அன்பையும், ஆதரவையும் தேடியலையும் இதயத்தின் துடிப்பு!

தோழர்.உ.ரா.வரதாராசன் அவர்கள் காலமான செய்தி அறிந்த இரண்டாம் நாளில், பத்திரிகையாளர் விஜயஷங்கர் என் மின்னஞ்சலுக்கு  மைக்கேல் ஜாக்சனின் will you be there என்னும் இந்தக் கவிதையை அனுப்பி வைத்திருந்தார். தொடர்ந்து படிக்க முடியாமல் தவித்துப் போனேன். தன்னுடைய எல்லா சமயங்களிலும் அன்பையும், ஆதரவையும் தேடும் ஒரு மனிதனின் இதயத் துடிப்பாக இருந்தது. துயரமானப் பொழுதுகளில் தன்னைப் பற்றிக்கொள்ள யார் இருக்கிறார்கள் எனக் காற்றில் துழாவுகிற மனிதக் கரமொன்றின் அசைவுகளாயிருந்தது. என்னைச் சுற்றிலும் இறுக்கமான மௌனம் குடிகொண்டது.

சில நாட்கள் கழித்து விஜயஷங்கர், “அந்தக் கவிதையை படித்தீர்களா” எனக் கேட்டார்.  வரிகள் மிகவும் அலைக்கழித்ததைச் சொன்னேன்.  வலைப்பக்கத்தில் பதிவிடலாம் என்றவுடன்,  அவரே மொழிபெயர்த்து அனுப்பி இருந்தார். கேளுங்கள்:

will you be there

நீ எனக்காக இருப்பாயா?

என்னைப் பிடித்துக் கொள்.
ஜோர்டான் நதியைப் போல்
என்னை நீ பிடித்துக் கொண்டால்
நீ என் நண்பன் என்று
நான் சொல்வேன்.

என்னைத் தூக்கிச் செல்
என் சகோதரனைப் போல்
என்னை நேசி
என் தாயைப் போல்
நீ எனக்காக இருப்பாயா?

சொல்! என்னைத் தாங்கிக் கொள்வாயா?
நான் தவறும்போது என்னைத் திட்டுவாயா?
நான் தொலையும்போது என்னைத் தேடுவாயா?

ஆனால் அவர்கள் சொன்னார்கள்
நம்பிக்கையோடு இருக்க வேண்டுமென்று
நடக்க முடியாதபோதும் நடக்க வேண்டுமென்று,
இறுதி வரை போராட வேண்டுமென்று.
ஆனால் நானும் ஒரு மனிதன்தானே?

எல்லோரும் என்னை அவர்களின் கட்டுக்குள்
கொண்டுவர நினைக்கிறார்கள்
இந்த உலகம் எனக்கென ஒரு பாத்திரத்தை
வைத்திருப்பதுபோல் தெரிகிறது.
நான் மிகவும் குழம்பியிருக்கிறேன்.
நான் உனக்காக இருப்பேனென்று
என்னிடம் சொல்வாயா?
என்னைத் தாங்கிக் கொள்ளுமளவுக்கு
என் மீது அக்கறை செலுத்துவாயா?

நம்முடைய மிகவும் இருண்டபொழுதில்
என் விரக்தியின் ஆழத்தில் கூட
என் மீது அக்கறை செலுத்துவாயா?

என்னைப் பிடித்துக்கொள்
மென்மையாகவும், உறுதியுடனும்.
என்னைப் பிடித்து
அங்கே கொண்டுசெல்
நானும் ஒரு மனிதன்தான்.

என்னை நடத்திச் செல்
என்னைப் பிடித்துக்கொள்
என்னை நேசி
எனக்கு ஊட்டிவிடு
என்னை முத்தமிடு
என்னை விடுதலை செய்
நானும் ஒரு மனிதன்தான்.

என்னைக் காப்பாற்று
என்னைக் காப்பாற்று
என்னை குணப்படுத்து

என்னை மேலே தூக்கு
என்னை நேசிப்பதாக
மென்மையாகச் சொல்
எனக்காக இருப்பேனென்று
என்னிடம் சொல்

நம்முடைய மிக இருண்டபொழுதுகளில்
என்னுடைய விரக்தியின் ஆழத்தில் நான் இருக்கும்போதும்
என் மீது அக்கறை செலுத்துவாயா?
எனக்காக இருப்பாயா?
என்னுடைய சோதனைகளிலும்
துயரங்களிலும்
நம்முடைய சந்தேகங்களிலும்
வெறுப்புகளிலும்
என் வன்முறையிலும்
என் கொந்தளிப்பிலும்
என்னுடைய பயத்தினூடாகவும்
என் பாவசங்கீர்த்தனங்களிலும்
என்னுடைய துயரத்திலும், வேதனையிலும்
என் சந்தோஷத்திலும், துக்கத்திலும்
மற்றொரு நாளை வரும் என்ற நம்பிக்கையிலும்
நீ என்னை விட்டுச்செல்ல விடமாட்டேன்.
ஏனெனில் நீ என் இதயத்தில் இருக்கிறாய்.

கருத்துகள்

13 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
 1. பகிர்வுக்கு மிக்க நன்றி. ஒவ்வொரு வார்த்தையும் என்னவோ செய்கிறது.
  மிக அழ‌காக‌ இதை மொழிபெய‌ர்த்த‌வ‌ருக்கும் பாராட்டுக்க‌ள்.

  பதிலளிநீக்கு
 2. "அன்பையும், ஆதரவையும் தேடியலையும் இதயத்தின் துடிப்பு!"என்னும் தலைப்பை மீண்டும் மீண்டும் ஒவ்வொரு வரியும் சொல்கிறது...

  பதிலளிநீக்கு
 3. ப்ரியமுள்ள் மாதவராஜ்..
  ஏதோ செய்யும் கவிதைதான் இது

  பதிலளிநீக்கு
 4. இது எனக்கான கவிதை போல் இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 5. இதயத்தைப் பிழிகிறது நண்பர் மாதவராஜ் அவர்களே.

  பகிர்வுக்கு நன்றி.

  மதுரை பாபாராஜ்

  பதிலளிநீக்கு
 6. மைக்கேல்ஜாக்சனின் கவிதையா?

  அவர் எப்படி இத்தனை மனங்களை கொள்ளையடித்தார் என்று புரிகிறது.
  அருமையான பகிர்வு.

  பதிலளிநீக்கு
 7. நடவடிக்கைக்கு மறுநாள் தோழர் உ.ரா.வ வுக்கு அலை பேசியில் நான் அனுப்பிய குறுஞ்செய்தி “ உங்கள் மீதான என் அன்பும் மதிப்பும் துளியும் குறையவில்லை.இதையெல்லாம் கடந்து நீங்கள் வருவீர்கள் என ஆவலுடன் காத்திருக்கிறேன்’.அன்பு எங்கிருந்து கிடைத்தாலும் ஏற்றுச் சமாதானம் ஆவதில்லை மனித மனம்.எங்கிருந்து அது எதிர்பார்க்கிறதோ அங்கிருந்து வந்தால் மட்டுமே அது அமைதி கொள்கிறது.வழியெங்கும் அன்பு கொட்டிக்கிடந்தாலும் அதை நாம் பார்ப்பதுகூட இல்லை.இது நடைமுறை.

  பதிலளிநீக்கு
 8. The heart touching poem was translated in simpple, heart touching ,fantastic way...One of the best translation in recent time..vimalavidya

  பதிலளிநீக்கு
 9. ராம்ஜி!
  நன்றி.

  தீபா!
  மொழிபெயர்த்தவரும் இந்தப் பக்கத்தை படித்துவிட்டு, உன் பாராட்டைப் பெற்றிருப்பார்.


  நவீன்!
  நன்றி.


  ரமேஷ்!
  நன்றி.


  அன்டோ!
  அப்படியா. எடுத்துகொள்.


  மதுரை பாபாராஜ்!
  ரொம்பநாள் கழித்து இங்கே பார்க்கிறேன்.நன்றி.


  அம்பிகா!
  ஆமாம், அம்பிகா. அவரைப்பற்றி இன்னும் தெரிந்து கொள்ள வேண்டியது நிறைய இருக்கின்றன.


  விமலவித்யா!
  நன்றி.

  பதிலளிநீக்கு
 10. தமிழ்ச்செல்வன்!

  நீங்கள் சொல்வது புரிகிறது.

  தான் யாரை, எதை நேசித்தாரோ, நெருக்கமாய் உணர்ந்தாரோ, அவர்களிடம் இருந்துதான் முதலில் ஆதரவான கரங்களை ஒரு மனிதர் எதிர்நோக்குகிறார். இல்லையா?

  பதிலளிநீக்கு
 11. அருமையான கட்டுரை . தொடர்ந்து செயல்பட எனது வாழ்துக்கள்

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!