சார்ஜ் ஷீட் 42/2021- 4ம் அத்தியாயம்


”நான் எங்க போகப் போகிறேன். உங்களோடுதான் இருப்பேன். வருவேன் தோழர்” அறிவுடைநம்பியிடம் சிரித்துக் கொண்டே சொன்னேன்.  

 “நீங்க விட்டாலும் மேனேஜ்மெண்ட் உங்கள விடாது போல…” என்று சொல்லி அவரும் சிரித்தார்.  

சன்னல் வழியாக தெருவிளக்கின் வெளிச்சம் அறைக்குள் கசிந்திருந்தது. முதன்முதலாய் சாத்தூரில் வேலைக்குச் சேர்ந்து மணி சங்கர் லாட்ஜில் தங்கியிருந்தபோது இப்படியொரு  தெரு விளக்கின் வெளிச்சம் அந்த அறைக்குள்ளும் இருந்தது. தூங்கும் வரை கூடவே ஒரு துணை போல இருக்கும். தூங்கி கண் விழித்த மாதிரிதான் இருக்கிறது. முப்பத்தேழு வருடங்கள் ஓடி சேலத்தில் இருந்தேன். எவ்வளவு எவ்வளவோ நடந்து முடிந்து விட்டிருந்தன.  

தொழிற்சங்கம், அதன் லட்சியங்கள்,  நடவடிக்கைகள் எல்லாம் பிடித்திருந்தாலும், மிக நெருக்கமாய் உணர்ந்தது இலக்கியம்தான். புத்தகங்கள் வாசிப்பதிலும், எழுதுவதிலும்  அவை குறித்து நண்பர்களோடு உரையாடுவதிலும் கிடைக்கும் அனுபவமும் சுகமும் தனி. சில கவிதைகளும், கதைகளும் எழுதி அந்த ருசியில் லயித்திருந்தேன். மணிசங்கர் லாட்ஜில் ஒருநாள் வந்து தங்கிய தோழர் சோமசுந்தரம் நான் எழுதி வைத்திருந்த கவிதைகளைப் படித்து பேசியதிலிருந்துதான் அவரோடு பழக்கமானேன். கிருஷ்ணகுமாரின் பேச்சிலும் எழுத்திலும் தென்பட்ட இலக்கியம்தான் என்னை வசீகரித்து அவரிடம் பழக வைத்தது. சங்கத்திற்கு ’அக்கினிக்குஞ்சு’ என்று பத்திரிகை ஆரம்பிக்கும்போது அதன் ஆசிரியராய் கிருஷ்ணகுமார் என்னை முன்மொழிந்ததற்கு முக்கிய காரணம்  என்னிடம் தென்பட்ட இலக்கிய ஈடுபாடாகவே இருந்திருக்க வேண்டும். அப்படி ஆரம்பித்த உறவுகளோடு தொழிற்சங்கப் பணிகள் காலப்போக்கிலும், சூழல்களாலும் ஒட்டிக்கொண்டன.  

1986ல் தோழர் கிருஷ்ணகுமார் தனக்கு உடல்நலம் இல்லையென்று, காரைக்குடிப் பக்கம் டிரான்ஸ்பர் கேட்டு தனது பொதுச்செயலாளர் பதவியை ராஜினாமா செய்தார். அனுபவம் வாய்ந்த சோமசுந்தரம் பரமசிவம், கணேசன், போன்ற தோழர்களும் பொறுப்பில் இல்லை. நெருக்கடியான சூழலில் பெரும்பாலும் புதிய தோழர்கள் அடங்கிய ஒரு செயற்குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. பொதுச் செயலாளராய் தேர்ந்தெடுக்கப்பட்ட விஜயகுமார் என்பவர் சில மாதங்களிலேயே காணாமல் போய் விட்டார். தோழர் சோலைமாணிக்கம், சங்கரலிங்கம் போன்றவர்கள் உதவிப் பொதுச்செயலாளர்களாய் இருந்தனர்.  நானும் காமராஜும் முதன்முதலாய்  செயற்குழு உறுப்பினராயிருந்தோம். பெஃபி  ( BEFI )   சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் தோழர் கோதண்டராமன் வழிகாட்டினார். திருச்செந்தூர் அருகில் உள்ள பூச்சிக்காட்டு கிளைக்கும் சாத்தூருக்குமாய் பயணங்கள், நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தைகள், எழுதி அனுப்பும் சர்க்குலர்கள்,  உறுப்பினர்கள்  சந்திப்புகள் என சதா நேரமும் தொழிற்சங்கப் பணிகளால் நிறைந்தன. நிர்வாகத்துக்கு எதிராய்  ஊழியர்களைத் திரட்டி 1987 டிசம்பர் மாதம் முடிக்க வேண்டிய ஆண்டுக்கணக்கையே முடிக்காமல் நிறுத்தி வைத்ததெல்லாம் நடந்தது. (1987 வரை டிசம்பர் மாதத்தில்தான் ஆண்டுக்கணக்கு முடிக்கும் வழக்கம் இருந்தது.)  

1988ல் கிருஷ்ணகுமார் மீண்டும் பொதுச்செயலாளர் பொறுப்புக்கு வந்தார்.  1990ல் மீண்டும் தன் குடும்பச் சூழல்கள் காரணமாக பொதுச்செயலாளர் பொறுப்பில் தொடர முடியாது என்றார். ஒருநாள் விடிகாலையில் அவரும் தோழர் செல்வகுமார் திலகராஜும் காரில் பூச்சிக்காடு வந்தனர். பொதுச்செயலாளர் பொறுப்புக்கு போட்டியிடும் வேட்பு மனுவில் என்னைக் கையெழுத்திடும்படி கேட்டுக் கொண்டார். அனுபவம் குறைந்த நான்  தயங்கினேன். அப்போதுதான் திருமணமாயிருந்தது. அம்மா வருத்தப்பட்டார்கள். நான் சங்கத்தின் பொதுச்செயலாளராகி  சாத்தூருக்கு வந்தேன்.  

இரண்டு வருடங்களில் மீண்டும் கிருஷ்ணகுமார் சங்கத்தின் பொதுச்செயலாளர் பொறுப்புக்கு வந்தார். பிறகு சில வருடங்களில் திரைப்படத்துறை மீது அவரின் கவனம் சென்றது. இயக்குனர் பாரதிராஜாவோடு நெருக்கம் ஏற்பட்டது. பாண்டியன் கிராம வங்கியின் வேலையை ராஜினாமா செய்து விட்டு பாரதிராஜாவின் இணை இயக்குனரானார்.  சங்கப் பணியில் தோழர்கள் முழுமையாக ஈடுபட வேண்டியிருந்தது. 2001ல் தோழர் சோலை மாணிக்கம் பொதுச்செயலாளரானார். நான் சங்கத்தின் செயற்குழுவில் துணைத்தலைவராக இருந்து கொண்டு மீண்டும் இலக்கியத்தின் பக்கம் சென்றேன். . 1993க்குப் பிறகு மீண்டும் எழுத ஆரம்பித்தேன். ஆறு புத்தகங்கள் வெளிவந்தன. இரண்டு முக்கிய ஆவணப்படங்கள் எடுத்தேன். தீராத பக்கங்கள் என்னும் வலைத்தளம் உருவாக்கி தொடர்ந்து எழுதி வந்தேன். தோழர் சோலைமாணிக்கத்தால் அவை சாத்தியமாயின என்று நினைத்துக் கொள்வேன்.  

2013ல் தோழர் சோலைமாணிக்கம் பணி ஓய்வு பெற்றார். நான் மீண்டும் சங்கத்தின் பொதுச்செயலாளரானேன். அதற்கு முன்னர் நான் பொறுப்புக்கு வந்த சூழலுக்கும் அப்போது இருந்த சூழலுக்கும் இருந்த வித்தியாசம் முக்கியமானது. முன்னர் அனுபவம் பெற்ற சக தோழர்களின் கூட்டுத்தலைமையில் சங்கம் செயல்பட்டது. 2013ல் பெரும்பாலும் இளம் தலைமுறையைச் சேர்ந்தவர்களாய் இருந்தனர். முந்தைய தலைமுறையைச் சேர்ந்தவர்கள் வேகமாக பணி ஓய்வு பெற்றுக் கொண்டிருந்தனர்.  

அந்த நேரங்களில் எனது சிந்தனையிலும் துடிப்பிலும் இருந்தது ஒன்றே ஒன்றுதான்.  பணி ஓய்வு பெறுவதற்கு இருந்த எட்டு ஆண்டுகளுக்குள் சங்கத் தலைமைக்கு இளம் தலைமுறையைச் சேர்ந்தவர்களை உருவாக்கி விட வேண்டும் என்பதுதான் அது. எனக்கு நானே விதித்துக் கொண்டது. இந்தக் காரியத்தில்  எனக்கு உறுதுணையாக இருந்ததும், வழிகாட்டியதும் தோழர்கள் சி.பி.கிருஷ்ணன், தோழர் போஸ்பாண்டியன்,  சோமசுந்தரம் ஆகியோர்.  

2021ல் பணி ஓய்வு பெற்ற பிறகு மீண்டும் இலக்கியத்தின் பக்கம் முழுசாகச் செல்லலாம் என்றிருந்தேன். நிர்வாகம் அதை விரும்பவில்லை போல. விடாது கருப்பு என சார்ஜ் ஷீட் கொடுத்து பிடித்து வைத்திருந்தது.  

காலையில் தோழர்கள் அண்டோ கால்பர்ட், சங்கர், காமராஜ், தங்க மாரியப்பன், லஷ்மிநாராயணன் ஆகியோருடன் புறப்பட்டு  சேலத்திலிருந்து சாத்தூர் வரை நினைவுகளோடுதான் பயணம் செய்து வந்தேன்.  அம்மு சிரித்துக் கொண்டே வாசலில் ஆரத்தியோடு தயாராய் இருந்தாள். சிறிது நேரம் பேசிவிட்டு தோழர்கள் விடைபெற்று அவர்கள் வீடுகளுக்கு சென்றனர்.  

வீடு அமைதி கொண்டிருந்தது. ”அப்புறம்..” என அம்மு சிரித்துக் கொண்டே என் தோளைத் தட்டியபடி அருகில் உட்கார்ந்தாள். ஆசுவாசமாய் இருந்தது.  

*

1.5.2021 மற்றும் 2.5.2021 இரண்டு நாட்களும் சனி ஞாயிறு. தோழர்களிடமும் அட்வகேட் கீதா அவர்களிடமும் நான் அடுத்து கொடுக்க வேண்டிய கடிதம்  குறித்து கலந்தாலோசித்தோம்.  

30.4.2021 அன்று 7.36 மணிக்கு நிர்வாகம் அனுப்பிய மெயிலில் இரண்டு முக்கிய விஷயங்கள் கவனிக்கப்பட வேண்டியவை.  

முதலாவது, 4.30 மணிக்கு மேலாளர் என்னிடம் செஷேஷன் குறித்து தகவல் (intimation) சொன்னதாக மட்டும் கூறப்பட்டு இருந்தது. அந்தத் தகவல் எழுத்துபூர்வமானதா, வாய்மொழியானதா என்று குறிப்பிட்டிருக்க வேண்டும். வாய்மொழித் தகவல்கள் சட்டப்படி செல்லாது.  

இரண்டாவது, செஷேஷன் ஆர்டரில்  ஓய்வு கால சலுகைகள் என்கொயரி முடிந்த பிறகு கொடுக்கப்படும் என்று மட்டும் சொல்லப்பட்டு இருந்தது. செஷேஷன் கொடுப்பதாய் இருந்ததால், பென்ஷன் விதிகளின்படி என்கொயரி நடைபெறும் காலத்தில் தற்காலிக ஓய்வூதியம் (provisional Pension )  வழங்கப்படும் என்பதையும் தெரிவித்திருக்க வேண்டும்.  

நிர்வாகத்தின் ஒவ்வொரு அசைவும், சொல்லும் சட்டத்திற்கு புறம்பானது என்பதை புரிந்து கொள்வதறாகத்தான் இதனைக் குறிப்பிடுகிறேன். மற்றபடி, செஷேஷனே செல்லாது என்பதே நமது நிலைபாடாய் இருக்கிறபோது, அனைத்து ஓய்வுகாலச் சலுகைகளையும் கேட்க வேண்டுமே தவிர, ஏன் தற்காலிக ஊதியம் தருவதாய் சொல்லவில்லை என கேட்பது சரியாய் இருக்காது. அதன் அடிப்படையில் நிர்வாகத்துக்கு கீழ்கண்டவாறு  கடிதம் கொடுப்பது என முடிவு செய்யப்பட்டது.  

30.4.2021 அன்று 5 மணி வரை நிர்வாகத்திடமிருந்து எந்த தகவலும் வரவில்லை. எனவே, மின்னம்பள்ளி கிளை மேலாளரிடம் எனது பணி ஓய்வுக்கான கடிதத்தைக் கொடுத்தேன். அவரும் அதனை பெற்றுக்கொண்டதை உறுதி செய்து கடிதம் கொடுத்தார்.  

பின்னர் நிர்வாகத்திலிருந்து அனுப்பப்பட்ட மெயில் கிடைத்தது.  அதில் கிளையின் மேலாளர் என்னிடம் செஷேஷன் ( cessation) குறித்து தெரிவித்ததாகச் சொல்லப்பட்டு இருந்தது. அத்தோடு செஷேஷனுக்கான கடிதம் இணைக்கப்பட்டிருந்தது. எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அப்படி எந்த தகவலையும் மேலாளர் எழுத்துபூர்வமாக என்னிடம் தெரிவிக்கவில்லை.  

மேலும் 30.4.2021 அன்று 5 மணியோடு நிர்வாகத்துக்கும் எனக்குமான முதலாளி – தொழிலாளி உறவு முடிந்து விட்டது. அதன் பின்னர் நிர்வாகம் எனக்கு அனுப்பிய செஷேஷன்னுக்கான கடிதம் சட்டப்படி செல்லாது.  

எனவே எனக்கு ஓய்வுகாலச் சலுகைகளான கிராஜுவிட்டி, லீவு சரண்டர், பென்ஷன், கம்யூட்டேஷன் அனைத்தையும் உடனடியாக வழங்கிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.  

3.5.2021 அன்று கடிதத்தை மெயிலிலும், பதிவுத் தபாலிலும் தமிழ்நாடு கிராம வங்கி நிர்வாகத்துக்கு அனுப்பினேன்.   

சேர்மன் செல்வராஜ் தலைமையிலான நிர்வாகத்தின் இயல்பை கடந்த கால அனுபவம்  தெளிவாய் காட்டியிருந்தது.

தோழர் அண்டோ கால்பர்ட்டை சஸ்பெண்ட் செய்த போது அதனை எதிர்த்து சங்கம்  ஹைகோர்ட்டில் தடையுத்தரவு பெற்றது. அதை சேர்மன் செல்வராஜ் மதிக்கவில்லை. பின்னர் அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ( contempt petition)  தொடுத்தோம். ”முதலில் கோர்ட் உத்தரவை மதித்து அண்டோ கால்பர்ட்டை  உள்ளே எடு” என்று சொன்ன பிறகே அவரை நிர்வாகம் பணிக்கு அமர்த்தியது.  

செல்வராஜ் சட்டத்தை முடிந்தவரை மதிக்க மாட்டார். நீதிமன்றம் தீர்ப்பளித்தாலும் அதை அமல்படுத்தாமல் இழுத்தடிப்பார். நிச்சயமாய் நிர்வாகம் நான் அனுப்பிய கடிதத்தை ஏற்றுக்கொண்டு ஓய்வுகாலச் சலுகைகளைத் தந்துவிடும் என்று நம்பிக்கையெல்லாம் இல்லை.  

நினைத்தது போலவே அடுத்த நாள் நிர்வாகத்தின் முடிவு தெரிந்தது, 4.5.2021 அன்று வங்கியின் இண்ட்ரா நெட்டில் எனக்கு செஷேஷன் வழங்கப்பட்டு உள்ளது என்பது அனைத்து ஊழியர்களுக்கும் தெரிவிக்கப்பட்டிருந்தது.  

எப்படி செஷேஷன் செல்லும் என்பதற்கும் ஏன் ஓய்வுகால சலுகைகள் கொடுக்கப்பட வேண்டியதில்லை என்பதற்கும் ஒரு காரணம் சொல்ல வேண்டுமே. அது என்னவாயிருக்கும் என்பது நிர்வாகத்திடமிருந்து கடிதம் வந்த பிறகுதான் தெரியும்.  

(தொடரும்)  

1ம் அத்தியாயம்    2ம் அத்தியாயம்    3ம் அத்தியாயம்

Comments

4 Comments

வருகைக்கு நன்றி.

கமெண்ட் செய்கிறவர்கள் Anonymous, Name/Url, Google Account, Name/Url, Google Account மூலம் கமெண்ட் செய்யலாம்.

1) முடிந்தவரை Google Account மூலம் கமெண்ட் செய்யுங்கள்.

2) இல்லையென்றால் Name/Url மூலம், பேரை மட்டுமாவது குறிப்பிட்டு கமெண்ட் செய்யுங்கள்.

3) Anonymous மூலம்தான் கமெண்ட் செய்ய முடியுமென்றால், கமெண்ட்டில் கீழே உங்கள் பேரை தயவு செய்து குறிப்பிடுங்கள்.

நன்றி.

- தீராத பக்கங்கள்
  1. சினிமாவில் முதலில் ஒரு விஷயத்தை சொல்லிவிட்டு, பின்னர் பிளாஷ் பேக்கில் கோர்வையாக பல்வேறு நிகழ்வுகளை கோர்த்து செல்வார்கள். அந்த பாணியில் மிகவும் சுவாரஸ்யமாக இந்தத் தொடரை கொண்டு செல்கிறீர்கள். பாராட்டுக்கள் தோழர்

    ReplyDelete
    Replies
    1. ஆம் தோழர், ஒரு வரலாற்றை சுவாரசியமாகச் சொல்ல முன்னும் பின்னுமாய் காலத்தை நகர்த்திப் பார்க்கிறேன். 😍

      Delete
  2. மணிமாதவிJanuary 28, 2025 at 9:31 AM

    ரொம்ப தெளிவான எழுத்துநடை தோழர் .... எழுதின் முதல் படியில் இருக்கும் என்னைப் போன்றோர்க்கு உங்களது வார்த்தை தேர்வும் கோர்வையாக்கமும் எப்படி எழுத வேண்டும் என்பதனை எடுத்துரைக்கிறது. வெளி உலகமே தெரியாது வளர்ந்த எனக்கு தொழிற்சங்க செயல்பாடுகளை கண்முன் நிறுத்துது தோழர் உங்கள் எழுத்து .புதியதோர் களத்தை அருகிருந்து அறிந்து கொள்வது போன்றதொரு உணர்வு .தொடர்ந்து வாசிக்க ஆர்வத்தையும் கொடுக்கின்றது .அருமை தோழர் ...

    ReplyDelete
    Replies
    1. ஆஹா, தோழர் மணி மாதவி! இந்த தொழிற்சங்கத் தொடரை நெருக்கமாக தாங்கள் உணர்வது ஆச்சரியமாகவும் இருக்கு. ரொம்ப மகிழ்ச்சியாகவும் இருக்கு. சரியாகத்தான் எழுதிக் கொண்டிருக்கிரேன் என்ற நம்பிக்கையும் வருது. தங்களுக்கு என அன்பும், மகிழ்ச்சியும், நன்றியும்.

      Delete

You can comment here