இன்று நினைவுக்கு வந்த தீபாவின் எழுத்து!

vaduப்போது தீபா ‘பளஸ் ஒன்’ படித்துக்கொண்டிருந்தாள். ஒருதடவை அம்முவோடு சென்னைக்குச் சென்றிருந்தபோது, தீபா ஆங்கிலத்தில் கதை போல எழுதிய அனுபவம் ஒன்றை படித்தேன். சொன்ன விதமும், அதில் சொல்லியிருந்த செய்தியும் சிறப்பாகவும், முக்கியமானதாகவும் இருந்தன. அதை அப்படியே சிறு திருத்தங்களோடு மொழியாக்கம் செய்து நாங்கள் நடத்தி வந்த ‘விழுது என்னும் சிறுபத்திரிகையில் (டிசம்பர் 1993) ‘வடு’ என்ற தலைப்பிட்டு வெளியிட்டோம். எழுத்தாளர்கள் பலர் கொண்டாடிய கதையாகிப் போனது அது.

எப்போதாவது நினைவுக்கு வரும்போது தீபா “அங்க்கிள், அந்த விழுதை எனக்கு அனுப்பி வையுங்களேன்” என்பாள். அவ்வளவுதான். அப்புறம் மறந்து போவாள். நானும் மறந்து போவேன். இன்று அந்தக் கதை நினைவுக்கு வந்தது. அதற்கு ஒரு காரணமும் இருக்கிறது. படித்துப் பாருங்கள்.

*

வடு

 

போன கோடை விடுமுறையில் ஒருநாள். சாயங்காலம் கடற்கரைக்குச் சென்றிருந்தேன்.

காற்றும் சிறுவர்களும் அலைகளோடு விளையாடிக்கொண்டு இருந்தனர். மனிதக்கூட்டமே கடலை பார்த்தபடி. ஓரமாய் சென்று அமர்ந்தேன். பரீட்சைகளின் புழுக்கம் அந்த நேரத்தில் முற்றிலுமாக நீங்கி அப்பாடா என்று இருந்தது. வானத்தையும், கடலையும் பார்க்கப் பார்க்க பெரிதாகி, நான் ஒரு சிறுதுளி போல உணர்ந்தேன். எல்லாம் மகிழ்ச்சிக்குரியதாய் இருந்தது.

“ஏய், வசு! இங்க வா”

திரும்பினேன். பந்து விளையாடிக்கொண்டிருந்த சிறுவன், அந்தச் சிறுமியை அழைத்தான். அவள் பதில் எதுவும் சொல்லாமல் மணலை அள்ளி அள்ளி குவித்துக் கொண்டிருந்தாள். ஐந்து அல்லது ஆறு வயது இருக்கும். உட்கார்ந்து கால்களை நீட்டியபடி வீடு கட்டிக்கொண்டிருந்தாள். அவன் அவளின் அண்ணனாக இருக்கலாம். கொஞ்சம் தள்ளி உட்கார்ந்து கடலைப் பார்க்காமல் பேசிக்கொண்டு இருந்தவர்கள் அவளின் அப்பாவும், அம்மாவுமாக இருக்கலாம். நான் நினைத்தது பிறகு சரியானது.

அவள் குவிக்க குவிக்க மண் சரிந்தது. “த்சொ.. த்சொ” என்று தானே இரக்கப்பட்டுக் கொண்டாள். விழுந்த இடத்தில் மண்ணை வைத்து பொத்தி “விழுந்திராதே... விழுந்திராதே” என்று கெஞ்சிக் கொண்டாள். வீசும் காற்றையும் மீறி அந்தப் பிஞ்சுக் குழந்தையின் முகத்தில் வியர்வைத் துளிகள். சளைக்காமல் தன் முயற்சியில் இருந்தாள். அவ்வளவு பொறுமையாக என்னால் ஒரு பணி செய்ய முடியுமா என்பது சந்தேகம்தான்.

ஒரு சமயம் அந்தச் சின்னப்பெண் என்னைப் பார்த்தாள். சிரித்தேன். சிரித்தாள். திரும்பவும் மணலோடு அவள். சுற்றிய உலகம் அவளுக்கு காணாமல் போனது. கொஞ்ச நேரத்துக்கு முன்னால் அந்த கடலும் வானமும் எனக்குத் தோன்றிய அளவுக்கு அந்த மணல் வீடு அவளுக்கு இருந்திருக்க வேண்டும். மெல்ல மெல்ல மணலில் ஒரு வடிவம் தெரிய ஆரம்பித்தது. காற்றின் திசையில் அவள் மறித்து உட்கார்ந்து மணல் சரியாமல் பாதுகாத்தாள். ஆயிற்று. கோபுரம் போல உருவாகி இருந்தது.

“வாசல்” என்றேன்.

முறுவலித்தபடியே அதன் அடியில் கவனமாய் குழிபறித்தாள். அவள் பாவாடை எல்லாம் மண்ணாகி இருந்தது. கையிலிருந்த சிறிய பிளாஸ்டிக் பொம்மையை அதன் உச்சியில் வைத்தாள். “குட்” என்றேன். மகிழ்ச்சியில் கைதட்டிக்கொண்டாள்.

பந்து உருட்டிக்கொண்டு இருந்த அவள் அண்ணனும் அதைப் பார்த்தான். “வசு, இப்ப பாரேன்” என்று அருகில் வந்து கால்களால் உதைத்தான். இத்தனை நேரமாய் பிரயாசைப்பட்டது எல்லாம் மண்ணோடு மண் ஆயிற்று. பிளாஸ்டிக் பொம்மை தூரத்தில் போய் விழுந்தது.

அதிர்ச்சியில் ஸ்தம்பித்த அந்தச் சிறுமி பெருங்குரலெடுத்து அழ ஆரம்பித்தாள். கண்ணெல்லாம் சுருங்கி, வாய் பிளந்து பரிதாபமாகிப் போனாள். காலை மாற்றி மாற்றி மணலில் உதைத்தாள். தரையில் விழுந்து புரண்டு அழுதாள். எனக்கு அந்தப் பையனைப் பிடித்து ஓங்கி அறையலாம் போலிருந்தது. அவளைத் தூக்கி சமாதானப்படுத்த முயன்றேன். அவள் அப்பாவும், அம்மாவும் ஓடி வந்தார்கள்.

“என்னம்மா... அண்ணன் உன்னை அடிச்சானா?”

“அழாதம்மா... அண்ணனை அடிச்சிருவோம்.”

அவளைத் தூக்கினாலும் திமிறித் தரையில் விழுந்து புரண்டாள். மூச்செல்லாம் இறைத்தது. தலைமுடி, சட்டை, உடம்பு எல்லாம் மண்ணாகிப் போனது.

“ஒங்கப் பொண்ணு மண்ல வீடு கட்டிட்டிருந்தா... அவன் வந்து இடிச்சிட்டான்” என்றேன்.

“அய்யய்யே... இதுக்குத்தானா.... அழாத... நல்ல புள்ளைல்ல...” அவர்கள் சமாதனப்படுத்தினார்கள்.

அவள் அண்ணன் அருகில் வந்து “அழாதே குரங்கே... இப்ப என்ன ஆன்ன ஆகிப்போச்சு? இன்னொரு வீடு நா கட்டித்தர்றேன்” என்றான்.

அவர்கள் என்ன சொன்னாலும் அந்தக் குழந்தையின் அழுகை அப்போது நிற்கவில்லை. அங்கிருக்கப் பிடிக்காமல் நடக்க ஆரம்பித்தேன். அந்த சாயங்காலம் மிகுந்த சோகத்தில் உறைந்திருந்தது.

*

ன்று டிசம்பர் 6 !
பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினம்.
சிக்கலும், சூழ்ச்சிகளும் நிரம்பிய அரசியல் சதுரங்கத்தின் பெரும் பிரச்சினையொன்றில் ஒரு குழந்தையின் பார்வையாக ‘வடு’வைக் கொள்ளலாம்.

கருத்துகள்

7 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
 1. ப்ளஸ் ஒன் படிக்கும் போது எழுதியதா? மிக அருமை. வாழ்த்துக்கள் தீபாவுக்கு.
  கதையை இப்போதைய சூழலுக்கு பொருந்தும் வெளியிட்டதும் சிறப்பு.

  பதிலளிநீக்கு
 2. :) you people,not allowing the public to forget these things...anyway good story.

  பதிலளிநீக்கு
 3. அன்பு மாதவராஜ்,

  ஆஹா... விளையும் பயிர்... கம்பன் வீட்டு...

  என்று அடுக்கடுக்காய் சொல்ல ஏதுவாய் எத்தனை இருக்கு... தீபா... ரொம்ப நல்லாயிருக்கு வாழ்த்துக்கள்

  ராகவன்

  பதிலளிநீக்கு
 4. கதை நல்லா இருக்குங்க. மிகப் பெரிய எழுத்தாளரின் மகளல்லவா! அதான் நன்கு வெளிப்படுகிறது. வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 5. நுண்ணுணர்வோடு கூடிய கதை. அதை நுண்ணுணர்ந்து கொள்ளவிடாமல் மடைமாற்றி அடிக்கும் //* இன்று டிசம்பர் 6 !
  பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினம்...//

  மணல்வீடு = கற்பனை, படைப்புநிலை; மசூதி = நம்பிக்கை, வழிநிலை.

  வாசகனாக, என் மனம் புண்பட்டதைச் சொல்லிவிட்டேன். உங்களைப் புண்படுத்துவது நோக்கமன்று. மன்னிக்க!

  பதிலளிநீக்கு
 6. மாதவராஜ் சார் : சரியான நேரத்தில்தான் வடுவை ஞாபகபடுத்தி இருக்கிறீர்கள்......

  தீபாவிற்க்கு வாழ்துக்கள்....

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!