இதே செப்டம்பர் 24ம் நாள்தான் color of paradise ஈரானியப்படம் குறித்து சென்ற வருடம் என் முதல் பதிவை எழுதியிருந்தேன். சரியாக ஒரு வருடமாகிறது. இதோ எனது 340வது பதிவை எழுதிக்கொண்டு இருக்கிறேன். திரும்பிப் பார்க்கும்போது ஆச்சரியமாக இருக்கிறது. எவ்வளவு எழுத்துக்களை, மனிதர்களை அறிமுகம் செய்தபடி காலம் வேகமாக ஒடி வந்துகொண்டு இருக்கிறது.
எழுத வந்தது, எதுவும் புரியாமல் நின்றது, மெல்ல மெல்ல இந்த வெளி பழக்கமானதெல்லாம் ஏற்கனவே இங்கு சொல்லி இருக்கிறேன். பதிவுலகம் எப்படியான சித்திரங்களை எனக்குள் தந்து கொண்டு இருக்கிறது என்பதையும் ஏற்கனவே இங்கு பகிர்ந்து கொண்டு இருக்கிறேன். இவைகளுக்கப்பால், இந்த ஒரு வருடத்தின் முடிவில் பதிவுலகம் எனக்குத் தந்திருக்கும் அனுபவங்களையும், சில ஆசைகளையும் இந்த நேரத்தில் நண்பர்கள் உங்களிடம் தெரிவிக்கத் தோன்றுகிறது.
மீண்டும் எதையாவது எழுத வைத்திருப்பது இந்தப் பதிவுலகம்தான். பைத்தியம் பிடிக்க வைத்திருக்கிறது திரும்பவும் எழுத்துக்களின் மீது. அதே நேரம் புத்தகம் வாசிப்பது நிறைய குறைந்து போன வருத்தம் நிரந்தரமாக அருகில் உட்கார்ந்திருக்கிறது. வாங்கி , படிக்காமல் வைத்திருக்கும் புத்தகங்கள் அலமாரியிலோ, மேஜையிலோ இருந்துகொண்டு என்னைக் கேலி செய்துகொண்டு இருக்கின்றன. கிடைக்கும் நேரம் கம்யூட்டரை நோக்கியே கண்களும், கைகளும் செல்கின்றன. வரையறையற்ற நாட்களாகவே நகர்ந்துகொண்டு இருக்கின்றன. குறைந்தபட்ச திட்டமிடுதல்கள் அவசியமாய்த் தோன்றுகிறது. முயற்சிக்க வேண்டும்.
எதை இங்கு எழுதி கிழித்து விட்டேன் என்று தெரியவில்லை. ஆனாலும் ஒரு திருப்தி இருக்கத்தான் செய்கிறது. அச்சில் வெளிவந்திருக்கிற மார்க்ஸ், சேகுவேரா, காந்தியின் மரணம், காதல், உலகமயமாக்கல், இந்திய சுதந்திரம், குறித்த எனது புத்தகங்களை தொடர் பதிவுகளாக கொண்டு வந்திருக்கிறேன். அவைகளை வாசித்தவர்களும், அதற்கு கருத்துரையிட்டவர்களும் குறைவுதான் என்றாலும், எப்போதும், யாரும் படித்துக் கொள்வதற்கு என்னால் ஆன காரியத்தைச் செய்திருக்கிறேன். அது போதும். ரஜினிக்கு கருணாநிதி கொடுத்த தண்டனை என்றால் அதிகம் படிக்கும் நம் மக்கள் பகத்சிங்கிற்கு ஆங்கிலேயன் கொடுத்த தண்டனையை எழுதினால் தள்ளியே நிற்கிறார்கள். என்ன செய்ய?
பெரும் உரையாடல் வெளியாக பதிவுலகம் எப்போதும் இயங்கிக் கொண்டிருக்கிறது. முக்கியமான பிரச்சினைகள் குறித்த விவாதங்கள் உடனடியாக அரங்கேறுகின்றன. சந்தோஷமே. இன்னும் பக்குவமும், ஆரோக்கியமான தொனியும் நமக்கு வேண்டும் என்றே நினைக்கிறேன். வார்த்தைகளில் இன்னும் அழுத்தமும், ஆழமும் அதே நேரம் நாகரீகமும் வேண்டும் என்றே உணர்கிறேன். இதையும் என் தனிப்பட்ட அனுபவத்திலிருந்தே சொல்லிக் கொள்கிறேன்.
வரும் பின்னூட்டங்கள், எவ்வளவு தீவீரமான எதிர்வினைகளாக இருந்தாலும், அவைகளை அனுமதிக்க வேண்டும் என்றே ஆசைப்படுகிறேன். அதேநேரம் மரியாதைக்குறைவான, தரக்குறைவான, தனிப்பட்ட காழ்ப்புனர்ச்சிகளோடு கூடிய பின்னூட்டங்களை நிச்சயம் அனுமதிக்க மாட்டேன். சில பிரச்சினைகள் பற்றிய எனது புரிதலோடு நான் பேச ஆரம்பித்தால் போதும். அனானிகள் எங்கிருந்து வருவார்களோ, தெரியவில்லை. தாறுமாறாய் வந்து திட்டுவார்கள். குறிப்பாக இந்துத்துவாவைப் பற்றி எழுதிவிட்டால், அவர்கள் படையெடுக்க ஆரம்பித்து விடுகிறார்கள். சமீபத்தில் சவார்க்கரைப் பற்றி நான் எழுதியதற்கு ‘fuck your mother' என்றெல்லாம் பின்னூட்டங்கள். தாயைப் பற்றி அவர்கள் புரிதல் அவ்வளவுதான் அவர்களுக்கு என்பதைத் தாண்டி அதில் சொல்ல வேறு என்ன வேண்டியிருக்கிறது.
சமீப காலமாய்த்தான் பதிவுலகத்தில் அதிகம் படிக்க ஆரம்பித்திருக்கிறேன். அற்புதமான, ஆரோக்கியமான, புதிய எழுத்துக்களை அதிகம் காணமுடிகிறது. அச்சு உலகம் அறியாத இந்த எழுத்துக்களை புத்தகமாக கொண்டு வரும் முயற்சிதான், ‘பூக்களிலிருந்து சில புத்தகங்கள்’! தினம்தோறும் நண்பர்கள் மெயிலுக்குச் சுட்டிகளை அனுப்பிக் கொண்டு இருக்கின்றனர். கொஞ்சம் கொஞ்சமாய் வாசித்துக் கொண்டு இருக்கிறோம். அக்டோபர் 31ம் தேதி வரை அவகாசம் இருக்கிறது... சுட்டிகளை, சுட்டிக் காட்ட! நண்பர்கள் ஒத்துழைக்க வேண்டும் என வேண்டிக் கொள்கிறேன்.
இன்னும் செய்ய வேண்டியதும், செய்ய நினைத்து பாதியிலே நின்று போனதும் இங்கு நிறைய இருக்கின்றன. அதில் மிக முக்கியமானது, தடை செய்யப்பட்ட இலக்கியம் குறித்த தொடர். ஐந்து புத்தகங்களோடு நின்றுவிட்டது. அதை இனி தொடர வேண்டும். அதிகமாய், பதிவுலகில் அடுத்தவர்களின் எழுத்துக்கள் குறித்து என் பதிவில் எழுதாமல் வந்திருக்கிறேன். இனி அதையும் செய்ய வேண்டும். புதியவர்களை அறிமுகப்படுத்துவது அதன் முக்கிய காரியமாக இருக்கும்.
இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். அதுதான் பதிவுகள் இருக்கவே இருக்கிறதே....! இதுவரை இங்கு வந்து இரண்டு லட்சம் பக்கங்களுக்கு மேல் வாசித்தவர்களுக்கும், சகபயணிகளாய் இணைந்திருக்கும் 279 நண்பர்களுக்கும் எனது நன்றி. எல்லோருக்கும் நன்றி.
கருத்துக்களமாக உருப்பெற்று வரும் இப்பதிவுலகம் இன்னும் புதிய புதிய எழுத்துக்களோடும், சிந்தனைகளோடும், திசைகளோடும் வளரட்டும். மாவோ சொன்னது போல ஆயிரம் பூக்கள் மலரட்டும்!!
பி.கு: வலைப்பதிவில் அனுபவங்களை எழுதும் தொடரில் என்னை எழுத அழைத்த தமிழ்நதி அவர்களுக்கு நன்றி. இது அப்படி ஒரு பதிவும் கூட.
*
:-)
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் மாதவராஜ் சார்!
முதல் வருட நிறைவுக்கு வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்கு//அதே நேரம் புத்தகம் வாசிப்பது நிறைய குறைந்து போன வருத்தம் நிரந்தரமாக அருகில் உட்கார்ந்திருக்கிறது. வாங்கி , படிக்காமல் வைத்திருக்கும் புத்தகங்கள் அலமாரியிலோ, மேஜையிலோ இருந்துகொண்டு என்னைக் கேலி செய்துகொண்டு இருக்கின்றன. கிடைக்கும் நேரம் கம்யூட்டரை நோக்கியே கண்களும், கைகளும் செல்கின்றன. வரையறையற்ற நாட்களாகவே நகர்ந்துகொண்டு இருக்கின்றன. குறைந்தபட்ச திட்டமிடுதல்கள் அவசியமாய்த் தோன்றுகிறது. முயற்சிக்க வேண்டும்.//
பதிலளிநீக்குஇதே அனுபவமே எனக்கும்:(!
வாழ்த்துக்கள் மாதண்ணா! ஓராயிரமல்ல, நூறாயிரம் பூக்கள் மலரட்டும், நறுமணத்தோடு!!!_அன்பு தங்கை
பதிலளிநீக்குஅயற்சியில்லா உங்கள் எழுத்துகள், மிகுந்த அழுத்தத்தோடு தொடர்ந்து, தனக்கான இடத்தில் மிகச்சரியாக பொருந்திக் கொண்டேயிருக்கிறது. சில வற்றில் சிறிது முரண்பட்டாலும், மிகப்பெரிய அளவில் ஒத்துப்போக வேண்டியிருப்பது மகிழ்ச்சியான ஒன்று...
பதிலளிநீக்குதரம் தொடர்ந்து மெருகேறிக் கொண்டிருக்கிறது...
உங்களை வாசிப்பது எனக்கு மகிழ்ச்சி
என்னை நீங்கள் வாசிப்பது எனக்கு பெருமை.
வாழ்த்துகள்...முதல் பிறந்த நாளிற்கு
விருந்தினர்கள் எல்லாம் புறப்பட்டுப் போன பின் வீட்டுக்கார்க்ள் அமர்ந்து கல்யாணத்தைப் பற்றி பேசுவார்களே..அப்படி இருக்கிறது!
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குஆயாசமும்.., நிறைவுமாய்! என்பது விடுபட்டது. சேர்த்து படிக்க கேட்டுக்கொள்கிறேன்!.
பதிலளிநீக்குவாழ்த்துகள்!!!
பதிலளிநீக்குஒரு வருடத்தில் 340 பதிவுகளா...அசந்துவிட்டேன்! :-)
vazhththukkal sir
பதிலளிநீக்குஆயிரம் கோடி பூக்களாய் பூக்க வாழ்த்துக்கள் சார்!
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் அண்ணா..
பதிலளிநீக்குகடந்த ஒரு ஆண்டாக உங்கள் எழுத்துக்களோடு தொடர்ந்து பயணித்துள்ளேன். உங்கள் எழுத்தில் எப்போதுமே காணப்படும் சக மனிதன் மீதான கவலையே உங்களை வாசிக்கும்போதெல்லாம் மிகுந்த மன நிறைவாக உணர்ந்ததற்கு காரணம் என நினைக்கிறேன்.
மேலும் பல ஆயிரம் பூக்கள் மலர வேண்டும் என விரும்புகிறேன்.
நன்றி..
அன்பு மாதவ்
பதிலளிநீக்குஉங்கள் வலைப்பதிவு நுழைவின் ஓராண்டு நிறைவுக்கு இனிய வாழ்த்துக்கள்.
அபாரமான செய்திகள், துயரம் தோய்ந்த பதிவுகள், மனத்தை உலுக்கும் பகிர்வுகள், சிந்தனையைத் தூண்டும் பரிமாற்றங்கள், சம்மட்டி அடியாய்ப் பட்டதைப் பட்டென்று எடுத்து வைத்த எழுத்துக்கள்...........என்று பன்முகத் தன்மையில் பல்சுவை ரசனையின் வெளிப்பாட்டுக் கூடமாய் இருந்திருக்கிறது உங்கள் வலைப்பக்கம்.
வேதனை நெஞ்சங்களுக்கு விசிறிக் காற்றாகவும், அரவணைப்பின் கதகதப்பாகவும் கூட உணர்ந்தவர்கள் பின்னூட்டங்களில் சாட்சியம் சொல்லியிருக்கின்றனர்.
எனக்குத் தனிப்பட்ட கொடையாளி இந்த வலைப்பூ. நான் மோசிகீரனார் அல்ல என்றாலும், முரசம் வைக்கும் இடத்தில் சற்று இளைப்பாறிச் செல்ல இடம் கொடுத்த கட்டிலாகவும் இருக்கிறது தீராத பக்கங்கள்.
பழைய ஓலைச்சுவடிகளை நீங்கள் எடுத்துத் தூசி தட்டி வாசிக்கவும் இந்த நவீன ஏற்பாடு கை கொடுத்திருக்கிறது.
குதிரைகளின் குளம்போசை கேட்கும் சில நேரம். 'மன்னுபுகழ் கோசலைதன் மணிவயிறு வாய்த்தவனே..' என்ற தாலாட்டிசைக்கும் சில நேரம். கண்ணனையும் இந்த இடம் கலக்க வில்லையா, இந்த கர்ணனுக்கு மட்டுமென்ன இதயமில்லையா....என்ற கதியில் காதல் இழையும் சில நேரம்.....
இன்னும் அதிக சாத்தியங்களின் பரிசோதனைக்கான பொழுதாக இரண்டாவது ஆண்டின் துவக்கம் அமையட்டும் - ஆனால், நூல் வாசிப்பு நேரத்தை ஆக்கிரமித்து விடாததாக....
எஸ் வி வேணுகோபாலன்
வாழ்த்துக்கள் சார்.350வது பதிவிற்கும்...மேலும் உங்கள் எதிர்கால சாதனைக்கும்.
பதிலளிநீக்குவாழ்த்துக்கள். தோழர்.
பதிலளிநீக்குமக்கள் ரசனையை விமர்சிப்பதை விட, ரசிக்கும் மக்களை சென்றடைவதோ, அல்லது ரசிக்கும்படி எழுதுவதோ சரியானதாக இருக்குமென்று நம்புகிறேன்.
உங்கள் பணி சரியான பாதையில் தான் செல்கிறது. இன்னும் கொஞ்சம் கூர்மைப்படுத்துங்கள். எதிர்காலத் திட்டங்களை, அல்லது இலக்குகளை நிர்ணயித்து, அதனையொட்டி எழுதத் தொடங்குங்கள்.
மோசமான விமர்சனங்களை புறந்தள்ளுங்கள்.
"போற்றுவோர் போற்றட்டும் புழுதிவாரி
தூற்றுவோர் தூற்றட்டட்டும் ஏற்றதொரு கருத்தை எனதுள்ளம் என்றால் எடுத்துரைப்பேன்" என்பதில் உறுதியாருப்பீர்கள் என நம்புகிறேன்.
வாழ்த்துக்கள்
அன்புடன்
ஆரூரன்.
வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குவலையுலகுக்கு நீங்கள் எழுத வந்தது சக பயணிகளின் அதிர்ஷ்டம்.
பதிலளிநீக்குஉங்களிடமிருந்து கற்று கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது.
// மாவோ சோனது போல ஆயிரம் பூக்கள் மலரட்டும் !! //
எனக்கு "ஆயிரம் மலர்களே மலருங்கள்...." இளையராஜா பாடல் தான் நினைவுக்கு வந்தது.
//ஓராயிரமல்ல, நூறாயிரம் பூக்கள் மலரட்டும், நறுமணத்தோடு!!!_//
பதிலளிநீக்குWishing you the same, Uncle!
:-)
வாழ்த்துக்கள்..
பதிலளிநீக்குthozar pathivu padithen. santhosamaga irukkirathu! mobilela irunthu indru than systemil paditen. ''aaaaaaaaaaayiram pookkal malarattum''
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் சார்! சுமார் நான்கு மாதங்களுக்கு முன் ச.தமிழ்ச் செல்வன் அவர்களின் வலைப் பதிவிலிருந்து உங்களின் வலைப் பதிவு அறிமுகமாகியது. தொடர்ந்து உங்களின் பதிவுகளைப் படித்து வருகிறேன். வேணுகோபாலன் அவர்கள் மறுமொழியில் எழுதியிருப்பதைப் போல் எனக்குள் உங்களின் பதிவுகள் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. தொடரட்டும் உங்கள் பதிவுகள்! நீங்கள் புத்தகங்கள் படிப்பதற்கும் நேரம் ஒதுக்கினால் எங்களுக்கு உங்களிடமிருந்து இன்னும் நிறையப் பதிவுகள் கிடைக்கும்!
பதிலளிநீக்கு340 பூங்கொத்துக்களுடன் வாழ்த்துக்கள்...!அசத்தலான வளர்ச்சி...
பதிலளிநீக்குvalthukkal.
பதிலளிநீக்கு365 நாட்கள் 340 பதிவுகள்!என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் மாதவன் நீங்கள்?எவ்வளவு பெரிய சாதனை மக்கா!!ஒரு 25 நாட்கள் எப்படியோ விடுபட்டு போயிருக்கிறது...சமீபமாய்தான் பதிவுலகம் வர வாய்த்தது.சமீபத்திலும் சமீபமாய் உங்களை வாசிக்கவும் வாய்த்தது.(உங்கள் எழுத்து என சொல்லவில்லை மாதவன்.)எழுத்தும்,மனுஷனும் வேறு வேறயா என்ன?ரொம்ப சந்தோசமாய்,நிறைவா இருக்கு.செல்வேந்திரனான கிருஷ்ண தாத்தா வீட்டில் சமைக்கிற சொக்கண்ணன்,"இன்னைக்கு சாம்பார் கீரைதான்.வயசான காலத்துல வாயை கட்டுங்க" என்று உரிமையாய் அதட்டுவது போல்,அல்லை சல்லைகள் குறித்து சோராமல் "எழுதுங்கள் மாது"என அதட்ட பிடிக்கிறது.நிறைய வாழ்த்தும் நிறைய நிறைய அன்பும் மாதவன்!
பதிலளிநீக்குvalthukkal
பதிலளிநீக்குஅண்ணா
பதிலளிநீக்குசமீபத்தில் தான் உங்களது வலைப்பதிவை படிக்க ஆரபித்தேன்
உங்களது எழுத்து மிக வசிகரமாக ஒரு ஈர்ப்பை ஏற்படுத்துகிறது
உங்களது பழைய பதிவுகளை படிக்க தொடங்கியுள்ளேன். எழுத்து உங்களுக்கு கைகூடிவந்திருகிறது.
வாழ்த்துகள்
வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குஅனைவருக்கும் நன்றி.
பதிலளிநீக்குதங்கள் ஆதரவுக்கும், அருகாமைக்கும் நன்றி.
தொடர்ந்து பயணிப்போம்.