பாலம் கடந்து சாத்தூர் ஆரம்பிக்கிற இடத்தில் வலப்பக்கத்தில் சட்டென்று ஆற்றை நோக்கி திரும்பும் ஒரு சின்னச்சந்து போன்ற தெருவின் துவக்கத்தில், மாடியில் வரிசையாய் இருந்த மூன்று குடியிருப்புகளில் நடுவே இருந்தது சங்க அலுவலகம். வீடுகளைப் போல இருந்தாலும், குடும்பமாக யாரும் தங்கியிருந்தது இல்லை. இப்படி அலுவலகங்களில் பணிபுரிபவர்களே தங்கியிருந்தனர். முன்பக்கம் வாசலைத் திறந்தால் மூன்று குடியிருப்புக்கும் பொதுவாக பால்கனி நீண்டிருக்கும். அங்கு நின்றால் கீழே தெருவும், நேர் எதிரே கொஞ்சம் தள்ளி மசூதியும் தெரியும். பின்பக்க வாசலைத் திறந்தால் மூன்று குடியிருப்புக்கும் பொதுவான சின்ன மொட்டைமாடி ஐந்தடி பக்கச் சுவரோடு காட்சியளிக்கும். கழிப்பறைகள், தண்ணீர் டேங்க் எல்லாம் அங்குதான். பக்கச்சுவர் அருகே சென்று பார்த்தால் எப்போதும் இரைந்து கொண்டிருக்கிற மெயின்ரோடு தெரியும். ஆற்றையொட்டி நிற்கிற மரங்களும், அதில் பிரம்மாண்டமான உருவத்தோடு அந்த புளிய மரமும் பார்வையை வசப்படுத்தும்.
அந்த புளியமரத்தின் அடையும் பட்சிகளின் சத்தங்களில் நாட்கள் புலர ஆரம்பித்தன. பிலால் டீக்கடையிலிருந்து வரும் அப்பாஸ் "தோழர்" என்று கதவைத்தட்டி நிற்பான். திறந்தால் நான்கு டீக்களோடு சிரிப்பான். காலையில், ஆற்றின் ஊற்றுக்களில் சென்று குளிப்பது வழக்கமானது. இரவுகளில் தொலைதூரத்தில் இருந்து வரும் தோழர்கள் கதவைத்தட்டுவார்கள். டிரான்ஸ்பருக்கு, தலைமையலுவலகத்தில் அடுத்தநாள் ஸ்டேசனரி எடுப்பதற்கு, கிளையில் எதாவது பிரச்சினை என்று வரும் அவர்களை சங்க அலுவலகம் ஆதரவோடு பராமரிக்கும். தினந்தோறும் 'அன்புள்ள பொதுச்செயலாளர் பி.கேவுக்கு...' என ஆரம்பித்த கடிதங்கள் ஏராளமாய் கிருஷ்ணகுமாருக்கு வரும். தலைமையலுவலகத்தில் டிபார்ட்மெண்ட்டில் சென்று அந்தக் கடிதங்களில் உள்ள பிரச்சினைகள் குறித்து உடனடியாக பேசி அன்று சாயங்காலமே பதில் எழுதிப் போடுவார். பல கடிதங்களுக்கு பி.கே (கிருஷ்ணகுமார்) சொல்லச் சொல்ல நான் எழுதுவேன். எப்போதும் தோழர்களின் வருகைகளோடும், நிர்வாகத்தின் நடவடிக்கைகளைப் பற்றிய விவாதங்களோடும் 42,பி-எல்.எப்.தெரு உயிரோட்டத்தோடு இருந்தது.
பி.கேவைப் பார்க்க சங்கத் தோழர்கள் மட்டுமில்லாமல் வெளியிலிருந்தும் அவ்வப்போது தோழர்கள் வந்து செல்வார்கள். அவர்களோடெல்லாம் நெருக்கமாக பழகமுடிந்தது. எழுத்தாளர்கள் தனுஷ்கோடி ராமசாமி, மேலாண்மை பொன்னுச்சாமி, வக்கீல் மாரிமுத்து, டாக்டர் வல்லபாய், விகடன் மாணவ நிருபராய் அப்போது இருந்த சௌபா போன்றோரெல்லாம் அடிக்கடி வருவார்கள். திடுமென இரவு பத்து மணிக்குப் போல தோழர்.எஸ்.ஏ.பெருமாள் வந்து வந்து நிற்பார். விடிய விடிய பி.கேவும், எஸ்.ஏ.பியும் பேசிக்கொண்டிருப்பார்கள். எம்.ஜி.ஆரைப் பற்றி, ராஜிவ் காந்தியின் இருபத்தொன்றாம் நூற்றாண்டுக்கான அழைப்பு பற்றி, கோர்பச்சேவின் உலக அமைதிக்கான நடவடிக்கைகள் பற்றி செய்திகள் விரிந்து கொண்டிருக்கும். முடிந்தவரை விழித்துக் கேட்டு, அப்படியே தூங்கியும் விடுவேன். அவர்கள் இருவரும் எப்போது தூங்குவார்கள் என்று தெரியாது. காலையில் "மாது...எந்திரி' என்று டீக்குடிக்க பி.கே எழுப்புவார். எஸ்.ஏ.பி பேப்பர் படித்துக் கொண்டிருப்பார். எதோ கனவு மாதிரி எல்லாம் நினைவுக்கு வரும். வாழ்க்கை என்பது சாதாரணமானதல்ல என்பது மெல்ல மெல்ல படிந்து கொண்டிருந்தது.
சங்க அலுவலகத்தில் நான், ஜீவலிங்கம், அழகப்பன், பெருமாள்சாமி ஆகியோர்தான் பெரும்பாலும் இருப்போம். காமராஜ் சாயங்காலங்களில் வந்திருந்துவிட்டு இரவில் நடுச்சூரங்குடிக்குப் போவான். பி.கே இல்லாத சமயங்களில் நேரப்போக்கிறகு பின்புறம் உள்ள வெளியில் உட்கார்ந்து சீட்டு விளையாடுவோம். பக்கத்து அறைகளில் இருந்த தோழர்களும் அதில் கலந்து கொள்வார்கள். ஒருநாள் அப்படி விளையாடிக் கொண்டிருந்தபோது பி.கே வந்தார். எங்களைப் பார்த்ததும் சட்டென முகம் மாறியது. "என்ன மாது...இது நல்லாயிருக்கா " என்றார். "இல்ல பி.கே. சும்மாத்தான்..." என்றேன். சட்டென அருகில் வந்து எல்லாச் சீட்டுகளையும் வெறிகொண்ட மாதிரி கிழித்துப் போட்டார். "இது சங்க அலுவலகம்...இங்க இது வேண்டாம்...ஏற்கனவே பேர் ரொம்ப நல்லாயிருக்கு" என்றார். பி.கேவின் அந்தக் கோபம் வித்தியாசமாயிருந்தது. அதே நேரம் கடுமையான அவமானமாய் இருந்தது. விளையாட வேண்டாம் என்று சொல்லியிருக்கலாம். இத்தனை வேகமும், இப்படி கிழிப்பதும் ஏனென்று கோபம் கோபமாய் வந்தது. கொஞ்ச நேரத்தில் அவர் சமாதானமாகி விட்டார். மற்றவர்களும் இயல்பாகி அழகப்பனின் ஜோக்குகளுக்கு சிரித்துக் கொண்டிருந்தனர். எனக்கு ஒட்ட முடியவில்லை. ஒரு புத்தகத்தை எடுத்துக் கொண்டு தனியே உட்கார்ந்து இருந்தேன். சிந்தனை எழுத்துக்களில் இல்லை. கொஞ்ச நேரத்தில் "வா... மாது. சாப்பிடப் போவோம்" பி.கே அழைத்தார். "இல்ல வேண்டாம்" என்றேன் கோபத்தோடு. ஜீவலிங்கம் அருகில் வந்து "ஏல...சாப்பிட வர்றியா இல்லியா...இதென்ன சின்ன பிள்ள மாதிரி..." அதட்டிப் பார்த்தார். "சரி..வாங்க போவோம் " பி.கே மற்றவர்களை அழைத்துக்கொண்டு போனார். அப்படியே போய் நான் கடைசி அறையில் படுத்துக் கொண்டேன். சாப்பிட்டுவிட்டு வரும் அவர்களின் காலடி ஓசையும், கதவைத் திறக்கும் சத்தமும் கேட்டது. "மாது...எந்திரி" பிகே குரல் அருகில் கேட்டது. பேசாமல் படுத்துக் கிடந்தேன். தோளில் கைவைத்து "ஸாரி..." என்றார். "நான் கிழித்துப் போட்டிருக்கக் கூடாது." என்றார். பேசாமல் இருந்தேன். "சரி. முட்டை புரோட்டா வாங்கிட்டு வந்திருக்கேன். சாப்பிடு" என்றார். சாப்பிடணும் போலத் தோன்றியது. உடனே எழுந்திரிக்கவும் மனம் வரவில்லை. "பி.கே அப்பிடியே உட்கார்ந்து அவன் வாயில ஊட்டி விடுங்க...பச்சப் பாப்பா...அடப் போங்க பி.கே.. ஏல எழுந்திருக்கியா...இல்ல மேல தண்ணி எடுத்து ஊத்தட்டுமா" என்று ஜீவலிங்கம் அதட்டியதும் எல்லோரும் சிரிக்க அந்த இடம் கலகலப்பானது. லேசான சிரிப்போடும் ஒரு பொய்யான ரோஷத்தோடும் எழுந்து உட்கார்ந்தேன். எங்கேயோ குடும்பங்களை விட்டு தங்கியிருந்த நாங்கள் ஒரு குடும்பமாயிருந்தோம்.
எப்போதும் போராட்டங்களும், துடிப்போடும் சங்க அலுவலகம் இருந்தது. அடிக்கடி செயற்குழுக் கூட்டங்களும், தோழர்களின் வருகைகளும் இருந்தன. அதுபோன்ற சமயங்களில் நான், ஜீவா, அழகப்பன் எல்லோரும் சங்க அறைக்கு பின்பக்கம் இருந்த திறந்தவெளியில் படுத்துக் கொண்டு அரட்டை அடித்துக் கொண்டிருப்போம். அன்று அவர்கள் இருவரும் கொஞ்ச நேரத்தில் அவர்கள் இருவரும் தூங்கிப்போனார்கள்.
யுகங்களின் கதையை சிந்தியபடி, வானம் யாரும் அறியமுடியாத அண்டவெளியாய் விரிந்திருந்தது. தூக்கம் வரவில்லை. உள்ளே செயற்குழுக் கூட்டத்தின் சத்தங்கள் கேட்டுக் கொண்டிருந்தன. அம்மா, அப்பா, அண்ணன், தங்கை, அம்மு, கல்லூரியில் படித்த நாட்கள் எல்லாம் வானத்தில் இருந்து கசிந்து கொண்டிருந்தன. எதோ ஒருவேளையில் தூங்கியிருக்க வேண்டும். லேசாய் வானம் வெளுத்து, பறவைகளின் சத்தங்கள் புளிய மரத்திலிருந்து கிளம்பியபோது பி.கே எழுப்பினார். "டீ சாப்பிட வர்றியா" என்றார். உடனே எழுந்து கொண்டேன். நான், பி.கே, சோலைமாணிக்கம் தெருவில் இறங்கி நடந்தோம். பிலால் டீக்கடையில் நாகூர் அனிபாவின் குரல் டீயின் ஆவியாய், மணத்தோடு அதிகாலையில் மிதந்தது. கொஞ்சநேரம் என்னையே பார்த்திருந்த பி.கே சிகரெட்டை ஆழமாய் உள்ளிழுத்தபடி, "10ம் தேதி காலையில் இருந்து, தலைவர் பரமசிவம், பால்செல்லப்பா, கண்ணாடி லட்சுமணன், அப்புறம் நீ எல்லோரும் காலவரையறையற்ற உண்ணாவிரதம் இருக்கப் போகிறீர்கள்" என்றார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. எதோ சாகசம் போலவும் இருந்தது.
10ம்தேதி காலையில் பி.கேவோடு நாடார் மெஸ்ஸில் இட்லி சாப்பிட்டு விட்டு பந்தலுக்கு சென்றேன். காமராஜ் கைகொடுத்து, கட்டிப்பிடித்து வாழ்த்தினான். உண்ணாவிரதம் இருக்கும் தோழர்களுக்கு மாலையணிவித்து பி.கே பேசினார். உருக்கமும், ஆத்திரமும் மாறி மாறி பிரவாகமெடுத்தது. சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்களும், சில முன்னணித் தோழர்களும் கூட அமர்ந்திருந்தனர். ஒரு மகத்தான காரியத்தை செய்கிறோம் என்பது மட்டும் உள்ளுக்குள் ஓடிக்கொண்டிருந்தது. வேலைக்குச் சேர்ந்து, குடும்ப வாழ்வுக்குள் அடைபடாமல் இருந்த இந்த இரண்டு வருடத்தில் நேரத்திற்கு தூங்குவது, சாப்பிடுவது என்பதெல்லாம் அற்றுப்போயிருந்தது. மதியத்திற்கு மேல் தூங்கிவிட்டேன்.
விழித்துப் பார்த்த போது பந்தல் முழுக்க பேச்சு சத்தமாய் இருந்தது. அக்கம் பக்கத்தில் உள்ள கிளைகளில் இருந்து அன்றைய வேலைகளை முடித்துவிட்டு தோழர்கள் வந்திருந்தனர். தனுஷ்கோடி ராமசாமி என் கைகளைப் பிடித்துக் கொண்டு மெனமாய் இருந்தார். தோழர் சோலை மாணிக்கம் கோஷம் போட ஆரம்பித்தார். காமராஜ் வந்து என்னருகிலேயே உட்கார்ந்து கொண்டான். சாப்பிட பிடிக்காமல் இருந்தான். சத்தம் போட்டு ஜீவா அவனை அக்கா மெஸ்ஸுக்கு அழைத்துச் சென்றார். இரவில் கூடவே இருபது தோழர்களுக்கும் மேலே அதே பந்தலில் படுத்துக்கொண்டார்கள்.
இரண்டாம் நாளாக உண்ணாவிரதம் தொடர்ந்தது. தலமையலுவலகத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்த தோழர்கள் அவ்வப்போது வந்து பார்த்துச் சென்றனர். துப்புரவுத்தொழிலாளர் சங்கத் தோழர்கள் வந்து கொஞ்சநேரம் கூட அமர்ந்து, வாழ்த்திவிட்டுச்சென்றார்கள். நிப்புத் தொழிலாளர்கள் சங்கச் செயலாளராயிருந்த தோழர் பாலசுப்பிரமணியன் வாழ்த்திச் சென்றார். ஊரிலிருந்து எனக்கொரு தந்தி வந்திருந்தது. தங்கைக்கு குழந்தை பிறந்த செய்தி அது. அம்முவிடமிருந்து கடிதமும் வந்திருந்தது. களைப்பெல்லாம் நீங்கிப் போனது. அழகப்பன் எந்நேரமும் தூங்கிக் கொண்டே இருந்தான். இன்னொரு இரவு அந்த பந்தலில் கழிந்தது. சேவல் கூவும் சத்தமும், மசூதியிலிருந்து பாங்கி சத்தமும் கேட்டது. தெருவில் வாசல் தெளிக்க ஆரம்பித்திருந்தார்கள். செயற்குழு உறுப்பினர்கள் அங்கங்கே நின்று பேசிக்கொண்டிருந்தனர். "எப்படிரா இருக்கே.." என்றார் பி.கே தழுதழுத்து. "ஒண்ணுமில்ல.." என்றேன். நாக்கு வறண்டு போயிருந்தது. மூன்றாம் நாள் முழுக்க படுத்தேக் கிடந்தோம்.
நான்காம் நாள் காலையில் போலீஸ்காரர்களோடு வந்த அரசு மருத்துவர் ஒருவர் எங்களை பரிசோதித்து, நாடி மிகவும் தளர்ந்திருப்பதாக கூறி அரெஸ்ட் செய்து அழைத்துச் சென்றனர். மருத்துவமனையில் டிரிப்ஸ் ஏற்றப்பட்டது. கவர்ன்மெண்ட் ஆஸ்பத்திரியின் துர்வாடையும், அசையாமல் படுத்துக் கிடப்பதும் மிகுந்த தொந்தரவாயிருந்தன. பி.கேவிடம் சொன்னேன். ஒருமணி நேரம் கழித்து திரும்ப வந்த பி.கேவின் கைகளில் ஒரு புத்தகம் இருந்தது. நேரம் போகவில்லையென்றால் அதைப் படிக்குமாறு சொல்லி தந்துவிட்டுப் போனார். டிரிப்ஸ் இடது கையில் ஏறி கொண்டிருக்க, வலது கையில் அந்த புத்தகத்தை பிடித்துக் கொண்டேன். 'நினைவுகள் அழிவதில்லை'. புரட்ட ஆரம்பித்தேன்.
அடிமை பாரதத்தின் இருளடைந்த கேரளத்தின் கையூர் கிராமத்துப் பாதைகளில் நடக்க ஆரம்பித்தேன். சிருகண்டன் அப்புவை எழுப்பிக் கொண்டு செல்கிறான். மாஸ்டரை பார்க்கிறார்கள். ரகசியப்பிரச்சாரம், விவசாயிகள் சங்கம் அமைப்பது, உணர்வூட்டுவது, அரசியல் அறிவூட்டுவது, என்னும் மாஸ்டரின் கனவுகள் அவர்களை பற்றிக்கொள்கின்றன. வாழ்க்கை போராட்டப்பாதையாகிறது. சுற்றியுள்ள உலகம் எல்லாம் மறந்து எனக்குள்ளே கையூரின் இரத்தமும் சதையுமான காலங்கள் செலுத்தப்பட்டுக் கொண்டிருந்தன. மாஸ்டர் வரும்போதெல்லாம் எனக்குள் ஏனோ எஸ்.ஏ.பியின் உருவந்தான் வந்து கொண்டிருந்தது. பிரபஞ்சத்தைப் பற்றி, புரட்சியைப் பற்றி எத்தனையோ இரவுகள் அவரும், பி.கேவும் சங்க அலுவலகத்தில் பேசிக்கொண்டிருந்ததற்கெல்லாம் அப்போது அர்த்தங்கள் விளங்க ஆரம்பித்தன. இடையில் வங்கியின் டிரைவர் அவரது வீட்டிலிருந்து கஞ்சி வைத்து கொண்டு வந்திருந்தார். நான்கு நாட்களுக்குப் பிறகு சாப்பிடும் தாகத்தையெல்லாம் தாண்டி குஞ்ஞம்புவும், அபுபக்கரும், சிருகண்டனும், அப்புவும் நிறைந்திருந்தார்கள். மகன் நன்றாகப் படிக்க வேண்டும் என்னும் பெற்றோரின் கனவுகளையெல்லாம் உதறி அப்பு போராளியாக வளர்ந்துகொண்டிருந்தான். அடக்குமுறையும், நிலப்பிரபுக்களின் சூழ்ச்சிகளையெல்லாம் மீறி அவர்கள் முன்னேறிக்கொண்டு இருந்தார்கள். அரசாங்கம், காவல்துறை எல்லாம் விரட்ட அவர்கள் செங்கொடிகளை ஏற்றிக்கொண்டு இருந்தார்கள். தகிக்கும் மூச்சோடு மனைவி எங்கோ காத்துக் கொண்டிருக்க சிருகண்டன் மண்ணையும், மக்களையுமே சுவாசித்துக் கொண்டிருந்தான். டிரிப்ஸ் மூன்றாவது பாட்டில் ஏறிக்கொண்டிருந்தது. சாத்தூரின் இரவு, பகல் எல்லாவற்றிலும் இப்போது கையூர் போராட்டங்களே ஆக்கிரமித்துக் கொண்டிருந்தன. அடுத்தநாள் காலையில் ஆஸ்பத்திரியிலிருந்து டிஸ்சார்ஜ் செய்தார்கள். சங்க அலுவலகத்தில் உட்கார்ந்து புத்தகத்தையே தொடர்ந்து படித்துக் கொண்டிருந்தேன். யாரோடும் பேசமுடியவில்லை. அந்த போராளிகளுக்கு மரணதண்டனை விதிக்கப்படுகிறது. சிறைக்கம்பிகளுக்கு அந்தப்பக்கம் நின்று அபுபக்கரின் அம்மா பூபம்மா அபுபக்கரின் முகம், மூக்கு, காது எல்லாவற்றையும் தொட்டுப் பார்க்க்கிறாள். அப்புவின் மனைவி ஜானகி குழந்தையோடு வந்து தன்னவனை கடைசிமுறையாக பார்க்கிறாள். "இன்னொருமுறை பிறந்தாலும் இது போலவே போராடுவேன்... மரணமடைந்தாலும்" என்கிறான் குஞ்ஞம்பு. அதோ அந்த இரவில் ஜானகி தன் குழந்தைக்கு இருண்ட வானில் ஒற்றை நட்சத்திரத்தை காட்டிக் கொண்டு நிற்கிறாள். என்னால் அதை பார்க்க முடிந்தது.
என்னை முற்றிலுமாக அந்தப் புத்தகம் புரட்டிப் போட்டிருந்தது. பார்க்கிற மனிதர்கள், வாழ்கிற நாட்கள் எல்லாமும் அர்த்தம் கொண்டதாகத் தெரிந்தன. சங்கம், சங்க அலுவலகம், தோழர்கள் எல்லோரும் பிரியமானவர்களாக அருகில் வந்திருந்தார்கள். எல்லாவற்றுக்கும் புதிய அர்த்தங்கள் தெரிய ஆரம்பித்தன. நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லைதான். படித்து முடித்து நெஞ்சு அடைத்து, பிரமை பிடித்துப் போயிருந்தேன். "என்ன மாது..." என்றார் பி.கே. நான் அழுதேன்.
*
தோழரே..
பதிலளிநீக்குஇடுகைக்கு தொடர்பில்லாத விஷயம்தான் என்றாலும், உங்கள் மனதுக்குள்ளும் இதுவே ஓடிக்கொண்டிருக்கும் என்ற நம்பிக்கையில் இதை பின்னூட்டமாகத் தருகிறேன்.
இன்று இந்த மாநிலம் ஒரேயடியாக நடிகர்களின் பிடிக்குள் போய்விட்ட உணர்வு.
நடிகர் நடிகைகள் சட்டத்தையும் மீறிய சட்டாம் பிள்ளைகளாக மாறிக் கொண்டிருக்கிறார்கள்.
ஒரு பத்திரிகை ஆசிரியர் கைதான செய்தி, அவரது அலுவலகத்தில் போலீசாருடன் வாக்குவாதம் நடந்து கொண்டிருக்கும்போதே ஒரு நடிகருக்குத் தரப்படுகிறது.
நடிகர்களுக்கு நல வாரியம் என்கிறார்கள்.
பத்திரிகையை தடை செய்வார்களாம் (பத்திரிகை நமக்கு வேண்டாததாகவே கூட இருக்கட்டும்!)
என்ன நடக்கிறது தோழரே... நெஞ்சு பொறுக்கவில்லை...
ஒரு தனி பதிவாக தாங்கள் தரவேண்டும் என விரும்புகிறேன். நன்றி
அன்புடன்
சிவா
மாது,
பதிலளிநீக்குமகாத்மா காந்தி நமக்கு மட்டுமல்லாமல் உலகத்துக்கே ஒரு தத்துவத்தை (அகிம்சையை) அறிவித்து சென்றிருக்கிறார். அன்றைக்கு மார்ட்டின் லுதர் கிங் தொடங்கி இன்றைக்கு ஒபாமா அனைவரும் சிலாகித்து சொல்லுகிறார்கள் அதைப்பற்றி.
நம்மை நாமே வருத்திக்கொள்ளுகிற உண்ணா நோன்பு அது அகிம்சையா என்பதே ஒரு கேள்விக்குறி.
இந்த அகிம்சையால்தான் தலித்துகளின் இரட்டை ஒட்டு முறை என்ற உரிமை பறிக்கப்பட்டது பூனா ஒப்பந்தம் என்கிற பேரில்.
நம்மில் 25 சதமானவர்கள் இன்றைக்கும் கூட பொது இடங்களில் இருந்து விலக்கி வைக்கப்படுவதோடல்லாமல் கீழ்த்தரமான வேலைகளில் கட்டாய மான முறையில் ஈடுபடுத்தப்படுகிறார்கள் என்றால் அந்த பூனா ஒப்பந்தமும் ஜாதீய ஒடுக்குமுறையல்லாமல் வேறென்ன?
நானும் கூட 1984ல் அகில இந்திய தொலைபேசி ஊழியர்கள் சங்க அறிவிப்பின் படி ஒரு 36 மணி நேர உண்ணா நோன்பு மேற்கொண்டிருக்கிறேன் கல்லுக்கட்டி தொலை பேசி நிலையம் முன்பாக காரைக்குடியில்.
மூட்ட பேராசிரியர் நாகப்பன் தாக்கப்பட்டதைக்கண்டித்து நடந்த உண்ணாவிரதப்போராட்டத்தில் கொப்புடையம்மன் கோவில் முன்பாக சகோதர சங்க பிரதி நிதியாக பங்கேற்றிருக்கிறேன்.
ஆனாலும் அவர் (மஹாத்மா) அறிமுகப்படுத்தினார் என்பதற்காக நாம் இன்னும் இது போன்ற போராட்டங்களை தொடரவேண்டுமா என்பது தான் நான் எழுப்பும் கேள்வி.
சக மனிதனுக்காக போராடுவதும் அதற்காக வலிகளை சுமப்பதும் சுகமானதுதான்.
பதிலளிநீக்குஉண்ர்ச்சிகளின் பிரவாகம், கோபம்,வெளிப்பாடு, இவையெல்லாம் மனிதனின் குணங்கள். பல "மா" க்களுக்கும் மரமண்டைகளுக்கு இது புரியாது.
பெற்றவளுக்காக வாழ்கிறோம், வளர்த்தவனுக்காக வாழ்கிறோம்
கட்டியவளுக்காக வாழ்கிறோம்
பெற்றதற்காக வாழ்கிறோம்.
இப்படி எதுஎதற்காகவோ வாழ்ந்தாலும் நமக்காக நாம் வாழும் அந்த சந்தோச வாழ்க்கை நீங்கள் குறிப்பிட்ட காலம் மட்டுமாகவே இருக்கமுடியும்.
வரலாற்றை பதிய தொடங்கியிருக்கிறீர்கள் என நினைக்கின்றேன்.
தொடருங்கள் இல்லையேல் பின்வரும் சந்ததியினருக்கு புதிதாய் ஒரு வரலாறு என்ற பெயரில் வேறு ஏதாவது கதையை சொல்லிக் கொடுத்துவிடுவார்கள்.
அதில் தோழர் பி.கே. வும் நீங்களும் கூட காங்கிரஸ் தியாகிகளாகவோ...திராவிடத் தூண்களாகவோ உருவகப்படுத்தப் பட்டுவிடுவீர்கள்.
வாழ்த்துக்கள்
பதிவு அருமை, இப்போது உள்ள அவுட் சோர்சிங் , மென்பொருள் அலுவலக காலத்தில் தொழில் சங்கம் எல்லாம் சாத்தியமாகவே இல்லை.
பதிலளிநீக்குதொழில் சங்கங்கள் மீது மக்களின் ஆர்வம் குறைய காரணம் அவைகளில் உள்ள ஊழல், சர்வாதிகாரம், பணத்திற்காக ஊழியர் நியமன விற்பனை போன்றவை.
தோழரே
பதிலளிநீக்குஉங்களுடன் மணிக்கணக்கில் அமர்ந்து பேசினாலும் கூட உங்கள் அனுபவங்களை இத்தனை கச்சிதமாக உள்வாங்க முடிந்திருக்குமா என்று தெரியவில்லை. சம காலத்தில் அமைப்பு சார்ந்த தொழிலரங்கில் இத்தகைய போராட்டங்கள் நடந்துள்ளன என்பதை பகிர்ந்து கொள்வது மிக மிக அவசியம்.
போராடுவதே தவறு என்பதை இன்றைய ஊடகங்களும், சமுக நிறுவனங்களும் கங்கணம் கட்டிக் கொண்டு இளைய தலைமுறையிடம் எடுத்துச் சொல்கின்றன.
இணைய தளப் பதிவுகளில் இத்தகைய தகவல்கள் அவசியம் / காலத்தின் தேவையும் கூட.
உங்களுடைய தினம் ஒரு பதிவு என்கிற வேகம் என்னை பிரமிக்க வைக்கிறது.
அண்ணா! உண்ணாவிரதத்தில் இருந்து கொண்டுதான் கவீஷ்க்கு வாழ்த்து தந்தி அனுப்பினாயா? அந்த வாசகங்கள் இன்னும் நினைவிருக்கிறது. `பூவிலிருந்து வந்த புயலுக்கு என் வாழ்த்துக்கள்’. சரிதானா?
பதிலளிநீக்குநல்ல பதிவு.
பதிலளிநீக்குநானும், பள்ளி பருவத்தில், சங்க கொட்டகைகளில் அமர்ந்து நிறைய படித்தது உண்டு. சில காலம், அவர்களின் பேச்சு, நடவடிக்கைகளை கேட்டிருந்து, இந்த சமூகத்துக்கு எதாவது செய்ய வேண்டும், என்ற எண்ணம் விதைக்கப்பட்டது அங்கு தான். சில காலம் கழிந்து , போது மக்கள் பிரச்சினைகள் வந்த போது, தோழர்களிடம் அதை பற்றி பேச்சு எடுத்து எதாவது செய்ய வேண்டும், என்று கேட்கையில், அவர்களின் பார்வை வேறாகவும், அதை அவர்கள் ஒரு பிரச்சினையாக பார்க்கவில்லை, என்றும் தோன்றியது. ஆனால் என்னுள் இருந்த சமூக வேட்கை, அங்கிருந்த மற்றொரு அமைப்புடன் ஒருங்கிணைத்து செயல்பட ஆரம்பித்தேன். (Its a welfare association). அன்றிலிருந்து, இந்த சங்ககளின் மீது ஏனோ ஒரு ஒட்டாமை, அவர்கள் மக்களிடம் இருந்து வேண்டுமென்றே தனித்து இருக்க முயல்வதாய் எனக்குள் ஒரு எண்ணம். எனது சமூக சேவை எனது நேரத்தை முழுமையாய் உட்கொண்டதும், சங்கத்திற்கு போவதே விட்டு போயிற்று. செய்திகளை படிக்கும் போது, ஏனோ தோழர்கள் எப்போதும் முன்னேற்றத்துக்கு தடையாய் இருப்பது போன்ற ஒரு உணர்வே எப்போதும். 90 களில் வங்கி கணினி மயமாக்கம் அதி வேகமாய் எதிர்க்கப்பட்ட போது, அந்த இடைவெளி இன்னும் அதிகமாய், ஒரு வெறுப்பே தோன்ற ஆரம்பித்து விட்டது. கால ஓட்டத்தில், அவை அனைத்தும், பசுமையான நினைவுகளாய் தங்கி விட்டன.
உங்களுக்கும், பி.கே-வுக்கும், மற்ற தோழர்களுக்கு இடையே இருக்கும் ஆழ்ந்த நட்பின் அருமையான வெளிப்பாடு.
பதிலளிநீக்குபி.கே சீட்டை கிழித்த பின் நீங்கள் அடைகாத்த மௌனத்தையும், கோபத்தையும் சிந்தாமல், சிதறாமல் பல வருடங்கள் கழித்து கொடுத்த விதம், அப்படியே மந்தில் பதிகிறது...
மூன்றாம் நாள் உண்ணாவிரத்தில் உங்களுக்கு கிடைத்த கடிதம் தந்த உற்சாகம்... படிக்கும் போது இனிக்கிறது
அண்ணா.....
பதிலளிநீக்குpricol coimbatoreல் vice president HR, George k.roy,Trade union ஆட்களால் கொல்லப்பட்டார்.
இப்படி சில trade union?
Because i know the trade union activities,i have watch the pgbea development and learnt a lot.
What happened in the PRicol, coimbatore. I am very shocked in the death of Mr.Roy, as i have worked with him for one year in chennai.
Why cannot u write about the Pricol issue from the point of Trade union leader.
Mr.Roy is a very good gentle man.
RJ
நல்ல பதிவு. அழகான விவரிப்பு. கடைசில புரோட்டா சாப்பிட்டீங்கல்ல??
பதிலளிநீக்கு:))
சிவா!
பதிலளிநீக்குநன்றி.
திலிப் நாராயணன்!
உண்னாவிரதம் குறித்துத் தாங்கள் சொல்வதை ஒப்புக் கொள்கிறேன். இந்த அமைப்பு, இப்போது உண்ணாவிரதம் போன்ற போராட்டங்களை கண்டுகொள்வதில்லை. அதற்கு மரியாதையும் இல்லைதான். ஆனால் ஊழியர்களைத் திரட்ட உதவுகிறதே. சமீபத்தில் எங்கள் வங்கியில் அவுட்சோர்சிங் செய்யப்பட்டு இருக்கிற ஊழியர்களை நிரந்தரமாக்க வேண்டும் என நாங்கள் தலைமையலுவலகம் முன்பு உண்ணாவிரதம் இருந்தோம். அந்த அவுட்சோர்சிங் செய்யப்பட்ட ஊழியர்கள் தன்னெழுச்சியாக கிளைகளில் உண்ணாவிரதம் இருந்தனர்! அற்வித்துப் போராடமுடியாத நிலையில் இருக்கும் அவர்களை ஒருமுகப்படுத்தி பிரச்சினையின் பால் நிற்க வைத்தது உண்ணாவிரதம்தான்!
ஆருரன்!
மிக அருமையாகச் சொல்லி இருக்கிறீர்கள். மிக்க நன்றி.
அவ்வப்போது இப்படியான வரலாற்ரைச் சொல்லலாம் எனத் தோன்றுகிறது.
குப்பன் யாஹூ!
எங்கள் வங்கியில், அவுட்சோர்சிங் செய்யப்பட்ட ஊழியர்களை நிரந்தரம் செய்ய வேண்டும் என்று நிரந்தர உழியர்களாகிய நாங்கள் போராடி வருகிரோம். அவர்களுக்கும் தொழிற்சங்க உணர்வுகள் வேர்விட ஆரம்பித்திருக்கின்றன. இப்போது அங்கங்கு இப்படியான முயற்சிகள் தென்படுகின்றன. தொழிலாளர்கள் தங்களுக்கான அமைப்பை எப்படியாயிலும் நிறுவி, அதன் மூலம் தங்களது பிரச்சினைகளைத் தீர்க்க முய்ல்வர் என நம்பிக்கை இருக்கிறது.
பவித்ராபாலு!
உர்சாகமளிக்கிற வரிகள் உங்களுடையவை. மிக்க நன்றி. இதுபோன்ற பதிவுகள் எழுதுவது அவசியம்தான்.
அம்பிகா!
ஆம், என் அன்புத்தங்கையே!
Itsdifferent !
உங்களுடைய அனுபவம், இப்போது பசுமையானவையாக இருந்த போதிலும், உங்களை அவர்கள் தவற விட்டு விட்டார்கள் என்றே சொல்வேன். எல்லா இடங்களிலும் இப்படியான நபர்கள், அமைப்பின் முன்னேற்றத்துக்குத் தடையாய் இருக்கத்தான் செய்கிரார்கள்.
கதிர்!
ஆம், எல்லாம் அப்படியே எனக்குள் இன்னும் இருக்கிறது! நன்றி.
RJ!
எப்படியிருக்கே. சென்னைக்கு வந்தாச்சா! எனக்கு Pricol issue தெரியாதே....
மங்களூர் சிவா!
சாப்பிட்டேன். திருப்தியா!