பள்ளம் படம் பார்த்து விட்டீர்களா? இப்போதும் அவள் சிலசமயங்களில் எனக்குள் நிழலாடிக்கொண்டுதான் இருக்கிறாள். மாட்டுத்தாவணி போன்ற பேருந்து நிறுத்தங்களில், நெரிசல் நிறைந்த சாலைகளில், திருவிழாக்கூட்டங்களில் அவள் மாதிரி யார் தெரிந்தாலும், ஒருகணம் உற்றுப்பார்க்கிறேன். அவளாக இருக்கமாட்டாள் என நன்றாகத் தெரிந்தாலும் அப்படி நிகழ்ந்துகொண்டு இருக்கிறது. டைட்டானிக் படத்தில் வரும் ரோஸ் போல அவள். செல்வந்தர் குடும்பத்தில் இருந்து செக்கச் செவேலென்று வந்து காதல்வயப்படும் பெண்ணாய்த்தான் ரோஸ் இருக்க வேண்டுமா. கப்பலின் நுனியில் நின்று கைகளை விரித்து பரவசமாய் நிற்பதுபோல, அதோ புகையிலையை வாயில் ஒதுக்கி, கைகளால் குழந்தைக்கு கொக்கு காட்டி, சட்டென தலையை தெனாவெட்டாக வெட்டி பள்ளத்தில் இறங்கும் அவளும் ரோஸ்தான். இன்னும் அவளைப் பற்றி நீங்களும் நானும் தெரிந்துகொள்ள வேண்டியது இருக்கிறது.
காமிராவில் பிடித்துவைத்த காட்சிகள் அடுக்கப்பட்டு பார்வையாளர்கள் முன்னால் வரிசைக்கிரமமாக நகர்த்தப்படுகின்றன. அவர்கள் தன் வசமிழந்து, அதில் ஒன்றிப்போய், கூடவே செல்கிறார்கள். அடுத்து, அடுத்து எனத் தேடுகிறார்கள். அழகு, புதிர், வேடிக்கை என கடந்து சென்று ஒரு புள்ளியில் நின்று சிரிக்கிறார்கள். அழுகிறார்கள். பெருமூச்சு விடுகிறார்கள். அவ்வளவுதானா என வெறுப்படைகிறார்கள். ஆனாலும் அவர்களுக்காக வேறு காட்சிகள் அடுக்கி வைக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. பிடிக்கப்படாத காட்சிகள் நம்மைச் சுற்றிலும் இறைந்து கிடக்கின்றன. சம்பந்தப்பட்டவர்களுக்கு மட்டுமே அவை பிடிபடும். அப்படித்தான் அவளைப்பற்றிய நினைவுகளை எடுத்து அடுக்கிப் பார்க்கிறேன். பள்ளம் படத்தில் வராத காட்சிகள் அவை. சொல்லப்படாத ஒரு கதையும் அங்கே இருக்கிறது.
இரத்த தானம் செய்வதற்கான கிளப் ஒன்றை துவக்கும் பொருட்டு அதற்கு நிதி திரட்ட வாலிபர் சங்கம் சாத்தூரில் மாஜிக் ஷோ நடத்த திட்டமிட்டு இருந்தது. 2005 டிசம்பர் மாதத்தின் ஒருவிடிகாலையில் அன்றைக்கு சாயங்காலம் ஷோ நடத்துவதற்கு மாஜிக் நிபுணர் மித்ரா வந்திருந்தார். அவரை வரவேற்று, உடுப்பி ஒட்டலில் டீ குடித்துக்கொண்டு இருந்தோம் வெளியே வந்து நின்ற போது எதிரே பள்ளம் தோண்டிக்கொண்டு இருந்தனர். அந்தக் காட்சிகளை படம்பிடிக்க வேண்டும் போலத் தோன்றியது. பக்கத்தில் கார்த்தியின் பிரியா ஸ்டூடியோ. காமிரா எடுத்துவந்தான்.
கணவன் பள்ளத்தில் இறங்கி மண் தோண்டிக்கொண்டு இருக்க, குழந்தையைத் தூக்கிக்கொண்டு அவள் அருகில் நடந்து வந்துகொண்டு இருந்தாள். எங்கள் காமிராவிற்குள் நுழைந்துகொண்டதை அப்போது அவள் அறிந்திருக்கவில்லை. அதை எடு, இதை எடு, அங்கிருந்து எடு என்று சொல்ல, கார்த்தி அவனுக்கே உரிய கோணங்களிலெல்லாம் வளைத்துக்கொண்டு இருந்தான். அங்குமிங்கும் சாலையில் பஸ்களும், சைக்கிள்களும், மாட்டுவண்டிகளும், மனிதர்களும் சென்றுகொண்டே இருந்தனர். கொஞ்ச நேரத்தில் அவர்களுக்கு தெரிந்துபோனது. “என்ன சார்.. எங்களப் போயி எடுக்குறீங்க....” என அவளும், அவனும் வெட்கப்பட்டார்கள். ஒரு பன்றி எங்கிருந்தோ வந்து பக்கத்தில் தேங்கிக்கிடந்த சகதியில் படுத்தது. யாரும் அதுகுறித்து அலட்டிக்கொள்ளாத போது, பள்ளம் தோண்டிக்கொண்டு இருந்தவர்களின் சிறுபையன் ஒருவன் அதைக் கல்லெறிந்து விரட்டினான். முதல்நாள் இந்தக் காட்சிகளோடு முடிந்தது.
இரண்டு நட்கள் கழித்து அவர்கள் வேறொரு இடத்தில் பள்ளம் தோண்டிக்கொண்டு இருந்தனர். அருகில் ஆட்டோ ஸ்டாண்ட் ஒன்று இருந்தது. அதில் ஒரு ஆட்டோவில் உட்கார்ந்து படம் பிடித்துக்கொண்டு இருந்தோம். அந்தப்பெண்ணுக்கும், யாருக்குமே அன்று நாங்கள் படம் எடுத்தது தெரியாது. சாயங்காலம் கார்த்தி “இப்படியே எடுத்து என்ன செய்யப் போகிறோம்” என்றான். சிரித்துக்கொண்டேன். எனக்கும் எதுவும் தோன்றியிருக்கவில்லை. “எடுத்துக்கொண்டே இருப்போம். பிடிபடும்” என்றேன். அவர்கள் தங்கியிருக்கும் இடம், அவர்களுக்கு என்ன ஊதியம், எங்கிருந்து வருகிறார்கள் இவர்கள் எல்லாம் விசாரிக்க வேண்டும் என்றேன். இதுபோன்ற காரியங்களில் முழுவதுமாய் மூழ்கி மெனக்கெட்டு அதிலேயே கரைந்துபோக வேண்டும். ஆனால் தொழிற்சங்கம், எழுத்தாளர் சங்கம், நண்பர்கள் வட்டம் என பலபொழுதுகள் கழிய, கிடைக்கிற நேரங்களில் படம் எடுப்பது என்பது சரிப்பட்டு வராது. “அண்ணா, அவர்கள் திருவண்ணாமலைப் பக்கத்துல இருந்து வந்திருக்காங்க” “இங்கே ஒரு காண்டிராக்டர்கிட்ட வேலைப்பாக்குறாங்க...”, “பாவம் ராத்திரி குளிர்ல குழந்தையோட அவங்க பூங்கா பக்கத்துல படுத்துருக்கும் காட்சியைப் பாக்க முடியலண்ணே..” என செய்திகளைச் சொல்லிக்கொண்டு இருந்தான் கார்த்தி. அவர்கள் தங்கியிருக்கும் இடத்தை ஒருநாள் படம்பிடிக்க வேண்டும் என திட்டமிட்டோம்.
இரண்டு நாள் கழித்து கார்த்திதான் சொன்னான். “அண்ணா அந்தப் பொண்ணும், குழந்தையும் ஊருக்கு போய்ட்டாங்க. அவன் மட்டும்தான் இருக்கான்” என்றான். விசாரித்து அறிந்த விபரங்கள் தாங்க முடியாதவையாக இருந்தன. குழந்தையை வைத்துக்கொண்டு ஒழுங்காய் வேலை பார்க்கவில்லையென்று அவளை அடிக்கடி காண்டிராக்டர் சத்தம்போட்டுக் கொண்டே இருந்திருக்கிறான். முந்தின நாளும் அப்படி நிகழ்ந்திருக்கிறது. அவளும் துடுக்குத்தனமாக எதோ சொல்ல, அவளை ரோட்டில் வைத்து, அந்தக்கணவன் முன்னாலேயே அடித்துக் கீழே தள்ளியிருக்கிறான் காண்டிராக்டர். கணவன் கெஞ்சி இருக்கிறான். இனிமேல் அவள் வேலைக்கு வேண்டாம் என காண்டிராக்டர் சொல்லி விட்டானாம். அவளை ஊருக்கு அனுப்பிவிட்டு அவன் மட்டும் வேலை பார்த்துக்கொண்டு இருந்தான். பிறகு சிலநாட்களில் அவனும் போய்விட்டான்.
காமிராவுக்குள் அவர்கள் இருந்துகொண்டு அலைக்கழிக்க ஆரம்பித்தார்கள். படம் பிடித்த காட்சிகளை கம்ப்யூட்டர் திரையில் பார்க்க ஆரம்பித்தபோது அவள் உலகின் உன்னதப் பெண்ணாய் காட்சியளித்தாள். அந்தக் குழந்தை கைநீட்டி காற்று வெளியில் துழாவும் காட்சியில் ஏதேதோ செய்திகள் இருந்தன. ‘எங்கே போய்விட்டார்கள், எங்கே இருப்பார்கள் இப்போது..’ எனத் தோன்றவும், சட்டென்று, என்ன செய்ய வேண்டும் என்பது உறைத்தது. கார்த்தியை அழைத்து, “இந்த இரண்டு இடங்களிலும் தோண்டப்பட்ட பள்ளங்கள் இப்போது மூடப்பட்டுதானே இருக்கும்” என்றேன். ஆமாம் என்றான். “இப்போது அவைகளை, அந்த இடங்களோடு சேர்த்து படம் பிடிக்க வேண்டுமே” என்றேன். காமராஜும், கார்த்தியும் சென்றனர்.
ஒருநாள் ஒரு இடத்தில் பள்ளம் தோண்டுகின்றனர். அடுத்தநாள் அந்தப் பள்ளம் மூடப்பட்டுவிடுகிறது. ஆனால் வேறொரு இடத்தில் பள்ளம் தோண்டிக்கொண்டு இருக்கிறார்கள். அங்கும் பள்ளம் மூடப்படுகிறது. அவர்கள் மட்டும்....! இதுதான் ஸ்கிரிப்டாக எனக்குள் ஒடியது. எடுத்த காட்சிகளை வைத்து அவ்வளவுதான் செய்ய முடியும் எனத் தோன்றியது. எடிட்டிங்கில் முத்துவோடு உட்கார்ந்து, காட்சிகள் வெட்டி, வெட்டி அடுக்க ஆரம்பித்தோம். பின்னணியில் யாராவது விஷயங்களைச் சொல்ல வேண்டும், அப்போதுதான் புரியும் என்றனர் காமராஜூம், கார்த்தியும். நான் பிடிவாதமாக மறுத்துவிட்டேன். அதில் அவர்களுக்கு வருத்தமும் இருந்தது. அப்படிச் சொல்ல வேண்டுமென்றால், அதற்கு நாம் வேண்டுமா என்பதுதான் எனக்குள் இருந்த கேள்வி. சினிமா, சினிமா மொழி என ஆயிரம் பேசிவிட்டு, பரிதாபகரமாக தோற்றுப்போன இடமாக நமது முதல் முயற்சி இருக்கவேக் கூடாது எனத் திடமாயிருந்தேன். படம் எடுத்து, பின்னணி இசையெல்லாம் சேர்த்து முதலில், அருகிலிருந்த ஆட்டோத் தொழிலாளர்களை அழைத்து காண்பித்தோம். சொல்லாத விஷயங்களையெல்லாம் சொன்னார்கள். பன்றியை, பிள்ளையாரை, சாலையை பற்றியெல்லாம் புதுப்புது அர்த்தங்களைச் சொன்னர்கள். அப்பாடாவென்று இருந்தது. எனக்குள் அந்தப் பெண் புகையிலை போட்டுக்கொண்டு கைகளை மடக்கி கொக்கு காட்டிக்கொண்டு இருந்தாள். ’எங்கே இருக்கிறாய் பெண்ணே.... ’
இந்தப் படமொன்றும் பெரிய விஷயமில்லை. மிகச் சிறிய ஒரு பதிவுதான். சாத்தூர் மாதிரியான நகரமுமில்லாத, கிராமமுமில்லாத ஒரு ஊரிலிருந்து வாய்த்த வசதியில் செய்யமுடிந்த காரியம். அவ்வளவுதான். இதற்குப் பிறகு தயாரித்த இரவுகள் உடையும், இது வேறு இதிகாசம் ஆகிய இரண்டு படங்களும் எங்கள் சக்தியை மீறிய பெரிய முயற்சிகள்தான். திருவனந்தபுரத்தில் நடந்த ஜான் ஆபிரஹாம் தேசீய விருதுக்கான ஆவணப்படப் போட்டிகளில் அவை பங்குபெற்றதும், இயக்குனர் அடூர் கோபாலகிருஷ்ணன் இரவுகள் உடையும் படத்தைக் குறிப்பிட்டுப் பேசியதும் முக்கியமான தருணங்கள்தான். அதைவிட முக்கியமான ஒன்று இன்றுவரை வாய்க்காமல் இருக்கிறது.
என்றேனும் ஒருநாள் அவளைச் சந்திக்கலாம். சந்திக்காமலும் போகலாம். படத்தைப் பார்த்தால் என்ன சொல்வாள்? சிறு புன்னகையோடு கடக்கலாம். “அடப் போங்க சார்” என வெட்கப்படலாம். அல்லது காலத்தின் ஊடே புகுந்து, உடைந்த கப்பலைப் பார்த்த ரோஸைப் போல பிரமைப் பிடித்து உட்கார்ந்திருக்கலாம். அவளது கண்களில் இருந்து இன்னொரு படம் விரியலாம்.
படம் பார்க்காதவர்கள் சென்ற பதிவில் பார்க்க….
படம் பார்த்து மீளவே பல மணி நேரம் ஆனது...
பதிலளிநீக்குஇது இன்னும் கனம்...
பள்ளம் மூடப்பட்டு கேமரா... அலைபேசி டவரின் உச்சியைக் காட்டும் போது அடிக்கும் மணியோசை என்னவோ செய்தது..
இன்று வீட்டிலிருந்து வரும்போது சாலையோரம் பள்ளம் தோண்டிக்கொண்டிருந்தார்கள்.. ஒரு நிமிடம் நின்று பார்த்துவிட்டுத்தான் வந்தேன்
படத்தைப் போலவே இதற்கும் வார்த்தைகள் தேவையில்லை பாராட்ட. கனத்த மனசுடன் கையை இறுகப்பற்றிக் கொள்ள முடிந்தால்...
பதிலளிநீக்குஅற்புதம் மாதவ்!!! எனக்கு என்ன எழுதுவதென்றே தெரியவில்லை.
பதிலளிநீக்குபள்ளம் பார்த்தேன். தனியாக ஒரு பதிவு போடலாம் என இருந்தேன். உங்களுடைய இந்த பதிவு அழகாக எல்லாவற்றையும் முன்னிருத்துக்கிறது. ஒரே காமராவை வைத்துக்கொண்ண்டு இயல்பாக அவர்கள் வாழ்வவை பதிவு செய்தது வியப்பு. அவள் புகையிலை போட்டுவிட்டு கொடுக்கு காட்டுவது ஒரு கோணம், உடன் அந்த குழந்தை react செய்வது வேறோர் கோணம். இரண்டையும் அழகாக படம் பிடித்திருக்கிறார் கார்திக். அவர்களை சுற்றி இருக்கும் எல்லா விசயங்களும் வேறு அர்த்தங்களை தருகிறது, பிள்ளையார்,மனிதர்கள்,பன்றி,முந்தைய நாளில் அவர்கள் தங்கியிருந்த இடத்தை ஆக்ரமித்திக்கொள்லும் " pepsi" விளம்பரம்... எல்லாமே sub-text ஒன்றை உருவாக்குகின்றன.
பதிலளிநீக்குஎல்லோரையும் "இணைக்கும்" தொலைதொடர்பு பாலத்தை உருவாக்கும் அவர்கள் நம் தொடர்பு எல்லைக்கு வெளியே இருக்கிறார்கள்.
காமராஜ்,கார்த்திக் மற்றும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
பிரமிப்பாய் இருந்தது மாது.
பதிலளிநீக்குபின்னணியில் எதுவும் பேசப்படாது காட்சியின் போக்கிலேயே பேசிக்கொண்டு போவதில், நீங்கள் பிடிவாதமாய் இருந்ததுதான் சரி.
அறுதியிட இயலாத தாக்கத்தை ஏற்படுத்துகிறது காட்சிகள்,வாழ்வு.
முக்கியமாய்,இசை பேசுகிறது.பிறகு நாம் என்னத்த பேச?
டவரும்,ரிங் டோன் ஒலியும் சட்டென அடுத்த தளத்திற்கு நகர்த்துகிறது.
பாதிப்பில் இருந்து விடுபட நேரம் எடுக்கும் மாது. :-)
great work,maadhu,kaamu,karthi,and friends!
//என்றேனும் ஒருநாள் அவளைச் சந்திக்கலாம். சந்திக்காமலும் போகலாம். படத்தைப் பார்த்தால் என்ன சொல்வாள்? சிறு புன்னகையோடு கடக்கலாம். “அடப் போங்க சார்” என வெட்கப்படலாம். அல்லது காலத்தின் ஊடே புகுந்து, உடைந்த கப்பலைப் பார்த்த ரோஸைப் போல பிரமைப் பிடித்து உட்கார்ந்திருக்கலாம். அவளது கண்களில் இருந்து இன்னொரு படம் விரியலாம்.//
பதிலளிநீக்குநெகிழ்வு மக்கா.
The atmospheric temperature is 101* The humidity is a minimum of 22%.I sit in the coolar comfort and watch PALLAM.What an irony!....Kashyapan.
பதிலளிநீக்குIf you have not read my comments to the previous post pl do so.
பதிலளிநீக்குAgain my question is, where do we start to address these difficulties, to give them the right equipment for them to do these jobs as a normal human being.
Provide their families a regular life!!!
However small step it is, we should start somewhere.....
ஈரோடு கதிர்!
பதிலளிநீக்குஉளப்பூர்வமான உங்கள் உணர்வுகளுக்கு நன்றி.
வானம்பாடிகள்!
உங்கள் கரங்கலைப் பற்றிக்கொள்கிறேன் நெகிழ்ச்சியோடு!
பிரியமுடன் பாலா!
எல்லாம் எழுதிவிட்டதாகவே எனக்குத் தோன்றுகிறது நண்பரே!
ஜெயமார்த்தாண்டன்!
பதிலளிநீக்குஉங்கள் விரிவான பின்னூட்டமும், காமிரா குறித்த பகிர்வும் உற்சாகமளித்தது. கார்த்தியிடம் காண்பித்தேன். சந்தோஷப்பட்டான்.
பா.ரா!
மக்கா, நாங்கள் இரக்கிவைத்ததை கொஞ்சம் நீங்களும் சுமக்கலாம். அதுதான் கலையின், உண்மையின் தரிசனம். நன்றி மக்கா.
காஸ்யபன் தோழர்!
உங்கள் உணர்வு புரிகிறது. இப்படித்தான் இருக்கிறது.
Itsdifferent!
பதிலளிநீக்குஅணி திரட்டப்பட்டத தொழிலாளர்களைத் திரட்டவும், அவர்களுக்கான கோரிக்கை வைக்கவும் இப்போது தொழிர்சங்க அமைப்புகள் செயலாற்றுகின்றன. அதுதான் துவக்கமாக இருக்கும் என நம்புகிறேன்.
பள்ளத்தில் நீங்கள் எடுத்து வய்த்த முதல் அடியே உங்களை தொலைதொடர்பு கோபுரத்திற்கு மேல் கொண்டுசென்றுள்ளது ,மிகவும் மகிழ்ச்சி,உங்களுடம் பணியாற்றிய அனைவருக்கும் எனது வாழ்த்துக்களும் பாராட்டும்
பதிலளிநீக்கு