தலை மறைவு

குப்பையாகவும், சக்கையாகவும் வீழ்ந்து கிடந்த சுதந்திர தேசத்தின் பழைய நகரம் திடுமென தண்ணீர் தெளித்து எழுப்பி, தலை நிமிர்த்தி உட்கார வைக்கப்பட்டது. அதிகாரிகளும், ஆய்வாளர்களும் மூக்கைப்பொத்திக்கொண்டு தெருவில் வந்து நின்றார்கள். பெருக்கப்பட்ட சாலைகளில் வெள்ளைக்கோடுகள் கிழிக்கப்பட்டன. ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. பிளக்ஸ்பேனர்கள் புதிய சுவர்களாய் வானுயர எழும்பின. கொடிகளும், தோரணங்களும் வண்ணங்களாய் பறந்தன.

பார்த்துக்கொண்டு இருந்த அவர்கள் சந்து பொந்துகளிலிருந்து தெறித்து ஓடி தலைமறைவானார்கள். தேடியலைந்த காவல்துறையினரிடம் மனப்பிறழ்வு கொண்ட ஒன்றிரண்டு பேரே பிடிபட்டனர். அவர்களும் கத்தக் கத்த ஓரிடத்தில் அடைக்கப்பட்டனர். தாடி, கந்தல்துணி, கையில் தட்டோடு ஊரெல்லாம் நிறைந்திருக்கும் பிச்சைக்காரர்கள், மந்திரிகள் வரும்போதெல்லாம் விதி போல எப்படி காணாமல் போகிறார்கள் என்பது காவல்துறையினரின் தீவீர புலன்விசாரணையில் இன்று வரை தெரிய வரவில்லை.

பிச்சைக்காரர்களே கண்ணில் படாத, துடைக்கப்பட்டு சுத்தமாயிருந்த, அந்த ஒருநாளில் நகரத்தின் முக்கியவீதியில் மந்திரி கையசைத்துப் போனார். குதிரையின் குளம்படிச் சத்தங்களில் பழகிய காதுகளைக் கொண்டிருந்த அவர்கள் இப்போது தூரத்து சைரன்களின் அலறல்கள் தேய்வதைக் கேட்டபடி மெல்ல வெளியே வந்தனர்.

நகரம் மீண்டும் பழைய நகரமானது.

கருத்துகள்

11 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. அருமை... நான் இதுவரை கவனித்திராத கோணம்..

    பதிலளிநீக்கு
  2. மாதவராஜ் சார், நீங்கள் பேசியதைப் பார்த்த உங்களுடன் அளவளாவிய நினைவில் தான் நான் முந்தைய பதிவில் என்னப் பற்றி சொன்னேன்.

    என் இயற்பெயர் தினேஷ் குமார். (முகிலன் என்பது பதிவுலகில் என் பெயர்). இந்தப் பெயர் உங்களுக்கு எங்காவது மணி அடித்தால் சொல்லுங்கள்.

    பதிலளிநீக்கு
  3. :-(


    மிகவும் அருமையான சொற்சித்திரம்!

    காணாமல் போன பல முகங்கள் நினைவுக்கு வருகின்றன!

    பதிலளிநீக்கு
  4. ஐயோ ஐயோ! இப்புடி எதையாவது எழுதிடுறீங்க, என்னால கைய வச்சுக்கிட்டு சும்மா இருக்க முடியல! சரி சரி, நான் நெனச்சத சொல்லிடுறேன்! ஏழையின் சிரிப்பில் இறைவன காண்போம்! அதாவது இறைவன பாக்கனும்னா ஏழை இருக்கணும்! பிச்சைக்காரர் மறுவாழ்வு இல்லம் கட்டனும்! அப்புடீன்னா பிச்சைக்காரங்க இருந்துதான் ஆகணும், அப்பத்தானே அவங்களுக்கு மறுவாழ்வு இல்லம் கட்ட முடியும்! சரி சரி, கார்ல வந்து டாடா காமிச்சாச்சா? இப்போ மந்திரி காரு நேரா எங்க போகுதுன்னு நெனக்கிறீங்க? நேரு உள்விளையாட்டு அரங்கத்துல த்ரிசா, அசின், நமீதா, மாஸ்டர் கலா... ன்னு ஏகப்பட்ட தமிழ்மக்கள் மந்திரிக்காக காத்துக்கிட்டு இருக்காங்க! த்ரிசாவின் சிரிப்பில் தமிழனை காண்போம்! தமிழ் மக்களுக்கு எல்லாம் செய்து முடிச்சாச்சு, சற்றே ஓய்வெடுப்போம் வாங்க சார்! ரெடி ஒன் டூ த்ரீ...
    இக்பால்

    பதிலளிநீக்கு
  5. அன்பு மாதவ்

    அதிகாரத்தின் ருசி அடிமைகளின் கட்டுப்பாட்டில் இருந்தே இயங்குகிறது
    ஓடி ஒளிபவர்கள் அல்ல,
    கூனிக் குறுகி ஒதுங்கி நிற்பவரும் அல்ல
    அவர்கள் மீது சாட்டைகளை வீசும் இழிசெயலைத்
    தமது அதிகார வரம்புகளாக நினைக்கும்
    அதிகார வர்க்க ஜீவராசிகளே கேவலமிக்க அடிமைகள்....

    உங்கள் பதிவு தெரிந்த கொடுமையை
    இலக்கியமாக விவாதிக்க அழைக்கிறது.

    தொடர்பில்லாத ஒரு நகைச்சுவையை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்...

    பத்தாண்டுகளுக்குமுன் நடந்தது அது. சென்னை கோட்டூர் பகுதியில் குடியிருந்தோம் அந்தச் சமயம். எனது வாழ்க்கை இணை தோழர் ராஜி, ஜப்பான் தொழிற்சங்க முன்னணித் தலைவர்களை அன்று மாலை இல்லத்திற்கு வருவார்கள் என்று சொல்லியிருந்தார்.

    ஜப்பான் தோழர்களை வரவேற்க வீடு தயாராகிறது. ஒரு மணி நேரம் போல குழந்தைகள் அநியாயத்திற்கு சிரமப்பட்டு வீட்டைச் சுத்தம் செய்து வைத்திருந்தனர். அப்புறம் எதோ காரணத்தினால் வேறு இடத்திற்குப் போதாகவும், வீட்டிற்கு வர இயலாதென்றும் தொலைபேசி செய்தி வந்தது. குழந்தைகள் இரண்டும் ஒரே நேரத்தில் சொல்லிவைத்த மாதிரி கேட்டார்கள்: வீட்டைப் பழைய மாதிரியே கலைச்சிடலாமா....


    வாழ்த்துக்கள்

    எஸ் வி வி

    பதிலளிநீக்கு
  6. நாறிப்போன ரோட்ட இந்தமாதிரி கொத்திப்போட்டு ஒரே நாள்ல பளபளப்பா வைச்சிடுவாங்க... அடுத்தவாரத்துல அரசியல்வாதிகள நெனச்சி அந்த ரோடுகூட சிரிக்கும்.... பழகிப்போச்சுங்க...

    பதிலளிநீக்கு
  7. /*குதிரையின் குளம்படிச் சத்தங்களில் பழகிய காதுகளைக் கொண்டிருந்த அவர்கள் இப்போது தூரத்து சைரன்களின் அலறல்கள் தேய்வதைக் கேட்டபடி மெல்ல வெளியே வந்தனர்*/
    :-( இந்த சொற்கள் இந்திரா பார்த்தசாரதி அவர்களின் “வேதபுரத்து வியாபாரிகள்” நாவலின் முடிவை நினைவிற்கு கொண்டு வந்தது.

    பதிலளிநீக்கு
  8. என்ன ஒரு பொய் வாழ்வு
    எல்லாமே FARCE

    பதிலளிநீக்கு
  9. True but sad.

    The incident narrated by Mr. Venugopalan is interesting. Many people call cleaning services or house maids in overseas (USA) once in 3 weeks as the hourly charges are too high. Also it doesn't mean that the house won't be cleaned for 3 weeks.

    But prior to cleaning services visit, the entire house will be in order. Otherwise the place won't be cleaned or serviced properly.

    So you can guess how the elders and kids will react in these circumstances.

    Swami

    பதிலளிநீக்கு
  10. ஒரு நாட்டில் வாழும் மக்களின் வாழ்வின் உண்மை நிலை அறிய அந்த பழமையான காலங்களில் நாட்டை
    ஆள்பவர்கள் , மாறு வேடத்தில் இரவில் உலா வருவார்களாம் .. ஆனால் இப்போது எல்லாம் மக்களின் யதார்த்த வாழ்க்கைக்கு மாறுவேடம் இட்டு அதைப்பற்றி ஒன்றும் தெரியாதது போல அரசியல் வாதிகள் நாட்டை வலம் வருகின்றார்கள் .

    பதிலளிநீக்கு
  11. நரகம் மீண்டும் பழையபடி நகரமானது என்பதே சரி.சில தருணங்கள் இப்படியும் கற்கலத்துக்கு தினமும் நம்மைக் கூட்டிப்போகின்றன.ஓட்டு வாங்கும் முன்-பின் என்று பிரித்துக் கொள்ள வேண்டியதுதான்.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!