அமைச்சர் அழகிரி எங்கே?
கோர்ட்டுக்கு வந்த நித்தியானந்தா மீது ஆத்திரத்துடன் மக்கள் செருப்பு வீசிய அன்றைக்குத்தான், ‘அமைச்சர் அழகிரி எங்கே?’ என்னும் கேள்வி இந்த நாட்டின் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் மாறி மாறி ஒலித்திருக்கிறது. அதுபற்றியெல்லாம் மூச்சு விடாமல், நமது தினகரன் பத்திரிகை நித்தியானந்தாவை மட்டும் பக்கம் பக்கமாய் செய்தி போட்டு, வெறியைத் தீர்த்துக்கொண்டது.
மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சரிடம் கேள்வி கேட்கும்போதெல்லாம், அந்தத் துறையின் இணை அமைச்சர் ஸ்ரீகாந்த் ஜெனா அவர்களே பதிலளித்துக் கொண்டு இருந்திருக்கிறார். எனவே இப்போது கேள்வி ‘அமைச்சர் அழகிரி எங்கே?’ என்பதாகியிருக்கிறது. அவரது திருமுகத்தை ஒருதடவைகூட பார்த்ததில்லை என சிலர் தெரிவித்து இருக்கிறார்கள். மதுரையில் திரும்பிய பக்கமெல்லாம் அவரே இருக்கிறார் என்பது அவர்களுக்குத் தெரியவில்லை போலிருக்கிறது.
மாநிலங்களவைத் தலைவர் மீராகுமார் ‘அவர் எங்கு இருக்கிறார் எனத் தெரியாது’ எனச் சொல்லி இருக்கிறார்.’அவைக்கு வராதது குறித்து அழகிரி எதாவது தங்களுக்குத் தகவல் அனுப்பியிருக்கிறாரா?’ என்று கேள்வி தொடர்ந்திருக்கிறது. அவைத்தலைவர் ‘அவைக்கு எந்தத் தகவலும் தெரிவிக்கவில்லை’ என எரிச்சல்பட்டு இருக்கிறார். பிரதமர் கூட வெளிநாடு சென்றால் அவைத்தலைவருக்கு உரிய தகவல் தெரிவிக்க வேண்டும் என விதி இருக்கிறது. கடைப்பிடிக்கப்பட்டும் வருகிறது. அழகிரியோ, அவர் பாட்டுக்கு மாலத்தீவுக்கு ஜாலியாக ‘டூர்’ சென்று இருக்கிறார்.
இந்த நிலையில் அழகிரி குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் மனு ஒன்று அனுப்பப்பட்டு இருக்கிறது. அதற்கு ரசாயனத்துறை அமைச்சகம் கீழ்க்கண்டவாறு தகவல்கள் தந்துள்ளதாக பி.டி.ஐ செய்தி நிறுவனம் கூறுகிறது:
அழகிரி பதவியேற்ற 6 மாதத்தில் உள்ளூர் விமானங்களில் 61 முறையும். சர்வதேச விமானத்தில் 6 முறையும் பறந்திருக்கிறார். அதற்கான மொத்த கட்டணம் 145 லட்சம் ஆகும்! அமைச்சராக அலுவலகத்துக்கு எத்தனை முறை வருகை தந்திருக்கிறார், எத்தனை அமைச்சரவைக் கூட்டங்களில் அவர் கலந்து கொண்டு இருக்கிறார் போன்ற கேள்விகளுக்கு பதில் அளிக்கப்படவில்லை.
ஒரு அரசகுடும்பத்தின் ராஜகுமாரர்களின் சண்டையைத் தீர்க்க மக்களும், மக்களின் வரிப்பணமும், நாடாளுமன்றமும் கேலிக்குரியதாகி இருக்கிறது. இந்தியா உலகத்திலேயே பெரிய்ய்ய ஜனநாயக நாடு என்று ஒரு சர்டிபிகேட் வேறு. போங்கய்யா வெங்காயம்!
நித்திய கண்டம்
(பிரமாதமாக கதைசொல்ல முடிகிறவர்கள், ஒன்று இரண்டோடு நிறுத்திக்கொள்கிறார்கள். 90களின் ஆரம்பத்தில் ’விழுது’ என்னும் சிறுபத்திரிகை நாங்கள் நடத்திய போது, அறிவொளி இயக்கத்தோடு தங்களை இணைத்துக்கொண்ட குக்கிராமத்து இளைஞர்கள் சிலரை வலிய எழுதச் சொல்லி பிரசுரித்தோம். பாலு, குணசீலன், திருப்பதி என்னும் மூன்று பேர் எழுதினார்கள். ஒரே ஒரு கதையோடு நின்றுவிட்டனர். அப்படி வெளியான ஒரு கதை இங்கு. தம்பி பாலு எழுதியது. சமீபத்தில் ஒருநாள் பேசிக்கொண்டு இருக்கும்போது கைப்பிரதியில் இன்னும் சில கதைகள் எழுதி இருப்பதாய்ச் சொன்னான். அவனைப்பற்றி இன்னொருநாள் பேசுவோம்)
நித்திய கண்டம்
லோடுக்குப் போய்விட்டு பிச்சை அப்போதுதான் வீடு திரும்பினான். உடம்பெல்லாம் புழுதி. குருத்து அவசரமாக வென்னி வைக்க ஆரம்பித்தாள். பருத்தி மாறை எடுத்து அடுப்பில் திணித்தாள். வந்த களைப்பில் சுவரில் சாய்ந்துகொண்டு குழந்தையுடன் கொஞ்சினான் பிச்சை. டவுசரில் இருந்து பீடியை எடுத்து பற்ற வைத்து ரெண்டு கன்னமும் குழிவிழ சுண்டி இழுத்தான்.
“பொங்கலுக்கு வரி கேட்டு கோயில்லருந்து வந்தாங்க” என்றாள் குருத்து.
“எவ்வளவு வரி போட்டுருக்காங்க”
“தலக்கட்டுக்கு நூத்தியொண்ணு”
அதற்குப் பிறகு இருவரும் பேசிக்கொள்ளவில்லை. அவள் அடுப்பு புகையோடும், அவன் பீடிப்புகையோடும் இருந்தார்கள். ரெண்டு பேருக்கும் இருமல் வந்தது. குழந்தையும் இருமியது. முதுகெல்லாம் அரிக்க சுவரில் உடம்பைத் தேய்த்துக் கொண்டான். யோசித்து யோசித்துப் பார்த்தான். ஒருவழியும் தெரியவில்லை.
“வென்னி வச்சாச்சு. குளிக்க வாங்க”
எழுந்து போய்க் குளித்தான். எவ்வளவு அலுப்பாய் இருந்தாலும் சுடச்சுட குளிக்கும்போது ஒத்தடம் கொடுத்த சுகம் கிடைக்கும். இன்று அதுவும் இல்லை. வீட்டிற்கு வெள்ளையடிக்கணும். வந்ததுபோனது எல்லாம் செம்மை செய்யணும். பொண்டாட்டி புள்ளைக்கு ஜவுளி எடுக்கணும். யோசனையாகவே இருந்தது சோர்ந்து போனான்.
“என்ன ஒரு மாரி இருக்கீங்க... ஒடம்பு சரியில்லயா?” தலை துவட்டிக்கொண்டு இருந்தவனை குருத்துக் கேட்டாள்.
“ஒண்ணுமில்ல. ஒடம்பு கொஞ்சம் அலுப்பாயிருக்கு”
குருத்து பதற்றமானாள். தனக்கென்று ஒன்று வந்தால் அதை லேசில் பிச்சை வெளியில் சொல்ல மாட்டான். வந்து ஈரக்கையை புடவையில் துடைத்து நெற்றியில் கைவைத்துப் பார்த்தான்.
“அதெல்லாம் ஒண்ணுமில்ல”
காய்ச்சல் லேசாய் இருந்தது. கல்யாணத்தின் போது பொட்டலம் போல பருத்திருந்தவன் இந்த மூன்று வருசத்துக்குள் எலும்பும் தோலுமாகிப் போயிருந்தான்.
“இருங்க கடைக்குப் போயி அலுப்பு மருந்து வாங்கிட்டு வந்துர்றேன்” கடைக்கு ஓடினாள். தெருவில் நடந்தபோது அவளுக்கு உடம்பெல்லாம் அதிர்ந்து போயிருந்தது. திரும்பி வரும்போது டிரைவர் கந்தசாமி, பிச்சையோடு பேசிக்கொண்டு இருந்தார்.
“அப்ப வர்றியா”
“வர்றேன்”
கந்தசாமி தரையில் விளையாடிக்கொண்டு இருந்த குழந்தையின் கன்னத்தைப் பிடித்து கொஞ்சிவிட்டுப் போனார். குருத்து மல்லிக்காப்பி போட்டுக்கொண்டு வந்து கொடுத்த போது, பிச்சை வெளியே போக ரெடியாகிக் கொண்டு இருந்தான்.
”என்ன பொறப்பட்டாச்சா... எங்க?”
காப்பி மணம் தொண்டைக்குழி வரை பாய்ந்தது. இதமாய் உணர்ந்தான்.
“இப்ப எங்க பொறப்படுறீங்க..”
”லாரிக்கு வெளியூரு டிரிப்பு இருக்குதாம். லோடுமேன் வேணுமாம்”
“இன்னிக்கும் போகணுமாங்க.... ஒடம்பு இருக்குற நெலமைல..”
அவன் பதில் சொல்லாமல் கிளம்பி வாசலைத் தாண்டி “வர்றேன்” என்றான்.
“இன்னிக்கும் போகணுமாங்க..”
“அப்புறம் என்னயத்தான் பொங்க வைக்கணும்” ஆத்திரமாய் சொல்லிவிட்டுப் போனான்.
அவள் கதவைப் பிடித்துக்கொண்டு அப்படியே நின்றுவிட்டாள். குழந்தையை தூக்கிவைத்து இருட்டிக்கொண்டு வந்த உலகத்தை வாசலில் உட்கார்ந்து பார்த்து கரைந்து போனாள். ராத்திரியில் பாத்திரம் கழுவியபோது பிச்சை காப்பி குடித்துவிட்டு வைத்துப் போன காலி டம்ளர் அவனது நினைவுகளை அள்ளி அள்ளித் தந்தது. படுத்துக் கொண்டாள்.குழந்தைக்கு யாரோ நிறைய சட்டைகள் தருவது போல கனவு வந்தது. குழந்தையும் சிரித்துக் கிடந்தது.
அதே கணத்தில் எங்கோ வெகு தூரத்தில் ஒரு லாரியை ஓவர்டேக் செய்ய வந்த பஸ் வேகம் கூட்ட, லாரியும் வழிவிடாமல் வேகமாய் ஓட்ட எதிரே சில அடிகள் தூரத்தில் தனது லாரியை ஒட்டிக்கொண்டு வந்த கந்தசாமி குலையெல்லாம் நடுங்க, பிரேக் போட்டு ஒடித்தான். சில அங்குல இடைவெளியில் பஸ் இரைச்சலில் கடந்துபோனது. இருட்டில் மீண்டும் வெளிச்சம் பரப்பி லாரி அந்த நெடிய ரோட்டில் ஓடியது. பின்னால் அசந்து தூங்கிக் கொண்டு இருந்தான் பிச்சை.
அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும்!
இன்றைய (27.4.2010) வேலைநிறுத்ததைப் பார்த்து நேற்று வினவுத் தோழர்கள் சிரித்திருந்தார்கள்.
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நடைபெறுவதாயிருப்பினும், இந்த பந்த்தும், வேலைநிறுத்தமும் விலைவாசிக்கு எதிரான போராட்டமாக அடையாளப்பட்டு இருக்கிறது. நாடு பொருளாதார வளர்ச்சியில் முன்னேறுகிறது என்று மத்திய அரசு தொடர்ந்து ஒரு பக்கம் கூவிக்கொண்டு இருந்தாலும், இன்னொரு பக்கம் எப்போதுமில்லாத அளவுக்கு விலைவாசி உயர்ந்திருக்கிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது. மத்தியதர வர்க்கம் முட்டி மோதி சமாளிக்கிறது. அடித்தட்டு மக்களோ மூச்சுத் திணறிப் போயிருக்கிறார்கள். இந்த விலைவாசி உயர்வு தானாகவே முளைத்ததுமல்ல, விண்ணிலிருந்து விழுந்ததுமல்ல. இந்திய அரசின் பொருளாதாரக் கொள்கைகளும், நடவடிக்கைகளுமே இப்படியொரு விபரீத நிலைமைக்கு காரணமாயிருக்கின்றன. முழுமுழுக்க பெரும் பணக்காரர்களுக்காகவே அரசு அல்லும் பகலும் செயல்பட்டு வருவதால், இங்கு ஏழைகள் புறக்கணிக்கப்படுகின்றனர்.
தங்களுக்கு எதிராக இந்த அரசு செயல்படுகிறது என்பதை மக்கள் புரிந்துகொள்ளவும், தொடர்ந்து எதிர்க்கவுமே இத்தகைய வேலைநிறுத்தங்கள் திட்டமிடப்படுகின்றன.
இந்த வேலைநிறுத்தங்களில் சி.ஐடி.யூ, ஏ.ஐடி.யூ.சி போன்ற சங்க ஊழியர்கள் பெரும்பாலும் கலந்துகொள்கின்றனர். இந்த ஊழியர்கள் அனைவரும் இடதுசாரிக் கட்சியைச் சேர்ந்தவர்கள் இல்லை. முழுக்க இடதுசாரி சிந்தனைகளைக் கொண்டவர்களும் இல்லை. பல்வேறுதரப்பட்ட கருத்துக்களும், தொடர்புகளும் கொண்டவர்களாக இருக்கின்றனர். தங்கள் நலன், தங்கள் கோரிக்கை குறித்து யோசிக்கிற, அதற்கு போராடுகிறவர்களாகவே பலரும் இருக்கின்றனர். ஆனால் விலைவாசி உயர்வு போன்ற ஒரு பொதுவான, மக்களின் பிரச்சினைக்கு அவர்களை போராட அழைத்திருப்பதும், வைத்திருப்பதும் முக்கியமில்லையா? ‘எல்லோருக்கும் வந்ததுதானே, தனக்கும்’ என்னும் மனோபாவத்தில், எதையும் ஏற்றுக்கொள்கிறவர்களாக இருக்கிற ஜனத்திரளில் ‘உங்களுக்காகவும், எங்களுக்காவும், எல்லோருக்காகவும் நாங்கள் போராட இருக்கிறோம்’ என்று முன்குரல் கொடுப்பது எவ்வளவு முக்கியமானது என்பது இயக்கம் குறித்து தெளிவு உள்ளவர்களுக்குப் புரியும். ஒருநாள் சம்பள இழப்பு என்பதை, தங்களது சிறு தியாகமாக இந்த போராட்டத்திற்கு அவர்கள் தருகிறார்கள். அதில் சிலர் தவறுகிறவர்களாகவும் இருப்பார்கள். அதையே சுட்டிக்காட்டி, குத்திக்காட்டி, நோக்கத்தை சிறுமைப்படுத்துவதும், இயக்கத்தைப் பார்த்து சிரிப்பதும் யாருக்குத் துணை போகும்? நிச்சயம் மக்களுக்காக அல்ல.
இடதுசாரிக் கட்சிகளின் முன்முனைப்பில், மேலும் பல கட்சிகள் ஆதரவு தெரிவிக்க, வேலைநிறுத்தங்கள் நடத்தப்படுகின்றன. இப்படி ஆதரவு தெரிவிக்கும் பல கட்சிகள் முதலாளித்துவ சார்புடைய கட்சிகளே. அவர்கள் நாளைக்கு ஆட்சிக்கு வந்தால், இந்த அரசைக் காட்டிலும் மோசமானவர்களாக இருக்கக் கூடும். ஆனால் அந்தக் கட்சிகளின் பின்னால் இருக்கும் பெரும்பகுதி மக்களிடம் விஷயங்களைக் கொண்டு செல்லவும், அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இடதுசாரிக் கட்சிகள் இதுபோன்ற வேலைநிறுத்தங்களையும், அதற்கான பொதுகூட்டங்களையும் பயன்படுத்துகின்றன. இதனையே, இடதுசாரிக் கட்சிகளின் சந்தர்ப்பவாதமாக இங்கு சொல்லப்படுவதுமுண்டு. மக்களை நம் பக்கம் திருப்பாமல், நம் பக்கம் கொண்டு வராமல் எதையும் இங்கு சாதித்துவிட முடியாது. அதுதான் இன்று இந்தியாவில் இருக்கும் இடதுசாரி இயக்கங்களுக்கான சவாலே. அதை நடைமுறைப்படுத்துவதில், திட்டங்கள் வகுப்பதில் தவறுகள், பிசகுகள் நேர்ந்திருக்கலாம். தோற்றிருக்கலாம். ஆனால் தொடர்ந்து மக்களிடம் நல்லது கெட்டதை கொண்டு சென்று, எது சரி, எது தவறு என்பதை உணரச் செய்து, அவர்களே இந்த அரசைத் தீர்மானிக்கிறவர்களாக உருவாக்கும் பெரும் பொறுப்பை இடதுசாரிக் கட்சிகளே முன்னின்று செய்கின்றன. அதற்கு நிதானமும், அவகாசமும் தேவைப்படலாம். ஆனால் தவறுகளையும், பின்னடைவுகளையும் மட்டுமே சுட்டிக்காட்டி, சிரிப்பது யாருக்காக? நிச்சயம் மக்களுக்காக அல்ல.
இந்த வேலைநிறுத்தங்களால் எந்த உடனடி விளைவுகளும் ஏற்பட்டு விடாது என்று கூற முடியாது. அரசுக்கும் முதலாளித்துவ அமைப்புக்கும் எதிரான ஒரு மனோபாவத்தை உருவாக்கும் முயற்சி. அரசின் தவறுகளை அம்பலப்படுத்தும் காரியம். சகல ஆயுதங்களோடும் இருக்கிற வலிமை வாய்ந்த ஒருவன் மீது எறியப்படுவது சிறுகல்லாகவே இருக்கலாம். ஆனால் அதில் ஒரு ஆவேசம் பொதிந்தே இருக்கும். இந்தத் துளிகளை மேலும் மேலும் பெருக்கி வெள்ளமாக்குவதுதான் இயக்கம். ஆனால் அந்தத் துளிகளையும் சாக்கடையாக பரிகசிப்பதால் என்ன நல்ல விளைவு ஏற்படும்? நிச்சயம் மக்களுக்கு அல்ல.
எல்லோரையும், எல்லாவற்றையும் விமர்சிப்பது யாருக்கும் எளிது. சௌகரியமும் கூட. செயல்பூர்வமாக களத்தில் நிற்பது முக்கியம். மைதானத்தில் இறங்காமல் காலரியைச் சுற்றி ஓடியபடி “கோல், கோல்” என்று முழக்கமிடுவதில் என்ன அழகு இருக்கிறது? நிச்சயம் அவர்களுக்கு அல்ல!
(பி.கு: ஆரோக்கியமான, நாகரீகமான, தடித்த வார்த்தைகளற்ற பின்னூட்டங்கள் மட்டுமே பிரசுரிக்கப்படும்!)
சிறகு முளைத்த வாழ்க்கை
உண்மையில் அவர் சிறகு முளைத்த பறவையாகத்தான் இருக்கிறார். அங்கு இருக்கிற எல்லாப் பறவைகளும் அவரது குழந்தைகளாக இருக்கின்றன. அந்த எளிய, அழகிய உயிர்களின் சத்தங்களைக் கேட்டபடி, அசைவுகளை பார்த்தபடி குளத்தங்கரையில் அவர் உட்கார்ந்து இருக்கிறார்.
சென்ற சனிக்கிழமை பாளையங்கோட்டையில் தமிழ் வளர்ச்சி பண்பட்டு மையத்தில் திரையிடப்பட்ட மூன்று ஆவணப்படங்களும், பறவைகளோடு, பறவைகளுக்காக வாழ்ந்துகொண்டு இருக்கிற பால்பாண்டி என்னும் மனிதரைச் சுற்றியே எடுக்கப்பட்டு இருந்தன. A Life for Birds என்னும் படம் சுரேஷ் இளமோன் இயக்கத்திலும், வள்ளித்தாய் என்னும் படம் ஸ்ரீகுமார் இயக்கத்திலும், Bird Man என்னும் படம் ரஹிம் இயக்கத்திலும் வெளிவந்திருக்கின்றன. மூன்று படங்களிலுமே ஒரே மாதிரியான காட்சிகளைப் பார்க்க முடிந்தது. அலுக்கவே இல்லை.
திருநெல்வேலியின் ஒரு மூலையில் இருக்கிற கூந்தன்குளம் என்னும் சிற்றூரில், இருநூற்றுக்கும் அதிகமான வகைப் பறவைகள் பல்லாயிரக்கணக்கில் வந்து தங்குகின்றன. நானூறு வருடங்களுக்கும் மேலாக இப்படி நிகழ்ந்துகொண்டு இருப்பதாகச் சொல்லப்படுகிறது. மக்களே இந்த பறவைகளின் சரணாலயத்தைப் பேணி வருகின்றனர் என்பது குறிப்படத்தக்கது. சுற்றுலாப் பயணிகள் வந்து பார்வையிடும் ஒரு பிரதேசமாக இப்போது கூந்தன்குளம் காட்சியளிக்கிறது. பறவைகளால் பேர் கிடைத்திருக்கிறது.
கூடுகளிலிருந்து வீழ்ந்த குஞ்சொன்றை, அந்தக் கூட்டில் சேர்க்க ஆரம்பித்ததிலிருந்து பால்பாண்டிக்கு சிறகு முளைக்க ஆரம்பிக்கிறது. வெயிலும், மழையும் உள்ளே சிந்திச் சிதறும் ஒரு சின்னஞ்சிறு வீட்டில் வாழும் பால்பாண்டி, பறவைகளை ஒரு தாய் போல கவனிக்க ஆரம்பிக்கிறார். அந்தப் பறவைகளுக்காக மரங்களைப் பேணுவது, நீரைப் பாதுகாப்பது, நோய் வந்தால் மருந்து கொடுப்பது, மீன்கள் வாங்கியோ, பிடித்தோ அந்தக் குஞ்சுகளுக்கு கொடுப்பது என சதாநேரமும் பறவைகளுக்காகவே தன்னை ஒப்படைக்கிறார். அவரது மனைவி வள்ளித்தாயும் அதே போல பறவைகளை பார்க்கிறார். பறவைகளுக்கு வந்த வைரஸ், வள்ளித்தாயை தொற்றிக்கொள்ள, அவர் காலமாகிவிடுகிறார். பால்பாண்டி மனைவியின் நினைவுகளோடு பாட்டு பாடிக்கொண்டு இருக்க, ஒரு பறவை வந்து அவரது தோளில் வந்து மிக அந்நியயோன்யமாக வந்து உட்கார்கிறது.
குளத்தில் இறங்கி சடசடத்துக்கொண்டு இருக்கும் பறவைகளை ஒரு நாய் வெறிகொண்டு விரட்டுகிறது. பறவைகள் பரிதாபமாக கத்தி அலைக்கழிகின்றன. அந்த ஊரில் இருக்கும் ஒரு சிறுவன் அந்த நாயைக் கல்லெறிந்து விரட்டுகிறான். எல்லாம் பால்பாண்டி கற்றுக் கொடுத்த பாடம். ஊருக்குள் யாரும் தீபாவளிக்கு வெடிகள் வெடிப்பதில்லை என்பதையறியும்போது அந்த மக்களின் மீது மரியாதை கூடுகிறது. தனது தொடர்ந்த முயற்சியினால் இப்போது அருகிலிருக்கும் அரசு மருத்துவமனையில் பறவைகளுக்கு மருந்து கொடுப்பதற்காக ஒரு பிரிவு ஏற்படுத்தப்பட்டு இருப்பதையும் சொல்கிறார். அரசு கவனமெடுத்து, ஆதரவுக் கரம் நீட்டினால் பறவைகள் இங்கேயே இருக்க முடியும், இல்லையென்றால் இவைகளும் இங்கிருந்து போய்விடும் என கவலைகொள்கிறார். தன்னைப் போல ஒரு பத்து பால்பாண்டிகளை உருவாக்கிவிட வேண்டும் எனப்தே இப்போது அவருக்கு இலட்சியமாக இருக்கிறது. படங்கள் முழுக்க பால்பாண்டியும், பறவைகளும்தான்.
A Life for Birds படம் சிறப்பாக வந்திருந்தது. ஓளிப்பதிவும், தொழில்நுட்பமும் படத்தை கவனத்துக்கு உரியதாய் எடுத்துக் கொடுக்கிறது. பறவைகள் உட்காருவதால் வேலிக்கருவேல மரங்கள் கூட அழகாக தெரிகின்றன. பறந்து திரிந்து மீன்களைக் கவ்விக் கொண்டு வந்து, குஞ்சுகளின் வாயில் கொடுக்கிற காட்சி அற்புதமாக இருக்கிறது. மரத்தின் நுனியில் உட்கார்ந்து நீண்ட தலைகளை உயர்த்தி, சிறகுகளை அசைக்கும் காட்சிகளைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம். இதெல்லாம் National geographic சேனலில் பார்க்க முடியும் எனத் தோன்றினாலும், ஒரு மனிதன் பறவைகளுக்கு போக்கு காட்டி ஓடுவதையும், அவனைப் பிடித்துக்கொள்ள பின்னாலேயே ஒரு பறவை ஓடுவதையும் எங்கும் பார்க்க முடியாது. சிலிர்க்க வைக்கிறது அந்தக் காட்சி.
படங்களைப் பற்றி பேராசிரியர் டி.தருமராஜன் அவர்கள் பாராட்டிப் பேசுகிறபோது சொன்ன ஒரு விஷயம் முக்கியமானது. “நானூறு ஆண்டுகளாக பறவைகள் கூந்தன்குளத்துக்கு வருவதாகச் சொல்லப்படுகிறது. பால்பாண்டிக்கும் முன்னாலும் பறவைகளை அந்த ஊர் மக்கள் போற்றி, பாதுகாத்து வந்திருக்கின்றனர்.ஒரு வரலாற்றின் தொடர்ச்சிதான் பால்பாண்டி. அதற்கும் முந்தைய காலத்தின் மக்கள் வாழ்வையும் சேர்த்து அறிய வேண்டி இருக்கிறது. இந்தப் படத்தின் தொடர்ச்சியாக மேலும் சொல்வதற்கு நிறைய இருக்கின்றன” எனச் சொன்னார்.
உண்மைதான். இதை வழிமொழிந்து நானும் பேசும்போது சொன்னேன். நான் கூந்தன்குளத்துக்கு சென்றதில்லை. விருதுநகர் மாவட்டத்தில் சங்கரபாண்டியபுரம் என்னும் சிறிய ஊர் இருக்கிறது. நீர்ப்பரப்புகள் பெரிதாக எதுவும் இல்லை. அங்கும் பறவைகள் வருகின்றன. எங்கள் ஆவணப்படக்குழு அங்கு சென்று பதிவு செய்து இருக்கிறோம். ஊரே பறவைகளின் எச்சங்களால் நனைந்து காய்ந்து கிடந்ததைப் பார்த்தோம். பறவையின் எச்சங்கள் படாத மனிதத் தலைகளே இல்லெயென்றார்கள். எப்போதும், எங்கு இருந்தாலும் பறவையின் சத்தங்கள் ஒரு இரைச்சலாக கேட்டுக்கொண்டே இருக்கும். அவைகளை சகித்துக்கொண்டு அல்லது ஏற்றுக்கொண்டு அங்குள்ள மக்கள் வாழ்கின்றனர். அந்தப் பறவையின் எச்சங்கள் இந்தப் படங்களில் இல்லை. அங்கிருந்து இன்னொரு படம் அல்லது பார்வை துவங்க வேண்டி இருக்கிறது.
காக்கா எச்சம் போட்டு விட்டால், அவமானமாகவும், அசிங்கமாகவும் பார்க்கிற நமக்கு இந்தப் படங்கள் பல குற்ற உணர்ச்சிகளைத் தருகின்றன.
மாதவராஜ் பக்கங்கள் - 22
கொஞ்சம் ஆசுவாசமாய் இருக்கிறது இன்று. வங்கியில், சுழல் விசிறிக்கு அடியில் கவுண்டரில் இருப்பதை இளைப்பாறுவதாக உணர்கிறேன். அரக்கப் பரக்க மனிதர்கள் பஸ்ஸுக்காக அலைந்து கிடக்கும் மதுரை மாட்டுத்தாவணியும், புழுதியில் மிதக்கும் ராமநாதபுரத்து சாலைகளும், விரிந்து சுத்தமாய் இருக்கும் காரைக்குடி தெருக்களும் இப்போது நிதானமாய் தெரிகின்றன. வேர்வை காய்ந்த நினைவுகளில் இப்போது ஒரு இளங்காற்று தழுவிச் செல்கிறது.
மூன்று நாட்கள் தொடர்ந்த பயணம் களைப்பாய் இருந்தாலும், ‘நேற்று இன்னேரம்’ என்று நினைக்கும் போது ஒரு சுகம் தொற்றிக்கொள்ளத்தான் செய்கிறது. ஒருநாள் மதுரை, அடுத்தநாள் இராமநாதபுரம், நேற்று காரைக்குடி என எங்கள் பாண்டியன் கிராம வங்கி ஊழியர் சங்கத்தின் சார்பில் நடந்த வட்டாரக்கூட்டங்களில் ஆவேசமாய் பேசிவிட்டு, தோழர்களோடு உடகார்ந்து திட்டமிட்டு, அதற்கப்புறம் இரவு பத்து பதினோரு மணிக்கு மேல் பஸ்ஸில் கிளம்பி, ஒவ்வொரு நாளும் விடியற்காலையில் வந்து வீட்டுக்கதவை தட்டி நின்றபடி இந்த மூன்று நாட்களும் கடந்திருக்கின்றன.
போகும்போது வேர்வையிலும், புழுக்கத்திலும் நசநசக்கும் மதுரை மாட்டுத்தாவணி, திரும்பி இரவில் வரும்போது விளக்குகளின் வெளிச்சத்தில் வேறொரு கோலமாய் இருக்கிறது. கீழே கால்வைத்ததும் ‘சார் மெட்ராசுக்கா” என்று கொஞ்சம் பேர் மாறி மாறி கேட்டுக்கொண்டே கூட வருகிறார்க்ள். அப்போதும் பெரும் கொப்பரைகளில் பலகாரங்கள் வெந்து கொண்டு இருக்கின்றன. பூக்களை தொடுத்துக் கொண்டு வரிசையாய் பெண்கள் உட்கார்ந்திருக்கிறார்கள். பக்கத்தில் பேப்பர்கள் விரித்து குழந்தைகள் தூங்குகின்றனர். பாய்லர்களில் ஆவி பறக்கிறது. செல்போன், டிவிடி கடைகளில் பாட்டுச் சத்தங்கள் அலறுகின்றன. பிளாட்பாரங்களில் மனிதர்கள் காத்துக் கிடக்கிறார்கள் கொத்துக் கொத்தாய்.
வெயில் காலங்களில் பயணம் செய்வது பெரும் கொடுமை. பஸ்ஸில் ஏறி, நெரிசலில் அவிந்து உட்கார்ந்து இருக்கும் நேரத்தில், டிரைவர் ஏறி கதவைச் சாத்தி, பஸ்ஸை இயக்க ஆரம்பிக்கிற அந்தக் கணம் எப்பேர்ப்பட்டதாயிருக்கிறது. எதோ ஒருசில நாட்கள் இப்படி பயணம் செய்வதற்கே பெரிதாய் மத்தியதர வர்க்கத்தைச் சேர்ந்த நாம் அலுத்துக் கொள்கிறோம். பலருக்கு வாழ்க்கையே இப்படித்தான் இருக்கிறது. இரண்டு வருடங்களுக்கு முன்னால் அம்முவின் அப்பாவுக்கு உடல்நலம் சரியில்லையென்று, மதுரையிலிருந்து சென்னைக்கு விமானத்தில் சென்றோம். கோர்ட், டை சகிதம் அருகிலிருந்தவர், தினம்தோறும் காலையில் சென்னைக்குச் சென்றுவிட்டு, மாலையில் மதுரைக்கு திரும்புவதாகச் சொன்னார். அப்படியும் ஒரு வாழ்க்கை இருக்கத்தான் செய்கிறது.
ஒன்று மட்டும் நிச்சயம். இப்படியெல்லாம் தூக்கமற்று அலைந்து திரிந்து விட்டு, வீட்டிற்கு வந்து தரையில் கால்நீட்டி படுக்கும்போது இருக்கிற சுகம் இருக்கிறதே, அது எந்த விமானத்திலும் கிடைக்காதப்பா!
இன்றும் வீட்டில் இருக்க முடியாது. திருநெல்வேலியில் தமிழ் வளர்ச்சி பண்பாட்டு மையம் சார்பில் சாயங்காலம் 6 மணிக்கு ஒரு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. 'BIRD MAN', வள்ளித்தாய், A life for Birds என்று மூன்று ஆவணப்படங்கள் திரையிடப்பட்டு, அவை குறித்து பேசப்படுகின்றன. பேராசிரியர் தொ.பரமசிவன், டி.தருமராஜன், மற்றும் நானும் பேசுகிறோம். அவை குறித்த அனுபவங்களோடு வருகிறேன்.
இன்று எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்களின் பிறந்தநாள். பல வருடங்களாக நேரில் சென்று பார்த்து வந்து கொண்டு இருந்தோம். இந்த தடவை செல்ல முடியவில்லை. காலையில் தொலைபேசியில் பேசி வாழ்த்துக்கள் சொன்னோம். சந்தோஷப்பட்டார்.
மூன்று, நான்கு நாட்களாக வலைப்பக்கம் சரியாக வரமுடியவில்லை. இரண்டு பதிவுகள் மட்டும் எப்படியோ எழுதியிருந்தேன். நண்பர்களின் பதிவுகள் எதையும் படிக்க முடியவில்லை. கூகிள் ரீடர் நிரம்பி வழிகிறது. ஆற அமர உட்கார்ந்து படிக்க வேண்டும். நண்பர்கள் மன்னிப்பீர்களாக!
நாய் பிழைப்பு
வாங்க வந்த மனிதர்கள் ஆளுக்கொரு பையோடு நெருக்கமாய் மாரிமுத்துவின கறிக்கடையைச் சுற்றி நின்றிருந்தார்கள்.
அவர்கள் கால்களின் இடுக்கு வழியே மாமிசம் வெட்டுபவனை பார்த்தபடி இரண்டு நாய்கள் இருந்தன. நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு, கீழே விழும் மிச்சங்களை முந்தி எடுக்க வேண்டுமெனத் தயாராக இருந்தன. அதில் ஒன்றிற்கு பாதி கால் இல்லை..
எங்கிருந்தோ இன்னொரு நாய் மெல்ல கறிக்கடை அருகே வரவும், இருந்த நாய்கள் இரண்டுக்கும் ஒன்று போல அடிவயிற்றிலிருந்து உறுமல் வந்தது. வந்த நாய் தயங்கி, சினேகமாய் முகம் காட்டி, மேலும் இரண்டு அடி வைத்தது. இருந்த நாய்கள் ஊனெல்லாம் தெரிய எழுந்து நின்று குரைக்க ஆரம்பித்தன. வந்த நாயும் பதிலுக்கு குரைக்க, யுத்தம் துவங்கியது.
மாமிசம் வெட்டுபவனோ, மாரிமுத்துவோ முதலில் சட்டை செய்யவில்லை. அவை பாட்டுக்கு தள்ளி நின்றுதான் சண்டையிட்டுக் கொண்டு இருந்தன. ஒரு தருணத்தில் உச்சமாய் ஒன்றின் மீது ஒன்று பாய்ந்தபடி கடையருகே வந்தன.
கறிவாங்க வந்தவர்கள், மிரண்டு கடையை விட்டுத் தள்ளிப் போனார்கள். அவ்வளவுதான். மாரிமுத்து ஒரு கட்டை ஒன்றை எடுத்து நாய்கள் மீது வீசிக்கொண்டு கத்தினான். “வா இந்தப் பக்கம், குறைக் காலையும் ஒருநாள் எடுக்கத்தாம் போறேன்”.
வாங்க வந்த மனிதர்கள் சமாதானமாகி மீண்டும் மாரிமுத்துவின் கடையைச் சுற்றி நெருக்கமாய் நின்றிருந்தார்கள்.
தல்கோனையென்றாலும், பார்வதியென்றாலும்....
"வணக்கம், தல்கோனை வந்துவிட்டாயா? இன்னும் மூப்படைந்து விட்டாய். ஒரேயடியாக நரைத்துப் போனாய். தடியூன்றி நடக்கிறாய்.”
“ஆம். வயது ஆகிக்கொண்டு போகிறது. மேலும் ஒரு ஆண்டு முடிந்துவிட்டது. வயலே உனக்கு இன்னும் ஒரு அறுவடை நடந்துவிட்டது. இன்று நினைவுநாள்.”
“தெரியும், உன்னை எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறேன் தல்கோனை. நீ என்ன இந்த தடவையும் தனியாகத்தான் வந்திருக்கிறாயா?”
“அதுதான் பார்க்கிறாயே. தனியாகத்தான்”
சிங்கிஸ் ஐத்மாத்தவின் ‘அன்னைவயல்’ நாவலின் ஆரம்பத்தில் வரும் இந்த உரையாடல் நினைவுக்கு வருகிறது. தல்கோனையிடம் நிலம் கதை கேட்டுக்கொண்டே இருக்கும். அற்புதமான மண்ணில், மனித வாழ்வின் துயரக் காட்சிகள் புலப்பட ஆரம்பிக்கும். போரில் தன் அருமைக் குழந்தைகளை இழந்து நிற்கும் ஒரு தாயின் நினைவுப் பாதையில் நாமும் துயரம் பெருக்கெடுக்கச் சென்று கொண்டு இருப்போம்.
நாவலின் கடைசியில் தல்கோனை நிலத்திடமிருந்து விடைபெறுவாள்.
“போகிறாயா, தல்கோனை?”
“ஆம். போகிறேன். உயிரோடு இருந்தால் மறுபடி வருவேன். மறுசந்திப்பு வரை. வணக்கம் வயலே”
*
நிலமெல்லாம் தாய்களை மதிக்கின்றன. உபசரிக்கின்றன. பேசுகின்றன. தல்கோனையானாலும், பார்வதியானாலும் தாயே.
500வது பதிவு!
இது எனது 500வது பதிவு.
எழுதியது இவை. வாசித்தது எத்தனை பதிவுகள் இருக்கும் என்று பார்த்தால் மலைப்பாக இருக்கிறது. சந்தோஷமாக இருக்கிறது. வலைப்பக்கத்தில் எழுத ஆரம்பித்த இந்த ஒன்றரை வருடத்தில் எதை சாதித்து இருக்கிறேன் என்று தெரியவில்லை. நிறைய நிறைய சம்பாதித்து இருக்கிறேன். எவ்வளவு நண்பர்கள், எவ்வளவு கருத்துக்கள், எவ்வளவு பார்வைகள்! இதைவிட வேறென்ன ஒரு மனிதனுக்கு சொத்தும், சொந்தமும் ஆகிவிடும்!
முதலில் நன்றி தெரிவிக்க வேண்டியது என் மனைவி (அம்மு) காதம்பரிக்குத்தான். ஒரு மாலுமி போல அவள் வீட்டை செலுத்திக்கொண்டு இருக்கும் போது நான் என் பால்யத்தை பற்றி தொடர் பதிவு எழுதிக்கொண்டு இருப்பேன், அன்புருகும் ராகவனின் கவிதைக்கு பின்னூட்டமிட்டுக்கொண்டு இருப்பேன் அல்லது வால்பையனின் எழுத்தைப் படித்து சிரித்துக்கொண்டு இருப்பேன். அந்த சமயங்களில் அவளுக்கு என்னைப் பார்க்க எப்படியெல்லாம் இருந்திருக்கும் என்று தெரியவில்லை. சாயங்காலம் பணிபுரியும் பள்ளி விட்டு வந்தபிறகு ‘இன்னிக்கு என்ன எழுதியிருக்கீங்க’ என்று சாவகாசமாக உட்கார்ந்து சில நேரங்களில் பதிவுகளை படிப்பாள். கருத்து சொல்வாள். ‘நானும் ஒரு பிளாக் ஆரம்பித்து எழுதி உங்களை கிழிக்கிறேன்’என்று சொல்வாள். அவளுக்கு என் நன்றி.
அடுத்தது, பிரியத்தோடும், சகிப்புத்தன்மையோடும் என் பதிவுகளைப் படித்து ஆதரவு காட்டி வரும் அனைவருக்கும் நன்றி.
படித்து, பின்னூட்டமிட்டு செழுமைப்படுத்திக்கொண்டு இருக்கும் நண்பர்களுக்கு நன்றி.
என்னோடு தீராத பக்கங்களில் இந்தக் கணம் வரை வந்துகொண்டு இருக்கும் 483 சகபயணிகளுக்கு நன்றி.
இந்த நேரத்தில் இரண்டு விஷயங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்ளத் தோன்றுகிறது.
இப்போதெல்லாம் ‘தீராத பக்கங்களை’ ஒருநாளைக்கு ஐநூற்றுக்கும் மேற்பட்டவர்கள் படிக்கிறார்கள். எழுதவந்த புதிதில் முதல் இரண்டு மாதங்களுக்கும் சேர்த்தே ஆயிரம் பேருக்கு மேல் படித்திருக்கவில்லை. நான் பாட்டுக்கு எழுதிக்கொண்டு இருப்பேன். பழக்கமான சில நண்பர்கள், தெரிந்தவர்கள் வந்து கருத்து தெரிவித்துவிட்டுப் போவார்கள். தமிழ்மணம், தமிழிஸ் போன்ற திரட்டிகளில் இணைந்த பிறகு பலர் வந்து படிக்க ஆரம்பித்தார்கள். இதே வலைப்பக்கங்களில் மிகச் சொற்பமான கவனம் பெற்றபடி நல்ல பதிவுகளை எழுதிக்கொண்டு பலர் இருக்கிறார்கள் என்பது எப்போதும் நமக்குள் உறுத்திக்கொண்டே இருக்க வேண்டும் என நினைக்கிறேன். அவர்களுக்கு கூடுதல் கவன்ம் கிடைக்க வேண்டுமென்றுதான் ‘வாடாத பக்கங்கள்’ ஆரம்பிக்கப்பட்டது. அவரவர்க்குப் பிடித்தமான பதிவுகளைச் சுட்டிக் காட்டுவார்கள் என்றுதான் நினைத்தேன். ஒரு சில நண்பர்களே அதைச் செய்தார்கள். மெல்ல மெல்ல அந்த வட்டமும் தேய்ந்தது. எனக்குப் பிடித்த பதிவுகளால் மட்டுமே வாடாத பக்கங்கள் நிரம்புவது எப்படி சரியாக இருக்கும்? நண்பர்களே, வாடாத பக்கங்கள் நமது பக்கங்கள். ஊர் கூடித் தேர் இழுப்போம். கைபிடிக்க வாருங்கள்.
இன்னொன்று, எழுதும் ஆர்வத்தில் தினம், தினம் புதிய பதிவர்கள் வலைப்பக்கங்களில் காலடி எடுத்து வைத்துக்கொண்டே இருக்கிறார்கள். அவர்களை, அவர்களது எழுத்துக்களை வலையுலகத்திற்கு அறிமுகம் செய்வதற்கு எந்த ஏற்பாடும் இல்லை. அவர்களுக்கு திரட்டிகளில் இணைவது எப்படி என்று தெரிவதில்லை. சின்னச் சின்ன தொழில்நுட்ப விஷயங்களும் அறியாதவர்களாகவே இருக்கிறார்கள். இனி தீராத பக்கங்களில், வாரத்தில் ஒருநாள் புதிய பதிவர்களை அறிமுகம் செய்யலாம் என இருக்கிறேன். புதியதாக வலைப்பக்கங்களில் எழுத ஆரம்பித்து இருப்பவர்கள் தங்களைப் பற்றிய சிறு அறிமுகத்துடன், வலைப்பக்க முகவரியையும், அவர்களுக்கு எதில் ஈடுபாடு போன்ற தகவல்களையும் jothi.mraj@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பும்படி கேட்டுக் கொள்கிறேன். நண்பர்களும் தெரிந்த புதிய பதிவர்களைப் பற்றிய குறிப்புகளை எனது மின்னஞ்சலுக்குத் தெரிவிக்கலாம்.
சேர்ந்து பயணிபோம்... நண்பர்களே!
மீண்டும் சிறுவனானேன்!
வெயில் ‘வந்து பார்’ என்றது. வெக்கைப் பிழம்புகளோடு காற்றும் கொதித்தது. செடிகளும் மரங்களும் இளமையிழந்து பஞ்சடைந்து போயின. கொடுக்காப்புளி மரத்திலிருந்து விட்டு விட்டு வந்த அணில் குரல் ‘ஐயோ, ஐயோ’வென ஒலித்தது. வெளியில் மிதக்கின்ற ஒன்றிரண்டு வண்ணத்துப் பூச்சிகளும், தட்டான்களும் எங்கோ கரையொதுங்கி விட்டன போல. தண்ணீர்க்குழாய் வாயில் அலகு விட்டு குருவியொன்று தண்ணீர் தேடிக்கொண்டு இருந்தது. உதிர்ந்த சருகு போல கிடந்தது தெரு.
ஞாயிற்றுக்கிழமை சுகம் அற்றுப்போயிருந்தது. குழந்தைகள் டி.வியில் புகுந்துகொள்ள, புத்தகம், கம்ப்யூட்டர், இசை எதிலும் மனம் ஒட்டாமல் கிடந்தேன். தூரத்தில், இன்னும் வீடுகள் கட்டப்படாத பிளாட்களில் காலையிலிருந்து சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டு இருந்தார்கள். கோடையின் சந்தோஷம் அவர்களிடமிருந்தது. அவ்வப்போது அவர்களைப் பார்த்து, பார்த்து ஏக்கமும், தவிப்பும் அடைந்து கொண்டு இருந்தேன்.
மதியம் மூன்று மூன்றரை மணி போலிருக்கும். திடுமென காற்று சுழன்று அடித்தது. குளிர்நது வீசியது. அதிர அதிர வானம் கொட்டியது. குழந்தைகளும் நானும் வாசலில் வந்து அதிசயம் போல பார்த்தோம். சந்தோஷம் பிய்த்துக் கொண்டு வந்தது. ஒரு கணத்தில் சூழல், வாழ்க்கை, ரசனை என எல்லாம் வேறு வேறு வண்ணங்களாகி விடுகின்றன.
“இங்கேயே நிற்பதற்கு, மொட்டை மாடியில் டாங்க்கை காலி செய்து, மழைத் தண்ணியை அதில் பிடிச்சு விடுங்களேன்” என்றாள் மனைவி. குடையோடு கொஞ்ச நேரம் நின்று வேலை செய்தவன், பின் குடையை விட்டு வெளியேறி மழையை ‘வந்து பார்’ என்றேன். முதலில் பதறிய மனைவி, பிறகு ரசிக்க ஆரம்பித்தாள். ‘நானும் வர்றேன்பா’ என்ற மகனை அடக்கினாள். மகள் வேகவேகமாய் என் மழைக் குதூகலத்தை போட்டோக்களாய் பிடிக்க ஆரம்பித்தாள்.
“கொட்டி யிடிக்குது மேகம்;
கூகூவென்று விண்ணைக் குடையுது காற்று;
சட்டச்சட சட்டச்சட டட்டா - என்று
தாளம் கொட்டிக் கனைக்குது வானம்;
எட்டுத் திசையு மிடிய - மழை
எங்ஙனம் வந்ததடா, தம்பி வீரா”
மகாகவியின் வரிகள் பொங்க ஆரம்பித்தன. மேலே வந்த அப்பா, “ஏல என்ன இப்படி சின்னப் பையன் மாரி ஆட்டம் போட்டுக்கிட்டு இருக்க” எனச் செல்லமாய்க் கடிந்து கொண்டார்கள். தூரத்தில் கிரிகெட் விளையாடிய சிறுவர்களை இப்போது அங்கே காணோம். செடிகளும், மரங்களும் இளமைக்குத் திரும்பியிருந்தன புத்தம் புதுசாய்!
கலைஞர் கருணாநிதியின் அசாத்திய தைரியம்!
இன்றைய தினகரன் பத்திரிகையின் கடைசிப் பக்கத்தில் தமிழக முதல்வர், டாக்டர், கலைஞர் கருணாநிதி அவர்கள் பெருமிதத்தோடு குறிப்பிட்டதாக கீழ்க்கண்ட செய்தி வந்திருக்கிறது.
“ஏழைகளுக்கு தொண்டாற்றும் ஒரே இயக்கம் திமுக மட்டுமே” என்பதுதான் அது.
கலைஞருக்கு அசாத்திய தைரியம்தான். அஞ்சாநெஞ்சனின் தந்தை ஆயிற்றே!
இப்போது சில கேள்விகள் எழுகின்றன. தயவு செய்து யாராவது பதில் சொல்லுங்களேன்.
1. ஏழை என்றால் யார்?
2. தொண்டு என்றால் என்ன?
3. இயக்கம் என்றால் என்ன?
ஒரு எம்.எல்.ஏவின் சில கவிதைகள்!
முதலில் கவிதைகளைப் படியுங்கள். பிறகு பேசுவோம்.
இந்நாட்டு மன்னர்கள்
இராமநாதபுரத்து சேதுபதிகள்
சுண்டல் விற்றார்கள்
மெரீனா பீச்சில்
சுற்றுலாப் பயணிகளோடு
சுற்றிக்கொண்டு இருந்தார்கள்
மகாபலிபுரத்தில்
பல்லவ மன்னர்கள்
பாண்டிய மன்னர்களோ
பூ விற்றுக்கொண்டு இருந்தார்கள்
மதுரைப் பேருந்து நிலையத்தில்
பஞ்சாலைகளுக்கு படையெடுத்தார்கள்
திருப்பூரில் சேர மன்னர்கள்
தஞ்சை வரப்புகளில்
எலி பிடித்தார்கள் சோழ மன்னர்கள்!
மறுபக்கம்
குடும்பம் துறந்த
சித்தார்த்தன்
புத்தன் ஆனான்
நம்பி வந்த
யசோதரா
என்ன ஆனாள்?
அவதாரம்
வேலு நாச்சியாராய்
குதிரை மீது வந்தேன்
இராணி மங்கம்மாளாய்
வாளைச் சுழற்றினேன்
ஜான்சிராணியாய்
எதிரிகளைப் பந்தாடினேன்
குக்கர் சத்தம் கேட்டது
சமையலறைக்குள் ஓடினேன்.
மாற்று
கிராமத்து வீடுகளில்
ஹார்லிக்ஸ்
காம்ப்ளான் பாட்டில்கள்
ஒன்றில் உப்பும்
இன்னொன்றில் ஊறுகாயுமாக
மாற்றம்
ஊருக்குள் சென்ற
ஒற்றையடிப் பாதை
தார்ச்சாலையாக
மாறி இருந்தது
கரைக்கொடி படர்ந்த
கூரைவீடுகள்
ஆண்டெனாக்களை
சுமந்து நின்றன
கிளித்தட்டி விளையாடிய
பிள்ளைகள்
கிரிக்கெட் மட்டையோடு
திரிந்தார்கள்
பகலிலே நைட்டியணிந்து
தண்ணீர் பிடித்தனர்
இளம் பெண்கள்
இன்சாட் டூப் பற்றியும்
இண்டர்நெட்டில் ரிசல்ட் பற்றியும்
பேசி மகிழ்ந்தார்கள்
டீக்கடைகளில்
தாழ்ந்த சாதி பிணத்தை
எங்கள் சாதியோடு
புதைப்பதா என்ற
சண்டை மட்டும்
நடந்துகொண்டே இருந்தது
எங்கள் ஊர் சுடுகாட்டில்.
தருணம்
எந்தக் கண்ணியிலிருந்து
அறுந்துகொள்வது
என்று தெரியாமலேயே
தொங்கிக் கொண்டிருக்கிறது
என் கழுத்துச் சங்கிலி
ரொம்ப நாளாகவே.
நிலைமை
ஆறு
குளம்
ஏரி
கண்மாய்
இவையாவும்
நீர் நிலைகள் என்றேன்
தண்ணீர் லாரி
சத்தம் கேட்டு
தெருவுக்கு ஓடினார்கள்
பிள்ளைகள்.
உழைக்கும் பெண்
கோப்புக்குள்
ஒவ்வொரு எழுத்தும்
குழந்தை
அழுவதாகவே தெரிகிறது.
நீதி
பாண்டி கோயிலுக்குச் சென்றால்
சரியாகி விடும் என்றார்கள்
சென்றாள்
முனியப்பன் கோவிலை
மூன்றுமுறை சுற்றிவா என்றார்கள்
சுற்றி வந்தாள்
காலையும் மாலையும்
காளிக்குத் தீபமிடு என்றார்கள்
தீபமிட்டாள்
கருப்பணசாமிக்கு
கிடாவெட்டு என்றார்கள்
வெட்டினாள்
அப்படியும்
அவளைப் பிடித்த
பேய் போகவே இல்லை
அப்புறம்தான் அவள்
நீதிமன்றம் சென்றாள்!
தாமிரபரணி
இரும்புத் தொப்பியணிந்த
உங்களில் எவருக்கேனும்
கல்லெறி வீச்சில்
காயம் பட்டதுண்டா?
தடியடி பிரயோகத்தில்
உங்களில் எவருக்கேனும்
முதுகெலும்பு
முறிந்ததுண்டா?
அடிவயிற்று உதையில்
உங்களில் எவருக்கேனும்
சிறுநீரோடு ரத்தம்
போனதுண்டா
சிதறிக்கிடந்த
செருப்புகளிலும்
சிந்திக்கிடந்த
ரத்தத் துணிகளிலும்
உங்களில் எவருக்கேனும்
சொந்தமுண்டா?
கைக்குழந்தை கூட
கலகம் செய்தது என்றா
ஆற்றில் வீசிக்
கொன்றீர்கள்?
அட! சவமூதிகளா!
ஆயுதம் தரித்த
தாண்டவ மூர்த்திகளா!
ஆடியதெல்லாம் நீங்கள்
வன்முறையாளர்கள் என்ற
பட்டம் சுமப்பது நாங்கள்!
இந்தக் கவிதைகளை எழுதியவர் தோழர்.பாலபாரதி. சி.பி.எம் கட்சியின் திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதி எம்.எல் ஏ. வம்சி புக்ஸில் இருந்து வெளியிடப்பட்டுள்ள இவரது ‘சில பொய்களும், சில உண்மைகளும்’ என்னும் கவிதைத் தொகுதியிலிருந்து சில கவிதைகள்.
லீனா மணிமேகலையும் உலகின் அழகிய முதல் பெண்ணும்!
I am the very beautiful என்னும் ஆவணப்படம் சில வருடங்களுக்கு முன் பார்த்தேன். நள்ளிரவு பார்களில் பாடும் ஒரு பெண்ணைப் பற்றியது. பேண்ட் ஜிப்பைத் திறந்து, அங்கிருந்து மைக்கையும், சின்ன கேசட்டையும் எடுத்து, ஒளித்து வைத்து, உடைமாற்றி வரும் ராணாவுக்குத் தெரியாமல் அவளைப் பதிவு செய்யும், அவளது காதலர்களில் ஒருவனாக வரும் ஷ்யாம்குமார்தான் படத்தின் இயக்குனர். தொலைதூரத்தில் இருக்கும் குடும்பத்திற்கு அவளைப்பற்றி தெரியாது. தான் சந்தித்த ஆண்களில் வித்தியாசமானவனாய் தெரியும் ஷ்யாமிடம் தன்னை முழுமையாக பகிர்ந்துகொள்கிறாள் ராணா.
மாறிய பணியிடங்கள், மாறியஇருப்பிடங்கள், மாறிய காதலர்களோடு கழிந்த நாட்களைச் சொல்லியபடி நகரும் 65 நிமிடங்களில், பார்வையாளர்கள் துக்கத்தையும், குற்றமனப்பான்மையையும் ஒருசேர சுமக்க வேண்டி இருக்கும். அவளை நிர்வாணமாக பார்க்க நேரிடும் காட்சியில் பெரும் அதிர்ச்சி இருக்கும். சிறுவயதில் மண்ணென்ணெய் ஊற்றி, தற்கொலைக்கு முயன்று பிழைத்த காயங்களோடு அவள் சிரிப்பாள். ஷ்யாமும் தன்னை காதலிக்கவில்லை, தன்னை படம் எடுக்கவே வருகிறான் என்று அறிந்து, கதறி, அவனை வெளியேறச் சொல்லி விரட்டி, வீட்டிலேயே அடைந்து கிடப்பாள். சில நாட்களில் மெல்லத் தேறி, உடல்காயங்களை மறைக்கும் ஆடைகளை அணிந்துகொண்டு, மேக்அப்போடு ‘ I am the very beautiful' என நகரத்தில் நகரும் பெரும் மனிதக் கூட்டத்தில் புள்ளியாய் கரைந்து போவாள். அப்போது ‘I am the very beautiful' என்னும் சொற்றொடருக்கு அர்த்தங்களும், புரிதல்களும் வேறாகவே இருக்கும். காயம்பட்ட பெண்களின் இன்னொரு புள்ளியாகவே ‘உலகின் அழகிய முதல் பெண்’ என்னும் சொற்றொடர் தோன்றியது.
AFSPA, 1958 என்றொரு இன்னொரு ஆவணப்படத்தையும் இங்கே குறிப்பிட வேண்டும். Armed Force Special Power Act 1958 மூலம் மணிப்பூரில் விசேஷ அதிகாரங்களோடு இருக்கும் இந்திய இராணுவம் அங்கு செய்கிற அட்டூழியங்களையும், அதற்கு எதிரான மக்கள் இயக்கங்களையும் பேசும் படம் அது. மனோரமா என்னும் மணிப்பூர் இளம்பெண்ணை இராணுவத்தினர் பலர் வன்புணர்வு செய்து கொன்று போட்டு விடுகின்றனர். கொதிப்படைந்து மக்கள் போராடுகின்றனர். பெண்கள் சிலர் நிர்வாணமாக இராணுவத் தலைமையகம் முன்பு குழுமி “வாங்கடா, நாய்களா வந்து எங்களையும் புணருங்கடா” என்று கைகளை விரித்து ஆத்திரத்தோடு கத்திக் கதறும் காட்சி வரலாற்றின் மீதான பெரும் கலகமாக இருந்தது. அதிகாரம், பெண்ணுடல் மீது நிறுவப்பட்டதாகவும் இருக்கிறது. போர்கள், கலவரங்கள் எல்லாவற்றின் போதும் பெண்ணுடல் சிதைக்கப்பட்டும், குதறப்பட்டும் வலியில் துடிக்கின்றது. இரவுகளின் நிசப்தங்கள் காலகாலமாய் பெண்ணின் அழுகையில் நனைந்துகொண்டே வந்து போகின்றன. மதங்களும், புனித நூல்களும் பெண்ணுடல் மீது விசேஷ கவனம் கொள்ள வைக்கின்றன.
இந்த கடந்தகால அடக்குமுறைகள், ஒடுக்குமுறைகள் யாவற்றின் மீதும் கேள்விகள் எழுப்பியபடி, உரையாடலை நிகழ்த்தியபடி இந்த நூற்றாண்டின் காட்சிகள் தெரிகின்றன. பெண்ணுடலை புனிதமாகவும், கவர்ச்சிப் பொருளாகவும், அடிமையின் சதையாகவும் பார்ப்பதற்கு பேசப்பட்டு வந்த ‘அழகு’ என்னும் வார்த்தையின் கட்டுடைத்து, எதிர்க்கதையாட ‘உலகின் அழகிய முதல் பெண்’ என்னும் பிரயோகம இருப்பதாக புரிய முடிந்தது. பெண்ணுடலை ரகசிய கண்களோடு மேயும் வார்த்தைகளையெல்லாம் எடுத்துவந்து நடுத்தெருவில் போட்டு ’பாரடா’ என ஆவேசத்துடன் உடைக்கும் அந்த மணிப்பூர் பெண்களில் ஒருத்தியாக ‘உலகின் அழகிய முதல் பெண்’ணும் இருப்பாள் என்று எதிர்பார்ப்பும் இருந்தது.
‘உலகின் அழகிய முதல் பெண்’ என்னும் லீனா மணிமேகலையின் இரண்டாவது கவிதைத் தொகுப்பு வெளிவந்திருக்கிறது. அதன் கவிதைகள் அனைத்தையும் படித்திருக்கவில்லை. இரு கவிதைகளை அவரது வலைப்பக்கத்தில் படித்திருக்கிறேன். அதில் உள்ள முதல் கவிதை உலகெங்கும் பெண்ணுடல் எல்லோராலும், எப்போதும் சிதைக்கப்பட்டு இருப்பதாய் சொல்கிறது. நாடு கோருபவர்கள் ஜிகாத் தொடுப்பவர்கள்,
புரட்சி வேண்டுபவ்ர்கள், போர் தொடுப்பவர்கள், ராஜாங்கம் கேட்பவர்கள்,
வணிகம் பரப்புபவர்கள், காவி உடுப்பவர்கள், கொள்ளையடிப்பவர்கள், நோய் பிடித்தவர்கள் என பட்டியலிடும்போது சுருதி பேதம் ஒலித்தது. பெண்ணுரிமையை முன்மொழிந்த அல்லது வழிமொழிந்தவர்களையும் அருவருப்பான பட்டியலில் சேர்த்திருக்கும் லீனாவின் கவிதையில் வேறொரு வன்மம் தொனித்தது. உலக உருண்டைக்கு முன்னே ஆணும் பெண்ணும் சேர்ந்து உழைப்பின் கருவிகளைத் தூக்கியபடி வீறுகொண்டு நிற்கும் கனவைக் கண்ட சித்தாந்தக் கொடி பிடித்தவர்களையும் வேண்டுமென்றே ஏன் இங்கு பேசவேண்டும் என்ற கேள்வியும், சந்தேகமும் வந்தது. எல்லோரையும் இப்படி ஒரே வரிசையில், ஒரே தரத்தில் வைப்பது என்பது மோசமான அரசியலாகப் பட்டது. யார் மீதும் நம்பகத்தன்மையில்லாமல், பெண்ணுக்கு பெண்ணே துணை என்ற ரீதியில் ‘பெண்ணியம்’ பேசுவதற்கு இப்படி ஒரு கவிதையா?
இன்னொரு கவிதை அபத்தமானது. அர்த்தம் கெட்டது. ஆபத்தானது. மனிதகுல வரலாற்றின் மகத்தான அத்தியாயங்களை எழுதியவர்களை, சுரண்டப்பட்ட, அடக்குமுறைகளுக்கு ஆளான மக்களுக்காக எதிர்காலத்தின் மீது நம்பிக்கையையும், வழிகளையும் ஆராய்ந்தவர்களை அந்தக் கவிதை கொச்சைப்படுத்துகிறது. மார்க்ஸ், லெனின், மாவோ, சே, பிடல் எல்லோரையும் ஆண்களாக மட்டுமே பார்க்கிற கண்கள் எப்படி ‘உலகின் அழகிய முதல் பெண்’ணுக்கு வாய்த்ததோ? "இலட்சக்கணக்கான பக்கங்களில், ஆயிரம் வருடங்கள் வேண்டுமானாலும் சேகுவாராவை எழுதிக் கொண்டிருக்கலாம்" என்னும் எழுத்தாளர் காப்ரியில் கார்சியா மார்கோஸ் எங்கே, இந்த ‘உலகின் அழகிய முதல் பெண்’ எங்கே? இப்படிக் கேட்டால் மார்கோஸையும் ஆணாக வரித்து இன்னொரு கவிதை வரக்கூடும். மகத்தான இலட்சியங்களையும், சித்தாந்தங்களையும் தரம்தாழ்ந்த ‘ஏ’ஜோக்குகள் போல சித்தரிக்கிறது கவிதை. எனக்குப் புரிந்தவரையில் உலகைப் புரட்டும் நெம்புகோலை ஆண்குறியாக்கி, கவிதை கேலி செய்கிறது. அந்த படைப்பின் மூலம் என்ன திருப்தியை படைப்பாளி கண்டாரோ.
வார்த்தைகளைத் தாண்டி எந்த கலகமும் இந்தக் கவிதைகளில் இருப்பதாகத் தெரியவில்லை. எதோ ஒரு வகையில் தன் கவிதை பேசப்பட வேண்டும் என்னும் விருப்பமே வார்த்தைகளின் தேர்வுகளுக்குள் நிறைந்து கிடக்கின்றன. ஒரு இடதுசாரியாகிய என்னைப் பொறுத்த வரையில், இந்த இரண்டு கவிதைகளும் ‘உலகின் அழகிய பெண்’ணுடையதாக இல்லை. இந்தக் கவிதையில் கையாளப்பட்ட இதே வார்த்தைகளின் மூலம் வேதனையும், கோபமும் கொப்பளிக்கும் பல கவிதைகள் தமிழிலேயே வந்திருக்கின்றன. அவைகளையும் தமிழில் பெண் கவிஞர்களே எழுதி இருக்கின்றனர். அதுகுறித்து கடும் விமர்சனங்கள் ஒருபுறம் இருந்தபோதும் அறிவு சார்ந்த உலகம் வரவேற்று இருக்கிறது. ஆதரித்து இருக்கிறது. ஆக, ‘உலகின் அழகிய முதல் பெண்’ நிச்சயம் லீனா மணிமேகலை இல்லை. அவருக்கு முன்னே பலர் இருக்கிறார்கள் கம்பீரமாகவும், தெளிவாகவும், எளிமையாகவும். இந்தக் கவிதைகள் குறித்து நடந்த விவாதங்களையும், சர்ச்சைகளையும் படித்தபோது அலுப்பூட்டுவதாகவே இருந்தன. நியாயமாக வந்த விமர்சனங்களும், தர்க்கங்களும் ஆத்திரப்பட்ட வார்த்தைகளாலும், தனிப்பட்ட தாக்குதல்களாலும் திசை மாறிப் போயின.
இப்போது லீனா மணிமேகலையின் ‘உலகின் அழகிய முதல் பெண்’ கவிதைத் தொகுப்பையும், அதே பேரில் இருக்கும் வலைப்பக்கத்தையும் தடைசெய்ய வேண்டுமென்று சென்னை காவல்துறை ஆணையரிடம் இந்து மக்கள் கட்சி புகார் செய்துள்ளது. அதில் அதில் எழுத்தாளர் லீனா மணிமேகலையின் எழுத்துக்கள் ஆபாசமாக இருப்பதாகவும் சமூக ஒழுங்கைச் சீர்குலைப்பதாகவும் கூறி அவரைக் கைது செய்யுமாறும் அவரது எழுத்துக்களையும் சொத்துக்களையும் முடக்குமாறும் கோரப்பட்டுள்ளதாக இணையதளச் செய்திகள் தெரிவிக்கின்றன. இன்று 15.4.2010, எழுத்துச் சுதந்திரத்தின் மீதான ஒடுக்குமுறையாக பாவித்து, கண்டித்து சென்னையில் ஒரு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. பேராசிரியர் அ.மார்க்ஸ், எழுத்தாளர் தமிழ்ச்செல்வன், ஆதவன் தீட்சண்யா உட்பட பலர் அந்தக் கூட்டத்தில் பங்கேற்பதாக ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.
“ஒருவருடைய எழுத்துக்களின் மீது மாற்றுக் கருத்துக்கள் விமர்சனங்கள் யாருக்கு வேண்டுமானாலும் இருக்கலாம். அதை வெளிப்படுத்துகிற உரிமையும் எவருக்கும் உண்டு. ஆனால் அதற்காக போலீஸ் உதவியுடன் எழுத்தை, எழுத்தாளரை முடக்குவதை முடக்க முயற்சிப்பதை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் ஒருபோதும் ஏற்காது. இந்து மக்கள் கட்சியின் இந்த அத்துமீறலை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் வன்மையாகக் கண்டனம் செய்கிறது. இப்புகாரை நிராகரிக்க வேண்டுமெனக் காவல்துறையைக் கேட்டுக்கொள்கிறோம்” இப்படி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர், எழுத்தாளர்.தமிழ்ச்செல்வன் அறிக்கை விடுத்திருக்கிறார். மேலும், “கலாச்சார போலீஸ் வேலையின் இன்னொரு வடிவமாக வாயளவில் இடது தீவிரவாதம் பேசுகிற ஒரு சிறு குழுவினர் இரவு நேரங்களில் சில எழுத்தாளர்களின் வீடுகளுக்குப் போய் அவர்களின் எழுத்தை முன்வைத்து எழுத்தாளரின் குடும்பத்தினரையும் அண்டை வீட்டாரையும் எழுப்பித் தொல்லை செய்வதும் கலாட்டா செய்து வருவதும் எந்த எல்லைக்கும் சென்று எழுதுவதும் தாக்குவதும் நடந்துள்ளது. எழுத்தாளர் லீனா விஷயத்திலும் அவர்கள் இவ்விதமாகச் செயல்பட்டுள்ளனர். அதையும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் வன்மையாகக் கண்டனம் செய்கிறது.” என்றும் அந்த அறிக்கையில் சொல்லப்பட்டு இருக்கிறது.
ஒருவர் இப்படித்தான் கவிதை எழுத வேண்டும், இப்படியெல்லாம் எழுதக் கூடாது என்றோ யாரும் கட்டளையிட முடியாது. ஆரவாரங்களினாலும், எதிர்ப்புகளாலும் படைப்புகளின் தன்மையை அளவெடுத்து விடவும் முடியாது. தக்கது நிற்கும், தகாதது அழியும். இதுதான் விதி. இந்தப் புரிதலோடு கவிதை குறித்த விமர்சனத்தில் ஈடுபடாமல், அவைகளை முடக்குவது என்பது சரியான பார்வையாகவும் இருக்காது, தடைசெய்ய வேண்டும் என்பது முறையான பாதையாகவும் இருக்காது. இப்படித்தான் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் கருதுகிறது. அதேவேளையில், ‘உலகின் அழகிய முதல் பெண்’ குறித்த தனது விமர்சனங்களும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சார்பில் வைக்கப்பட்டிருக்க வேண்டும். இடதுசாரிகள் பக்கமே தான் நிற்பதாய் அடிக்கடிச் சொல்லும் லீனா மணிமேகலையின் கவிதைகள் குறித்த மாற்றுக் கருத்துக்களை வெளிப்படையாக பேசியிருக்கவும் வேண்டும். லீனா மணிமேகலைக்கு காட்டும் நியாயமான இந்த ஆதரவை, எல்லா சந்தர்ப்பங்களிலும், எல்லா சம்பவங்களின் போதும் வெளிப்படுத்த வேண்டும், பாதிக்கப்படுபவர்கள் அல்லது தாக்கப்படுபவர்கள் யாராக இருந்தாலும். அவர்கள் உசேனாக இருந்தாலும், தஸ்லிமா நஸ்ரினாக இருந்தாலும், பால் சக்காரியாகவாக இருந்தாலும். ஆம், அதுதான் நியாயம்.
லீனா மணிமேகலையின் கவிதைகள் கலாச்சாரத்தைக் கெடுத்து விட்டதாகவோ, ஒழுக்கவியல் மதிப்பீடுகள் தகர்க்கப்படுகின்றன என்றோ இங்கு நான் துடித்தெல்லாம் போகவில்லை. அவரது கவிதைகள் மற்றும் பார்வை குறித்து மாற்றுக் கருத்துடையோரையெல்லாம் “ஆணாதிக்கச் சிந்தனை’ என்னும் ஒற்றைப் புள்ளியில் நிறுத்தி, கவிதையில் செய்த தவறையே, கவிதைக்கு வெளியேவும் லீனா மணிமேகலை செய்ய மாட்டார் என நம்புகிறேன். விமர்சனம் என்பது எதிர்ப்பதல்ல. சரி செய்வது. மாற்றுக் கருத்து என்பதும் எதிர்ப்பதல்ல. செழுமைப்படுத்துவது. எதிர்த்தல் என்பதற்கு வேறு அர்த்தம். அது அவரது கவிதைகளுக்கே உரியதாய் இருந்துவிட்டு போகட்டும்!
அம்மாவின் அவர்!
எனது 2001ம் ஆண்டு டைரியை எடுத்து இன்று புரட்டிக்கொண்டு இருந்தேன். ஒரு நாளில் பெ.கனகராசு எழுதிய இந்தக் கவிதையை குறித்து வைத்திருந்திருக்கிறேன். தொடர்ந்து டைரியை புரட்டாமல் கொஞ்ச நேரம் அப்படியே இருந்தேன்.
எதற்கெடுத்தாலும் அம்மா வேணும்
அப்பாவிற்கு
சகலவிதமான பசி தீர்க்க
கைகால் பிடித்துவிட
வைகறையில் எழுப்ப
உதைத்து வசைபாடி
கோபம் தணிக்க
கோவணம் துவைக்க
என எதற்கெடுத்தாலும்...
எதற்கும் தேவையில்லை அப்பா
அம்மாவிற்கு
விடியலில் வாசல் தெளித்து
கோலம் போட
சுள்ளி பொறுக்கி சோறு சமைக்க
எனக்கு நிலாச்சோறு ஊட்ட
இரவுமட்டுமறிய அழ
இப்படி எதற்கும்....
எனினும் அம்மா சொல்கிறாள்..
“எனக்கு எல்லாமே அவருதாங்க”
இயக்குனர் வசந்த பாலனுக்கு பாராட்டு விழா!
அங்காடித் தெரு இயக்குனர் வசந்த பாலன் அவர்களுக்கு சென்னையில் பாராட்டு விழா ஒன்றை சி.ஐ.டி.யூ (தென்சென்னை) மற்றும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நாள் : ஏப்ரல் 14, 2010
இடம்: எம்.ஜி.ஆர் நகர் மார்க்கெட்
நேரம் : மாலை 6 மணி
பங்கேற்பவர்கள்:
இயக்குனர்கள்
சுகாசினி,
சசி
பாலாஜி சக்திவேல்
ராதா மோகன்
சிம்புதேவன்
எஸ்.அப்புனு
டி ஏ லதா
கவிஞர் நந்தலாலா
கவிஞர் சைதை ஜெ
எழுத்தாளர் சு வெங்கடேசன்
' பூ ' ராமு
வெ. ரவீந்திர பாரதி
கி. அன்பரசன்
வைகறை கோவிந்தன்
விஜியின் ராஜவாத்தியம் (ஏழுமலை தவிலுடன்)
தோழர் அ.சௌந்தரராசன்
இவர்களுடன்
இயக்குனர் வசந்தபாலன்.
சாத்தியப்படும் சென்னையில் இருக்கும் நண்பர்கள் கலந்து கொள்ளலாமே!
ஏழை இளம்பெண்கள் என்ன, அவர்கள் பரிசோதனைக்கான எலிகளா?
அமெரிக்க மருந்து நிறுவனமான ‘மெர்க்’ (MERCK ) இடுப்பெலும்பு புற்று நோய்க்கான மருந்தை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. அதற்கு சோதனைக் களமாக இந்திய பெண்களை பயன்படுத்தவது என்று முடிவு செய்து இந்தியாவிற்குள் கால் வைத்திருக்கிறது. இதன் விளைவு தற்போதும் மட்டும் ஆந்திரம் மாநிலம் கம்பம் மாவட்டத்தில் 4 பெண்களின் உயிர் காவு கொடுக்கப்பட்டுள்ளது. 120 பெண்களுக்கு கடுமையான பக்க விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. கொடுமை என்னவென்றால் இந்த பரிசோதனைக்கு 10 - 14 வயது கொண்ட 32 ஆயிரம் இந்திய சிறுமிகள் உட்படுத்தப்பட்டுள்ளனர். அதுவும் இந்தியாவின் ஏழைப்பெண்கள் பரிசோதனை எலிகளாக பயன்படுத்தப்பட்டுள்ளனர். பொது சுகாதார திட்டத்தில் இல்லாத எச்பிவி தடுப்பூசியை எப்படி மக்களுக்கு போட சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் அனுமதித்தது. இந்திய மருத்துவ கவுன்சில் என்ன செய்து கொண்டிருக்கிறது என்ற கேள்வியை மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் எழுப்பியுள்ளார்.
ஒரு மருந்தினை சந்தையில் அறிமுகப்படுத்துவதற்கு முன் அது அறிவியல் ரீதியாக முழு பரிசோதனை செய்யப்பட்டிருக்க வேண்டும். அந்த மருந்தை உட்கொள்வதால் ஏற்படும் விளைவுகள் மற்றும் பக்கவிளைவுகள் என்ன என்பதும் தெளிவு படுத்தியிருக்க வேண்டும். மேலும் அது எந்த அளவு உடலுக்கு பாதுகாப்பானது என்பதையும் நிருபித்திருக்க வேண்டும். அதன் பின்னர் அங்கீகரிக்கப்பட்ட தரச்சான்றிதழ் வழங்கும் அரசு நிறுவனத்திடமிருந்து தரச்சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட ஏராளமான சட்ட திட்டங்கள் இருக்கிறது. இவை எதுவுமே அமெரிக்காவின் மெர்க் நிறுவனத்திற்கு பொருந்தவில்லை. ஆனால் காங்கிரஸ் அரசும், பாஜக அரசும் நேரடியாக அப்பாவி ஏழை பெண்களுக்கு நிருபிக்கப்படாத ஒரு மருந்தை செலுத்த அனுமதித்து இருக்கிறது. குறைந்த பட்சம் அந்த நிறுவனத்தின் தரம் தராதரம் என்னவென்றாவது பார்த்திருக்க வேண்டுமல்லவா? அதைக்கூட ஆந்திராவின் காங்கிரஸ் அரசும், குஜராத்தின் பாஜக அரசும் பார்க்கவில்லை என்பது தற்போது தெரியவந்துள்ளது.
அமெரிக்காவின் மெர்க் நிறுவனம் ஏற்கெனவே எவ்வளவு மோசடி வேலைகளில் ஈடுபட்டிருக்கிறது என்ற பட்டியல் நீள்கிறது. கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு மெர்க் நிறுவனம் ‘ வயாக்ஸ் ‘ என்ற வலிநிவாரணி மருந்தை (Non Steroidal anti inflammatory drug) தயாரித்து விற்பனை செய்து வந்தது. ஆனால் இந்த மருந்தை உட்கொண்டவர்களுக்கு இதய நோய் சார்ந்த பக்க விளைவுகளை ஏற்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே சந்தையில் இருந்த வயாக்ஸ் மருந்து திரும்ப பெறப்பட்டது. அதிலிருந்து ஒவ்வொன்றாக மெர்க் நிறுவனத்தின் மோசடித்தனங்கள் வெளியில் வரத்துவங்கியது. சந்தையில் உள்ளவர்களை நம்பவைக்க வேண்டும் என்றால் அறிவியல் ரீதியாக வெளிவரும் பத்திரிகையில் ஒரு மருந்தின் தரம் உறுதிபடுத்தப்பட்டால் அதனை நம்பி வாங்குவதற்கு யாரும் தயக்கம் காட்ட மாட்டார்கள். அதை எப்படி உருவாக்குவது என்று எண்ணிய மெர்க் நிறுவனம் ஏற்கனவே அறிவியல் நிகழ்வுகளை பிரதானமாக தாங்கி வரும் ஒரு பத்திரிகையை தேர்ந்தெடுத்தது. ஆனால் அந்த பத்திரிகையில் செய்தியை இடம் பெறச் செய்வதற்கு பதிலாக அந்த பத்திரிகையையே போலியாக தயார் செய்தது என்பதுதான் உச்சகட்டம்.
ஆஸ்திரேலியாவை சேர்ந்த அனுபவ மிக்க பிரபல மருத்துவர் ஒருவர், மெர்க் நிறுவனம் அளித்த நான்கு விஞ்ஞான பத்திரிகைகளை ஆழமாக அலசி ஆராய்ந்த போது சில நெருடல்கள் ஏற்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து அவர் சம்பந்தப்பட்ட பத்திரிகையை தொடர்பு கொண்டு கேட்ட போது ஆஸ்திரேலிய மருத்துவர் கையில் இருந்த பத்திரிகை தங்கள் பத்திரிகை அல்ல என்பதை உறுதிபடுத்தினர். அது போலி என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அது வழக்காக மாறியது. அந்த வழக்கில் தனக்கு எதிராக இருந்தவர்களை எப்படி ‘கவனித்து’ கவிழ்த்தது என்பது தெரிய வந்தது. சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் சிலரின் மேற்படிப்புக்கு பணமும், அவர்கள் ஆய்வு செய்வதற்குரிய பணமும், அவர்கள் மருத்துவ பள்ளி நடத்துவதற்கு உதவியும் என்று சகலவிதத்திலும் மருத்துவர்களை கவனித்துள்ளது. இந்நிறுவனம் விரித்த ‘அன்பு’ வலைக்குள் சிக்காத மருத்துவர்களை அவதூறு செய்தும், மிரட்டியும் சமாளித்துள்ளது. தனது பலத்தை அனைத்து விதங்களிலும் பயன்படுத்தியது
இது மட்டுமல்ல ஒரு நாட்டின் அமைச்சர்களையே தனது பணத்தால் கவிழ்த்த கதையும் உண்டு. இங்கிலாந்து நாட்டிலுள்ள தகவல் அறியும் உரிமை சட்டத்தின்படி தி கார்டியன் பத்திரிகை வெளியிட்டுள்ள விஷயம் அப்போது இங்கிலாந்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வயாக்ஸ் மருந்து சாப்பிட்டதன் காரணமாக இதயநோய் சம்பந்தமாக பக்கவிளைவு இங்கிலாந்திலும் ஏற்பட்டது. இது பெரும் பிரச்சனையாக மாறியது. அப்போது சில அமைச்சர்கள் இந்த பிரச்சனையை கையிலெடுத்து பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு எதிராக குரல் கொடுத்தனர். அந்த அமைச்சர்களை குறிவைத்த மெர்க் நிறுவனம் அவர்களை தனது வலைக்குள் விழ வைத்தது. அவர்களை அந்தர் பல்டி அடிக்கும் அளவிற்கு கவனித்திருந்தது என அந்த பத்திரிக்கை கூறுகிறது.
அப்படிப்பட்ட நிறுவனம் இந்தியாவிற்குள் பாஜக ஆளும் குஜராத்திலும், காங்கிரஸ் ஆளும் ஆந்திராவிலும் எவ்வித அரசின் சட்டத்திட்டங்களுக்கும் உட்படாமல் தனது சோதனையை நடத்தியிருக்கிறது. ஏழை இளம் பெண்களை பரிசோதனை எலிகளாக பயன்படுத்தியிருக்கிறது. அப்படியென்றால் சட்டங்களையும், அரசு விதிமுறைகளையும் மீறுவதற்கு யார் யாரை எல்லாம் ‘கவனித்திருக்கும்’? பாரபட்சமற்ற நீதி விசாரணையே உண்மையை வெளிக்கொண்டு வரும்.
(நன்றி: தீக்கதிர்)
நீக்கப்பட்ட, ஆனால் நீக்கமுடியாத காட்சி!
இதுவேறு இதிகாசம் ஆவணப்படம் எடுக்கும்போது, பேராசிரியர் தொ.பரமசிவன் அவர்கள் சாதிய அடுக்குகள் குறித்து விளக்கிப் பேசியதை பேட்டி எடுத்தோம். அதை காட்சியாக மாற்றும் நோக்கில் இந்த flash work செய்திருந்தேன். படத்தின் நீளம் கருதி, பல முக்கியமான காட்சிகள் நீக்கப்பட்டன. அதில் இதுவும் ஒன்று.
குட்டிப் பிசாசு!
வாரக் கடைசியில் அவன் வீட்டுக்கு வந்திருந்தான். தாவிச் சென்ற குழந்தை அவனது தோளில் இருந்து இறங்கவே இல்லை. பயணக்களைப்பு, அசதி எல்லாம் மறந்து கொஞ்சிக்கொண்டு இருந்தான்.
”வாம்மா, அப்பா குளிச்சிட்டு வந்து சாப்பிடட்டும்.” அழைத்தாள் அவள்.
“வரமாட்டேன் போ” என்றது குழந்தை.
அவனும் அவளும் சிரித்துக்கொண்டார்கள்.
“இரும்மா, இதோ வந்துர்றேன்” என்று கொஞ்சலாய்ச் சொல்லி பாத்ரூம் சென்றான். கதவருகிலேயே நின்று கொண்டு “அப்பா... அப்பா, வாப்பா” என காத்திருந்தது குழந்தை.
சாப்பிடும்போது அவன் மடியில் ஏறி உட்கார்ந்துகொண்டது. “இதென்ன பழக்கம். இப்பிடி உக்காந்தா அப்பா சாப்பிட கஷ்டமாயிருக்கும். எறங்கு..” என்று குழந்தையைத் தூக்கச் சென்றாள் அவள்.
“ம்ஹூம்... வரமாட்டேன் என்று கைகளை இறுக்கக் கட்டிக்கொண்டு முகத்தைத் திருப்பியது.
”நல்ல புள்ளைல்ல.... வாயேன்..” கெஞ்சினாள்.
“ம்ஹூம். போ”
அவன் சிரித்துக்கொண்டான். “இருக்கட்டுமே” என்றான். செல்லமாய் முறைத்தபடி அவள் அவனைப் பார்த்து அழகு காட்டினாள்.
“அப்பா இல்லாதப்போ அம்மாவைத்தான கொஞ்சுவே... அம்மாதான் எனக்குப் பிடிக்கும்னு சொல்லுவே... இப்ப மட்டும் என்னவாம்”
“நீ மட்டும் என்னவாம்… அப்பா வந்தா என்ன மறந்துருவே. அப்பாவைத்தான் கவனிப்பே”
சிரித்தான். சாப்பிட்டுக் கொண்டிருந்தவனுக்கு புரை ஏறியது. “வாலு என்னவெல்லாம் பேசுது பாருங்க...” அவள் அவன் தலையைத் தட்டினாள். குழந்தையும் எழுந்து அவன் தலையைத் தட்டியது.
படுக்கையில் அவனுக்கு அவளுக்கும் நடுவில் வந்து, அவனைக் கட்டிக்கொண்டது. அதுபாட்டுக்கு பேசிக்கொண்டே இருந்தது. அவளும் தட்டிக்கொடுத்துப் பார்த்தாள். தலை முடிக்குள் கோதிவிட்டுப் பார்த்தாள். குழந்தை தூங்குவதாய் தெரியவில்லை. “குட்டிப் பிசாசு” என்று முணுமுணுத்து வேறு பக்கம் திரும்பிக்கொண்டாள். அவனும் நெடுநேரம் பேசித் தூங்கிப் போனான்.
எப்போதோ அவனுக்கு விழிப்பு வந்து பார்த்தபோது அவள் நன்றாகத் தூங்கிக் கொண்டு இருந்தாள். குழந்தை அவன் மீது கால் போட்டுக்கொண்டு, கழுத்தைக் கட்டிக் கிடந்தது. அந்தப் பிஞ்சுக் கால்களையும், கைகளையும் மெதுவாய் விலக்கினான். வலித்தது அவனுக்கு.
அமர்ந்திருக்கிறார் மரணத்தின் முனைகளில் - 2
இந்தப் படத்தையும், அதற்கு எஸ்.வி.வேணுகோபால் எழுதிய கவிதையையும் ‘அமர்ந்திருக்கிறார் மரணத்தின் முனைகளில்’ என்று ஒரு பதிவு எழுதி இருந்தேன் சில நாட்களுக்கு முன்பு.
பலர் அதிர்ச்சியடைந்து கருத்து தெரிவித்திருந்தார்கள். சிலர் தங்கள் பின்னூட்டங்களை கவிதையாகவே வெளிப்படுத்தி இருந்தனர். அவைகளைத் தொகுத்து இந்த பதிவு.
கவிதைகளுக்கும், அதை எழுதியவர்களுக்கும் செய்யும் சிறு மரியாதை.
எரவானத்துல வச்சிருந்த
சின்ன ஓலைக் கொட்டான
தேடி எடுத்து கை விட்டு
செருகின எடத்துல
பார்த்தா... ரூவாய காணோம்!!
எடுவட்ட பய எடுத்துட்டு
போயிருப்பானோ?
குடிச்சு கொல்லையில போக...
பிணந்தின்னி கழுகா
வந்து வாய்ச்சிருக்கு எனக்குன்னு...
இழுத்துகிட்டு கிடக்குற
ஆத்தாவா பாக்க எப்படி போகப்போறேன்
உள்ளூருலையே விருமாண்டி மாமனுக்கு
கட்டி கொடுத்திருந்தா
இத்தனை சீப்பட வேண்டாம்
அதுக்கும் நாப்பொழப்பு தான்
இன்னவரை
இருக்குற இரண்டு
துணிய பழைய சீலைல
மூட்டைய கட்டிக்கிட்டு
ரயிலேற கிளம்பிட்டேன்...
ஆத்தாவுக்கு எப்படி இருக்குமோ
மனசு கிடந்து அடிச்சுக்குது
டேசனுக்கு போனா
ஜனமான ஜனம்
மதுரை வீரன் கோயில் திருவிழா கணக்கா
இதுல நமக்கு எடம் எப்படி
கிடைக்குமோ...
கருப்பசாமி! எப்படியாச்சும்
போய்டணும் மனசு வை சாமீ!
காசில்லாம போக கக்கூசு தான்
வழின்னு போனா
அங்க ரெண்டு பம்மிகிட்டு நிக்கி
என்னத்தை செய்ய
சீலைத்துணி மூட்டைய அடியில
கொடுத்து ரெண்டு பொட்டிக்கு
நடுவுல ஒக்காந்து போய்டலாம் தான்
குண்டி கடுத்து போகுமே...
தூரச்சீல வேற நகண்டுகிட்டே
இருந்தோலைக்கும்
அவஸ்தையான அவஸ்தை
ஆம்பளைய பொறந்தா இதெல்லாம்
இல்லாம பெட்டி மேலே
ஒக்காந்து வரலாம்
பொறந்தது பொட்ட கழுதையா
சுமக்க மாட்டாம பொதி கனமா
போச்சு வாழ்க்கை
பிடிச்சுக்கிட கம்பி
இருந்ததால வந்து சேர்ந்தேன்
உன்னை பார்க்க
ஆத்தா மேல எம்புட்டு
உசுர வச்சிருக்க புள்ள...
அம்மா கட்டிக்கிட்டு அழுதா...
கொஞ்ச நேரம் இருந்துட்டு
சொம்பு தண்ணீ குடிச்சப்புறம்
தங்கச்சி கிட்ட
அம்மாவ பாத்துக்கிடு
நான் ராணியக்கா வீட்டு வரைக்கும்
போயிட்டு வாரேன்
ராணியக்கா வீட்டிற்கு
போகும் வழியில்
விருமாண்டி மாமா வீட்டிற்குள்
எட்டி பார்த்து கொண்டே கடந்தாள்
ஓடும் வேகத்தில் கழிவறை கசடுகள்
காலுக்கு வருகையில்தான்
உயர்த்தவும் கூடாமல் உள்ளிழுக்கவும் ஆகாமல்
திருட்டு சிகரெட்டை அணைக்காமல் வீசும்
மகராசர்கள் வீட்டை நினைவுறுத்துகிறார்கள்
கருப்பு கோட்டு காரர்களுக்கு
கப்பம் காசும் கொஞ்சம் வேசை பட்டமும்
குட்கா தெறிக்க பேசும் மேலிருப்பவன்
கண்ணுக்கு செலவு வைக்காமலிருக்கட்டும் கர்த்தாவே
எத்தனை ரயில் விட்டாலும்
ஏற்றித்தர மனதில்லை சம்பளத்தை எசமனர்களுக்கு
சுவாமி:
மனச்சுமை இறக்க ஒரு பயணம்.
எனது வாழ்க்கையை விடவா கடினம்.
வாய்தவர்களுக்கு உள்ளே பயணம்.
ஏன் இந்த கடின நிலைமை எனக்கு.
சிந்திக்க நேரம் இதுவல்ல.
எனக்கு நிம்மதி தரும் தயனம்
கிடைக்கும் வரை சலனமில்லா இப்பயணம்
எனது வாழ்கையை விடவா கடினம்.
இரா. விஜயசங்கர்:
எனது அன்றாட வாழ்க்கை
இந்தப் பயணத்தை விடவும் கொடுமையானது...
சிக்கித் தத்தளிக்கிறேன்
கந்துவட்டிக்காரர்களுக்கும்
எனது குழந்தைகளின் பசி மிஞ்சிய வயிறுகளுக்குமிடையில்
எனது குடிகாரக் கணவனுக்கும்
தெருவில் அலையும் காமாந்தகாரர்களுக்குமிடையில்
இரக்கமற்ற புல்டோசர்களுக்கும்
நொறுங்கி வீழ்ந்து கொண்டிருக்கும் எனது குடிசைக்குமிடையில்
ஒழுகிக் கொண்டிருக்கும் கூரைகளுக்கும்
உயர்ந்து கொண்டிருக்கும் ஆற்று வெள்ளத்திற்குமிடையில்
சிக்கித் தத்தளிக்கும்
எனது அன்றாட வாழ்க்கை
இந்தப் பயணத்தை விடவும் கொடுமையானது.
அனானி:
உயிரின் மீது ஆசையில்லை.
வாழ்க்கையின் மீது உண்டு.
நாளை என்பது வேறுதான்.
இன்றே இல்லை.
விடியல் மட்டும் பார்க்கின்றது
ஏதோ ஒன்று மாறுகிறது.
ஒவ்வொன்றாய் ஒவ்வொன்றாய்
கடைசியில் எல்லாம்.
கை இறுக பற்றிக் கொண்டிருக்கிறது
மாற்றத்தை எதிர்பார்த்து.
சித்திரதீபா:
எந்தப் பயணம் ஆனாலும்
அதில் எத்தனை அபாயம் இருந்தாலும்
பெண் எப்போதும் ஆண்களின் காலடியில்தான்
வரிசையாக எத்தனை கால்கள்!
ஒரு கால் உதைத்து அடக்கும்
ஒரு கால் அலட்சியமாய் தூசியை தட்டிவிடும்
ஒரு கால் ஆணவமாய் மறுகாலின் மீது அமரும்
எந்தக் கையாவது என்றாவது அவளுக்கு ஆதரவாய் நீளுமா?
எங்கோ தவறு நடக்கவில்லை, உள்துறை அமைச்சர் அவர்களே!
இன்றைக்கு இந்தியாவின் அனைத்துப் பத்திரிகைகளிலும் முதல் பக்கத்தின் கொட்டை எழுத்துக்கள் 75 போலீசார் சுட்டுக்கொல்லப்பட்டதாகவே இருக்கின்றன. “சட்டீஸ்கரில் பயங்கரம்”, “மாவோயிஸ்டுகள் கொடூரத் தாக்குதல்”, “நக்சலைட்டுகள் காட்டுமிராண்டித்தனம்” என்று கிட்டத்தட்ட ஒரே மாதிரியான வார்த்தைகளுடன் கூடிய செய்தியாகவே அது சொல்லப்பட்டு இருக்கிறது. “நக்சலைட்டுகளை இரண்டு ஆண்டுகளுக்குள் ஒழித்துக் கட்டுவோம்” என்று மத்திய அரசு அறிவித்த 48 மணி நேரத்திற்குள் இப்படி ஒரு சம்பவம் நிகழ்த்தப்பட்டு இருக்கிறது. பிரதமர் மன்மோகன்சிங் அதிர்ச்சியடைந்திருக்கிறார் என்பதும் கட்டம் கட்டப்பட்ட இதனுடனான இணைப்புச் செய்தியாக இருக்கிறது.
மாவோயிஸ்டுகளின் இத்தகைய தாக்குதல்களை ஆதரிக்க முடியாது. அவர்களுடைய இலட்சியங்களில், கொள்கைகளில், பிரகடனங்களில் எவ்வளவு நியாயங்களை அவர்கள் எடுத்துரைத்தாலும், ஆயுதமேந்தும் அவர்களது வழிமுறைகளை ஒத்துக்கொள்ள முடியாது. அங்கங்கு நடைபெறும் இதுபோன்ற செயல்கள், பொதுஜனப் பரப்பிலிருந்து அவர்களைத் தனிமைப்படுத்தவே உதவும். விரிவாக பேச வேண்டிய இந்த தேசத்தின் முக்கிய விவகாரம் இது.
மத்திய உள்துறை அமைச்சர் திரு.ப.சிதம்பரம் அப்படி யோசிப்பதாகத் தெரியவில்லை. “எங்கோ தவறு நடந்திருக்கிறது” என்று திருவாய் மலர்ந்தருளி இருக்கிறார். இந்த வார்த்தைகள் மூலம் என்ன சொல்ல வருகிறார் அவர். எல்லாம் சரியாக நடந்துகொண்டு இருப்பது போலவும், எதோ அறியாமல் சிறு கோளாறு நடந்துவிட்டது போலவும் புரிந்து கொள்ளலாம். மிகத் திட்டமிடப்பட்ட நடவடிக்கையில், எதோ ஒரு இடத்தில் கவனம் செலுத்தாமல் இருக்கிறது, அதை ஆராய்ந்து சரிசெய்ய வேண்டும் என்கிற எச்சரிகையாகவும் கொள்ளலாம். எப்படியானாலும், இது அரசின் நடவடிக்கையில் தெரியாமல் நிகழ்ந்த பிழையாகவும், அதில் 75 காவல்துறையினர் பலி ஆனதாகவும் அர்த்தம் வருகிறது.
“எங்கோ தவறு நடக்கவில்லை, மத்திய அமைச்சர் அவர்களே, எங்கும் தவறுகள் நடக்கின்றன” என்பதை உரக்கக் கத்திச் சொல்ல வேண்டும் போல் இருக்கிறது. சுதந்திர இந்தியாவின் அறுபதாண்டுகளுக்கும் மேலாக நீங்கள் ஆட்சி செய்த லட்சணத்தின் எதிர்வினைகளே இதுபோன்ற விரும்பத்தகாத நிகழ்வுகள் என்பதை பகிரங்கமாய் அறிவிக்க வேண்டி இருக்கிறது. பழங்குடி மக்களும், விவசாயக் கூலிகளும் இந்த தேசத்தில் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டதன் விளைவுகளே இவை என்பதை உங்கள் புத்தியில் கொஞ்சமாவது ஏற்றிக்கொள்ளுங்கள் என்று பாடம் புகட்ட வேண்டி இருக்கிறது. முதலாளித்துவத்தின் கொழுப்பில் தயாரிக்கப்பட்ட உங்கள் பொருளாதாரக் கொள்கைகள் இந்த அடித்தட்டு மக்களை வாழ்வின் விளிம்பில் கொண்டு போய் நிறுத்தியிருக்கின்றன என்பதை சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது. இந்த அறுபதாண்டுகளில், வானம் பார்த்து, இந்த மண்ணில் விழுந்து கதறிய எளிய மக்களின் அழுகுரல்களை என்றைக்காவது மதித்ததுண்டா, உங்கள் அரசு? ஜனநாயகப் பாதையை தேர்ந்தெடுத்து செயல்படும் இடதுசாரிக் கட்சிகளுக்கு எதிராகவும், புறம்பாகவும் நீங்கள் இதுவரை நடத்திய நேர்மையற்ற, அருவருப்பான அரசியலின் பக்க விளைவுதானே இது!
இந்தியாவில் கோடிஸ்வரர்கள் அதிகமாகிய கடந்த பத்தாண்டுகளில்தான் இங்கு மாவோயிஸ்டுகளின் நடவடிக்கைகளும் அதிகமாயிருக்கின்றன. குறிப்பிட்ட பிரதேசங்களில் அவர்களுக்கு செல்வாக்கும், ஆதரவும் கூடியிருக்கின்றன என்னும் யதார்த்தத்தை, உண்மையை முதலில் இங்கு அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். அவர்கள் பின்னாலும் மக்கள் திரளுகிறார்கள் என்பதை ஒப்புக்கொண்டாக வேண்டும். ஜனநாயகத்தைப் பேசுபவர்கள் இதனை அலட்சியம் செய்துவிட முடியாது. தேசத்திற்கு விரோதமாய்ச் செயல்படும் தீவீரவாதிகளுக்கும், இந்த நக்சலைட்களுக்கும் உள்ள அடிப்படை வித்தியாசங்களை புரிந்துகொள்ள வேண்டும். அதுதான் இந்தப் பிரச்சினையை சரியாக அணுக உதவும்.
பணத்தைக் கொட்டினால், தேர்தலில் வெற்றி என்றான பிறகு இங்கு யாருக்கு, எப்படி ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வரமுடியும்? காலமெல்லாம் பள்ளத்தில் விழுந்து கிடப்பவர்களுக்கு இந்த தேசத்தின் மீது என்ன பற்று வர முடியும்? மக்களிடம் தொடர்ந்து பாகுபாடுகளை நிறுவியும், அதைப் போற்றியும் வருவதே இந்திய அரசியலின் தன்மை என்றால் அதன் மீது எப்படி கேள்வி எழாமல் இருக்க முடியும்?
75 காவல்துறையினரின் குடும்பங்களின் அழுகையும், துயரமும் கொடியது. தாங்க முடியாதது. அதை எடுத்து, ஆட்சியாளர்களே உங்கள் கோர முகத்தை போர்த்திக்கொள்ள வேண்டாம். மக்கள் முன்னால் எல்லாவற்றையும் பேசுங்கள். நீங்கள் செய்த தவறுகளையும், சரியானவற்றையும் பேசுங்கள். உங்கள் நியாயம், அநியாயம் இரண்டையுமே சொல்லுங்கள். ‘எங்கோ நடந்த’ தவறை சரி செய்வார்கள் மக்கள்.
ஒரு குழந்தையின் பார்வையில் அங்காடித்தெரு!
’படம் பிடிச்சிருக்கா’ என்று அங்காடித் தெரு பார்த்துவிட்டு வந்த இரவில் மகனிடம் கேட்டேன். அவனுக்கு எட்டு வயது. மூன்றாம் வகுப்பு படிக்கிறான். எல்லோரிடமும் இருந்த கனத்த மௌனம் அவனிடமும் இருந்தது. திரும்பவும் கேட்டேன். எங்கேயோ பார்த்தபடி தலையை ‘இல்லை’ என்பதாய் அசைத்தான்.
“ஏண்டா...?” என்றேன்.
“அவனை எல்லோரும் அடிச்சாங்க. அவன் திருப்பியே அடிக்கல “
“அவனும் கடைசியில அடிச்சானே”
“இல்லப்பா. அவங் கொஞ்சம்தான் அடிச்சான். அதுக்குள்ள எல்லாரும் சேர்ந்து அடிச்சாங்க.”
“அவன் தனியா என்னடா செய்வான்?”
“இல்லப்பா. விஜய், அஜித், விஷால்னா தனியாவே எல்லாரையும் அடிச்சிருவாங்க. இவனால முடியல.”
“ஒருத்தனா இருந்து எல்லாரையும் அடிக்கிறது எல்லாம் பொய்டா. அப்படில்லாம் அடிக்க முடியாது. நாமும் நிறைய பேரைச் சேர்த்துக்கிட்டுத்தான் திருப்பி அடிக்க முடியும்”
“என்னால முடியும். நானும் தனியாவே எல்லாரையும் அடிச்சிருவேன்.”
“போடா, போயி நீயும் அந்தக் கடையிலப் போயி வேலை பாரு. எல்லாரையும் போயி அடி பாப்போம்” என்றாள் பொறுக்க முடியாமல் அவளது அக்கா, எனது மூத்த மகள்.
“அய்யோ, நா மாட்டேம்பா, நா மாட்டேம்பா, அந்தக் கடையில எல்லாம் நா வேலைக்குப் போக மாட்டேம்பா..” என்று கைவிரல்களை பதைத்து அசைத்தான்.
“இல்லயில்ல... ஒன்ன அங்கதா வேலைக்கு அனுப்பப் போறோம். அப்படித்தான அப்பா” என்று அக்கா சீண்டினாள்.
சட்டென்று உடலெல்லாம் அதிர்ந்து போனவனாய், கைகால்களை உதறியபடி “அப்பா, இவளப் பாருங்க.... என்னயப் போயி அந்தக் கடையில வேல செய்யச் சொல்றா..” என்று லேசாய் மூச்சிரைத்தான்.
“நீ நல்லாப் படிக்கலன்னா, அந்தக் கடைக்குத்தான் போகணும்” அவள் விடவில்லை.
“அப்பா, இவளப் பாருங்க.....” என்று சத்தம் போட்டுக் கத்தியவன், ஓவென்று அழ ஆரம்பித்தான். முகமெல்லாம் சுருங்கி, கண்ணீர் வழிய ஆரம்பித்தது.
மகளை, “சும்மா இருக்க மாட்டியா நீ...” என அதட்டிவிட்டு, அவனைத் தேற்றினேன். கண்ணீரைத் துடைத்து அவனை மடியில் தூக்கி வைத்துக்கொண்டேன். மெல்லத் தட்டிக்கொடுத்தேன். தேம்பிக்கொண்டே இருந்தான்.
“நா, நல்லாப் படிப்பேம்பா, நல்லாப் படிச்சிருவேம்பா...” என்று சொல்லிக்கொண்டே தூங்கிப் போனான்.
நேற்று, டி.வியில் ‘அங்காடித் தெரு’ விமர்சனமும், சில காட்சிகளும் ஒளி பரப்பிக்கொண்டு இருந்தார்கள். மனதைப் பிசையும் அதிர்வுகள் நிரம்பிய பின்னணி இசை ஒலிக்க, விளக்கு வெளிச்சங்கள் வெட்டிப்பறிக்கும் ரெங்கநாதன் தெரு வந்தது. கொஞ்சம் தள்ளி இருந்த மகன் என்னருகே வந்து ஒட்டி உட்கார்ந்து கொண்டான். என் இடது கைக்குள் தனது வலது கையை விட்டு கெட்டியாய்ப் பிடித்துக் கொண்டான்.
ஒரே ஒரு நாள்!
தோசையில் உப்பு கூடிவிட்டதென்று உண்ணாவிரதம் இருந்தான். தலை வாரியச் சீப்பில் முடி சுற்றிக் கிடந்ததற்கு, வீடே நரகம் என முடிவுக்கு வந்தான். அலமாரியில் முதல் தட்டின் இடது ஓரத்தில் இருந்த நகவெட்டி இடம் மாறியதை நாளெல்லாம் சொல்லிக் காட்டினான். அன்றைய பேப்பரென்று பார்க்காமல், அதில் சப்பாத்தி உருட்டி வைத்ததற்கு குடியே முழுகிப் போனதென்று கத்தினான்.
ஒரே ஒருநாள், வாசலில் அந்த நேரம் பார்த்து காய்கறிக்காரன் வந்து நிற்கவும், ’குக்கரில் மூணு விசில் அடிச்சவுடனே அடுப்பை சிம்மில் வையுங்க’ என்று சொல்லி வெளியே சென்றாள்.
கொஞ்சம் கவனம் தப்பியவனுக்கு, அடித்தது முதல் விசிலா, இரண்டாவது விசிலா என்று தலை சுற்றியது.
அப்பா தி.மு.க! புதிய கட்சி உதயம்!!
அப்பாவைத் தவிர வேறு யாரையும் தனது தலைவராக ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் கடமையோடு சொல்லிவிட்டார்.
அதற்காக அவரையேத் தலைவராக ஏற்றுக்கொள்வதா என கண்ணியத்தோடு உடன்பிறப்புகள் கேட்கிறார்கள்.
அப்படி இல்லையென்றால் அப்பா தி.மு.க என்று புதிய கட்சி உதயமாவதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது என கட்டுப்பாடு மிக்கவர்கள் அறிவிக்கிறார்கள்.
இராமன் ஆண்டாலென்ன, இலட்சுமணன் ஆண்டாலென்ன, பரதன் ஆண்டாலென்ன? தசரதன் பேர் நிற்கும்.
சட்டத்தை அமல்படுத்துவதில் அரசு உறுதி காட்டுமா?
நாடு சுதந்திரமடைந்து 63 ஆண்டுகள் ஆகப்போகின்றது. கல்வி உரிமைச்சட்டம் இப்போதுதான் அமலுக்கு வருவதாய் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் 6 முதல் 14 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் இலவச, கட்டாய ஆரம்பக்கல்வி வழங்கப்பட்டாக வேண்டும். முற்போக்கு இயக்கங்களும், இடதுசாரிக் கட்சிகளும் வலியுறுத்தியும் போராடியும் வந்ததன் விளைவுதான் இந்த சட்டம் பற்றிய அறிவிப்பு.
“கல்வி பெறுவதை அடிப்படை உரிமை என்பதை அரசு உணர்ந்துள்ளது. அதைச் செய்லபடுத்த அரசு உறுதியுடன் பணியாற்றும்” என்று நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சியில் பிரதமர் மன்மோகன் சிங் நேற்று பெருமை பொங்கச் சொல்லி விட்டார்.
இந்தச் சட்டம் என்ன சொல்கிறது என்பதை முதலில் தெரிந்துகொள்வோம்.
- நாட்டில் பள்ளிக்குச்செல்ல வாய்ப்பு மறுக்கப்பட்ட, இடையிலேயே பள்ளிப்படிப்பை நிறுத்திய குழந்தைகள் உட்பட சுமார் 92 லட்சம் குழந்தைகளுக்கு கட்டாயக்கல்வியும், 6 வயது முதல் 14 வயது வரையிலும் உள்ள அனைத்து குழந்தைகளும் அவசியம் ஆரம்பக்கல்வியும் அளிக்க வேண்டுமென கல்வி உரிமைச்சட்டம் வரையறுத்துள்ளது.
- இச்சட்டத்தின்படி எந்தவொரு குழந்தைக்கும் எந்த பள்ளியும் அனுமதி மறுக்கக்கூடாது; பயிற்சிபெற்ற ஆசிரியர்கள் உடனடியாக பணியில் அமர்த்தப்படவேண்டும்; பள்ளிகள் போதிய அளவு ஆசிரியர்கள், மைதானம், அடிப்படை வசதிகளைக் கொண்டதாக இருக்க வேண்டும்; குழந்தைகளின் இருப்பிடத்திலிருந்து 1 கிலோ மீட்டர் தூரத்திற்குள் அவசியம் ஒரு ஆரம்பப்பள்ளி இருக்க வேண்டும் என்பதை மாநில அரசும் உள்ளூர் நிர்வாகங்களும் உறுதி செய்ய வேண்டும்.
- இச்சட்டத்தின்படி ஒவ்வொரு மாநில அரசும் தங்களது மாநிலத்தில் ஒவ்வொரு குழந்தையும் இலவச ஆரம்பக்கல்வி பெறுவதை உறுதி செய்ய வேண்டும். மத்திய அரசும், மாநில அரசுகளும் 55:45 என்ற விகிதத்தில் நிதி ஒதுக்கிட வேண்டும்.
- இச்சட்டத்தின்படி தனியார் கல்வி நிறுவனங்களும் சமூகத்தில் ஏழை, எளிய மற்றும் ஒடுக்கப்பட்ட பிரிவுகளைச் சேர்ந்த குழந்தைகளுக்கு 25 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்க வேண்டும்.
- ஒவ்வொரு பகுதியிலும் பள்ளி நிர்வாகக்குழு அல்லது உள்ளாட்சி அமைப்புகள் பள்ளிக்குச் செல்லாத குழந்தைகளைக் கண்டறிந்து, அவர்கள் பள்ளி செல்வதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.
இச்சட்டத்தை நிறைவேற்ற அரசு முன்வைக்கும் திட்டம் இதுதான்:
- தற்போதைய நிலவரத்தின்படி இந்தியாவில் 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பிரிவில் சுமார் 22 கோடி குழந்தைகள் உள்ளனர். இவர்களில் 4.6 சதவீதம் பேர் (சுமார் 92 லட்சம்) மட்டுமே பள்ளிக்கூடத்திற்கு வெளியில் இருக்கிறார்கள் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் கூறுகிறது.
- இச்சட்டத்தை அமல்படுத்த ரூ.25 ஆயிரம் கோடியை மத்திய நிதிக்கமிஷன் ஒதுக்கி உள்ளது. அடுத்த 5 ஆண்டு காலத்தில் இச்சட்டத்தை அமல்படுத்த ரூ.1.71 லட்சம் கோடி தேவைப்படும் என்று மதிப்பீடு செய்துள்ளது.
- இச்சட்டம் அரசியலமைப்புச்சட்டத்திற்கு எதிரானது என்று கூறி தனியார் சுயநிதி கல்வி நிறுவனங்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளன. வழக்கு நடந்தாலும் சட்டம் அமலாகும் என்று அரசு கூறியுள்ளது.
சட்டத்தை நிறைவேற்ற அரசு உண்மையிலேயே எடுக்க வேண்டிய நடவடிக்கைகள்:
- இச்சட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டுமானால் நாடு முழுவதும் அடுத்த 6 மாத காலத்திற்குள் 12 லட்சம் ஆசிரியர்களை வேலைக்கு எடுக்க வேண்டிய கட்டாயம் அரசுக்கு உள்ளது. ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் தகுந்த பயிற்சியை பெற்றிருக்க வேண்டும் என்று சட்டம் வரையறை செய்திருப்பதால், நாடு முழுவதும் மிகப்பெரிய அளவிற்கு ஆசிரியர் பயிற்சி திட்டங்களை அரசு செயல்படுத்த வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டுள்ளது.
- அடுத்த மூன்றாண்டு காலத்திற்குள் நாடு முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் போதிய வகுப்பறைகள், நூலக ஏற்பாடு, விளையாட்டு மைதானம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் மத்திய அரசும், மாநில அரசுகளும் செய்தாக வேண்டும்.
சட்டத்தை நிறைவேற்றுவதில் அரசு உறுதி காட்டுமா? சட்டத்தை அறிவித்த தேதி ஏபரல் 1ம் தேதி, முட்டாள்கள் தினம்.
போட்டோ: அமர்ந்திருக்கிறார் மரண முனைகளில்…

தவிப்பையும், தொந்தரவையும் தரும் இந்தப்படத்தைப் பார்த்து நண்பர் எஸ்.வி.வேணுகோபலன் எழுதிய கவிதை இது.
இறங்க வேண்டிய இடமும்
ஏறி மிதிக்க வேண்டிய தடமும்
ஓடிக் கொண்டிருக்கிறது ரயில்
அமர்ந்திருக்கிறாய் இரண்டு பெட்டிகளின் இடையில்
ஒரு வேகச் சுழற்சியில் தீவிரமாய்ச்சுழலும் ,
மாவு அரவை இயந்திரத்தின்
இரக்கமற்ற இரண்டு உருளைக் கற்கள் இடையே இருப்பதைப் போல்
நாலு கால் பாய்ச்சலில் செல்லும் ஒரு குதிரையின்
வயிற்றைக் கட்டித் தொங்கிக் கொண்டிருப்பதைப் போல்
வாழ்க்கையின் விதியே உதறியபின்னும்
அதன் ஒற்றை மெல்லிழையின் நுனியில் ஒட்டியிருப்பதைப் போல்
எல்லாம் தெரிந்த ஞானியைப் போல்
எதுவும் புரியாத குழந்தையைப் போல்
அமர்ந்திருக்கிறாய் ஒரு வேக வாகனத்தின்
மரண முனைகளில் ஒன்றின் மீது
தூரங்களை விழுங்கி விரைகிறது ரயில்
பசி, பட்டினி, அவச்சொல், அவமதிப்பு
எல்லாம் விழுங்கிய மிரட்சி தெரிகிறது
உனது கண்களில் .......
ஆட்டத்திலிருக்கும் உனது இருப்பையும்
அமைதிப் படுத்துகின்றன
உயரத்தில் தெரியும்
உனது மக்களின் கால்கள்.....
இறங்க வேண்டிய இடத்தை நோக்கிய
காத்திருப்பில் பயணிக்கிறீர்கள் கால காலமாய்..
ஏறி மிதிக்க வேண்டிய இடத்தை
யோசியுங்கள் இனி ஒரு மாற்றமாய்
பிற்சேர்க்கை:
படத்தின் பாதிப்பில் இங்கு இவர்கள் பின்னூட்டங்களையே கவிதைகளாக தந்திருக்கின்றனர். அவர்களுக்கு நன்றி. நீங்களும் படைக்கலாமே!
- ராகவன்
- நேசமித்ரன்
- vijaya sankar (ஒரு ஆங்கிலக் கவிதை)
- சுவாமி