உன்னைப் போல் ஒருவனை முன்வைத்து நான் சொல்லிய சில கருத்துக்களை பதிவர் சுகுணா திவாகர் அவர்கள் எதிர்பாராத எதிர்வினைகளாக கருதியிருக்கிறார். அவைகளின் மேலான தனது கருத்துக்களை மேலும், ஆணித்தரமாகவும், அழுத்தமாகவும் முன்வைத்திருக்கிறார். சமூகத்தின் பொதுவெளியில் நடக்க வேண்டிய இதுபோன்ற விவாதங்களை முன்னெடுத்துச் செல்லும் அவருக்கு என் நன்றிகள் முதலாவது.
அவர் குறிப்பிட்ட குழப்பங்களும், மயக்கங்களும் எனக்குள் நீடிக்கிறதா, இந்து பாசிஸ்டு என்பது யார் எனவெல்லாம் பேசுமுன் அவருக்கு என்னைப்பற்றிச் சொல்லிக்கொள்ள ஒரு விஷயம் இருக்கிறது. ஜெயலலிதாவை நான் சகித்துக்கொண்டதில்லை. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் என்கிற அமைப்பு ‘உன்னைப் போல் ஒருவன்’ படம் குறித்து என்ன அபிப்பிராயம் வைத்திருக்கிறது என்பதை அறியேன். என் தனிப்பட்ட கருத்துக்களுக்கு, நான் சார்ந்திருக்கும் அமைப்பை தயவுசெய்து இழுக்க வேண்டாம். என்னுடைய புரிதலில் வெளிப்படுத்திய கருத்துக்களுக்கு, எழுத்தாளர் சங்கத்தில் இயங்கிக்கொண்டு இருக்கிற தோழர்கள் கூட பின்னூட்டங்களில் தங்கள் வருத்தங்களைத் தெரிவித்துக் கொண்டு இருக்கிறார்கள் என்பது அவருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
திரைப்படங்களுக்கு வெளியே கமல்ஹாசன் என்னும் கலைஞர் தன்னை எப்படி வெளிப்படுத்தியிருக்கிறார் என்று நான் குறிப்பிட்டு இருந்தவைகளைப் பற்றிச் சொல்லும்போது “நாத்திகராய், பகுத்தறிவுவாதியாய் இருப்பதல்ல பிரச்சினை. ஒடுக்கப்பட்ட மக்களின்பால் அக்கறையுள்ளவராகவும், தனது ஒரு அசைவுகூட ஆதிக்கத்திற்குத் துணைபோய் விடக்கூடாது என்பதிலும் கவனமாய் இருப்பதுதானே சமூக அக்கறையுள்ள கலைஞனின் பணி?’’ என்று கேட்டு இருக்கிறார். அப்படியே நான் ஒப்புக்கொள்கிறேன். அதில் அவர் தவறி இருக்கிறார் என்பதை நானும் எனது பதிவுகளில் சுட்டிக் காட்டி இருக்கிறேன். அப்படி தவறி விட்டதாலேயே அவரை இந்து பாசிஸ்டு என்று சொல்லிவிட முடியுமா என்று கேள்வி வருகிறது. இந்த ரீதியில் கணக்கெடுக்க ஆரம்பித்தால் எத்தனை கலைஞர்கள் இந்து பாசிஸ்டுகளாக இல்லாமல் மிஞ்சுவார்கள்?
தொடர்ந்து “கமலின் படங்களிலும் நடவடிக்கைகளிலும் புகைமூட்டம் மாதிரியான குழப்பங்கள் இருக்கின்றன என்பது உண்மைதான். இந்த குழப்பம் கமலுக்கா, நமக்கா என்பதிலும் குழப்பம் இருக்கிறது. ஆனால் எந்த குழப்பமும் இல்லாமல் கமல் தன்னை ஒரு இந்துபாசிஸ்டாகத்தான் இந்த படத்தில் வெளிப்படுத்தியிருக்கிறார் என்றுதான் நான் கருதுகிறேன்”. எனச் சொல்கிறார் சுகுணா திவாகர். ஆக, இதர விஷயங்களில் கமல் பற்றிய மதிப்பீடுகளில் புகைமூட்டம் போன்ற குழப்பங்கள் இருப்பதை ஒப்புக்கொள்ளும் அதே வேளையில், இந்தப் படத்தைப் பொறுத்த வரையில் அவர் இந்து பாசிஸ்டுத்தான் என்று அடித்துச் சொல்கிறார் அவர். கமல் என்னும் தனிப்பட்ட கலைஞர் ‘இந்து பாசிஸ்டு’ எனச் சொல்லப்படுவதில் சுகுணா திவாகருக்கும் குழப்பங்கள் இருப்பதை உணர முடிகிறது. ஆக, அவரது ‘இந்து பாசிஸ்டு’ என்னும் மதிப்பீடு இப்போது உன்னைப் போல் ஒருவன் என்கிற படத்தைப் பொறுத்த வரையில் என்பதை அவரே தெளிவு படுத்தி இருக்கிறார்.
அடுத்து இதிலும் ஒரு குழப்பம் இருக்கிறது. படத்தில் கமல் ஏற்றுக்கொண்டு இருக்கிற பாத்திரம் ‘இந்து பாசிஸ்டா’ அல்லது இந்தப் படத்தை தமிழுக்குக் கொண்டு வந்ததில் கமலுக்கு இருக்கும் பங்கையும், நோக்கத்தையும் முன்வைத்து இந்த ‘இந்து பாசிஸ்டா”. இதற்கான பதில் சுகுணா திவாகர் அவர்கள் ‘’படைப்பு என்பது படைப்பாளியின் துணையில்லாமலேயே அந்தரத்தில் மிதந்துகொண்டிருக்கிறதா மாதவராஜ்? பிளாக் மாதிரியான படங்களைத் தேர்ந்தெடுக்காமல் துரோகால், வெட்னெஸ்டே மாதிரியான படங்களை ரீமேக் செய்கிற கமலின் தேர்ந்தெடுப்பிற்குப் பின் எந்த அரசியலுமே இல்லையா தோழர்?’’ என்று கேள்வி கேட்பதில் தெளிவாக இருக்கிறது.
இப்போது யார் இந்து பாசிஸ்டு என்கிற புரிதலுக்கு நாம் வரவேண்டி இருக்கிறது. அப்போதுதான் கமலின் ‘இந்த தேர்ந்தெடுப்பு’ அவரை இந்து பாசிஸ்டு என்று சொல்லக் கூடுமா என்று தெரியும். மிக விரிவான, ஆழமான விளக்கங்களுக்கெல்லாம் போகாவிட்டாலும் சில அடிப்படையான தன்மைகளையாவது உள்வாங்கிக் கொள்வது அவசியம்.
ஒரு குறிப்பிட்ட இனம், மதம், மொழி போன்றவைகளின் அடிப்படையில் மக்கள் ஒன்றிணைக்கப்பட்டு சமூத்தின் மீது தங்கள் மேலாதிக்கத்தை நிறுவி, இதர பகுதி மக்களை ஒடுக்குவது என்பது பாசிசத்திற்கான சுருக்கமான பதம். இப்போது இந்து பாசிசம் என்றால் என்னவென்று புரிந்திருக்கும். இந்துக்களை ஒன்றுபடுத்துவது, இந்துக்களின் தேசமாக இந்த நிலப்பரப்பை அறிவிப்பது மற்றும் ஆக்குவது, இந்துக்கள் அல்லாதவர்களை ஒடுக்குவதுதான் இந்து பாசிசம்.
இந்து என்கிற சொல்லைக் கொடுத்ததே ஆங்கிலேயன்தான். முதலில் வேத மதமாகவும், சமய மறுமலர்ச்சிக் காலத்துக்குப் பிறகு வைணவ சைவ மதங்களாகவும் உருமாறிக்கிடந்த இந்தியாவில் ஆங்கிலேயன் பூகோள ரீதியாக வரையறுப்பதற்குக் பயன்படுத்திய வார்த்தையை சென்ற நூற்றாண்டின் ஆரம்பத்தில் இந்திய பாசிச சக்திகள் தங்களுக்குரியதாய் எடுத்துக்கொண்டு, அதற்கு தொன்மையான அர்த்தங்களையும், கடந்தகால மகிமைகளையும் கற்பித்து, உருவேற்றி இன்று உன்மத்தம் கொண்டதாய் நம்முன் நிறுத்தி வைத்திருக்கிறது. 1905ல் கர்சன் பிரபு வங்காளத்தை இரண்டாகப் பிரித்தபோது அதை எதிர்த்து ஒன்றாக நின்று போராடிய இந்துக்களும், முஸ்லீம்களும் 1947ல் இந்த தேசமே இரண்டாக பிரிக்கப்பட்டபோது எதிரேதிரே நின்று ஒருவரையொருவர் கொன்று குவிக்க, தேசமே ரத்தக்களறியானது. இன்றுவரை நீடிக்கிறது. அப்படியொரு வரலாற்றுச் சிதைவினை துவக்கி வைத்தது இந்து பாசிசம் இங்கு.
கிலாபத் இயக்கத்திலிருந்து நாம் இந்து பாசிசத்தின் வேர்களை அறிய வேண்டி இருக்கிறது. இந்துக்களும், முஸ்லீம்களும் சேர்ந்து நின்று அப்போது ஆங்கிலேயருக்கு எதிராக போராடினார்கள். எப்போதுமில்லாத ஒற்றுமை உருவானது. “கிலாபத் கிளர்ச்சி காலத்தில் இந்துக்கள் வெளிப்படையாக முஸ்லீம்கள் கையிலிருந்து தண்ணீர் வாங்கிக் குடித்தனர். முஸ்லீம்களும் அவ்வாறே செய்தனர். இந்து முஸ்லீம் ஒற்றுமையே கோஷமாகவும், கொள்கையாகவும் அறிவிக்கப்பட்டது. மசூதி மேடையிலிருந்து போதனை செய்ய இந்து தலைவர்கள் அனுமதிக்கப்பட்டனர்” என்று பிரிட்டிஷ் அரசின் அதிகாரபூர்வ ஆண்டறிக்கை சொல்லியது.
இது சற்றும் பிடிக்காத, இந்த ஒற்றுமையை வெறுத்த இந்துத்துவாவின் பிதாமகன் கோல்வார்கர் இப்படி எழுதிகிறார்: “மக்கள் முதல்முறையாக ஒரு தேசீய வாழ்க்கை வாழப்போகிறார்கள் என்ற கருத்து பரப்பப்பட்டது. இந்த மண்ணில் வசிக்கும் அனைத்து மக்களும் சேர்ந்துதான் தேசம் என்றும், அந்த மக்கள் அனைவரும் ஒரு பொதுவான தேசிய மேடையில் இணைந்து சட்டரீதியான முறையில் போராடி விடுதல பெற வேண்டும் என்று கூறப்பட்டது. ஜனநாயகம் பற்றிய தவறான எண்ணங்கள் இக்கருத்துக்கு வலிமை சேர்த்தன. நம்முடைய நாட்டை முன்பு ஆக்கிரமித்தவர்கள் மற்றும் நமது எதிரிகளை நமது மண்ணுக்கு பொருத்தமில்லாத ‘இந்தியன்’ என்ற பெயரில் அழைக்கத் தலைப்பட்டோம். நம்முடைய போராட்டத்தில் அவர்களும் சேர்வதற்காக அவர்களையும் திரட்ட முற்பட்டோம். இந்த நஞ்சின் விளைவு நம் அனைவருக்கும் தெரிந்ததே. நமது எதிரிகளை நமது நண்பர்கள் என்று நம்புவதன் மூலம் நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ள நாம் அனுமதிக்கிறோம். நமது உண்மையான தேசியத் தன்மையை நமது கரங்களாலேயே சீரழித்துக்கொண்டு இருக்கிறோம்”. இந்து பாசிசத்தின் மிக முக்கியமான முகம் இது. இந்துக்கள் அல்லாதவரோடு சேர்ந்து எந்தப் போராட்டத்தையும் நடத்தக் கூடாது, அது இந்துக்கள் அல்லாதவரோடு பகைமையை ஏற்படுத்தாமல், ஒற்றுமையை ஏற்படுத்திவிடும் என அஞ்சும் அது. தன் எதிரிகளை நண்பர்களாகிக் கொள்ளக் கூடாது என்று உபதேசம் சதாகாலமும் செய்யும் அது.
கமல்ஹாசனின் ஹேராம், குருதிப்புனல் இரண்டிலுமே கமலின் நண்பர்களாக இருப்பவர்கள் முஸ்லீம்களே. ஷாருக்கானின் பிம்பத்தை வைத்து யோசித்தால், கோல்வார்கரின் வார்த்தைகள் எப்படி நொறுங்கிப் போயிருக்கின்றன என்பதை அறிய முடியும். படம் பார்க்கும் எந்த இந்துவுக்கும் ஷாருக்கான் பிடித்தமானவராகவே இருப்பார். குருதிப்புனல் படத்தில் தீவீரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் அப்பாஸ் என்னும் அதிகாரியோடு ஒன்றிணைந்து களம் இறங்குவார் கமல்ஹாசன். இவராவது, குடும்பத்திற்காக கடமை தவறுகிற கோழையாய் நடித்திருப்பார். ஆனால் உறுதியோடு தன் மரணத்தையும் பொருட்படுத்தாத அதிகாரியான அப்பாஸ் என்னும் பாத்திரத்தின் மீது எந்த இந்துவுக்கு பகைமை வரும்? இந்த ‘உன்னைப் போல் ஒருவன்’ படத்திலும் ஹாரிப் என்னும் முஸ்லீம் பாத்திரத்தோடு சேர்ந்துதான் தீவிரவாதிகள் கையாளப்படுகிறார்கள். கமல்ஹாசன் என்னும் பாத்திரம் சந்தேகப்பட்டாலும், ஹாரிப்பின் உறுதி பார்வையாளர்கள் அனைவரையும் கவர்ந்திருக்கிறதே! அதிலும் கடைசியில் அவனுக்குத் தெரியாமல் அவன் கையில் சுடும் இந்து போலீஸ் அதிகாரியைவிட ஹாரிப்பே எல்லோர் மனதில் நிமிர்ந்து நிற்கிறான. கமல்ஹாசன் படங்களில் தொடர்ந்து இப்படிப்பட்ட பாத்திரங்களும் வந்துகொண்டுதான் இருக்கிறார்கள். கோல்வார்கர் குறிப்பட்ட நஞ்சையும் கமல்ஹாசன் பார்வையாளர்களுக்கு ஊட்டியிருக்கிறாரே? இந்த அசைவுகள் எந்த ஆதிக்கத்திற்கு துணை போகக் கூடியன?
இன்னொரு முக்கிய நிகழ்வையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். கமல்ஹாசன், மருதநாயகம் என்னும் வரலாற்றுப் படம் ஒன்றை எடுக்கத் துணிந்ததும், இந்துவாக இருந்து முஸ்லீமாக மாறிய கான்சாகிபின் சரித்திரம் என்னவென்பதும் நமக்குத் தெரியும். ஆங்கிலேயருக்கு எதிராக வீரத்துடன் போரிட்டு மடிந்த அந்த வரலாற்றுப் பாத்திரம் வெளிவந்திருந்தால் மூஸ்லீம்கள் குறித்து எழுப்பப்படும் கட்டமைப்புகளுக்கு என்ன சேதாரங்களை உருவாக்கி இருக்கும் என்பதையும் நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். இராமகோபாலன் உள்ளிட்டவர்கள் எழுப்பிய கடுமையான கூப்பாட்டையும், கூச்சலையும் யாரும் மறந்திருக்க முடியாது. அப்படிப்பட்டவராகவும் கமல்ஹாசன் இருக்கிறார்.
இதற்காக நான் உன்னைப் போல் ஒருவன் படத்தையோ, கமல்ஹாசனையோ வக்காலத்து வாங்குவதாக எண்ணிக்கொள்ள வேண்டாம். இந்து பாசிஸ்டாக இருக்க வேண்டிய லட்சணங்கள் கமலுக்கு இல்லை என்பதைத்தான் சொல்கிறேன். இதனை நான் கமல்ஹாசன் மீதுள்ள மயக்கத்தினால் சொல்லவில்லை. இந்து பாசிஸ்டு என்பதன் அர்த்தம் புரிந்ததால் சொல்கிறேன். அந்த வார்த்தை மிகக் கொடூரமானது. அதன் அரசியலும், வரலாறும் அப்படியொரு வன்மம் நிரம்பியது.
இதையெல்லாம் பேசவைத்த சுகுணா திவாகர் அவர்களுக்கு மீண்டும் நன்றிகள்.
*
// சமூகத்தின் பொதுவெளியில் நடக்க வேண்டிய இதுபோன்ற விவாதங்களை முன்னெடுத்துச் செல்லும் அவருக்கு என் நன்றிகள் முதலாவது//
பதிலளிநீக்குமுதலில் நன்றி சொல்ல வேண்டியது கமலுக்கு :)
//
பதிலளிநீக்கு“நாத்திகராய், பகுத்தறிவுவாதியாய் இருப்பதல்ல பிரச்சினை. ஒடுக்கப்பட்ட மக்களின்பால் அக்கறையுள்ளவராகவும், தனது ஒரு அசைவுகூட ஆதிக்கத்திற்குத் துணைபோய் விடக்கூடாது என்பதிலும் கவனமாய் இருப்பதுதானே சமூக அக்கறையுள்ள கலைஞனின் பணி?’’ என்று கேட்டு இருக்கிறார். அப்படியே நான் ஒப்புக்கொள்கிறேன். அதில் அவர் தவறி இருக்கிறார் என்பதை நானும் எனது பதிவுகளில் சுட்டிக் காட்டி இருக்கிறேன். அப்படி தவறி விட்டதாலேயே அவரை இந்து பாசிஸ்டு என்று சொல்லிவிட முடியுமா என்று கேள்வி வருகிறது. இந்த ரீதியில் கணக்கெடுக்க ஆரம்பித்தால் எத்தனை கலைஞர்கள் இந்து பாசிஸ்டுகளாக இல்லாமல் மிஞ்சுவார்கள்?
//
Sir, இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணத்தை சொல்லி தனக்கு பிடித்தமானவர்களை இந்துத்துவாவாதி இல்லை என்று சொல்லிகொண்டே போனால், 'முத்தாலிக்', 'அசோக் சிங்கால்' கூட இந்துத்துவாவாதி இல்லை என்று சொல்லிவிடமுடியுமே.
திரு.மாதவராஜ்,
பதிலளிநீக்குஇங்கே நிறைய வார்த்தைகள் தவறுதலாகவே புரிந்து கொள்ளப் பட்டும்,திரித்தும் பேசப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
மதச்சார்பின்மை என்பது ஒன்று, இந்துத்வா, இந்துத்வ தீவீர வாதம், ஃபாஸிஸம், பார்ப்பான்-பார்ப்பனீயம்,சிறுபான்மையினரின் காவலர்கள் இப்படி இன்னமும் பட்டியல் நீண்டுகொண்டே இருக்கிறது.
/ஒரு குறிப்பிட்ட இனம், மதம், மொழி போன்றவைகளின் அடிப்படையில் மக்கள் ஒன்றிணைக்கப்பட்டு சமூத்தின் மீது தங்கள் மேலாதிக்கத்தை நிறுவி, இதர பகுதி மக்களை ஒடுக்குவது என்பது பாசிசத்திற்கான சுருக்கமான பதம்./
உங்கள் வரையறைப்படியே, இங்கே அதைச் செய்துகொண்டிருப்பவர்கள் யார்?
/வங்காளத்தை இரண்டாகப் பிரித்தபோது அதை எதிர்த்து ஒன்றாக நின்று போராடிய இந்துக்களும், முஸ்லீம்களும் 1947ல் இந்த தேசமே இரண்டாக பிரிக்கப்பட்டபோது எதிரேதிரே நின்று ஒருவரையொருவர் கொன்று குவிக்க, தேசமே ரத்தக்களறியானது./
கொஞ்சம் வரலாற்றுச் சம்பவங்களைச் சரியாகவே சொல்ல முனைந்த நீங்கள் தடுமாறுவது இந்த இடத்தில் தான்.
நினைவில் இருக்கும் ஒரே ஒரு விஷயத்தை மட்டும் சொல்கிறேன். கோமல் சுவாமிநாதன் அனல் காற்று என்று ஒரு நாடகம் எழுதினர், பின்னால் திரைப்படமாகவும் வந்தது. நக்சலைட்டுக்களை மையப்படுத்தி எழுதிய இந்தப்படத்தை இடதுசாரித் தலைவர்களுக்குத் திரையிட்டுக் காண்பித்தபோது, இது தமிழகத்தில் எடுபடுவது மிகவும் கஷ்டம் என்றும், புரியாது என்றும் சொன்னார்களாம்!
அதே மாதிரித் தான், இங்கே தீவீரவாதத்தைப் பற்றி ஆளுக்கு ஆள் என்னென்னவோ சொல்லிக் கொண்டிருக்கிறார்கள், எழுதிக் கொண்டிருக்கிறார்கள். அதன் வலி இன்னதென்று, அனுபவித்தவர்களுக்கு மட்டுமே புரியக்கூடியது.
மறுபடியும், ஆரம்பத்தில் சொன்ன மாதிரி,
இங்கே நிறைய வார்த்தைகள் தவறுதலாகவே புரிந்து கொள்ளப் பட்டும்,திரித்தும் பேசப்பட்டுக் கொண்டிருக்கின்றன!
நீங்கள் பதிவில் சொல்லியிருக்கும் பல விசயங்கள் எனக்கு புதியது மாதவராஜ்.
பதிலளிநீக்கு//
இந்து பாசிஸ்டு என்பதன் அர்த்தம் புரிந்ததால் சொல்கிறேன். அந்த வார்த்தை மிகக் கொடூரமானது. அதன் அரசியலும், வரலாறும் அப்படியொரு வன்மம் நிரம்பியது
//
பாராட்டுகள் & நன்றிகள்.
விசயகாந்தும் தான் பல படங்களில் இஸ்லாமிர்களை கொவது போல் வருது!
பதிலளிநீக்குஅதுவும் அவர்கள் படத்தில் படா தீவிரவாதிகளாக தான் காட்டப்படுகிறார்கள்!
ஆனால் யாரும் விசயகாந்தை இந்த்துவாவாதின்னு சொல்றதில்லை!
கமலை மட்டும் சொல்றாங்களே ஏன்?
வழக்கம் போல பார்பனிய எதிர்ப்பு தானா?
ஆழமான சிந்தனை நண்பா.. புரிதலை விட அறிதலே இங்கே தேவைப் படுகிறது..
பதிலளிநீக்கு"வால்பையன் said...
பதிலளிநீக்குவிசயகாந்தும் தான் பல படங்களில் இஸ்லாமிர்களை கொவது போல் வருது!
அதுவும் அவர்கள் படத்தில் படா தீவிரவாதிகளாக தான் காட்டப்படுகிறார்கள்!
ஆனால் யாரும் விசயகாந்தை இந்த்துவாவாதின்னு சொல்றதில்லை!
கமலை மட்டும் சொல்றாங்களே ஏன்?
வழக்கம் போல பார்பனிய எதிர்ப்பு தானா?"
இல்லை,வால்பையன்.நாம் அதிகமாக மதிக்கும்,நேசிக்கும் ஒரு படைப்பாளி,நல்லமனிதர் தடம் மாறி விடுவாரோ என்ற தவிப்பு மற்றும் ஆதங்கத்தின் வெளிப்பாடுஅது.கருப்பு எம்ஜியாரைப்பற்றி அப்படி எந்த பிம்பமும் இல்லை.அவருக்காக திருப்பதி சென்று மொட்டை அடித்துக்கொண்ட இஸ்லாமிய நண்பர் இப்ராகீம் இப்போது எங்கிருக்கிறார் என்றுகூட தெரியவில்லை.
பார்ப்பனர்கள் பலர் இப்படிச் சொல்லிக்கொள்வார்கள்:
பதிலளிநீக்கு”1. எனக்குச் சாதிகளில் நம்பிக்கை கிடையாது. நான் ‘பிராமணன்’ என்று நினத்ததே கிடையாது. நான் எல்லாம் சாப்பிடுவேன்.
2. நான் நாத்திகன். கடவுள் பெயரால் ஏமாற்றிப்பிழைக்கிறார்கள் சாமியார்கள்.
3. பாப்பான் என்னைக்கு தான் பிராமணன் என்ற நினைப்பைவிட்டுவிட்டு, மற்றவர்களை சமமாகப் பாவிக்கிறானோ அன்னைக்குத்தான் உருப்படுவான்”
----------------------------------
எண்ணம் 1ல் சொன்னார். ஆனால், பார்ப்பனர்களை யாராவது திட்டிவிட்டால் இவருக்குத் தாங்காது. சாதிகளே இல்லயென்றவர் ‘பூணால்’ போடுவது என்ன தவறு? அது தனிமனித உரிமை என்று வாதிடுவார். (வால்பையன் ஒரு எடுத்துக்காட்டு - சாதிகள் கிடையா என்பது இவர் கொள்கை. ஆனால் பூணூல் தவறல்ல. ஏன் சாதியைச் சொல்லக்கூடாது என்றும் கேட்டாரிவர். சாதிக்கொள்கையைப் பறைசாற்றப் பதிவு நடத்தும் தோண்டுவின் Man Friday இவர். இவர் ஒரு எடுத்துக்காட்டே. கேட்டால் மற்றவர்கள் யோக்கியமா? என்பார்கள். இவரைப்போல் பலருண்டு. பாரதியார் ஒரு great example. இவர்களின் pioneer எனலாம். )
எண்ணம் 2. நாத்திகம் பேசுவார். ஆனால் பெரியார் சொன்னது பிடிக்காது. இவரின் நாத்திகம், பிறமதக்கடவுள்களுக்காக. இந்துக்கடவுளர்களைத் தாக்கினால் அது நாத்திகம் அல்ல. அது பார்ப்பனதுவேசமே.
எண்ணம் 3. இபபடி பார்ப்பனர்களைத்திட்டுவது, இவருக்கு ஒரு credibility சேர்ப்பதற்காக. அப்பபோ இதைச்செய்வார்.
(இருப்பினும் இவர்களில் சிலர் மேலே சொன்னவற்றை உண்மையாக வாழ்க்கையில் கடைபிடிப்பார்கள். சொல்கிறார்கள். மற்றவர்கள் வேஷதாரிகள்.)
எனவேதான், விசயகாந்து முசுலீம் தீவிரவாதிகளைக் கொல்லுவதாக வந்தால் அவரை யாரும் இந்து பாசிசவாதி எனச்சொல்வது கிடையாது. ஆனால், ஒரு பார்ப்பன நடிகர் சொன்னால், அவரை யாரும் நம்புவதில்லை. எனவேதான், கமல் தனிப்பட்ட வாழ்க்கையில் எப்படியிருந்தாலும், அவரின் நடவடிக்கைகள் நம்பப்படுவதில்லை.
இப்போது, கமலைப்பற்றி மாதவராஜ் சொன்னதை நம்பலாமா? மாதவராஜ், தான் கண்ட, கேட்ட, பார்த்த சினிமாக்கள் அடிப்படையிலேதான் கணிக்கிறார். இன்னும் கமல் நன்றாகக் கவனிக்கப்படவேண்டும்.
கவனித்தால், கமலில் தன் ஜாதிமக்களின்மீதுள்ள பாசம் தெரிய வரும்.
ஒரு புறம் -- நான்வெஜிடேரியன் சாப்பாடு; இசுலாமியரோடு தோளுக்குத்தோளாக; அயோத்திக்குப்பத்தில் சேரிப்பாசை பேசல், நாத்திகம் வாதம், சாதிகள் கிடையா.
மறு புறம் --- ஜாதிப்பற்று. ஜாதிப்பற்றி இருக்கும்போது இந்துமதப் பற்றும் தானாலேயே வந்து ஏறிக்கொள்ளும். ஏனெனில் அவர் ஜாதிக்காரர்கள், இந்துமதம் இல்லையென்றால் இல்லையே! அவர்கள் அதற்காகத்தானே வாழ்கிறார்கள்!! கமல் மட்டும் ஒரு தனிமனிதரா? அம்மா, அப்பா, அக்காள்கள், அண்ணன்மார்கள், இவர்கள் குடும்பங்கள், மற்றும் குடும்ப பிற பந்துக்கள் - இவர்களெல்லாம் யார்? பார்ப்பனர்கள்தானே? இவர்களெல்லாம், பார்ப்பனீயத்தைத் தூக்கியெறிந்து விட்டனரா? இல்லையே! இவர்கள் மீது காட்டும் பாசம் வழிந்து தன் ஜாதிமக்களின்மீது போய், அதை ஓப்பானாகக் காட்டமுடியாமல், அங்கங்கே, இல்லயா மாதவாராஜ்?
பார்ப்பன ஜாதிப்பாசத்திற்கும், இந்துமதப்பாசத்திற்கும் தூரமில்லை. ஒன்றில்லாவிட்டால் மற்றொன்றில்லை. இந்துமதப்பாசத்திற்கும் இந்துபாசிசத்திற்கும் வெகுதூரமில்லை.
பதிலளிநீக்குநாமெல்லாரும் இந்துக்களே. எப்போது இந்து பாசிசவாதிகளாகிறோமென்றால், இந்துப்பாசம் ஆகி, தீவரக்காதலாகி, நம் கண்ணைமறைக்கும்போது - ”நாம் மட்டும்தான் உண்டு. மற்றவர்கள் இல்லை’ என்று நம்பத்தொடங்குகிறோம் அப்போது.
சுகுணா திவாகரின் இடுகையைப் படித்தவுடன், என்னவாயிற்று இவருக்கு? என்றுதான் தோன்றியது.
பதிலளிநீக்குதேசியம், இந்துத்வா, பிராமணீயம், பகுத்தறிவு, போன்ற வார்த்தைகள் கடந்த சில நாட்களாக படாத பாடு படுகின்றன.
கடவுள் மறுப்பவன் தி.க வாகவும், தோழர் என்றழைப்பவன் கம்யூனிஸ்டாகவும், கதர் சட்டை போட்டவன் தேசியவாதியாகவும், காவி கட்டியவன் சாமியாகவுமே இங்கு புரிந்து கொள்ளப்படுகிறது.இவர்களுக்கும் இதற்கும் ஒரு சம்பந்தமும் இல்லை என்பதை ஏன் புரிந்துகொள்ள மறுக்கிறார்கள்.
ஒன்றைச் சொல்வதும், பின் அதன்பால் மாறி நிற்பதும் இயற்கை. பாரதியிடம் இல்லாத முரண்பாடுகளா? அவனும் பார்ப்பான் தானே என்று சொல்லிவிடுவார்கள்.
கண்ணதாசனிடம்,பாரதிதாசனிடம், ஏன் வள்ளுவத்திலும் கூட முரண்பாடுகள் உண்டு.
படைப்பாளி வேறு, அவன் படைப்புகள் வேறுதான். படைப்பின் அடிப்படை அவன் விருப்பாக இருக்கலாம். ஆனால் அவனே படைப்பாக மாறமுடியாது.
படைப்பாளி இல்லாமல் அந்தரத்திலிருந்து படைப்பு வருமா? என்ற கேள்வி, அவரின் அறியாமையை விளக்குகிறது. படைப்பாளியின் கனவு, அவன் விருப்பு, வெருப்பு, அவன் பார்வை, அவன் புரிதல் இவைதான் படைப்பாய் வருமே தவிர, படைப்பாளியின் சுயம் தான் படைப்பு என்பது...........
வேறு என்ன சொல்வது.?
அவசியமான பதிவு
அன்புடன்
ஆரூரன்
//.நாம் அதிகமாக மதிக்கும்,நேசிக்கும் ஒரு படைப்பாளி,நல்லமனிதர் தடம் மாறி விடுவாரோ என்ற தவிப்பு மற்றும் ஆதங்கத்தின் வெளிப்பாடு//
பதிலளிநீக்குஎல்லோருக்கும் அதே போல் மனநிலை இருப்பதாக தெரியவில்லை!
தன் அரசியல் வெளிப்பாடை வெளிப்படுத்துகிறேன் என்ற போர்வையில் எதிர்பார்ப்பது விளம்பரம் போலத்தான் தெரிகிறது
//சாதிகள் கிடையா என்பது இவர் கொள்கை. ஆனால் பூணூல் தவறல்ல.//
பதிலளிநீக்குநான் எப்போ பூணூல் தவறல்ல என்று சொன்னேன்!
அருனாகவுரு கூட நான் கட்டமாட்டேன்!
அது இடுப்புவேட்டியை பிடித்து கொள்ளத்தான் என்றாலும் அதற்கும் மதசாயம் பூசுவதால்!
ஒன்றுக்கும் பிரஜோஜனமில்லாத பூனூல் நிச்சயமாக உயர்சாதிய திமிர் தான்! எனக்கு அதில் எந்த மாற்று கருத்துமில்லையே!
//சாதிக்கொள்கையைப் பறைசாற்றப் பதிவு நடத்தும் தோண்டுவின் Man Friday இவர்.//
பதிலளிநீக்குMan Friday ன்னா என்னான்னு தமிழில் சொல்லுங்க, எனக்கு அதன் அர்த்தம் தெரியாது!
//இவர்களில் சிலர் மேலே சொன்னவற்றை உண்மையாக வாழ்க்கையில் கடைபிடிப்பார்கள். சொல்கிறார்கள். மற்றவர்கள் வேஷதாரிகள்.//
பதிலளிநீக்குஎப்படி தெரிஞ்சிகிறிங்க, சிலர் கடைபிடிப்பார்கள், சிலர் வேஷதாரிகள்னு மை போட்டு பார்ப்பிங்களா!?
உங்க முன் முடிவுலயும், அனானி கமெண்டுலயும் தெரியுது உங்களுக்கு உண்மை பேச தெரியாதுன்னு
//எப்படி தெரிஞ்சிகிறிங்க, சிலர் கடைபிடிப்பார்கள், சிலர் வேஷதாரிகள்னு மை போட்டு பார்ப்பிங்களா!?//
பதிலளிநீக்குதன்னாலேயே தெரியும். அவரறியாமல் அவர் செய்கைகள் காட்டிக்கொடுக்கும். நாம் எந்தவித பூதக்கண்ணாடியும் போட்டுப்பார்க்கவேண்டிய தேவையில்லை.
எப்படிப்பின்னூட்டம் போட்டலென்ன கருத்துக்கள் பேசட்டும்.
//ஒன்றைச் சொல்வதும், பின் அதன்பால் மாறி நிற்பதும் இயற்கை. பாரதியிடம் இல்லாத முரண்பாடுகளா? அவனும் பார்ப்பான் தானே என்று சொல்லிவிடுவார்கள்.
பதிலளிநீக்குகண்ணதாசனிடம்,பாரதிதாசனிடம், ஏன் வள்ளுவத்திலும் கூட முரண்பாடுகள் உண்டு.
படைப்பாளி வேறு, அவன் படைப்புகள் வேறுதான். படைப்பின் அடிப்படை அவன் விருப்பாக இருக்கலாம். ஆனால் அவனே படைப்பாக மாறமுடியாது. //
படைப்புக்கள் அனைத்தும் இலக்கிய இன்பத்துக்காக எழுதப்படுவதில்லை. அவை, தத்தம் கொள்கைகளைப் பறைசாற்றவும் எழுதப்படும். கருணானிதி, அண்ணாத்துரை, முரசொலி மாறன் போன்றோரின் திரைப்பட வசனங்களைச் சொல்லலாம். கருணானிதியின் முரசொலிக்கவிதைகள் எதற்காக எழுதப்படுகின்றன? பிரச்சாரத்திற்காகவே.
பாரதிதாசன் இரண்டையும் செய்தார். பாரதியோ, தேசியப்பாடல்கள் என்று வெள்ளைக்காரனுக்கு எதிராக இன்னாட்டு மக்களைத்தூண்டுவதற்காக எழுதி, அவனால் துரத்தப்பட்டு, புதுவையில் போய் ஒளிந்து கொண்டார். பக்திப்பாடல்களின் மூலம் இந்து மத வளர்ச்சிக்கு அரும்பாடு பட்டார்.
இப்படி ஒவ்வொரு இலக்கியவாதியும் படைப்பாளி என்ற போர்வையில் செய்தனர் தங்களுக்குப்பிடித்த கொள்கைப் பிரச்சாரத்தை!
படைப்பாளி வேறு. அவன் படைப்பு வேறு என்பதை எங்கு ஒருவன் இலக்கிய இன்பத்திற்காக எழுதுகிறானோ அங்கு மட்டுமே சொல்ல முடியும். அப்படி பாரதி, பாரதிதாசன், ஏன் கருணானிதியும் கூட, எழுதியிருக்கிறார்கள். சாதி,இன, மத வேற்றுமையின்றி அவற்றை இரசிக்கலாம்.
பாரதியின் குயில் பாட்டு; பாரதிதாசனின் அழகின் சிரிப்பு, கருணானிதியின் குரலோவியம், அண்ணாத்துரையாரின் சிறுகதைகள் (செவ்வாழை) - இவைகளெல்லாம் ‘பிரச்சாரக்கவிஞர்கள்’ அவ்வப்போது செய்த இலக்கியச்சேவைகள். இங்கு மட்டுமே உங்கள் கடைசி வரிகள் பொருந்தும்.
வள்ளுவர் இலக்கியம் செய்ய எழுதவில்லை. அவர் எழுதியது நீதிநூல். அதுவும் ஒருவகை பிரச்சாரமே. மக்கள் படித்து இலக்கிய இன்பம் எய்தட்டும் என எழுதினாரா? நல்ல வேடிக்கை போங்கள்1
‘புலாண்ணாமை’ ’பெண்ணடிமைத்தனம்’ (கொழுநன் தொழுதெழுவாள்). ‘ஆத்திகம்’ போதுமே! எப்படி தான் பிடித்தக்கொள்கையை தமிழ்மக்கள் மீது திணிக்கப்பார்த்தார் என்பதற்கு!
படைப்பு வேறு, படைப்பாளி வேறு - என்ற பசப்பெல்லாம் வள்ளுவரிடம்கூட பழிக்காது தம்பி, அல்லது, அண்ணா!.
இடதுசாரிகள் முதலில் மதச்சார்பின்மையாளர்களா?. முஸ்லீம்களுக்கு பட்ஜெட்டில் 15% ஒதுக்கு, இட ஒதுக்கீடு கொடு என்று சொல்பவர்கள் முஸ்லீம்
பதிலளிநீக்குஆதரவாளர்கள்தானே?. மலேசியாவில் இந்துக்கள் உரிமைக்காக போராடும் போது அதை ஆதரிக்க ம்றுத்துவிட்டு பாலஸ்தீனத்தில் பாதிக்கப்படும் முஸ்லீம்களுக்காக
குரல் கொடுப்பவர்கள் எப்படி மதசார்பின்மையாளர்களாக இருக்க
முடியும்.
சுகுணா திவாகரும் இஸ்லாமிய
ஆதரவாளர். அவர் இந்து, இந்திய
எதிர்ப்பாளர்.
இதே படத்தில் இந்து எதிர்ப்பு வசனங்கள், பார்பன எதிர்ப்பு வசனங்கள், காட்சிகள் இருந்தால்
சுகுணா புகழ்ந்திருப்பார்.மாதவராஜும்
ஆமாம் என்று ஒத்துப் பாடியிருப்பார்.
முஸ்லீம்கள் முஸ்லீம்களை சூடானில்
கொல்வது, ஷியா-ஷன்னி சண்டை,
முஸ்லீம்கள் அகமதியாக்களை
தாக்குவது, ஹமாஸ், ஹிஸ்போலாவின் வன்முறை வெறியாட்டம் குறித்தெல்லாம் இவர்கள் வாய் திறக்கமாட்டார்கள்.
முஸ்லீம்களை திருப்தி செய்ய ஆங்கிலேயர் கொடுத்த சலுகைகளை
பதிலளிநீக்குஏற்று அனுபவித்தவர்கள் முஸ்லீம்கள். முஸ்லீம் லீகின் துரோக வரலாற்றை மறைத்து விட்டு
செக்யுலரிசம் பேசுவது ஏன்?.
vaaal eththanai naala kamal mela ulla kopaththai ippudi theethukiteenga. Enga visayakanth ennanga rendu moonu padathula theeviravaathingalai pudikiramaadhiri nadichaarunna ippa ellam avaru nadikkira padathukku vimarisanam elutha kooda yaarum padam paak porathillai avai poi olga nayaganoda oppittu, ippudi kummi adikka koodathu
பதிலளிநீக்குயார் 100% முஸ்லீம் பாசிஸ்ட்- சுகுணா திவாகர் என்பது சரியான விடை
பதிலளிநீக்குயார் 50% முஸ்லீம் பாசிஸ்ட்கள் - இடது சாரிகள்
அதுதான் வித்தியாசம்
//படைப்பாளி வேறு. அவன் படைப்பு வேறு என்பதை எங்கு ஒருவன் இலக்கிய இன்பத்திற்காக எழுதுகிறானோ அங்கு மட்டுமே சொல்ல முடியும்//
பதிலளிநீக்கு//வள்ளுவர் இலக்கியம் செய்ய எழுதவில்லை. அவர் எழுதியது நீதிநூல்.//
//படைப்பு வேறு, படைப்பாளி வேறு - என்ற பசப்பெல்லாம் வள்ளுவரிடம்கூட பழிக்காது தம்பி, அல்லது, அண்ணா!.//
என் வாதத்தை நீங்கள் புரிந்து கொள்ளவில்லை.
வள்ளுவன் குறள் எழுதியிருந்தாலும், குறளின் வழி வாழ்ந்தான் என்று சொல்லிவிடமுடியாது. ஒருவேளை அவன் அப்படி வாழ்ந்திருந்தால் அவனைப் பற்றிய கர்ண பரம்பரைக் கதைகள் வெளிவந்திருக்கும்.
வாசுகியின் கற்பு பற்றிய கற்பிதம் உண்டே தவிர, வள்ளுவன் வாழ்வியல் பற்றி இங்கில்லை.
மேலும்
உங்கள் பதிவு எது இலக்கியம்? என்ற புதிய கேள்விக்குப் போய்விட்டது.
இலக்கிய இன்பத்திற்காக எழுதுபவன் படைப்பாளி இல்லை என்பது உங்கள் கருத்தா?
நீதி போதிப்பவன் படைப்பாளி இல்லை என்பது உங்கள் வாதமா?
அனாமி என்ற பெயரில் உள்ள அனைத்தும் உங்கள் பதிவா? இல்லை பலர் இருக்கிறார்களா?
அடையாளத்தோடு வாருங்கள், புரிந்து கொள்வோம்.
என் கருத்துக்கள் தவறாக இருப்பின் மாற்றிக்கொள்ள, திறந்த மனதோடு காத்திருக்கிறேன்.
அன்புடன்
ஆரூரன்
நல்ல பதில் பதிவு.
பதிலளிநீக்குமற்ற பதிவர்கள் போல் அல்லாமல் கருத்துக்களில் யுத்தம் செய்தும் பாங்கு, வரவேற்க தக்கது.
கமலும் பாரதி போல தான் எந்த கட்டுப்பாடு அடைமொழிக்கு உள்ளும் வர முடியாத நபர்கள் (உடனே இருவரும் பார்ப்பனர்கள் என்று சொல்ல வேண்டாம், கமலுடன் ஒப்பீடு செய்ய எனக்கு வேறு எந்த நபரும் தெரிய வில்லை>
மாதவராஜ்...மிக நல்ல பதிவு.என்னை ஏற்கனவே குதறிவிட்டார்கள்.இருந்தாலும் கருத்தை பதிவு செய்ய விரும்புகிறேன்.
பதிலளிநீக்குகிட்டதட்ட ஒரு தலைமுறை மறந்தே போய் விட்ட ஒரு விஷ(ய)த்தை இவர்கள்
சன்பிக்சர்ஸ் விளம்பரம் போல் சொல்லிக் கொண்டே இருகிறார்கள்.வரலாறு திரும்பாது..இவர்கள்தான் திருந்த வேண்டும்
ஸ்ஸ்ப்ப்ப்ப்பா இப்பவே கண்ண கட்டுதே!
பதிலளிநீக்குஎஸ்ராசற்குணம்..முஸ்லீம் லீக்..ஜாதிக்கட்சிகள் கொண்ட கூட்டணிக்கு மதசாற்பற்ற அணி என்று பெயரிடுகிறார்கள்..தேர்தல் வெற்றி ஒன்றே குறி..எல்ல ஜாதி ஓட்டும் வேண்டும் அரசியல் பொறுக்கிகள்
பதிலளிநீக்குஇந்தியாவைப் பொறுத்தவரை பார்ப்பனிய-இந்துமத எதிர்ப்பில் முன்நின்றவர்கள் டாக்டர் அம்பேத்கரும், தந்தை பெரியாரும்தான். நண்பர் மாதவராஜ் வழிபடும் ஈ.எம்.எஸ்., ஏனைய ’மார்க்சிஸ்ட்’ தலைவர்கள் அல்லர்.
பதிலளிநீக்குபார்ப்பனிய-இந்துமத சனாதான எதிர்ப்புக்கு பெரியாரும் அம்பேத்கரும் வருவதற்குக் காரணமாக அமைந்தது, இந்துமதத்திலுள்ள சாதிய இழிவுகள்தான். அதனை முழுமையாக உள்வாங்கிக் கொண்டதாலேயே சாதிய இழிவுகளின் வேர் பார்பனியத்திலிருக்கிறது என்பதையும், பார்ப்பனியத்தின் இருத்தல் என்பது பக்தியிலும் மூடநம்பிக்கைகளிலும் இருக்கின்றதென்பதையும் தெரிந்து தெளிந்து அடித்து வீழ்த்தினர் பெரியாரும், அம்பேத்கரும்.
சாதியை ஒழிப்பதற்காகப் போராடுவதாகச் சொல்லிக்கொள்ளும் ‘மார்க்சிஸ்ட்’கட்சியினர் தங்கள் பெயரைத் தாங்கிக் கொண்டு நிற்கும் சாதியின் பெயரைக்கூட வெட்டிக்கொள்ளத் தயாராக இல்லை. சீத்தாராம் எச்சூரியில் தொடங்கி புத்ததேவ்பட்டாச்சார்யா வரை தத்தமது சாதி அடையாளத்தை அவர்கள் பெருமையோடு சுமந்து திரிகின்ற நிலையில், இவர்கள் பார்ப்பன எதிர்ப்பை அப்படியே ஏற்றுக் கொள்வார்கள் என்பது மடமை.
கமலுக்கு மட்டுமல்ல பாரதியிலிருந்து இவர்களின் ஊணப்பார்வையை நாம் தெளிவாகப் புரிந்துகொள்ளமுடியும்.
கமலை ஒரு ‘இந்து பாசிஸ்ட்’ அல்ல என்று நிறுவுவதற்கு இவர் எங்கெங்கெல்லாமோ நம்மை இட்டுச் சென்றிருக்கிறார். அதற்காக அவர் சுற்றி வளைத்த கருத்துக்களில் நமக்கு முரண்பாடு இல்லை, உடன்பாடுதான். ஆனால், அந்த மேற்கோள்கள் கமலின் பார்ப்பனிய தன்மைக்கு முழுமையாகப் பொருந்திப் போவதை இவர் பார்க்கத் தவறியிருக்கிறார்.
’சாதிகள் இல்லையடி பாப்பா’ என்று பாடியதாலேயே பாரதியின் பார்ப்பன-இந்துவெறிச் சார்பு நிலையை மறைக்க முயலுகின்ற மார்க்சிஸ்டுகள், கமல் என்கிற ஒரு தேர்ந்த ‘நடிகனை’ அவ்வளவு எளிமையாக விட்டுக்கொடுப்பார்களா என்ன?
நண்பர் மாதவராஜ் மட்டும் அதற்கு விதிவிலக்கா என்ன்?
Now only I read suguna diwakar's post. I think he has negative attitude and pre determined mindset.
பதிலளிநீக்குThats it. He will change on his own. 5 years back I too had same negative attitude and I have changed now.
இடுகைக்கு நன்றி! நிறைய விஷயங்கள் தெரிந்துக்கொண்டேன்...யோசிக்கவும் வைக்கிறது அதே சமயமும் குழப்பமும் மிஞ்சுகிறது!!!
பதிலளிநீக்குhi
பதிலளிநீக்குi am a muslim and i havent seen this movie yet. But if somebody criticizes muslims it should be welcomed because all said and done more and more muslim youngsters are being drawn towards terrorism and towards radical islam. at a very tender age kids are talking so much about Quran and religious faiths and very little about education and playful activities. its a bitter pill to swallow when somebody criticizes you that you are a terrorist but i sincerely hope that muslim youngsters will come out of this and concentrate on their studies.
I believe that kamal is a stupid who always think that he is one step above the rest but i dont think that he is a hindu fascist.
ஜோ!
பதிலளிநீக்குசம்பந்தப்பட்ட அனைவருக்கும் நன்றி சொல்லலாம்.
கார்த்திகேயன்!
கமலை எனக்குப் பிடிக்கும் என்று சொல்லவில்லை. அவர் மீது மதிப்பும் உண்டு. விமர்சனமும் உண்டு. சட்டென்று தள்ளிவைத்து விட வேண்டாமே என்றுதான் கவலைப்படுகிறேன். தவிர இந்து பாசிஸ்டு என்று பிரப்பின் அடிப்படையில் வரையறுத்துக்கொள்வது தவறு என்பதும் என் வாதம். தாங்கள் குறிப்பிட்ட அசோக் சிங்காலும், முத்தாலிக்கும் இந்து பாசிஸ்டுகள் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.
கிருஷ்ணமூர்த்தி!
நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்பதில் எனக்கு தெளிவு இல்லை. நீங்கள் சொன்ன பல விஷயங்கள் குறித்து பல புரிதல்கள் இருப்பினும், சரியான புரிதல் என்று ஒன்று இருக்கும்தானே?
வெண்பூ!
நன்றி.
வால்பையன்!
நீங்கள் சொல்வதிலும் ஓரளவுக்கு உண்மை இருப்பதாகவே படுகிறது, சிலரது கருத்துக்களைப் பார்க்கும்போது...
லோஷன்!
ஆமாம், அறிந்துகொண்டால்தானே, புரிந்துகொள்ள முடியும்?
tharudhalai!
பதிலளிநீக்கு//நாம் அதிகமாக மதிக்கும்,நேசிக்கும் ஒரு படைப்பாளி,நல்லமனிதர் தடம் மாறி விடுவாரோ என்ற தவிப்பு மற்றும் ஆதங்கத்தின் வெளிப்பாடுஅது.// சரியாகச் சொல்லி இருக்கிறீர்கள். ஒரே திருத்தம். மதிப்பு அல்லது நேசிப்பது என்பதைவிட, கமல் என்னும் முக்கியமான கலைஞன் என்பது இன்னும் சரியாக இருக்கலாம்.
அனானி!
//கமலைப்பற்றி மாதவராஜ் சொன்னதை நம்பலாமா? மாதவராஜ், தான் கண்ட, கேட்ட, பார்த்த சினிமாக்கள் அடிப்படையிலேதான் கணிக்கிறார். இன்னும் கமல் நன்றாகக் கவனிக்கப்படவேண்டும். // ஒப்புக்கொள்கிறேன்.
அனானி!
//நாமெல்லாரும் இந்துக்களே. // இதை முதலில் மறுக்கிறேன். இங்கு இந்துக்கள் என கருதப்படுகிறவர்களில் பெரும்பாலார் இந்துக்கள் கிடையாது. (இது குறித்து ஒரு பதிவிட வேண்டும்) இதை தெளிவு படுத்தினால், இருள் விலகும்.
ஆரூரன் விசுவநாதன்!
முரண்பாடுகள் குறித்தும், படைப்புகள் குறித்தும் சில முக்கிய விவாதங்களை எழுப்பி இருக்கிறீர்கள். பகிர்வுக்கு நன்றி.
வால்பையன்!
பதிலளிநீக்குநீங்கள் கூறிய பதிகள் அனைத்தையும் ரசித்தேன். அதிலும் குறிப்பாக, //எப்படி தெரிஞ்சிகிறிங்க, சிலர் கடைபிடிப்பார்கள், சிலர் வேஷதாரிகள்னு மை போட்டு பார்ப்பிங்களா!?
உங்க முன் முடிவுலயும், அனானி கமெண்டுலயும் தெரியுது உங்களுக்கு உண்மை பேச தெரியாதுன்னு//
மிகச்சரி.
அனானி!
பதிலளிநீக்குபடைப்பு வேறு படைப்பாளி என்றெல்லாம் பார்க்க முடியாது என்கிறீர்கள். இதில் முழுமையாக இல்லாவிட்டாலும் ஓரளவுக்கு என்னாலும் உடன்பட முடியும். ஆனால் அந்த படைப்பாளியின் ஒட்டுமொத்த படைப்பையும் வைத்தே, அதையும் கணிக்க வேண்டும். எதோ ஒன்றிரண்டு படைப்பை வைத்து மட்டும் சொல்லிவிட முடியாது.
அனானி!
மதச்சார்பின்மை, இஸ்லாமிய ஆதரவு, என்றெல்லாம் பேச ஆரம்பித்து, ஷியா-ஷன்னி சண்டை வரை பேசுகிற தாங்கள் இந்துக்கள் என்றழைக்கப்படுவர்களுக்குள் இருக்கும் பேதங்களையும் பேசி இருக்கலாமே? எங்கெல்லாம், ஆதிக்க சக்திகளிடம் மக்கள் வதை படுகிறார்களோ, அவைகளை எதிர்த்து பேசிக்கொண்டுதான் இருக்கிறோம். நன்றாக கவனியுங்கள் நண்பரே!
அனானி!
முஸ்லீம்களை தாஜா செய்ய அல்ல, இந்து முஸ்லீம்களுக்குள் பேதங்களை உருவாக்க நிறைய சதிகளைச் செய்தவன் ஆங்கிலேயன். இந்துக்களுக்கும் பல சலுகைகளை செய்தானே ஆங்கிலேயன். இந்து என்னும் வரையறையே தவறானது, அவன் கொடுத்ததுதானே? அதையும் தாங்கள் பேசுங்களேன்.
அனானி!
என்னையும், சுகுணா திவாகரையும் மதிப்பீடு செய்ததற்கு நன்றி. உங்களைப் போன்றவர்களிடம் 100 சதவீதம் மதிப்பெண் பெறாமல் போனதற்கு வருந்துகிறேன்.
ஆரூரன்!
இவர்கள் அடையாளத்தோடு வரமாட்டார்கள்....
ராம்ஜி!
பதிலளிநீக்குநன்றி.
தண்டோரா!
நீங்கள் ஒருதலைமுறையாய் மறந்துபோய்விட்ட விஷயம் என்கிறீர்கள். அதில் எனக்கு முரண்பாடு உண்டு. சந்தனமுல்லை அவர்களின் http://sandanamullai.blogspot.com/2009/09/blog-post_27.html இந்த இடுகையை படித்துப் பாருங்கள்!
மங்களூர் சிவா!
எப்படியாவது கண்ணைத் திறந்து வைத்துக்கொள்ளுங்கள்.
அனானி!
உங்கள் பின்னூட்டத்திற்காக ஒரு தனிப் பதிவிட்டு இருக்கிறேன். படித்தீர்களா?
சந்தனமுல்லை!
உங்கள் குழப்பங்கள் நிச்சயம் தெளிவை நோக்கி பயணிக்கும் என நம்புகிறேன். எதில் குழப்பம்?
khaleel!
பகிர்வுக்கு நன்றி.
“நாத்திகராய், பகுத்தறிவுவாதியாய் இருப்பதல்ல பிரச்சினை. ஒடுக்கப்பட்ட மக்களின்பால் அக்கறையுள்ளவராகவும், தனது ஒரு அசைவுகூட ஆதிக்கத்திற்குத் துணைபோய் விடக்கூடாது என்பதிலும் கவனமாய் இருப்பதுதானே சமூக அக்கறையுள்ள கலைஞனின் பணி
பதிலளிநீக்குஉங்கள் இடுகைகள் மிக நன்றாகவே இருக்கின்றன தரமான கருத்துக்கள் நன்றி. கருத்துரைகள் இடுபவர்கள் இன்னும் கூர்மையாக இருக்கிறார்கள்.க்ரிச்னமூர்த்தி என்ன சொல்கிறார் புரியவில்லை
பதிலளிநீக்குதறுதலை தருதலையாகத் தெரியவில்லை .செப்டம்பர் 26 ,12 .44 ,1.44 க்கு உள்ள பதிவுகள் அருமை
கமலின் மீது எனக்குள் இருந்த குழப்பத் தைக்கண்டு எனக்கு அச்சமாக இருந்தது அது பரவலாக இருக்கிறது என்பது நான் தவறாக கணிக்கவில்லை என்ற நிம்மதி அவர் இன்னும் கவனிக்கப்படவேண்டியவர்தான்
அடையாளத்தோடு வாருங்கள் அடையாளபடுதுங்கள் கருத்தாலர்களைத்தான்!
--
அன்புடன் இனியன்
தமிழீழம் வெல்வோம்