திசை மாறவும் வேண்டாம், குறி தவறவும் வேண்டாம்!

 

உன்னைப் போல் ஒருவன் படத்தை முன்வைத்து எழுந்த விமர்சனங்களும் விவாதங்களும் ஆரோக்கியமானச் சூழலாகவே இருந்தன.

ஒரு திரைப்படம் என்பது வெறும் பொழுது போக்கல்ல என்பதையும், அதன் ஒவ்வொரு காட்சியும், வசனமும் எவ்வளவு முக்கியமானது என்பதையும் நமது பதிவுலகம் ஆராயந்து பார்த்திருக்கிறது. காட்சிகளுக்குப் பின்னாலும் நுட்பமாக கவனிக்கப்பட வேண்டிய விஷயங்கள் இருப்பதை சமீபத்திய சில நாட்களில் நமது பதிவுலகம் பெரும் உரையாடல் மூலம் வெளிக்கொண்டு வந்திருக்கிறது.

இரண்டாவது, இந்தப் படத்தின் மையப்பொருளாகப் பார்க்கப்படும் இந்துத்துவா நிலைபாடு குறித்து சில கருத்துக்கள் பொதுவெளியில் உரக்கப் பேசப்பட்டன. இந்த தேசத்திற்கு மிக அச்சுறுத்தலான, சாபக்கேடான சங்கதி ஒன்று அம்பலப்படுத்தப்படவும், பகிரங்கப்படுத்தவும் அவை உதவும் என்னும் எதிர்பார்ப்பு இருந்தது.

ஆனால் இவைகளின் ஊடாக நடந்த கருத்து மோதல்களும், முரண்பாடுகளும் தனிநபர்கள் மீது தாவியது வருத்தமளிக்கிறது. குறிகள் திசைமாறி இருப்பது நிஜமாகவே வேதனையளிக்கிறது.

கருத்துக்களைப் பார்க்காமல்- இவர் இன்னார், இப்படித்தான் கருத்துச் சொல்வார் என்ற தொனியில்- இப்போது விஷயங்கள் பார்க்கப்படுகின்றன. இந்த ஜாதியைச் சேர்ந்தவர், இந்த அமைப்பைச் சேர்ந்தவர், இந்த கட்சியைச் சேர்ந்தவர், இன்னாருக்குத் தெரிந்தவர் என்றெல்லாம் பார்க்க ஆரம்பித்தால் அங்கு சுதந்திரமான கருத்துக்களுக்கு இடமில்லை என்றாகிவிடும். வெளிப்படையானத் தன்மைக்கு கல்லறை கட்டுகிறோம் என்றுதான் அர்த்தம். இது தொடருமானால், இந்த விஷயம் குறித்து இவர்தான் பேச முடியும், இவர் பேச முடியாது என்கிற நிலைமை உருவாகும். அது மிகவும் ஆபத்தான போக்காகி விடும். தன் கருத்தைத் தவிர மற்றவர்களை ஓரங்கட்டுகிற பாசிச அரசியல் அதற்குள் மெல்ல புகுந்துவிடும்.

இதன் நீட்சி  இப்போது கொடூரமாக காட்சியளிக்க ஆரம்பித்திருக்கிறது. உன்னைப் போல் ஒருவனில் ஆரம்பித்து, கமலிடம் சென்று இப்போது பாரதியாரில் வந்து நிற்கிறது. “சாதிகள் இல்லையடி பாப்பா’ என்று பாடியதாலேயே பாரதியின் பார்ப்பன-இந்துவெறிச் சார்பு நிலையை மறைக்க முடியுமா?” என்று ஒருவர் அனானியாக வந்து, முந்தையப் பதிவில் கேட்டு இருக்கிறார். பிறப்பின் அடிப்படையில் பாரதியையும் பார்க்கிற அவலம் நேர்ந்திருக்கிறது. ஒரு மகாகவிக்கு இப்படியொரு இழிநிலை ஏற்பட்டிருக்க வேண்டாம். ஜாதி, மதங்களைக் கடந்தவர் என்றெல்லாம் சொல்லி யாரிடமும் நிருபிக்க வேண்டிய அவசியம் பூணூலைக் கழற்றி எறிந்த அந்த நெருப்புக் கவிஞனுக்கு இல்லை.

பார்ப்பனீயம்தான் எதிர்க்கப்பட வேண்டியதே தவிர, பார்ப்பனர்களல்ல. இதர ஜாதி மக்களை அடக்கி, ஒடுக்கி வைக்கிற மேலாதிக்க பார்ப்பனியத்தை இந்த சமூகத்திலிருந்து அகற்றுவதற்கு இங்கு அனைவரும் சேர்ந்தே செயல்பட வேண்டி இருக்கிறது. பார்ப்பனியத்திற்கு எதிரான கருத்துக்கள் எங்கிருந்து வந்தாலும், யாரிடமிருந்து வந்தாலும் அவைகளை வரவேற்கிற தெளிவும், தெம்பும் வேண்டும். சந்தேகக்கண் கொண்டு அவைகளை கிள்ளி எறிவதும், முத்திரை குத்தி அந்தக் கருத்துக்குரியவர்களை புறந்தள்ளுவதும் சமூக மாற்றத்துக்கு ஒருபோதும் உதவாது.

‘அவரவர் அவரவர் இடத்திலேயே இருங்கள், யாரும் கோடுகளைத் தாண்டாதீர்கள்’ என்னும் விதியையே இந்த முத்திரைகள் நிர்ணயிக்கும். மாறும் என்பதைத் தவிர அனைத்தும் மாறும் என்னும் சமூக விஞ்ஞானத்துக்கு புறம்பான பார்வையை செலுத்தும். “நான்கு வர்ணங்களைப் படைத்த நானே அவைகளை மாற்ற முடியாது” என்னும் அர்த்தத்தில் “தஸ்ய கர்த்தாரம மாம், வித்ய கர்த்தார-மவ்யம்” என கீதையின் நாயகன் சொன்ன ஆணவ மொழிக்கே உதவும்.

*

கருத்துகள்

39 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
 1. படம் பார்த்ததும் எனது கருத்துக்களை சொல்கிறேன்

  பார்பனியம் ஒழிக்கப்படவேண்டும் பார்பனர் அல்ல எனும் உங்கள் கருத்துக்களோடு உடன் படுகிறேன்

  பார்பனியம் இங்கே வர்க்க வேறுபாடாக வளர்ந்துள்ளது

  பதிலளிநீக்கு
 2. //“நான்கு வர்ணங்களைப் படைத்த நானே அவைகளை மாற்ற முடியாது” என்னும் அர்த்தத்தில் “தஸ்ய கர்த்தாரம மாம், வித்ய கர்த்தார-மவ்யம்” என கீதையின் நாயகன் சொன்ன ஆணவ மொழிக்கே உதவும்.//

  உங்கள் பதிவின் நல்ல நோக்கத்தை இந்த வரிகள் குலைத்துவிடும் அபாயம் இருக்கிறது. இது போன்ற விளக்கங்களுக்கு ஒருமுறைக்கு இருமுறை தெளிவு பெற்று எழுதுவது நலம்.

  கீதையில் கண்ணன் சொல்வது 'நான்கு வர்ணங்களாக சமூகம் பிரிக்கப்பட்டு இருந்தாலும் ஆத்மாவுக்கு அந்த பேதங்கள் கிடையாது. இந்த பேதங்களை ஆத்மாவுக்கு பொருத்திப் பார்க்கக் கூடாது..." இது எப்படி ஆணவ வாக்காகும் என்று புரியவில்லை.

  பதிலளிநீக்கு
 3. நல்ல கருத்து !!!
  மோதல்களும், முரண்பாடுகளும் தனிநபர்கள் மீது தாவியது வருத்தமளிக்கிறது
  :(((

  பதிலளிநீக்கு
 4. ஆழமான கருத்துக்கள் கொண்ட பதிவு தோழர். இங்கு புரையோடிப்போயிருக்கு சாதி மத துவேஷங்கள் எல்லாம் களையப்பட்டு மனிதர்கள் மேலான நிலையை அடைவதற்கு இன்னும் சில காலம் ஆகும். ஓரிரவில் எதுவும் சரியாகிவிடாது என்பது யாருக்கும் புரிவதில்லை, அதுதான் பிரச்சனை. மாற்றம் என்பதை நோக்கித் தான் அணுதினமும் சமூகம் நடைபோடுகின்றது. வேற்றுமைகள் அற்ற சமுதாயம் நிச்சயம் மலரும், நாம் அன்று இருப்போமா என்பது தெரியாது, இருக்கும் போதே நிகழ்ந்துவிட்டால் அதை விட சிறப்பான மகிழ்ச்சி நமக்கு எது இருக்க முடியும்? பகிர்விற்கு நன்றி தோழர்.

  பதிலளிநீக்கு
 5. அருமையான ஒரு இடுகை திரு.மாதவராஜ். இது போல நோக்கம் பிறழ்வது ஆரோக்கியமானது அல்ல என்பதில் இரு கருத்துகள் இருக்கவே முடியாது.

  அந்த கீதை மூலம் இங்கே:

  chAturvarNyaM mayA sR^iShTaM guNakarmavibhAgashaH
  tasya kartAramapi mAM viddhyakartAramavyayam. 4-13

  பதிலளிநீக்கு
 6. நல்ல திரைப்படங்களை முன்வைத்து விமர்சனங்களும் விவாதங்களும் நிகழ்த்தப்படுவது நன்றே ... ஆனால் இதை ஏன் நாம் A Wednesdayவை முன்வைத்துச் செய்யவில்லை (இந்தக் கேள்விக்கு எனக்கு ஓரளவு பதில் தெரியும் என்றாலும் ... உன்னைப் போல் ஒருவன் படத்தை நான் இன்னும் பார்க்கவில்லை என்பதாலும் ...)

  பதிலளிநீக்கு
 7. தியாகு!
  gulf tamilan!
  உமாஷக்தி!

  புரிதலுக்கும், பகிர்வுக்கும் நன்றிங்க.

  மஹேஷ்!
  இந்திய தத்துவ தரிசனம் என்னும் நூலைப் படித்துத்தான் எழுதினேன். சரி பார்த்துக்கொள்கிறேன். சுட்டிக்காட்டியதற்கும், பகிர்வுக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 8. சுட்டிக்காட்டியதை தவறாக எடுத்துக்கொள்ளாததற்கு நன்றி.

  கீதையின் ஒரு தொகுதியில் ஆத்மாவின் இயல்புகளையும், தன்மைகளையும் விளக்குமிடத்து இவ்வாறு கண்ணன் சொல்வதாக வருகிறது.

  பதிலளிநீக்கு
 9. husdhfvjdfnvjhgfdh nfg hfv fdnv jdfhvuhf

  பதிலளிநீக்கு
 10. //உன்னைப் போல் ஒருவன் படத்தை முன்வைத்து எழுந்த விமர்சனங்களும் விவாதங்களும் ஆரோக்கியமானச் சூழலாகவே இருந்தன. //


  எனக்கு தெரிந்து அது போன்ற ஆரோக்கியமான விமர்சனங்கள் இரண்டு அல்லது மூன்று வந்திருக்காலாம். ஆனால் பெரும்பாலனவை விசிலடிச்சான் குஞ்சுகளின் பார்வை ஆதாவது ரஜினி ரசிகர்கள் எதிராகவும், கமல் ரசிகர்கள் ஆதரவாகவுமே இருந்தது.

  உலகெங்கும் உள்ள நல்லதை கொண்டிங்கு சேரு என்று பாரதி சொன்னது போல, மற்ற மொழிகளில் வரும் ஏற்புடைய படைப்புகளை கமல் தமிழில் அதே தரத்துடன் கொடுக்க முயல்கிறார்(முன்பு குருதிப்புனல்).

  நல்ல தரமான திரைப்படங்கள் இருக்கும் போது, கற்பனைக்கு எட்டாத மூளையை மழுங்கடிக்ககூடிய ஆங்கிலப்ப்டங்களை இங்குள்ள ஒரு தொலைக்காட்சி வாரம் தோரும் தமிழாக்க்கி கொடுக்கிறதே, அந்த மாதிரியில்லாமல் நல்லப்டங்களை நமக்கு தகுந்தார்போல எளிமைப்படுத்திக்கொடுப்பதை வரவேற்கவேண்டும்.

  கமலிடம் இருந்து இது போன்ற படங்களைதான் எதிர்ப்பார்கிறோம். தசாவதாரம் போன்ற படங்களை அல்ல என்பதை அவரும் புரிந்து கொள்ளவேண்டும்.

  பதிலளிநீக்கு
 11. நல்ல விசயம்தான்.

  ஆனால், பார்ப்பனியத்துக்கு எதிராக பேசுகிற தொனியில் வாழைப்பழத்தில் ஊசியேற்றுகிற மாதிரி பார்ப்பனியத்தை புகுத்தும் பார்ப்பனர்கள் இருப்பதால் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.

  பதிலளிநீக்கு
 12. //பிறப்பின் அடிப்படையில் பாரதியையும் பார்க்கிற அவலம் நேர்ந்திருக்கிறது. ஒரு மகாகவிக்கு இப்படியொரு இழிநிலை ஏற்பட்டிருக்க வேண்டாம். //

  இதற்குக் காரணம் பார்பனர்கள் தான், பாரதி வாழ்ந்த காலத்தில் ஒதுக்கி வைத்தப் பார்பனர்கள், அவருடைய புகழ் அவர் மறைந்த பிறகும் மங்காததால் பாரதி கழட்டி எரிந்த பூணூலை அவரது படத்துக்குப் போட்டு பாரதியைப் பார்பனனாகக் காட்ட முயற்சிக்கிறார்கள்.

  இது தொடர்ந்தால் பாரதி பார்பனக் கவியாக வரும்காலத்தில் பார்க்கப்படுவார். திருவள்ளுவரை பார்பனராக்கிய முயற்சிகல் முறியடிக்கப்பட்டன என்பது நமக்கு ஆறுதல்.

  பாரதிக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை பாரதிதாசனுக்கு பார்பனப் பத்திரிக்கைக்கள் கொடுப்பதில்லை என்பதையெல்லாம் பார்த்தால் தவறும் காரணமும் யார் என்பது தெரியும்.

  வெளிநாடுகளில் 'பாரதி சங்கங்கள்' பார்பனர்களின் கட்டுப்பாடுகளுடன் பல நாடுகளில் இயங்கிவருகிறது.

  சொர்க்கம் நகரத்துக்கும் போனால் அங்கும் இவாள பூணூலோடு பார்க்க வேண்டிவருமோ என்று யாரும் நினைத்துப் பார்ப்பதே இல்லையா ?
  :)

  பதிலளிநீக்கு
 13. சரியான கருத்துக்கள்.
  நம் நாட்டிலும் சரி, இப்போது பதிவுலகத்திலும் சரி, கருத்து பரிமாறல், விவாதம் என்பது, நம் நாட்டின் ஜனநாயகம் மாதிரி தான். just skin deep. வாரிசு அரசியல் எப்படி ஒரு தீராத வியாதியோ, கட்சிக்குள் எப்படி கருத்து பேதம் மறுக்கப்படுகிறதோ, தனி மனித துதி எப்படி அனைவரின் கண்களை மறைக்கிறதோ, அது போன்று விவாதம், நிமிடத்தில் நாம் அனைவரும், உணர்ச்சி வசப்பட்டு, பூணுலை இழுக்க ஆரம்பித்துவிடுகிறோம்.

  பதிலளிநீக்கு
 14. சுட்டிக்கு மன்னிக்கவும், இதற்கான காரணங்களில் ஒன்று..,,

  ஏனென்றால் நானொரு பிளாக்கர்!!! http://abbaavi.blogspot.com/2009/09/blog-post_26.html

  பதிலளிநீக்கு
 15. உங்கள் முந்தைய பதிவில் பாசிஸ்ட் என்ற கொடூர வார்த்தை கமலுக்கு எதிராக பயன்படுத்துவது சரியல்ல எனச்சொல்ல முயன்றீர்கள்.
  நீங்கள் சொன்னது போல் வள்ளுவனும்,பாரதியும் கூட விமர்சிக்கப்பட்டது ஆச்சர்யமாக, நம்ப இயலாததாக இருக்கிறது.
  பாசிஸ்டு வார்த்தையை விளக்க நீங்கள் எடுத்த நிலை இத்தகைய எதிர்வினையை ஏற்படுதியது என நினக்கிறேன்.
  சாதி என்பது 'state of mind'.தண்டோரா சொன்னது போல் அடுத்த தலைமுறை வந்துவிட்டது.சாதி அரசியல்தான் இன்று இருக்கிறது.
  இன்றைய சூழலில் கவனமாக இருத்தலும்,சமூகத்தை அடுத்த நிலைக்கு உயர்த்தும் பொறுப்பும் எழுத்தாளர்களுக்கு இருக்கிறது. நீங்கள் சரியாய் பயணிக்கிறீகள். ஆனால் சில பதிவுகளைப் பார்த்தபோது, நல்ல வேளை வலைத்தளம் வெகுஜன ஊடகமாக இல்லை என்ற எண்ணமே ஏற்பட்ட்து.

  பதிலளிநீக்கு
 16. படைப்பை விட்டுவிட்டு படைப்பாளனையும், கருத்தை விட்டுவிட்டு கருத்தாளனையும் விமர்சிக்கும் சூழல் இருப்பதாலேயே பொதுவெளியில் கருத்துச் சொல்லும் பலர் அனானிகள் ஆகிப்போவதும் உண்மை.

  (வெற்றிகரமான உ.போ.ஒ மூன்றாவது இடுகையா? :))

  பதிலளிநீக்கு
 17. மிக நேர்த்தியாக சொல்லி இருக்கிறீர்கள். எந்த ஒரு தனி மனிதரையும் ஒரு மனிதராக பார்க்க வேண்டுமே தவிர அவருடைய ஜாதி, இனம், மதம் இன்னும் பிற குழு சார்ந்த பின்னணியில் பார்க்ககூடாது. அத்தகைய்ய பார்வை அறிவியல் நோக்கு இல்லாமல் முன்தீர்மானங்களின் அடிப்படையில் அமைந்து விடும்.


  மனிதர்கள் எல்லோருமே ஏதோ ஒரு ஜாதியில் பிறந்துதான் ஆக வேண்டும். ஆனால் அந்த ஜாதிக்கு உட்பட்டவராக மட்டுமே ஒருவரை பார்க்ககூடாது. பிறக்கும்போதே யாரும் ஜாதி தெரிந்து பிறப்பது இல்லை. ஓரளவு நினைவு வந்த பின்புதான் அது நம்மீது பெற்றோர்கள், உற்றார் உறவினர்களால் சுமத்தப்படுகிறது. அனைத்து ஜாதியிலும் இதற்கு ஆட்படாமல் தனித்து சிந்திப்பவர்களும் இருப்பார்கள். வாதங்களுக்கு கூர்மையான எதிர்வாதங்களை வைக்க வேண்டும். அதை விடுத்து ஜாதி சார்ந்த முத்திரை குத்துவது ஜாதியை எதிர்ப்பவர்கள் செய்ய கூடாது. அவ்வாறு செய்வது ஒருவகையில் ஜாதியை வளர்ப்பதாக கூட அமைந்து விடும்.

  அன்புடன்,

  சிவா

  பதிலளிநீக்கு
 18. மாதவ்ராஜ்,

  விவாதம் ஏற்கனவே திசை மாறிவிட்டது...அல்லது தவறான திசையிலேயே ஆரம்பித்தது...

  கமல்ஹாசன் என்பவரை விட்டு அவர் சொன்னது சரியா, அப்படி சரி/தவறேன்றால் அதற்கான காரணங்கள் என்ன??

  ஆனால் ஓட்டு மொத்த விவாதமே, சொன்ன கமல்ஹாசன் பார்ப்பன குடும்பத்தில் பிறந்தவர் என்பதாலேயே ஆரம்பிக்கப்ப்ட்டு இருக்கிறதா என்ற சந்தேகம் வருகிறது...

  இதை விடுத்து, தீவிரவாதம் குறித்தும், அதில் இஸ்லாமிய தீவிரவாதம் என்று சொல்லப்படுவது குறித்தும் ஆராய்ந்திருந்தால் அது வேறு விதமாக இருக்கும்...

  ஆக, முதல் விவாதத்தின் அடிப்படையே கமல்ஹாசன் என்ற தனி மனிதனை குறித்தே என்ற சந்தேகம் ஏற்படுகிறது...

  கமல்ஹாசனை பொறுத்தவரை, தனக்கு சரி என்று எண்ணக்கூடியதை எந்த பயமும் இல்லாமல் சொல்லக்கூடியவர்...(நான் கமல் ரசிகனல்ல என்பது டிஸ்க்கி) காவேரி பிரச்சினை உண்ணாவிரததில் வைரமுத்துவும் எனக்கு வேண்டும், குல்சாரும் எனக்கு வேண்டும், அனில் கும்ப்ளேவும் எனக்கு வேண்டும் என்று சொன்னவர்....நீங்கள் பணம் கொடுப்பது என் படத்தை பார்க்கத் தானே தவிர என் சொந்த விஷயத்தில் மூக்கை நுழைக்க அல்ல என்று பேட்டி கொடுத்த உண்மையான மனிதர்....

  அவர் எதற்கும் பயப்பட்டதில்லை....இதற்கும் பயப்பட போவதில்லை...

  கமல்ஹாசனை இந்து பாசிஸ்ட் என்று முத்திரை குத்துபவர்கள், ஆஃப்கனிஸ்தானில் தலிபானின் அலங்கோலம் குறித்தும், மும்பை படுகொலை குறித்தும், பெங்களுர் குண்டு வெடிப்புகள், லண்டன் குண்டு வெடிப்புகள், இரட்டை கோபுர தாக்குதல்கள் குறித்தும், டவின்சி கோட் படத்துக்கும், புத்தகத்துக்கும் தடை, அதே சமயம் பெரியாரின் கருத்துக்களுக்கு அங்கீகாரம் கொடுக்கும் கருணாநிதி குறித்தும் என்ன சொன்னார்கள் என்று தேடிக் கொண்டிருக்கிறேன்....இது வரை, எதுவும் சொன்னதாக தெரியவில்லை....கள்ள மெளனம்???

  பதிலளிநீக்கு
 19. முக்கியமானதொரு டிஸ்க்கி: நான் இன்னும் உன்னைப் போல் ஒருவன் படம் பார்க்கவில்லை...என் முந்திய கருத்து விவாதம் குறித்தது...படம் குறித்தது அல்ல....

  பதிலளிநீக்கு
 20. //
  கோவி.கண்ணன் said...
  //
  பாரதிக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை பாரதிதாசனுக்கு பார்பனப் பத்திரிக்கைக்கள் கொடுப்பதில்லை என்பதையெல்லாம் பார்த்தால் தவறும் காரணமும் யார் என்பது தெரியும்.
  //

  அப்படியானால், பத்திரிக்கைகளில் பார்ப்பனர் மட்டுமே இருக்கிறார்களா என்ற கேள்வி எழுகிறது...

  எனக்கு தெரிந்த வரை, தமிழின் மிக பலமான பத்திரிக்கைகளான தினத்தந்தியும், குமுதமும் பார்ப்பனர்களால் நடத்தப்படவில்லை....

  //
  வெளிநாடுகளில் 'பாரதி சங்கங்கள்' பார்பனர்களின் கட்டுப்பாடுகளுடன் பல நாடுகளில் இயங்கிவருகிறது.
  //

  அதே சமயம், பாரதி தாசன் பெயரால் யாரும் சங்கம் தொடங்கவும் தடை விதிக்கப்படவில்லை!

  பதிலளிநீக்கு
 21. //
  Anonymous said...

  மனிதர்கள் எல்லோருமே ஏதோ ஒரு ஜாதியில் பிறந்துதான் ஆக வேண்டும். ஆனால் அந்த ஜாதிக்கு உட்பட்டவராக மட்டுமே ஒருவரை பார்க்ககூடாது. பிறக்கும்போதே யாரும் ஜாதி தெரிந்து பிறப்பது இல்லை. ஓரளவு நினைவு வந்த பின்புதான் அது நம்மீது பெற்றோர்கள், உற்றார் உறவினர்களால் சுமத்தப்படுகிறது. அனைத்து ஜாதியிலும் இதற்கு ஆட்படாமல் தனித்து சிந்திப்பவர்களும் இருப்பார்கள். வாதங்களுக்கு கூர்மையான எதிர்வாதங்களை வைக்க வேண்டும். அதை விடுத்து ஜாதி சார்ந்த முத்திரை குத்துவது ஜாதியை எதிர்ப்பவர்கள் செய்ய கூடாது. அவ்வாறு செய்வது ஒருவகையில் ஜாதியை வளர்ப்பதாக கூட அமைந்து விடும்.

  அன்புடன்,

  சிவா

  //

  Well said Siva!!!

  எந்த விவாதத்திலும் இது பார்ப்பனீயம், நீ கொண்டை என்று இழுத்து தான் முற்போக்குவாதி(!) என்று நிரூபிப்பதே இங்கு வழக்கமாக இருக்கிறது....

  மொட்டைத் தலைக்கும், அமாவாசைக்கும் முடிச்சிடுவதில் இங்கு பலர் வல்லுநர்கள்!

  பதிலளிநீக்கு
 22. க‌டைசி வ‌ரிக‌ள் ந‌ச்..!! ஆரோக்கிய‌மான ப‌திவு !

  ஹாட்ரிக் ??

  பதிலளிநீக்கு
 23. /பார்ப்பனீயம்தான் எதிர்க்கப்பட வேண்டியதே தவிர, பார்ப்பனர்களல்ல. /

  முற்றிலும் உடன்படுகிறேன்! நல்ல பதிவு!

  பதிலளிநீக்கு
 24. நல்ல கருத்துக்கள் தோழர். வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 25. You should send this to Puthu Visai editorial team and Adhavn Teetchanya.If you stand by your
  words you should criticise both.

  பதிலளிநீக்கு
 26. கம்யூனிஸ்டுகளில் இதுபோல வழவழ கொழகொழாக்கள் இருப்பதை அறிந்து நொந்து போகிறேன்

  பதிலளிநீக்கு
 27. // You should send this to Puthu Visai editorial team
  and Adhavn Teetchanya. If you stand by your words
  you should criticise both. //

  பிரச்சினை இதுதான். பாருங்கள், இது உன்னைப்போல் ஒருவன் திரைப்படம் குறித்த விவாதம். எங்கோ தடம் புரண்டுபோய் பார்ப்பணீயத்தில் முடிகிறது. அத்தோடு முடிந்துவிட்டால் பிரச்சினை இல்லை. ஆதவன் தீட்சண்யா அப்புறம் புதுவிசை ஆசிரியர்குழுவுக்கு இதில் என்ன பங்கிருக்கிறது என்று தெரியவில்லை. அதிகமதுவில் மதியிழந்த தெருச் சண்டியரின் நடவடிக்கை இது. சண்டியர் ஒருபோதும் ஆதிக்கத்துக்கு எதிராகப்போராட மாட்டான். போராடியதாக ஒரு சின்ன நாடோடிக் கதைகூடக் கிடையாது. தனக்கு தோதுவான அடிவாங்கிவிட்டு திருப்பியடிக்காத ஒத்தை வீட்டுக்காரனின் மேல் பாய்கிற வீரம் இது. இதுதான் இந்தியாவின் ஒட்டுமொத்த வீரம். வெள்ளையனுக்கு ஷூ துடைத்துவிட்டு அவனை இறுநூறு ஆண்டுகள் ஆளவிட்ட வீரர்கள் தான் இன்னும் செருப்போடு நடக்காதே என்று சட்டம் போட்டுக் காக்கிறார்கள்.
  it is the pride of சாவனிஸ்ம்.
  சரி அதையாவது நேரடியாகச் செய்யலாமே எதுக்கு இன்னொருத்தர் நிழலில் ஒளிந்துகொண்டு ? உங்கள் கருத்தை நேரடியாக ஆதவனுக்கு அனுப்பிவையுங்கள்.

  பதிலளிநீக்கு
 28. "பார்ப்பனீயம்தான் எதிர்க்கப்பட வேண்டியதே தவிர, பார்ப்பனர்களல்ல. இதர ஜாதி மக்களை அடக்கி, ஒடுக்கி வைக்கிற மேலாதிக்க பார்ப்பனியத்தை இந்த சமூகத்திலிருந்து அகற்றுவதற்கு இங்கு அனைவரும் சேர்ந்தே செயல்பட வேண்டி இருக்கிறது. பார்ப்பனியத்திற்கு எதிரான கருத்துக்கள் எங்கிருந்து வந்தாலும், யாரிடமிருந்து வந்தாலும் அவைகளை வரவேற்கிற தெளிவும், தெம்பும் வேண்டும். சந்தேகக்கண் கொண்டு அவைகளை கிள்ளி எறிவதும், முத்திரை குத்தி அந்தக் கருத்துக்குரியவர்களை புறந்தள்ளுவதும் சமூக மாற்றத்துக்கு ஒருபோதும் உதவாது."

  நல்ல கருத்து,
  தற்போது நீதியரசர்.தினகரன் 500 ஏக்கருக்கு மேல் சொத்து குவித்துள்ளார் என்று தமிழக விவசாயிகள் சங்கம் போராட்டம் செய்ததும் வீரமணி தினகரன் தலித் என்பதால் தான் அவரை உச்ச நீதிமன்றத்திற்கு நீதிபதியாகவிடாமல் பார்ப்பனர்கள் தடுக்கிறார்கள் என்று கூவுகிறார். நியாயமான கருத்தை யார் வேண்டுமானாலும் கூறலாம் அங்கும் வழக்கு கூறியவரின் சாதியை ஆராய்வதில் அர்த்தமில்லை.

  பார்ப்பனியம் தோற்றுவித்த மனுதர்ம சிந்தனையை இன்று தூக்கிப்பிடித்து தீண்டாமையை கடை பிடிப்பவர்கள் பார்ப்பனர்களை விட பிற்படுத்தப்பட்ட பிரிவில் உள்ள சாதிகள் தான் அதிகம்.

  பதிலளிநீக்கு
 29. Mr.Kamaraj...Fantstic Well Said with good example. When people like anonyies unnecessary pull puthuvisai and Adavan and divert the discussion, it makes me to suspect is this Paarpaniyam?

  Alagumukilan

  பதிலளிநீக்கு
 30. உன்னை போல் ஒருவன் படம் பார்த்து விட்டு தங்கள் பதிவுகளை படிக்கலாம் என எண்ணி, உன்னை போல் ஒருவன் தலைப்பில் வந்த பதிவுகளை படிக்காமல் விட்டுஇருந்தேன். நல்ல வேளையாக யார் இந்து பாசிஸ்ட் என தலைப்பிட்டு இந்துதுவக்கான இலக்கணத்தை தந்தது மிக்க பாரட்டுக்குகுரியது. ஆனால் இவ்வளவூ தெளிவாக தந்த பின்பும் ஏன் விவாதம் திசை மாறுகிறது என புரியவில்லை.

  சில கோரிக்கைகள்
  தங்களின் கீதை பற்றிய வரிகளை நிறைய பேர் பேசி கேட்டதுண்டு. தாங்கள் எதை ஒரு நல்ல வைப்பின் பொது என்னும் விரிவாக எழுத வேண்டுகிறேன்.

  நண்பர் மகேஷ்: 'நான்கு வர்ணங்களாக சமூகம் பிரிக்கப்பட்டு இருந்தாலும் ஆத்மாவுக்கு அந்த பேதங்கள் கிடையாது. இந்த பேதங்களை ஆத்மாவுக்கு பொருத்திப் பார்க்கக் கூடாது..." இது எப்படி ஆணவ வாக்காகும்

  அப்படி என்றால் ஆன்மாவுக்கு தான் பேதங்கள் கிடையாது. இங்கு வாழும் மனிதர்களுக்கு உண்டு என்றுதானே அர்த்தம்

  இந்திய சுதந்திர போராட்டத்தை பற்றி பள்ளிஎல் படித்தது போல் அல்லாமல், வேறு ஏதேனும் புத்தகம் இருந்தால் கூறவும்

  அழகுமுகிலன்

  பதிலளிநீக்கு
 31. தங்களின் இந்த பதிவு மிகவும் அருமை. பாரதி பார்ப்பான் என்பதல் தற்போது உள்ள ஒரு சில தற்குறி பதிவர்களால் விமர்சிக்கப் படுகிறார். அவர் கடையத்தில் தலித் பிள்ளைகளுக்கு அக்கராத்தில் கல்வி கொடுக்க முயன்றது, அவர்களுக்கு பூணுல் போட்டதால் அவர் அங்கிருந்து விலக்கி வைக்கப்பட்டு ஊரின் கோடியில் மண்டபத்தில் தங்கியிருந்தார். அதுபோல திருவல்லிக்கேனியிலும் அவரை மற்றவர்கள் விலகியிருந்தனர். பாரதி இறந்த போது வந்தவர்கள் மொத்தம் பத்து பேர் கூட இல்லை, அதில் அவரின் மிகவும் நெருங்கிய நன்பர் வல்லிக்கண்ணன் மட்டும்தான் பார்ப்பான். இப்படி பட்ட நல்லவரை பின்னூட்டங்களுக்காக விமர்சிக்கிறார்கள் என்றுதான் சொல்லமுடியும்.

  பதிலளிநீக்கு
 32. //பார்ப்பனீயம்தான் எதிர்க்கப்பட வேண்டியதே தவிர, பார்ப்பனர்களல்ல. //

  வழிமொழிகிறேன்!

  பதிலளிநீக்கு
 33. இதில் பகவத் கீதையை ஏன் மேற்கோள் காட்டவேண்டும்?.
  படத்திலும் சரி, நீங்களும் சரி கீதையில் அது எந்தப் பொருளில்
  வருகிறது என்பதைப் புரிந்து
  கொள்ள முயலாமல் பொத்தாம்
  பொதுவாக கீதையை குறிப்பிடுவது
  என்ன நியாயம்.

  கமல்ஹாசன் ஒரு இந்திப்படத்தை
  இப்படித் தமிழ்ப்படுத்தியிருக்கிறார்.
  இதையே விஜயகாந்த் செய்திருந்தால்
  அது வேறு விதமாக இருந்திருக்கும்.

  பார்பனர்களோ, முஸ்லீம்களோ ஒட்டுமொத்தமாக ஒரு சமூகத்தை
  குற்றம்சாட்டுவது அல்லது ஒரே போல்
  சித்தரிப்பது தவறென்றால் முதலில்
  நீங்கள் விமர்சனத்தை பெரியாரிடம்
  துவங்க வேண்டும்.ஆதவன் தீட்சண்யா,புது விசை குறித்த சர்ச்சைக்கான மேடை
  உங்கள் வலைப்பதிவல்ல.

  பலர் இடதுசாரிகளைப்
  பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
  இடதுசாரிகள் பிறரை பயன்படுத்திக்
  கொள்வதாக நினைத்துக் கொண்டு
  ஏமாந்து போகிறார்கள். அதற்கு காரணம் இடதுகளின் புரிதலில் உள்ள
  கோளாறு. கமலைப் பொறுத்தவரை
  சினிமாவில் ஹாலிவுட் முதலீடு வந்தால் தனக்கு லாபமென்றால்
  கைகோர்ப்பார். அவருக்கு அதில்
  இந்த முற்போக்கு கண்ணோட்டமும்
  கிடையாது.அத்தகையவர்கள் ஏதோ
  அங்கும் இங்கும் உங்களுக்கு உவப்பானவற்றை சில வேளைகளில்
  உதிர்த்துவிட்டதற்காக பூரிப்படைவது
  சரியா, அதற்காக அவர்களை தாங்கிப் பிடிப்பது நியாயமா என்று கேட்பதுதான் நியாயமாக
  இருக்க முடியும்.

  பதிலளிநீக்கு
 34. மாதவராஜ் தளத்தில் இடப்பட்ட பின்னூட்டம்

  எதிர்க்கப்பட வேண்டியது பார்ப்பனீயம் தான், மாறாக அந்த சமூகத்தில் பிறந்த காரணத்திற்காகவே ஒருவரை எதிர்க்கக்கூடாது என்கிற உங்கள் கூற்று முற்றிலும் சரி ஆனால் யார் அப்படி எதிர்க்கிறார்கள் ? கமலஹாசன் பார்ப்பன சமூக‌ பின்னணி கொண்டவர் என்பதாலேயே அவரை எதிர்ப்ப‌வர்கள் யார் ? அல்லது பாரதியை அவ்வாறு எதிர்ப்பவர்கள் யார் ?

  நீங்கள் கூறுவது போல‌ கமலஹாசனை ஒரு மாபெரும் கலைஞன் என்று அவருடைய‌ ஒரு பகுதியை மட்டும் (நடிப்பு,அதிலும் அவர் சிவாஜிக்கு 'வாரிசு') வைத்துக்கொண்டு வாழ்த்த முடியாது. அவ்வாறு செய்தால் த‌ன் காலத்தின் மாபெரும் கலைஞனாக திகழ்ந்த,கலையை தன் மக்களுக்காகவே(மக்கள் என்றால் உழைக்கின்ற மக்கள்) வடித்தெடுத்த‌ சாப்ளினுக்கும் கமலஹாசனுக்கும் வேறு பாடு இல்லாமல் போய் விடும். அவரும் கலைஞன் இவரும் கலைஞன் என்றாகி விடும் ! அது சரியா ?

  கமலஹாசனுடைய பார்ப்பனச்சார்பு பளீர் என்று பருண்மையாகத் தான் இருக்க வேண்டும் என்பதில்லை,அது மிகவும் சூக்குமமானதாக இருக்கலாம், சில சமயம் பெரியார்,கம்யூனிசம் என்று அவருக்கான‌ ஊறுகாயுடன் முற்போக்கும் கலந்திருக்கலாம்,அதாவது பாரதியை போல. நான் கமலஹாசனை ஒரு 'பார்ப்பன பாசிஸ்ட்' என்று கூறவில்லை.பாசிச கருத்தை பேசுபவனெல்லாம் பாசிஸ்ட் இயக்கத்தில் இருக்க வேண்டியதுமில்லை.ஆனால் கலஹாசனுக்கு தனது பார்ப்பன சமூகத்தின் மேண்மை பற்றிய பெருமை இருக்கிறது.

  பாரதி பற்றி இனியும் சொல்வதற்கென்ன இருக்கிறது ? சொல்லியும் ஆகப்போவது ஒன்றுமில்லை.அனைத்தும் உங்களுக்கும் உங்களைச் சார்ந்தவர்களுக்கும் நன்றாகத் தெரியும் எனவே பாரதி பற்றிய கதையை இத்துடன் விட்டுவிடுகிறேன்.

  பதிலளிநீக்கு
 35. நந்தா!
  என்ன காரணம் என்று சொல்லியிருக்கலாமே. பகிர்வுக்கு நன்றி.

  மகேஷ்!
  நன்றி.


  அனானி!
  ஆம், கமல் புரிந்துகொள்ள வேண்டியதும் நிறைய இருக்கின்றன.


  சுப்பிரமணி!
  ஒப்புக்கொள்கிறேன்.


  கோவி கண்ணன்!
  //இதற்குக் காரணம் பார்பனர்கள் தான், பாரதி வாழ்ந்த காலத்தில் ஒதுக்கி வைத்தப் பார்பனர்கள், அவருடைய புகழ் அவர் மறைந்த பிறகும் மங்காததால் பாரதி கழட்டி எரிந்த பூணூலை அவரது படத்துக்குப் போட்டு பாரதியைப் பார்பனனாகக் காட்ட முயற்சிக்கிறார்கள்.//

  பாரதியை அனைவரும் கொண்டாடுவதன் மூலம் இதனைச் சரி செய்யலாம்.


  Itsdifferent!
  நன்றி.


  அப்பாவி முரு!
  படித்து ரசித்தேன்.


  வேல்ஜி!
  மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 36. பீர்!
  நன்றி.


  சிவா!
  நன்றி.


  அதுசரி!
  //அவர் எதற்கும் பயப்பட்டதில்லை....இதற்கும் பயப்பட போவதில்லை...//
  பயப்பட வேண்டும் என்பதே என் பயம்!


  //கமல்ஹாசனை இந்து பாசிஸ்ட் என்று முத்திரை குத்துபவர்கள், ஆஃப்கனிஸ்தானில் தலிபானின் அலங்கோலம் குறித்தும், மும்பை படுகொலை குறித்தும், பெங்களுர் குண்டு வெடிப்புகள், லண்டன் குண்டு வெடிப்புகள், இரட்டை கோபுர தாக்குதல்கள் குறித்தும், டவின்சி கோட் படத்துக்கும், புத்தகத்துக்கும் தடை, அதே சமயம் பெரியாரின் கருத்துக்களுக்கு அங்கீகாரம் கொடுக்கும் கருணாநிதி குறித்தும் என்ன சொன்னார்கள் என்று தேடிக் கொண்டிருக்கிறேன்....இது வரை, எதுவும் சொன்னதாக தெரியவில்லை....கள்ள மெளனம்??//
  பெரியார் கருத்துக்களுக்கு அங்கீகாரம் கொடுப்பதில் என்ன தவறு? மும்பை குண்டுவெடிப்பு உள்ளிட்ட தீவீரவாதத்தை யாரும் ஆதரிக்க மாட்டார்கள். ஆனால் அதன் வேர்கள் அறியாமல் இலைகளுக்கு வைத்தியம் செய்து புண்ணியமில்லை என்பதுதான் முக்கியமானது.


  அ.மு.செய்யது!
  நன்றி

  பதிலளிநீக்கு
 37. சந்தனமுல்லை!
  நன்றி.


  rajasurian!
  நன்றி.


  அனானி!
  காமராஜ் புதுவிசையின் ஆசிரியர் குழுவில் முக்கியமானவர். அவர் உங்களுக்கு தேவையான பதில் அளித்திருக்கிறார்.


  அனானி!
  உங்களைப் போன்றவர்களுக்கு அப்படி கம்யூனிஸ்டுகள் தெரிகிறார்கள். எனக்கு சரியான இலட்சியங்கள் கொண்டவர்களாக தெரிகிறார்கள். அவரவர் வானம் அவரவர் காற்று!


  காமராஜ்!
  நன்றி.


  ஹரிஹரன்!
  அதுதான் ஜாதி அமைப்பில் உள்ள முக்கிய அம்சம். அதன் அடிப்படை அப்படியானது.


  அழகுமுகிலன்!
  நன்றி.

  பதிலளிநீக்கு
 38. பித்தன்!
  ரொம்ப நன்றி. பாரதியை மிகச் சில வரிகளில் அற்புதமாக அடையாளம் காட்டியதற்கு நன்றி.


  வால்பையன்!
  நன்றி.


  அனானி!
  இந்தியாவிற்கான சாபம் கீதையில்தான் இருப்பதாகப் படுகிறது. காந்தியும் கைகளிலும் இருக்கும், கோட்சேவின் கைகளிலும் இருக்கும். ஆம் இச்சமூகத்தை சுத்தம் செய்யவேண்டுமென்றால் முதலில் பெரியாரின் விளக்குமாற்றைத்தான் பயன்படுத்த வேண்டும்.


  parthas!
  நீங்கள் சொல்வது புரியவில்லை.  vrinternationalists!
  மிக முக்கியமான, பயனுள்ள கருத்துக்களை முன்வைத்து இருக்கிறீர்கள். நன்றி. அதிலும் சாப்ளினை குறிப்பிட்டு இருப்பதுதான் ஒரு மகத்தான கலைஞனுக்கான அடையாளம்! நான் கமலை சாப்ளின் அருகே வைத்துக்கூட ஒருபோதும் பார்க்கத் துணிந்ததில்லை.

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!