நித்திய கண்டம்

(பிரமாதமாக கதைசொல்ல முடிகிறவர்கள், ஒன்று இரண்டோடு நிறுத்திக்கொள்கிறார்கள்.  90களின் ஆரம்பத்தில் ’விழுது’ என்னும் சிறுபத்திரிகை நாங்கள் நடத்திய போது, அறிவொளி இயக்கத்தோடு தங்களை இணைத்துக்கொண்ட  குக்கிராமத்து இளைஞர்கள் சிலரை  வலிய எழுதச் சொல்லி பிரசுரித்தோம். பாலு, குணசீலன், திருப்பதி என்னும் மூன்று பேர் எழுதினார்கள். ஒரே ஒரு கதையோடு நின்றுவிட்டனர்.  அப்படி வெளியான ஒரு கதை இங்கு.  தம்பி பாலு எழுதியது. சமீபத்தில் ஒருநாள் பேசிக்கொண்டு இருக்கும்போது கைப்பிரதியில் இன்னும் சில கதைகள் எழுதி இருப்பதாய்ச் சொன்னான். அவனைப்பற்றி இன்னொருநாள் பேசுவோம்)

நித்திய கண்டம்

லோடுக்குப் போய்விட்டு பிச்சை அப்போதுதான் வீடு திரும்பினான். உடம்பெல்லாம் புழுதி. குருத்து அவசரமாக வென்னி வைக்க ஆரம்பித்தாள். பருத்தி மாறை எடுத்து அடுப்பில் திணித்தாள். வந்த களைப்பில் சுவரில் சாய்ந்துகொண்டு குழந்தையுடன் கொஞ்சினான் பிச்சை. டவுசரில் இருந்து பீடியை எடுத்து பற்ற வைத்து ரெண்டு கன்னமும் குழிவிழ சுண்டி இழுத்தான்.

“பொங்கலுக்கு வரி கேட்டு கோயில்லருந்து வந்தாங்க” என்றாள் குருத்து.

“எவ்வளவு வரி போட்டுருக்காங்க”

“தலக்கட்டுக்கு நூத்தியொண்ணு”

அதற்குப் பிறகு இருவரும் பேசிக்கொள்ளவில்லை. அவள் அடுப்பு புகையோடும், அவன் பீடிப்புகையோடும் இருந்தார்கள். ரெண்டு பேருக்கும் இருமல் வந்தது. குழந்தையும் இருமியது. முதுகெல்லாம் அரிக்க சுவரில் உடம்பைத் தேய்த்துக் கொண்டான். யோசித்து யோசித்துப் பார்த்தான். ஒருவழியும் தெரியவில்லை.

“வென்னி வச்சாச்சு. குளிக்க வாங்க”

எழுந்து போய்க் குளித்தான். எவ்வளவு அலுப்பாய் இருந்தாலும் சுடச்சுட குளிக்கும்போது ஒத்தடம் கொடுத்த சுகம் கிடைக்கும். இன்று அதுவும் இல்லை. வீட்டிற்கு வெள்ளையடிக்கணும். வந்ததுபோனது எல்லாம் செம்மை செய்யணும். பொண்டாட்டி புள்ளைக்கு ஜவுளி எடுக்கணும். யோசனையாகவே இருந்தது சோர்ந்து போனான்.

“என்ன ஒரு மாரி இருக்கீங்க... ஒடம்பு சரியில்லயா?” தலை துவட்டிக்கொண்டு இருந்தவனை குருத்துக் கேட்டாள்.

“ஒண்ணுமில்ல. ஒடம்பு கொஞ்சம் அலுப்பாயிருக்கு”

குருத்து பதற்றமானாள். தனக்கென்று ஒன்று வந்தால் அதை லேசில் பிச்சை வெளியில் சொல்ல மாட்டான். வந்து ஈரக்கையை புடவையில் துடைத்து நெற்றியில் கைவைத்துப் பார்த்தான்.

“அதெல்லாம் ஒண்ணுமில்ல”

காய்ச்சல் லேசாய் இருந்தது. கல்யாணத்தின் போது பொட்டலம் போல பருத்திருந்தவன் இந்த மூன்று வருசத்துக்குள் எலும்பும் தோலுமாகிப் போயிருந்தான்.

“இருங்க கடைக்குப் போயி அலுப்பு மருந்து வாங்கிட்டு வந்துர்றேன்” கடைக்கு ஓடினாள். தெருவில் நடந்தபோது அவளுக்கு உடம்பெல்லாம் அதிர்ந்து போயிருந்தது. திரும்பி வரும்போது டிரைவர் கந்தசாமி, பிச்சையோடு பேசிக்கொண்டு இருந்தார்.

“அப்ப வர்றியா”

“வர்றேன்”

கந்தசாமி தரையில் விளையாடிக்கொண்டு இருந்த குழந்தையின் கன்னத்தைப் பிடித்து கொஞ்சிவிட்டுப் போனார். குருத்து மல்லிக்காப்பி போட்டுக்கொண்டு வந்து கொடுத்த போது, பிச்சை வெளியே போக ரெடியாகிக் கொண்டு இருந்தான்.

”என்ன பொறப்பட்டாச்சா... எங்க?”

காப்பி மணம் தொண்டைக்குழி வரை பாய்ந்தது. இதமாய் உணர்ந்தான்.

“இப்ப எங்க பொறப்படுறீங்க..”

”லாரிக்கு வெளியூரு டிரிப்பு இருக்குதாம். லோடுமேன் வேணுமாம்”

“இன்னிக்கும் போகணுமாங்க.... ஒடம்பு இருக்குற நெலமைல..”

அவன் பதில் சொல்லாமல் கிளம்பி வாசலைத் தாண்டி “வர்றேன்” என்றான்.

“இன்னிக்கும் போகணுமாங்க..”

“அப்புறம் என்னயத்தான் பொங்க வைக்கணும்” ஆத்திரமாய் சொல்லிவிட்டுப் போனான்.

அவள் கதவைப் பிடித்துக்கொண்டு அப்படியே நின்றுவிட்டாள். குழந்தையை தூக்கிவைத்து இருட்டிக்கொண்டு வந்த உலகத்தை வாசலில் உட்கார்ந்து பார்த்து கரைந்து போனாள். ராத்திரியில் பாத்திரம் கழுவியபோது பிச்சை காப்பி குடித்துவிட்டு வைத்துப் போன காலி டம்ளர் அவனது நினைவுகளை அள்ளி அள்ளித் தந்தது. படுத்துக் கொண்டாள்.குழந்தைக்கு யாரோ நிறைய சட்டைகள் தருவது போல கனவு வந்தது. குழந்தையும் சிரித்துக் கிடந்தது.

அதே கணத்தில் எங்கோ வெகு தூரத்தில் ஒரு லாரியை ஓவர்டேக் செய்ய வந்த பஸ்  வேகம் கூட்ட, லாரியும் வழிவிடாமல் வேகமாய் ஓட்ட எதிரே சில அடிகள் தூரத்தில் தனது லாரியை ஒட்டிக்கொண்டு வந்த கந்தசாமி குலையெல்லாம் நடுங்க, பிரேக் போட்டு ஒடித்தான். சில அங்குல இடைவெளியில் பஸ் இரைச்சலில் கடந்துபோனது. இருட்டில் மீண்டும் வெளிச்சம் பரப்பி லாரி  அந்த நெடிய ரோட்டில் ஓடியது.  பின்னால் அசந்து தூங்கிக் கொண்டு இருந்தான் பிச்சை.

கருத்துகள்

19 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. நல்ல நடை இருக்குங்க.
    மேலும் தொடரச் சொல்லுங்கள்.

    பதிலளிநீக்கு
  2. ///அதே கணத்தில் எங்கோ வெகு தூரத்தில் ஒரு லாரியை ஓவர்டேக் செய்ய வந்த பஸ் வேகம் கூட்ட, லாரியும் வழிவிடாமல் வேகமாய் ஓட்ட எதிரே சில அடிகள் தூரத்தில் தனது லாரியை ஒட்டிக்கொண்டு வந்த கந்தசாமி குலையெல்லாம் நடுங்க, பிரேக் போட்டு ஒடித்தான்.///

    நல்ல வேலை, வேறு எதுவும் நடக்க வில்லை!!!

    மனதை தொடும் அருமையான கதை!!!

    ஆனால் இது கதை அல்ல நிஜம்!!!

    பதிலளிநீக்கு
  3. அருமையான சிறுகதை பாலு.தொடர்ந்து எழுதுங்கள்.

    பகிர்விற்கு நன்றி மாது.

    பதிலளிநீக்கு
  4. //////அதற்குப் பிறகு இருவரும் பேசிக்கொள்ளவில்லை. அவள் அடுப்பு புகையோடும், அவன் பீடிப்புகையோடும் இருந்தார்கள். ரெண்டு பேருக்கும் இருமல் வந்தது. குழந்தையும் இருமியது. முதுகெல்லாம் அரிக்க சுவரில் உடம்பைத் தேய்த்துக் கொண்டான். யோசித்து யோசித்துப் பார்த்தான். ஒருவழியும் தெரியவில்லை. /////


    எழுத்தில் எதார்த்தம் நிரம்பி வழிகின்றன . மிகவும் அருமை . பகிர்வுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  5. கதை நிதர்சனம்.

    தலைப்பு மிகப் பொருத்தம்.

    பதிலளிநீக்கு
  6. கதையும் தலைப்பும் அற்புதம். என்னவோ செய்கிறது அந்தக் கடைசி வரிகள்.

    பகிர்வுக்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  7. இலக்கியம் என்றால் என்ன? என்ற கேள்வியை எழுப்பியபோது இ.எம்.எஸ் அளித்த பதில்."தனி மனித அனுபவத்தை இந்த பிரபஞ்ச மனிதர்களின் அனுபவமாக மாற்றுவது தான் இலக்கியத்தின்பணியாகும்"என்பதாகும்.எங்கோ ஓடும் பஸ்,லாரி சத்தத்தின் மூலம் குருத்தின் அடிவயிறு கலங்கும்போது நம் வயிறும் கலங்குகிறது.அந்த ஒரு கதை ஆசிரியரின் வெற்றியுமதுதான்......கaஸ்யபன்.

    பதிலளிநீக்கு
  8. ///படுத்துக் கொண்டாள்.குழந்தைக்கு யாரோ நிறைய சட்டைகள் தருவது போல கனவு வந்தது. குழந்தையும் சிரித்துக் கிடந்தது.///

    CLASS

    பதிலளிநீக்கு
  9. \\“அப்புறம் என்னயத்தான் பொங்க வைக்கணும்” ஆத்திரமாய் சொல்லிவிட்டுப் போனான். \\
    யதார்த்தம்..
    எழுத்து நடை மிக அருமையாக இருக்கிறது.
    பகிர்வுக்கு நன்றி மாதண்ணா.

    பதிலளிநீக்கு
  10. குழந்தையின் கனவுச்சிரிப்பு - மிக அழகான விவரிப்பு.


    //கந்தசாமி குலையெல்லாம் நடுங்க, பிரேக் போட்டு ஒடித்தான்.//

    குலை நடுங்கித்தான் போனது.

    பதிலளிநீக்கு
  11. பகிர்வுக்கு நன்றி! பாலு போன்ற படைப்பாளிகளை உருவாக்கியதில் உறுதுணையாக இருந்து பெரும்பணியாற்றி இருக்கிறீர்கள்... பாராட்டுகள்! கதை உள்ளத்தைத் தொட்டது... பாலுவைத் தொடர்ந்து எழுதச் சொல்லுங்கள்... நீங்களும் பாலுவைப் பற்றி விரைவில் எழுதுங்கள்...

    பதிலளிநீக்கு
  12. நல்ல நடை.. கடைசி பத்தி நடுங்க வைத்துவிட்டது.

    பதிலளிநீக்கு
  13. மண் மணக்கும் அருமையான நடை பாலு. கைஎழுத்து பிரதிகளை வலை ஏற்றுங்கள்.

    //பருத்தி மாறை எடுத்து அடுப்பில் திணித்தாள்.//
    சின்ன வயதில் ஒருமுறை நானும் காட்டுக்குபோய் புரளை சேகரித்து வந்து கொடுத்திருகிறேன்.

    பதிலளிநீக்கு
  14. //பிரமாதமாக கதைசொல்ல முடிகிறவர்கள், ஒன்று இரண்டோடு நிறுத்திக்கொள்கிறார்கள்//
    உண்மை தான் .
    பகிர்வுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  15. ஒரு நொடி நடுங்கி போயிட்டேன் .அருமையான ,எளிமையான கதை

    பதிலளிநீக்கு
  16. அன்றாடம் நடக்கும் ஒரு சிறு நிகழ்வை அழகாக எழுதியுள்ளார்

    இந்த தளத்தை பற்றிய உங்கள் விமர்சனத்தை எதிர்பார்க்கிறேன் - http://tamil-for-tamilpeople.blogspot.com/

    பதிலளிநீக்கு
  17. செல்வராஜ் ஜெகதீசன்!
    பொன்ராஜ்!
    பா.ரா!
    வி.பாலகுமார்!
    பனித்துளி சங்கர்!
    தீபா!
    காஸ்யபன்!
    சங்கர்!
    அம்பிகா!
    ராஜசூரியன்!
    ஆதி!
    அமைதிச்சாரல்!
    குலவுசனப்பிரியன்!
    இராமசாமி கண்ணன்!
    நண்டு@ரொண்டு!
    பத்மா!
    ராசராசசோழன்!

    அனைவருக்கும் நன்றி. தம்பி பாலு உங்கள் அனைவரின் பின்னூட்டங்களையும் பார்த்து, கோடை மழையில் நனைந்து போனவனாய் இருக்கிறான். மிகச்சின்ன கிராமத்தின், எளிய மனிதன். ஏராளமாய் அனுபவங்கள் வாய்க்கப்பெற்றவன். உங்கள் அனைவருக்கும், பாலுவின் சார்பில் நன்றி.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!