“நாலு முப்பதுக்கே மேனேஜர் மூலமா செஷேசன்னு தகவல் கொடுத்ததா கூசாமச் சொல்றாங்க. எங்க கொடுத்தாங்க. நாம எல்லாரும் அங்கத்தானே இருந்தோம்”
“அப்ப அஞ்சு மணி வரைக்கும் நிர்வாகத்துட்டயிருந்து எந்தக் கடிதமும் வரலன்னு நாமக் கொடுத்த கடிதத்தை வாங்கி எதுக்கு மேனேஜர் அஞ்சு பத்துக்கு அக்னாலட்ஜ் பண்ணாரு?”
“அடேங்கப்பா என்னா உருட்டு உருட்டுறாங்க?’
கோபமாய், கிண்டலாய் தோழர்கள் பேசிக்கொண்டாலும், நிர்வாகம் பிரச்சினையை முடிக்காமல் தொடர முயற்சிக்கிறது என்பது எல்லோருக்கும் புரிந்தது.
நிர்வாகத்திடமிருந்து எந்தக் கடிதமும் வரவில்லை என்றதும், சங்கத்திலிருந்து தலைமையலுவலகத்தில் சேர்மனிடம் பேச்சுவார்த்தை நடத்த வருவார்கள் என நிர்வாகம் எதிர்பார்த்திருக்க வேண்டும். அவர்களிடம் 1.3.2021 அன்று தர்ணாவின்போது தலைமையலுவலகத்தில் அத்து மீறி நடந்து கொண்டதற்கு மாதவராஜை வருத்தம் தெரிவித்து எழுதித் தரச் சொல்லுங்கள், சில இன்கிரிமெண்ட்களை குறைத்து ஆர்டர் கொடுக்கிறோம், பிரச்சினையை முடித்துக் கொள்ளலாம் எனச் சொல்வதற்கு தயாராய் இருந்திருக்க வேண்டும். எனது பணி ஓய்வை நானே அறிவித்து கடிதம் கொடுத்துவிட்டு சென்று விடுவேன் என்று நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள்.
அப்படி ஒரு முடிவு எடுத்து வைத்திருந்தது அங்கிருந்த சில தோழர்களைத் தவிர வேறு யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. கடிதம் கொடுத்ததை மேலாளரும் எதிர்பார்த்திருக்கவில்லை. நிர்வாகத்திடம் கேட்டுவிட்டு கையெழுத்திடலாம் என்ற யோசனையும்கூட அவருக்கு அந்த நேரத்தில் வந்த மாதிரித் தெரியவில்லை. ஒருவேளை மறுத்திருந்தால் என்ன செய்வது என்பது வரைக்கும் திட்டமிட்டிருந்தோம்.
திட்டமிடுவதும், அதை நிர்வாகத்துக்கு தெரியாமல் வைத்திருப்பதும் ஒரு அமைப்புக்கு மிக முக்கியம். சங்கத்திற்குள் என்ன நடக்கிறது எனத் தெரிந்து கொள்ள நிர்வாகம் மெனக்கெடுவதும், நிர்வாகம் என்ன செய்கிறது எனத் தெரிந்து கொள்ள சங்கத்தரப்பில் முயற்சிப்பதும் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கும். நிர்வாகம் ஊழியர்களைத் தாக்குவதற்கும், சங்கம் ஊழியர்களை தற்காத்துக் கொள்வதற்கும் தகவல்களை சேகரிக்கின்றன. கிடைக்கும் சின்னச் சின்னத் தகவல்களில் இருந்து அடுத்து என்ன அசைவு என்பதை ஊகித்தறிய முடியும். அதற்கான வாய்ப்புகளைக் கொடுக்காமல் இருப்பது முக்கியமானது. எனவேதான் தொழிற்சங்கத்தின் பொறுப்புக்கு வருகிறவர்கள் நம்பகத்தன்மை கொண்டவர்களாய் இருப்பது முதன்மையான தகுதியாகிறது.
ஆக, நிர்வாகம் தகவல் கிடைக்காமல் இந்தச் சுற்றில் நிலைதடுமாறிப் போயிருப்பதை, அந்த மெயில் உணர்த்தியது. தோழர்கள் சி.பி.கிருஷ்ணன், ராஜகோபாலன், அட்வகேட் கீதா ஆகியோருக்குத் தெரிவித்தோம்.
மாறி மாறி தோழர்களிடமிருந்து போனில் அழைப்புகள் வந்து கொண்டிருந்தன. சாத்தூரிலிருந்து தோழர் காமராஜ் பஸ்ஸில் பயணம் செய்து களைப்போடு வந்து சேர்ந்தார். முந்தினநாள் தங்கமாரியப்பன், லஷ்மிநாராயனன், சங்கரோடு வருவதாக இருந்தவர். அடுத்த மாதம் பணி ஓய்வு பெற இருந்தார். அன்றிரவே சாத்தூருக்குக் கிளம்பாமல், அடுத்த நாள் விடிகாலையில் கிளம்பிச் செல்வதாக முடிவு செய்தோம்.
வீட்டில் அம்முவுக்குப் போன் செய்து எல்லாவற்றையும் சொன்னேன். ”இருக்கட்டும் வாங்க. பாத்துக்கலாம்” அவளுக்கே உரிய சிரிப்போடு சாதரணமாகச் சொல்லிவிட்டு ”காலைலயா வர்றீங்க. பாத்து நல்லபடியாய் வாங்க” என முடித்துக் கொண்டாள். எப்பேர்ப்பட்ட பெண் அவள்! முழு விவரங்கள் தெரியா விட்டாலும், பணி ஓய்வு பெறப்போகும் நேரத்தில் என்னைப் பழிவாங்குவதற்கு வேண்டுமென்றே நிர்வாகம் சார்ஜ் ஷீட் கொடுத்திருக்கிறது என்று தெரிந்திருந்தாள். “நீங்களும் உங்க சங்கமும் அவங்கள விடவாப் போறீங்க” என்பதுதான் அவளிடமிருந்து முதலில் வந்த வார்த்தைகள். இந்த தொழிற்சங்கத்தின் மீது அவளுக்குத்தான் எவ்வளவு நம்பிக்கை.
இரவில் எல்லோரும் சங்க அலுவலகத்தின் மொட்டை மாடியில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தோம். சேலத்திலிருந்த பத்தொன்பது மாதங்களில் ஆறு மாதங்கள் போலத்தான் இயல்பான வாழ்வு காலம். மீதி பதிமூன்று மாதங்களும் கொரோனாக் காலம்தான்.
நிர்வாகம் அதுதான் சமயம் என்று தாக்குதல்களை கட்டவிழ்த்து விட்டது. நோய் குறித்த அச்சமும், போக்குவரத்து அற்ற சூழலும் அப்பியிருந்த நாட்களில் கூட நிர்வாகம் ஊழியர்கள் பக்கம் நின்று யோசிக்கவில்லை. ”லீவுக்கு ஊருக்கு வந்தோம், இப்போது லாக் டவுன் அறிவித்து விட்டார்கள். நாங்கள் எப்படி கிளைக்குச் செல்வது” என பெண் ஊழியர்கள் பதறினார்கள். தினமும் இருநூறு கி.மீக்கும் மேலே பல ஆண் ஊழியர்கள் பைக்கில் பயணம் செய்ய வேண்டி இருந்தது. ”பேங்க்கில் வேல செய்றீங்க, கொரோனாவை கூட்டிட்டு வந்துராதீங்க” என்று வேலை பார்த்த இடங்களில் வாடகைக்கு இருந்த ஊழியர்களை வீட்டின் சொந்தக்காரர்கள் காலி செய்யச் சொன்னார்கள். ஊழியர்களின் போன் அழைப்புகளில் வலியும் வேதனையுமே இருந்தது. நிர்வாகத்திடமிருந்து எந்த அசைவும் ஆதரவும் தென்படவில்லை. அப்போது நான் ஒர்க்கர்ஸ் யூனியன் பொதுச்செயலாளராய் இருந்தேன். சங்கத்திலிருந்து பெரும்பாலும் ஹெச்.ஆர்.எம்முக்கோ, ஜி.எம்முக்கோதான் பேசுவோம். ரொம்ப அவசியமாக இருந்தால் மட்டும் சேர்மனுக்கு போன் செய்வோம். ஒரு பெண் ஊழியர் ஸ்கூட்டியில் வங்கிக்கு வரும்போது, அந்தப் பகுதியை ’கண்டெய்ன்மெண்ட் ஜோன்’ என அறிவிக்கப்பட்டதாகக் கூறி அவரை போலீஸார் திருப்பி அனுப்பி் இருக்கிறார்கள். அந்த பெண் ஊழியர் சம்பந்தப்பட்ட மண்டல மேலாளருக்குத் தெரிவித்திருக்கிறார். மண்டல மேலாளரோ ”அதெல்லாம் எனக்குத் தெரியாது நீங்கள் பிராஞ்ச்சுக்கு போயாக வேண்டும்” என சொல்லியிருக்கிறார். அந்தப் பெண் ஊழியர் அழுதுகொண்டே எனக்கு போன் செய்தார். மிஸ்டர் செல்வராஜ் தமிழ்நாடு கிராம வங்கியின் சேர்மனாக வந்தபிறகு அன்றைக்குத்தான் முதல் முறையாக போன் செய்து பேசினேன். என்னை அறிமுகப்படுத்திக்கொண்டு பிரச்சினையைச் சொன்னேன். ”அதுக்கு உடனே எங்கிட்ட பேசணுமா சார்? நா என்ன சும்மாவா இருக்கேன்?” என எடுத்தவுடன் எரிச்சல் பட்டார். நான் நிதானமாக “இந்த மூன்று மாதங்களில் ஒருதடவை கூட உங்களிடம் நான் போனில் பேசியதில்லை. இப்போது அவசரம் என்பதால் பேசுகிறேன்” என்று சொன்னேன். ”சரி, பார்க்கிறேன்” என்று வேண்டா வெறுப்பாய்ச் சொல்லி போனை வைத்துவிட்டார்.
சேர்மன் செல்வராஜின் குரலும், தொனியும் வித்தியாசமாய்ப் பட்டது. முதன்முறையாக பேசும் ஒருவரிடம் எதற்கு இத்தனை வெறுப்பும் அலட்சியமும்? எனது தொழிற்சங்க வாழ்வில் நான் பார்க்கும் பதினேழாவது சேர்மன் அவர். யாரிடமும் அப்படி ஒரு அனுபவம் ஏற்பட்டதில்லை.
அதுபற்றியெல்லாம் பேசிக்கொண்டு இருந்தோம். அப்போது ஒரு தோழர், “நம் சங்கத்தைப் பற்றியும் உங்களைப் பற்றியும் முன்கூட்டியே நிறைய ஏத்திவிட்டுத்தான் செல்வராஜை இந்தியன் பேங்க்லயிருந்து இங்கு சேர்மனாக அனுப்பியிருக்காங்கன்னு பேசிக்கிறாங்க. முந்தைய சேர்மன் தன்ராஜ் நம்ம சங்கத்துக்கு ரொம்ப இடம் கொடுத்துட்டாராம். இந்த பேங்க்ல நம்ம ரெண்டு சங்கமும் வச்சதுதான் சட்டமாயிருக்காம். நம்ம சொல்றதத்தான் மெம்பர்கள் கேக்காங்களாம். ரீஜினல் மேனேஜர்லாம் நம்மைப் பாத்து பயப்படுறாங்களாம். பழைய அதியமான் பேங்க் கேங் ஒன்னு லாபி பண்ணிட்டு இருக்காங்க. அந்த லாபில வந்தவர்தான் இப்போ ஹெச்.ஆர். எம்மா இருக்கும் ஜெயக்குமார். அவருக்கு நம்ம யூனியன்னாலே ஆகாது.” என்று அவருக்கு கிடைத்த தகவல்களை சொல்லிக் கொண்டு இருந்தார்.
கொரொனாக் காலங்களில் நடைபெற்று வரும் நிகழ்வுகள் அவர் சொன்னதை உறுதிப்படுத்துவதாகவே இருந்தன. கூட்டமாய்ச் சேருவதும், இயக்கம் நடத்துவதும் கட்டுப்படுத்தப்பட்டிருந்த சூழலில் நிர்வாகத்தின் நடவடிக்கைகள் உள்நோக்கம் கொண்டவையாகவேத் தெரிந்தன.
அண்டோ கால்பர்ட்டை சஸ்பெண்ட் செய்ததில் நிர்வாகத்தின் தாக்குதல் படலம் ஆரம்பித்தது. கோவிட் தொற்று காலத்தில் ஊழியர்களின் நலனில் நிர்வாகத்தின் அலட்சியத்தை சங்கம் அம்பலப்படுத்தியது. தோழர் ஸ்ரீனிவாசனின் மரணம் வங்கியையே உலுக்கியது. வங்கிக்கு வருவதும் செல்வதுமே பெரும் நெருக்கடியாக இருந்த அந்த நேரத்தில் காலை 10 மணிக்கு சரியாக கம்ப்யூட்டரில் வருகையைப் பதிவு செய்யும் முறையை நிர்வாகம் அமல்படுத்தியது. சங்கம் விமர்சனம் செய்தது. சேர்மன் செல்வராஜ்க்கு பொத்துக்கொண்டு வந்துவிட்டது. சங்கத்தோடு பேச மாட்டேன் என்று அடம்பிடித்தார். 21.7.2020 அன்று சங்கத்திலிருந்து ஜி.எம்மை சந்தித்துப் பேசினோம். பேச்சுவார்த்தை சுமூகமாகவே இருந்தது. அந்த நேரத்தில் வெளியே நின்றிருந்த தோழர்கள் அண்டோ கால்பர்ட், சந்தான செல்வம் போன்றவர்கள் கைகளை தூக்கியபடி ஒரு செல்பி எடுத்து சங்கத்தின் பிரத்யேக வாட்ஸ் அப் குரூப்பில் பதிவிட்டிருந்தனர். அதை எடுத்து வைத்துக் கொண்டு தோழர் அண்டோ கால்பர்ட் தலைமையலுவலகத்திற்குள் ஆரப்பாட்டம் செய்ததாகவும், வங்கியின் ஒழுக்க நெறிகளை மீறி விட்டதாகவும் சஸ்பெண்ட் செய்தது நிர்வாகம். கோவிட் நேரத்திலும் நம் சங்கங்கள் தலைமையலுவலகத்தின் முன்பும், மண்டல அலுவலகங்களின் முன்பும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தின. சென்னை ஹைகோர்ட்டில் வழக்குத் தொடுத்து, அண்டோவின் சஸ்பென்ஷனை எதிர்த்து தடையுத்தரவு பெற்றது. மூக்குடைபட்ட நிர்வாகம் அண்டோவை தூத்துக்குடியிலிருந்து கடலூர் அருகில் டிரான்ஸ்பர் போட்டு தன் ஆத்திரத்தை விடாமல் காட்டியது.
யோசித்துப் பார்க்கும்போது தலைமையலுவலகத்தில் சங்கத்தின் தலைவர்கள் நடமாடுவதே நிர்வாகத்துக்கு பொறுக்க முடியாமல் இருந்திருக்கிறது. இப்போது எங்கள் ஆறு பேருக்கு கொடுத்த சார்ஜ் ஷீட்டிலும் தலைமையலகத்தில் நுழைந்து வன்முறையாக நடந்து கொண்டதாகத்தான் குற்றச்சாட்டு வைக்கப்பட்டிருக்கிறது. எப்போது ஒரு நிர்வாகம் ஒரு சங்கத்தின் மீது வன்மமும், வெறுப்பும் கொண்டிருக்கிறதோ, அப்போது இது போன்ற தாக்குதல்களில் ஈடுபடும். தன்பயத்தில் இருந்து உருவாகும் நடவடிக்கைகளாகவும் இருக்கும்.
1984ம் ஆண்டு பாண்டியன் கிராம வங்கியில் கிருஷ்ணகுமார், சோலைமாணிக்கம், சோமசுந்தரம் போன்ற தோழர்கள் தலைமையில் போராட்டக்குணம் கொண்ட சங்கம் உருவெடுத்தபோதும் இதே நிலைமை இருந்தது. தலைமையலுவலகத்தில் சங்கத்தலைவர்கள் காலடி எடுத்து வைத்தாலே சூழல்கள் இறுக்கமாகும். சேர்மனின் அறைக்குள் ரெட் லைட் எரிந்து விடும். தோழர் கிருஷ்ணகுமாரோடு மெம்பர்கள் தலைமையலுவலகத்தில் வைத்து பேசவே பயந்தார்கள். தலைமையலுவலகச் சுவரில் சங்கம் ஒட்டிய போஸ்டரை ஒரு சூப்பிரண்டட்டே ( டிபார்ட்மெண்ட் ஹெட்) வெளியே வந்து கிழித்தார். அதையெல்லாம் மீறித்தான் சங்கம் வளர்ந்தது.
அந்தக் கதைகளையெல்லாம் பேசிக்கொண்டிருந்தோம். சுற்றிலும் மலைகள் நிழல் உருவங்களாய் நின்றிருந்தன. மெல்லிய காற்று வீசியது. தேய்பிறை ஆரம்பித்து மூன்று நாட்களே ஆகியிருந்தன. முழு நிலவின் மேலே கொஞ்சம் காணாமல் போயிருந்தது. அடுத்து வளர்பிறை வரத்தானே செய்யும்.
எல்லோரும் கீழே வந்து படுக்க ஆரம்பித்தோம். இந்த கொரோனாக் காலத்திலும் குறைந்தது பத்து முறைக்கும் மேலாக இந்த சங்க அலுவலகத்தில் இருபது இருபத்தைந்து பேர் வந்து தங்கி இப்படியெல்லாம் பேசியிருந்தோம். முக்கிய காரியங்களில் ஈடுபட்டிருந்தோம்., நடு இரவில் எழுந்து பார்த்தால் அறைகளெங்கும் இளம் தோழர்கள் அசையாமல் மூச்சு விட்டுக் கொண்டிருப்பார்கள்.
இந்த சங்கத்தின் எதிர்காலம் குறித்து பெரும் நம்பிக்கை தந்த நாட்கள் அவை. நிர்வாகத்தின் அடிமடியில் வெடி வைத்த நாட்களும்தான். கொஞ்ச காலம் எடுக்கலாம். ஒவ்வொன்றாக நிச்சயம் வெடிக்க ஆரம்பிக்கும்.
அருகில் படுத்திருந்த தோழர் அறிவுடைநம்பி, “அடுத்து நீங்க லெட்டர் கொடுக்கணும்ல” என்று கேட்டார்.
“ஆமா தோழர். ஞாயித்துக்கிழமைக்குள்ள நாம் முடிவு பண்ணிருவோம். திங்கக் கிழமை கொடுத்துருவோம்” என்றேன்.
“ம்… இனும எப்போ வருவீங்க தோழர்?” என்றார். அந்தக் குரலில் அன்பும், பிரிவும் அடர்ந்திருந்தது.
(தொடரும் )
Very interesting comrade.In every bank management approach is like this only.Waiting for next episode.
ReplyDelete//Very interesting comrade.In every bank management approach is like this only.Waiting for next episode.// தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் என் அன்பும், நன்றியும். உண்மைதான் நீங்கள் சொல்வது. நிர்வாகங்கள் எல்லாம் ஒரே மாதிரியாகத்தான் இருக்கின்றன. தாங்கள் யாஎ எனத் தெரிந்து கொள்ள முடியவில்லை. பேரைக் குறிப்பிட்டிருக்கலாம்.
DeleteSorry comrade.I am BalasubramanIan ex B O B opted for vrs in 2012.I am a follower since blogger days.
DeleteWishing good luck
நன்றி தோழர் பாலசுப்பிரமணியன், தங்கள் தொடர் வருகைக்கும், கருத்துக்கும்.
Deleteநீங்கள் ஓய்வு பெற்ற நாளன்று கம்பீரமாக வீட்டுக்குச் சென்றீர்கள். ஆனால் சேர்மன் செல்வராஜ் தனது ஓய்வு நாள் அன்று மயக்கம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ReplyDeleteகொள்கை பிடிப்புடன் இருக்கும் தலைவர் அனைத்து சூழலையும் தன்னம்பிக்கையுடன் கடந்து செல்வார். தனக்கு அதிகாரம் கிடைத்தவுடன் கண்ணா பின்னா என்று ஆடிய இந்த மாமனிதர் ஓய்வு பெற்றவுடன் இந்த அதிகாரமும் போய்விடும் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாமல் மன உளைச்சலுக்கு ஆளாகி மயக்கமுற்றார் . இதுவே
சமரசமற்ற ஒரு தொழிற்சங்க தலைவருக்கும் அதிகார வர்க்கத்திற்கும்
உள்ள வித்தியாசம்
நிர்வாகம் தன் தொழிலாளர் விரோத கொடூரமான,வக்கிரமான செயல்பாடுகளை கொஞ்சமும் கூச்சமின்றி நிகழ்த்திய காலகட்டத்தில் அதனை சமயோசிதமாக எதிர்கொள்வது என்பது உங்களைப் போன்ற தலைவர்களால் தான் முடியும். பின்னாளில் அந்த பெருந்தலைவர் பணி ஓய்வில் நடைபெற்ற சம்பவங்கள் வரலாறு திருப்பி அடித்த உன்னதமான மரண அடி...
ReplyDeleteதோழர், அந்த சமயோசிதம் 35 வருட தொழிற்சங்க அனுபவங்களால் விளைந்ததாக இருக்கலாம். உங்களைப் போன்ற எத்தனையோ தோழர்களிடம் பழகி காலத்தால் பெற்றதாக இருக்கலாம். இதில் தனி மனிதராக பெருமை கொள்ள எதுவுமில்லை. பாவம், அந்த செல்வராஜ். கொஞ்ச காலம் வானத்தில் கழுகென பறந்து விட்டு, தரை இறங்கும் வேளை வந்ததும் நிலை தடுமாறி இருக்கிறார். வாழ்வின் உண்மைகளை தாங்க முடியாமல் போயிருப்பார்.
Deleteஆமாம். நானும் கேள்விப்பட்டேன். தொழிற்சங்கங்கள் எப்போதும் ஊழியர்களின் துணை கொண்டு அதிகாரத்தை எதிர்த்து, தங்களைக் காத்துக் கொள்ள முயற்சிக்கின்றன. நிர்வாகத்தின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் அதிகாரத்தின் துணை கொண்டு சங்கங்கள் மீது தாக்குதல்கள் நடத்தி அழித்துவிடத் துடிக்கின்றன. பொறுப்பில் இருந்து தொழிற்சங்கத்தின் தலைவர்கள் விடைபெற்றாலும் சங்கமும், தோழர்களும் அவர்களோடுதான் இருப்பார்கள். ஆனால் நிர்வாகத்தின் பொறுப்பில் இருந்து விடைபெற்ற அந்த கணமே அதிகாரமும், அதுவரை கூட இருந்தவர்களும் காணாமல் போய்விடுவார்கள். பலவீனமாய் உணர்வார்கள். அதுதான் மிஸ்டர் செல்வராஜ்க்கும் நேர்ந்திருக்கிறது.
ReplyDeleteசமரசமில்லா போராட்டம்
ReplyDelete//சமரசமில்லா போராட்டம்//. போராட்டம் என்றாலே சமரசமற்றதுதான். சமரசம் இருந்தால் அது போராட்டம் இல்லை. பஞ்சாயத்து. தங்களை யார் என்று அறிந்து கொள்ள முடியவில்லையே....
Deleteதோழர் மாதவராஜ் வழக்கு பற்றி அவ்வப்போது கேட்டுக் கொண்டே இருப்பார் என்னுடைய மனைவி தோழர் ரஜினி. ஒவ்வொரு முறை தோழர் மாதவராஜ் தொலைபேசியில் பேசும்போதும் "எவ்வளவு உற்சாகமாக பேசுகிறார்! அவர் பேச்சில் சிறிது அளவு கூட தொய்வோ வேதனையோ இல்லையே" என்று வியந்து பாராட்டுவார். அது மட்டுமல்ல, அவருடைய இணையர் தோழர் காதம்பரி "இதை எவ்வளவு பக்குவமாக எடுத்துக்கொண்டு அவருக்கு பக்கபலமாக நிற்கிறார்" என்றும் ஆச்சரியப்படுவார். ஒரு முறை ரஜினி, தோழர் காதம்பரியிடம் இது பற்றி கேட்டபோது "இவ்வளவு பேர் அவருக்கு பக்க பலமாக இருக்கும்போது எனக்கு என்ன கவலை?" என்று சிரித்துக் கொண்டே கூறினார். அது தான் தோழர் காதம்பரி. தோழர் மாதவராஜ் பழிவாங்கப்பட்டதை எதிர்த்து, நியாயத்தின் பக்கம் பிஇஎப்ஐ சங்கத் தோழர்கள் மட்டுமல்ல அவர்களின் குடும்பமும் உறுதியாக நின்றனர்.
ReplyDeleteதோழர், உங்கள் இணையரின் அக்கறையை நான் அறிவேன். நம் தோழர்களின் அன்பும், ஆதரவும் இந்தக் காலக்கட்டத்தை உற்சாகத்தோடு எதிர்கொள்ளச் செய்தது. நம்மைப் புரிந்து கொண்டவர்களும், நியாயமும் நம் பக்கம் இருக்கும்போது நாம் எதையும் எதிர் கொள்ள முடியும் என்பதை மேலும் உறுதி செய்த காலமும் இது.
Delete