சார்ஜ் ஷீட் 42/2021 – 2ம் அத்தியாயம்


நிர்வாகத் தரப்பில் இருந்து எழுத்துபூர்வமாக எந்தத்  தகவலும் வரவில்லை. 
ஒருவேளை நிர்வாகம் பணி ஓய்வு குறித்து எந்தத் தகவலையும் எழுத்து பூர்வமாக தெரிவிக்கவில்லை என்றால், என்ன செய்ய வேண்டும் என்பதையும் திட்டமிட்டு இருந்தோம். அட்வகேட் கீதா, பெஃபி (BEFI)  மாநிலத் தலைவர்களில் முக்கியத் தோழர் சி.பி.கிருஷ்ணனையும்   கலந்தாலோசித்து முடிவெடுத்திருந்தோம்.  

”எனது வங்கிப்பணி இன்று 5 மணியோடு நிறைவடைகிறது. பணியிலிருந்து விடையனுப்புவது குறித்து  எந்தத் தகவலும்  நிர்வாகத்திடமிருந்து 5 மணி வரைக்கும் வரவில்லை. எனவே, நான் வங்கிப்பணியிலிருந்து 5 மணிக்கு நான் விடுவிக்கப்பட்டதாக கருதப்படுகிறது” என ஆங்கிலத்தில் டைப் செய்து தயாராக வைத்திருந்த கடிதத்தின் இரண்டு நகல்களை கிளையின் மேலாளர் கதிர்வேலுவிடம் கொடுத்தேன்.  

தோழர்கள் அண்டோ, அறிவுடைநம்பி, அஸ்வத், சங்கர் போன்ற தோழர்கள் எங்கள் அருகில் வந்து நின்றார்கள். மற்றவர்கள் கவுண்டருக்கு அந்தப் பக்கம் தள்ளி நின்று பார்த்துக் கொண்டிருந்தார்கள். கனத்த அமைதி.
 
மேலாளர் படித்துவிட்டு இரண்டு நகல்கள் எதற்கு என்பது போல என்னைப் பார்த்தார்.
 
“ஒரு காப்பி உங்களுக்கு. இன்னொரு காப்பில நீங்க எனக்கு (acknowledge) அக்னால்ட்ஜ் செஞ்சு தரணும்” என்றேன்.
 
திரும்பவும் கடிதத்தை ஒருமுறை படித்தார்.  வங்கியின் கடிகாரத்தைத் திரும்பிப் பார்த்தார். எதுவும் சொல்லாமல் கடிதத்தைப் பெற்றுக் கொண்டதாக எழுதி, கையெழுத்திட்டு கீழே 5.10 என்று நேரத்தையும் குறிப்பிட்டுத் தந்தார்.
 
என் கையில் அவர் தந்த கடிதம் எவ்வளவு மதிப்பு மிக்கது. அந்த காகிதம் பேசும் வார்த்தைகளை நீதிமன்றங்கள் புறந்தள்ளவே முடியாது. அதையெல்லாம் கதிர்வேலு அறிந்திருந்தாரா என்று தெரியாது. நேர்மையாக பாரபட்சமில்லாமல் நடந்து கொண்டார் என்பது தெரிந்தது.
 
எனக்காகவோ அல்லது நிர்வாகத்துக்காகவோ அவர் செயல்படவில்லை. எது உண்மையோ அதை எழுதியிருந்தார். பொறுப்பில் இருப்பவர்களுக்கு இந்த நேர்மை மிக முக்கியமானது.  உண்மைகள் பதிவு செய்யப்பட்டுவிட்டால், இன்றைக்கு இல்லாவிட்டாலும் என்றாவது ஒருநாள் நீதி கிடைக்கும் வாய்ப்புண்டு. உண்மைகள் பதிவு செய்யப்படாமல் போகும்போது நீதி முளையிலேயே கிள்ளி எறியப்பட்டுவிடும்.
 
”மிக்க நன்றி” அவரது கைகளைப் பற்றிச் சொன்னேன். மேலாளரும், கிளர்க்கும், அங்கிருந்த அப்ரைசர், தற்காலிக ஊழியரும் சேர்ந்து ஒரு நினைவுப்பரிசை வழங்கினர். தோழர்களோடு நின்று போட்டோ எடுத்துக் கொண்டோம்.
 
விடைபெறும்போது, “சார் உங்களோடு இந்த பிராஞ்ச்சில் வேல பாத்தத மறக்க மாட்டேன். நீங்களும் நினைவில் வச்சுக்கங்க” என்றார் சிரித்துக் கொண்டே.
 
”எப்படி உங்கள மறப்பேன்” என்று ஆரத் தழுவிக் கொண்டேன்.
 
சேலத்தில் இருக்கும் சங்க அலுவலகத்திற்குத் திரும்பினோம். பாண்டியன் கிராம வங்கியும், பல்லவன் கிராம வங்கியும் தமிழ்நாடு கிராம வங்கியாக ஒருங்கிணைக்கப்பட்ட பிறகு 2019 அக்டோபரில் இருந்து இந்த கிளையில் பணியாற்றி வந்தேன். இதே சாலையில் தினமும் பைக்கில் வந்து போய் இருந்தேன். சங்கக் கூட்டங்கள் இல்லாத சனி ஞாயிறு கிழமைகளில் சாத்தூருக்கு ரெயிலில் போய் வந்தேன். 2020 மார்ச்சில் கொரோனா பரவிய பிறகு, போக்குவரத்து  வசதிகள் இல்லாமல் போயின. நிர்வாகத்திடம் சாத்தூர் அருகில் பணியாற்ற சங்கத்தரப்பில் அனுமதி கேட்கப்பட்டது. அப்படியொரு ஏற்பாட்டை அந்த நெருக்கடியான தருணத்தில் செய்து கொடுக்கும்படி அரசு உத்தரவு பிறப்பித்து இருந்தது.
 
சேர்மன் செல்வராஜ் மறுத்துவிட்டதாக ஹெச்.ஆர்.எம் ஜெயக்குமார் சொன்னார். ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை அதிகாலை ஐந்தரை மணிக்கு சாத்தூரில் இருந்து தனியாகக் காரில் கிளம்பி 320 கி.மீ தொலைவில் இருக்கும் மின்னம்பள்ளி கிளைக்கு சரியாக 10 மணிக்கு வருவேன்.  கோயம்புத்தூரிலிருந்து ஆபிஸர்ஸ் அசோஷியேஷன் பொதுச்செயலாளர் அறிவுடைநம்பி சேலம் வருவார். நாங்கள் சமைக்க ஆரம்பித்தோம். அவ்வளவு உறுதுணையாக இருந்தார். எவ்வளவோ பேசியிருந்தோம். பெரும்பாலும் சமூகம், அரசியல், தொழிற்சங்கம்தான். பத்தொன்பது  மாதங்கள் நினைவுகளாகி ஓடிக்கொண்டு இருந்தன.
 
இடப்பக்கம் மலைக்குன்றுகளும், அதற்கு ஊடே ஓடிய பாதைகளும் மங்கிய சாயங்கால வெயிலில் ’அப்பாடா’ எனத் தெரிந்தன. அடிவாரத்தில் சில ஆடுகள் மேய்ந்து கொண்டிருந்தன. கொய்யா, ஏழலைக் கிழங்கு விற்கும் வயதான அம்மா அப்போதும் அந்த மரத்தடியில் தனியாக உட்கார்ந்திருந்தார். ஒவ்வொரு இடமும் பழக்கமானவை. எல்லாம் பின்னால் போய்க்கொண்டு இருந்தன.
 
“அண்ணே, மேலாளர் கையெழுத்து போட்டுட்டாரே. இன்னேரம் மேனேஜ்மெண்ட் அவரப் படுத்தி எடுத்திருப்பாங்களே” என்றான் அண்டோ. ஒன்றும் சொல்லாமல் யோசித்துக் கொண்டிருந்தேன். ஆபிஸர்ஸ் அசோஷியேஷன் செயல் தலைவராய் இருந்தான் அண்டோ. ’அண்ணே” என்று அழைத்து நெருக்கமாக பழகுகிறவர்களை தம்பி என்று  அழைக்கத் தொடங்கி அது நாளடைவில் ’அவன்’ , ‘இவன்’ என்று தன்னிச்சையாக அழைக்கும்படி ஆகிறது. தோழர் என அழைக்கப்படும்போது ‘அவன்’, ‘இவன்’ என்று பெரும்பாலும் வருவதில்லை.
 
”மேனேஜர் சாயங்காலம் நாலு மணியிலயிருந்து யார்ட்டயோ மாறி மாறி போன் செஞ்சுக்கிட்டு இருந்தார். நாமக்கல் ரீஜினல் மேனேஜர்ட்ட பேசியிருக்கணும். இல்ல, ஹெச்.ஆர்.ல ஜெயக்குமார்ட்ட பேசியிருக்கணும். அவங்க சேர்மன்ட்ட கேட்டிருப்பாங்க. எல்லாம் அவர்தான. என்ன சொன்னாரோ?” என்றான் ஒர்க்கர்ஸ் யூனியன்  உதவித் தலைவராயிருந்த சங்கர்.
 
”ரெண்டு நாளைக்கு முன்னால ஏப்ரல் 28ம் தேதி யூனியனுக்கு மெம்பர்ஸ் சப்ஸ்கிரிப்ஷன் கொடுக்க விடாம செக் ஆப் வசதியை நிறுத்துறாங்க. நம்ம சங்கத்து மேல மேனேஜ்மெண்ட வச்சிருக்கிற வன்மம் அப்பட்டமாத் தெரியுது.  அதனால நாங் கூட நெனைச்சேன். இன்னிக்கு காலையிலேயே உங்களுக்கு ரிடையர்மெண்ட் கொடுக்காம நிறுத்தி செஷேஷன் (cessation) ஆர்டர் கொடுத்துவாங்கன்னு. ஆனா எதுவும் கொடுக்கல?” அண்டோ கேட்டுக்கொண்டே யோசித்தது தெரிந்தது.
 
அவன் கேட்டது சரிதான். சேர்மன் செல்வராஜ் தலைமையிலான நிர்வாகம் கடுமையான வன்மத்தோடு மூர்க்கத்தனமாக கடந்த இரண்டு மாத காலமாக தாக்குதல்கள் நடத்தி கொண்டு இருந்தது. ஆறு தோழர்களுக்கு சார்ஜ் ஷீட் கொடுத்தது. ரிடையர் ஆன தோழர்கள் சோலைமாணிக்கம், கிருஷ்ணனுக்கு பென்ஷனை நிறுத்தப் போவதாக மிரட்டல் கடிதம் அனுப்பியது. சேர்மன் செல்வராஜே தரம் இறங்கி  சங்க நடவடிக்கைகளை சிறுமை படுத்தி, ”இவர்களிடம் எந்த மொழியில் பேசுவது என்று தெரியும்.” என 20.4.2021 அன்று இண்ட்ராநெட்  சர்க்குலரில் ஊழியர்களிடம் தொடைதட்டி கொக்கரித்திருந்தார். அந்த சர்க்குலர் முழுவதும் பொய்யும், அவதூறுகளும்தான். எந்த வங்கியின் உயரதிகாரியும் அப்படி ஒரு தொனியை பயன்படுத்தி இருக்க மாட்டர்கள். அந்த சர்க்குலர் வெளியிட்ட சில நாட்களில் சங்கத்தின் செக்-ஆப் நிறுத்தப்பட்டது.  
 
அப்படி இருக்கும்போது ஏன் இன்று எனக்கு செஷேஷன் ஆர்டர் கொடுக்கவில்லை?  நிர்வாகத்தின் முன்பு இரண்டு ஆப்ஷன்கள்தான் இருந்தன. அதை சங்கமே தெளிவாகவே முன்வைத்திருந்தது.
 
மொத்தம் ஆறு தோழர்களுக்கு சார்ஜ் ஷீட் கொடுக்கப்பட்டதும் சங்கத்திலிருந்து அட்வகேட் கீதா, பெஃபி சங்கத் தலைவர்களோடு விவாதித்தோம். சார்ஜ் ஷீட்டிற்கு  சென்னை ஹைகோர்ட்டில் தடையுத்தரவு வாங்குவது என யோசனை வந்தது.
 
அப்போது நான் என் கருத்தை முன்வைத்தேன். மற்ற ஐந்து தோழர்களும் இளம் தோழர்கள். அவர்களுக்கு பணிக்காலம் நிறைய இருக்கிறது. ஹைகோர்ட்டில் வழக்குத் தொடுத்து, அது எவ்வளவு காலம் இழுத்தடித்தாலும் பிரச்சினை இலை. ஆனால் எனக்கு ஒரு மாத காலமே பணிக்காலம் இருக்கிறது. ஹைகோர்ட்டில் வழக்கு வருடக் கணக்கில் நடந்தால், அதுவரைக்கும் ஓய்வுகாலச் சலுகைகளும் நிறுத்தப்பட்டிருக்கும்.  எனவே நான் மட்டும் சார்ஜ் ஷீட்டிற்கு பதில் கொடுக்கிறேன். ஹைகோர்ட்டில்  எனக்காக வழக்கு தொடர வேண்டாம். அப்போது நிர்வாகத்துக்கு இரண்டு ஆப்ஷன்கள்தான் இருக்கும். ஒன்று என் சார்ஜ் ஷீட் பதிலை ஏற்றுக்கொண்டோ அல்லது ஏற்றுக்கொள்ளாமலோ ஒரு தண்டனை கொடுத்து பணி ஓய்வுக் கடிதம் கொடுக்கும். அந்த தண்டனை ஏற்புடையதாக இல்லையென்றால் அப்போது நாம் கோர்ட்டுக்குச் செல்லலாம். இரண்டாவது ஆப்ஷன், நிர்வாகம் என் பதிலை ஏற்றுக் கொள்ளாமல் என்கொயரி நடத்தலாம். அப்படி நடத்தினால் அதை எதிர்கொண்டு நிர்வாகத்தை அம்பலப்படுத்தலாம். அத்தனையும் பொய்கள். அதற்கான ஆதாரங்கள், சாட்சிகள் கிடையாது. நிர்வாகம் அதனை நிரூபிக்க முடியாது.” என்றேன்.
 
அப்படி ஒரு ரிஸ்க் எடுக்க வேண்டுமா என அன்புக்குரிய தோழர்கள் தயங்கினார்கள். அட்வகேட் கீதா அவர்களும், தோழர் சி.பி.கிருஷ்ணனும் அப்படியேச் செய்யலாம் என்றார்கள். அதன் அடிப்படையில் மற்ற தோழர்களுக்கு ஹைகோர்ட் சென்று சார்ஜ் ஷீட்டிற்கு அட்வகேட் கீதா தடையுத்தரவைப் பெற்றார்கள்.
 
நான் சார்ஜ் ஷீட்டிற்கு12.4.2021 அன்றே பதில் அளித்துவிட்டேன்.  அதன் மேல் முடிவெடுக்க நிர்வாகத்துக்கு பதினெட்டு நாட்கள் அவகாசமிருந்தது. ஒன்று எதாவது தண்டனை அளித்து என் ஃபைலை முடித்திருக்க வேண்டும். இல்லை என்றால் என்கொயரி நடத்தப் போவதாகக் கூறி செஷேஷன் ஆர்டர் தந்திருக்க வேண்டும்.
 
ஆனால் நிர்வாகம் இரண்டையுமே செய்யவில்லை. அதைத்தான் தோழர்கள் யோசித்துக் கொண்டிருந்தார்கள்.
 
சங்க அலுவலகம் வந்ததும் இறங்கினோம். அருகில் உள்ள கிளைகளில் இருந்து சங்க உறுப்பினர்கள் வந்திருந்தனர். பணி ஓய்வுக்கு வாழ்த்தினாலும் உள்ளுக்குள் அவர்களிடம் எதோ வாட்டம் இருப்பதை உணர்ந்தேன். தோழர்கள் அறிவுடைநம்பி, அண்டோ, அஸ்வத், பரிதிராஜா எல்லாம் அவர்களுக்கு நம்பிக்கையளித்துப் பேசினர்.
 
“எனக்கு பணி ஓய்வு நிர்வாகம் கொடுத்திருக்க வேண்டும். தரவில்லை. நாமே பணி ஓய்வுக்கான கடிதம் கொடுத்து நாமே அறிவித்துக் கொண்டோம். அதுபோல நாமே பணி ஓய்வு சலுகைகளையும் எடுத்துக் கொள்ளும் நாள் வரும். எல்லாவற்றையும் நமது சங்கம் எனக்கு பெற்றுத் தரும்” என அந்தக் கூட்டத்தில் பேசினேன். என் தைரியமும் தெம்பும்  அவர்களுக்கு நம்பிக்கையளித்திருக்க வேண்டும்.
 
கேக் வெட்டியதும் அந்தச் சூழல் கலகலப்பானது.
 
உள்ளுக்குள் ஒரு சந்தேகம் வரவும் என் லேப்டாப்பில் மெயிலைப் பார்த்தேன். ஹெச்.ஆரிலிருந்து மெயில் வந்திருந்தது.
 
”இன்று மாலை 4.30 மணிக்கு உங்கள் கிளை மேலாளர் மூலம் உங்கள் பணி குறித்து செஷேஷன் உங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் 30.4.2021 அன்றிருந்து உங்கள் பணி செஷேஷன் ஆகிறது. 30.4.2021 முதல் உங்களுக்கு ஊதியம் வழங்கப்பட மாட்டாது. என்கொயரிக்கு பிறகு ஓய்வுகால சலுகைகள் எதேனும் இருந்தால் பின்னர் வழங்கப்படும்” என்று பொதுமேலாளர்  மெயில் அனுப்பி இருந்தார்.
 
மெயில் அனுப்பப்பட்ட நேரத்தைப் பார்த்தேன்.  7.36 என்று காட்டியது.
 
(தொடரும்) 

Comments

8 Comments

வருகைக்கு நன்றி.

கமெண்ட் செய்கிறவர்கள் Anonymous, Name/Url, Google Account, Name/Url, Google Account மூலம் கமெண்ட் செய்யலாம்.

1) முடிந்தவரை Google Account மூலம் கமெண்ட் செய்யுங்கள்.

2) இல்லையென்றால் Name/Url மூலம், பேரை மட்டுமாவது குறிப்பிட்டு கமெண்ட் செய்யுங்கள்.

3) Anonymous மூலம்தான் கமெண்ட் செய்ய முடியுமென்றால், கமெண்ட்டில் கீழே உங்கள் பேரை தயவு செய்து குறிப்பிடுங்கள்.

நன்றி.

- தீராத பக்கங்கள்
  1. செவ்வணக்கம் தோழர்

    ReplyDelete
    Replies
    1. //செவ்வணக்கம் தோழர்// வணக்கம் தோழர். வருகைக்கு நன்றி. தங்கள் பெயரைக் குறிப்பிடலாமே!

      Delete
  2. பொன்ராஜ்January 22, 2025 at 10:26 PM

    உங்கள் வாழ்க்கையில்
    நடந்தவற்றை திரைப்படமாக எடுக்கலாம் போல......

    ReplyDelete
    Replies
    1. பொன்ராஜ்! இப்போதான் எழுத்து போட்டிருக்கு. இன்னும் இருக்கே!

      Delete
  3. என்ன நடந்தது என்று தெரிந்தாலும் அதை எழுத்து வடிவில் அதுவும் தங்களுக்கே உரித்தான ஓரு நடையிலே படிக்க படிக்க ஏதோ திர்ல்லர் நாவல் படிக்கிற உணர்வு. தோழர் நிச்சயம் தமிழ்நாடு கிராம வங்கி நிர்வாகம் சங்கத்திற்கு எதிராக செய்ததும், உங்களுக்கு செய்ததும் முற்றிலும் ஏற்புடையதே இல்லை... இறுதி வெற்றி நமது தான் என்றாலும் அந்த வெற்றி அடையும் வழி நம்பிக்கை தான் என்றாலும் ஒரு வலியோடு தான் நான் பயணித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. வலியை உணர்ந்தவர்களே வெற்றியையும் உணர்கிறார்கள்! த்ரில்லர் நாவல் போல இருந்தாலும் இது ஒரு வரலாற்று நாவல் தோழர் குளோரி! :-)

      Delete
  4. சிபி கிருஷ்ணன்January 23, 2025 at 9:34 AM

    சுற்றி இருந்தவர்கள் எவ்வளவு அதைரியமாக இருந்தாலும் அதைப்பற்றி துளி கூட கவலைப்படாமல் துணிச்சலுடன் நின்று போராடியவர் தோழர் மாதவராஜ். நிர்வாகத்திற்கு இந்தப் பிரச்சினையை முடிக்க பல வாய்ப்புகள் இருந்தாலும் பிடிவாதமாக எவ்வளவு முடியுமோ அவ்வளவு இழுத்து அடித்தது. இந்தியன் வங்கி நிர்வாகமும் அதற்கு முழுமையாக துணை போனது. "ஏனைய பாளையத்துக்காரர்கள் எல்லாம் அடிபணிந்து விட்டார்கள். கட்டபொம்மா நீ மட்டும் ஏன் மறுக்கிறாய்?" என்று ஜாக்சன் துரை போல் நிர்வாகம் நடந்து கொண்டது.

    தோழர் மாதவராஜ் கட்டபொம்மன் போல் வீறு கொண்டு போராடினார். அதற்குப் பக்க பலமாக ஒரு பெரிய படையே இருந்தது.

    இவற்றையெல்லாம் வார்த்தையாக வடித்து ஒரு புதினம் போல் எழுதுவது தான் மாதவராஜ் ஸ்பெஷல்

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் தோழர் சி.பி.கே! நிர்வாகத்திடம் பல வாய்ப்புகள் இருக்கத்தான் செய்தன. அதைவிட வன்மமும், பழிவாங்கும் வேகமௌம் அதிகமாய் இருந்தன. இந்தியன் வங்கி துணை போனதற்கும் பல பின்னணி உண்டு. எல்லாவற்றையும் இந்த தொடர் அதன் போக்கில் பேசும் என நினைக்கிறேன். அப்புறம் உங்களைப் போன்றோரும், இப்படி ஒரு இயக்கமும் கூட இருக்கும்போது துணிச்சல் இருக்காதா?

      Delete

You can comment here