந்தைகள் பள்ளிகளை விட்டு அனுப்பப்படுகிறார்கள்.

குழந்தை பிறந்து மூன்று, நான்கு வயது ஆனவுடன் எல்.கே.ஜி சேர்த்து விடுகிறார்கள். பெரும்பாடு பட்டு அட்மிஷன் வாங்கி, ‘மகனே/மகளே உன் சமர்த்து’ என பள்ளிக்கு அனுப்பிவிடுகிறார்கள். கரும்பலகைகளும், ‘குட்மார்னிங் டீச்சர்’களும், பென்சில்களும், நோட்டுகளும் குழந்தைகளின் வாழ்க்கையாகி விடுகின்றன. சாயங்காலம் பள்ளி முடிந்ததும், தத்தம் மழலைகள் சொல்லும் ‘ஏ,பி,சி,டி’க்களும், ’பாபா பிளாக்‌ஷிப்’களும் கேட்டு மெய்மறந்து போகின்றனர் பெற்றோர். வாழ்க்கை பந்தயத்திற்கு குதிரைகளை தயார் செய்ய ஆரம்பிக்கின்றனர். இதுதான் இங்கே வாழ்க்கை முறையாகி இருக்கிறது.

பேசிப்பாருங்கள். அவரவர்களுக்கு ‘நியாயம்’ வைத்திருப்பார்கள். ஆனால் குழந்தைகளின் நியாயத்தை மட்டும் கேட்க நாதியில்லை. அவர்களின் கனவுகள், விளையாட்டுக்கள், தனித்தன்மைகள் எல்லாம் காயடிக்கப்படுகின்றன. பொருள் மட்டுமே முக்கியமாகிப் போன உலகத்தில் நம் சந்ததிகள், பெரும் பாரச்சுமைகளோடு வாகன இரைச்சல்களுக்கு நடுவே காலையில் ஓடிக்கொண்டு இருக்கிறார்கள். பிரம்புகள் எல்லா திசைகளிலிருந்தும் அவர்களை விரட்டிக்கொண்டு இருக்கின்றன. ‘இவர்கள் ஒழுக்கம் கெட்டவர்களாம்’

‘குண்டூசிகளால் குத்தப்பட்ட வண்ணத்துப் பூச்சிகள்’ என்று சென்ற நூற்றாண்டிலேயே சொன்ன மாண்டீஸ்வரி, இதையெல்லாம் பார்த்தால் என்ன சொல்வார்?

கருத்துகள்

14 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
 1. Damn it. இவர்களை எல்லாம் சுட்டுத் தள்ள வேணும். (இப்படி சொன்னா, உணர்ச்சி வசப்படுவதை விடுத்து அறிவு பூர்வமா பேசு என்று சொல்வார்கள்.) அப்படி யோசிச்சு யோசிச்சு ஒரு மண்ணும் கிடைக்கப் போவதில்லை. சென் ஜோன்ஸா இப்படி? நம்ப முடியவில்லை! கத்தலிக் ஸ்கூல் அல்லவா அது? இன்னும் 100 ஜீசஸ் வந்தால் கூட இவர்களை திருத்தவே முடியாது.

  கொன்வன்ட் என்றால் அன்பு, பண்பு, ஒழுக்கம் என்று போதிக்க வேண்டிய இடம். ஆனால், இப்ப உள்ள கன்னியாஸ்திரிகள் எல்லாம் சீரியல வரும் கொடுமைக்கார மாமியார்களை விட மோசம். கோவம் கோவமாக வருகிறது.

  பதிலளிநீக்கு
 2. கன்னியாஸ்திரிகளை பற்றி அனாமிகா சொன்னது உண்மை,

  ஒரு துளியளவு கூட யோசிக்காத, சுயநலம், திமிர் எல்லம் சேர்த்ந்த கன்னியாஸ்தியை சில நாள் முன்பு தான் பார்த்தேன், இவர்கள் ஜீசஸை மணாளனாக கொள்கிறார்களாம்,

  பாவம் ஜீசஸ்... இவர்களோடு எப்படி குடும்பம் நடத்தபோகிறாறொ..?>

  பதிலளிநீக்கு
 3. ”குண்டூசியால் குத்தப்படும் வண்ணத்துப் பூச்சிகள்!"
  கல்வி என்ற பெயரில் குழந்தைகளை கொடுமை தான் படுத்துகிறோம்.
  அதிலும் எல்.கே.ஜி. குழந்தைகளை ஒழுக்கமில்லாதவர்கள் என்று வெளியே அனுப்பவது என்பது... காட்டுமிராண்டித்தனம்.

  பதிலளிநீக்கு
 4. இதில் பெற்றோர்கள் செய்யும் கொடுமையையும் சேர்க்க வேண்டும். மழலையர் பள்ளியில் படிக்கும் குழந்தை 'எப்படி பண்ணுகிறான்' என்று ஆசிரியரிடம் கேட்பவர்களும், அப்போதே ட்யுஷன் வைப்பவர்களும், அதிகாலை ஐந்து மணிக்கே குழந்தையை எழுப்பி படிக்கவைப்பவர்களும் இருக்கும் வரை இப்படிப்பட்ட பள்ளிகளும், கொடுமைகளும் தொடரும்.

  பதிலளிநீக்கு
 5. வருத்தமான விசயம். பயமாக இருக்கிறது.

  என்ன செய்வது? என்ன செய்யலாம்?

  தவறாக நினைக்க வேண்டும். உங்கள் குழந்தைகளை எந்தப் பள்ளியில் சேர்த்துள்ளீர்கள்? அவர்கள் பாடச்சுமை எப்படி உள்ளது?

  அமீரகத்தில் பெரும்பாலும் குழந்தைகளைக் கசக்கிப் பிழிவதில்லை. ஆனால் நாம் கூறுவது என்ன தெரியும்களா.. Education standards are not good.

  பதிலளிநீக்கு
 6. பெற்றோர்கள் என்னதான் எதிர்பார்க்கிறார்கள்.பணம் பண்ணும் மெஷின்களாக தங்கள் குழந்தைகளை உருவாக்க நினைக்கிறார்கள்.பள்ளிகள் குழந்தைகளை தங்கள் விளம்பரத்திற்கு பயன்படுத்திக் கொள்கிறது.பேராசை பெரும் நஷ்டம் என்பது பெரியவர்கள் புரிந்துக் கொள்ளாத போது பாவம் குழந்தைகள்.

  பதிலளிநீக்கு
 7. படிக்கவே கஷ்டமா இருக்கு. எல்லோரும் மனிதத் தன்மையை மனித நேயத்தை இழந்துகிட்டே வருகிறோம். பள்ளிகூடங்களில் தண்டனை தருகிறோம்னு செய்யறது குழந்தைகள ஒரு ஆரோக்கியமான வளர்ச்சிக்கு இட்டுச் செல்லாது.

  பதிலளிநீக்கு
 8. இதுக்கு பெத்தவங்களும் முக்கிய காரணம்ங்கறத நாம மறந்திட கூடாது...

  பதிலளிநீக்கு
 9. பத்திரிக்கையில் படித்தேன்! இதுவும் ஒரு சமூக அஸ்தந்து என எடுத்துக்கொள்வார்களோ!!!?

  பதிலளிநீக்கு
 10. நானும் இச் செய்தியை பார்த்தேன். அந்த பள்ளியில் ஆசிரியர்களை அடிக்கடி மாற்றிக் கொண்டேயிருக்கிறார்கள். ராஜ்குமார் இருந்தவரை ஆசிரியர்களை நன்றாக நடத்தியதாகவும் தற்போது அவரது மகள் இந்த ஆசிரியர் இல்லையென்றால் இன்னொருவர் என்ற தொனியில் பள்ளி நடத்துகிறார். இவர் சேவை செய்வதாய் பெயர் வாங்குவதற்கு பெற்றோர்களிடம் பணம் கேட்கிறார்

  பெற்றவர்கள் எதிர்பார்ப்பு தனது பிள்ளைகள் சிறந்த கல்வி பெற வேண்டும் என்பதே. இப்போதைய சூழ்நிலையில் கல்வி என்பது சிறைக் கொடுமை மாதிரி ஆகி விட்டது.

  தாம்பரம் அருகில் இன்னொரு பள்ளி குழந்தைகளுக்கு வீட்டில் ஏதும் சொல்லி தாராதீர்கள் என வேண்டுகின்றனர். ஏனெனில் அமெரிக்க ஏற்றுமதிக்கு இப்போதே தயார் செய்கின்றனர். ஆம் அமெரிக்க நடையில் (accent) சொல்லித் தருகிறார்கள் LKG யிலிருந்து

  பெசன்ட் நகரில் புத்தகமில்லா பள்ளி மழலையருக்கு. ஆம் விதவிதமான
  பள்ளிகள்

  முடிவாக கல்வி என்பது காசுள்ளவனுக்கு மட்டுமே என்பதும் இன்னொரு உண்மை

  பதிலளிநீக்கு
 11. அனாமிகா!
  உங்கள் கோபம் புரிகிறது. ஆனால் அவர்களைச் சுட்டுத் தள்ளிவிட்டால்...? கான்வண்ட் என்றால் அல்ல, பள்ளி என்றாலே அன்பும், அறிவும் போதிக்க வேண்டிய இடம்தான். மதங்களைத் தாண்டி இவ்விஷயத்தைப் பார்ப்பது நல்லது. இந்த அமைப்புதான் பள்ளியை இப்படி அலங்கோலமாக்கி இருக்கிரது. இந்த அமைப்புதான் பெற்றோர்களை விரட்டுகிறது. ஏதும் அறியாத குழந்தைகள் வதைபடுகின்றனர். நம் கோபம் முழுவதும், கேடு கெட்ட இந்த மைப்பின் மீது குவிய வேண்டும் நண்பரே!

  பதிலளிநீக்கு
 12. வினோத்!
  உங்களது பின்னூட்டம் நாகரீகமாகவும் இல்லை, நல்ல பார்வையாகவும் இல்லை.

  பதிலளிநீக்கு
 13. அம்பிகா!
  வருகைக்கும், பகிர்வுக்கும் நன்றி.

  CLASSBIAS!
  ஆமாம், எல்லோருக்கும் பங்கிருக்கிறது.ஆனால் அவர்களை இக்கதிக்கு தவிர்க்கவே முடியாமல் எது ஆளாக்கியிருக்கிறது என்பதையும் சேர்த்து ஆராய வேண்டும்.


  ச.செந்தில்வேலன்!

  கல்விமுறை இங்கு முற்றிலுமாக மாற்றியமைக்கப்பட வெண்டிய கட்டாயத்திலிருக்கிறது. வேறுவழியே இல்லை என்ற சூ(சு)ழலில் உங்கள் குழந்தைகளையும், என் குழந்தையையும் இதற்குள் இழுத்துக்கொள்கிறது. இந்தப் பள்ளிகள், இந்தக் கல்விமுறை குறித்த பிரக்ஞை மண்டைக்குள் உறுத்திக்கொண்டு இருக்கிறது. இந்த உறுத்தலோடுதான் என் குழந்தைகளை அணுகுகிறேன்.

  பதிலளிநீக்கு
 14. அமுதா கிருஷ்ணன்!
  ஆமாம். நம் குழந்தைகள் நன்றாக இருக்க வேண்டும் என்கிற ஆசைதான் இதற்கெல்லாம் அடிப்படை காரணம். ஆனால் எந்தவிதமான சமூகத்தில், எந்தவிதமான கல்விமுறையால் என்றுதான் அவர்கள் யோசிப்பதில்லை. இங்கே நாம் ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகங்கள், பெற்றோர் என தனித்தனியே பிரச்சினைகளைப் பார்க்காமல், ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது இன்னும் இந்தப் பிரச்சினையின் ஆழங்கள் தெரிய வ்ரலாம்.  சேது!
  இதுதான் சேது! “எல்லொரும்” என்கிற பதம் மிக முக்கியமானது.

  ஸ்வர்ணரேகா!
  வருகைக்கும், பகிர்வுக்கும் நன்றி. சேது சொல்வதையும் கவனியுங்களேன்.

  ஈரோடு கதிர்!
  இது சமூக அந்தஸ்து என்று பொதுப்புத்திக்குள் யார் புகுத்தியதோ....


  வேல்முருகன்!
  விரிவாக அந்தப் பள்ளி குறித்து எழுதியிருக்கிறீர்கள்.அவர் இருந்தால், இவர் இருந்தால் என்பதை விட, எதனால் என்பது முக்கியமானது இல்லையா நண்பரே! கடசியில் சொல்லியிருக்கிறீர்களே, “ கல்வி என்பது காசுள்ளவனுக்கு மட்டுமே” என்று, அதுதான் பிரசினைகளின் ஊற்று.

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!