பத்தாண்டு கால நாவல்கள் குறித்த வாசகக் குறிப்புகள் – 11




ழுத்தில் இறுதிசெய்யப்பட்டவை மட்டுமே வரலாறு என்றிருந்த நிலையை பின்காலனிய காலத்துச் சிந்தனைகள் கலைத்திருக்கின்றன. பாட்டிகளின் குரல்வளையில் இருந்து துடித்து வெளியேறிய காத்திரமான சொல்லுக்குள் மொழியின் அதிகாரத்தை முறிக்கும் வல்லமை மிகுந்திருப்பதை பின் நவீனத்துவக் கதையாடல்கள் உலகெங்கும் உணர்த்திக் கொண்டிருக்கின்றன. எனவே தான் புறந்தள்ளப்பட்டவர்கள், வரலாற்றுப் பக்கங்களில் இடமற்று பிரதிகளுக்கு வெளியே அவரவர் போக்கில் நடமாடித் திரிந்தவர்கள், ஒடுக்கப்பட்டுக் கிடந்தவர்கள், எங்கிருந்தோ வந்தவர்கள் என நம்ப வைக்கப்பட்டு விளிம்பின் வெளிக்கும் வெளியே தள்ளப்பட்டவர்கள் வரை அவரவர் தங்களின் கதைகளை சொல்லத் துவங் கினர். கருப்பு பிரதிகள் எனவும், விளிம்பின் கதையெனவும் சொல்லப்பட்டுக் கொண்டிருக்கும் இப்பிரதிகளெங்கும் மனித வாதைகளும், துயரங்களும், சாகசங்களும், நம்பிக்கைகளும் மிகுந்திருப்பதை எவரும் வாசித்துணரலாம்.


காகிதங்களும், கணினித்திரையும் அற்ற காலத்தின் ஞாபகங்கள் மூளை யின் அடுக்குகளில் ஆழப்பதியும் ஆற்றல் பெற்றவையென்பதை யாவரும் அறிவோம். தொலைபேசிகள் மட்டும் இருந்த நாட்களில் குறைந்தது முப்பது பேரின் எண்களாவது யாவரின் மனதிற்குள்ளும் சேகரமாகியிருந்தன. கைபேசியின் வருகை தனக்கு விருப்பமானவரின் எண்ணைக் கூட ஞாபக அடுக்குகளில் பத்திரப்படுத்த இயலாத பலவீனத்தையே எல்லோருக்குள்ளும் ஏற்படுத்தியிருக்கிறது. அப்படியானால் மொழி அறியா காலத்தின் வழிகளும், வேதனைகளும் பத்திரமாக செதில், செதிலாக சேகரமாகித்தான் கிடக்கும். சேகரமான தன் மூதாதையரின் ஞாபகங்களை எழுத்துப் பிரதியாக்கிட முனைகிறவர்களைப் போலவே அர்ஷியாவும் தன்னிலிருந்தே எழுதிப் பார்த்திருக்கிறார். தன்னுடைய மூதாதையரின் கூறுகையைப் பின்புலமாகக் கொண்டு தாவூது எனும் கஸிதே கவிஞனின் கதையை நாவலாக்கித் தந்திருக்கிறார்.


மலைப்பாம்பென நீண்டு துயிலும் மதுரையின் ஞாபகங்களின் ஒரு செதிலாயிருக்கிற இஸ்மாயில்புரத்தைச் சேர்ந்த உருது முஸ்லிம்களின் கதையிது. இஸ்மாயில் குறித்த புனைவுகளும் கூட விதவிதமாக அடுக்கப்பட்டிருக்கிறது. ஆதிப்பெரியவரான இஸ்மாயில் தாசில்தார். மீனாட்சியம்மன் கோவிலின் திருப்பணிக் குழுவில் இருந்தவர் என்பது, மதம் கடந்த அறச்செயல்பாட்டில் மனிதர்கள் கூடிப் பணி செய்திருக்கிறார்கள் என்பதன் அடையாளம். ஹைதர் அலியின் படையில் வந்த குதிரை வீரன், காயம்பட்டதால் மதுரையில் தங்கி இஸ்மாயில் தாசில்தாராக ஆகிப்போனார் என்பதை விட, வைகைப் பேராற்றின் எழிலில் தன்னையிழந்து அங்கேயே தங்கி, ஆதரவற்ற பெண்ணை மணந்து தன் குலத்தை செழிக்கச் செய்தவர் எனும் புனைவே அர்ஷியாவைப் போலவே எல்லோருக்கும் பிடித்ததாக இருக்கக்கூடும். ஆனால் இந்த நாவலின் பின்புலமான இஸ்மாயிலின் கதையில் எனக்கு முக்கியமாகப்படுவது பெண் சொத்துரிமை குறித்து அவருக்கு இருந்த நேர்மையும் தனித்த செயலுமே.


இஸ்மாயில் தாசில்தாருக்கு ஏழு ஆண்பிள்ளைகளும், ஒரு பெண்பிள்ளையும் பிறக்கிறார்கள். தன் வாழ்வின் கடைசிநொடியில் தான் சேர்த்து வைத்த ஆஸ்தி, பாஸ்தி அத்தனையையும் இரண்டு பங்காகப் பிரிக்கிறார். ஒரு பாதியை மகளுக்கும், மீதமுள்ள அரைப்பங்கை ஏழாக மகன்களுக்கும் பிரித்துத் தருகிறார். எனவே தான் இஸ்மாயில் தாசில்தாரின் குடும்பப் பெயராக ஏழரைப் பங்காளி வகையறா எனும் பெயர் நிலைபெற்று விடுகிறது.

 
ஏழரைப் பங்காளி வகையறாவின் தலைமுறைக் கதைக்குள் நாவல் பயணிக்கவில்லை. அவற்றில் கஸிதே கவிஞனான தாவூதின் வாழ்வின் வழியாக வாழ்ந்து கெட்டழிந்த ஒரு குடும்பத்தின் கதையாக கட்டப்பட்டிருக்கிறது ஏழரைப்பங்காளி வகையறா எனும் அர்ஷியாவின் முதல் நாவல். நாவல் நிகழும் புலமென உருது முஸ்லிம்களின் வாழ்விடம் இருந்தபோதும் நாவலுக்குள் இயங்கும் மொழியாலும், வாழ்வின் நுட்பங்களாலும் பொதுத் தன்மையையும் அடைவதை வாசகன் நிச்சயம் உணர்வான். மனித மனங்களுக்குள் விரவிக்கிடக்கும் சூழ்ச்சி, காமம், வஞ்சம், காத்திருந்து பழிதீர்த்தல், குரூர மனங்களுக்குள்ளும் கூட தேங்கிக்கிடக்கும் அன்பின் துளி, பற்றற்று இயற்கையில் இயைந்து கிடக்கும் மனிதம் என ஆழங்களில் தேங்கிக் கிடக்கும் மனித குணாம் சங்களை தரிசித்துக் கடப்பதால் தத்துவத்தின் கலைவடிவமே நாவல் என்பதை உணர்த்தும் கதையாடலாகி யிருக்கிறது ஏழரைப்பங்காளி வகையறா. தாவூத் ஒ குத்தூஸ் எனும் இரட்டை எதிர் மனநிலை மனிதர்களின் கதையென நாவல் வாசிக்கப்பட்டால் நல்ல வன் அப்பாவியாக ஏமாந்த சோணகிரி யாக இருப்பதும், கெட்டவன் தந்திரத் தாலும், சூழ்ச்சியாலும் நம்பியவனை வீழ்த்துபவனாக இருப்பான் என்று நேர்கோட்டு வாசிப்பில் வாசித்தறியவும் நாவலுக்குள் வாய்ப்பிருக்கிறது. ஒற்றைத் தன்மையிலான வாசிப்பு அப்படியான இடத்திற்கே வாசகனை அழைத்துச் செல்லும். வேறு எந்த இலக்கியவகைமையையும் விட நாவல் பன்முக வாசிப்பையே வாசகனிடம் கோருகிறது. அப்படி வாசிக்காவிட்டால் நம்முடைய கவனத்திற்கு சித்ராவாக மாறிய குல்சும் வராமலே போய்விடுவாள். கணவன் சிறைக்குப் போனப் பிறகு அரிசி ஆலை முதலாளியிடம் அடைக்கலமாகி, பின் கணவனாலேயே படுகொலை செய்யப்பட்ட இஸ்லாத்திற்கு மாறிய முரட்டுப் பெண்ணை வாசகன் அறியச் சாத்தியமில்லை.


ஏழரைப் பங்காளி வகையறா தாவூதின் கதையோ நல்லதங்காளைப் போல தன் பெண்டு, பிள்ளைகளை எல்லாம் அழைத்துக் கொண்டு ஊரை விட்டுப் போகிற ஆபில்பீயின் கதையா. பத்துப் பிள்ளைகள் அவளுக்கு. பெண்கள் இச்சையை எழுதிடக் கிடைத்த வெற்றுக் குறியீட்டு அடையாளம் ஆபில்பீ. தாவூதிற்கு வாழ்க்கைப்படுவதற்கு முன் அவளுக்குச் சொல்லப்படுகிறது மகாராணியா வாழலாம் என. அப்படித் துவங்கிய வாழ்வுதான். ஆனால் அப்படித் தொடரவில்லை. அடுத்த வேளை சாப்பாட்டிற்கு சொந்தக்காரர்களின் வீட்டில் எடுபிடி வேலைசெய்பவளாகவும், தண்ணீர் சிந்தி சேகரிப்பவளுமான வாழ்வினை வாழ வேண்டிய நிர்பந்தத்தை அவளுக்கு வழங்கியது எதுவென்று நானும் யோசித்துக் கொண்டிருக்கிறேன். நீங்களும் யோசியுங்கள்.

 
வாழ்ந்து கெட்ட குடும்பங்களின் வலிகளை இலக்கியங்களின் பக்கங்கள் தோறும் வாசித்தறிந்த வாசகனும் தடுமாறிப் போவான் - ஏழரைப் பங்காளி வகையறாவுக்குள் பதிவு செய்யப்பட்டிருக்கும் வாழ்க்கையின் சகிக்க முடியாத பகுதிகளை பார்த்து. தான் கட்டி ஆண்ட நிலமெல்லாம் அவற்றின் மதிப்பறியாத நிலையிலேயே தாவூதை விட்டுப் போய்விடுகிறது. ஊரின் பொதுச் சொத்தை நிர்வகிக்கும் குத்தூஸ் சூழ்ச்சி செய்து, தன் தம்பி முறைக்காரனான தாவூதை நிர்கதிக்குள்ளாக்குகிறான். வறுமையின் உச்சம் வீட்டுப் பண்டபாத்திரங்களை விற்பது தான். அதிலும் பள்ளிக்கூடம் போகிற தன் மகனின் மதியச் சாப்பாட்டையும் கூட விற்றுவிடுகிறான் தாவூத். நாவலுக்குள் வருகிற தாவூதின் மகனான உசேன், மத்தியானச் சாப்பாட்டிற்காக என்ன செய்வது என்று தவிக்கிற தவிப்பும், பள்ளிச் சூழலும், காவியத் தன்மையில் நாவலுக்குள் பதிவாகியிருக்கிறது.


ஆயிரம் தவ்ஹீதுகள் முளைத்து வைதீக இஸ்லாத்தை பரப்புரை செய்தாலும், இந்த மண்ணிற்கான வாழ்வியல் முறைகளில் இருந்து தமிழக இஸ் லாமியர்களை அகற்றிடமுடியாது என்பதை நாவலின் பலபகுதிகள் சொல்லா மல் சொல்கின்றன. எனவேதான் குழந்தை பொறந்ததும் அவுலியாக்களை ஓதிடச் சொல்வதும், புள்ளையை தர்ஹா வாசலில் போட்டு பகஷ் (அர்ப் பணிப்பு) செய்வதும் தமிழக இஸ்லாமியர் வாழ்வெங்கும் நடந்து கொண்டே யிருக்கிறது. நாவலுக்குள் காட்சிப்படுத்தப்படும் தெற்குவாசல் மாவ்சுவானி தர்கா சந்தனக் கூடுத்திருவிழா மிக முக்கியமான பதிவாகும்.


சந்தனக் கூடு திருவிழாவின் மீதான ஈர்ப்பு இஸ்லாமிய பெண்களுக்குள் ஏற்பட்டு நீடித்திருப்பதற்கான காரணத்தை எளிய மொழியில் நாவல் சொல்லிச் செல்லும் இடங்கள் முழுக்க அவர்களின் உளவியல் செயல்பாட்டின் சாட்சியாக வெளிப்படுகிறது. பெண்களின் உலகமது அங்கே எப்போதும் திட்டிக் கொண்டேயிருக்கும் தந்தையில்லை. புத்திசொல்லிக் கொண்டேயிருக்கும் அம்மாக்கள் கூட தங்களைக் கண்டுகொள்வதில்லை. அவரவர் சேத்திக்காரிகளோடு சிரித்துப் பேசி மகிழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இளம்பெண்களின் மாய உலகமாக விரிகிற இரவின் கதையே சந்தனக் கூடுதிருவிழா என்பதை நான் ஏழரைப்பங்காளி வகையறாவுக்குள்தான் உணர்ந்தேன். காதலர் தினக் கொண்டாட்டங்களை எதிர்த்துக் கலகம் செய்யும் காவிகளும், சந்தனக்கூடு திருவிழாவை நிறுத்த வேண்டும் எனச் சொல்லிக் கொண்டிருக்கும் தவ்ஹீதுகளும் ஒற்றைப் புள்ளியில் சந்தித்துக் கொள்ளும் சாத்தியங்கள் நிறைய இருக்கிறது. இந்து மத அடிப்படைவாத கலாச்சார காவலாளிகளின் மனம் ஒன்று தான்; அவர்களின் பெயர்கள் தான் வேறுவேறாக இருக்கிறது.


நாவலின் பலமே புறத்திற்குச் சமமாக அகத்திற்குள்ளும் பயணிக்கும் அதன் தன்மைதான். பாஜான் பலவீனன், தன் சொத்து முழுவதையும் சூரையாடிப் பதுக்கிக் கொண்ட தன் மச்சினனிடமே எடுபிடி ஆளாகிப் போகிறான். நாவல் முழுக்க வசவுகளையும், மிதிகளையும் வாங்கிக் கொண்டேயிருப்பவன், தனக்கான சந்தர்ப்பம் கிடைக்கும்போது கச்சிதமாக காரியமாற்றுகிறான். குத்தூஸ் காறி உமிழ்ந்த எச்சிலையும், துப்பிய பீடிகளும் சேகரிக்கப்பட்ட பாத்தி ரத்தை பாஜான் தெரிந்தே அவன் தலையில் கொட்டுகிறான். இருட்டில் சிறுநீர் கழிக்க உட்கார்ந்திருக்கும் குத்தூஸின் மீது உருட்டுக்கட்டையைக் கொண்டு நாலு சாத்து சாத்தவும் நினைத்திருப்பான் என்றுதான் எனக்குப்படுகிறது. நாவலுக்குள் ஏனோ அது நிகழவில்லை.


தாவூதின் பார்வையிலே நமக்குள் கடத்தப்படும் குல்சும் தனித்தன்மையிலான பதிவு. தன் அழகில் மயங்கிக் கிடப்பவள். தேடிவந்து காதலைச் சொன்னவுடன் சகலவற்றையும் கடந்து வெளியேறுகிறாள். இஸ்மாயில்புரமே தேடுகிறது. அவர்களைத் தேடி தாவூதும் திசைவழிகளெங்கும் அலைகிறான். அவள் திருப்பதிக்குப் போய் தாலிகட்டி சித்ராவாகி வாழும் விஷயம் ஹைதராபாதில் விரிகிறது இவன் முன். கடைசி வரை யாரிடமும் பகிர்ந்து கொள்ளவில்லை. சித்ராவின் தந்தை மஸ்தானிடமும் சொல்லவில்லை. அப்படித்தான் இருப்பான் தாவூத். மனித மனங்களுக்குள் வற்றாது நிறைந்திருக்கும் அன்பெனும் அதிரூபம் வெளிப்பட்டுக் கொண்டேதான் இருக்கிறது. அவற்றிற்கு மதங்களையும், இறுகிய பண்பாட்டுச் சிக்கல்களையும் எளிதில் எதிர்கொள்ளும் பேராற்றல் நிறைந்திருக்கிறது.
நாவல் வாசக மனதிற்குள் கதைகளைக் கடத்தும் கருவியல்ல. மனதின் ஆழங்களுக்குள் பொங்கிப் பெருகும் அறம், கருணை, அன்பு, இரக்கம், கோபம் ஏன் அவனி(ளி)ன் வக்கிரத்தையும் கூட நினைவூட்டியபடிதான் கடந்து கொண்டிருக்கிறது நாவல்கள் உலகெங்கும். அப்படித்தான் கடத்துகிறார்கள் நமக்குள் மனதின் நுட்பங்களை ஏழரைப் பங்காளி வகையறாக்கள்..
ம.மணிமாறன்

கருத்துகள்

3 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. ஃஃஃஃஃநாவலின் பலமே புறத்திற்குச் சமமாக அகத்திற்குள்ளும் பயணிக்கும் அதன் தன்மைதான். ஃஃஃஃ

    பதிவை படிக்கும் போதே தெரிகிறது..

    அன்புச் சகோதரன்...
    மதி.சுதா.
    எனைக் கவர்ந்த கமல் படம் 10

    பதிலளிநீக்கு
  2. template மாற்றியதுர்க்கு நன்றி. உடனே திறக்கிறது, அழகாவும் உள்ளது.

    பதிலளிநீக்கு
  3. அருமையான இருக்கு... புதுச் சட்டையும் நல்லாயிருக்கு.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!