சார்ஜ் ஷீட் 42/2021- 8ம் அத்தியாயம்

30.04.2021 அன்று மாலை 5 மணிக்கு பணி ஓய்வுக்கான கடிதத்தை நான் மின்னம்பள்ளி கிளை மேலாளரிடம் கொடுத்துவிட்டு  கிளையிலிருந்து வெளிவந்த பிறகு மாலை 7.10 மணிக்கு மேல் என் மெயிலுக்கு ‘பணி ஓய்வை நிறுத்தம்’  (cessation) செய்து கடிதம் அனுப்பி இருந்தது. அந்தக் கடிதம் செல்லாது என்றுதான் அட்வகேட் கீதா அவர்கள் மூலம் ஹைகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது. வழக்கை விசாரித்த மாண்புமிகு நீதிபதி சுந்தர் அவர்கள் 24.6.2021 அன்று அந்த செஷேஷன் ஆர்டருக்கு இடைக்காலத் தடை உத்தரவு (stay order) பிறப்பித்தார். ஆசுவாசமாய் இருந்து.  

பணி ஓய்வை நிறுத்தம் செய்த உத்தரவுக்கு தடை என்றால் அதைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கும் தடை என்றே அர்த்தம். மிஸ்டர் ஜெயக்குமார் 7.6.2021 தேதியிட்டு அனுப்பிய விசாரணக்கான உத்தரவுக்கும் ( Enquiry Order ) தடையாகி விடும். மேற்கொண்டு விசாரணை நடத்தக் கூடாது. நாமக்கல் மேலாளர் மிஸ்டர் சந்திரனிடமிருந்து இனி கடிதம் வராது. அடுத்ததாக எனது ஓய்வு காலச் சலுகைகள் வழங்கப்படாது என்று செஷேஷன் ஆர்டரில் சொல்லப்பட்டதற்கும் தடை விதிக்கப்பட்டதாகவே அர்த்தம்.  பென்ஷன், கிராஜுவிட்டி உட்பட அனைத்து சலுகைகளும் வழங்கப்பட வேண்டும்.  

”இனி என் மீது விசாரணை நடத்தக் கூடாது என்றும், ”எனக்குரிய ஓய்வுகாலச் சலுகைகளை வழங்க வேண்டும்” எனவும் ஹைகோர்ட் ஆர்டரை இணைத்து நிர்வாகத்திற்கு 30.6.2021 அன்று கடிதம் எழுதினேன்.   

தொடர்ந்து சங்கத்தின் நடவடிக்கைகள் இருந்து கொண்டிருந்தன. கிராம வங்கியின் பங்குகளில் மத்திய அரசு 50 சதவீதத்தையும், ஸ்பான்ஸர் வங்கிகள் 35 சதவீதத்தையும், மாநில அரசுகள் 15 சதவீதத்தையும் வைத்திருந்தன. ஸ்பான்ஸர் வங்கிகள், மாநில அரசுகளின்  பங்குகளை மத்திய அரசே ஏற்றுக்கொண்டு, அனைத்து கிராம வங்கிகளையும் ஒன்றிணைத்து தேசீய கிராமப்புற வங்கி அமைக்க வேண்டும் என்பதே அகில இந்திய சங்கம் ஏ.ஐ.ஆர்.ஆர்.பி.இ.ஏவின் கோரிக்கையாய் இருந்தது. மத்திய அரசோ தன்னிடமிருக்கும் 50 சதவீத பங்குகளையும் ஸ்பான்ஸர் வங்கிகளிடம் ஒப்படைக்க முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து ஏ.ஐ.ஆர்.ஆர்.பி.இ.ஏ போராட்டங்களுக்கு அழைப்பு விடுத்திருந்தது. ஜூலை 9ம் தேதி சேலத்தில் தமிழ்நாடு கிராம வங்கி தலைமையலுவலகத்தின் முன்பு தர்ணா நடத்த திட்டமிடப்பட்டது.  

அன்று காலை 6 மணிக்கு சாத்தூரிலிருந்து  நானும் சங்கரும் காரில் புறப்பட்டோம். ஓய்வுபெற்று 70 நாட்கள் கழித்து மீண்டும் சேலத்திற்கு பயணம். வலதுபுறத்தில் மரங்கள், கட்டிடங்களுக்கு மேல் சூரியன் வந்து கொண்டிருந்தது. சில பறவைகள் ஒன்று போல் வானத்தில் நகர்ந்து கொண்டிருந்தன. அத்தனை நாளும் வீட்டில் அடைந்து கிடந்தவனுக்கு  விரிந்து பரந்த வெளி பேரனுபவமாய் இருந்தது. இளகிப் போனது மனமும் உடலும். வழியில் தோழர்கள் இம்ரான், அருண்பாண்டியன், ராஜராஜன், ஆறுமுகப்பெருமாள், ஸ்ரீனிவாஸ் ஆகியோர் சேர்ந்து கொண்டனர். மாறி மாறிப் பேசி கலகலப்பாயிருந்தது. போகும் வழியில் கோவிட் தொற்றையொட்டி அங்கங்கு காவல்துறை தடுப்புகள் இருந்தன. கெடுபிடிகள் அவ்வளவாக இல்லை.  

சங்கங்களின் மீது நிர்வாகத்திற்கு இருந்த வன்மத்தையும் வெறித்தனத்தையும் பற்றி பேச்சு வந்தது. சங்கங்களுக்கு உறுப்பினர்கள் சந்தா செலுத்தும்  செக்-ஆப் முறையை ரத்து செய்ததையும், ஊழியர்களிடையே பயத்தை விதைத்து இருப்பதையும் பற்றி அவர்களின் கவலையும் கோபமும் வெளிப்பட்டது.   

எப்போதெல்லாம் சங்கங்களின் மீது நிர்வாகத்திற்கு பயம் வருகிறதோ அப்போதெல்லாம் இதுபோன்ற அராஜகங்களில் ஈடுபடும் என்பதை விளக்கினேன். 2009ம் ஆண்டில் பாண்டியன் கிராம வங்கியில் மிஸ்டர் சுந்தர்ராஜ் சேர்மனாய் இருக்கும்போதும் இதுபோல் செக்-ஆப் ரத்து செய்யப்பட்டதையும், நீதிமன்றம் சென்று அதற்கு சங்கம் தடையுத்தரவு வாங்கியதையும் குறிப்பிட்டேன். ’நிர்வாகம் தாக்குதல் நடத்தும்போது, நாம் அதைத் தாங்கிக்கொண்டு நம் போராட்டக் குணத்தை இழந்துவிடாமல் மீண்டும் மீண்டும் நிர்வாகத்தை அம்பலப்படுத்துவதையும், எதிர்த்து நிற்பதையும் செய்து கொண்டே இருக்க வேண்டும். நிர்வாகம் ஒரு கொடிய மிருகம். அடங்கிப் போகாத நம் சிந்தனைகளாலும் தளராத நம் நடவடிக்கைகளாலும் அதனை நம் வழிக்கு பழக்க வேண்டும். அநீதியை எதிர்க்கும் நம் போக்கை இயல்பாக்கிக் கொள்ள வேண்டும்’ என்றேன்.  

ஏ.ஐ.பி.ஓ.சி ( AIBOC )  சங்கத்துக்கு மிஸ்டர் செல்வராஜும், மிஸ்டர் ஜெயக்குமாரும் ஆதரவளித்துக் கொண்டிருப்பதையும் தோழர்கள் பேச்சில் புரிந்து கொண்டேன். போர்க்குணம் அற்ற, எப்படியாவது காரியம் சாதித்தால் போதும் என கொள்கையற்ற தலைவர்களை நிர்வாகத்துக்கு எப்போதுமே பிடிக்கும். அவர்கள் மீது மோசமான குற்றச்சாட்டுகள் இருந்தாலும் நிர்வாகம் கண்டு கொள்ளாது. நம்மைப் போன்ற போர்க்குணமிக்க சங்கங்களின் வளர்ச்சியைத் தடுக்க அந்த சங்கத்தை பயன்படுத்தும். அவர்களும் அதில் குளிர் காய்வார்கள். ஒரு தொழிற்சங்கத்தின் இயல்பு கொஞ்சம் கூட ஏ.ஐ.ஓ.பி.சிக்கு கிடையாது என்றேன். சக தொழிற்சங்கத்துடன் கொள்கையில், நடைமுறைகளில் அதற்கு கருத்து முரண்பாடு இருக்கலாம். ஆனால் தொழிற்சங்க நடவடிக்கைகளுக்காக சக தொழிற்சங்கத் தலைவர்கள் மீது நிர்வாகம் தாக்குதல் நடத்தும்போது குறைந்த பட்சம் கண்டிக்கவாவது செய்ய வேண்டும். அதுதான் வர்க்க குணம். இங்கே நம்மீது நிர்வாகம் தொடுக்கும் தாக்குதல்களை அந்த சங்கம் கொண்டாடுவதைப் போல அவமானகரமானது இல்லை என்றேன்.  

பேச்சின் ஊடேயும், பேசாமல் இருந்த சமயங்களிலும் போகும் வழியில் பார்வை சென்று கொண்டிருந்தது. ஒன்றரை வருடங்களாய் இதே வழியில் எத்தனையோ முறை பயணம் செய்திருந்தேன். இதே போல் காலைகளில் இருட்டு விலகி, பொழுது ஆரம்பிக்கும் நேரங்களில் வண்டியோட்டி இருக்கிறேன். பழக்கமான, கவனத்தில் பதிந்த இடங்களைப் பார்க்கும்போது மனம் புன்னகை பூத்தது. நாமக்கல்லைத் தாண்டியதும் நினைவுகள் அடர்ந்தன. காலை பத்து மணிக்கு எதிரே உயரத்தில் பாலம் தெரியும் ஜனநடமாட்டம் அடர்ந்த சீலநாயக்கன்பட்டியை நெருங்கினோம். இடதுபக்கம் உயர்ந்திருக்கும் அந்த மலையைப் பார்த்தேன். சேலத்தின் வாழ்ந்த நாட்களை அதுதான் அடைகாத்துக் கொண்டிருந்தது. நாங்கள் தங்கியிருந்த சங்க அலுவலகத்திலிருந்தும் அந்த மலையைப் பார்க்க முடியும். கூடவே இருந்த மலை.  


நேரே அஸ்தம்பட்டியில் இருக்கும் தலைமையலுவலகம் சென்றோம். அந்த வளாகத்தின் முன்பகுதியில் அடர்ந்து இருந்த மரங்களின் கிளைகள் வெட்டப்பட்டு மொட்டையாய் நின்றன. எதையோ இழந்தது போலிருந்தது.  வெயில் பளீரென்று அடித்துக் கிடந்தது. தோழர்கள் அறிவுடைநம்பி, அஸ்வத், பரிதிராஜா, அண்டோ, தங்கமாரியப்பன், லஷ்மி நாராயணன் மற்றும் பெஃபி தலைவர்களில் ஒருவரான எஸ்.ஏ.ராஜேந்திரன் போன்ற தோழர்கள் ஏற்கனவே வந்து இருந்தார்கள். உற்சாகத்துடன் வரவேற்று நலம் விசாரித்தார்கள். ”நீ எதுக்கு வந்தே மாது?  இன்னும் கொஞ்ச நாள் ரெஸ்ட் எடுக்கலாமே” என காரைக்குடியில் இருந்து வந்திருந்த தோழர் சோலைமாணிக்கம் அக்கறையினால் கடிந்து கொண்டார்.  

முற்றிலும் புதிய தலைமையும், புதிய தோழர்களும் சங்கமாய்  திரண்டிருக்கும் அந்த காலக்கட்டத்தில், முன்வந்திருக்கும் கோரிக்கை குறித்த வரலாற்றையும், அதன் முக்கியத்துவத்தையும் தர்ணாவில் சொல்ல வேண்டும் என்றுதான் கலந்து கொண்டேன். அதுவரை ஸ்பான்ஸர் வங்கியின் எதேச்சதிகாரத்தை, அத்துமீறல்களை, அடாவடித்தனத்தையெல்லாம் சங்கம்  பேசியிருந்தாலும் முதன் முதலாக ’கிராம வங்கிகளை ஸ்பான்ஸர் வங்கியிலிருந்து துண்டிக்க வேண்டும்’ என ஒரு கோரிக்கை அப்போதுதான் எழுந்திருந்தது. அடுத்த ஒரு மணி நேரத்திற்குள் நூறு தோழர்கள் போல கலந்து கொண்டனர்.  

1975ல் ஆரம்பிக்கப்பட்ட கிராம வங்கிகள் குறித்து ஒரு தெளிவான திட்டமும் வரையறையும் எப்போதும் மத்திய அரசுக்கு இருந்ததில்லை. 1981ல் அமைக்கப்பட்ட சிவராமன் கமிட்டியின் அறிக்கை, ‘வணிக வங்கியின் கிராமப்புற கிளைகளை கிராம வங்கிகளோடு இணைக்க வேண்டும்’ என்றது. வணிக வங்கி சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்ததனால் அது நடைமுறைப்படுத்த முடியவில்லை. 1985ல் அமைக்கப்பட்ட ஒரு கமிட்டி, ‘ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு கிராம வங்கி’ என பரிந்துரை செய்தது. அதனை அமல்படுத்தும் விதமாக மே.வங்கத்தின் கௌர் கிராம வங்கியை இரண்டாக பிரிக்க  முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. கௌர் கிராம வங்கியில்தான் ஏ.ஐ.ஆர்.ஆர்.பி.இ.ஏ பொதுச்செயலாளர் தோழர் திலீப்குமார் முகர்ஜி ஏரியா மேலாளராக இருந்தார். சங்கத்தின் கடுமையான எதிர்ப்பினால் அந்த அறிக்கை கிடப்பில் போடப்பட்டது. ஒவ்வொரு காலத்திலும், ஒவ்வொரு கமிட்டி அறிக்கைகள் வெளிவந்தன. 2005ல் ஒரு மாநிலத்தில் இருக்கும் ஒரே ஸ்பான்ஸர் வங்கியைக் கொண்டிருந்த கிராம வங்கிகள் இணைக்கப்படும் என அரசு அறிவித்தது. அப்படித்தான் தமிழ்நாட்டில் வள்ளலார் கிராம வங்கியும் , அதியமான் கிராம வங்கியும் பல்லவன் கிராம வங்கியாக ஒன்றிணைக்கப்பட்டன.  2014க்குப் பிறகு ஒரு மாநிலத்தில் உள்ள கிராம வங்கிகள் ஒன்றிணைக்கப்படும் என அறிவிப்பு வந்தது. அதன்படிதான் 2019ல் பாண்டியன் கிராம வங்கியும் பல்லவன் கிராம வங்கியும் தமிழ்நாடு கிராம வங்கியாக ஒன்றிணைக்கப்பட்டன. இனி அனைத்து மாநில கிராம வங்கிகளையும் ஒன்றிணைத்து ‘தேசீய கிராமப்புற வங்கி’ அமைக்க வேண்டும் எனஏ.ஐ.ஆர்.ஆர்.பி.இ.ஏ அழுத்தம் கொடுத்துக் கொண்டிருந்தது. மத்திய அரசின் பங்குகளையும் ஸ்பான்ஸர் வங்கிகளுக்கும் கொடுப்பது என்பது கிராமப்புற மக்களுக்கும், கிராம வங்கி ஊழியர்களுக்கும் முற்றிலும் எதிர்மறையான நடவடிக்கையாக இருக்கும் என்பதை எல்லாம் விவரித்தேன்.


இறுதியாக 35 சதவீத பங்குகள் இருக்கும்போதே ஸ்பான்ஸர் வங்கியிலிருந்து சேர்மனாய் வந்திருக்கும் செல்வராஜ் போன்றவர்கள் அதிகாரத்திமிர் கொண்டு நடத்தும் அராஜகங்களை பார்க்கிறோம். பங்குகள் 85 சதவீதமானால் என்னவாகும் என்பதை உணர்த்தி உரையை முடித்தேன்.  

”ரொம்ப அவசியமான, தெளிவான வரலாற்றைச் சொல்லியிருக்கீங்க  அண்ணே” என்று அண்டோ கால்பர்ட் கையைப் பிடித்துக் கொண்டு சொன்னான்.  

தர்ணா முடிந்ததும் தோழர்கள் அறிவுடைநம்பி, அஸ்வத், அண்டோ கால்பர்ட், பரிதிராஜா ஆகியோர் தலைமையலுவலகத்திற்குள் சென்றனர். சேர்மன் செல்வராஜிடம் மெமொரெண்டத்தை கொடுத்திருக்கின்றனர். அவரும் அமைதியாக வாங்கிக் கொண்டு இரண்டு வார்த்தை பேசி அனுப்பி இருக்கிறார். இதுபோல் 1.3.2021 அன்றும் மிஸ்டர் செல்வராஜ் நடந்துகொண்டிருந்தால் எந்த பிரச்சினையும் வந்திருக்காது. உள்ளே சென்ற ஓய்வு பெற்ற தோழர்களை மரியாதையில்லாமல் நடத்தியதில்தானே எல்லாப் பிரச்சினையும் என்று  பேசிக்கொண்டோம்.  

மதிய உணவு முடித்துவிட்டு சங்க அலுவலகம் சென்று பேசிக்கொண்டு இருந்தோம். அப்போது சங்கத்தின் பொறுப்பிலிருந்து என்னை விடுவிக்குமாறு கேட்டுக் கொண்டேன். 2021 ஜனவரி 7ம் தேதி சேலத்தில் நடந்த மாநாட்டில் ஒர்க்கர்ஸ் யூனியனின் பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து விலகி உதவித் தலைவர் பொறுப்பை ஏற்றுக் கொண்டேன். ஓய்வு பெறும் வரை சங்கப் பொறுப்பில் இருக்கலாம் என்பதை ஒரு விதியாகக் கொண்டிருந்தோம். அதையே நடைமுறையாகத் தொடர்ந்து கடைப்பிடித்தும் வந்தோம். ஓய்வு பெற்ற பிறகும் ஒருவர் சங்கப் பொறுப்பில் இருப்பது  அடுத்த தலைமையை வளர்க்காது. பணி ஓய்வு பெற்று இரண்டு மாதங்களாகி விட்டன. அதற்கு மேலும் பொறுப்பில் இருப்பது சரியல்ல என்றேன்.  

சார்ஜ் ஷீட் விவகாரம் முடிந்து, ஓய்வுகாலச் சலுகைகளை பெறுகிற வரை சங்கப் பொறுப்பில் இருக்க வேண்டுமென தோழர்கள் வலியுறுத்தினர்.  

“அப்படியானால் நிர்வாகத்தின் ‘பணி ஓய்வு நிறுத்தம்’ ( Cessation ) ஆர்டரை நாம் ஒத்துக் கொள்கிறோமா?” என்று சிரித்தேன். தோழர்களும் சிரித்தனர்.  

சிரித்துக் கடந்தாலும், சீக்கிரம் சங்கப் பொறுப்பில் இருந்து விடுபட வேண்டும் என்பதில் உறுதியாயிருந்தேன். தேவைப்பட்டால் ஆலோசனைகள் சொல்வது வேறு, கூடவே இருந்து ஒவ்வொன்றிலும் தலையிடுவது வேறு.  

ஜூலை 14ம் தேதி சென்னை சென்று இரண்டு நாட்கள் தங்கி பெஃபி தலைவர்கள் தோழர்கள் சி.பி.கிருஷ்ணன், ராஜகோபால் தோழர்களோடு முக்கிய அரசியல் தலைவர்களை சந்தித்து நம் கோரிக்கைகளை கொடுத்து பேசுவது என்று திட்டமிடப்பட்டது. தோழர்கள் என்னையும் அழைத்தனர். ஒப்புக்கொண்டேன்.  

சேலத்திலிருந்து சாத்தூருக்குத் திரும்பும்போது சீலநாயக்கன்பட்டியில் அந்த மலையைப் பார்த்தேன். ‘மீண்டும் வருவேன்..” என சொல்லிக் கொண்டேன். நிர்வாகத்திற்கு நான் எழுதிய கடிதமும் நிர்வாகத்தின் மௌனமும் மனதிற்குள் ஒடியது. இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்த சென்னை ஹைகோர்ட் வழக்கை எப்போது விசாரிக்கும் என்று தெரியவில்லை. வருடக்கணக்கில் இழுத்தடித்தால்… என யோசனையாய் இருந்தது. சென்னைக்குச் செல்லும்போது அட்வகேட் கீதா மேடம், தோழர்கள் சி.பி.கே,  ராஜகோபால் ஆகியோரிடம் ஆலோசிக்க வேண்டும்.  

(தொடரும்)  

1ம் அத்தியாயம்    2ம் அத்தியாயம்    3ம் அத்தியாயம்    

4ம் அத்தியாயம்    5ம் அத்தியாயம்    6ம் அத்தியாயம் 

7ம் அத்தியாயம்

Comments

3 Comments

வருகைக்கு நன்றி.

கமெண்ட் செய்கிறவர்கள் Anonymous, Name/Url, Google Account, Name/Url, Google Account மூலம் கமெண்ட் செய்யலாம்.

1) முடிந்தவரை Google Account மூலம் கமெண்ட் செய்யுங்கள்.

2) இல்லையென்றால் Name/Url மூலம், பேரை மட்டுமாவது குறிப்பிட்டு கமெண்ட் செய்யுங்கள்.

3) Anonymous மூலம்தான் கமெண்ட் செய்ய முடியுமென்றால், கமெண்ட்டில் கீழே உங்கள் பேரை தயவு செய்து குறிப்பிடுங்கள்.

நன்றி.

- தீராத பக்கங்கள்
  1. தொடருங்கள் தோழா

    ReplyDelete
  2. எத்தனை போராட்டங்கள்...

    ReplyDelete
  3. Nice narration.pl.continue Sir..(BalasubramanIan ex.BOB)

    ReplyDelete

You can comment here