பிடித்தவர், பிடிக்காதவர் ஏழு - தொடர் விளையாட்டு
என் மகன் அடிக்கடி என்னிடம் கேட்கும் கேள்வி உனக்கு இவர் பிடிக்குமா, அவர் பிடிக்குமா என்பது. எப்படி இந்த கேள்விகள் அவனுக்குள் முளைத்தன என்று தெரியவில்லை. யோசித்துப் பார்க்கும்போது எல்லோருக்கும் பிடித்தமானவர்களும், பிடித்தமில்லாதவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அதற்கென்று காரணங்கள் உடனடியாகத் தெரியலாம். தெரியாமலும் இருக்கலாம். ஆனால் பிடிக்கும். பிடிக்காது. குழந்தைத்தனமான இந்தக் கேள்வி பதில்கள், ஒருவரது அபிப்பிராயங்கள் அல்ல, ஒருவர் பற்றிய அபிப்பிராயங்கள். அப்படிப் புரிந்துகொள்ளுங்கள். சட்டென்று என் மனசுக்குத் தோன்றியவைகளை தொகுத்திருக்கிறேன். பிடிக்காதவர்களைச் சொல்வதற்கு இங்கு ஒரு தைரியம் வேண்டியிருக்கிறது. முக்கியமாக அதற்குத்தான் இந்தத் தொடர். எதாவது ஒரு இடத்தில் அவர்களைப் பிடிக்காமல் போகிறது. ஜெயமோகன் எப்போது அருந்திராயை ’குருவிமண்டை’ என்று சொன்னாரோ அப்போதிலிருந்து அவர் பிடிக்காமல் போய்விட்டார் எனக்கு. அதற்காக அவரது ரப்பரும், காடும் எனக்குப் பிடிக்காமல் போகாது. பதில்களை/ பதில் சொல்கிறவர்களை இப்ப்டி புரிந்துகொள்ள வேண்டும் என நினைக்கிறேன்.
பிடித்தவர்களும், பிடிக்காதவர்களும் தமிழ்நாட்டிற்குள் இருந்தாகவேண்டும்
என்பது இந்தத் தொடரின் விதி! (விதி :1)
1.அரசியல் தலைவர்
பிடித்தவர் நல்லகண்ணு, பிடிக்காதவர் ஜெயலலிதா
2.எழுத்தாளர்
பிடித்தவர் தி.ஜானகிராமன், பிடிக்காதவர் ஜெயமோகன்
3.கவிஞர்
பிடித்தவர் பாரதியார், பிடிக்காதவர் வைரமுத்து
4.இயக்குனர்
பிடித்தவர் மகேந்திரன், பிடிக்காதவர் ஷங்கர்
5.நடிகர்
பிடித்தவர் பிரகாஷ்ராஜ், பிடிக்காதவர் விஜய்
6.நடிகை
பிடித்தவர் ஷோபா, பிடிக்காதவர் மீனா
7.இசையமைப்பாளர்
பிடித்தவர் இளையராஜா, பிடிக்காதவர் ஏ.ஆர்,ரஹ்மான்
இந்த வீபரீத விளையாட்டின் முடிவில் யாராவது இருவரை அழைக்க வேண்டும். நான் இப்போது அழைப்பது ......
1.ஆதிமூலக்கிருஷ்ணன்
2.சந்தனமுல்லை
பிற்சேர்க்கை:
1. பலரும் இந்த தொடர் விளையாட்டில் மற்றவர்கள் சொல்வதை அறிய ஆவலாய் இருப்பதால், அழைக்கப்படுவர்களின் எண்ணிக்கை குறைந்தது இருவராகவும், அதிகபட்சம் ஐவராகவும் இருக்கலாம். எனவே மேலும் மூன்று பேரை இப்போது அழைக்கிறேன் (விதி:2)
3. செல்வேந்திரன்
4. வால்பையன்
5. தீபா
2. நிகழ்காலத்தில் (பின்னூட்டத்தில்) சொல்வது போல் பிடித்தவர், பிடிக்காதவர் என்ற தலைப்புடன் தற்போது என்பதை அடைப்புக்குறிக்குள் சேர்த்துக்கொள்ள விரும்புபவர்கள் சேர்த்துக்கொள்ளலாம். (அவரவர் இஷ்டம். விதியாகாது.)
3. ராகவன் சொல்வது போல் பிடித்தவரோ, பிடிக்காதவரோ கண்டிப்பாய் பிரபலமானவராய் இருக்க வேண்டும். (விதி:3)
4.பா.ராஜாராம் இதே தலைப்பில் வேறு கேள்விகள் எடுக்கலாமா என்று கேட்டிருந்தார். இதே கேள்விகளோடு மேலும் மூன்று கேள்விகள் அவரவர் விருப்பப்படி சேர்த்துக்கொள்ளலாம். அதிகபட்ச கேள்விகள் பத்தைத் தாண்ட வேண்டாம். (அவரவர் இஷ்டம். விதியாகாது.)
மதுரை முன்னாள் எம்.பி மோகன் அவர்கள் காலமாகிவிட்டார்
உடல்நலம் குறைவாயிருந்து, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் தொடர்ந்து சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்த மதுரைத் தொகுதியின் முன்னாள் எம்.பி மோகன் அவர்கள் சிறிது நேரத்துக்கு முன்பு காலமாகிவிட்டார். 1999 முதல் 2009 வரை இருமுறை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பியாய் இருந்த எளிமையான அரசியல்வாதி அவர். யாரும், எந்த நேரத்திலும் அணுகக்கூடியவராய் இருந்தவர். அவரோடு இருந்த சில தருணங்கள் ஞாபகத்துக்கு வருகின்றன. துயரம் தருகின்றன. சாதாரண மக்களின் கஷ்டங்களில் பங்குகொண்டு அதைத் துடைப்பதற்கு தன்னால் ஆன பங்காற்றுவதில் தன் வாழ்நாட்களை கழித்தவர். அவருக்கு வயது அறுபது.
எங்கள் சங்கப் பொதுக்குழுவிற்கு அவர் வந்திருந்த போது..
1999 ஜனவரி 21ம் தேதி ‘சண்டே இந்தியன்’ பத்திரிகையில் அவரைப்பற்றி இப்படி சொல்லப்பட்டு இருந்தது.
“முன்பெல்லாம் நாடாளுமன்றத்திற்கு எனது அப்பா நடந்தே போவார். இப்போது அவரிடம் சைக்கிள் ஒன்று உள்ளது. டில்லியில் சைக்கிளை ஓட்டிக் கொண்டு செல்வது போல அவரது புகைப்படம் ஒன்றை மலையாள பத்திரிகை வெளியிட்டிருந்தது” என்று சிரித்துக் கொண்டே சொல்கிறார் நாடாளுமன்ற உறுப்பினர் மோகனின் இளைய பெண் பாரதி.
புகைப்படக் கலைஞர்களைப் பொறுத்தவரை, அது டில்லியாக இருந்தாலும் சரி, மதுரையாக இருந்தாலும் சரி சந்தோஷமாக கிளிக் செய்து கொள்வார்கள். ஒரு காலத்தில் கட்சியால் வழங்கப்பட்ட பஜாஜ் எம்80 வண்டியில்தான் இன்னும் அவர் சுற்றிக் கொண்டிருக்கிறார். ஒரு முறை, ரேசன் கடையில் பொருள் வாங்கிக் கொண்டு செல்லும் வழியில் வண்டி நின்று விட்டதால் இறங்கி அவரே சரி செய்ய முற்பட்டார். அந்த வழியாக சென்று கொண்டிருந்த நாளிதழின் புகைப்படக்கலைஞர் அதைப் படம் பிடித்தார். அடுத்த நாள் முதல் பக்க புகைப்படமானது.டில்லியில் இருக்கும்போது நாடாளுமன்றத்திற்கு நடந்து செல்வதைப் பார்க்கலாம். மூன்று முறை தேர்தலில் தோல்வியுற்று, 1999 ஆம் ஆண்டில் நாடாளுமன்ற உறுப்பினரான பி.மோகன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் இயக்கத்தில் தனது பணியை 1973 ஆம் ஆண்டு துவக்கினார். கடந்த சில ஆண்டுகளில் மதுரையின் வளர்ச்சிக்கு அவர் எவ்வாறு செயல்பட்டார் என்பதை மதுரைக்காரர்கள் சொல்லி வருகிறார்கள்.
மதுரையில் ஐந்து சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. தனது நாடாளுமன்றத் தொகுதி வளர்ச்சி நிதியை இந்தத் தொகுதிகளுக்கு சரிசமமாகப் பிரித்துக் கொடுக்கிறார். மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு ஒவ்வொரு ஆண்டும் 25 லட்சம் ரூபாய் நிதியை ஒதுக்கித் தருகிறார். இந்தப் பணிகள் நடைபெறுவதையும் தொடர்ந்து கண்காணிக்கிறார்.
கிராமம் ஒன்றில் சமுதாயக்கூடம் கட்டப்பட்டு வந்தது. அப்பணியை மேற்கொண்டிருந்த ஒப்பந்ததாரர் சிமெண்டுடன் அதிக மணலைக் கலந்து வந்தார். உங்கள் பணம் எவ்வளவு வீணாகிறது பாருங்கள் என்று மக்களிடம் மோகன் கூறினார். மக்களே அந்த ஒப்பந்ததாரர்களை தூக்கி எறிந்தார்கள்.மழை பெய்து கொண்டிருந்த நாள் ஒன்றில் ஜோதி கணேஷ் என்ற வங்கி ஊழியருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. சாலை முழுவதும் தண்ணீர் தேங்கியிருந்தது. ஆனால் ஒரு நபர் மட்டும் வேட்டியை மடித்துக் கொண்டு அதை சரி செய்யும் பணியில் இருந்தார். அவர் வேறு யாருமல்ல, நாடாளுமன்ற உறுப்பினரான தோழர் மோகன்தான்.
யாரிடமிருந்தும் அவர் பணத்தை வாங்கியதில்லை என்பதற்கு நான் சாட்சியாகும். அவருக்கு எதிரான கட்சியைச் சார்ந்தவராக இருந்தாலும், இதைச் சொல்வதில் நான் பெருமைப்படுகிறேன் என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தெய்வநாயகம் குறிப்பிடுகிறார்.
அப்பழுக்கற்ற அந்த அரசியல்வாதிக்கு நாம் அனைவரும் அஞ்சலி செலுத்துவோம்!!!
இராஜ குமாரன்
சஃபையர் தியேட்டர் இன்று இல்லை. கேஸ் ஸ்டவ் இல்லாத மத்திய தர வர்க்கம் இப்போது இல்லை. கம்ப்யூட்டரை எதிர்த்து தொழிற்சங்கங்கள் போராடிய காலங்களை இப்போது நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. காலங்கள் எவ்வளவு மாறி இருக்கின்றன. 1988ல் நான் எழுதிய கதை இது. திரும்ப படித்துப் பார்க்கிறேன்.....
இவன் அப்பா சிவச்சாமி அப்போதுதான் சாப்பிட்டு முடித்து படுத்திருந்தார். விழித்திருந்தாலும் கேட்க முடியாது. பயம் இல்லை. அவமானம். அதற்கு மவுண்ட் ரோட்டில் அம்மணமாய் நடந்துவிடலாம். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இதே பாடுதான். வெந்து போவான்.
படிக்கிற காலங்களில் ஞாயிற்றுக்கிழமைகளுக்காக ஏங்கி ஏங்கிப் போயிருக்கிறான். ஜன்னல் வழியே சூரியன் முகத்தில் அடிக்கிற வெக்கையையும் சுகமாக எண்ணி பத்துமணி வரை படுக்கையை விட்டு எழாமல் கிடப்பான். அன்றைய வானம், பூ, காற்று எல்லாமே சினேகமாய் தென்படுவார்கள். ஷாம்பூ போட்டு குளித்து பத்மநாபன் அங்கிள் வீட்டுக்குப் போய் அவரோடு செஸ் விளையாடுவான். அவர் மகள் சாருவின் ரகசிய பார்வையில், சிரிப்பில் கோடி கோடியாய் கனவு கண்டான். சாயங்காலங்களில் சரக்கொன்றை மரங்களின் கீழே தெருமுனையில் உள்ள திண்டில் ராகவன், சர்மா, வெங்கடாசலம் ஆகியோரோடு உட்கார்ந்து கடைசி பஸ் போகிற வ்ரைக்கும் பேசியிருக்கிறான். ம்.... இப்போது எல்லா நாட்களுமே ஞாயிற்றுக்கிழமைகள்தான்.
சுரேஷ் இன்னுங் கொஞ்ச நேரத்தில் “ஹாய்” என்று அமர்க்களமாய் வருவான். “ஆண்ட்டி! சௌக்கியமாயிருக்கீங்களா” என்பான். “அங்கிள் என்ன செய்றாரு. துங்குறாரா? எந்திச்சுப் போய் கம்ப்யூட்டர எதுத்து ஸ்டிரைக் பண்ணச் சொல்லுங்க. போஸ்டல்ல வயசானவங்களல்லாம் வீட்டுக்கு அனுப்புறாங்களாம்..” என்று சிரிப்பான். “ஏய்.. லம்பாடி! பொறப்புடு” இவனை அவசரப்படுத்துவான். அவனுக்கென்ன. அவனது மாமா ஒரு எம்.பி. படிச்சு முடிக்கவும் அவரோட ரெகமண்டேஷனில் ஒரு பெரிய கம்பெனியில் மார்க்கெட்டிங் அசிஸ்டெண்ட் வேலை. ஐயாயிரத்துக்கிட்ட சம்பளம். இவனது ஞாயிற்றுக்கிழமைச் சங்கடங்கள் பெரிதாய் தெரிந்திருக்காது.
பஸ்ஸில், ஆட்டோவில் என்று பயணிப்பார்கள். சினிமா போவார்கள். வேர்க்கடலைகள் வாங்கி கொறித்துக்கொண்டு அலைகளுக்கு எதிரே உட்கார்ந்திருப்பார்கள். முடிந்துபோன கல்லூரி வாழ்க்கை, இலக்கியம், செக்ஸ் எல்லாம் பேசுவார்கள். முழுக்க முழுக்க செலவும் சுரேஷ்தான் செய்வான். இவனைச் செலவு செய்ய விடமாட்டன். இருந்தாலும் ஒரு பத்து ருபாயாவது இவனுக்குத் தன் பையில் வைத்திருக்கத் தோன்றும்.
அம்மாவிடம் கேட்க முடியாது. மதியம் சாப்பிடும்போதுதான் அப்பாவிடம் “வீட்டுச் செலவுக்கு பணம் இல்ல. மண்ணெண்னெய் எல்லாம் தீந்து போச்சு” என்று சொல்லிக்கொண்டு இருந்தாள்.
இப்போது அம்மா மாவாட்டிக்கொண்டு இருந்தாள். ஊரில், நாட்டில் எல்லார் வீட்டிலும் கிரைண்டர் வாங்கிவிட்டார்கள். நமக்கு வாங்க வேண்டும் என்று நினைப்பாளா என்று தெரியவில்லை. திருச்சியில் எஞ்சீனியரிங் படிக்கும் தம்பியும், பக்கத்து வீட்டில் டி.வி பார்க்கப் போயிருக்கிற தங்கையும் வைத்திருக்கிற செலவை எண்ணி ‘இருக்குறத வச்சு திருப்திப் படணும்’ என்பாள். மிக்ஸி வாங்குகிற வசதியிருந்தால் அந்த வேலியை உடைத்துக்கொள்வாள். இதுதான் பிராக்டிக்கலாய் இருப்பதற்கான அர்த்தம் போலும். ஹம்பக். போன தையில் சாருவுக்குப் பக்கத்தில் அந்த டாக்டர் உட்கார, ‘தனம் தான்யம் பகும் பூத்ர’ என மந்திரம் உச்சரிக்கப்பட்ட அந்த கணத்தில் இவனது ஒவ்வொரு அணுவும் அதிர்ந்து போனது. பிருதிவிராஜனாய் ஆகியிருக்கலாம். குதிரை இல்லை. இரவின் அமைதியில் தலையணையில் முகம் புதைத்து அழுதான். அந்த ரகசிய பார்வையோடு சாரு இன்னும் இளமையோடு இவன் நினைவில் வந்து போய்க்கொண்டுதான் இருக்கிறாள். பிராக்டிக்கலாய் இருக்க வேண்டும் என்பதற்காக அந்த நினைவுகளை யாருக்கும் தெரியாமல் ஒரு இடத்தில் தீவைத்து கொளுத்தி எரித்து விடவா முடியும்?
சமையலறைக்குப் போய் தண்ணீர் குடித்தான். அம்மா இவனை நிமிர்ந்து பார்த்து வேலையில் மூழ்கினாள். சவரம் செய்யாத இவனது முகத்தையும், கலைந்துபோன முடியையும், ஏக்கத்தில் கிடந்த கணகளையும் தொடர்ந்து பார்க்க முடியவில்லை. மாவாட்டுவதை விட்டுவிட்டு எங்கோ வெறித்துப் பார்த்தாள்.
“ஈரேழு உலகத்தயும் எம்புள்ள கட்டியாளப் போது” என்று பக்கத்து வீட்டு ஈஸ்வரி அவள் குழந்தையை கொஞ்சுவது போல இவளும் ஒரு காலத்தில் கொஞ்சியிருந்தாள். ஏழு கடலைத் தாண்டி.... எரிமலைக்குள்ளே புகுந்து.... அங்கு இருக்கும் பூதத்தைக் கொன்று.... தங்க ரோஜா பறிக்கிற இராஜகுமாரன் கதையெல்லாம் சொல்லியிருந்தாள். இவன் பிறந்த சமயம் வீடுசுற்றி ரோஜா, கனகாம்பரம், லில்லி என்று பூஞ்செடிகளாய் வளர்த்திருந்தாள்.
மணி இரண்டு அடித்தது. சுரேஷ் இதோ வந்து விடுவான். அடங்கமாட்டாமல் கையாலாகாத்தனம் இவனுக்குள் புரண்டது. எரிச்சல் எரிச்சலாய் வந்தது. சுவரில் முட்டிக்கொள்ள வேண்டும் போலிருந்தது. ‘ச்சே!’
மேஜையில் ஹிண்டுவும், காம்படிஸன் சக்ஸஸும். பல்லாயிரம் கோடி விவகார பங்குபத்திர ஊழல் கொட்டை எழுத்துக்களில். இதையெல்லாம் போட்டால் கூட ஐந்து ருபாய் தேறும். அப்பா முறைப்பதை சகிக்க முடியாது. நாலு வருஷம் முன்னால் வரைக்கும் “ எம்பையன் தியாகு... பி.காம் ஃபைனல் இயர்” என்று தெரிந்தவர்களிடமும், சொந்தக்காரர்களிடமும் சொல்லிக்கொண்டு இருந்த அப்பா இப்போதெல்லாம் யாரிடமும் இவனை அறிமுகப்படுத்துவது இல்லை. இவனும் வீட்டுக்கு யாராவது வந்துவிட்டால் வெளியே போய்விடுவான். அப்படியே வீட்டில் இருந்தால், எப்போது விருந்தாட்கள் போக மாட்டார்கள் என்றிருக்கும். தப்பாமல் ‘பையன் என்ன செய்றான்’ என்று கேட்கப்படும். கூனிக்குறுகிப் போவான்.
இந்த அவஸ்தைதான் சர்மாவை பக்டோன் அடிக்கச் செய்திருக்க வேண்டும். ராகவனை பி.எஸ்.ஸி முடித்திருந்தாலும் விறகுக்கடைக்கு கணக்கு எழுத அனுப்பியிருக்க வேண்டும். வெங்கு மட்டும் தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஒரு தனியார் கம்பெனியில் காலை ஒன்பது மணிக்கு டிபன் காரியரோடு சென்று இரவு பத்து மணிக்குத் திரும்ப வைத்திருக்க வேண்டும். சரக்கொன்றை மரங்கள் எல்லா சோகத்தையும் தாங்கிக்கொண்டு அவை பாட்டுக்கு நின்று கொண்டிருக்கின்றன.
இவனும் இப்போது யாரிடமும் பழகுவதில்லை. அதற்கும் திராணியும், தெம்பும் வேண்டும் போலிருக்கிறது. சாருவின் ஞாபகங்கள் சுகமாய் இருக்கும். ஜன்னல் வழியே சரக்கொன்றை மரங்களைப் பார்த்து அப்படியே உட்கார்ந்திருப்பான். சுற்றியிருக்கும் நிகழ்வுகள் அந்த நினைவுகளின் நிழல்களில் கூட அடைய விடாது. விரட்டும். சுரேஷ்தான் ஆறுதல். நான்கு வருட சூழல் மாறிப் போயிருந்தாலும், இவனைப் பார்க்க ஞாயிற்றுக்கிழமை தோறும் வந்துவிடுவான். இவனிடம் மட்டும் அப்படியொரு ஈடுபாடு படிக்கிற காலத்திலிருந்தே.
சுரேஷ் வழக்கம் போல துறுதுறுவென்று வந்தான். திக்கென்று இருந்தது.
“தியாகு சீக்கிரம் கெளம்பு. சஃபையர்ல ஹெவன்லி பாடிஸ் ஓடுதாம். ஆபிஸ்ல ஆவுன்னு பேசிக்கிறாங்க. மூணு மணிக்கு ஷோ!” என்றான்.
“வரலை. தலை வலிக்கு....” என்றான் இவன்.
“வீட்டுக்குள்ளயே இருந்தா தலையும் வலிக்கும்..... காச்சலும் வரும்.... ஜன்னியும் வரும்... அட, வாடான்னா..” சுரேஷ் சத்தம் போட்டான். இவனால் அதற்கு மேல் அவனிடம் பேச முடியாது. புறப்பட ஆயுத்தமானான்.
“ஆண்ட்டி, வெயில்ல வந்தது நாக்கு ஒலந்து போச்சு. கொஞ்சம் தண்ணி தாங்க”
தண்ணீர் கொடுக்கும்போது இவனது அம்மா சுரேஷைப் பார்த்தாள். சுத்தமாய் சவரம் செய்த முகம். அழகாய் ஷாம்பூ போட்டு சீவிய முடி. அயர்ன் பண்ணி நேர்த்தியாய் சட்டை. பேண்ட். முகம் சிரித்துக்கொண்டே இருந்தது.
“அம்மா! வரட்டுமா...” ஒருமூலையில் கட்டைவிரல் வார் அறுந்துபோன, எப்போதோ வாங்கிய செருப்பை மாட்டிக்கொண்டு கிளம்பிய இவனை, “தியாகு... கொஞ்சம் இங்க வாப்பா” என அம்மா கூப்பிட்டாள். போனான். சமையலறையில் எதோ ஒரு டப்பாவில் இருந்து அஞ்சு ருபாயும், கொஞ்சம் சில்லறைகளையும் கொடுத்தாள்.
“என்னம்மா இது”
“வ...ச்....சு....க்....க....ப்...பா”
அம்மா தழுதழுத்தாள். ஏறிட்டுப் பார்த்தான். கண்ணீர் பொங்கி இருந்தது. அங்கேயே நின்றால் இவனுக்கும் அழுகை வந்துவிடும் போல் இருந்தது.
“இல்லம்மா... வேண்டாம்” வேகமாய் அங்கிருந்து அகன்றான்.
கண்களை ஈரமாக்கிய ஒரு எஸ்.எம்.எஸ்
தனது புத்தம் புதுக்காரை அவர் துடைத்துக் கொண்டு இருந்தார்.
அருமை மகனோ கல்லைக் கொண்டு காரின் இன்னொரு பக்கத்தில் கிறுக்கிக் கொண்டு இருந்தான்.
கோபம் வந்த தந்தை மகனின் விரல்களைப் பிடித்து, கையில் கிடைத்தது ஸ்பானர் என்பது கூட அறியாமல் மாறி மாறி கோபத்தில் அடித்து விட்டார்.
ஆஸ்பத்திரியில் கட்டுப் போட்டு இருந்த தன் கையினைப் பார்த்து “என் விரல்கள் திரும்பவும் வளருமா, அப்பா” என்றான் மகன்.
அழுகையை அடக்கிக் கொண்டு வெளியே வந்த தந்தை காரைக் கால்களால் ஓங்கி மிதித்தார்.
மகன்காரன் காரில் கிறுக்கி இருந்த எழுத்துக்கள் அப்போது அவரைப் பார்த்தன.
“ஐ லவ் யூ டாடி”
பி.கு: தூத்துக்குடியிலிருந்து பொன்ராஜ் அனுப்பிய எஸ்.எம்.எஸ்ஸில் இருந்த குட்டிக்கதை இது. யார் எழுதியதோ தெரியவில்லை. காலையில் படித்தேன். சட்டென்று கண்கள் ஈரமாகின. நினைக்கும்போதெல்லாம் கலங்கிப் போகிறேன்.
அவன்களும், அவர்களும்..... ஜாக்கிரதை!
சில வருடங்களுக்கு முன்பு பத்திரிக்கைகளிலும், தொலைக் காட்சிகளிலும் பெரும் அதிசயமாய் அந்தச் செய்தி கொஞ்சகாலம் தொடர்ந்து பேசப்பட்டது நினைவிலிருக்கலாம். அவனுக்கு எட்டு வயதோ என்னவோதான். சிறுவன். மழலை குரலில் பேசினான். தமிழ் சினிமாக்களில் இளம் முருகக் கடவுள் வேடத்தில் நடிப்பதற்கு வாகான தோற்றம். பத்திரிக்கைகள் அவனைத்தான் 'வந்தார்', 'பேசினார்', 'காஞ்சி சங்கராச்சாரியை சந்தித்தார்', 'பெயரை மாற்றிக் கொண்டார்' என்று 'ர்' விகுதி போட்டு மரியாதையோடு அழைத்து வந்தன. அந்த சின்னப் பையனின் காலடியில் வார்த்தைகள் ஆசீர்வாதம் வாங்க விழுந்தன. சிறியவர்களையும் மரியாதையோடு அழைக்கும் கலாச்சாரப் பெருமை கொண்ட மண் இது என்று நினைக்கத் தோன்றவில்லை. 'குட்டிச்சாமி வந்தான்', 'குட்டிச்சாமி தனது பேரை மாற்றிக் கொண்டான்' என்று தெளிவாக எழுதலாம். வானம் ஒன்றும் இடிந்து விழுந்து விடாது.
அப்புறம் செத்துப் போனார் சந்தனக் கடத்தல் வீரப்பன். காடுகளில் வாழ்ந்தவர். வசதியானவர்களிடம் கொள்ளையடித்து ஏழைகளிடம் கொடுத்தவர் என்றுகூட போகிற போக்கில் ஒரு தொலைக்காட்சி செய்தி வாசித்தது. கொள்ளை, கொலை என பல குற்றங்களுக்காக காவல்துறையால் தேடப்பட்டு வந்த இருபது வருடப் புதிர். எப்போதும் இந்தப் பத்திரிக்கைகள் அந்த வயதான மனிதரை 'அவன்', 'இவன்' என ஏக வசனத்தில்தான் எழுதிக்கொண்டு வந்தன. இப்படி வீரப்பனை 'அவர்' என்று சொல்வதே எதோ ஒரு பாவ காரியம் போல தோன்றுகிறது அல்லவா? அந்த அளவுக்கு இங்கே ’ன்’னுக்கும் ‘ர்’ருக்கும் வலிமை இருக்கின்றன.
விளக்கங்கள் இதற்கு சொல்லப்படலாம். வயது என்பது முக்கியமல்ல, ஒருவர் ஆற்றும் காரியங்களே சமூகத்தில் இந்த மரியாதையை உருவாக்குகின்றன என்றும் ஒரு கொள்ளைக்காரனுக்கு இந்த சமூகத்தில் இடம் கிடையாது என்றும் வாதம் செய்யலாம். ஒப்புக்கொள்வோம் ஒரு கேள்வியோடு. குட்டிச்சாமி என்ன மகத்தான காரியம் ஆற்றிவிட்டார்? அவனைவிட வயதில் குறைந்த இரண்டு பெண் குழந்தைகள் கம்பராமாயணத்தையும், திருக்குறளையும் அப்படியே சொல்லுகிறார்களாம். அந்த ஞானக் குழந்தைகளுக்கு கொடுக்கப்படாத ’ர்’ விகுதி மரியாதை, 'வேதங்களை' உச்சரிப்பதால் அவனுக்கு மட்டும் தரப்படுகின்றன. குட்டிச்சாமியை விட சின்ன வயதில் ஒருவர் வாகன நெரிசல் மிகுந்த நகர வீதிகளில் கார் அனாயாசமாக ஓட்டுகிறாராம். அதிசயக்கத்தக்க திறமை இருந்தும் வயது குறைவு என்று அவருக்கு லைசென்சு கொடுக்கப்படவில்லையாம். இந்த சின்னப் பையனுக்கோ மிக எளிதாக 'சாமியார்' லைசென்சு கொடுக்கப்பட்டது.
சதாம் உசேன் ஈராக்கின் அதிபராக இருக்கும் வரை 'அவராக' இருந்தார். அமெரிக்காவால் வீழ்த்தப்பட்டதும் ஒரே நாளில் நமது பத்திரிக்கைகளுக்கு அவனாகிப் போனார். அவர் செய்த காரியம் அமெரிக்காவை எதிர்த்ததுதான். 'பிடிபட்டான்' என்று ஆரவாரத்தோடு தலைப்புச் செய்திகளின் பெரிய எழுத்துக்களில் சின்ன மனிதனாகிப் போனார். சதாம் உசேன் வீழ்ந்ததும், அவரது ஆடம்பர பங்களாக்களை, குளியலறையை, உல்லாசத்தை எல்லாம் பக்கம் பக்கமாக படங்களோடு செய்திகள் போட்டுக் காட்டியது அந்த 'ன்'னுக்குக்கான கருத்தை உருவாக்கத்தான். அவர் செய்த கொலைகள் பற்றி மர்மத் தொடர்கள் போல எழுதியது அதற்கான அர்த்தத்தை உருவாக்கத்தான். முதாலாளித்துவ அமைப்பில், அதன் சர்வாதிகார பலத்தில் இருக்கும் யார்தான் இங்கே மக்களை கொடுமைப்படுத்தாமல் இருக்கிறார்கள். அளவு கூடலாம், குறையலாம். எவ்வளவோ உயிர்ச் சேதங்களுக்கும், பொருட்சேதங்களுக்கும் காரணமாகி ஈராக் என்னும் ஒரு நாட்டையே இப்போது சிதைத்து போட்டிருக்கும் புஷ், அவன் என்று அழைக்கப்படவில்லை. வீரப்பனைவிட ஆயிரமாயிரம் மடங்கு கொடிய மனிதன் அவன்.
இன்னொரு உண்மை மிகக் கொடுமையானது. தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த மனிதர்கள் எவ்வளவு வயதானவர்களாயிருந்தாலும் இன்னும் கிராமங்களில் 'வா', 'போ' என்றுதான் அழைக்கப்படுகின்றனர். அவர்களின் மகனைவிட, மகளைவிட வயது குறைந்தவர்களால் 'அவன்' , 'அவள்' என மிக இயல்பாக குறிப்பிடப்படுகிறார்கள். இந்த 'ன்' விகுதி அவர்களது பிறப்போடு ஒட்டிப் பிறந்ததாக இருக்கிறது. காலம் காலமாக கூனிப்போக வைக்கும் பாரமாக அவர்கள் மீது உட்கார்ந்து கொண்டே இருக்கிறது. முற்போக்கு எழுத்தாளர்கள் சிலர் கூட தங்கள் கதைகளில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவர்களை குறிப்பிடும் போது 'அவன்' என்று ஒருமையில் எழுதியிருப்பதாய் ஒருதடவை பேராசிரியர் மாடசாமி விமர்சனத்தை முன்வைத்திருக்கிறார். அந்த அளவுக்கு அறிவினைத் தாண்டிய ஆழமான செல்வாக்கு இந்த எழுத்துகளுக்குள் இருப்பதாகப் படுகிறது. 'வாழ்க்கை பழக்கத்தின் தடத்தில் ஊறிக் கிடக்கிறது. அதை அறிவின் தளத்திற்கு மாற்ற வேண்டும்' என்று எழுத்தாளர் சுந்தரராமசாமி பொதுவாகச் சொன்னது இந்த விஷயத்திற்கு மிகப் பொருத்தமாக இருக்கிறது.
தாழ்த்தப்பட்ட மக்கள் எந்த மோசமான காரியத்தை செய்ததற்காக இப்படி மரியாதையில்லாமல் அழைக்கப்படுகிறார்கள் என்று கேள்வி எழ மாட்டேன்கிறது. எல்லாவற்றுக்கும் எதாவது ஒரு காரணம் சொல்லும் சமூகம் இதற்கான பதிலை ஆழ்ந்த மௌனத்தோடு மட்டுமே எதிர்கொள்ளும். ஆனால் 'ர்' போட்டு மட்டும் அழைக்காது. அப்படி ஒரு இறுகிய மனம் இருக்கிறது. 'இவர்களுக்கு இந்த சமூகத்தில் நிறைய வாய்ப்புகள் உருவாக்கப்பட்டு வருகின்றன' என்று அங்கலாய்ப்பவர்களிடம் ஒரே ஒரு கேள்விதான் இப்போது. குட்டிச்சாமி இங்கே ஒரே நாளில் 'அவராக' மாறிவிடுகிறான். இந்த மனிதர்கள் ஒருநாளும் அவ'ர்'களாக ஏன் மாற முடியவில்லை?
விநோதமாக இருக்கிறது. அரவமில்லாமல் தமிழின் இந்த விகுதி எழுத்துக்கள் ஒருவரைப் பற்றிய கருத்துக்கள் புனையப்படுவதற்கும், கற்பிக்கப்படுவதற்கும் காரணமாகி விடுகின்றன. அவைகளால் பிம்பங்களை உருவாக்கவும், உடைக்கவும் முடிகிறது. தலையாட்டும் மனிதக் கூட்டம் இந்த எழுத்துக்கள் தரும் அர்த்தங்களுக்குள் செல்லாமல் ஒருவித பிரக்ஞையற்றத் தன்மையோடு மிக எளிதாக ஆட்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த எழுத்துக்களை உச்சரிப்பவர்களாக மட்டுமே மக்கள் இருக்கிறார்கள். உருவாக்குபவர்கள் வேறு யாரோவாக இருக்கிறார்கள். அதை புரிந்து கொள்ள முடியாதபடி, எப்போது உருவானது என்று அறியமுடியாதபடி, சமூகத்தில் 'தானாகவே' உருவாகிறது போன்று ஒரு தோற்றம் அவைகளுக்கு இருக்கிறது. அதன் மூலத்தை புரிந்து கொண்டால் சமூகத்தின் லட்சணங்கள் தெரிய வரும். ஒவ்வொரு சமூகத்தையும் ஒரு கருத்து ஆண்டு வருகிறது. அந்த கருத்து யாரை அங்கீகரிக்கிறதோ அவர்களுக்கு இந்த 'ர்' விகுதியைச் சேர்த்துக் கொள்ளும். வயது, காரியங்கள் என்பதெல்லாம் சும்மா.
இந்தியாவின் தந்தை என்று அழைக்கப்படுகிற மகாத்மாவை பிரிட்டிஷ் பத்திரிக்கைகள் அரையாடை பக்கிரி என்றுதான் அழைத்தன. அது எதற்கு? சுதந்திரத்திற்கு முன்பு பகத்சிங்கை ஆனந்த விகடன் பத்திரிக்கை முழுமூடச் சிகாமணி என்று ஏளனம்தான் செய்திருந்தது. இன்று மகாத்மா உலகமெங்கும் 'அவராகி' விட்டார். பகத்சிங் இந்தியாவிற்குள் 'அவராகி' விட்டார். ஆனால் ஒருபோதும் 'கருப்பசாமி'யும், 'அம்மாசி'யும் 'அவர்களாக'வில்லை. சமூகம் எங்கே மாறிக்கொண்டு இருக்கிறது, எங்கே மாறாமல் இருக்கிறது என்பதற்கான அடையாளம்தான் இந்த 'ன்'னும், 'ர்'ரும்.
இந்த எழுத்துக்கள் எங்கு வந்தாலும் அவைகளை எச்சரிக்கையாகக் கடந்து செல்ல வேண்டும். அங்கே குழிகள் தோண்டி வைக்கப்பட்டு இருக்கின்றன. அவைகளில் குட்டிச்சாத்தானின் வேதங்கள் ஒலித்துக் கொண்டிருக்கின்றன.
படம் பாருங்கள், கருத்து சொல்லுங்கள்!
இந்த ஓவியங்கள் ஒவ்வொன்றும் சில முக்கியச் செய்திகளைச் சொல்கின்றன. சமூகம் குறித்த பிரக்ஞயற்றதாய் கலைகள் ஒருபோதும் இருந்திட முடியாது.
ஓவியர் செழியனின் கைவண்ணங்கள் இவை. எஸ்.வி.வேணுகோபாலன் எனக்கு ஒருமுறை அனுப்பி வைத்திருந்தார்.
இந்த ஓவியங்கள் உங்களிடம் என்ன சொல்கின்றன? சொல்லுங்களேன்!
****
****
****
****
****
****
என்னைக் கவர்ந்த பதிவர் 2
“நேற்று என் பழைய கவிதைப் புத்தகத்திலிருந்து
இரண்டு வரிகளை தூசிதட்டி எடுத்து,
இடம் மாற்றி வைத்தேன்உவமைகளில் சிக்கி, தவித்துக் கொண்டிருந்த
ஒரு கிளியை பறக்கவிட்டேன்
ஏரியை திறந்துவிட்டேன்மேலும் ஒரு வார்த்தைக்கு வண்ணமடித்து
பொலிவு பெறச்செய்தேன்இன்னும் ஒரே ஒரு வார்த்தைதான்
தேவை இருக்கிறதுஉங்கள் இதயத்தை துளைக்கப்போகும்
அந்த ஒரு வார்த்தையை நன்றாக
கூர்தீட்டிக் கொண்டிருக்கிறேன்”
வாசிக்கிறவனை பதம்பார்க்கும் தன் கவிதைப் புத்தகத்தை திறந்தே வைத்திருக்கிறார் இவர். ஆரம்பத்தில் இவரது பதிவுகளுக்கு பின்னூட்டம் இடவந்த முபாரக் “பால்யவயதில் சுட்டமண்ணால் செய்யப்பட்ட குதிரை ஒன்று வெகுகாலம் வைத்திருந்தேன். உங்கள் புனைப்பெயர் எனக்கு மிகவும் சினேகமானதாக தோன்றுகிறது, பல்வேறு நசிவுகளுக்கிடையில் கடந்து வந்து விட்ட மண்குதிரை நினைவும் மனதை அலைக்கழிக்கிறது” என்று சொல்ல இவரும் “என் பெயருக்கான காரணமும் அதுதான். நான் ஒரு களிமண் குதிரை ஒன்றை வைத்திருந்தேன்.” என்கிறார்.
மண்குதிரை! அந்தக் களிமண்ணிலிருந்து எத்தனை குதிரைகள் ஒவ்வொன்றாக வெளிப்பட்டு உயிர்கொண்டு இருக்கின்றன! குளம்படிச் சத்தங்களில்லாமல் பாய்கின்றன சில. முன்னங்கால்களைத் தூக்கிக் கொண்டு திமிருகின்றன சில. அப்படியே சாய்ந்து படுத்து அசைபோடுகின்றன சில. வேட்கையோடு காற்றில் முகம் உரசுகின்றன சில. அடிபட்ட வலியை கண்ணில் தேக்கி அண்ணாந்து உங்கள் முகம் பார்க்கின்றன பல.
வலையுலகில் வருவதற்கு முன்பே தீவீர இலக்கியப் பரிச்சயமும், தொடர்புகளும் இவருக்கு இருந்திருக்க வேண்டும். பகிர்வதற்கு யாருமில்லாமல் எழுதுவதாகக் குறிப்பிட்டாலும், ஏற்கனவே கவிதைகள் எழுதியவராய் இருந்திருக்கிறார். வனம் சிற்றிதழிலில் வந்த கவிதையே அவரது முதல் படைப்பின் பகிர்வாக வலையுலகில் இருக்கிறது. ''Rab ne bana na di jodi '' ஷாருக்கானின் படம் குறித்து விமர்சனம் எழுதியிருக்கிறார். “இந்த படத்திற்கு இசை சலிம் சுலைமான். நான் எஸ்எ ராஜ்குமார் என்று நினைத்தேன்” என சாதாரணமாக எள்ளல் வந்திருக்கிறது. இதைப் படித்து அனுஜன்யா “நீங்க தொடர்ந்து பத்தி எழுதலாமே’ என்று சொன்னாலும், மண்குதிரை அதற்குப் பிறகு இது போன்ற முயற்சிகளில் ஈடுபடவில்லை. கன்னத்தில் முத்தமிட்டால் படம் பார்த்ததை, ‘விடை கொடு தாயே’ பாடலில் பெருமூச்சுவிட்டுக் கேட்டதை பதிவு செய்திருக்கிறார் ஒன்றில். தமிழ்ச்சினிமாவில் பாடல்களை காலங்களில் எடுத்து வந்து அடுக்கிப் பார்த்திருக்கிறார் இன்னொன்றில். அவ்வளவுதான். தன்னுடைய முதல் பதிவில் எதைப்பற்றி எழுதுவது என நம்மிடம் கேட்டிருந்தாலும், எதை எழுதுவது என்பதில் தெளிவாகாவே இருந்திருக்கிறார். கவிதைகளை எழுதி இருக்கிறார். கவிதைகளைப் பற்றி எழுதி இருக்கிறார். கவிஞர்களைப் பற்றி எழுதி இருக்கிறார். நமக்குத் தொழில் கவிதை என தன்னை அடக்கிக் கொண்டு விட்டவர்.
கோவில்பட்டியோ, அதன் அருகிலோ இவரது மண் இருக்கிறது என நினைக்கிறேன்.அயல்தேசத்தில் இருந்து வாஞ்சையோடு நம் கரங்களைத் தொடுவதை கவிதைகளின் மூலம் உணர முடிகிறது. வெள்ளிக்கிழமைக் கவிதையில் இப்படிச் சொல்லி முடிக்கிறார். நம் இதயங்கள் துளைக்கப்படுகின்றன.
அதே வெள்ளிக் கிழமையில்தான்
கதறும் குழந்தையின் அழுகையை
பொருட்படுத்தாது
மூர்க்கமாய் விரையும்
ஒரு எக்ஸ்பிரஸ் ரயிலில்
நானும் பிரிகிறேன்
ஜ்யோவ்ராம் சுந்தரும், அனுஜன்யாவும் ஆரம்பத்திலிருந்தே இவரது கவிதைகளை வாசித்து, இனம் கண்டு, பின்னூட்டம் இட்டு உற்சாகப்படுத்தி இருக்கிறார்கள். அவர்களுக்கு என் பாராட்டுக்கள். வடகரைவேலன் அவர்கள் இவரைப் பற்றி ஒரு பதிவு எழுதியதாக பின்னூட்டங்கள் மூலம் தெரிகிறது. அது தேவை ஒரு படைப்பாளிக்கு. எதோ ஜாலியான பேர்வழி என நினைத்து வந்து, கவிதைகளைப் படித்து ஆச்சரியம் அடைகிறார் கார்க்கி. இப்போது சேரல், யாத்ரா, வெங்கிராஜா, முத்துவேல், நந்தா, அகநாழிகை, நேசமித்ரன், பிரவின்ஸ்கா, பா.ராஜாராம், ராகவன் என பெரும் கவிஞர் மக்களெல்லாம் இவரது தொடர்ந்த வாசகர்களாகி இருப்பதைப் பார்த்து சந்தோஷமாயிருக்கிறது. பிறகு வந்த தமிழ்நதி அவர்கள் “உங்கள் கவிதைகளை இதுநாள்வரை தவறவிட்டுவிட்டேன்’ என்று வருத்தப்பட்டு இருக்கிறார்கள். எனக்கும் அதே கதிதான். அவ்வப்போது ஒன்றிரண்டு படித்திருந்தாலும் தொடர்ந்து படிப்பது சமீப மூன்று மாதங்களாய்த்தான் இருக்கும். இப்போது அவரது அனைத்துப் பதிவுகளையும் படித்து விட்டேன்
சில வார்த்தைகள் சிலரை விடவே விடாது. அவர்களுக்கான அடையாளங்களாகவும், அர்த்தங்களாகவும் படிந்து விடும். மண்குதிரையின் வார்த்தை செல்லம். இந்த வார்த்தை இவரது கவிதைகளோடு கூடவே வந்து கொண்டு இருக்கிறது. செல்ல மகள் என்று மூன்று முறை சொல்லியிருந்தால் செல்ல நாய்க்குட்டி என்று நான்குமுறை சொல்கிறார். வெயிலையும், மழையையும் மாய்ந்து மாய்ந்து கவிதைகளாக எழுதி ‘வெயிலும் மழையும்’ என்று சேர்ந்தும் எழுதியிருக்கிறார் ஒரு கவிதை. எவ்வளவு அழகாக, எளிமையாக இவரால் பார்க்க முடிகிறது!
என் செல்ல மகள்
நடை பயில்வதைப் போல்
தத்தி தத்தி வருகின்றது
மழைக்காலத்தின் முதல் மழை
கையில் எடுத்து கொஞ்சிக்கொண்டிருக்கிறேன்
சின்னதாக முகம் மாற்றும்
என் மூத்த மகள் போல்
வந்து தொற்றிக்கொள்கிறது
இந்த வெயிலும்.
என்று எழுதும் இவர் மேல்மாந்தை என்னும் கரிசல் காட்டு கிராமம் என்னும் கவிதையில்,
அம்புட்டு வெயிலையும் மழையையும் முட்டுக் கொடுத்துட்டிருக்கிற
எங்க கரிசக்காட்டு ஒட மரமா
நிக்கிறா
எங்க ஆச்சி
என்று சொல்வதில் எத்தகைய வாழ்வு இருக்கிறது இவருக்குள். எங்கிருந்தாலும் பிடுங்கிவிட முடியாத வேர் கொண்டு ஊரின் நினைவுகள் நிற்கின்றன. வாழ்வென்னும் பெருவெளியில் இந்தக் கவிஞன் எங்கிருந்து எங்கு அலைந்து கொண்டு இருக்கிறான்!
அதுதானோ என்னவோ? சாலையைக் கடப்பது என்னும் பதமும், பிரயோகமும் இவரது பல கவிதைகளில் வருகிறது. விபத்துக்கள் வருகின்றன. ரயில் பயணங்கள் வருகின்றன. மெல்லிய காதல் வருகிறது. கரிசல் மண்ணின் மணம் குழைந்த சொற்களில் ஊறித் திளைத்த மனம் நகரத்தின் காட்சிகளை இமைகொட்டாமல் பார்க்கிறது. வீட்டிலிருக்கும் சித்திரத்திலிருந்து ஒவ்வொன்றாக காட்சிகள் பிறக்கின்றன. வான்கோ ஓவியத்திலிருந்து விரியும் அகிரா குரோசேவாவின் படம் என் நினைவுக்கு வந்தது. வாட்டும் தனிமையை பரிபூரணமாக இரவின் விருந்தாளியில் பார்க்க முடிகிறது. சிதைவுகளையும், அதிலிருக்கும் வேதனைகளையும் சொல்லாமல் முடிவதில்லை இவருக்கு. கடற்கரைச்சாலை, வேலை தேடுபவனின் நாட்குறிப்புகள், நதியில் நனைதல், ஒரு பசுங்காடு என பல கவிதைகள் அப்படிப்பட்டவை.
இருந்தாலும், தன்னைக் கடந்து நகரும் உலகில் பார்வையாளராகவே இருக்கிறார் மண்குதிரை. கேள்விகளைத் கேட்கவும் பிடிக்கவில்லை. கேள்விகளை எதிர்கொள்ளவும் பிடிக்கவில்ல. தப்பித்துக்கொள்ள அல்லது விடுபட சிறு குருவியோ, குழந்தையோ, ஒருதுளி மழையோ போதும் என்கிறவராக இருக்கிறார். அது அவரது சுபாவம் அல்லது தத்துவம். பைத்தியக்காரன் என்றழைக்கப்படுபவனின் கவிதையில் இப்படிச் சொல்கிறார்.
உங்களுடைய சொற்கள்
காற்றில் நீந்திக்கொண்டிருக்கின்றன
என்னுடைய சொற்கள்
சருகாக மிதக்கின்றன
கவிதைகளைத் தாண்டி கவிஞர்கள் நாட்டுப்பூக்கள் சுயம்புலிங்கம், உதயசங்கர், கலாப்பிரியா, என்.டி.ராஜ்குமார் பற்றி எழுதி இருக்கிறார். சுகந்தி சுப்பிரமணியத்துக்கும் அஞ்சலி செலுத்துகிறார். அப்போது. அவரை அம்மாவென்றே சொல்ல முடியும் என்கிறார். நெகிழ்ச்சி மிக்க தருணங்களில் அம்மாவின் நினைவு வருவதை மண்குதிரையிடம் பார்க்க முடிகிறது.
ஒருசிலவற்றைத் தவிர, கவிதைகள் நேரடியாகவும், எளிமையாகவும் இருக்கின்றன. பெரும்பாலும் அனுபவம் சார்ந்தவைகளாக இருப்பதால் எளிதில் புரிகின்றன. ஆனால், நம்மை அழைத்துக்கொண்டு வேறு வெளிகளுக்கும் செல்கின்றன. நிறைய சொல்லிக்கொண்டே போகலாம். இந்தப் பதிவு போதாது. நீங்களும் படித்துப் பாருங்கள்.
வேலை தேடுபவனின் நாட்குறிப்புகள், மொரீசியசின் புயல் அபாய எச்சரிக்கை, கடற்கரைச்சாலை, சினிமாப்படப் பிசாசு, மனிதர்கள் கூடுகிறார்கள், உதிரும் மலர்கள், சென்னை நகரில் ஒரு இரவுப் பொழுதில், ஓவியம், இமையுடைய வானம் பார்த்துக்கொண்டு இருக்கிறது, டேபிள் ரோஜாப்பூக்கள், பெத்தனாச்சி, மேல்மாந்தை என்னும் கரிசக் காட்டு கிராமம், தரிசனங்கள், மண்மணக்கும் அவியும் நெல் மணந்த அற்புதப் பொழுது, வடக்கே கனமழை பெய்கிறது, நதியில் நனைதல், அகத்திணை, தலைப்பிடாக் கவிதை, ஒரு பசுங்காடு, ரயில் பயணம், குறியீட்டு விலங்கு, பழைய புத்தகத்திலிருந்து ஒரு கவிதை, ஒரு இரவு விருந்தாளி
இவைகள் என்னைக் கவர்ந்த பதிவுகள் (விடுபட்டும் இருக்கலாம்). இவை உங்களுக்கு பிடிக்கலாம். பிடிக்காமலும் போகலாம். இது தவிர அவரது வேறு கவிதைகள் உங்களுக்கு, பிடிக்கவும் செய்யலாம். எது எப்படி இருந்தாலும் அவரையும், அவரது கவிதைகளையும் நீங்கள் தொடர்ந்து முழுமையாக படிப்பது அவசியமென்பேன். நமக்குள் எங்கோ இருந்து, எதாவது சில கணங்களில் வெளிப்பட்டுக் கொண்டு இருப்பவர்தான் மண்குதிரை.
மண்குதிரைக்கு உங்கள் அனைவரின் சார்பில் வாழ்த்துக்களும், பாராட்டுக்களும். இப்போது அவரது இந்த ஒரு கவிதையோடு-
என்னால் எதுவும் இயலாது
என்று அவர்கள் கூறுவதனால்தான்
கைமாறிப்போன சொந்த நிலத்தை
மீட்க முடியதனால்தான்
இரண்டுவருடமாக அடைகாத்த காதல்
ஒரு நொடியில் உடைந்து போனதால்தான்
எல்லா இடங்களிலும் தொடர்ந்து
நிராகரிக்கப்பட்டு கொண்டேயிருப்பதனால்தான்
நானும்
இந்தக் கவிதையை எழுதுகிறேன்
மாதவராஜ் பக்கங்கள் 14
பசங்க படத்தின் இயக்குனரின் பேட்டியை செம்மலரில் படித்தேன். புதுக்கோட்டை மாவட்டத்தின், விராச்சிலை ஊரில் சாதாரண விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த அந்த மனிதர், இன்று ஒரு இயக்குனராகி இருக்கிறார். மகேந்திரன், பாரதிராஜா போன்றோரின் பாதிப்பில் சினிமா தாக்கம் பெற்று, பாக்யா பத்திரிகையில் பணிசெய்து, சின்னச் சின்ன கவிதைகள் எழுதி பாக்கியாராஜின் கவனம் பெற்று, சேரன் மற்றும் தங்கர் பச்சான் அவர்களிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து ஒரு வாய்ப்புக்காக காத்துக் கிடந்த அவரது வாழ்வின் நாட்களை அறிய முடிந்தது.
மணிரத்தினத்தின் அஞ்சலியும், ஈரானிய இயக்குனர் மஜித்மஜிதின் children of heavenம், color of paradiseம் பசங்க படம் எடுப்பதற்கான தாக்கங்களாய் இருந்தன என்கிறார். அப்போது ஈரானில் குழந்தைகளை மையப்படுத்தி அற்புதமான படங்கள் வருகிறதேயென்று அவரிடம் ஒரு கேள்வி கேட்கப்படுகிறது. “ஈரானில் குறிப்பிட்ட வயது தாண்டிய பெண்களை வைத்து படம் எடுக்க முடியாது. காதல் கதைகளும் சொல்ல முடியாது. அதனால் பெரும்பாலான படங்கள் குழந்தைகளையும், பெரியவர்களையும் சுற்றியே எடுக்கப்படுகிறது.” என்று பதில் சொல்லியிருக்கிறார்.
இது உண்மைதானா? விபரமறிந்தவர்கள் இதுபற்றி கருத்துக் கூறுங்களேன்.
‘அதென்ன அறுபத்தொன்று’ என்று ஒரு நாட்டுப்புறக் கதையை பதிவாக சொல்லியிருந்தேன். சாத்தூர் அருகே கீழ ஓட்டம்பட்டியைச் சேர்ந்த சிவிலியன் என்னும் சிறுவன் பத்து வருடங்களுக்கு முன்பு சொன்ன கதை அது. அதில் வரும் கதாநாயகியை ராக்காச்சி என்னும் சுடுகாட்டுக்காரி விரட்டுவாள். இவள் வந்து கதவைப் பூட்டிக் கொள்வாள். ஆத்திரத்தில் ராக்காச்சி தனது விஷப்ல்லை வீட்டின் வாசலில் புதைத்து வைத்து விடுவாள். பிறகு கதவைத் திறக்கும்போது கதாநாயகியான பெண் அந்த விஷப்பல்லை மிதித்து விடுவாள். மயங்கிவிடுவாள்.
நேற்று லட்சத்தீவின் ராக்கதைகள் என்னும் சிறுவர்களுக்கான கதைபுத்தகம் படித்தேன். அரபிக்கடலில் சிதறிக் கிடக்கும் லட்சத்தீவுகளின் நாடோடிக் கதைகளை மலையாள எழுத்தாளர் முல்லக்கோயா தொகுத்திருக்கும் புத்தகத்தின் மொழிபெயர்ப்பு அது. தமிழுக்குக் கொண்டு வந்திருப்பவர்கள் எழுத்தாளர் உதயசங்கரும், பாரதி புத்தகாலயமும். அதில் ’கொக்காத்திக் கிழவி’ என்னும் கதையைப் படித்தேன். அதிலும் சூன்யக்காரிக் கிழவிக்குப் பயந்து ஒரு பெண் வீட்டின் கதவுகளைப் பூட்டிக் கொள்கிறாள். கொக்காத்திக்கிழவி என்னும் சூன்யக்காரி தனது விஷ நகத்தை வாசலில் பதித்துவிட்டுச் செல்கிறாள். பிறகு கதவைத் திறக்கும் பெண் அதை மிதித்து மயங்கி விழுகிறாள்.
வாசலில் விஷத்தை புதைத்து வைத்துப் போவதாக இருக்கும் வழக்கத்தை தமிழ்நாட்டில் ஒரு சிறுவனும், லட்சத்தீவில் உள்ள நாடோடிக்கதைகளும் ஒன்று போல் சொல்வது ஆச்சரியமாக இருக்கிறதல்லவா!
இதற்கு என்ன காரணம் இருக்கும். தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்.
இது ஒன்றும் பெரிய விஷயமில்லைதான். இருந்தாலும் உங்களுடன் பகிர்ந்து கொள்ளத் தோன்றியது. சிகரெட் பிடிப்பதை விட்டு விட்டேன். இன்றோடு 17 நாட்களாகி விட்டன. 1981லிருந்து 28 வருடப்பழக்கம். இதற்கு முன்பும் ஓரிரு முறை நிறுத்திப் பார்த்திருக்கிறேன். இரண்டு மூன்று நாட்களில், ’சரி ஒன்றே ஒன்று’ என்று ஆரம்பித்து, வழக்கம் போல் தொடர்ந்து விடும். இந்தமுறை அப்படி இருக்கப் போவதில்லை. இப்போது சிகரெட் அடிக்க வேண்டும் என்கிற அந்த துடிப்புச் சுத்தமாய் அடங்கிவிட்டது. இதற்கு முக்கிய காரணம் பல இருந்தாலும் இருவரைச் சொல்ல வேண்டும். ஒன்று எனது இரண்டாவது அண்ணன். அவனும் சிகரெட் பிடித்துக் கொண்டு இருந்தவன். இப்போது விட்டுவிட்டான். ‘அது ஒன்றும் கஷ்டமில்லை’ எனச் சாதாரணமாகச் சொன்னான். அடுத்து மிக முக்கியக் காரணம் அம்மு. “நிறுத்தணும்னா நிறுத்திருவீங்க. உங்களால முடியுமுங்க..” இப்படியே சொல்லிக்கொண்டு இருப்பாள். எரிச்சலடையாமல் அருகில் இருப்பவர்கள் கொடுக்கிற உற்சாகமும் தைரியமும் முக்கியமானவை இதுபோன்ற பழக்கமுள்ளவர்களுக்கு.
என்னைக் கவர்ந்த பதிவர்கள் என்று ஏற்கனவே அமிர்தவர்ஷிணி அம்மாவைப் பற்றி எழுதியிருந்தேன். நாளை அடுத்தவர்..!
புரியாத எழுத்துக்கள், பின்னூட்டங்கள் மற்றும் மௌனங்கள்
சில கவிதைகளைப் படித்தவுடன் நமக்கு புரியாது. திரும்பத் திரும்ப படிக்க வேண்டியதிருக்கும். பின்னூட்டங்களைப் பார்த்தால் ‘ஆஹோ’, ‘ஓஹோ’, ‘அருமை’ என்று குவிந்து கிடக்கும். நமக்கு மட்டும்தான் புரியவில்லையா, அல்லது புரியாமலேயே கும்மி அடிக்கிறார்களா என சந்தேகம் வந்துவிடும். கவிதை மட்டுமில்லை, கதைகள், கட்டுரைகளும் கூட இப்படியான சிரமங்களைத் தரக்கூடும். எளிதில் புரிகிற மாதிரி எழுத வேண்டியதுதானே, ஏன் இத்தனை கஷ்டப்படுத்த வேண்டும் என்று எரிச்சலும் வரும்.
இது எல்லோருக்கும் நிகழும். கோணங்கியின் மதினிமார்கள் கதை, கொல்லனின் ஆறு பெண்மக்கள், கைத்தடி கேட்ட நூறு கேள்விகளைத் தவிர அவருடைய மற்ற எழுத்துக்களோடு முட்டி மோதிப் பார்த்து இருக்கிறேன். பிம்பங்களும், நிழலுருவங்களுமாய் காட்சிகள் தோன்றி கரைந்து விடும். பிடிபடாது. சலித்தும் இருக்கிறேன். எஸ்.ராமகிருஷ்ணன் கைப்பிரதியில் எழுதிக்கொண்டு வந்த ‘கபாடபுரம்’ என்னும் அவரது முதல் சிறுகதைப் படித்து தலைசுற்றிப் போயிருக்கிறேன். இப்படி பல எழுத்துக்கள் மாயத்தன்மையோடு வாசிக்கிறவனோடு விளையாடுகின்றன.
இதனால் எல்லாம் கதை சொல்லுகிறவனிடம் எரிச்சலடையத் தேவையில்லை என்பதில் உறுதியாகவே இருந்து வந்திருக்கிறேன். புரியாதவற்றை, புரியவில்லை எனச் சொல்வதையோ அல்லது புரியும் வரை மௌனமாய் இருப்பதையோ பழக்கமாய் வைத்திருக்கிறேன். அதனால் ஒன்றும் நாம் குறைந்துவிடப் போவதில்லை. திடுமென ஒரு சிறு பொறியில் மொத்தக் கதையும், கவிதையும் எதோ ஒரு தருணத்தில் புரிந்து விடும். அதுவரைக் காத்திருப்பதில், அடைகாப்பதில் தவறில்லை.
இந்த பிடிபடாத தன்மை குறித்து விவாதங்களும், வாசக அனுபவங்களும் எழுத்தாளர்களின் விளக்கங்களும் பெரிய அளவில் வந்திருக்கிறதாவெனத் தெரியவில்லை. ஆனால் எழுத்தாளர் ஜி.நாகராஜன் அவருக்கே உரிய நடையில் அழுத்தமாகச் சொல்கிறார்.
“சிறந்த எழுத்தாளர்களில் எளிதில் புரிந்து கொள்ளக் கூடிய முறையில் எழுதுபவர்களும் இருக்கின்றனர். படிப்பதற்கு கஷ்டமாக இருக்கும் வகையில் எழுதுபவர்களும் இருக்கின்றனர். எளிதில் புரிவது என்பது ஒரு கலைப்பண்பாக சிலருக்குத் தோன்றலாம். ஆனால் இத்தகைய எளிமை, இன்றியமையாத கலைப்பண்பு என்று சொல்ல முடியாது. எந்த எழுத்து படிக்கும்போது, அது புரிந்து கொள்வதற்குக் கடினமாக இருந்தாலும், இவ்வெழுத்து எனக்குச் சரியாக விளங்கவில்லை என்றாலும், இதில் விலையுயர்ந்த எதோ ஒன்று இருப்பதாகவே எனக்குப் படுகிறது. இதைத் தொடர்ந்து படிக்க வேண்டாம் என்றோ அல்லது படித்த பகுதியையே மீண்டும் மீண்டும் படித்துப் பார்க்க வேண்டாம் என்றோ எனக்குத் தோன்றவில்லை. ‘எப்படியாவது இதனுள் பொதிந்து கிடப்பதை புரிந்துகொள்ள வேண்டுமே’ என்ற ஆர்வத்தையும் உறுதியையும் ஏற்படுத்துகிறதோ அவ்வெழுத்தை இலகுவில் புறக்கணித்துவிட முடியாது.
சில எழுத்தாளர்களைப் படிப்பது ஆரம்பத்தில் எவ்வளவு கடினமாக இருந்தாலும், அவர்கள் பிரபலமானவர்களாக இருந்தால், இப்பொறுமைக் குணம் நமக்கு இயல்பாக வந்துவிடுகிறது. புதிய எழுத்தாளர்களைப் படிக்கும்போதுதான் சில சந்தேகங்கள் வந்துவிடுகின்றன. ‘உண்மையிலேயே ஆழமான எதாவது ஒன்றைப் பற்றித்தான் இவ்வெழுத்தாளர் பேசுகிறாரா? அல்லது அவ்வாறு பேசுவதாக நினைத்துக் கொள்கிறாரா? அல்லது வேஷந்தான் போடுகிறாரா? கொஞ்சம் மண்டையை உடைத்துக்கொண்டு இவர் சொல்வதைப் புரிந்துகொண்டாலும், கிடைக்கிற நிறைவுணர்ச்சி, பட்ட தொல்லைக்கு ஈடாக இருக்கப் போகிறதா? என்பன போன்ற சந்தேகங்கள் இயற்கை. இருந்தாலும், எந்த எழுத்தாளனைப் படிக்கும்போதும், அவ்வெழுத்தாளனிடத்துக் குறைந்த பட்ச அனுதாபமும், மரியாதையும், பொறுமைக் குணமும் கொண்டிருத்தல் அவசியம். இது ஒவ்வொரு எழுத்தாளனுக்கும் நாம் ஆற்ற வேண்டிய பூர்வாங்கக் கடமை.
இதனால் வாசகன் தனது விமர்சன நோக்கைத் தூக்கி எறிந்துவிட வேண்டும் என்று பொருளாகாது. எழுத்தாளனின் பாணி நம்முள் அழுந்திப்படியும் வரை வாசகன் தன் விமர்சன நோக்கை அரைத் தூக்கத்தில் கிடத்த வேண்டும் என்றுதான் பொருளாகும். அப்போதுதான் பிறகு வரும், வாசகனது விமர்சனம் மொண்ணையாக இல்லாமல் கூரிய விவரங்களைக் கொண்டதாயிருக்கும்.”
பி.கு: இதுகுறித்து ஆரோக்கியமான மனம் திறந்த விவாதங்களை எதிர்பார்க்கிறேன்.
பதிவர்கள், விவாதங்கள் மற்றும் விரும்பத்தகாத நிகழ்வுகள்
பதிவுலகில் கால் பதித்து சரியாக 13 மாதங்கள் ஆகின்றன. மீண்டும் வாசிக்கவும், எழுதவும் வைத்த இந்த வெளியை மிகவும் நேசிக்கிறேன். இங்குள்ள மனிதர்களை, அவர்களது ஆற்றலை, சிந்தனைகளை போற்றுகிறேன். வியக்கிறேன். சில விரும்பத்தகாத நிகழ்வுகள் இவையனைத்தின் மீதும் கரியைப் பூசி விடுவதைப் பார்த்து ஏமாற்றம் கொள்கிறேன். வருத்தமும், சங்கடமும் சூழ்கின்றன. தோன்றிய சில விஷயங்களை இந்த நேரத்தில் சொல்ல வேண்டும் போல இருக்கிறது.
என்னிலிருந்து இதை துவக்குவதே இந்த நேரத்தில் சரியானதாய் இருக்கும் எனத் தோன்றுகிறது. ஆனால் என்னோடு சம்பந்தப்பட்டது மட்டுமல்ல என்பதையும் முதலிலேயே தெரிவித்துக் கொள்கிறேன்.
என்னைப் பற்றி நண்பர் ஒருவர் நேற்று பதிவு எழுதி இருக்கிறார். அந்தப் பதிவுக்கு என்னால் வரிக்கு வரி அல்ல, எழுத்துக்கு எழுத்து (பழிக்குப் பழி, இரத்தத்துக்கு இரத்தம்?) பதில் சொல்ல முடியும். அவரைப் போல தந்திரங்களைக் கையாள முடியும்தான். பதிலும் எழுதுவதில்லை, பதிவும் போடுவதில்லை என முடிவெடுத்து விட்டேன். தனியாக அது குறித்து பிறிதொரு சமயம், அந்தப் பதிவை refer செய்யாமல் எழுத நேரிடலாம்). அப்படி முடிவெடுத்ததுக்கு ஒரு காரணம் உண்டு. கருத்துக்குப் பதிலாக அந்த நண்பர் என்னை முன்னிலைப் படுத்தியதுதான் அது. என் கருத்தின் மீது மட்டும் கோபம் இல்லை. என் கருத்தின் மீது மட்டும் முரண்பாடு இல்லை. என்னோடும் சேர்த்து அந்த நண்பருக்கு எல்லாம் இருப்பதை அறிய முடிந்தது. நான் பதில் சொல்ல நேர்ந்தால் விவாதம், தனிப்பட்ட விரோதங்களையே உருவாக்கும். எனவே இப்போது அமைதியாய் இருக்க முடிவு செய்துவிட்டேன். அதனால் அந்த நண்பர் சொன்னது எல்லாம் உண்மையாகிவிடுமா என்ன?
பதிவர்களுக்கு நான் சொல்ல வந்தது இதுதான். கருத்துக்களோடு எந்த சமரசமுமில்லாமல் கடுமையாக விவாதங்கள் அமைந்திடலாம். எந்த இடத்திலும், அந்தக் கருத்துக்களுக்குரியவர் மீதான விமர்சனமாக மாறிவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும். சமீபத்தில் வலையுலகில் நான் பார்த்து, படித்து அறிந்த பல மோதல்கள், விரும்பத்தகாத நிகழ்வுகளின் பின்னணியாக இந்தத் தனிநபர் மீதான கருத்துக்களே/தாக்குதல்களே இருக்கின்றன.
எல்லோருக்கும் ஒத்த கருத்துக்கள் இருக்க முடியாது. அவரவர்கள் வாழ்ந்த வாழ்க்கை, இருக்கும் சூழல், கற்றுத் தெளிந்த அல்லது தெளியாத அறிவு, அனுபவம் சார்ந்த புரிதல், இயக்கம் சார்ந்த அணுகுமுறை, தொனி என எல்லாம் சேர்ந்து ஒருவரது கருத்துக்களை உருவாக்குகின்றன. எனவே ஒருவரது கருத்துக்களோடு முரண்பாடுகளும், வேற்றுமைகளும் இன்னொருவருக்கு இருக்கத்தான் செய்யும். அது இயல்பு. எனவே இப்படியான மாற்றுக் கருத்துக்களுக்கு உரிய மரியாதையை கொடுத்துத்தான் ஆக வேண்டும். அடுத்தது, அதனை எதிர்கொள்வதில் அதிகபட்ச நாகரீகத்தை யாரொருவரும் கடைப்பிடித்தே ஆக வேண்டும். பக்குவமும், நிதானமுமே பிரதானமானது.
முகம் சுளிக்கும் கொச்சையான வார்த்தைகளும், அர்த்தங்களும் என்ன திருப்திக்கு கையாளப்படுகின்றன என்று தெரியவில்லை. வார்த்தைகள் அசிங்கமானவை. அழகானவை. ஆபத்தானவை. முக்கியமாக உங்கள் மனது போன்றவை. மறைக்கவும் செய்யும். காட்டிக் கொடுக்கவும் செய்யும். இன்று நம்மிடம் ஆயுதமாக இருக்கும். நீங்கள் பிரயோகித்த பிறகு, நாளை எதிரியிடமிருந்து நம்மைக் குறிபார்த்துக் கொண்டும் இருக்கும். மிகுந்த நேர்மையோடும், உண்மையோடும் கையாண்டாக வேண்டும். இல்லையென்றால் வார்த்தைகள் சர்வநாசம் செய்துவிடக் கூடியன.
ஆட்டத்தில் இருப்பவர்களுக்கு தன்னை மறந்த வேகமும், கோபமும் கூட வரக்கூடும். அருகில் இருந்து ஆட்டத்தைப் பார்த்துக்கொண்டு இருக்கும் நண்பர்கள் எந்த இடத்தில் தவறு நிகழ்ந்தது என்பதை நிச்சயம் அறிவார்கள். அதை எந்தச் சார்பும் இல்லாமல் சொல்லும் உறுதி வேண்டும். சுட்டிக்காட்டுவதில் தயக்கமே இருக்கக் கூடாது. சுற்றி நின்று, கச்சை கட்டிக்கொண்டு கும்மியடிப்பது வீண் சண்டைகளையே உருவாக்கும்.
இங்கு யாரை யார் வெற்றி கொள்ளப் போகிறோம். யாரிடம் யார் தோற்கப் போகிறோம். எதுவுமில்லை. நம் கருத்தை பதிவு செய்கிறோம். அதிலிருந்து மேலும் சில புரிதல்கள், மேலும் சில விளக்கங்கள், மேலும் சில தெளிவுகள் நமக்கோ பிறகுக்கோ கிடைத்தால் அது வெற்றி. எல்லோருக்கும் வெற்றி. அதற்காக சிந்திப்பது, உழைப்பது ஆரோக்கியமானது.
இங்கு யாரும், எதற்கும் அத்தாரிட்டி கிடையாது. நான் சொல்வதுதான் சரி என்பதற்கு யாருக்கும் அதிகாரம் கிடையாது. அதை நிலைநாட்ட முயற்சிகள் செய்தால் அதைவிட ஆணவம் வேறெதுவும் கிடையாது. கருத்துக்கள் சுதந்திரமானவையாக இருக்கும் வரை அவை பறந்துகொண்டே இருக்கும். உயர உயரப் பறந்துகொண்டே இருக்கும். வலையுலகம் அப்படியான வானம் போல இருக்க வேண்டும் என்பதே என் ஆசை. வேண்டுகோள்.
பி.கு: 1) தனிநபர்களைக் குறிப்பிடாமல் வலையுலகம் குறித்த அக்கறையுடன் எழுதப்படும் பின்னூட்டங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும். அனானிகளுக்கு நிச்சயம் அனுமதி கிடையாது. நமக்கு நாமே பொது நெறிகளை, நியதிகளை உருவாக்கிக் கொள்ளும் ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன.
பூக்களிலிருந்து சில புத்தகங்கள்
வலையுலகத்தின் நல்ல எழுத்துக்களை புத்தகங்களாக்கும் முயற்சி பற்றி ஏற்கனவே நண்பர்களுக்கு தெரியப்படுத்தி இருந்தேன்.
தாங்கள் எழுதிய, ரசித்த பதிவுகளைச் சுட்டிக்காட்டி எனது இ-மெயிலுக்கு (jothi.mraj@gmail.com) அனுப்பிவைக்குமாறு வேண்டி இருந்தேன்.
பல நண்பர்கள் அனுப்பி வைத்துக் கொண்டு இருக்கிறார்கள். அக்டோபர் 31ம் தேதிக்குள் சேகரிக்கும் பணியை முடித்துவிட்டால், நவம்பர் மாதம் முழுக்க தொகுக்கும் பணிக்கு ஒதுக்கி விடலாம்.
டிசம்பரில் அச்சு வேலைகளை முடித்து, 2010 ஜனவரியில் சென்னை புத்தகக் கண்காட்சிக்கு கொண்டு வந்து விடலாம் என எழுத்தாளர் பவா.செல்லத்துரை (வம்சி பதிப்பகம்) உறுதியளித்திருக்கிறார்.
இன்னும் ஒரு வாரமே இருக்கிறது.
நண்பர்கள் ஒத்துழைக்க வேண்டுகிறேன்.
நினைவூட்டலுக்காக இந்தப் பதிவு.
சுடச்சுட
(இது எம்.ஆர்.ராதாவுக்கும் எம்.ஜி.ஆருக்கும் நடந்த சண்டையைப் பற்றியது)
சுட்டான்
சுட்டான்
சுட்டான்
சுடவில்லை
சுடவில்லை
சுடவில்லை
சுட்டான்
சுடவில்லை
சுட்டான்
சுடவில்லை
சுட்டான்
சுடவில்லை
சுட்டான்
சுட்டேன்
சுட்டான்
சுட்டேன்
சுட்டான்
சுட்டேன்
சுட்டான்
சுட்டான்
சுட்டான்
சுட்டேன்
சுட்டேன்
சுட்டேன்
தொங்கும் குழந்தைகள்
இளநீலச் சட்டையும், கருநீல கால்ச்சட்டையோ அல்லது பாவாடையோ அணிந்த குழந்தைகளைக் கூட்டி வந்து பள்ளியில் விடும் பெற்றவர்கள் ஒரு கணம் நின்று அவர்கள் உள்ளே போவதை பார்த்துச் சென்றார்கள்.
சிரிப்பதும், அழுவதும், சமாதானமாவதும், பயப்படுவதும், புரியாமல் விழிப்பதும், துரத்துவதும், ஓடுவதுமாக குழந்தைகள் அங்கே வாழ்ந்தனர்.
பகலெல்லாம் குருத்துக் குரல்களின் அலையடித்துக் கிடந்தது பிள்ளையார் கோவில் தெரு.
சாயங்காலங்களுக்கு சிறகு முளைத்திருந்தன.
ஆளரவமற்ற இரவிலும் பள்ளியருகே குழந்தைகளின் கதகதப்பும், மூச்சுக்காற்றும் மிதந்தபடி இருந்தன.
கடப்பாறைகளோடும், சம்மட்டிகளோடும் பள்ளி ஒருநாள் இடிக்கப்பட்டது. தெரு முழுக்க புழுதி.
“மெயின்ரோடு பக்கமாய் இருப்பதால் இங்கே ஜவுளிக்கடை வருகிறதாம்”
“அவர்தான் இடத்தை வாங்கியிருக்கிறாராம்”
“ஊர் கோடியில் ஆற்றங்கரையருகே பள்ளி சென்று விட்டதாம்”
பிள்ளையார் கோவில் தெரு களையிழந்து போனது.
இடிக்கப்படாமல் இருந்த பள்ளியின் ஒரு சுவற்றில் ‘அம்மா’, ‘அப்பா’ என்னும் எழுத்துக்கள் மட்டும் சிலநாட்கள் இருந்து பார்த்தன.
ஒரே வருடத்தில் அங்கு ஜவுளிக்கடல் உருவானது.
வாசலுக்கு வெளியே குழந்தைகளின் ஆடைகள் வரிசையாய் தொங்கின.
அவை குழந்தைகள் போலவே இருந்தன.
*
எனக்கும் உங்களுக்கும் தெரிந்தவன்
ஆசை மனைவியோடும், அருமைக் குழந்தையோடும் காணாமல் போய்விட்டான்.
பிறந்ததில் இருந்து ஊரைப் பிரியாதவனுக்கு வயது முப்பத்தாறு.
ஐ.டி.ஐ முடித்து வயரிங் வேலை பார்த்தான்.
திருச்செந்தூர் கோவிலில் ஓவியங்கள் வரைந்தான்.
வெல்டிங் கம்பெனி வைத்து பீரோக்கள் செய்தான்.
இசைக் கச்சேரிகளில் தபேலா வாசித்தான்.
கடைசியாய் சக்திவிலாஸில் புரோட்டா அடித்தான்.
யாரும், எதுவும் காப்பாற்றவில்லை.
“அப்பா, எனக்கு ஒரு சைக்கிள் வேணும்” மூன்றாம் வகுப்பு படிக்கும் மகள் கடைசி நாளில் அழுது கொண்டு இருந்ததாய் பக்கத்து வீட்டில் சொன்னார்கள்.
“பணத்தை வாங்கிட்டு திருப்பித் தராம ஒடிட்டானே” என்று சுப்பையாவும், தங்கமணியும் நினைத்துக் கொண்டார்கள்.
மற்றபடி ஊர் அவரவர் வேகத்தோடு நகர்ந்து போய்க்கொண்டு இருந்தது.
‘கடன் தொல்லையால் குடும்பமே தற்கொலை’ என்று செய்தியை பார்க்கிற போதெல்லாம் பதற்றம் வருகிறது.
எனக்கும், உங்களுக்கும் தெரிந்த அவனாய் இருக்கலாம், அவன்.
*
இந்துத்துவாவின் முகவரியும், முகங்களும்
"கயை அழிந்து கிடந்தது. கபிலவஸ்து காடுமண்டிக் கிடந்தது. பாடலிபுத்திரம் செல்வச்செழிப்போடு விளங்கியது" என்கிறார் அப்போது இந்தியாவுக்கு வந்த சீன யாத்திரிகர் பாஹியான். சாதாரண மக்களின் பாஷையாக இருந்த பிராகிருத மொழிக்கு இல்லாத ஆசியும் அந்தஸ்தும் சமஸ்கிருத மொழிக்கு வழங்கப்பட்டது. இந்தியாவில் நிறுவனமாக்கப்பட்ட முதல் மதமான புத்தமதத்தை நிராகரித்து, இன்று இந்து மதமாக உருவாக்கப்பட்டுவரும் அன்றைய வேத மதத்துக்கு புத்துயிர் அளிக்கப்பட்டது. சமுத்திர குப்தன் தலைநகரை பாடலிபுத்திரத்திலிருந்து அயோத்திக்கு மாற்றினான். விக்கிரமாத்தியன் கட்டிய ஜெயஸ்தம்பத்தின் உச்சியில் தாமரைப்பூ செதுக்கப்பட்டு இருந்ததாகச் சொல்லப்படுகிறது. கடந்தகால மகிமைகளை மீட்டெடுத்த காலமாக அவர்கள் கருதினார்கள். எனவேதான், மிக நீண்ட நெடிய இந்திய வரலாற்றில் கி.பி 308ம் ஆண்டிலிருந்து 160 ஆண்டுகளே இருந்த இந்த குப்த சாம்ராஜ்ஜியம்தான் இந்தியாவின் பொற்காலம் என்று உச்சரிக்கப்படுகிறது.
எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன்னே பெண்களும் கல்வி கற்க ஏற்பாடு செய்திருந்த சக்கரவர்த்தி அசோகரின் ஆட்சி அவருக்கு மகிமை வாய்ந்ததாக இருக்காது. இந்தியா முழுவதும் பரவியிருந்த புத்தமதத்தை திருதராஷ்டிர ஆலிங்கனம் செய்து, சுவீகரித்து தங்களது மதமாக விழுங்கி, வர்ணாசிரம கட்டுமானத்தை இறுக்கிக் கொண்டதுதான் குப்தர்களின் காலம். புத்தமதத்தில் இருந்த ஜனநாயகத்தை கழுவிலேற்றி சர்வாதிகாரத்தை ஸ்தாபித்துக் கொண்டதுதான் குப்தர்களின் காலம். காளிதாசரையும், அஜந்தா சிற்பங்களையும் காட்டி கலைகள் வளர்ந்தன, இலக்கியம் வளர்ந்தன என்று தலையில் தூக்கி வைத்து கொண்டாடிக்கொண்டு இருக்கிறது.
மன்னர்களின் சரித்திரங்களிடையே சாதாரண மக்களின் வாழ்க்கை தாழிகளில் புதைக்கப்பட்டு இருக்கின்றன. வேதமதத்தின் ஜாதிய கட்டுமானத்திலிருந்து தங்களை விடுதலை செய்து கொள்ளவே தாழ்த்தப்பட்ட மக்களும், பிற்படுத்தப்பட்ட மக்களும் புத்தமதத்தைத் தழுவினர். பிறகு சமண மதத்தைத் தழுவினர். மூஸ்லீம் மதத்திற்கும், கிறித்துவ மதத்திற்கும் முதலில் சென்ற மனிதர்கள் இவர்களாகவே இருக்கிறார்கள். தங்களை மனிதர்களாக, சம உரிமை கொண்டாடுபவர்களாக யாராவது மதிக்க மாட்டார்களா என்று வரலாற்றின் நாட்கள் முழுவதும் தேடித்தேடி அலைந்தவர்களாக இந்த சாமானியர்கள் இருக்கிறார்கள். இவர்களுக்கான ஒளியைத் தராமல் தங்கள் பிடியில் எப்போதும் வைத்துக் கொள்ளவே ஆதிக்க சக்திகள் துடியாய் துடிக்கின்றன. வேதகாலத்திற்குப் பிறகு அது குப்தர்களின் காலத்தில் முன்னுக்கு வந்தது. அப்போது கடந்தகால மகிமை பேசியது. மொகலாயரின் காலத்துக்குப் பிறகு சமயமறுமலர்ச்சிக் காலமாக பேர் சூட்டிக்கொண்டு கடந்தகால மகிமை பற்றி பேசியது. இந்திய சுதந்திரத்தின் கடைசித் தருணங்களில் இந்துமகா சபையாக, ஆர்.எஸ்.எஸ்ஸாக உருவெடுத்து பாரதீய ஜனதா, விஸ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங்தள்ளாக பல முகங்களோடு இன்று 'கடந்தகால மகிமை' பற்றி பேசுகிறது. பதினெட்டாம் நூற்றாண்டின் முற்பகுதியில், பிரித்தாளும் சூழ்ச்சி கொண்ட பிரிட்டிஷ்காரன் எடுத்துக் கொடுத்த 'இந்து' என்கிற வார்த்தையை அப்படியே பிடித்துக் கொண்டு அதையே வரலாற்றின் எல்லா காலக்கட்டங்களிலும் தங்கள் மதத்தின் பேராய் பதித்துக் கொண்டு இருக்கிறது. இதுதான் இந்துத்துவாவின் முகவரியும், முகங்களும்.
கடந்தகால மகிமை பற்றி பேசி, நிகழ்காலத்தை தங்களுடைய ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வருவதுதான் இவர்களின் நோக்கம். இந்துத்துவா என்பதன் வரலாற்றுப் பிண்ணனியும், அர்த்தமும் இதுதான். தாழ்த்தப்பட்டவர்களையும், பிற்படுத்தப்பட்டவர்களையும் தங்களது சேனைகளாய் உருவாக்கிக் கொள்ள ஒரு பொது எதிரியை காண்பிக்கிறார்கள். அது 'இந்து' என்று இவர்கள் காட்டுகிற அடையாளத்தில் அடங்கி இருக்கிறது. 'யார் தங்கள் தந்தையர் பூமியை புண்ணிய பூமியாக கருதுகிறானோ அவனே இந்து, இந்தியன்' என்றெல்லாம் வியாக்கியானங்கள் தருகிறார்கள். ஒரு மூஸ்லீமுக்கு, அவர் பாகிஸ்தானைச் சேர்ந்தவராக இருக்கட்டும், சவுதி அரேபியாவைச் சார்ந்தவராக இருகட்டும். புண்ணிய பூமி என்றால் மெக்காவும் மெதினாவும்தான். இந்த ரீதியில் பார்க்கும்போது கிறித்துவர்களும், மூஸ்லீம்களும் இந்த நாட்டுக்குரியரவராக இருக்க முடியாது. சொந்த நாட்டுக்குள்ளேயே அவர்களை அந்நியர்களாக்குகிற கபடத்தனம் இது. அவர்களுக்கு எதிரான ஒரு சமூகப் பதற்றத்தை உருவாக்கி இந்த 'இந்து' என்ற ஒரு மாயமான அடையாளத்தை மேலும், மேலும் உறுதிப்படுத்துவதை அவர்கள் செய்து கொண்டே இருப்பார்கள்.
அவர்களின் கடந்தகால மகிமை என்பது மக்களின் சந்தோஷத்தைப் பற்றியதாக இருக்காது. அவர்களின் வாழ்க்கையை வளமாக்குவது பற்றி இருக்காது. மக்களை எப்படி அடிமைப்படுத்துவது என்பதைப் பற்றியதாகவே இருக்கும். கடந்தகாலத்தில் ராமருக்கு அயோத்தியில் கோவில் இருந்தது, அது பாபரால் இடிக்கப்பட்டது என்பார்கள். கடந்தகாலத்தில் சமஸ்கிருதம் ஆட்சிமொழியாக இருந்தது என்பார்கள். கடந்தகாலத்தில் இராஜஸ்தான், குஜராத் வழியாக சரஸ்வதி நதி ஓடிக்கொண்டு இருந்தது, அதை மீட்க வேண்டும் என்பார்கள். கடந்தகாலத்தில் இங்கேதான் ராமர் பாலம் இருந்தது. எனவே சேதுசமுத்திரத் திட்டம் வேண்டாம் என்பார்கள்.
வரலாற்றின் பக்கங்களை கரையான்களாய் அரித்துவிட்டு அதில் என்ன எழுதியிருந்தது என்பதை அவர்களே சொல்லுகிற விசித்திரம் இது. முழுவதும் அறிய முடியாத கடந்த காலத்தை தங்களுக்குரியதாக பயன்படுத்திக் கொள்ளும் ஒருவகையான வரலாற்று மோசடியை அவர்கள் செய்துகொண்டே இருப்பார்கள். இதுதான் பாசிசத்தின் ஆணிவேராகவும், அடிநாதமாகவும் இருக்கிறது. எதிர்காலத்தை நிகழ்காலத்தின் வெளிச்சத்திலிருந்து ஒரு புதிய உலகமாக படைத்திட அவர்கள் நினைப்பதில்லை. எதிர்காலத்தை கடந்தகாலத்தின் இருட்டிலிருந்து கொண்டு வரவே அவர்கள் துடிக்கிறார்கள். சமூகத்தின் அழுக்குகளை உதறிவிட அவர்கள் ஒருபோதும் நினைப்பதில்லை. அழுக்குகளை மேலும் மேலும் சமூகத்தின் மீது படியச் செய்வதுதான் அவர்கள் விருப்பம். ஒன்றிலிருந்து ஒன்று பிறக்கிற பரிணாமத்தை அவர்கள் ஒத்துக் கொள்வதில்லை. ஒன்றே ஒன்றுதான், அதில் மாற்றமில்லை என்று அடித்துச் சொல்கிறார்கள்.
இவர்கள் தன்னை சவாரி செய்ய காலமென்னும் குதிரை அனுமதிப்பதில்லை. அவர்களை புறந்தள்ளிவிட்டு நகர்ந்துகொண்டே இருக்கும்!
*
“சாமியார் சமாதியாகி விட்டார்”
சிரிப்பை மட்டும் வரவழைப்பதில்லை இந்தக் குட்டிக் கதை. வேறு சில சூட்சுமங்களை, புனிதங்களை நடுத்தெருவில் போட்டு உடைக்கிறது.
எளிமையான, எல்லோருக்கும் தெளிவாகப் புரியும் ஒன்றிற்கு தங்கள் வியாக்கியானங்கள் மூலம் மாபெரும் அர்த்தங்களைக் கற்பித்து, அதை அசாதாரணமானதாக்கி விடுவதற்கென்றே சிலர் இருக்கிறார்கள். இது அவர்களைப் பற்றிய கதை.
எழுத்தாளர் ஜி.நாகராஜன் எழுதியது. படித்துப் பாருங்களேன்!
*
மடத்துக்கு முன்னால் ஒரே கூட்டம். ஊர் மக்கள் அனைவரும் திரண்டு வந்திருந்தனர். அத்தனை பேர் முகத்திலும் வருத்தம் தோய்ந்திருந்தது. குசுகுசு என்று மட்டுமே பேசிக்கொண்டனர்.
“சாமியார் சமாதியாகிவிட்டார்”, “இன்று காலை தியானத்தில் உட்கார்ந்திருந்தவர்தாம், அப்படியே சமாதியாகிவிட்டார்” என்றெல்லாம் பேசிக்கொண்டனர்.
ஊர்ச்சிறுவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. கூட்டத்தின் நடுவே குறுக்கும் நெடுக்குமாகச் சென்று கொண்டிருந்தனர். என்னவென்று புரிந்து கொள்ளாமலேயே அவர்களும், “சாமியார் சமாதியாகிவிட்டார்” என்ற வார்த்தைகளைச் சொல்லிக்கொண்டனர். இறுதியில் மடத்துக்காரர்கள் சாமியாரை வெளியேக் கொண்டு வந்தனர். சாமியார் வெளியே தூக்கி வரப்படுவதையே உற்று நோக்கிக் கொண்டிருந்த ஒரு சிறுவன் திடீரென்று, “டேய், சாமியார் செத்துப் போயிட்டாரு” என்று கத்திக்கொண்டு கூட்டத்தை விட்டு ஒடிவந்தான். உடனே அத்தனைச் சிறுவர்களும், “மடத்துச் சாமியார் செத்துப் போயிட்டாரு” என்று அழுத்தம் திருத்தமாகக் கத்திக்கொண்டு ஓடினர். பெரியவர்கள் சிறுவர்களைக் கூட்டத்தை விட்டு அரட்டி மிரட்டி ஓட்டினர்.
*
ஈழப்பிரச்சினையில் தேவையில்லாமல் புத்தரை நான் இழுத்தேனா?
சில நாட்களுக்கு முன் ‘பக்ஷே சரணம் கச்சாமி’ என்று ஒரு சொற்சித்திரத்தை இங்கே எழுதியிருந்தேன். தோழர்.கவின்மலர் அதுகுறித்து சில விமர்சனங்களை பின்னூட்டமாக நேற்று எழுதியிருக்கிறார். ஈழப்போரில் திட்டமிட்டு புத்தரையும், பௌத்தத்தையும் இழுக்கப்படுவதாகவும், அறிந்தோ அறியாமலோ நானும் அந்த வலையில் விழுந்துவிட்டதாகவும் வருத்தப்பட்டு இருக்கிறார்.
தொடர்ந்து அவர் கீழ்க்கண்டவாறு எழுதுகிறார்:
இந்துமதத்திற்கு மாற்றாக அம்பேதகர் முன்வைத்த பௌத்தத்தின் பிம்பத்தை சிதைப்பதன் மூலம் மறைமுகமாக இந்துத்வத்திற்கு துணை போவதை ஒத்துக்கொள்ள முடியாது. புத்தர் கண்ணில் ரத்தம் வடிவது போல ஓவியம் வரைவது, இன்னபிற விஷயங்கள் ஈழம் தொடர்பான விமர்சனங்களில் வைக்கப்படுகின்றன. ஜார்ஜ் புஷ் மனிதப் படுகொலை செய்தபோது இயேசுவை இழுக்காதவர்கள், நரேந்திரமோடி குஜராத்தில் படுகொலை செயதபோது இந்துமதக் கடவுள்களை இழுக்க துணிவற்றவர்கள் எப்படி ராஜபக்ஷேவைத் திட்டுவதற்கு பதில் புத்தன் பெயரை இழுக்கிறார்கள்? புத்தனை போருக்குள் இழுப்பதன் மூலம் ராஜப்க்ஷே மீதிருக்கும் கோபத்தையும் ஆத்திரத்தையும் நீர்த்துப் போகச்செய்து, திசைதிருப்பும் முயற்சி நடக்கிறது. புத்தனை விட்டுவிடுங்கள்! ராஜ ப்க்ஷே முகத்தில் அறையுங்கள். அதுதான் சரி.
நான் எழுதிய சொற்சித்திரத்தை முழுமையாக படித்து, உள்வாங்கி தோழர்.கவின்மலர் அவர்கள் எழுதினாரா என்று தெரியவில்லை. ஏற்கனவே வல்லினம் இணையப் பத்திரிகையில் வந்த புத்தரின் கையெறி குண்டு கவிதைக்கு வந்த எதிர்வினைகளைப் படித்து அதன் பாதிப்பில் இங்கு எழுதினாரா என்றும் தெரியவில்லை.
அந்தக் கவிதை வேறு. நான் எழுதிய சொற்சித்திரம் வேறு. புத்தரை ஒரு மதத்திற்குள் அடக்கியோ, அடையாளப்படுத்தியோ நான் எழுதவில்லை. அது அன்பையும், அஹிம்சையையும் போதித்த வாழ்வு நெறி என்பதை முன்னிறுத்தித்தான் எழுதியிருக்கிறேன். ஒரு ஓவியன் ஏசுநாதரை வரைய முயன்ற ஒரு முக்கியக் கவிதை ஒன்று உண்டு. குழந்தை ஏசுவும், அவரைக் காட்டிக்கொடுத்த யூதாஸும் ஒரே மனிதனாய் இருப்பான். அதன் பாதிப்பில், வேறு அர்த்தத்தில் எழுதப்பட்ட சொற்சித்திரமே நான் எழுதியது.
மிகப்பெரும் இனப்படுகொலையும், மனித உயிர்வதையும் நிகழ்ந்த இந்த தருணத்தில் புத்தரை வரைய முடியாமல் போவதாக சொல்லியிருக்கிறேன். ஒரு காலக்கட்டத்தின், ஒரு மனநிலையின் தோற்றமாகவோ, காட்சியாகவோ இதனை நான் பார்க்கிறேன். மாபெரும் சிதைவின் வேதனையை சொல்ல முயன்றிருக்கிறேன். பௌத்தத்தை குறை ஒன்றும் சொல்லவில்லை. அதன் அற்புதமான வாழ்க்கைநெறி கண்முன்னால் தொலைந்து போகக் கூடாதே என்ற ஆதங்கம்தான் இந்த சொற்சித்திரம் முழுவதும் இருப்பதாக படுகிறது.
இதில் அம்பேத்கார், ஜார்ஜ் புஷ், நரேந்திர மோடி ஆகியோரை ஒட்டி வெளிவந்திருக்கும் கருத்துக்கள் இந்தப் பதிவுக்கு சம்பந்தமில்லாதவை என்பதையும், இந்துத்துவாவுக்கு துணை போவது போன்றவை இந்த இடத்தில் அர்த்தமற்ற குற்றச்சாட்டுகள் என்பதையும் தோழர் கவின்மலருக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். நிச்சயம் என்னை நோக்கிச் சொன்ன வார்த்தைகளாய் இருக்காது எனவே நம்புகிறேன்.
‘காந்தி பிறந்த மண்ணில்தான் கோட்சேவா?” என்று தோழர் கவின்மலர் பேசாமலா இருந்திருப்பார்கள்! அது காந்தியை இழிவு படுத்துவதா?
*
மாதவராஜ் பக்கங்கள் 13
எப்போதோ நடக்கிற துயரமாக இல்லாமல், சமீப காலமாக வெடி விபத்துக்கள் அடிக்கடி நிகழ்கின்றன. திருத்தணி அருகே பள்ளிப்பட்டில் கருகிக் கிடக்கும் மனித உடல்களைப் படங்களில் பார்ப்பதற்கான திராணி இல்லை. கதறி அழும் உறவினர்களை யாரும், எதுவும் சமாதானப்படுத்தி விட முடியாது. விபத்துக்கள் நடந்த பிறகு, அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதும், கொஞ்ச நாளைக்கு வேகமாக இருப்பதும், பிறகு அப்படியே விட்டு விடுவதும் இங்கு இயல்பான வாழ்க்கை முறை ஆகிவிட்டது. எத்தனை முறை இப்படி புலம்பி தீர்த்தாயிற்று. இங்கு வெடிவிபத்துக்களில் செத்துப் போவது டாட்டாக்களும், அம்பானிகளும் அல்ல. சாதாரண குப்பனும் சுப்பனும். எல்லாம் அந்த நேரம் மட்டுமே அவர்களுக்கு.
நேற்று அமெரிக்க விமானம் ஒன்று இந்திய வான்வெளியில் அத்து மீறி நுழைந்து விட்டதாக, இந்திய விமானப்படையினர் தரையிறக்கி இருக்கின்றனர். ஐக்கிய அரபு எமிரேட்டில் உள்ள பிஜூரியா நகரத்திலிருந்து தாய்லாந்து சென்ற அந்த பயணிகள் விமானத்தில் 205 அமெரிக்க கடற்படை வீரர்களும், ஆயுதங்களும் இருந்திருக்கின்றன. அலறிய அமெரிக்கத் தூதரகம் உடனடியாக தனது அத்தனை உத்திகளையும் மேற்கொண்டு இருக்கிறது. 7 மணி நேரத்தில் மன்மோகன் அரசு, ஆபத்தான விமானத்தை கல்கத்தா வழியாக பாதுகாப்பாக அனுப்பி வைத்திருக்கிறது.
இரண்டு மாதங்களுக்கு முன்பாக, வடகொரியக் கப்பல் ஒன்று இந்தியக் கடற்பகுதியில் நுழைந்துவிட்டதாக தகவல் வந்திருக்கிறது. அதில் அணு ஆயுதங்கள் இருப்பதாக செய்திகள் வெளியாயின. இந்தியக் கப்பற்படையினர் முற்றுகையிட்டு அந்தமான் நிகோபார்த் தீவுகளில் பிடித்து வைத்துக் கொண்டனர். சோதனையிட்டுப் பார்த்ததில் எந்தவிதமான பேரழிவு ஆயுதங்களும் இருந்ததற்கான தடயங்கள் கூட கண்டு பிடிக்கப்படவில்லை. அந்தக் கப்பல் இரண்டு மாத காலத்துக்கும் மேலே இந்தியாவின் வசமே இருக்கிறது.
ஆனால் அமெரிக்க விமான நிலையத்தில், இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சராயிருந்த ஜார்ஜ் பெர்னாண்டசிலிருந்து, இப்போது பிரபல நடிகர் ஷாருக்கான் வரை சந்தேகத்தின் பேரில் விசாரிக்கப்பட்டு, சோதனையிடப்பட்டு, நிறுத்தி வைக்கப்படுகின்றனர்.
இவையாவும் தனித்தனிச் செய்திகள் அல்ல. தேசத்தின், மக்களின் பாதுகாப்பு குறித்து அரசுக்கு இருக்கும் அலட்சியமும், பாரபட்சமும் மேலிருந்து கீழ்வரை சீழ்பிடித்து இருப்பதைச் சொல்கின்றன. எல்லா யோக்கியர்களும் ஆளுக்கொரு சொம்பு வைத்திருக்கிறார்கள்.
*
ஆதலினால் காதல் செய்வீர்!
எண்ணிக்கொண்டிருக்கும் ரூபாய் நோட்டொன்றில் 'ஐ லவ் யூ ' என்று யாரோ ஒரு பெண்ணுக்கு யாரோ ஒரு ஆணின் மனம் திறந்த செய்தி இருக்கிறது. மும்பையின் யானைக்குகை பாறைகளில் இருக்கும் ஆண், பெண் பெயர்கள் குற்றாலத்தில் வேறு பெயர்களாக செதுக்கப் பட்டிருக்கின்றன. ஓடுகிற டவுன் பஸ் சீட்டுக்களின் பின்புறங்களையும் இந்த ஆதாம் ஏவாள்கள் விட்டு வைக்கவில்லை.
அவர்கள் யாராகவும் இருக்கலாம். இரண்டு கண்களில் ஆரம்பித்த உறவு ஒன்று உலகமே பார்க்கட்டும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஒரு ஆணின் பெயரையும், பெண்ணின் பெயரையும் இப்படி சேர்த்து எழுதினாலே காதல் என்பதாக யாரும் சொல்லாமலேயே அர்த்தம் உறைக்கிறது. அப்படியொரு தன்னிச்சையான அறிவை காலம் மனிதர்களுக்கு ஊட்டியிருக்கிறது.
இளமையின் வாசலில் காலைச்சூரியனின் முதல் ஒளிக்கீற்றாகவும், மாலைச் சூரியனின் மங்கிய ஒளியாகவும் படர்ந்து விடுகிறது. எப்படிப்பட்டவராக இருந்தாலும், முகத்தில் ஒரு களையையும், அர்த்தமுள்ள புன்னகையையும் தருவித்துவிடுகிற மாயம் அதற்கு இருக்கிறது. நிற்கிற இடத்தில் நிலம் ஊற்றெடுக்கிறது. பார்க்கிற இடத்தில் பசுமை பூத்தொடுக்கிறது. தனிமை திகட்டாமல் கனவு காணச் செய்கிறது. உலகமே அழகாய் இருக்கிறது. இதுபோன்ற அனுபவம் உலகத்தில் வேறு எந்தக் காதலருக்கும் ஏற்பட்டிராது என்று கர்வம் கொள்ள வைக்கிறது. ஆதி மனிதனின் முடிகள் அடர்ந்த தோலில் தோன்றிய அந்த சிலிர்ப்பு இன்று வரை அப்படியே ஒவ்வொருவருக்கும் புதியதாகவே தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. ஆணுக்கு பெண் மீதும், பெண்ணுக்கு ஆண் மீதும் சிறு வயதிலிருந்தே ஈர்ப்பு இருக்கிறது. அந்த பொறி உடல் மாற்றங்களோடு பருவம் அடைகிற போது கொழுந்து விட்டு பற்றிக் கொள்கிறது. எதையும் அறிந்து கொள்ளத் துடிக்கும் மனித சுபாவம் சுவாரஸ்யம் கொண்டு தத்தளிக்கிறது. புரிந்தும் புரியாமல் அலைபாய்கிறது. தனக்கும் எல்லாம் நேர்கிறது என்பது பாடாய் படுத்துகிறது. தன்னை தானே ரசிக்கிற குறுகுறுப்பில் பிறக்கிறது. தனது ரகசியங்களை எதிர்வினையின் மூலம் புரிந்து கொள்ள முயலும் துடிப்பில் வளர்கிறது.
இந்த புதிய உலகத்தின் திறவுகோல் ஒரு பெண்ணுக்கு ஆணின் பார்வையில் இருக்கிறது. ஒரு ஆணுக்கு பெண்ணின் பார்வையில் இருக்கிறது. திறந்துவிடும் கண்களுக்காக பூத்துக் கிடக்கிறார்கள். ரகசியங்கள் பொதிந்த பார்வைகளை பரிமாறிக் கொண்டு உடல் விசித்திரங்களில் கண்ணாமூச்சி ஆடுகிறார்கள்.ஒரு ஆணின் கண்கள் பல பெண்களின் கண்களைப் பார்க்கின்றன. ஒரு பெண்ணின் கண்கள் பல ஆண்களின் கண்களைப் பார்க்கின்றன. வாழும் சமூகமும், வாய்க்கும் சூழலும் அவரவர்களுக்குள் மூட்டி வைத்திருக்கிற பிரமைகளுக்கும், பிம்பங்களுக்கும் அருகில் நெருங்கி வருகிறவர்களை ஏற்றுக் கொள்ளத் துடிக்கிறார்கள். தங்களது கோட்டு உருவங்களுக்கு வண்ணம் பூசுகிறார்கள். அவரவர் சித்திரங்கள் மிகச் சிறப்பாக வடிவம் பெறும் என நம்புகிறார்கள். செந்தூரப்பூவே என்று ஊஞ்சல் கட்டி ஆடுகிறார்கள்.
எதிர்த்தரப்பில் சம்மதம் கிடைக்காத போது எல்லாம் தொலைத்தவர்களாய் சிதைந்து போகிறார்கள். நாட்கள் வலி கொண்டதாக நகருகின்றன. தன்னை உணர்த்தி விடவும், எதிர் மனதில் இடம் பெறவும் உன்மத்தம் பிடித்துப் போகிறது. போகிற இடங்களுக்கெல்லாம் போகிறார்கள். பார்க்கிற இடங்களெல்லாம் போய் நிற்கிறார்கள். பிடித்தமானவராய் மாறுவதற்கு வித்தைகளும், சாகசங்களும் செய்து பார்க்கிறார்கள். மலையுச்சியிலிருந்து குதிக்கப் போவதாகவும், விஷமருந்தி இரத்தம் கக்கிச் சாகப் போவதாகவும் கடைசிச் செய்தி அனுப்பி பார்க்கிறார்கள். பயமுறுத்தியோ, இரக்கத்தை உற்பத்தி செய்தோ, எப்படியோ ஒரு பெண்ணை அடைய ஆண் வெறி பிடித்து நிற்கிறான். தான் விரும்பிய பெண்ணின் மீது தாக்குதல் தொடுக்கவும், பலாத்காரம் செய்யவும் கூட சில சமயங்களில் துணிந்து விடுகிறான். நமது சினிமாக்கள் கொஞ்சங்கூட சமூகப் பொறுப்பற்று விடலைகளின் உள்ளத்தில் தீயை வைத்துக் கொண்டிருக்கின்றன.
பார்வைக்கு மறு பார்வை எதிர்த் தரப்பில் பதிலாய் கிடைக்கிற போது வானவில் தோன்றுகிறது. சக வயதொத்த பால் பேதம் கொண்டவரின் சம்மதமே பிறவிப்பயனாகிறது. உறுதி செய்து கொள்ள மீண்டும் மீண்டும் பார்வைகளில் திளைக்கிறார்கள். கால்களில் நடுக்கமும், கண்களில் படபடப்புமாய் பரிதவிக்கிறார்கள். தனக்காக ஒரு இளவரசன் வரப் போகிறான் என அவனும், இனியுள்ள காலம் முழுவதையும் அந்த ஒருத்தியோடுதான் என அவனும் கற்பனை செய்கிறார்கள்.
அவளது தலைமுடியொன்றை தனது விரல்களில் சுற்றி மோதிரம் என பெருமைப் படுகிறான் அவன். அவளது பாதம்பட்ட மண்ணை கவனத்துடன் அள்ளி தனது வழி பாட்டுக்கு பாதுகாக்கிறான் அவன். அவனது அழுக்குக் கைகுட்டையை கவர்ந்து சலவை செய்து மயங்கிப் போகிறாள் அவள். அசட்டுத்தனங்களும், சினிமாத்தனங்களுமாய் சிறுத்துப் போனாலும் காதல் எல்லோரையும் தனது உள்ளங்கையில் அள்ளி வைத்துக் கொள்கிறது. வசீகரமான பயணமாக, ரகசிய அனுபவமாக உணரப்படுகிறது. எல்லைகளற்ற பெருவெளியில் மனிதர்களை சஞ்சரிக்க வைக்கிறது.
இடைவெளிகளை மேலும் மேலும் குறைக்க வேண்டும் என பித்துப் பிடித்து நிற்கிறார்கள். காதலின் சாலையில் யாவரின் பயணங்களும் அதை நோக்கியே செல்கின்றன. ஆண் பெண் உறவுகளை திருமணங்களே உறுதி செய்கின்றன. சமூகத்தின் சம்மதம் முக்கியமாகிறது. திருமணத்திற்கான ஒழுக்கத்தையும், விதிகளையும் சமூகமே கற்பித்து வைத்திருக்கின்றன. ஜாதி பார்க்கிறது. மதம் பார்க்கிறது. கல்வி பார்க்கிறது. வாழ்வதற்கான வசதி பார்க்கிறது. இவைகளை பார்க்காத காதலையும், காதலரையும் நிராகரிக்கிறது. வன்மத்தோடு எதிர்க்கிறது. எல்லாவற்றையும் மீறி திருமணம் செய்து கொள்பவர்களுக்கு தங்கள் சொந்தக் காலில் நிற்கிற உறுதி வேண்டியிருக்கிறது. காதலின் வெற்றி என்பது காதலர்கள் வசதியாகவும், சமூகத்தில் கௌரவமானவர்களாக வாழ்வதிலும் இருக்கிறது.
இப்படித்தான்- இவ்வளவுதான் காதல் பற்றிய நமது புரிதல்களும், உணர்வுகளுமாக தேங்கிப் போய் கிடக்கின்றன. திரைப்படங்களில் ஆட்டமாய் ஆடுவதும், சண்டையாய் போடுவதும் ஒரு பெண்ணின் கழுத்தில் தாலி கட்டும் கடைசிக் காட்சிக்காகவே இருக்கின்றன. அந்தி மங்கும் வானத்தின் பின்னணியில் காதலனும், காதலியும் கட்டிப் பிடித்து சேர்ந்து நடக்கும் காட்சி வந்ததும், ரசிக பெருமக்கள் அப்பாடா என்று இருக்கைகளை விட்டு எழுந்து வீடுகளுக்குச் செல்ல தயாராகி விடுகின்றனர். விரும்பிய ஆணும், பெண்ணும் திருமணம் செய்து கொள்வதுதான் காதலின் வெற்றியென சொல்லி சூரியன்கள் மறைகின்றன. முதலிரவுக் காட்சிகளே காதலின் உச்சக்கட்டம் என்று விளக்குகள் அணைக்கப் படுகின்றன.
அந்த ஆணின் வாழ்க்கை அத்தோடு முடிந்து போகவில்லை. அந்த பெண்ணின் வாழ்க்கையும் அத்தோடு முடிந்து போகவில்லை. ஆனால் காதல் மட்டும் முடிந்து விடுகிறது. இருந் தாலும், இதயத்தை அம்பால் துளைப்பதாக, லிப்ஸ்டிக் உதடுகளாக, கோர்த்திருக்கும் ஆண் பெண் கைகளாக, கண்ணை மூடி முத்தம் கொடுப்பதாக கடைகளில் வாழ்த்து அட்டைகள் வண்ண வண்ணமாக தொங்கவிடப் பட்டிருக்கின்றன. தொலைக்காட்சியில் விசேஷ நிகழ்ச்சிகள் அறிவிக்கப்படுகின்றன. இணையதளங்களில் வாழ்த்துச் சொல்லவும், தொடர்பு கொள்ளவும், கொண்டாடவும் ஏராளமான ஏற்பாடுகள். மேக்ரோ மீடியா ஃபிளாஷ் விளம்பரங்கள். கல்லூரிகளில், நட்சத்திர ஓட்டல்களில் விழாக்கள். நடனங்கள். நகரத்து யுவன்களும், யுவதிகளும் காய்ச்சல் வந்து நிற்க உலகமே காதலர் தினத்தை கொண்டாடிக் கொண்டு இருக்கிறது. சின்னக் குழந்தைகள் சோப்பு நுரையை ஊதி நீர்க்குமிழிகளை பறக்க வைத்து ஆனந்தப்படுவதைப் போல 'லவ்' 'லவ்' என்று சகல இடங்களிலும் காதலர் தின நிகழ்ச்சிகள் தென்படுகின்றன.
வாழ்வில் காதலை அறியமுடியாமல், எதோ ஒரு தினத்தில் காதலைக் கொண்டாடுவது வேடிக்கை தான். அவஸ்தைகளோடும், பரவசங்களோடும் ஒருவரை ஒருவர் நேசிக்க ஆரம்பித்தவர்கள் விரைவில் அதனைத் தொலைத்து விட்டு வெறுங்கையோடு நிற்பது பரிதாபம் தான். காதலில் தோய்ந்து தோய்ந்து விரிந்த காவியங்களையும், கவிதைகளையும் கொண்டு பூமிப்பந்தையே அந்த உருகும் மொழியால் மூடி விடலாம். அவ்வளவு பேசப்பட்டிருக்கிறது. ஆனாலும் காதல் பிடிபடாத வண்ணத்துப் பூச்சியாய் மனிதர்களுக்கு போக்குக் காட்டி பறந்து கொண்டிருப்பது விசித்திரம்தான்.
"இதெல்லாம் காதலே இல்ல..." என்று ஒருகுரல் ஒலிக்கிறது. "டீன் ஏஜ் பருவத்துல வர்ற ஒரு ஃபீலிங். அவ்வளவுதான்" இன்னொரு குரல் ஒலிக்கிறது. "காதலுக்கும் காமத்துக்கும் ஒண்ணும் வித்தியாசமில்ல" என்றும் சொல்லப்படுகிறது. காதலைப் புரிந்து கொள்ளவும், என்றென்றும் வாடாத மலராய் அதை தரிசிக்கவும் முனையாமல் இப்படியான சிந்தனைகள் சமூகப்பரப்பில் கீறிக்கொண்டிருக்கின்றன. முன்னொரு காலத்தில் இந்த உலகத்தில் காதல் இருந்ததாகவும், இப்போது அது இல்லையெனவும் கருத்துக்கள் முன்வைக்கப் படுகின்றன. ஆண் பெண் உறவுகளில் காதல் என்றென்றைக்கும் நிலைத்திருக்க முடியாமல் எது தடையாய் இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளும் துடிப்புகளும், அறிந்து கொள்ள முடியாத ஏமாற்றங்களுமே இவைகளின் அடிநாதமாய் இருக்கின்றன.
(இது ஒரு மீள் பதிவு)
தொடர்ந்து படிக்க....
ஆதலினால் காதல் செய்வீர் இரண்டாவது அத்தியாயம்
ஆதலினால் காதல் செய்வீர் மூன்றாவது அத்தியாயம்
ஆதலினால் காதல் செய்வீர் நான்காவது அத்தியாயம்
ஆதலினால் காதல் செய்வீர் ஐந்தாம் அத்தியாயம்
*
தீபாவளி முடிந்து விட்டது
நேற்றிரவு
வெடித்துச் சிதறி
ஒளிக் குப்பையாய்க் கிடந்த
வானம் சுத்தமாய் இருக்கிறது
கிழக்குப் பக்கம்
சாவகாசமாய் நான்கைந்து பறவைகள்
பேசிக்கொண்டே செல்கின்றன
தெருதான்
கருமருந்து வாடையும்
கந்தல் கந்தலான காகிதங்களோடும்
கலைந்து கிடக்கிறது
வெடிக்காதவைகளை பொறுக்கியபடி
இரண்டு சிறுவர்கள் வருகிறார்கள்
வாலைப் பதுக்கி
தானும் பதுங்கிய நாய்களெல்லாம்
மெல்ல எட்டிப் பார்க்கின்றன
முதலில் எழுந்த அம்மா ஒருத்தி
வாசல் பெருக்குகிறாள்
“ம்... தீபாவளி முடிந்துவிட்டது”
*
புதுமைப்பித்தன் எழுதிய தீபாவளிக் கதை
தீபாவளியைப் பற்றி தமிழ் இலக்கியத்தில் நம் எழுத்தாளர்கள் யாராவது எழுதியிருக்கிறார்களா என்று யோசிக்கவும், அடுத்தகணமே நினைவில் வந்தது இந்தக் கதைதான். பாட்டியின் தீபாவளி. பாட்டிகள் எத்தனையோ கதைகள் சொல்லி இருக்கிறார்கள். புதுமைப்பித்தன் இங்கு ஒரு பாட்டியைப் பற்றி கதை சொல்கிறார்.
இவர் சொல்லும் கதையில் மகனும், மருமகளும், பேத்தியும் காலராவில் இறந்து போகிறார்கள். பாட்டி பேத்திக்குச் சொல்லும் கதையில் நரகாசுரன் இறந்து போகிறான். அந்த அசுரன் ரொம்ப படுத்துவான் என்றதும், பேத்தி “என்னைப் போலவா?” என்கிறாள். இந்தக் கதையில் மிக முக்கியமான இடம் இது. சின்னதாய் ஏற்றும் தீப ஓளியில் வீட்டில் இருக்கும் தட்டுமுட்டுச் சாமான்களை பேயின் சாயல் கொண்டதாய் காட்டுகின்றன என்று கதைக்காரன் சொல்வது சாதாரணமான விவரணை இல்லை. நினைவுகள் பிசாசாய் அவளைப் படுத்துகின்றன, அதாவது நரகாசுரனைப் போல. யானை வெடியில் நரகாசுரன் மட்டும் இறந்து போகவில்லை.... இப்படி கதை போய்க்கொண்டே இருக்கிறது.
தமிழ் இலக்கியப் பரப்பில் புதுமைப்பித்தனைப் போல கடவுள்களை விமர்சனம் செய்தவர் யாரேனும் உண்டா என்பது ஒரு முக்கிய கேள்வியாக எப்போதும் இருக்கிறது. அவரது பல கதைகளைச் சொல்ல முடியும். இந்தக் கதையும் அப்படி ஒன்று. இறந்து போகும் மனிதர்களுக்கு எல்லாம் இங்கு கடவுள்கள் காரணங்கள் வைத்தா இருக்கிறார்கள்?
புதுமைப்பித்தனுக்கே உரிய நடை இந்த சின்னஞ்சிறு கதையை அடர்த்தியாக்குகிறது. புதிர்களையும், விமர்சனங்களையும் உள்ளடக்கியதாக இருக்கிறது. இன்று மொழி, உத்தி என பேசிக்கொண்டு இருப்பவர்களுக்கு அவரது இந்தக் கதையும் ஒரு சவால்தான். 1934ல், அதாவது 75 வருடங்களுக்கு முன்பே, இங்கே ஒரு எழுத்தாளன் இப்படி எல்லாம் பிரமிக்க வைத்திருக்கிறார். அவரைத் தாண்டிச் செல்வது அவ்வளவு சுலபம் அல்ல!
*
பாட்டியின் தீபாவளி
'குத்து விளக்கேற்றி கோலமிட்டு பாரேனோ.'
சங்கரிப் பாட்டியின் வீடு வெறிச்சோடிக் கிடந்தது. பாட்டியின் வாழ்க்கை திடீரென்று இந்திரப் பதவியை இழந்த நஹுஷகன் நிலைமை மாதிரி. அவள் வாழ்க்கை சுகமான கவலையற்ற முடிவை எதிர்நோக்கித் தன் பிள்ளை, மாட்டுப்பெண், குழந்தை மீனு இவர்கள் இடையில் கழிந்து வந்தது. திடீரென்று சென்ற ஐப்பசியில், அந்தக் கண்ணற்ற விதி எல்லோரையும் ஒரேயடியாகக் கொண்டு போய்விட்டது. காலராவிற்குத் தராதரம் தெரிகிறதா? அந்தக் குழந்தை, குழந்தை மீனு, அவள் என்ன பாபம் செய்தாள். கிழக்கட்டையைத் தவிக்கவிட்டுத் திடீரென்று போய்விட்டாளே.
அதன் பிறகு...
அதன் பிறகென்ன? கிழவிக்கு நாட்கள் சென்றது தெரியாது. யோகிகள் காலம் கடந்துவிடுகிறார்கள். காலத்தின் மாறுபாடுகளை மீறி மோன நிலையில் இருந்துவிடுகிறார்களாம். அது எனக்குத் தெரியாது. சங்கரிப் பாட்டிக்கு நாட்கள் கழிந்தது தெரியாது. நடைப்பிணம்... நடையற்ற பிணமாக இருந்தாலும் தேவலை.
அன்று விடியற்காலம் தீபாவளி ஆரம்பிக்கிறது. சாயங்காலம் முதல் கிழவிக்கு துக்கம் நெஞ்சையடைத்தது. கிழக்கட்டைக்குத் தீபாவளி வேறு வேண்டியாக்கும். மடிசஞ்சி மூட்டையைத் தலைக்கு வைத்துப் படுத்துக் கொண்டாள். இரவு பூராவாகவும் துக்கம்... தூக்கமாவது மண்ணாவது!
விளக்கையாவது ஏற்றி வைக்கலாமே. கிழவி குடுகுடுவென்று நடுங்கியவண்ணம் எழுந்திருக்கிறாள். என்ன நேரம் என்று தெரியாது. வெளி எல்லாம் இருள், உள் எல்லாம் இருள். உள்ளத்திலும் இருள். எங்கோ தூரத்திலே பேச்சுக் குரல்... அர்த்தமற்ற மனிதக் குரல் அவள் காதைக் குத்துகிறது.
நெருப்புக் குச்சியைக் கிழித்து குத்துவிளக்கை ஏற்றுகிறாள். குச்சிதான் சீக்கிரம் பிடிக்கிறதா? நனைந்த தீப்பெட்டி. அடுப்பண்டை போகிறாள். குவிந்த சாம்பலில் மங்கி மடியும் கங்கு. அதைக் கரண்டியில் கொண்டுவந்து அதன் உதவியால் நெருப்புக் குச்சியைப் பற்ற வைத்து விளக்கை ஏற்றுகிறாள். விளக்கின் மங்கிய தீப ஒளி, குச்சிலில் இருக்கும் தட்டுமுட்டுச் சாமான்களைப் பேய் சாயையாகக் காண்பிக்கின்றன. அசைந்தாடும் தீபவொளி பொருள்களை அசைக்கின்றன. மூலையிலும் மோட்டிலும் பம்முகின்ற இருளையும் அசைந்தாடச் செய்கின்றன.
பாட்டிக் கிழவிக்கு மீனுவின் நினைவு உள்ளத்தைக் கவ்வியது நெஞ்சையடைத்தது. போன தீபாவளிக்கு முந்திய தீபாவளியில் அவள் கைக்குழந்தையாக, தவழும் குழந்தையாக செல்லத்தின் மடியில் சிரித்துக்கொண்டிருக்கும்போது தைத்த சட்டை, பாட்டியின் மடிசஞ்சி மூட்டையிலே, பரிசுத்தமான விபூதிச் சம்புடத்துடனும், ருத்திராட்சத்துடனும் இருந்தது. அதை மெதுவாக எடுத்து (மங்கிய கண்களின் கண்ணீர் அதை நனைக்கிறது) மீனு என்று குழறிக்கொண்டு, குத்துவிளக்கின் பாதத்தில் சமர்ப்பித்து வணங்குகிறாள். கிழவியின் பொக்கை வாயில் ஒரு பரிதாபமான சிரிப்பு. பட்டுச் சட்டையில் இரண்டு துளிகள்.
பாட்டி குத்துவிளக்கின் பாதத்தில், பட்டுச் சட்டையில் முகம் வைத்து, வணங்குகிறாள். உள்ளம் 'மீனு, மீனு' என்று ஒலி செய்கிறது.
ஏன் அப்படியே சிலையாக, குத்துவிளக்காக இருந்துவிட்டாள். உயிர்தான்...
"பாட்டி!"
குழந்தைக் குரல்... குழந்தை மீனுவின்...
கிழவி திரும்புகிறாள்.
"வாடியம்மா! கோந்தே... வாடியம்மா!"
ஆவலுடன் கையை நீட்டுகிறாள்.
"மாத்தேன் போ!" குழந்தை சிரிக்கிறது. ஆனால் கைகளைப் போட்டுத் தாவுகிறது. குழந்தை அவள் வற்றிய நெஞ்சில் தாவுகிறது. அப்பா! பால் வார்த்த மாதிரி... என்ன சுகம்!
"பாட்டி! பாட்டி!" என்று நெஞ்சில் குழைகிறது. நெஞ்சிடையே நெளிந்து, வளைந்து குமைகிறது.
"பாட்டி, பாப்பா வெச்சு விளையாடலாமா?"
"வாடியம்மா? மரப்பாச்சி எடுத்துண்டு வரட்டா?"
குழந்தையுடன் ஒரு மூலைப் பக்கம் திரும்புகிறாள். குழந்தை எட்டி ஒரு பொம்மையை எடுக்கிறது. கையொடிந்த மரப்பாச்சி.
"பாட்டி! நீதான் அம்பி மாமாவாம். நான் தான் பொண்ணாம். வச்சு விளையாடலாமா!"
குழந்தைக்குச் சட்டைப்போட்டுக் குத்துவிளக்கின் முன்பு மரப்பாச்சியுடன் உட்கார வைத்தாகிவிட்டது. கிழவி சோபனப் பாட்டு தனது நாதமிழந்து நடுங்கும் குரலில் பாடுகிறாள்.
"பாட்டி, கதை சொல்லு பாட்டி... அன்னிக்குச் சொன்னையே, அந்தக் கதை சொல்லு பாட்டி... நன்னா... நாந்தான் இப்படி மடிலே உக்காந்துப்பேனாம்..." மறுபடியும் குழந்தை மடியில் ஏறி உட்கார்ந்து கொண்டது. ஆடி ஆடி அசைந்து கொண்டு கேட்கிறது.
"நரகாசுரன்னு ஒத்தனாம். அவன் பொல்லாதவனாம். அக்ரமம் செய்தானாம். எல்லாரையும் அடிச்சு, குத்தி, பாடுபடுத்தினானாம்..."
"நான் படுத்துவேன்பியே அது மாதிரியா?"
"அடி கண்ணே உம்மாதிரி யார் சமத்தாட்டம் படுத்துவா?" குழந்தையைத் தழுவி முத்தம் கொஞ்சுகிறாள். "அவன் பொல்லாதவன்... அவனை கிருஷ்ணன் வந்து அம்பாலே - வில்லாலே..."
"அம்புன்னா என்ன பாட்டீ!"
"அம்புன்னா..."
"பாட்டீ ஒரு பாட்டு சொல்லு பாட்டீ!"
கிழவி பாடுகிறாள்.
"பார்க்குமிடத்திலெல்லாம் நந்தலாலா - நின்றன்
ஆசை முகம் தோன்றுதடா நந்தலாலா"
"பாட்டீ நான் ஓடறேன் பிடிப்பையோ?"
"சமத்தாட்டம் ஓடு! பிடிக்கிறேன்."
குழந்தை குதித்துக்கொண்டு வாசல் பக்கம் ஓடுகிறது. வெளியில் இருக்கும் இருள் திரையை நோக்கி ஓடுகிறது. கிழவியும் தள்ளாடிக் கொண்டு பின் தொடர்கிறாள்.
குழந்தை வாசலை நெருங்கிவிட்டது.
வெளியிலே 'டபார்' என்று ஓர் யானை வெடிச் சப்தம்.
அவ்வளவுதான்.
உலகத்திற்கு தீபாவளி ஆரம்பித்தது.
பாட்டிக்கு...?
*
தீபாவளி வந்துவிட்டது!
என் முகத்தையே பார்த்துக்கொண்டு இருக்கிறான் மகன்
அவனுக்கு ஒரு துப்பாக்கி வேண்டும்
‘இது நம் பண்டிகையா...’
‘வெடியெல்லாம் தேவையா...’
மறுப்புகளைச் சொல்ல முடியாமல்
வெளியெல்லாம் ஒளிச்சிதறல்கள்
விடாத வெடிச்சத்தம்
பக்கத்து வீட்டிற்கு கொடுக்க சில பலகாரங்கள்
எல்லோரையும் போல இருக்க துணிமணிகள்
தப்பிக்க முடியாது தீபாவளியிடமிருந்து
கடைவீதிக்குப் புறப்பட்டேன்
பையன் முகமெல்லாம் சந்தோஷம்
“ஹை! தீபாவளி வந்துவிட்டது!”
*
பக்ஷே சரணம் கச்சாமி!
பத்து மாதங்களாய் தோற்றுக் கொண்டு இருக்கிறான் அந்த ஓவியன்.
புத்தரை வரையவே முடியவில்லை.
எந்த வர்ணத்தில் வரைந்தாலும் கருப்பாகிவிடுகிறார் இறுதியில்.
தூரிகை, பேனா, பென்சில் என எதனால் தீட்டினாலும், கண்கள் இருக்கும் இடத்தில் கோடுகள் காணாமல் போகின்றன. கண்ணுக்குத் தெரியாத அலைகள் வந்து அழித்து விடுகின்றன. வெறுமையாகவே இருக்கிறது அந்த இடம்.
உதடுகளில் அந்த சாந்தமான புன்னகை வரவே மாட்டேன்கிறது. பிரேதக் களையே வருகிறது.
பயந்து போய், வரைய முடியாத அவரது சித்திரத்தை யாருக்கும் தெரியாமல் ஒளித்து வைத்தான்.
அடுத்தநாள் காலையில் அவன் வீட்டைச் சுற்றி இலைகள் சுருங்கிக் கிடந்த மரம், செடி, கொடி யாவிலும் அந்த சபிக்கப்பட்ட புத்தரின் சித்திரங்கள் முளைத்திருந்தன.
ஓளித்து வைத்ததை எடுத்துத் திரும்ப வரைய ஆரம்பித்தான்,
செடி கொடிகள், மரங்கள் பழையபடி ஆயின.
அப்போதும் புத்தரை அவனால் வரைய முடியவில்லை. ஆனாலும் பயந்துபோய் வரைந்து கொண்டே இருந்தான்.
இரவிலும் தன்னருகிலேயே வைத்துக்கொண்டான்.
மனித இரத்தத்தை மேலே ஊற்றி விட்டார்கள், நர மாமிசத்தை வாயில் திணித்து விட்டார்கள், என்ன செய்வேன் என்று புத்தர் அவன் கண்மூடி இருந்தபோது அருகில் உட்கார்ந்து அழுதார்.
தூக்கம் வராமல் எல்லோரிடமும் சொல்லி புலம்ப ஆரம்பித்தான்.
நேற்று அவர்கள் வந்தார்கள். அவன் கையிலிருந்த புத்தரை தூக்கியெறியச் சொன்னார்கள். அவர்கள் கையில் ஒரு சித்திரம் இருந்தது. அதுதான் புத்தர் என்று தந்தார்கள். ஆசையோடு பார்த்தான். புத்தராய் இருந்தது ராஜபக்ஷே. கண்கள் இருந்தன. உதடுகளில் சிரிப்பும் இருந்தது.
வீட்டில் செடி, கொடி, மரங்கள் யாவும் பகலிலேயே தூங்குவது போல சுருங்க ஆரம்பித்தன.
*
அந்நியன் விஞ்ஞானி ராமகிருஷ்ணனுக்கு நோபல் பரிசு!
நமது பதிவர் குசும்பன் இந்த தீபாவளிக்கு, தான் பிறந்த மண்ணுக்கு வருகிறாராம். சந்தோஷத்தோடும் பிரியத்தோடும் அவரது பதிவில் எழுத, பிரியமுள்ள நமது வலை சமூகத்து மக்கள் வாழ்த்து தெரிவித்து கொண்டாடுகிறார்கள். நேசமித்ரன், மண்குதிரை, பா.ராஜாராம் போன்றவர்களின் பதிவுகளிலும், பின்னூட்டங்களிலும் இந்த மண்ணில் வாழ்ந்த வாழ்க்கையும், அதைப் பிரிந்திருக்கிற துயரங்களும் மெல்லிதாய் படிந்திருப்பதை பார்த்திருக்கிறேன். இதே மனநிலையை அயல்தேசத்தில் இருக்கும் பல நண்பர்களின் குரல்களில் கேட்டிருக்கிறேன். ஏன், பம்பாயில் இருக்கிற நமது அனுஜன்யாவுக்குக் கூட, எப்போது தமிழகம் வருவோம் என்றிருக்கிறது. இப்படி மனிதர்கள் எங்கிருந்தாலும், வேர் பிடித்த தத்தம் மண்ணின் சிந்தனைகள் வற்றாமல் ஓடிக்கொண்டு இருப்பதை புரிந்து கொள்ள முடிகிறது.
நோபல் பரிசு பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி ராமகிருஷ்ணனை அப்படி புரிந்துகொள்ள முடியவில்லை. நேற்று தினத்தந்தியில் அப்படி ஒரு செய்தி வந்திருப்பதாக நண்பர் ஒருவர் சொன்னார். அதிர்ச்சியாக இருந்தது. பத்திரிகை வாங்கி படித்தேன். எரிச்சல் வந்தது. உறுதிசெய்து கொள்ள இணையத்திலும் பார்த்தேன். வருத்தத்தையும், வேதனையையும் விஞ்சி கோபம் வந்தது.
நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி ராமகிருஷ்ணன் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்றதும் இங்குள்ள ஊடகங்களும், மக்களும் அடைந்த சந்தோஷம் மிகப் பெரியது. வலையுலகத்தில் கூட பல பதிவர்கள் கொண்டாடி இருந்தனர். வாழ்த்துக்களைத் தெரிவித்து இருந்தனர். இதைப்பற்றித்தான் அந்த விஞ்ஞானி ராமகிருஷ்ணன் வருத்தப்பட்டு, பெரும் இம்சையாக இருப்பதாகக் குறிப்பிட்டு இருக்கிறார். PTI நிறுவனத்துக்கு அள்ளித் தெளித்திருக்கும் முத்துக்கள் இதோ:
"இந்தியாவில் இருந்து எல்லா தரப்பு மக்களும் எனக்கு இ-மெயில் அனுப்பி வருகிறார்கள். எனது இ-மெயில் பகுதியையே நிரப்பி முடக்கி விடுகிறார்கள். அவர்களது கடிதங்களை அழிப்பதற்கே எனக்கு ஒன்றிரண்டு மணி நேரம் ஆகி விடுகிறது. இவர்களது இ-மெயில் வெள்ளத்தால், எனது சகாக்களிடம் இருந்து வரும் முக்கியமான தகவல்கள் கூட கிடைக்காமல் போய் விடுகின்றன"
"இவர்களுக்கு இரக்கமே கிடையாதா? நான் நோபல் பரிசு பெற்றதற்காக இவர்கள் பெருமைப்படுவது எல்லாம் சரிதான். அதற்காக என்னை ஏன் தொந்தரவு செய்கிறார்கள்?"
"இவர்களில் பலர் பல ஆண்டுகளாக என்னைத் தொடர்பு கொள்வதில் அக்கறையே இல்லாமல் இருந்தவர்கள். இப்போது திடீரென என்னைத் தொடர்பு கொள்ளும் ஆர்வம் எப்படி வந்தது? எனக்கு இது விநோதமாக தெரிகிறது"
"எனக்கு இந்தியாவில் பணியாற்ற வாய்ப்பு வந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. அதுபோல் யாரும் என்னை அணுகவில்லை. அப்படியே அணுகினாலும், அந்த வாய்ப்பை நான் உடனடியாக மறுத்து விடுவேன் என்பதை உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன்."
"நான் இங்கிலாந்தில் கேம்பிரிட்ஜில் உள்ள எனது நுண்ணணு உயிரியல் ஆய்வுக்கூடத்தில் பணியாற்றுவதைத்தான் பெரிதும் விரும்புகிறேன். அதை விட்டு வெளியேறும் எண்ணம் இல்லை. அதை விட மகிழ்ச்சியாக பணியாற்றக் கூடிய இடத்தை என்னால் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது"
அவரால் கற்பனை செய்ய முடியாமல் போகட்டும். உங்களால் ஜீரணிக்க முடிகிறதா? என்னால் எல்லாம் முடியவில்லை, சாமி! தன் தேசத்து மனிதன், தன் மொழி பேசும் மனிதன் ஒருவனுக்கு உலக அளவில் ஒரு அங்கீகாரம் என்று தெரிந்து சந்தோஷமாய் கொண்டாடும் மனிதர்களை இப்படியா அலட்சியப்படுத்துவது? தனது அன்றாடப் பணிகளுக்கு தொந்தரவாகவே இருந்தாலும் அதனை இப்படியா காலில் போட்டு மிதிப்பது?
அப்படி எத்தனை நாள் இவர்கள் தொந்தரவு செய்துவிடப் போகிறார்கள்? பிறந்த மண்ணின் மீது அணு அளவு கூட சினேகமும், பிரியமும் தொனிக்காத இந்த மனிதன் யாராயிருந்தால் நமக்கென்ன?
மனிதகுலத்துக்கு நல்லது செய்கிற கண்டுபிடிப்புகளை நிகழ்த்துகிற சாதனைக்குத்தான் இந்த பரிசு, வெங்காயமெல்லாம். சக மனிதனையே நேசிக்கத் தெரியாத இந்த அந்நியனுக்கு நோபல் பரிசு கிடைத்தால் என்ன, கிடைக்காவிட்டால் என்ன.
வாருங்கள் குசும்பன். நிச்சயம் உங்களைப் போன்றவர்களுக்கு போன் செய்ய நேரத்தை ஒதுக்கலாம், சந்தோஷமாக!
*
என்னைக் கவர்ந்த பதிவர் 1
கொஞ்ச காலமாகவே யோசித்து வந்தது. இப்போதுதான் சாத்தியமாகி இருக்கிறது. இலக்கியம் குறித்து திட்டமிடல்களோடு உட்காருகிற சமயம், எதாவது நிகழ்வுகள் தொந்தரவு செய்து விடுகின்றன. உன்னைப்போல் ஒருவன், நோபல் பரிசு என ஊர்சுற்ற ஆரம்பித்து விடுகிறேன். இப்போது திரும்பவும் வீட்டிற்கு வந்துவிட்டேன். இந்த கதியில்தான் வாழ்வும் சரி, வலையுலகமும் எனக்கு வாய்த்திருக்கிறது.
வலைப் பக்கங்களில், அடுத்தவர்களுடைய பதிவுகளை ஏழெட்டு மாதங்களாக படித்து வருகிறேன். ஒன்றிரண்டு என ஆரம்பித்து, கொஞ்சம் கொஞ்சமாக கூடி இன்று அறுபத்திரண்டு வலைப்பக்கங்களை என்னுடைய கூகிள் ரீடரில் வைத்து படித்து விடுகிறேன். இன்னும் சேர்க்க வேண்டியது இருக்கிறது. அய்யனார், கே.பாலமுருகன், ஆடுமாடு, போன்றோரது பல பதிவுகளை இன்னமும் படிக்காமல் சேமித்து வைத்திருக்கிறேன். அவர்களுடைய எழுத்துக்களின் மீது எனக்கு பிரமிப்பும், மோகமும் உண்டு. மெல்ல ஆற அமர படிக்க வேண்டும் என நினைத்து, அவை ஒருபக்கம் அதிகமாகிக்கொண்டே இருக்கின்றன. எப்போது கம்ப்யூட்டரைத் திறந்தாலும் ஒரு உறுத்தல் வருகிறது. அதற்குள் பலரது வலைப்பூக்கள் ரீடரில் மலர்ந்து இருக்கின்றன. அதை நோக்கி ‘கர்சர்’ விரைகின்றது. இதற்காக மற்றவர்களது பதிவுகள் படிப்பதற்கு சுலபமானவை, அடர்த்தியில்லாதவை என்று அர்த்தமாகி விடாது. எனக்கு அப்படியொரு சுபாவம். அவ்வளவுதான். இது எல்லோருக்குமே இருக்கும் என்றே நினைக்கிறேன்.
இந்தப் பதிவுகளைப் படிக்கும்போது சிலருடைய எழுத்தும், சிந்தனையும் சட்டென்று ஒரு கணத்திலோ, ஒரு இடத்திலோ பற்றிக்கொள்ளும். நெருக்கமாய் உணர வைக்கும். அப்படிப்பட்டவர்களின் வலைப்பக்கங்களுக்குச் சென்று ஆரம்பத்தில் இருந்து படிக்க ஆரம்பிப்பேன். முதன்முதலாக இப்படி படிக்க ஆரம்பித்தது செல்வேந்திரனை. அது ஒரு புது அனுபவத்தைத் தந்தது. ஒரு பதிவைப் படித்து பின்னூட்டம் போட்டு விட்டு வேறொரு பதிவரின் பதிவுக்குச் செல்வது ஒரு பத்திரிகையை படிப்பது போல. ஒரே பதிவரின் பதிவுகளைத் தொடர்ந்து படிப்பது ஒரு சிறுகதைத் தொகுப்பு, கவிதைத் தொகுப்பு, ஒரு நாவல் படிப்பது போல. கூடவே அந்த பதிவர் நம்மோடு தனியாக வந்துகொண்டு இருப்பார். அவரது உலகம், மொழி, நடை எல்லாம் துல்லியமாக உணர முடியும். எனக்கு இதுவும் பிடித்திருந்தது. இரவு பத்து மணிக்கு மேல் ஆரம்பித்து இரண்டு மணி வரைக்கும் கூட சிலரது வலைப்பக்கங்களை வாசித்துக் கொண்டே இருந்திருக்கிறேன். இருக்கிறேன்.
இந்த அனுபவத்தை பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று தோன்றியது. ‘என்னைக் கவர்ந்த பதிவர்கள்’ என்னும் இந்த தொடருக்கான அர்த்தம் இதுதான். எனக்குள்ள புரிதலில் ஒரு பதிவரின் எழுத்துக்களை பார்த்த விதமே இது. ஒரு கோணம். ஒரு பார்வை. அவ்வளவே.
தீவீரமான, அடர்த்தியான, முற்போக்கான எழுத்துக்களைப் பற்றித்தான் எழுதப் போகிறேன் என்று எந்த முன்முடிவுக்கும் போய்விட வேண்டாம். நல்ல கவிஞர்கள், நல்ல சிந்தனையாளர்களோடு ரொம்ப ரொம்ப ஜாலியான, அரட்டை அடிக்கும் பதிவர்களும் என் லிஸ்டில் இருக்கிறார்கள். பின்னூட்டங்களிலேயே பிரமாதப்படுத்துகிறவர்களும் இருக்கிறார்கள். அவர்களையும் இந்த சந்திக்கு கொண்டு வந்து நிறுத்தாமல் விடப்போவதில்லை.
இப்போது ஆரம்பிப்போமா. ‘அ’ன்னா....
அமித்து அம்மா எழுதிய ‘உப்பு’ என்னும் இந்தப் பதிவுதான் நான் அவர்களது வலைப்பக்கத்தில் முதன்முதலில் படித்தது என நினைக்கிறேன்.
சாப்பாட்டை பார்த்தாலே சட்டென்று உப்பின் ஞாபகம்தான் வருகிறது. சமையலறைக்கு போனாலுமே உப்பின் ஞாபகம்தான். எவ்வளவுதான் கவனமாக இருந்தாலும் எப்படியாவது கூடிவிடுகிறது, இல்லையாவது குறைந்துவிடுகிறது. ஆனால் சரிக்கு சரியாய் இல்லை. கொஞ்ச நாட்களாகத்தான் இப்படியென்றாலும், இன்று எல்லோருமே டிபனை புறக்கணித்ததால் மிகவும் சங்கடப்படுத்திக்கொண்டே இருக்கிறது.
அடுத்தடுத்து தொடரும் இந்த விவரிப்புகள் ஒரு தேர்ந்த கதைசொல்லிக்கே உரியது. கண்ணிகளைக் கோர்க்கிற, சீட்டுகளைச் சேர்க்கிற இந்த லாவகம்தான் எழுதுகிறவர்களுக்கு முக்கியமானது. இது அமித்து அம்மாவிடம் ஏற்கனவே இருந்தது போலும். சொல்ல வருகிற விஷயங்கள் வாசகனுக்குள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். தொந்தரவு செய்ய வேண்டும். அதுவும் அமித்து அம்மாவுக்கு வாய்த்திருந்தது. ஆண்களின் உலகத்திற்கும், பெண்களின் உலகத்திற்கும் இடையே எவ்வளவு பெரிய சுவர் இருக்கிறது என்பதற்கு இந்த உப்பு ஒரு உரைகல் போல. ஆண்களின் சிந்தனையிலே இல்லாத இந்த உப்பு, பெண்களை என்ன பாடு படுத்திக்கொண்டு இருக்கிறது!
இதற்குப் பிறகு மழை வரும்போதெல்லாம் ஓடிப்போய் நனைய ஆரம்பித்தேன். சரளமான நடையும், மிக இயல்பான மொழியும், சட்டென்று கசிந்துருக வைக்கிற அனுபவங்களுமாய் இருந்தன. உளவையும், பத்மாவையும் படித்த யாரும் இதனை உணர்ந்திட முடியும். தொண்டை அடைத்துப் போக வைத்த பதிவுகள் அவை. மழையின் எல்லாப் பக்கங்களையும் படிக்க வேண்டும் என்னும் தாகத்தை இந்தப் பதிவுகளேத் தந்தன. முதல் துளியைத் தேடிச் சென்றேன்.
2008 ஆகஸ்டில்தான் அமித்து அம்மா வலைப்பக்கம் ஆரம்பித்து இருந்தார்கள். முதல் பதிவைப் பார்த்ததும் ஆச்சரியமும், சந்தோஷமும் என்னை ஆட்கொண்டன. அழகழகான குழந்தைகளின் படங்கள்! தவழ்ந்து கொண்டு இருந்த இந்த அழகுகள்தான் இப்போது எழுந்து நடந்துகொண்டும், ஓடிக்கொண்டும் இருக்கின்றன போலும். படங்களோடு வந்த பதிவுகளுக்குப் பிறகு மெல்ல மெல்ல தயக்கத்தோடு கவிதைகளாய் சில பதிவுகள். சமூக அக்கறையோடு வந்தாலும் அவை சுமாராகத்தான் இருக்கின்றன. ஆனால் ஒன்றைத் தாண்டியே இன்னொன்று இருந்தது. இது அவசியம். வளர்ந்து, வளர்ந்து ஒருக்கட்டத்தில் இப்படி ஒரு கவிதையாகவே வெளிவருகிறது!
சிறுகுறிப்பு வரைக
20 வரிகளுக்கு மிகாமல்
2 பக்கங்களுக்கு குறையாமல்
இவை எல்லாவற்றிலும்
எழுதிவிட முடிகிறது
வாழ்க்கையை
எழுதத்தெரியாதவனுக்கு
இன்னும் சுலபம்
ஒரு பெருமூச்செறிதல்
இயம்பிவிடும்
தொடர்ந்து, சின்னச் சின்ன உரையாடல்கள் மூலம் சில பதிவுகள் எழுத ஆரம்பிக்கிறார்கள். அப்போதுதான் அப்பாவைப் பற்றிய அந்தப் பதிவு வருகிறது. தன்னை அப்படியே வெளிப்படுத்திக் கொண்டு, வாய்விட்டு அழுது, அழவைத்த அமித்து அம்மாவின் எழுத்தும் வருகிறது. ‘பிராக்ரஸ் ரிப்போர்ட் வாங்க நீ வரவேண்டாம்’ என்று அப்பாவிடம் சொல்கிற குழந்தையும், தன் திருமணத்திற்கு வரமாட்டியா அப்பா என ஏங்குகிற குழந்தையும் வாசகனின் நினைவுகளில் எப்போதும் கூட வரத்தான் செய்வார்கள். இரண்டும் ஒரே குழந்தையாய் இருப்பதில்தான் வாழ்க்கை சிரித்துக் கொண்டு இருக்கிறது.
மேலே குறிப்பிட்ட கவிதையும், அப்பாவைப் பற்றிய பதிவும் முக்கியமானவை. ஆமாம். இந்த இடங்கள் மிக முக்கியமானவை. அமித்து அம்மாவின் எழுத்துக்களில் பக்குவமும், நிதானமும், தெளிவும் பிடிபட ஆரம்பித்த இடம் இவை. எல்லோருக்கும் இப்படி ஒரு இடம் வாய்க்கும். கிறுக்கி கிறுக்கிப் பார்த்து, சட்டென்று நாம் நினைத்த உருவம் ஒன்று வெளிப்படும். அதிலிருந்து வேறொரு இடத்திற்கு படைப்பாளி நகர ஆரம்பிக்கிற புள்ளி இது. தொடர்ந்து எழுதிக்கொண்டு இருப்பவர்களின் எழுத்துக்களில் இந்த மாற்றம் தன்னையறியாமல் நிகழ்ந்து கொண்டே இருக்கும். இதற்குப் பிறகு அமித்து அம்மா தன்னை உணர்ந்து கொண்ட மாதிரி, தன்னம்பிக்கையோடு நிறைய சொல்ல ஆரம்பிக்கிறார்கள். இதோ, பொருத்தமற்ற தலைப்பு, ஒப்புக்கு அழுகை, அன்புள்ள அப்பாவிற்கு, பெட்டிக்குள் தாலி, மிளகாய் கிள்ளி சாம்பார், முதல் மூன்று பின்னூட்டங்கள், உப்பு, பத்மா, உளவு போன்ற அருமையான பதிவுகளை எழுதி முடித்திருக்கிறார்கள். இதில் சிலவற்றை திருத்தி எழுதினால் இன்னும் அற்புதமாக வரும் என்பது என் கருத்து.
வாசிப்பு அனுபவங்களைப் பற்றி குறையத்தான் எழுதி இருக்கிறார்கள். எழில் வரதன் மற்றும் கண்மணி குணசேகரனின் சிறுகதைகள் பற்றிய இரு பதிவுகளே இருக்கின்றன. முற்போக்கு, பின்நவீனத்துவம் என எந்த பாதிப்பும் இல்லாமல் அவர்கள் பாட்டுக்கு எழுதிக்கொண்டு இருக்கிறார்கள். இப்படியே எழுதக் கடவட்டும். சில பிரக்ஞைகள், நமது இயல்பான ஓட்டத்தைக் குலைத்து பெரும் தயக்கங்களை கொண்டு வந்து சேர்க்கும். அறம் சார்ந்து மட்டுமே அவர்கள் யோசிக்கிறார்கள். எழுதுகிறார்கள். பழசை நினைத்து என்னை புதுசாக்கிக் கொள்கிறேன் என்று அவர்கள் குறிப்பிடுவதற்கு வேறென்ன அர்த்தம் இருக்க முடியும்? என்னைப் போன்றவர்களுக்கு மேலோட்டாமாக, அவர்கள் எழுதிய பிறவியில் குற்றங்கள் தெரியலாம். பிறவிகள் குறித்து இந்த சமூகத்தில் மிதந்து கொண்டு இருக்கும் கற்பிதங்கள் என்னென்ன கற்பனைகளை ஒரு நுட்பமான, பிரியமுள்ள மனுஷிக்கு ஏற்படுத்துகிறது என்பதுதான் அந்தப் பதிவு. அதை நகைச்சுவையோடும், வலியோடும் வெளிப்படுத்தி இருக்கிறார்கள். கொஞ்சம் நிதானமாக திருத்தி எழுதினால், பிறவியும் மிகச்சிறந்த பதிவுகளில் ஒன்றாக இருக்கும் என்றே நினைக்கிறேன். சினிமா குறித்த அனுபவத்தை பகிர்ந்து கொள்ளும்போதே இந்தப் பிறவி குறித்த சந்தேகங்களை அழகாக முன்வைக்கிறார்.
என்ன படம்னுலாம்னு நினைவில்லை. ஊர்ல எங்க அம்மாவோட பாத்தது. தரை (மண்) டிக்கெட், சேர்(கட்டை சேர்) டிக்கெட், என்னை சேர்ல உக்கார வெக்கலைன்னு அழுதுகிட்டே தூங்கிட்டேன். அப்புறம் எதோ ஒரு சாமி படம். இது நல்ல ஞாபகமிருக்கு. கடைசியில ராதாரவின்னு நினைக்கிறேன். அவரை சுட்டுடுவாங்க. அவர் சுடப்பட்டு உடம்பெல்லாம் ரத்தமாகி செத்துடுவார். இதைப் பாத்துட்டு அப்புறம் கொஞ்ச நாள் கழிச்சு இன்னொரு படம் பார்க்கிறேன். அதில் அதே ராதாரவி உயிரொடு இருக்கிறார். எனக்கு அந்தப் படத்தில் மனம் செல்லவேயில்லை. எனது மனம் முழுதும் எப்படி செத்தவர் திரும்பி வந்தார்னுதான் சந்தேகம்.
அமித்து அம்மாவின் வலைப் பக்கங்களைப் படித்தால் மூன்று விஷயங்கள் தெளிவாகும். முதலாவது கிராமம் சார்ந்த ஒரு வாழ்க்கை அவர்களுடைய அழகிய கனவு போல் இருக்கிறது. இரண்டாவது தினமும் வேலைக்குச் செல்லும் எலக்டிரிக் டிரெயின், நடைபாதைக் காட்சிகள் அவர்களுடைய நனவுலகமாக இருக்கிறது. அடுத்தது, எப்போதும் கூடவே இருக்கிற சமையலறை. தனக்கான விருப்பங்களாக எதையெல்லாம் சொல்கிறார்கள், பாருங்கள்:
வெற்றுக் கைகளை சில்லிட வைக்கும் பால் பாக்கெட்,
காரைத் தரையில், கட்டை தென்னந்துடைப்பத்தால் வரும் சர்... ரக், சர்... ரக் ஓசை,
பின்னர் வளையல் ஒலியினூடே வரும் ஸலக், ஸலக் தண்ணீர் தெளிக்கும் ஓசை.
குழாயைத் திறந்தபின் ஒரு சட சட சத்தத்துக்கு பின்னர், சில்லென்று கை மேலே படும் நீர் துளிகள்.
பார்த்துக்கொண்டே இருக்கும் போதே புஸ்ஸென பொங்கும் பால்,
ஒரு சோம்பலுடன் அடிநாக்கில் தித்திப்பும் கசப்புமாய் படரும் காபி,
சின்னதும் பெரியதுமான நீர் கொப்புளங்களுடன் சல சலவென கொதிக்கும் உலை.
ஒரு நொடியும் கடத்தாது, உள்ளிருக்கும் அழுத்தத்தை சரியான இடைவெளியில் ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் என்று வெளியேற்றும் குக்கர்,
எங்கோ பாத்திரங்கள் உருளும் ஓசை, பூக்காரர், தயிர்க்காரரின் ரைமிங்க் கத்தல்கள்
இடையிடையே சிணுங்கலுமாய், சிரிப்புமாய் ஓடிவந்து காலை கட்டிக்கொள்ளும் செல்ல மகள்
பெண்மனதின் உலகம் எதற்குள் உருண்டோடிக்கொண்டு இருக்கிறது! ‘இதுதான் நாங்கள், இப்படித்தான் நாங்கள்’என்று வேதனையோடு ஆர்ப்பாட்டம் செய்யாமல், மிக அமைதியாக புரிய வைக்கிறார்கள். அதுதான் அமித்து அம்மா! இத்தனையோடும்தான் இவர்கள் பதிவு எழுதிக் கொண்டு இருக்கிறார்கள் என்பது மலைக்க வைக்கிறது. அமித்து அம்மாவுக்குள் வாழ்க்கையனுபவங்கள் நிறைய நிறைய இருக்கின்றன. அது எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. அவைகளில் பூத்திருக்கும் அபூர்வ கணங்களைப் பிடித்து எல்லோருக்கும் வாசம் காட்ட முடிகிறது அவர்களால்.
மகளே!
என் தாய்க்கு
சரியான மகளாய்
வாய்க்காது போன
நான்
உனக்காவேனும்
ஒரு
தாயாய் இருக்க
என அவர்கள் குழந்தையை மழையாக்கி ஆசைப்படுவதில் ஆயிரம் அர்த்தங்களும், ஏக்கங்களும் தொனிக்கின்றன. ஒரு பொறுப்புணர்வு மிக்க படைப்பாளியாய் அமித்து அம்மா நிச்சயம் வருவார்கள்.
காலம் அவர்களது எழுத்துக்களுக்கு வாசல் தெளித்து கோலம் போட்டு வைத்திருக்கிறது.
*
மீண்டும் மைக்கேல்மூர், மீண்டும் ஒபாமா, மீண்டும் நான், மீண்டும் அனானிகள்
Itsdifferent என்னும் நண்பர், சென்ற பதிவிற்கு 14வது பின்னூட்டமாக ஒரு தகவலைத் தெரிவித்திருந்தார். “நோபல் பரிசு குறித்து ஒபாமாவுக்கு இரண்டாவது கடிதத்தை மூர் எழுதி இருக்கிறார். அவரது நிலைபாடு இப்போது மென்மையாய் தெரிகிறது” என தெரிவித்திருந்தார். இன்று காலையில்தான் மெயிலில் பார்த்தேன். லிங்க் மூலம் மூரின் இரண்டாவது கடிதத்தையும் படித்தேன். அதுகுறித்து நம் மக்களிடம் சொல்ல வேண்டியதும், பதிவு செய்ய வேண்டியதும் அவசியம் என நினைத்தேன். சட்டென்று அடக்க மாட்டாமல் சிரிப்பு வந்தது.
வேறொன்றுமில்லை. சில நாட்களாக அனானிகள் மாறி மாறி பின்னூட்டங்கள் அனுப்பிக் கொண்டு இருக்கிறார்கள். வேலைவெட்டி இல்லாமல் தினமும் எதாவது பதிவு போடுவதற்கு துடித்துக்கொண்டு இருக்கிறேனாம். அரைகுறையாம். தெரிந்ததையெல்லாம் உளற ஆசைப்படுகிறேனாம். பக்கம் பக்கமாய் எழுதி அனுப்புகிறார்கள். பாவமாய் இருக்கிறது. நன்றாகத் தெரிந்தவர்கள்தான் அவர்கள். (statcounter லிங்க் மூலம் சென்று recent visitors activityயில் கிளிக் செய்தால் யார் வந்தது, எப்போது பின்னூட்டம் இடப்பட்டது என்பதைத்தான் பார்க்க முடிகிறதே! தொடர்ந்து கண்காணித்தால் போதும்.) ஏன் இப்படி அனானியாக வந்து புலம்ப வேண்டும் எனத் தெரியவில்லை. நேரடியாகவே சொல்லித் தொலைக்கலாமே. நான் ஒன்றும் மறுக்கப் போவதில்லையே.
எல்லாம் தெரியும் என்று நான் நினைத்தால் என்னைப் போல் ஒரு முட்டாள் இருக்க முடியாது. என்னளவில் தெரிந்ததை, என் சிற்றறிவுக்குப் புரிந்ததை பதிவுலகத்தில் பகிர்ந்து கொள்கிறேன். அதுகுறித்த கருத்துக்களை, ஆரோக்கியமான எதிர்வினைகளை உள்வாங்கிக் கொள்கிறேன். அந்த விவாதத்தில் சில வெளிச்சங்கள் கிடைக்கின்றன. தொடர்ந்து என்னை வெளிப்படுத்துகிறேன். தேடியறியும் காரியம்தான் இதுவும். அரைகுறைகள் தேடித்தான் ஆகவேண்டும். எல்லாம் தெரிந்துவிட்டால் இந்த லேப்டாப் எதற்கு? பிளாக் எதற்கு? இந்த அனானிகள் எதற்கு?
உன்னைப்போல ஒருவனைத் தொடர்ந்து எழுதினேனாம். இப்போது நோபல் பரிசைப் பற்றித் தொடர்ந்து எழுதுகிறேனாம். நாளை என்ன எழுதப்போகிறேன் என்று தெரியாவிட்டால் அவர்கள் மண்டை உடைந்து விடுமாம். (ஐயோ! இந்தப் பாவமும் எனக்கு வந்து சேர வேண்டுமா!) நான் என்ன செய்யட்டும், ஆனானப்பட்ட மைக்கேல் மூரே, ஆனானப்பட்ட ஒபாமாவைப் பற்றி நேற்றும், இன்றுமாய் தொடர்ந்து எழுதும்போது நானெல்லாம் எம்மாத்திரம்?
ஒபாமா நோபல் பரிசு பெற்றதையொட்டி மைக்கேல் மூர் ஒபாமாவுக்கு எழுதிய கடிதத்தை இரண்டு தினங்களுக்கு முன் பதிவு செய்திருந்தேன். நேற்று மூர் தனது இரண்டாவது கடிதத்தை எழுதி இருக்கிறார். (முழுமையாக கடிதத்தைப் படிக்க விரும்புவோர் இங்கு சென்று படித்துக் கொள்ளுங்கள்.) அதில் உள்ள முக்கிய விஷயங்களை மட்டும் இப்போது பகிர்ந்து கொள்வோம்.
நான் கடிதத்தை எடுத்துத் திரும்பவும் படித்தேன். ஒபாமாவின் முக்கிய தினத்தைக் கிழித்து நேற்று முழுவதும் வலதுசாரி இயந்திரங்களின் வெறுப்பு உமிழ்ந்ததை பார்த்துக் கொண்டிருந்தேன். இடதுசாரிகளான நானும் மற்றவர்களும் அதையேச் செய்வது எப்படி சரியாய் இருக்கும் எனத் தோன்றியது.
என கடிதத்தின் ஆரம்பத்தில் தனக்குள் மாற்றம் வேண்டும் என்பதை அவர் உணருகிறத் தருணம் குறிப்பிடப்படுகிறது. அமெரிக்காவில், ஒபாமாவுக்கு நோபல் பரிசு கொடுக்கப்பட்டதற்கு அதிகார மையங்களிலிருந்தே கண்டனங்கள் வருவதைப் பார்க்கிற மூர், ஒபாமா குறித்து இந்த நேரத்தில் எப்படி புரிந்து கொள்வது என முயற்சிக்கிறார். இந்த கடிதத்தின் சாராம்சமே அதுதான்.
நாம் தொடர்ந்த யுத்தங்களால் சலிப்புற்று, களைப்புற்று இருக்கிறோம். இந்த இரண்டு யுத்தங்களில் நாம் செலவிட்ட பெரும் தொகை ஏறத்தாழ இந்த தேசத்தை பொருளாதார ரீதியாகவும், மனோரீதியாகவும் திவாலாக்கி இருக்கிறது. ஈராக்கில் யுத்தத்திற்கு செலவிட்ட தொகையின் மூலம், மூன்றாம் உலக நாடுகள் அனைத்திற்கும் குடிதண்ணீர் கிடைக்க ஏற்பாடு செய்திருக்கலாம். நமக்காக ஒபாமா மெல்ல பயணமாகிறார். பைத்தியக்காரத்தனமான எட்டு வருடங்களை நல்ல திசைக்குத் திருப்பும் இந்த முயற்சியில் நாம் அவரோடு இருக்கிறோமா என பார்க்கிறார். யாரால் இதனை ஒன்பது மாதங்களில் செய்ய முடியும்? அவர் என்ன சூப்பர்மேனா?
என்று கேள்வி எழுப்பி “ மாறுதலுக்கான நமது வாழ்வின் நம்பிக்கையை புறம் தள்ளிவிடக் கூடாது” என்று வலியுறுத்துகிறார்.
“அவர் என்ன செய்துவிட்டார்? அவருக்கு ஏன் இந்த நோபல் பரிசு” என பலர் கேட்கிறார்கள்?. அவர் அமெரிக்காவுக்கு அதிபராகி இருக்கிறார். அதற்குத்தான் இந்தப் பரிசு!
என மூர்க்கத்தனமான புஷ்ஷின் அத்தியாயம் முடிக்கப்பட்டதும், உலகத்தின் அச்சத்தைப் போக்கியதுமே நோபல் பரிசு பெறுவதற்கு போதுமான தகுதிகள் என விளக்குகிறார். தான் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி, இரண்டாவது முறையாகவும் நோபல் பரிசு பெறுகிற மனிதராய் ஒபாமா விளங்க வேண்டும் என்று கடிதத்தை முடிக்கிறார்.
மாறுதல்களை நோக்கி அமெரிக்காவையும், உலகத்தையும் நகர்த்த வேண்டும் என்னும் மூரின் கனவுகளே கடிதத்தில் எழுத்துக்களாய் விதைக்கப்பட்டு இருக்கின்றன. அதிகாரத்தின் பிடியில் இறுகி இருக்கும் வெள்ளை மாளிகையில் இருந்து ஒபாமா என்ன செய்யப் போகிறார் என்பதை இப்போதைக்கு காலம் மட்டுமே அறிந்து வைத்திருக்கிறது. கடந்தகால வரலாறு வேறு செய்தியை சொல்லிக்கொண்டு இருக்கிறது. மைக்கேல் மூருக்கும் அது தெரியும் என்பதுதான் சுவாரசியம்.
பூக்களிலிருந்து சில புத்தகங்களுக்கு ஏராளமான சுட்டிகள் வந்து கொண்டு இருக்கின்றன. நிறைய வலைப் பக்கங்களையும் படிக்கிறேன். பலரது எழுத்துக்கள் என்னை மிகவும் கவர்கின்றன. அவர்களது மொத்த வலைப்பக்கப் பதிவுகளையும் கொஞ்சம் கொஞ்சமாக படித்துக் கொண்டு இருக்கிறேன். எழுத ஆரம்பத்ததிலிருந்து அவர்கள் எப்படி வளர்ந்து கொண்டு இருக்கிறார்கள் என்பதும், மாறி இருக்கிறார்கள் என்பதும் புரியமுடிகிறது! அந்தப் புரிதலோடு ‘என்னைக் கவர்ந்த பதிவர்கள்’ என்று மாதத்திற்கு குறைந்த பட்சமாக இருவரையாவது அடையாளம் காட்ட நினைத்திருக்கிறேன். நாளை அதில் முதலாமவர்.....!
*