”சாலையில் ஒருவன் சாதாரணமாக முந்திச் சென்றாலும் சட்டென்று அவனை எதிரியாக பாவிக்கிற அறிவு மூளைக்குள் நுழைந்திருக்கிறது. ஒருவருக்கொருவர் பகைவர்களாக நிறுத்தி வைத்து நிகழும் ஆடு புலி ஆட்டத்தின் கட்டங்களே துருவ ரேகைகளாக பூமி உருண்டை மீது படிந்து இருக்கின்றன. யாரையும் நம்ப முடியாத, நெருங்கி ஒட்டி விடாதபடிக்கு அன்றாட வாழ்க்கை மனிதர்களை விரட்டிக்கொண்டு இருக்கிறது. முன்பின் தெரியாத ஒரு மனிதனைப் பற்றி மனதிற்குள் முதலில் ஒலிப்பது அபாயச் சங்குதான். ஒரு புன்னகையை உதிர்ப்பதற்கான விசாலம் இல்லாமல் ஓடிக்கொண்டு இருக்கிறோம்.
உண்மையில் நமது இயல்புகளில்லை இவை. இந்த அமைப்பும், சமூகமும்தான் நம்மை இக்கதிக்கு கொண்டு வந்து நிறுத்தியிருக்கின்றன. கூட வந்தவர்களில் சிலர் அங்கேயே நிற்கிறார்கள். சிலர் படிகளாக ஏறி போய்க் கொண்டு இருக்கிறார்கள்.சிலர் எங்கேயோ காணாமல் போகிறார்கள். சக மனிதர்கள் மீது இனம் புரியாத கோபம் முளைக்கிறது. யோசித்துப் பார்த்தால், ஒவ்வொரு நிலையிலும் இந்த சமுகத்தின் ஏற்பாடுகளே நாளெல்லாம் துவேஷத்தை வளர்த்துக்கொண்டு இருக்கின்றன.
தனது அடையாளங்களை மனிதன் இப்போது பார்க்க முடிவது குழந்தைகளிடம்தான். குழந்தைகளை எல்லோரும் நேசித்துக் கொண்டு இருக்கிறோம். குழந்தைகளே எவ்வளவு வயதானவரையும் குழந்தைகளாக்கி விளையாடுகின்றன. சபிக்கப்பட்ட நம்மை மீட்கும் வல்லமை கொண்ட குழந்தைகளின் பாதத்துளிகளை தரிசிப்பதாகவோ அல்லது யாசிப்பதாகவோப் படுகிறது இந்த சொற்சித்திரங்களில். பத்து வருடங்களுக்கு மேலாக பெரிதாக எதுவும் எழுதாமல் கிடந்த நான் வலைப்பக்கங்களில் சென்ற வருடத்தின் முடிவில் இருந்து எழுத ஆரம்பித்ததில் சிலவற்றை தொகுத்துப் பார்த்தபோது இப்படியான சித்திரமே தென்படுகிறது. நேற்றைய காலத்திலிருந்து விழித்து எழுந்து எதோ நாட்குறிப்புகள் போல எழுதி வைத்திருக்கிறேன்.”
இப்படியொரு முன்னுரையோடு, வலைப்பக்கங்களில் நான் எழுதிய சொற்சித்திரங்களைத் தொகுத்து ‘குருவிகள் பறந்துவிட்டன, பூனை உட்கார்ந்திருக்கிறது’ என்னும் புத்தகமாக வம்சி புக்ஸ் மூலம் வெளியிட்டு இருந்தேன். கலீல் கிப்ரான், மண்ட்டோ ஆகியோரைப் படித்து, அந்த வடிவங்களில் ஈர்க்கப்பட்டு போட்டுக்கொண்ட ‘சூடு’தான் இது.
இரண்டு வாரங்களுக்கு முன் இலக்கிய விமர்சகரும், பெரும் மதிப்பிற்குரியவருமான எஸ்.ஏ.பெருமாள் அவர்கள் போன்செய்து “உன்னுடைய புத்தகத்தை படிச்சேனப்பா” என்றார். இரக்கமில்லாமல் பலசமயங்களில் அவரால் கிழிக்கப்பட்டவன் என்பதால் அடக்கமாக இருந்தேன். “நல்லா வந்திருக்கப்பா, தமிழுக்கு புதிய வடிவமப்பா.... மொழியும் அடர்த்தியாய், புதிய விஷயங்களோடு வந்திருக்கு.” என்று திரும்பவும் நிறுத்தினார். அப்பாடா என்றிருந்தது. ஒரு வாக்கியத்துக்கும், இன்னொரு வாக்கியத்துக்கும் இடையில் நிறைய மௌனங்களை வைத்திருப்பார். “ஆனா நீ ஒரு எழுத்துச் சோம்பேறி. இதுல உள்ள விஷயங்களில் பெரும் நாவலுக்கு உரிய கூறுகள் இருக்கு. அதையெல்லாம் எழுதாம இப்படிச் சின்னச் சின்னதா எழுதுற..” என்று அன்பாய் கடிந்துகொண்டார்.
இன்னொருநாள் கவிஞர் கிருஷி வெகுநேரம் அந்தப் புத்தகத்தைப் பற்றி பேசினார். ஜென் கவிதைகள் போலிருப்பதாய் முதலில் சொன்னவர் அவர்தான். அதை பெரிதாய் எடுத்துக்கொள்ளக் கூடாது என்னும் பிரக்ஞை எனக்கு நல்லவேளையாக இருந்தது. அப்புறம் அந்தப் புத்தகத்தைப் பற்றி பேசியவர் என்றால் எழுத்தாளர் வண்ணதாசன் தான். தமிழ்ச்செல்வனின் தந்தை எழுத்தாளர் எஸ்.சண்முகம் அவர்கள் எழுதிய நாவல் வெளியீட்டிற்கு வந்திருந்தபோது என்னைப் பார்த்ததும் பிரியத்துடன் கைகளைப் பற்றிக்கொண்டு, “ரொம்ப நல்லா வந்திருக்கு. அழகான எழுத்துக்கள். விரிவா உங்களுக்கு கடிதம் எழுதணும்னு நெனைச்சேன். எழுதுவேன்” என்றார். வேறு யாரும் புத்தகம் குறித்து பெரிதாய் பேசவில்லை. நேற்று செம்மலர் பத்திரிகையில் சாகித்ய அகாதமி விருது பெற்ற நம் எழுத்தாளர் மேலாண்மை பொன்னுச்சாமி இந்தப் புத்தகம் குறித்து தன் விமர்சனத்தை எழுதியிருந்தார். சிறு சந்தோஷம். பகிர்ந்து கொள்கிறேன்:
”கண்ணதாசன் இலக்கிய இதழ் பல இலக்கிய வடிவப் புதுமைகளுக்கும் இடம் தந்தது. மரபுக்கவிதை, புதுக்கவிதை, ஹைக்கூ என்ற எல்லா வடிவங்களுக்கான களமாக இருந்தது. அமரர் என்.ஆர்.தாசன், ‘சொற்கோலம்’ என்ற வடிவத்தில் அதிலும், சிகரம் இதழிலும் எழுதினார். கவித்துவக் கூறுகள் ததும்பும். இன்ன வடிவம் என வகைப்படுத்த இயலாது. சுருக்கமாக இருந்தாலும் அணுவைப்போல அடர்த்தியாக இருக்கும். அப்படிப்பட்டதொரு புதுமைமிகு செறிவான வடிவத்தில் எழுத்தாளர் மாதவராஜ் ‘சொற்சித்திரங்கள்’ படைத்திருக்கிறார்.
தனது வலைப்பூவில் எழுதியவற்றைத் தொகுத்து, ‘குருவிகள் பறந்துவிட்டன, பூனை உட்கார்ந்திருக்கிறது’ என்று நீளமான தலைப்புடன் சிறிய நூலாக தந்திருக்கிறார். கவித்துவக்கூறுகள் நிரம்பிய கச்சிதமான மொழிநடையில் அத்தனையும் எழுதப்பட்டுள்ளன. குறுஞ்சிறுகதை என்றும் சொல்லிவிடமுடியாது. உரைநடைக்கவிதை என்றும் சொல்லிவிட முடியாது. ஒவ்வொன்றும் ஜென் தத்துவக் கவிதை போலிருக்கிறது. வாசித்த கணத்தில் வசீகரித்துக்கொள்கிறது. ரொம்ப நேரம் யோசிக்க வைக்கிறது. உள்மடிப்புகள் விரிந்து ஆழ்மனம் நோக்கி அகன்று படர்ந்து வியாபிக்கிறது.
தாய்க்கோழிக்கு பயந்தோடிய மாவீரன், கெட்ட வார்த்தை பேசிய இரண்டாம் வகுப்பு மாணவனின் காய்ச்சல், பத்து ஐநூறு ருபாய்த் தாள்களுக்குள் வாழ்வின் சிறுமைகள் எட்டிப்பார்க்கிற மன உளைச்சல், அபார்ஷன் செய்த தாய்வலி, வரிசையில் நிற்கிற வாக்காளார்கள் ஜெயிக்க மாட்டார்களா என்று கேட்கிற சிறுவன், மூன்றாம் வகுப்புக்குள் ஊடகச் சிறுமைகள் அத்துபிடியாகிற அநியாயம், மருதாணிப்பெண்கள் என நூலுக்குள் நிறைய வாழ்வின் தெறிப்புகள்.
சமூகத்தின் காலடியில் நசுக்குண்டு மூச்சுத்திணறுகிற மனித சுபாவங்களும், மன உலகமும், பண்பாட்டு வீழ்ச்சியின் பயங்கரமும் நெஞ்சுக்குள் ஏறிக்கொள்கின்றன. இந்த உரைநடை ஹைக்கூ தமிழுக்கு புதுமையான வடிவம். அச்சுநேர்த்தி, வடிவமைப்புக் கச்சிதம் ஆகியவற்றுக்காக வம்சியைப் பாராட்டலாம்.”
மேலாண்மை பொன்னுச்சாமி அவர்களுக்கு நன்றி.
இன்னும் எழுதலாம் நிறைய. வாழ்க்கை வற்றாத நதிதானே. எஸ்.ஏ.பெருமாளும், தமிழ்ச்செல்வனும் ரொம்பகாலம் என்னிடம் கேட்டுக்கொண்டு இருக்கிற நாவலை இந்த வருடத்துக்குள்ளாவது முடிக்க வேண்டும். பார்ப்போம்.
//எஸ்.ஏ.பெருமாளும், தமிழ்ச்செல்வனும் ரொம்பகாலம் என்னிடம் கேட்டுக்கொண்டு இருக்கிற நாவலை இந்த வருடத்துக்குள்ளாவது முடிக்க வேண்டும். பார்ப்போம்.//
பதிலளிநீக்குஆவலுடன் எதிர்பார்க்கிறோம்!
ஓ இவ்வ்ளோ எழுதிருக்கீங்களா நீங்க????பூங்கொத்து!
பதிலளிநீக்குசீக்கிரம் எழுதிருங்க..
பதிலளிநீக்குபெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் உணர வைக்கிறது இடுகை.நானும் நிறைய எழுத்தாளர்களின் சிறுகதைகளை வாசித்திருக்கிறேன்.உங்கள் சிறுகதைகளில் இருக்கும் தனித்துவம் வியக்க வைக்கிறது.
பதிலளிநீக்கு"கிடா நாற்றம்" நான் வாசித்த சிறந்த சிறுகதைகளில் ஒன்று.கட்டிப்போட்டு உட்கார வைத்த கதை அது.
உங்களின் சில வாக்கியப் பிரயோகங்கள் இன்னும் மறக்கவில்லை.உங்களோடு தொலைபேசியில் பேச வாய்ப்பு கிடைத்தால் சொல்கிறேன் அவற்றையெல்லாம்.
அண்ணா,
பதிலளிநீக்குசந்தோஷமாயிருக்கிறது.
இன்னும் நிறைய , நிறைய எதிர்பார்க்கிறோம்.
My wife is doing some reasearch work in comparitive study of Subdha Chthra of Sanskrit and Sorchithra of Tamil.I have been asking almost all the bloggers including Mathavji to give a definition of Sorchithra.Is there anybody to help me...kashyapan
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் அண்ணா!
பதிலளிநீக்குஜோ!
பதிலளிநீக்குநானும்தான்.
அன்புடன் அருணா!
இவ்வளவுதான் எழுதியிருக்கேன்.
ரிஷபன்!
மிக்க நன்றி. எங்கள் எழுத்துக்களை ரசித்துக்கொண்டு இருக்கிறேன்.
அ.மு.செய்யது!
பதிலளிநீக்குஉங்களுடன் போனில் பேசியது இன்னும் இனிய நினைவாய் வலம் வருகிறது.நிறையப் படிக்கிறீர்கள். நிறைய எழுதவும் வேண்டும் என்பது என் ஆசை.
அம்பிகா!
பதிலளிநீக்குரொம்ப நன்றி.
காஷ்யபன் தோழர்!
இதை எப்படி விளக்குவது எனத் தெரியவில்லை. உரைநடைக்கும், கவிதைக்கும் இடையிலான ஒரு வடிவமாக நான் கருதுகிறேன்.
அண்டோ!
மிக்க நன்றி, தம்பி.