நன்றாக படிக்கிற, கீழ்ப்படிதல் மிக்க பெண்ணாய் மீரா அறிமுகம் ஆகிறாள். பதின்ம வயதின் உடல் மாற்றங்களை அறியவும், ரசிக்கவும், ஆராயவும் செய்கிறாள். நேர்மையான, வெளிப்படையான பெண்ணான அவள் அந்தத் தருணங்களை எதிர்கொள்ளும் விதமும், அதில் பெறுகிற அனுபவமும்தான் கதை.
ஸ்ரீ என்னும் புது மாணவன் மீது அவளுக்கு ஈர்ப்பு ஏற்படுகிறது. ஒருவரையொருவர் உடல் ரீதியாகவும் அறிந்து கொள்ள முனைகிறார்கள். ’நட்பைத் தாண்டி விடக் கூடாது’ என்னும் மீராவின் தாய் அனிலா அந்த இருவரின் உறவுக்கு இடையே தன்னை நுழைத்துக் கொள்கிறாள். அம்மாவின் நடவடிக்கைகள் மீராவுக்கு எரிச்சலாக மட்டுமல்ல, பொறாமையாகவும் இருக்கிறது. அவர்கள் மூவரும் ஆடும் நடனமும் அசைவுகளும்தான் பார்வையாளர்களுக்கு எவ்வளவு சொல்கின்றன!
உடல் ரீதியாகவும், உணர்வின் கிளர்ச்சியாகவும் செக்ஸை அணுகாமல், அதனை அறிவு பூர்வமாக தெரிந்து கொள்ளும் நிதானத்தை படம் முன்மொழிகிறது. அந்த உலகத்திற்குள் தன்னை மறந்து மௌனத்தோடு நுழையாமல் மீரா அந்த சமயங்களில் பிரக்ஞையோடும், உரையாடுபவளுமாய் இருக்கிறாள்.
அவளுக்கும் ஸ்ரீக்கும் இருக்கும் உறவை வைத்து பள்ளியில் மற்ற ஆண் பையன்கள் மீராவை அவமானம் செய்யும் ஒரு நாள் வருகிறது. யாருமற்றவளாய் மீரா நிற்க நேர்கிறது. அம்மா வந்து அவளை அரவணைத்து வீட்டிற்கு அழைத்துச் செல்கிறாள்.
அம்மாவைப் பற்றிய பிரக்ஞை மீராவுக்கு தட்டுப்பட ஆரம்பிக்கிறது. எப்போதாவது வரும் அவளுடைய கணவன் - தனது தந்தை -இல்லாத அந்த வீட்டில் எப்போதும் சமையல் செய்து கொண்டும், வீட்டு வேலைகள் செய்து கொண்டும் இருக்கும் அம்மாவின் உலகத்தை எட்டிப் பார்க்கிறாள்.
மிக மெல்லிய சத்தங்கள், பார்வையாளர்களை யோசிக்கவும், புரிந்து கொள்ளவும் வைக்கிற காமிரா கோணங்கள், கதாபாத்திரங்களின் உடல் அசைவுகள், மிக முக்கியமாய் கண்கள், இந்தப் படத்தின் நாடியைப் பிடித்துப் பார்க்க வைக்கின்றன. ஒரு கவிதையின் வரிகளைப் போல காட்சிகள் அடுக்கப்பட்டிருக்கின்றன. மீராவாக பிரீத்தியும், அனிலாவாக கனியும் அற்புதமாக நடித்திருக்கிறார்கள். நம் நினைவில் நடமாடிக்கொண்டும், நடனமாடிக்கொண்டு இருக்கிறார்கள். படத்தின் இயக்குனர் ஒரு பெண். சுசி தலாதி. அமெரிக்கன் ஃபிலிம் இன்ஸ்ட்டியூட்டில் படித்தவர்.
அம்மாவுக்குத் தலையில் எண்ணெய் வைத்து, அந்த முடிகளுக்குள் அளைந்து, அப்படியே அதில் தன் முகத்தை மீரா வைக்கும் காட்சியில் நாம் விம்மிப் போகிறோம்.
‘பழமையான இந்தியக் கலாச்சாரத்தை’ மதிக்கும் எந்த தலைமுறைக்கும் இந்தப் படம் அருவருப்பாகவே இருக்கும்.
ஆண் பெண் உறவு குறித்து சில முக்கிய உரையாடல்களை இந்தத் தலைமுறைக்கு கவனப்படுத்தும் சினிமா இது என வரவேற்கலாம். என்ன, நமக்கு சம்பந்தமில்லாத இடத்தில் எங்கோ இந்தக் கதை நிகழ்வதாய் தோன்றுவதைத்தான் தவிர்க்க முடியவில்லை.
அமேசன் பிரைமில் Girls will be Girls இருக்கிறது.
வருகைக்கு நன்றி.
கமெண்ட் செய்கிறவர்கள் Anonymous, Name/Url, Google Account, Name/Url, Google Account மூலம் கமெண்ட் செய்யலாம்.
1) முடிந்தவரை Google Account மூலம் கமெண்ட் செய்யுங்கள்.
2) இல்லையென்றால் Name/Url மூலம், பேரை மட்டுமாவது குறிப்பிட்டு கமெண்ட் செய்யுங்கள்.
3) Anonymous மூலம்தான் கமெண்ட் செய்ய முடியுமென்றால், கமெண்ட்டில் கீழே உங்கள் பேரை தயவு செய்து குறிப்பிடுங்கள்.
நன்றி.
- தீராத பக்கங்கள்