”அவ்வளவுதான்!”


’முடி வெட்டணும்” என்று இரண்டு மூன்று நாட்களாய் அப்பா சொல்லிக் கொண்டிருந்தார்கள். நேற்று அழைத்துச் சென்றேன். 91 வயது நடந்து கொண்டிருக்கும் அப்பாவின் கைகளைப் பிடித்து கடைக்குள்ளே செல்லும்போது சிலிர்ப்பாய் இருந்தது.  

ஐந்தோ ஆறோ வயது இருக்கும் போது என்னை கைப்பிடித்து சென்னையில் திருவல்லிக்கேணியில் ஒரு சலூனுக்கு அப்பா அழைத்துச் சென்றது மங்கலாய்த் தெரிந்தது. மெஷின் போட்டு பின் மண்டையில் இழுக்கவும் கதறி அழுதேன். அப்பா என்னருகில் இருந்து சமாதானப்படுத்தியது அவ்வளவு ஆதரவாக இருந்தது.  

இருவரின் உள்ளங்கைகளுக்குள் காலம் ஊற்றெடுத்துக் கொண்டிருந்தது. முதன்முதலாய் அப்பாவின் கைப்பிடித்து உலகம் அறிந்த தருணங்கள் எல்லாம் மிதக்க ஆரம்பித்தன.  

”வாங்க புதுக்குளத்துக்கு குளிக்கப் போவோம்“ அப்பா ஒருநாள் காலையில் எங்களை அழைத்துப் போனார்கள். வியாபாரம் எல்லாம் நொடித்துப் போக சென்னையிலிருந்து ஊருக்குத் திரும்பியிருந்தோம். அப்போது எனக்கு பத்து வயது போலிருக்கும். அந்த நாளை மறக்கவே முடியாது. “அப்பாவக் கெட்டியாப் பிடிச்சுக்குங்கப்பா” அம்மா அனுப்பி வைத்தார்கள்.  

வீடுகள், தெருவைத் தாண்டி மண் பாதை வந்தது. பிறகு வயல் வழியாக நடந்தோம். புற்கள் வளர்ந்த அந்தச் சின்ன வரப்பில் தனித்தனியாகத்தான் நடக்க முடியும். ஸ்கூலில் டிரில் பிரியடில் நடப்பதைப் போல வரிசையானோம். ”பாத்து, பாத்து” என அப்பா குரல் கொடுத்துக்கொண்டே முன்னால் சென்றார்கள். அவ்வப்போது திரும்பித் திரும்பி பார்த்துக் கொண்டார்கள். அது ஒரு சாகசம் போலிருந்தது. ஜாலியாகவும் இருந்தது.  

வரப்புகளுக்கு நடுவில் ஓடிய தண்ணீரில் சின்னச் சின்ன மீன்கள் வளைந்து வளைந்து சென்றன. உட்கார்ந்து குனிந்து பார்த்தோம். நத்தைகள் மெல்ல அசைந்தன. “என்ன உக்காந்துட்டீங்க..” அப்பா திரும்பிப் பார்த்து கூப்பிட்டார்கள். “நேரமாகுது. ஸ்கூலுக்கு போணும்லா. வாங்க”.  

“மீன் போகுதுப்பா” ஆச்சரியமாய் சத்தம் போட்டோம். ”இன்னொரு நா வந்து நிதானமா பாப்போம்” அவசரப்படுத்தினார்கள். “இன்னும் எவ்வளவு தூரம்ப்பா” என கேட்டோம். ”இதோ வந்துட்டு” என்றார்கள். ஆனால் வரவில்லை.  

’இதுதான் நெல்லா, இதத்தான் நாம சாப்பிடுறோமா?’ கேள்விகளும், சட்டெனப் பறந்த வெள்ளைக் கொக்குகளைப் பார்த்த லயிப்புகளுமாய் அப்பாவைத் தொடர்ந்தோம்.  

சிறிது நேரத்தில் வரப்புப் பாதை முடிந்து எதிரே கொஞ்சம் மேடாய்த் தெரிந்தது. அதில் சில பேர் அந்தப் பக்கம் பார்த்தபடி நின்றிருந்தார்கள். சிலர் தலைகளைத் துவட்டிக் கொண்டிருந்தனர். அருகில் சென்று நாங்களும் மேட்டில் ஏறினோம்.  

பார்த்தால், விரிந்து பரந்து எங்கும் தண்ணீராய் இருந்தது. இதுதான் புதுக்குளமா! அதற்கு முன்னால் மெரீனா பீச்சுக்கு அப்பாவோடும் அம்மாவோடும் சில தடவை சென்றிருந்தோம். ஒரு பெரிய கப்பல் எதோ புயலில் மாட்டி கரையொதுங்கி நின்றிருந்ததை பார்த்திருந்தோம். அலைகளில் காலை நனைத்திருந்தோம். அப்பாவும் அம்மாவும் ஜாக்கிரதையாய் எங்கள் கைகளைப் பிடித்துக்கொண்டே இருந்தார்கள். அங்கே தண்ணீரில் யாரும் உள்ளே சென்று குளிப்பதைப் பார்த்ததில்லை.  

இங்கேயோ நிறைய பேர் தண்ணீருக்குள் இருந்தார்கள். கை கால்களை அடித்து மிதந்தார்கள். கரையேறி ஒருவன் தண்ணீருக்குள் குதித்தான். உற்சாகமாகவும் இருந்தது. பயமாகவும் இருந்தது. குளித்துக் கரையேறும் தாழ்வான பகுதியின் வழியாக அப்பா தண்ணீருக்குள் நடந்தார்கள். கொஞ்சம் கொஞ்சமாய் அப்பாவின் உடல் தண்ணீருக்குள் மறைந்து கொண்டே போனது. தலை மட்டும் தெரிந்தது. பின்னர் தலையையும் தண்ணீருக்குள் முழுசாய் விட்டுக் கொண்டர்கள். அப்பாவின் தலை எப்போது வெளியே தெரியும் என துடிப்பாய் இருந்து. இரண்டு மூன்று தடவை அப்படி முங்கி எழுந்தார்கள். தலையை சிலுப்பிக் கொண்டு எங்களைப் பார்த்தார்கள்.  

நாங்களும் மெல்ல இறங்கி தண்ணீரில் காலை நனைத்துக் கொண்டிருந்தோம். அப்பா எங்கள் அருகே வந்து “வாங்க, என்னை பிடிச்சுக்குங்க” தங்கையை தூக்கிக் கொண்டார்கள். அவள் நடுங்கிக் கத்தினாள். இரண்டு கைகளிலும் தாங்கியவாறு தண்ணீருக்குள் கொஞ்ச தூரம் கொண்டு சென்று, “பயப்படாத, இங்க ஆழம் கிடையாது” என்று நிற்க வைத்தார்கள். நின்றாள். கால் தரையில் பட்டதும் முகம் நிம்மதியானது. நடுங்கிக் கொண்டே சிரித்தாள். எனக்கு உள்ளே செல்ல தைரியம் கூடவில்லை. “பயப்படாத மாதண்ணா, அப்பா பிடிச்சுக்குவாங்க, வாண்ணா” அழைத்தாள். ஆசையாக இருந்தது. பயமாகவும் இருந்து. மெல்ல மெல்ல தரையில் காலை நகர்த்தி நகர்த்தி சோதித்துப் பார்த்தவாறே உள்ளே சென்றேன். நெஞ்சுக்கும் கீழேதான் தண்ணீர் இருந்தது. குளிர்ந்து உடல் உஸ்ஸென்று ஆடியது.  

மூத்த அண்ணன் “ஏங்கையப் பிடிச்சக்க அப்பு” என்று பெரிய மனிதனாய் கூப்பிட்டான். அருகில் சென்றதும் ஒரே தாவாய் அப்பாவை கெட்டியாய் பிடித்துக் கொண்டேன். அப்பாவின் வாசனை இதமாகவும் பாதுகாப்பாகவும் இருந்தது.  

‘அவ்வளவுதான்’ என்றார்கள் அப்பா. “ஓ, நாம் சரியாய் செய்து விட்டோம் போலிருக்கு. இனி கரைக்கு போயிர வேண்டியதுதான்” கரையைப் பார்த்து தவிக்க ஆரம்பித்தேன். “ம்.. அப்பாவைச் சுத்தி நில்லுங்க. ஒருத்தர் கைய ஒருத்தர் பிடிச்சுக்குங்க. இத மாரிச் செய்யணும்.” மூக்கைப் பிடித்துக் கொண்டு நிதானமாய் குனிந்து தண்ணீருக்குள் தலையை முழுவதுமாய் நுழைத்துக் கொண்டார்கள். பார்த்ததும் தண்ணீருக்குள்ளேயே எனக்குச் சில்லிட்டது. கொஞ்ச நேரத்தில் தலையைத் தூக்கி ‘ம் .. முங்கி எந்திரிங்க” என்றார்கள். நாங்கள் பயந்து பயந்து மூக்கைப் பொத்தி தண்ணீர் அருகே குனிந்து, தலையை நனைக்காமலே குதித்துக் கொண்டு இருந்தோம். அப்பா, “அவ்வளவுதான், அவ்வளவுதான்” என சொல்லிக் கொண்டிருந்தார்கள். ஒரு நேரத்தில் தலையை தண்ணீருக்குள் விட்டு சட்டெனத் தூக்கினோம். ‘அவ்வளவுதான்’ என அப்பாவின் குரல் கேட்டது. உற்சாகமானோம். வீட்டுக்கு வந்ததும் ஒவொருவரும் தண்ணீரில் முங்கி எழுந்ததை சாகசமாய் பேசிக்கொண்டோம். அம்மா எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டே, “சரி சரி, பாத்து” என்றார்கள். இப்படியாக முதல் நாள் புதுக்குளத்துக் குளியல் சிலிர்ப்போடும், நடுக்கத்தோடும் முடிந்தது.  

தொடர்ந்து அப்பா புதுக்குளத்திற்கு அழைத்துச் சென்றார்கள். கொஞ்ச நாட்களில், யார் முதலில் நனைவது என்று தண்ணீரைப் பார்த்ததும் பாய ஆரம்பித்தோம். நீச்சல் அடிக்க ஆரம்பித்தோம். அப்பா இல்லாமலேயே புதுக்குளம் குளிக்கச் சென்றோம். வரப்புகளில் நடக்கும்போது மீன்களையும், நத்தைகளையும் மட்டுமல்ல, பாம்புகளையும் பார்த்தோம். இரண்டாவது அண்ணன் அவைகளைக் கையில் பிடித்து ஓங்கி தரையில் அடிப்பதை ஒரு விளையாட்டாகவே வைத்திருந்தான். லீவு நாட்களில் நான்கைந்து மணி நேரம் விளையாடிக் களைத்து உள்ளங்கை தோலெல்லாம் சுருங்கி வெளிறிப் போகும். அம்மா சத்தம் போடுவார்கள்.  

ரைஸ்மில், வயல்காடு என்று அலைந்து அப்பா வாரத்தில் சில நாட்கள்தான் வீட்டுக்கு இரவில் வருவார்கள். படுக்கையில் அப்பாவின் மீது காலைப் போட்டுக்கொண்டு, கைகளை போட்டுக்கொண்டு அண்ணன் தம்பிகள் சுற்றி படுத்துக் கிடப்போம். அப்பாவின் வாசனை அப்படியே மாறாமல் இருந்தது.  

ஆறுமுகநேரியில் இருந்த பதினோரு வருடங்களும் பெரும்பாலும் புதுக்குளத்தில்தான். பிறகு ஒவ்வொருவரும் புதுப் புது ஊர்களுக்குச் சென்று விட்டோம். முப்பத்தோரு வருடங்களாக நீச்சல் அடித்துக் கொண்டிருக்கிறோம். முதல் நாள் புதுக்குளத்துக்கு சென்ற நினைவு மட்டும் கனவு போல அவ்வப்போது மலர்ந்து கொண்டே இருக்கிறது. அம்மாவின் குரல் இப்போதும் கேட்டுக்கொண்டே இருக்கிறது. “அப்பாவை கெட்டியாப் பிடிச்சுக்குங்கப்பா”  

லேசாய் தடுமாறிய அப்பாவின் கைகளைப் பிடித்து நாற்காலியில் உட்கார வைத்து ”அவ்வளவுதான்” என்றேன்.  

“அப்பாவுக்கு உங்களை விட முடி நிறைய இருக்கு.” முடி வெட்டுகிறவர் சிரித்தார். நான் சிரித்தேன். அப்பாவும் சிரித்தார்கள். 

குழந்தை போலிருந்தார்கள்.

(சென்ற வருடம் எழுதியது. தீராத பக்கங்களில் சேமித்துக் கொள்கிறேன்.)


Comments

8 Comments

வருகைக்கு நன்றி.

கமெண்ட் செய்கிறவர்கள் Anonymous, Name/Url, Google Account, Name/Url, Google Account மூலம் கமெண்ட் செய்யலாம்.

1) முடிந்தவரை Google Account மூலம் கமெண்ட் செய்யுங்கள்.

2) இல்லையென்றால் Name/Url மூலம், பேரை மட்டுமாவது குறிப்பிட்டு கமெண்ட் செய்யுங்கள்.

3) Anonymous மூலம்தான் கமெண்ட் செய்ய முடியுமென்றால், கமெண்ட்டில் கீழே உங்கள் பேரை தயவு செய்து குறிப்பிடுங்கள்.

நன்றி.

- தீராத பக்கங்கள்
  1. பசுமையான நினைவுகள் தோழா 🐛🐠🐸🐍

    ReplyDelete
    Replies
    1. வாழ்வின் தருணங்களை நினைத்துப் பார்க்கும்போது அவை பசுமையாக மட்டுமில்லை. சில சமயங்களில் தத்துவம் போலவும் அறிய முடிகிறது.

      Delete
  2. உணர்வலைகள் 🤽🏊

    ReplyDelete
    Replies
    1. உணர்வின் அலைகள். நல்ல சொற்பிரயோகம். தாங்கள் யாரென்று தெரிந்து கொள்ளலாமா?

      Delete
  3. என்றும் மறக்கமுடியாத பசுமையான நினைவுகள் தோழர்.

    ReplyDelete
  4. வாருங்கள் தோழர் பத்மநாபன். ஆம் எல்லோருக்கும் இதுபோல நினைவுகள் எவ்வளவோ இருக்கும். அவைகளில் சில நம் கைப்பிடித்து அழைத்துச் செல்வதாகவும் இருக்கும்.

    ReplyDelete
  5. காலம் மனிதனை எப்படியெல்லாம் மாற்றுகிறது என்பததற்கு உங்கள் தகப்பனார் தோற்றம்.முன்னர் இருந்த தோற்றம் இன்னும் என் நினைவில் உள்ளது நண்பா.

    ReplyDelete
    Replies
    1. அதுதான் வாழ்க்கை. நேற்று இன்று நாளை என்று நாட்கள் மாற்றங்களை தந்து கொண்டே இருக்கின்றன. எப்போதும் அவைகளை பிடித்துக் கொண்டிருப்பதில் உறவுகளும், மனித சமூகமும் நிலைத்திருக்கின்றன.

      Delete

You can comment here