பாரீர், பாரீர் இந்திய வளர்ச்சி பாரீர்!
- ஒரு கிலோ அரிசியின் விலை இங்கே ரூ.40/-. ஆனால் சிம் கார்டு இலவசம்!
- ஆம்புலன்சையும், போலீசையும் விட அதிவிரைவாக வீட்டிற்கு வருவது பிசா!
- கல்விக்கடனை விட எளிதில் கிடைப்பது கார்க்கடன்!
- சாலைப் போக்குவரத்தின் மேம்பாலங்கள் ஆறேழு வருடங்களாகியும் கட்டி முடிக்கப்படாது, ஆனால் சட்டசபை வளாகங்கள் ஒருவருடத்திற்குள்ளே கட்டி முடிக்கப்படும்.
பாரீர், பாரீர் இந்திய வளர்ச்சி பாரீர்!
(நண்பர் ஒருவர் எனக்கு அனுப்பிய எஸ்.எம்.எஸ் செய்தி இது.)
பதிவர்களுக்கு அமைப்பு தேவையா?
சென்னையில் பிரத்யேகமாக நடத்தப்பட்ட கூட்டம் முடிந்த பிறகும், பதிவர்களுக்கான சங்கம் அல்லது குழுமம் குறித்த விவாதம் இப்போது வலைப்பக்கங்களில் நடந்துகொண்டிருக்கிறது. குழப்பங்களும், சந்தேகங்களும், அதிரடியான கருத்துக்களும் மிஞ்சி நிற்கிற சூழலெனத் தெரிகிறது. சங்கம் அல்லது குழுமம் ஆரம்பிக்கும் முன்னரே இத்தனை மோதல்களா, முரண்பாடுகளா என பலர், “எதற்கு இதெல்லாம்,?” , “எப்போதும் போல இருக்கலாமே” என்று நடப்பவைகளிலிருந்து ஒதுங்கிவிட நினைக்கலாம். சென்னையில்தானே நடக்கிறது, நமக்கென்ன என்று புறக்கணிக்கலாம். ‘ஆடிவரட்டும், பிறகு பார்த்துக் கொள்ளலாம்” என வேடிக்கை பார்க்கலாம். பலவித மனோநிலைகள் தெரிகின்றன.
எனக்கென்னவோ இவையெல்லாம் ஒரு முக்கிய நிகழ்வுக்கான விதையென்றேத் தோன்றுகிறது. ஆரம்பநிலையின் தடுமாற்றங்களே இவை. தொடர்ந்து இது குறித்து முயற்சிகள் தேவைப்படுகின்றன. சங்கமோ, குழுமமோ.... பதிவர்களுக்கான ஒரு அமைப்பு தேவை என்பது எனது கருத்து. நாம் ஒருவருக்கொருவர் அறிமுகமாகிக் கொள்ளவும், நம்மை ஒன்றாக நிறுத்திப் பார்க்கவும், நமது சக்தியினை தெரிவிக்கவும், நமக்கான அடையாளங்களையும், உரிமைகளையும் நிலைநாட்டவும், நமக்கான பாதுகாப்பை ஏற்படுத்திக்கொள்ளவும் நிச்சயம் தேவையாகத்தான் இருக்க முடியும். பதிவுலகம் மிகுந்த கவனம் பெறத் துவங்கி இருக்கிற இந்த காலத்தின் தேவை இந்த அமைப்பு. அண்மையில் டைம்ஸ் ஆப் இந்தியாவில், இந்திய மொழிகளில் இணையப் பதிவுகள் குறித்து வந்திருக்கும் கட்டுரை, இன்னும் சில காலத்தில் பதிவுலகம் மிக முக்கியமான ஊடகமாக பரிணமிக்கும் என்கிறது.
சிலகாலத்திற்கு முன்பு ஒரு பதிவருக்கு உடல்நலம் சரியில்லை என்றதும் பதிவுலகமே அவர் பின்னால் நின்று உதவிகள் செய்தது. இதுபோன்று எவ்வளவோ காரியங்களை இந்த அமைப்பே முன்னின்று செய்யலாம். எத்தனையோ புதிய பதிவர்கள் எழுத வருகிறார்கள். அவர்களை பலருக்கு தெரிவதே இல்லை. அப்படி எழுத வருகிற புதியவர்களை அறிமுகம் செய்யலாம். யோசித்துப் பார்க்க, பார்க்க எவ்வளவோ காரியங்களை, இந்த அமைப்பினால் ஆற்றமுடியும் என்றேத் தோன்றுகிறது.
அமைப்பு என்பது அந்தந்த துறை சார்ந்த தனித்தன்மைகளோடு இருந்தாக வேண்டும். இந்தப் பதிவுலகம் மற்ற யாவற்றையும் விட வித்தியாசமானதாகவும், கருத்துச் சுதந்திரத்தை பெருமளவில் சுவாசிக்கும் வெளியாகவும் இருக்கிறது. ஒவ்வொருவருக்கும் தனிப்பார்வைகளும், தனி அடையாளங்களும் இருக்கின்றன. பெண்கள் அதிக அளவில் தங்கள் சிந்தனைகளோடு வெளிவந்திருக்கும் இடமாகவும் இருக்கிறது. தொடர்ந்து புதியவர்கள் ஆர்வத்துடன் எழுத வந்துகொண்டு இருக்கிறார்கள். இதுபோன்ற சிறப்பம்சங்களே பதிவுலகத்தின் அடையாளங்களாக இருக்கின்றன. இவற்றைப் பாதுகாப்பதும், மேலும் செழுமைப் படுத்துவதும்தான் அந்த அமைப்பின் பிரதான நோக்கமாக இருக்க முடியும். இருக்க வேண்டும். இந்தப் புள்ளியிலிருந்து விவாதிக்க ஆரம்பித்து முன்செல்லலாம்.
ஆனால் சென்னைக்கு மட்டும் சங்கம் அல்லது குழுமம் என்று யோசிப்பதை, இன்னும் விரித்து, தமிழ் வலைப்பதிவாளர்களுக்கான அமைப்பாக யோசிக்க வேண்டும் என நினைக்கிறேன். அடிக்கடி கூடி பேச வேண்டுமென்றெல்லாம் இல்லை. அதற்குத்தான் பதிவர் சந்திப்புகள் இருக்கின்றனவே. வேண்டுமானால் மண்டல அமைப்புகளை உருவாகிக் கொள்ளலாம். இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கு ஒருமுறை இந்த அமைப்புக்கு பொதுமாநாடுகள் நடத்திக் கொள்ளலாம்.
அமைப்புக்கான பெயர், விதிகள் போன்றவற்றை உருவாக்க சென்னை, ஈரோடு, கோவை, மதுரை போன்ற இடங்களில் உள்ள பதிவர்கள் (அதிகபட்சம் பத்து பனிரெண்டு பேர். சரிசமமாக பெண்கள் அதில் இடம்பெற வேண்டும்) குழுவொன்றை அமைக்கலாம். அமைப்புக்கான கருத்துக்களை பதிவர்கள் அனைவரும் அவர்களிடம் தெரிவிக்கிற ஏற்பாட்டைச் செய்யலாம். அதன் அடிப்படையில் அந்த குழு உட்கார்ந்து விவாதித்து,. முறைப்படுத்தலாம். ஒரு அமைப்பு மாநாடு நடத்தி, அதில் முறைப்படுத்திய அமைப்புக்கான விதிகளைத் தீர்மானிக்கலாம்.
இவையெல்லாம் யோசனைகள்தான். ஆனால், அமைப்பு ஒன்று கண்டிப்பாக நம் அனைவருக்கும் வேண்டும் என்கிற கருத்துக்கு ஆதரவு தெரிவித்தபடி...
அங்காடித் தெரு
குறைகள் இருப்பினும், ‘அங்காடித் தெருவை’ தமிழின் முக்கிய படங்களில் ஒன்றாகச் சொல்லலாம். இன்னும் சிறப்பாகவும், அழுத்தமாகவும் சொல்லியிருக்கலாமே என்ற ஆதங்கம் வந்தபோதிலும், இயக்குனர் வசந்தபாலனை தூக்கி வைத்துக் கொண்டாடலாம்.
அதேச் சண்டைகளையும், அதே காதல் குலுக்கல்களையும் நிரப்பி கூச்சநாச்சமில்லாமல் “இட்ஸ் எண்டயர்லி எ டிஃபரண்ட் மூவி” என உளறிக்கொட்டுபவர்களை நோக்கி “பாரடா, பாரடா..... இதோ கதை, இதோ வாழ்க்கை, இதோ சினிமா... பாரடா” என உக்கிரமாக வெளிப்பட்டு இருக்கிறது இந்தப் படம். தினம்தினம் பார்த்தும் பாராமல் கடக்கும் மனிதர்களை “எங்கே போகிறீர்கள்” என உலுக்கி நிறுத்துகிறது. ‘இந்தியா வல்லரசாகும் நாள் தொலைவில் இல்லை’, ‘நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் செல்கிறது”, ‘இந்தியாவின் முகம் மாறுகிறது” என நகரத்தின் பளபளப்புகளையும், உயரம் உயரமான கட்டிடங்களையும் காட்டி மார்தட்டிக் கொண்டிருப்பவர்களின் செவிட்டில் ஓங்கி அறைகிறது.
பொருட்கள் வாங்க வருபவர்களை அங்கிருப்பவர்கள் சிரித்துக்கொண்டேதான் வரவேற்பார்கள். குளிர்பதனம் செய்யப்பட்ட அந்தப் பெரிய கட்டிடங்களிலிருந்து தெருவுக்கும் கூட சில்லென்று காற்று வீசும். அதில் நனைந்தபடியே உள்ளேயும், வெளியேயும் நெரிசலில் சிக்கி கூட்டம் அலைபாய்ந்து கொண்டு இருக்கும். மனிதர்களை கன்ஸ்யூமர்களாக்கி புழுக்களாய் நெளிய வைத்திருக்கும் நவீன உலகின் குறியீடாகவே ரெங்கநாதன் தெருக்கள் இருக்கின்றன. அங்கே ஒரு தமிழ்ச் சினிமாவின் இயக்குனர் இதயசுத்தியோடும், காமிராவோடும், சில நிர்ப்பந்தங்களோடும் நுழைந்திருக்கிறார். அந்தக் கட்டிடங்களுக்குள் இருக்கிற புழுக்கமும், வெக்கையும் துயரங்களோடுக் கசிவதைக் காணமுடிகிறது.
உள்ளே இருந்த ஒரு பணிப்பெண் நேற்று செத்து விழுந்த வாசலில் இன்று ஒரு கோலம் சிரிக்கிறது. அதையும் இன்று சில பணிப்பெண்களே வரைந்து கொண்டு இருக்கின்றனர் தங்கள் தோழியை நினைவில் சுமந்தபடி. ‘கடைப்பிடிக்க வேண்டிய விதிகளை’ மீறியதால் மேலாளரிடம் அடிவாங்கி வெளியே வந்து, ‘இந்த புடவையை பாக்குறீங்களா, இந்தக் கலர் பிடிக்குதா பாருங்க” என்று குரல் வீசி வியாபாரம் செய்ய முடிகிறது அவர்களால். தெருவில் கொட்டப்பட்ட அட்டைப் பெட்டிகளும், பைகளும், தும்புகளும் காற்றில் சுருண்டு சுருண்டு அலையும் இரவின் தெருவில், சக்கைகளாய் உறங்கச் செல்கின்றனர் அதுவரை நின்றுகொண்டும், நடந்துகொண்டும் வேலைசெய்தவர்கள். தங்குமிடத்தில் அன்று வந்து குவிந்திருக்கும் கடிதங்களில் தங்கள் பெயர் இருக்கிறதா என தொலைதூரத்து வீட்டு நினைவுகளோடு தேடுகிறார்கள். நகரம் வெளிச்சங்களால் நிரம்பி இருக்கிறது. என்ன மனிதர்கள் இவர்கள். என்ன வாழ்க்கை இது. என்ன நகரம் இது. இட்டமொழி கிராமத்தின் தேரி மண்ணில் விளையாடி மகிழ்ந்த சிறுவர்களை இந்த ரெங்கநாதன் தெரு எப்படியெல்லாம் சிதைத்துப் போடுகிறது.
சந்தையில் பண்டமும், பணமுமே முக்கியம். சரக்கிற்கும், பண்டத்திற்கும் கிடைக்கும் மரியாதை உழைப்புக்கு இல்லை. அதிகாரம், செல்வாக்குகளோடு காரில் அழுக்குப் படியாத உடையோடு வந்து இறங்கி மரியாதை பெறுகிறது பணம். அரசின் தூண்கள் அவைகளுக்கு காவலும், சேவகமும் புரிகின்றன. அபிமான நடிகை, நடிகர்கள் பண்டத்தை வாங்க வைக்க ஆடுகின்றனர், பல்லிளிக்கின்றனர். எங்கெங்கோ உள்ள கிராமங்களில் எதிர்காலம் நிச்சயமற்ற குடும்பங்களிலிருந்து பதின்மப் பருவத்து ஆண்களும், பெண்களும் நகரத்தின் இந்தப் பெரிய கட்டிடங்களில் வேலை செய்ய வருகிறார்கள். கனவுகளும், பொறிகளும் நிரம்பிய நாட்கள் பொருட்களை எடுத்தும், வைத்தும், கண்பித்தும், அடுக்கியும் கலைந்து போகின்றன. அதில் மலரும் ஒரு காதலின் வழியே வாழ்வின் பயம், அழகு, குரூரம், நம்பிக்கை எல்லாம் சொல்லப்படுகிறது. வாழ்ந்து பார்த்து விடுவது என்னும் வேகத்தையும், வெப்பத்தையும் மனிதர்கள் இழக்காமல் இருக்கிறார்கள். துரத்தப்பட்டு, உருக்குலைந்த நிலையிலும் “நா உன்ன இப்பவே கல்யாணம் பண்ணிக்கிறேன்” என அவன் அவளிடம் சொல்லும் காட்சியில் தியேட்டரே கைதட்டி ஆரவாரிக்கிறது. நம் கண்களில் ஈரம் படர்கிறது. அந்தப் பெரிய கட்டிடங்களுக்கு வெளியே வாழ்க்கை இருக்கிறது என காமிரா, உயரே உயரேச் செல்கிறது.
இயக்குனருக்கு உள்ள மிகபெரும், பலமும், சவாலும் கதைக்களம் தான். அவ்வளவு பேர் வந்துசெல்கிற ஓரிடத்தை முழுமையாகவும், அங்கு பணிபுரிபவர்களின் ஒட்டுமொத்த வாழ்வையும் பார்வையாளர்களுக்குள் செலுத்துவதாய் காட்சிகள் அமைய வேண்டும். இரண்டரை மணி நேரத்துக்குள் இது சாத்தியமில்லையென்றாலும், அப்படி ஒரு உணர்வை ஏற்படுத்துவதாய் காட்சிகள் அடுக்கப்பட வேண்டும். ஒரு சிலரின் மூலம் ரெங்கநாதன் தெருவின் கதையைச் சொல்வது சிரமமே. அதைச் செய்யத் துணிந்திருக்கிறார். எலக்டிரிக் டிரெயினில் டிப்டாப்பாக வந்து, வேறு உடை மாற்றி, பொதுக் கழிப்பறை முன்னால் உட்கார்ந்து காசு வசூலிப்பவன், பொருட்களை தெருவில் விற்கும் உடல் ஊனமுற்றவன், அவன் மனைவி, வெள்ளைத் தாடியும், குல்லாவும் அணிந்து வரும் பெரியவர் என பல்வேறு குணாதிசியங்களோடு சித்திரத்தைத் தீட்ட முனைந்திருக்கிறார். நினைத்தவரை சாதிக்க முடியவில்லையென்றாலும், ஓரளவுக்கு முன் சென்றிருக்கிறார். அதுவே பெரும் அதிர்வுகளை ஏற்படுத்துவதாய் இருக்கிறது. இன்னும் அந்தத் தெருக்களில் சொல்வதற்கு எவ்வளவோ கொட்டிக்கிடப்பதையும் சுட்டிக்காட்டிச் செல்கிறது. அதுதான் இந்தப் படத்தின் தாக்கம் எனச் சொல்ல வேண்டும்.
இது ரெங்கநாதன் தெருவின் கதை மட்டுமல்ல. இந்த தேசத்தின், இந்த காலத்தின் கதை. நகரங்களின் அதிகாலைகள் எல்லாம் இலட்சக்கணக்கில் இப்படியான இளைஞர்களை விழுங்கியபடியே விடிகின்றன. சூரியன் உதிப்பதையும், மறைவதையும் அவர்கள் ஒருநாளும் பார்த்திட முடியாமல் சபிக்கப்பட்டுப் போகிறார்கள். உண்ணவும், உடுக்கவும், உறையவும் முடிகிற அவர்களுக்கு, மூச்சுவிட முடியாத வாழ்விடங்களே கிட்டுகின்றன. ஈவு இரக்கமற்ற முறையில் காயப்படுத்தப்படுவதற்கும் அவர்கள் பழகிப் போகிறார்கள். எதிர்காலம் எப்போதும் அவர்களுக்கு அருகில் இல்லை. இவை எல்லாவற்றையும் ‘அங்காடித் தெரு’ சொல்கிறது.
படத்தில் பல காட்சிகள் மனதை விட்டு லேசில் அகலாது. பிளாட்பாரத்தில் தூங்கும் குழந்தை ஒன்று தாயிடமிருந்து விலகி சாலையில் விழுந்து அழுவது, ‘உன்னை அடிப்பான். எனக்கு, மாரைப் பிடிச்சான்’ என்று நாயகனிடம் சொல்லும் நாயகியின் முகம் மாறுவது, ‘எப்பணே ஊருக்கு வருவே’ என்னும் தங்கையின் குரல், முன்பின் தெரியாத அசாமுக்கு வீட்டு வேலைக்குச் செல்லும் அந்தச் சின்னப்பெண்ணிடம் உள்ள தைரியம், கோடவுனிலிருந்து பரிதாபமாக நாயகி அழைத்து வரப்படும்போது பின்னணிச் சுவற்றில் நடிகை சினேகா சிரித்துக்கொண்டு இருப்பது என சொல்லிக்கொண்டே போகலாம். வசந்தபாலனும், அவரது குழுவினரும் அழுத்தமாக தடம் பதித்து இருக்கின்றனர்.
படத்தில் சில முக்கிய இடங்களில் சித்தரிப்புகளும், நடிப்பும் ஒருவித நாடகத்தன்மையோடு வந்திருக்கின்றன என்பதையும் சொல்லத்தான் வேண்டும். எல்லோரும் கத்தி கத்திப் பேசுகிறார்கள். வார்த்தைகளின் அழுத்தம் அடர்த்தியாக இருக்கவில்லை. காட்சியினூடாக மேலும் பயணிக்க விடாமல், அங்கங்கு தடுத்து நிறுத்தப்பட்டு வேறு வழியில் அழைத்துச் செல்லப்படுவது போல உணர்வு சில தருணங்களில் ஏற்படுகிறது. ஒரு சினிமாவாக பார்க்கும்போது தெரியும் இந்தக் குறைகள், தமிழ்ச்சினிமாவாக பார்க்கும் போது தெரியாது. நாயகனாக வருபவர் நன்றாக நடித்திருந்தாலும் நாயகியாக வரும் அஞ்சலி அற்புதமாக நடித்திருக்கிறார். சந்தோஷம், கோபம், துயரம் எல்லாம் வாழ்வின் தருணங்களாய் அப்படியே அவரிடம் வெளிப்பட்டு இருக்கின்றன. ‘கற்றது தமிழ்’படத்திலும் மறக்க முடியாதவராய் வருவார். தமிழ்ச்சினிமா அவரையும் ஆடவைத்து, செல்லூலாய்ட் பொம்மையாக்கி விடக்கூடாதே என்ற பதற்றமும் இருக்கிறது.
படத்தைப் பார்த்தவர்கள் இனி ரெங்கநாதன் தெருவுக்குள், அடுக்குமாடி ஸ்டோர்களுக்குள் செல்லும்போது புடவைகளையும், சட்டைகளையும், பாத்திரங்களையும் தாண்டி, அவைகளை எடுத்துத் தருகிற மனிதர்களை உற்று பார்ப்பார்கள். வெளியே, “கண்ணாடி, கைக்குட்டை... ” என்று குரல் எழுப்பும் முகங்களை கூர்ந்து கவனிப்பார்கள். அவர்களுக்குள் என்ன கதைகள் இருக்கின்றன, எந்த ஊரிலிருந்து வந்திருப்பார்கள் எனத் தேடுவார்கள். நுகர்வோர்கள் கொஞ்சமாவது, சில கணங்களாவது மனிதர்களாய் தங்கள் இயல்புநிலைக்குத் திரும்பிச் செல்வார்கள். அதுவே பெரிய விஷயம்தான். இந்தப் படத்திற்கு பெரும் வெற்றிதான்.
உயிரோட்டம்
அதிகம் யாரோடும் பேசிக்கொள்ள மாட்டான். டாக்டர் சற்குணம், வேலை பார்க்கும் வங்கியில் பியூன் பெருமாள்சாமி, தனது எலிமெண்ட்டரி ஸ்கூல் வாத்தியார் ராமனாதன் என்று ஒரு சிலர் விதிவிலக்கு. தன்க்குள்ளேயே நிறைய பேசிக்கொள்வான். அதற்கென சங்கதிகள் இருந்தன. தெரிந்தவர்கள் யாராவது இறந்துவிட்டால் கண் கலங்குவான. மகாநதி படம் பார்த்து பாதியிலேயே தாங்க முடியாமல் வெளியே வந்துவிட்டான். எல்லாவற்றுக்கும் காரணம் தேடிக்கொண்டே இருப்பான. கொஞ்சம் இரக்கத்தோடும் நிறைய கேலியோடும் மற்றவர்கள் புறம் பேசுவது கேட்டாலும் கவலைப்பட்ட மாதிரி தெரியாது. ஒருதடவை டெல்லிக்கு டூர் போயிருந்தபோது போட் கிளப் எதிரே அந்த பெரிய சாலையில் ஒரு குதிரை நொண்டிக்கொண்டு போன காட்சியின் துயரமான சாயல் ஒரு வருசம் கழித்து வந்த அவனது கனவில் இருந்தது. இன்னமும் குழந்தை முகம் அப்படியே இருக்கிறதென்று என்பது பலரால் அவனைப் பற்றி ஆச்சரியமாய் சொல்லப்படக்கூடிய செய்திகளில் ஒன்று. இவன்தான் நமது அழகப்பன்.
இந்த மாசம் ஆறாம் தேதியிலிருந்து இவனுக்கு கேஷியராக பணியாற்றும் சந்தர்ப்பம் வந்தது. கரன்ஸி என்பது கரண்ட் மாதிரி....அதிஜாக்கிரதையாய் கையாள வேண்டும் என்பதை ஏற்கனவே தெரிந்து வைத்திருந்தான். கொஞ்சம் அசந்தாலும் ஷாக் அடித்துவிடும். உஷாராய்த்தான் இருந்தான்.
சதா நேரமும் மனிதர்கள் கவுண்டருக்கு வெளியே காத்திருந்தார்கள். பணம் வாங்குவதற்கோ அல்லது செலுத்துவதற்கோ. ‘அமிர்தா ஐ லவ் யூ’ எழுதப்பட்ட நோட்டும் இடையில் வரும். லேசாய் சிரித்துக்கொண்டு இதை எழுதியவனுக்குப் பிறகு எத்தனை கைகள் இது மாறியிருக்கும் என்றும் அந்த அமிர்தா எப்படி இருப்பாள் என்றும் நினைப்பதுண்டு. ஏன் அந்த அமிர்தா இந்த நோட்டை பாதுகாத்துக் கொள்ளவில்லை என்ற கேள்வியும் தொடர்ந்து வந்து தொக்கி நிற்கும். ஒரு நோட்டை எண்ணுகிற எத்தனையாவது நபராகத் தான் இருப்போம் என்று எண்ணி பிரமித்துப் போவான். ஒவ்வொரு நோட்டும் இடம் மாறும்போது அங்கு ஒருவர் ஏமாற்ற, இன்னொருவர் ஏமாற ஒரு வலி பதிவாகிறது என்று ஒரு கதையில் படித்தது ஞாபகத்தில் வர, இதில் தான் யார் என்பது கடும் குழப்பத்தைத் தந்தது. பழகும் இடங்களில் அறிமுகமில்லாதவர்கள் கூட அங்கங்கு வணக்கம் சார் என்பதும், பெட்ரோல் தீர்ந்த கடைசி தினங்களில், ஸ்கூட்டரை வீட்டில் நிறுத்தி, பஸ்ஸுக்குக் காத்திருக்கும் சமயங்களில் “ஸார்... வர்றிங்களா... பேங்க்ல டிராப் பண்றேன்”: என்று ஒன்றிரண்டு தடவை முகம் பார்த்தவர்கள் கூட வந்து கேட்பதும் நிகழலாயிற்று. தனக்குக் கொஞ்சங்கூட சொந்தம் இல்லாத பணம் தருவிக்கிற மாய மரியாதை கண்டு சிரித்துக் கொண்டான்.
வெளியே நிற்கும் மனிதர்களின் முகங்களும் விரல்களுமே தெரிகிற மாதிரி சுற்றிலும் தன்னை அடைத்து வைத்திருந்தது பாதுகாப்பிற்கு பதிலாக பயத்தையே தந்தது. போதாக்குறைக்கு தன் பொருட்டு துப்பாக்கியுடன் ஒரு காவலாளி வாசலில் நின்று வருவோர் போவோரையெல்லாம் உற்றுப்பார்த்துக் கொண்டிருந்தது நடுக்கத்தை உண்டு பண்ணியது. உள்ளங்கை அடிக்கடி குளிர்ந்து போனது.
இரண்டாம் நாளே ஷாக் அடித்து விட்டது. ஒரு ஐம்பது ருபாயைக் கோட்டை விட்டுவிட்டான். எண்ணி வாங்குவதிலோ, கொடுப்பதிலோ தப்பு நடந்திருக்க வேண்டும். கண்டுபிடிக்க முடியவில்லை. தனது பையிலிருந்து கொடுக்க வேண்டியதாயிற்று. அதற்குப் பிறகு அவ்வப்போது பெருமாள்சாமி உள்ளே வருவது கூட பயம் தர ஆரம்பித்தது. அந்த சந்தேகத்திற்காக தன்னையே நொந்து கொண்டாலும் ‘ஜாக்கிரதை’, ‘ஜாக்கிரதை’ என ஒரு சத்தம் கடிகார முள்ளாய் மூளைக்குள் ஓடிக்கொண்டிருந்தது. ஒருதடவைக்கு இரண்டு தடவை நோட்டுக்களை எண்ண ஆரம்பித்தான். புதுநோட்டாய் இருந்தால் விடைப்பாய் இருக்கும். சடசடவென்று எண்ண முடிகிறது. பழைய நோட்டுக்கள் தங்கள் தீராத பயணத்தில் நைந்துபோய் ஒன்றொடொன்று ஒட்டிக்கொண்டு லேசில் வராது. நிதானமாய் பிதுக்கி பிதுக்கி எண்னினான். கஸ்டமர்களை இப்படி காக்க வைக்கிறானே என மேனேஜருக்கு வருத்தம் வந்தது.
நான்காம் நாள் இவனுக்கு அது நேர்ந்தது. முதலில் வலதுகை பெருவிரலிலும், நடுவிரலிலும் நமைச்சல் ஏற்பட்டது. சும்மா உட்கார்ந்து இருக்கும்போது தடவிக்கொள்ள வைத்தது. ஜீன்ஸ் பேண்ட்டில் தேய்த்துக் கொள்வதில் ஒரு சுகம் இருந்தது. அந்த நேரங்களில் ஒருமாதிரி இடதுபக்கம் கடித்துக்கொள்வதும் பழக்கமாகி, இந்த இயக்கம் ஒரு அணிச்சை செயலாகவே மாறிப்போனது. தொடர்ந்து சில நாட்களில் காந்தலெடுக்க ஆரம்பித்த போது தடவிக் கொள்ளவும், ஜீன்ஸ் பேண்ட்டில் தேய்த்துக் கொள்ளவும் முடியவில்லை. அந்த விரல்களின் ஓரங்களில் வெடிப்புகள் வந்திருந்தன. சாப்பிடும்போது எரிச்சல் தாங்க முடியவில்லை. முதன்முதலாய் அது குறித்து கவலைப்பட ஆரம்பித்தது அப்போதுதான். தனிமைகளில் தன் விரல்களைப் பார்த்து அருவருப்படைந்தான். பயமாகவும் இருந்தது. பேண்ட் பாக்கெட்டுக்குள் கையை விட்டுக்கொண்டு நடமாடினான். பணம் எண்ணி வாங்கவும், கொடுக்கவும் சிரமமாயிருந்தது. அந்தச் சின்னப் புண்களின் ரணம் பண நோட்டுக்கள் எல்லாவற்றிலும் பட்டுக்கொண்டே இருந்தது. அன்றைக்கு சாயங்காலம் டாக்டரை பார்த்து விடுவது என்ற முடிவுக்கு வந்தான்.
டாக்டர் சற்குணத்தின் கிளினிக்கில் எப்போதும் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும். கஷ்டப்பட்டவர்களிடம் இரண்டு அல்லது மூன்று ருபாய் கூட வாங்கிக் கொள்வார். இலக்கியம் பேசுவதற்கென்று சில பேர் வருவார்கள். கவர்ன்மெண்ட் ஆஸ்பத்திரியில் நடந்த ஊழல் பற்றி ஜூனியர் விகடனுக்கு தகவல் கொடுத்ததற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டவர். அழகப்பனை பார்த்ததும் “வாங்க... வாங்க...” என முகம் மலர்ந்து வரவேற்றார். உற்சாகமாய் பார்த்தார். இவன் சந்தேகப்பட்டதையே ஊர்ஜிதம் செய்தார். பண நோட்டுக்களையே உட்கார்ந்து எண்ணிக்கொண்டிருப்பதுதான் காரணம் என்றார். இவனுடைய தோல் எந்த அசுத்தத்தையும் தாங்கிக்கொள்ள முடியாத அளவுக்கு சென்ஸ்டிவ் ஆக இருப்பதாகவும், உள்ளங்கை குழந்தையின் மென்மையாக இருப்பதாகவும் சொன்னார். அதில் இவனுக்கு ஒரு மகிழ்ச்சி இருந்தது.
ஆயின்மெண்ட்டும், சில மாத்திரைகளும் எழுதிவிட்டு கேஷ் கவுண்டரில் இனி உட்கார வேண்டாம் என புத்திமதியையும் சேர்த்துத் தந்தார். எத்தனையோ வியாதிஸ்தர்களை கவனிக்கும் இவருக்கு இதுமாதிரி வரவில்லையே என்ற நினைப்பும் அந்த நேரத்தில் அழகப்பனுக்கு ஒருபுறம் ஓடத்தான் செய்தது. அதைப் புரிந்து கொண்டவரைப் போல “வேணும்னா கிளவுஸ் போட்டுட்டு கேஷ் பாருங்க..” என்று சிரித்தார். டாக்டரின் கிண்டலில் முகம் சுருங்கித்தான் வெளியே வந்தான்.
மேனேஜரிடம் கையில் காயம் பட்டிருக்கிறதென்று சொல்லி இரண்டு நாட்கள் பெர்மிஷன் வாங்கிக் கொண்டான். கேஷ் கவுண்டரை விட்டு வெளியே உட்கார்ந்து மற்ற வேலைகளைப் பார்க்க ஆரம்பித்தான். பேனாவையும் அந்தப் பெருவிரலாலும், நடுவிரலாலும்தான் முக்கியமாய்ப் பிடித்து எழுத வேண்டியிருந்தது. வழக்கம் போல எழுத முடியவில்லை. எழுத்துக்களும், எண்களும் வித்தியாசமாய் வந்தன. கடுமையாகத் தொந்தரவு செய்யப்பட்டான். நேரே மேனேஜரிடம் போய் இரண்டு நாள் கேஷூவல் லீவு எழுதிக் கொடுத்துவிட்டு வீட்டுக்குப் புறப்பட்டான். வழியில் இந்த சதாசிவம் ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாம் தன்னிடம் இதுபற்றி என்று முணுமுணுத்துக் கொண்டான்.
டாக்டர் எழுதிக் கொடுத்த ஆயின்மெண்ட்டை அவ்வப்போது போட்டுக் கொண்டான். “ஏங்க...இப்படியெல்லாம் கஷ்டப்பட்டுத்தான் கேஷ் பாக்கணுமா” என்றாள் இவன் அருமை மனைவி. வலது தாடை புடைக்க பற்களைக் கடித்து அவளை முறைத்தான். உலகத்தில் எவ்வளவோ கேஷியர்கள் இருக்கும்போது தனக்கு மட்டும் இப்படி நேர்ந்து விட்டதே என்ற கோபமும் அதில் இருந்தது அவளுக்குத் தெரியாது. பிறகு அவள் இது சம்பந்தமாய் வாயைத் திறந்து பேசியதே இல்லை. அவ்வப்போது இரக்கம் சிந்துகிற பார்வையை மட்டும் வீசுவதோடு சரி. இந்த கேஷ் ஷெக்ஷன் தொடர்ந்து பார்த்த சதாசிவம் வேறு ஊருக்கு ட்ரான்ஸ்பர் ஆன போது உள்ளூர ஒரு சந்தோஷம் வந்தது. அதற்காக வெட்கப்படவும் செய்திருக்கிறான். இப்படியெல்லாம் ஆகும் என நினைத்துப் பார்க்கவில்லை.
இரண்டு நாட்களில் விரல்களில் அந்த இடம் காய்ந்து போயிருந்தது. மீண்டும் கேஷ் கவுண்டரில் உட்கார்ந்து விட்டான். பழைய நோட்டுக்கள் உள்ளே வரும்போதெல்லாம் கொண்டு வருபவரை மகா வெறுப்புடன் பார்த்தான். அவர்களோ ரொம்ப சோகமாய் விரக்தியின் எல்லையில் நின்று கொண்டிருப்பது மாதிரி இருந்தது. நோட்டுக்களை எண்ணும்போது இவனது விரல்களையே அவர்கள் பார்த்த மாதிரி இருந்தது. அவ்வபோது நமைச்சல் இருந்த மாதிரி இருந்தது. ஜாக்கிரதையாகி பாத்ரூம் போய் கைகழுவி வந்தான். ஆனாலும் நமைச்சல் இருப்பது மாதியே இருந்தது. இல்லை... இதெல்லாம் பிரமையெனவும் தேற்றிக் கொண்டான். மேலும் சந்தேகம் வலுப்பட்ட போது டாக்டர் எழுதிக் கொடுத்த ஆயின்மெண்ட்டை பாதுகாப்பிற்காக அன்றிரவு விரல்களில் போட்டுக் கொள்வான். மனைவியையும், குழந்தைகளையும் தொடாமல் கொஞ்சம் தள்ளி படுத்துக் கொள்வான். இவனது முகத்தில் சுருக்கங்கள் விழுந்த மாதிரி மனைவிக்குத் தெரிந்தது.
ஒரு மாதிரியான நாற்றம் நோட்டுக்களிலிருந்து வீசிக்கொண்டு இருந்தது. பலசமயம் மக்கிப் போய் முகத்தில் அடிக்கிற மாதிரியும் இருக்கும். விபூதி வாசம் வீசும். அடுத்த நோட்டிலேயே மீன்வாசம் அடிக்கும். குறிப்பாக ஐந்து ருபாய், பத்து ருபாய், இருபது ருபாய் நோட்டுக்களில் இந்த நாற்றம் அதிகமாய் இருந்தது. இரண்டு ருபாய்களைப் பற்றி கேட்கவே வேண்டாம். கொஞ்சம் அழுத்திப் பிடித்தாலே பிய்ந்து விடும் போல இருந்தன. இந்த நோட்டுக்களைக் கொண்டு வருபவர்களை எதாவது ஒரு காரணம் காட்டி எரிந்து விழுந்தான். ஐம்பது, நூறு, ஐநூறு என்றால் எளிதாக இருக்கும். ரொம்ப நேரமும் எண்ண வேண்டியிராது. யாராவது சில்லறை கேட்டு வந்தால் இந்த பாவப்பட்ட நோட்டுக்களை முதலில் வெளியே தள்ளி விடுவதில் முனைப்பு காட்டினான். சாப்பிடும்போது நன்றாக சோப்பு போட்டு கைகளைக் கழுவினான். ஒவ்வொரு நாளும் கணக்கை முடிக்கும் போது பணம் எதுவும் குறைந்திருக்கக் கூடாது என்ற பதற்றம் ஓடிக்கொண்டே இருந்தது.
அந்த மாசச் சம்பளத்தில் இருநூற்று ஐம்பது ருபாய் போல கூட கிடைத்தது. கேஷ் பார்த்ததற்கான அலவன்சு. சந்தோஷமாய்த்தான் இருந்தது. மாசக் கடைசியில் கொஞ்சம் பிக்கல் பிடுங்கல் இல்லாமல் இருக்கலாம். வீட்டில் அவள் என்ன கணக்கு வைத்திருக்கிறாளோ தெரியவில்லை. இதைப் பார்த்ததும் உற்சாகமாவாள் என நினைத்துக் கொண்டான். வீட்டில் நுழைந்ததும் எப்போதும் “அப்பா” என்று ஓடிவந்து காலைக் கட்டிக்கொள்கிற குழந்தை படுத்திருந்தது. “எதுவும் சாப்பிடல...ஒரே வாந்தி....” மனைவி பரிதவித்தாள். குழந்தையை அள்ளிக் கொண்டு அவசரமாய்ப் புறப்பட்டார்கள்.
டாக்டர் சற்குணம் பதற்றப்படாமல் குழந்தையை கவனித்தார். அவரைப் பார்த்ததும் குழந்தை சத்தம் போட்டு அழ ஆரம்பித்தான். “நல்ல பையன்ல... அழக்கூடாது...என்ன...ம்..அப்புறம் மிஸ்டர்..” இவனைப் பார்த்து சிரித்தார். “ஒண்ணுமில்ல...சாதாரண அலர்ஜிதான்.... அப்புறம் இந்தப் பக்கம் வரவேயில்ல.... எப்படியிருக்கீங்க. ஒங்க விரல்லாம் எப்படி இருக்கு?” பேசிக்கொண்டே போனார். ”சரியாப் போச்சு” என்றான். குழந்தையிடம் இருந்து திரும்பி இவனைப் பார்த்தார். திரும்பவும் குழந்தையை பரிசோதித்துக் கொண்டே “இப்போ கேஷ் ஷெக்ஷன் நீங்க பாக்கலையா?” என்றார். “பார்க்கிறேன்” என்றான். டாக்டர் “அப்படியா” என்று அவனைப் பார்த்தார். முகத்தில் நிலைத்த அவரது கண்களில் வித்தியாசம் ஏற்பட்டிருந்தது. பிறகு குழந்தையின் உடல்நலம் குறித்து அவர் சொன்னது எதையும் மனது வாங்கிக் கொள்ளவில்லை. எதோ ஒரு இருட்டு அவனைக் கவ்விக் கொண்டு இருந்தது. சகலமும் அணைந்து போனவனாய் காணப்பட்டான். வீட்டுக்கு வரும்போது குழந்தை அவன் தோளில் தூங்கிக் கொண்டு இருந்தான்.
இவனுக்குத் தூக்கம் வரவில்லை. வராண்டாவில் போய் உட்கார்ந்தான். பாராக்காரனின் விசில் சத்தம் இருட்டின் குரலாக கேட்டுக் கொண்டிருந்தது. மரங்கள் அசையாமல் புழுக்கமாயிருந்தது. திரும்ப உள்ளே வந்தான். படுத்துக் கொண்டான். ஏன் இதற்காகவெல்லாம் தவிக்க வேண்டும் என்றாலும் விடுபடமுடியாமல் இருந்தான். ஒரு நேரத்தில் தூக்கமும் வந்தது. இவனது விரல்கள் மெல்ல மெல்ல அழுகிப் போயின. பார்த்துக்கொண்டு இருக்கும் போதே ஒவ்வொன்றாய் கையிலிருந்து உதிர்ந்து கொண்டன. விழுந்தவை தரையில் பல்லியின் வால்களாய் துடித்தன. என்னமோ சத்தமாய்ச் சொல்லி எழுந்து உட்கார்ந்தான். மிரண்டு போயிருந்தான். படபடவென்று அடித்துக் கொண்டு இருந்தது.
“என்னங்க...” அவள் தூக்கக் கலக்கத்தோடு லேசாய் இவனை விழித்துப் பார்த்தாள். பால் குடித்த பழக்கத்தில் பையன் காற்றில் சப்புக் கொட்டிக் கொண்டு இருந்தான். இவன் எழுந்து போய் தண்ணீர் குடித்தான். படுக்கவே பயமாயிருந்தது. படுக்கச் சொல்லி அவள் இவன் மீது கைகளைப் போட்டுக் கொண்டாள். தட்டிக் கொடுத்தாள். அவளது விரல்களை தன்னுடைய விரல்களில் கோர்த்துக் கொண்டு நெஞ்சில் வைத்துக் கொண்டாள். கண்களை மூடிக்கொள்ளும் போது கொஞ்சம் நிம்மதியாயிருந்தது. விரல்கள் இப்ப்போது வெதுவெது என்றிருந்தன.
*
பி.கு:
1. இந்தக் கதை 1996ல் வெளியானது.
2. சென்னை சாகித்ய அகாடமியில் இந்தக் கதையை வாசித்தேன். எதிரே எழுத்தாளர் ஜெயகாந்தன், இந்திரா பர்ர்த்தசாரதி, சா.கந்தசாமி, பொன்னீலன் உட்பட பல எழுத்தாளர்கள் அமர்ந்திருந்தனர். வாசித்து முடிந்ததும், இந்திரா பார்த்தசாரதி கைகளைப் பிடித்துக் கொண்டு பாராட்டினார். கூடவே செம்மலரில் இப்படிப்பட்ட கதைகளையும் போடுகிறார்களா என்றார்.
*
இது ஒரு மீள் பதிவு.
பொன்னாகரம்!
"என்னமோ கற்பு, கற்பு என்று கதைக்கிறீர்களே! இதுதான் ஐயா, பொன்னகரம்!” என்று முடியும் புதுமைப்பித்தனின் பொன்னகரம் கதையின் கடைசி வரி சமூகத்தின் மீது சாட்டையாய் பாய்ந்திருக்கும்.
இந்தக் கார்ட்டூனைப் பார்க்கும்போது அதே வரிகள் கொஞ்சம் மாறி நமக்குள் ஒலிக்கின்றன இப்போது.
“என்னமோ ஜனநாயகம், ஜனநாயகம் என்று கதைக்கிறீர்களே! இதுதான் ஐயா, பொன்னாகரம்!”
(கார்ட்டூன் உபயம் : தீக்கதிர்)
அன்புடன் அருணா, ஆடு மாடு, க.பாலாசி, காமராஜ், சந்தனமுல்லை, சரவணன், சித்ரன், சேரல், தோழி, பிரசன்னா இராசன், மாதவராஜ், முனைவர்.குணசீலன், முரளிகுமார் பத்மநாபன், ராகவன், ராமசாமி, ராமலஷ்மி, ரிஷபன், லேகா, விநாயக முருகன், வேல் கண்ணன், பாலமுருகன் ஆகியோரது பதிவுகள் நல்ல பதிவுகளாக அடையாளம் காணப்பட்டு இருக்கின்றன. வாருங்கள்.)
நவீன எழுத்தாளன்
நவீன எழுத்தாளன்
ஆற்றங்கரையில்
அருவியின் சாரலில்
மலை முகட்டில் மண் தரையில்
புல்வெளியின் நீள் பரப்பில்
கடலின் எதிரில் கட்டாந்தரையில்
மோவாய் தடவி
தலையைச் சொரிந்து
தானாய்ச் சிரித்துத் தானாய்க் கதறி
எங்கெங்கோ திரிந்து பற்றிக் கொண்டுவந்த
எழுத்துக்களுக்காய் இன்று
கண் சொருகிக் காத்திருக்கிறாய்
கணினி முன்...........
அவரவர் அலாரம்
கனவின் தடயங்களுக்குள் புகுந்து
கலைக்கிறது கடிகாரத்தின் மணியோசை
கடன் வாங்கி ஏய்த்திருந்தவர்கள் சிக்க இருந்த பொழுதில்
காதல் முத்தம் பரிமாற இருந்த கணத்தில்
தேர்வில் முதல் மதிப்பெண்
அறிவிக்கப்படும் அந்த நிமிடத்தில்
துளைத்துக் கொண்டுவந்து எழுப்புகிறது
தூக்கத்தில் கிடப்பவனை
குழப்ப கதாபாத்திரத்திலிருந்து வெளியேறி
அன்றாடத்தின் வலையில் வந்து விழ
நேரம் கொடுக்காமல் -
கனவுக்குள்ளிருந்தே நீண்ட கரங்களுக்கும் பிடிபடாமல் -
அடித்துக் கொண்டிருக்கிறது ஓயாமல்
அவரவரே வைத்துக் கொண்ட அலாரம்.....
(இரண்டு கவிதைகளையும் எழுதியவர் எஸ்.வி.வேணுகோபாலன்)
தலை மறைவு
குப்பையாகவும், சக்கையாகவும் வீழ்ந்து கிடந்த சுதந்திர தேசத்தின் பழைய நகரம் திடுமென தண்ணீர் தெளித்து எழுப்பி, தலை நிமிர்த்தி உட்கார வைக்கப்பட்டது. அதிகாரிகளும், ஆய்வாளர்களும் மூக்கைப்பொத்திக்கொண்டு தெருவில் வந்து நின்றார்கள். பெருக்கப்பட்ட சாலைகளில் வெள்ளைக்கோடுகள் கிழிக்கப்பட்டன. ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. பிளக்ஸ்பேனர்கள் புதிய சுவர்களாய் வானுயர எழும்பின. கொடிகளும், தோரணங்களும் வண்ணங்களாய் பறந்தன.
பார்த்துக்கொண்டு இருந்த அவர்கள் சந்து பொந்துகளிலிருந்து தெறித்து ஓடி தலைமறைவானார்கள். தேடியலைந்த காவல்துறையினரிடம் மனப்பிறழ்வு கொண்ட ஒன்றிரண்டு பேரே பிடிபட்டனர். அவர்களும் கத்தக் கத்த ஓரிடத்தில் அடைக்கப்பட்டனர். தாடி, கந்தல்துணி, கையில் தட்டோடு ஊரெல்லாம் நிறைந்திருக்கும் பிச்சைக்காரர்கள், மந்திரிகள் வரும்போதெல்லாம் விதி போல எப்படி காணாமல் போகிறார்கள் என்பது காவல்துறையினரின் தீவீர புலன்விசாரணையில் இன்று வரை தெரிய வரவில்லை.
பிச்சைக்காரர்களே கண்ணில் படாத, துடைக்கப்பட்டு சுத்தமாயிருந்த, அந்த ஒருநாளில் நகரத்தின் முக்கியவீதியில் மந்திரி கையசைத்துப் போனார். குதிரையின் குளம்படிச் சத்தங்களில் பழகிய காதுகளைக் கொண்டிருந்த அவர்கள் இப்போது தூரத்து சைரன்களின் அலறல்கள் தேய்வதைக் கேட்டபடி மெல்ல வெளியே வந்தனர்.
நகரம் மீண்டும் பழைய நகரமானது.
பொறுத்தருளுங்கள்!
Flash ஒன்றும் முறையாக நான் படிக்கவில்லை. பெரிதாக ஒன்றும் தெரியாது. ஆர்வத்தில் நானே முட்டி மோதி கொஞ்சம் கற்றுக் கொண்டேன். Blogல் Flash Fileஐ இணைப்பதை நேற்று அறியவந்ததும், எனது சில முயற்சிகளை, உங்களிடம் காட்டலாம் போலிருந்தது. பொறுத்தருள்வீராக!
1. சுடர்
2. புஷ் & ஹிட்லர்
3.கயர்லாஞ்சி கொடுமை
காதலுக்கு மரியாதை அல்லது கொலைகளுக்கு மரியாதை!
திட்டமிட்டு, இரக்கமற்று நடத்தப்பட்ட அந்தப் படுகொலைகளுக்கான தீர்ப்பின் வரிகளைப் படிக்கும்போது அதிர்ச்சியாய் இருக்கிறது. அதை எதிர்த்து நிற்கும் அந்தப் பெண்ணைப் பார்க்க பெருமையாய் இருக்கிறது. பதிவர்கள் முகிலன், கார்த்திக் மற்றும் எழுத்தாளர் தமிழ்ச்செல்வன் ஏற்கனவே சுருக்கமாக பதிவு எழுதி இருந்த போதிலும், இதுகுறித்து மேலும் சொல்வதற்கும், சிந்திப்பதற்கும் இருப்பதாகப் படுவதால்....
பிராமண ஜாதியைச் சேர்ந்த சுஷ்மா திவாரி என்னும் பெண், தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பிரபு என்னும் பையனைக் காதலித்து திருமணம் செய்து கொள்கிறாள். அவளது மொத்தக் குடும்பமும் எதிர்க்கிறது. சுஷ்மா தனது கணவனோடும், அவனது குடும்பத்தாரோடும் வாழ்ந்து வருகிறாள். ஒருநாள் ஏழு மாத கர்ப்பிணியான சுஷ்மா அவளது உறவினர் வீட்டுக்குச் சென்றிருக்கும் நேரம், சுஷ்மாவின் அண்ணன் திலிப் இன்னும் சிலரோடு சென்று சுஷ்மாவின் கணவன் பிரபு, அவனது தந்தை, அவனது உடன்பிறந்த சிறுவர்களைக் கொன்று விடுகிறான். கொதித்துப் போகும் சுஷ்மா, தனது அண்ணன் மற்றும் தன் குடும்பத்தாரின் மீது வழக்குத் தொடுக்கிறாள். மும்பை உயர்நீதிமன்றத்தில் அவளது அண்ணனுக்கு தூக்குத் தண்டனை கிடைக்கிறது. அந்தத் தீர்ப்பை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்படுகிறது. தூக்குத்தண்டனை விலக்கப்பட்டு, 25 வருடங்கள் சிறைத்தண்டனையாக உச்சநீதிமன்றம் தீர்ப்பை திருத்தி எழுதுகிறது.
மரணதண்டனைக்கு எதிராக உலகம் முழுவதும் குரல் எழும்பி வரும் இந்த காலக்கட்டத்தில் தூக்குத்தண்டனை விலக்கப்பட்டது சரியான விஷயம்தான். அதுகுறித்து உச்சநீதிமன்றம் தெரிவித்திருக்கும் கருத்துக்கள்தான் இப்போது சர்ச்சைக்கும், விவாதத்துக்கும் உரியதாய் முன்வந்திருக்கின்றன.
- தன் குடும்பத்தின் மரியாதையை தக்கவைப்பதற்காக இந்தக் கொலையை திலீப் செய்திருக்கிறான். (Therefore, to preserve the family honour, Dilip had taken the revenge of the so-called insult of his family.)
- சம்பந்தமில்லாதவர்களும் தன் குடும்ப விவகாரங்களில் மூக்கை நுழைத்து கேலியும் கிண்டலும் பேசுவதால் கஷ்டப்பட்டு இருக்கிறான். தனது இளைய தங்கையினால் தன் குடும்பத்திற்கு இழைக்கப்பட்ட அவமானத்தை துடைக்க வேண்டுமென்பது திலிப்பின் சிந்தனையில் ஏழு நீண்ட மாதங்களாக இருந்திருக்கிறது. (At times, he has to suffer taunts and snide remarks even from the persons who really have no business to poke their nose into the affairs of the family. Dilip, therefore, must have been a prey of the so-called insult which his younger sister had imposed upon his family and that must have been in his mind for seven long months.)
- திலிப்பின் அம்மா சுஷ்மாவை திரும்ப அழைப்பதற்காக முயற்சி செய்திருப்பது சாட்சியத்தால் தெரிய வருகிறது. சுஷ்மாவின் அக்கா கல்பனாவும் அவளைப் பார்க்க கல்லூரிக்குச் சென்றிருக்கிறாள். அந்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. மாறாக சுஷ்மா தொடர்ந்து கல்லூரிக்குச் சென்றதன் மூலம் இந்த சமூகத்தோடு கலந்தவளாயிருந்தாள். இதுதான் குறிப்பாக, திலிப்பிற்கு அடிபட்ட காயத்திற்கு மேலும் அவமானம் தருவதாக இருந்திருக்கிறது. (It has come in evidence that the mother of Dilip tried to lure back Sushma and so did her other married sister Kalpana who actually went to meet Sushma in her college. Those efforts paid no dividend. Instead, Sushma kept attending the college, thereby openly mixing with the society. This must have added insult to the injury felt by the family members and more particularly, accused Dilip)
இதுபோன்ற வரிகள் திரும்பத் திரும்ப வருகின்றன. நோக்கம் திலிப்பின் தண்டனையைக் குறைப்பது என்றாலும் உள்நோக்கம் வேறாகப் புரிய நேரிடுகிறது. இந்த அமைப்பில் இருக்கும் ஏற்றத்தாழ்வுகளையும், பழமைகளின் இறுக்கங்களையும், அதில் உடைப்பு ஏற்படுத்துவதை தாங்கிக்கொள்ள முடியாது என்பதையும் கோடிட்டுக் காண்பிக்கிறது.
‘சுஷ்மா கல்லூரிக்குத் தொடர்ந்து சென்றதன் மூலம் சமூகத்தோடு கலந்தவளாயிருந்தாள்’ என்னும் தீர்ப்புரை வார்த்தைகளுக்குள் எத்தனை அர்த்தங்கள் புதைந்து கிடக்கின்றன. சுஷ்மா வெளியே தலைகாட்ட முடியாமல், கல்லூரிக்குச் செல்ல முடியாமல், சமூகத்தோடு கலக்க முடியாமல் இருந்தால் அவளது அண்ணன் பிரபுவுக்கு பழிவாங்கும் எண்ணம் வந்திருக்காது என்பதுதானே இதன் பொருள்? அவள் இந்த சமூகத்தால் நிராகரிக்கப்பட்டிருந்தால் அவளது குடும்பத்தின் கோபம் தணிந்திருக்கும் என்பதுதானே சொல்லாமல் சொல்லும் தர்க்கம்? மதிப்புமிக்க நமது நீதி தேவதைகளின் குரல்கள் இப்படியா ஒலிக்க வேண்டும்?
நிறைய சினிமாப்படங்களில் இதுபோன்ற காட்சிகளைப் பார்த்திருக்கலாம். தங்கள் வீட்டுப் பெண்ணோ, ஆணோ தங்களைவிட பொருளாதாரத்திலோ, ஜாதியிலோ வேறுபட்ட எதிர் பாலினத்தைக் காதலித்துவிட்டால் போதும். தானும், தன் சதைகளும் சேர்ந்தாட கொதித்துப் போகும் பாத்திரங்கள் பல நினைவுக்கு வரலாம். “நம்ம அந்தஸ்து என்னாவது”, “நம்ம கௌரவம் என்னாவாது”, ”நம்ம மானமும், மரியாதையும் கப்பலேறுது”, ”நாலு பேரு நம்மையும், நம் குடும்பத்தையும் பத்தி என்னப் பேசுவாங்க”, “நாம எப்படி வெளியே தலைகாட்டுவது” போன்ற காத்திரமான வசனங்களைக் கேட்டு இருக்கலாம். நெஞ்சம் மறப்பதில்லை படத்தில் நம்பியார் அடுத்த தலைமுறையிலும் கல்யாணகுமாரும், தேவிகாவும் இணையாமல் இருக்கக் காத்திருப்பார். இவர்களெல்லாம் வில்லன்களாகவோ, அல்லது மனம் ஒதுக்கும் மனிதர்களாகவோ பார்வையாளர்களுக்குள் செலுத்தப்பட்டு இருப்பார்கள்.
பாண்டவர் பூமி படம் இதில் வித்தியாசமானது. பாசம், அன்பு, சந்தோஷம் பொங்கும் குடும்பத்தில் ஒரு பெண், விரோதம் பாராட்டும் இன்னொரு குடும்பத்துப் பையனை காதலித்துத் திருமணம் செய்துகொள்வாள். குடியே முழுகிப்போனதாய் வீடு சோகத்தில் தவிக்கும். அம்மா இறந்துபோவாள். உருத்தாய் இருக்கிற அண்ணன்களில் ஒருவன் தங்கையையும், அந்தப் பையனையும் வெட்டிக் கொன்றுவிடுவான். இந்த இடத்தில் எத்தனைப் பார்வையாளர்களுக்கு அந்த அண்ணன் மீது கோபமும், வெறுப்பும் வந்திருக்கும்? ‘அவரவர் வாழ்க்கையில் ஆயிரம், ஆயிரம் மாற்றங்கள்’எனும் பாடலின் வரிகள் நிறைந்திட அந்தக் குடும்பத்தின் மீது பிரியமும், அதைக் கெடுத்திட்ட தங்கையின் மீது கோபமுமே படிந்திருக்கும்.
அவரவர் வீட்டிற்கு வெளியே ஒரு நியாயம் இருப்பதையும், அவரவர் வீட்டிற்குள்ளே வேறொரு நியாயம் இருப்பதையும்தான் பாண்டவர் பூமி சொல்கிறது. உணர்ச்சிவசப்பட்ட நிலையிலிருந்து விலகி, தர்க்க ரீதியாக யோசித்தால் இந்த உண்மை விளங்கும். வீட்டிற்கு வெளியே வந்து நிற்கச் செய்யும். உச்ச நீதிமன்றமோ அந்த வீட்டிற்குள்ளே இருந்துகொண்டு தீர்ப்பு எழுதியிருப்பது போல இருக்கிறது. அந்த தீர்ப்பில் காணப்படும் ‘மரியாதைக் கொலை’ என்னும் சொல்லாடல் நடுங்க வைக்கிறது. சமூகத்தில் காலகாலமாய் புரையோடி இருக்கும் அத்தனை அழுக்குகளையும் தோலாய் வரித்துக்கொண்டு நீண்டு நெளிந்து கொண்டு இருக்கிறது. நாகரீக உலகத்தை விழுங்கிக் கொண்டு இருக்கிறது.
சுஷ்மாவின் வழக்கையும், வாழ்க்கையையும் அறியும்போது ‘காதலுக்கு மரியாதை’ படத்தைப் பற்றிய இதுவரையிலான மதிப்பீடுகள் உடைந்து நொறுங்குகின்றன. மறுவாசிப்புக்கு உட்படுத்த நேரிடுகிறது. அந்தப் படம் காதலுக்கு மரியாதை பற்றிப் பேசுகிறதா? குடும்பத்தின் மரியாதை பற்றி பேசுகிறதா? ‘குடும்ப மரியாதையை இளையவர்கள் நீங்கள் பேணுங்கள், காதலுக்கு மரியாதையை முதியவர்கள் நாங்கள் செய்கிறோம்’ எனச் சொல்வது போல இப்போது கேட்கிறது. படத்தில் வரும் விஜய், ஷாலினி குடும்பங்கள் மதரீதியாக வேறுபட்டிருந்தாலும், அந்தஸ்தில், மரியாதையில் சமமானவையாகவே இருக்கின்றன. ஒருவேளை விஜய் ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்து சாதாரண இளைஞனாயிருந்தால் ஷாலினியின் அண்ணன்கள் நிச்சயம் கடைசிவரை வெறியோடு அலைந்து இருவரையும் வெட்டிப் போட்டு இருப்பார்கள். கொலைகளுக்கு மரியாதை செய்யப்பட்டு இருக்கும். அதுதான் சுஷ்மாவுக்கு நேர்ந்திருக்கிறது.
இந்த மரியாதைக் கொலைகளைச் செய்வது சொந்தமும், சொந்த ஜாதியும், சொந்த மதமுமே. குடும்பத்தை, ஊரைப் பகைத்துக்கொண்டு காதலித்து ஓடிப்போன இளம் ஆண் பெண்களே இந்த காட்டுமிராண்டித்தனத்திற்கு இரையானவர்களாய் இருக்கிறார்கள். இந்த மண்ணெங்கும் இரத்தம் சொட்ட சொட்ட அப்படியான கதைகள் நிறைந்திருக்கின்றன. வட இந்தியாவில் மிக அதிகமாகவும், குறிப்பாக பஞ்சாபிலும், ஹரியானாவிலும் இதுபோன்ற கொலைகள் அடிக்கடியும் நடந்துகொண்டு இருக்கின்றன. பெரும்பாலும் சாட்சியங்களற்று, கவனத்துக்கு வராமல் போன கொலைகளாகவே இவை இருக்கின்றன. 2007ம் ஆண்டில் மட்டும், காவல்துறையால் பதிவு செய்யப்பட்டு, கவனத்துக்கு வந்த இதுபோன்ற கொலைகளின் எண்ணிக்கை 655. தேசத்துக்கும், மண்ணுக்கும், மனித நாகரீகத்துக்கும் மரியாதையாகவா இருக்கிறது?
பெண்களே குடும்பத்தின் விளக்காகவும், விளக்குமாறாகவும் பார்க்கப்படுவதால்தான் இதுபோன்ற மரியாதைக்கொலைகள் நடக்கின்றன தங்கள் வீட்டிலிருந்து போகின்ற பெண்ணானாலும், வீட்டிற்கு வருகின்ற பெண்ணானாலும், இந்த ‘மரியாதைப் பார்வை’க்கு பங்கம் நேராமல் இருக்க வேண்டும் என்பது விதியாக பேணப்படுகிறது. அவளால் அவமானமோ, கறைகளோ ஏற்பட்டால் அதைக் கழுவிவிடவே இந்தக் கொலைகள் திட்டமிட்டு நடத்தப்படுகின்றன. அது தவறே இல்லையென்னும் புரிதல் குடும்பம், சமூக அமைப்புக்குள்ளே இருக்கிறது. ஊர்ப் பஞ்சாயத்திலேயே முடிவுசெய்யப்பட்டு பல மரியாதைக் கொலைகள் நடத்தப்பட்டு இருக்கின்றன.
பெண்களுக்கான உரிமைகள் குறித்து பிரக்ஞை ஏற்படுத்தப்பட்டு, அதற்கான உரையாடல் நடத்தப்பட்டு இன்று கொஞ்சம் சுதந்திரவெளியில் பெண்கள் பிரவேசிக்க ஆரம்பித்திருப்பதைக் காணமுடிகிறது. அதில் துளிர்க்கும் காதல் சாதி, மத அடையாளங்களைத் தாண்டுகிறது. தாங்கிக்கொள்ள முடியாத பழைய சமூகம் தனது பிடியை மேலும் இறுக்குகிறது. அப்படித்தான் இளம் ஆண்களின், பெண்களின் இரத்தம் மரியாதையோடு சிந்திக்கொண்டு இருக்கிறது.
ஐ.நா.சபையின் அறிக்கையொன்றில் இந்தியாவிலும், இன்னும் சில நாடுகளிலும் இதுபோன்ற மரியாதைக் கொலைகள் நடப்பதாக பதிவு செய்யப்பட்டு இருந்திருக்கிறது. பா.ஜ.கவின் இராஜ்யசபா எம்.பியாக இருந்த அலுவாலியா என்பவர் U.N.'s Social, Humanitarian and Cultural Committee யின் பிரதிநிதியாக கலந்துகொண்டு, ஐ.நாவின் அறிக்கையை மறுத்திருக்கிறார். அவை உண்மைக்குப் புறம்பான செய்திகள் என்றும் இந்தியாவில் அப்படி எதுவும் நடக்கவில்லையென்றும் சொல்லி உண்மைக்கும், இந்தியாவுக்கும் மரியாதை செய்துள்ளார். இதுவே அரசின் நிலைபாடாகவும் இருக்கிறது. ஜாதி விட்டு, மதம் விட்டு திருமணம் செய்யப்படுவதை சட்டம் அனுமதிக்கிறது. உயர்ஜாதியைச் சேர்ந்தவர்கள், தாழ்த்தப்பட்ட ஜாதியைச் சேர்ந்தவர்களைத் திருமணம் செய்துகொண்டால் ரூ.50000/- கொடுக்கிறது. படிப்பு, பணி ஆகிய இடங்களில் முன்னுரிமை அளிக்கிறது. எல்லாம் சரிதான். ஆனால் பாதுகாப்பு?
ஒரு தார்மீக கோபத்தோடு அரசு குறுக்கீடு செய்தாக வேண்டிய நேரம் இது. இதுபோன்ற காதலர்களின் வாழ்வுக்கு உத்திரவாதம் அளிக்கப்பட வேண்டும். எதிர்காலம் குறித்து நிச்சயமான அக்கறை காட்டப்பட வேண்டும். இந்தக் கொலைகளை மரியாதை என்ற அடைமொழியோடு அடையாளப்படுத்த முயற்சிக்காமல், காட்டுமிராண்டித்தனமானது என நீதித்துறை சுட்டிக்காட்ட வேண்டும். மரியாதைக் கொலைகள் செய்பவர்கள் மீது கடும் தண்டனை (மரண தண்டனை தவிர்த்து) விதிக்கப்பட வேண்டும்.
இந்த மரியாதைக் கொலைகளை எதிர்த்து தொடர்ந்து போராடி வருவதில் முன் நிற்கின்றன இடதுசாரிக் கட்சிகளும், அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கமும். இவ்வகையிலான காதலர்களைக் காப்பாற்றுவதிலும், கொலைகளை அம்பலப்படுத்துவதிலும் தன்னால் இயன்றவரை முயற்சிகளைச் செய்கின்றன. சமூக ஏற்றத்தாழ்வுகள் நிரம்பிய ஒரு சமூகத்தில், இதுபோன்ற மரியாதைக் கொலைகள், அந்த பாகுபாடுகளைத் தக்கவைத்துக் கொள்ளவே நடத்தப்படுகின்றன என்கிற அடிப்படை புரிதலை ஏற்படுத்த பிரச்சாரம் செய்கின்றன. அமைப்பையே புரட்டிப் போடும் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டால் ஒழிய இந்தக் கொடுமைகளுக்கு ஒரு தீர்வு வராது. அதற்கான ஒரு மெழுகுவர்த்தியை இப்போது ஏற்றி வைத்து இருக்கிறாள் சுஷ்மா!
”இருபத்தொன்றாம் நூற்றாண்டிலும் இதுபோன்ற சமூக நோய்கள் இருக்கின்றன. அதிலொன்றுதான் என் பிரச்சினையும். எத்தனையோ பேர் இதுபோல மதத்தின் பேராலும், ஜாதியின் பேராலும் கொடுமைகளுக்கு ஆளாகி இருக்கின்றனர்.” என்ற உறுதியோடு சுஷ்மா உச்சநீதிமன்றத் தீர்ப்பின் வரிகளை எதிர்த்து போராடுகிறாள்.
இன்னொரு திருமணம் செய்துகொள்ளப் போவதில்லையெனவும், இனி தன் குழந்தைதான் தனக்கு எல்லாமே என்று சொன்னாலும் அன்பிற்குரிய சுஷ்மா எல்லோருக்காகவும் நம்முன் நிற்கிறாள். கடந்த காலத்தின் இருட்டு, எதிர்காலத்திற்குள்ளும் ஊடுருவி விடக்கூடாது என நம்முன் நடக்கிறாள். தன் கைக்குழந்தையோடு அவள் நம்பிக்கையாக உலகின் முன்னே காட்சியளிக்கிறாள்.
வெட்கப்படுவோம், வேதனைப்படுவோம், ஆத்திரப்படுவோம்!
தான் வாழும் சமூகத்தில் நடந்த அநீதிக்கு எதிராக குரல் கொடுத்த அந்த மனிதனை வன்முறைக்கும்பல் ஒன்று வெட்டி வீழ்த்தியிருக்கிறது. நேற்று காலையில் இந்தச் செய்தியைப் படித்ததும் துடித்துப் போனேன். ‘என்னடா உலகம் இது’ என கடுங்கோபம் வந்தது.
கந்துவட்டிக் கும்பல் ஒன்று, பணத்தைத் திருப்பித் தரமுடியாத விசைத்தறி தொழில் செய்யும் குடும்பத்தில் உள்ள, அப்போதுதான் திருமணமான பெண்ணை, வன்புணர்ச்சிக்கு ஆளாக்கி இருக்கிறது. அந்தக் காட்சிகளை வீடியோவில் பதிவு செய்து இணையத்திலும் வெளியிட்டு இருக்கிறது. செய்தியறிந்த பெண்ணின் பெற்றோர் கலங்கி நிற்கின்றனர். அவர்களுக்கு ஆதரவாக உதவ முன்வருகிறார் வேலுச்சாமி. ஈரோடு அருகே உள்ள பள்ளிப்பாளையத்தில், சி.பி.எம் கட்சியின் கிளைச்செயலாளர் அவர். கந்துவட்டிக் கும்பலுக்கு எதிராக காவல்நிலையத்தில் புகார் செய்கிறார். அயோக்கியர்களைக் கைதுசெய்ய வலியுறுத்துகிறார். வேலுச்சாமியின் உயிருக்கு மிரட்டல்கள் விடப்படுகின்றன. அதையும் அவர் காவல் நிலையத்தில் சொல்கிறார். 11.3.2010, வியாழன் இரவு வெறிபிடித்த கும்பல் ஒன்று வந்து அவரை வெட்டிக் கொல்கிறது. (இதுகுறித்து எழுத்தாளர் தமிழ்ச்செல்வன் சமூகத்தின் மனசாட்சியை உலுக்கி பதிவு எழுதி இருக்கிறார்.)
நித்யானந்தாவையும், ரஞ்சிதாவையும் பற்றிய செய்திகளை இன்று வரை மாறி மாறி, படங்கள் படங்களாக, பக்கம் பக்கமாக வெளியிட்டு வரும் நமது பிரபல பத்திரிகைகள் இந்த அநியாயத்தை பத்துப்பதினைந்து வரிகளில் ‘பள்ளிப்பாளையத்தில் கொலை’ என சிறு செய்தியாகப் போட்டு தங்கள் தர்மத்தை நிலைநாட்டிக்கொண்டன. மக்களின் ரசனைகளை சிறுமைப்படுத்தி, அதற்கு தீனி போட்டு, அதில் பணம் பார்க்க வைக்கும் செய்தி இல்லை இது. சமூக அநியாயங்களுக்கு எதிராக மக்கள் கோபமடைந்துவிடக் கூடாது என்பதில் இந்த பிரபல பத்திரிகை முதலாளிகள் எப்போதும் தெளிவாக இருக்கின்றனர். இவைகளைத்தான் நாம் படிக்கிறோம். வெட்கப்படுவோம்.
வேலுச்சாமிக்கு 11 வயதில் சித்ரா, 8 வயதில் தாரணி பிரியா என்று இரு மகள்களும், 7 வயதில் வினோத் என்ற மகனும் இருக்கின்றனர். எதற்காக அந்தச் சின்னக் குழந்தைகள் தங்கள் அருமையானத் தந்தையை இழந்து நிற்கின்றனர் என்பதை இந்த சமூகம் யோசித்துப் பார்க்குமா என்று தெரியவில்லை. வேதனைப்படுவோம்.
பணமும், செல்வாக்கும் இருந்தால் எது வேண்டுமானாலும் தாங்கள் செய்யலாம், தங்களை யாரும் கேள்வி கேட்க முடியாது என்னும் அதிகாரத்தின் வெளிப்பாடுகளே இந்த பகிரங்கமான குற்றங்கள். சமூகத்துக்கே விடப்படும் மிரட்டல்கள் இவை. நிம்மதியில்லாமல், தினம் தினம் பயந்து வாழ வேண்டியிருக்கிற சாதாரண ஜனங்கள் ஒரு பொருட்டே இல்லை இந்த அமைப்புக்கு. அவர்களுக்காக குரல்கொடுக்க முன்வருபவர்களையும் இரத்தம் சொட்ட சொட்ட அழிக்க முடியுமானால், எதிர்காலத்திற்கு என்ன உத்திரவாதம் இருக்கிறது. யாருடைய அரசு இது? யாருடைய அமைப்பு இது? ஆத்திரப்படுவோம்.
அன்பையும், ஆதரவையும் தேடியலையும் இதயத்தின் துடிப்பு!
தோழர்.உ.ரா.வரதாராசன் அவர்கள் காலமான செய்தி அறிந்த இரண்டாம் நாளில், பத்திரிகையாளர் விஜயஷங்கர் என் மின்னஞ்சலுக்கு மைக்கேல் ஜாக்சனின் will you be there என்னும் இந்தக் கவிதையை அனுப்பி வைத்திருந்தார். தொடர்ந்து படிக்க முடியாமல் தவித்துப் போனேன். தன்னுடைய எல்லா சமயங்களிலும் அன்பையும், ஆதரவையும் தேடும் ஒரு மனிதனின் இதயத் துடிப்பாக இருந்தது. துயரமானப் பொழுதுகளில் தன்னைப் பற்றிக்கொள்ள யார் இருக்கிறார்கள் எனக் காற்றில் துழாவுகிற மனிதக் கரமொன்றின் அசைவுகளாயிருந்தது. என்னைச் சுற்றிலும் இறுக்கமான மௌனம் குடிகொண்டது.
சில நாட்கள் கழித்து விஜயஷங்கர், “அந்தக் கவிதையை படித்தீர்களா” எனக் கேட்டார். வரிகள் மிகவும் அலைக்கழித்ததைச் சொன்னேன். வலைப்பக்கத்தில் பதிவிடலாம் என்றவுடன், அவரே மொழிபெயர்த்து அனுப்பி இருந்தார். கேளுங்கள்:
நீ எனக்காக இருப்பாயா?
என்னைப் பிடித்துக் கொள்.
ஜோர்டான் நதியைப் போல்
என்னை நீ பிடித்துக் கொண்டால்
நீ என் நண்பன் என்று
நான் சொல்வேன்.
என்னைத் தூக்கிச் செல்
என் சகோதரனைப் போல்
என்னை நேசி
என் தாயைப் போல்
நீ எனக்காக இருப்பாயா?
சொல்! என்னைத் தாங்கிக் கொள்வாயா?
நான் தவறும்போது என்னைத் திட்டுவாயா?
நான் தொலையும்போது என்னைத் தேடுவாயா?
ஆனால் அவர்கள் சொன்னார்கள்
நம்பிக்கையோடு இருக்க வேண்டுமென்று
நடக்க முடியாதபோதும் நடக்க வேண்டுமென்று,
இறுதி வரை போராட வேண்டுமென்று.
ஆனால் நானும் ஒரு மனிதன்தானே?
எல்லோரும் என்னை அவர்களின் கட்டுக்குள்
கொண்டுவர நினைக்கிறார்கள்
இந்த உலகம் எனக்கென ஒரு பாத்திரத்தை
வைத்திருப்பதுபோல் தெரிகிறது.
நான் மிகவும் குழம்பியிருக்கிறேன்.
நான் உனக்காக இருப்பேனென்று
என்னிடம் சொல்வாயா?
என்னைத் தாங்கிக் கொள்ளுமளவுக்கு
என் மீது அக்கறை செலுத்துவாயா?
நம்முடைய மிகவும் இருண்டபொழுதில்
என் விரக்தியின் ஆழத்தில் கூட
என் மீது அக்கறை செலுத்துவாயா?
என்னைப் பிடித்துக்கொள்
மென்மையாகவும், உறுதியுடனும்.
என்னைப் பிடித்து
அங்கே கொண்டுசெல்
நானும் ஒரு மனிதன்தான்.
என்னை நடத்திச் செல்
என்னைப் பிடித்துக்கொள்
என்னை நேசி
எனக்கு ஊட்டிவிடு
என்னை முத்தமிடு
என்னை விடுதலை செய்
நானும் ஒரு மனிதன்தான்.
என்னைக் காப்பாற்று
என்னைக் காப்பாற்று
என்னை குணப்படுத்து
என்னை மேலே தூக்கு
என்னை நேசிப்பதாக
மென்மையாகச் சொல்
எனக்காக இருப்பேனென்று
என்னிடம் சொல்
நம்முடைய மிக இருண்டபொழுதுகளில்
என்னுடைய விரக்தியின் ஆழத்தில் நான் இருக்கும்போதும்
என் மீது அக்கறை செலுத்துவாயா?
எனக்காக இருப்பாயா?
என்னுடைய சோதனைகளிலும்
துயரங்களிலும்
நம்முடைய சந்தேகங்களிலும்
வெறுப்புகளிலும்
என் வன்முறையிலும்
என் கொந்தளிப்பிலும்
என்னுடைய பயத்தினூடாகவும்
என் பாவசங்கீர்த்தனங்களிலும்
என்னுடைய துயரத்திலும், வேதனையிலும்
என் சந்தோஷத்திலும், துக்கத்திலும்
மற்றொரு நாளை வரும் என்ற நம்பிக்கையிலும்
நீ என்னை விட்டுச்செல்ல விடமாட்டேன்.
ஏனெனில் நீ என் இதயத்தில் இருக்கிறாய்.
மகளிர் மசோதா நிறைவேறப்பட வேண்டியது எழுத்தில் அல்ல, அர்த்தத்தில்!
பாராளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு மசோதா ஒருவழியாக நேற்று மாநிலங்களவையில் நிறைவேறி இருக்கிறது. இதன் மூலம் மொத்தமுள்ள 543 உறுப்பினர்கள் கொண்ட மக்களவையில் இனி 181 பெண் எம்.பிக்கள் இருக்க முடியும். 28 மாநிலங்களில் மொத்தமுள்ள 4109 எம்.எல்.ஏக்களில் இனி 1370 பேர் பெண்களாக இருக்க முடியும். ஒரு மகத்தான அத்தியாயம் ஆரம்பித்திருப்பதாக காங்கிரஸ், இடதுசாரிக்கட்சிகள் சொல்கிறார்கள். இதன்மூலம் 13 வருடமாக இழுத்துக்கொண்டு இருந்த பிரச்சினை ஒன்று முடிவுக்கு வந்துவிட்டதாகச் சொல்கிறார்கள். அப்படியெல்லாம் எதற்கும் இந்த ஜனநாயக அமைப்பில் எளிதில் முடிவு வந்துவிடாது என்பதும், வேறு வடிவங்களில் அவை வெளிப்படும் என்பதும் கடந்தகால வரலாறு அறிந்தவர்களால் புரிந்துகொள்ள முடியும்.
மசோதாவில் லல்லுவின் கட்சி, முலாயம் கட்சி, மாயாவதி உள்ளிட்ட சில கட்சிகள் திருத்தங்களைக் கோருகிறார்கள். இவர்கள் அனைவரும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த தலைவர்கள் என்பது இங்கு குறிப்பிடப்பட வேண்டிய விஷயம். அதுபோல, பெண்களுக்கான அதிகாரத்தையும், சுதந்திரத்தையும் போற்றாத இந்து சனாதனத்தில் ஊறித் திளைத்திருக்கும் பாரதீய ஜனதாக் கட்சி இந்த மசோதாவை ஆதரிப்பதும் குறிப்பிடத்தக்க விஷயமே.
இந்த மசோதாவை எதிர்ப்பவர்கள் அனைவரும் ஆணாதிக்க சிந்தனை கொண்டவர்களாக மட்டுமே காட்டும் ஒரு சித்திரம் இங்கே இயல்பாக எழும்புகிறது. ஒரு மேலோட்டமான புரிதலில் நாம் இயங்கிக்கொண்டு இருக்கிறோம் என்பதுதான் இப்படியாக வெளிப்படுகிறது. முன்வைக்கப்பட்ட ஒரு விவாதத்தை, எதிர்ப்பவர்களின் கருத்துக்களை ஒற்றை வரியில் நிராகரிக்கும் மனோபாவமே நம்மிடம் இருக்கிறது. அவர்கள் அனைவரையும் தாட்சண்யமில்லாமல் சட்டென்று பெண்களுக்கு எதிரானவர்கள் என்று முத்திரை குத்தி விடுவது ஆரோக்கியமாக இருக்காது. அவர்கள் என்னதான் சொல்கிறார்கள் என்பதையும் ஒரு ஜனநாயக அமைப்பில் கேட்டே ஆக வேண்டியிருக்கிறது.
“தலீத் பகுதியிலிருந்தே வரமுடியாதபோது தலித் பெண்கள் மட்டும் வந்துவிடப் போகிறார்களா? முஸ்லீம்களே வரமுடியாதபோது முஸ்லீம் பெண்கள் மட்டும் வந்துவிடப் போகிறார்களா?”
“காங்கிரஸின் தலைவியே ஒரு பெண்தான். அவர் தன் கட்சியில் 33 சதவீதம் பெண்களை தேர்தலில் நிற்கவைத்துவிட்டாரா? ஒவ்வொரு கட்சியும் 33 சதவீதம் பெண்களை நிறுத்த வேண்டும் என முதலில் சொல்லட்டுமே”
“எந்தக் கட்சி தங்கள் வேட்பாளர்களில் 33சதவீதம் பெண்களை நிறுத்தவில்லையோ, அந்தக் கட்சியை, தேர்தல் கமிஷன் தடைசெய்ய சட்டம் கொண்டு வரட்டுமே!”
“பணியிடங்களில் 33 சதவீதம் என்ன 50 சதவீதம் பெண்களுக்கு இடம் கொடுக்கட்டுமே. அதற்கென சட்டம் கொண்டு வரட்டுமே. அங்கெல்லாம் கொண்டு வராமல் இங்கு ஏன் கொண்டு வரவேண்டும்?”
“பல கட்சிகளில் முடிவு எடுக்கும் உயர்ந்த பட்ச அமைப்பில் எத்தனை பேர் பெண்கள் இருக்கிறார்கள். இவர்கள் பாராளுமன்றத்தில் 33 சதவீத இடம் கோருவது விநோதமாயில்லை?”
இன்னும், இதையொட்டி இன்னபிற விவாதங்களும், கேள்விகளும், சந்தேகங்களும் முன்வைக்கப்படுகின்றன. பாராளுமன்றத்தில் முஸ்லீம்கள், தலித்துக்கள், பிற்படுத்தப்பட்டவர்கள் ஆகியோரின் எண்ணிக்கையை குறைப்பதற்கான சதி இந்த மசோதாக்களில் இருப்பதாக லல்லு பிரசாத், முலாயம், மாயாவதி, சரத் ஆகிய தலைவர்கள் ஆத்திரத்துடன் கூறுகின்றனர். அதாவது, 543 உறுப்பினர்களில் இருந்து 181 பெண்களுக்குப் போக, மீதி 362 இடங்களுக்குள்ளேதான் இனி, தலித்கள், முஸ்லீம்கள், பிற்படுத்தப்பட்டோர் ஆகியோர் உறுப்பினர்களாகும் வாய்ப்பாக குறுக்கப்பட்டு இருக்கிறது என்பது அவர்களது குற்றச்சாட்டு. இதையொட்டி இந்த மகளிர் இட ஒதுக்கீட்டில் உள்ளொதுக்கீடு வேண்டும் எனவும் திருத்தங்கள் கோரப்படுகின்றன. இப்போது ஒன்று தெளிவாகப் புரியும். இந்த 181 மகளிர் இட ஒதுக்கீட்டில் பெரும்பாலும் உயர் ஜாதியினரே வரக்கூடும் என்பதே எதிர்த்துக் கருத்துக்கள் தெரிவிப்பவர்களின் மையப்புள்ளியாக இருக்கிறது. சமூகத்தில் ஒரளவுக்கு முன்னேறிய, வசதிபடைத்த, வெளியுலகம் தெரிந்த பெண்களே இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள முடியும் என்பதும், தலித், முஸ்லீம் பெண்கள் அந்த நிலைமையில் இல்லையென்பதும் அவர்களின் வாதமாக இருக்கிறது.
அதிகாரம் என்பதை நோக்கியே எல்லாக் கண்களும் இருக்கின்றன. அரசியல், வியாபாரம், பண்பாடு என எல்லாவற்றிலும் இந்த பார்வை நிலைகொண்டு இருக்கிறது. ஒவ்வொருவரும் அடிப்படையில், இயல்பாகவே தங்கள் நலன் சார்ந்தே யோசிக்கிறார்கள். பிரச்சினைகள் எல்லாவற்றுக்குமான ஊற்றுக்கண் இதுதான். நம் சமூக அமைப்பில், இத்தனை வருட அனுபவத்தில் இந்த நிலைமைதான் நீடிக்கிறது. இந்த தேர்தல் முறையில், அழுகிப்போய்க்கொண்டு இருக்கும் அதன் நடைமுறைகளில் நியாயங்கள் நீர்த்துப்போய்க்கொண்டு இருக்கின்றன. எல்லாவற்றுக்கும் இடமளிப்பது, எல்லாக் கருத்துக்களையும், பார்வையையும் உட்கொள்வது, எல்லாருக்கும் பொதுவானதாக இருப்பதுதான் ஜனநாயகத்தின் யோக்கியதையாக இருக்க முடியும். அப்படி இருந்திருக்கிறதா என்பதுதான் இன்று மக்கள் மக்களிடமே கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி. ஜனநாயகம் அப்படி இல்லாதபோது, மகளிர் மசோதாக்கள் குறித்து இப்படிக் கேள்விகளும், சந்தேகங்களும் எழுவது தவிர்க்கமுடியாதவை.
அரசியல் கட்சிகள், அவர்தம் நிலைபாடுகள் தாண்டி, தேசத்தின் பிரஜைகளாக இந்த விவாதங்களை நாம் எப்படி எடுத்துக் கொள்கிறோம், எந்த வகையான உரையாடலை நாம் நடத்தப் போகிறோம்?
ஜாதி, மத, மொழி பாகுபாடுகள் குறித்து பேசப்படுகிற அளவு, அவைகளுக்கு அழுத்தம் கொடுக்கிற அளவு இந்திய சமூகத்தில் பாலின பாகுபாடுகளுக்கு நாம் முன்னுரிமை கொடுக்கிறோமா? பெண்களையும் அதிகாரத்தை நோக்கி நகர்த்துவதற்கான முனைப்பு சமூகத்திடம் இருக்கிறதா? இவைகளின் ஒரு பகுதியே இந்த இடஒதுக்கீடு மசோதா என்று உணரவும், உணர்த்தியாகவும் வேண்டியிருக்கிறது.
1952ல் நடந்த பொதுத் தேர்தலில் மொத்தம் 19 பெண்களே எம்பிக்களாக இருந்தனர். 57 ஆண்டுகள் கழித்து 2009ம் ஆண்டு நடந்த தேர்தலில் மொத்தம் 59 பெண்கள் எம்.பிக்களாக இருக்கின்றனர். அதாவது 10.82 சதவீதம்! இந்த எளிய உண்மையே போதும், பெண்கள் எங்கு இருக்கிறார்கள் என்பது புரிந்துகொள்ள. எந்த ஜாதியிலிருந்தாலும், எந்த மதத்திலிருந்தாலும், எந்த மொழி பேசுபவராக இருந்தாலும் பெண்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு, இருட்டடிப்பு செய்யப்பட்டவர்களாகவே இருக்கின்றனர்.
பஞ்சாயத்துத் தேர்தல்களில் மகளிருக்கான இடம் ஒதுக்கப்பட்டு இருக்கிறது.
பல நாற்காலியில் அவர்களது கணவன்மார்களே உட்காருகிறார்கள். சட்டங்களை அனுமதித்துக்கொண்டே அதிகாரம் வேறு ரூபத்தில், வடிவத்தில் தன்னை தக்கவைத்துக்கொள்கிறது. இதைச் சுட்டிக்காட்டி குறை சொல்லும் கருத்துக்களில் எவ்வளவு நியாயம் இருக்கிறதோ, அதே நியாயம் சில இடங்களில் பெண்களும் உட்காரவும் முடிந்திருக்கிறது என்கிற உண்மையை புரிந்துகொள்வதிலும் இருக்கிறது.
மனித சமூகம் அவமானப்படத்தக்க வகையில் பாலின பாகுபாடு நிறைந்து இருக்கும் அமைப்பில், இந்த மசோதா வரவேற்கப்படத்தக்கதும், ஆரோக்கியமானதும் ஆகும். மேலும், இதுபோன்ற இடஒதுக்கீடுகள் ஒரு தீர்வு கிடையாது என்பதையும், காலம் காலமாய் புரையோடிப் போயிருக்கும் ஏற்றத்தாழ்வுகளை சமன் செய்வதற்கான ஒரு ஏற்பாடே என்பதையும் சேர்த்து நாம் புரிந்துகொள்ள வேண்டி இருக்கிறது. மொத்த சமூகமும், பொதுவான நியாய அநியாயங்களோடு இந்த முரண்பாடுகளைப் புரிந்து, அதைச் சரிசெய்ய முன்வருவதே தீர்வாக இருக்க முடியும்.
சாதிய, மத ரீதியான பாகுபாடுகளுக்கு முன்னுரிமை கொடுத்து பெண்களின் உரிமைகளை தள்ளிவைப்பதோ, பெண்ணுரிமையை காரணம் காட்டி சமூக ஏற்றத்தாழ்வுகளை புறக்கணிப்பதோ சரியாய் இருக்காது. இரண்டையும் சரியாக புரிந்துகொண்டு, இரண்டுக்குமே முன்னுரிமை கொடுக்க வேண்டும். அது அவ்வளவு எளிதான காரியமல்ல. மசோதா நிறைவேற்றப்பட வேண்டியது எழுத்தில் அல்ல, இந்த அர்த்தத்தில்தான்.
டைட்டானிக் படத்தின் ரோஸ் போல அவள்!
பள்ளம் படம் பார்த்து விட்டீர்களா? இப்போதும் அவள் சிலசமயங்களில் எனக்குள் நிழலாடிக்கொண்டுதான் இருக்கிறாள். மாட்டுத்தாவணி போன்ற பேருந்து நிறுத்தங்களில், நெரிசல் நிறைந்த சாலைகளில், திருவிழாக்கூட்டங்களில் அவள் மாதிரி யார் தெரிந்தாலும், ஒருகணம் உற்றுப்பார்க்கிறேன். அவளாக இருக்கமாட்டாள் என நன்றாகத் தெரிந்தாலும் அப்படி நிகழ்ந்துகொண்டு இருக்கிறது. டைட்டானிக் படத்தில் வரும் ரோஸ் போல அவள். செல்வந்தர் குடும்பத்தில் இருந்து செக்கச் செவேலென்று வந்து காதல்வயப்படும் பெண்ணாய்த்தான் ரோஸ் இருக்க வேண்டுமா. கப்பலின் நுனியில் நின்று கைகளை விரித்து பரவசமாய் நிற்பதுபோல, அதோ புகையிலையை வாயில் ஒதுக்கி, கைகளால் குழந்தைக்கு கொக்கு காட்டி, சட்டென தலையை தெனாவெட்டாக வெட்டி பள்ளத்தில் இறங்கும் அவளும் ரோஸ்தான். இன்னும் அவளைப் பற்றி நீங்களும் நானும் தெரிந்துகொள்ள வேண்டியது இருக்கிறது.
காமிராவில் பிடித்துவைத்த காட்சிகள் அடுக்கப்பட்டு பார்வையாளர்கள் முன்னால் வரிசைக்கிரமமாக நகர்த்தப்படுகின்றன. அவர்கள் தன் வசமிழந்து, அதில் ஒன்றிப்போய், கூடவே செல்கிறார்கள். அடுத்து, அடுத்து எனத் தேடுகிறார்கள். அழகு, புதிர், வேடிக்கை என கடந்து சென்று ஒரு புள்ளியில் நின்று சிரிக்கிறார்கள். அழுகிறார்கள். பெருமூச்சு விடுகிறார்கள். அவ்வளவுதானா என வெறுப்படைகிறார்கள். ஆனாலும் அவர்களுக்காக வேறு காட்சிகள் அடுக்கி வைக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. பிடிக்கப்படாத காட்சிகள் நம்மைச் சுற்றிலும் இறைந்து கிடக்கின்றன. சம்பந்தப்பட்டவர்களுக்கு மட்டுமே அவை பிடிபடும். அப்படித்தான் அவளைப்பற்றிய நினைவுகளை எடுத்து அடுக்கிப் பார்க்கிறேன். பள்ளம் படத்தில் வராத காட்சிகள் அவை. சொல்லப்படாத ஒரு கதையும் அங்கே இருக்கிறது.
இரத்த தானம் செய்வதற்கான கிளப் ஒன்றை துவக்கும் பொருட்டு அதற்கு நிதி திரட்ட வாலிபர் சங்கம் சாத்தூரில் மாஜிக் ஷோ நடத்த திட்டமிட்டு இருந்தது. 2005 டிசம்பர் மாதத்தின் ஒருவிடிகாலையில் அன்றைக்கு சாயங்காலம் ஷோ நடத்துவதற்கு மாஜிக் நிபுணர் மித்ரா வந்திருந்தார். அவரை வரவேற்று, உடுப்பி ஒட்டலில் டீ குடித்துக்கொண்டு இருந்தோம் வெளியே வந்து நின்ற போது எதிரே பள்ளம் தோண்டிக்கொண்டு இருந்தனர். அந்தக் காட்சிகளை படம்பிடிக்க வேண்டும் போலத் தோன்றியது. பக்கத்தில் கார்த்தியின் பிரியா ஸ்டூடியோ. காமிரா எடுத்துவந்தான்.
கணவன் பள்ளத்தில் இறங்கி மண் தோண்டிக்கொண்டு இருக்க, குழந்தையைத் தூக்கிக்கொண்டு அவள் அருகில் நடந்து வந்துகொண்டு இருந்தாள். எங்கள் காமிராவிற்குள் நுழைந்துகொண்டதை அப்போது அவள் அறிந்திருக்கவில்லை. அதை எடு, இதை எடு, அங்கிருந்து எடு என்று சொல்ல, கார்த்தி அவனுக்கே உரிய கோணங்களிலெல்லாம் வளைத்துக்கொண்டு இருந்தான். அங்குமிங்கும் சாலையில் பஸ்களும், சைக்கிள்களும், மாட்டுவண்டிகளும், மனிதர்களும் சென்றுகொண்டே இருந்தனர். கொஞ்ச நேரத்தில் அவர்களுக்கு தெரிந்துபோனது. “என்ன சார்.. எங்களப் போயி எடுக்குறீங்க....” என அவளும், அவனும் வெட்கப்பட்டார்கள். ஒரு பன்றி எங்கிருந்தோ வந்து பக்கத்தில் தேங்கிக்கிடந்த சகதியில் படுத்தது. யாரும் அதுகுறித்து அலட்டிக்கொள்ளாத போது, பள்ளம் தோண்டிக்கொண்டு இருந்தவர்களின் சிறுபையன் ஒருவன் அதைக் கல்லெறிந்து விரட்டினான். முதல்நாள் இந்தக் காட்சிகளோடு முடிந்தது.
இரண்டு நட்கள் கழித்து அவர்கள் வேறொரு இடத்தில் பள்ளம் தோண்டிக்கொண்டு இருந்தனர். அருகில் ஆட்டோ ஸ்டாண்ட் ஒன்று இருந்தது. அதில் ஒரு ஆட்டோவில் உட்கார்ந்து படம் பிடித்துக்கொண்டு இருந்தோம். அந்தப்பெண்ணுக்கும், யாருக்குமே அன்று நாங்கள் படம் எடுத்தது தெரியாது. சாயங்காலம் கார்த்தி “இப்படியே எடுத்து என்ன செய்யப் போகிறோம்” என்றான். சிரித்துக்கொண்டேன். எனக்கும் எதுவும் தோன்றியிருக்கவில்லை. “எடுத்துக்கொண்டே இருப்போம். பிடிபடும்” என்றேன். அவர்கள் தங்கியிருக்கும் இடம், அவர்களுக்கு என்ன ஊதியம், எங்கிருந்து வருகிறார்கள் இவர்கள் எல்லாம் விசாரிக்க வேண்டும் என்றேன். இதுபோன்ற காரியங்களில் முழுவதுமாய் மூழ்கி மெனக்கெட்டு அதிலேயே கரைந்துபோக வேண்டும். ஆனால் தொழிற்சங்கம், எழுத்தாளர் சங்கம், நண்பர்கள் வட்டம் என பலபொழுதுகள் கழிய, கிடைக்கிற நேரங்களில் படம் எடுப்பது என்பது சரிப்பட்டு வராது. “அண்ணா, அவர்கள் திருவண்ணாமலைப் பக்கத்துல இருந்து வந்திருக்காங்க” “இங்கே ஒரு காண்டிராக்டர்கிட்ட வேலைப்பாக்குறாங்க...”, “பாவம் ராத்திரி குளிர்ல குழந்தையோட அவங்க பூங்கா பக்கத்துல படுத்துருக்கும் காட்சியைப் பாக்க முடியலண்ணே..” என செய்திகளைச் சொல்லிக்கொண்டு இருந்தான் கார்த்தி. அவர்கள் தங்கியிருக்கும் இடத்தை ஒருநாள் படம்பிடிக்க வேண்டும் என திட்டமிட்டோம்.
இரண்டு நாள் கழித்து கார்த்திதான் சொன்னான். “அண்ணா அந்தப் பொண்ணும், குழந்தையும் ஊருக்கு போய்ட்டாங்க. அவன் மட்டும்தான் இருக்கான்” என்றான். விசாரித்து அறிந்த விபரங்கள் தாங்க முடியாதவையாக இருந்தன. குழந்தையை வைத்துக்கொண்டு ஒழுங்காய் வேலை பார்க்கவில்லையென்று அவளை அடிக்கடி காண்டிராக்டர் சத்தம்போட்டுக் கொண்டே இருந்திருக்கிறான். முந்தின நாளும் அப்படி நிகழ்ந்திருக்கிறது. அவளும் துடுக்குத்தனமாக எதோ சொல்ல, அவளை ரோட்டில் வைத்து, அந்தக்கணவன் முன்னாலேயே அடித்துக் கீழே தள்ளியிருக்கிறான் காண்டிராக்டர். கணவன் கெஞ்சி இருக்கிறான். இனிமேல் அவள் வேலைக்கு வேண்டாம் என காண்டிராக்டர் சொல்லி விட்டானாம். அவளை ஊருக்கு அனுப்பிவிட்டு அவன் மட்டும் வேலை பார்த்துக்கொண்டு இருந்தான். பிறகு சிலநாட்களில் அவனும் போய்விட்டான்.
காமிராவுக்குள் அவர்கள் இருந்துகொண்டு அலைக்கழிக்க ஆரம்பித்தார்கள். படம் பிடித்த காட்சிகளை கம்ப்யூட்டர் திரையில் பார்க்க ஆரம்பித்தபோது அவள் உலகின் உன்னதப் பெண்ணாய் காட்சியளித்தாள். அந்தக் குழந்தை கைநீட்டி காற்று வெளியில் துழாவும் காட்சியில் ஏதேதோ செய்திகள் இருந்தன. ‘எங்கே போய்விட்டார்கள், எங்கே இருப்பார்கள் இப்போது..’ எனத் தோன்றவும், சட்டென்று, என்ன செய்ய வேண்டும் என்பது உறைத்தது. கார்த்தியை அழைத்து, “இந்த இரண்டு இடங்களிலும் தோண்டப்பட்ட பள்ளங்கள் இப்போது மூடப்பட்டுதானே இருக்கும்” என்றேன். ஆமாம் என்றான். “இப்போது அவைகளை, அந்த இடங்களோடு சேர்த்து படம் பிடிக்க வேண்டுமே” என்றேன். காமராஜும், கார்த்தியும் சென்றனர்.
ஒருநாள் ஒரு இடத்தில் பள்ளம் தோண்டுகின்றனர். அடுத்தநாள் அந்தப் பள்ளம் மூடப்பட்டுவிடுகிறது. ஆனால் வேறொரு இடத்தில் பள்ளம் தோண்டிக்கொண்டு இருக்கிறார்கள். அங்கும் பள்ளம் மூடப்படுகிறது. அவர்கள் மட்டும்....! இதுதான் ஸ்கிரிப்டாக எனக்குள் ஒடியது. எடுத்த காட்சிகளை வைத்து அவ்வளவுதான் செய்ய முடியும் எனத் தோன்றியது. எடிட்டிங்கில் முத்துவோடு உட்கார்ந்து, காட்சிகள் வெட்டி, வெட்டி அடுக்க ஆரம்பித்தோம். பின்னணியில் யாராவது விஷயங்களைச் சொல்ல வேண்டும், அப்போதுதான் புரியும் என்றனர் காமராஜூம், கார்த்தியும். நான் பிடிவாதமாக மறுத்துவிட்டேன். அதில் அவர்களுக்கு வருத்தமும் இருந்தது. அப்படிச் சொல்ல வேண்டுமென்றால், அதற்கு நாம் வேண்டுமா என்பதுதான் எனக்குள் இருந்த கேள்வி. சினிமா, சினிமா மொழி என ஆயிரம் பேசிவிட்டு, பரிதாபகரமாக தோற்றுப்போன இடமாக நமது முதல் முயற்சி இருக்கவேக் கூடாது எனத் திடமாயிருந்தேன். படம் எடுத்து, பின்னணி இசையெல்லாம் சேர்த்து முதலில், அருகிலிருந்த ஆட்டோத் தொழிலாளர்களை அழைத்து காண்பித்தோம். சொல்லாத விஷயங்களையெல்லாம் சொன்னார்கள். பன்றியை, பிள்ளையாரை, சாலையை பற்றியெல்லாம் புதுப்புது அர்த்தங்களைச் சொன்னர்கள். அப்பாடாவென்று இருந்தது. எனக்குள் அந்தப் பெண் புகையிலை போட்டுக்கொண்டு கைகளை மடக்கி கொக்கு காட்டிக்கொண்டு இருந்தாள். ’எங்கே இருக்கிறாய் பெண்ணே.... ’
இந்தப் படமொன்றும் பெரிய விஷயமில்லை. மிகச் சிறிய ஒரு பதிவுதான். சாத்தூர் மாதிரியான நகரமுமில்லாத, கிராமமுமில்லாத ஒரு ஊரிலிருந்து வாய்த்த வசதியில் செய்யமுடிந்த காரியம். அவ்வளவுதான். இதற்குப் பிறகு தயாரித்த இரவுகள் உடையும், இது வேறு இதிகாசம் ஆகிய இரண்டு படங்களும் எங்கள் சக்தியை மீறிய பெரிய முயற்சிகள்தான். திருவனந்தபுரத்தில் நடந்த ஜான் ஆபிரஹாம் தேசீய விருதுக்கான ஆவணப்படப் போட்டிகளில் அவை பங்குபெற்றதும், இயக்குனர் அடூர் கோபாலகிருஷ்ணன் இரவுகள் உடையும் படத்தைக் குறிப்பிட்டுப் பேசியதும் முக்கியமான தருணங்கள்தான். அதைவிட முக்கியமான ஒன்று இன்றுவரை வாய்க்காமல் இருக்கிறது.
என்றேனும் ஒருநாள் அவளைச் சந்திக்கலாம். சந்திக்காமலும் போகலாம். படத்தைப் பார்த்தால் என்ன சொல்வாள்? சிறு புன்னகையோடு கடக்கலாம். “அடப் போங்க சார்” என வெட்கப்படலாம். அல்லது காலத்தின் ஊடே புகுந்து, உடைந்த கப்பலைப் பார்த்த ரோஸைப் போல பிரமைப் பிடித்து உட்கார்ந்திருக்கலாம். அவளது கண்களில் இருந்து இன்னொரு படம் விரியலாம்.
படம் பார்க்காதவர்கள் சென்ற பதிவில் பார்க்க….
எங்களது முதல் படம்!
நாம் எல்லோரும் தினம் தினம் பார்க்கும் காட்சிகள்தான் இவை. லௌகீக வாழ்வின் ஊடாக கவனிக்காமல் அல்லது கவனித்தாலும் அவை குறித்த சிந்தனையற்று கடந்து போகிறோம். கொஞ்சம் நின்று கவனித்து, பதிவு செய்த ஒரு நிகழ்வு இது. சாத்தூர் மண்ணிலிருந்து வந்த சிறு முயற்சி.
அன்புத்தம்பி பிரியா கார்த்தி, 2005ம் ஆண்டில் டிஜிட்டல் காமிரா வாங்கிவந்து, “அண்ணா இதுலயும் படம் எடுக்கலாம்..” என்று சொல்லி சிரித்தபோது, லேசாய் நெருப்பு பற்றியது. சாலையோரத்தில் பணிபுரிந்து கொண்டு இருந்த இந்த எளிய மனிதர்களே எங்கள் மனிதர்கள் ஆனார்கள். காமராஜ், முத்து ஆகியோர் கூட இருக்க, இந்த ஆவணப்படம் தயாரிக்கப்பட்டது.
இது பேசும் படம் அல்ல. பத்து நிமிடங்களுக்குள் வாழ்வின் உண்மைகளை பேசுகிற படம். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் இன்று பலர் காமிராக்களோடு களத்தில் இறங்கி இருக்கின்றனர். அவர்கள் எல்லோருக்கும் ஆதர்சனமாக இருந்த படம் இது. நாமும் படம் எடுக்கலாம் என்ற நம்பிக்கையையும், வேகத்தையும் ஊட்டியது. ஒரு மாநிலச் செயற்குழுக் கூட்டத்தில் இந்தப் படத்தை திரையிட்டுக் காண்பிக்க, எழுத்தாளர் தமிழ்ச்செல்வன் தொண்டையடித்துப் போய் பேசினார். படத்தில் வரும் குழந்தை அவரை பேசவிடவில்லை. மேலாண்மை பொன்னுச்சாமி, எஸ்.ஏ.பெருமாள், ஆதவன் தீட்சண்யா, உதயசங்கர், என ஒரு பெரும் இலக்கியவாதிகள் கூட்டம் சிலாகிக்க நாங்கள் முதல் படியில் நடக்க ஆரம்பித்தோம்.
கரிசல் குழுமத்தில் இருந்து பள்ளம், இரவுகள் உடையும், இது வேறு இதிகாசம் என மூன்று ஆவணப்படங்கள் தயாரித்திருக்கிறோம். அதில் முதல் படம் இது. குறைகள், விமர்சனங்கள், தொழில்நுட்பக்குறைகள் எல்லாம் தாண்டி இன்னமும் இந்தப்படம் பார்க்கும்போதெல்லாம் கண்கள் கலங்குகின்றன. இந்தப்படத்திற்குப் பிறகான சம்பவம் ஒன்று அதற்கான காரணமாக இருக்கலாம். அந்தக் குழந்தை எவ்வளவு கனவுகள் நிரம்பியது. அதன் தாய் எவ்வளவு அழகானவள்!
மேலும் பேசுவது இப்போது சரியாய் இருக்காது. பின்னூட்டத்தில் சொல்ல நிறைய இருக்கிறது....
வாழ்க்கை வற்றாத நதிதானே!
”சாலையில் ஒருவன் சாதாரணமாக முந்திச் சென்றாலும் சட்டென்று அவனை எதிரியாக பாவிக்கிற அறிவு மூளைக்குள் நுழைந்திருக்கிறது. ஒருவருக்கொருவர் பகைவர்களாக நிறுத்தி வைத்து நிகழும் ஆடு புலி ஆட்டத்தின் கட்டங்களே துருவ ரேகைகளாக பூமி உருண்டை மீது படிந்து இருக்கின்றன. யாரையும் நம்ப முடியாத, நெருங்கி ஒட்டி விடாதபடிக்கு அன்றாட வாழ்க்கை மனிதர்களை விரட்டிக்கொண்டு இருக்கிறது. முன்பின் தெரியாத ஒரு மனிதனைப் பற்றி மனதிற்குள் முதலில் ஒலிப்பது அபாயச் சங்குதான். ஒரு புன்னகையை உதிர்ப்பதற்கான விசாலம் இல்லாமல் ஓடிக்கொண்டு இருக்கிறோம்.
உண்மையில் நமது இயல்புகளில்லை இவை. இந்த அமைப்பும், சமூகமும்தான் நம்மை இக்கதிக்கு கொண்டு வந்து நிறுத்தியிருக்கின்றன. கூட வந்தவர்களில் சிலர் அங்கேயே நிற்கிறார்கள். சிலர் படிகளாக ஏறி போய்க் கொண்டு இருக்கிறார்கள்.சிலர் எங்கேயோ காணாமல் போகிறார்கள். சக மனிதர்கள் மீது இனம் புரியாத கோபம் முளைக்கிறது. யோசித்துப் பார்த்தால், ஒவ்வொரு நிலையிலும் இந்த சமுகத்தின் ஏற்பாடுகளே நாளெல்லாம் துவேஷத்தை வளர்த்துக்கொண்டு இருக்கின்றன.
தனது அடையாளங்களை மனிதன் இப்போது பார்க்க முடிவது குழந்தைகளிடம்தான். குழந்தைகளை எல்லோரும் நேசித்துக் கொண்டு இருக்கிறோம். குழந்தைகளே எவ்வளவு வயதானவரையும் குழந்தைகளாக்கி விளையாடுகின்றன. சபிக்கப்பட்ட நம்மை மீட்கும் வல்லமை கொண்ட குழந்தைகளின் பாதத்துளிகளை தரிசிப்பதாகவோ அல்லது யாசிப்பதாகவோப் படுகிறது இந்த சொற்சித்திரங்களில். பத்து வருடங்களுக்கு மேலாக பெரிதாக எதுவும் எழுதாமல் கிடந்த நான் வலைப்பக்கங்களில் சென்ற வருடத்தின் முடிவில் இருந்து எழுத ஆரம்பித்ததில் சிலவற்றை தொகுத்துப் பார்த்தபோது இப்படியான சித்திரமே தென்படுகிறது. நேற்றைய காலத்திலிருந்து விழித்து எழுந்து எதோ நாட்குறிப்புகள் போல எழுதி வைத்திருக்கிறேன்.”
இப்படியொரு முன்னுரையோடு, வலைப்பக்கங்களில் நான் எழுதிய சொற்சித்திரங்களைத் தொகுத்து ‘குருவிகள் பறந்துவிட்டன, பூனை உட்கார்ந்திருக்கிறது’ என்னும் புத்தகமாக வம்சி புக்ஸ் மூலம் வெளியிட்டு இருந்தேன். கலீல் கிப்ரான், மண்ட்டோ ஆகியோரைப் படித்து, அந்த வடிவங்களில் ஈர்க்கப்பட்டு போட்டுக்கொண்ட ‘சூடு’தான் இது.
இரண்டு வாரங்களுக்கு முன் இலக்கிய விமர்சகரும், பெரும் மதிப்பிற்குரியவருமான எஸ்.ஏ.பெருமாள் அவர்கள் போன்செய்து “உன்னுடைய புத்தகத்தை படிச்சேனப்பா” என்றார். இரக்கமில்லாமல் பலசமயங்களில் அவரால் கிழிக்கப்பட்டவன் என்பதால் அடக்கமாக இருந்தேன். “நல்லா வந்திருக்கப்பா, தமிழுக்கு புதிய வடிவமப்பா.... மொழியும் அடர்த்தியாய், புதிய விஷயங்களோடு வந்திருக்கு.” என்று திரும்பவும் நிறுத்தினார். அப்பாடா என்றிருந்தது. ஒரு வாக்கியத்துக்கும், இன்னொரு வாக்கியத்துக்கும் இடையில் நிறைய மௌனங்களை வைத்திருப்பார். “ஆனா நீ ஒரு எழுத்துச் சோம்பேறி. இதுல உள்ள விஷயங்களில் பெரும் நாவலுக்கு உரிய கூறுகள் இருக்கு. அதையெல்லாம் எழுதாம இப்படிச் சின்னச் சின்னதா எழுதுற..” என்று அன்பாய் கடிந்துகொண்டார்.
இன்னொருநாள் கவிஞர் கிருஷி வெகுநேரம் அந்தப் புத்தகத்தைப் பற்றி பேசினார். ஜென் கவிதைகள் போலிருப்பதாய் முதலில் சொன்னவர் அவர்தான். அதை பெரிதாய் எடுத்துக்கொள்ளக் கூடாது என்னும் பிரக்ஞை எனக்கு நல்லவேளையாக இருந்தது. அப்புறம் அந்தப் புத்தகத்தைப் பற்றி பேசியவர் என்றால் எழுத்தாளர் வண்ணதாசன் தான். தமிழ்ச்செல்வனின் தந்தை எழுத்தாளர் எஸ்.சண்முகம் அவர்கள் எழுதிய நாவல் வெளியீட்டிற்கு வந்திருந்தபோது என்னைப் பார்த்ததும் பிரியத்துடன் கைகளைப் பற்றிக்கொண்டு, “ரொம்ப நல்லா வந்திருக்கு. அழகான எழுத்துக்கள். விரிவா உங்களுக்கு கடிதம் எழுதணும்னு நெனைச்சேன். எழுதுவேன்” என்றார். வேறு யாரும் புத்தகம் குறித்து பெரிதாய் பேசவில்லை. நேற்று செம்மலர் பத்திரிகையில் சாகித்ய அகாதமி விருது பெற்ற நம் எழுத்தாளர் மேலாண்மை பொன்னுச்சாமி இந்தப் புத்தகம் குறித்து தன் விமர்சனத்தை எழுதியிருந்தார். சிறு சந்தோஷம். பகிர்ந்து கொள்கிறேன்:
”கண்ணதாசன் இலக்கிய இதழ் பல இலக்கிய வடிவப் புதுமைகளுக்கும் இடம் தந்தது. மரபுக்கவிதை, புதுக்கவிதை, ஹைக்கூ என்ற எல்லா வடிவங்களுக்கான களமாக இருந்தது. அமரர் என்.ஆர்.தாசன், ‘சொற்கோலம்’ என்ற வடிவத்தில் அதிலும், சிகரம் இதழிலும் எழுதினார். கவித்துவக் கூறுகள் ததும்பும். இன்ன வடிவம் என வகைப்படுத்த இயலாது. சுருக்கமாக இருந்தாலும் அணுவைப்போல அடர்த்தியாக இருக்கும். அப்படிப்பட்டதொரு புதுமைமிகு செறிவான வடிவத்தில் எழுத்தாளர் மாதவராஜ் ‘சொற்சித்திரங்கள்’ படைத்திருக்கிறார்.
தனது வலைப்பூவில் எழுதியவற்றைத் தொகுத்து, ‘குருவிகள் பறந்துவிட்டன, பூனை உட்கார்ந்திருக்கிறது’ என்று நீளமான தலைப்புடன் சிறிய நூலாக தந்திருக்கிறார். கவித்துவக்கூறுகள் நிரம்பிய கச்சிதமான மொழிநடையில் அத்தனையும் எழுதப்பட்டுள்ளன. குறுஞ்சிறுகதை என்றும் சொல்லிவிடமுடியாது. உரைநடைக்கவிதை என்றும் சொல்லிவிட முடியாது. ஒவ்வொன்றும் ஜென் தத்துவக் கவிதை போலிருக்கிறது. வாசித்த கணத்தில் வசீகரித்துக்கொள்கிறது. ரொம்ப நேரம் யோசிக்க வைக்கிறது. உள்மடிப்புகள் விரிந்து ஆழ்மனம் நோக்கி அகன்று படர்ந்து வியாபிக்கிறது.
தாய்க்கோழிக்கு பயந்தோடிய மாவீரன், கெட்ட வார்த்தை பேசிய இரண்டாம் வகுப்பு மாணவனின் காய்ச்சல், பத்து ஐநூறு ருபாய்த் தாள்களுக்குள் வாழ்வின் சிறுமைகள் எட்டிப்பார்க்கிற மன உளைச்சல், அபார்ஷன் செய்த தாய்வலி, வரிசையில் நிற்கிற வாக்காளார்கள் ஜெயிக்க மாட்டார்களா என்று கேட்கிற சிறுவன், மூன்றாம் வகுப்புக்குள் ஊடகச் சிறுமைகள் அத்துபிடியாகிற அநியாயம், மருதாணிப்பெண்கள் என நூலுக்குள் நிறைய வாழ்வின் தெறிப்புகள்.
சமூகத்தின் காலடியில் நசுக்குண்டு மூச்சுத்திணறுகிற மனித சுபாவங்களும், மன உலகமும், பண்பாட்டு வீழ்ச்சியின் பயங்கரமும் நெஞ்சுக்குள் ஏறிக்கொள்கின்றன. இந்த உரைநடை ஹைக்கூ தமிழுக்கு புதுமையான வடிவம். அச்சுநேர்த்தி, வடிவமைப்புக் கச்சிதம் ஆகியவற்றுக்காக வம்சியைப் பாராட்டலாம்.”
மேலாண்மை பொன்னுச்சாமி அவர்களுக்கு நன்றி.
இன்னும் எழுதலாம் நிறைய. வாழ்க்கை வற்றாத நதிதானே. எஸ்.ஏ.பெருமாளும், தமிழ்ச்செல்வனும் ரொம்பகாலம் என்னிடம் கேட்டுக்கொண்டு இருக்கிற நாவலை இந்த வருடத்துக்குள்ளாவது முடிக்க வேண்டும். பார்ப்போம்.
கீழ்த்தரமான சன் டிவியும், தினகரன் பத்திரிகையும்!
நித்யானந்தாவின் பரபரப்புகளுக்குள் உடனடியாக ஒன்றை தெரிவிக்கத் தோன்றியது. ‘நித்யானந்தா போன்றவர்கள் எப்படி இந்த உயரத்திற்குச் செல்ல முடிகிறது என்ற கேள்வியை எழுப்புங்கள்’என்று நேற்றைய பதிவில் எழுதி இருந்தேன். ஆட்டம் சரியான திசையில் செல்ல வேண்டுமே என்ற ஆதங்கத்தின் வெளிப்பாடுதான்.
யாரும் துருவ நட்சத்திரமாக முளைத்தவரில்லை. நித்யானந்தாவின் சாதாரண வாழ்க்கைக் குறிப்பை எல்லோரும் இன்னேரம் அறிந்திருப்பீர்கள். அவனை இந்த உயரத்திற்கு கொண்டு வந்ததில் சமூகத்திற்கே பெரும்பங்கு இருக்கிறது. தங்களுக்கான நம்பிக்கையாக, அமைதியைத தருகிற இடமாக அவனை ஏற்றுக்கொண்டவர்கள் இந்த மக்கள்தானே. அதை திட்டமிட்டு உருவாக்கியதில் சில ஊடகங்களுக்கும், கார்ப்பரேட்களுக்கும் நோக்கமிருந்திருக்கிறது தமிழ்ச்செல்வன் சொல்வது போல. நாம் நம்மை சுய விமர்சனமாக பார்த்துக்கொள்ள வேண்டிய விஷயங்களும் ஏராளமாய் இருக்கின்றன தீபா சொல்வது போல. அனுபவங்களே நம்மை வழிநடத்தும்; ஆரூடங்கள் அல்ல. ஒரு சம்பவத்தை நபர்களுக்குள் குறுக்கிப் பார்ப்பது கற்றுக்கொள்ள வேண்டிய அனுபவங்களைத் தராது. எனவேதான் ‘நித்யானந்தாவோடு இருக்கும் நடிகை யார் என ஆராய்ச்சி செய்யாதீர்கள்’என்று முடித்திருந்தேன்.
ஆட்டத்தை ஆரம்பித்தவர்கள் இப்போது செய்கிற அழிச்சாட்டியங்கள் தாங்க முடியவில்லை. உலகம் முழுவ்தும் உள்ள தமிழர்களுக்காகவே அவதரித்த சன் டி.வியும், செய்திகளை உடனுக்குடன் தருகிற தினகரனும் அசிங்கமாய், அருவருப்பாய் ஆபாசமாய் காட்சி தருகிறார்கள். முதல்நாள் முகத்தை மறைத்து குறுகுறுப்பை ஏற்படுத்தியவர்கள் அடுத்தநாள் முகத்தைக் காட்டினார்கள். திரும்பத் திரும்பக் காட்டினார்கள். காட்டிக்கொண்டே இருந்தார்கள். இன்று தினகரனில் நித்யானந்தா மற்றும் ரஞ்சிதாவைப் பற்றி மட்டும் இரண்டு முழுப்பக்கச் செய்திகள். அவர்கள் இருவரும் இணைந்திருப்பது போல பல படங்கள். தமிழகம் முழுவதும் பக்தர்கள் கொந்தளிப்பு என சில படங்கள். நித்யானந்தாவின் முழுநீளப்படங்கள் எங்கு கிடைக்கும் என முகவரிகள் வேறு. த்தூ.... வெட்கம் கெட்டவர்களே! உங்கள் நோக்கம்தான் என்ன?
ஒரு விஷயத்தை அம்பலப்படுத்துவது என்றால் இப்படியா? எங்கோ ஒரு தனி அறையில் நடந்ததை நம் வீட்டு வரவேற்பறையில் வந்து கொட்டினார்கள். முகம்சுளித்து, இப்படியான குப்பைகள் சமூகத்தில் இருக்கிறதே என நாம் வருத்தப்படலாம். அதனை சுத்தம் செய்ய முனையலாம். சமூகத்தில் ஒரு உரையாடல் நடப்பதற்கு அதுவே போதுமானது. திரும்பத் திரும்ப வீட்டிற்குள் வந்து குப்பைகளை கொட்டிக்கொண்டே இருந்தால்..? வீடே குப்பையாகிப் போகாதா? நம் சிந்தனைகளையும் அழுக்காக்கும் நோக்கம்தானே அது? இதைத்தானே அவர்கள் தங்கள் பிறவியின் நோக்கமாய் செய்துகொண்டு இருக்கிறார்கள். ‘நாயும் பிழைக்கும் இந்த பிழைப்பு’ என்னும் மகாகவியின் ஆத்திர வரிகளே நினைவுக்கு வருகின்றன.
இவர்களின் ஆட்டத்தில் வேறு சூது இருக்கிறது. திரைமறைவு சூட்சுமங்கள் இருக்கின்றன. கூடவே மக்களை இதுபோன்ற அந்தரங்கங்களுக்குள் எட்டிப் பார்க்க வைத்து, கேவலப்படுத்தி, ‘கடை விரித்தேன் கொள்வாருண்டு’ என்று சொல்லவும் செய்வார்கள். சகலத்தையும் வியாபார மயமாக்கி, பெரும் கலாச்சாரச் சீரழிவுகளுக்கு காரணமாகி வரும் இவர்களிடம் சமூக அக்கறையை ஒருபோதும் எதிர்பார்க்க முடியாது. இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பும் போதெல்லாம் நாடெங்கிலுமுள்ள உண்மையான சாமியார்கள் வருத்தப்படுகின்றனர் என ஒரு செய்தி வேறு. யாரைக் காப்பாற்ற இந்த வாசிப்பு?
போலீஸ் விரட்டியடித்ததில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மூன்று மாணவர்கள் பலியானார்களே அதைப்பற்றித் திரும்பத் திரும்ப இந்த யோக்கியசிகாமணிகள் பேசட்டுமே, பார்ப்போம். டீசல், பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்து போரட்டங்கள் நடக்கின்றனவே, அதைப் பற்றி விளக்கமாக காண்பிக்கட்டுமே, விரிவாக பேசட்டுமே, பார்ப்போம். இவர்கள் பார்வையில் படாமல் ஓராயிரம் உண்மைகள் வெளியே இருக்கின்றன. எல்லாவற்றையும் மக்கள் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் ஒன்றும் குருடர்கள் அல்ல.
பி.கு:
சந்தனமுல்லை, டாக்டர் ருத்ரன், சுரேஷ் கண்ணன் ஆகியோரது பதிவுகளும் இவ்விஷயத்தில் முக்கியமானவையென்று கருதுகிறேன்.
நித்யானந்தாவை நன்றாக பாருங்கள்!
நித்யானந்தா தயாராக இருந்தான். ஹரித்துவாரில் 12 வருடங்களுக்கு ஒருமுறை நடக்கும் மகா கும்பமேளாவுக்கான புனித பயணத்தை பக்தகோடிகள் புடைசூழ, இந்த மார்ச் 4ம்தேதி தலைமை தாங்கிச் செல்ல வேண்டும் அவன். ஒன்பது கோடி பேர் வருவார்கள் என பீற்றிக்கொள்ளும் அந்த வைபவத்தில், செய்த பாவங்களையெல்லாம் கங்கையில் கழுவி எழுந்திருக்க முடியும். அதற்குள் அந்தப் பாவங்களில் கொஞ்சத்தை சன் டி.வி பிட்டு பிட்டுக் காண்பித்துவிட்டது.
எவ்வளவு பரபரப்பும், ஆர்வமும் நம் மக்களுக்கு. நடக்கவே நடக்காத விபரீதம் போல, ‘குமுதத்தில் எழுதிய அவரா இவர்’ என்பது போல பார்த்தாலும், அந்தக் காட்சி குறித்த ரகசிய ஆர்வம் கொப்பளித்துக் கொண்டு இருந்தது. அதைப் பார்க்காதவர்கள் பாவம் செய்தவர்களைப் போல துடித்துத்தான் போனார்கள். இந்த இயல்புகள் தெரிந்துதானே சன் டி.வி அறுவடை செய்கிறது. தங்கள் வியாபார ரீதியான வெற்றிகளுக்கு, முதலாளிகள் தாங்கள் கட்டியமைத்த புனிதங்களையும் போட்டு உடைப்பார்கள். அவர்கள் நலன் சார்ந்தே இந்தக் காரியத்தை செய்வார்கள்.
இந்துத்துவா சக்திகளுக்கு அடிவயிறு பற்றிக்கொண்டது. சில இடங்களில் நித்யானந்தாவின் மடங்களை முற்றுகையிடவும், அவனது படங்களை நடுத்தெருவில் எரிக்கவும் வெறி கொண்டு நின்றனர். நேற்று வரை அவர்கள்தான் இந்த நித்யானந்தாக்களுக்கு ஆராதனை செய்துகொண்டு இருந்தவர்கள். இப்படிப்பட்ட போலிச்சாமியார்களுக்கு எதிரானவர்கள் என்பதை உடனடியாக காட்டிக் கொண்டால் மட்டுமே, தங்களை நிலைநிறுத்திக்கொள்ள முடியும் என்பதும், இனியும் தொடர்ந்து மற்ற சாமியார்களைக் காப்பாற்ற முடியும் என்பதும் அவர்களுக்குத் தெரியும். அவர்கள் நலன் சார்ந்தே இந்தக் காரியங்களைச் செய்கிறார்கள்.
இதுவரை அவனைப்பற்றி ‘ஆஹோ ஓஹோவென்றும்’, ‘அப்படியாம், இப்படியாம்’ என்றும் பிம்பங்களை கட்டமைத்த, புத்திசாலிகள் என அறியப்பெற்றவர்கள் இப்போது என்ன செய்வதென்று அறியாமல் கையைப் பிசைந்துகொண்டு நிற்கலாம். அறிவித்த ஆருடங்களும், பிரமைகளும் நாலுபேர் நடுவில் பொய்த்துப் போய் தங்கள் சிந்திக்கும் திறன் கேள்விக்குள்ளாக்கப்பட்டிருப்பது குறித்து அவமானப்படலாம். அவர்களும் தங்கள் நலன் சார்ந்தே இருப்பார்கள்.
பொதுவாக யோசிக்க வேண்டிய பல விஷயங்களை வெகுஜனப்பரப்பில் இருந்து விலக்கி விடுகிற இயல்புகளுக்கு நாமே ஆளாகிவிடுகிறோம். பரபரப்பிலும், அந்தரங்கங்கள் பொதிந்தச் செய்திகளிலும் அடிபட்டுப்போகிற ஒரு கேள்வியை மட்டுமே இந்த இடத்தில் கேட்கத் தோன்றுகிறது.
சென்ற வருடத்தின் இறுதிநாளில் நித்யானந்தா எழுதிய ‘முக்தி வாழ்வு’ என்னும் நூலை கர்நாடகாவின் முதன் மந்திரி எடியூரப்பா பயபக்தியோடு வெளியிடுகிறார். அவனது பிறந்தநாளோடு புத்தாண்டு துவங்கும் அடுத்த நாளில் ‘அவர் கல்பதரு தரிசனம் தருவார்’ என தினமணி நாளிதழ் செய்தி வாசிக்கிறது. “நாம் வாழும் காலத்திலேயே பரம்ஹம்ச நித்யானந்தா போன்றவர்கள் பெரும் ஆன்மீக மறுமலர்ச்சியை ஏற்படுத்தி வருகிறார்கள்” என்று ஒருவர் பெருமிதம் கொள்கிறார். அவனது எழுத்துக்களைத் தொடராக படிப்பதற்கும், கொண்டாடுவதற்கும் ஒரு ஜனத்திரள் இருக்கிறது. அமெரிக்காவில், கொலம்பஸில் 2007ல் இந்த நித்யானந்தா கோவிலைக் கட்டி பிரண பிரதிஸ்டை செய்தது குறித்து இன்னொருவர் குறிப்பிடுகிறார். ஏராளமான கல்வி, மருத்துவச் சேவைகள் அவனது பெயரில் நடக்கின்றன. கோடி கோடியாய் சொத்துக்களோடு பல நிறுவனங்கள் அவன் பெயரில் இயங்குகின்றன. அவன் நின்றால், நடந்தால், உட்கார்ந்தால், என எல்லாவற்றையும் தரிசனமயமாக பார்த்து கன்னத்தில் போட்டுக்கொள்ளும் இலட்சக்கணக்கான மக்கள் அவன் முன்னால் கூடுகிறார்கள். இந்த சிவராத்திரி அன்று அவனது தரிசனத்தை யூடியுபில் பார்த்துவிட்டு, வந்திருக்கும் கமெண்ட்களைப் பார்த்தால் இன்னும் தெளிவாகும். 33 வயதில் அவனை இந்த உயரத்திற்கு கொண்டு வந்து உட்கார வைத்தது யார் அல்லது எது?
அவனது தியானபீடம் சென்று அங்கு அவன் என்ன நிகழ்த்திக்கொண்டு இருக்கிறான் எனப் பாருங்கள். சன் டிவி வீடியோவில் கதனகுதூகலமாக பார்த்த ஆள் அங்கே ஒரு பெரிய ஆசனத்தில் எப்படி வீற்றிருக்கிறான் என பாருங்கள். அதற்குள் மேலும் சென்றால் கண்களை மூடி மெல்லத் திறந்து அருட்பெருஞ்ஜோதியாய் அந்த முகம் எப்படி சிரிக்கிறது என பாருங்கள். உண்மைகள் தெரிய வரலாம். அப்போதாவது கோபம் வருகிறதா என பாருங்கள்.
தயவுசெய்து அவனோடு இருக்கும் அந்த நடிகை யார் என்பதை மட்டும் ஆராய்ச்சி செய்து காணாமல் போகாதீர்கள்.
வைத்த இடம்
“வைத்தது வைத்த இடத்தில் இருப்பதேயில்லை. ச்சே என்ன வீடு இது?” கைக்கடிகாரத்தை தேடியபடி ஆத்திரத்தில் கத்தினேன்.
“வைத்தது வைத்த இடத்தில்தானே இருக்கும்” என்றார்கள் அம்மா கடுகை அதன் டப்பாவில் இருந்து எடுத்தபடி.
“ நீ வைத்ததை வேறு யாரப்பா எடுப்பார்கள்” என்றார்கள் அப்பா மூக்குக் கண்ணாடியை கழற்றியபடி.
“வைத்ததை தேடுவதே உங்களுக்கு வேலையாப் போச்சு” என்றாள் மனைவி வீட்டை பெருக்கியபடி.
“வைத்த இடம் எது?” என்றாள் மகள் பையில் வரலாற்றுப் பாட புத்தகத்தை வைத்தபடி.
வீட்டிற்குள்தான் வைத்த இடம் இருக்கிறது. வைத்த இடத்தில்தான் கடிகாரம் இருக்கிறது. நான் தேடிக்கொண்டே இருக்கிறேன்.
மாதவராஜ் பக்கங்கள் - 21
இயக்குனர் பாலாவின் புதிய படத்தில் கதை வசனம் எழுதி பணியாற்றி வரும் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், செங்கோட்டை அருகில் உள்ள கிராமத்தில் நடைபெற்று வரும் ஷீட்டிங்கிற்குச் செல்லும் வழியில் தன் அண்ணனைப் பார்க்க சாத்தூருக்கு நேற்று வந்திருந்தார். அப்படியே எங்கள் வீட்டிற்கும் வந்து சில மணிநேரங்கள் பேசியிருந்துவிட்டுச் சென்றார். தொடர்ந்த பயணங்களோடு வாசிப்பும், எழுத்துமானவர். ரசித்து சிரித்துக்கொண்டே உரையாடும் இயல்பு மிக எளிதில் கவர்வதாக இருக்கும். நானும், காமராஜும், அம்முவும் கேட்டுக்கொண்டு இருந்தோம்.
சினிமா குறித்த பிரமைகளற்ற இயக்குனர் பாலா, எம்.ஜி.ஆரிடம் இருந்த சினிமா ஆற்றல், எழுத்தாளனுக்கும் சமூகத்துக்குமான உறவு, இயக்கம் சார்ந்தவர்களின் சமூக பங்களிப்பு, அவரது ரஷ்ய பயணம் என்று ஒன்றிலிருந்து ஒன்று தாவி தொடர்ந்த உரையாடல் அந்தன் செகாவ், டால்ஸ்டாய் பக்கம் வந்தது. டால்ஸ்டாயின் மகளை செகாவ் விரும்பியது, டால்ஸ்டாய்க்கு அது பிடிக்காமல் போனது என்றொரு தகவலோடு ஆரம்பித்தவர் டால்ஸ்டாயின் டைரிக்குறிப்புகளும், அவரது மனைவியின் டைரிக்குறிப்புகளும் புத்தகங்களாக வந்திருப்பதாகச் சொன்னார்.
இருபதாம் நூற்றாண்டின் இலக்கிய மேதையாக அறியப்பட்ட டால்ஸ்டாய், அவரது மனைவிக்கு ரொம்பச் சாதாரணமானவராகவும், தெளிவற்றவராகவும் இருந்திருக்கிறார். அதில் ஒன்று, வீட்டில் மணியடித்து சாப்பிடும் வழக்கத்தை அவர் அறிமுகப்படுத்தியதாம். முதல் மணியடித்ததும் குழந்தைகளும், இரண்டாம் மணியடித்ததும் பணியாளர்களும், மூன்றாம் மணியடித்ததும் பெரியவர்களும் சாப்பிட வேண்டும் என ஒரு விதியை உருவாக்கினாராம். அவரவர்கள் விருப்பப்பட்ட நேரம் வந்து சாப்பிட்டுக்கொண்டு இருந்ததை இப்படி மாற்றியமைத்தது பிடிக்கவில்லையாம் அவரது மனைவிக்கு. நடைமுறைப்படுத்த சங்கடப்பட்டாராம். இப்படிச் சின்னச் சின்னச் சம்பவங்களோடு சொல்லிக்கொண்டே சென்றார். ’நேற்று ஏன் மோசமாக நடந்துகொண்டோம்’ என்ற ரீதியில் எழுதிய பக்கங்கள் நிறையவாம் டால்ஸ்டாயின் டைரியில்.
மிகப்பெரிய ஆளுமைகளின் அன்றாட வாழ்க்கை சாதாரணமானதாகவும், சமயங்களில் மிகச் சாதாரணமாகவும், எப்போதாவது விநோதமாகவும் இருக்கும் போலும். இப்படி எல்லா எழுத்தாளர்களின் மனைவிகளும் டைரிகள் எழுதியிருந்தால் எப்படியிருக்கும் என யோசித்துக் கொண்டு இருக்கிறேன்.
சாயங்காலத்திற்கு மேல் எழுத்தாளர். தமிழ்ச்செல்வன் வீட்டிற்கு வந்திருந்தார். சாத்தூரில் எழுத்தாளர் சங்கத்தின் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்தவர்.
எப்போதும் உற்சாகமாக மனநிலையில், மிகுந்த நகைச்சுவை உணர்வோடு பேசுகிற தமிழ்ச்செல்வனாக அவர் இல்லை. டபிள்யூ.ஆர்.வியின் மரணம் உலுக்கி இருந்தது. இதுதான் சமயம் என கட்சிமீது அவதுறுகளையும், சேற்றையும் வாரி இறைக்கிறார்களே என வேதனைப்பட்டார். இயக்கம் ஸ்தம்பித்துப் போயிருப்பதிலிருந்து விடுபட்டு, அனுபவம் பெற்று, பயணப்படவேண்டும் என்ற துடிப்பு அவரிடமிருந்தது.
எனக்குள்ளும் நிறைய ஒடிக்கொண்டு இருந்தது. பிறிதொரு சமயம் பேசலாம்.
இரவில் நானும் காமராஜும் நிலவின் கீழே மொட்டை மாடியில் உட்கார்ந்து பேசிக்கொண்டு இருந்தோம். மீண்டும், குறும்படங்கள் எடுக்க வேண்டும் என உறுதி வந்திருந்தது. வார்த்தைகள் நட்சத்திரங்களாகி விண்ணில் மிதக்க ஆரம்பித்தன.
இப்படியாக இந்த ஞாயிறு கூடியது.