புகை நடுவினிலே

 

“ஆனந்த தேன்காற்று தாலாட்டுதே...” சுடலை நீட்டி முழக்க ஆரம்பித்து விட்டான். தண்ணி போட்டு விட்டானென்றால் இதுதான் அவனுக்கு விநாயகர் ஸ்தோத்திரம். இன்னும் ஒரு மணிநேரத்துக்கு கச்சேரி தொடரும். சும்மா சொல்லக்கூடாது. ஆச்சரியமான குரல்வளம்தான். கேட்க உண்மையிலேயே நல்லாயிருக்கும். சுருதி பிசகாமல் ஏற்றி இறக்கி பாடுவான். நேரில் பார்க்கும் போதுதான் சிரிப்பு வரும். முகம் படு தீவீரமாய் இருக்கும். முதுகு வளையாமல் சம்மணமிட்டு உட்கார்ந்திருப்பான். ஒரு கைதேர்ந்த பாகவதரைப் போல தலையாட்டவும், தொடை தட்டவும் செய்வான்.

புத்தகம் படித்துக்கொண்டிருந்த பார்த்திபனுக்கு இதை ரசித்துக் கேட்க முடிகிறதுதான். இந்த பாட்டுக்களுக்குப் பிறகு நடக்கிற சமாச்சாரங்கள்தான் பிடிக்காது. கட்டாயம் இன்னும் கொஞ்ச நேரத்தில் அவன் பொண்டாட்டி வள்ளியோடு சண்டை போடத்தான் செய்வான் சுடலை. பாவம்... அந்த வள்ளியை அவன் அடிக்கும்போது பார்க்க சகிக்காது. முடியைப் பிடித்து இழுத்து வைத்துக்கொண்டு முதுகில் ஓங்கி ஓங்கி குத்துவான். பற்களை நறநறவென கடித்துக்கொண்டு பிசாசாய் நிற்பான். போன தடவையெல்லாம் பார்த்திபன் கோபம் தாளாமல் செருப்பைக் கழற்றிக்கொண்டு “ச்சீ... செருக்கியுள்ள...”என்று அடிக்கப் போய் விட்டான். சக்திக்கனி அக்காவும், சொர்ணமும் இவனைப் பிடித்துக்கொண்டு “எய்யா... நீ உள்ள போய்யா... போயிருய்யா..” என்று கதற ஆரம்பித்து விட்டனர். இவனுக்கு அடங்கவில்லை. திமிறினான். கடைசியில் இவன் அப்பாவும், பெரியப்பாவும் வந்து சத்தம் போட்ட பிறகுதான் அமைதியானான். “போய்... அத மொதல்ல நிறுத்துங்க...” என்று மூச்சிரைத்தான். ஞானதுரை “ஏல.. சொடல..” என்று அதட்டுப் போட்டார். சுடலை நின்றான். வள்ளி கொஞ்சமும் எதிர்ப்புக் காட்டாமல் சேலையைச் சுருட்டிக்கொண்டு திண்ணையில் போய் உட்கார்ந்தாள். சுடலையையே பார்த்தாள். அவன் வேகமாய் அங்கிருந்து நடந்து தெருவில் இறங்கி மறைந்தான். குடிசைக்குள் வள்ளியும், அவளது மூன்று குழந்தைகளும் அழும் சத்தம் இரவில் ரொம்ப நேரம் கேட்டுக்கொண்டு இருந்தது. வெளி தெரியாத இருட்டில் புதைந்து கிடக்கும் சோகத்தையெல்லாம் கொட்டித் தீர்க்கிற பாடலாக ஒலித்தது.

“நான் அசைந்தால் அசையும் அகிலம் எல்லாமே” என்று சுடலை இறுமாப்புடன் நிறுத்தி மீண்டும் தொடர்ந்தான். ஒரே சிரிப்பும் கைதட்டலுமாய் கேட்டது. அங்கங்கு வாசல் கதவுகளைத் திறந்து வைத்துக்கொண்டு அம்மாக்களும், குமரிகளும் உட்கார்ந்திருந்தார்கள். சுடலை முன்னால் ஒரு சிறுவர் பட்டாளமே கூடியிருந்தது. ஒவ்வொரு பாட்டு முடிந்ததும் ஆளுக்கொன்றாய் தங்கள் விருப்பங்களைத் தெரிவிப்பார்கள். “சுடலை...! ராக்கம்மா கையத் தட்டு...”, “சுடலை... சுடலை.... ராஜா கைய வச்சா...” என நச்சரிப்பாய் இருக்கும். சுடலை அவைகளில் எதையும் பாடமாட்டான். தன் விருப்பம் போலத்தான் பாடுவான். அதைத்தான் கேட்க வேண்டும். வள்ளி இந்த சமயங்களில் தன்னை மறந்து சுடலையை ரசிப்பாள்.

காலையில் பஞ்சாயத்து போர்டு பக்கத்தில் ஒரு காக்கி கால்ச்சட்டை போட்டுக்கொண்டு குப்பைக் கூட்டும் போது இந்த சுடலைதான் நேற்றிரவு அப்படியிருந்தானா என்று பார்த்திபனுக்கு இருக்கும். இவனைக் கண்டதும் “ஐயா..... கும்புடுறேங்க..” என்று சொல்கிற பவ்யமும், பயமும் இருக்கிறதே.... இவனுடைய பள்ளி மாணவர்கள் கூட அப்படி ஒருநாளும் சொன்னதில்லை. தீபாவளி பொங்கல் வந்துவிட்டால். இவன் பள்ளிக்கூடம் விட்டு வெளியே வருகிற வரை ஜோடியாய் காத்திருப்பார்கள். இவனைப் பார்த்துக் கும்பிட்டு “கேளு... புள்ள...” என்று மஞ்சள் பற்கள் தெரிய சுடலை வள்ளியை இடித்துச் சிரிப்பான். அவள் கேட்கும் முன்னால் பார்த்திபன் ஒரு பத்து ரூபாயைக் கொடுத்துவிட்டு நகருவான். “தெக்க இருந்து அழகா... லட்சுமி அடுத்த தைக்குள் வருவாங்க பாருங்க ஒங்களுக்கு..” என வாழ்த்துவார்கள். அந்தப் பெருமையில்தான் இவன் அம்மா சொர்ணம் இவர்களை குடிவைப்பதாய் சொன்னபோது பார்த்திபன் மறுக்காமல் இருந்துவிட்டாள். அது எவ்வளவு பெரிய தப்பு என்பது இப்போது படுகிறது.

கிழக்குப் பக்கம் அந்தக் குடிசை இடிஞ்சுபோய் ரொம்ப நாள் சும்மாத்தான் கிடந்தது. இடிந்தது தவுந்தது பூசிக்கொண்டு பராமரிக்காவது செய்யட்டுமே என்றுதான் சொர்ணம் அவர்களை அங்கு குடியமர்த்தினாள். இப்போது இரவுகளில் இவர்கள் சண்டையை சமாதானம் செய்து வைப்பதும் அக்கம் பக்கத்திலுள்ளவர்களுக்கு வேலையாய்ப் போனது. அதுகூட ஒரு பாசாங்குதான். எல்லோருக்கும் பார்க்கவும், ரசிக்கவும், சிரிக்கவும், அசைபோடவும் நிறைய நிறைய இருந்தன.

நிஜமாகவே  வருத்தப்பட்டவன் பார்த்திபன்தான். கோபம் வந்தால் அதென்ன உடனே  கையை நீட்டுவது என்று கொதித்துப்போவான். சாம்பல் நிரப்பிய மிட்டாய்ப்பெட்டியும், அகப்பைக்கனை வெளியே தெரியும் வாளியோடும் வள்ளி வீடுகளின் பின்பக்கம் கதவுகளை தட்டுகிற காலைகளில் இரவின் அழுகை காய்ந்து ஒரு நிரந்தர சோகமாய் முகத்தில் பாவியிருக்கும். தெருப்புழுதியில் குழந்தைகள் விளையாடிக்கொண்டிருக்க, வீட்டுத் தாழ்வாரத்துத் தூணில் சாய்ந்தபடி எங்கேயோ பார்த்தபடி வள்ளி உட்கார்ந்து கொண்டிருப்பதை இவன் பள்ளிக்கூடத்திற்குப் போகிற சமயங்களில் பார்த்திருக்கிறான். ஒருநாள் மத்தியானம் பட்டாணித்தாத்தா வீட்டில் உட்கார்ந்து பேசிக்கொண்டு இருக்கும்போது இரண்டாவது மகன் காலைப் பிடித்தபடி இருக்க, “அம்மா, பகட வந்திருக்கேன்” குரல் கொடுத்தபடி சாப்பாட்டுக்கு வாசலில் நின்ற கோலம் ரொம்ப பரிதாபமாய் இருந்தது. அப்போதுகூட “ஏலே... ஒங்கப்பன் சுடலையும் இருபத்தைஞ்சு வருசத்துக்கு முன்னால இப்படித்தான் வந்து நிப்பான். இருளாயி காலை விடவே மாட்டான்” என்று பட்டாணித்தாத்தா சொல்லிக்கொண்டு இருந்தார். லேசாய் சிரித்து மகன்காரன் தலையைக் கோதிவிட்டபடி வள்ளி குனிந்து நின்றபோது பார்த்திபனுக்கு சுடலையின் மீதுதான் கோபம் வந்தது. அன்றைக்கு ராத்திரி தூங்கிக்கொண்டிருந்த சுடலையை வள்ளி முத்தமிட்டதும், விழித்துக்கொண்டவனுக்கு ஒருநாளும் இல்லாத திருநாளாய் இருந்ததுவும் பார்த்திபனுக்கு எப்படித் தெரியும். “என்னளாக் கிறுக்காப் பிடிச்சுட்டு ஒனக்கு..” என்ற சுடலையை கட்டிப்பிடித்துக்கொண்டு முத்தமாய் கொடுத்துக்கொண்டே இருந்தாள். அந்த இரவும்கூட வள்ளி அழுதுகொண்டுதன் இருந்தாள் என்பது யாருக்குத் தெரியும்.

பாட்டு நின்று குழந்தைகள் அழும் சத்தம் கேட்க ஆரம்பித்தது. பார்த்திபன் நினைத்த மாதிரி சண்டைதான். அதற்கெல்லாம் பெரிய காரணங்கள் என்று எதுவும் சுடலைக்குத் தேவையாயிருப்பதில்லை. அவன் கோபப்படும்போது வள்ளி சிரித்துக்கொண்டே எதாவது சொல்வாள். அவனுக்கு இன்னமும் கோபம் அதிகமாகும். சட்டென கைநீட்டுவான். “யார்ட்டயாவது கெஞ்சி கூத்தாடி தண்ணி வாங்கி அடிச்சிட்டு வந்து இங்க வந்து ஓட்ட அதிகாரம் பண்ணத்தான் நீ லாயக்கு” என்பாள். அவ்வளவுதான். அந்த இடமே அல்லோலப்படும். உட்கார்ந்திருந்த சிறுவர்கள் ஓவென்று இரைந்துகொண்டே தள்ளி நிற்பார்கள். சுட்லை தன் வீரபராக்கிரமங்களை காண்பிக்க ஆரம்பிப்பான்.

இன்றைக்கு இதற்கு முடிவு கட்ட வேண்டும் என்று பார்த்திபன் எழுந்து, வீட்டிலிருந்து வெளியே போனான். “ஏல சொடல! இப்ப சும்மா இருக்கப் போறியா... இல்லையா?” என்று அதட்டினான். சுடலை இவனை ஒருதரம் உற்றுப் பார்த்தான். திரும்பவும் வள்ளியை அடிக்க ஓடினான்.

“ஏய்யா... பார்த்திபா! நீ அங்க போகாத... குடிகாரப்பய ஒண்ணு கெடக்க ஒண்ணு பேசினாலும் நமக்குத்தான் அசிங்கம்..” பார்த்திபனின் அம்மா  வாசலில் நின்று இவனைக் கூப்பிட்டார்கள்.

பார்த்திபன் வேகமாக இரண்டு எட்டு வைத்து சுட்லையை இழுத்துப் போட்டான். தரையில் போய் மல்லாக்க விழுந்தான் அவன். எல்லோரும் சிரித்தார்கள். விழுந்த வேகத்தில் எழுந்து நின்று இவனை நோக்கி மூச்சிறைக்க வந்து முறைத்தான்.

“அவ.... எம் பொண்டாட்டி...”

”அதுக்கு இப்பிடித்தான் போட்டு அடிப்பியா...”

“அவ எம் பொண்டாட்டி...”

“பார்த்திபா...! இங்க வந்துருய்யா. இந்த நேரம் பாத்து அவியளும் வீட்டுல இல்லைய. ஏ...முருகேசு வீட்டு அப்பா! கொஞ்சம் இங்க வாங்களேன்..”

”யம்மோவ்! இப்ப நீங்க சும்மா இருக்கப் போறீங்களா இல்லியா. ஏல... என்ன மொறைக்கிற.... பேசாம போய் உக்காரு. தூக்கிப் போட்டு மிதிச்சிப்புடுவேன்..பாத்துக்க”

“நீ போயி ஒன் வேலையப் பாரு வாத்தியாரே..” அழுத்தமாய்ச் சொன்னான் சுடலை.

பார்த்திபனுக்கு முகத்தில் அடித்த மாதிரி இருந்தது. ”அட நாயே..!” என்று அவன் கையைப் பிடித்து தரதரவென தெருவுக்கு இழுத்துக்கொண்டு வந்தான்.

திமிறிய சுடலை ஓடிப்போய் கல்லை எடுத்து பார்த்திபனை எதிர்த்து நின்றான். “பக்கத்துல வந்தா பாத்துக்க...”

கூடியிருந்த அத்தனை பேரும் அரண்டு போனார்கள்.பார்த்திபனும் ஆடித்தான் போனான். அதற்குள் யார்யாரெல்லாமோ வந்தார்கள். சுடலை எல்லோரையும் தாறுமாறாகப் பேசினான். அடங்காமல் நின்றான். பெட்டிக்கடை செல்லச்சாமி ஓடிப்போய் சுடலையைப் பிடித்து சாத்த ஆரம்பித்தான். கொஞ்சம் பேர் பார்த்திபனை இழுத்துச் சென்றார்கள். சுடலை கெட்ட வார்த்தைகளால் எல்லோரையும் ஏசிக்கொண்டே ஓட ஆரம்பித்தான். கீழே விழுந்தான். வெறியோடு மண்ணைப் போட்டு குத்தினான். வள்ளி தன் மூன்று குழந்தைகளையும் இறுகக் கட்டிக்கொண்டு அழுது கொண்டிருப்பதை அந்த வேகமான கணத்திலும் பார்த்திபன் கவனித்தான்.

“நா அப்பவே சொன்னேன் அங்க போகாதேன்னு. கேட்டியா?”

“அடச்சீ சும்மாயிருங்க. நாளைக்கு அவன அங்க குடிவைக்கக் கூடாது. சொல்லிட்டேன்..”

“சரிப்பா... சொல்லிர்றேன்..”

சத்தங்கள் எல்லாம் கொஞ்ச நேரத்தில் அடங்கிப் போயின. பார்த்திபனுக்கு அன்று தூக்கம் வரவில்லை. எல்லோர் முன்னாலும் சுடலை எடுத்தெறிந்து பேசிவிட்டானே என்றிருந்தது. ஊரில் இருக்கும் பெரியவர்கள் கூட இவன் வார்த்தைக்கு மதிப்பளிப்பார்கள். “வணக்கம் தம்பி..” என பார்த்ததும் மரியாதை செய்வார்கள். விடிந்ததும் முதல் வேலையாய் காலி பண்ணச் சொல்லிவிட்டாலும்,  வள்ளியை நினைக்க வேண்டியிருந்தது. மூன்று குழந்தைகளை வைத்துக்கொண்டு அவள் தவிக்க வேண்டுமே என்றிருந்தது. பேசாமல் சுடலை இல்லாமல் அவள் வாழ்க்கை நடத்தலாம் என்றெல்லாம் எண்ணியபடி பார்த்திபன் ஒருவழியாய் தூங்கிப் போனான்.

 

காலையில் அவனை சுடலைதான் எழுப்பினான். “ஐயா... ஐயா.... வாத்தியார் ஐயா...” வெளியே குரல் கேட்டுக்கொண்டே இருந்தது.

“ஏல... சொடல... போ வெளியே.... நீல்லாம் ஒரு மனுஷனா?” சொர்ணம் சத்தம் போட்டுக்கொண்டு இருந்தாள். பார்த்திபன் எழுந்து வெளியே சென்றான்.

“ஐயா...! கும்புடுறேனுங்க! அம்மா இப்பவே வீட்ட காலி பண்ணச் சொல்றாங்க... நாங்க எங்கய்யா போவம்? அம்மாக் கிட்ட நீங்கதாச் சொல்லணும்”

“இல்ல சொடல. காலி பண்ணிரு.”

“ஐயா ஐயா நீங்க அப்பிடிச் சொல்லக்கூடாது ஐயா..”

“இன்னா பாரு சொடல. வரவர நீ மோசமாப் பேசுற. குடிச்சுட்டு வந்து ஒம்பொண்டாட்டியப் போட்டு கண்டபடி அடிக்கிற. கேட்டா எதுத்துப் பேசுற. நேத்து என்னையே கல்லத் தூக்கி எறிய வந்தே..”

“ஐயோ சாமி. அப்பிடிச் சொல்ல மாட்டேன்யா. நீங்க தெய்வம் மாரி. ஒங்களயா.... ஒங்களயாய்யா.... “ கைகளால் தலையை மடார் மடாரென அடித்துக் கொண்டான். “இனும சத்தியமா... எம்புள்ளைங்க சத்தியமா குடிக்கவே மாட்டேன்யா..”

“இதெல்லாம் இங்க வேணாம். காலி பண்ணிரு. இல்லேன்னா நானே வந்து சட்டிச் சாமானையெல்லாம் தூக்கியெறிஞ்சிருவேன்”

“ஐயா... ஐயா... ஒங்க வாயால அப்பிடிச் சொல்லாதீங்க. நீங்க நல்லாயிருக்கணும். தெரியாமச் செஞ்சுட்டேன். இந்த ஒரு தடவையும்...”

“அடச்சீ! சும்மாக் கெட...” வள்ளி வேகமாய் வந்தாள். “வா. வீட்டுக்குப் போவம்” சுடலையை அழைத்தாள்.

“நீ சும்மாயிரு. ஐயா... என்னய வேண்ணா அடிச்சுக் கொன்னு போட்டுருங்க. அதுகளை வீட்டை விட்டு வெரட்டாதீங்கய்யா”

“இன்னா பாரு. இப்ப வீட்டுக்கு வரப்போறியா இல்லையா? “ வள்ளி சுடலையை அதட்டினாள். பார்த்திபனைத் திரும்பிக்கூட பார்க்கவில்லை. பார்த்திபனுக்கு அவமானமாய் இருந்தது.

“இல்ல வள்ளி. ஐயாக்கிட்டச் சொல்லி எப்படியும்...” என்றவனை “வெளக்குமாரு பிஞ்சிப் போகும் பிஞ்சி!” என்று பிடித்துத் தள்ளினாள். அதே அழுத்தமான முகத்தோடு பார்த்திபனை நோக்கி “ஐயா... நாளைக்கு காலி பண்ணிர்றோம்” சொல்லிவிட்டு, சுடலையின் கையைப் பிடித்து இழுத்துச் சென்றாள். பார்த்திபன் அதிர்ந்து போய் நின்றிருந்தான்.

“இந்தப் பொட்டச்சிக்கு எவ்வளவு திமிர்னு பாத்தியா! வீடு வீடா பொறுக்கித் தின்னாலும் திமிரப் பாத்தியா..! இவ கொடுக்கிற எடத்துலத்தான் அந்த கிறுக்கன் அந்த ஆட்டம் போடுறான்!” சொர்ணம் என்னவெல்லாமோ ஆற்றாமையில் கொட்டித் தீர்த்துக் கொண்டிருந்தாள்.

நடந்து கொண்டிருந்த வள்ளிக்கு கொஞ்சம் நிம்மதியானது போலிருந்தது. கனன்று எரிந்த தீயில் லேசாய் நிதானம் ஏற்பட்டிருந்தது. வாத்தியார் ஐயா பாவம் என்று நினைத்துக் கொண்டாலும், சுடலை குடி போதையில் அவர்கள் யாருக்கும் அடங்காமல் நின்ற நிலையை திரும்பத் திரும்ப நினைத்துப் பார்க்க ஆசையாயிருந்தது. எதிரே ஓடிவந்த இரண்டாவது மகனை வாரியெடுத்து “ஏம் புள்ளா..” என்று உச்சி முகர்ந்து முத்தம் கொடுத்தாள்.

பார்த்திபன் அவள் போவதையே பார்த்துக் கொண்டிருந்தான். ஒன்றும் புரியவில்லை.

(1993ல் எழுதிய சிறுகதை இது)

*

கருத்துகள்

10 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. மனிதர்களை,உணர்வுகளை,ஏற்ற இறக்கங்களை,அப்படியே காட்ச்சியாக்குகிறீர்கள் மாதவன்.இதற்க்கு வெறும் வாசிப்பனுபவம் மட்டும் போதாதுதான்.கூடவே பெனஞ்சு,உருட்டி,உருட்டி கைகளில் தருகிறீர்கள்.மனசு திங்குது!நுழைந்துவிட்டால் சூழல் மறக்கிரது.பழைய சிறுகதைகள் எல்லாம் பதிந்து தாருங்கள் மக்கா.புதிதாக எழத வந்த எங்களுக்கு பேருதவியாக இருக்கும்.அன்பு நிறைய மாதவன்.

    பதிலளிநீக்கு
  2. நீங்கள் எழுதாமல் விட்ட இடத்திற்குள் ஒரு கதை இருந்தது. நான் அதையும் வாசித்தேன். ஒருவேளை அப்படியொரு கதை இல்லாமலும் இருக்கலாம்:) வாசகர்கள் இட்டுநிரப்பவும் இடம் வைத்த நுட்பத்திற்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  3. சில நேரங்களில் சில மனிதர்களின் விநோதமான சிந்தனைகள், மதுவின் பிடியில் பலரையும் எதிர்த்துப் பேசி சண்டையிட்டாலும், அவனை வீர ஆண்மகனாக பார்க்கும் மனைவியை என்ன சொல்லுவது. நல்ல கதை.

    பதிலளிநீக்கு
  4. தீராத பக்கங்களின் மீது தீராத காதல் கொள்ள வைத்துவிட்டீர்கள்.

    விளிம்பு நிலை மனிதர்கள் பற்றிய நமது எண்ண ஓட்டங்களையும், அவர்களின் மன நிலையையும் அப்படியே படம் பிடித்துக் காட்டியுள்ளீர்கள்.

    தொடருங்கள்

    அன்புடன்
    ஆரூரன்

    பதிலளிநீக்கு
  5. இதுவும் எனக்கு மிகவும் பிடித்தவொரு கதை. வள்ளி பாத்திரம் அற்புதமானது!

    பதிலளிநீக்கு
  6. புகை நடுவினிலே என்று எந்த இடத்தில், என்ன தலைப்பைப் படித்தாலும், ஆனந்த தேன்காற்று பாடல் எனக்கு நினைவுக்கு
    வரும். அன்புத்தோழன் சுடலையோடு பிணைந்து விட்ட சித்தரிப்பு அது. மட்டுமில்லாமல் உழைக்கும் மக்களுக்கு மது வலிதீர்க்கும் மருந்து என்பதை இது சொல்லாமல் சொல்லுகிறது. சினிமாப்பாடலும் தான்.

    பதிலளிநீக்கு
  7. படித்தும் முடிக்கும் போது அழுத்தமான வள்ளியே மனது முழுதும் ஆக்கிரமிக்கிறாள்

    பதிலளிநீக்கு
  8. "ஆனந்த தேன்காற்று" பாடல் சுடலைக்கு ஒரு சட்டை போல் பொருந்திப்போகிறது.மிக நுட்பமாக போகிறது கதை.ஒதுக்கப்பட்ட மனிதர்களின் நிலையை தினசரி வாழ்க்கையில் விவாதிக்கும் போது அவங்களும் மனுசங்க இல்லையா என்ற பேச்சு எழும்.மேல்மட்ட மக்களின் அனுதாபமாக இல்லாமல் அவர்களிடையே நுழைந்து 'தீ இருப்பதை' கண்டதில் கதை ஜெயிக்கிறது.

    பதிலளிநீக்கு
  9. கதையின் முடிவிலும், அது சொல்ல வரும் செய்தியிலும் எனக்கு ஒப்புதல் இல்லை....

    இது வெறும் நிகழ்வே என்று சொன்னாலும்....இயல்புக்கு மாறாகத் தான் இருக்கிறது...

    சரி, சரி...1993ல் எழுதிய கதை....அப்ப பெண்கள் எல்லாம் அப்படித் தான், அடிவாங்குவதே சுகம் என்று நினைத்தார்கள் போலிருக்கிறது....எனக்கு தெரியாது...:0)))

    பதிலளிநீக்கு
  10. ராஜாராம்!
    நீங்கள் கதை படித்து பகிரும் ஒவ்வொருமுறையும் நெகிழ்ந்தே போகிறேன். இன்னும் சில கதைகள் இருக்கின்றன. நிச்சயம் பதிவிடுவேன்.


    தமிழ்நதி!
    புரிதலுக்கும், பகிர்வுக்கும் நன்றி.


    பித்தன்!
    கதையைத் தவறாக புரிந்துகொண்டு இருக்கிறீர்கள் என நினைக்கிறேன்.



    ஆரூரன்!
    கதைக்கு விளக்கமே கொடுத்து விட்டீர்கள். நன்றி.


    தீபா!
    நன்றி.


    காமராஜ்!
    அழகாகச் சொல்கிறாய்.


    கதிர்!
    மிக்க நன்றி.



    வேல்ஜி!
    ‘தீ’இருப்பதையறிந்து கொண்டதற்கு நன்றி.


    அதுசரி!
    ‘தீ’யை தாங்கள் பார்க்கவில்லை என நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!