கருப்பு நிலாக் கதைகள் - காமராஜ்

ருமைத் தோழன் காமராஜ்,  தனது வலைப்பக்கத்தில் எழுதிய கதைகளையும், இன்னும் சில கதைகளையும் சேர்த்து தனது இரண்டாவது தொகுப்பாக வம்சி மூலம் கொண்டு வர இருக்கிறான். முன்னுரை எழுதித் தர கேட்டான். சந்தோஷமென்றாலும் தயக்கமாய் இருந்தது. அவனது முதல் சிறுகதை தொகுப்புக்கும் நான்தான் எழுதினேன். வேறு யாரிடமாவது வாங்கலாமே எனச் சொல்லிப் பார்த்தேன். ஏனோ பிடிவாதமாக இருந்தான். எனக்குப் பட்டதை இப்படி எழுதிக் கொடுத்திருக்கிறேன்.


கால காலமாக வலிகளையும், கதைகளையும் தங்களுக்குள் அடைகாத்து கொண்டிருக்கும் மனிதர்களை நினைவுகளிலிருந்தும், பார்வைகளிலிருந்தும் சேகரித்து, அவர்களை காண்பிக்கிற எழுத்து காமராஜுடையதாக இருக்கிறது. பலரும் அறியாத, அறிந்தாலும் தள்ளிவைக்கிற, இந்த மண் பார்த்த வாழ்க்கையை, எழுத்தில் சொல்ல முனைகிற கவனம் கொண்டதாகவும் இருக்கிறது. எல்லோருக்கும் அப்படியேத் தெரியட்டும் என்கிற தாகத்தோடு அவைகளைச் சொல்ல ஆரம்பிக்கிற கதை சொல்லியைப் பார்க்க முடிகிறது. பச்சை தானியங்களில், சேற்றில், அடுப்பின் வெக்கையில், புழுதியில், கம்மாய்த் தண்ணீரில் இருந்து கிளம்பும் வாசத்தையெல்லாம் குழைத்தெடுத்து வார்த்தைகளாக்கிப் பார்க்கிறான். அவைகள் சிந்திச் சிதறுகின்றன. வாசகன் அவைகளைச் சேகரித்துப் பார்க்கும்போது வலிகளும், கதைகளும் புலப்பட ஆரம்பிக்கின்றன.

மருளாடியின் மேலிறங்கியவர்கள் மனிதர்களும், கடவுள்களுமாய் இருக்கின்றனர். மனிதர்களால் பாவமானவள், கடவுளால் புனிதமாகிற விந்தையும், விசித்திரமும் அறிய முடிகிறது. “நா ஒங்கம்மா போல” என முன்பின் தெரியாத ஒருவர் சொன்னதும் கண்ணில் நீர் கோர்க்கும் சாலமுத்துவின் கதை வெள்ளாவியின் மணமும் சூடும் கொண்டது. ரயில் பயண ஆசையில் புறப்பட்டவன், டிக்கெட்டுக்கு காசு குறைந்து பிடிபட, கசக்கிற பால்யத்தின் முதல் ரயில் தடதடக்கிறது. களத்து வேலை செய்பவர்கள் அரண்மனைக்காரர்களாய் உருமாறிப்போகும் நாடக ஆசையில் எளிய மனிதர்களின் கலை வேட்கையும், நுட்பமான விரக்திகளும் சேர்ந்திசைக்கின்றன. பள்ளிக்கூடத்திலிருந்து எல்லோருடனும் கொடைக்கானலுக்கு டூர் போவதற்கு சினிமா தியேட்டரில் முறுக்கு விற்று காசு சேர்க்கிற பேச்சிமுத்து நம் அருகில் வந்து நிற்கிறான்.

சாதிய கட்டுமானத்தின் அடியாழத்தில் இருப்பவர்களின் பக்கமே காமராஜின் சிந்தனைகள் இருக்கின்றன. மனிதர்களை வேறுபடுத்திப் பார்ப்பதற்கு எதிரான விமர்சனங்களையும், வேதனையையும் கதைகளுக்கு ஊடே வைத்திருந்தாலும் காமராஜின் கதை மாந்தர்களும், அவர்களது மொழியும் மனசெல்லாம் அப்பிக்கொள்பவர்கள். சில கணமே வந்து போகிறவர்களாயிருந்தாலும் பால் பாத்திரத்துக்குள் வித்தை காட்டுகிற டீ மாஸ்டர்களும், பாரத்தோடு செல்லும் நிறை மாத கர்ப்பிணியும், பேரைப் பச்சைக் குத்தி வைத்திருக்கிற சின்ராசுவும் நம்மை அலைக்கழிக்கிறார்கள். தொலைந்துபோன நம்முடைய நிலப்பரப்புகளில் வாழ்வின் ருசியும் பசியும்  விளைந்து கிடைக்கின்றன. சம்பாரி மேளமும், பாடல்களும் நிலாவிலிருந்து இறங்கி ஊருக்குள் நிறைகின்றன.

இந்தத் தொகுப்பிலெங்கும் பிள்ளைப்பிராயத்தின் விம்மல்கள் கேட்டுக்கொண்டே இருக்கின்றன. அவர்களின் சந்தோஷங்களில் கூட இனம்புரியாத சோகம் ஒன்று மீட்டியபடி இருக்கிறது. ஏக்கம் சுமந்த அவர்களின் கண்கள் வதைக்கின்றன. வருத்தப்பட்டு பாரம் சுமக்கிற அவர்களின் காலத்தை எல்லோருக்குமான அப்பமும், திராட்சை ரசமுமாகத் தருகிறான் எழுத்தாளன்.

தொகுப்பு சிறப்பாய் வரட்டும். தோழன் காமராஜுக்கு நமது வாழ்த்துக்களைத் தெரிவிப்போம்.

Comments

15 Comments

வருகைக்கு நன்றி.

கமெண்ட் செய்கிறவர்கள் Anonymous, Name/Url, Google Account, Name/Url, Google Account மூலம் கமெண்ட் செய்யலாம்.

1) முடிந்தவரை Google Account மூலம் கமெண்ட் செய்யுங்கள்.

2) இல்லையென்றால் Name/Url மூலம், பேரை மட்டுமாவது குறிப்பிட்டு கமெண்ட் செய்யுங்கள்.

3) Anonymous மூலம்தான் கமெண்ட் செய்ய முடியுமென்றால், கமெண்ட்டில் கீழே உங்கள் பேரை தயவு செய்து குறிப்பிடுங்கள்.

நன்றி.

- தீராத பக்கங்கள்
  1. காமராஜ் அண்ணனுக்கு வாழ்த்துகள்..:-))

    ReplyDelete
  2. காமராஜ் அவர்களின் அடுத்த கதைத்தொகுப்பாவது படிக்கவேண்டும் என்ற ஆவல் எனக்கும் இருக்கிறது.. அவருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    அறிமுகப்பக்கமும், பிடித்த பதிவுகளுக்கான பக்கமும் நல்ல முயற்சி..

    ReplyDelete
  3. ஃஃஃஃஃஃவேறு யாரிடமாவது வாங்கலாமே எனச் சொல்லிப் பார்த்தேன். ஏனோ பிடிவாதமாக இருந்தான். எனக்குப் பட்டதை இப்படி எழுதிக் கொடுத்திருக்கிறேன்.ஃஃஃஃஃ

    அவர் தங்களை சரியாகப் புரிந்திருக்கிறார்...
    அருமையான முன்னுரை வாழ்த்துக்கள்..


    அன்புச் சகோதரன்...
    மதி.சுதா.
    கருத்தடை முறை உருவான கதை - contraception

    ReplyDelete
  4. ஆஹா! நண்பர் காமராஜ் அவர்களுக்கு நன்றி. மண்ணின் சுவையை நன்கு உணரக்கூடிய ஆக்கம் அவரது. உங்கள் முன்னுரை நன்றாக இருக்கிறது. தோள் கொடுக்கும் நண்பன்.

    வாடாத பக்கங்களில், ராகவனின் 'திருப்பதி ஆசாரியின் குடை'யை ஏற்றுங்களேன்.

    ReplyDelete
  5. காமராஜ் அண்ணனுக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  6. தம்பிக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. காமராஜ் அண்ணனுக்கு வாழ்த்துகள்.
    புதிய பதிவர்கள் தொகுப்பு குறித்த சுட்டிக்கு நன்றிகள் :)))

    ReplyDelete
  8. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. வாழ்த்துக்கள் *அடர்* *சிவப்பு* தோழருக்கு..

    ReplyDelete
  10. முதலில் காமராஜ் அங்கிளுக்கு வாழ்த்துக்கள்! தொகுப்பைப் படிக்க ஆவலாக இருக்கிறேன்.

    மழை பற்றிச் சொன்னது முற்றிலும் உண்மை. ஆனால் கொஞ்சம் மழை பெய்தாலே வீடு குளமாகிப் போகும் மனிதர்களைக் குறை சொல்ல இயலாது.

    //மாறி மாறி வந்தாதான் நாமப் பொழைப்போம்” என்றார். நாசமாய்ப் போக. இந்த அரசியலைப் புரிந்து என்ன செய்ய?//

    :))))))

    ReplyDelete
  11. காமு அண்ணனுக்கு வாழ்த்துகள்.

    ரொம்ப சந்தோஷமா இருக்கு காமு அண்ணா.

    ReplyDelete
  12. எல்லாம் சரிதான், வரும் தேர்தலில் சோனியாவும் அம்மையாரும் சேர்ந்தால், உங்கள் கட்சி நிலை என்ன???? சொல்லுங்கள் பார்போம்!!!!!

    ReplyDelete
  13. கார்த்திகைப் பாண்டியன்!
    நன்றி தம்பி.

    க.பாலாசி!
    இந்த தடவை தங்களுக்கு அனுப்பி அனுப்பிவைக்கச் சொல்கிறேன்.

    ம.தி.சுதா!
    நன்றி தம்பி.


    சேது!
    மிக்க நன்றி உங்கள் ஆதரவுக்கு!


    அம்பிகா!
    நன்றி.


    லஷ்மி!
    நன்றி.


    மஹி கிரானி!
    நன்றி.


    லதாமகன்!
    மிக்க நன்றி.

    காமராஜ்!
    எதற்கு நன்றி தோழனே!


    விக்கி உலகம்!
    நன்றி.

    மணீஜி!
    வாங்க நண்பரே. நலமா.

    தீபா!
    மனிதர்களை நன் குறை சொல்லவில்லை. இந்த அமைப்பையே குறை சொல்கிறேன்.


    சரவணக்குமார்!
    நன்றி தம்பி. எப்படி இருக்கீங்க?


    பொன்ராஜ்!
    இந்தக் கேள்வி ஏன் இந்தப் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் வருகிறது என்று தெரியவில்லை. இருந்தாலும் சொல்கிறேன். மத்தியில் காங்கிரஸுக்கும், பா.ஜ.கவுக்கும் எதிராக நிற்கும்.

    ReplyDelete

You can comment here